எபிரேயர்

அதிகாரம் 01

1 பற்பல முறையிலும் பல்வேறு வகையிலும் முற்காலத்தில் இறைவாக்கினர் வாயிலாக நம் முன்னோரிடம் பேசிய கடவுள்,

2 நாம் வாழும் இவ்விறுதி நாட்களில் நம்மிடம் தம் மகனின் வாயிலாகவே பேசியுள்ளார். இவரை எல்லாவற்றிற்கும் உரிமையாளராக்கினார். இவர் வழியாகவே உலகங்களையெல்லாம் படைத்தார்.

3 கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய உள்ளியல்பின் சாயலாகவும் விளங்கும் இவர் தம்முடைய வல்லமை மிக்க வார்த்தையால் எல்லாவற்றையும் தாங்கி வருகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்திய பின்னர் உன்னதங்களில் மகத்துவமிக்கவரின் வலப்புறத்தில் அமர்ந்துள்ளார்.

4 இவ்வாறு அவர் எவ்வளவுக்கு வான தூதர்களைவிட மேலான பெயரை உரிமையாகப் பெற்றாரோ அவ்வளவுக்கு அவர்களைவிட மேன்மை அடைந்தார்.

5 ஏனெனில் 'நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்' என்றும், 'நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன். அவர் எனக்கு மகனாயிருப்பார்' என்றும் எப்போதாவது வானதூதருள் யாரிடமாவது சொன்னதுண்டா?

6 மேலும் தம் தலைப்பேறானவரை இவ்வுலகிற்கு அனுப்பிவைத்தபொழுது, "கடவுளின் தூதர்கள் அனைவரும் அவரைத் தொழுவார்களாக" என்றார்.

7 வான தூதர்களைக் குறித்து, "தம் தூதர்களை ஆவிகளாகவும், தம் ஊழியர்களைத் தீயின் தழல்களாகவும் செய்கிறார்" என்று கூறுகிறார்.

8 மகனைக் குறித்துச் சொன்னதோ, "இறைவா, உம் அரியணை என்றென்றும் உளது. உம்முடைய அரசச் செங்கோல் கோணாச் செங்கோலே.

9 இறைநெறியை விரும்பினீர்; தீ நெறியை அருவருத்தீர்; ஆதலால் இறைவா, உம் கடவுள், உம் துணைவர்களினும் மேலாக உம்மை மதித்து அக்களிப்புத் தைலத்தால் உம்மை அபிஷுகம் செய்தார்."

10 மீண்டும், "ஆண்டவரே, நீரே ஆதியில் மண்ணுலகிற்கு அடித்தளம் இட்டீர். விண்ணுலகும் உமது கை வேலையே.

11 அவை அழிந்துபோம்; நீரோ நிலைத்திருக்கிறீர். அவையெல்லாம் ஆடைபோல் பழமையாய்ப்போம்.

12 போர்வையைப்போல் அவற்றைச் சுருட்டிப் போடுவீர். ஆடைபோல் அவை மாற்றப்படும். நீரோ இருந்தவாறே இருக்கிறீர். உம் வாழ்நாளுக்கு முடிவேயிராது" என்றார்.

13 வானதூதர்களுள் யாருக்காவது எப்போதாவது, "நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்புறம் அமரும்" என்று சொன்னதுண்டா?

14 அவர்களனைவரும் ஊழியம் செய்யும் ஆவிகளல்லவா? மீட்பை உரிமைப்பேறாகப் பெறுபவர்களுக்குப் பணிபுரிய அனுப்பப்பட்டவர்களல்லவா?

அதிகாரம் 02

1 ஆகையால், வழி தவறிப்போகாதவாறு நாம் கேட்டறிந்தவற்றின்மேல் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும்.

2 ஏனெனில், வானதூதர் வாயிலாகத் தெரிவிக்கப்பட்ட திருச்சட்டமே கட்டுப்படுத்த வல்லதாய் இருந்ததென்றால். அதற்கு எதிரான எத்தகைய குற்றமும் கீழ்ப்படியாமையும் தக்க தண்டனையைப் பெற்றுக்கொண்டதென்றால், இத்துணைப் பெரிய மீட்பைப்பற்றிக் கவலையற்று இருப்போமானால் நாம் எப்படித் தப்பமுடியும்?

