யோபு ஆகமம்

அதிகாரம் 01

1 ஊஸ் என்னும் நாட்டில் யோபு என்பவர் ஒருவர் இருந்தார்; அவர் மாசற்றவர்; நேர்மையுள்ளவர். அவர் கடவுளுக்கு அஞ்சித் தீமையை விலக்கி நடந்து வந்தார்..

2 அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் இருந்தனர்.

3 அவருக்கு ஏழாயிரம் ஆடுகளும் மூவாயிரம் ஒட்டகங்களும் ஐந்நூறு ஏர் மாடுகளும் ஐந்நூறு பெட்டைக் கழுதைகளும் இருந்தன. மேலும் அவரிடம் பல ஊழியர்களும் வேலை செய்து வந்தனர். கீழ்த்திசை நாடுகளின் அனைவருள்ளும் அவரே பெரியவராக இருந்தார்.

4 அவருடைய புதல்வர்கள் ஒவ்வொருவரும் தத்தம் நாளில் தத்தம் வீட்டிலே விருந்து செய்வார்கள்; அவ்விருந்தில் தங்களோடு உணணும்படி தங்கள் சகோதரிகள் மூவரையும் அழைப்பார்கள்.

5 ஒவ்வொரு முறையும் விருந்து முடிந்த பிறகு, யோபு தம் மக்கள் ஒருவேளை ஏதேனும் பாவஞ் செய்து தங்கள் உள்ளத்தில் கடவுளைப் பழித்துரைத்திருக்கக் கூடும் என்று தமக்குள் சொல்லிக்கொண்டு, அவர்களை அழைப்பித்துப் பரிசுத்தப்படுத்தி விடியற்காலையில் எழுந்து அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் தகனப்பலிகளைச் செலுத்துவார். இவ்வாறே யோபு தம் வாழ்நாட்களில் செய்துவந்தார்.

6 ஒரு நாள் வானவர்கள் ஆண்டவரின் முன்னிலையில் ஒன்று கூடியிருந்த போது, சாத்தானும் அவர்கள் நடுவிலே நின்றான்.

7 ஆண்டவர் சாத்தானை நோக்கி, "எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டார். அவன், "உலகெங்கும் சுற்றி உலவி வந்தேன்" என்றான்.

8 ஆண்டவர் சாத்தானைப் பார்த்து, " நம் ஊழியனாகிய யோபுவைக் கவனித்தாயா? அவனைப் போல் மாசற்றவனும் நேர்மையுள்ளவனும் கடவுளுக்கு அஞ்சித் தீமையை விலக்கி நடக்கிறவனும் வேறெவனும் இவ்வுலகில் இல்லை!" என்றார்.

9 அதற்குச் சாத்தான் எதிர்வாதமாக ஆண்டவரிடம், "ஆதாயமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்?

10 அவனையும் அவன் வீட்டையும் அவன் உடைமைகள் அனைத்தையும் சுற்றி எப்பக்கமும் நீர் காவல் போடவில்லையோ? அவன் மேற்கொள்ளும் வினைகளை நீர் ஆசீர்வதிக்கவில்லையோ? அவன் உடைமைகளும் இந்நாட்டில் ஏராளமாக உள்ளனவே!

11 ஆனால் உமது கையை ஓங்கி, அவன் உடைமைகளையெல்லாம் தொடும்; அப்போது, அவன் உமது முகத்திற்கு எதிரிலேயே உம்மைப் பழிக்கிறானா இல்லையா என்று பாரும்" என்றான்.

12 ஆண்டவர் சாத்தானைப் பார்த்து, "இதோ, அவன் உடைமைகள் எல்லாம் உன் கையில் இருக்கின்றன; அவன் மேல் மட்டும் உன் கையை நீட்டாதே" என்றார். உடனே, சாத்தான் ஆண்டவரின் திருமுன் இருந்து புறப்பட்டான்.

13 பிறகு, யோபுவின் புதல்வர் புதல்வியர் ஒரு நாள் தங்கள் மூத்த அண்ணன் வீட்டில் விருந்து அருந்திக் கொண்டிருந்தார்கள்.

14 அப்போது தூதன் ஒருவன் யோபுவிடம் ஒடிவந்து, "ஐயா, எருதுகள் ஏர் உழுது கொண்டிருந்தன; அவற்றின் அருகில் கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன.

15 அவ்வேளையில் சபேயர் அவற்றின் மேல் பாய்ந்து எல்லாவற்றையும் ஓட்டிக் கொண்டு போனதுமல்லாமல், வேலைக்காரரையும் வாளால் கொன்று போட்டு விட்டார்கள்; நான் ஒருவனே தப்பிப் பிழைத்து, இதை உமக்கு அறிவிக்க ஒடிவந்தேன்" என்றான்.

16 இவன் சொல்லி வாய் முடூ முன் வேறொருவன் வந்து, "கடவுளின் நெருப்பு வானத்திலிருந்து விழுந்து ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்து விட்டது; நான் ஒருவனே தப்பிப் பிழைத்து இதை உமக்கு அறிவிக்க ஒடி வந்தேன்" என்றான்.

17 இவன் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, இன்னொருவன் வந்து, "கல்தேயர் மூன்று கூட்டமாய் வந்து ஒட்டகங்களைக் கவர்ந்து ஓட்டிச் சென்று விட்டார்கள்; வேலைக்காரர்களையும் வாளால் கொன்று போட்டார்கள்; நான் ஒருவனே தப்பிப் பிழைத்து இதை உமக்கு அறிவிக்க ஓடி வந்தேன்" என்றான்.

18 இவன் இன்னும் பேசிச் கொண்டிருக்கையிலேயே, மற்றொருவன் வந்து, "உம்முடைய புதல்வர் புதல்வியர் தங்கள் பெரிய அண்ணன் வீட்டில் விருந்து உண்டுகொண்டிருந்தார்கள்;

19 அப்போது இதோ பாலைநிலத்திலிருந்து மாபெரும் சூறாவளி எழுந்து வந்து வீட்டின் நான்கு மூலைகளிலும் மோதவே, வீடு இடிந்து உம் பிள்ளைகள்மேல் விழுந்தது; அவர்கள் அங்கேயே மாண்டு போயினர்; நான் ஒருவனே தப்பிப் பிழைத்து இதை உமக்கு அறிவிக்க ஓடி வந்தேன்" என்றான்.

20 அப்போது யோபு எழுந்திருந்து தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, தலையையும் மழித்து விட்டுத் தரையில் விழுந்து தொழுது,

21 நிருவாணியாய் என் தாய் வயிற்றிலிருந்து வெளிப்பட்டேன். நிருவாணியாகவே திரும்பிப் போவேன்; ஆண்டவர் அளித்தார், ஆண்டவர் எடுத்துக்கொண்டார்; ஆண்டவரின் திருப்பெயர் வாழ்த்தப்பெறுக!" என்றார்.

22 இவற்றில் எல்லாம் யோபு பாவமேதும் செய்யவில்லை; கடவுள் மேல் குறை கூறவுமில்லை.

அதிகாரம் 02

1 இன்னொரு நாள் வானவர்கள் ஆண்டவரின் முன்னிலையில் வந்த நின்ற போது, அவர்களோடு சாத்தானும் வந்து ஆண்டவரின் முன்னிலையில் நின்றான்.

2 ஆண்டவர் சாத்தானை நோக்கி, "எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்க, ஆண்டவருக்கு மறுமொழியாக, "உலகெங்கும் சுற்றி உலவி வந்தேன்" என்று சாத்தான் சொன்னான்.

3 அப்போது ஆண்டவர் சாத்தானை நோக்கி, "நம் ஊழியனாகிய யோபுவைக் கவனித்தாயா? அவனைப் போல் மாசற்றவனும் நேர்மையுள்ளவனும் கடவுளுக்கு அஞ்சித் தீமையை விலக்கி நடக்கிறவனும் வேறெவனும் இவ்வுலகில் இல்லை! காரணமின்றி அவனை அழிக்கும்படியாக நம்மை அவனுக்கு எதிராக நீ தூண்டிவிட்டிருந்தும், அவன் இன்னும் குற்றமற்றவனாகவே நிலைத்திருக்கிறான், பார்" என்றார்.

4 அதற்குச் சாத்தான், "தோலுக்குப் பதில் தோல்! தன் உயிருக்குப் பதிலாக மனிதன் தன் உடைமையெல்லாம் கொடுக்கத் தயங்கமாட்டானே!

5 ஆனால் நீர் உம் கையை ஓங்கி, அவன் எலும்பையும் சதையையும் தொடுவீராயின், அந்நொடியிலேயே அவன் உமது முகத்தின் முன்பே உம்மைப் பழித்துரைக்கிறானா இல்லையா என்று பாரும்" என்றான்.

6 அப்பொழுது ஆண்டவர் சாத்தானை நோக்கி, "இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆயினும் அவன் உயிரை மட்டும் நீ விட்டு விடு' என்றார்.

7 உடனே சாத்தான் ஆண்டவரின் திருமுன்னிருந்து புறப்பட்டுப்போய், யோபுவை உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரையில் அருவருப்பான அழிபுண்களால் வாதித்தான்.

8 யோபு குப்பை மேட்டின் மேல் உட்கார்ந்து ஒடு ஒன்றினால் தம்மைச் சுரண்டிக் கொண்டிருந்தார்.

9 அப்போது அவர் மனைவி அவரைப் பார்த்து, "இன்னும் உமது மாசற்ற தன்மையில் நிலைத்திருக்கப் போகிறீரா? கடவுளைப் பழித்துரைத்துவிட்டுச் செத்துப் போவதுதானே!" என்றாள்.

10 நீ ஒரு பைத்தியக் காரியைப்போல் பேசுகிறாயே! நாம் கடவுளின் கையிலிருந்து நன்மையைப் பெறலாம், தீமையை மட்டும் பெறக்கூடாதா?" என்றார். இவற்றில் எல்லாம் யோபு தம் வாயால் பாவமான வார்த்தை ஒன்றும் சொல்லவில்லை.

11 இப்படியிருக்க, யோபுவின் மூன்று நண்பர்கள்- தேமானியனான ஏலிப்பாஸ், சுகீத்தனான பால்தாத், நாகாமத்தீத்தனான சோப்பார் ஆகியோர்- யோபுவுக்கு நேரிட்ட இந்தத் தீமைகளை எல்லாம் கேள்விப்பட்டு, அவரைக் கண்டு அவருக்கு ஆறுதல் சொல்லும்படி தங்களுக்குள் ஆலோசனை செய்து கொண்டு தத்தம் ஊரிலிருந்து புறப்பட்டு வந்தனர்.

12 அவர்கள் தொலைவிலிருந்து பார்த்த போது அவரை அடையாளம் கண்டு கொள்ளவே அவர்களால் முடியவில்லை; அவர்கள் கதறியழவும், தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, வானத்தை நோக்கித் தங்கள் தலைமேல் புழுதியை வாரிப் போட்டுக் கொள்ளவும் தொடங்கினர்.

13 அவருக்கு நேர்ந்த துன்பம் மிகவும் கொடியது எனக் கண்டு, ஒருவரும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் ஏழு இரவும் ஏழு பகலும் அவரோடு கூடத் தரையில் உட்கார்ந்திருந்தனர்.

அதிகாரம் 03

1 அதன் பின்னர், யோபு பேசத் தொடங்கி, தாம் பிறந்த நாளைச் சபிக்கலானார்.

2 யோபு சொன்னது இதுவே:

3 நான் பிறந்த அந்த நாள் அழிக! 'ஆண் குழந்தையொன்று கருவாகியுள்ளது' என்று சொல்லிய அந்த இரவு தொலைக!

4 அந்த நாள் இருண்டு போகக்கடவது! மேலிருந்து கடவுள் அதைக் கண்ணோக்காது விடுக! ஒளியும் அதன் மேல் வீசாதிருப்பதாக!

5 இருட்டும் காரிருளும் அந்நாளைக் கவ்வி கொள்வதாக! கார் மேகங்கள் அதன் மேல் கவிந்து கொள்க! இருள் சூழச் செய்யும் அனைத்தும் அதை அச்சுறுத்துக!

6 அந்த இரவு- பேயிருட்டு அதனைப் பீடிக்கட்டும்! அவ்விரவு ஆண்டுக் கணக்கின் நாட்களுடன் எண்ணப்படாதொழிக! மாதங்களின் எண்ணிக்கையில் சேர்க்கப்படாதொழிக!

7 ஆம், அந்த இரவு துயர்நிறைந்த இரவாய் இருக்கட்டும்! மகிழ்ச்சிகுரிய குரல் அன்றிரவு கேட்கப்படாதிருக்கட்டும்!

8 லேவீயாத்தானை எழுப்பி விடும் திறன் வாய்ந்தவர்களும், நாளைச் சபிக்கிறவர்களும் அந்த இரவைச் சபிப்பார்களாக!

9 அவ்விரவின் விடியற்கால விண்மீன்கள் இருண்டொழிக! ஒளியைக் காண ஏங்கினாலும், காணாது போகக்கடவது! வைகறையின் கண்விழிப்பையும் காணாதொழிக!

10 ஏனெனில் என் தாய் வயிற்றின் கதவுகளை அவ்விரவு அடைக்கவில்லை; என் கண்கள் காணும் தீமையை மறைக்கவுமில்லை.

11 பிறக்கும் போதே நான் ஏன் சாகாமற் போனேன்? கருப்பையினின்று வெளிப்பட்ட உடனேயே நான் அழிந்து போயிருக்கக் கூடாதா!

12 தாயின் மடி என்னை ஏந்திக் கொண்டதேன்? நான் பால்குடிக்க முலைகள் இருந்ததேன்?

13 இதெல்லாம் இல்லாதிருந்தால் இப்போது நான் அமைதியாய்ப் படுத்து உறங்கி இளைப்பாறியிருப்பேன்;

14 பாழடைந்தவற்றைத் தங்களுக்கெனக் கட்டியெழுப்பிய உலகத்தின் மன்னர்கள் மந்திரிகளோடும்,

15 பொன்னைத் தேடிச் சேர்த்துத் தங்கள் வீடுகளை வெள்ளியால் நிரப்பிய தலைவர்களோடும் இளைப்பாறியிருப்பேன்.

16 அல்லது வெளிப்படாத முதிராப் பிண்டம் போலும், ஒருபோதும் ஒளியைக் காணாக் குழந்தைகள் போலும் இருந்திருப்பேனே!

17 அங்கே கொடியவர்கள் தரும் தொல்லை முடிவுறும், களைப்புற்றோர் அங்கே இளைப்பாறுவர்.

18 சிறைப்பட்டோர் ஆங்கே வருத்தமின்றிக் கூடியிருப்பர், சிறையதிகாரிகளின் குரல் அவர்களுக்குக் கேட்பதில்லை.

19 சிறியவனும் பெரியவனும் அங்கே இருக்கிறார்கள்; அடிமை தன் எசமானுக்குக் கீழ்ப்பட்டவனல்லன்.

20 வருத்தமுற்றவனுக்கு ஒளி தரப் படுவானேன்? உள்ளம் கசந்து போனவனுக்கு உயிர் எதற்கு?

21 புதையலைத் தேடுவதினும் ஆவலாய்த் தேடிச் சாவை விரும்பி ஏங்கியும் அது வராதவர்களுக்கும்,

22 பிணக்குழியைக் கண்டடையும் போது அகமகிழ்ந்து அக்களிப்போர்க்கும் வாழ்க்கை ஏன் தரப்பட வேண்டும்?

23 கடவுள் ஒருவனை எப்பக்கமும் வளைத்து அடைத்து விட, அவனுக்கு வழி மறைந்திருக்கும் போது அவனுக்கு எதற்காக ஒளி தரவேண்டும்?

24 பெருமூச்சுகளே எனக்கு உணவு, என் வேதனைக் குரல் நீராய் ஓடுகிறது.

25 நான் அஞ்சியது எனக்கு வந்துற்றது, நான் கண்டு நடுங்கியது எனக்கு நேரிட்டது.

26 எனக்கு ஓய்வில்லை, அமைதி கிடையாது; எனக்கு இளைப்பாற்றியே இல்லை, எனக்குத் தொல்லையே நேருகிறது."

அதிகாரம் 04

1 அப்பொழுது தேமானியனாகிய ஏலிப்பாஸ் பேசத்தொடங்கினான். அவன் சொன்னது:

2 உம்மிடம் எவனாவது பேசத் துணிந்தால், அது உம் மனத்தைப் புண்படுத்துமோ? ஆயினும் யார்தான் பேசாமல் இருக்கமுடியும்?

3 ஒருகாலத்தில் நீர் பலருக்குக் கற்பித்தீர், தளர்ந்த கைகளுக்கு வலிமையூட்டினீர்.

4 தத்தளித்தவர்களை உம் சொற்களால் உறுதிப்படுத்தினீர், தள்ளாடிய கால்களைத் திடப்படுத்தினீர்.

5 ஆனால் துன்பம் இப்பொழுது உமக்கு வந்துற்றது, நீரோ தைரியமற்றுப்போனீர்; உம்மைத் தொடவே நீர் மனங்கலங்குகிறீர்.

6 உமது இறைப்பற்று உமக்கு நம்பிக்கை தரவில்லையா? உம் நெறிகளின் நேர்மை உமக்கு நம்பிக்கை அளிக்கவில்லையா?

7 மாசற்றவன் எவனாவது அழிந்து போனதுண்டா? நேர்மையானவர்கள் எங்கேனும் வதைக்கப் பட்டதுண்டா? சிந்தித்துப் பாரும்.

8 நான் பார்த்த வரையில், அக்கிரமத்தை உழுது தீமையை விதைக்கிறவர்கள் அதையே அறுக்கிறார்கள்.

9 கடவுளின் மூச்சு அவர்களை அழிக்கிறது. அவரது கோபத்தின் சீற்றம் அவர்களை நாசமாக்குகிறது.

10 சிங்கத்தின் கர்ச்சனையும், வெகுண்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்குகிறது; சிங்கக் குட்டிகளின் பற்களும் தகர்க்கப்படுகின்றன.

11 இரையில்லாமல் சிங்கம் இறந்து போகிறது; சிங்கக் குட்டிகள் சிதறுண்டு போகின்றன.

12 மறைபொருள் ஒன்று எனக்குச் சொல்லப்பட்டது, அதன் மெல்லிய ஓசை என் காதில் மெதுவாய் விழுந்தது.

13 மனிதர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது இரவில் காட்சிகள் சிந்தையை ஆட்கொள்ளுகையில்,

14 திகிலும் நடுக்கமும் என்னைப் பீடித்தன; என் எலும்புகளெல்லாம் நடுநடுங்கின.

15 அப்பொழுது ஆவியொன்று என்முன்னால் கடந்து போயிற்று, என் உடல் மயிர் கூச்செறிந்தது.

16 அந்த ஆவி அப்படியே நின்றது, ஆனால் அதன் தோற்றம் எனக்கு அடையாளம் தெரியவில்லை; என் கண்களுக்கு முன்னால் ஓர் உருவம் தென்பட்டது; அமைதி நிலவிற்று; அப்போது ஒரு குரல் கேட்டது:

17 கடவுள் முன்னிலையில் மனிதன் நீதிமானாய் இருக்கக் கூடுமோ? தன்னைப் படைத்தவர் முன் எவனாவது பரிசுத்தனாய் இருக்கக் கூடுமோ?

18 தம் சொந்த ஊழியர்கள் மேலும் அவர் நம்பிக்கை வைப்பதில்லை, அவருடைய தூதர்களிடமும் அவர் குறை காண்கிறார்.

19 அப்படியானால், புழுதியில் அடிப்படை நாட்டி, களிமண் குடிசைகளில் குடியிருக்கும் மனிதன் எம்மாத்திரம்? அந்துப் பூச்சி போல் அவன் நசுக்கப்படுவான்.

20 காலையில் இருக்கும் அவர்கள் மாலைக்குள் அழிக்கப்படுவர், பொருட்படுத்துவாரின்றி என்றென்றைக்கும் அழிந்து போவர்.

21 அவர்களுடைய கூடார முளைகள் பிடுங்கப்படும், அவர்களோ ஞானமின்மையால் மாண்டு போவார்கள்.'

அதிகாரம் 05

1 இப்பொழுது கூவிப்பாரும், உமக்குப் பதிலுரைப்பார் உண்டோ? பரிசுத்தர்களில் யாரிடம் நீர் திரும்புவீர்?

2 மெய்யாகவே, ஆத்திரம் அறிவிலியைக் கொல்லுகிறது.

3 பொறாமை அற்பனை அழிக்கிறது. அறிவிலி வேரூன்றுவதைக் கண்டேன், ஆனால் உடனே அவன் இருப்பிடத்தைச் சபித்தேன்.

4 பாதுகாப்பு அவன் மக்களுக்கு மிகத் தொலைவு, ஊர்ச் சபையில் அவர்கள் நசுக்கப்படுகின்றனர், அவர்களை விடுவிக்கிறவன் எவனுமில்லை.

5 பசித்தவர்கள் அவர்களது விளைச்சலை அறுத்துத் தின்பார்கள், கடவுள் அவர்கள் வாயினின்று பறித்து விடுவார், பேராசை பிடித்தவர்கள் அவர்கள் செல்வத்திற்குக் காத்திருப்பர்.

6 ஏனெனில் வேதனை புழுதியிலிருந்து கிளம்புவதில்லை, துன்பம் நிலத்திலிருந்து முளைப்பதுமில்லை;

7 ஆனால் பறப்பதற்கென்றே பிறக்கும் பறவை போலவே துன்புறுவதற்கென்றே பிறந்தவன் மனிதன்.

8 என்னைப் பொறுத்த மட்டில், நான் கடவுளைத் தேடுவேன், கடவுளிடமே என் வழக்கை விட்டு விடுவேன்.

9 மாபெரும் செயல்களையும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவற்றையும் கணக்கற்ற விந்தைகளையும் செய்கிறவர் அவரே.

10 நிலத்தின் மேல் மழை பெய்யச் செய்கிறார், வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்.

11 தாழ்ந்தவர்களை மேன்மையில் வைக்கிறவர் அவர், அழுகிறவர்களை நன்னிலைக்கு உயர்த்துகிறவர் அவர்.

12 வஞ்சகரின் திட்டங்களைச் சிதறடிக்கிறார், அவர்கள் கைகள் வெற்றி பெறாதபடி செய்கிறார்.

13 ஞானிகளை அவர்களின் ஞானத்தினாலேயே பிடிக்கிறார், பொல்லாதவர்களின் சூழ்ச்சிகளைத் தலைகீழாய் வீழ்த்துகிறார்.

14 பட்டப்பகலில் அவர்கள் காரிருளால் சூழப்படுவர், இரவில் தடவுவதுபோல் நண்பகலில் தடவித் திரிவர்.

15 அவர்கள் வாயினின்று ஏழையை அவரே மீட்கிறார், கொடியவர்களின் கையினின்று எளியவனைக் காக்கிறார்.

16 இவ்வாறு, ஏழைகளுக்கும் நம்பிக்கையுண்டு, அநீதியோ தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.

17 கடவுளால் திருத்தப் பெறுகிறவன் உண்மையில் பேறுபெற்றவன்! ஆதலால் எல்லாம் வல்லவரின் திருத்தத்தைப் புறக்கணியாதீர்.

18 ஏனெனில், காயப்படுத்துகிறவர் அவரே, காயத்தைக் கட்டுபவரும் அவரே. அடிப்பவர் அவரே, ஆற்றுவதும் அவர் கைகளே.

19 ஆறு வகைத் துன்பங்களினின்று அவர் உம்மை விடுவிப்பார், ஏழாவதிலும் எத்தீமையும் உம்மைத் தொடாது.

20 பஞ்சத்தில் உம்மை அவர் சாவினின்று மீட்பார், போர்க்காலத்தில் வாளுக்கு இரையாகாமல் காப்பார்.

21 நாவின் சாட்டையடிக்கு மறைக்கப்படுவீர், அழிவு வரும் போது அதற்கு அஞ்சமாட்டீர்.

22 அழிவிலும் பஞ்சத்திலும் சிரித்துக் கொண்டிருப்பீர், பூமியின் மிருகங்களுக்கு அஞ்சவே மாட்டீர்.

23 வயல் வெளிக் கற்களோடு ஒப்பந்தம் செய்திருப்பீர். கொடிய மிருகங்களுடன் சமாதானமாய் வாழ்வீர்.

24 உம் கூடாரம் தீங்கின்றி இருப்பதை அறிந்துகொள்வீர், உம் கிடையைப் பார்க்க வரும் போது எதுவும் குறையாதிருப்பதைக் காண்பீர்.

25 உமது சந்ததி பலுகிப் பெருகுவதையும், உமது வித்து தரையின் புல்லைப்போல் வளருவதையும் அறிவீர்.

26 தக்கபருவத்தில் அரிக்கட்டுகள் களத்திற்குப் போவது போல், முதிர்ந்த வயதில் உம் கல்லறைக்குச் செல்வீர்.

27 இதெல்லாம் எங்களது ஆராய்ச்சியின் முடிவு; இது உண்மை, செவிமடுத்து உம் நன்மைக்கென அறிந்துகொள்ளும்."

அதிகாரம் 06

1 அடுத்து யோபு பேசினார்; அவர் சொன்ன மறுமொழியாவது:

2 என் வேதனை சரியாக நிறுக்கப்படுமானால் நலமாயிருக்குமே! என் இடுக்கண்கள் யாவும் தராசிலிடப்படுமானால் நலம்!

3 கடற்கரை மணலினும் என் துயர் பளுவாயிருக்கும், ஆதலால் தான் என் சொற்கள் கடுமையாயின.

4 எல்லாம் வல்லவரின் அம்புகள் என்னுள் தைத்திருக்கின்றன. என் ஆவி அவற்றின் நஞ்சை உறிஞ்சுகிறது. கடவுள் தரும் நடுக்கங்கள் எனக்கெதிராய் அணிவகுத்து நிற்கின்றன.

5 புல் கிடைத்தால் காட்டுக் கழுதை கத்துமோ? தீனி முன் நிற்கிற எருது கதறுமோ?

6 சுவையற்றிருப்பதை உப்பின்றி உண்ணமுடியுமோ? முட்டையின் வெண் கருவில் மணமுண்டோ?

