கெட்டுப் போன சம்மனசுக்களுக்கும் துஷ்ட அருபிகளுக்கும் எதிரான ஒரு பேயோட்டும் ஜெபம்!

(பாப்பரசர் பதின்மூன்றாம் சிங்கராயரின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டது)

சாத்தானின் வல்லமையை அடக்குவதற்காகவும், நமக்குத் தீங்கு செய்யாதபடி அவனைத் தடுக்கவும் ஓர் எளிய பேயோட்டும் ஜெபமாக இந்த ஜெபத்தை முடிந்த போதெல்லாம் அடிக்கடி சொல்லும்படி பரிசுத்த பிதா பாப்பரசர் குருக்களுக்கு அறிவுறுத்துகிறார். விசுவாசிகளும் அங்கீகரிக்கப்பட்ட எந்த ஒரு ஜெபத்தையும் போல, மேற்கண்ட அதே நோக்கங்களுக்காக, தங்கள் சொந்தப் பெயரில் இதைச் சொல்லலாம். பசாசின் செயல்பாடு இருக்கிறது, அது மனிதரில் கெடுமதியையும், கடுமையான சோதனைகளையும், புயல்களையும், பல்வேறு பேரழிவுகளையும் விளைவிக்கிறது என்ற சந்தேகம் எழும்போதெல்லாம் இந்த ஜெபம் பரிந்துரைக்கப்படுகிறது.
________________________________________

பிதா சுதன் இஸ்பிரீத்துசாந்துவின் நாமத்தினாலே    ஆமென்.

அதிதூதரான அர்ச். மிக்கேல் சம்மனசானவருக்கு    ஜெபம்

பரலோக சேனைகளின் மகா மகிமை பொருந்திய அதிபதியாகிய அதிதூதரான அர்ச். மிக்கேலே, துரைத்தனங்களோடும் வல்லமைகளோடும் இந்த அந்தகார உலக அதிபதிகளோடும், ஆகாசமண்டலங்களிலுள்ள அக்கிரம அரூபிகளோடும் நாங்கள் செய்ய வேண்டியிருக்கிற போராட்டத்தில் எங்களைத் தற்காத்தருளும். சர்வேசுரன் தமது சாயலாகவும் பாவனையாகவும் சிருஷ்டித்திருக்கிறவர்களும் பசாசின் கொடுங்கோன்மையினின்று மிகப் பெரும் கிரயங்கொடுத்து அவர் மீட்டு இரட்சித்துக் கொண்டவர்களுமாகிய மனிதர்களைக் காப்பாற்ற தீவிரித்து வருவீராக. இரட்சிக்கப்பட்ட ஆத்துமங்களை மோட்சத்திற்கு இட்டுச் செல்ல ஆண்டவராலேயே நியமிக்கப்பட்டவராகிய உம்மையே பரிசுத்த திருச்சபை தனது பாதுகாவலராகவும் ஆபத்துக்களிலிருந்து தற்காக்கிறவராகவும் கொண்டாடி வணங்குகிறது ஆகவே, சாத்தான் மனிதர்களை இனிமேலும் தனது அடிமைகளாக்கிக் கொள்ளாத படிக்கும் திருச்சபையை மேற்கொண்டு காயப்படுத்தாத படிக்கும், அவனை எங்கள் பாதங்களின் கீழ் அடக்கிவிடும்படியாக, சமாதானத்தின் சர்வேசுரனிடம் மன்றாடும். எங்கள் ஜெபங்கள் தாமதமின்றி அவருடைய இரக்கத்தை எங்கள் மீது வருவிக்கும் படியாக, அவற்றை மகா உந்நதருக்கு சமர்ப்பியும். பசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட ஆதி சர்ப்பமாகிய பறவை நாகத்தை தேவரீர் பிடித்து, அதைக் கட்டி வைத்து, அது இனிமேலும் மக்களினங்களை மோசம் போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து அதன்மேல் முத்திரையிடுவீராக (காட்சி.20:2-3).

