யூதித் ஆகமம்

அதிகாரம் 01

1 மேதியருடைய அரசன் அர்பக்சாத் பல நாடுகளைத் தன் ஆதிக்கத்திற்குள் கொணர்ந்தான். பின்னர் மிக வலுவான ஒரு நகரைக் கட்டி, அதற்கு எக்பாத்தான் என்று பெயரிட்டான்.

2 சதுரமாக வெட்டப்பட்ட கற்களால் அதைக் கட்டினான். அதன் மதில்களின் அகலம் எழுபது முழம்; உயரம் முப்பது முழம்; அதன் கொத்தளங்களோ நூறு முழ உயரமாக இருந்தன.

3 அந்தக் கொத்தளங்கள் இருபதடிச் சம சதுரமாய் இருந்தன, அவற்றின் உயரத்திற்கு ஏற்றவாறு கதவுகள் அமைக்கப்பட்டிருந்தன.

4 அர்பக்சாத் தன் படை வலிமையினாலும் தேர்களின் சிறப்பினாலும் தான் ஆற்றல் படைத்தவன் என்று பெருமை பாராட்டி வந்தான்.

5 தனது ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், நினிவே மாநகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த அசீரிய அரசன். நபுக்கோதனசார் அர்பக்சாத்தோடு போர் தொடுத்தான்.

6 யூப்ரடீஸ், திக்ரீஸ், யாதாசோன் என்ற நதிகளின் தீரத்தில் எலிக்கியரின் அரசன் எரியோக்குக்குச் சொந்தமாயிருந்த ராகுவா என்ற பரந்த வெளியில் அவனை வென்றான்.

7 அதனால், நபுக்கோதனசாரின் அரசு புகழ் பெறவே, அவன் செருக்குற்றான். மேலும், சிலியா, தமாஸ்கு, லீபான் என்ற நாடுகளின் எல்லா குடிகளுக்கும்.

8 கார்மேல், கேதார் என்ற நாடுகளின் மக்களுக்கும், சமாரியாவிலும், யோர்தானுக்கு.

9 அக்கரை தொடங்கி யெருசேலம் வரையுள்ள எல்லாருக்கும், எத்தியோப்பியாவின் எல்லை வரை உள்ள எஸ்ஸே நாட்டுக் குடிகளுக்கும்.

10 தூதுவர்களை அனுப்பினான்.

11 அம்மக்களோ வந்தவர்களை ஒருமுகமாய் வரவேற்று உபசரிக்காது வெறுங்கையராய் அனுப்பி வைத்தனர்.

12 எனவே அரசன் நபுக்கோதனசார் அவ்வெல்லா நாடுகளின் மேலும் கடும் சினம் கொண்டான். "அவ்வெல்லா நாட்டவர்களையும் பழிவாங்குவேன்" என்று தன் அரியணையின் மேலும் அரசின் மேலும் ஆணையிட்டுக் கூறினான்.

அதிகாரம் 02

1 தன் ஆட்சியின் பதின்மூன்றாம் ஆண்டு, முதல் மாதம் இருபத்திரண்டாம் நாளன்று, அசீரிய அரசன் நபுக்கோதனசார் பழிவாங்கப் போவதாக அரண்மனை முழுவதும் பேச்சு அடிப்பட்டது.

2 ஆதலால், அவன் மூப்பர் அனைவரையும் படைத் தலைவர்களையும் படை வீரர்களையும் வரவழைத்துத் தன் இரகசிய எண்ணத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினான்.

3 மண்ணகம் முழுவதையும் தனது ஆதிக்கத்திற்குள் கொணர்வதே தன் எண்ணம் எனக் கூறினான்.

4 அதைக் கேட்ட அவர்கள் யாவரும் மகிழ்வுற்றனர், எனவே, அரசன் நபுக்கோதனசார் படைத் தலைவன் ஒலொபெர்னெசை, தன்னிடம் அழைத்தான்.

5 அவனை நோக்கி," நீ மேற்கு நாட்டினர் அனைவர் மீதும், குறிப்பாக நமது கட்டளையைப் புறக்கணித்த மக்கள் மீதும் படையெடுத்துச் செல்.

6 எந்த நாட்டுக்கும் இரக்கம் காட்டாதே. அரணுள்ள நகர்கள் அனைவற்றையும் என் கீழ்க் கொணர்வாய் என்று கட்டளையிட்டான்.

7 ஒலொபெர்னெஸ் உடனே அசீரியத் தலைவர்களையும் ஏனைய படைத்தளபதிகளையும் அலுவலர்களையும் வரவழைத்து அரசன் கட்டளையிட்ட படி போருக்குச் செல்ல வேண்டிய வீரர்களைக் கணக்கிட்டான். அவர்கள் நூற்றிருபதினாயிரம் காலாட்படையினரும் வில் எய்யும் பன்னிரண்டாயிரம் குதிரைப்படையினரும் ஆவர்.

8 மேலும், அவன் தன் படையினருக்குத் தேவையான உணவுப் பொருட்களை ஏராளமாய்ச் சுமந்து சென்ற எண்ணற்ற ஒட்டகங்களையும், கணக்கிலடங்கா ஆடு மாடுகளையும் அவர்களுக்கு முன் அனுப்பி வைத்தான்.

9 அத்தோடு வழியுணவுக்குத் தேவையாயிருந்த தானியத்தைச் சீரியா முழுவதுமிருந்து சேகரித்து வைக்கக் கட்டளையிட்டான்.

10 அதுவுமின்றி, அரண்மனையிலிருந்து ஏராளமான பொன்னும் வெள்ளியும் எடுத்துக் கொண்டான்.

11 இவ்வாறு அவனும் அவனுடைய தேர்ப்படையினர், குதிரைப்படையினர், வில்படையினர் ஆக எல்லாப் படைவீரர்களும் வெட்டுக்கிளிகளைப் போல் பூமியை நிரப்பிக் கொண்டு புறப்பட்டுப் போனார்கள்.

12 ஒலொபெர்னெஸ் அசீரியரின் எல்லைகளைக் கடந்ததும், சிலிசியாவின் இடப்பக்கத்திலிருந்த 'ஆங்கே' என்றே பெரிய மலைகட்குச் சென்று அவற்றின் எல்லாக் கோட்டை கொத்தளங்களையும் கைப்பற்றினான்.

13 மேலும் பேரும் புகழும் வாய்ந்த 'மேலோத்தி' என்ற நகரைத் தாக்கி அதையும் கைப்பற்றினான், தார்சீஸ் நகரின் குடிகளையும், பாலைவனப் பகுதியிலும் 'கெல்லோன்' என்ற நாட்டிற்குத் தெற்கேயும் குடியிருந்த இஸ்மாயேல் குலத்தாரையும் கொள்ளையடித்துச் சென்றான்.

14 பின் யூப்ரடீஸ் நதியைத் தாண்டி மெசொப்பொத்தேமியா நாட்டில் புகுந்து, மாம்பிரே ஆறு தொடங்கிக் கடல் வரை இருந்த சிறந்த நகர்கள் அனைத்தையும் அழித்தான்.

15 சிலிசியா தொடங்கித் தெற்கே யாப்பேத்தின் எல்லை வரையிலுமிருந்த நாடு முழுவதையும் கைப்பற்றினான். அன்றியும், மேதியர் அனைவரையும் சிறைப்படுத்தி,

16 அவர்கள் செல்வங்களையெல்லாம் கொள்ளையடித்தான். தன்னை எதிர்த்து நின்ற அனைவரையும் வாளுக்கு இரையாக்கினான்.

17 அறுவடைக்காலத்தில் அவன் தமாஸ்கு நகர வயல்வெளிகளில் இறங்கி விளைச்சலை எல்லாம் தீக்கிரையாக்கினான். எல்லா மரங்களையும் திராட்சைத் தோட்டங்களையும் அழித்தான்.

18 எனவே, அந்நாட்டுக் குடிகள் அனைவரும் அவனுக்கு அஞ்சி நடுங்கினார்.

அதிகாரம் 03

1 அப்பொழுது மெசொப்பொத்தேமியா, சீரியா, சோபாலின் சீரியா,லீபியா, சிலிசியா முதலிய நாடுகளின் எல்லா நகர்களினின்றும் மாநிலங்களினினிறும் அரசர்களும் மக்களும் தலைவர்களும் தத்தம் தூதுவர்களை ஒலொபெர்னசிடம் அனுப்பினர்.

2 அவர்கள் அவனிடம் போய் அவனை நோக்கி, "எங்கள் மேல் தாங்கள் கோபம் கொள்ள வேண்டாம். நாங்கள் அடிமைப்பட்டுச் சாவதை விட, உயிரோடு மாமன்னர் நபுக்கோதனசாருக்கு ஊழியம் புரிவதும் உமக்குக் கீழ்ப்படிவதுமே நலம்.

3 இதோ, எம் நகர்களும் எங்கள் உடைமைகளும்- மலைகள், குன்றுகள், காடுகள், மாடுகள், செம்மறியாடு, வெள்ளாடு, குதிரை, ஒட்டகம் முதலிய எமது செல்வமும்,

4 எம் குடும்பங்களின் சொத்துகளுமாகிய, இவையாவற்றையும் உமது கையில் ஒப்படைக்கிறோம்.

5 நாங்களும் எம் புதல்வர்களும் உமக்கு அடிமைகளே.

6 நீர் சமாதானத் தலைவராக எம்மிடம் வந்து உமது விருப்பப்படியே எம்மை நடத்தும் என்றனர்.

7 அப்பொழுது அவன் மிகுந்த ஆற்றலோடு குதிரைப்படையுடன், மலைகளின்று இறங்கி வந்து எல்லா நகர்களையும், நாட்டில் வாழ்ந்து வந்த யாவரையும் தனக்கு அடிமைப் படுத்தினான்.

8 மேலும் அவன் கைப்பற்றியிருந்த ஒவ்வொரு நகரிலுமிருந்தும் ஆற்றல் படைத்தோரையும் போரிடக் கூடியவர்களையும் ஒரு துணைப்படையாகச் சேர்த்துக் கொண்டான்.

9 அந்நாடுகளில் எத்தகைய அச்சம் நிலவினதென்றால், நகர்வாழ் எல்லா மக்கள் தலைவர்களும், பெரியோர்களும் மக்களோடு சேர்ந்து, ஒலொபெர்னெசைச் சந்திக்கச் சென்றனர்.

10 முடிகளை அணிந்து கையில் தீவட்டி ஏந்தி, குழல் ஊதி, மேளம் கொட்டிக் கூத்தாடி அவனை வரவேற்கச் சென்றனர்.

11 அவர்கள் இவ்வாறெல்லாம் செய்தும் அவனது கல் நெஞ்சத்தை அவர்களால் மாற்ற முடியவில்லை.

12 ஏனெனில், அவன் அவர்கள் நகர்களை அழித்துச் சிலைத்தோப்புகளைப் பாழாக்கினான்.

13 காரணம் என்னவெனில், அரசன் நபுக்கோதனசார், "நீ எந்தெந்த இனத்தாரைத் தோற்கடித்துச் சிறைப்படுத்துவாயோ, அவ்வினத்தார் வழிபடும் தெய்வங்களையும் அழித்துப் போடு" என்று ஒலொபெர்னெசுக்குக் கட்டளையிட்டிருந்தான். மக்கள் தன்னை மட்டுமே கடவுள் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அரசனின் எண்ணம்.

14 அதன் பின் ஒலொபெர்னெஸ், சோபாவின் சீரியாவையும், அப்பாமேயா, மெசொபொத்தேமியா ஆகிய நாடுகள் அனைத்தையும் கடந்து, காபாவா நாட்டில் குடியிருந்த இதுமேயரிடம் வந்து சேர்ந்தான்.

15 அவர்களின் நகர்களைக் கைப்பற்றி, முப்பது நாட்கள் அங்கே தங்கியிருந்தான். அப்பொழுது தன் படைகள் முழுவதும் ஒன்று கூடும்படி கட்டளையிட்டான்.

அதிகாரம் 04

1 யூதேயா நாட்டில் குடியிருந்த இஸ்ராயேல் மக்கள் இவற்றைக் கேட்டு, ஒலொபெர்னெசுக்கு மிகவும் அஞ்சினர்.

2 அவன் மற்ற நகர்களுக்கும், அவற்றின் ஆலயங்களுக்கும் செய்தது போல், யெருசலேமுக்கும் ஆண்டவரின் ஆலயத்திற்கும் செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினர்,

3 பிறகு அவர்கள் சமாரியா நாடெங்கும் அதைச் சூழ்ந்த இடங்களுக்கும், எரிக்கோவுக்கும் ஆட்களை அனுப்பி, மலைகளின் முகடுகளை எல்லாம் ஏற்கனேவே கைப்பற்றிக் கொண்டனர்.

4 அன்றியும் தம் ஊர்களைச் சுற்றிலும் மதில்களை எழுப்பிப் போர் காலத்திற்கு வேண்டிய தானியங்களைச் சேகரிக்கத் தொடங்கினர்.