3 முதன்முதல் ஆண்டவராலே அறிவிக்கப்பட்ட இந்த மீட்பைப்பற்றி, அவருடைய வார்த்தையைக் கேட்டவர்களும் நமக்கு உறுதியாகச் சான்று கூறியுள்ளனர்.

4 கடவுளும், அருங்குறிகளாலும் அற்புதங்களாலும் பல்வேறு புதுமைகளாலும், தம் விருப்பத்தின்படி அளித்த பரிசுத்த ஆவியின் கொடைகளாலும் அவர்களுடைய சாட்சியத்தை உறுதிப்படுத்தினார்.

5 நாம் குறிப்பிடும் புதிய உலகைக் கடவுள் வான தூதர்களுடைய அதிகாரத்திற்கு உட்படுத்தவில்லை.

6 அதற்குச் சான்றாக ஓரிடத்தில் எழுதியுள்ளதாவது: "மனிதன் யார், நீர் அவனை நினைவுகூர! மனுமகன் யார், நீர் அவனைத் தேடிவர!

7 நீர் அவனைச் சிறிது காலத்திற்கு வானதூதர்களைவிடத் தாழ்ந்தவனாக்கினீர். மகிமையும் மாட்சியும் அவனுக்கு முடியெனச் சூட்டினீர். அனைத்தும் அவனுக்கு அடிபணியச் செய்தீர். "

8 அனைத்தையும் அவனுக்குப் பணியச் செய்ததால் பணியாமலிருக்க எதையும் விடவில்லை. ஆயினும் அனைத்தும் மனிதனுக்கு இன்னும் பணிந்திருக்கக் காணோம்.

9 நாம் காண்பது, சிறிது காலத்திற்கு வான தூதர்களைவிடத் தாழ்ந்தவராக்கப்பட்ட ஒருவரைத்தான். இவர் இயேசுவே. இவர் பாடுபட்டு இறந்ததால், 'மகிமையும் மாட்சியும்' இவருக்கு முடியெனச் சூடப்பட்டதையும் காண்கிறோம். இங்ஙனம் கடவுளின் அருளால் அனைவருடைய நன்மைக்காகவும் இவர் சாவுக்குட்பட வேண்டியிருந்தது.

10 யாருக்காக எல்லாம் உள்ளனவோ, யாரால் எல்லாம் உண்டாயினவோ அவர், புதல்வர் பலரை மகிமைக்கு அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களுடைய மீட்பைத் தொடங்கி வைத்த இயேசுவைப் பாடுகளால் நிறைவுள்ளவராக்கியது தகுதியே.

11 பரிசுத்தமாக்குபவர், பரிசுத்தமாக்கப்படுபவர்கள் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனாலே இறைமகன் அவர்களைச் 'சகோதரர்கள் ' என்றழைக்க வெட்கப்படவில்லை.

12 'என் சகோதரர்களுக்கு உம் பெயரை அறிவிப்பேன்; சபையின் நடுவே உமக்குப் புகழ் பாடுவேன் ' என்றும்,

13 'நான் அவர்மேல் நம்பிக்கை வைப்பேன்' என்றும், ' இதோ நானும் கடவுள் எனக்களித்த பிள்ளைகளும்' என்றும் கூறினாரன்றோ?

14 பிள்ளைகளுக்கு ஒரே ஊனும் இரத்தமும் இருப்பதால், அவரும் அதே ஊனும் இரத்தமும் பெற்றுக்கொண்டார். இவ்வாறு சாவைத்தன் கையில் கொண்டிருந்தவனை, அதாவது அலகையை, சாவின் வழியாகவே அழித்துவிட்டார்.

15 சாவுக்கு அஞ்சியதால் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனத்தில் கட்டுண்டிருந்தவர்களை விடுவித்தார்.

16 வான தூதர்களுக்கு அவர் துணை நிற்கவில்லை என்பதை கண்கூடு. ஆபிரகாமின் வழி வந்தவர்களுக்கே அவர் துணை நின்றார்.

17 ஆகையால் மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு, கடவுளைச் சார்ந்தவற்றில் அவர் இரக்கமுள்ளவரும் நம்பிக்கைக்குரியவருமான தலைமைக் குருவாகும்படி, எல்லாவற்றிலும் சகோதரர்களைப்போல் ஆக வேண்டியதாயிற்று.

