பாத்திமா காட்சிகள் - காட்சிகளுக்குப் பின் குழந்தைகளின் நிலை, பிரான்சிஸ்

பாத்திமா காட்சிகளைப் பற்றிய சரித்திர உண்மைகளை இதுவரை கண்டோம். இக்காட்சிகள் உலகிற்கு ஏன் தரப்பட்டன என்பதை நம் அன்னையின் வாய்மொழியாக அறிந்தோம்.

இத்தகைய ஒரு அற்புத நிகழ்ச்சிக்குப் பிறகு உலகமோ, நாமோ முன்பு வாழ்ந்தது போல் இனி வாழ இயலாது, வாழவும் கூடாது.  நம் வாழ்வு மாறியே தீர வேண்டும். எவ்வாறு நம் வாழ்வு மாற வேண்டும் என்று அறிய நாம் ஆவல் கொள்கிறோம்.  வெறும் அறிவுரையை விட யாராவது அத்தாய் கூறியபடி வாழ்ந்து காட்டியிருந்தால், அதை நாமும் அப்படியே பின்பற்றலாம் அல்லவா?  

பாத்திமா செய்திகளை அவற்றின் முழுத் தன்மையுடன் வாழ்ந்து காட்டியவர்கள் யாராக இருக்க முடியும், காட்சி பெற்ற அம்மூவரைத் தவிர?  எனவே காட்சி அருளப்பெற்று அதனை வாழ்க்கையில் கடைப்பிடித்த அம்மூன்று சிறுவர்களின் வாழ்க்கையைக் காண்போம்.

பிரான்சிஸ்

“நீ வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று இரண்டாம் காட்சியில் தேவ அன்னை லூஸியாவிடம் கூறியிருந்தார்கள். லூஸியாவின் தாய் மரிய ரோஸா, அன்னையின் இவ்விருப்பத்தை நிறைவு செய்யும்படி லூஸியாவை பாத்திமாவில் சிறுமிகளுக்கென புதிதாக நிறுவப்பட்ட பள்ளிக்கு அனுப்பத் தீர்மானித்தாள்.  ஜஸிந்தாவையும் அதே பள்ளியில் சேர்க்க ஒலிம்பியாவிடம் கூறி ஏற்பாடு செய்தாள்.  லூஸியாவும் ஜஸிந்தாவும் பள்ளி செல்ல ஆரம்பித்தனர்.

பிரான்சிஸ் பள்ளிக்கூடம் செல்ல விரும்பவில்லை.  படித்து என்ன பயன்?  நான்தான் விரைவில் மோட்சம் செல்லப் போகிறேனே என்ற நினைவு அவனுக்கு.  ஆனால் மற்ற இருவருடனும் தினம் பாத்திமா அர்ச். அந்தோனியார் ஆலயம் வரை அவன் செல்வான்.  கோவிலருகே வந்தவுடன்,

“நீங்கள் இருவரும் பள்ளிக்குச் செல்லுங்கள்.  நான் இங்கே கோவிலில் மறைந்திருக்கும் நம் சேசுவுடன் இருப்பேன். வாசிக்கக் கற்றுக் கொள்வது எனக்குத் தேவையில்லை.  நான் சீக்கிரமே மோட்சம் செல்லப் போகிறேன்.  நீங்கள் திரும்பி வரும்போது என்னைக் கூப்பிடுங்கள்” என்று கூறி விடைபெற்றுக் கொள்வான்.

பாத்திமா அர்ச். அந்தோனியார் ஆலயம் பழுது பார்க்கப் பட்டு வந்ததால், நற்கருணை சேசுவை பீடத்திலிருந்து எடுத்து, கோவிலின் இடது பக்கமிருந்த சிறு பீடத்தில் வைத்திருந்தார்கள்.  “நான் திரும்பி வரும்போது பிரான்சிஸை அங்குதான் கண்டேன்” என்று கூறுகிறாள் லூஸியா. அப்பீடத்தருகில் நற்கருணைப் பேழையைப் பார்த்தபடியே பிரான்சிஸ் முழங்காலில் நிற்பான்.  

இவ்வாறு நமது ஆண்டவரால் பயிற்றுவிக்கப்பட்டு, ஐக்கிய ஜெபத்தின் உயர்ந்த நிலைகளை அவன் அடைந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. அதற்குத் தேவையான தேவசிநேகம், தனிமை, பற்றின்மை, சுயநலமின்மை, ஆசை துறத்தல் யாவும் அவனிடம் விளங்கின.  நற்கருணை சேசு மீது அவன் கொண்டிருந்த அன்பு அவனை இந்நிலைக்குக் கொணர்ந்தது.