5 மேலும், தொத்தாயினுக்கு அருகில் இருந்த பரந்த வெளிக்கு எதிராக அமைந்துள்ள எஸ்த்ரேலோன் ஊருக்கு நேராக இருக்கும் குடிகளுக்கும், எதிரிகள் வரக்கூடுமான இடங்களில் குடியிருந்த அனைவருக்கும் குரு எலியாக்கீம் செய்தி அனுப்பினார்.

6 அதன் மூலம் யெருசலேமுக்குச் செல்லும் மலைப்பாதைகளையும், மலைகளுக்கிடையே உள்ள கணவாய்களையும் கைப்பற்றிக் காக்கவேண்டும் என்று அவர் கட்டளையிட்டிருந்தார்.

7 ஆண்டவரின் குரு எலியாக்கீம் கட்டளையிட்டபடியே இஸ்ராயேல் மக்கள் நடந்து கொண்டனர். மேலும் ஆண், பெண் அனைவரும் வெகு உருக்கமாக ஆண்டவரை நோக்கி வேண்டிக்கொண்டனர்.

8 தங்களையே தாழ்த்தி, நோன்பிலும் செபத்திலும் ஈடுப்பட்டனர். குருக்கள் மயிராடை அணிந்து கொண்டனர்.

9 சிறுவர்கள் ஆலயத்தின் முன் முகம் குப்புற விழுந்து மன்றாடினர். ஆண்டவரின் பீடமோ மயிராடையால் மூடப்பட்டிருந்தது.

10 அவர்கள் ஒரே மனமாய் இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரை நோக்கி, எதிரிகள் எங்கள் சிறுவர்களைக் கொலை செய்யாதவாறும் எம் மனைவியரைப் பிரித்து விடாதவாறும் எம் நகர்களைப் பாழாக்காதவாறும் எம் புனித பொருட்களை மாசுபடுத்தாதவாறும் புறவினத்தார் முன் நாங்கள் அவமானம் அடையாதவாறும் எங்களைக் காத்தருள வேண்டும்" என்று உரத்த குரலில் மன்றாடினார்கள்.

11 அப்போது ஆண்டவரின் குரு எலியாக்கீம் நாடெங்கும் சென்று இஸ்ராயேலரை நோக்கி,

12 நீங்கள் ஆண்டவர் திருமுன் நோன்பிலும் செபத்திலும் நிலைத்திருந்தால், ஆண்டவர் உங்கள் மன்றாட்டைக் கேட்டருளுவார் என்று அறிந்து கொள்ளுங்கள்.

13 ஆண்டவரின் அடியார் மோயீசனை நினைத்துக் கொள்ளுங்கள். அமலேக்கியர் தமது வலிமை, ஆற்றல், படைப் பலம், கேடயம், தேர், குதிரைப்படை முதலியவற்றை நம்பியிருந்தனர். மோயீசனோ படைக் கருவிகளைக் கொண்டல்ல, தமது தூய செபங்களினாலேயே அவர்களை முறியடித்தார்.

14 நீங்கள் தொடங்கியுள்ள இந்தப் பக்தி நிறை செயலில் நிலைத்து நின்றால், இஸ்ராயேலின் எதிரிகள் அனைவரும் அவ்வாறே நாசமடைவார்கள்" என்றார்.

15 அவரது அறிவுரையைக் கேட்ட மக்கள் எல்லாரும் ஆண்டவரை மன்றாடி, இறைவன் திருமுன் (தங்கள் பக்தி முயற்சியில்) நிலைத்திருந்தனர்.

16 அவர்களது பக்தி எத்தன்மையதெனில், ஆண்டவருக்குத் தகனப்பலி ஒப்புக் கொடுப்பவர்கள் கூட மயிராடை அணிந்து, தலையில் சாம்பலைத் தூவிக் கொண்டு ஆண்டவருக்குப் பலி செலுத்தி வந்தனர்.

17 ஆண்டவர் தம் மக்களாம் இஸ்ராயேலைச் சந்தித்தருள வேண்டும் என்று எல்லாரும் முழுமனத்துடனே வேண்டிக் கொண்டனர்.

அதிகாரம் 05

1 இஸ்ராயேல் மக்கள் தன்னோடு போராட முயற்சி செய்கிறதாகவும், மலைப்பாதைகளை அடைத்து விட்டதாகவும் அசீரியப் படைத் தலைவனான ஒலொபெர்னெஸ் கேள்விப்பட்டான்.

2 எனவே அவன் கடும் கோபமுற்றுக் கொதித்தெழுந்தான்; மோவாபின் மக்கள் தலைவர்களையும், அம்மோனியப் படைத்தலைவர்களையும் தன்னிடம் வரவழைத்தான்,

3 அவர்களை நோக்கி, "மலைகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிற அந்த மக்கள் யார்? அவர்களின் நகர்கள் எவை? எப்படிப்பட்டவை? எத்துனைப் பெரியவை? அவர்களது படைப்பலம் யாது? அவர்கள் எத்தனை பேர்? அவர்களது படையை நடத்தி வரும் அரசன் யார்?

4 கீழ்நாட்டவர் அனைவரிலும் இவர்கள் மட்டும் எங்களை வெறுப்பது ஏன்? எங்களைச் சமாதானமாய் வரவேற்கும் பொருட்டு எங்களைச் சந்திக்க வராததன் காரணம் என்ன?" என்று கேட்டான்.

5 அப்பொழுது அம்மோனியர் அனைவருக்கும் தலைவனான ஆக்கியோர் அவனை நோக்கி, "தலைவா நீர் எனக்குச் செவிமடுக்க மனம் கொண்டால் மலைவாசிகளான இம்மக்கள் யார் என்று உமக்கு முன்பாக உண்மையைச் சொல்வேன்.

6 நான் சொல்வது பொய் இல்லை. இம் மக்கள் கல்தேயர் வழிவந்தோர் ஆவர்.

7 அவர்கள் கல்தேயா நாட்டிலிருந்த தங்கள் முன்னோர்களின் தெய்வங்களை வழிபட மனமில்லாததால் முதன் முதல் மெசொபோத்தேமியாவில் குடியேறினர்.

8 இவ்வாறு பற்பல தெய்வங்களை வழிபட்டு வந்த அவர்கள் தங்கள் முன்னோரின் வழிமுறைகளை விட்டு விட்டு, விண்ணகக் கடவுளான ஒரே ஆண்டவரை வழிபட்டனர்.

9 அவரோ அவர்களை அங்கிருந்து புறப்பட்டுக் கானான் நாட்டில் குடியேறக் கட்டளையிட்டார். பிறகு நாடெங்கும் பஞ்சம் ஏற்பட்டது. எனவே அவர்கள் எகிப்துக்குச் சென்று அங்கு நானூறு ஆண்டுகள் தங்கியிருந்தனர். அதற்குள் அவர்கள் எண்ணமுடியாத அளவுக்குப் பெருகிவிட்டனர்.

10 எகிப்திய அரசன் அவர்களை வாட்டி வதைத்துச் செங்கல், சுண்ணாம்பைக் கொண்டு தன் நகர்களைக் கட்டக் கட்டாயப்படுத்தினான். ஆதலால் அவர்கள் தங்கள் ஆண்டவரை நோக்கிக் கதறி அழுதனர். எனவே அவர் பற்பல கொள்ளை நோய்களால் எகிப்து நாட்டை வதைத்தார்.

11 எகிப்தியர் தங்கள் நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்றின பின், அந்தக் கொள்ளை நோய்கள் அவர்களை விட்டு நீங்கின. அதைக்கண்ட எகிப்தியர் மீண்டும் அவர்களைப் பிடித்துத் தங்களுக்குக் கீழ்ப்படுத்த விரும்பினர்.

12 ஆனால் தப்பிச்சென்ற அவர்களுக்கு முன்பாக விண்ணகக் கடவுள் கடலை இரண்டாகப் பிரித்தார். உடனே இருமருங்கிலும் தண்ணீர் பலத்த சுவரைப் போல் நின்றது. அவர்களும் கால் நனையாமல் கடலைக் கடந்து சென்றார்கள்.

13 எண்ணற்ற எகிப்தியப் படைவீரர்கள் அவ்வழியே அவர்களைப் பின்தொடர்ந்தனர். அப்பொழுது தண்ணீர் திரும்பவும் ஒன்று திரண்டு எகிப்தியரை மூடிற்று. நடந்தது பற்றித் தம் சந்ததியாருக்குச் சொல்லும்படி அவர்களில் ஒருவன் கூட உயிர் தப்பவில்லை.

14 இஸ்ராயேலரோ செங்கடலைக் கடந்து அதுவரை மனிதர் வாழ இயலாததும், மனிதன் எவனும் வாழ்ந்திராததுமான சீனாய் மலைப் பாலைவனத்தில் குடியேறினர்.

15 அவ்விடத்துக் கசப்பான நீர் ஊற்றுகள் அவர்கள் குடிக்கத் தக்க இனிய நீரைச் சுரந்தன. மேலும் வானினின்று நாற்பது ஆண்டுகளாய் உணவு அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

16 வில், வேல், கேடயம், வாள் முதலியன இன்றி அவர்கள் சென்றவிடமெல்லாம் அவர்களுடைய கடவுளே அவர்களோடு இருந்து எதிரிகளைத் தோற்கடித்தார்.

17 அவர்கள் தங்கள் ஆண்டவரான கடவுளை வழிபடாத நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் யாரும் அவர்களைத் தோற்கடித்தது கிடையாது.

18 எவ்வெப்போது அவர்கள் தங்கள் கடவுளை விட்டு அந்நிய தெய்வங்களை வழிபட்டார்களோ, அவ்வப்போதெல்லாம் அவர்கள் கொள்ளைக்கும் வாளுக்கும் நிந்தைக்கும் உள்ளானார்கள்.

19 ஆனால் அவர்கள் எத்தனை முறை தங்கள் கடவுளின் வழிப்பாட்டைத் தவிர்த்ததற்காக மனம் வருந்தினார்களோ, அத்தனை முறையும் விண்ணகக் கடவுள் அவர்களுடைய எதிரிகளை எதிர்த்து நிற்கும் ஆற்றலை அவர்களுக்குக் கொடுத்தார்.

20 இவ்வாறு அவர்கள் கானானியர், யெபுசையர், பெரேசையர், ஏத்தையர், ஏவையர், அமோறையர் முதலியோரின் அரசர்களையும் ஏசேபோனின் எல்லா வலியோரையும் வென்று அவர்கள் நாடுகளையும் நகர்களையும் கைப்பற்றி வந்தனர்.

21 அவர்கள் தங்கள் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யாத வரையில் அவர்களுக்கு எல்லாம் நன்மையாகவே முடிந்தது; ஏனெனில் அவர்களுடைய கடவுள் பாவத்தை வெறுக்கிறார்.

22 உண்மையிலேயே சில ஆண்டுகளுக்கு முன், அவர்கள் நடந்தொழுக வேண்டுமென்று கடவுள் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்த நெறியை விட்டு விலகினதால், அவர்கள் பல நாட்டவரால் போரில் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சிறைப்படுத்தப்பட்டு அந்நிய நாட்டுக்குக் கொண்டு போகப்பட்டனர்.

23 சிறிது காலத்திற்குப் பின் அவர்கள் தங்கள் ஆண்டவரான கடவுளின் பக்கம் மனந்திரும்பவே அவர்கள் சிதறிக் கிடந்த நாட்டிலிருந்து வந்து மீண்டும் ஒன்று சேர்ந்து இம்மலைப்புறமெங்கும் குடியேறித் தங்கள் கடவுளின் ஆலயம் அமைந்திருந்த யெருசலேமை மறுபடியும் சொந்தமாக்கிக் கொண்டனர்.

24 இச் சூழ்நிலையில், என் தலைவ, அவர்கள் தங்கள் கடவுளுக்கு எதிராக ஏதாவது பாவம் செய்ததுண்டா என்று விசாரித்துப் பாரும்; அப்படிச் செய்திருந்தால் இப்போதே நாம் அவர்கள்மீது படையெடுக்கலாம். அவர்களின் கடவுளும் அவர்களை நமது கையில் ஒப்புவிப்பார். இவ்வாறு அவர்கள் உமக்கு அடிமைகள் ஆவார்கள்.

25 அவர்கள் தங்கள் கடவுளுக்கு எதிராக யாதொரு பாவமும் செய்யாதிருப்பின், அவர்களை எதிர்த்து நிற்க நம்மால் இயலாது. ஏனெனில் அவர்களுடைய கடவுளே அவர்களைப் பாதுகாப்பார். அதனால் நாம் பூமி எங்கனும் இகழப்படுவோம்" என்றான்.

26 ஆக்கியோர் இதைச் சொல்லி முடிக்கவே, ஒலொபெர்னெசுடைய படையின் மேல் அதிகாரிகள் அனைவரும் சினம் கொண்டு அவனைக் கொல்ல எண்ணினர்.

27 ஒருவர் ஒருவரைப் பார்த்து, "ஆயுதமற்றவரும் ஆற்றலற்றவரும் போரிடுவதில் தேர்ச்சியற்றவருமான இஸ்ராயேல் மக்கள் நபுக்கோதனசார் அரசையும், அவரது படையையும் எதிர்த்து நிற்க முடியும் என்று சொல்ல இவன் யார்?