7 முன்பு நான் தொடவும் விரும்பாதவை நோயின் கொடுமையில் இப்பொழுது எனக்கு உணவாயின!

8 ஐயோ! என் மன்றாட்டு கேட்கப்படாதா! கடவுள் நான் வேண்டுவதைத் தரமாட்டாரா!

9 கடவுள் என்னை நசுக்கிப் போடுவதே என் கோரிக்கை, தம் கையால் என்னை அழிக்கவேண்டுமென்பதே என் ஆவல்.

10 பரிசுத்தருடைய கட்டளைகளை நான் மறுக்கவில்லை; இது ஒன்றே எனக்கு ஆறுதல் தருகிறது, கொடிய துன்பத்திலும் இதுவே என் மகிழ்ச்சி.

11 இன்னும் காத்திருக்க எனக்கிருக்கும் மன வலிமை எவ்வளவு? எனக்கு வரும் முடிவை நோக்கும் போது, நான் ஏன் பொறுமையுடன் இருக்க வேண்டும்?

12 என்னுடலின் வலிமை கற்களின் வலிமையோ? என் சதை என்ன வெண்கலமோ?

13 இதோ, எனக்கு வலுத்தரக்கூடியது எதுவும் என்னில் இல்லை, எவ்வகையான உதவியும் என்னைக் கைவிட்டு விட்டதே!

14 தன் நண்பனுக்கு இரக்கம் காட்டாத ஒருவன் எல்லாம் வல்லவரைப் பற்றிய அச்சத்தையே தவிர்க்கிறான்.

15 காட்டாற்றின் நிலையற்ற வெள்ளம் போலும் மலையருவி போலும் என் உடன்பிறந்தார் எனக்கு ஏமாற்றம் தந்தனர்.

16 பனிக்கட்டி உருகுவதால் வெள்ளம் பெருகும், உறைபனி கரைவதால் வெள்ளம் பொங்கி எழும்.

17 வெப்பக் காலத்திலோ அவை வற்றிப்போகும், வெயில் வந்ததும் அவை இருந்த இடம் தெரியாமல் போகும்.

18 வணிகக் கூட்டத்தார் அவற்றைத் தேடி வழியை விட்டு விலகுகின்றனர்; பாலைநிலைத்தில் அலைந்து மாண்டு போகின்றனர்.

19 தேமாவின் வணிகக் கூட்டத்தார் இவற்றைக் காண்கின்றனர், சாபாவின் வழிப்போக்கர் இவற்றை நம்புகின்றனர்.

20 நம்பி வருகிற அவர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள், அவ்விடம் வந்து கலங்கிப் போகிறார்கள்.

21 என் மட்டில் நீங்களும் அவ்வாறே இருக்கிறீர்கள், என் கொடிய வேதனையைக் கண்டு திகிலடைகிறீர்கள்.

22 எனக்கு நன்கொடை தாருங்கள்' என்றோ, 'உங்கள் செல்வத்திலிருந்து எனக்காகக் கையூட்டு கொடுங்கள்' என்றோ நான் கேட்டேனா?

23 அல்லது, 'எதிரியின் கையினின்று என்னை விடுவியுங்கள்' என்றோ, 'கொடியவர் கையினின்று என்னை மீட்டுவிடுங்கள்' என்றோ நான் சொன்னதுண்டா?

24 எனக்கு அறிவு புகட்டுங்கள், நான் போசாமல் கேட்கிறேன்; எவ்வகையில் தவறினேன் என்று எனக்கு உணர்த்துங்கள்.

25 நேர்மையான சொற்களின் ஆற்றல் தான் என்னே! ஆனால் உங்கள் கண்டன உரை எதை எண்பிக்கிறது?

26 வெறுஞ் சொற்களைக் கண்டனம் செய்ய எண்ணுகிறீர்களோ? நம்பிக்கையற்றவனின் சொற்கள் காற்றுடன் கலந்து விடுமே!

27 திக்கற்றவர்கள் மேல் நீங்கள் சீட்டுக்கூடப் போடுவீர்கள். உங்கள் நண்பனை விற்கத் தரகு பேசுவீர்கள்!

28 ஆனால், தயவுசெய்து என்னைக் கொஞ்சம் பாருங்கள்; உங்கள் முகத்துக்கெதிரில் நான் பொய் சொல்ல மாட்டேன்.

29 பொறுங்கள், அநியாயமாய் இராதீர்கள்; பொறுங்கள், இன்னும் நான் குற்றவாளியாகவில்லை.

30 என் பேச்சில் அக்கிரமம் காணப்படுவதில்லை, என் வாயிலிருந்து அறிவீனமான சொல் ஒலிப்பதில்லை.

அதிகாரம் 07

1 மனிதனின் வாழ்நாள் உலகில் போர்ச்சேவை நாள் அன்றோ? அவனுடைய நாட்கள் கூலியாளின் நாட்கள் போன்றவை அல்லவா?

2 அடிமை ஊழியன் நிழலுக்கு ஏங்குவது போலும், கூலியாள் தன் கூலியையே எதிர்பார்ப்பது போலும்,

3 எனக்கு எத்தனையோ மாதங்கள் வீணாயின, வேதனை மிக்க இரவுகள் என் பங்காயின.

4 படுக்கப் போகையில், 'எப்போது விடியுமோ!' என்கிறேன், இரவோ நீண்டதாயிருக்கிறது, விடியும் வரை படுக்கையில் புரண்டு புரண்டு சலிப்புறுகிறேன்.

5 என் சதை புழுவாலும் புழுதியாலும் மூடியுள்ளது, என் தோல் வெடிக்கிறது, சீழ்வடிகிறது.

6 நெசவுத்தறி நாடாவிலும் விரைவாக என் நாட்கள் ஓடி, நம்பிக்கைக்கு இடமே இன்றி முடிவடைகின்றன.

7 என் உயிர் வெறும் காற்றே என்பதை நினைவு கூரும். என் கண் இனி ஒருபோதும் நன்மையைக் காணாது.

8 என்னைப் பார்ப்பவனின் கண்ணும் இனி என்னைக் காணாது, உம் பார்வை என்மேல் இருக்கையில் நான் இல்லாமற் போவேன்.

9 கார்மேகம் கலைந்து மறைவது எவ்வாறே, அவ்வாறே பாதாளத்தில் இறங்கினவன் இனி ஏறிவரான் .

10 இனி அவன் தன் வீட்டிற்குத் திரும்புவதுமில்லை, அவனுக்குரிய இடமும் இனி அவனைக் கண்டறியாது.

11 ஆதலால் நான் என் வாயை அடக்கி வைக்கமாட்டேன், என் ஆவியின் வேதனையை வெளியிடுவேன், என் ஆன்மாவின் கசப்பில் நான் முறையிடுவேன்.

12 நான் என்ன கடலா? அல்லது கடல்வாழ் திமிங்கிலமா? பின்னர் ஏன் என் மேல் காவல் வைக்கிறீர்?

13 என் படுக்கை எனக்கு ஆறுதல் அளிக்கும், என் மெத்தை என் முறையீட்டைத் தணிக்கும்' என்று சொல்லி நான் உறங்கச் சென்றால்,

14 கனவுகளால் என்னை நீர் கலங்கச் செய்கிறீர், காட்சிகளால் என்னை நீர் திகிலடையச் செய்கிறீர்.

15 ஆதலால் குரல்வளை நெறிக்கப்படுவதை என்னுள்ளம் விரும்புகிறது. இவ் வேதனைகளை விடச் சாவை நான் வரவேற்கிறேன்.

16 வாழ்க்கையை நான் வெறுக்கிறேன், என்றென்றைக்கும் வாழ நான் விரும்பவில்லை, ஆதலால் என்னை விட்டுவிடும்; என் வாழ்நாட்கள் வெறும் காற்றே.

17 மனிதனை இவ்வளவு நீர் மதிப்பதற்கும், உம் சிந்தையை அவன்மேல் வைப்பதற்கும் அவன் எம்மாத்திரம்?

18 காலை தோறும் நீர் அவனைச் சந்தித்து, வினாடி தோறும் அவனைப் பரிசோதிப்பானேன்?

19 எத்துணைக் காலம் உம் பார்வை என்னை விட்டு அகலாதிருக்கும்? உமிழ் நீரை விழுங்கக் கூட என்னை விடமாட்டீரோ?

20 மனிதரைக் காவல் செய்பவரே, அப்படியே நான் பாவஞ் செய்திருப்பின், உமக்கு நான் என்ன செய்தேன்? என்னை உம்முடைய இலக்காக ஆக்கியது ஏன்? உமக்கு நான் ஒரு சுமையாகியது ஏன்?

21 என்னுடைய பாவத்தை நீர் ஏன் மன்னிக்கவில்லை? எனது அக்கிரமத்தை நீர் ஏன் அகற்றவில்லை? இதோ, இப்பொழுது நான் புழுதியில் கிடந்து உறங்குவேன், நாளைக் காலையில் நீர் தேடும் போது நான் இருக்கமாட்டேன்."

அதிகாரம் 08

1 அதற்குச் சுகீத்தனான பால்தாத் சொன்ன மறுமொழி பின்வருமாறு:

2 எவ்வளவு நேரம் நீர் இவ்வாறு பேசுவீர்? உமது வாயிலிருந்து வரும் சொற்கள் கடும் புயல் போலிருக்கின்றனவே!

3 கடவுள் நீதியைப் புரட்டுகிறாரோ? எல்லாம் வல்லவர் நேர்மையானதைப் புரட்டுவாரோ?

4 உம் புதல்வர்கள் அவருக்கெதிராய்ப் பாவஞ் செய்திருப்பின், அவர்கள் பாவங்களுக்குரிய தண்டனையைப் பெற்றுவிட்டார்கள்;

5 ஆனால் நீர் கடவுளைத் தேடி, எல்லாம் வல்லவரைப் பார்த்து மன்றாடினால்,

6 நீர் தூய்மையும் நேர்மையும் உள்ளவராய் இருந்தால், உமக்காக அவர் விழித்தெழுந்து வந்து நீதிமானுக்குரிய வீடு வாசல்களை உமக்குத் திருப்பித் தருவார்.

7 உமது தொடக்க நிலை மிக அற்பமானதாயினும் உம் பின்னைய நாட்கள் மிகப் பெருமை உடையனவாயிருக்கும்.

8 முந்தின தலைமுறையினரை நீர் விசாரித்துப் பாரும், அவர்கள் தந்தையர் கண்டறிந்ததைச் சிந்தியும்.

9 ஏனெனில் நாமோ நேற்றுப் பிறந்தவர்கள், நமக்கு ஒன்றுமே தெரியாது, உலகில் நாம் வாழும் நாட்கள் வெறும் நிழலே.

10 ஆனால் அவர்கள் உமக்குக் கற்பிப்பார்கள், சொல்லுவார்கள், உள்ளத்திலிருந்து அவர்கள் சொல்லும் வார்த்தைகள் இவையே:

11 ஈரமின்றி நாணல் வளர இயலுமோ? நீரின்றிக் கோரை ஓங்கி வளருமோ?

12 அறுக்கப்படாமல் இன்னும் பூவோடு இருக்கும் போதே மற்றப் புற்களினும் விரைவில் அது வாடிப் போகிறது.

13 கடவுளை மறக்கிற அனைவரின் நெறிகளும் அத்தகையனவே. கடவுள் பற்றில்லாதவனின் நம்பிக்கை அழிந்து போகும்.

14 அவனுடைய நம்பிக்கை வெறும் நூல் போன்றது, அவனுடைய உறுதி சிலந்திப் பூச்சியின் நூலுக்கு நிகர்.

15 தன் வீட்டின் மேல் அவன் சாய்ந்து கொள்ளுகிறான், அது உறுதியாய் நிற்பதில்லை; அதைப் பற்றிக் கொள்ளுகிறான், அதுவோ நிலைக்கிறதில்லை.

16 கதிரவன் எரிக்கும் போதும் அவன் தளிர்க்கிறான், அவன் தளிர்கள் தோட்டமெங்கும் பரவுகின்றன.

17 அவன் வேர்கள் கற்குவியலில் பின்னலிட்டு இறங்குகின்றன, பாறைகளின் நடுவில் அவன் வாழ்கிறான்.

18 அவனுக்குரிய இடத்தினின்று அவன் அழிக்கப்பட்டால், அவ்விடம், 'உன்னை நான் பார்த்ததே இல்லை' எனச்சொல்லி மறுக்கும்.

19 அவனோ வழியில் அழுகிக் கிடக்கிறான், நிலத்திலிருந்து மற்றவர்கள் முளைக்கிறார்கள்.

20 ஆனால் மாசற்றவனைக் கடவுள் தள்ளிவிடுகிறதில்லை, கொடியவர்களுக்குக் கைகொடுத்து உதவுகிறதில்லை.

21 மீண்டும் உம் வாயில் சிரிப்பும், உம் உதடுகளில் மகிழ்ச்சியொலியும் நிறைந்திடச் செய்வார்.

22 உம்மைப் பகைப்பவர்கள் அப்போது வெட்கத்தால் மூடப்படுவர். கொடியவர்களின் கூடாரம் இல்லாமல் அழியும்."

அதிகாரம் 09

1 அதற்கு யோபு கூறிய மறுமொழி இதுவே:

2 நீ சொல்வது உண்மை தான், எனக்கும் தெரியும்; ஆனால் கடவுள் முன்னிலையில் மனிதன் எப்படி நீதிமானாகத் தோன்றக் கூடும்?

3 அவரோடு வழக்காட எவனாவது துணிவானாயின், ஆயிரத்தில் ஒன்றுக்குக் கூட அவனால் பதில் சொல்ல முடியாதே!

4 அவரோ உள்ளத்தில் ஞானமிக்கவர், ஆற்றலில் வல்லவர்; அவரை எதிர்த்து நின்று வெற்றி கண்டவன் யார்?- அவர் மலைகளைப் பெயர்க்கிறார்,

5 அவை அதை அறியமாட்டா; சினமுற்ற போது அவர் அவற்றை விழத்தாட்டுகிறார்.

6 மண்ணுலகை அதனிடத்தினின்று அசைக்கிறார், அதன் தூண்கள் அதிர்கின்றன.

7 அவர் ஆணையிட்டால் கதிரவன் எழமாட்டான், விண்மீன்களையும் அவரே முத்திரையிடுகிறார்.

8 அவர் ஒருவரே வான்வெளியை விரித்தார், கடலின் பேரலைகளைக் காலால் மிதித்தார்,

9 சப்தரிஷிகணம், மிருகசீரிடம், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை மண்டல விண்மீன் குழுக்களையும் அவரே படைத்தார்.

10 ஆராய்ச்சியறிவுக்கு எட்டாத அரிய செயல்களையும் கணக்கற்ற விந்தைகளையும் அவர் செய்கிறார்.

11 அவர் என்னைக் கடந்து போனாலும் நான் காண்கிறதில்லை, அவர் அசைந்து போவதுகூட எனக்குப் புலப்படுகிறதில்லை.

12 அவர் ஒன்றைப் பறித்துச் சென்றால், அவரை மறிப்பவன் யார்? 'என்ன செய்கிறீர்?' என அவரைக் கேட்பவன் யார்?

13 கடவுள் தம் சினம் ஆறமாட்டார், ராகாபின் துணைவர்கள் அவர் காலடியில் கிடக்கின்றனர்.

14 அப்படியிருக்க, அவருக்கு நான் மறுமொழி கூறுவதெப்படி? அவரோடு வழக்காட எவ்வாறு சொற்களைத் தேர்ந்தெடுப்பேன்?

15 நான் குற்றமற்றவனே என்றாலும், வழக்காடுவதால் பயனென்ன? என் நீதிபதியையே நான் கெஞ்சி மன்றாடுவேன்.

16 நான் அழைக்கும் போது மறுமொழி கூற அவர் வந்தாலும், என் கூக்குரலைக் கேட்பாரென நான் நம்புவதெப்படி?

17 ஏனெனில் கடும் புயலால் என்னை நசுக்குகிறார், காரணமின்றி என் காயங்களைப் பலுகச்செய்கிறார்.

18 மூச்சு விடவும் என்னை விடாதபடி மனக் கசப்பினால் என்னை நிரப்புகிறார்.

19 வலிமையைப் பயன்படுத்தலாமா? அவரோ ஒப்பற்ற வலிமையுள்ளவர். நீதி மன்றத்திற்குப் போகலாமா? அவருக்கு அழைப்பாணை விடுப்பவன் யார்?

20 நான் குற்றமற்றவன் என எண்பிக்க முயன்றால், என் வாயே என் மேல் குற்றம் சுமத்துகிறது; நான் மாசற்றவன் எனக் காட்டினால் எதிர்மாறானதை அவர் எண்பிக்கிறார்.

21 ஆனால் நான் மாசற்றவனா? எனக்கே தெரியாதே! வாழ்க்கையை நான் வெறுக்கிறேன்.

22 எல்லாம் ஒன்றுதான்; ஆதலால் நான் சொல்கிறேன். மாசற்றவனையும் கொடியவனையும் அவர் ஒருங்கே அழிக்கிறார்.

23 திடீரெனப் பேரிடர் சாகடித்தாலும் அவர் மாசற்றவர்களின் துன்பத்தைக் கண்டு நகைக்கிறாரே!

24 மாநிலம் கொடியவன் கையில் விடப்பட்டுள்ளது, அதன் நீதிபதிகளின் முகங்களை அவன் மூடிவிடுகிறான், அவனில்லை என்றால் வேறெவன் அதைச் செய்யக்கூடும்?

25 அஞ்சற்காரனிலும் விரைவாய் என் நாட்கள் ஓடுகின்றன, அவை பறக்கின்றன, நன்மையைக் காண்பதில்லை.

26 நாணற் படகு போல் அவை விரைந்தோடுகின்றன, இரை மேல் பாயும் கழுகு போல் பறந்து போகின்றன.

27 என் முறையீட்டை மறந்து விடுவேன், வருத்தம் நிறைந்த என் முகத்தை மாற்றிக் கொண்டு முகமலர்ச்சியோடு இருப்பேன்' என்று நான் சொல்வேனாகில்,

28 என் துன்பங்களையெல்லாம் கண்டு அஞ்சுகிறேன்; ஏனெனில் என்னை மாசற்றவன் என்று நீர் ஏற்றுக் கொள்ள மாட்டீர் என அறிவேன்.

29 எனக்குத் தண்டனைத் தீர்ப்பு கிடைக்கப் போகிறது, நான் எதற்கு வீணாக வாதாட வேண்டும்?

30 வெண்பனியால் என்னைக் கழுவினாலும், கடும் காரத்தில் என் கைகளைக் கழுவித் தூய்மைப்படுத்தினாலும்,

31 நீர் என்னைச் சேற்றுப் பள்ளத்தில் அமிழ்த்துவீர், என் சொந்த உடைகளே என்னை அருவருக்கும்.

32 அவருக்கு நான் பதில் சொல்லவும், இருவரும் சேர்ந்து வழக்காடவும், அவர் என்னைப் போல் ஒரு மனிதன் அல்லரே!

33 எங்களிருவர் மேலும் தன் கைகளை வைத்து, இடை நின்று வழக்குத் தீர்ப்பவன் எவனுமில்லையே!

34 தம் கோலால் என்னை அடிக்காமல் அவர் நிறுத்தட்டும், அவரைப் பற்றிய அச்சம் எனக்கு நடுக்கம் தராதிருக்கட்டும்.

35 அப்போது நான் அவருக்கு அஞ்சாமல் பேசுவேன், ஏனெனில் அஞ்சுவதற்கு என்னில் ஒன்றும் இல்லை.

அதிகாரம் 10

1 வாழ்க்கையை நான் வெறுக்கிறேன்; என் முறையீட்டைத் தாராளமாய்ச் சொல்வேன், என் மனக் கசப்பை வெளிப்படுத்துவேன்.

2 கடவுளை நோக்கி நான் சொல்வது இதுவே: 'என்னைக் குற்றவாளி என்று தீர்ப்பிடாதீர், எனக்கெதிராய் நீர் வழக்காடுவது ஏனென்று எனக்குத் தெரியப்படுத்தும்.

3 உம் கைகளால் உருவாக்கிய என்னை ஒடுக்கி அவமதிப்பது உமக்குச் சரி எனப்படுகிறதா? கொடியவரின் திட்டங்களுக்கு நீர் உடந்தையாகலாமா?

4 ஊனக் கண்கள் தான் உமக்குண்டா? மனிதர்கள் பார்க்கிறபடி நீரும் பார்க்கிறீரா?

5 உம்முடைய நாட்கள் மனிதனின் நாட்கள் போன்றவையா? உம்முடைய ஆண்டுகள் மனிதனின் ஆண்டுகள் போன்றவையா?

6 பின்னர் ஏன் என் அக்கிரமத்தை ஆராய்ந்து என் பாவங்களைக் கிண்டிக் கிளறிப் பார்க்கிறீர்?

7 நான் குற்றமற்றவன் என்பது உமக்குத் தெரியாததன்று; உம் கையினின்று தப்பிக்க வல்லவன் எவனுமில்லை.

8 உம் கைகளே என்னை உருவாக்கிப் படைத்தன, ஆனால் நீரே இப்பொழுது திரும்பி என்னை அழிக்கிறீரே!

9 களிமண்ணால் நீர் என்னை வனைந்ததை நினைவுகூரும்; என்னை மீண்டும் தூசியாக மாற்றிவிடுவீரோ?

10 பால் போல என்னை நீர் வார்த்து, என்னைத் தயிர்க்கட்டி போல் உறையச் செய்தீரன்றோ?

11 தோலாலும் சதையாலும் என்னை மூடினீர், எலும்புகளாலும் தசை நார்களாலும் என்னைப் பின்னினீர்.

12 உயிரையும் உம் நிலையான அன்பையும் எனக்கு அருளினீர், உமது அக்கறை என் ஆவியைக் காத்து வந்தது.

13 உம் உள்ளத்தில் மறைத்து வைத்தாலும், உம் எண்ணம் என்ன என்பதை நான் அறிவேன்.

14 நான் பாவஞ் செய்தால் அதைக் கவனித்துக்கொள்ளுகிறீர், நான் குற்றம் செய்தால் என்னைக் குற்றம் சாட்டாமல் விடமாட்டீர்.

15 நான் தீயவனாயிருந்தால் எனக்கு ஐயோ கேடு! நான் நேர்மையுள்ளவனே என்றாலும், தலை தூக்க இயலாதே! ஏனெனில் அவமானத்தால் நான் நிறைந்திருக்கிறேன், என் வேதனைகளையே கண்ணோக்குகிறேன்.

16 நான் தலைநிமிர்ந்து நின்றால், சிங்கம் போல் என்மேல் பாய்கிறீர், எனக்கெதிராய் மீண்டும் விந்தைகள் புரிகிறீர்.

17 எனக்கெதிரான உம் சாட்சிகளைப் புதுப்பிக்கிறீர், என்மேல் உமது எரிச்சலை மிகுதிப்படுத்துகிறீர், எனக்கெதிராய்ப் புதிய பகைவரைக் கொண்டு வருகிறீர்.

18 தாய் வயிற்றிலிருந்து ஏன் என்னை வெளிவரச் செய்தீர்? யாரும் பாரா முன்பே நான் செத்திருக்கலாகாதா!

19 கருப்பையிலிருந்து நேரே சவக்குழிக்கு நான் போயிருந்தால் தாவிளை. அப்போது நான் இல்லாதவன் போலவே ஆயிருக்கும்!

20 எஞ்சியுள்ள என் வாழ்நாட்கள் விரைவில் முடியுமன்றோ? எனக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்படி என்னைத் தனிமையில் விட்டுவிடும்.

21 அதன்பின் திரும்பி வர இயலாத நாட்டுக்கு நான் போய்விடுவேன், அங்கு இருளும் அடர்ந்த காரிருளும் நிறைந்துள்ளது;

22 ஒழுங்கற்ற பேயிருட்டுச் சூழ்ந்துள்ளது; ஒளியே இருளாய்க் கவ்வியிருக்கிறது."

அதிகாரம் 11

1 அப்பொழுது நாகாமத்தீத்தனான சோப்பார் பேசத் தொடங்கினான். அவன் கூறிய மறுமொழி வருமாறு:

2 சொற்களை நிரம்பப் பேசியவன் அதற்குரிய மறுமொழியைக் கேட்க வேண்டாமா? வாயாடுவதால் ஒருவன் நீதிமான் ஆகிவிடுவானா?

3 உம்முடைய வீம்புரைகள் மனிதர் வாயை அடைத்துவிடுமோ? நீர் நையாண்டி செய்கையில், பிறர் உம்மைப் பழிக்க மாட்டார்களா?

4 என் நடத்தை தூய்மையானது, கடவுளின் கண்கள் முன் நான் குற்றமற்றவன்' என்று சொல்லுகிறீர்.

5 ஆனால் கடவுள் தாமே தம் வாய் திறந்து உன்னிடம் நேரில் வந்து பேசி,

6 ஞானத்தின் மறை பொருட்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்! அது எவ்வித மதிநுட்பத்தையும் நாணச்செய்யும்; அப்போது, உமது குற்றத்திற்குரிய தண்டனைக்கும் குறைவாகவே கடவுள் உம்மைத் தண்டிக்கிறார் என்றறிந்து கொள்வீர்.

7 கடவுளின் ஆழ்ந்த மறைபொருட்களை உம்மால் அறியக்கூடுமோ! எல்லாம் வல்லவரின் எல்லையைக் காண உம்மாலாகுமோ!

8 அது வானத்தைவிட உயர்ந்தது- நீர் என்ன செய்வீர்? பாதாளத்தினும் ஆழமானது- நீர் எவ்வாறு அறிய முடியும்?

9 அதன் அளவு மாநிலத்தை விட நீளமானது. கடல் அகலத்தினும் அது அகலமானது.

10 அவர் கடந்து போனாலும் சிறையிலடைத்தாலும், நீதிமன்றத்துக்கு அழைத்தாலும், அவரைத் தடுப்பவன் யார்?

11 ஏனெனில் மனிதர் அற்பமென அவர் அறிவார்; அவனுடைய அக்கிரமத்தைக் கண்டும் அவர் கவனியாதிருப்பாரோ?

