பாத்திமா காட்சிகள் - பிரான்சிஸ் பக்தி

பிரான்சிஸ் தன் பக்தியை எல்லாரிடமிருந்தும் மறைத்தே வைத்திருந்தான்.  ஜஸிந்தாவிடமும் கூட அவன் அதைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. மற்ற இருவரையும் அவன் விட்டு விட்டு எங்காவது மறைவில் போய் ஜெபித்துக் கொண்டிருப்பான்.  சேசுவுடன் பேசி அவருக்கு ஆறுதல் வார்த்தை சொல்லிக் கொண்டிருப்பான்.

ஒருநாள் பள்ளி முடிந்து வந்தபோது, பிரான்சிஸைக் காணவில்லை.  எல்லா இடமும் தேடியபின் ஒரு கல் சுவருக்குப் பின்னால் அவன் தரையில் குப்புறப் படுத்திருந்ததைக் கண்டார்கள்.  லூஸியா அவனைப் பார்த்து:

“ஏன் பிரான்சிஸ் எங்களோடு ஜெபிக்க வரவில்லை?” என்றாள்.

“தனியாக இருந்து ஜெபிக்கவும், சேசுவுக்கு ஆறுதல் கொடுக்கவும்தான் விருப்பம். சேசு எவ்வளவு வருத்தப்படுகிறார்!” என்று கூறினான் பிரான்சிஸ்.

“பிரான்சிஸ், உனக்கு எது அதிக விருப்பம், அதாவது சேசு வுக்கு ஆறுதல் கொடுப்பதா, அல்லது பாவிகள் நரகத்திற்குப் போகாதபடி அவர்களை மனந்திருப்புவதா?” 

இந்தக் கேள்வியைக் கேட்ட லூஸியாவுக்கே இதன் ஆழம் தெரியாது.  வேதசாஸ்திரத்தின்படி மிகவும் கடினமான கேள்வி இது. ஆனால் பிரான்சிஸ் சேசுவின் அன்பில் தோய்ந்து நிரம்பியிருந்ததால், தான் நினைக்காமலே எளிதில் சரியான பதிலைக் கூறினான்:

“சேசுவுக்கு ஆறுதல் கொடுப்பதுதான் எனக்கு அதிக விருப்பம்” என்று!  மேலும் அவன் தொடர்ந்து சொன்னான்: “போன மாதம் நம் அம்மா இப்படிச் சொன்னார்கள்தானே, நமதாண்டவர் ஏற்கெனவே நொந்து போயிருப்பதால், அவரை மேலும் மனம் நோகச் செய்யக் கூடாது என்று!  அப்போது அவர்கள் எவ்வளவு துயரமாக இருந்தார்கள் என்று உனக்கு ஞாபகமில்லையா?  முதலில் நான் சேசுவை ஆறுதல்படுத்த விரும்புகிறேன். அதன்பின் பாவிகள் இன்னும் அவரை நோகச் செய்யாதபடி அவர்களை மனந்திருப்ப வேண்டும்.” 

இன்னொரு நாள் பிரான்சிஸை நெடுநேரமாக எங்குமே காணவில்லை.  ஜஸிந்தா எத்தனையோ தரம் கூப்பிட்டுப் பார்த்தாள். அவனைப் பற்றிய ஒரு செய்தியும் இல்லை. இறுதியில் ஒரு கற்குவியலுக்குப் பின்னால் அவன் சாஷ்டாங்கமாகத் தரைவில் கவிழ்ந்து கிடப்பதைக் கண்டு, லூஸியாவும், ஜஸிந்தாவும் ஓடிச் சென்று அவனை எழுப்பினார்கள்.  

அவர்கள் எவ்வளவு உரக்கக் கூப்பிட்டும் அவன் எழவில்லை. பிடித்து உலுக்கியபின் அவன் மெதுவாக விழித்தான்.  தான் எங்கு இருக்கிறான் என்று அவனுக்குத் தெரியவில்லை.  அவர்கள் கூப்பிட்ட குரல் எதுவும் அவனுக்குக் கேட்கவு மில்லை. சம்மனசின் ஜெபத்தைப் பல முறைகள் சொல்லி அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்ததாகப் பின்னர் கூறினான்.