28 ஆக்கியோர் சொன்னது பொய் என்று அவனே அறிந்து கொள்ளும்படி நாம் இப்போதே மலைகள் மீது படையெடுத்துச் செல்வோம். அவர்களுள் வலியோரைச் சிறைப்பிடித்த பின், அவர்களோடு இவனையும் வாளுக்கு இரையாக்குவோம்.

29 இதன் மூலம் நபுக்கோதனசார் ஒருவரைத் தவிர மண்ணில் வேறு கடவுள் இல்லை என்று எல்லா மக்களும் அறிந்துகொள்வர்" என்று கத்தினார்கள்.

அதிகாரம் 06

1 அவர்கள் பேசி முடிந்த பின் ஒலொபெர்னெஸ் மிகுந்த கோபமுற்று ஆக்கியோரைப் பார்த்து, "இஸ்ராயேல் மக்கள் தங்கள் கடவுளினால் பாதுகாக்கப் பெறுவர்.

2 என்று நீ எங்களுக்கு முன்னுரைத்தாய் அல்லவா? நபுக்கோதனசார் அன்றி வேறு கடவுள் இல்லை என்பதை நீ அறியும்படி, ஒரு மனிதனைக் கொல்வது போல் இஸ்ராயேலர் அனைவரையும் நாங்கள் வெட்டி வீழ்த்துவோம்.

3 அவர்களோடு நீயும் அசீரியரின் வாளால் கொல்லப்படுவாய். உன்னோடு இஸ்ராயேலர் அனைவரும் கொல்லப்படுவார்கள்.

4 அப்போது நபுக்கோதனசாரே, மண்ணகம் முழுவதற்கும் தலைவன் என்று நீ ஏற்றுக்கொள்வாய். பின்னர் என் படை வீரர் தங்கள் வாளால் உன்னை விலாவிலே குத்த, வெட்டுண்டு விழுந்த இஸ்ராயேலரோடு நீயும் செத்து மடிவாய்.

5 நீ சொன்ன தீர்க்கதரிசனம் உண்மை என்று எண்ணுவாயாகில் ஏன் உன் முகம் வாடவேண்டும்? நான் சொன்னது பொய் என்று நீ நினைத்தால் உன் முகம் ஏன் மாறுபட வேண்டும்?

6 நீ இஸ்ராயேலரோடு அவற்றைப் பட்டு அனுபவிப்பாய் என்பதற்கு முன் அடையாளமாக, இதோ! இப்பொழுதே உன்னை அவர்களோடு சேர்த்து விடுகிறேன். அவ்வாறு அவர்கள் என் வாளுக்கு இரையாகித் தண்டிக்கப்படும் போது நீயும் என் பழிக்கு ஆளாவாய்" என்றான்.

7 அவ்வாறு கூறினவுடன், ஒலொபெர்னெஸ் தன் ஊழியரை நோக்கி, "நீங்கள் ஆக்கியோரைப் பிடித்துப் பெத்தூலியா நகருக்குக் கொண்டு போய் இஸ்ராயேல் மக்கள் கையில் ஒப்படையுங்கள்" என்று கட்டளையிட்டான்.

8 எனவே, ஒலொபெர்னெசின் ஊழியர் அவனைப் பிடித்துக் காட்டு வழியாய் அவனைக் கூட்டிச் சென்றனர். ஆனால் அவர்கள் மலைக்கு அருகே வந்த போது கவணாளர் அவர்களுக்கு எதிரே வந்தனர்.

9 எனவே அவர்கள் மலையடிவாரத்தில் ஒதுங்கி ஆக்கியோரின் கையையும் காலையும் ஒரு மரத்தோடு கட்டி விட்டுத் தங்கள் தலைவனிடம் திரும்பிச் சென்றனர்.

10 அப்போது இஸ்ராயேல் மக்கள் பெத்தூலியாவிலிருந்து ஆக்கியோர் கட்டப்பட்டிருந்த இடத்திற்கு வந்தனர். அவனைக் கட்டியிருந்த கயிற்றை அறுத்து, பெத்தூலியாவுக்குக் கூட்டிக் கொண்டு போயினர். அங்கே அவனை மக்கள் நடுவில் நிறுத்தி, "அசீரியர் உன்னை இப்படிக் கட்டி வைத்ததன் காரணம் யாது?" என்று வினவினர்.

11 அக்காலத்தில் சிமையோன் குலத்தைச் சேர்ந்த மிக்காவின் மகன் ஓசியாசும், கொத்தோனியேல் என்று அழைக்கப்பட்ட கார்மியும் பெத்தூலியா நகருக்குத் தலைவர்களாய் இருந்தனர்.

12 ஆக்கியோர் மக்கள் முன்னிலையில், பெரியோர்கள் நடுவில் நிகழ்ந்தவற்றையெல்லாம் எல்லாரும் கேட்கச் சொன்னான். ஒலொபெர்னெஸ் தன்னிடம் கேட்ட வினாக்களையும், தான் அவற்றிற்குக் கூறிய மறுமொழிகளையும், அவற்றைச் சகிக்க மாட்டாமல் ஒலொபெர்னெஸ் ஆட்கள் தன்னைக் கொல்லக் கருதியதையும் எடுத்துக் கூறினான்.

13 விண்ணகக் கடவுள் இஸ்ராயேலரைப் பாதுகாத்து வருகிறார் என்று தான் சொன்னதைப்பற்றி ஒலொபெர்னெஸ் கோபமுற்று, "ஆ! நான் உன்னை இஸ்ராயேல் மக்கள் கையில் ஒப்படைப்பேன். பிறகு நான் அவர்களை வென்று தண்டிக்கும் போது, அவர்களோடு உன்னையும் பல வித வாதைகளால் வதைத்துக் கொலை செய்வேன்" என்று கூறியதையும் விரிவாய்ச் சொன்னான்.

14 ஆக்கியோர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் உடனே முகம் குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதனர்; ஒன்றாக அழுது புலம்பவும் ஆண்டவர் திருமுன் மன்றாடவும் தொடங்கினர்.

15 அவர்கள் ஆண்டவரை நோக்கி, "விண்ணிற்கும் மண்ணிற்கும் ஆண்டவரான கடவுளே, அவர்களது செருக்கையும் எமது தாழ்மையையும் பாரும்; உம் புனிதர்களின் முகத்தைப் பார்த்து உம்மை நம்புகிறவர்களை நீர் கைவிடுவதில்லை என்றும், தங்களையே நம்பித் தங்கள் சொந்த ஆற்றலிலே பெருமை கொள்கிறவர்களையோ நீர் தாழ்வுறச் செய்வீர் என்றும் காண்பித்தருளும்" என்று வேண்டிக்கொண்டனர்.

16 அன்று முழுவதும் மக்கள் இவ்வாறு மன்றாடின பின், அவர்கள் ஆக்கியோருக்கு ஆறுதல் கூறினர்.

17 ஐயா, நீர் எங்கள் முன்னோரின் கடவுளது வலிமையை எடுத்துரைத்ததால் அக்கடவுளே உமக்குத் துணையாய் இருப்பார். அவர்கள் அழிந்து போவதை நீர் உம் கண்ணாரக் காண்பீர்.

18 மேலும் எம் ஆண்டவராகிய கடவுள் தம் ஊழியரான எங்களுக்கு அவ்வித விடுதலை அளித்த பிறகு, எம் மத்தியில் இருக்கும் ஆண்டவர் உம்மோடும் இருப்பார். அதனால், நீரும் உம்மைச் சேர்ந்தவர்களும் உமக்கு விருப்பமான முறையில் எம் நடுவில் குடியிருக்கலாம்" என்றனர்.

19 பின்னர் மக்கள் கலைந்தனர். ஓசியாஸ் அவனைத் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அவனுக்கு ஒரு பெரிய விருந்து செய்தான்.

20 குருக்கள் எல்லாரும் விருந்துக்கு அழைக்கப் பெற்றிருந்தனர். நோன்பு முடிந்த பின் எல்லாரும் பந்தியில் அமர்ந்து உணவு அருந்தினர்.

21 அதன்பிறகு மக்கள் எல்லாரும் ஒன்று கூடினர். இஸ்ராயேலின் கடவுளுடைய உதவியை வேண்டி இரவு முழுவதும் சபை கூடிய இடத்திலேயே செபித்துக் கொண்டிருந்தனர்.

அதிகாரம் 07

1 மறுநாள் ஒலொபெர்னெஸ் பெத்தூலியா மீது படையெடுத்துச் செல்லும்படி தன் படைகளுக்கெல்லாம் கட்டளையிட்டான்.

2 அவனது படையில் ஒரு லட்சத்திருபதினாயிரம் காலாட்படையினரும் இருபத்திரண்டாயிரம் குதிரை வீரர்களும் இருந்தனர். மேலும் ஏற்கெனவே போரில் சிறைப்பட்டு மாநிலங்களிலும் பல நகர்களிலுமிருந்து கொண்டு வரப்பட்டுப் படையில் இணைக்கப்பட்டிருந்த ஆடவர்கள் ஏராளமாய் இருந்தனர்.

3 இவர்கள் எல்லாரும் இஸ்ராயேல் மக்களுடன் போரிடத் தம்மைத் தயாரித்தனர். அவர்கள் புறப்பட்டுப் போய், பெல்மா முதல் எஸ்திரேலோனுக்கு எதிரேயுள்ள கேல்மோன் வரையிலும் கணவாய் வழியே நடந்து சென்று தொத்தாயினை அடுத்த செங்குத்தான பாறை வரையிலும் அணிவகுத்து நின்றனர்.

4 அப்பெரும் கூட்டத்தைக் கண்ட இஸ்ராயேல் மக்கள் தங்கள் தலை மேல் சாம்பலைத் தூவி, நெடுங்குப்புற விழுந்து இஸ்ராயேலின் கடவுள் தம் மக்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்று ஒருமனமாய் வேண்டிக்கொண்டனர்.

5 பின் தங்கள் படைக் கருவிகளை எடுத்துக்கொண்டு மலைகளுக்குள்ளே இருந்த குறுகிய வழிகளில் நின்று இரவு பகலாய்க் காவல் புரிந்து வந்தனர்.

6 ஒலொபெர்னெஸ் சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகையில் பெத்தூலியா நகருக்குத் தண்ணீர் கொடுத்து வந்த ஊற்றைக் கண்டுபிடித்தான். அந்த ஊற்றின் நீர் நகருக்கு வெளியே தென் புறமுள்ள ஒரு கால்வாய் மூலம் நகருக்கு வந்துக்கொண்டிந்தது. அதைக் கண்ணுற்ற அவன் அக்கால்வாயை உடைக்கக் கட்டளையிட்டான்.

7 ஆனால் நகர மதில்களின் அருகே வேறு சில நீரூற்றுகள் இருந்தன. எனவே மக்கள் மறைவாய் அங்குச் சென்று கொஞ்சம் கொஞ்சம் தண்ணீரை மொண்டு அரையும் குறையுமாய்த் தாகத்தைத் தணித்துக் கொண்டனர்.

8 அதைக் கண்டு அம்மோனியரும் மோவாபியரும் ஒலொபெர்னெசிடம் போய் அவனை நோக்கி, "ஐயா, இஸ்ராயேல் மக்கள் வில், வேல் முதலிய ஆயுதங்களை நம்புவதே இல்லை; மலைகளும் செங்குத்தான குன்றுகளுமே அவர்களுக்கு ஆதரவாகவும் அரண்களாகவும் இருக்கின்றன.

9 ஆதலால் அவர்களோடு போரிடாமலே நீர் அவர்களை வெல்லவேண்டும் என்றால், அவர்கள் தண்ணீர் மொள்ளாதபடி நீரூற்றருகில் காவலர்களை நிறத்த வேண்டும். அவ்வாறு செய்தால் வாளின்றி அவர்களைக் கொல்ல இயலும்; அல்லது அவர்கள் தளர்வுற்றுச் சரணடைவர். ஏனெனில் தங்கள் நகர் மலைகள் நடுவே இருப்பதால், அவற்றை யாரும் கைப்பற்ற முடியாது என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள்" என்றனர்.

10 இதைக்கேட்டு ஒலொபெர்னெசும் அவனுடைய வீரர்களும் மகிழ்ந்தனர். ஒவ்வொரு நீரூற்றைச் சுற்றிலும் நூறுபேரை நிறுத்திக் காவல் புரியும்படி அவன் கட்டளையிட்டான்.

11 அவ்வாறு இருபது நாள் காவலுக்குப் பிறகு பெத்தூலியா நகரின் ஊருணிகளும் நீர்க் குட்டைகளும் வறண்டுபோயின. குடிகள் எல்லாரும் ஒரு நாளைக்குக் கூடத் தாகம் தீரக் குடிக்கப் போதுமான தண்ணீர் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு நாளும் மக்கள் குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் அளந்து தான் கொடுக்கப்பட்டது.

12 அப்போது ஆண், பெண், இளைஞர், சிறுவர் அனைவரும் ஓசியாசிடம் கூடி வந்தனர். எல்லாரும் ஒருமிக்கக் கூச்சலிட்டு, "கடவுள் உமக்கும் எமக்கும் நடுவராய் இருந்து தீர்ப்புச் செய்யட்டும்! நீர் அசீரியருடன் சமாதானமாய் இருக்க மறுத்து விட்டதால், நமக்குத் தீங்கு நேர்ந்துற்றது.

13 ஆகையால் தான் கடவுளும் நம்மை அவர்கள் கையில் ஒப்புவித்து விட்டார்.

14 ஏனெனில் நாம் அவர்களுக்கு முன்பாக நாவறண்டு பேரழிவிற்கு உள்ளாகியும் நமக்கு உதவி செய்பவர் எவருமிலர்.

15 ஆகவே நாம் ஒலொபெர்னெசின் கையில் சரணடைவது பற்றி எல்லா மக்களையும் ஒன்றுகூட்டி ஆலோசனை கேளும்.

16 ஏனெனில் எங்கள் மனைவியரும் மக்களும் எங்கள் கண் முன்பாக இறந்து போனதைப் பார்த்த பின்பு, நாங்கள் எல்லா மானிடரின் பழிப்புக்கும் ஆளாவதை விடச் சிறைப்பட்டாயினும் உயிரோடு கடவுளைத் துதிப்பதே மேல் எனத் தோன்றுகிறது.

17 நீர் ஒலொபெர்னெசின் படை வீரரிடம் நகரை ஒப்புவிக்க வேண்டும் என்று விண்ணையும் மண்ணையும், எம் பாவங்களுக்குத் தக்கவாறு எம்மைப் பழிவாங்குகிற எம் முன்னோர்களின் கடவுளையுமே சாட்சியாக வைத்துச் சொல்கிறோம். தாகத்தால் பலநாள் துன்பப்பட்டு உயிர் வாழ்வதை விட, வாளுக்கு இரையாகி விரைவில் சாவதே மேல்" என்றனர்.

18 அவர்கள் அவ்வாறு பேசி முடிந்ததும் சபையார் அனைவரும் அழுது புலம்பிப் பல மணி நேரம் ஒரே குரலாய்க் கடவுளை நோக்கி ஓலமிட்டனர்.

19 எங்கள் முன்னோர்களோடு நாங்களும் பாவம் செய்தோம்; அநியாயம் பண்ணினோம்; அக்கிரமமாய் நடந்தோம்.

20 எனவே தயையுள்ளவரான நீர் எங்கள் மேல் இரங்கியருளும்; அல்லது உமது சாட்டையால் எங்களை அடித்து எங்கள் அக்கிரமங்களுக்காக எங்களைப் பழி வாங்கும். உம்மை அறியாத புறவினத்தாரின் கையில் உம்மைத் துதிக்கிற எங்களை ஒப்புவிக்க வேண்டாம்.

21 ஒப்புவிப்பீராகில் புறவினத்தார் எங்களைக் கேலி செய்து, 'இவர்களின் கடவுள் எங்கே?' என்று இகழ்ந்து பேசுவார்கள் அல்லரோ?" என்றனர்.

22 இவ்விதமாக அழுது புலம்பி ஓலமிட்டுச் சோர்ந்த பின் மக்கள் அமைதியாய் இருந்தனர்.

23 அப்பொழுது ஓசியாஸ் கண் கலங்க எழுந்து அவர்களைப் பார்த்து, "சகோதரரே, தைரியமாயிருங்கள். இன்னும் ஐந்து நாள் வரை பொறுமையோடு ஆண்டவரின் உதவிக்காகக் காத்திருப்போம்.

24 ஒருவேளை அவர் அதற்குள் சினம் தணிந்து தமது திருப்பெயரை மகிமைப்படுத்துவார்.

25 அந்த ஐந்து நாட்களுக்குள் நமக்கு உதவி கிடைக்காவிடில், நீங்கள் சொன்னது போல் செய்வோம்" என்றான்.

அதிகாரம் 08

1 ஓசியாஸ் சொன்ன வார்த்தைகள் யூதித் என்பவளின் செவிக்கு எட்டின. யூதித்தின் தந்தை மேராரி. இவன் தந்தை இதோக்ஸ்; இவன் தந்தை யோசேப்; இவன் தந்தை ஓசியாஸ்; இவன் தந்தை எலாயி; இவன் தந்தை யம்னோர்; இவன் தந்தை கேதேயோன்; இவன் தந்தை இராப்பாயீம்; இவன் தந்தை அக்கித்தோப்; இவன் தந்தை மெல்கியாஸ்; இவன் தந்தை ஏனான்; இவன் தந்தை நத்தானியாஸ்; இவன் தந்தை சலாத்தியேல்; இவன் தந்தை சிமையோன்; இவன் தந்தை ரூபன்.

2 யூதித்தின் கணவனது பெயர் மனாசேஸ்; இவன் வாற்கோதுமை அறுவடைக் காலத்தில் இறந்து போனான்;

3 அதாவது, வயலில் அரிக்கட்டுகளைக் கட்டுகிறவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் போது, கடும் வெயிலால் தாக்குண்டு தன் நகரான பெத்தூலியாவில் இறந்தான். அங்கேயே தன் முன்னோர்களின் கல்லறையில் அவன் அடக்கம் செய்யப்பட்டான்.

4 யூதித் கைம்பெண்ணாகி மூன்றரை ஆண்டாயிற்று.

5 அவள் தன் வீட்டு மெத்தையில் தனித்த ஓர் அறையைக் கட்டிக் கதவை அடைத்துக் கொண்டு அங்கேயே தன் பணிப் பெண்களுடன் வாழ்ந்து வந்தாள்.

6 அவள் ஓய்வு நாட்களையும் அமாவாசை நாட்களையும் இஸ்ராயேல் வீட்டாரின் திருவிழாக்களையும் தவிர, ஏனைய நாட்களிலெல்லாம் மயிராடை அணிந்து நோன்பு பூண்டிருப்பாள்.

7 அவளோ பார்வைக்குப் பேரழகி. அவள் கணவன் அவளுக்கு மிகுந்த செல்வத்தையும் ஏராளமான ஊழியரையும், ஆடு, மாடு முதலிய சொத்துக்களையும் விட்டுச் சென்றிருந்தான்.

8 அவள் மிகுந்த தெய்வ பயம் உள்ளவள். எனவே எல்லாரிடத்திலும் பேரும் புகழும் பெற்றிருந்தாள். அவளைப் பற்றி இழிவாக யாரும் பேசியது கிடையாது.

9 ஐந்து நாட்களுக்குப் பின் எதிரிகளுக்கு நகரைக் கையளித்து விடுவேன்" என்று ஓசியாஸ் வாக்களித்திருந்ததைக் கேள்வியுற்ற யூதித், குருக்களான காப்ரி, கார்மி என்பவர்களை அழைத்து வரச் சொன்னாள்.

10 அவர்கள் அவளிடம் வந்து சேரவே, அவள் அவர்களை நோக்கி, "ஐந்து நாட்களுக்குள் உங்களுக்கு உதவி கிடைக்காவிடில், நகரை அசீரியருக்குக் கையளிப்பதாக ஓசியாஸ் சம்மதித்தது ஏன்?

11 ஆண்டவரைச் சோதிப்பதற்கு நீங்கள் யார்?

12 இத்தகைய பேச்சு ஆண்டவரின் இரக்கத்தைப் பெறுவதற்குப் பதிலாக, அவருக்குக் கோபத்தையும் வெறுப்பையும் மூட்டி விடும் அன்றோ?

13 நீங்கள் ஆண்டவரின் இரக்கத்திற்குக் கெடு வைத்து உங்கள் மனம் போல் அவருக்கு நாளைக் குறிப்பது ஏன்?

14 ஆண்டவர் பொறுமையுள்ளவராய் இருக்கிறதனால், நாம் மனம் வருந்திக் கண்ணீர் சிந்தி அவரது இரக்கத்தை இரந்து மன்றாடுவதே நமது கடமை.

15 ஏனெனில் மனிதர் அச்சுறுத்துவது போல் கடவுள் மிரட்டுகிறதுமில்லை; மனிதரைப் போல் சினம் கொள்வதுமில்லை.

16 ஆகையால் அவருக்கு முன்பாக நம்மையே தாழ்த்திப் பணிந்த இதயத்தோடு அவருக்குப் பணிவிடை செய்வோம்.

17 அவர் தமது திருவுளப்படி நமக்குத் தயைபுரிய வேண்டும் என்றும், அதனால் நம் எதிரிகளின் ஆணவத்தைக் கண்டு நமது உள்ளம் எவ்வண்ணம் கலங்கியிருக்கிறதோ அவ்வண்ணமே நமக்கு நேர்ந்துள்ள சிறுமையினின்று நமக்குப் பெருமை உண்டாகச் செய்ய வேண்டும் என்றும் அவரைப் பார்த்து அழுது மன்றாடுவோம்.

18 ஏனெனில் தங்கள் கடவுளைக் கைவிட்டு அந்நிய தெய்வங்களை வணங்கி வந்த நம் முன்னோரின் பாவ வழியை நாம் பின்பற்றியது இல்லை.

19 அந்த அக்கிரமத்தின் பொருட்டு அவர்கள் வாளுக்கும் கொள்ளைக்கும் பகைவரின் நிந்தைக்கும் ஆளானார்கள். நாமோ ஆண்டவரையன்றி வேறு கடவுளை அறிந்தோமில்லை.

20 நாம் தாழ்ச்சியுடன் அவரது உதவிக்காகக் காத்திருப்போம். அவர் நமது இரத்தத்திற்காக நம் எதிரிகளை வதைத்துப் பழிவாங்குவார். நம்மை எதிர்க்கும் எல்லா இனத்தாரையும் நம் கடவுளான ஆண்டவர் சிறுமையாக்கி, ஈனப்படுத்தி விடுவார்.

21 எனவே, சகோதரரே, நீங்கள் மக்களுக்குள் பெரியோர்களாய் இருப்பதாலும், அவர்களது உயிர் உங்கள் கையில் இருப்பதாலும் நீங்கள் ஆறுதலான வார்த்தைகளைச் சொல்லி அவர்களைத் திடப்படுத்துங்கள். நம் முன்னோர் உண்மையாகவே தங்கள் கடவுளை வழிபட்டு வந்தனரா என்பதை நிரூபிக்கும் பொருட்டே சோதிக்கப்பட்டனர் என்று அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

22 நம் தந்தை ஆபிரகாம் சோதிக்கப்பட்டும், பல துன்பங்களால் புடமிடப்பட்டும் அவர் கடவுளுக்கு நண்பரானார் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளட்டும்.

23 இவ்வாறே ஈசாக்கு, யாக்கோபு, மோயீசன், இன்னும் கடவுளின் நண்பர்களான அனைவருமே பல துன்பங்களுக்கு இடையில் கடவுளுக்குப் பிரமாணிக்கமாய் ஒழுகினர்.

24 தெய்வ பயத்துடன் சோதனைகளை ஏற்காது பொறுமை இழந்து, முறுமுறுத்துக் கடவுளை இகழ்ந்தவரோவெனில்,

25 எதிரிகள் கையில் இறந்துப்பட்டனர்; பாம்புகளால் கடிப்பட்டு மடிந்துபோயினர்.

26 ஆகையால் நாம் படுகிற துன்பத்தைப் பற்றி நாமே நம்மைப் பழிவாங்க எண்ண வேண்டாம்.

27 மாறாக நாம் படுகிற வேதனைகள் நாம் செய்துள்ள பாவங்களை விடக் குறைவு என்றும், கடவுள் தம் ஊழியர்களைத் தண்டிக்கிறது போல் நம்மைத் தண்டிப்பது நம்மை அழிப்பதற்கு அன்று நம்மைத் திருத்துவதற்கே என்றும் நம்புவோம்" என்று சொன்னாள்.

28 அதைக்கேட்டு ஓசியாசும் பெரியோர்களும் அவளை நோக்கி, "நீ சொன்னது யாவும் உண்மையே. உன் சொற்களில் தவறு ஏதும் இல்லை.

29 நீயோ தெய்வ பயம் உள்ள புனிதை; ஆகையால் எங்களுக்காக இப்போது மன்றாடு" என்றனர்.

30 மீண்டும், யூதித் அவர்களை நோக்கி, "நான் உங்களிடம் கூறியது கடவுளிடமிருந்து வந்ததாக நீங்கள் அறிந்துள்ளீர்கள்.

31 இதுபோல் நான் இனிச் செய்ய எண்ணியுள்ளதும் கடவுளிடமிருந்தே வந்துள்ளது என நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டுக் கடவுள் என் திட்டங்களை உறுதிப்படுத்துமாறு மன்றாடுங்கள்.

32 இன்றிரவு நீங்கள் நகர வாயில் அருகே நில்லுங்கள். நானோ என் பணிப் பெண்ணோடு வெளியே செல்வேன். நீங்கள் சொன்னது போல் இவ்வைந்து நாட்களுக்குள் ஆண்டவர் தம் மக்களாம் இஸ்ராயேலர் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்று மன்றாடுங்கள்.

