எஸ்தர் ஆகமம்

அதிகாரம் 01

1 இந்தியா முதல் எத்தியோப்பியா வரையிருந்த நூற்றிருபத்தேழு மாநிலங்களையும் அசுவேருஸ் மன்னன் ஆண்டுவந்தான்.

2 அவன் அரியணை ஏறிய போது சூசா அவன் தலைநகராயிருந்தது.

3 அவன் தன் நாட்டின் செல்வச் செழிப்பையும் பேராற்றலையும், தன் மகிமை பெருமையையும் மற்றவர்களுக்குக் காட்ட எண்ணினான்.

4 எனவே, தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டிலே எல்லாச் சிற்றரசர்களுக்கும் தன் ஊழியர் அனைவருக்கும் பாரசீகப் பெரியோருக்கும் மேதியரில் உயர்குடி பிறந்தோருக்கும் ஆளுநர்களுக்கும் பல நாட்கள்- நூற்றெண்பது நாட்கள்- தன் அரண்மனையில் பெரியதொரு விருந்து செய்தான்.

5 விருந்து முடிந்த பின் அரசன் சூசாவில் வாழ்ந்து வந்த பெரியோர் சிறியோர் அனைவரையும் அழைத்து, அரசனின் அரண்மனையைச் சேர்ந்த நந்தவன மண்டபத்திலே அவர்களுக்கு ஏழு நாட்கள் விருந்து அளித்தான்.

6 அங்கே சலவைக் கல்லாலாகிய தூண்கள் இருந்தன. தந்தத்தாலாகிய வளையங்களில் பொருத்தப்பட்டு, கருஞ்சிவப்பு நிறமான மெல்லிய சணற் கயிறுகளைக் கொண்டு கட்டப்பட்ட நீலம், பச்சை, ஊதா நிறமுள்ள மெல்லிய சணல் திரைகள் அத்தூண்களின் நான்கு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருந்தன. மேலும் வெள்ளை, சிவப்புப் பளிங்குக் கற்களால் செய்யப்பட்டுச் சித்திர வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்ட தளத்தின் மீது பொன்னாலும் வெள்ளியாலுமாகிய மஞ்சங்கள் வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.

7 விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பருகுவதற்குத் தங்கக் கிண்ணங்கள் கொடுக்கப்பட்டன. பலவிதமான தட்டுகளில் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அரச மகத்துவத்திற்கு ஏற்ற முதல் தரமான திராட்சை இரசம் ஏராளமாகப் பரிமாறப்பட்டது.

8 அரசன் தன் அரண்மனை அலுவலர் அனைவரையும் பந்திக்கு ஒருவராகப் பரிமாறும்படி பணித்தான். விருந்தினர் தத்தம் விருப்பம் போல் குடித்தனர்; விரும்பாதவர்களைக் குடிக்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்தவில்லை.

9 அரசி வஸ்தியும் அசுவேருஸ் அரண்மனையில் பெண்களுக்கென தனியொரு விருந்து அளித்தாள்.

10 ஏழாம் நாளன்று மது அருந்தி மகிழ்வுற்றிருந்த அரசன் தன் ஏவலர்களாகிய மௌமான், பாசத்தா, ஆர்போனா, பாகத்தா, அப்கத்தா, செதார், காற்காஸ் என்னும் ஏழு அண்ணகர்களை அழைத்தான்.

11 அரச முடி தரித்தவளாய் அரசி வஸ்தியைத் தன் முன் அழைத்து வரக் கட்டளையிட்டான். பேரழகியான அவளை மக்கள் அனைவருக்கும் சிற்றரசர்களுக்கும் காட்டவேண்டும் என்பதே அவன் எண்ணம்.

12 அவளோ அண்ணகர் கூறிய அரச கட்டளையை அலட்சியம் செய்து வர மறுத்து விட்டாள். அதனால் அரசன் கடும் கோபமுற்றான்.

13 எனவே, அரசு மரபுப்படித் தன் அருகிலேயே இருந்து வந்த அமைச்சர்களிடம் ஆலோசனை கேட்டான். அவர்கள் முன்னோர்களின் சட்ட திட்டங்களை அறிந்த அறிஞர்களாதலால், அவர்களைக் கேட்காமல் அரசன் ஒன்றும் செய்வதில்லை.

14 அவ்வமைச்சர்களில் கார்சேனா, சேத்தார், அத்மத்தா, தார்சிஸ், மாரேஸ், மார்சனா, மமூக்கன் ஆகியோரே முக்கியமானவர்கள். அரசனோடு நெருங்கிப் பழகி அவருக்கு அடுத்த நிலையில் விளங்கி வந்தவர்கள். இவர்கள் ஏழு பேரும் பாரசீகம், மேதியா நாடுகளில் சிற்றரசராய் இருந்தவர்கள்.

15 அசுவேருஸ் அரசன் அவர்களை நோக்கி, "நான் இந்த அண்ணகர் மூலம் சொல்லி அனுப்பிய கட்டளையை மதிக்காத வஸ்தி அரசியை எப்படித் தண்டிக்க வேண்டும்?" என்று கேட்டான்.

16 அரசனும் சிற்றரசர்களும் கேட்கும்படி மமூக்கன் பின்வருமாறு மறுமொழி கூறினான்: "வஸ்தி அரசி அரசரை மட்டும் அல்ல, அசுவேருஸ் அரசரின் எல்லாக் குடிகளையும் சிற்றரசர்களையுமே அவமதித்திருக்கிறாள்.

17 எப்படியென்றால், அரசி நடந்து கொண்ட முறை எல்லாப் பெண்களுடைய செவிக்கும் எட்டினால், அவர்கள், 'ஒகோ! அசுவேருஸ் அரசர் வஸ்தி அரசியைத் தம்மிடம் வரவேண்டுமென்று கட்டளை யிட்டிருக்க, அவள் போக மறுத்துவிட்டாளல்லவா?' என்று சொல்லித் தாங்களும் தங்கள் கணவரை அலட்சியம் செய்யத் துணிய மாட்டார்களா?

18 இதைப் பின்பற்றிப் பாரசீகர், மேதியர்களின் சிற்றரசர்களுடையை மனைவியர் யாவரும் தங்கள் கணவர் கட்டளையை அலட்சியம் செய்யக் கூடும். ஆதலால் அரசர் கோபம் கொண்டது முறையே.

19 எனவே உமக்கு விருப்பமாயின், பின்வருமாறு ஒர் ஆணை பிறப்பிக்கலாம்: அதாவது, வஸ்தி அரசி இனி அரசருக்குமுன் வரக்கூடாது; அவனுடைய அரசிப் பட்டம் அவளை விடச் சிறந்த மற்றொருத்தியைச் சேரும் என்று கட்டளையிட வேண்டும். இது மாற்றப்படாதிருக்கும் பொருட்டு, பாரசீகர், மேதியர் நாட்டுச் சட்டநூலில் அது எழுதப்பட வேண்டும்.

20 மேலும் இக்கட்டளையைப் பரந்த உமது நாடெங்கும் பறைசாற்ற வேண்டும். இதனால் பெரியோர் சிறியோர் ஆகிய அனைவரின் மனைவியரும் இனித் தம் கணவரை மதித்து நடப்பர்."

21 மமூக்கன் கூறியது அரசனுக்கும் சிற்றரசர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது. எனவே அரசன் அவன் கூறியபடியே செய்தான்.

22 வீட்டிற்குத் தலைவனும் முழு அதிகாரியும் கணவனே என்பதை, பல மொழி பேசும் தன் நாட்டினர் அனைவரும் படித்துப் புரிந்து கொள்ளும் பொருட்டு, அவரவர் மொழிகளில் அதை எழுதி, தன் நாடெங்கும் பறைசாற்றினான்.

அதிகாரம் 02

1 பின்னர் அசுவேருஸ் அரசன் கோபம் தணிந்தவனாய் வஸ்தியையும் அவள் செய்த குற்றத்தையும் அவளைத் தான் தண்டித்திருந்த முறையையும் பற்றிச் சிந்திக்கலானான்.

2 அப்பொழுது அரச அவையில் இருந்த பணியாளரும் அலுவலரும் அரசனை நோக்கி, "கன்னிகளும் அழகிகளுமான பெண்களை அரசருக்குத் தேடிக்கொண்டு வரவேண்டும்.

3 ஆதலால் கன்னிமை கொடாத பேரழகியரைத் தேட நாடெங்கும் ஆட்களை அனுப்ப வேண்டும். அவர்களைச் சூசா நகரிலுள்ள அந்தப்புர மாளிகைக்கு அழைத்துவந்து, அரச மகளிரைக் கவனித்து வரும் ஏகே எனும் அண்ணகன் வசம் அவர்களை ஒப்புவிக்க வேண்டும். அவன் பெண்களுக்கேற்ற அணிகலன்களையும், அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும்.

4 அவர்கள் அனைவரிலும் அரசனுக்கு விருப்பமான கன்னிப் பெண்ணே வஸ்தித்குப் பதில் அரசியாக வேண்டும்" என்றார்கள். இது நலமென்று கண்டு அவ்வாறு செய்யுமாறு அரசன் பணித்தான்.

5 அக்காலத்தில் பென்யமீன் குலத்துக் கீசின் மகனான செமேயிக்குப் பிறந்த யாயிர் என்பவனின் மகனாகிய மார்தொக்கே என்னும் பெயர் கொண்ட யூதர் ஒருவர் சூசா நகரில் வாழ்ந்து வந்தார்.

6 பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் யூதா அரசன் எக்கோனியாசைச் சிறைப்படுத்திய போது அவனோடு இவரும் யெருசலேமிலிருந்து கைதியாகச் சென்றிருந்தார்.

7 இவர் தம் சகோதரன் மகள் ஏதிஸ்ஸாவைத் தன் வீட்டில் வளர்த்து வந்தார். அவளுக்கு எஸ்தர் என்று இன்னொரு பெயரும் உண்டு. அவளுக்குத் தாயுமில்லை தந்தையுமில்லை. ஆனால் அவள் எழில் படைத்த பேரழகி. அவன் தந்தையும் தாயும் இறக்கவே, மார்தொக்கே அவளைத் தம் மகளாக எடுத்து வளர்த்து வந்தார்.

8 அரச கட்டளை பறைசாற்றப்பட்டது. எனவே, பேரழகிகள் சூசாவுக்குக் கொண்டு வரப்பட்டு ஏகே என்னும் அண்ணகன் வசம் ஒப்புவிக்கப்பட்டனர். அவர்களோடு எஸ்தரும் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டாள். அங்கே மற்றப் பெண்களோடு இருந்து வந்தாள்.

9 அவளை ஏகே விரும்பினான். எனவே அவள் அவனது தயவைப் பெற்றாள். அதன் பயனாக, அரச மாளிகையில் இருந்த மிக்க அழகு வாய்ந்த ஏழு இளம் பெண்களை அவளுக்குத் தோழியராக நியமிக்கவும், அவளுக்குச் சேரவேண்டிய அனைத்தையும் விரைவில் கொடுக்கவும் (மற்றொரு) அண்ணகனுக்கு அவன் கட்டளையிட்டான். மேலும், அவளையும் அவள் தோழியரையும் அலங்கரித்து, அழகுபடுத்தத் தேவையானவற்றை எல்லாம் கொடுக்கவும் சொன்னான்.

10 ஆனால் எஸ்தர் தன் குலத்தையும் சொந்த நாட்டையும் பற்றி அவனுக்குத் தெரிவிக்கவில்லை. ஏனென்றால், அவற்றைத் தெரிவிக்க வேண்டாமென்று மார்தோக்கே திட்டமாய்க் கூறியிருந்தார்.

11 மார்தொக்கே எஸ்தருடைய நலத்தின் மீது அக்கறை கொண்டு, அவளுக்கு நிகழ விருப்பதை அறிய விரும்பினார். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னியர் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு முன் நாள்தோறும் வந்து உலாவுவது வழக்கம்.