12 காட்டுக் கழுதையின் குட்டியாய்ப் பிறந்தது மனிதனாகுமானால், அறிவிலியொருவன் அறிவு பெறுவான்.

13 உமது உள்ளத்தை நீர் நேர்மைப்படுத்தி, அவரை நோக்கி உம் கைகளை உயர்த்தக்கடவீர்.

14 உம் கையில் அக்கிரமம் இருந்தால் அதை அகற்றி விடும், உம் கூடாரங்களில் அநீதி குடியிருக்க விடாதீர்.

15 அப்பொழுது தான் மாசின்றி உம் முகத்தை உயர்த்த முடியும், திடன் கொள்ளுவீர், அஞ்சாமல் இருப்பீர்.

16 உமக்கு வந்த துன்ப நிலைi மறந்து போவீர், கடந்தோடிய வெள்ளம்போல் அதை நினைத்துக் கொள்ளுவீர்.

17 பட்டப் பகலிலும் ஒளி மிக்கதான உம் வாழ்வு காரிருளையும் காலையொளி போல் ஆக்கும்.

18 நம்பிக்கை நிறைந்தவராய் நீர் மனவுறுதியுடன் இருப்பீர், நல்ல பாதுகாப்புடன் அச்சமின்றி வாழ்வீர்.

19 நீர் இளைப்பாறுவீர், உம்மை அச்சுறுத்துபவன் எவனுமிரான், பலபேர் உம் தயவை நாடி மன்றாடி நிற்பர்.

20 தீயவர்களின் கண்கள் பூத்துப் போகும், தப்பிப் பிழைக்க அவர்களுக்கு வழியேதும் இராது, ஆவி பிரியுமென்பதே அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை."

அதிகாரம் 12

1 அதற்கு யோபு சொன்ன மறுமொழி இதுவே:

2 மெய் தான், நீங்கள் தான் மக்களின் குரல்; நீங்கள் சாகும் போது ஞானமே செத்துப் போகும்.

3 ஆனால் உங்களைப் போல் எனக்கும் அறிவுண்டு; உங்களினும் நான் தாழ்ந்தவனல்ல; உங்களுக்குத் தெரிந்தது யாருக்குத் தான் தெரியாது?

4 கடவுளைக் கூவியழைத்து அவரிடமிருந்து மறுமொழி பெற்ற நான்- மாசற்ற நீதிமானாகிய நான்- என் நண்பர்களின் ஏளனத்திற்கு ஆளானேன்!

5 இன்ப வாழ்க்கையில் திளைப்பவன் துன்பத்தை வெறுக்கிறான்; ஆனால் இடறி விழுவோருக்கு அது துணையாகக் காத்திருக்கிறது.

6 கள்ளர்களின் கூடாரங்கள் அமைதியாய் இருக்கின்றன, கடவுளுக்கு எரிச்சலூட்டுவோரும், தங்கள் கைவன்மையைக் கடவுளாய்க் கொள்வோரும் அச்சமின்றி வாழ்கின்றனர்.

7 ஆனால் மிருகங்களைக் கேளும், அவை உமக்குக் கற்பிக்கும்; வானத்துப் பறவைகளை வினவும், அவை உமக்குச் சொல்லும்.

8 அல்லது ஊர்வனவற்றைக் கேளும், அவை உமக்கு விளக்கும்; கடலின் மீன்கள் உமக்கு விவரித்துக் கூறும்.

9 ஆண்டவருடைய கையே இதைச் செய்ததென்பது இவை யாவற்றுள்ளும் எதற்குத்தான் தெரியாது?

10 உயிருள்ளவை அனைத்தின் வாழ்வும், எல்லா மனிதரின் மூச்சும் அவர் கையில் தான் உள்ளன.

11 நாக்கு உணவைச் சுவை பார்ப்பது போல், காதும் சொற்களைச் சோதிக்கிறதன்றோ?

12 முதியோரிடத்தில் ஞானமுண்டு, நீண்ட நாள் வாழ்ந்தவரிடம் அறிவு இருக்கிறது.

13 கடவுளிடம் ஞானமும் வல்லமையும் உள்ளன, புத்திக் கூர்மையும் அறிவு நுட்பமும் அவரிடம் உள்ளன.

14 அவர் இடித்தால், மீண்டும் கட்டியெழுப்ப எவனாலும் முடியாது; அவர் மனிதனைச் சிறையில் வைத்தால், விடுவிக்க யாராலும் ஆகாது.

15 அவர் தண்ணீரைத் தடைசெய்தால், யாவும் வறண்டு போம்; அவர் மடையைத் திறந்து விட்டாலோ, நிலமே மூழ்கிப் போகும்.

16 அவரிடம் ஆற்றலும் அறிவும் இருக்கின்றன; ஏமாறுபவனும் ஏமாற்றுகிறவனும் அவருக்குக் கீழுள்ளவர்களே.

17 ஆலோசனைக்காரரை மதியிழக்கச் செய்கிறார், நீதிபதிகளை அறிவிலிகளாக்குகிறார்.

18 அரசர்களின் இடைக்கச்சைகளை அவிழ்த்துவிட்டு அவர்கள் இடுப்பிலே கயிற்றைக் கட்டுகிறார்.

19 அர்ச்சகர்களின் பெருமையைப் பறித்துக் கொள்வார், வல்லவர்களைக் கவிழ்த்து விடுவார்.

20 சொல்வன்மை உள்ளவர்களை ஊமையாக்குவார், முதியவர்களின் மதிநுட்பத்தைப் பிடுங்கிக் கொள்வார்.

21 பெருங்குடி மக்கள் மேல் அவமானத்தைப் பொழிவார், ஆற்றல் படைத்தவர்களின் கச்சையைத் தளர்த்தி விடுவார்.

22 இருளின் ஆழத்திலுள்ளவற்றை வெளியாக்குவார், ஆழ்ந்த இருளை ஒளிக்குக் கொண்டு வருவார்.

23 நாடுகள் மேன்மையடையவும் அழியவும் செய்கிறார், மக்களினங்கள் பரவவும் அழியவும் செய்கிறார்.

24 உலக மக்களின் தலைவர்களிடமிருந்து அறிவை அகற்றுகிறார், திக்கற்ற பாலை வெளியில் அவர்களை அலையச் செய்கிறார்.

25 ஒளியின்றி இருளிலே அவர்கள் தடவிக்கொண்டு நடக்கின்றனர், குடி போதையில் உள்ளவனைப்போல் அவர்களைத் தள்ளாடச் செய்கிறார்.

அதிகாரம் 13

1 இதோ, இவற்றையெல்லாம் நான் கண்ணால் கண்டேன், என் காதால் கேட்டுப் புரிந்துகொண்டேன்.

2 நீங்கள் அறிந்திருப்பதை நானும் அறிந்திருக்கிறேன், உங்களுக்கு நான் தாழ்ந்தவனல்ல.

3 ஆயினும் எல்லாம் வல்லவரிடம் நான் பேச விரும்புகிறேன், கடவுளோடு வழக்காட நான் ஆவலாயிருக்கிறேன்.

4 நீங்களோ பொய்களைப் புனைகிறவர்கள், நீங்கள் அனைவரும் ஒன்றுக்கும் உதவாத மருத்துவர்கள்.

5 நீங்கள் பேசாமல் இருந்தாலே நலமாயிருக்கும்! அதுவே உங்களுடைய ஞானம் என்பேன்!

6 இப்பொழுது எனது நியாயத்தைக் கேளுங்கள், என் உதடுகளின் வழக்காடலைக் கவனியுங்கள்.

7 கடவுள் பேரால் நீங்கள் பொய் பேசுவீர்களோ? அவருக்காக வஞ்சகமாய்ப் பேசுவீர்களோ?

8 அவர் சார்பில் ஓரவஞ்சனை காட்டுவீர்களோ? கடவுளுக்காக நீங்கள் வழக்காடுவீர்களோ?

9 அவர் உங்களை ஆராய்வது உங்களுக்கு நன்மையாய் இருக்குமோ? மனிதரை ஏமாற்றுவது போல் அவரையும் ஏமாற்றுவீர்களோ?

10 மறைவிலே நீங்கள் ஓரவஞ்சனை காட்டினாலும், அவர் உங்களைக் கண்டிக்காமல் விடவே மாட்டார்.

11 அவருடைய மகிமை உங்களைத் திகிலடையச் செய்யாதோ? அவரைப்பற்றிய நடுக்கம் உங்களை ஆட்கொள்ளாதோ?

12 உங்களுடைய மூதுரைகள் சாம்பலையொத்த பழமொழிகளே, உங்கள் எதிர் வாதங்கள் களிமண் போன்ற எதிர் வாதங்கள்.

13 பேசாமலிருங்கள், நான் பேசுவேன், என்ன வந்தாலும் வரட்டும்.

14 துணிந்து என் உடலை ஈடாக வைப்பேன், என் உயிரையே பணயமாக வைப்பேன்.

15 அவர் என்னைக் கொல்லலாம், நான் மனந் தளரமாட்டேன்; என் வழிகள் குற்றமற்றவையென அவரது கண் முன் எண்பித்துக் காட்டுவேன்.

16 கடவுட் பற்றில்லாதவன் அவர் முன்னிலையில் வரமாட்டான்; இந்த என் உறுதியே எனக்கு மீட்பாக இருக்கும்.

17 என் சொற்களைக் கூர்ந்து கேளுங்கள், நான் அறிவிக்கப்போவது உங்கள் செவியில் ஏறட்டும்.

18 இதோ, என் வழக்கை நான் எடுத்துரைக்கப் போகிறேன், என் வழக்கே வெற்றி பெறும் என்றறிவேன்.

19 என்னோடு வழக்காட வருபவன் யார்? அப்போது நான் நாவடங்கி உயிர் துறப்பேன்.

20 எனக்கு இரண்டே கோரிக்கைகளைத் தந்தருளும், அப்போது உம் முகத்தினின்று நான் ஒளியமாட்டேன்.

21 தண்டிக்கும் உமது கையை என் மேலிருந்து எடுத்துக் கொள்ளும், உம்மைப்பற்றிய திகிலால் நான் நிலை கலங்கச் செய்யாதேயும்.

22 அதன் பிறகு என்னைக் கூப்பிடும், நான் பதில் சொல்கிறேன்; அல்லது நான் பேசுகிறேன், நீர் மறுமொழி கூறும்.

23 என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் பாவத்தையும் எனக்குக் காட்டும். ஏன் உமது முகத்தை நீர் மறைத்துக் கொள்கிறீர்?

24 என்னைப் பகைவனாக நீர் கருதுவதேன்?

25 காற்றில் சிக்கிய சருகினிடம் உம் ஆற்றலைக் காட்டுவீரா? காய்ந்த துரும்பைத் துரத்திச் செல்வீரோ?

26 கசப்பான தீர்ப்புகளை எனக்கெதிராய் நீர் எழுதுகிறீர், என் இளமையின் அக்கிரமங்களை என் மேல் சுமத்துகிறீர்.

27 என் கால்களை நீர் தொழுவில் மாட்டுகிறீர், என் வழிகளையெல்லாம் வேவு பார்க்கிறீர்; என் அடிச்சுவடுகள் மேலும் கண்ணாயிருக்கிறீர்.

28 நானோ அழுகிப் போகிற பொருள் போலவும், அந்துப் பூச்சி தின்ற ஆடைபோலவும் அழிந்துபோகிறேன்.

அதிகாரம் 14

1 பெண் வயிற்றில் பிறந்த மனிதன் சில நாட்களே வாழ்கிறான், அவையும் தொல்லை நிறைந்த நாட்களாய் இருக்கின்றன.

2 அவன் பூவைப் போல் பூத்து வாடிப் போகிறான், நிலையாமல் நிழலைப் போல் ஓடி மறைகிறான்.

3 இப்படிப்பட்டவன் மேல் உம் கண்களைத் திருப்பி, உம்மோடு வழக்காடக் கொண்டு வருகிறீரோ?

4 அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைக் கொண்டுவர யாரால் முடியும்? எவனாலும் முடியாது.

5 மனிதனுக்குரிய நாட்களோ மிகச் சில; அவன் மாதங்களின் கணக்கும் உம்மிடமே உள்ளது; கடந்து போகாமல் அவனுக்கு எல்லைகளும் குறித்தீர்.

6 கூலியாள் நாள் முடிவில் மகிழ்வது போல் அவனும் மகிழும்படி உமது பார்வையை அவனிடமிருந்து அகற்றியருளும்.

7 மரத்தைப் பொருத்த மட்டில் எப்பொழுதும் நம்பிக்கையுண்டு; அது வெட்டுண்டால் மறுபடியும் தளிர்க்கும்; அதனுடைய தளிர்கள் தொடர்ந்து கிளைக்கும்.

8 மரத்தின் வேர்கள் நிலத்தில் பழையதாக ஆயினும், அதன் அடித்தண்டு மண்ணில் அழுகிப் போனாலும்,

9 மழை வாசனை அடித்ததும் அது தளிர்விடும்; இளமரம் போலவே கிளைகளை விடும்.

10 ஆனால் மனிதன் செத்தால் அப்படியே கிடக்கிறான்; கடைசி மூச்சுக்குப் பின் அவன் எங்கே? கடல் தண்ணீர் வடிந்து போகலாம்,

11 ஆறுகளெல்லாம் வறண்டு வற்றிப்போகலாம்,

12 ஆனால் மனிதன் துஞ்சினால், மறுபடி எழுகிறதில்லை; வானம் தேய்ந்து போனாலும் அவன் விழிக்க மாட்டான், அவனது உறக்கத்திலிருந்து எழமாட்டான்.

13 பாதாளத்தில் என்னை மறைக்கமாட்டீரா! உம் சினம் தணியும் வரை என்னை ஒளிக்கமாட்டீரா! குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகாவது என்னை நினைக்கமாட்டீரா!

14 அவ்வரம் கிடைக்குமாயின்- ஆனால் செத்தவன் எங்கே மறுபடி உயிர் பெறுவான்? எனக்கு விடுதலை எப்பொழுது வருமோவென்று என் போராட்ட நாட்களிலெல்லாம் நான் காத்திருப்பேன்.

15 அப்போது, நீர் என்னைக் கூப்பிடுவீர், நான் பதில் கொடுப்பேன்; உம் கைகளின் படைப்பாகிய என்னை நீர் காணவிழைவீர்.

16 என்னுடைய காலடிகளை இப்போது கணக்குப் பார்க்கின்ற நீர், இனி என் பாவங்களை வேவு பார்க்கமாட்டீர்.

17 என் மீறுதலைப் பையிலிட்டுக் கட்டி முத்திரை போடுவீர், என் அக்கிரமத்தை மூடி மறைப்பீர்.

18 ஆனால், மலை விழுந்து தவிடு பொடியாகிறது, பாறை தன் இடத்தை விட்டுப் பெயர்கிறது.

19 நீரோட்டம் கற்களைத் தேய்த்து விடுகிறது, வெள்ளப் பெருக்கு நிலத்து மண்ணை அடித்துச் செல்கிறது; அவ்வாறே மனிதனின் நம்பிக்கையை நீர் அழித்து விடுகிறீர்.

20 என்றென்றைக்கும் நீரே அவனை மேற்கொள்ளுகிறீர், அவனோ கடந்து போகிறான்; நீர் அவன் தோற்றத்தைக் கெடுத்து விரட்டி விடுகிறீர்.

21 அவன் மக்கள் உயர்வடைந்தாலும் அவன் அறியான்; அவர்கள் தாழ்வுற்றாலும் அவனுக்குத் தெரியவராது.

22 தன் சொந்த உடலின் நோவையே அவன் உணருகிறான், தனக்காக மட்டுமே அவன் புலம்பி அழுகிறான்."

அதிகாரம் 15

1 அடுத்துத் தேமானியனான ஏலிப்பாஸ் பேசத்தொடங்கினான். அவன் கூறிய மறுமொழி வருமாறு:

2 ஞானமுள்ள ஒருவன் காற்றையொத்த அறிவைக்கொண்டு பதில் கூறுவானோ? கிழக்குக் காற்றைக் குடித்துத் தன் வயிற்றை நிரப்புவானோ?

3 பயனற்ற பேச்சைப் பேசியும், நன்மை பயக்காத சொற்களைச் சொல்லியும் வாதிடலாமோ?

4 நீரோ கடவுளைப் பற்றிய அச்சத்தைத் தவிர்க்கிறீர்; கடவுள் முன்னிலையில் செய்யும் தியானத்தைக் கெடுக்கிறீர்.

5 உமது அக்கிரமம் உம்முடைய வாய்க்குச் சொல்லிக் கொடுக்கிறது, இறைவனைப் பழிப்பவர்களைப் போல் பேச விழைகிறீர்.

6 நானல்ல, உமது வாயே உம்மைக் குற்றவாளியாக்குகிறது, உம்முடைய உதடுகளே உமக்கெதிராய்ச் சாட்சி சொல்லும்.

7 எல்லா மனிதருள்ளும் நீர்தான் முதலில் பிறந்தீரோ? குன்றுகளுக்கு முன்பே நீர் உருவாக்கப்பட்டீரோ?

8 கடவுளின் ஆலோசனைச் சபையில் பேசுவதைக் கேட்டிருக்கிறீரோ? ஞானம் என்பது உமது தனிச் சொத்துரிமையோ?

9 நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியம் உமக்கு விளங்குகிறது?

10 நரை விழுந்தவர்களும் முதியவர்களும் எங்கள் நடுவில் உள்ளனர், உம் தந்தையை விட அவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள்.

11 கடவுள் உமக்களிக்கும் ஆறுதலும், அன்பாய்ப் பேசும் இன் சொற்களும் உமக்கு அற்பமானவையோ?

12 உமது உள்ளத்தின் உணர்ச்சிக்கு நீர் அடிமைப்படுவானேன்? உம் கண்கள் ஏன் வெறித்துப்பார்க்கின்றன?

13 கடவுளுக்கு எதிராய் உம் உள்ளம் கொதிப்பதேன்? இல்லையேல் இப்படிப்பட்ட சொற்களை நீர் பேசுவானேன்?

14 அற்பமனிதன் பரிசுத்தனாக இருப்பதற்கு, பெண் வயிற்றில் பிறந்தவன் நீதிமானாகத் திகழ்வதற்கு அவன் யார்?

15 இதோ, பரிசுத்தர்கள் மேலும் கடவுள் நம்பிக்கை வைப்பதில்லை, வானங்கள் கூட அவர் கண்முன் தூயவையல்ல.

16 அப்படியிருக்க, அருவருப்பும் சீர்கேடும் நிறைந்து, அக்கிரமத்தை நீரைப் போல் குடிக்கும் மனிதன் எம்மாத்திரம்?

17 கவனமாய்க் கேளும், உமக்கொன்று சொல்லுகிறேன், நான் பார்த்தறிந்ததை உமக்கு அறிவிக்கிறேன்:

18 ஞானிகள் இதையே சொல்லியிருக்கிறார்கள், தங்கள் முன்னோரிடமிருந்து இதைக் கற்றறிந்து, நம்மிடம் மறைக்காமல் சொல்லிச் சென்றனர்.

19 நாடு அளிக்கப்பட்டது அவர்களுக்கு மட்டுமே, அந்நியன் எவனும் அவர்கள் நடுவில் நடமாடியதில்லை.

20 பொல்லாதவனின் வாழ்நாளெல்லாம் வேதனையே, கொடுங்கோலனின் ஆண்டுகள் மிகச் சிலவே.

21 அச்சந்தரும் ஒலிகள் அவன் காதுகளில் ஒலிக்கும், அமைதியாய் இருக்கும் போதே அழிப்பவன் அவன் மேல் பாய்வான்.

22 இருளிலிருந்து திரும்பி வரும் நம்பிக்கை அவனுக்கில்லை, வாளுக்கு இரையாக அவன் குறிக்கப் பட்டிருக்கிறான்.

23 உணவு எங்கே?' என்று கேட்டு அலைந்து திரிகிறான்; இருள் சூழ்ந்த நாள் அருகில் காத்திருப்பது அவனுக்குத் தெரியும்.

24 காரிருள் வேளை அவனைக் கலங்கடிக்கும், துயரமும் மன வேதனையும் அவனைக் கவ்விக் கொள்ளும், போருக்கெழும் அரசனைப் போல் அவனை அவை மேற்கொள்ளும்.

25 கடவுளுக்கெதிராய் அவன் தன் கையை ஓங்கினான், எல்லாம் வல்லவரை இறுமாந்து எதிர்த்தான்;

26 திண்ணிய கேடயத் தாங்கியவனாய், அவர் மேல் கடுமையாய்ப் பாய்ந்தான்.

27 அவனுடைய முகத்தில் கொழுப்பேறியிருக்கிறது, அவனது அடிவயிற்றிலும் கொழுப்புச் சரிந்திருக்கிறது;

28 பாழான நகரங்களில் அவன் குடியிருந்தான், மனிதர் யாரும் குடியிராத, பாழாகி மண் மேடிட வேண்டிய வீடுகளிலேயே அவன் குடியிருந்தான்.

29 ஆகையால், அவன் பணக்காரனாகான், அவன் செல்வம் நிலையாது; நிலத்தில் அவனுடைய வேர் ஊன்றி நில்லாது.

30 இருளிலிருந்து அவன் தப்பவே மாட்டான், அவனுடைய தளிர்களை நெருப்பு பொசுக்கிவிடும், அவனது மலரும் காற்றால் சிதறுண்டு போகும்.

31 வெறுமையை நம்பி அவன் ஏமாறாதிருக்கட்டும்; ஏனெனில் வெறுமையே அவனுக்குக் கிடைக்கும் கைம்மாறு.

32 தனது நேரம் வருமுன்பே அவன் மாண்டு போவான், அவனுடைய கிளைகள் உலர்ந்துபோம்.

33 திராட்சைக் கொடிபோல் பழுக்காத திராட்சைகளையும் ஒலிவ மரம் போல் தன் மலர்களையும் உதிர்த்து விடுவான்.

34 இறைப்பற்றில்லாதவர் கூட்டம் பயன் தராது, கையூட்டுப் பெறுபவரின் கூடாரங்கள் தீக்கிரையாகும்.

35 பொல்லாப்பைக் கருத்தாங்கித் தீமையைப் பெற்றெடுக்கிறார்கள், அவர்கள் உள்ளமோ வஞ்சனையை உருவாக்குகிறது."

அதிகாரம் 16

1 அதற்கு யோபு கூறிய மறுமொழி வருமாறு:

2 இப்படிப்பட்டவற்றை நான் பலமுறை கேட்டிருக்கிறேன், நீங்கள் யாவரும் துயர் தரும் தேற்றரவாளர்களே.

3 காற்றைப் போன்ற சொற்களுக்கு முடிவே இல்லையா? மறுமொழி கூறும்படி உம்மைத் தூண்டுவது யாது?

4 என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்தால், உங்களைப் போலவே நானும் பேசக்கூடும்.

5 உங்களுக்கெதிராய்ச் சொற்களை அடுக்கிப் பேசி, உங்களைப் பார்த்து என் தலையை ஆட்டிக்கொண்டே,

6 வாய்ச் சொல்லால் உங்களைத் திடப்படுத்தவும், உதடுகளால் ஆறுதல் மொழிகள் கூறவும் என்னாலும் கூடும்.

7 நான் பேசினால், என் துயர் தணிகிறதில்லையே, பேசாமல் பொறுத்துக்கொண்டால், என் வேதனை சிறிதேனும் நீங்குமோ?

8 இப்பொழுதோ நான் துன்பக் கடலில் அமிழ்ந்திருக்கிறேன், என் உறுப்புகளெல்லாம் இளைத்துப் போயின.

9 என் முகத்தில் விழுந்த திரைகளே எனக்கெதிரான சாட்சி, எனது உடல் மெலிவு எனக்கெதிராய் நின்று சான்று பகர்கிறது.

10 அவர் என்னைப் பகைத்துத் தம் ஆத்திரத்தில் என்னைப் பீறினார், என்னைப் பார்த்துப் பற்களைக் கடித்தார், என் எதிரி என்னை உறுத்துப் பார்க்கிறான்.

11 மனிதர் எனக்கெதிராய்த் தங்கள் வாயைப் பிளந்தார்கள், நிந்தையாய் என்னைக் கன்னத்தில் அறைந்தனர், எனக்கெதிராய் அவர்கள் ஒன்றுகூடினர்.

12 பழிகாரர்களிடம் கடவுள் என்னைக் கையளிக்கிறார், கொடியவர்கள் கையில் என்னைச் சிக்கச் செய்கிறார்.

13 இன்பமாய் வாழ்ந்தேன், அவரோ என்னை நொறுக்கிவிட்டார்; பிடரியைப் பிடித்து என்னை மோதித் தூள் தூளாக்கினார்; குறிபார்த்தடிக்கும் இலக்காக என்னை ஏற்படுத்தினார்.

14 அவருடைய வில் வீரர்கள் என்னைச் சூழ்ந்து நிற்கின்றனர். சிறிதும் இரக்கம் காட்டாமல் என் ஈரலைப் பிளந்தார், என் பிச்சைத் தரையில் ஊற்றினார்.

15 அடிமேல் அடி அடித்து என்னைப் புடைக்கிறார், போர் வீரனைப் போல் என் மேல் பாய்ந்து விழுகிறார்.

16 கோணித் துணியை என் தோலோடு தைத்துக் கொண்டேன், என் தலையைப் புழுதியில் தாழ்த்தி விட்டேன்.

17 அழுது அழுது என்முகம் சிவந்துவிட்டது, என் கண்ணிமைகளைக் காரிருள் கவ்விக்கொண்டது.

18 என் கைகளில் வன்முறை யேதும் இல்லாதிருந்தும், என் வேண்டுதல் தூயதாய் இருந்தும் இவை நேர்ந்தனவே.

19 மண்ணிலமே, என் இரத்தத்தை மூடி மறைக்காதே, என் அழுகை ஓய்ந்திருக்க இடங் கொடாதே.

20 இப்போதும் இதோ என் சாட்சி வானகத்தில் இருக்கிறார், என் சார்பாகப் பேசுபவர் உன்னதத்தில் இருக்கிறார்.