33 நான் செய்யவிருப்பதை நீங்கள் அறிய முயல வேண்டாம். பிறகு நானே உங்களுக்கு அதைப்பற்றிச் சொல்வேன். அது வரை நீங்கள் நம் கடவுளான ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொண்டேயிருங்கள்" என்று சொன்னாள்.

34 அதற்கு யூதாவின் அரசன் ஓசியாஸ் அவளை நோக்கி, "நீ சமாதானமாய்ப் போய் வா. நம் எதிரிகளைப் பழிவாங்க கடவுள் உன்னோடு இருப்பாராக!" என்று சொன்னான். பின்னர் அவர்கள் அனைவரும் தத்தம் வீடு திரும்பினர்.

அதிகாரம் 09

1 அவர்கள் போன பின்னர் யூதித் தன் செபக் கூடத்தில் நுழைந்து மயிராடை அணிந்து, தன் தலையில் சாம்பலைத் தூவிக் கடவுளுக்கு முன் நெடுங்கிடையாய் விழுந்து ஆண்டவரிடம் அபயமிட்டாள்.

2 என் தந்தை சிமையோனின் கடவுளான ஆண்டவரே, கெட்ட ஆசையால் உந்தப்பட்டு ஒரு கன்னிப் பெண்ணைக் கற்பழித்த புறவினத்தாரைப் பழி வாங்கும் பொருட்டு, சிமையோனுக்கு நீர் ஒரு வாளைக் கொடுத்தீர்.

3 அத்தோடு ஆர்வத்துடன் உம் பக்கம் நின்ற உம் ஊழியர்களுக்கு அப்புறவினத்தாரின் மனைவியரைக் கொள்ளைப் பொருளாகவும், அவர்கள் புதல்வியரை அடிமைகளாகவும், அவர்களது சொத்தையெல்லாம் சொந்தமாகவும் தந்தருளினீர். அதுபோல கைம்பெண்ணான எனக்கும் நீர் உதவிசெய்ய வர வேண்டும் என்று உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்.

4 முந்தினவற்றைச் செய்து முடித்தவர் நீரே. ஒன்றுக்குப் பின் ஒன்றாகத் திட்டமிட்டவரும் நீரே. உம் திட்டங்களே நிறைவேறி வந்துள்ளன.

5 ஏனெனில் உம் வழிகளை எல்லாம் நீர் முன்னேற்பாடு செய்து, முன்னறிவுடன் உம் தீர்ப்புகளை அளித்து வருகின்றீர்.

6 எகிப்தியரின் படைகளை நீர் முறியடித்தது போல் அசீரியரின் படைகளையும் முறியடித்தருளும். அக்காலத்தில் எகிப்தியர் தம் தேர்களிலும் குதிரைகளிலும் கணக்கற்ற தங்கள் வீரர்களிலும் நம்பிக்கை வைத்து ஆயுதம் தாங்கியவர்களாய் உம் ஊழியர்களைப் பின்தொடர்ந்து செல்லுகையில், உமது பார்வை அவர்கள் மேல் விழுந்தது.

7 உடனே அவர்கள் இருளில் அகப்பட்டு வருந்தினார்கள்.

8 பாதாளத்தில் அவர்கள் கால் செல்ல, தண்ணீரில் அவர்கள் மூழ்கினார்கள்.

9 ஆண்டவரே, இவர்களுக்கும் அவ்வாறே நேரிடுவதாக! இவர்களும் தம் திரளான வீரர்களையும் தேர்களையும் வேல்களையும் கேடயங்களையும் அம்புகளையும் நம்பி, ஈட்டியைக் கையாளுவதில் திறமை வாய்ந்தவர்கள் என்று பெருமை பாராட்டுகிறார்கள்.

10 நீர் எம் கடவுள் என்றும், நீர் தொன்றுதொட்டே படைகளை அழிக்க வல்லர் என்றும், உமது பெயர் ஆண்டவர் என்றும் அவர்கள் அறியார்கள்.

11 தொடக்கத்திலிருந்து நீர் செய்து வருவது போல், உமது கைவன்மையால் அவர்களது ஆற்றலைத் தகர்த்தெறியும்; உமது திருத்தலத்தை மாசுபடுத்துவோம் என்றும், உமது திருப்பெயர் விளங்கும் ஆலயத்தைத்தீட்டுப்படுத்துவோம் என்றும், தங்கள் வாளால் உமது பலிபீடத்தைத் தரை மட்டமாக்குவோம் என்றும் சபதம் கூறியுள்ள இவர்களின் ஆற்றல் உமது கடுங் கோபத்தின்முன் அற்றுப் போவதாக!.

12 (என் எதிரியின்) அகந்தை அவனது சொந்த வாளுக்கே இரையாகும்படி செய்வீராக!

13 அவன் என் கண் என்ற கண்ணியிலே சிக்கிக் கொள்ளட்டும். என் நயமான மொழிகளால் அவனை வீழ்த்தியருளும், ஆண்டவரே!

14 நான் அவனைத் துரும்பாக எண்ணும்படி வேண்டிய திடனையும், நான் அவனை வெல்லத் தக்க ஆற்றலையும் எனக்குத் தாரும்.

15 ஏனெனில் ஒரு பெண்ணே அவனை வீழ்த்துவாளாயின், அது உமது திருப்பயெரின் மகிமைக்குச் சான்றாய்த் திகழும் அன்றோ!

16 ஏனெனில், ஆண்டவரே உமது ஆற்றல் சேனையின் பலத்தில் அன்று; உமது திருவுளத்தை நிறைவேற்ற நீர் குதிரைப்படைப் பலத்தை எதிர் நோக்கியிருப்பதுமில்லை. செருக்குற்றோரை நீர் என்றும் விரும்பியதில்லை. ஆனால் தாழ்ச்சியும் சாந்தமுமுள்ளோரின் மன்றாட்டை நீர் ஒருபோதும் புறக்கணித்ததில்லை.

17 விண்ணகக் கடவுளே, தண்ணீரைப் படைத்தவரே, எல்லாப் படைப்புக்கும் ஆண்டவரே, உமது இரக்கத்தில் முழு நம்பிக்கை கொண்டு உம்மை மன்றாடும் பாவி எனக்குச் செவிக்கொடுத்தருளும்.

18 உமது உடன் படிக்கையை நினைவுகூர்ந்தருளும். ஆண்டவரே, உமது ஆலயம் என்றும் உமக்கு உரிய முறையில் புனிதத் தன்மையில் நிலைத்திருக்கும்படி எனக்கு நாவாற்றலைக் கொடுத்தருளும்; நான் எண்ணியதை நிறைவேற்ற எனக்கு மனத்திடனை அளித்தருளும்.

19 இதனால் எல்லா இனத்தவரும் நீரே கடவுள் என்றும், உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை என்றும் அறிந்துகொள்ளட்டும்" என்று மன்றாடினாள்.

அதிகாரம் 10

1 இவ்வாறு ஆண்டவரை வேண்டிக்கொண்ட பின், அவள் ஆண்டவருக்கு முன்பாக நெடுங்கிடையாய்க் கிடந்த இடத்திலிருந்து எழுந்தாள்.

2 தன் பணிப் பெண்னை அழைத்துக் கொண்டு வீட்டினுள் சென்று மயிராடையையும் கைம்பெண்ணுக்குரிய தன் ஆடையையும் களைந்தாள்.

3 நீராடிய பின், விலையுயர்ந்த நறுமண எண்ணெய் பூசி, சீவி முடித்து, தலைப்பட்டை அணிந்து கொண்டாள். மகிழ்ச்சிக்குரிய ஆடைகளை உடுத்திக் காலணியோடு கடகம், அட்டிகை, குண்டலம், மோதிரம் முதலிய தன் எல்லா அணிகலன்களாலும் தன்னை அழகுப்படுத்திக் கொண்டாள்.

4 ஆண்டவர் அவளுக்கு இன்னும் அதிக அழகைக் கொடுத்தார். ஏனென்றால், இவ்வலங்காரமெல்லாம் சிற்றின்பத்தின் பொருட்டு அன்று, நல்லதொரு காரியத்தின் பொருட்டே. எனவே. அவள் நிகரற்ற வடிவழகு பூண்டவளாய் யாவர் கண்ணுக்கும் தோன்றும்படி ஆண்டவர் அவளை இத்தகைய அழகுடன் விளங்கச் செய்தார்.

5 யூதித் இரசக் குப்பி, எண்ணெய்ச் சிமிழ், வறுத்த தானியம், அத்திப்பழ வற்றல், அப்பம், பாற்கட்டி, , முதலியவற்றைத் தன் பணிப் பெண் கையில் கொடுத்தாள். பின் அவளோடு வெளியே புறப்பட்டுச் சென்றாள்.

6 அவ்விருவரும் நகர வாயிலை அடைந்தனர். அங்கே ஓசியாசும் நகரப் பெரியோர்களும் தங்களை எதிர்ப்பார்த்து நிற்கக் கண்டனர். அவர்கள் யூதித்தைக் கண்டு, அவளது பேரழகை நோக்கிப் பெரு வியப்புற்றனர்.

7 ஆயினும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை.

8 யெருசலேம் உன்னால் மகிமை பெறும் பொருட்டும், உன் பெயர் நீதிமான்கள், புனிதர்கள் முதலியோரின் வரிசையில் இடம் பெறும் பொருட்டும், நம் முன்னோரின் கடவுள் உனக்கு அருள் புரிந்து, உன் இதயச் சிந்தனைகளைத் தமது வலிமையால் உறுதிப்படுத்துவாராக" என்று கூறி விடை கொடுத்தனர்.

9 அங்கு இருந்தோர் அனைவரும், "அங்ஙனமே ஆகுக, ஆகுக!" என ஒருவாய்ப்பட மொழிந்தனர்.

10 யூதித்தோ ஆண்டவரை நோக்கி வேண்டுதல் புரிந்த வண்ணமாய்த் தன் பணிப் பெண்ணோடு நகர வாயிலைத் தாண்டிச் சென்றாள்.

11 பொழுது புலரும் வேளையில் அவள் மலையினின்று இறங்கி வந்தாள். அப்பொழுது அசீரியரினின் ஒற்றர்கள் அவளுக்கு எதிரே ஓடிவந்து, அவளைப் பிடித்து, "நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கேப் போகிறாய்? என வினவினர்.

12 அவள் மறுமொழியாக, "நான் எபிரேயப் பெண். நான் அவர்களை விட்டு ஓடிவந்து விட்டேன். காரணம், அவர்கள் உங்களை இழிவாக எண்ணி உங்கள் இரக்கத்தை அடையும் பொருட்டு உங்களிடம் சரணடையத் தாமே முன் வராததால் அவர்கள் உங்களுக்கு இரையாவர் என்று எனக்குத் தெரியும்.

13 ஆதலால், நான் எனக்குள்ளே சிந்தித்து, படைத்தலைவர் ஒலொபெர்னெஸ் முன்பாக நானே போய் எபிரேயருடைய இரகசியங்களை அவருக்கு வெளிப்படுத்தி, தம் படைவீரர்களுக்கு யாதொரு சேதமுமின்றி நகரைப் பிடித்துக் கொள்வதற்கான வழியைப் பற்றி அவருக்குத் தெரிவிக்க வந்துள்ளேன்" என்றாள்.

14 அந்த மனிதர்கள் அவள் சொன்னதைக் கேட்டு, அவள் முகத்தை உற்று நோக்கினர். அப்பொழுது யூதித்தின் ஒப்பில்லா வடிவழகைக் காண அவர்களுக்குக் கண் கூச்சமும் பெருவியப்பும் உண்டாயின.

15 பிறகு அவர்கள் யூதித்தை நோக்கி, "எங்கள் தலைவரிடம் வந்து பேசுமாறு நீ முடிவு செய்தது நல்ல காரியமே. அதனால் உன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டாய்.

16 நீ அவர் முன் நிற்கும் போது அஞ்ச வேண்டாம். ஏனெனில், அவர் உனக்கு நன்மை செய்வார்; உன் மேல் மிக அன்பாய் இருப்பார் என்பது உறுதி" என்று சொல்லினர். ஒலொபெர்னெசிடம் அவளைப் பற்றி அறிவித்த பின் அவளை அவனுடைய பாசறைக்கு அழைத்துச் சென்றனர்.

17 தன் முன் வந்து நின்ற அவளைக் கண்டவுடனே ஒலொபெர்னெசின் கண்கள் மயக்கம் கொண்டன.

18 அவனுடைய அலுவலர் அவனை நோக்கி, "இவ்வளவு அழகிய பெண்கள் எபிரேயருக்குள் இருக்க, அவர்களை இழிவாய் எண்ணுவதைக் காட்டிலும், அவர்களுடைய பெண்களின் பொருட்டேனும் அவர்களோடு போர் புரிவதே நலம் என்றனர்.

19 அப்பொழுது கருஞ்சிவப்புப் பட்டால் அமைக்கப்பட்டுப் பொன், மரகதம் முதலிய விலையுயர்ந்த இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பாலிகையின் கீழ் ஒலொபெர்னெஸ் அமர்ந்திருந்தான்.