18 அவ்வாறு தாமே சோதனைக்குள்ளாகித் துன்பப்பட்டதனாலேயே சோதிக்கப்படுகிறவர்களுக்கு அவரால் உதவிசெய்ய முடிகிறது.

அதிகாரம் 03

1 எனவே, பரிசுத்த சகோதரர்களே, வானக அழைப்பில் பங்கு கொண்டுள்ளவர்களே, நாம் வெளிப்படையாய் அறிக்கையிடும் அப்போஸ்தலரும் தலைமைக் குருவுமான இயேசுவைப் பற்றிச் சிந்தியுங்கள்.

2 இறைவனின் வீடு முழுவதையும் கண்காணிப்பதில் மோயீசன் உண்மையுள்ளவராக இருந்ததுபோல், இவரும் தம்மை ஏற்படுத்திய இறைவனுக்கு உண்மையுள்ளவராக இருக்கிறார்.

3 ஆனால், வீடு கட்டினவன் வீட்டைவிட எவ்வளவுக்கு மதிப்புப் பெறுகிறானோ, அவ்வளவுக்கு இவர் மோயீசனைவிட மகிமைக்குரியவர்.

4 ஒவ்வொரு வீட்டுக்கும் அதைக் கட்டியவன் ஒருவன் இருக்கவேண்டும். உலகெல்லாம் கட்டி அமைத்தவர் கடவுளே.

5 மோயீசன் அவருடைய வீடு முழுவதையும் கண்காணிப்பதில் உண்மையுள்ளவராயிருந்தது ஊழியன் என்னும் முறையில்தான். இறைவன் அறிவித்தவற்றிற்குச் சாட்சியம் பகர்ந்ததே அவர் செய்த ஊழியம்.

6 கிறிஸ்துவோ தம் சொந்த வீட்டின்மேல் அதிகாரம் பெற்ற மகன் என்ற முறையில் உண்மையுள்ளவராய் இருந்தார். அவருடைய வீடு நாம்தாம்; ஆனால். நம்பிக்கையில் ஊன்றிய மகிமையையும் துணிவையும் உறுதியாய்ப்பற்றி நிற்கவேண்டும்.

7 எனவே, பரிசுத்த ஆவி கூறுவதுபோல், 'இன்று நீங்கள் அவர்தம் குரலைக் கேட்பீர்களாகில்

8 பாலைவனத்தின்கண் சோதனை நாளன்று கிளர்ச்சியின் போது இருந்தது போல் நீங்கள் அடங்கா உள்ளத்தினராய் இராதீர்கள்.

9 உங்கள் முன்னோர் அங்கே நாற்பது ஆண்டளவு என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.

10 அதனாலேயே அந்தத் தலைமுறைமீது சீற்றம் கொண்டு, 'எந்நாளும் தவறுகின்றது இவர்கள் உள்ளம். என் வழிகளையோ இவர்கள் அறியவில்லை' என்றேன்.

11 ஆகவே நான் சினங்கொண்டு 'எனது இளைப்பாற்றியை அவர்கள் அடையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டேன்."

12 சகோதரரே, உயிருள்ள கடவுளை மறுதலிக்கச் செய்யும் அவிசுவாசமான தீய உள்ளம் உங்களுள் யாருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

13 உங்களுள் எவனும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு அடங்கா உள்ளத்தினன் ஆகாதவாறு 'இன்று' எனக் குறிப்பிடும் காலம் நீடிக்கும் வரையில் நாடோறும் ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்.

14 ஏனெனில், நாம் கிறிஸ்துவோடு பங்கு பெற்றவர்களானோம்; ஆனால் தொடக்கத்தில் நமக்கிருந்த நம்பிக்கையை இறுதிவரை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

15 "இன்று நீங்கள் அவர் தம் குரலைக் கேட்பீர்களாகில் கிளர்ச்சியின் போது இருந்ததுபோல் நீங்கள் அடங்கா உள்ளத்தினராய் இராதீர்கள் " என்ற பகுதியில்,

16 குரலைக் கேட்டும் 'கிளர்ச்சி' செய்தவர்கள் யார்? மோயீசனின் தலைமையில் எகிப்தினின்று வெளியேறிய மக்கள் அனைவருந்தானே?

17 'நாற்பது ஆண்டளவு கடவுள் சீற்றம் கொண்டது' யார்மீது? பாவம் புரிந்தவர்கள் மீதன்றோ? அவர்களுடைய பிணங்களும் பாலைவனத்தில் விழுந்துகிடந்தன.

18 மீண்டும், 'எனது இளைப்பாற்றியை அடையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறியது யாருக்கு? கீழ்ப்படியாத மக்களுக்கு அன்றோ?

19 விசுவாசமின்மையால்தான் அவர்கள் அதை அடைய முடியவில்லை எனத் தெரிகிறது.

அதிகாரம் 04

1 ஆகையால், தம் இளைப்பாற்றியை அடையச் செய்வதாக இறைவன் அளித்த வாக்குறுதி நிலைத்தேயிருப்பினும், உங்களுள் எவரேனும் அதை வந்தடையத் தவறிவிடக் கூடுமோ என அஞ்சுவோமாக.

2 அவர்களைப் போலவே நமக்கும் இந்த நல்ல செய்தி அறிவிக்கப்பட்டது அவர்கள் கேட்ட வார்த்தையோ அவர்களுக்குப் பயன்படவில்லை. ஏனென்றால், கேட்டவர்கள் அவ்வார்த்தையை விசுவாசத்தோடு கேட்கவில்லை.

3 இனி அந்த இளைப்பாற்றியை அடையப்போவது விசுவாசிகளான நாமே. அதைக் குறித்துத்தான் "நான் சினங்கொண்டு, 'எனது இளைப்பாற்றியை அவர்கள் அடையவே மாட்டார்கள் ' என்று ஆணையிட்டேன்" என எழுதியுள்ளது. ஆனால் உலகம் உருவானதோடு கடவுளுடைய வேலைகள் முடிந்துவிட்டன.

4 ஏனென்றால், ஓரிடத்தில் ஏழாம் நாளைப்பற்றி, " தம் வேலைகள் எல்லாம் முடித்து, கடவுள் ஏழாம் நாள் இளைப்பாறினார் " என்று எழுதியுள்ளது.

5 மேலும் மேற்சொன்ன வசனத்தில், "அவர்கள் எனது இளைப்பாற்றியை அடையவே மாட்டார்கள் என்று" இருக்கிறது.

6 ஆகவே, அந்த இளைப்பாற்றியை அடைய வேண்டியவர்கள் இருக்கிறார்கள் என்பது திண்ணம். ஆனால் அந்த நற்செய்தியை முதன்முதல் கேட்டவர்கள் தங்கள் கீழ்ப்படியாமையால் அந்த இழைப்பாற்றியை அடையவில்லை.

7 ஆகையால்தான் 'இன்று' என வேறொரு நாளைக் குறிப்பிடுகிறார். இந்த நாளைக் குறித்தே, நீண்ட காலத்திற்குப் பின்னர் தாவீதின் நூலிலே மேலே கூறிய வசனத்தில், "இன்று நீங்கள் அவர்தம் குரலைக் கேட்பீர்களாகில் அடங்கா உள்ளத்தினராய் இராதீர்கள்" என்கிறார்.

8 யோசுவா அவர்கள் இளைப்பாற்றியை அடையச் செய்திருந்தால் அதன் பின்னர் இறைவன் வேறொரு நாளைப்பற்றிப் பேசியிருக்கமாட்டார்.

9 ஆதலால், கடவுளுடைய மக்களுக்கு இளைப்பாற்றியின் காலம் இன்னும் வர வேண்டியிருக்கிறது.

10 ஏனெனில், இறைவனின் இளைப்பாற்றியை அடைந்துவிட்டவன், அவர் தம் வேலையை முடித்து இளைப்பாறுகிறான்.

11 ஆதலால், அவர்கள் காண்பித்த கீழ்ப்படியாமையைப் பின்பற்றி யாரும் அதே குற்றத்தில் விழாதபடிக்கு அந்த இளைப்பாற்றியை அடைய ஆர்வத்தோடு முயல்வோமாக.

12 கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல்மிக்கது, இரு பக்கமும் கருக்கு வாய்ந்த எந்த வாளினும் கூர்மையானது. ஆன்மாவின் உள்ளாழத்தையும் ஆவியின் உள்ளாழத்தையும் ஊடுருவுகிறது; மூட்டு, மூளைவரை எட்டுகிறது; உள்ளத்தின் கருத்துக்களையும் எண்ணங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.