பேயோட்டும் ஜெபம்

நமதாண்டவரும் இரட்சகருமான சேசுக்கிறீஸ்து நாதரின் திருநாமத்தில் அமலோற்பவக் கன்னிகையும் தேவதாயாருமாகிய பரிசுத்த மாமரியினுடையவும், அர்ச் சியசிஷ்ட மிக்கேல் அதிதூதருடையவும், அப்போஸ்தலர்களாகிய முத்திப்பேறு பெற்ற அர்ச்.இராயப்பர் சின்னப்பருடையவும் மன்றாட்டினால் பலப்படுத்தப்பட்டு, பசாசின் தாக்குதல்களையும் வஞ்சகங்களையும் துரத்தியடிக்கிற இந்த ஜெபத்தை நாங்கள் நம்பிக்கையோடு தொடங்குகிறோம்.

சங்கீதம் 67

சர்வேசுரன் எழுந்தருள்வாராக அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு போகக்கடவார்கள் அவரைப் பகைத்தவர்கள் அவருடைய திருச்சமுகத்தில் நின்று ஓட்டம் பிடித்து நீங்கக்கடவார்கள். புகை பறக்கடிக்கப்படுவது போல அவர்களும் பறக்கடிக்கப்படுவார்களாக அக்கினிக்குமுன் மெழுகு உருகுவது போல சர்வேசுரனுடைய சமுகத்திலே பாவிகள் நிர்மூலமாகக் கடவார்கள்.

மு. இதோ ஆண்டவருடைய சிலுவை. சத்துராதிகளே ஓடிப் போங்கள்.

து. யூதா கோத்திரத்துச் சிங்கமும்,தாவீதின் சந்ததியுமானவர் ஜெயங்கொண்டார்.

மு. ஆண்டவரே தேவரீர் பேரில் நாங்கள் நம்பிக்கை கொள்ளும் அளவாக,

து. தேவரீருடைய இரக்கம் எங்கள் பேரில் இறங்கக் கடவது.

(பின்வரும் சிலுவை அடையாளங்கள், இந்தப் பேயோட்டும் ஜெபத்தை ஒரு குருவானவர் சொல்லும் பட்சத்தில் அவர் அளிக்கும் ஓர் ஆசீர்வாதத்தைக் குறிக்கின்றன. ஒரு சாதாரண விசுவாசி இதை ஜெபித்தால், அந்த மனிதனால் வரைந்து கொள்ளப்பட வேண்டிய அர்ச்சியசிஷ்ட சிலுவை அடையாளங்களை இவை குறிக்கின்றன.)

அசுத்த அரூபிகளே, சாத்தானிய வல்லமைகளே நரக முற்றுகையாளர்களே, தீய படைகளே, கூட்டமைப்புகளே, பிரிவுகளே, நீங்கள் யாராக இருந்தாலும் நாங்கள் உங்களை எங்களிடமிருந்து துரத்துகிறோம்.  எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாதரின் திருநாமத்திலும், அவருடைய புண்ணியத்தாலும் + நீங்கள் சர்வேசுரனுடைய திருச்சபையினின்றும் தெய்வீக செம்மறிப் புருவையானவரின் விலைமதியாத திரு இரத்தத்தினால்  + இரட்சிக்கப்பட்ட  ஆத்துமங்களினின்றும்  நீங்கள் பிடுங்கி யெடுக்கப்பட்டு, துரத்தியடிக்கப் படுவீர்களாக

தந்திரமுள்ள வலுசர்ப்பமே,  மனுக்குலத்தை வஞ்சிக்கவும், திருச்சபையைத் துன்புறுத்தவும், சர்வேசுரனின் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வாதிக்கவும், அவர்களைக் கோதுமையைப் போலப் புடைக்கவும் துணிவு கொண்டாய். உன்னுடைய அகங்காரத்தில் யாருக்கு சமமானவனாக நீ இன்னமும் பாசாங்கு செய்கிறாயோ, அந்த மகா உந்நத சர்வேசுரனால் உனக்கு இடப்படுகிற கட்டளை இதுவே + சகல மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தைப் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளவும் சித்தங்கொள்கிற தேவனாகிய (1 திமோ. 2:4) பிதாவாகிய சர்வேசுரன் உனக்குக் கட்டளையிடுகிறார் + சுதனாகிய சர்வேசுரன் உனக்குக் கட்டளையிடுகிறார், + இஸ்பிரீத்து சாந்து வானவர் உனக்குக் கட்டளையிடுகிறார் + மனுவுருவான, சர்வேசுரனுடைய நித்திய வார்த்தையான கிறீஸ்துநாதர் உனக்குக் கட்டளையிடுகிறார் + உன் கெடுமதியின் வழியாக தேவ கட்டளையை மீறிய எங்கள் மனுக்குலத்தை மீட்டு இரட்சிக்கும்படியாக தம்மையே தாழ்த்தி மரணமட்டும் கீழ்ப்படிதலுள்ளவரான (பிலி.2:8) அவர், ஸ்திரமான பாறையின் மீது தம் திருச்சபையைக் கட்டியுள்ளவரும், தாம் உலக முடிவு வரை அதனோடு தங்கி வசிப்பதால் (மத்.28:20) நரகத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள மாட்டா தென்று அறிக்கையிட்டவருமான அவர் உனக்குக் கட்டளையிடுகிறார். +