20 அவனைக் கண்ட யூதித் தரையில் நெடுங்கிடையாய் விழுந்து பணிந்து அவனை வணங்கிளாள். ஒலொபெர்னெஸ் தன் அண்டையில் நின்ற பணியாளர்களுக்கு உத்தரவிட, அவர்கள் யூதித்தைத் தூக்கி நிறுத்தினர்.

அதிகாரம் 11

1 பிறகு ஒலொபெர்னெஸ் அவளை நோக்கி, "அஞ்சாதே, மனம் கலங்காதே. நபுக்கோதனசார் மன்னருக்கு அடிபணிய விரும்பும் எவனுக்கும் நான் தீங்கு செய்வதில்லை.

2 உன் இனத்தார் என்னைப் புறக்கணியாதிருந்தால் நான் அவர்களுக்கு விரோதமாய்ப் போராட எண்ணியிருந்திருக்கவே மாட்டேன்.

3 அது இருக்கட்டும், நீ அவர்களை விட்டு என்னிடம் வரக் காரணம் என்ன? சொல்" என்றான்.

4 அதற்கு யூதித், "நீர் உம் அடியாளின் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். ஏனென்றால் உம் அடியாளின் வார்த்தையின் படி நீர் செய்வீராயின் ஆண்டவர் உம் வழியாக உத்தமமான காரியத்தை நிறைவேற்றுவார்.

5 உலகத்தின் அரசராகிய நபுக்கோதனசார் வாழ்க! தவறிப்போன மனிதர்களைச் சீர்திருத்தும் பொருட்டு உம்மிடம் சிறந்து விளங்குகின்ற அவருடைய வலிமையும் வாழ்க! நான் உமக்குக் கூறுவதாவது: உம்மாலே மனிதர்கள் உம்முடைய தலைவருக்குப் பணிந்து வருவதுடன் மிருகவுயிர்களுமே அவர் சொற்படி கேட்கும்.

6 உம்முடைய சிறந்த விவேகத்தை மக்கள் அனைவரும் மெச்சுகின்றனர். நபுக்கோதனசாரின் நாடெங்கணும் நீர் ஒருவரே நல்லவர், வல்லவர் என்று உலக மாந்தர் பேசிக்கொள்கின்றனர். உமது கட்டுப்பாடு மாநிலம் எங்கும் போற்றப்படுகிறது.

7 மேலும் ஆக்கியோர் உமக்குச் சொன்னது யாவருக்கும் தெரியுமே. அவனுக்குச் செய்யுமாறு நீர் கட்டளையிட்டிருப்பதும் தெரிந்த காரியம் தான்.

8 ஏனெனில் எபிரேயர் செய்த பாவங்களின் பொருட்டு எங்கள் கடவுளுக்கு எவ்வளவு கோபம் மூண்டுள்ளது என்றால், அவர் தம் மக்களுக்கு இறைவாக்கினரை அனுப்பி, "உங்கள் பாவங்களை முன்னிட்டு உங்களைப் பகைவர் கையில் ஒப்படைப்போம், என்று அறிவித்துள்ளார்.

9 இவ்வாறு இஸ்ராயேல் மக்கள் தங்கள் கடவுளை மனம் நோகச் செய்திருக்கிறார்கள் என்பதைத் தாங்களே தெளிவாய் அறிந்திருப்பதனால், உமக்கு மிகவும் அஞ்சுகின்றனர்.

10 அதுவுமின்றி அவர்களிடையே பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. குடிக்கத் தண்ணீர் இல்லாமையால் அவர்கள் சாகிறார்கள்.

11 அவர்கள் இப்பொழுது தங்கள் மிருகங்களையே வெட்டி, அவற்றின் இரத்தத்தைக் குடிக்கத் தீர்மானித்திருக்கின்றனர்.

12 தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் படைக்கப்பட்ட கோதுமை, திராட்சை இரசம், எண்ணெய் முதலியவற்றைத் தொடக்கூடாது என்று கடவுளே விலக்கியிருக்க, அவர்கள் அவற்றையும் உண்ண எண்ணியுள்ளனர். கையால் தொடக் கூடாதவற்றைச் சாப்பிடவும் மனம் கொண்டிருக்கின்றனர். ஆகையால் அவர்கள் அதன் பொருட்டு அழிவது திண்ணம்.

13 உம் அடியாளாகிய நான் இதை எல்லாம் அறிந்து தான் அவர்களை விட்டு ஓடி வந்திருக்கிறேன். இதை எல்லாம் உமக்குக் தெரிவிக்க வேண்டுமென்றே ஆண்டவர் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்.

14 ஏனென்றால் உம் அடியாளாகிய நான் உம்முன் நிற்கும் இந்நேரத்திலும் கடவுளைக் தொழுது கொண்டு தான் இருக்கிறேன். உம்மிடம் விடைப்பெற்று நான் வெளியே போன பின்னரும் அவரை வேண்டிக் கொள்வேன்.

15 எபிரேயர் செய்த பாவத்தின் பொருட்டு, தாம் எப்போது பழிவாங்குவார் என்று என் கடவுள் எனக்கு அறிவிப்பார். அறிவித்தவுடனே நான் திரும்பி இவ்விடம் வந்து உமக்குச் சொல்வேன். அதுமட்டுமன்று, யெருசலேம் நடுவில் நானே உம்மை அழைத்துப் போவேன். இஸ்ராயேல் மக்கள் அனைவரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல உம்மைப் பின் தொடர்வர். உம்மைக் கண்டு ஒரு நாய்க் கூடக் குரைக்காது.

16 கடவுள் எனக்கு இவற்றை எல்லாம் முன்னறிவித்துள்ளார்.

17 என் இனத்தார் கடவுளின் கோபத்திற்கு ஆளாகி விட்டமையால் தான் நான் அவை யாவற்றையும் உமக்கு வெளிப்படுத்த அனுப்பப்பட்டுள்ளேன்" என்றாள்.

18 யூதித் சொன்னதைக் கேட்டு ஒலொபெர்னெசும் அவன் ஊழியர்களும் அகமகிழ்ந்தனர். அவளது நுண்ணறிவைக் கண்டு வியந்து அவர்கள் ஒருவர் ஒருவரைப் பார்த்து.

19 இவளைப்போல தோற்றத்திலும் அழகிலும் சொல் வளத்திலும் சிறந்த பெண்மணி உலகில் வேறு எங்கணும் இல்லை" என்று புகழ்ந்து கூறினர்.

20 ஒலொபெர்னெஸ் அவளை நோக்கி, "இந்த மக்களை என் கையில் ஒப்புவிக்கும்படி கடவுள் உன்னை முன்னரே என்னிடம் அனுப்பி வைத்தது மிகவும் சிறந்த செயல்.

21 உனது வாக்குறுதியும் நல்லதே. ஆகையால் உன் கடவுள் இதை எனக்குச் செய்வாராயின் அவர் எனக்கும் கடவுளாய் இருப்பார். நபுக்கோதனசார் அரண்மனையில் நீ உயர்நிலையில் இருப்பதுமன்றி, உன் பெயர் உலகமெங்கும் புகழவும் படும்" என்றான்.

அதிகாரம் 12

1 பிறகு ஒலொபெர்னெஸ் தனது கருவூல அறையில் யூதித்தைத் தங்கச் சொல்லித் தன் சாப்பாட்டிலிருந்து அவளுக்குப் பரிமாற வேண்டுமென்று திட்டம் செய்தான்.

2 யூதித் அவனை நோக்கி, "நீர் எனக்குக் கொடுக்கப் பணித்த பொருட்களை நான் உண்பது குற்றமாகும். எனவே நான் அவற்றை உண்ணாமல், நானே கொண்டு வந்துள்ளவற்றை உண்பேன்" என்றாள்.

3 அதற்கு ஒலொபெர்னெஸ், "நீ கொண்டு வந்தவை தீர்ந்து போனால் பின் நாங்கள் என்ன செய்வோம்?" என்று கேட்டான்.

4 அதற்கு யூதித் அவனைப் பார்த்து, "என் தலைவ, உமது உயிர்மேல் ஆணை! நான் கொண்டு வந்துள்ளது தீருமுன்பே நான் எண்ணியுள்ளதைக் கடவுள் செய்து முடிப்பார்" என்று ஆணையிட்டாள். பிறகு படைத்தலைவனின் ஊழியர்கள் அவன் சொல்லியிருந்த கூடாரத்திற்குள் அவளை அழைத்துக் கொண்டு போயினர்.

5 அதனுள் நுழையும் போது யூதித் மீண்டும் படைத் தலைவனை நோக்கி, "நான் இரவிலும் பொழுது புலர்வதற்கு முன்னரும் கடவுளிடம் செபிப்பதற்காக வெளியே செல்ல அனுமதி கொடும்" என்று கேட்டாள்.

6 அதற்கு ஒலொபெர்னெஸ் தன் வாயிற்காவலரை நோக்கி, "மூன்று நாள் வரை இந்தப் பெண் தன் விருப்பம் போல் கடவுளை மன்றாடுவதற்குப் போகவர அனுமதி கொடுக்கிறேன்" என்றான்.

7 யூதித்தோ இரவு தோறும் வெளியே சென்று பெத்தூலியாவின் பள்ளத்தாக்கில் இருந்த நீருற்றில் குளிப்பாள்.

8 பிறகு எழுந்து இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரை நோக்கி, ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளிக்குமாறு எனக்கு நீர் வழிகாட்ட வேண்டும் என்று மன்றாடுவாள்.

9 பின்னர் கூடாரத்திற்குத் திரும்பி வந்து, மாலை நேரத்தில் தான் உணவு கொள்ளும் வரையிலும் தூய்மையாக இருப்பாள்.

10 நான்காம் நாள் ஒலொபெர்னெஸ் தன் ஊழியர்களுக்கு இரவு விருந்து செய்தான். அப்பொழுது வாகாவோ என்னும் தன் அண்ணகனை நோக்கி, அந்த எபிரேய மாதை நீ போய்ப் பார். அவள் என்னோடு விரும்பி உணவு கொள்ள வேண்டும் என்று அவளுக்குப் புத்தி சொல்.

11 ஏனெனில் ஒரு பெண் ஆடவனோடு சேராததால் அவனைப் பரிகசிப்பது, அசீரியரிடையே இழிசெயலாகக் கருதப்படுகிறது அன்றோ?" என்றான்.

12 பிறகு வாகாவோ யூதித்திடம் சென்று அவளை நோக்கி, நல்ல பெண்மணியாகிய நீ என் தலைவரிடம் வந்து அவர் முன்னிலையில் மரியாதை பெறவும், அவரோடு உணவு கொள்ளவும், மது அருந்தி மகிழ்ந்திருக்கவும் அஞ்ச வேண்டாம் என்றான்.

13 யூதித் அவனுக்கு மறுமொழியாக. என் தலைவர் சொல்லைத் தட்ட நான் யார்?

14 அவருக்கு நல்லதும் மேன்மையானதுமாகத் தோன்றுவதை எல்லாம் நான் செய்யத் தயார்.அவருக்கு விருப்பமானதை எல்லாம் என் வாழ்நாள் முழுவதும் நான் மேன்மை வாய்ந்ததாகக் கருதுவேன் என்று சொன்னாள்.

15 பின் எழுந்து தன்னை அழகுபடுத்திக் கொண்டு கூடாரத்தினுள் புகுந்து படைத்தலைவன் முன் நின்றாள்.

16 அவளைக் கண்டதும் ஒலொபெர்னெசின் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்தது. ஏனெனில் அவள் மேல் அவன் மோகவெறி கொண்டிருந்தான்.

17 அவளை நோக்கி, என் அன்புக்கு உகந்த நீ உட்கார்ந்து மது அருந்திச் சிரித்து மகிழக் கடவாய் என்றான்.

18 இன்று போல் என் வாழ்நாளில் என்றுமே நான் மகிழ்வுற்றது கிடையாது; எனவே குடிப்பேன் என் தலைவ! என்று சொல்லி,

19 யூதித் தன் பணிப் பெண் தனக்காகத் தயாரித்து வைத்திருந்தவற்றை எடுத்து அவன் முன்பாக உண்டு குடிக்கத் தொடங்கினாள்.

20 ஒலொபெர்னெசும் அவள் மட்டில் மிகவும் அக்களித்து மதுவை மிதமிஞ்சிக் குடித்தான். அன்று போல் அவன் என்றுமே குடித்ததில்லை.

அதிகாரம் 13

1 பொழுது சாய்ந்த பின் ஒலொபெர்னெசின் ஊழியர்கள் தத்தம் கூடாரத்திற்கு விரைந்தனர். வாகாவோ அறைக் கதவைச் சாத்திவிட்டு வெளியே போனான்.

2 எல்லாரும் மிஞ்சிய குடிபோதையில் இருந்தனர்.

3 யூதித் மட்டும் அறைக்குள் இருந்தாள்.

4 ஒலொபெர்னெஸ் குடிபோதையில் தன் படுக்கையின் மேல் தூங்கிக் கொண்டிருந்தான்.