21 என்னுடைய நண்பர்கள் என்னைப் பழிக்கின்றனர், என் கண்கள் கடவுள்முன் கண்ணீர் வடிக்கின்றன.

22 ஒருவன் தன் அயலானோடு வழக்காடுவது போலவே கடவுளோடும் வழக்காடக் கூடுமானால்..!

23 சில ஆண்டுகளே உள்ளன; அவை கடந்த பின் திரும்பிவர முடியாத வழிக்குப் போய்விடுவேன்.

அதிகாரம் 17

1 என் ஆவி மெலிகிறது, என் நாட்கள் முடிவடைகின்றன; கல்லறை எனக்காகக் காத்திருக்கிறது.

2 என்னைச் சுற்றி எள்ளி நகைப்பவர் இருக்கின்றனர், அவர்கள் செய்யும் ஏளனம் எந்நேரமும் என் கண்முன் இருக்கிறது.

3 நீரே எனக்காகப் பிணையம் நில்லும், வேறு யார் எனக்குக் கைகொடுத்து உதவுவார்?

4 அவர்களுடைய உள்ளங்கள் அறிவொளிக்கு அடைபட்டு விட்டதால், அவர்கள் வெற்றி பாராட்ட நீர் விடமாட்டீர்.

5 தன் சொத்தில் பங்கு தர நண்பர்களை அழைக்கிறான், அவன் மக்களின் கண்களோ பூத்துப்போகின்றன.

6 மக்களினங்களுக்கு அவர் என்னைப் பழியுரை யாக்கினார், கண்டவரெல்லாம் என் முகத்தில் துப்பும்படி யானேன்.

7 துயரத்தால் என் கண் மங்கிப் போயிற்று, என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போல் மெலிகின்றன.

8 நேர்மையானவர்கள் இதைக் கண்டு வியக்கிறார்கள், குற்றமற்றவன் இறைப்பற்று இல்லாதவர்க்கெதிராய்ச் சினந்தெழுகிறான்.

9 நீதிமான் தன் நெறியில் உறுதியாய் நடக்கிறான், மாசற்ற கைகளுள்ளவன் மேன் மேலும் வலிமை பெறுகிறான்.

10 ஆனால் நீங்கள் அனைவரும் மீண்டும் வாருங்கள், உங்களுக்குள் ஞானமுள்ளவன் ஒருவனையும் காணமாட்டேன்.

11 என் நாட்கள் கடந்துவிட்டன, என் உள்ளத்தின் ஆர்வமிக்க திட்டங்கள் கவிழ்ந்து போயின.

12 மக்கள், 'பகலுக்கு இடம் தந்து இரவு மறைகிறது, இருளை விரட்ட ஒளி அருகிலுள்ளது' என்கிறார்கள்.

13 நான் எதிர்பார்ப்பதோ பாதாளத்தில் குடியிருத்தலும் இருளில் படுத்துக் கொள்ளுதலுந்தான்.

14 சவக்குழியை நோக்கி, 'நீயே என் தந்தை' என்கிறேன், புழுவை நோக்கி, 'நீயே என் தாயும் தங்கையும்' என்கிறேன்.

15 அப்படியிருக்க, எனக்கு எங்கேயிருக்கிறது நம்பிக்கை? நம்பிக்கையை எனக்குக் காட்டக்கூடியவன் யார்?

16 அதுவும் பாதாளத்திற்குச் செல்லுமோ? ஒன்றாக நாங்கள் புழுதிக்குள் புகுவோமோ?"

அதிகாரம் 18

1 பிறகு, சுகீத்தனான பால்தாத் பேசத்தொடங்கினான்:

2 இன்னும் எவ்வளவு நேரம் அலப்பி அலப்பி பேசுவீர்கள்? சிந்தித்துப் பாருங்கள். பிறகு நாங்கள் பேசுவோம்.

3 மிருகங்கள் என எங்களை நீங்களெல்லாம் கருதுவதேன்? உங்கள் கண் முன் நாங்கள் மூடராய்த் தோன்றுவதேன்?

4 ஆத்திரத்தில் நீரே உம்மைப் பீறிக் கொள்கிறீரே, உம்மை முன்னிட்டு நிலவுலகம் பாழாய்ப் போகுமோ? பாறைகள் தம் இடம் விட்டுப் பெயர்ந்துபோமோ?

5 ஆம், பொல்லாதவனின் விளக்கு அணைந்து போகும், அவனது தீயின் கொழுந்து ஒளிவிடாது.

6 அவனது கூடாரத்திலுள்ள வெளிச்சம் இருளாகும், அவனுக்கு மேலே எரியும் விளக்கு அணைக்கப்படும்.

7 அவனுடைய வீறு நடைகள் ஒடுங்கிப் போகும், அவனுடைய திட்டங்களே அவனைக் கவிழ்க்கும்.

8 அவன் கால்களே அவனை வலையில் அகப்படுத்தும், வீழ்த்துக் குழியின் மேல் அவன் நடக்கிறான்.

9 கண்ணியொன்று அவன் காலைக் கவ்விப் பிடிக்கும், பொறியொன்றில் அவன் சிக்கிக் கொள்வான்.

10 தரையிலே அவனுக்காகச் சுருக்கு மறைந்துள்ளது, வழியிலே அவனுக்காகக் கண்ணி காத்திருக்கிறது.

11 நாற்புறமும் அச்சம் அவனை நடுங்க வைக்கும். குதிக்காலை மிதிக்குமளவில் அவனை விரட்டிச் செல்லும்.

12 அவனுடைய ஆற்றல் பட்டினிக்கு இரையாகும், இடுக்கண் அவன் பக்கத்திலேயே காத்திருக்கும்.

13 கொடிய நோய் அவன் தோலைத் தின்றுவிடும், சாவின் தலைப்பேறு அவனுறுப்புகளை அரித்துத் தின்னும்.

14 அவன் நம்பியிருந்த கூடாரத்தினின்று பிடுங்கப்பட்டு, அச்சமூட்டும் அரசன் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுவான்.

15 அவனது கூடாரத்தில் பெண் பேய் சென்று தங்கும், அவன் இருப்பிடத்தில் கந்தகம் தெளிக்கப்படும்.

16 கீழே அவன் வேர்கள் காய்ந்துபோகும், மேலே அவன் கிளைகள் உலர்ந்து போகும்.

17 உலகிலிருந்தே அவன் நினைவு அழிந்து போகும், தெருவிலே அவன் பெயர் இல்லாதாகும்.

18 ஒளியிலிருந்து இருளுக்குள் தள்ளப்படுவான், உலகிலிருந்தே அவன் துரத்தப்படுவான்.

19 அவனது இனத்தாருள் வழித்தோன்றலோ சந்ததியோ அவனுக்கு இல்லாமற் போகும்; அவன் வாழ்ந்த இடத்தில் எவனும் வாழான்.

20 அவனுக்கு நேர்ந்த துன்ப முடிவைக் கேட்டு, மேற்கு நாடு திகிலடையும், கிழக்கு நாடு திடுக்கிடும்.

21 பொல்லாதவர்களின் இருப்பிடம் இப்படிப்பட்டதே, கடவுளை அறியாதவனின் இடம் இத்தகையதே" என்றான்.

அதிகாரம் 19

1 அதற்கு யோபு சொல்லிய மறுமொழி இது:

2 இன்னும் எவ்வளவு நேரம் என்னை வதைப்பீர்கள்? வார்த்தைகளால் என்னை நொறுக்குவீர்கள்?

3 பத்து முறைகள் என் மேல் வசைமாரி பொழிந்தீர்கள்; என் மனத்தைப் புண்படுத்த உங்களுக்கு வெட்கமாயில்லையா?

4 அப்படியே நான் குற்றம் புரிந்தது உண்மையாயினும், என் குற்றம் என்னைத் தானே சாரும்.

5 எனக்கெதிராய் நீங்கள் உங்களையே பெரியவர்களாக்கி, என் தாழ்மை நிலையைக் காட்டி என் குற்றத்தை எண்பிக்கிறீர்களே;

6 கடவுள் தான் என்னை அந்த நெருக்கடிக்குள் செலுத்தினாரென்றும், வலை விரித்து என்னை மடக்கினாரென்றும் அறிந்து கொள்ளுங்கள்.

7 இதோ, நான் 'கொடுமை கொடுமை' எனக் கதறியும் கேட்பாரில்லை; நான் கூவியழைக்கிறேன்; நீதி வழங்கப் படவில்லை.

8 நான் கடக்க முடியாதபடி அவர் என் வழியில் சுவரெழுப்பினார், என் பாதைகளைக் காரிருள் சூழச் செய்தார்.

9 என்னிடமிருந்து என் மகிமையைப் பறித்துக் கொண்டார், என் தலையிலிருந்து மணி முடியை அகற்றி விட்டார்.

10 நாற்புறமும் என்னை அழிக்கிறார், நான் தொலைந்தேன்; மரத்தைப் பிடுங்குவது போல் என் நம்பிக்கையைப் பிடுங்கி விட்டார்.

11 என் மீது தம் சினத்தீயை மூட்டினார், என்னைத் தம் எதிரியாகக் கருதுகிறார்.

12 அவருடைய படைகள் திரண்டு வருகின்றன, என்னைத் தாக்க வழியமைத்தன. என் கூடாரத்தைச் சுற்றி முற்றுகையிட்டன.

13 என் உடன் பிறந்தாரை என்னை விட்டு அகலச் செய்தார், எனக்கு அறிமுகமாயிருந்தவர்கள் அந்நியராயினர்;

14 என் உறவினரும் நெருங்கிய நண்பரும் என்னைக் கைவிட்டனர், என் வீட்டுக்கு வந்த விருந்தினர் என்னை மறந்துவிட்டனர்.

15 என் வீட்டுப் பணிப்பெண்கள் என்னை அந்நியனாக எண்ணுகின்றனர், அவர்கள் கண்ணுக்கு முகமறியாதவன் ஆனேன்.

16 என் ஊழியனைக் கூப்பிட்டால், அவன் பதில் சொல்வதில்லை, என் வாய்திறந்து நான் அவனைக் கெஞ்ச வேண்டியுள்ளது.

17 என் மூச்சை என் மனைவி கூட அருவருக்கிறாள், என் சொந்தத் தாயின் மக்களுக்கு ஓர் அழுகல் பொருளானேன்.

18 சிறிய குழந்தைகளும் என்னை இகழ்கிறார்கள், நான் எழுந்தால் எனக்கெதிராய்ப் பேசுகிறார்கள்.

19 என் உயிர் நண்பர்கள் அனைவரும் என்னை அருவருக்கின்றனர், என் அன்பைப் பெற்றவர்கள் கூட எனகெதிராய் மாறினர்.

20 தோலுக்குக் கீழ் என் சதை அழுகத் தொடங்குகிறது, பற்களைப் போல் எலும்புகள் தென்படுகின்றன.

21 நண்பர்களே, என் மேல் இரங்குங்கள், என் மேல் இரங்குங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது.

22 கடவுள் செய்வது போல நீங்கள் என்னைத் துரத்துவானேன்? என்னைச் சின்னாபின்னமாக்கினீர்களே, அது போதாதா?

23 நான் சொல்லப் போவதை எழுதிவைக்கவோ அவற்றை ஒரு சுவடியில் வரைந்து வைக்கவோ யார் முன் வருவார்!

24 இருப்பு எழுத்தாணியாலும் ஈயத்தாலும் அது என்றென்றைக்கும் பாறையில் பொறிக்கப்படக் கூடாதா!

25 என்னை மீட்பவர் உயிரோடிருக்கிறார் என்றும், இறுதியில் அவர் புவி மீது எழுந்தருள்வார் என்றும் அறிவேன்.

26 என் தோல் இவ்வாறு அழிந்து போன பிறகு என் சதையிலிருந்து விடுபட்டுக் கடவுளைக் காண்பேன்.

27 அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன், என் கண்களால் நானே பார்ப்பேன், வேறு யாரும் பாரார். என் உள்ளம் என்னுள் மயங்கிச் சோர்கிறது.

28 அவனை நாம் எவ்வகையில் பின்தொடர்ந்து விரட்டலாம், அதற்கு என்ன காரணம் கற்பிக்கலாம்?' என்பீர்களாகில்,

29 நீங்கள் முதற்கண் வாள் தரும் தண்டனையைக் கொணரும்; தீர்வை என்று ஒன்றுண்டு என நீங்கள் அறியவேண்டும்."

அதிகாரம் 20

1 அடுத்து நாகாமத்தீத்தனான சோப்பார் பேசினான்:

2 இதற்கு மறுமொழி கூற எனக்குள் சிந்தனைகள் விரைகின்றன, பேசவேண்டும் என என் உள்ளம் துடிக்கிறது.

3 என்னைச் சிறுமைப்படுத்தும் எதிர்வாதத்தைக் கேட்டேன், என் இதயம் என்னை விடை கூறத் தூண்டுகிறது.

4 உலகில் மனிதன் நடமாடத் தொடங்கிய பண்டை நாளிலிருந்து தெளிவுறும் உண்மையொன்று தெரியுமா?

5 தீயவரின் வெற்றிப் பெருமிதம் நீடிப்பதில்லை, இறைப்பற்றில்லாதவரின் மகிழ்ச்சி இமைப் பொழுதில் மறையும்.

6 அவனுடைய மேன்மை வானளாவ உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகத்தைத் தொடுமாயினும்,

7 தன் சொந்த மலத்தைப் போல் அவனும் அழிந்துபோவான்; ஏற்கெனவே அவனைக் கண்டவர்கள், 'எங்கே அவன்?' என்பார்கள்.

8 கனவைப் போல் பறந்து விடுவான், காணப்படான், இரவில் கண்ட காட்சிபோல் மறைந்து போவான்.

9 முன்னே அவனைப் பார்த்த கண் இனிக் காணாது, அவனிருந்த இடமும் அவனை இனிப் பார்க்காது.

10 அவன் மக்கள் ஏழைகளின் தயவை நாடுவர், அவன் செல்வத்தை அவன் கைகளே திருப்பித்தரும்.

11 அவன் எலும்புகளில் இளமையின் வலிமை நிறைந்திருந்தது, அதுவும் அவனோடே புழுதியில் கிடக்கும்.

12 தீமை அவன் வாய்க்குச் சுவையாயிருந்தது, தன் நாவின் கீழ் அதை அவன் மறைத்து வைத்தான்.

13 அதை வெளியே விட அவனுக்கு மனமில்லை, தன் வாய்க்குள்ளேயே அதை அடக்கிக் கொண்டான்.

14 அவன் வயிற்றிலே அவ்வுணவு மாற்றமடையும், அவனுக்குள் அது விரியன் பாம்பின் நஞ்சாக மாறும்.

15 தான் விழுங்கிய செல்வத்தை வெளியே கக்குவான், அவன் வயிற்றிலிருந்து கடவுள் அதை வெளியேற்றுவார்.

16 விரியன் பாம்பின் நஞ்சை உறிஞ்சிக் குடிப்பான், நச்சுப் பாம்பின் நாக்கு அவனைக் கொன்று விடும்.

17 ஆறுகளை அவன் ஏறெடுத்துப் பாரான், தேனும் நெய்யும் பெருகும் ஓடைகளைக் காணான்.

18 தனது உழைப்பின் பலனை இழந்து விடுவான், அதை அவன் உண்டு பார்க்கமாட்டான்; வணிகம் செய்து சேர்த்த வருமானத்தால், கொஞ்சமும் அவனுக்கு மகிழ்ச்சி இராது.

19 ஏனெனில் ஏழைகளை ஒடுக்கினான், அவர்களைக் கைவிட்டான், தான் கட்டாத வீட்டைப் பிறனிடமிருந்து பறித்தான்.

20 அவனது பேராசைக்கு அமைதியே இல்லை, அவனது சேமிப்பு அவனைக் காப்பாற்றாது.

21 அவன் உண்ட பின் யாதொன்றும் மீதியில்லை, அவன் வளமான வாழ்வு நிலைத்திராது.

22 வளம் நிறைந்த வாழ்விலும் நெருக்கடி அவனை ஒடுக்கும், அவல நிலையின் கொடுமையெல்லாம் அவன் மேல் வரும்.

23 அவன் தன் வயிற்றை நிரப்பும் போது, கடவுள் தம் கோபத்தின் ஆத்திரத்தை அவன் மேல் கொட்டுவார், அவனுக்கு உணவாக அதைப் பொழிவார்.

24 இருப்புப் படைக்கலத்திற்குத் தப்பியோடுவான், ஆனால் வெண்கல அம்பு அவனை ஊடுருவிப் பாயும்.

25 அதை வெளியே இழுத்தால் அவனுடலைக் கிழித்துக் கொண்டு வரும், மின்னும் அம்பு முனை அவன் பிச்சிலிருந்து வெளிப்படும், அச்சமும் நடுக்கமும் அவனை ஆட்கொள்ளும்.

26 அடர்ந்த காரிருள் அவனுக்காகக் காத்திருக்கிறது, மனிதன் மூட்டாத நெருப்பு அவனை விழுங்கும், அவன் கூடாரத்தில் எஞ்சியிருப்பதும் அழிக்கப்படும்.

27 வான் வெளி அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தும், நிலவுலகம் அவனுக்கெதிராய் எழுந்து நிற்கும்.

28 அவன் வீட்டின் உடைமைகள் வெள்ளத்தில் போகும், கடவுளுடைய கோபத்தின் நாளில் அடித்துப் போகப்படும்.

29 கொடியவனுக்குக் கடவுள் விதிக்கும் பங்கு இதுவே; கடவுள் அவனுக்குக் குறிக்கும் உரிமைச் சொத்து இதுவே."

அதிகாரம் 21

1 அதற்கு யோபு சொன்ன மறுமொழி வருமாறு:

2 என்னுடைய சொற்களைக் கவனமாய்க் கேளுங்கள், அந்த ஆறுதலையாவது எனக்குக் கொடுங்கள்.

3 பொறுத்துக் கொள்ளுங்கள், நான் பேசப் போகிறேன்; நான் பேசிய பின் நீங்கள் ஏளனம் செய்யலாம்.

4 நான் மனிதனைப் பற்றியா முறையிடுகிறேன்? பின்னர் ஏன் நான் மனக்கொதிப்படையக் கூடாது?

5 என்னைப் பாருங்கள், பார்த்துத் திடுக்கிடுங்கள்; உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்ளுங்கள்.

6 இதை நினைத்தாலே என் மனம் திடுக்கிட்டுக் கலங்குகிறது, என் உடலை நடுக்கம் பீடிக்கிறது.

7 பொல்லாதவர்கள் இன்னும் உயிரோடிருப்பது ஏன்? முதிர் வயது வரை வாழ்ந்து, ஆற்றலில் வல்லவர்களாவதேன்?

8 அவர்கள் முன்னிலையில் அவர்கள் பிள்ளைகள் நிலைத்திருக்கிறார்கள், அவர்கள் கண் முன் அவர்கள் சந்ததி உயர்ந்தோங்குகிறது.

9 அவர்களுடைய வீடுகள் அச்சத்திலிருந்து காக்கப்பட்டுள்ளன, கடவுளின் தண்டனைக் கோல் அவற்றின் மேல் விழவில்லை.

10 அவர்கள் எருது பொலிந்தால் வீணாய்ப் போகிறதில்லை; அவர்கள் பசு சினை சிதையாமல் கன்று ஈனுகிறது.

11 மந்தை போலத் தங்கள் சிறுவர்களை வெளியே அனுப்புகிறார்கள், அவர்களுடைய குழந்தைகள் துள்ளி விளையாடுகின்றனர்.

12 தம்புரு, சுரமண்டலம் இசைத்துப் பாடுகின்றனர், குழலோசை கேட்டு அகமகிழ்கின்றனர்.

13 வளமான வாழ்வில் தங்கள் நாட்களைக் கழிக்கின்றனர், அமைதியாய்ப் பாதாளத்தில் இறங்குகின்றனர்.

14 கடவுளை நோக்கி, 'எங்களை விட்டகலும், உம் வழிகளை அறிய நாங்கள் விரும்பவில்லை;

15 எல்லாம் வல்லவர்க்கு நாம் ஏன் ஊழியம் செய்ய வேண்டும்? அவரிடம் மன்றாடுவதால் நமக்குப் பயனென்ன?' என்றார்கள்.

16 இதோ, இன்ப வாழ்க்கை அவர்கள் கையில் தானே இருக்கிறது! அந்தத் தீயவர்களின் ஆலோசனை எனக்குத் தொலைவாயுள்ளது.

17 பொல்லாதவர்களின் விளக்கு எத்தனைமுறை அணைந்தது? இடுக்கண் யாதும் அவர்களுக்கு நேர்ந்ததுண்டோ? கடவுள் சினங்கொண்டு அவர்களுக்கு நோய்நொடி அனுப்பியதுண்டோ?

18 காற்றில் சிக்கிய வைக்கோல் போல அவர்கள் இருப்பதுண்டோ? புயல் வாரிச் செல்லும் பதர் போல அவர்கள் ஆவதுண்டோ?

19 தந்தையின் அக்கிரமத்தை அவனுடைய பிள்ளைகளுக்காகக் கடவுள் சேர்த்து வைப்பாரோ? அவனுக்கே அந்தத் தண்டனை கிடைக்கட்டும், அப்போது தான் அவன் அதை உணர்ந்து கொள்வான்.

20 தனது அழிவைத் தானே தன் கண்களால் காணட்டும், எல்லாம் வல்லவரது சினத்தின் விளைவை அவனே அனுபவிக்கட்டும்.

21 அவனுடைய வாழ்நாட்களின் எண்ணிக்கை முடிவடைந்து இறந்தபின் அவன் வீட்டார் மட்டில் அவனுக்கு என்ன அக்கறை?

22 கடவுளுக்கு அறிவு புகட்டுபவன் எவனாகிலும் உண்டோ? உம்பர்களுக்கும் தீர்ப்பு வழங்குபவர் அவரே அன்றோ?

23 ஒருவன் வளமான வாழ்க்கை நடத்திக் கவலையின்றி இன்பமெல்லாம் துய்த்துப் பார்த்து,

24 உடல் பருத்துக் கொழுப்பேறி, எலும்புகள் சதைப்பிடிப்பேறிய நிலையில் சாகிறான்.

25 இன்னொருவனோ நன்மையொன்றையும் சுவை பாராமல் மனக்கசப்புற்ற நிலையில் சாகிறான்.

26 இருவருமே புழுதியில் புதைக்கப்படுகின்றனர், புழுக்கள் அவர்களை மூடிக்கொள்ளுகின்றன.

27 இதோ, உங்கள் எண்ணங்கள் எனக்குத் தெரியும், எனக்கெதிராய் நீங்கள் தீட்டும் திட்டங்களை அறிவேன்.

28 ஏனெனில், நீங்கள், 'பெருங்குடி மகனின் வீடு எங்கே? கொடியவர்கள் குடியிருந்த கூடாரமெங்கே?' என்கிறீர்கள்.

29 வழிப்போக்கர்களை நீங்கள் விசாரிக்கவில்லையா? அவர்கள் கண்டு சொன்ன செய்தியை ஏற்கமாட்டீர்களோ?

30 பொல்லாதவன் துன்பத்தின் நாளுக்கென விடப்பட்டுள்ளான், கோபத்தின் நாளில் அவன் தூக்கிச் செல்லப்படுவான் என்பர்.

31 அவன் முகத்தெதிரில் அவனது நடத்தையைக் கண்டிப்பவன் யார்? அவன் செய்ததற்கு ஏற்ற பலன் தருபவன் எவன்?

32 அவன் கல்லறைக்குக் கொண்டு போகப்படுவான், அவன் சமாதிக்குக் காவல் வைக்கப்படும்.

33 பள்ளத்தாக்கின் மண் அவனுக்கு இனிப்பாயிருக்கும், மனிதரெல்லாம் அவனைப் பின்தொடர்கின்றனர், அவன் முன்னால் போகிறவர்களுக்குக் கணக்கில்லை.

34 அப்படியிருக்க, வெறும் சொற்களால் எனக்கு எப்படி நீங்கள் ஆறுதல் கொடுப்பீர்கள்? உங்கள் மறுமொழிகள் யாவும் பொய்யன்றி வேறில்லை."

அதிகாரம் 22

1 அப்போது தேமானியனான ஏலிப்பாஸ் பேசத் தொடங்கினான். அவன் சொன்னதாவது:

2 மனிதன் கடவுளுக்குப் பயன்படக்கூடுமோ? ஞானமுள்ளவன் தனக்குத்தானே பயனுள்ளவனாயிருக்கிறான்.

3 நீர் நேர்மையாயிருந்தால், கடவுளுக்கு அதனால் இன்பமுண்டோ? உம் நெறிகள் குற்றமற்றவையாயின், அது அவருக்கு ஆதாயமோ?

4 நீர் அவருக்கு அஞ்சுவதற்காகவா அவர் உம்மைக் கண்டிக்கிறார்? அதை முன்னிட்டா உம்மோடு வழக்காடுகிறார்?

5 நீர் செய்த தீமை பெரிதல்லவா? உம்முடைய அக்கிரமங்களுக்கு அளவே இல்லை!

6 ஏனெனில் காரணமின்றி உம் சகோதரரிடம் நீர் அடகு வாங்கினீர், ஆடைகளைப் பறித்து விட்டுப் பலரை நிர்வாணிகளாய் விட்டீர்.

7 தாகமுற்றவனுக்கு நீர் தண்ணீர் கொடுக்கவில்லை, பசித்து வந்தவனுக்கு உணவு தர மறுத்தீர்.

8 உமக்கு வேண்டியவர்கள் குடியேறி வாழும்படி பிறர் நிலத்தை வன்முறையால் கைப்பற்றினீர்.

9 கைம்பெண்களை வெறுங்கையுடன் அனுப்பிவிட்டீர், திக்கற்றவர்களின் கைகளை முறித்துப் போட்டீர்.

10 ஆதலால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன, பேரச்சம் உம்மைத் திடீரென மேற்கொள்ளுகிறது.

11 உமது ஒளி இருளாக மாறிவிட்டது, உம்மால் இனிப் பார்க்க முடியாது, வெள்ளப் பெருக்கு உம்மை மூழ்கடிக்கிறது.

