14 நிலைகள்

14 நிலைகள் என்னும் எண்ணிக்கை எவ்வாறு ஏற்பட்டது என்பது தீர்க்கமாக அறியப்படமுடியாத விடயமாகவுள்ளது. இடத்திற்கிடம், காலத்திற்குக்காலம் எண்ணிக்கை மாறுபட்டு வந்துள்ளது. William Wey என்னும் ஆங்கில நாட்டுத் திருப்பயணி 15ஆம் நூற்றாண்டின் நடுக்கூறில் எழுதிய தமது நூலில் 14 நிலைகளைக் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் ஐந்து நிலைகள் மட்டும் தற்போது நடைமுறையிலுள்ள சிலுவைப்பாதையின் நிலைகளுடன் ஒத்தமைவுள்ளனவாகக் காணப்படுகின்றன. ஏனைய ஏழும், அதாவது, பெருஞ் செல்வந்தர் இல்லம், கிறிஸ்து நகருக்குள் நுழைந்த வாயில், திருமுழுக்குக்குளம், 'இதோ மனிதனைப் பாருங்கள்' வளைவு, புனித கன்னி மரியாவின் பாடசாலை, ஏரோதின் இல்லம், சீமோன் என்னும் பரிசேயன் இல்லம் என்பனவாகும்.

நிலையங்களின் எண்ணிக்கையை நோக்குமிடத்து, முப்பத் தொன்று, பத்தொன்பது, இருபத்தைந்து, முப்பத்தேழு என ஜெருசலே மிலேயே வேறுபட்ட எண்ணிக்கைகள் வழக்கில் இருந்துள்ளன. 1584இல் இது தொடர்பாக எழுதப்பட்ட நூலில் 12 நிலைகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பன்னிரண்டும் தற்போது வழக்கிலுள்ள 12 நிலைகளுடன் ஒத்திசைவானவையாகக் காணப்பட்டன. இவையே தற்போதைய நிலைகளுக்கு வழிகோலியிருக்கலாம் எனக் கருதப்படு கின்றது.
இந்நூல் பல ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டமை இக்கருத்திற்கு மேலும் வலுவூட்டுவதாக அமைகின்றது. எனினும் 16ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்ட செபக்கைநூலில் தற்போது நடைமுறையிலுள்ள 14 நிலைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் 16ஆம் நூற்றாண்டின் பிற்கூறுவரையும் சிலுவைப்பாதைப் பக்தி முயற்சி பொதுப்பக்தி முயற்சியாக இடம்பெற்றமைக்கான சான்றுகள் இல்லை . எனினும் புனித பூமியைத் தரிசிக்க வசதியற்றோர் நலன்கருதி ஐரோப்பாவில் Louvain என்னும் இடத்திலும் Nuremberg என்னுமிடத்திலும் கிறிஸ்துவின் பாடுகளுடன் தொடர்புபட்ட இடங்கள் பிரதியாக அமைக்கப்பட்டிருந்தன என்பது கருத்திற் கொள்ளப்படவேண்டியது.

Zualardo என்பவர் 1587இல் எழுதிய நூலில் பிரான்சிஸ்கன் சபைத் துறவிகளின் கண்காணிப்பிலுள்ள கிறிஸ்துவின் கல்லறையுடன் தொடர்பான பல செபங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது சிலுவைப் பாதை நிலைகளைப் பற்றி எந்தவிதக் குறிப்பும் இடம்பெறவில்லை. மேலும் இந்நூலில் இடம்பெறும் ஒரு முக்கிய குறிப்பு இங்கு கவனத்திற் கொள்ளப்படவேண்டும். 'இந்நிலைகளில் (பாடுகளுடன் தொடர்புள்ள சில முக்கிய இடங்கள்) மூடப்படாத தலையுடன் வழிபடவோ அல்லது தனித்துத் தியானிப்பதற்கோ அனுமதிக்கப்படவில்லை. அதாவது, துருக்கியரிடம் ஜெருசலேம் வீழ்ந்த பின்பு ஜெருசலேமில் சிலுவைப் பாதையுடன் தொடர்புபட்ட இடங்களை பக்தி வணக்கத்துடன் தரிசிக்க முடியவில்லை. மேற்குறிப்பிடப்பட்ட பின்னணியைக் கருத்திற்கொண்டு நோக்கும்போது தற்போது நடைமுறையிலுள்ள சிலுவைப் பாதையின் பதினான்கு நிலைகளும் ஜெருசலேமில் தோன்றின எனக்கொள்வதிலும் மேலாக ஐரோப்பாவில் தோற்றம் பெற்றன எனக் கொள்வதே மிகப் பொருத்தமானது. மேலும் வழக்கிலுள்ள சிலுவைப்பாதை நிலைகளின் எண்ணிக்கையும் தெரிவும் 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோற்றம் பெற்ற பக்தி இலக்கியங்களின் பின்புலத்திலேயே ஆராயப் படவேண்டியுள்ளது. இவ் எண்ணக்கருவைப் பின்னணியாகக் கொண்டு சிலுவைப்பாதை நிலைகளின் தோற்றம், தெரிவு, எண்ணிக்கை

தொடர்பான தீர்க்கமான முடிவை முன்வைக்க இவற்றின் தொடர்பை ஜெருசலேமுடன் காண்பதிலும் மேலாக ஐரோப்பாவுடன் காண்பதே அதிகம் பொருள் பொதிந்த முடிவாகக் கொள்ளப்படும்.

