பாவமன்னிப்புச் சலுகை

கிறிஸ்துவின் பாடுகளின் முக்கிய நிகழ்வுகள் சம்பவித்த இடங் களைத் தரிசிப்போருக்கு பாவமன்னிப்புச் சிறப்புச் சலுகை (Indulgence) எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுக் கூறமுடியாதுள்ளது. எனினும் 1342ஆம் ஆண்டு புனித பூமியைக் கண்காணிக்கும் பொறுப்பு பிரான்சிஸ்கன் சபைத் துறவிகளிடம் அளிக்கப்பட்டது. பிரான்சிஸ்கன் சபைத் துறவிகளே பாவமன்னிப்புச் சலுகை அளிக்கப்பட்டமைக்கு வழிசமைத்தவர்களாக இருந்திருக்கலாம். கீழ்க்குறிப்பிடப்படும் கிறிஸ்துவின் பாடுகளுடன் தொடர்புள்ள இடங்களை தரிசிப்போருக்கு பாவமன்னிப்புச் சலுகை வழங்கப்பட்டதாக Ferraris என்பவர் குறிப்பிடுகின்றார். கிறிஸ்து சிலுவை சுமந்து செல்லும்போது தமது தாயாரை எதிர்கொண்ட இடம், ஜெருசலேம் நகர்ப் பெண்களுக்கு ஆறுதல் கூறிய இடம், சீரேன் ஊர் சீமோன் கிறிஸ்துவை எதிர்கொண்ட இடம், கிறிஸ்துவின் ஆடையை படைவீரர் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்ட இடம், கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட இடம், பிலாத்துவின் இல்லம், லியேசுவின் கல்லறை என்பனவாகும்.

1520இல் திருத்தந்தை 10ஆம் லியோ அவர்கள் பிரான்சிஸ்கன் சபைத் துறவிகளின் Antwerp என்னும் இடத்திலுள்ள சேமக்காலையில் அமைந்துள்ள வியாகுல மாதாவின் திருச்சுரூபம் அமைந்துள்ள இடத்தைத் தரிசித்து, செபிப்போருக்கு 100 நாள் பாவமன்னிப்புச் சலுகை உண்டு என அறிவித்தார்.

கிறிஸ்துவின் பாடுகளின் முக்கிய நிகழ்வுகளின் காட்சி அமைப்பு களை, நிலைகள் (Stations) அல்லது ஸ்தலம் என முதன்முதலில் குறிப்பிட்டவர் William Wey என்ற ஆங்கிலேயத் திருப்பயணி ஆவார். இவர் 1458இலும் 1462இலும் ஜெருசலேமைத் தரிசித்தார். இக்காலம் வரையும் சிலுவைப்பாதைப் பயணம் கல்வாரியில் இருந்து ஆரம்பமாகி எதிர்மாறான ஒழுங்கில் இடம்பெற்று பிலாத்துவின் இல்லத்தை அடைவதுடன் முடிவு பெற்றது. எனினும் 16ஆம் நூற்றாண்டின் முற்கூறில் இருந்து பிலாத்துவின் இல்லத்திலிருந்து ஆரம்பமாகி கல்வாரியுடன் முடிவுறும் முறை வழக்கிற்கு வந்தது. இம் முறையே ஏற்றமுறை எனவும், இது தன்னிலே நிறைவான பக்தி முயற்சியெனவும் கொள்ளப் படலாயிற்று. ஜெருசலேமில் புனித நிகழ்வுகள் சம்பவித்த இடங்களைப் 15ஆம், 16ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பிரதிநிதித்துவம் செய்யும் இடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1420இல் புனித அல்வாறிஸ் என்பவர் புனித பூமியைத் தரிசித்து திரும்பிய பின்பு டோமினிக்கன் சபையினரின் துறவறமடத்தில் கிறிஸ்துவின் பாடுகளின் நிகழ்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிற்றாலயங்களை நிறுவினார். இதன் பின்பே தனித்தனி நிலைகள் (ஸ்தலங்கள்) காட்சிய மைப்பு ஓவியங்களாக வரையப்பெற்றன. இதே காலப்பகுதியில் 1468இல் Nuremberg என்னும் இடத்திலும், 1507இல் Bamberg என்னும் இடத்திலும் திருப்பாடுகளின் நிலைகள் அமைக்கப்பட்டன. Nuremberg என்னுமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த நிலைகள் கல்லில் செதுக்கப் பட்டவையாகவே காணப்பட்டன. மேலும், இவை ஏழு நிலைகளை மட்டுமே கொண்டிருந்தன. இவை ஏழும் கிறிஸ்து சிலுவையின் கீழ் விழும் காட்சிகளையே பிரதிபலித்தன. .

கிறிஸ்துவின் பாடுகளுடன் தொடர்புபட்ட ஜெருசலேமிலுள்ள பல இடங்களை வேறு இடங்களிலும் பிரதிசெய்யும் முயற்சி ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதேவேளையில், இச்சம்பவங்களை ஜெருசலேமில் நிகழ்ந்த இடங்களுக்கிடையிலான சரியான இடைவெளி யில் அமைக்க முற்பட்டனர். இதனால் புனித பூமிக்குத் திருயாத்திரை மேற்கொண்ட மக்கள் இரண்டு நிலைகளுக்கிடையில் எந்த அளவிலான தூரத்தை நடந்து கடந்தார்களோ அதே இடைவெளியை இங்கும் கடக்கும்போது தாமும் ஜெருசலேமிலுள்ள புனித பூமியின் முக்கிய இடங்களைத் தரிசிக்கின்ற உணர்வைப் பெறுகின்றனர். இவ்வாறு வெவ்வேறு இடங்களில் நிலைகளை அமைத்தோர் ஜெருசலேம் சென்று ஒவ்வொரு நிலைகளுக்கும் இடையிலுள்ள சரியான தூரங்களை அளந்து அதற்கொப்ப நிலைகளை அமைத்திருந்தாலும் வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு நிலைகளுக்கும் இடையில் லுள்ள தூரங்களில் வேறுபாடுகள் காணப்பட்டதாக அறியப்படுகின்றது.