12 கன்னிப் பெண்களுக்குரிய முறைப்படி பன்னிரண்டு மாதங்கள் கடந்த பின் தான் அப்பெண்கள் அனைவரும் தத்தம் முறைப்படி அரசன் முன் செல்ல முடியும். அதுகாறும் ஆறு மாதம் உடம்பிலே வெள்ளைப் போளம் பூசிக்கொள்வர்; மிஞ்சிய ஆறுமாதம் அழகுப் பொருட்களால் தங்களையே அழகுபடுத்திக் கொள்வர்.

13 அவர்கள் அரசனிடம் செல்லு முன் தங்கள் ஒப்பனைக்கென்று அவர்கள் கேட்ட அனைத்தும் அவர்களுக்குக் கொடுக்கப்படும்; தாங்கள் விரும்பியது போல் அவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொண்டு அந்தப்புர மாளிகையிலிருந்து அரசனின் அறைக்குச் செல்வார்கள்.

14 மாலையில் உள்ளே சென்ற பெண் காலையில் வெளியே வருவாள்; உடனே அவள் அரசனின் வைப்பாட்டிகளைக் கவனித்து வந்த சூசாகாஜ; என்னும் அண்ணகனின் கண்காணிப்பில் இருந்த வேறொரு மாளிகைக்கு அனுப்பப்படுவாள். பிறகு அவளை அரசன் விரும்பிப் பெயர் சொல்லி அழைத்தாலன்றி அவள் ஒரு போதும் அரசனிடம் செல்லமுடியாது.

15 நாட்கள் பல கடந்தன; மார்தொக்கே எடுத்து வளர்த்த தம் சகோதரன் அபிகாயேலின் மகள் எஸ்தர் அரசனிடம் செல்ல வேண்டிய நாளும் வந்தது. அப்பொழுது அவள் மற்றப் பெண்களைப் போல் தான் விரும்பிய ஆடை அணிகள் ஒன்றையும் கேட்காமல், அந்தப்புரப் பெண்களைக் கண்காணித்து வந்த அண்ணகனான ஏகே தனக்கு விரும்பிக் கொடுத்திருந்தவற்றைக் கொண்டே தன்னை அழகு செய்து கொண்டாள். ஏனெனில், எஸ்தர் இயல்பிலேயே மிக அழகு வாய்ந்தவளாய் இருந்தமையால், பார்ப்பவர் கண்களுக்குக் கவர்ச்சியும் விருப்பமும் ஊட்டுபவளாக இருந்தாள்.

16 அசுவேருஸ் ஆட்சியின் ஏழாம் ஆண்டு, தெபெத் என அழைக்கப்பட்ட பத்தாம் மாதத்தில் எஸ்தர் அசுவேருஸ் அரசனுடைய படுக்கையறைக்கு அழைத்து வரப்பட்டாள்.

17 அரசன் ஏனைய பெண்களை விட அவள் மீது அதிக அன்பு கொண்டான். அவள் அரசனிடம் மற்றப் பெண்களை விடத் தயவும் ஆதரவும் பெற்றாள். ஆதலால் அசுவேருஸ் அரச முடியை அவளுக்குச் சூடி வஸ்திக்குப் பதிலாக அவளை அரசியாக ஏற்படுத்தினான்.

18 பிறகு எஸ்தரின் திருமண விழாவை முன்னிட்டுத் தன் சிற்றரசர் அனைவருக்கும் தன் பணியாளருக்கும் சிறந்ததொரு விருந்து அளிக்கக் கட்டளையிட்டான். மேலும், தன் மாநிலங்கள் முழுவதும் அந்நாளை விடுமுறையாகக் கொண்டாடும்படி பணித்து, அங்கு வாழ்ந்து வந்த மக்களுக்குத் தன் அரச மகிமைக்கு ஏற்றபடி பரிசுகளும் வழங்கினான்.

19 இரண்டாம் முறையும் கன்னிப்பெண்கள் கொண்டு வரப்பட்டனர். அப்போது மார்தொக்கே அரண்மனை வாயிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

20 அவர் கூறியிருந்தபடியே எஸ்தர் தன் நாட்டையும் தன் குலத்தையும் பற்றி இன்னும் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவள் சிறுவயதில் அவரிடம் வளர்ந்து வந்த போது அவர் சொற்கேட்டு நடந்தது போலவே இப்பொழுதும் செய்து வந்தாள்.

21 ஒருநாள் மார்தொக்கே அரண்மனை வாயிலண்டை உட்கார்ந்திருந்த போது, அரண்மனையின் தலை வாயிலைக் காத்து வந்த பாகாத்தான், தாரேஸ் என்று இரு அண்ணகர்கள் அரசன் மீது சினங்கொண்டு, அவனுக்கு எதிராய் எழுந்து அவனைக் கொல்ல வகை தேடினர்.

22 இது மார்தொக்கேய்க்குத் தெரிய வந்தது. அவர் உடனே எஸ்தர் அரசிக்கு அதைத் தெரிவித்தார். அவள் மார்தொக்கே பெயரால் அரசனுக்கு அச்செய்தியைச் சொன்னாள்.

23 அது உண்மை என்று தெரியவரவே அக்காவலர் இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி அரசன் முன்னிலையில் நாளாகமத்தில் எழுதப்பட்டது.

அதிகாரம் 03

1 சிறிது காலத்திற்குப் பின்னர், ஆகாகு குலத்தைச் சேர்ந்த ஆமதாதின் மகன் ஆமானை அசுவேருஸ் அரசன் மேன்மைப்படுத்தித் தன் சிற்றரசர்கள் யாவருக்கும் மேலாக அவனை உயர்த்தினான்.

2 ஆகையால் அரண்மனை வாயிலில் இருந்த அரச ஊழியர் அனைவரும் ஆமோனைக் கண்ட போதெல்லாம் மண்டியிட்டு வணங்கினர். ஏனென்றால் அது அரச கட்டளை. மார்தொக்கே ஒருவர் மட்டும் அவனைக் கண்டு மண்டியிட்டு வணங்குவதில்லை.

3 அரண்மனை வாயில் காவலர் மார்தொக்கேயை நோக்கி, "மற்றவர்களைப் போல் நீர் அரச கட்டளையை ஏன் அனுசரிப்பதில்லை?" என்று கேட்டனர்.

4 இவ்வாறு அவர்கள் பலமுறை அவருக்குச் சொல்லியும், அவர் அவர்களுக்குச் செவிமடுக்கவில்லை. தான் ஒரு யூதன் என்று அவர் அவர்களுக்குச் சொல்லியிருந்ததால், அவர் தன் மனத்தை மாற்றுவாரா என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு அவர்கள் அதனை ஆமானுக்கு அறிவித்தார்கள்.

5 மார்தொக்கே தன்னைக் கண்டு மண்டியிட்டு வணங்குவதில்லை என்று அறிந்த போது ஆமான் கடுங்கோபம் கொண்டான்.

6 ஆயினும் மார்தொக்கேயை மட்டும் கொல்வது பெரிய சாதனையல்ல என்று எண்ணினான். ஏனெனில் மார்தொக்கே ஒரு யூதன் என்று தான் கேள்விப்பட்டிருந்தமையால், அசுவேருசின் நாடெங்குமிருந்த யூதர்கள் அனைவரையும் அழிக்க எண்ணம் கொண்டிருந்தான்.

7 அசுவேருசுடைய ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில் நீசான் எனப்படும் முதல் மாதத்தில், யூத குலத்தினரை அழிக்க வேண்டிய மாதமும் தேதியும் யாதென அறியும் பொருட்டு, ஆமான் முன்னிலையில், எபிரேய மொழியில் 'பூர்' எனப்படும் கலசத்தில் சீட்டுப் போட்டுப் பார்த்தனர். அச்சீட்டிலே 'ஆதார்' எனும் பன்னிரண்டாம் மாதம் விழுந்தது.

8 உடனே ஆமான் அசுவேருஸ் அரசனை நோக்கி, "அரசே, தங்கள் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் சிதறிக் கிடக்கும் ஒரு குலத்தினர் இருக்கின்றனர். அவர்கள் புதுப்புதுச் சட்டங்களையும் வழிபாட்டு முறைகளையும் அனுசரித்து வருகிறார்கள். அத்தோடு அரசரின் சட்டங்களையும் அவர்கள் அலட்சியம் செய்கின்றனர். அவர்களைத் தண்டிக்காமல் விட்டு விட்டால் அவர்கள் அதிகச் செருக்குக் கொள்வர்; இது உமது அரசுக்கு நல்லது அன்று என்பது தங்களுக்குத் தெரிந்ததே.

9 எனவே உமக்கு விருப்பமானால் அவர்களை அடியோடு அழித்துவிடக் கட்டளையிடும். அவ்வாறு செய்தால் உமது கருவூலக் கண்காணிப்பாளனிடம் நான் பதினாயிரம் தாலந்து கொடுப்பேன்" என்றான்.

10 அரசன் அதைக் கேட்டு மோதிரத்தைத் தன் கையிலிருந்து சுழற்றி, அதை ஆகாகு குலத்தைச் சேர்ந்த ஆமதாதின் புதல்வனும் யூதர்களின் பகைவனுமாகிய ஆமான் கையில் கொடுத்தான்.

11 பின் அவனை நோக்கி, "நீ தருவாதாகச் சொன்ன பணத்தை நீயே வைத்துக்கொள். நீ சொன்ன அம் மக்களை உன் விருப்பப்படி நடத்து" என்றான்.

12 நீசான் என்னும் முதல் மாதம் பதின்மூன்றாம் நாளில் அரசனின் செயலர்கள் அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆமான் கட்டளையிட்டபடி அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட எல்லா ஆளுநர்களுக்கும் மாநில நீதிபதிகளுக்கும் குலத் தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதி அனுப்பினர். எல்லா நாட்டு மக்களும் தத்தம் மொழியிலே படித்து அல்லது கேட்டுப் புரிந்துகொள்ளும் பொருட்டு அக்கடிதங்கள் பல மொழிகளிலும் எழுதப்பட்டன. அத்தோடு ஒவ்வொரு கடிதமும் அரசனின் முத்திரை பதிக்கப் பெற்று அவன் பெயரால் அனுப்பப்பட்டது.

13 ஆதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளில் சிறியோர், பெரியோர், குழந்தைகள், பெண்கள் ஆகிய எல்லா யூதர்களையும் கொலை செய்து அக்குலத்தையே அழித்தொழிக்கவும், அவர்களுடைய சொத்துகளைக் கொள்ளையிடவும் வேண்டும் எனும் கட்டளையைத் தாங்கி நின்றன அக்கடிதங்கள். அவை அரசனின் தூதுவர் மூலம் மாநிலங்கள் முழுவதும் அனுப்பப்பட்டன.

14 அக்கடிதங்களின் நோக்கம் அதில் குறிப்பிடப்பட்ட நாளிலே எல்லா நாடுகளிலுமுள்ள மக்களும் செய்தியை அறிந்து அதன் படி தயாராயிருக்க வேண்டும் என்பதே.

15 அனுப்பப்பட்ட தூதுவர் அரச கட்டளையை நிறைவேற்ற விரைந்தனர். அன்றே சூசா நகரில் அக்கட்டளை பறைசாற்றப்பட்டது. அந்நேரத்தில் அரசனும் ஆமானும் விருந்துண்டு உல்லாசமாய் இருந்தார்கள். நகரிலிருந்த எல்லா யூதர்களும் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்கள்.

அதிகாரம் 04

1 மார்தொக்கே இவற்றைக் கேள்வியுற்றுத் தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு கோணி ஆடை உடுத்தித் தலையில் சாம்பலைப் போட்டுக் கொண்டார். தம் மனத்துயரை வெளிக்காட்ட நகரின் நடுவில் நின்று உரத்த குரலில் அழுது கொண்டிருந்தார்.

