நமதாண்டவரே கூறிய தீர்க்கதரிசனம்!

நமதாண்டவர் தம் அப்போஸ்தலர்களுக்குப் பரலோக மந்திரத்தின் பொருளை விளக்கிக் கூறிய சமயத்தில் பின்வரும் ஆச்சரியமான அறிவிப்பைச் செய்தார். 

இதை மரியா வால்டோர்ட்டா வெளிப்படுத்தலான "கடவுள் மனிதனின் காவியம்”3-ம் புத்தகத்தில் நாம் காண்கிறோம். அது பின்வருமாறு:

"சர்வேசுரனுடைய இராச்சியத்தின் வரவை உங்கள் முழு பலத்தோடும் ஆசியுங்கள். அது வரும்போது பூமிக்கே மகிழ்ச்சியாயிருக்கும். இருதயங்களில், குடும்பங்களில், மக்கள் நடுவில், நாடுகளின் மத்தியில், அம்மகிழ்ச்சி ஏற்படும். இந்த இராச்சியத்திற்காகத் துன்பப்படுங்கள், உழையுங்கள். உங்களையே பலியாக்குங்கள்... இதெல்லாம் ஒரு நாள் நடைபெறும். பூமியில் சர்வேசுரனுடைய இராச்சியம் வருமுன்னால், பல நூற்றாண்டுகளாய்க் கண்ணீர்களும், இரத்தமும் தப்பறைகளும் வேதகலாபனைகளும் இருட்டும் வரும். இவற்றிலிருந்து ஒரு விடுதலையாக என்னுடைய திருச்சபையிலிருந்து புறப்படும் மறைபொருளான ஒளியிலிருந்து வீசப் படும் ஒளிவீச்சுகள் இருக்கும். அது பூமியில் என் இராச்சியம் வருவதற்கு முன்னால் நிகழும். ஓ! என் திருச்சபையே!...''

நமதாண்டவர் இங்கு குறிப்பிடுகிற "சர்வேசுரனுடைய இராச்சியமும்," சற்று மேலே கூறப்பட்ட பாத்திமாவில் மாதா வாக்களித்துள்ள "சமாதான காலமும் " ஒன்றுதான் என்று கூற இடமிருக்கிறது. 

1. "பூமியில் சர்வேசுரனுடைய இராச்சியத்தின் வரவை முழு பலத்தோடும் ஆசியுங்கள்.” 

இருபது நூற்றாண்டுகளாகத் திருச்சபை உலகத்தில் இருந்தும், அது பூமியில் சர்வேசுரனுடைய இராச்சியமாக முழுப் பொலிவுடன் காணப்படவில்லை. வேதகலாபனைகளாலும், தப்பறைகளாலும், பிரிவினைகளாலும், பதிதங்களாலும், துரோகங்களாலும் அது கறைப்பட்டே இருந்துள்ளது. தேவ குமாரனின் "கறைதிரை இல்லாத மணவாளியாக" இப்பூமியிலேயே திருச்சபை துலங்கும் நாளை நமதாண்டவர் முன்னறிவிக்கிறார். அதையே மாதா பாத்திமாவில் தன் மாசற்ற இருதயத்தின் வெற்றியின் காலம் என்று குறிப்பிட்டார்கள். அதுவே உலக சுத்திகரிப்பிற்குப் பின்வரும் சமாதான காலம். இதை மிகவும் ஆசித்துத் தேடும்படி ஆண்டவர் கூறுகிறார். 

2. "அது மகிழ்ச்சி நிறைந்திருக்கும்; தனி இருதயங்களிலும் குடும்பங்களிலும், நாடுகளுக்கிடையிலும் அம்மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும்.

இவ்வுலகிலேயே மோட்சத்தின் முன்சுவை போல இந்த சமாதான காலம் இருக்கும். எல்லா புண்ணியங்களும் தழைக்கும். விசேஷமாக தேவ சம்பந்தமான விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் ஆகிய புண்ணியங்கள் எல்லாராலும் கைக்கொள்ளப்படுவதினால் பிறர்சிநேகம் எங்கும் காணப்படும். அதனால் தனி மனிதர்களும் குடும்பங்களும், நாடுகளும் நிம்மதி நிறைவோடிருப்பார்கள். போரும் பேராசையும் நின்று விடும்; எங்கும் சமாதானம் நிலவும். 