12 வான்வெளிக்கும் மேலே அல்லவா கடவுள் தங்கியிருக்கிறார்? வானத்து விண்மீன்களைப் பாரும், அவை எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன!

13 ஆதலால் நீர், 'கடவுளுக்கு என்ன தெரியும்? இருளை ஊடுருவி நோக்கி அவரால் தீர்ப்பிட முடியுமா?

14 காண முடியாதபடி திண்ணிய மேகங்கள் மறைக்கின்றன, அவரோ வான்பரப்பில் உலவுகிறார்' என்கிறீர்.

15 கொடிய மனிதர் போன பழைய நெறியிலேயே நீரும் போக எண்ணுகிறீரோ?

16 காலம் வருமுன்னே அவர்கள் பறிக்கப்பட்டனர், அவர்களின் அடிப்படையை வெள்ளம் வாரிச் சென்றது.

17 கடவுளை நோக்கி, அவர்கள், 'எங்களை விட்டகலும்' என்றும், 'எல்லாம் வல்லவர் எங்களுக்கு என்ன செய்ய முடியும்' என்றும் சொன்னார்கள்.

18 ஆயினும், அவர்கள் வீடுகளை அவர் நன்மைகளால் நிரப்பினார்- தீயவர்களின் ஆலோசனை எனக்குத் தொலைவாயுள்ளது.

19 நேர்மையுள்ளவர்கள் இதைக் கண்டு மகிழ்கிறார்கள், மாசற்றவர்கள் தீயோரை எள்ளி நகைக்கிறார்கள்:

20 அவர்களுடைய பெருமிதம் வீழ்த்தப்பட்டது, அவர்கள் விட்டுச்சென்றது தீக்கிரையாயிற்று' என்கிறார்கள்.

21 கடவுளுக்கு இணங்கும்; சமாதானமாய் இரும்; அதனால் உமக்கு நன்மை விளையும்.

22 அவர் வாய் மொழியிலிருந்து கற்றுக் கொள்ளும், அவர் சொற்களை உம் உள்ளத்தில் சேமித்து வையும்.

23 எல்லாம் வல்லவரிடம் நீர் தாழ்மையோடு திரும்பி வந்தால், உம் கூடாரங்களிலிருந்து அநீதியை அப்புறப்படுத்தினால்,

24 பசும்பொன்னைப் புழுதியென நீர் கருதினால், ஒப்பீர் நாட்டுத் தங்கத்தை ஆற்றுக் கற்களென மதித்தால்,

25 எல்லாம் வல்லவரே உமக்குப் பசும்பொன்னாவார், உமக்கு விலையுயர்ந்த வெள்ளியாய் இருப்பார்.

26 அப்போது, எல்லாம் வல்லவரில் நீர் இன்பம் காண்பீர், கடவுளை நோக்கி உம் முகத்தை உயர்த்துவீர்.

27 நீர் அவரைப் பார்த்து மன்றாடுவீர், அவர் உமது மன்றாட்டைக் கேட்டருள்வார், உம் நேர்ச்சிக் கடன்களை நீர் செலுத்துவீர்.

28 நீர் துணிந்த கருமம் வெற்றியாய் முடியும், உம்முடைய வழிகள் ஒளி நிறைந்திருக்கும்.

29 ஏனெனில் செருக்குள்ளவர்களைக் கடவுள் தாழ்த்துகிறார், ஆனால் தாழ்மையுள்ளவர்களை மீட்கிறார்.

30 மாசற்றவனை அவர் விடுவிக்கிறார், உம்முடைய கைகளின் தூய்மையால் நீர் விடுதலை பெறுவீர்."

அதிகாரம் 23

1 அதற்கு மறுமொழியாக யோபு சொன்னதாவது:

2 இன்று கூட என் முறைப்பாடு கசப்பாயிருக்கிறது, நான் வேதனைக் குரலெழுப்பியும் அவர் கரத்தின் பளு குறையவில்லை.

3 அவரை எங்கே கண்டு பிடிக்கலாம் என்று மட்டும் எனக்குத் தெரிந்தால்! அவரது இருக்கையருகில் நான் நெருங்கக் கூடுமானால்!

4 அவர் முன்னிலையில் நான் என் வழக்கை விவரிப்பேன், பல்வேறு சான்றுகளை என் வாய் எடுத்து எண்பிக்கும்.

5 அவர் கூறப்போகும் மறுமொழியை அறிந்துகொள்வேன், எனக்கு அவர் என்ன சொல்வார் எனக் கண்டுணர்வேன்.

6 தம் மாபெரும் வல்லமையில் என்னோடு வழக்காடுவாரோ? வழக்காடமாட்டார்; நான் சொல்வதைக் கேட்பார்.

7 அங்கே நேர்மையுள்ளவன் அவரோடு வாதாட முடியும், கண்டிப்பாய் என் வழக்கு வெற்றி பெறும்.

8 இதோ நான் கிழக்கே போகிறேன், ஆனால், அங்கே அவரில்லை; மேற்கே போகிறேன், ஆனால் அங்கே அவரைக் காணோம்.

9 வடக்கே தேடுகிறேன், அவரைக் காண முடியவில்லை; தெற்கே திரும்புகிறேன், அவர் தென்படவில்லை.

10 ஆயினும், நான் போகும் வழி அவருக்குத் தெரியும், அவர் என்னைச் சோதித்த பின், பசும்பொன் போல் நான் வெளிப்படுவேன்.

11 அவர் அடிச்சுவடுகளிலேயே என் கால் நடந்து சென்றது, விலகாமல் அவர் வழியையே பின்தொடர்ந்தேன்.

12 அவர் உதடுகள் இட்ட கட்டளையை நான் விட்டு விலகவில்லை, அவர் வாய்மொழிகளை என்னுள்ளத்தில் சேமித்து வைத்தேன்.

13 அவர் தீர்மானிக்கிறார்; அவர் முடிவை யார் மாற்றக்கூடும்? எதை விரும்புகிறாரோ அதை அவர் செய்து முடிக்கிறார்.

14 என்னைப்பற்றி அவர் ஆணையிட்டதை நிறைவேற்றுவார், இத்தகைய தீர்மானங்கள் அவர் மனத்தில் பல உள்ளன.

15 ஆதலால் அவர் திருமுன் நான் திகிலடைகிறேன், நினைக்க நினைக்க அவரைப் பற்றிய அச்சத்தால் நடுங்குகிறேன்.

16 கடவுள் என்னுள்ளத்தைச் சோர்வடையச் செய்தார், எல்லாம் வல்லவர் என்னை அச்சுறுத்தினார்.

17 ஏனெனில் இருள் என்னை அவரிடமிருந்து மறைக்கிறது, அவரைக் காணாதபடி காரிருள் திரையிடுகிறது.

அதிகாரம் 24

1 எல்லாம் வல்லவர் தீர்ப்பின் காலங்களைக் குறிப்பிடாததேன்? அவரை அறிந்தவர்கள் அவர் நாட்களைக் காணாததேன்?

2 தீயவர்கள் காணிக் கற்களைத் தள்ளி நடுகிறார்கள், மந்தைகளைக் கொள்ளை கொண்டு போய் மேய்க்கிறார்கள்.

3 திக்கற்றவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டு போகிறார்கள், கைம் பெண்ணின் எருதை அடைமானமாய் எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

4 ஏழைகள் வழியை விட்டு அப்புறப்படுத்தப்படுகிறார்கள், நாட்டின் ஏழைகளெல்லாம் ஓடி ஒளிகிறார்கள்.

5 இவர்களுள் சிலர் காட்டுக் கழுதைகள் போல், பாலை நிலத்தில் இரைக்காகக் காத்திருந்து தங்கள் பிள்ளைகளுக்கு உணவு தேடும் வேலை மேல் கிளம்புகிறார்கள்.

6 கயவனின் வயலில் அறுவடை செய்கிறார்கள், பொல்லாதவனின் திராட்சைத் தோட்டத்தில் பழம் பறிக்கிறார்கள்.

7 ஆடையின்றி இரவெல்லாம் நிருவாணமாய்க் கிடக்கிறார்கள், குளிரிலே போர்த்திக் கொள்ள அவர்களுக்குப் போர்வையில்லை.

8 மலைகளில் பெய்யும் மழையால் நனைகிறார்கள், ஒதுங்குவதற்கு இடமின்றிப் பாறைகளில் ஒண்டுகிறார்கள்.

9 தந்தையில்லாப் பிள்ளைகள் சொத்தைக் கொடியவர்கள் பறிக்கின்றனர். ஏழைகளின் மேலாடைகளை அடைமானமாய் எடுக்கின்றனர்.

10 அவ்வேழைகள் ஆடையின்றி நிருவாணமாய்த் திரிகிறார்கள், பசியோடு அரிக்கட்டுகளைத் தூக்கிக் செல்லுகின்றனர்.

11 செக்குகளில் எண்ணெய் ஆட்டுகிறார்கள். திராட்சைப் பழம் பிழிந்தும், தாகத்தால் வருந்துகிறார்கள்.

12 நகரத்தில் சாகக் கிடப்போரின் முனகல்கள் கேட்கின்றன, காயம் பட்டவர்களின் உள்ளம் உதவிக்காகத் தவிக்கிறது, ஆயினும் கடவுள் அவர்கள் மன்றாட்டைக் கேட்கிறதில்லை.

13 ஒளியை எதிர்க்கிறவர்களும் இருக்கிறார்கள், ஒளியின் நெறிகள் அவர்கள் அறியாதவை, அதன் வழிகளில் அவர்கள் நிலை கொள்வதில்லை.

14 ஏழைகளையும் எளியவர்களையும் கொல்வதற்காக, இருள் சூழ்ந்ததும் கொலைகாரன் கிளம்புகிறான், நள்ளிரவில் திருடனைப் போல் சுற்றித் திரிவான்.

15 மாலை மயங்கட்டுமென விபசாரன் காத்திருக்கிறான், 'யாரும் என்னைப் பார்க்க மாட்டார்கள்' என்று சொல்லிக்கொண்டு- முக மூடியால் தன் முகத்தை மறைத்துக் கொள்கிறான்.

16 காரிருளில் வீடுகளைக் கன்னமிடுவோர் பலர், பகல் வேளையில் அவர்கள் பதுங்கிக் கிடக்கின்றனர், ஒளியைப் பார்க்கவே விரும்பமாட்டார்கள்.

17 காரிருள் தான் அவர்களனைவர்க்கும் காலை நேரம்; காரிருளின் திகில்கள் அவர்களுக்குப் பழக்கமானவை.

18 நீங்களோ, 'பெருவெள்ளம் அவர்களை விரைவில் வாரிச் செல்லும், அவர்கள் பாகம் நாட்டில் சபிக்கப்பட்டுள்ளது, அவர்களின் திராட்சைத் தோட்டத்தில் பழம் பிழிவோன் எவனும் போகவில்லை.

19 வறட்சியும் வெயிலும் பனி நீரைத் தீய்ப்பது போல் பாதாளமும் பாவிகளைத் தீய்த்து விடும்.

20 பெற்றெடுத்த வயிறே அவர்களை மறந்து விடும், அவர்கள் பெயர் எவராலும் நினைவு கூரப்படாது, இவ்வாறு மரத்தைப் போல் கொடுமை முறிக்கப்படும்.

21 ஏனெனில் பிள்ளை பெறாத மலடிக்குத் தீங்கு செய்தார்கள். கைம்பெண்ணுக்கு ஒரு நன்மையும் செய்ததில்லை' என்கிறீர்கள்.

22 ஆயினும் வலியோரின் வாழ்வைக் கடவுள் தம் வல்லமையால் நீடிக்கச் செய்கிறார், அவர்களுக்கு வாழ்க்கை அவநம்பிக்கையாகும் போது, புத்துணர்ச்சி பெற்று எழுகிறார்கள்.

23 அவர்களை அவர் பாதுகாக்கிறார், அவர்களைத் தாங்குகிறார்; அவர் கண்கள் அவர்களுடைய வழிகளில் கருத்தாயிருக்கின்றன.

24 கொஞ்ச காலம் உயர்வடைந்த பின் அழிந்து விடுகிறார்கள்; இளஞ் செடிபோல் வாடி வதங்கிப் போகிறார்கள், தானியக் கதிர் நுனி போல் அறுக்கப்படுகிறார்கள்.

25 இதெல்லாம் உண்மையல்லவென்றால், நான் சொல்வது பொய்யென்றோ அல்லது வீண் சொற்களென்றோ எவன் எண்பிப்பான்?"

அதிகாரம் 25

1 அடுத்துச் சுகீத்தனான பால்தாத் பேசினான்:

2 ஆட்சி கடவுளுக்குரியது, அவருக்கே அஞ்சவேண்டும்; தாம் ஆளும் உன்னதங்களில் அவர் சமாதானம் நிலவச் செய்கிறார்.

3 அவருடைய படைகளுக்கு எண்ணிக்கையும் உண்டோ? அவரது ஒளி யார் மேல் தான் விழுவதில்லை?

4 கடவுள் முன் மனிதன் தன்னை நீதிமானாய்க் கருத முடியுமா? பெண் வயிற்றில் பிறந்தவன் தூய்மையாய் இருக்கக்கூடுமா?

5 இதோ, வெண்ணிலவும் அவர் முன் ஒளி குன்றுகிறது, அவர் கண்ணுக்கு விண்மீன்களும் தூய்மையற்றவையே.

6 அப்படியிருக்க, பூச்சிக்கொத்த மனிதன் எம்மாத்திரம்? புழுவுக்கு நிகரான மனிதன் எம்மாத்திரம்?"

அதிகாரம் 26

1 அதற்கு யோபு கூறிய மறுமொழியாவது:

2 வலிமையற்றவனுக்கு நீர் எவ்வளவு உதவி செய்தீர்! ஆற்றலிழந்த கையை நீர் எவ்வளவு நன்றாய்க் காத்தீர்!

3 ஞானமற்றவனுக்கு நீர் சொன்ன ஆலோசனை நன்று, நன்று! திறமான அறிவை நிறைவாக வழங்கினீரே!

4 யாருடைய உதவியினால் நீர் சொற்களைப் பொழிந்தீர்? யாருடைய ஆவி உம்மிடமிருந்து வெளிப்பட்டது?

5 செத்தவர்களின் ஆவி நிலத்திற்கடியில் நடுங்குகின்றது, கடல்களும் நீர் வாழ்வனவும் அஞ்சுகின்றன.

6 பாதாளம் அவர் முன் திறந்து கிடக்கிறது, கீழுலகம் அவர் கண் முன் பரந்து கிடக்கிறது.

7 வெற்றிடத்தில் வட பாகத்தை விரிக்கிறவர் அவரே, அந்தரத்தில் மண்ணுலகைத் தொங்க விடுபவரும் அவரே.

8 தண்ணீரைக் கார்மேகங்களில் அவர் கட்டி வைக்கிறார், அவற்றின் பளுவால் கார்மேகம் கிழிவதில்லை.

9 வெண்ணிலவின் ஒளி முகத்தை மூடி மறைக்கிறார், தம் மேகத்தை அதன் மீது விரித்து விடுகிறார்.

10 ஒளிக்கும் இருளுக்கும் எல்லையாக, நீர்ப்பரப்பில் வட்டமொன்றை வரைந்துள்ளார்.

11 வானத்தின் தூண்கள் அதிர்கின்றன, அவர் அதட்டினால் அவை நடுங்குகின்றன.

12 கடலைத் தம் வல்லமையால் அமைதிப்படுத்தினார், தம் அறிவினால் ராகாபை அடித்து வீழ்த்தினார்.

13 காற்றை அனுப்பி வான்வெளியைத் தெளிவுபடுத்தினார், பறவை நாகத்தை அவர் கை ஊடுருவக் குத்திற்று.

14 இதோ, இவை யாவும் அவர் செயல்களின் வெளிப்புறமே; அவற்றைப்பற்றி நாம் கேட்பதோ வெறும் மெல்லோசையே! அவர் வல்லமை இடி போல் முழங்கும் போது உணர்பவன் யார்!"

அதிகாரம் 27

1 தமது பேருரையை யோபு தொடர்ந்து ஆற்றினார்.

2 அவர் சொன்னதாவது: "எனக்கு நீதிவழங்க மறுத்த உயிருள்ள கடவுள் மேல் ஆணை! என் உள்ளத்தைக் கசப்பாக்கிய எல்லாம் வல்லவர் மேல் ஆணை!

3 எனக்குள் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் வரை, என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்குமளவும்,

4 என் உதடுகள் பொய்யுரை பேசமாட்டா, என் நாக்கு வஞ்சகத்தை உரைக்காது.

5 நீர் சொல்வது சரியென்று நான் சொல்லவே மாட்டேன், சாகும் வரை என் நேர்மையை நான் விடவே விடேன்.

6 என் நேர்மையைப் பற்றிக் கொள்வேன், விடவே மாட்டேன்; என் வாழ்நாளில் நான் தவறியதாக என் மனம் உறுத்தவே இல்லை.

7 என் பகைவன் பொல்லாதவனாய் எண்ணப்படட்டும், எனக்கெதிராய் எழுபவன் நேர்மையற்றவனாய்க் கருதப்படட்டும்.

8 ஏனெனில் இறைப்பற்றில்லாதவனைக் கடவுள் அழித்து, அவனுடைய உயிரை வாங்கும் போது, அவனுக்கு இருக்கும் நம்பிக்கை தான் என்ன?

9 அவனுக்குத் துன்பம் வரும் போது, அவன் கூக்குரலைக் கடவுள் கேட்பாரா?

10 எல்லாம் வல்லவரின் அவன் அகமகிழ்வானோ? எக்காலத்திலும் கடவுளைக் கூவியழைப்பானோ?

11 கடவுளின் கைவன்மை பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன், எல்லாம் வல்லவரின் எண்ணங்களை மறைக்க மாட்டேன்.

12 இதோ, இவற்றையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்; பின்னர் ஏன் வீணாக வாதாடுகிறீர்கள்?

13 பொல்லாதவனுக்குக் கடவுள் விதிக்கும் பங்கு இதுவே, கொடியவர்களுக்கு எல்லாம் வல்லவர் தரப்போகும் உரிமைச் சொத்து இதுவே:

14 அவன் மக்கள் பெருகிப் பலுகுவது வாளுக்கு இரையாகும்படியே; அவனுடைய சந்ததிக்குப் போதிய உணவு கிடைக்காது.

15 அவர்களில் எஞ்சியிருப்பவர்கள் கொள்ளை நோயால் மடிவர்; அவர்களுடைய கைம்பெண்கள் புலம்பி அழமாட்டர்கள்.

16 தூசியைப் போல் வெள்ளியை அவன் சேர்த்து வைத்தாலும், களிமண்ணைக் குவிப்பது போல், உடைகளை அடுக்கி வைத்தாலும்,

17 அவன் அடுக்கி வைத்தவை அவனல்ல, நீதிமான் ஒருவன் உடுத்திக் கொள்வான், வெள்ளியையோ மாசற்றவர்கள் பிரித்துக்கொள்வர்.

18 அவன் கட்டுகிற வீடு சிலந்திக்கூடு போன்றது, காவல் காரன் போடும் குடிசைக்குச் சமமானது.

19 பணக்காரனாக அவன் உறங்கப் போகிறான்; ஆனால் இனி முடியாது; அவன் கண்ணைத் திறக்கும் போது, செல்வம் போயிற்றெனக் காண்பான்.

20 திகில்கள் வெள்ளம் போல் அவனை விரட்டிப் பிடிக்கின்றன, இரவில் சுழற்காற்று அவனை வாரிப் போகிறது.

21 கீழைக்காற்று அவனைத் தூக்கிச் செல்கிறது, அவனைக் காணோம்; அவனிடத்திலிருந்தே அவனை அடித்துச் செல்லுகிறது.

22 இரக்கமின்றிக் கடவுள் அவன் மேல் அம்பு எய்கிறார், தலைதெறிக்க அவன் அவர் கையினின்று தப்பியோடுகிறான்.

23 கை கொட்டி அவர் அவனை ஏளனம் செய்வார், தம் இடத்தினின்றும் அவனைப் பார்த்துச் சீழ்க்கையடிப்பார்.

அதிகாரம் 28

1 வெள்ளிக்கு விளைவிடம் உண்டு, பொன்னுக்குப் புடம்போடும் இடமுண்டு.

2 இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படுகிறது, செம்பு கல்லிருந்து உருக்கியெடுக்கப்படுகிறது.

3 இருளையும் மனிதர்கள் ஓட்டி விட்டு, எட்டின மட்டும் மண்ணில் வெட்டிச் சென்று இருட்டிலும் காரிருளிலும் உலோகங்களைத் தேடுகின்றார்கள்.

4 மனிதர்கள் வாழுமிடத்திற்குத் தொலைவிலுள்ள பள்ளத்தாக்குகளில் சுரங்கங்கள் தோண்டுகிறார்கள்; மேலே நடமாடுவோர் அவர்களை நினைக்க மாட்டார்கள், மனிதரில்லா இடத்தில் கயிறு கட்டி இறங்கிப் பாறைகளில் வேலை செய்கிறார்கள்.

5 மேலே உணவுப் பொருட்கள் விளைகின்ற அந்த நிலத்திலோ கீழே நெருப்பினால் கொதித்துக் கொண்டிருக்கின்றது.

6 அதன் கற்களில் நீலமணிகள் கிடைக்கின்றன, அதிலே பொன் தூளும் அகப்படுகிறது.

7 ஆங்குப் போகும் வழி பறவைகளுக்குத் தெரியாது, கழுகின் கண் கூட அதைக் கண்டதில்லை.

8 செருக்குற்ற மிருகங்கள் அதன்மேல் நடந்ததில்லை, சிங்கமும் அவ்வழியில் சென்றதில்லை.

9 கடின பாறைகளிலும் மனிதன் தன் கையை வைக்கிறான், மலைகளையும் வேரொடு புரட்டி விடுகிறான்.

10 பாறைகளில் சுரங்க வழிகளைக் குடைகின்றான், விலையுயர்ந்த பொருள்களை அவன் கண் தேடுகிறது.

11 ஆற்றின் ஊற்றுகளையும் ஆய்ந்து பரிசோதிக்கிறான், மறைந்திருந்ததை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறான்.

12 ஆனால் ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் இருப்பிடம் எங்கே உள்ளது?

13 அதை அடையும் வழியை மனிதன் அறியான். வாழ்பவர்களின் உலகத்தில் அது கிடைக்காது.

14 என்னிடம் இல்லை' என்று பாதாளம் சொல்லுகிறது, 'என்னிடத்தில் கிடைக்காது' என்று கடல் கூறுகிறது.

15 பொன் கொடுத்து அதை வாங்க முடியாது, வெள்ளியை அதன் விலையாய் நிறுத்துத் தர முடியாது.

16 ஒப்பீரின் தங்கமும் அதற்கு ஈடாகாது, விலையுயர்ந்த கோமேதகமும் நீலமணியும் அதற்கு விலையாகாது.

17 பொன்னும் பளிங்கும் அதற்கு நிகரல்ல, பசும்பொன் நகைகளுக்கும் அதை மாற்ற முடியாது.

18 பவளமும் படிகமும் அதற்கு ஒப்பாகாது, ஞானத்தின் விலை முத்துக்களினும் உயர்ந்தது.

19 எத்தியோப்பியாவின் பஷ்பராகம் அதற்கு இணையாகாது, பத்தரை மாற்றுத் தங்கத்தாலும் அதை விலைமதிக்க முடியாது.

20 பின்னர், ஞானம் எங்கிருந்து வருகிறது? அறிவின் இருப்பிடம் எங்கே உள்ளது?

21 வாழ்வோர் அனைவரின் கண்ணுக்கும் அது மறைவாயுள்ளது, வானத்துப் பறவைகளுக்கும் மறைந்துள்ளது.

22 கீழுலகமும், சாவும், 'அதைப்பற்றிய வதந்தி எங்கள் காதுகளில் விழுந்தது' என்கின்றன.

23 அதற்குச் செல்லும் வழியைக் கடவுள் அறிவார், அது இருக்குமிடம் அவருக்குத் தெரியும்.

24 ஏனெனில் அவர் பார்வை மண்ணுலகின் எல்லை வரை எட்டுகிறது, வானத்தின் கீழுள்ள அனைத்தையும் அவர் காண்கிறார்.

25 காற்றுக்கு அதன் எடையை அவர் தந்த போது, தண்ணீரை முகந்து அளந்த போது, மழைக்குக் கட்டளை கொடுத்த போது,

26 இடி மின்னலுக்கு வழியை வகுத்த போது,

27 அவர் ஞானத்தைக் கண்டார், கண்டு அறிவித்தார்; அதை நிலை நாட்டினார், ஆய்ந்தறிந்தார்.

28 அதன்பின் அவர் மனிதனை நோக்கி, 'இதோ ஆண்டவரைப் பற்றிய அச்சமே ஞானம், தீமையை விட்டு விலகுவதே அறிவு' என்றார்."

அதிகாரம் 29

1 யோபு இன்னும் தொடந்து பேசினார்:

2 முன்னரே கடந்து சென்ற திங்கள்களிலும், கடவுள் என் மேல் அக்கறை வைத்திருந்த நாட்களிலும் நான் இருந்த இன்ப நிலை திரும்பவும் வந்தெய்துமோ?

3 அப்போது அவரது விளக்கு என் தலைக்கு மேல் சுடர் விட்டது, இருளிலும் அவரது ஒளியால் நான் நடந்தேன்.

4 கடவுளின் நட்பு என் கூடாரங்களில் நிலைத்திருந்த அந்த இன்ப நாட்களை இனி நான் காண்பேனா!

5 அப்போது எல்லாம் வல்லவர் என்னோடு இருந்தார், என் குழந்தைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.

6 அந்நாட்களில் என் கால்கள் நெய்யில் தோய்ந்திருந்தன, பாறையிலிருந்து எனக்காக எண்ணெய் ஆறாய் வழிந்ததே!

7 ஊர்ச்சபைக்கு நான் போன போதும் பொதுவிடத்தில் என் இருக்கையில் அமரச் சென்றாலும்,

8 இளைஞர்கள் என்னைக் கண்டு வழிபட்டனர், முதியவர்கள் என்னைக் கண்டு எழுந்து நின்றனர்.