2 இவ்வாறு அழுது கொண்டு அரண்மனைத் தலைவாயில் வரை வந்தார். ஏனெனில் கோணி ஆடை உடுத்திய எவரும் அரண்மனைக்குள் நுழைய அனுமதியில்லை.

3 அரசனின் கட்டளையைக் கேட்கவே, எல்லா மாநிலங்களிலும் நகரங்களிலும் கிராமங்களிலுமிருந்த யூதர்கள் பெரும் துயருற்றனர். உண்ணா நோன்பிருந்து அழுது புலம்பினர். அத்தோடு அவர்களில் பலர் கோணி ஆடை உடுத்திச் சாம்பலில் அமர்ந்திருந்தனர்.

4 அப்போது எஸ்தருடைய தோழியரும் அண்ணகரும் அவளுக்கு அதை அறிவித்தார்கள். அதனால் அவள் மிகவும் துயருற்றாள். பிறகு மார்தொக்கேய்க்கு ஆள் அனுப்பி, அவர் உடுத்தியிருந்த கோணி ஆடையைக் கழற்றிவிட்டுத் தான் அனுப்பி வைத்திருந்த உடையை உடுத்திக்கொள்ளுமாறு மன்றாடினாள். அவரோ அந்த உடையைப் பெற்றுக் கொள்ளவில்லை.

5 எனவே எஸ்தர் தனக்கு ஏவல் புரிய அரசனால் நியமிக்கப்பட்டிருந்த அத்தாக் என்னும் அண்ணகனை அழைத்து, "நீ மார்தொக்கேயைப் போய்ப் பார்த்து அவர் அவ்விதக் கோலம் புனைந்ததற்குக் காரணம் என்ன என்று கேட்டு வா" என்று அனுப்பி வைத்தாள்.

6 அவ்வாறே அத்தாக் அரண்மனை வாயில் முன் வீதியில் நின்று கொண்டிருந்த மார்தொக்கேயிடம் சென்றான்.

7 அப்பொழுது மார்தொக்கே தமக்கு நிகழ்ந்துற்ற எல்லாவற்றையும், யூதர்களின் அழிவிற்கு ஈடாக அரச கருவூலத்திற்குக் கொடுப்பதாக ஆமான் வாக்களித்திருந்த பணத் தொகையைப் பற்றியும் அவனுக்கு விவரமாய் அறிவித்தார்.

8 மேலும் சூசாவில் வெளியிடப்பட்ட அரச கட்டளையின் நகலை அவன் கையில் கொடுத்து அதை எஸ்தருக்குக் காட்டவும், அவள் கட்டாயம் அரசனிடம் போய்த் தன் இனத்தவர்க்காக அவனைக் கெஞ்சி மன்றாட வேண்டும் என்று அவளுக்குக் கூறவேண்டும் என்றும் சொல்லியனுப்பினார்.

9 அத்தாக் திரும்பி வந்து மார்தொக்கே கூறியவற்றை எல்லாம் எஸ்தருக்கு அறிவித்தான்.

10 எஸ்தர் அத்தாக் வழியாக மார்தொக்கேய்க்குப் பதில் சொல்லி அனுப்பினாள்.

11 ஆண், பெண் யாரேனும் அழைப்பின்றி அரசரின் உள்முற்றத்தில் நுழையத் துணிந்தால், அவர்கள் உயிர்பிழைக்கும்படி அரசர் அவர்கள் மீது கருணை கொண்டு தம் பொற் செங்கோலை நீட்டிக் காப்பாற்றினாலொழிய, உடனே அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று ஒரு சட்டம் உண்டு. இது அரசரின் எல்லாப் பணியாளருக்கும் இந்நாட்டின் எல்லாக் குடிகளுக்கும் தெரியுமே. இந்த முப்பது நாளும் அரசர் என்னை அழைக்கவில்லை. இந்நிலையில் எப்படி நான் அவரிடம் போவது?" என்று சொல்லச் சொன்னாள்.

12 இதைக்கேட்டு மார்தொக்கே, மீண்டும் எஸ்தருக்கு மறுமொழியாக,

13 நீ அரண்மனையில் இருப்பதனால், மற்ற யூதர் அனைவரும் சாக, நீ மட்டும் சாகாது உயிர் வாழலாம் என்று நினைக்க வேண்டாம்.

14 நீ இப்பொழுது வாளா இருந்து விட்டாலும் வேறு வழியாய் யூதர்கள் காப்பாற்றப்படலாம். ஆனால், அப்பொழுது நீயும் உன் தந்தையின் வீட்டார் அனைவருமே அழிந்து போவீர்கள். ஒருவேளை நீ இப்படிப்பட்ட காலத்தில் உதவியாய் இருக்க வேண்டுமென்றே அரசி ஆனாய்" என்றான்.

15 எஸ்தர் மார்தொக்கேய்க்கு மீண்டும் ஆள் அனுப்பி,

16 நீர் போய்ச் சூசாவில் உள்ள யூதர் அனைவரையும் ஒன்று திரட்டி எல்லாரும் எனக்காக வேண்டிக் கொள்ளச் செய்யும். மூன்று நாள் இரவு பகலாக ஒன்றும் உண்ணாமலும் குடிக்காமலும் என் பொருட்டு அவர்கள் நோன்பு இருக்க வேண்டும். நானும் என் தோழியரும் அவ்வாறே நோன்பு காப்போம். பின் நான் சாவுக்கும் ஆபத்திற்கும் அஞ்சாமல் சட்டத்திற்கு மாறாக அழைக்கப்படாமலேயே அரசரிடம் செல்வேன்" என்றாள்.

17 மார்தொக்கே எஸ்தர் கூறியபடி விரைவில் செய்தார்.

அதிகாரம் 05

1 மூன்றாம் நாள் எஸ்தர் தன் அரச ஆடைகளை அணிந்து கொண்டு அரண்மனை உள் முற்றத்திற்குள் நுழைந்து அரசன் இருந்த கொலுமண்டபத்தின் முன் நின்றாள். அரசனோ தன் அறை வாயிலுக்கு நேராகக் கொலுமண்டபத்தில் அரியணைமீது அமர்ந்திருந்தான்.

2 எஸ்தர் அரசி இவ்வாறு நிற்கக் கண்டவுடனே அரசன் அவள் மீது கருணை கூர்ந்து தன் கையிலிருந்த பொற்செங்கோலை அவள் பக்கமாய் நீட்டினான். அப்பொழுது எஸ்தர் அருகில் சென்று செங்கோலின் நுனியை முத்தமிட்டாள்.

3 அரசன் அவளை நோக்கி, "எஸ்தர், நீ வந்த காரணம் என்ன? உனக்கு என்ன வேண்டும்? நீ என் அரசில் பாதியைக் கேட்டாலும் அதை உனக்குத் தருகிறேன்" என்றான்.

4 அதற்கு எஸ்தர், "அரசர் விரும்பின் நான் தங்களுக்காகத் தயாரித்திருக்கும் விருந்திற்குத் தாங்களும் ஆமானும் இன்று வருமாறு கோருகிறேன்" என்றாள்.

5 அப்பொழுது அரசன் தன் ஊழியரை நோக்கி, "எஸ்தர் விருப்பப்படியே செய்ய ஆமானை உடனே இங்கு அழைத்து வாருங்கள்" என்றான். பிறகு அரசனும் ஆமானும் அரசி தங்களுக்காகத் தயார் செய்திருந்த விருந்திற்கு வந்தனர்.

6 அரசன் மது அதிகம் அருந்திய பின் அவளை நோக்கி, "உன் விருப்பம் என்ன? உனக்கு என்ன வேண்டும்? என் அரசில் பாதியைக் கேட்டாலும் அதை நான் உனக்குத் தருவேன்" என்றான்.

7 எஸ்தர் அதற்கு மறுமொழியாக,

8 தாங்கள் என் மீது கருணைக் கண் வைத்து என் வேண்டுகோளுக்கு இணங்கினால், நான் அளிக்கும் விருந்திற்குத் தாங்களும் ஆமானும் நாளைக்கும் வரவேண்டும். அப்பொழுது என் எண்ணத்தை அரசருக்குத் தெரிவிப்பேன்" என்றாள்.

9 அன்று ஆமான் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் வெளியே போனான். வழியிலே அரண்மனை வாயில் அருகே மார்தொக்கே உட்கார்ந்திருந்தார். ஆமானைக் கண்ட அவர் எழுந்திருக்கவுமில்லை; கொஞ்சமும் அசையவுமில்லை. இதைக் கண்டு ஆமான் கடும் கோபம் கொண்டான்.

10 ஆயினும் அவன் அதை அப்போது அடக்கிக் கொண்டு தன் வீட்டுக்குப் போனான். வீட்டிலே தன் நண்பர்களையும் தன் மனைவி ஜாரேசையும் அழைத்தான்.

11 தன் செல்வப் பெருமையையும் பிள்ளைகளின் நிறைவையும் அரசன் தன்னை மேன்மைப்படுத்தி எல்லாச் சிற்றரசர்களுக்கும் பணியாளர்களுக்கும் மேலாகத் தன்னை உயர்த்தியிருப்பதையும் அவர்களுக்கு விரிவாகக் கூறினான்.

12 மேலும், "எஸ்தர் அரசியும் தான் அளித்த விருந்திற்கு அரசரோடு என்னையன்றி வேறு எவரையும் அழைக்கவில்லை. நாளைக்கும் அரசரோடு மற்றொரு விருந்திற்கும் அழைக்கப்பட்டிருக்கிறேன்.

13 இவ்விதப் பெருமை எல்லாம் எனக்கு இருந்தும் அந்த யூதன் மார்தொக்கே அரண்மனை வாயிலிலே உட்கார்ந்திருக்க நான் காணுமட்டும், அவை எனக்குப் பொருளற்றவை" என்றான்.

14 அப்பொழுது அவன் மனைவி ஜாரேசும் ஏனைய நண்பர்களும் அவனை நோக்கி, "நீர் ஐம்பது முழ உயரமான ஒரு பெரிய தூக்கு மரத்தைத் தயார் செய்யுமாறு கட்டளையிட வேண்டும். அதிலே மார்தொக்கேயைக் கட்டித் தொங்க விட நாளைக் காலையிலேயே அரசரிடம் உத்தரவு பெற்றுக் கொண்ட பின்னர் மகிழ்ச்சியோடு அரசரோடு விருந்திற்குப் போகவும்" என்றனர். இந்த யோசனை ஆமானுக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே அவன் உயர்ந்ததொரு தூக்கு மரத்தைத் தயார் செய்யக் கட்டளை இட்டான்.

அதிகாரம் 06

1 அன்றிரவு தனக்குத் தூக்கம் வராமையால் அரசன் நிகழ்ச்சிக் குறிப்புகளையும் வரலாற்று ஏடுகளையும் கொண்டுவரக் கட்டளையிட்டான்.

2 அவை அவன் முன் வாசிக்கப்பட்டன. அப்பொழுது பாகாத்தான், தாரேஸ் எனும் இரு அண்ணகர்கள் அசுவேருஸ் அரசனைக் கொல்லும் பொருட்டுச் செய்திருந்த சதியை மார்தொக்கே அரசனுக்கு அறிவித்திருந்த நிகழ்ச்சி வாசிக்கப்பட்டது.

3 அரசன் அதைக் கேட்டு, "மார்தொக்கே இக்காரியத்தில் என் மேல் காட்டிய நேர்மைக்குக் கைம்மாறாக அவன் என்ன நன்மதிப்பும் பரிசும் பெற்றான்?" என்று கேட்டான். அதற்கு அரச அலுவலர்களும் ஊழியர்களும், "அவர் ஒன்றும் பெறவில்லை" என்றனர்.