காட்சி தியானியான  அர்ச்.  சிலுவை  அருளப்பர்  “ஆன்மீக போஜனப் பிரியம்” என்று அழைக்கும் ஞான சுயநலம் பிரான்சிஸிடம் இல்லை.  இவ்வளவு அன்பும், ஐக்கிய ஜெபமும் அவனிடம் இருந்தாலும், அதைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, சுயநலமாய் அவன் இருக்கவில்லை. 

மாறாக, அன்பினால் தூண்டப்பட்டு யாருக்கு என்னென்ன உதவி செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து வந்தான்.  சிதறிய ஆடுகளைச் சேகரித்துக் கொடுத்து ஒரு பாட்டிக்கு உதவி செய்வான்.  ஒரு சிறு பறவையை ஒரு சிறுவனிடமிருந்து விடுவிப்பதற்காக அவனுக்கு 2 காசு கொடுக்கும்படி அல்யுஸ்திரல் வரை ஓடிச் சென்று திரும்புவான்.

மற்றொரு நாள் லூஸியாவின் சகோதரி தெரேசா ஓர் இரங்கத் தக்க செய்தி கூறினாள். அதாவது ஒரு பெண்ணின் மகன், தான் செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமத்தப்பட்டுள்ளதாகவும், பல ஆண்டுகள் சிறைச்சாலை அல்லது நாடுகடத்தல் இரண்டில் ஒரு தண்டனை அவனுக்கு விதிக்கப்படும் என்பதுமே அச்செய்தி. 

அம்மகனுக்காக வேண்டிக்கொள்ளும்படி தெரேசா கேட்டிருந்தாள். இதை பிரான்சிஸ் அறிந்தபோது மிகவும் வருந்தினான். “நீங்கள் பள்ளிக்கூடம் போங்கள்.  நான் மறைந்த சேசுவிடம் தங்கியிருந்து இதற்காக மன்றாடுவேன்” என்று மற்ற இருவரிடமும் கூறினான் அவன். 

பள்ளி முடிந்து வந்ததும், லூஸியா அவனிடம், “அதைப் பற்றி நீ நம் அம்மாவிடம் கூறினாயா?” என்று கேட்டாள். அதற்கு பிரான்சிஸ் மறுமொழியாக, “ஆம்.  அம்மாவிடம் கேட்டேன்.  உன் சகோதரி தெரேசாவிடம் அந்தப் பெண்ணின் மகன் சில நாட்களுக்குள் திரும்பி வருவான் என்று கூறு” என்றான்.

அதே போல் அம்மகன் வீடு திரும்பினான்.  அதற்கடுத்த 13-ம் தேதி அப்பெண் கோவா தா ஈரியாவுக்கு வந்து தன் மகனின் விடுதலைக்காக மாதாவுக்கு நன்றி செலுத்தினாள்.

பிரான்சிஸும் ஜஸிந்தாவும் சேர்ந்தே புதுநன்மைக்கு ஆயத்தமாக ஞானப் பாடம் கற்று வந்தார்கள்.  அவ்வருடம் இருவரையும் அவர்கள் தந்தை மார்ட்டோ பங்குக்குருவிடம் அழைத்துச் சென்றார்.  ஆனால் இருவருக்கும் புது நன்மை அடுத்த ஆண்டு கொடுக்கலாம் என்று கூறி அனுப்பி விட்டார் பங்குக்குரு.

அடுத்த ஆண்டில் (1918) இருவரும் சென்ற போது, ஜஸிந்தா பங்குக்குருவின் கேள்விகளுக்குப் பதிலளித்து புது நன்மைக்குத் தெரிவு செய்யப்பட்டு விட்டாள். விசுவாசப்பிரமாண விளக்கத்தில் பிரான்சிஸ் சரியாகச் சொல்லவில்லையாதலால் அவ்வருடமும் அவனுக்குப் புது நன்மையில் சேசுவை உட்கொள்வது மறுக்கப்பட்டது. 

