முதல் சனி பக்தி வேண்டுகோள்!

முதல் சனி பக்தியை எல்லா இடங்களிலும் கொண்டு வாருங்கள். உங்கள் பங்குத்தந்தையர்களிடம் பேசி முதல் சனி ஜெபத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டுங்கள். அதே போல் அன்பியங்களிலும் கொண்டுவரலாம். இரண்டு மூன்று அன்பியங்கள் அல்லது ஒவ்வொரு அன்பியத்திலும் முதல் சனி பத்தியை கடைபிடிக்கலாம்.

நம் இயேசு தெய்வமும், மாதாவும் பாத்திமா சிறுமி லூசியாவிடம் கேட்டபக்தி முயற்சிதான் முதல் சனி பக்தி. மாதா நமக்காகத்தான் ஒவ்வொரு சலுகைகளாக அவர் மகனிடம் வேண்டிக்கேட்டு பெற்றுத்தருகிறார்கள். அவைகள் நமக்கும், நம் குடும்பத்திற்கும் பேறுபலன்களைப் பெற்று தரும் பக்தி முயற்சிகள்.

முதல் சனி பக்தி அனுசரிக்கும் நேரங்களை நீங்களே தேர்வு செய்யுங்கள். காலை 10.30 முதல் மதியம் 1.00 மணி அல்லது வசதிக்கு தகுந்தாற்போல் சனி இரவைத் தேர்வு செய்துகொள்ளலாம். நம் தாய் திருச்சபையை தாங்கி வரும் பக்தி முயற்சிகள்தான் முதல் வெள்ளி, முதல் சனி பக்திகள். ஆகையால் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

முதல் சனி பக்தி :
1925-ம் ஆண்டு போன்றவேட்ரா என்ற பட்டணத்தில் மாதாவும், பால சேசுவும் லூசியாவுக்கு காட்சியருளி, பரிகார பக்தியாகிய 5 முதல் சனி பக்தியைக் கடைபிடிக்கிறவர்களுக்கு இரட்சண்யத்தை வாக்களித்துள்ளார்கள்.
பரிகாரப் பக்தியின் பரிசு நம் இரட்சண்யம். எப்படிப்பட்ட உயர்ந்த பரிசு. நம் இரட்சண்யமே சேசு மரிய இருதயங்களின் ஆறுதலும், மகிமையுமாயிருக்கிறது.

மாதா புனித லூசியாவிடம் கூறிய வார்த்தைகள் : “ என் மகளே ! நன்றியற்ற மனிதர்கள் தங்கள் தூஷனங்களாலும், நன்றிக்கேட்டினாலும் ஒவ்வொரு கணமும் குத்துகிற முட்களால் சூழப்பட்டுள்ள இருதயத்தைப்பார். நீயாவது எனக்கு ஆறுதலளிக்க முயற்சி எடு. இதை நீ அறிவி "

தொடர்ச்சியாக ஐந்து முதல் சனிக்கிழமைகளில் :
1. எனக்கு நிந்தைப் பரிகாரம் செய்யும் கருத்துடன்
2. பாவசங்கீர்த்தனம் செய்து
3. 53 மணி ஜெபமாலை சொல்லி
4. பரிகார நன்மை உட்கொண்டு
5. தேவ இரகசியங்களை தியானித்தபடி கால் மணி நேரம் என்னுடன் செலவிடுகிறவர்களுக்கு, அவர்களுடைய மரண சமையத்தில் ஈடேற்றத்திற்கு தேவையான எல்லா வரப்பிரசாதங்களையும் தந்து உதவி செய்கிறேன் என்று வாக்களிக்கிறேன் “

முதல் சனிக்கிழமை பக்தியை அனுசரிக்கும்போது நாம் விஷேசமாய் கவனிக்கவேண்டியது, அதை எதற்காக யாருக்காக செய்கிறோம் கருத்தாகும். நம் மரண வேளைகளில் மோட்சத்திற்கு செல்ல தேவைப்படும் சகல வரப்பிரசாதங்களையும் தந்து உதவுவதாக மாதா கூறியிருக்கிறார்கள். பரிகாரப்பக்தியை பக்தியுடன் செய்யத்தூண்டுவதற்காக அப்படி வாக்களித்திருக்கிறார்கள்.

ஆகவே இந்த ஆத்தும லாபத்திற்காக முதல் சனி பக்தியை நாம் அனுசரிப்பது நியாயமானதே. ஆயினும் நல்ல மரணத்தை நாம் பெற்றுக்கொள்வதற்காக மட்டும் இதை அனுசரிப்பதைவிட, நம் அன்பு அன்னைக்கு ஏற்பட்டுள்ள நிந்தை அவமான துரோகங்களுக்கு நம் அன்பினால் ஈடு செய்யும் நோக்கத்துடன் அனுசரிப்பதே மேலானது.
நம் லாபத்தைக் கருதி மாதாவுக்கு பரிகாரம் செய்வதைவிட மாதாவின் ஆறுதலுக்காக முதல் முக்கியமாக அதைச் செய்யவேண்டும் நம்மையல்ல நம் தாயை நினைத்துச் செய்யும் பரிகாரமே உத்தமமான பரிகாரம்
.
முதல் சனி பரிகாரப் பக்திக்கென நாம் செய்யும் பாவசங்கீர்த்தனம், ஜெபமாலை, நற்கருணை உட்கொள்ளுதல், கால்மணி நேரம் மாதாவுடன் தங்கியிருத்தல் ஆகியவற்றை நிறைவேற்றும்போது நம் நோக்கமும், கருத்தும் : “ மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தை பரிகாரமாக அத்திரு இருதயத்தை நேசித்து அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக என்றபடி இருக்க வேண்டும்.

சேசு மரி இருதயங்களைப் பிரித்துப்பார்க்க கூடாது. இதற்கும் விரிவான விளக்கம் உண்டு அதை பின்வரும் பகுதியில் தெறிவிப்போம். பாத்திமா காட்சியில் வானதூதர் , “ என் தேவனே என்கிற ஜெபத்தை சொல்லிமுடித்த பின், “ இப்படி ஜெபியுங்கள். சேசு-மரிய இருதயங்கள் உங்கள் மன்றாட்டை செவியுற்று கேட்கிறார்கள்.
இன்னொரு முறை குழந்தைகளை ஜெபிக்க சொல்லிவிட்டு வானவர் கூறிய வார்த்தை, “ சேசு மரிய இருதயங்கள் இரக்கமுள்ள திட்டங்களை உங்கெளுக்கென வைத்துள்ளார்கள் “ என்ற செய்தி.

நன்றி : பாத்திமா செய்திகள், மாதா பரிகார மலர்

ஆகவே முதல் சனி பக்தியை பக்தியுடன் கடைப்பிடிப்போம் இன்று முதல். முதல் வெள்ளி பக்தியை பற்றியும் விளக்குவோம். பாவசங்கீர்தனம், திவ்ய நற்கருணை வாங்க முடியாதவர்கள். அட்லீஸ்ட் பக்தியுடன் பரிகார ஜெபமாலை செய்து தேவரகசியங்களை தியானித்து அன்னையுடன் கால்மணி நேரமாவது செலவிடுங்கள்.