9 பெருங்குடி மக்கள் பேசாமல் இருந்தனர், தங்கள் வாயில் கை வைத்து மௌனம் காத்தனர்.

10 பெருமக்கள் தங்கள் குரலையடக்கினர், அவர்களுடைய நாக்கு அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

11 என் புகழைக் கேட்டவன், என்னைப் பேறு பெற்றவன் என்றான், என்னைக் கண்ட கண் மலர்ச்சியுற்றது.

12 ஏனெனில் கூக்குரலிட்ட ஏழையையும் உதவி செய்வாரில்லாத அனாதையையும் நான் காத்தேன்.

13 சாகக் கிடந்தவர்களின் ஆசிமொழி எனக்குக் கிடைத்தது, கைம்பெண்ணின் உள்ளம் மகிழும்படி செய்தேன்.

14 நேர்மையை நான் ஆடையாய் உடுத்தியிருந்தேன், என் நீதி எனக்கு மேலாடையும் தலைப்பாகையுமாய் இருந்தது.

15 குருடனுக்குக் கண்ணாக இருந்தேன், முடவனுக்குக் காலாக இருந்தேன்.

16 ஏழைகளுக்குத் தந்தையாக இருந்தேன், அறிமுகமில்லாதவன் வழக்கையும் தீர ஆராய்ந்தேன்.

17 கொடியவர்களின் கோரைப் பற்களை உடைத்து, பற்களிடையில் அவர்கள் பிடித்திருந்த இரையை விடுவித்தேன்.

18 அந்நாட்களில், 'என் கூடாரத்தில் அமைதியாய் உயிர் துறப்பேன், மணல் மணி போல் என் நாட்கள் மிகுதியாகும்,

19 நீரருகே என் வேர்கள் படர்ந்திருக்கும், இரவெல்லாம் பனி நீர் என் இலைகளில் தங்கும்,

20 என் மகிமை நாளுக்கு நாள் வளரும், என் கையிலுள்ள வில் புது வலிமை பெறும்' என்றெல்லாம் நான் எண்ணியிருந்தேன்.

21 மனிதர் என் பேச்சைக் கேட்கக் காத்திருந்தனர், என் ஆலோசனையைக் கேட்க அமைதியாய் இருந்தனர்.

22 என் பேச்சுக்கு மறுபேச்சு அவர்கள் பேசவில்லை, ஒன்றொன்றாய் என் சொற்கள் அவர்கள் மேல் இறங்கின.

23 மழைக்குக் காத்திருப்பது போல் எனக்காகக் காத்திருந்தனர், பின்மாரியை எதிர்நோக்கி நிலம் வாய் திறப்பது போல் அவர்களும் எனக்காகக் காத்திருந்தனர்.

24 அவர்களைப் பார்த்து நான் புன்முறுவல் பூத்தபோது, 'அத்தகைய பேறு நமக்குக் கிடைத்ததோ' என ஐயுற்றனர், என் முகத் தோற்றத்தின் ஒளியைப் பெற ஏங்கிக் கிடந்தனர்.

25 நானே அவர்களுக்கு வழி காட்டினேன், தலைமை பூண்டேன்; படைகள் நடுவில் அரசன் போலும் அழுகிறவர்களைத் தேற்றுபவன் போலும் நான் வாழ்ந்தேன்.

அதிகாரம் 30

1 இப்பொழுதோ என்னிலும் இளையவர்கள் என்னைப் பழித்துக் காட்டி ஏளனம் செய்கிறார்களே, அவர்களுடைய பெற்றோரை என் கிடை நாய்களோடு ஒப்பிடவும் தகுதியற்றவர்கள் என்று முன்பு நான் எண்ணியிருந்தேன்.

2 அப்படிப்பட்டவர்களின் வலிமையால் எனக்கு என்ன நன்மை கிடைத்திருக்கக் கூடும்? அவர்கள் தான் வலிமையிழந்தவர்களாயிற்றே!

3 அவர்களோ உணவு பற்றாக்குறையாலும் பட்டினியாலும் நெருக்கப்பட்டு, வறண்ட பாலைநிலத்தில் அலைந்து, பாழாய்க்கிடக்கும் நிலத்தைச் சுரண்டி,

4 செடிகளையும் தழைகளையும் பிடுங்கித் தின்கிறார்கள், நாட்டுக் கிழங்குகளை உண்ணுகிறார்கள்.

5 மக்கள் நடுவிலிருந்து அவர்கள் விரட்டப்படுகிறார்கள், கள்ளரைக் கண்டு கூச்சலிடுவது போல் அவர்களைக் கண்டு மக்கள் கூச்சலிடுகிறார்கள்.

6 அவர்கள் காட்டாறுகளின் உடைப்புகளிலும், நிலத்தின் பள்ளங்களிலும், பாறையின் வெடிப்புகளிலும் வாழ்கிறார்கள்.

7 புதர்களின் நடுவில் கிடந்து புலம்புகிறார்கள், காஞ்சொறிச் செடிகளின் கீழே படுத்துக் கிடக்கிறார்கள்.

8 அவர்கள் மடையர்களின் பிள்ளைகள், கயவர்கள்; நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள்.

9 ஆனால் இப்பொழுது அவர்களுக்கு நான் வசைப்பாடலானேன், அவர்களுக்கு நான் பழிப்புரையானேன்.

10 அவர்கள் என்னை அருவருந்து அப்பால் விலகிப் போகிறார்கள், என்னைக் கண்டதும் என் முன் காறித் துப்பவும் தயங்குவதில்லை.

11 கடவுள் என் கட்டுகளை அவிழ்த்து, என்னைத் தாழ்த்தினதால், என் முன்னிலையில் அவர்கள் கடிவாளமற்ற குதிரைகளாயினர்.

12 கலகக்காரர்கள் என் வலப்பக்கத்தில் எழும்புகின்றனர், என்னை அவர்கள் நெட்டித் தள்ளுகின்றனர், என்னை அழிக்கும்படி வழிகளை வகுக்கின்றனர்.

13 என் வழிகளைக் கெடுக்கின்றனர், எனக்கு வரும் அழிவை விரைவு படுத்துகின்றனர், அவர்களைத் தடுப்பவன் எவனுமில்லை.

14 அகன்ற வெடிப்பின் வழியாய் வருவது போல் நுழைகின்றனர், இடிபாடுகளின் நடுவில் புரளுகின்றனர்.

15 திகில்கள் என்மேல் திருப்பப்படுகின்றன, காற்றில் அகப்பட்டது போல் என் உறுதி விரட்டப்படுகிறது, கார்மேகம் போல் என் வாழ்க்கை வளம் கடந்து போனது.

16 இப்பொழுது என் உயிர் என்னுள் சொட்டுச் சொட்டாய்ச் சிதறுகிறது, துன்பத்தின் நாட்கள் என்னைப் பற்றிக்கொண்டன.

17 இராப்பொழுதில் நோய் என் எலும்புகளைத் துளைக்கிறது, வேதனை ஓயாமல் என்னை அரித்துத் தின்கின்றது.

18 கெட்டியாய் என் ஆடைகளை அது பற்றிக்கொண்டது, கழுத்துப் பட்டை போல் என்னைச் சுற்றிக்கொண்டது.

19 கடவுள் என்னைச் சேற்றில் எறிந்து விட்டார், நான் புழுவும் சாம்பலும் போலானேன்.

20 உம்மை நோக்கிக் கூவுகிறேன், நீர் பதில் கொடுக்கிறதில்லை; நான் கெஞ்சி நிற்கிறேன், நீர் ஏறெடுத்தும் பார்க்கிறதில்லை.

21 என் மட்டில் நீர் கொடுமையுள்ளவராய் மாறினீர், உம் கையில் வல்லமையால் என்னைத் துன்புறுத்துகிறீர்.

22 என்னைத் தூக்கிக் காற்றில் பறக்க விடுகிறீர், புயலின் சீற்றத்தில் என்னை அலைக்கழிக்கிறீர்.

23 ஆம், என்னை நீர் சாவுக்கே இட்டுச் செல்கிறீர் என்று அறிவேன், வாழ்வோர் அனைவர்க்கும் குறிக்கப்பட்ட இடம் அதுவே.

24 ஆயினும் இடிபாடுகளின் நடுவிலும் ஒருவன் கையுயர்த்தி, அழிவின் நடுவில் உதவிக்காகக் கூவுகிறானன்றோ?

25 துன்புற்ற ஒருவனுக்காக நான் அழுததில்லையோ? ஏழைக்காக என்னுள்ளம் வருந்தவில்லையோ?

26 ஆனால், நான் நன்மை தேடிய போது, தீமையே வந்தது, ஒளியை எதிர்பார்த்த போது, இருளே கவ்வியது,

27 என் உள்ளம் கொதிக்கிறது, அமைதியில்லை; வேதனை நாட்கள் என்னை எதிர்கொண்டு வருகின்றன.

28 சோகமே வடிவாய்த் திரிகிறேன், ஆறுதலே இல்லை; சபை நடுவில் எழுந்து உதவிக்காகக் கதறுகிறேன்.

29 குள்ளநரிகளுக்கு உடன்பிறப்பானேன், தீக்கோழிகளுக்குத் தோழனாய் இருக்கிறேன்.

30 என் தோல் கறுப்பாகி, உரிந்து விழுகிறது; வெப்பத்தால் என் எலும்புகள் தீய்கின்றன.

31 எனது யாழோசை புலம்பலாய் மாறி விட்டது. எனது குழலிசை அழுகுரலைப் போல் ஆகிவிட்டது.

அதிகாரம் 31

1 கன்னிப்பெண் எவளையும் நோக்காதிருக்க என் கண்களோடு நான் ஒப்பந்தம் செய்திருக்கிறேன்.

2 உன்னதத்திலிருக்கும் கடவுளிடமிருந்து எனக்கு என்ன பங்கு கிடைக்கும்? விண்ணிலிருந்து எல்லாம் வல்லவர் என் உரிமைச் சொத்தாய் எதைத் தருவார்?

3 நேர்மையற்றவர்களுக்கு இடுக்கண் அன்றோ விளைகிறது? அக்கிரமம் செய்வோருக்கு அழிவன்றோ நேருகிறது?

4 என் வழிகளை அவர் பார்க்கிறார் அல்லவா? என் காலடிகளை எல்லாம் கணக்கிடுகின்றாரன்றோ?

5 பொய்ம்மை நெறியில் நான் நடந்திருந்தால், வஞ்சகம் செய்ய என் கால் விரைந்திருந்தால்,

6 சமன் செய்து சீர்தூக்கும் கோலில் நான் நிறுக்கப்படுக! அப்போது கடவுள் என் மாசின்மையை அறிவார்.

7 நெறியினின்று என் கால் பிறழ்ந்திருந்தால், என் கண்களைப் பின்பற்றி என் உள்ளம் சென்றிருந்தால், என் கைகளில் ஏதேனும் மாசு ஏற்பட்டிருந்தால்,

8 நான் விதைப்பதை இன்னொருவன் உண்டு போகட்டும், எனக்கென்று வளர்வது வேரோடு பிடுங்கப்படட்டும்!

9 பிறன் மனைவியைக் கண்டு என்னுள்ளம் மயங்கியிருந்தால், அயலான் வீட்டு வாயிலில் நான் காத்துக் கிடந்திருந்தால்,

10 பிறனொருவனுக்கு என் மனைவி மாவரைக்கட்டும், மற்றவர்கள் அவள் தோளை முயங்கட்டும்.

11 ஏனெனில் அது பழிச்செயலாகவும், தண்டனைக்குரிய அக்கிரமமாயும் இருந்திருக்கும்;

12 கீழுலகம் வரை சுட்டெரிக்கும் தீயாய் இருந்து, என் விளைச்சல்களையெல்லாம் அது வேரோடு எரித்திருக்கும்.

13 என் வேலைக்காரனோ வேலைக்காரியோ என் மேல் வழக்குத் தொடுத்து, அவ்வழக்கை நான் அசட்டை செய்து தள்ளியிருந்தால்,

14 கடவுள் தீர்ப்பிட எழுந்து வரும் போது நான் என்ன செய்வேன்? அவர் விசாரணை நடத்தும் போது என்ன பதில் கொடுப்பேன்?

15 என்னைத் தாய் வயிற்றில் உண்டாக்கியவர் தானே அவனையும் உண்டாக்கினார்? தாய் வயிற்றில் எங்களை உருவாக்கியவர் ஒருவரே அன்றோ?

16 ஏழைகள் விரும்பிக் கேட்டதை நான் தராமாற் போயிருந்தால், கைம்பெண்ணின் கண்கள் மங்கிப் போகச் செய்திருந்தால்,

17 திக்கற்றவனுக்கு உணவில் பங்கு தராமல், நான் மட்டும் தனியாய் அதை உண்டிருந்தால்,

18 (ஏனெனில் சிறுவயது முதல் அவனுக்குத் தந்தையாயிருந்து வளர்த்தேன், தாய் வயிற்றிலிருந்தே அவனை நடத்தி வந்தேன்),

19 ஆடையின்றி எவனாவது அழிவதை நான் கண்டிருந்தால், ஏழையொருவன் போர்வையின்றி இருப்பதைப் பார்த்திருந்தால்,

20 ஆடையுடுத்தப் பெற்ற அவன் இடை என்னை வாழ்த்தாதிருந்தால், எனது ஆட்டு மயிராடையால் அவன் குளிர் போக்கப்படாதிருந்தால்,

21 ஊர்ச்சபையில் எனக்குச் செல்வாக்கு உண்டெனக் கண்டு, திக்கற்றவர்களுக்கெதிராய் நான் கையோங்கியிருந்தால்,

22 என் தோள்பட்டை தோளிலிருந்து விழுந்து போகட்டும், மூட்டினின்று என் கை முறிந்து போகட்டும்.

23 ஏனெனில் கடவுள் அனுப்பும் வேதனைக்காக அஞ்சி நடுங்கினேன், அவரது மகிமையின் முன் என்னால் நிற்கவே முடியவில்லையே.

24 பொன்னில் என்னுடைய நம்பிக்கையை வைத்திருந்தால், தங்கம் என் உறுதுணை என்று நம்பியிருந்தால்,

25 எனக்குச் செல்வம் மிகுதியாய் இருந்ததாலும், என் கை மிகுதியாய்ச் சேர்த்ததாலும் நான் மகிழ்ந்திருந்தால்,

26 ஒளி வீசும் கதிரவனைக் கண்ணால் நோக்கி, சுடர் நடுவில் அசையும் நிலவைப் பார்த்து,

27 என் உள்ளம் மறைவிலே மயங்கியிருந்தால், என் வாய் என் கையை முத்தமிட்டிருந்தால்,

28 இதுவும் தண்டனைக்குரிய அக்கிரமமாய் இருந்திருக்கும்; ஏனெனில் அது உன்னத கடவுளை நான் மறுதலித்ததாகும்.

29 என்னைப் பகைத்தவனின் அழிவைக் கண்டு நான் மகிழ்ந்ததுண்டோ? தீமை அவனைத் தாவிப் பிடித்த போது நான் அக்களித்தேனா?

30 சாபனையால் அவன் உயிரை வாங்கும்படி கேட்டு, என் வாய் பாவம் செய்ய நான் விடவேயில்லை;

31 அவன் தரும் புலாலுணவைப் புசியாதவன் உண்டோ?' என்று என் கூடாரத்தில் இருந்தவர்கள் சொல்லாதிருந்தார்களோ?

32 வெளி ஊரான் எவனுமே வீதியில் தங்கியதில்லை, வழிப்போக்கனுக்கு என் கதவுகளைக் திறந்துவிட்டேன்;

33 என் அக்கிரமத்தை என் உள்ளத்திலேயே ஒளித்து வைத்து, என் மீறுதல்களை மனிதரிடமிருந்து நான் மறைத்ததுண்டோ?

34 மக்கள் கூட்டத்திற்கு மிகவும் அஞ்சி, சொந்த இனத்தாரின் இகழ்ச்சிக்கு அஞ்சி மவுனமாயிருந்ததுண்டோ? அல்லது வீட்டுக்குள்ளேயே இருந்ததுண்டோ?

35 ஐயோ! என் வழக்கை யாரேனும் கேட்கும் வரம் எனக்குக் கிடைக்காதா? இதோ இருக்கிறது என் கையொப்பம், எல்லாம் வல்லவர் எனக்கு மறுமொழி கூறட்டும்! என் எதிராளி எனக்கெதிராய்க் கொண்டுள்ள வழக்கை எழுதி என் கையில் கொடுத்தால் நலமாயிருக்குமே!

36 அதனை என் தோள் மீது சுமந்து செல்வேன், மணி முடியாக என் மேல் சுற்றிக் கட்டிக் கொள்வேன்.

37 என் நெறிகளை ஒவ்வொன்றாய் எடுத்துரைப்பேன், ஓர் இளவரசனைப் போல் நான் அவனை அணுகிடுவேன்.

38 எனது நிலம் எனக்கெதிராய்க் கூக்குரலிட்டு அதன் படைசால்கள் ஒன்று கூடி அழுதிருந்தால்,

39 கூலி கொடாமல் அதன் விளைவை நான் உண்டிருந்தால், அதன் உரிமையாளர்களின் சாவுக்கு நான் சதி செய்திருந்தால்,

40 கோதுமைக்குப் பதிலாக முட்கள் வளரட்டும், வாற் கோதுமைக்குப் பதிலாக வேண்டாத களைகள் முளைக்கட்டும்". இத்துடன் யோபுவின் வார்த்தைகள் முடிவுற்றன.

அதிகாரம் 32

1 யோபு தன்னை நீதிமான் என்று சாதித்துப் பேசுவதைக் கண்டு, அந்த மூன்று நண்பர்களும் வாதாடுவதை நிறுத்தி விட்டனர்.

2 அப்போது பூத்சி நகரத்தானும் ராமின் குலத்தானுமாகிய பாரக்கேலுடைய மகன் எலியூ என்பவன் சினங்கொண்டான். கடவுளுக்கு எதிராகத் தன்னை நீதிமான் என்று யோபு சாதித்துப் பேசினதால், எலியூ யோபின் மேல் சினங்கொண்டான்.

3 யோபின் மூன்று நண்பர்கள் மேலும் அவன் கோபங்கொண்டான். ஏனெனில் யோபு குற்றவாளி என்று தீர்ப்பிட்டார்களேயன்றி, அதற்குரிய காரணத்தை அவர்கள் காட்டவில்லை.

4 பேசிக் கொண்டிருந்தவர்கள் தன்னை விட வயதில் பெரியவர்களாதலால், யோபின் பேச்சு முடியும் வரை எலியூ காத்திருந்தான்.

5 ஆனால் அந்த மூவராலும் மறுமொழி சொல்ல இயலவில்லை என்பதைக் கண்ட எலியூ ஆத்திரமடைந்தான்.

6 ஆகவே, பூத்சி நகரத்தானாகிய பாரக்கேலின் மகன் எலியூ மறுமொழி சொல்லத் தொடங்கினான். "நான் வயதில் இளையவன், நீங்களோ வயதில் பெரியவர்கள்; ஆதலால் என் கருத்தை உங்களிடம் சொல்ல அஞ்சித் தயங்கிக் கொண்டிருந்தேன்.

7 'முதியோர் பேசட்டும், வயது சென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும்' என்றிருந்தேன்.

8 ஆனால் கண்டறியும் ஆற்றலை மனிதனுக்குத் தருவது அவனுள் இருக்கும் ஆவியே- எல்லாம் வல்லவரின் மூச்சே.

9 வயதானவர் அனைவருமே ஞானிகள் என்று சொல்ல முடியாது, முதியோர் எல்லாருமே நீதியை உணர்ந்தவர்கள் என்பதில்லை.

10 ஆதலால் தான், நான் சொல்வதைக் கேளுங்கள் என்கிறேன்; என் அறிவை உங்களுக்குக் காட்டப் போகிறேன்.

11 இதோ, என்ன சொல்லலாம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்த போது, உங்கள் சொற்களைக் கேட்க நான் காத்திருந்தேன், உங்கள் ஞான வாக்குகளுக்குச் செவிமடுத்தேன்.

12 நீங்கள் சொல்லியவற்றை நான் கவனித்து வந்தேன்: இதோ, யோபுவுக்கு அவரது குற்றத்தை எண்பிக்கவோ அவர் சொற்களுக்கு மறுமொழி சொல்லவோ, உங்களுள் ஒருவருமிலர்.

13 நாங்கள் ஞானத்தைக் கண்டு பிடித்து விட்டோம், யோபுவை மேற்கொள்பவர் கடவுள்தான், மனிதல்லன்' என்று நீங்கள் சொன்னால் அது பொருந்தாது.

14 என்னை நோக்கி யோபு தன் சொற்களைப் பேசவில்லை, உங்கள் மறுமொழிகளைப் போல் நான் மறுமொழி சொல்லேன்.

15 அவர்கள் சிந்தை குலைந்தனர், மறுமொழி பேசுகிறதில்லை. பேச அவர்களுக்கு வார்த்தை வரவில்லை.

16 அவர்கள் பேசாதிருப்பதாலும், மறுமொழி சொல்லாமல் நிற்பதாலும், இன்னும் நான் காத்திருப்பேனோ?

17 நானும் எனது மறுமொழியைக் கூறுவேன், நானும் எனது கருத்தை வெளிப்படுத்துவேன்.

18 சொல்ல வேண்டியது என்னிடம் நிரம்ப உள்ளது, என்னுள்ளிருக்கும் ஆவி என்னை நெருக்கி உந்துகிறது.

19 இதோ, அடைபட்ட இரசம் போல் உள்ளது என் உள்ளம், புது இரசமடைத்த சித்தை போல் வெடிக்கப் பார்க்கிறது.

20 அமைதி கிடைக்க நான் பேசியே தீரவேண்டும், உதடுகளைத் திறந்து பதில் சொல்லியாக வேண்டும்.

21 ஆளுக்குத் தக்கபடி ஓரவஞ்சனையாய்ப் பேச மாட்டேன். எவனுக்கும் முகமன் கூறிப் புகழமாட்டேன்.

22 ஏனெனில் போலிப் புகழ்ச்சி பேச எனக்குத் தெரியாது, அப்படிச் செய்தால் என்னைப் படைத்தவர் விரைவில் என்னை அழித்து விடுவார்.

அதிகாரம் 33

1 யோபுவே, நான் சொல்வதைச் செவிமடுத்துக் கேளும், என் சொற்களையெல்லாம் கூர்ந்து கவனியும்.

2 இதோ, நான் பேசத் தொடங்குகிறேன், என்னுடைய நாக்கு இப்பொழுது பேசும்.

3 என் உள்ளத்தின் நேர்மையை என் சொற்கள் வெளிப்படுத்தும், அறிந்ததை என் உதடுகள் நேர்மையாய்ப் பேசும்.

4 கடவுளின் ஆவி என்னை உண்டாக்கிற்று, எல்லாம் வல்லவரின் மூச்சு எனக்கு உயிரளிக்கிறது.

5 உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி சொல்லும், என்னை எதிர்த்துப் பேசத் தயாராக நில்லும்.

6 இதோ, கடவுள் முன்னிலையில் நீரும் நானும் சமமே, நானும் களிமண்ணால் உண்டாக்கப்பட்டவன் தான்.

7 ஆதலால் என்னைக் கண்டு நீர் அஞ்சித் திகிலுற வேண்டாம், என் கை உம்மீது பழுவாய் விழாது.

8 நான் கேட்கும்படி வெளிப்படையாய் நீர் பேசினீர், உம் சொற்கள் என் செவிகளில் விழுந்தன.

9 நீரோ, 'நான் குற்றமற்றவன், சுத்தமானவன், என்னிடம் அக்கிரமமில்லை, நான் மாசற்றவன்.

10 அவரோ, என்னிடம் குற்றம் பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தம் பகைவனாகக் கருதுகிறார்.

11 என் கால்களைத் தொழுவிலே மாட்டுகிறார், என் வழிகளனைத்தையும் கவனிக்கிறார்' என்கிறீர்.

12 இப்படிச் சொன்னது தான் நீர் செய்த குற்றம்; மனிதனை விடக் கடவுள் பெரியவர்- இது என் பதில்.

13 என் சொற்களில் ஒன்றுக்கும் அவர் பதில் சொல்லவில்லை' என்று சொல்லி அவரோடு நீர் வழக்காடுவதேன்?

14 கடவுள் முதலில் ஒரு வகையில் பேசுகிறார், பிறகு இன்னொரு வகையில் பேசுகிறார், இதை யாரும் கவனிக்கிறதில்லை.

15 எல்லா மனிதர்களும், ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் போது, அவர்கள் தங்கள் படுக்கைகளில் தூங்கும் போது, இரவுக்காட்சியில்- கனவில்,

16 கடவுள் மனிதரின் காதுகளைத் திறக்கிறார், எச்சரிக்கைகளால் அவர்களை அச்சுறுத்துகிறார்.

17 தீச்செயலை விட்டு மனிதனைத் திருப்பிடவும், மனிதனிடமிருந்து செருக்கைத் தொலைக்கவும் இப்படிச் செய்கிறார்.

18 படுகுழியில் விழாதபடி அவன் ஆன்மாவை இவ்வாறு காக்கிறார், அவனுயிர் வாளால் மடியாதபடி பார்த்துக் கொள்ளுகிறார்.

19 நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் படும் வேதனையாலும், மனிதனைக் கடவுள் தண்டித்துத் திருத்துகிறார். அப்போது எலும்புகள் இடைவிடாது நடுங்குகின்றன.

20 மனிதன் உணவையே அருவருக்கிறான், சுவையான உணவும் அவன் நாவுக்குக் கசக்கிறது.

21 அவன் எலும்பும் தோலுமாய் மெலிந்து போகிறான், அவன் எலும்புகள் கண்ணுக்குப் புலப்படுகின்றன.

22 படுகுழியை நோக்கி அவன் ஆன்மா நெருங்குகிறது, கொலைஞரை அவன் உயிர் அணுகுகிறது.

23 அவ்வாறு மனிதன் வேதனைப்படும் பொழுது ஆயிரம் பேர்களுள் ஒரே ஒரு தூதர் அவன் பக்கம் நின்று, அவன் குற்றமற்றவன் என்று அவன் சார்பாகப் பேசி,

24 அவனிடத்தில் பரிவுகாட்டி, 'படுகுழிக்குப் போகாமல் அவனைக் காப்பாற்றும், அவனது விடுதலைக்கான விலையைப் பெற்றுக் கொண்டேன்.