13 அவரது பார்வைக்கு மறைந்திருக்கும் படைப்பெதுவும் இல்லை. யாருக்கு நாம் கணக்குக் கொடுக்க வேண்டுமோ, அவரது கண்ணுக்கு அனைத்தும் வெளிப்படையாகவும் திறந்தவையாகவும் உள்ளன.

14 ஆகையால், வானங்களையெல்லாம் கடந்து சென்ற ஒருவரை -- அதாவது, கடவுளின் மகனாகிய இயேசுவை தனிப்பெரும் தலைமைக் குருவாகப் பெற்றுள்ள நாம், நாம் அறிக்கையிடும் விசுவாசத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்வோமாக.

15 நம்முடைய குறைபாடுகளைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்லர், நம் தலைமைக் குரு. மாறாக, அவர் நம்மைப்போல் ஒருவராயிருப்பதால், பாவம் தவிர, மற்றெல்லாவற்றிலும் சோதனை, துன்பங்களுக்கு உட்பட்டவரானார்.

16 தக்க வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும் இரக்கத்தைப் பெறவும், இறை அருளின் அரியணையை அணுகிச் செல்லத் துணிவோமாக.

அதிகாரம் 05

1 தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடையிலிருந்து தேர்ந்துகொள்ளப்பட்டு, பாவங்களுக்காகப் பலிகளையும் காணிக்கைகளையும் செலுத்துவதற்காகக் கடவுளைச் சார்ந்தவற்றிற்கென மனிதர்களின் சார்பாக ஏற்படுத்தப்படுகிறார்.

2 தாமே வலுவின்மைக்கு ஆளாயிருப்பதால், அறியாமையால் நெறி தவறிச் செல்வோரைப் பொறுமையோடு நடத்தக்கூடியவராயிருக்கிறார்.

3 அவர் எவ்வாறு மக்களுக்காகப் பலி செலுத்துகிறாரோ, அவ்வாறே தம் வலுவின்மையின் பொருட்டு தமக்காகவும் பாவப் பரிகாரப் பலி ஒப்புக்கொடுக்கவேண்டும்.

4 மேலும் யாரும் இவ்வுயர் நிலையைத் தானே தனக்கு உரியதாக்கிக்கொள்வதில்லை; ஆரோனைப் போன்று கடவுளிடமிருந்து அழைப்புப் பெறவேண்டும்.

5 அவ்வாறே கிறிஸ்துவும் தலைமைக் குருவாகும் மகிமைக்குத் தம்மையே உயர்த்திக்கொள்ளவில்லை. "நீரே என் மகன் இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்" என்று கூறியவரே அந்த மகிமையை அளித்தார்.

6 அங்ஙனமே மற்றோரிடத்தில், "மெல்கிசேதேக்கின் முறைமைப்படி என்றென்றும் குருவாயிருக்கிறீர்" எனவும் கூறுகிறார்.

7 அவர் இம்மையில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து மீட்க வல்லவரிடம் பலத்த குரலெழுப்பி, கண்ணீர் சிந்தி, வேண்டுதல்களையும் மன்றாட்டுக்களையும் ஒப்புக்கொடுத்தார். அவருக்கிருந்த பயபக்தியை முன்னிட்டு இறைவன் அவருக்குச் செவிசாய்த்தார்.

8 அவர் இறைமகனாய் இருந்தும், பாடுகளினால் கீழ்ப்படிதலை நேரில் துய்த்துணர்ந்தார்.

9 இவ்வாறு, நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அனைவருக்கும் முடிவில்லா மீட்பின் காரணரானார்.

10 'மெல்கிசேதேக் முறைமைப்படி தலைமைக் குரு' எனக் கடவுளால் பெயரிடப்பட்டவர் இவரே.

11 இதைப்பற்றிப் பேச வேண்டியது நிரம்ப உள்ளது; விளக்கம் கூறுவதோ அரிது; ஏனெனில், நீங்கள் அறிவு மழுங்கியவர்களாகிவிட்டீர்கள்.

12 இதற்குள் பிறர்க்குக் கற்பிக்க வேண்டிய நீங்கள், கடவுளுடைய வாக்குகளின் அரிச்சுவடியையே மீளவும் கற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது பால்தான்; கெட்டியான உணவு அன்று.

13 இந்த நிலைக்கு நீங்கள் வந்து விட்டீர்கள். பால் குடிக்கிற எவனும் ஒரு குழந்தையே; இறைவனுக்கு ஏற்ற வாழ்வு பற்றிய படிப்பினையில் அவன் தேர்ச்சியற்றவன்.

