இங்கே இருட்டு என்பது பதிதங்களாகிய ஆன்ம இருளைக் குறிப்பதாக மட்டும் சொல்ல முடியாது. ஏனென்றால் "தப்பறைகள் வரும்' என்று அதற்குச் சற்று முன்புதான் ஆண்டவர் கூறியிருக்கிறார். அப்படியென்றால் இது நாம் சாதாரணமாகக் கண்டுபிடிக்கிற இருட்டாகவே இருக்கக் கூடும்.
சுத்திகரிப்புத் தண்டனையைப் பற்றிக் கூறும் முன்னறிவிப்புகள் ஏறக்குறைய எல்லாமே " இருட்டு ,'' "மூன்று நாள் இருட்டு” என்று கூறுகின்றன. அவற்றுள் சில:
1. முத்திப்பேறு பெற்ற அன்னமரியா தாகி (1769-1837)
"மிக இருளான இருட்டு 3 பகலும் 3 இரவும் இருக்கும். ஆகாயம், கொல்லும் உபத்திரவத்தால் நிரம்பியிருக்கும். செயற்கை விளக்கு எதுவும் எரியாது. மந்திரித்த திரிகள் மட்டுமே ஒளி கொடுக்கும்... மக்கள் வீட்டிற்குள் தங்கி ஜெபமாலை ஜெபித்து தேவ இரக்கத்தை மன்றாட வேண்டும்.''
2. ஐந்து காயவரம் பெற்ற பால்மா மரியா (+1863)
"பரிசுத்த நகரத்தைக் கைப்பற்ற வரும் புரட்சிக்காரர்கள் திடீரென்று நிறுத்தப்பட்டு அச்சத்தால் மருண்டு ஓட்ட மெடுப்பார்கள். சங்கரிக்கிற தூதனால் நசுக்கப்படுவார்கள். அப்போது மூன்று நாள் இருட்டு இருக்கும். ஆகாயம் அசுத்த அரூபிகளால் நிரம்பியிருக்கும்."
3. ஐந்து காய வரம் பெற்ற சிலுவையிலறையப்பட்ட சேசுவின் மரியா பவோர்டி (+1878).
"மூன்று நாள் நீடிக்கும் இருட்டில் மனந்திரும்பாத பாவிகள் மடிவார்கள். மனுக்குலத்தில் கால் பாகமே மிஞ்சும்."
4. ஐந்து காயவரம் பெற்ற மரிய ஜூலிஜாஹென்னி (+ 1941)
"ஒரு குளிர்கால இரவில், மலைகளை அசைக்கத்தக்க இடி முழக்கம் கேட்கும். விரைவாகக் கதவு ஜன்னல்களை மூடி விடுங்கள். வினோதப் பிரியத்தால் எதையும் நோக்க வேண்டாம். பாடுபட்ட சுரூபத்தின் முன்பாகக் கூடி, என் புனிதத் தாயாரின் பாதுகாப்பில் உங்களை ஒப்படையுங்கள். உங்கள் இரட்சிப்புப் பற்றி எந்த சந்தேகமும் உங்கள் இருதயத்தில் நுழைய வேண்டாம். உங்கள் நம்பிக்கை எந்த அளவிற்கு இருக்கிறதோ, அந்த அளவிற்கு உங்களைச் சுற்றி நான் அமைக்க விரும்பும் கோட்டை உடைக்க முடியாததாக இருக்கும். மந்திரித்த திரியை ஏற்றி ஜெபமாலை சொல்லுங்கள். இப்படி மூன்று பகலும், இரண்டு இரவும் நீடித்திருங்கள். மூன்றாம் இரவில் பயங்கரம் தணியும்."
5. நியூயார்க் வெரோணிக்காவின் அறிவிப்புகள்
மூன்று நாள் இருட்டு பற்றிய இன்னும் பல அறிவிப்புகள் உள்ளன. மிகச் சமீபத்தில் தரப்பட்டுள்ள அறிவிப்புகளில் நியூயார்க் வெரோணிக்காவின் செய்திகள் நம்பிக்கைக்குரியனவாக உள்ளன. இப்பக்தியுள்ள மாது அறிவித்தவற்றுள் அநேகம் ஏற்கெனவே மிகச் சரியாக நிறைவேறியுள்ளன.
ஜூன் 12, 1976-ல் கிடைத்த செய்தி : "ஒரு பெரும் இருட்டு மனுக்குலத்தின் மேல் இறங்கும்... தேவ இஷ்டப் பிரசாத அந்தஸ்தில் இருப்பவர்களின் மெழுகுவர்த்திகள் எரியும். ஆனால் சாத்தானுக்குத் தங்களைக் கொடுத்து விட்டவர்களின் வீடுகளில் திரிகள் எரியாது" என்று கூறுகிறது. அதே செய்தியில்: "ஜெபியுங்கள். தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, கைகளை விரித்துப் பரம பிதாவின் இரக்கத்தை மன்றாடுங்கள்" என்றும் கூறப் பட்டுள்ளது.
6. ஜூலியாவின் வெளிப்படுத்தல் (Jesus Calls Us. Vol. I, p. 255)
"சுத்திகரிப்புத் தண்டனையின் எச்சரிப்புகள் வருகின்றன: நீர்ப் பெருக்குகள், புயல்கள், ஆலங்கட்டி மழைகள், பூமியதிர்ச்சிகள், எரிமலைகள், கொள்ளை நோய்கள், தொற்று வியாதிகள், (விபத்துக்கள்)..... இவற்றிற்கெல்லாம் கடைசியில் மூன்று நாள் இருட்டும் மிகப் பெரும் சஞ்சலமும் வரும். இதோடு இந்தத் தலைமுறையினருக்குக் கடவுளின் தண்டனை முடிவு பெறும். அத்தண்டனை ஒரு சிறிய நடுத்தீர்வை போலிருக்கும்."
7. எஜிப்தியரைத் தண்டித்த இருட்டு (யாத்திராகமம் 10)
"அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: உன் கையை வானத்தின் முகத்தே நீட்டுவாயாக. அதினால் ஸ்பரிசிக்கத்தக்க அந்தகாரம் எஜிப்து தேசத்திலே உண்டாகக்கடவது என்றருளினார். அவ்விதமாய் மோயீசன் வானத்தின் முகத்தே கையை நீட்ட எஜிப்து தேசம் முற்றிலும் மூன்று நாளாய் அகோரமான காரிருள் உண்டாயிற்று..." (யாத் 10; 21, 22).
இதிலிருந்து, கடவுளின் தண்டனைக் கருவியாக இருட்டும் இருக்க முடியும் என்று தெரிகிறது. இருட்டை வைத்துப் பயங்காட்டுகிறார்கள் என்று ஏளனமாக யாரும் கருத முடியாது.