கிறிஸ்தவன் தியோபோரஸ் எனப்படுகிறான்!

ஒவ்வொரு கிறிஸ்தவனும், கிறிஸ்தவளும் தியோபோரஸே....

தியோபோரஸ் என்றால் என்ன என்று பார்க்கலாமா??

முதல் வேத சாட்சியாக மரித்த புனித முடியப்பர், இரண்டாம் வேதசாட்சியாக மரித்த புனித பெரிய யாகப்பர், முதல் போப் ஆண்டவரான புனித ராயப்பர் தொடங்கி முதல் பத்து வேதகலாபனையில் எஆதிக் கிறிஸ்தவர்கள் முதல் 300 ஆண்டுகளில் கொல்லப்பட்ட 60 லட்சம் கிறிஸ்தவர்கள்  ஆண்டவருக்கு சாட்சியாய் ஆனார்கள்… அதே வேத கலாபனையில் மரித்த அனைவருக்கும் தெரிந்த புனித அந்தியோக்கு இஞ்ஞாசியாரின் துணிச்சலான வீர வைராக்கியத்தைப் பாருங்கள்... ( புனித பிலோமினா,  புனித ஆக்கத்தம்மாள் இதே காலத்தில்தான் வேத சாட்சி முடி பெற்றார்கள்)

கீழே உள்ள உரையாடலைப் பாருங்கள்…
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் மற்றும் அவரைக்கொன்ற மன்னன் டிராஜனுக்கும் இடையே நடந்த உரையாடல்:

(அந்தியோக்கியாவில் மேற்றாணியராக இருந்த இஞ்ஞாசியாரை அழைப்பிக்கிறான் டிராஜன் என்னும் அரசன்)

டிராஜன் : தீய பிசாசைப்போல் என் கட்டளைக்குப் பணியாமல் மக்களை அழிவுக்கு இட்டுச்செல்பவன் நீதானா?

புனித இஞ்ஞாசியார் : அரசே ! என்னை யாரும் தீய பசாசு என்று அழைத்ததில்லை. கடவுளின் ஊழியர்கள் யாரும் எவ்வளவு தூரம் பசாசுகளிடமிருந்து அகன்றிருக்கிறார்கள் என்றால், அப்பசாசுக்கள் அவர்கள் முன்னிலையில் நிற்கக் கூடாமல் ஒலமிட்டுக்கொண்டு ஓடி ஒளிகின்றன.

டிராஜன் : தியோபோரஸ் என்னும் இது யார்?
 ( அர்ச். இஞ்ஞாசியாரின் இன்னொரு பெயர் தியோபோரஸ் என்பது. தியோபோரஸ் என்றால் கடவுளைக் கொண்டிருப்பவன் என்பது பொருள்)

புனித இஞ்ஞாசியார் : அது நானே. நான் மட்டுமல்ல, சேசு கிறிஸ்துவை உள்ளத்தில் கொண்டிருக்கும் எல்லோரும் தியோபோரஸ்தான்.

டிராஜன் : அப்போ, எங்கள் உள்ளத்தில் நாங்கள் தெய்வங்களைக் கொண்டிருக்கவில்லை என்று  நினைக்கிறாயோ? அவர்கள் எங்களுக்காக சண்டையிடுகிறார்களே..

புனித இஞ்ஞாசியார் : தெய்வங்களா ! அவைகள் பசாசுக்களே, பரலோகத்தையும், பூலோகத்தையும் படைத்த கடவுள் ஒருவர்தான். அவருடைய ஏக சுதன் இயேசு கிறிஸ்துவையே, அவருடைய இராஜ்ஜியத்தையே நான் தேடுகிறேன்.

டிராஜன் : பிலாத்து சிலுவையில் அறைந்தானே அந்த சேசுவையா ?

புனித இஞ்ஞாசியார் : பாவத்தையும், அதனை இயற்றியவனையும் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் அறைந்தார் என்று சொல்ல வேண்டும்.

டிராஜன் : அப்போ நீ கிறிஸ்துவை உனக்குள் கொண்டிருக்கிறாயா ?

புனித இஞ்ஞாசியார் : ஆம் அதில் சந்தேகமே இல்லை.

டிராஜன் : ஹா ! கிறிஸ்துவைக் கொண்டிருப்பதாக பெருமைப்படும் இஞ்ஞாசி விலங்கிடப்பட்டு உரோமைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விலங்குகளுக்கு போடப்படுவானாக”

 (நீண்ட கடற்பயணம் செய்தார் இஞ்ஞாசியார். உரோமையிலுள்ள கிறிஸ்தவர்கள் தமக்கு விடுதலை பெற்றுத் தர முயற்சித்து தம் வேத சாட்சிய வாய்ப்பைக் கெடுத்து விடக்கூடாது என்று அவர்களுக்கு முன் கூட்டியே செய்தி அனுப்பினார். அவர் மீது இரண்டு பசித்த சிங்கங்களை ஏவி விட்டார்கள். அப்போது அவர்,
 “  நான் ஆண்டவரின் கோதுமை. அவருடைய புனித மாவாக ஆகும்படி சிங்கங்களின் பற்களால் நான் அறைக்கப்பட வேண்டும்” என்று கூறி சேசுவின் திருநாமத்தை உச்சரித்தபடியே சிங்கங்களால் கடித்து விழுங்கப்பட்டார். அவரிடம் மிஞ்சிய எலும்புகளை விசுவாசிகள் சேகரித்து அந்தியோக்கியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் வேதசாட்சி அடைந்த ஆண்டு சுமாராக கி,பி.108. இவர் புனித அருளப்பரின் (யோவான்) சீடர்.
வேதசாட்சிகளுக்கே உரிய வீரமிக்க விசுவாசவாழ்வு நமக்கும் தேவை. நமக்கு உணவாக வந்த தெய்வத்தை மகிமைப்படுத்த சிங்கங்களுக்கு உணவாகினார் புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார்...

எந்த சூழ்நிலையிலும் ஏன் எல்லா சூழ்நிலையிலும் நாம் தியோபோரஸாக வாழ்வோம்... பயமில்லாமல்..

இயேசுவின் இரத்தம் ஜெயம் !
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !