அன்னை மரியாளின் மகத்துவம்!

லூக்கா நற்செய்தியில் எல்லாம் வல்ல தந்தை அன்னை மரியாளை புகழ்ந்தது, அருள் நிறை மரியே என்று சொன்னதை நாம் தெரிந்தது கொண்டோம்.

அப்பொழுது பரிசுத்த ஆவி நிழலிட, இயேசு மரியில் கருவானதையும் தெரிந்தது கொண்டோம்.

ஆனால் பாருங்கள், தந்தை புகழ்ந்ததோடு நிறுத்தி விடாமல், "இதோ உமது அடிமை; உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்று தன்னையே தாழ்த்தி, ஆவியின் கனிகளால் அன்னை நிரம்பி வழிந்ததால், ஆவியானவரும் அன்னையை ஒரு முறை வாழ்த்த வேண்டும் என்று நினைக்கின்றார்.

அதை லூக்கா நற்செய்தியில் இருந்து தெரிந்ததுகொள்ளலாம் :

41. மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.
42. அப்போது அவர் உரத்த குரலில், ' பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!
43. என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?
44. உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று.
45. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் ' என்றார்.
~~ லூக் 1 : 41 - 45

இதில் குறிப்பிடப் பட்டுள்ள வார்த்தைகளை நன்றாக படியுங்கள்.

எலிசபெத் தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார் என்பதிலிருந்து அடுத்து வரப்போகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பரிசுத்த ஆவியானவரின் குரல் என்பதை நீங்கள் அறிந்தது கொள்ளலாம்.

அதிலும், முதிர் வயதில் இருக்கும் எலிசபெத் அம்மாள் உரத்தக் குரலில், ஆவியானவரின் குரலாக பேசுகிறார். அதில் பாருங்கள், ஆவியானவர் அன்னையை எப்படி வாழ்த்துகிறார் என்று.

"பெண்களுக்குள் நீர் ஆசிர் பெற்றவர்."

இந்த வார்த்தைகள் எவ்வளவு ஆழமான கருத்தை கொண்டு இருக்கின்றது. தியானித்து பாருங்கள். பெண்களுக்குள் மிகவும் உயர்வு பெற்றவர் அன்னை மரியாள் தான். அவரை போன்று முன்னும் இனியும் யாரும் பிறக்க போவது இல்லை என்று பரிசுத்த ஆவியானவரே சொல்லி மகிழ்கிறார்.

அடுத்து உம் வயிற்றில் வளரும் குழந்தை எந்த அளவிற்கு ஆசிர் பெறுகிறதோ அதே அளவுக்கு அன்னையும் ஆசிர் பெறுகின்றார் என்றால், அன்னைக்கு ஆவியானவர் தரும் மேன்மையை பாருங்கள்.

அடுத்த வார்த்தையாக, என் ஆண்டவரின் தாய் என்று அழைப்பது ஒரு மறை பொருளின் மாபெரும் விந்தை. பரிசுத்த ஆவியானவர், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை, என் ஆண்டவர் என்று சொல்லுகின்றார்.

13. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.
14. அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.
15. தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ' அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார் ' என்றேன்.
யோவான் 16 : 13 - 15

இதை பார்க்கும் பொழுது, ஆண்டவராகிய இயேசுவிடம் இருந்து புறப்படும் ஆவியானவர், இயேசு சொல்வதை எல்லாம் நிறைவேற்றுபவர் இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்கின்றார்.

அன்னை மரியாள் இயேசுகிறிஸ்துவின் தாய் என்பதால், என் ஆண்டவரின் தாய் என்று கூறி அன்னையை உயர்த்துகிறார்.

இன்னும் அன்னைக்கு ஒரு புகழ்மாலை சூட்டுகின்றார் :

ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர் ' என்றார்.
~~ லூக் 1 : 45

தனக்கு ஆண்டவர் சொல்லியவை அனைத்தும் நடக்கும் என்று முழுமையாக நம்பும் ஒரு தாயை பரிசுத்த ஆவியானவர் கண்டு அவரை வாயார வாழ்த்துகிறார்.

ஆகவேதான் இன்று நம் தாய்திருச்சபை, அன்னை மரியாளை விசுவாசத்தின் தாய் என்றும், நம்பிக்கையின் நட்சத்திரம் என்றும் புகழ்ந்து மகிழ்கின்றது.

எல்லாம் வல்ல கடவுளும், பரிசுத்த ஆவியானவரும் மனமார வாழ்த்துகின்றனர்.

ஆனால் ஒரு சில சபைகளை கட்டிஅழும் மக்கள், புரிந்துகொள்ள முடியாதவாறு அவர்களை வழிநடத்துபவர்கள் கண்களை கட்டியுள்ளனர்.

இவர்களை குறித்து தான் மத்தேயு நற்செய்தி இவ்வாறு கூறுகின்றது :

13. ' வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!

14. மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்து விடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை;

15. 'வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு!
~~ மத் 23 : 13 - 15