1918-ம் ஆண்டில் ஐரோப்பா எங்கும் ஒரு வித விக் காய்ச்சல் பரவியது. அல்யுஸ்திரலிலும் அது நுழைந்து விட்டது. லூஸியா வீட்டில் அவளைத் தவிர மற்ற எல்லோருக்கும் அக்காய்ச்சல் கண்டது. மார்ட்டோ வீட்டில் அவர் தவிர மற்ற யாவரும் அதனால் தாக்கப்பட்டனர். முதலில் கடுமையாகத் தாக்கப்பட்டது பிரான்சிஸ்தான்! அது அக்டோபர் மாதம். காட்சிகள் நடைபெற்று ஒரு ஆண்டுதான் ஆகியிருந்தது.
தனக்குக் காய்ச்சல் ஏற்பட்டதும் அதை மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பேசினான் பிரான்சிஸ்! அவன் பெற்றோருக்கு அவன் நோயால் துன்பப்பட்டதை விட மோட்சம் செல்ல முதல் ஏணிப்படி ஏறியவன் போல் மகிழ்ந்ததுதான் அதிக வேதனையையும், விளங்காத ஆச்சரியத்தையும் கொடுத்தது. ஒலிம்பியா அதுபற்றி இவ்வாறு கூறியுள்ளாள்:
“பிரான்சிஸுக்குக் குடிப்பதற்குப் பால் கொடுத்தால் அதை வாங்கிப் பருகினான். ஒரு முட்டையை சமைத்துக் கொடுத்தால், அதை அருந்தினான். கசப்பான மருந்துகளையும் முகம் கோணாமல் வாங்கிக் குடித்தான். இவற்றைப் பார்த்து நாங்கள் அவன் சீக்கிரம் குணமடைந்து விடுவான் என நம்பினோம்.
ஆனால் அவனோ, இதனாலெல்லாம் எந்தப் பலனும் நேரிடப் போவதில்லையயன்றும், தேவ அன்னை தன்னை மோட்சத்துக்குக் கூட்டிச் செல்ல வரப் போகிறார்கள் என்றும் கூறிக் கொண்டிருந்தான்!” பிரான்சிஸுடைய ஒரே கவலை பாத்திமா கோவிலுக்குச் சென்று அங்கு மறைந்த சேசுவுடன் சற்று நேரமாவது தங்கியிருக்க முடியவில்லையே என்பதுதான்.
பிரான்சிஸின் காய்ச்சல் குறைய ஆரம்பித்தது. மிகவும் பலவீனமடைந்திருந்த அவன் சற்றுத் தேறினான். கொஞ்சம் நடக்கவும் அவனால் முடிந்தது. அவ்வருடம் கர்த்தர் பிறந்த திருநாளுக்குக் கொஞ்ச நாளைக்கு முன் அவன் நிலை நம்பிக்கை ஊட்டுவதாயிருந்தது.
1919 ஜனவரி மாத ஆரம்பத்தில் அவன் கபேசோ மலைச் சாரலுக்குச் சென்று சம்மனசின் ஜெபத்தைச் சொன்னான். ஒரு நாள் கோவா தா ஈரியாவுக்குப் போவான். இன்னொரு நாள் வாலினோஸ் என்ற இடத்திற்குச் சென்று ஜெபித்தான். பாத்திமா ஆலயத்தில் மறைந்த சேசுவிடம் பேசி உலக பாவங்களினிமித்தம் துயருற்ற அவருக்கு ஆறுதல் கூறவும் சென்றான்.
திருயாத்ரீகர்கள் எப்போதும் வந்த வண்ணமே இருந்தனர். அவர்களுக்குத் தன்னால் முடிந்த அளவு பொறுமையாக பதிலளித்து வந்தான் பிரான்சிஸ். ஒரு நாள் அவன் வீட்டில் பலர் வந்து ஜெபமாலை சுரூபம் போன்ற பக்திப் பொருட்களை அவன் ஆசீர்வதித்துத் தர வேண்டுமென்று கேட்டு அவற்றைப் பரப்பி வைத்தார்கள்.
பிரான்சிஸ் வாலினோஸிலிருந்து திரும்பி வந்தான். பரப்பி வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்த்தான். அவனுக்கு என்னவோ போல் இருந்தது. “இவற்றை நானும் மந்திரிக்க முடியாது, நீங்களும் மந்திரிக்க முடியாது. குருக்கள்தான் மந்திரிக்க வேண்டும்” என்று சற்றுக் கடுமையாகவே கூறிவிட்டான்.
1919 ஜனவரி முடியுமுன் பிரான்சிஸுக்கு மீண்டும் காய்ச்சல் கண்டது. “பிரான்சிஸ், பயப்படாதே. முன்பு வந்த காய்ச்சல் குணமாகி விட்டதைப் போல் இதுவும் குணமாகி விடும். நீ ஒரு திடகாத்திர மனிதனாக வருவாய் பார்” என்று கூறினார் அவன் தந்தை மார்ட்டோ.