25 அவன் உடல் இளமை கொழித்து விளங்கட்டும், இளமையின் துடிப்புமிக்க நாட்களுக்கு அவன் திரும்பிப் போகட்டும்' என்று சொல்லுவாரானால்,

26 அப்போது, மனிதன் கடவுளிடம் மன்றாட அவர் கேட்டருள்கிறார்; மகிழ்ச்சியோடு அவர் திருமுன் வருகிறான், அவரோ அவனுக்கு மீட்பளிக்கிறார்.

27 அவனோ மனிதர்கள் முன்னிலையில் மகிழ்ந்து பாடி, 'நேர்மையானதைக் கோணலாக்கிப் பாவஞ் செய்தேன்,

28 ஆயினும் அதற்கேற்ப நான் தண்டனை பெறவில்லை; படுகுழிக்குப் போகாமல் என் ஆன்மாவை அவர் காத்தருளினார், என் உயிரும் ஒளியைக் காணும்' என்கிறான்.

29 இதோ, கடவுள் தான் மனிதனுக்கு இதெல்லாம் செய்கிறார், இருமுறை மும்முறையும் செய்து வருகிறார்.

30 படுகுழியிலிருந்து அவன் ஆன்மாவைத் திரும்பக் கொணரவும், வாழ்வின் ஒளியை அவன் காணச் செய்யவும் இவ்வாறு செய்கிறார்.

31 யோபுவே, நான் சொல்வதைக் கவனித்துக் கேளும், மவுனமாயிரும், நான் பேசுகிறேன்.

32 சொல்வதற்கு ஏதேனுமிருந்தால் மறுமொழி கூறும், பேசும், உம் குற்றமின்மையை நிலை நாட்டுவதே என் விருப்பம்.

33 இல்லையேல், நான் சொல்வதைக் கவனமாய்க் கேளும், மவுனமாயிரும், உமக்கு நான் ஞானத்தைக் கற்பிப்பேன்."

அதிகாரம் 34

1 எலியூ தன் பேருரையைத் தொடர்ந்தான்:

2 ஞானிகளே, என் சொற்களைக் கேளுங்கள், அறிஞர்களே, எனக்குச் செவிசாயுங்கள்.

3 நாக்கு உணவைச் சுவைப்பது போல், சொற்களைச் செவி சுவைத்துணருகிறது.

4 சரியானதை நாம் தேர்ந்து கொள்வோம், நன்மை எது என்பதை நமக்குள் தீர்மானிப்போம்.

5 ஏனெனில் யோபு, 'நான் மாசற்றவன், கடவுளோ என் நியாயத்தைத் தள்ளிவிட்டார்;

6 நியாயம் என் பக்கம் இருந்தும், நான் பொய்யனானேன்; குற்றமில்லாதிருந்தும், ஆறாக்காயத்துக்கு ஆளானேன்' என்றாரே.

7 ஏளனத்தைத் தண்ணீரைப் போல் பருகும் யோபுவையொத்த மனிதன் எவனாவதுண்டோ?

8 அவரைப் போல், தீமை செய்பவரின் கூட்டத்தோடு சேர்ந்து, கொடியவர்களுடன் திரிபவன் எவனாவதுண்டோ?

9 ஏனெனில், 'கடவுளிடம் மகிழ்ந்திருப்பதால், மனிதனுக்குத் தினைத்துணையும் பயனில்லை' என்றாரே.

10 ஆதலால், உணரும் உள்ளம் படைத்தவர்களே, செவிசாயுங்கள்; கொடுமை செய்தல் என்பதே கடவுளிடம் கிடையாது. தீமை என்பதே எல்லாம் வல்லவரிடம் இருக்க முடியாது.

11 ஏனெனில் ஒருவன் செயலுக்கேற்பவே அவர் பலனளிக்கிறார், அவன் நெறிகளுக்குத் தக்கபடியே அவனுக்கு எதுவும் நேருகிறது.

12 கொடுமை எதுவும் கடவுள் செய்யமாட்டார், இது உண்மை; எல்லாம் வல்லவர் நியாயத்தை மீறி நடக்கமாட்டார்.

13 உலகத்தை அவர் பொறுப்பில் ஒப்புவித்தவன் யார்? உலக முழுவதையும் அவர்மேல் சுமத்தியவன் யார்?

14 அவர் தமது ஆவியைத் தம்மிடமே திரும்ப எடுத்துக்கொண்டால், தமது மூச்சைத் தம்மிடம் மீண்டும் கூட்டிக் கொண்டால்,

15 உயிருள்ள யாவும் ஒருங்கே அழிந்து போகும், மனிதனோ மீண்டும் மண்ணாய்ப் போவான்.

16 அறிவாற்றல் உமக்கிருந்தால் இதைக்கேளும், நான் சொல்வதைக் கூர்ந்து கவனியும்.

17 நீதியைப் பகைப்பவர் ஆளக் கூடுமோ? நேர்மையும் வலிமையும் கொண்டவர்மேல் குற்றம் சுமத்துவீரோ?

18 அவர் அரசனைப் பார்த்து, 'ஒன்றுக்கும் உதவாதவனே' என்றும், பெருங்குடி மக்களிடம், 'கொடியவர்களே' என்றும் சொல்லுகிறார்;

19 தலைவர்களை அவர் ஓரவஞ்சனையால் நடத்துகிறதில்லை, ஏழைகளை விடச் செல்வர்களை அவர் மிகுதியாய் மதிக்கிறதில்லை; ஏனெனில் அவர்களனைவரும் அவருடைய கை வேலைகளே.

20 ஒரு நொடியில் அவர்கள் செத்துப் போகிறார்கள், செல்வச் சீமான்களும் நள்ளிரவில் அதிர்ச்சியுற்று இறக்கிறார்கள், கண் காணாக் கையால் கொடியவர்களும் அகற்றப்படுகின்றனர்.

21 ஏனெனில், அவர் கண்கள் மனிதனின் வழிகளைக் காண்கின்றன. அவன் காலடிகளையெல்லாம் அவை பார்க்கின்றன.

22 தீமை செய்பவர்கள் தங்களை ஒளித்துக் கொள்ளக்கூடிய இருட்டோ காரிருளோ எங்கும் இல்லை.

23 ஏனெனில் தீர்ப்பு பெறக் கடவுள்முன் போவதற்கு எவனுக்கும் நேரம் அவர் குறிப்பிடவில்லை.

24 விசாரணை இன்றியே அவர் பெரியோர்களை நொறுக்குகிறார், அவர்களது இடத்தில் மற்றவர்களை ஏற்படுத்துகிறார்.

25 இவ்வாறு, அவர்கள் செய்கைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு, இரவில் அவர்களை விழத்தாட்டுகிறார், அவர்களோ நொறுக்கப்படுகின்றனர்.

26 மனிதர்கள் முன்னிலையிலேயே அவர்களை அவர் அவர்களுடைய அக்கிரமத்திற்காகத் தண்டிக்கிறார்.

27 அவரைப் பின்பற்றாமல் அவர்கள் விலகிப்போய், அவருடைய நெறிகளை அவர்கள் பொருட்படுத்தாததால்,

28 ஏழைகள் அவர்களுக்கு எதிராய் அவரிடம் கூக்குரலிட்டனர், தாழ்ந்தோரின் அழுகுரல் அவர் செவிகளுக்கு எட்டிற்று,

29 ஆயினும் அவர் கவலைப்படவில்லை, எதுவும் அவரை அசைக்காது; தம் முகத்தை மறைத்துக் கொள்ளுகிறார், யாரும் அவரைக் காண்பதில்லை' என்று சொல்லக்கூடும். ஆயினும் மக்கள் மேலும் மக்களினங்கள் மேலும் அவர் இரங்குகிறார்.

30 வேதனையின் கண்ணிகளினின்று இறைப்பற்றில்லாதவனை விடுவிக்கிறார்.

31 அப்படிப்பட்டவன் கடவுளைப் பார்த்து, 'நான் தவறான நெறியில் நடத்தப்பட்டேன், இனி நான் பாவஞ் செய்யேன்;

32 நான் தவறு செய்திருந்தால் அதை எனக்குச் சொல்லும், நான் அக்கிரமம் செய்திருந்தால், இனி நான் செய்யேன்' என்று சொல்வானாகில், -

33 அப்பொழுதும் அவனை அவர் தண்டிக்க வேண்டுமென நீர்- அவருடைய தீர்மானங்களைப் புறக்கணிக்கும் நீர்- நினைக்கிறீரோ? இவ்வாறு முடிவு கூறுவது நானல்லேன், நீரேயாதலால், எங்கள் அனைவருக்கும் உம் அறிவை வழங்கும்.

34 அறிவுள்ளவன் எவனும், எனக்குச் செவிமடுப்போருள் ஞானம் படைத்தவன் எவனும் கூறுவது இதுவே:

35 யோபுவின் பேச்சில் ஞானமே இல்லை, அவர் சொற்களில் ஞானம் புலப்படவில்லை;

36 இறுதி வரை யோபுவைச் சோதனைக்குட்படுத்துங்கள், ஏனெனில் தீய மனிதரைப் போல் தான் அவரும் வாதாடுகிறார்!

37 தம் முன்னைய பாவத்துடன் இறைவனை எதிர்த்து இன்னொரு பாவத்தையும் சேர்த்துவிட்டார்; நம் நடுவில் அவர் நீதியையே எதிர்த்துக் கேள்வி விடுக்கிறார், கடவுள் மேல் பழிச்சொற்களைக் கொட்டுகிறார்."

அதிகாரம் 35

1 எலியூ தொடர்ந்து பேசினான்:

2 நீர் கடவுளைப் பார்த்து, 'உமக்கென்ன? நான் பாவம் செய்தால், உமக்கென்ன செய்தேன்?' என்கிறீரே.

3 இப்படி நீர் சொல்வது சரியென நம்புகிறீரோ? கடவுள் முன் இது உம்மைக் குற்றமற்றவராக்கும் என்கிறீரோ?

4 உமக்கு நான் விடை கூறுவேன், உம் நண்பர்களுக்கும் மறுமொழி சொல்வேன்.

5 வான்வெளியை அண்ணாந்து நோக்கும், உமக்கு மேலே இருக்கும் மேகங்களைப் பாரும்.

6 நீர் பாவம் செய்தால் அவருக்கெதிராய் நீர் செய்வது என்ன? உம் அக்கிரமங்கள் பெருகுவதால், அவருக்கு நேரும் தீங்கு யாது?

7 நீர் நேர்மையாய் இருந்தால், அவருக்கு என்ன கிடைக்கும்? உம் கையிலிருந்து அவர் என்ன ?

8 உம் அக்கிரமத்தால் உம் போன்றவனுக்கே தீங்கு, மனிதனுக்குத் தான் உம் நேர்மையால் ஆதாயம்.

9 கொடுமைகளின் மிகுதியால் தான் மக்கள் கூக்குரலிடுகின்றனர், வல்லவனின் கைக்குத் தப்பவே உதவி கேட்டுக் கூப்பிடுகின்றனர்.

10 ஆனால், 'என்னை உண்டாக்கிய கடவுள் எங்கே? இரவில் பாடல்கள் பாடச் செய்பவரும்,

11 காட்டு மிருகங்களுக்குக் கற்பிப்பதை விட எங்களுக்கு மிகுதியாய்க் கற்பிப்பவரும், வானத்துப் பறவைகளை விட எங்களை ஞானிகளாக்குபவருமான கடவுள் எங்கே?' என்று எவனும் கேட்பதில்லை.

12 அப்போது அவர்கள் கூக்குரலிடுகின்றனர், ஆயினும் பொல்லாதவர்களின் செருக்கை முன்னிட்டு அவர் அதற்குச் செவிசாய்க்கிறதில்லை.

13 உண்மையில் வீண் சொற்களுக்குக் கடவுள் செவிமடுப்பதில்லை, எல்லாம் வல்லவர் அவற்றைப் பொருட்படுத்துகிறதில்லை.

14 அப்படியிருக்க, 'நான் அவரைக் காண்கிறதில்லை, என் வழக்கு அவர்முன் இருக்கிறது, அவருக்காக நான் காத்திருக்கிறேன்' என்று நீர் சொல்லும் போது, அதற்கு எப்படி அவர் செவிமடுப்பார்?

15 இப்பொழுது நீர், 'அவரது சினம் தண்டிப்பதில்லை, மனிதனின் மீறுதலை அவர் அறிவதில்லை போலும்' என்கிறீர்.

16 ஆதலால்தான் யோபு வாய் திறந்து உளறுகிறார், அறிவில்லாமல் சொற்களைக் கொட்டுகிறார்."

அதிகாரம் 36

1 எலியூ இன்னும் தொடர்ந்து பேசினான்:

2 கடவுள் சார்பில் நான் சொல்ல வேண்டியது இன்னும் கொஞ்சம் உள்ளது; ஆகவே சற்றுப்பொறுத்திருந்து கேளும், அதையும் உமக்கு வெளிப்படுத்துவேன்.

3 என் அறிவின் திறனை வெகு தொலைவினின்று பெறுவேன்; என்னை உண்டாக்கினவர் சரி என்பதையே எண்பிப்பேன்;

4 என் சொற்கள் பொய்யற்றவை என்பது உறுதி, உங்கள் நடுவில் பேசுபவன் அறிவு நிறைந்தவன்.

5 கடவுள் தான் பெரியவர், யாரையும் அவர் புறக்கணிப்பதில்லை; அறிவாற்றலில் அவர் வல்லவர்.

6 கொடியவர்களை அவர் உயிரோடு விட்டு வைக்க மாட்டார், துன்புறுத்தப் படுகிறவர்களுக்கு நீதி வழங்குகிறார்.

7 நீதிமான்கள் மேலிருந்து தம் பார்வையே அகற்றுகிறார் அல்லர், அரசர்களை அரியணையில் என்றென்றைக்கும் அமர்த்துகிறார், அவர்களும் உயர்வு பெறுகிறார்கள்.

8 ஆனால் அவர்கள் விலங்கிடப்படுவார்களாயின், அல்லது துன்பத்தின் கட்டுகளில் சிக்குண்டார்களானால்,

9 அவர்களுடைய செயல்களையும் மீறுதல்களையும் எடுத்துக்காட்டி, அவர்களுடைய இறுமாப்பான நடத்தையைத் தெரியப்படுத்துகிறார்.

10 அறிவுரைகளுக்கு அவர்களுடைய செவிகளைத் திறக்கிறார்; அக்கிரமத்திலிருந்து மனந்திரும்பக் கட்டளையிடுகிறார்.

11 அவர்கள் அதற்குச் செவிமடுத்து அவருக்கு ஊழியம் செய்தால், வளமான வாழ்வில் தங்கள் நாட்களையும், இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பார்கள்.

12 ஆனால் அவர்கள் செவிமடுக்காமற் போனால், வாளுக்கு இரையாகி மடிவார்கள், அறிவில்லாதவர்களாய்ச் சாவார்கள்.

13 பொல்லாத உள்ளத்தினர் தங்கள் சினத்தைப் பேணுகின்றார்கள், அவர்களை அவர் விலங்கிடும் போது, அவர்கள் உதவி கேட்பதில்லை;

14 ஆதலால் அவர்கள் இளமையிலேயே இறந்து போகிறார்கள், அவர்கள் வாழ்க்கை மானக்கேட்டில் முடிகிறது.

15 துன்புறுகிறவர்களை அவர்கள் துன்பத்தாலேயே மீட்கிறார், இடுக்கண் அனுப்பி அவர்களது செவியைத் திறக்கிறார்.

16 இப்பொழுது உம்மையும் வேதனையிலிருந்து இழுத்து விடப்போகிறார்; வளமான வாழ்வைத் தாராளமாய்த் துய்த்தீர்; உமது பந்தியில் கொழுமையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

17 ஆனால் முன்பு பொல்லாதவர் மீது நீர் தீர்ப்புச் செலுத்தவில்லை, திக்கற்றவனுக்கு உரிமை தராமல் வஞ்சித்தீர்.

18 இனிமேல் கையூட்டுகள் பெற்றுச் சீர்குலையாமல், செல்வப் பெருக்கினால் வழி தவறிப் போகாமல் எச்சரிக்கையாயிரும்.

19 பணமில்லாதவனையும் பணம் படைத்தவனையும், வலுவில்லாதவனையும் வலுவுள்ளவனையும் ஒருங்கே விசாரணைக்குக் கொண்டு வாரும்.

20 குடும்பத்தைச் சேராதவர்களை நசுக்கி, உம் உறவினரை அவர்களிடத்தில் வைக்காதீர்.

21 அக்கிரமத்திற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும், ஏனெனில் உம் கேட்டுக்கு அதுவே காரணம்.

22 இதோ, கடவுள் தம் வல்லமையில் மேன்மையானவர், ஆசிரியர்களுள் அவருக்கு நிகரானவர் யார்?

23 அவருக்கு வழிவகுத்துக் கொடுத்தவன் யார்? அல்லது, 'நீர் செய்தது தவறு' என்று அவரிடம் சொல்லக்கூடியவன் யார்?

24 மனிதர்கள் போற்றிப் பாடியுள்ள அவரது செயலை மேன்மைப்படுத்தக் கருத்தாயிரும்.

25 மனிதர் அனைவரும் அதைப் பார்த்துள்ளனர், மனிதன் அதைத் தொலைவிலிருந்து தான் காண்கிறான்.

26 இதோ கடவுள் பெரியவர், தம் அறிவுக்கு எட்டாதவர்; அவர் ஆண்டுகளின் கணக்கு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது.

27 நீர்த் துளிகளை அவர் முகந்து கொள்ளுகிறார், பனியை மழையாக வடித்தெடுக்கிறார்;

28 வானம் அவற்றைப் பொழிகிறது, மாரியாய் மனிதன் மேல் பெய்கின்றது.

29 மேகங்கள் பரவி விரிவதையும், அவரது கூடாரத்தின் முழக்கங்களையும் யார் ஆய்ந்தறிவார்?

30 இதோ, தம்மைச் சுற்றி மின்னலைப் பரப்புகிறார். கடலின் அடிப்படைகளை மூடி மறைக்கிறார்.

31 ஏனெனில் இவற்றால் தான் மக்களினங்களை அவர் தீர்ப்பிடுகிறார், ஏராளமாய் உணவுப் பொருளை விளைவிக்கிறார்.

32 மின்னலைத் தம் கைக்குள் சேர்த்து வைக்கிறார், குறிப்பிட்ட இலக்கை அழிக்கும்படி ஆணை தருகிறார்.

33 அக்கிரமத்திற்கு எதிராகக் கடுஞ்சினத்துடன் வெகுண்டெழுபவரைப் பற்றி இடிமுழக்கம் அறிவிக்கிறது.

அதிகாரம் 37

1 இதனால் என் இதயம் திகிலுறுகின்றது, தன் இடம் பெயர்ந்து துடிக்கிறது.

2 அவரது குரலின் இடியோசையைக் கவனியுங்கள், அவர் வாயிலிருந்து புறப்படும் முழக்கத்தைக் கேளுங்கள்.

3 வானத்தின் கீழ் எங்கணும் அது முழங்கும்படி விடுகிறார், உலகின் மூலைகளுக்கெல்லாம் அவரது மின்னல் செல்கிறது.

4 அதை தொடர்ந்து அவர் குரல் முழங்குகிறது; ஆற்றல் வாய்ந்த தம் குரலால் இடியோசை குமுறச் செய்கிறார். அவர் குரல் முழங்கும் போது, மின்னல்களைக் கட்டுப்படுத்துகிறதில்லை.

5 கடவுள் தம் குரலால் வியத்தகு வகையில் முழங்குகிறார், நாம் கண்டுபிடிக்க முடியாத பெரிய காரியங்களையும் செய்கிறார்.

6 அவர் உறைபனிக்கு, 'மண்மீது விழு' என்றும், தூறலுக்கும் மழைக்கும், 'கடுமையாய்ப் பெய்யுங்கள்' என்றும் கட்டளையிடும் போது,

7 மனிதர் அனைவரும் தங்கள் வேலையை நிறுத்திவிட்டு, தம்முடைய வேலையை அறியும்படி செய்கிறார்.

8 அப்பொழுது, மிருகங்கள் தங்கள் மறைவிடங்களுக்குப் போகின்றன, தங்கள் குகைகளில் தங்கியிருக்கின்றன.

9 தன் உறைவிடத்திலிருந்து சுழற்காற்று வெளிப்படுகிறது, வடக்கிலிருந்து குளிர் வருகிறது.

10 கடவுளின் மூச்சால் தண்ணீர் பனிக்கட்டியாகிறது, நீர்ப் பரப்பு உறுதியாய் உறைந்துபோகிறது.

11 நீர்த்துளியால் கார்மேகங்களை நிரப்புகிறார், மேகங்களோ அவரது மின்னலைச் சிதறுகின்றன.

12 மாநிலமேங்கும் அவர் கட்டளையிடுவதை எல்லாம் நிறைவேற்றும்படிக்கு அவர் காட்டும் பக்கமெல்லாம் அவை சுற்றிச் சுற்றித் திரும்புகின்றன.

13 உலகத்தின் மக்களினங்களைத் திருத்தவோ, இரக்கத்தைக் காட்டவோ அவற்றை அவர் அனுப்புகிறார்.

14 யோபுவே, இதையெல்லாம் நீர் கேளும்; கடவுளின் வியத்தகு செயல்களைச் சற்று ஆழ்ந்து சிந்தியும்.

15 கடவுள் எவ்வாறு அவரது மேகத்தை மின்னச் செய்கிறார் என்றும் உமக்குத் தெரியுமோ?

16 மேகங்கள் சமநிலையில் மிதப்பது எப்படி என்பது உமக்குத் தெரியுமா? அறிவு நிறைந்தவரின் வியத்தகு செயல்களை நீர் அறிவீரோ?

17 உம் ஆடைகள் உம் உடலில் வெப்பமாயிருக்கும் போது, மண்ணுலகம் வெப்பக் காற்றால் அசைவோ சந்தடியோ இல்லாதிருக்கும் போது,

18 வார்க்கப்பட்டு இறுகிய கண்ணாடி போன்ற வான் வெளியை அவரைப் போல் உம்மால் விரிக்க முடியுமோ ?

19 அவருக்குச் சொல்ல வேண்டியதை எங்களுக்குக் கற்பியும், நம்மையோ இருள் சூழ்ந்து கொண்டது.

20 நான் பேசுவது அவருக்கு அறிவிக்கப்படுகிறதா? மனிதன் சொல்வது அவருக்குத் தெரிவிக்கப்படுகிறதா?

21 காற்று வான்வெளியைத் தூய்மைப்படுத்தி விட்டபின், வானத்தில் ஒளியானது மிகுதியாய்ச் சுடரும் போது, மனிதர்களால் ஒளியை உற்று நோக்க முடியாது.

22 வடக்கிலிருந்து பொன்னொளி சுடர் வீசுகிறது, அச்சம் தரும் மகிமையைக் கடவுள் உடுத்தியுள்ளார்.

23 அவர் எல்லாம் வல்லவர், அவரை நாம் கண்டுபிடிக்க முடியாது; வல்லமையிலும் நேர்மையிலும் அவர் பெரியவர், நீதி நிறைந்த அவர் யாரையும் ஒடுக்க மாட்டார்.

24 ஆதலால் தான் மனிதர் அவருக்கு அஞ்சுகின்றனர், தாங்கள் ஞானிகள் என்று நினைக்கின்ற எவரையும் அவர் பொருட்படுத்துகிறதில்லை" என்று எலியூ கூறி முடித்தான்.

அதிகாரம் 38

1 அப்பொழுது ஆண்டவர் சுழற்காற்றின் நடுவினின்று யோபுவுக்கு கூறிய மறுமொழி பின்ருமாவறு:

2 அறிவில்லாத சொற்களால் நம் ஆலோசனையை இருளாக்கும் இவன் யார்?

3 வீரனைப் போல் உன் இடையை வரிந்து கட்டிக் கொள், நாம் உன்னை வினவுவோம், நீ விடைகூறு.

4 மண்ணுலகுக்கு நாம் அடிப்படையிட்ட போது நீ எங்கே இருந்தாய்? நீ அறிவாளியாயின், எனக்கு விடை கூறு.

5 அதன் அளவுகளைத் திட்டம் செய்தவர் யார்? தெரியுமா உனக்கு? அதன்மேல் அளவு நூலை நீட்டிப் பிடித்தவர் யார்?

6 அதனுடைய அடிப்படைகள் எதன் மேல் இடப்பட்டன? அதன் மூலைக் கல்லை நாட்டியவர் யார்?

7 அப்போது விடிவெள்ளிகள் ஒன்று கூடிப் பாட்டுப் பாடின, கடவுளின் புதல்வர்கள் அனைவரும் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்.

8 கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்த போது, கதவுகளிட்டு அதனை அடைத்தவர் யார்?

9 கார் மேகங்களை அதற்கு மேலாடையாய்த் தந்து, சுற்றிக்கிடத்தும் துணியாய்க் காரிருளைக் கொடுத்து,

10 எல்லைகளை அதற்கு நாம் ஏற்படுத்தி, கதவுகளும் தாழ்ப்பாள்களும் அதற்குப் பொருத்தி,

11 இதுவரையில் வா, இதைக் கடந்து வராதே, உன் கொந்தளிப்பின் இறுமாப்பு இங்கே அடங்கி நிற்கட்டும்' என்று நாம் சொன்ன போது நீ எங்கே இருந்தாய்?

12 நீ பிறந்த நாளிலிருந்து இன்று வரை என்றைக்காவது விடியற்காலையைப் புலரும் படி நீ கட்டளை இட்டதுண்டோ? வைகறைப் பொழுதுக்கு அதன் இடத்தை என்றும் நீ காட்டினாயோ?

13 அது நிலவுலகை மூடியுள்ள இருட்போர்வையை பிடித்துதறி பொல்லாதவர்களை அதினின்று உதிர்த்தது உன் ஆணையாலோ?