தற்போது வழக்கிலுள்ள சிலுவைப்பாதையின் சில நிலைகளின் தோற்றம் பற்றிய சில குறிப்புக்கள் கிடைத்துள்ளன. இவற்றுள் 2ஆம் நிலையாகிய கிறிஸ்து சிலுவையை ஏற்றுக்கொள்வதும், 10ஆம் நிலையாகிய கிறிஸ்துவின் ஆடைகள் களையப்படுதலும் ஆரம்ப காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிலுவைப்பாதைச் சிந்தனைகளா கக் கொள்ளப்படுகின்றது. எனினும் பிற்பட்ட காலங்களில் இவை இரண்டும் விடப்பட்டிருந்தன. 'இதோ மனிதனைப் பாருங்கள்' என்னும் வளைவில் இருந்து பிலாத்து வழங்கிய மரணத்தீர்ப்பு முக்கிய நிலை களில் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறாக, சிலுவைப்பாதை யின் நிலைகள் ஆரம்பத்தில் வழக்கிலிருந்து பின்பு விடப்பட்டமை, இவை ஜெருசலேம் நகரிலிருந்து தோன்றியவை எனக் கொள்வதிலும் மேலாக பக்தி முயற்சிகள் பற்றிய கையேடுகளிலிருந்து தோன்றியவை என்னும் கருத்தே மிகப்பொருத்தமானதாகத் தென்படுகின்றது.

கிறிஸ்து சிலுவையின் கீழ் விழுகின்ற, தற்போது வழக்கிலுள்ள நிலைகளான 3ஆம் நிலை, 7ஆம் நிலை, 9ஆம் நிலை என்பன Nuremberg என்னுமிடத்தில் Kraffit என்பவரால் அமைக்கப்பட்ட நிலை களில் இருந்து எடுக்கப்பட்டவை எனக் கொள்ளுதல் பொருத்தமானது. முன்பு கூறப்பட்டுள்ள ஏழு நிலைகளும் கிறிஸ்து சிலுவையின் கீழ் விழுகின்ற பாங்கில் அல்லது விழுந்த பாங்கில் அமைக்கப்பட்டிருந் தன. மேற்குறிப்பிட்ட மூன்று நிலைகளையும் தவிர்ந்த ஏனைய நான்கு நிலைகளுக்கும் பிரதியீடாக கிறிஸ்து தமது தாயாரைச் சந்திப்பது, சீரேன் ஊர் சீமோன் கிறிஸ்துவை எதிர்கொள்வது, வெரோணிக்கா, ஜெருசலேம் பெண்கள் ஆகியோரைச் சந்திக்கும் நிலைகள் தோற்றம் பெற்றன. மத்திய காலத்து வரலாற்று ஆசிரியர்கள் சிலரின் கிறிஸ்து சீரேன் ஊர் சீமோனை சந்திப்பதும், ஜெருசலேம் நகர்ப் பெண்களைச் சந்திப்பதும், ஒரே நிகழ்வு எனக் குறிப்பிட, வேறுபல ஆசிரியர்கள் இவற்றைத் தனித்தனி நிகழ்வுகளாகவே குறிப்பிட்டுள்ளனர். ஆரம்ப காலக் குறிப்பேடுகளில் வெரோனிக்கா பற்றிய நிகழ்வு குறிப்பிடப்பட வில்லை. தற்போது வழக்கிலுள்ள சிலுவைப்பாதை நிலைகளில் வெரோனிக்கா கிறிஸ்துவை சந்திப்பது 6வது நிலையில் எனக் குறிப்பிடப்படுகின்றது. ஆரம்பகாலக் குறிப்பேடுகளில் இது கிறிஸ்து கல்வாரிக்கு ஏறுவதற்கு முன்பு இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.

1799இல் வியன்னா மறை மாவட்டத்தில் வழக்கிலிருந்த 11 நிலைகள் சற்று வேறுபட்டவையாகவே காணப்படுகின்றன. அதன்படி 1. கிறிஸ்து பூங்காவனத்தில் வேதனைப்பட்டது 2. யூதாசினால் காட்டிக் கொடுக்கப்பட்டது 3. கற்றூணில் கட்டி அடிக்கப்பட்டது 4. முள்முடி தரிக்கப்பட்டது 5. மரணத்திற்குத் தீர்ப்பிடப்பட்டது 6. சீரேன் ஊர் சீமோனை எதிர்கொண்டது 7. ஜெருசலேம் நகர்ப் பெண்களை எதிர்கொண்டது 8. காடியைச் சுவைத்தது 9. சிலுவையில் அறையப்பட்டது 10. சிலுவையில் மரணித்தது 11. உடல் சிலுவையினின்று இறக்கப்பட்டது

இவற்றுள் ஐந்து நிலைகளே தற்போது வழக்கிலுள்ள சிலுவைப் பாதை நிலைகளில் இடம்பெறுகின்றன.