3. "இந்த இராச்சியத்திற்காகத் துன்பப்படுங்கள், உழையுங்கள், உங்களையே பலியாக்குங்கள்.'' 

இங்கே குறிப்பிடப்படுகிற "துன்பம், உழைப்பு, பலியாக்குதல்" என்பவை சேசு மரிய இருதயங்களுக்கெதிரான பாவ நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாகச் செய்யப்படும்படி சேசுவும் மாதாவும் பாத்திமா செய்தியில் கேட்டிருப்பதை உடனே ஞாபகப்படுத்துகின்றன. 

மாதா லூஸியாவிடம் : "எனக்கு எதிராகக் கட்டிக்கொள்ளப்படும் பாவங்களுக்காகத் தேவ நீதியால் தண்டிக்கப்படுகிற ஆன்மாக்களின் தொகை மிகப் பெரிதாயிருக்கிறது. அதற்குப் பரிகாரம் செய்யும்படி நான் கேட்கிறேன். இக்கருத்துக்காக உன்னையே பலியாக்கு, ஜெபி" என்று கூறினார்கள். 

மாதாவுக்கெதிரான துரோக நிந்தைகள் இப்பிந்திய காலங்களில் மிக அதிகமாயிருக்கின்றன. அவற்றிற்குப் பரிகாரம் செய்யப்படுவது பூமியில் கடவுளின் இராச்சியத்தைக் கொண்டுவரும். ஆகவேதான் ஆண்டவர் அதற்காகத் துன்பப்படவும் உழைக்கவும் பலியாகவும் நம்மை அழைக் கிறார்.

4. "இதெல்லாம் ஒருநாள் நடைபெறும்." 

நமதாண்டவர் இவ்வார்த்தைகளைச் சொல்லி சுமார் 1985 வருடங்களாகின்றன. இது நீண்ட காலமா? அல்ல. ஆயினும் அவை உடனே நடக்கும் என்று சொல்ல முடியாததால் இதெல்லாம் "ஒரு நாள் " நடைபெறும் என்று கூறினார். அந்த "ஒரு நாள்' மிக அண்மையில் இப்பொழுது வந்திருப்பதாக எல்லா அடையாளங்களும் கூறுகின்றன. 

5. "பூமியில் சர்வேசுரனுடைய இராச்சியம் வருமுன்னால் பல நூற்றாண்டுகளாய்க் கண்ணீர்களும் இரத்தமும் தப்பறைகளும் வேத கலாபனைகளும் இருட்டும் வரும்."

சர்வேசுரனுடைய இராச்சியம் என்பது மாதா கூறியுள்ள சமாதான காலம் என்று முன்பே பார்த்தோம். 

ஆண்டவர் இதைக் கூறிய நாளிலிருந்து பார்த்தால், முதலில் சர்வேசுரனுடைய இராச்சியத்திற்காக, அதாவது, நம் இரட்சணியத்திற்காக, ஆண்டவரும் மாதாவும் சிந்திய கண்ணீர்களையும் இரத்தத்தையும் நாம் மறக்க முடியாது. 

அதன்பின் ஆண்டவருடைய ஞான சரீரமாகிய திருச்சபையில் வேதசாட்சிகளும் தவசிகளும் இரத்தம் சிந்தினார்கள். தவக் கண்ணீர் சொரிந்தார்கள். சிலுவை யுத்தங்களின் நாட்களில் ஏராளமான இரத்தம் சிந்தப்பட்டது. 

16, 18, 19-ம் நூற்றாண்டுகளில் பதிதராலும், வேத விரோதிகளாலும் கிறீஸ்தவ இரத்தம் மிகுதியாகச் சிந்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் நாடுகளில் சித்திரவதைப்பட்டு ஐந்து கோடிக்கும் அதிகமான பேர் மடிந்துள்ளனர். 

திருச்சபையின் எதிரிகளால் அநேக வேதகலாபனைகள் நடந்தன. இப்பொழுது திருச்சபைக்குள்ளேயே பதிதங்களும், அகத்திலிருந்தே மேய்ப்பர்களால் ஆன்ம வேத கலாபனைகளும் நடந்து வருகின்றன. சேசு கடைசியாக "இருட்டும் வரும்'' என்று சொல்கிறார்.

5. "இருட்டும் வரும்.''