சேசுநாதரின் திருப்பாடுகள்

சேசுக்கிறீஸ்துநாதர் தம் பிரஜைகளுக்காகப் பலியாகிற ஓர் அரசர்! தம் சீடர்களுக்காக நொறுக்கப்படும் ஒரு குரு! தம் சிருஷ்டிகளுக்காகக் கொடிய வேதனைகளுக்கு மத்தியில் தம் ஒப்பற்ற ஜீவியத்தைக் கையளிக்கிற சர்வேசுரன்! மனித புத்திக்கெட்டாத தேவசிநேகத்தின் சிகரம் இது! 

"... உமது வான மண்டலங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்குமிடத்தில், மனிதனை நீர் நினைக்கிறதற்கும், மனித புத்திரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?" (சங். 8:3,4). ஆனால் தெய்வீக அதிசயமே! தேவரீர் ஒரு மூச்சுக்காற்றுக்கும், காலையில் இருந்து மாலையில் வாடிப் போகிற வயல்வெளி மலருக்கும் சமமாயிருக்கிற அவனை இரட்சிக்க, இவ்வளவு கொடிய அவஸ்தைகளைப்பட்டு மரித்ததுமன்றி, இவ்வளவிற்குப் பிறகும் மனிதனால் வெறுக்கப்படுகிறீரே! தேவரீர் எவ்வளவு பரிதாபத்திற்குரியவர்!

சேசுநாதரின் திருப்பாடுகளின் தியானம் சகல சோதனைகளையும் அகற்றி, மனிதனைப் பாவத்திலிருந்து எப்போதும் காக்க வல்லது! ஆனால் என்ன பரிதாபம்! இன்று ஆலயங்களிலும் கூட அவருடைய திருப்பாடுகளை நினைவுப்படுத்தக்கூடிய எதுவுமில்லையே! பாடுபட்ட சுரூபத்தில் அவருடைய தோற்றம் மனிதனின் மனத்தில் உத்தம மனஸ்தாபத்தை எழுப்ப மறுக்கிறது, ஏனெனில் அதில் அவர் பாடுபட்டவராக இல்லாமல், உயிர்த்தெழுந்தவராகத் தோன்றுகிறார்.

கத்தோலிக்க வீடுகளிலும், மடங்களிலும் கூட, பாடுபட்ட சுரூபம் இருப்பது துரதிருஷ்டத்தின் அடையாளம் என்று கருதப்படுவது எவ்வளவு பெரிய துரோகம்! சிலுவையில் தொங்கும் இரட்சகரைவிட உலக செல்வம் பெரிதாய் மதிக்கப்படுவது ஆண்டவருக்கு எத்தகைய அவமானம்! இரட்சணியத்தின் அடையாளத்தை உலக செல்வத்திற்காக இவ்வாறு ஒதுக்கித் தள்ளுபவர்கள், இறுதிநாளில் இரட்சகரால் ஒதுக்கித் தள்ளப்படுவார்கள் என்பதை உணர வேண்டும்.

கேடுகெட்ட மனிதனை இரட்சிப்பதற்காகத் தம் இன்னுயிரை ஈந்த தேவனை எப்போதும் கண்முன் கொண்டிருப்போம்! அவரை எப்போதும் உருகி தியானிப்போம். அப்போது பாவத்தை விலக்க அவரிடமிருந்தே பலத்தைப் பெற்றுக்கொள்வோம். இனி, திருப்பாடுகளின் தியானங்கள் :