5 அப்போது யூதித் தன் பணிப் பெண்ணை நோக்கி, நீ வெளியே போய்க் கதவண்டையில் நின்று யாரும் வருகிறார்களா என்று பார்த்துக்கொள் என்றாள்.

6 பின்னர் யூதித் படுக்கையின் முன் நின்று கொண்டு அரவமின்றி உதடுகள் மட்டும் அசையக் கண்ணீர் விட்டுப் பின்வருமாறு வேண்டிக் கொண்டாள்.

7 இஸ்ராயேலரின் கடவுளாகிய ஆண்டவரே, எனக்கு மனவுறுதியை அளித்தருளும். நீர் வாக்குறுதி வழங்கியபடி உமது நகராகிய யெருசலேம் பெருமை பெறும் பொருட்டு நான் இப்பொழுது செய்யப் போவதைக் கண்ணோக்கியருளும். உம்மால் கைகூடும் என்று நம்பி நான் செய்யத் துணிந்துள்ளதைச் செய்து முடிக்கும்படி எனக்கு அருள்தாரும்.

8 இவற்றைச் சொன்னவுடனே அவள் படைத்தலைவனுடைய படுக்கையின் தலைமாட்டில் இருந்த தூணை நெருங்கி, அங்கே தொங்கிக் கொண்டிருந்த அவனுடைய வாளை அவிழ்த்தெடுத்தாள்.

9 அதை உருவினதும் கையால் அவன் தலைமயிரைப் பிடித்துக் கொண்டு, கடவுளாகிய ஆண்டவரே, இப்பொழுது என்னைத் திடப்படுத்தியருளும் என்று வேண்டினாள்.

10 இரண்டு முறை அவன் கழுத்தை வெட்டித் தலையைக் கொய்தாள். பின்னர் ஒலொபெர்னெசின் உடலைக் கீழே தள்ளிவிட்டு, தூண்களில் தொங்கிக் கொண்டிருந்த பாலிகையை அவிழ்த்தெடுத்தாள்.

11 யூதித் சற்றுப் பொறுத்து வெளியே வந்து ஒலொபெர்னெசின் தலையைத் தன் பணிப் பெண்ணிடம் கொடுத்துத் தன் பையிலே அதை வைத்துக் கொள்ளச் சொன்னாள்.

12 பின்னர் அவ்விருவரும் தங்கள் வழக்கப்படி செபிக்கப் போகிறது போல வெளியே புறப்பட்டுப் போயினர். கூடாரத்தைக் கடந்து பள்ளத் தாக்கைச் சுற்றி நகர வாயிலை அடைந்தனர்.

13 யூதித் நகர வாயிற் காவலரைத் தூரத்திலிருந்தே பார்த்து, நகர வாயிலைத் திறந்து விடுங்கள். கடவுள் நம்மோடு இருக்கிறார்.அவர் தமது ஆற்றலை இஸ்ராயேலில் விளங்கச் செய்து விட்டார் என்று கூவினாள்.

14 அவளது குரலொலியைக் கேட்டவுடனே, அக்காவலர் நகரப் பெரியோர்களை அழைத்து வந்தனர்.

15 சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் அவனிடம் ஓடிவந்தனர். ஏனெனில் அவள் திரும்பி வருவாள் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை.

16 மேலும் மக்கள் அனைவரும் விளக்குகளை ஏந்திக்கொண்டு அவளைச் சுற்றி வந்தனர். அவள் ஒரு மேடைமேல் ஏறி, "அமைதி! அமைதி!" என்றுச் சொல்லி, மக்களை நோக்கி, "நம் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுங்கள்.

17 ஏனெனில் அவர் தம்மை நம்பினவர்களைக் கைவிட்டவரல்லர்.

18 அவர் இஸ்ராயேலுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை தம் அடியாளாகிய என்னைக் கொண்டு நிறைவேற்றியருளினார். எப்படியென்றால், அவர் இன்றிரவே தம் மக்களின் பகைவனை என் கையால் கொன்றுவிட்டார். என்று சொன்னாள்.

19 பின் பையிலிருந்த ஒலொபெர்னெசின் தலையை எடுத்து மக்களுக்குக் காட்டி, "இதோ, அசீரிய படைத்தலைவனான ஒலொபெர்னெசின் தலை! இதோ, அவனது பாலிகை! இதன் கீழ் தான் அவன் குடிபோதையில் கிடந்தான். அங்கே தான் நம் கடவுளாகிய ஆண்டவர் அவனை ஒரு பெண்ணின் கையால் சாகடித்தார்.

20 இங்கிருந்து நான் போன போதும், அவ்விடத்தில் இருந்த காலத்திலும், அவ்விடமிருந்து இங்குத் திரும்பிவந்த வழியிலும் கடவுளின் தூதுவரே என்னைக் காத்து வந்தார் என்று உயிர் உள்ள கடவுளின் திருப்பெயரால் ஆணையிட்டுச் சொல்கிறேன். ஆண்டவருடைய அடிகளாகிய என்னை அவர் மாசுபடாது காத்ததுமன்றி, யாதொரு பாவ மாசுமின்றி என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தார், அவர் வெற்றி கொண்டதையும், என்னைக் காப்பாற்றியதையும், உங்களை விடுதலை செய்ததையும் பற்றியே நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

21 ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்; அவர்தம் இரக்கம் என்றென்றும் உள்ளதே" என்றாள்.

22 அதைக் கேட்டு அனைவரும் ஆண்டவரைத் தொழுதனர். அவளை நோக்கி, "ஆண்டவர் தமது ஆற்றலால் உன்னை ஆசீர்வதித்தார். ஏனென்றால் அவர் உன்னைக் கொண்டு எங்கள் பகைவரை அழித்தொழித்தார்" என்றனர்.

23 அதற்குப்பின் இஸ்ராயேலரின் அரசனான ஓசியாஸ் அவளை நோக்கி, "மகளே, மண்ணுலகப் பெண்களுக்குள் நம் ஆண்டவரால் ஆசி பெற்றவள் நீயே!

24 விண்ணையும் மண்ணையும் படைத்த ஆண்டவர் வாழ்க! எங்கள் பகைவரின் படைத்தலைவனுடைய தலையைக் கொய்யும்படி அவரன்றோ உனக்குத் துணையாக இருந்தார்.

25 உன் இனத்தார் பட்ட அவதியையும் துன்பத்தையும் கண்டு நீ அவர்கள் பொருட்டு உன் உயிரைத் துரும்பாக எண்ணி, ஆண்டவர் திருமுன் அவர்களை அழிவினின்று காப்பாற்றினாய். அதன் பொருட்டு ஆண்டவரே உன் பெயரை எவ்வளவு சிறக்கச் செய்துள்ளார் என்றால், எல்லா மனிதரும் ஆண்டவருடைய பேராற்றலை என்றென்றும் நினைவு கூர்வது போல் இனி உன்னையும் என்றென்றும் புகழ்வர்" என்றான்.

26 இதைக் கேட்டு மக்கள் அனைவரும், "அப்படியே ஆகுக, ஆகுக!" என்றனர்.

27 அதற்குப்பின் அவர்கள் ஆக்கியோரை அழைத்து வந்தனர். யூதித் அவனை நோக்கி, "இஸ்ராயேலரின் கடவுள் தம் பகைவரைப் பழிவாங்குவார் என்று நீர் கடவுளாகிய ஆண்டவருக்குச் சான்று பகன்றீர், இல்லையா? அதே போல் அவர் இன்றிரவே விசுவாசமற்றவர் அனைவரின் தலைகளையும் என் கையால் வெட்டி வீழ்த்தினார்.

28 இதற்குச் சான்றாக இதோ, ஒலொபெர்னெசின் தலை! அவன் அகந்தை பிடித்தவனாய் இஸ்ராயேலின் கடவுளை இகழ்ந்ததுமன்றி, உம்மை நோக்கி, 'இஸ்ராயேலர் பிடிப்பட்ட பின் உன்னை வாளுக்கு இரையாக்குவேன்' என்று சொல்லி மிரட்டினானன்றோ?" என்றாள்.

29 ஆக்கியோரோ ஒலொபெர்னெசின் தலையைக் கண்டவுடனே, அச்ச மிகுதியால் மயங்கித் தரையில் முகங்குப்புற விழுந்தான்.

30 மூர்ச்சை தெளிந்த பின் அவன் யூதித்தின் கால்களில் விழுந்து அவளை வணங்கினான்,

31 யாக்கோபின் உறைவிடமெங்கும் உம் கடவுளால் நீர் ஆசீர்வதிக்கப்பட்டவள். ஏனென்றால், உம் பெயர் விளங்கும் இடம் எல்லாம் இஸ்ராயேலின் கடவுளும் உம் பொருட்டு மகிமை பெறுவார்" என்றான்.

அதிகாரம் 14

1 அதன் பின் யூதித் மக்கள் அனைவரையும் நோக்கி, "சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நமது மதிலின் மீது இந்தத் தலையைக் கட்டித் தொங்க விடுங்கள்

2 மேலும் சூரியன் உதிக்கும் நேரத்தில் நீங்கள்அனைவரும் ஆயுதம் தாங்கியவர்களாய் சும்மா போகிறவர்களைப் போலல்ல போருக்குப் புறப்பட்டு வேகமாய் ஓடும் வீரர்களைப் போலப் புறப்படுங்கள்.

3 அதைக் கண்ட உடனே காவலர் ஓடிப்போய்த் தங்கள் தலைவனைப் போருக்கு அழைக்க நேரிடும்.

4 அப்போது படை அதிகாரிகள் ஒலொபெர்னெசின் பாசறைக்கு ஓடி, அவன் தலையில்லா உடல் தன் இரத்ததில் தோய்ந்து கிடக்கக் கண்டு பெரும் திகில் அடைவர்.

5 நீங்களோ அசீரியர் தப்பியோடுவதைக் கண்டவுடனே, சிறிதேனும் அஞ்சாமல் அவர்களைப் பின் தொடருங்கள். ஏனென்றால், ஆண்டவர் அவர்களை உங்கள் காலடியில் அழித்துப் போடுவார்" என்றாள்,

6 அப்போது ஆக்கியோர் இஸ்ராயேலின் கடவுள் புரிந்துள்ள அரும் பெரும் செயல்களைக் கண்டு வியப்புற்றான்; அஞ்ஞான நெறியைக் கைவிட்டு, அந்நேரமே அவரை மெய்யான கடவுளாக ஏற்றுக்கொண்டான். பின், விருத்தசேதனம் செய்துகொண்டு இஸ்ராயேல் மக்களோடு சேர்ந்துகொண்டான். இந்நாள் வரை அவன் வழிவந்தோர் யூதரோடு சேர்ந்தே வாழ்ந்து வருகின்றனர்.

7 சூரியன் உதித்தவுடனே அவர்கள் ஒலொபெர்னெசின் தலையை மதிலின் மேல் கட்டித் தொங்க விட்டனர். வீரர் யாவரும் ஆயுதம் தாங்கியோராய்ப் பேரொலியிட்டுக் கொண்டு ஓடினர்.

8 காவலர் அதைக்கண்டு ஒலொபெர்னெசின் கூடாரத்தில் விரைந்து சென்றனர்.

9 அங்கிருந்தவரோ கூடாரத்தண்டை வந்தனர். அவனைத் தாங்களே எழுப்பத் துணியாமல் மற்றவர்களைக் கூச்சலிட்டு அமளி செய்யும்படி ஏவி விட்டு தங்களாலன்று, கூச்சலிட்ட வேறு யாராலோ ஒலொபெர்னெஸ் எழுப்பட்டான் என்று தோன்றும்படி உபாயம் செய்தனர்.

10 ஏனென்றால் அசீரியப் படைத்தலைவனின் அறைக் கதவைத் தட்டவோ, திறந்து உள்ளே செல்லவோ எவனும் துணியவில்லை.

11 ஆனால் நூற்றுவர் தலைவர், ஆயிரவர் தலைவர் முதலிய படை அதிகாரிகள் வந்து, வாயிற் காவலரை நோக்கி, "நீங்கள் உள்ளே போய் அவரை எழுப்புங்கள்.

12 ஏனென்றால், அதோ அந்த (எபிரேய) எலிகள் தம் பொந்துகளிலிருந்து வெளியேறி நம்மைப் போருக்கு அழைக்கத் துணிந்துவிட்டன" என்றனர்.

13 அப்போது வாகவோ படைத்தலைவனின் கூடாரத்தினுள் புகுந்து, உள் திரைக்குப் பின்னால் நின்று கொண்டு கையைத் தட்டினான். ஏனெனில் ஒலொபெர்னெஸ் யூதித்தோடு படுத்துத் தூங்குகிறான் என்று அவன் நினைத்திருந்தான்.

14 அவன் காதுகொடுத்துக் கேட்டான்; மூச்சு வாங்கும் ஓசை முதலாய் இல்லை என்று கண்டு, திரையை அணுகி, அதைத் தூக்கிப் பார்த்தான். அங்கே ஒலொபெர்னெசின் உடல் இரத்தத்தில் தோய்ந்து தரையில் கிடக்கக் கண்டான். உடனே ஓலமிட்டு அழுதான். தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, யூதித்தின் கூடாரத்துள் நுழைந்து பார்த்தான்.