4 உடனே அரசன், "முற்றத்தில் நிற்பது யார்?" என்று கேட்டான். அப்பொழுது ஆமான் தான் தயார் செய்திருந்த தூக்கு மரத்திலே மார்தொக்கேயைக் கட்டித் தொங்க விட அரசனின் உத்தரவு பெறும் பொருட்டு அரசனின் உள்முற்றத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

5 அரசனின் பணியாளர் திரும்பி வந்து, "ஆமான் முற்றத்தில் இருக்கிறார்" என்றனர். அதற்கு அரசன், "அவன் உள்ளே வரட்டும்" என்றான்.

6 ஆமான் உள்ளே வந்த போது அரசன் அவனை நோக்கி, "அரசர் ஒருவனை மகிமைப்படுத்தி உயர்த்த விரும்பினால், அவனுக்கு அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?" என்று கேட்டான். ஆமான் இதைக் கேட்டதும் தன்னையன்றி வேறு யாரை அரசர் மகிமைப்படுத்தப் போகிறார் என்று தன்னுள் எண்ணிக் கொண்டு, அரசனை நோக்கி,

7 அரசர் ஒருவனை மேன்மைப்படுத்த விரும்புவாராயின்,

8 அவனை அரசகோலம் பூணச்செய்து, அரசரின் குதிரை மேல் அவனை ஏற்றி, அரச முடியை அவனுக்கு அணிவிக்க வேண்டும்.

9 அரச அலுவலர்க்குத் தலைவன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து வர, அவனை ஊர்வலமாய்க் கொண்டுவர வேண்டும். வீதியில் போகும் போது, 'அரசர் மகிமைப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு இத்தகைய மரியாதை செய்யப்படும்!' என்று அத்தலைவன் அவனுக்கு முன்பாகக் கூறிக்கொண்டே செல்ல வேண்டும்" என்றான்.

10 அரசன் ஆமானை நோக்கி, "நீ விரைந்து போய் அரண்மனை வாயிலிலேயே எப்பொழுதும் உட்கார்ந்திருக்கும் மார்தொக்கே எனும் யூதனுக்கு அவ்வாறு செய். அரச கோலத்தையும் குதிரையையும் கொண்டு போய் நீ சொன்னவற்றில் ஒன்றும் விடாது கவனமாய் நிறைவேற்று" என்றான்.

11 எனவே ஆமான் அரச ஆடை அணிகளையும் குதிரையையும் கொண்டு போய், மார்தொக்கேயை அலங்கரித்துக் குதிரை மேல் ஏற்றி, நகர வீதியிலே, "அரசர் மகிமைப்படுத்த விரும்புகிற மனிதன் இத்தகைய மரியாதைக்கு உகந்தவன் ஆவான்!" என உரக்கக் கூறிக் கொண்டே முன் நடந்தான்.

12 இதன்பின் மார்தொக்கே அரண்மனை வாயிலுக்குத் திரும்பி வந்தார். ஆனால் ஆமான் கவலையால் தலையை மூடிக் கொண்டு தன் வீட்டுக்கு விரைந்து சென்றான்.

13 நிகழ்ந்த யாவற்றையும் தன் மனைவி ஜாரேசுக்கும் தன் நண்பர்களுக்கும் கூறினான். பின்னர் அவனுக்கு அறிவுரை கூறும் அறிஞர்களும் அவன் மனைவியும் அவனை நோக்கி, "நீர் தலை பணிந்த மார்தொக்கே ஒரு யூதன் என்றால் நீர் அக்குலத்தை ஒரு போதும் வீழ்த்த முடியாது. மாறாக நீர் தோல்வியுறுவது உறுதி" என்றனர்.

14 அவர்கள் இதைச் சொல்லி முடியுமுன்னே அரசனின் அண்ணகர் விரைந்து வந்து அரசி தயாரித்திருந்த விருந்திற்கு உடனே வரவேண்டுமென்று அவனை வற்புறுத்தினர்.

அதிகாரம் 07

1 இவ்வாறு அரசனும் ஆமானும் அரசியோடு விருந்து அருந்த வந்தார்கள்.

2 இந்த இரண்டாம் நாள் விருந்திலும் அரசன் மதுமயக்கம் கொண்டான். அப்பொழுது எஸ்தரை நோக்கி, "எஸ்தர், உனக்கு வேண்டியது என்ன? நீ விரும்புவது யாது? என் அரசில் பாதியை நீ கேட்பினும் நான் அதை உனக்குத் தருவேன்" என்றான்.

3 அவள் அவனுக்கு மறுமொழியாக, "அரசே, அடியாள் மீது கருணை கொள்ளத் தங்களுக்கு விருப்பம் இருந்தால் தாங்கள் எனக்கும் என் குலத்தவருக்கும் உயிர்ப்பிச்சை அளிக்க வேண்டும் என்று தங்களைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.

4 ஏனென்றால், நானும் என் குலத்தவரும் மிதிபட்டு வாளுக்கு இரையாகி அடியோடு அழியும்படி விற்கப்பட்டுள்ளோம். அடிமைகளாக நாங்கள் விற்கப்பட்டாலும் பரவாயில்லை; அதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியும்; நானும் அதுபற்றி மனம் வருந்தினாலும் ஒன்றும் பேசாமல் இருந்து விடுவேன். ஆனால், இப்பொழுது எம் பகைவனின் கொடும் செயலால் அரசரின் பெயருமல்லவா கெடுகின்றது!" என்றாள்.

5 அதற்கு அசுவேருஸ் அரசன், "ஆ! நீ கூறிய அம் மனிதன் யார்? இவ்வாறு செய்ய அவனுக்கு என்ன துணிவு?" என்று கேட்டான்.

6 அதற்கு எஸ்தர், "எங்கள் கொடிய எதிரியும் பெரும் பகைவனுமான அவன் வேறு எவனுமல்லன்; இதோ, இந்த ஆமானே தான்!" என்றனள். இதைக் கேட்டதும் ஆமான் திகிலடைந்தான். அரசனின் முகத்தையும் அரசியின் முகத்தையும் பார்க்க அவன் துணியவில்லை.

7 உடனே அரசன் கோபம் கொண்டு பந்தியை விட்டெழுந்து அரண்மனை அருகில் இருந்த சோலையில் புகுந்தான். அரசனால் தனக்குத் தீங்கு விளைவது திண்ணம் என்று உணர்ந்த ஆமான் தன் உயிருக்காக எஸ்தர் அரசியைக் கெஞ்சி மன்றாட எழுந்தான்.

8 அரசன் சோலையினின்று விருந்து நடந்த இடத்திற்குத் திரும்பி வந்த போது எஸ்தர் படுத்துக் கிடந்த படுக்கையில் ஆமான் விழுந்து கிடக்கக் கண்டு சினங்கொண்டு, "என் மாளிகையிலே, என் கண்முன்னே அரசியைக் கற்பழிக்க இவனுக்கு என்ன துணிச்சல்!" என்று கத்தினான். அரசன் இச்சொற்களைக் கூறி முடிக்கு முன்னே அங்கிருந்த ஊழியர் ஆமானின் முகத்தை மூடினர்.

9 அப்போது அரசனுக்கு ஏவல் புரிந்து வந்த அர்போனா எனும் ஓர் அண்ணகன் அரசனை நோக்கி, "அரசே, தங்கள் உயிரைக் காத்த மார்தொக்கேயைத் தூக்கிலிடுவதற்காக ஆமான் ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஒன்று செய்துள்ளான். அது அவன் வீட்டிலே நாட்டப்பட்டிருக்கிறது" என்றான். உடனே அரசன், "அப்படியென்றால், அதிலேயே ஆமானைக் கட்டித்தொங்க விடுங்கள்" என்றான்.

10 எனவே மார்தொக்கேய்க்கென்று தான் தயாரித்திருந்த தூக்கு மரத்திலேயே ஆமான் தூக்கிலிடப்பட்டான். அப்பொழுது அரசனின் கோபம் தணிந்தது.

அதிகாரம் 08

1 அன்றே அசுவேருஸ் அரசன் யூதர்களின் பகைவனான ஆமானுடைய வீட்டை எஸ்தர் அரசிக்குத் கொடுத்தான். மார்தொக்கேயும் அரசனிடம் வந்தார். ஏனென்றால் அவர் தான் தன் சிற்றப்பன் என்று எஸ்தர் அரசனிடம் கூறியிருந்தாள்.

2 பின் அரசன் ஆமானிடமிருந்த தன் மோதிரத்தைக் கொண்டு வரச்சொல்லி, அதை மார்தொக்கேய்க்குக் கொடுத்தான். எஸ்தர் மார்தொக்கேயைத் தன் மாளிகைக்கு அதிகாரியாக நியமித்தாள்.

3 மேலும் எஸ்தர் இது போதாதென்று அரசனின் காலில் விழுந்து அழுது, ஆகாகியனான ஆமான் வஞ்சகமாயும் தந்திரமாயும் யூதருக்கு விரோதமாய்ச் செய்யக் கருதியிருந்த கொடிய திட்டங்களை விலக்கி விடுமாறு வேண்டினாள்.

4 அப்பொழுது அரசன் வழக்கப்படி கருணைக்கு அடையாளமாகத் தன் பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான். அதைக் கண்ட அரசி எழுந்து அரசன் முன் நின்று,

5 அரசர் எனக்குத் தயவு காட்டினால், நான் கூறுவது அவருக்குச் சரியாகத் தோன்றினால், அரசர் அருள் கூர்ந்து, தமது ஆட்சிக்குட்பட்ட நாடுகளிலெல்லாம் குடியிருக்கின்ற யூதர்களைக் காக்க வேண்டும். அவர்களை அழிக்க வேண்டும் என்று யூதர்களுடைய பகைவனும் வஞ்சகனுமான ஆமான் அனுப்பியுள்ள பழைய கட்டளைக் கடிதங்களைப் புதுக் கடிதங்களால் விலக்கி வைக்க வேண்டும் என்று தங்களைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.

6 ஏனென்றால் என் குல மக்கள் அழித்தொழிக்கப்படுவதை நான் எவ்வாறு பார்த்துக்கொண்டிருக்க முடியும்?" என்றாள்.

7 உடனே அசுவேருஸ் அரசன் எஸ்தர் அரசியையும் யூதரான மார்தொக்கேயையும் நோக்கி, "ஆமானுடைய வீட்டை இதோ எஸ்தருக்குக் கொடுத்தேன். அவன் யூதர்கள் மேல் கை வைக்க மனந் துணிந்தமையால் அவனைத் தூக்கிலிடக் கட்டளையிட்டேன்.

8 எனவே, நீங்கள் உங்கள் விருப்பப்படி என் பெயரால் யூதர்களுக்குக் கட்டளைக் கடிதங்கள் எழுதி அவற்றிலே என் மோதிர முத்திரையை இடுங்கள்" என்றான். ஏனென்றால் வழக்கப்படி அரசன் பெயரால் எழுதப்பட்டு அவனுடைய மோதிர முத்திரை இடப்பட்ட பத்திரத்தைச் செயலற்றதாக்க யாராலும் முடியாது.

9 சீபான் என்னும் மூன்றாம் மாதம் இருபத்து மூன்றாம் நாள் அரசனின் செயலர்கள் அழைக்கப்பட்டனர். இவர்கள் மார்தொக்கே விருப்பப்படி யூதர்களுக்கும் இந்தியா முதல் எத்தியோப்பியா வரை இருந்த நூற்றிருபத்தேழு மாநிலங்களின் சிற்றரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் நீதிபதிகளுக்கும், அந்தந்த நாட்டு யூதர்களும் ஏனைய மக்களும் பேசிவந்த மொழிகளில் கட்டளைக் கடிதங்களை எழுதி அனுப்பினர்.