இந்தத் துயரை அவனால் தாங்க முடியவில்லை. இரவும், பகலும் மறைந்த சேசு, மறைந்த சேசு என்று ஒரே நினைவாய் இருந்த இச்சிறுவனுக்கு வேறு பெரிய சிலுவை என்ன இருக்கக் கூடும்!  அவன் சத்தமாக அழுது விட்டான்.  அழுது கொண்டே வீட்டுக்கு வந்தான்.  அவனை சமாதானப்படுத்துவது கஷ்டமாயிருந்தது. 

“இந்தக் கடுந் துயரையும் மறைந்த சேசுவே, உமக்காக ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறி, பொங்கி வந்த துயரத்தை ஏற்றுக் கொண்டான்.

1918-ம் ஆண்டு தபசு காலத்திற்கு முந்திய கார்னிவல் உற்சவத்தில் கலந்து கொள்ளும்படி லூஸியாவிடம் பல தோழிகள் கேட்டனர். கார்னிவெல் உற்சவம் என்றால் பல சிற்றூர்களிலுமிருந்து பையன்களும், பெண்களும் ஒரு இடத்தில் கூடி, பொங்கி, உண்டு, ஆடிப் பாடும் ஒரு வகைக் கேளிக்கை நிகழ்ச்சி. 

அவ்வருடம் அவ்வுற்சவத்தை அல்யுஸ்திரலில் லூஸியா தலைமை ஏற்று நடத்தும் படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.  லூஸியா முதலில் மறுத்தாள். ஆனால் அவர்கள் விடவில்லை. உபத்திரவம் தாங்காமலும், கோழைத் தனத்தாலும் இறுதியில் அவள் இணங்கி விட்டாள்.  

இதை அறிந்த பிரான்சிஸ் லூஸியாவை முறைத்து ஒரு பார்வை பார்த்தான். “இருந்திருந்து நீ இந்தத் தரங்கெட்ட உற்சவத்திற்குப் போகிறாயா?  இவற்றில் ஈடுபட மாட்டேனென்று நீ கொடுத்த வாக்கையும் மறந்து விட்டாய், அப்படித்தானே?” என்றான் ஒரு வகை அதிகாரத்தோடு.

“எனக்கு விருப்பமில்லை. ஆனால் இவர்கள் என்னை எப்படிக் கேட்டுத் தொந்தரவு படுத்துகிறார்கள் என்று நீதான் பாரேன். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை” என்றாள்.

“நீ என்ன செய்ய வேண்டும் என்று சொல்லட்டுமா? நம் அம்மா உனக்குக் காட்சி கொடுத்தார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.  ஆதலால், நீ இனி ஒருபோதும் இத்தகைய ஆடல்களில் கலந்து கொள்வதில்லை என்று அம்மாவுக்கு நீ வாக்களித்திருப்பதாகக் கூறி வர முடியாது என்று சொல்லி விடு. அந்த நாளில் கபேசோ குகைக்குப் போய் விடுவோம்.  யாரும் நம்மைக் காண மாட்டார்கள்” என்று கூறினான் பிரான்சிஸ்.

அதன்படியே அன்று மூவரும், இங்கே கார்னிவெல் உற்சவம் நடக்கையில் கோவா தா ஈரியாவில் ஜெபமாலை சொல்லிக் கொண்டிருந்தார்கள்!

லூஸியாவின் ஞானத் தாய் தெரேசா, உற்சாக நிகழ்ச்சிகளை விரும்பித் தேடுவாள். ஒரு நாள் பிற்பகலில் இம்மூவரையும் கண்டு தன் வீட்டிற்கு அழைத்து ஒரு கேளிக்கைப் பாடலைப் பாடும்படி வற்புறுத்தினாள்.  “காலைக் கதிரவன் போல வரும் காரிகையே வருக...” என்ற இப்பாடலை ஒரு தடவை அவர்கள் பாடினார்கள்.  வீட்டில் எல்லாரும் கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டே இன்னொரு முறை பாடுங்கள் பாடுங்கள் என்று விரும்பிக் கேட்டனர்.  பிரான்சிஸின் மனம் வேதனைப்பட்டது.

“இந்தப் பாட்டை இனிமேல் பாடவே கூடாது.  சேசுவுக்கு இது நிச்சயமாகப் பிடிக்காது” என்று திடமாய்க் கூறி மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு போய் விட்டான்.