14 பெரியவர்களுக்குத் தகுந்ததோ கெட்டி உணவு. அவர்களுக்கு நன்மை தீமை அறிவதற்குப் பயிற்சி பெற்ற பகுத்தறிவு இருக்கிறது.

அதிகாரம் 06

1 ஆகையால் கிறிஸ்துவைப்பற்றிய படிப்பினையின் தொடக்க நிலையைவிடுத்து, முதிர்நிலைக்குச் செல்வோம் சாவுக்குரிய செயல்களிலிருந்து மனந்திரும்புதல்,

2 கடவுளில் விசுவாசம், கழுவுதல் சடங்குகளையும் கைகளை விரித்தலையும் பற்றிய போதனை, இறந்தோர் உயிர்த்தெழுதல், முடிவில்லா வாழ்வுக்கான தீர்ப்பு ஆகியவற்றைப் போதித்து மறுபடியும் அடிப்படை இடவேண்டியதில்லை.

3 கடவுளுக்கு விருப்பமானால் இம் முதிர் நிலைப் படிப்பினையை இனி விளக்குவோம்.

4 ஒருமுறை ஒளியைப் பெற்று வானகக் கொடையைச் சுவைத்தவர்கள், பரிசுத்த ஆவியில் பங்கு பெற்றவர்கள்,

5 கடவுளின் நற்போதனையையும், வரவிருக்கும் உலகத்தைச் சார்ந்த ஆற்றல்களையும் துய்த்தவர்கள்,

6 நெறி பிறழ்ந்து விடின், அவர்கள் மீண்டும் மனந்திரும்பிப் புத்துணர்வு பெறச் செய்வது அரிது.

7 ஏனெனில், அவர்கள் கடவுளுடைய மகனைத் தாங்களே சிலுவையில் அறைந்து அவரை வெளிப்படையாக இகழ்பவர்களாகின்றனர்.

8 பெய்யும் மழைநீரை உள்ளிழுத்துக் குடியானவர்களுக்குப் பயன்தரும் முறையில் பயிரை முளைப்பிக்கும் நிலம் கடவுளுடைய ஆசி பெறும். மாறாக முட்செடிகளையும் முட்புதர்களையும் முளைப்பித்தால் அந்நிலம் பயனற்றது. அது பெறுவது சாபமே. தீக்கிரையாவதே அதன் முடிவு.

9 அன்புக்குரியவர்களே, இவ்வாறு நாம் பேசினபோதிலும், உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் அவ்வளவு கேடான நிலையில் இல்லை; மீட்பின் வழியில்தான் இருக்கின்றீர்கள் என்பது என் உறுதியான நம்பிக்கை.

10 ஏனெனில், கடவுள் நீதியற்றவர் அல்லர். இறைமக்களுக்கு நீங்கள் முன்பு செய்த பணிவிடையிலும், இப்போது செய்துவரும் பணிவிடையிலும் கடவுளின் பெயருக்கு அன்பு காட்டிச் செய்ததை அவர் மறக்கமாட்டார்.

11 நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை முற்றும் உறுதி பெறும்படி உங்களுள் ஒவ்வொருவனும் இறுதிவரை அதே ஆர்வம் காட்டவேண்டுமென்று விரும்புகிறோம்.

12 நீங்கள் சோம்பலுக்கு இடம் தராமல் விசுவாசத்தினாலும் பொறுமையினாலும் வாக்குறுதிகளை உரிமையாக்கிக் கொண்டவர்களைப் பின்பற்ற வேண்டும்.

13 அந்த வாக்குறுதிகளைக் கடவுள் ஆபிரகாமுக்கு அளித்தபோது, ஆணையிட்டழைப்பதற்குத் தம்மைவிட மேலானவர் ஒருவரும் இல்லாததால், தாமே தம் பெயரால் ஆணையிட்டு, "என்மேல் ஆணை: என் ஆசி உன்மீதிருக்கும்.

14 உன்னைப் பெருந்திரளாய்ப் பெருகச் செய்வேன் " என்றார்.

15 இதன்படி ஆபிரகாம் பொறுமையோடு காத்திருந்தபின், கடவுள் வாக்களித்ததைப் பெற்றுக்கொண்டார்.