தனிமையையும், மவுனத்தையும் விரும்பினான் பிரான்சிஸ். சேசுவுடன் அன்பான உறவு கொண்டிருக்க, தனிமையும் மவுனமும் அவனுக்கு மிகவும் உதவின.  எந்நேரமும் நற்கருணையில் மறைந்த சேசுவின் நினைவாகவே இருந்தான்.  இதனால் அவனுக்குத் தனிமை ஒரு பாரமாக இல்லை.  அவன் கடைப்பிடித்த ஜெப வாழ்வில் அவனுக்கு மிகவும் இன்றியமையாத உதவியாயிருந்தது ஜெப மாலையே.  

லூஸியா, ஜஸிந்தா இருவருடனும் பள்ளி விடுமுறை நாட்களில் அவன் கோவா தா ஈரியாவுக்குச் சென்று அங்கு ஜெப மாலையும், வானதூதன் கற்றுக் கொடுத்த ஜெபத்தையும் சொல்வான். கபேசோவுக்கும் சென்று ஜெபிப்பான்.  வாலினோஸ் என்ற இடத்திற்கும் ஜெபிக்கச் செல்வதுண்டு. ஜெபமாலையை எந்நேரம் வேண்டுமானாலும் மிக பக்தியுடன் சொல்ல அவனால் முடியும்.

ஒரு நாள் மூன்று குழந்தைகளும் ஒரு சாலைத் திருப்பத்தில் வரும்போது, ஒரு சிறு கூட்டம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது.  இவர்கள்தான் காட்சி பெற்ற சிறுவர்கள் என்று நிச்சயித்ததும் கூட்டத்தில் ஒருவர் ஜஸிந்தாவை பக்கத்திலிருந்த ஒரு மதில் மேல் எல்லோரும் நன்கு காணும்படி தூக்கி வைத்தார்.  

பிரான்சிஸையும் அவ்வாறே மதில் மேல் தூக்கி வைக்க முயற்சிக்கையில், அவன் தப்பி இன்னொரு மதிலில் ஏறிக் கொண்டான்.  அங்கிருந்து அவன் கீழே பார்க்கையில், ஒரு ஏழைப் பெண் அவள் மகனுடன் கீழே முழங்காலிட்டுக் கைகளை விரித்துக்கொண்டு நோயுற்றிருக்கும் தன் கணவன் சுகம் பெறவும், போருக்கு அனுப்பப் படாமல் காப்பாற்றப்படவும் தேவ அன்னையை மன்றாடும்படி கேட்டாள். 

இந்தக் காட்சி பிரான்சிஸை உருக்கி விட்டது. அவன் அந்த மதில்  மேலேயே  முழங்காலிட்டு,  உடனே  ஜெபமாலையை எடுத்து ஜெபிக்க ஆரம்பித்தான்.  அங்கு நின்ற அனைவரும் அவனுடன் சேர்ந்து ஜெபமாலை செய்தார்கள்.

ஒரு ஜெபமாலை முடிந்ததும், அவர்கள் கோவா தா ஈரியா நோக்கிப் புறப்பட்டார்கள். “அந்தக் கூட்டம் எங்களுடன் கோவா தா ஈரியாவுக்கு வந்தது.  வழியில் இன்னொரு ஜெபமாலை சொன்னோம்.  அந்த ஏழைப்பெண் தேவதாய்க்கு நன்றி கூற தான் திரும்ப வருவதாகக் கூறினாள். அதன்படி அவள் பல தடவை மீண்டும் வந்தாள். நோயிலிருந்து குணமாக்கப்பட்ட தன் கணவனையும் அழைத்து வந்தாள்” என்று லூஸியா குறிப்பிட்டிருக்கிறாள்.

பல யாத்ரீகர்கள் பிரான்சிஸிடம் எல்லா விதமான கேள்வி களையும் கேட்டார்கள்.  நல்ல பையன்களைத் துன்பப்படுத்தும் ஒரு வகைக் கேள்விகள் உண்டே, (கீழே காணப்படுவது போல்) அவ்வகைக் கேள்விகளைக் கேட்டு அவனை வேதனைப்படுத் தினார்கள்.

“தம்பி, நீ தச்சுத் தொழிலா செய்வாய்?”

“இல்லை.”

“பட்டாளத்தில் சேருவாயோ?”

“இல்லையே.”

“டாக்டருக்குப் படிப்பாய். அப்படித்தானே?”

“இல்லை.”

“என்ன? அப்போ நீ குருவாகப் போகிறாயா?”

“இல்லை.”

“இல்லையா? பூசை செய்ய, பாவசங்கீர்த்தனம் கேட்க, கோவிலில் ஜெபிக்க, இதையயல்லாம் நீ விரும்பவில்லையா?”

“விரும்பவில்லை. குருவாக விருப்பமில்லை.”

“அப்போ நீ என்னதான் செய்யப் போகிறாய்?”

“நான் இறக்க வேண்டும்; மோட்சத்திற்குப் போக வேண்டும்!”