“இல்லையப்பா. நம் அம்மா வெகு விரைவில் வரப் போகிறார்கள்” என்றான் பிரான்சிஸ்.
அவனுடைய ஞானத் தாய் அவன் நலமடையும்படி ஒரு பொருத்தனையை தான் செய்திருப்பதாகவும், அவனுடைய எடைக்கு எடை கோதுமை காணிக்கை செலுத்த தான் நேர்ந்திருப்பதால் மாதா இந்த மன்றாட்டை மறக்காமல் தருவார்கள் என்றும் கூறினாள்.
“இது ஒரு பலனும் தராது; நம் அம்மா இந்த வேண்டுதலைக் கேட்டு உதவி செய்ய மாட்டார்கள்” என்று கூறினான் பிரான்சிஸ்.
பிரான்சிஸ் படுத்த படுக்கையானான். இனி இவ்வுலகில் தான் எழுந்து நடமாடப் போவதில்லை என்று அவன் நிச்சயமாய் அறிந் திருந்தான். நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
ஜஸிந்தா, இன்னொரு அறையில் காய்ச்சலால் படுக்கையில் இருந்தாள். பள்ளிக்கூடம் விட்டு வரும்போது லூஸியா தினமும் அவ்விருவரையும் பார்க்கச் செல்வாள். ஒரு நாள்,
“ஜஸிந்தா, இன்று நீ பல பரித்தியாகங்கள் செய்தாயா?” என்று கேட்டாள்.
ஜஸிந்தா குரலைத் தாழ்த்தி,வேறு யாருக்கும் கேட்காதபடி,
“ஆம் லூஸியா. நிறைய செய்தேன். எங்கள் அம்மா வீட்டில் இல்லை. பிரான்சிஸிடம் போக வேண்டுமென்று பல முறை விருப்பம் வந்தது. நான் போகவில்லை” என்றான்.
பின், லூஸியா பிரான்சிஸிடம் சென்றாள். அவன் மெலிந்து காணப்பட்டான். கண்கள் மட்டும் பெரிதாய் பிரகாசமாயிருந்தது. லூஸியா அவனிடம், “அதிகம் வேதனைப்படுகிறாயோ பிரான்சிஸ்?” என்று கேட்டாள்.
“ஆம். அது ஒன்றுமில்லை. நம் ஆண்டவரை ஆறுதல்படுத்து வதற்காக துன்பப்படுகிறேன். சீக்கிரத்தில் அவருடன் இருப்பேன்” என்றான் பிரான்சிஸ்.
“நீ போனதும் என்னையும் அழைத்துக் கொள்ளும்படி நம் அம்மாவிடம் கேட்க மறவாதே” என்றாள் லூஸியா. பிரான்சிஸ் அதற்கு மறுமொழியாக, “அப்படிக் கேட்க மாட்டேன். நீ அங்கு இப்போது வருவதை அம்மா விரும்பவில்லை என்று உனக்குத் தெரியுமே” என்றாள்.
ஒரு நாள் பிற்பகலில் லூஸியா தன்னுடன் வேறு சில தோழிகளை அழைத்துக் கொண்டு பிரான்சிஸிடம் வந்தாள். அவர்கள் போனபின் பிரான்சிஸ் லூஸியாவை கண்டிப்புடன் பார்த்து,
“இந்தப் பிள்ளைகளுடன் இனிமேல் போகாதே. பாவம் செய்ய நீ கற்றுக் கொள்ளக் கூடும்” என்றான்.
“என்னோடுதானே அவர்களும் பள்ளிக்கூடம் விட்டு வருகிறார்கள்?” என்றாள் லூஸியா.
“பள்ளிக்கூடம் விட்டதும் மறைந்த சேசுவிடம் கொஞ்ச நேரம் இரு. அப்புறம் தனியே வீட்டுக்கு வா” என்று அறிவுரை கூறினான் அச்சிறுவன்.
பிரான்சிஸ் வர வர பலவீனமடைந்தான். காய்ச்சல் அவனை உருக்கியது. ஒரு நாள் லூஸியா வந்திருந்தபோது, அவன் தன் படுக்கை அடியிலிருந்து அந்தப் பழைய முரட்டுக் கயிற்றை எடுத்து அவளிடம் கொடுத்து,
“லூஸியா, எங்கம்மா வருமுன் இதைக் கொண்டு போய்விடு. இதை இதற்கு மேல் மறைத்து வைத்துக் கொள்ள என்னால் இயல வில்லை” என்றான். தன் தாய்க்குத் தெரியாமல் இந்தக் கயிற்றுத் தபசை இத்தனை நாளும் அவன் மறைவில் செய்து வந்திருந்தான்.