10 அரசன் பெயரால் எழுதப்பட்ட அக் கடிதங்கள் அரசனின் மோதிர முத்திரையிடப்பட்டு, தூதுவர் வழியே அனுப்பப்பட்டன. இவர்கள் எல்லா மாநிலங்களுக்கும் சென்று பழைய கட்டளைக் கடிதங்கள் செயல் படாதவாறு செய்யும்படி புதுக் கடிதங்களுடன் விரைந்தனர்.

11 மேலும் தூதுவருக்கு அரசன் ஒரு கட்டளை கொடுத்திருந்தான். "நீங்கள் யூதர்கள் வாழ்ந்து வரும் ஒவ்வொரு நகருக்கும் சென்று அவர்கள் ஒன்று சேர்ந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ளும்படியும், தங்கள் பகைவரையும் அவர்களில் மனைவி, மக்கள் யாவரையும் கொன்று போட்டு அவர்களுடைய வீடுகளை அழித்துக் கொள்ளையிடும் படியும் தயாராயிருக்கச் சொல்ல வேண்டும்" என்பதுவே அக்கட்டளை.

12 யூதர்கள் தங்கள் பகைவர்களைப் பழிக்குப்பழி வாங்குவதற்கென்று எல்லா நாடுகளிலும் ஒருநாள் குறிக்கப்பட்டது. அது ஆதார் என்னும் மாதத்தின் பதின்மூன்றாம் நாளாகும்.

13 அக் கடிதத்தில் சொல்லப்பட்ட பொருளாவது: "யூதர்கள் தங்கள் பகைவர்களைப் பழிக்குப்பழி வாங்கத் தயாராயிருக்கிறார்களென்று அசுவேருசின் செங்கோல் நிழலில் வாழும் எல்லா நாட்டு மக்களுக்கும் இதனால் முன்னறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது" என்பதாம்.

14 செய்தி கொண்டு போகும் தூதுவர் விரைந்து சென்றனர். அந்தக் கட்டளை சூசா நகரிலும் பறைசாற்றப் பட்டது.

15 பின்னர் மார்தொக்கே அரண்மனையையும் அரச சமுகத்தையும் விட்டுப் புறப்பட்டு நதரத்தினுள் சென்றார். அப்பொழுது மார்தொக்கே ஊதா, நீலநிற அரச உடைகளும், தலையில் பொன்முடியும், தோளில் செந்நிறப் பட்டுப் போர்வையும் அணிந்திருந்தார். அதைக் கண்ட நகர மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர்.

16 யூதர்களோ புத்தொளி பெற்றவராய், பெருமையுடன் மகிழ்ச்சி கொண்டாடினர்.

17 அரசனின் கட்டளைக் கடிதம் சென்ற மாநிலங்கள், நகரங்கள் எங்குமிருந்த யூதர்கள் என்றுமில்லாத மகிழ்ச்சியால் பூரித்து, விருந்து உண்டு விழாக் கொண்டாடினர். அவர்களைப்பற்றிய அச்சம் நாட்டு மக்கள் அனைவரையும் எவ்வளவு பீடித்திருந்ததென்றால், வேறு இனத்தையும் பிற மதத்தையும் சேர்ந்த பலர் யூத நெறியிலும் யூத வழிபாட்டிலும் பங்கெடுக்க ஆரம்பித்தனர்.

அதிகாரம் 09

1 ஆதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளிலே முன் கூறியபடி யூதர்களுடைய பகைவர் அவர்களை அழித்து அவர்களுடைய குருதியைச் சிந்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அன்று யூதர்களுக்கு நல்ல காலம் பிறந்தது. அவர்கள் தங்கள் பகைவரை வென்று அவர்களைப் பழிக்குப் பழி வாங்கத் தொடங்கினர்.

2 அதாவது, அவர்கள் தங்கள் பகைவர் மீதும் தங்களை வெறுத்து வந்தவர்கள் மீதும் கை வைக்க எண்ணி, நகரங்களிலும் கிராமங்களிலும் ஊர்களிலும் ஒன்றாய்க் கூடினர். எல்லா மக்களும் அவர்களுடைய வலிமையைக் கண்டு பெருந்திகிலுற்றிருந்தனர். எனவே அவர்களை எதிர்த்து நிற்க எவரும் துணியவில்லை.

3 ஏனெனில் மாநில நீதிபதிகளும் ஆளுநர்களும் மக்கள் தலைவர்களும், நாடெங்கிணும் உள்ள அரச அலுவலர்களும் மார்தொக்கேய்க்கு அஞ்சி யூதரைப் புகழ்ந்து பாராட்டி வந்தனர்.

4 மார்தொக்கே அரண்மனையில் தலைமை அதிகாரியாகவும் செல்வாக்குள்ளவராகவும் இருக்கிறார் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர் நாளுக்கு நாள் பெரியவராகவே, அவர் புகழ் வளர்ந்து மாநிலங்கள் எங்கணும் பரவலாயிற்று.

5 எனவே யூதர்கள் தம் பகைவரைத் துன்புறுத்தி வாளுக்கு இரையாக்கி அழித்தனர்; இவ்வாறு அவர்களைப் பழிக்குப்பழி வாங்கினர்.

6 சூசா நகரிலேயே ஐந்நூறு பேரைக் கொன்றனர். மேலும் தங்கள் பகைவனாகிய ஆகாகியனான ஆமானின் புதல்வர்,

7 பார்சன், தத்தா, தெல்போன், எஸ்பாத்தா,

8 பொறாரத்தா, ஆதலியா, அரிதத்தா,

9 பேர்மெஸ்தா, அரிசாயி, அரிதாயி, ஜெசத்தா எனும் பத்துப் பேரையும் அழித்தனர்.

10 இவ்வாறு இவர்களைக் கொன்ற போதிலும் இவர்களது சொத்தின் மீது அவர்கள் கை வைக்கவில்லை.

11 சூசாவில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை அன்றே அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

12 அவன் அரசியை நோக்கி, "சூசா நகரில் மட்டுமே ஐநூறு பேரும், ஆமானின் பத்துப் புதல்வர்களும் யூதர்களால் கொல்லப்பட்டிருக்கின்றனர். அப்படியென்றால் எல்லா நாடுகளிலும் அழிக்கப்பட்டோர் தொகை எவ்வளவு இருக்கும் என்று பார்! இன்னும் உனக்கு என்ன வேண்டும், சொல்; அது நடந்தே தீரும்" என்றான்.

13 அதற்கு எஸ்தர், "தாங்கள் விரும்பினால் சூசாவில் இன்று போலவே, நாளையும் செய்யவும் ஆமானுடைய பத்துப் புதல்வர்களையும் தூக்கில் தொங்க விடவும் யூதருக்கு அனுமதி வழங்க வேண்டும்" என்றாள்.

14 அரசன் அதற்கும் உடன் பட்டான். உடனே இக்கட்டளை சூசாவில் பறைசாற்றப்பட்டது. அதன்படி ஆமானின் பத்துப் புதல்வர்களும் தூக்கில் தொங்க விடப்பட்டனர்.

15 ஆதார் மாதம் பதினான்காம் நாள் யூதர்கள் கூடிச் சூசாவில் இன்னும் முந்நுறு பேரைக் கொன்றார்கள். ஆயினும், இவர்களுடைய சொத்தை அவர்கள் கொள்ளையிடவில்லை.

16 அரசனின் ஆட்சிக்கு உட்பட்ட எல்லா நாடுகளிலும் யூதர்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ளவும், தம் எதிரிகளின் விரோதத்திற்கு முடிவு காணவும் தம் பகைவரில் எழுபத்தையாயிரம் பேரை யூதர்கள் கொன்று குவித்தனர். ஆயினும் அவர்களுடைய சொத்துகளை அவர்கள் கொள்ளையிடவில்லை.

17 அவர்கள் ஆதார் மாதம் பதின்மூன்றாம் நாள் இக் கொலைத் தொழிலை ஆரம்பித்து பதினான்காம் நாள் முடித்தனர். இந்த நாள் அன்றிலிருந்து என்றும் விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றும், அந்நாளிலே விருந்துண்டு மனம் மகிழ வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.

18 சூசா நகரிலுள்ள யூதர்களோ அம்மாதம் பதின்மூன்றாம், பதினான்காம் நாட்களிலே கூடிவந்து பதினைந்தாம் நாள் ஓய்வு பெற்றதால், பதினைந்தாம் நாளையே விருந்துண்டு மகிழ்ச்சி கொண்டாடும் விழா நாளாக ஆக்கினார்கள்.

19 இதன் பொருட்டே அரணற்ற கிராமங்களிலும் ஊர்களிலும் குடியிருந்த யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினான்காம் நாளில் விருந்துண்டு மகிழ்ச்சி கொண்டாடுகின்றனர். அத்தோடு தங்கள் அயலார்க்கு வரிசையும் அனுப்பி வருகின்றனர்.

20 மார்தொக்கே இந்நிகழ்ச்சிகளை எல்லாம் எழுதினார்; அவற்றை அசுவேருஸ் அரசனின் ஆட்சிக்குட்பட்ட நாடெங்கணும் வாழ்ந்து வந்த யூதர்களுக்கு அனுப்பி வைத்தார்.

21 ஆதார் மாதத்தின் பதினான்காம், பதினைந்தாம் நாட்களைத் திருநாட்களாகக் கொண்டாடவேண்டும் என்றும்; ஆண்டுதோறும் இந்நாட்களை வெகு சிறப்பாகக் கொண்டாடவேண்டும் என்றும்;

22 (யூதர்கள் இந்நாட்களில் தங்கள் பகைவர்களைக் கொன்று பழிவாங்கியதால் முன்னிருந்த அழுகையும் கவலையும் மகிழ்ச்சியாக மாறியதை நினைத்து) இந்நாட்களில் விருந்துண்டு மகிழ்ச்சி கொண்டாடவும், ஒருவர்க்கொருவர் வரிசை அனுப்பி, ஏழை எளியவர்க்குத் தான தருமஞ் செய்யவும் வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

23 மார்தொக்கே தம் கடிதம் மூலம் கட்டளையிட்ட விழாக்கள் அனைத்தையும் அன்று முதல் வெகு சிறப்போடு கொண்டாட யூதர்கள் தீர்மானித்தனர்.

24 ஏனென்றால் ஆகாக் வம்சத்தில் தோன்றிய அமதாத்தின் மகனாகிய ஆமான் யூதர்களை விரோதித்துப் பகைத்து, அவர்களைக் கொன்று ஒழிக்கக் கருதி 'நம் மொழியில் பூர்' என்று சொல்லப்படும் திருவுளச்சீட்டுப் போட்டான்.

25 ஆனால் எஸ்தர் அரசனிடம் போய் மன்றாடி, யூதர்களுக்கு மாறாக அவன் நினைத்த சதி அவன் தலைமீதே விழும்படி செய்தாள்; அவன் அனுப்பிய கட்டளைக் கடிதத்தை அரசனின் புதுக் கட்டளைக் கடிதத்தால் விலக்கினாள்; இதனால் பிறகு ஆமானும் அவன் புதல்வர்களும் கழுமரத்திலே ஏற்றப்பட்டனர்.

26 'பூர்' என்னும் திருவுளச் சீட்டைக் குறித்து இவ்விழாநாட்கள் 'பூரிம்' என அழைக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகள் எல்லாம் 'மார்தொக்கேயின் கடிதங்கள்' என்னும் நூலில் எழுதப்பட்டுள்ளன.