கிறீஸ்தவ விசுவாசத்தின் பரம இரகசியங்களின் வல்லமை உனக்குக் கட்டளையிடுவது  + போலவே சிலுவையின் மறைவான புண்ணியமும் உனக்கு அதைக் கட்டளையிடுகிறது + சர்வேசுரனுடைய மகிமையுள்ள திருமாதாவாகிய கன்னிமாமரி உனக்குக் கட்டளையிடுகிறார்கள் + தனது தாழ்ச்சியாலும், தனது அமல உற்பவத்தின் முதல் கணத்திலிருந்தும் உன் ஆங்காரமுள்ள தலையை மிதித்து நசுக்குபவர்களாகிய திவ்விய கன்னிகை உனக்குக் கட்டளையிடுகிறார்கள் +

பரிசுத்த அப்போஸ்தலர்களாகிய இராயப்பர் சின்னப்பர் மற்றுமுள்ள சகல அப்போஸ்தலர்களுடைய விசுவாசம் உனக்குக் கட்டளையிடுகிறது + வேதசாட்சிகளின் இரத்தமும் சகல அர்ச்சியசிஷ்டவர்களின் பக்தியுள்ள மன்றாட்டும் உனக்குக் கட்டளையிடுகின்றன +

இவ்வாறு, சபிக்கப்பட்டவையாகிய பசாசுக்களே ஜீவியரான சர்வேசுரனாலும், மெய்யங் கடவுளாலும் பரிசுத்தரான சர்வேசுரனாலும் தம்முடைய ஏக சுதனைத் தந்து, அவர்மேல் விசுவாசமாயிருக்கிற எவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள சித்தங்கொள்ளும் அளவுக்கு உலகத்தை நேசித்தவராகிய (அரு.3:16) சர்வேசுரனாலும் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் + மனித சிருஷ்டிகளை ஏமாற்றுவதையும்  அவர்கள் மீது நித்திய அழிவின் நஞ்சை ஊற்றுவதையும் நிறுத்திக் கொள்ளுங்கள் திருச்சபைக்குத் தீங்கு விளைவித்து, அதன் சுதந்திரத்தைத் தடை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். சகல வஞ்சகங்களையும் கண்டு பிடித்தவனும், அவற்றின் எஜமானனுமாகிய சாத்தானே, பின்வாங்கி ஓடுவாயாக  யாரில் உன் வேலைகள் எதையும் நீ கண்டதில்லையோ அந்தக் கிறீஸ்துவானவருக்கு இடத்தை விட்டுக்கொடு. தமது திரு இரத்தக் கிரயத்தைக் கொண்டு கிறீஸ்துநாதரால் சம்பாதிக்கப்பட்ட ஏக, பரிசுத்த, கத்தோலிக்க அப்போஸ்தலிக்கத் திருச்சபைக்கு இடத்தை விட்டுக்கொடு. சர்வேசுரனுடைய சர்வ வல்லபத் திருக்கரத்தின் கீழ் பணிந்து நில். நரகத்தை நடு நடுங்கச் செய்யும் திருநாமமும் பரலோகத்திலுள்ள நாதகிருத்தியரும் சத்துவகரும், பலவத்தரும் எதற்குத் தாழ்ச்சியோடு பணிந்திருக் கிறார்களோ அந்தத் திருநாமமும்  பத்திராசனரும் ஞானாதிக்கரும் பரிசுத்தர் பரிசுத்தர் சேனைகளின் தேவனாகிய ஆண்டவர் பரிசுத்தர் என்று இடைவிடாமல் போற்றித் துதிக்கிற திருநாமமுமாகிய சேசுநாதருடைய பரிசுத்த, பயங்கரமுள்ள திருநாமத்தின் வல்லமையின் முன்பாக அஞ்சி நடுங்கிப் பறந்தோடிப் போவாயாக,

மு : ஆண்டவரே என் மன்றாட்டைக் கேட்டருளும்.