15 அவள் அங்கே இல்லை.ஆதலால் வாகாவோ வெளியே வந்து மக்களை நோக்கி,.

16 அந்த எபிரேயப் பெண் நபுக்கோதனசாருடைய வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டாள்! அதோ, ஒலொபெர்னெஸ் தலையில்லா முண்டமாய்க் கிடக்கிறார்!" என்றான்.

17 அசீரியப்படை அதிகாரிகள் அதைக் கேட்டுத் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டனர். அவர்கள் அச்ச மிகுதியால் கதி கலங்கி நின்றனர்.

18 கூடாரத்திலோ என்றும் இல்லாப் பேரிரைச்சல் எழுந்தது.

அதிகாரம் 15

1 படைவீரர் எல்லாரும் ஒலொபெர்னெஸ் வெட்டுண்ட செய்தியைக் கேள்விப்பட்டவுடனே அறிவும் ஆற்றலும் இழந்தனர்; அஞ்சி நடுங்கினர்; தலை தப்பியது போதும் என்று தப்பியோட முனைந்தனர்.

2 எனவே, பேசவும் துணியாது, தலைக்குணிந்து நின்றனர். எபிரேயர் ஆயுதம் தாங்கியவர்களாய்த் தங்கள் மீது படையெடுத்து வருகிறார்கள் என்று கேள்விப் பட்டு, எல்லாவற்றையும் விட்டு விட்டு வயல் வெளிகள், மலைப் பாதைகள் மூலம் தப்பி ஓடினர்.

3 அவர்கள் புறமுதுகு காட்டி ஓடுவதைக் கண்ட இஸ்ராயேலர் அவர்களைப் பின் தொடர்ந்தனர், எக்காளம் ஊதியும் பெரும் கூச்சலிட்டுக் கொண்டும் மலையினின்று இறங்கி வந்தனர்.

4 அசீரியர் ஒற்றுமை இன்றிச் சிதறி ஓடினர். இஸ்ராயேலரோ ஒன்றாகச் சேர்ந்து அவர்களைப் பின்தொடர்ந்து, கண்ணில் பட்ட அசீரியர்கள் அனைவரையும் அழித்தொழித்தனர்.

5 மேலும் ஓசியாஸ் இஸ்ராயேல் நாட்டின் நகரங்கள், மாநிலங்கள் தோறும் ஆளனுப்பினான்.

6 ஆகையால் அந்நாட்டு மக்கள் அனைவரும் இளைஞரைத் தேர்ந்தெடுத்து, ஆயுதம் தாங்கியோராய் அவர்கள் அசீரியர்களைப் பின் தொடருமாறு அனுப்பி வைத்தனர். இவர்கள் தங்கள் நாட்டின் கடைசி எல்லை வரை அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்களை வாளுக்கு இரையாக்கினர்.

7 பெத்தூலியா நகரில் எஞ்சியிருந்தோர் அசீரியருடைய கூடாரங்களில் புகுந்து, அவர்கள் விட்டுச் சென்றிருந்த பொருட்களை எல்லாம் ஏராளமாகக் கொள்ளையிட்டுச் சென்றனர்.

8 வெற்றி கொண்ட வீரர்கள் பெத்தூலியாவுக்குத் திரும்பின போது அசீரியருடைய பொருட்களைக் கொள்ளையிட்டுக் கொணர்ந்தனர். ஆகையால் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும் மற்றப் பொருட்களுக்கும் கணக்கே இல்லை. இதனால் சிறியோர் பெரியோர் அனைவருமே செல்வர்களாயினர்.

9 யோவாக்கீம் என்னும் தலைமைக் குரு தம் எல்லாக் குருக்களோடும் யெருசலேமிருந்து பெத்தூலியா நகரத்திற்கு யூதித்தைச் சந்திக்க வந்தார்.

10 அவள் அவருக்கு எதிர்கொண்டு வரக்கண்டு மக்கள் எல்லாரும் ஒரே குரலாய் அவளை வாழ்த்தி, "யெருசலேமின் மகிமை நீ! இஸ்ராயேலின் மகிழ்ச்சி நீ! நம் மக்களின் பெருமையும் நீயே! ஏனென்றால் நீ செய்தது தீரச்செயல்.

11 நீ கற்புடையவளாய் உன் கணவனுக்குப் பின் மற்றெந்த ஆடவனையும் அறியாத மாபத்தினியாய் இருந்தமையால் தான் நீ வலிமை பெற்றாய். ஆண்டவரே உனக்கு ஆற்றல் அளித்தவர். ஆதலால் என்றென்றும் நீ புகழப்படுவாய்" என்றனர்.

12 இதைக் கேட்டு மக்கள் அனைவரும், "அப்படியே ஆகுக, ஆகுக!" என்று ஆர்ப்பரித்தனர்.

13 அசீரியருடைய சொத்துகளையெல்லாம் திரட்டிச் சேர்க்க இஸ்ராயேலருக்குக் குறைந்தது முப்பது நாள் தேவைப்பட்டது,

14 ஒலொபெர்னெசுக்குச் சொந்தமான பொன், வெள்ளி, ஆடை, மாணிக்கக் கற்கள், தட்டுமுட்டுகள் முதலியவற்றையெல்லாம் அவர்கள் யூதித்துக்குக் கொடுத்தனர்.

15 மகளிர், கன்னியர், இளைஞர் ஆகியோர் இன்னிசைக் கருவிகளை இசைக்க, மக்கள் அனைவரும் அவர்களோடு சேர்ந்து மகிழ்ச்சி கொண்டாடினர்.

அதிகாரம் 16

1 அப்பொழுது யூதித் ஆண்டவரைப் புகழ்ந்து பாடிய பாடலாவது: "முரசொலித்து ஆண்டவரைத் துதியுங்கள்;

2 கைத்தாள ஒலி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; அவருக்குப் புதியதொரு பண் இசைத்து அவருடைய திருப்பெயரைக் கூவி அழையுங்கள்.

3 போர்களை அழிப்பவர் ஆண்டவரே.

4 ஆண்டவர் என்பது அவர் பெயராம். நம் பகைவர் அனைவர் கையினின்றும் நம்மை மீட்கத் தம் மக்களிடையே அவர் குடிகொண்டார்.

5 வடநாட்டு மலைகளிலிருந்து அசீரியர் பேராற்றலுடன் இறங்கி வந்தனர். அவர்களது படை ஆறுகளை நிரப்பிற்று" அவர்கள் தம் குதிரைகள் பள்ளத்தாக்குகளை நிரப்பின.

6 அசீரியன், 'இதோ உன் நாட்டைத் தீக்கிரையாக்குவேன்; உன் இளைஞரை வாளுக்கு இரையாக்குவேன்; உன் சிறுவர்களைக் கொன்றொழிப்பேன்; கன்னிப் பெண்களைச் சிறைபிடிப்பேன்' என்றான்.

7 எல்லாம் வல்ல ஆண்டவரோ, அவனைத் தாக்கி, ஒரு பெண் கையில் ஒப்படைத்து, அவனை வெட்டி வீழ்த்தினார்.

8 பேராற்றல் படைத்த அவனை இளைஞர் வெட்டி வீழ்த்தவில்லை; தீத்தான் புதல்வரும் அவனைக் கொல்லவில்லை. ஆற்றல் படைத்த அரக்கரும் அவனை எதிர்த்து நிற்கவில்லை. ஆனால் மேராரியின் மகள் யூதித்தே தன் முக அழகால் அவனை அழித்தொழித்தாள்,

9 அவள் கைம்பெண்ணுக்குரிய ஆடையைக் களைந்தாள்; இஸ்ராயேல் மக்களின் மகிழ்ச்சிக்குரிய ஆடையை அணிந்தாள்.

10 நறுமண எண்ணெய்யை முகத்தில் பூசினாள். சீவி முடித்துத் தலைப்பட்டை அணிந்தாள். அவனை மயக்கத் தக்க மேலாடை தரித்தாள்.

11 அவளுடைய காலணிகள் அவன் கண்களை மயக்கின; அவளுடைய அழகு வதனம் அவன் உள்ளத்தை கவர்ந்தது; அவளோ ஒரு வாளால் அவனது தலையைக் கொய்தாள்.

12 பாரசீகர் அவளுடைய மனவுறுதியைக் கண்டு அஞ்சினர்; மேதியர் அவளுடைய அஞ்சாமையைக் கண்டு நடுங்கினர்.

13 தாகத்தால் தவித்து நின்றனர் என் சிறியோர்; அவர்களைக் கண்ட அசீரியர் தம் கூடாராத்தில் பெரும் கூச்சலிட்டனர்.

14 என் பணிப் பெண்களின் மக்கள் அவர்களைக் குத்தினர்; தப்பி ஓடும் சிறுவர்களைப் போன்று அவர்களைக் கொன்றனர்; என் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் அவர்கள் போர்க்களத்தில் மடிந்தனர்.

15 ஆண்டவரைப் புகழ்வோம். நம் கடவுளுக்குப் புதியதொரு பண் இசைப்போம்.

16 ஆதோனாய், ஓ ஆண்டவரே, நீர் பெரியவர்! பேராற்றல் படைத்தவர்! எவராலும் மேற்கொள்ள முடியாதவர்!

17 உம் படைப்புகள் அனைத்தும் உமக்கு ஏவல் புரியட்டும். ஏனெனில், உமது சொல்லால் அவை உருவாயின. நீர் உம் ஆவியை அனுப்பினீர்; அவை படைக்கப்பட்டன. உமது சொல்லை எதிர்த்து நிற்பவன் யார்?

18 நீர்ப்பெருக்கால் மலைகள் அடிபெயரும். உம் திருமுன் பாறைகள் மெழுகென உருகிவிடும்.

19 உமக்கு அஞ்சுவோர் எல்லாவற்றிலும் உம்மால் மேன்மை பெறுவர்.

20 என் மக்களுக்கு எதிராக எழும்புவோருக்கு ஐயோ கேடு! ஏனென்றால் எல்லாம் வல்ல ஆண்டவர் அவர்களப் பழிவாங்குவார்; தீர்வைநாளில் அவர்களைத் தண்டிப்பார்.

21 அவர் நெருப்பையும் புழுக்களையும் அவர்கள் உடல் மீது அனுப்புவார். அதனால் அவர்கள் என்றென்றும் உழன்று வேதனைப்படுவர் என்று பாடி முடித்தாள்.

22 வெற்றிக்குப்பின் மக்களெல்லாரும் ஆண்டவரைத் தொழுவதற்காக யெருசலேமுக்கு வந்தனர். தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு யாவரும் தகனப் பலிகளையும், தாங்கள் செய்து கொண்ட நேர்ச்சைகளையும், காணிக்கைகளையும் செலுத்தத் தொடங்கினர்.

23 அப்பொழுது யூதித் மக்கள் தனக்குக் கொடுத்திருந்த ஒலொபெர்னெசின் படைக்கருவிகள் அனைத்தையும் தானே கூடாரத்திலிருந்து எடுத்து வந்திருந்த பாலிகைத் திரையையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தாள்.

24 மக்களோ நிகழ்ந்தவற்றையெல்லாம் கண்டு களித்த வண்ணம் மூன்று மாதமாய் யூதித்தோடு வெற்றி விழாக் கொண்டாடினர்.

25 அதன்பின் அவர்கள் அனைவரும் தத்தம் இல்லம் ஏகினர். யூதித்தோ பெத்தூலியாவில் பெருமை பெற்றாள். இஸ்ராயேல் நாடெங்கும் அவள் புகழ் ஓங்கியது.

26 அவள் வீராங்கனை என்றும் மாபத்தினி என்றும் புகழப் பெற்றாள். ஏனெனில் தன் கணவன் மனாசேஸ் இறந்த நாள் முதல் தன் வாழ்நாள் முழுவதும் யூதித் ஆண் தொடர்பு அறியாதிருந்தாள்,

27 அவள் திருநாட்களிலே மக்களால் சிறந்த விதமாய்ப் போற்றப்படுவாள்.

28 அவள் தன் கணவன் வீட்டில் நூற்றைந்து ஆண்டுகள் தங்கியிருந்தாள். தன் பணிப்பெண்ணுக்கு உரிமை கொடுத்து அவளை அனுப்பி வைத்தாள். பின் அவள் உயிர் துறந்தாள்; பெத்தூலியாவில் தன் கணவனோடு அடக்கம் செய்யப்பட்டாள்.

29 எல்லா மக்களும் ஏழு நாட்கள் அவளைக் குறித்துத் துக்கம் கொண்டாடினர்.

30 அவள் வாழ்நாள் முழுவதும், அவள் இறந்த பின் பல ஆண்டுகளும் இஸ்ராயேலைத் துன்புறுத்த எவனும் துணியவில்லை.

31 இந்த வெற்றியின் நாள் பரிசுத்த நாட்களில் ஒன்றாக எபிரேயரால் கருதப்பட்டது; அன்று முதல் இந்நாள் வரை, யூதர்களால் திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.