27 யூதர்கள் தங்களுக்கு நேரிட்ட துன்பங்களையும் அவற்றைத் தொடர்ந்து வந்த நல்ல காலத்தையும் நினைத்து எடுத்த தீர்மானம் என்னவென்றால், "நாங்களும் எங்களுக்குப் பின்வரும் எம் மக்களும், இனி எங்கள் சமயநெறியில் சேரவிரும்பும் யாவரும் முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து தவறாமல் இவ்விரண்டு நாட்களையும் திருநாட்களாகக் கொண்டாடுவோம். இது ஆண்டுதோறும் குறிக்கப்பட்ட நாட்களில் (மார்தொக்கேயின் கடிதங்களில்) எழுதப்பட்டிருப்பது போல் சரியாக அனுசரிக்கப்படும்" என்பதாம்.

28 மேற்சொன்ன திருநாட்களை மனிதர் ஒருபோதும் மறவாது அவற்றைத் தலைமுறை தலைமுறையாக மண்ணக மாநிலங்கள் எங்கணும் கொண்டாடி வருவர். பூரிம் என்னும் திருவுளச்சீட்டுத் திருநாட்களை யூதர்களும் அவர்கள் பிள்ளைகளும் கொண்டாடாத நகரமே இல்லை. ஏனென்றால் அவர்கள் யாவரும் அவற்றை அவ்வாறு அனுசரிப்பதாக எற்றுக் கொண்டிருந்தனர்.

29 அபிகாயேலின் புதல்வியாகிய எஸ்தர் அரசியும் யூதரான மார்தொக்கேயும் அந்நாள் இனி எக்காலத்திலும் பெரிய திருநாளாகக் கொண்டாடப்படும்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்று இரண்டாவதொரு கடிதத்தையும் எழுதினார்கள்.

30 அன்றியும், தங்களுக்குள் சமாதானமாய் இருக்க வேண்டும் என்றும், உண்மையில் நிலைத்து நிற்க வேண்டும் என்றும், அசுவேருஸ் அரசனின் நூற்றிருபத்தேழு நாடுகளிலுமுள்ள யூதர் அனைவருக்கும் அறிவுரை கூறினார்கள்.

31 பூரிம் என்ற திருவிழாவைக் குறிப்பிட்ட காலத்தில் மிக்க மகிழ்ச்சியோடு கொணடாட வேண்டும் என்றும் எழுதிவைத்தார்கள். எஸ்தரும் மார்தொக்கேயும் கட்டளையிட்டவாறு, யூதர்கள் எல்லாரும் நடந்துகொண்டனர். தாங்களும் தங்கள் மக்களும் நோன்பு காத்து, பூரிம் திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாட உடன்பட்டனர்.

32 எஸ்தர் ஆகமம் எனப்படும் இந்த வரலாற்று நூலிலே அடங்கியுள்ள எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டனர்.

அதிகாரம் 10

1 அசுவேருஸ் அரசன் உலக மக்கள் அனைவரையும், கடலிலுள்ள எல்லாத் தீவுகளிலும் வாழ்ந்து வந்த மக்களையும் தனக்குக் கப்பம் கட்டச் செய்தான்.

2 அவனுடைய ஆற்றல், அரசு, மேன்மை, பெருமை முதலியன பற்றியும் அவன் மார்தொக்கேயே மேன்மைப்படுத்திய நிகழ்ச்சி பற்றியும் மேதியா, பாரசீகம் ஆகிய நாடுகளின் வரலாற்று ஏடுகளிலே எழுதப்பட்டுள்ளது.

3 யூதகுலத்தைச் சார்ந்த மார்தொக்கே அசுவேருஸ் அரசனுக்கு அடுத்த நிலையில் மகிமை பெற்றிருந்தார். இவர் யூதருக்குள் சிறந்தவர்; தம் சகோதரர்க்குப் பிரியமானவர்; தம் மக்களின் பொதுநன்மையைத் தேடுபவர்; தம் குலத்தின் நன்மையின் பொருட்டுப் பரிந்து பேசுபவர் என்றெல்லாம் அவ்வேடுகளிலே காணக்கிடக்கின்றன.

4 மேலும் மார்தொக்கே சொன்னதாவது:

5 இவை கடவுளால் நேர்ந்தன. இவற்றிற்கு அடையாளமாக நான் ஒரு கனவு கண்டேன். அவற்றில் ஒன்றேனும் நிறைவேறாமல் போனதில்லை.

6 அது என்னவென்றால்: சிறிய ஊற்று ஒன்று ஆறாகப் பெருகிற்று; பின் அது ஒளியாகவும் சூரியனாகவும் மாறி இறுதியில் வெள்ளப்பெருக்கெடுத்து ஒடியது. இது அரசனின் மனைவியாகத் தேர்ந்துகொள்ளப்பட்டு, அரசனின் அரசியாக நியமிக்கப்பட்ட எஸ்தருக்கு அடையாளம்.

7 பறவை நாகங்கள் இரண்டு காணப்பட்டன: இவை எனக்கும் ஆமானுக்கும் அடையாளமாம்.

8 கூடிவந்த குடிகள் யாரென்றால், யூதருடைய பெயரையே அழித்து விட முயன்ற மக்களாம்.

9 அவற்றைக் கண்டு என் குலத்தினரான இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டனர். எனவே ஆண்டவர் தம் மக்களைக் காப்பாற்றினார்; எல்லாத் தீமைகளினின்றும் எங்களை மீட்டார். மக்கள் நடுவே அரும்பெரும் செயல்களையும் அருங்குறிகளையும் செய்தார்.

10 அவர் கடவுளின் மக்கள் ஒரு வகுப்பும், புறவினத்தார் எல்லாரும் வேறொரு வகுப்புமாக இரண்டு வகுப்புகளும் இருக்குமாறு கட்டளையிட்டார்.

11 ஆதி முதல் எல்லா மக்களுக்கும் சாதிகளுக்குமடுத்த நிகழ்ச்சிகள் கடவுளால் குறிக்கப்பட்ட போது, முன் சொல்லப்பட்ட இரு வகுப்புகளும் அவருடைய திருவுளத்தின் முன்பாக இருந்தன.

12 ஆண்டவர் தம் மக்களை நினைவு கூர்ந்து, தமது உரிமையின் மீது திருக்கண் வைத்தார்.

13 ஆகையால் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் தலைமுறை தோறும் ஒன்றாகக் கூடி ஆதார் மாதத்தின் பதினான்காம், பதினைந்தாம் நாட்களை மிகச் சிறப்புடனும் அக்களிப்புடனும் திருநாளாய்க் கொண்டாடுவது அவர்கள் கடமை."

அதிகாரம் 11

1 தொலேமே, கிளேயோபாத்திரா என்பவர்களுடைய ஆட்சியின் நான்காம் ஆண்டிலே, தன்னைக் குரு என்றும் லேவியர் குலத்தினர் என்றும் சொல்லிக் கொண்ட தோசித்தேயுசும், அவன் புதல்வனான தொலேமேயும் பூரிம் என்னும் இக்கடிதத்தைக் கொண்டு வந்தனர். தொலேமேயின் மகனான லீசிமாக் யெருசலேமில் அதை மொழி பெயர்த்ததாக அவர்கள் சொன்னார்கள்.

2 மகா அர்தக்சேர்செஸ் ஆட்சியின் இரண்டாம் ஆண்டில் நீசான் மாதம் முதல் நாள் பென்யமீன் குலத்திலே சீசின் புதல்வன் செமேயிக்குப் பிறந்த யாயீருடைய மகன் மார்தொக்கே ஒரு கனவு கண்டார்.

3 அவர் சூசா நகரில் குடியிருந்த ஒரு யூதர்; பெரியவர்; அரண்மனை அலுவலருள் முதல்வர்.

4 பபிலோனிய அரசனான நபுக்கோதனசாரால் யூதாவின் அரசனான எக்கோனியாசுடன் சிறைப்படுத்தப் பட்டவருள் அவரும் ஒருவர்.

5 அவர் கண்ட கனவாவது: பேரிரைச்சலும் கலகமும் இடிமுழக்கமும் நிலநடுக்கமும் பூமியிலே குழப்பமும் ஏற்பட்டன.

6 அப்போது இரண்டு பறவை நாகங்கள் தோன்றின. அவை ஒன்றையொன்று எதிர்க்கத் தயாராய் நின்றன.

7 அவற்றின் இரைச்சலைக் கேட்டு எல்லா மக்களும் நீதிமான்களின் குலத்தை எதிர்த்துப் போராட எழுந்தனர்.

8 அந்நாளில் நிலமெங்கணும் இருளும் ஆபத்தும் துன்ப துயரமும் பேரச்சமும் நிலவின.

9 நீதிமான்களின் குலத்தாரோ தங்களுக்கு நேரிடவிருந்த தீமைகளைக் கண்டு அஞ்சி, சாகத் தயாராயினர்.

10 ஆதலால் அவர்கள் கடவுளை நோக்கி அபயமிட்டார்கள். உடனே சிறியதோர் ஊற்று பெரிய ஆறாகப் பெருகிப் பெருவெள்ளமாக வழிந்தோடிற்று.

11 (அந்நேரத்தில்) சூரியன் உதயமாகவே ஒளி உண்டாயிற்று. (அப்பொழுது) தாழ்ந்தோர் மேன்மையுற்று உயர்ந்தோரை விழுங்கினர்.

12 மார்தொக்கே இந்தக் காட்சியைக் கண்டு படுக்கையினின்று எழுந்த பின்பு, கடவுள் செய்யவிருந்ததைப் பற்றி ஆலோசிக்கலானார்; இக்கனவிற்குப் பொருள் அறிய விரும்பி, அதைத் தம் மனத்தில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டார்.

அதிகாரம் 12

1 அக்காலத்தில் அரசனின் அண்ணகரும் அரண்மனைக் காவலருமான பாகத்தா, தாரா என்பவர்களோடு மார்தொக்கே அரண்மனையில் தங்கியிருந்தார்.

2 அவர் அவர்களுடைய சதித் திட்டத்தைக் கண்டுபிடித்து, அவர்களுடைய திட்டங்களைக் கவனமாய் ஆராய்ந்து, அவர்கள் அர்தக்சேர்செஸ் அரசன் மேல் கைவைக்க முயல்வதைக் தெளிவாய்க் கண்டறிந்தார். உடனே அதை அரசனுக்குத் தெரிவித்தார்.

3 அவர்கள் இருவரும் விசாரிக்கப்பட்டுத் தங்கள் குற்றத்தை ஒத்துக்கொண்ட பின் அரசன் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான்.

4 மேலும் அந்த நிகழ்ச்சியை அரசன் வரலாற்று ஏட்டில் குறித்து வைத்துக் கொண்டான். மார்தொக்கேயும் இதைத் தம் குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொண்டார்.

5 அவர்களுடைய சதித் திட்டத்தை வெளியிட்டதற்காக அரசன் மார்தொக்கேய்க்குப் பரிசுகள் வழங்கியதோடு அவரை அரண்மனையில் தங்கியிருக்கக் கட்டளையிட்டான்.

6 பூஜேயனான ஆமாதாத்தின் புதல்வனான ஆமான் அரசனிடம் பெரும் மதிப்புப் பெற்றிருந்தான். இவன் கொலையுண்ட அண்ணகர் இருவரையும் முன்னிட்டு மார்தொக்கேய்க்கும் அவர் மக்களுக்கும் தீங்கு விளைவிக்க மனம் கொண்டிருந்தான்.

அதிகாரம் 13

1 இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரை ஆட்சி செலுத்தி வரும் பேரரசராகிய அர்தக்சேர்செஸ் தமது ஆட்சிக்கு உட்பட்ட நூற்றிருபத்தேழு நாடுகளின் சிற்றரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் வாழ்த்துக் கூறி வரைவதாவது:

2 நாம் பல நாடுகளை அடிமைப்படுத்தி உலகம் முழுவதையும் நமது ஆட்சிக்குக் கீழ்க் கொணர்ந்திருந்தும், நமது அதிகாரத்தை ஒருகாலும் தீய வழியில் செலவிட விரும்பவில்லை. மாறாக நம் குடிகளைத் தயவோடும் கருணையோடும் ஆண்டு, அவர்கள் யாதோர் அச்சமுமின்றி அமைதியாய் உயிர்வாழவும், எல்லா மனிதரும் விரும்பும் அமைதியை அவர்களும் பெற்று மகிழவும் வேண்டும் என்று விரும்பினோம்.