து: என் அபய சத்தம் உமது சந்நதி மட்டும் வரக்கடவது.

மு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக,

து: உமது ஆவியோடும் இருப்பாராக.

ஜெபிப்போமாக

பரலோகத்தினுடைய சர்வேசுரா, பூலோகத்தினுடைய சர்வேசுரா, சம்மனசுக்களுடைய சர்வேசுரா, அதிதூதர்களுடைய சர்வேசுரா, பிதாப்பிதாக்களுடைய சர்வேசுரா, தீர்க்கதரிசிகளுடைய சர்வேசுரா, அப்போஸ்தலர்களுடைய சர்வேசுரா, வேதசாட்சிகளுடைய சர்வேசுரா, ஸ்துதியர்களுடைய சர்வேசுரா, கன்னியர்களுடைய                              சர்வேசுரா, நீரே காண்பவையும் காணாதவையுமாகிய சகலத்தினுடையவும் சிருஷ்டிகராக இருக்கிறீர், உமது அரசாட்சிக்கு முடிவே இராது. ஆகவே, உம்மைத் தவிர வேறே சர்வேசுரன் இல்லை என்பதால், மரணத்திற்குப் பின் ஜீவியத்தையும், உழைப்பிற்குப் பின் இளைப்பாற்றியையும் தந்தருள நீரே வல்லமையுள்ள வராயிருக்கிறீர். அடியோர்கள் உமது மகிமையுள்ள மகத்துவத்திற்கு முன்பாக தாழ்ச்சியோடு சாஷ்டாங்கமாக விழுந்து, நரக அரூபிகளின் சகல கொடுங்கோன்மையிலிருந்தும், அவற்றின் கண்ணிகளிலிருந்தும் அவற்றின் பொய்களிலிருந்தும், அவற்றின் கோபவெறியுள்ள தீக்குணத்திலிருந்தும் எங்களை விடுவித்தருளுமாறு உம்மை மன்றாடுகிறோம். ஆண்டவரே, உமது வல்லமையால் எங்களைக் காத்தருளவும், ஆபத்தின்றியும், திடமானவர்களாகவும் எங்களைப் பாதுகாக்கவும் திருவுளமிரங்குவீராக எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதர் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

மு. பசாசின் கண்ணிகளிலிருந்து,

து. எங்களை விடுவித்தருளும் ஆண்டவரே,

மு. உமது திருச்சபை சமாதானத்திலும், சுதந்திரத்திலும் உமக்கு ஊழியம் செய்யும்படியாக, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் படியாக உம்மை மன்றாடுகிறோம்

மு. உமது திருச்சபையின் சகல எதிரிகளையும் தேவரீர் நசுக்கும்படியாக,

து. எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் படியாக உம்மை மன்றாடுகிறோம்.

(நாம் இருக்கக் கூடிய இடத்தில் பரிசுத்த தீர்த்தம்
தெளிக்கப்படுகிறது.)

அதிதூதரான அர்ச். மிக்கேலே, எங்கள் போராட்டத்தில் எங்களைத் தற்காத்தருளும். பசாசின் துர்க்கருத்தையும், அதன் சற்பனைகளையும் அகற்றி எங்களுக்குத் துணையாயிரும். தாழ்மையான எங்கள் மன்றாட்டைக் கேட்டு சர்வேசுரன் பசாசைகண்டிப்பீராக. நீரும் மோட்ச சேனைக்குத் தலைமையானவரே, ஆத்துமங்களை அழிக்கிறதற்கு உலகத்தில் சுற்றித் திரியும் பேயையும், மற்ற துஷ்ட அரூபிகளையும் தேவ வல்லமையின் பலத்தால் நரகத்தில்
தள்ளுவீராக, ஆமென்.