சுத்திகரிப்புத் தண்டனையின் எச்சரிப்புக்கு ஆயத்தமாயிருப்போம்.

(எச்சரிப்பு 1997-ல்?) (குறிப்பு: இந்தச் சிறு புத்தகம் 1997 -ல் எழுதப்பட்டது என்பதை நினைவில் பதித்துக் கொண்டு தொடர்ந்து வாசியுங்கள்.) 

1. வெகு அண்மையில் நாம் எதிர்பார்த்திருப்பது சுத்திகரிப்புத் தண்டனை அல்ல, அதன் எச்சரிப்பே. அது ஒரு முன்னறிவிப்பு. கடவுளிடமிருந்து வரும் அந்த எச்சரிப்பை நாம் மதித்து நம் பாவங்களையும் பாவப் பழக்கங்களையும் பாவ சந்தர்ப்பங்களையும் அடியோடு விட்டு விட்டால், ஆண்டவரை நோக்கி நம் ஆன்மாவை எழுப்பினால் - அவரிடம் வந்து விடுவோமானால் - அவரையே நேசித்தால், தண்டனை வரவே வராது. 

கடவுளை நம் அன்புத் தந்தையாக நாம் நேசித்தால், அவரை நோகச் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரம் செய்வோமல்லவா? ஆகவே முடிவில் பார்த்தால் கடவுளுக்கு நிந்தைப் பரிகாரம் அன்புடன் செய்வதே காரியம். தண்டனையையும், அதன் எச்சரிப்பையும் தவிர்க்க நாம் பரிகாரப் பக்தியில் ஈடுபட வேண்டும்.

1997-ல்? 

5 பெப்ருவரி, 1994-ல் நியூயார்க் வெளிப்படுத்தலின் செய்திகளைப் பெற்றுக் கொண்ட வெரோணிக்கா, மாதாவிடமிருந்து பெற்றுக்கொண்ட ஓர் அறிவிப்பில் : "சுத்திகரிப்பின் எச்சரிப்பு 1997-ல் கொடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. 

இதுவரையிலும் இப்படி ஒரு குறிப்பிட்ட வருடத்தில், ஒரு குறிப்பிட்ட காரியம் நடக்கும் என்று கூறப்பட்டதில்லை. 

அர்ச். ஜான் போஸ்கோவின் அறிவிப்பில் கூட 19__ம் ஆண்டில் ஒரு பெரிய காரியம் நடக்கும் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. 19__க்கு முடிவு 1999தான். அதற்குப் பின் 2000 வந்துவிடும். அவருடைய அறிவிப்பு சுத்திகரிப்பின் எச்சரிப்பா அல்லது சுத்திகரிப்பா என்பது குறிப்பிடப்படவில்லை. 1997-ல் எச்சரிப்பு வருமென்றால் அது எவ்வளவு பக்கத்தில் உள்ளது! அதற் கிடையே அதிகமான ஜெபமும் தவமும் நடைபெற்றால், இந்த எச்சரிப்பின் வேகம் குறையலாம், அல்லது பிந்த வைக்கப்படலாம், அல்லது ரத்து செய்யப்படலாம். 

இந்த எச்சரிப்பு எவ்வளவு பயங்கரமாயிருக்குமென்றால், அந்தப் பயத்திலேயே பலர் மாண்டு போவார்கள் என்று கூறப் படுகிறது. அது "ஒரு சிறிய நடுத்தீர்வை " அல்லது தனித்தீர்வையைப் போலிருக்கும் என்று கூறப்படுகிறது. 

2. எச்சரிப்பின் கடுமையும், அதன் ஆன்ம சம்பந்தமான தன்மையும் 

23 ஏப்ரல் 1973 நியூயார்க் செய்தியில் : வெரோணிக்கா பரவச நிலையில் இவ்வாறு கூறினாள்:

''வானத்தில் எல்லாம் வெடித்து விட்டது போலிருக்கிறது. அதோ ஒளிவீச்சு! வெப்பமாயிருக்கிறது, மிக உஷ்ணமாயிருக்கிறது. ஓ! எரிவது போலிருக்கிறது! இதோ அந்தக் குரல் ! அந்தக் குரல்! - மாதா சொல்கிறார்கள் அது உனக்குள் இருக்கும் குரல் என்று. இதுவேதண்டனைக்கு முன் எச்சரிப்பு: கடைசி எச்சரிப்பு.''

இச்சிறு அறிவிப்பில் நாம் முன்பு பார்த்த வேதாகம் அறிவிப்புகளும் மரியா வால்டோர்ட்டா வழியாக நமதாண்டவர் உரைத்துள்ள அறிவிப்புகளும் அடங்கி யிருக்கக் காணலாம்.

வெரோணிக்கா வெளிப்படுத்தல்: ''வானத்தில் எல்லாம் வெடித்து விட்டது போலிருக்கிறது."

இப்போது நாம் இசையாஸ் ஆகமம் 34:4-ல் கூறப்படுவதை நினைவுப்படுத்திக் கொள்ளலாம் : "விண்தலங்கள் ஏட்டைப் போல் சுருட்டப்படும்... வானத்தின் கிரகங்கள் அத்திமர இலை உதிர்வது போல் உதிரும்..." காட்சியாகமம் 6:13-ல், " அப்போது வானமானது சுருட்டப்பட்ட புத்தகம் போல் சுருங்கிப் போயிற்று" என்று கூறப்படுவதையும் நினைவில் கொள்ளலாம். வெரோணிக்கா: "அதோ ஒளிவீச்சு! வெப்பமாயிருக்கிறது...."

இப்போது நாம், நமதாண்டவர் மரியாவால்டோர்ட்டா வழியாகக் கூறுவதை சற்று நினைக்கலாம்: "இவற்றிலிருந்து ஒரு விடுதலையாக என்னுடைய திருச்சபையிலிருந்து புறப்படும் மறைபொருளான ஒளியிலிருந்து வீசப்படும் ஒளி வீச்சுகள் போலிருக்கும்.''

இங்கே நாம் அர்ச். லூக்காஸ் கூறுவதை நினைக்கலாம்: "உலகத்துக்கெல்லாம் இனி என்ன வரப் போகிறதோ என்று மனிதர்கள் பயந்து..... விடவிடத்துப் போவார்கள்'' (21-ம் அதி.). 

இதுபோல் காட்சியாகமம் 6:17-ல், "பூமியின் ராஜாக்களும்.... அடிமைகள் சுயாதீனர்கள் யாவரும்... பருவதங்களையும் (மலைகளையும்) கற்பாறைகளையும் நோக்கி..... எங்களை மறைத்துக் கொள்ளுங்கள். இதோ அவருடைய கோபாக்கினையின் நாள் வந்தது. யார் நிற்கக் கூடும்? என்றார்கள்."