3 அதற்கான வழிமுறைகளைப் பற்றி நம் அமைச்சர்களைக் கலந்து ஆலோசித்தோம். அப்பொழுது அறிவிலும் நேர்மையிலும் மற்றவர்களுக்கு மேற்பட்டவனும் அரசருக்கு அடுத்த நிலையில் இருந்தவனுமான ஒருவன் இருந்தான்; அவனுக்கு ஆமான் என்று பெயர்.

4 புதுப்புதுச் சட்டங்களைப் பின்பற்றி மற்ற மக்களின் பழக்க வழக்கங்களுக்கு மாறாக நடந்து, அரசர்களின் கட்டளைகளையும் மீறி, மற்றெல்லா மக்களுடையவும் ஒற்றுமையைத் தங்கள் ஒவ்வாமையினால் குலைத்து வரும் ஓர் இனத்தார் உலகெங்கும் சிதறி வாழ்ந்து வருவதாக அவன் நமக்குத் தெரிவித்தான்.

5 மனித இனம் அனைத்திற்கும் ஒவ்வாத சட்ட திட்டங்களைப் பின்பற்றி, நம் கட்டளைகளை மீறி, நமது ஆளுகைக்கு உட்பட்ட மாநிலங்களின் ஒற்றுமையைக் குலைத்து வரும் அவ்வினத்தாரைப் பற்றிக் கேள்விப்பட்ட நாம்,

6 எல்லா நாடுகளுக்கும் தலைவரும் அரசருமாகிய நமக்கு அடுத்த நிலையில் உள்ளவனும் தந்தையைப் போல் நாம் மதித்து வருபவனுமான ஆமானால் குறிப்பிடப்பட்ட அனைவரும், இவ்வாண்டு ஆதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதினான்காம் நாளன்று தங்கள் மனைவி மக்களோடு தங்கள் பகைவர்களால் அடியோடு அழிக்கப்படுவர் என்றும், ஒருவனும் அவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என்றும் கட்டளையிட்டோம்.

7 நம் கருத்து என்னவென்றால், மேற்சொல்லப்பட்ட தீய மனிதர் செத்து ஒரே நாளில் பாதாளத்திலே விழுந்தால், அவர்களாலே நாட்டில் உண்டான கலகம் நீங்கி அமைதி நிலவும் என்பதாம்."

8 மார்தொக்கேயோ ஆண்டவருடைய எல்லா (அற்புதச்) செயல்களையும் நினைவு கூர்ந்து, அவரை நோக்கி,

9 ஆண்டவரே, எல்லாம் வல்ல அரசராகிய ஆண்டவரே, எல்லாம் உமது ஆளுகைக்கு உட்பட்டுள்ளன. நீர் இஸ்ரையேலைக் காப்பாற்றத் திருவுளம் கொண்டால், அதை எதிர்த்து நிற்க எவராலும் இயலாது.

10 விண்ணையும் மண்ணையும், வானத்தின் கீழ் உள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே! நீரே அனைத்திற்கும் ஆண்டவர்.

11 உமது மகிமையை எதிர்த்து நிற்பவன் யார்? நீர் அனைத்தையும் அறிவீர்.

12 அகந்தை கொண்டவனாகிய ஆமானை நான் வணங்க மறுத்தது அகந்தையாலும் வெறுப்பினாலும் அல்ல, பெருமையின் பால் கொண்ட ஆசையினாலும் அல்ல என்றும் நீர் அறிவீர்.

13 ஏனெனில் இஸ்ராயேலின் மீட்பிற்காக அவன் அடிச்சுவட்டையும் மனப்பூர்வமாய் முத்தமிட நான் தயாராய் இருந்தேன்.

14 அவ்வாறு செய்தால் என் கடவுளுக்கே செல்ல வேண்டிய ஆராதனையை ஒரு மனிதனுக்குச் செலுத்தி விடுவேனோ என்று அஞ்சினேன். எனவே என் கடவுளையன்றி வேறெவனையும் ஆராதிக்க மாட்டேன் என்று தீர்மானித்தே அவ்விதமாய்ச் செய்தேன்.

15 எங்கள் பகைவர் எங்களைக் கொன்று விடவும், உமது உரிமையான மக்களை அழித்துவிடவும், விரும்புகின்றனர். எனவே ஆண்டவரே, ஆபிரகாமின் கடவுளாகிய என் அரசே, உம் மக்கள்மேல் கருணை கூர்ந்தருளும்.

16 எகிப்தினின்று நீர் மீட்டுக் கொணர்ந்த உமது பாகத்தைப் புறக்கணித்து விடாதேயும்.

17 என் மன்றாட்டைக் கேட்டு, உமது உரிமைச் சொத்தின் மேல் இரக்கம் வையும். ஆண்டவரே, நாங்கள் உயிர் வாழ்ந்து உமது திருப்பெயரைப் போற்றும்படி நீர் எங்கள் துக்கத்தை மகிழ்ச்சியாய் மாற்றியருளும். உம்மை வாழ்த்துகிற வாய்களை அடைந்து விடாதேயும்" என்று மன்றாடினார்.

18 இஸ்ராயேலர் அனைவரும் தங்களுக்குச் சாவு அண்மையில் இருந்தபடியால், அதே போன்று ஆண்டவரை நோக்கி வேண்டிக்கொண்டனர்.

அதிகாரம் 14

1 விரைவில் வரவிருந்த ஆபத்தைக் கண்டு அஞ்சிய எஸ்தர் அரசியும் ஆண்டவரிடம் சரண் அடைந்தாள்.

2 அவள் அரச ஆடை அணிகளைக் களைந்து விட்டு, அழுகைக்கும் துக்கத்திற்கும் ஏற்ற ஆடைகளை உடுத்திக் கொண்டாள். விலையுயர்ந்த பலவித நறுமண எண்ணெய்களுக்குப் பதிலாகச் சாம்பலையும் சேற்றையும் தலையில் போட்டுக்கொண்டு நோன்புகளால் தன் உடலை ஒறுத்தாள். தான் மகிழ்ச்சி கொண்டாடி வந்த இடங்களெங்கும் தன் கூந்தல் மயிரைப் பிய்த்துப் போட்டுப் பரப்பினாள்.

3 இந்நிலையில் அவள் இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரை மன்றாடினாள்: "என் ஆண்டவரே, நீர் ஒருவரே எங்கள் அரசர்! திக்கற்ற உம் அடியாளுக்கு உதவி புரிந்தருளும். உம்மையன்றி எனக்கு வேறு துணை ஏது?

4 என் ஆபத்து என் கைகளிலேயே இருக்கின்றது.

5 உமக்கு நித்திய உரிமையாய் இருக்கும்படி எல்லா மக்களினின்றும் இஸ்ராயேலையும், அவர்களின் முன்னோர் அனைவரினின்றும் எங்கள் முன்னோரையும் தேர்ந்தெடுத்தீர் என்று என் தந்தையிடமிருந்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

6 உம் திருமுன் நாங்கள் பாவம் செய்தோம். அதனால் எங்கள் பகைவர் கையில் எங்களை ஒப்படைத்தீர்.

7 ஏனென்றால் நாங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கி வந்தோம்.

8 ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர்! இப்போதோ அவர்கள் மிகக்கொடிய அடிமைத்தனத்தால் எங்களை நொறுக்கினதும் போதாமல், புறவினத்தார் வாய் திறந்து தங்கள் விக்கிரகங்களின் ஆற்றலைப் புகழவும் ஒரு மாமிச அரசனை மகிமைப்படுத்தவும் கருதி, உம்முடைய வாக்குறுதிகளைப் பொய்யாக்கவும்,

9 உமது உரிமைச் சொத்தை அழித்துப்போடவும், உம்மை வாழ்த்துகிறவர்களின் வாய்களை அடைக்கவும்,

10 உமது ஆலயத்தினுடையவும் பீடத்தினுடையவும் மகிமையைக் கெடுக்கவும் எண்ணம் கொண்டு தங்கள் விக்கிரகங்களின் கைகள் மீது தங்கள் கைகளை வைத்த விதமாய் ஆணையிட்டார்கள்.

11 ஆண்டவரே, எங்கள் அழிவைக் கண்டு அவர்கள் மகிழாதபடிக்கு, விழலுக்கு ஒப்பான அவர்கள் கையிலே உமது செங்கோலைக் கொடாதேயும்; அவர்களுடைய சதித் திட்டத்தை அவர்கள் மீதே திருப்பி, எங்களைத் துன்புறுத்தத் தொடங்கினவனை அழித்து விடும்.

12 ஆண்டவரே, எங்களை நினைவுகூர்ந்து, எங்களது இடுக்கண் வேளையில் உம்மையே எங்களுக்கு வெளிப்படுத்தியருளும். ஆண்டவரே, தெய்வங்களுக்கெல்லாம் அரசரே, எல்லாம் வல்லவரே, அடியேனுக்குத் திடம் அளித்தருளும்.

13 சிங்கத்தின் முன் எனக்கு நாவன்மையை அளித்தருளும். எங்கள் பகைவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அடியோடு அழியும்படி அவன் அவர்களைப் பகைக்கச் செய்தருளும்.

14 எல்லாம் அறியும் ஆண்டவரே, உம்மையன்றி வேறு துணை ஏதுமில்லாத எனக்கு உதவி புரிந்தருளும்.

15 தீயவருடைய வீண் பெருமையை நான் வெறுக்கிறேன் என்றும், புறவினத்தார், விருத்தசேதனம் செய்யப்படாதார் முதலியோருடைய படுக்கையை நான் விரும்புவதில்லை என்றும் நீர் அறிவீர்.

16 என் தேவையையும் நீர் அறிவீர்: மக்கள் மத்தியில் தோன்றும் வேளையில் நான் தலையில் அணியும் பெருமையினுடையவும் மகிமையினுடையவும் அடையாளத்தை வெறுக்கிறேன். பெண்ணின் சூதகத் துணியைப் போல் அதை வெறுத்து என் மௌன நாட்களில் அதை அணிவதில்லை;

17 ஆமானுடைய மேசையில் அடியேன் உணவு கொள்ளவில்லை; அரசனுடைய விருந்தில் நான் இன்பம் துய்க்கவில்லை; படைக்கப்பட்ட திராட்சை இரசத்தையும் நான் பருகவில்லை;

18 ஆபிரகாமின் கடவுளாகிய ஆண்டவரே, அடியேன் இங்கு வந்தது முதல் இந்நாள் வரை உம்மில் அல்லாது வேறொன்றிலும் நான் மகிழ்ச்சி கொள்ளவில்லை- இவை எல்லாவற்றையும் நீர் அறிவீர்!

19 எல்லாம் வல்ல இறைவா, யாதொரு உதவியுமற்று இருப்போருடைய கூக்குரலைக் கேட்டு, தீயோருடைய கையினின்று எங்களைக் காப்பாற்றி, எனக்குள்ள அச்சத்தையும் ஒழித்தருளும்."

அதிகாரம் 15

1 பிறகு மார்தொக்கே எஸ்தரை அரசனிடம் போகச் சொல்லித் தம் குலத்தவர்க்காகவும் சொந்த நாட்டிற்காகவும் அவனைக் கெஞ்சி மன்றாடச் சொன்னார்.

2 நீ சிறுமியாய் இருந்த போது நான் உன்னை எவ்வாறு வளர்த்து வந்தேன் என்று எண்ணிப்பார். இதோ, அரசருக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஆமான் எங்களைக் கொல்லும்படி அரசரைக் கேட்டுக் கொண்டுள்ளான்.