14 முத்திரையால் களிமண் உருபெறுவது போல், வைகறைப் பொழுதால் மண்ணுலகம் உரு பெறுகிறது; பலவண்ண ஆடை போல் நிலம் காணப்படுகிறது.

15 அப்போது பொல்லாதவர்களிடமிருந்து அவர்கள் ஒளி எடுக்கப்படுகிறது, ஓங்கியிருக்கும் அவர்கள் கை முறிக்கப்படுகிறது.

16 கடலில் ஊற்றுகளில் நீ நுழைந்து பார்த்திருக்கிறாயோ? கடலின் ஆழத்தில் நீ நடமாடியிருக்கிறாயோ?

17 சாவின் வாயில்கள் உனக்கு வெளிப்படுத்தப்பட்டனவோ? அடர்ந்த காரிருளின் கதவுகள் உனக்குப் புலப்பட்டதுண்டோ?

18 மண்ணுலகின் பரப்பை நீ கண்டுபிடித்து விட்டாயோ? இதெல்லாம் நீ அறிந்திருந்தால், விவரித்துச் சொல், பார்ப்போம்.

19 ஒளியின் இருப்பிடத்தை அடையும் வழி எது? இருள் இருக்கும் இடம் எங்கே இருக்கிறது?

20 அவற்றின் உறைவிடங்களுக்கு அவற்றை நீ கூட்டிச் செல்வாயோ? அவற்றின் இருப்பிடங்களுக்கு நீ வழி கண்டு சொல்வாயோ?

21 உனக்குத் தெரிந்திருக்குமே! நீ அப்பொழுதே பிறந்து விட்டாயே! உன் நாட்களின் எண்ணிக்கையும் பெரிதாயிற்றே!

22 பனிக்கட்டியின் பண்டசாலைக்குள் போயிருக்கிறாயோ? கல் மழையின் களஞ்சியங்களையுங் கண்டிருக்கிறாயோ?

23 குழப்பக் காலத்திற்கெனவும், போர், சண்டை நாட்களுக்கெனவும் அவற்றை நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.

24 வெளிச்சம் பகிர்ந்தளிக்கப்படும் இடத்திற்கு வழி யாது? மண்ணுலகின் மேல் கீழைக்காற்று பரப்பப்படும் இடம் எங்குள்ளது?

25 மனிதர் குடியிருப்பில்லாத நாட்டிற்கு மழை கொணர்ந்து, மனிதர் நடமாட்டமில்லாப் பாலை நிலத்தில் பெய்வித்து,

26 பாழ்வெளியையும், பாலை நிலத்தையும் நீரால் நிரப்பி, நிலம் பசும்புல்லை முளைப்பிக்கும்படி செய்வதற்காக,

27 பெருமழைக்கு வாய்க்கால்கள் வெட்டினவர் யார்? இடிமுழக்கம் குமுற வழிகாட்டினவர் யார்?

28 மழைக்குத் தந்தை உண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்?

29 யார் வயிற்றிலிருந்து பனிக்கட்டி பிறந்தது? வானத்திலிருந்து இறங்கும் உறைபனித் திரையைப் பெற்றவர் யார்?

30 தண்ணீர் கல்லைப் போல இறுகிப் போகிறது, ஆழ்கடலின் நீர்ப்பரப்பு உறைந்து போகிறது.

31 கார்த்திகை விண்மீன்களின் கட்டுகளை நீ கட்டுவாயோ? மிருகசீரிடத்தின் கயிறுகளை நீ அவிழ்க்க இயலுமோ?

32 விடிவெள்ளியைப் பருவந்தோறும் வெளிக் கொணர்வாயோ? சப்தரிஷி கணத்திற்கு உன்னால் வழிகாட்ட முடியுமோ?

33 வான்வெளியின் ஒழுங்கு முறைமைகளை அறிவாயோ? அவற்றின் ஆட்சியை உலகின் உன்னால் நிறுவ முடியுமோ?

34 நீர்த்தாரைகள் பெய்து உன்னை மறைக்கும்படி, கார் மேகங்கள் வரை உன் ஆணை செல்லும்படி நீ செய்வாயோ?

35 'புறப்படுங்கள்' என்று மின்னல்களை அனுப்புவாயோ? 'இதோ வந்துவிட்டோம்' என்று அவை உன்னிடம் கூறுமோ?

36 மனித உள்ளத்தில் ஞானத்தை வைத்தவர் யார்? சேவலுக்கு அறிவைக் கொடுத்தவர் யார்?

37 அறிவுத் திறமையோடு மேகங்களைக் கணக்கெடுப்பவர் யார்? வானத்தின் நீர்ச் சித்தைகளைத் திறந்து விட்டு,

38 நிலத்தின் புழுதி கட்டியாகவும் மணணாங் கட்டிகள் ஒட்டி கொள்ளவும் செய்பவர் யார்?

39 சிங்கமும் இளஞ் சிங்கங்களும் குகைகளில் தங்கியிருக்கும் போது, அல்லது தங்கள் மறைவிடங்களில் பதுங்கியிருக்கும் போது,

40 வேட்டையாடி உம்மால் அவற்றுக்கு இரைதர முடியுமா? அவற்றின் பசியை உம்மால் ஆற்ற முடியுமா?

41 காக்கைக் குஞ்சுகள் இரை வேண்டிக் கடவுளிடம் கரையும் போது, தாய்க் காக்கை இரை தேடி அலையும் போது, காக்கைக்கு இரை தந்து காப்பவர் யார், தெரியுமா?

அதிகாரம் 39

1 மலையாடுகள் ஈனும் காலத்தை நீ அறிவாயோ? பெண் மான்கள் குட்டி போடுவதைக் கவனித்திருக்கிறாயோ?

2 அவை சினையாய் இருக்கும் மாதங்களை நீ எண்ணக் கூடுமோ? அவை குட்டிபோடும் காலத்தை நீ அறிவாயோ?

3 அவை குனிந்து தம் குட்டிகளை ஈனும், அவற்றின் இளங் குட்டிகள் வெளிப்படும்.

4 அவற்றின் இளங் குட்டிகள் உறுதி பெறுகின்றன, வெட்ட வெளியில் அவை வளர்ந்து வருகின்றன, மேய்ச்லுக்குப் போன பின் திரும்பி வருகிறதில்லை.

5 காட்டுக் கழுதையை விருப்பம் போல் திரியும்படி விட்டவர் யார்? விரைந்தோடும் கழுதையை அவிழ்த்து விட்டவர் யார்?

6 பாழ்வெளியை அதற்கு வீடாகக் கொடுத்தோம், உவர் நிலத்தை அதற்கு இருப்பிடமாக்கினோம்.

7 அது நகரத்தின் அமளியைப் பொருட்படுத்துவதில்லை. விரட்டுகிறவனின் கூச்சல் அதன் செவியில் ஏறுவதில்லை.

8 மேய்ச்சல் தேடி மலைகளையெல்லாம் சுற்றித் திரிகிறது, பசுமையானது அனைத்தையும் தேடி அலைகிறது.

9 காட்டெருது உனக்கு ஊழியஞ் செய்ய உடன்படுமோ? உன் தொழுவத்தில் இரவைக் கழிக்குமோ?

10 அதைக் கலப்பையில் கயிறுகளால் பூட்ட உன்னால் முடியுமோ? பள்ளத்தாக்குகளை உன் விருப்பப்படி அது பரம்படிக்குமோ?

11 மிகுதியான அதன் உடல் வலிமையை நம்பி உன் கடின வேலையையெல்லாம் அதனிடம் விட்டு விடுவாயோ?

12 அது உன்னிடம் திரும்பி வரும் என்று நம்புகிறாயோ? தானியத்தை உன் களத்துக்கு அது கொணரும் என்று நினைக்கிறாயோ?

13 தீக்கோழியின் இறக்கைகளை நாரை, பருந்து இவற்றின் இறக்கைகளோடு ஒப்பிட முடியுமோ?

14 தன் முட்டைகளைத் தரை மேலேயே இட்டு வைத்து, மண்ணிலேயே அவை வெப்பமுறும்படி விட்டு விடுகிறது.

15 காலால் மிதிபட்டு அவை நொறுங்குமென்றோ காட்டு விலங்குகள் அவற்றை நசுக்கி விடுமென்றோ அந்தத் தீக்கோழி எண்ணிப்பாக்கிறதில்லை .

16 குஞ்சுகளை அந்நியவை போலக் கடுமையாய் நடத்தும், தன் வேதனை வீணாயினும், அது கவலைப் படுவதில்லை.

17 ஏனெனில் அது ஞானத்தை மறக்கும்படி கடவுள் செய்தார்; அறிவில் அவர் அதற்குப் பங்கு தரவில்லை.

18 ஓடுவதற்காக அது எழும்பும் போது, குதிரையையும் அதன் மேல் ஏறிச் சொல்பவனையும் கண்டு நகைக்கிறது.

19 குதிரைக்கு அதன் வலிமையைத் தருகிறவன் நீயோ? அதன் கழுத்தைப் பிடரி மயிரால் உடுத்துகிறவன் நீயோ?

20 தத்துக்கிளி போல் அதைத் தாவியோடச் செய்கிறவன் நீயோ? வீறுகொண்ட அதன் கனைப்பு அச்சம் தருகிறது.

21 பள்ளத்தாக்கின் மண்ணை ஆரவாரத்தோடு குளம்பால் வாரியடிக்கிறது, படைக்கலங்களைச் சந்திக்க அஞ்சாமல் செல்கிறது.

22 அச்சத்தைக் கண்டு அது நகைக்கிறது; அது கலங்குகிறதில்லை; வாளுக்கு அஞ்சி அது புறங்காட்டி ஓடுவதில்லை.

23 அம்பறாத்தூணி அதன் மேல் கலகலக்கிறது, ஈட்டியும் எறிவேலும் மின்னிக் கொண்டு வருகின்றன;

24 தீரத்தோடு துடித்துக் கொண்டு அது காற்றாய்ப் பறந்தோடும், எக்காள முழக்கங் கேட்டுப் போருக்குத் துடிக்கும்.

25 எக்காளம் முழங்கியதும், 'கி கீ' யெனக் கனைக்கிறது, போர்க் களத்தைத் தொலைவிலிருந்தே மோப்பம் பிடிக்கிறது, படைத்தலைவர் முழக்கத்தையும் கூச்சலையும் உணர்கிறது.

26 பருந்து உயரத்தில் எழும்பி பறப்பதும் தெற்கு நோக்கித் தன் இறக்கைகளை விரிப்பதும் உன் அறிவினாலோ?

27 உன் கட்டளையால் தான் கழுகு மேலே பறந்து சென்று உயரமான இடத்தில் தன் கூட்டைக் கட்டுகிறதோ?

28 பாறையில் அது தன் வீட்டை அமைத்துக் குடியிருக்கிறது, செங்குத்தான மலை வெடிப்பு அதன் உறைவிடமாம்.

29 அங்கிருந்தே அது தன் இரையை உற்று நோக்கும், தொலைவிலிருந்தே அதன் கண்கள் இரையைக் காணும்.

30 அதன் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும், எங்கே பிணம் உண்டோ அங்கே கழுகு கூடும்."

31 ஆண்டவர் தொடர்ந்து யோபுவுக்கு மறுமொழி கூறினார்:

32 குற்றம் காண்பவன் எல்லாம் வல்லவரோடு வழக்காடுவானோ? கடவுளோடு வாதாடுபவன் மறுமொழி கூறட்டும்!"

33 அப்பொழுது யோபு ஆண்டவருக்கு மறுமொழியாக,

34 நாயேன் நான்! உமக்கு என்ன பதிலுரைப்பேன்? கையால் என் வாயைப் பொத்திக்கொள்கிறேன்!

35 ஒரு முறை நான் பேசிவிட்டேன், இனி வாய் திறவேன்; இன்னொரு முறையும் பேசினேன், இனிப்பேசவே மாட்டேன்!" என்றார்.

அதிகாரம் 40

1 அப்போது ஆண்டவர் சுழற்காற்றின் நடுவிலிருந்து யோபுவுக்கு மறுமொழி கூறினார்.

2 அவர் சொன்னது: "வீரனைப் போல் உன் இடையை வரிந்து கட்டிக்கொள், நாம் உன்னை வினவுவோம், நீ விடை கூறு.

3 நாம் செய்தது சரியன்று என நீ காட்டுவாயோ? நீ குற்றமற்றவன் என்றெண்பிக்க நம்மைக் குற்றவாளியாக்குவாயோ?

4 கடவுளுக்கு இருப்பது போல் உனக்குக் கைவன்மையுண்டோ? அவரைப் போல் நீயும் இடி முழக்கமாய்ப் பேசக்கூடுமோ?

5 மகிமையாலும் மேன்மையாலும் உன்னை அணி செய்துகொள், மகிமையையும் ஒளியையும் உடுத்திக்கொள்.

6 உன்னுடைய கடுஞ்சினத்தை எங்கணும் கொட்டி, செருக்குற்றோர் அனைவரையும் உன் பார்வையால் தாழ்த்து;

7 செருக்குற்றோர் அனைவரையும் உன் பார்வையால் வீழ்த்து; பொல்லாதவர்களை அவர்கள் இடத்திலேயே மிதித்துப்போடு.

8 அவர்களையெல்லாம் ஒன்றாய்ச் சேர்த்துப் புழுதியில் புதை; அவர்கள் முகங்களைக் கட்டி ஆழ்குழியில் தள்ளு.

9 அப்பொழுது தான் உன் வலக்கை உனக்கு வெற்றி தரக்கூடியது என்பதை நாம் ஒப்புக்கொள்வோம்.

10 நீர்யானையைக் கவனித்துப் பார்; உன்னை உண்டாக்கினது போலவே அதையும் உன்டாக்கினோம்; எருதைப் போல் அது புல் தின்கிறது.

11 இதோ, ஆற்றல் அதனுடைய இடுப்பிலும், அதன் வலிமை வயிற்றுத் தசை நார்களிலும் உள்ளன.

12 தன் வாலை கேதுரு மரத்தை போல் விறைக்கும், அதன் தொடை நரம்புகள் கயிறு போல் பின்னியிருக்கும்.

13 அதன் எலும்புகள் வெண்கலக் குழாய்கள் போலும், அதன் உறுப்புகள் இருப்புக் கம்பிகள் போலும் உள்ளன.

14 கடவுளின் கைவேலைகளில் தலை சிறந்தது அதுவே; ஆனால் அதை உண்டாக்கியவர் வாளால் அதை அச்சுறுத்தினார்.

15 மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கின்றன, கொடிய மிருகங்கள் யாவும் அங்கே விளையாடுகின்றன.

16 தாமரைச் செடிகளின் கீழும் நாணல்களின் மறைவிலும் சதுப்பு நிலத்திலும் அது படுத்துக் கிடக்கும்.

17 தாமரை இலைகள் அதற்கு நிழல் தருகின்றன, நீரோடையின் ஓரத்திலுள்ள அலரிகள் அதைச் சூழ்ந்திருக்கும்.

18 இதோ, வெள்ளம் பெருக்கெடுத்தாலும் அது அஞ்சாமலிருக்கிறது; யோர்தான் அதன் முகத்தில் மோதினாலும் அது கவலைப்படுகிறதில்லை.

19 தூண்டிலால் யாரேனும் அதைப்பிடிக்கக் கூடுமா? அல்லது மண்டா பாய்ச்சி அதன் மூக்கைத் துளைக்க முடியுமா?

20 மீன் தூண்டிலால் லெவீயாத்தானை உன்னால் பிடிக்கக்கூடுமோ? அதன் நாக்கைக் கயிற்றால் கட்ட உன்னால் இயலுமோ?

21 அதற்கு மூக்கணாங்கயிறு போட உன்னால் முடியுமோ? அல்லது குறட்டினால் அதன் தாடையைத் துளைக்கலாகுமோ?

22 உன்னை நோக்கி அது கெஞ்சி மன்றாடுமோ? உன்னிடம் இன் சொற்களைப் பேசுமோ?

23 எந்நாளும் அதை உன் ஊழியனாய் நீ வைத்துக் கொள்ளும்படி உன்னோடு அது ஒப்பந்தம் செய்து கொள்ளுமோ?

24 பறவையோடு விளையாடுவது போல் அதனோடும் விளையாடுவாயோ? உன் பெண் மக்களுக்கு அதை வாரால் கட்டி, விளையாட்டுப் பொருளாகக் கொடுப்பாயோ?

25 வணிகர்கள் அதை விலைக்குக் கேட்பார்களோ? வியாபாரிகளுக்குள் அதைக் கூறுபோட்டுப் பிரித்துக் கொள்வார்களோ?

26 எறிபடைகளால் அதன் தோலைக் குத்தி நிரப்புவாயோ? மீன் வல்லயத்தால் அதன் தலையைக் குத்துவாயோ?

27 அதன் மேல் உன் கைகளை வைத்துப்பார்; எழும்பும் மல்லாட்டத்தை ஒருபோதும் மறவாய்; மறுபடி அவ்வாறு செய்ய நீ நினைக்க மாட்டாய்!

28 இதோ, அதைப் பிடிக்கலாமென நம்புகிறவன் ஏமாந்து போகிறான், அதைப் பார்த்ததுமே அவன் அஞ்சித் தளர்வான்.

அதிகாரம் 41

1 அதை எழுப்பினால் அது சீறியெழும், அதற்கு முன் எதிர்த்து நிற்கக் கூடியவன் எவனுமில்லை.

2 அதைத் தாக்கிய எவனாவது தப்பியதுண்டோ? வானத்தின் கீழ் இருப்பவர்களுள் எவனுமில்லை.

3 லெவீயாத்தானின் உறுப்புகளைப் பற்றிச் சில சொல்வோம், அதன் நிகரற்ற ஆற்றலைப் பற்றியும் கொஞ்சம் விவரிப்போம்:

4 அதன் மேல் தோலை உரிக்கக் கூடியவன் யார்? இரு மடங்கான அதன் மார்புக் கவசத்தை ஊடுருவினவன் யார்?

5 அதன் முகத்தின் கதவுகளைத் திறக்கக் கூடியவன் எவன்? அதன் பற்களைச் சுற்றியும் திகில் தான் இருக்கிறது.

6 அதன் முதுகு மூடி முத்திரையிட்டாற் போல், கேடயங்களின் வரிசைகளால் அமைந்துள்ளது.

7 காற்று கூட அவற்றினிடையே நுழையாதபடி ஒன்றோடொன்று நெருக்கமாய் பொருந்தியுள்ளன.

8 அவை ஒன்றோடொன்று கெட்டியாய் ஒட்டியுள்ளன, ஒன்றை விட்டொன்று பிரிக்கப்பட முடியாது.

9 லெவீயாத்தானின் தும்மல்கள் தீயைக் கக்கும், அதன் கண்கள் வைகறையின் கண்ணிமைகள் போலுள்ளன.

10 அதன் வாயினின்று தீக்கொள்ளிகள் வெளிப்படுகின்றன, தீப்பொறிகள் வெளியில் தாவுகின்றன.

11 கொதிக்கும் பானையினின்றும், எரியும் நாணல்களினின்றும் புகையெழுவது போல் அதன் மூக்கிலிருந்து புகை வெளிப்படுகிறது.

12 அதன் மூச்சு கரிக்கட்டைகளை எரியச் செய்யும், அவன் வாயிலிருந்து தீக்கொழுந்து வெளிப்படும்.

13 வலிமை அதன் கழுத்தில் குடிகொண்டுள்ளது, அச்சம் அதன் முன்னிலையில் கூத்தாடுகிறது.

14 அதன் சதை மடிப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்துள்ளன, அசைக்க முடியாமல் கெட்டியாய் ஒட்டியுள்ளன.

15 அதன் இதயம் கல்லை போல் உறுதியானது, எந்திரக் கல்லை போல் கடினமானது.

16 அது எழுந்திருக்கும் போது உம்பர்களும் அஞ்சுகிறார்கள், நடுநடுங்கி நிலை கலங்குகிறார்கள்.

17 வாளால் வெட்டினாலும், அதற்குத் காயமேற்படாது; ஈட்டியோ அம்போ எறிவேலோ அதை ஒன்றும் செய்ய முடியாது.

18 இரும்பை வைக்கோலாகவும் வெண்கலத்தை உளுத்த மரமாகவும் அது கருதிக் கொள்கிறது.

19 அம்பினால் அதை விரட்ட முடியாது, அதற்குக் கவண் கற்களும் துரும்புக்குச் சமம்.

20 பெரிய தடிகள் அதற்குச் சிறிய நாணற் குச்சிகள் போலாம், எறிவேல்கள் பாய்வதைக் கண்டு அது நகைக்கிறது.

21 அதன் வயிற்றின் அடிப்பாகம் கூரிய ஓடுகள் போல் உள்ளது, புணையடிக்கும் உருளை போல் அது சேற்றில் புரளுகிறது.

22 கொதிபானை போல் ஆழ்கடலைக் கொதிக்கச் செய்கிறது, மாக்கடலைத் தைலச் சட்டி போல் ஆக்குகிறது.

23 அது நீந்திச் சென்ற பாதை நீரில் மினுமினுக்கும், ஆழ்கடல் நரைத்ததென கருதத் தோன்றும்.

24 அச்சமென்பதறியாத படைப்பு ஒன்று, அதைப் போல இவ்வுலகில் வேறெதுவுமில்லை.

25 ஆணவமுள்ளோரை அது கண்ணில் உற்று நோக்கும், இறுமாப்பின் மக்களுக்கெல்லாம் அதுவே அரசன்."

அதிகாரம் 42

1 அப்பொழுது யோபு ஆண்டவருக்கு மறுமொழியாக:

2 நீர் எல்லாம் செய்ய வல்லவர் என்பதையும் எந்தத் திட்டமும் உம் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதன்று என்பதையும் நானறிவேன்.

3 அறிவில்லாத சொற்களால் நம் ஆலோசனையை இருளாக்கிவிட்டவன் யார்?' என்றீரே, நான் தான் அவன். எனக்குத் தெரியாததை நான் தான் உளறி விட்டேன். எனக்கு எட்டாத விந்தைகளைப் பற்றிப் பிதற்றி விட்டேன்.

4 செவி கொடுத்துக் கேள், நாம் பேசுவோம்; நாம் வினவுவோம், நீ விடைகூறு' என்றீரே.

5 உம்மைப் பற்றி நான் கேள்விப்பட்டதெல்லாம் காதால் கேட்டதே; இப்பொழுதோ உம்மை என் கண்கள் கண்டன.

6 ஆதலால் என்னையே நான் கடிந்து கொள்கிறேன், புழுதியிலும் சாம்பலிலும் அமர்ந்து மனம் வருந்துகிறேன்" என்றார்.

7 யோபுவுக்கு இவ்வாறு கூறிய பிறகு, ஆண்டவர் தேமானியனான ஏலிப்பாசை நோக்கி, "உன் மேலும் உன் நண்பர்கள் இருவர் மேலும் நாம் மிகுந்த சினம் கொண்டுள்ளோம்; ஏனெனில் நம் ஊழியனாகிய யோபு பேசியது போல் நீங்கள் நம்மைப் பற்றி நேர்மையானவற்றைப் பேசவில்லை.

8 ஆதலால் இப்பொழுது ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் தேர்ந்தெடுத்து நம் ஊழியனாகிய யோபுவிடம் கொண்டு போங்கள்; அங்கே அவற்றை உங்களுக்காகத் தகனப்பலியாய் ஒப்புக் கொடுங்கள்; நம் ஊழியனாகிய யோபு உங்களுக்காக வேண்டிக்கொள்வான்; அப்போது அவன் மன்றாட்டை ஏற்றுக்கொண்டு, உங்கள் மடமைக்காக உங்களைக் கடுமையாய் நடத்தாமல் விட்டுவிடுவோம்; ஏனெனில் நம் ஊழியனாகிய யோபு பேசியது போல் நீங்கள் நம்மைப் பற்றி நேர்மையானவற்றைப் பேசவில்லை" என்று சொன்னார்.

9 அப்போது, தேமானியனான ஏலிப்பாசும், சுகீத்தனான பால்தாத்தும், நாமாத்தித்தனான சோப்பாரும் புறப்பட்டுச் சென்று ஆண்டவர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; ஆண்டவரும் யோபுவின் மன்றாட்டைக் கேட்டருளினார்.

10 யோபு தம் நண்பர்களுக்காக வேண்டிக் கொண்ட பின்பு, ஆண்டவர் அவருடைய செல்வச் சிறப்புகளை மீண்டும் தந்தருளினார்; யோபு முன்னர் கொண்டிருந்ததைப் போல் இரு மடங்கு அவருக்குக் கொடுத்தார்.

11 அவருடைய சகோதர சகோதரிகள் எல்லாரும், இன்னும் முன்பு அவருக்கு அறிமுகமாயிருந்த அனைவரும் அவர் வீட்டுக்கு வந்து அவரோடு விருந்துண்டனர். அவருக்கு ஆண்டவர் வருவித்த தீமைகள் அனைத்திற்காகவும் அனுதாபம் தெரிவித்து அவரைத் தேற்றினார்கள்; அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வெள்ளிக் காசும் தங்க மோதிரமும் அவருக்குக் கொடுத்தனர்.

12 ஆண்டவரோ முன் நிலைமையைக் காட்டிலும் யோபுவின் பின் நிலைமையை மிகுதியாக ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும் ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் கழுதைகளும் அவருக்குச் சேர்ந்தன.

13 மேலும் அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தார்கள்.

14 மூத்த மகளுக்கு 'மாடப்புறா' என்றும், இரண்டாம் மகளுக்குப் 'பரிமளம்' மூன்றாம் மகளுக்கு 'அஞ்சனச்சிமிழ்' என்றும் பெயரிட்டார்.

15 யோபுவின் புதல்வியரைப் போல் அழகு வாய்ந்த பெண்கள் நாடெங்கணும் இருந்ததில்லை; அவர்களுடைய தந்தை அவர்களின் சகோதரருக்குக் கொடுத்தது போலவே அவர்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்தார்.

16 அதன் பிறகு யோபு நூற்று நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்ந்து, நான்காம் தலைமுறை வரையில் தம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் கண்டு களித்தார். இறுதியாக யோபு முதுமையடைந்து, நிறைந்த ஆயுள் உள்ளவராய் இறைவனடி சேர்ந்தார்.