3 ஆதலால் நீ கடவுளை மன்றாடி, அரசரிடம் பேசிச் சாவினின்று எங்களைக் காப்பாற்று" என்றார்.

4 மூன்றாம் நாள் எஸ்தர் தான் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்து விட்டு, தன் அரச உடைகளை அணிந்தாள்.

5 இவ்வாறு அரச கோலத்தோடு, எல்லாவற்றையும் ஆள்பவரும் மீட்பவருமாகிய கடவுளை மன்றாடினாள். பின்பு இரண்டு தோழியரை அழைத்துக்கொண்டு போனாள்.

6 தன் மேனியின் மென்மையால் தன்னையே தாங்க முடியாதவள் போல் ஒரு தோழியின் மேல் சாய்ந்து கொண்டு நடந்தாள்.

7 மற்றத் தோழியோ தரை மட்டும் தொங்கிக் கொண்டிருந்த அரசியின் பின்தானையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்தாள்.

8 எஸ்தர் செந்தாமரை முகத்தினளாய் ஒளிபடைத்த கண்ணினளாய்த் தோன்றினாள். அவளுடைய உள்ளமோ மாதுயரத்தாலும் பேரச்சத்தாலும் நிறைந்திருந்தது.

9 இந்நிலையில் எஸ்தர் எல்லா வாயில்களையும் ஒவ்வொன்றாய்க் கடந்து சென்று கடைசியிலே அரசன் அமர்ந்திருந்த கொலுமண்டபத்தை அடைந்தாள். பொன்னும், விலையுயர்ந்த முத்துகளும் ஒளிரும் அரச ஆடை அணிந்தவனாய் அரசன் தன் அரியணையில் வீற்றிருந்தான்.

10 அவனைப் பார்க்கவே பயமாய் இருந்தது. அப்பொழுது அவன் தலைநிமிர்ந்து கண்களில் கோபக் கனல் பறக்கப் பார்த்தான். அதைக் கண்ட அரசி அஞ்சி, முகம் வெளிறச் சோர்ந்து தன் தோழியின் மேல் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

11 ஆனால் கடவுள் அரசனின் கல்நெஞ்சத்தை இளகச் செய்தார். எனவே, அவன் அச்சத்தோடு அரியணையினின்று குதித்தெழுந்து விரைந்து வந்தான். தன் கைகளில் அவளைத் தாங்கிக் கொண்டு அவள் மூர்ச்சை தெளியும் வரை அவளை இன்சொற்களால் தேற்றினான்.

12 எஸ்தர், இது என்ன? நான் உன் அண்ணன் அன்றோ? ஏன் அஞ்சுகிறாய்?

13 நீ சாகமாட்டாய்; அந்தக் கட்டளை மற்றவர்களுக்காக விதிக்கப்பட்டதேயன்றி உனக்கன்று.

14 ஆகையால், அருகில் வா; என் செங்கோலைத் தொடு" என்றான்.

15 அவள் பேசாதிருக்க, அரசன் பொற்செங்கோலைத் தானே பிடித்து அவள் கழுத்தின் மேல் வைத்து அவளை முத்தமிட்டான். "நீ ஏன் பேசாமல் இருக்கிறாய்?" என்று கேட்டான்.

16 அதற்கு அவள், "என் தலைவ, நீர் கடவுளின் தூதுவன் போல் தோன்றினீர். எனவே உமது மகிகையைக் கண்ட என் உள்ளம் அஞ்சி நடுங்கிற்று.

17 தலைவ, நீர் வியத்தகு அழகுள்ளவர்! உமது எழில் வதனத்தில் அருள் மிளிர்கின்றது" என்று சொன்னாள்.

18 இவ்வாறு பேசியவாறே மூர்ச்சையாகிக் கீழே விழுந்தாள்.

19 அரசன் கலக்கமுற, அவனுடைய ஊழியர் அனைவரும் அவளைத் தேற்றினர்.

அதிகாரம் 16

1 கடிதத்தின் நகல் பின்வருமாறு: "இந்தியா முதல் எத்தியோப்பியா வரை ஆட்சி புரியும் மாமன்னர் அர்தக்சேர்செசாகிய நாம் நமது ஆளுகைக்கு உட்பட்ட நூற்றிருபத்தேழு நாடுகளின் சிற்றரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் வாழ்த்துக் கூறி வரைவதாவது:

2 பலர் சிற்றரசர்களின் கருணையையும் அவர்களால் தங்களுக்கு அளிக்கப்பட்ட நன்மதிப்பையும் தங்கள் அகந்தையால் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர்.

3 அரசரின் குடிகளை நெருக்கி நொறுக்க முயல்வதுமன்றி, தங்களுக்குக் கிடைத்த பெருமையைத் தாங்க மாட்டாதவர்களாய்த் தங்களுக்கு அதை அளித்தவர்களுக்கு விரோதமாகவே சதி செய்கின்றனர்.

4 இப்படிப்பட்டவர்கள் தாங்கள் பெற்ற நன்மைகளுக்காக நன்றி செலுத்தாமலிருப்பதும், தாங்களே மனித இயல்பு முறைமைகளை மீறி நடந்து கொள்வதுமன்றி எல்லாவற்றையும் அறிகிறவரான கடவுளின் தீர்ப்பிற்கும் தாங்கள் தப்பிக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.

5 அவர்களுடைய மதியீனம் எவ்வளவென்றால், தமக்குக் கொடுக்கப்பட்ட கடமைகளைச் சரிவர நிறைவேற்றி எல்லாவற்றிலும் எல்லாராலும் மெச்சப்படும்படி நடந்து கொள்கிறவர்களைக் கூட தங்கள் பொய்களால் கெடுக்கப் பார்க்கிறார்கள்.

6 கபடின்றித் தம்மைப் போல் மற்றவர்களையும் மதிக்கும் சிற்றரசர்களையும் தங்கள் வஞ்சகத்தால் ஏமாற்ற முனைகிறார்கள்.

7 இவ்வாறு அரசரின் நல்ல திட்டங்களும் சில மனிதரின் சூழ்ச்சியால் வீழ்ச்சி அடைய முடியும் என்பது பழைய வரலாற்றினின்றும், நாடோறும் நடந்தேறி வரும் நிகழ்ச்சிகளினின்றும் தெளிவாகின்றது.

8 எனவே எல்லா மாநிலங்களிலும் அமைதியை நிலை நாட்டுவது நம் கடமை.

9 நாம் மாறுபட்ட கட்டளைகளைப் பிறப்பிப்பது நமது குறுமதியால் தான் என்று நினைக்க வேண்டாம்; ஆனால், அரசின் பொது நன்மையைக் கருதி, காலப்போக்கிற்கும் தேவைக்கும் தக்கவாறு நாம் முடிவுகள் எடுக்கிறோம் என்று அறிந்துகொள்ளுங்கள்.

10 நாம் சொல்வதை நீங்கள் இன்னும் தெளிவாய் அறியும் பொருட்டு ஆமதாதின் புதல்வனாகிய ஆமானை மனத்தில் கொள்ளுங்கள். அவன் குணத்திலும் மசதோனியன்; பிறப்பிலும் மசதோனியன். பாரசீக இரத்தமே அவனிடம் கிடையாது. வழிப்போக்கனாக வந்த அவனுக்கு நாம் நமது இல்லத்தில் இடமளித்திருந்தும் அவன் நமது தயவைத் தனது கொடுமையால் மாசுபடுத்தி விட்டான்.

11 நாம் அவன்பால் வைத்திருந்த அன்பின் மிகுதியைப் பார்த்து எல்லா மக்களும் அவனை அரசரின் தந்தை என்று அழைத்து, அவனை அரசருக்கு அடுத்த நிலையில் வைத்து மரியாதை செலுத்தி வந்தனர்.

12 அதனால் அவன் எவ்வளவு அகந்தை கொண்டான் என்றால், நம் அரசையும் நம் உயிரையுமே பறிக்க முற்பட்டான்.

13 ஏனெனில், எவனுடைய உதவியால் நாம் இன்னும் உயிரோடு இருக்கிறோமோ அந்த நேர்மையுள்ளம் படைத்த மார்தொக்கேயையும், நம் துணைவியான அரசி எஸ்தரையும், அவர்கள் குலத்தினர் யாவரையுமே ஆமான் என்றும் கேட்டிராத புதுப்புது வழிகளால் அழிக்கத் தேடினான்.

14 இவ்வாறு அவர்களைக் கொன்ற பின்பு, துணையின்றி விடப்பட்ட நமக்கும் எதிராகச் சதி செய்து, பாரசீக அரசை மசதோனியர் கைக்கு மாற்றுவதே அவன் எண்ணம் போலும்!

15 நாமோ நன்கு விசாரித்த போது, மனிதர் அனைவரிலும் மிகக் கொடியவனான ஆமானால் கொலை செய்யப்படவிருந்த யூதர்கள் யாதொரு குற்றமும் அற்றவர்கள் என்றும், அவர்கள் நீதி நெறிகளையே அனுசரித்து வருகிறார்கள் என்றும்,

16 அவர்கள் அதி உன்னத மகத்துவமுடையவரும், என்றும் வாழ்பவருமான கடவுளுடைய மக்கள் என்றும் கண்டறிந்தோம். அக் கடவுளது அருளால் அன்றோ நம் முன்னோருக்கும் நமக்கும் ஆட்சியுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது!

17 ஆதலால், நமது பெயரால் ஆமான் உங்களுக்கு அனுப்பியிருந்த கடிதங்கள் இனிச்செல்லாது என்று அறிந்துகொள்ளுங்கள்.

18 அவன் செய்த அந்தக் கொடுஞ் செயலின் பொருட்டு நாமல்ல, கடவுளே அவனுக்குத் தகுந்த தண்டனை விதித்து, அவனும் அவனுடைய சுற்றத்தார் அனைவரும் சூசா என்னும் இந்த நகர வாயில்களுக்கு முன் தூக்கிலிடப் படச் செய்தார்.

19 இனி யூதர்கள் தங்கள் சொந்தச் சட்டப்படி நடக்கலாம் என்பதற்கு ஆதாரமாக, இன்று நாம் அனுப்பும் இக்கட்டளைக் கடிதம் எல்லா நகரங்களிலும் பறைசாற்றப்பட வேண்டும்.

20 தங்களைக் கொல்லக் கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தவர்களை யூதர்கள் ஆதார் என்னும் பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளன்று அழித்தொழிப்பதற்கு நீங்கள் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்.

21 ஏனென்றால், எல்லாம் வல்ல கடவுள் துக்க துயரத்திற்குரிய அந்த நாளை அவர்களுக்கு மகிழ்ச்சியின் நாளாக மாற்றி விட்டார்.

22 எவரெவர் பாரசீக அரசர்களுக்கு நேர்மையுடன் அடிபணிவார்களோ அவர்கள் அனைவரும் தங்கள் நேர்மைக்கு ஏற்ற வெகுமதி பெறுவர் என்றும்,

23 அவ்வரசர்களுக்கு எதிராகச் சதி செய்கிறவர்களோ தங்கள் தீச்செயலின் பொருட்டு அழிக்கப்படுவர் என்றும் இனி யாவரும் அறியும் பொருட்டு நீங்கள் மற்றத் திருவிழாக்களைப் போல் இந்த நாளையும் மிக அக்களிப்போடு கொண்டாடுங்கள்.

24 இந்த விழாவில் பங்குபெறாத நாடும் நகரமும் வாளாலும் நெருப்பினாலும் நாசமாகும்; அரச கட்டளைகளை அலட்சியம் செய்ததற்கும் கீழ்ப்படியாமைக்கும் எடுத்துக்காட்டாக, மனிதர்களும் மிருகங்களும் அங்கு வாழமுடியாதவாறு அவை அழிவுறும்."