16 தங்களைவிட மேலான ஒருவர் பெயரால்தான் மக்கள் ஆணையிடுவர். எல்லாச் சச்சரவுகளிலும் ஆணையிட்டே முடிவு கட்டுவர். அந்த முடிவை ஆணை உறுதிப்படுத்தும்.

17 அப்படியிருக்க, கடவுள் தமது வாக்குறுதியின் உரிமையாளர்களுக்குத் தம் திட்டத்தின் மாறாத்தன்மையை இன்னும் தெளிவாய்க் காண்பிக்க விரும்பி, ஆணையிட்டுத் தாமே பிணையம் நின்றார்.

18 கடவுள் நம்மை ஏமாற்ற முடியாதவாறு, மாறாத்தன்மை கொண்ட இரு பிணைப்புக்கள் இவ்வாறு ஏற்பட்டன. இங்ஙனம் இறைவன் தம்முடைய அடைக்கலத்தைத் தேடும் நமக்கு நம் கண்முன் நிற்கும் நம்பிக்கையைப் பற்றிக்கொள்வதற்குப் பேரூக்கம் அளிக்க விரும்பினார்.

19 அந்த நம்பிக்கைதான் நம் ஆன்மாவுக்கு நங்கூரம்போல் உள்ளது. அது உறுதியானது. நிலையானது. அந்த நம்பிக்கை திரைச்சீலைக்கு அப்பாலும் எட்டியிருக்கிறது.

20 மெல்கிசேதேக் முறைமைப்படி இயேசு என்றென்றும் தலைமைக் குருவாகி, நம் சார்பாக நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச் சீலையைக் கடந்து சென்றிருக்கிறார்.

அதிகாரம் 07

1 இந்த மெல்கிசேதேக் சாலேம் ஊர் அரசர்; உன்னத கடவுளின் குரு; அரசர்களை வெட்டி வீழ்த்தித் திரும்பி வந்துகொண்டிருந்த ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தவர்.

2 ஆபிரகாமிடமிருந்து எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைப் பெற்றுக் கொண்டவர். முதலாவது, நீதியின் அரசர் என்பது அவருடைய பெயரின் பொருள்; பின்னர் அவர் சாலேம் அரசர்; அதற்கு அமைதியின் அரசர் என்பது பொருள்.

3 இவருக்குத் தந்தையில்லை, தாயில்லை, தலைமுறை வரலாறில்லை, வாழ்நாளுக்குத் தொடக்கமுமில்லை, முடிவுமில்லை; இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்: அவரைப்போல் என்றென்றும் குருவாக நிலைத்திருக்கிறார்.

4 குலத்தந்தையாகிய ஆபிரகாமே போரில் கைப்பற்றிய பொருட்களுள் சிறந்தவற்றில் பத்தில் ஒரு பங்கை அவருக்கு அளித்தாரெனில், அவர் எத்துணை உயர்ந்தவர் என்பதை எண்ணிப் பாருங்கள்.

5 பொதுமக்களிடமிருந்து திருச்சட்டப்படி பத்திலொரு பங்குபெற, லேவியின் குலத்தவருள் குருப்பணி ஏற்பவர்களுக்குக் கட்டளையுண்டு. ஆபிரகாமின் மரபில் தோன்றிய தம் சகோதரர்களிடமிருந்தும் லேவியர் இவ்வாறு பெறுகின்றனர்.

6 ஆனால் அவர்களுடைய மரபைச் சாராத மெல்கிசேதேக் ஆபிரகாமிடமிருந்து பத்திலொரு பங்கு பெற்றார்; இறைவனின் வாக்குறுதிகளைப் பெற்றிருந்த ஆபிரகாமுக்கே ஆசி அளித்தார்.

7 சிறியவனுக்குப் பெரியவன் ஆசி அளிப்பதே முறை. 'இதை யாரும் மறுக்க முடியாது.

8 மேலும் பத்திலொரு பங்கு வாங்கும் லேவியர்கள் மாண்டுபோகும் மனிதர்கள்; ஆனால் மெல்கிசேதேக் உயிருள்ளவர் எனச் சாட்சியம் பெற்றவர்.

9 அன்றியும், பத்திலொரு பங்கு வாங்கும் லேவியும் ஆபிரகாமின் வழியாகப் பத்திலொரு பங்கு கொடுத்தார் என்று சொல்லலாம்.

10 ஏனெனில், மெல்கிசேதேக் ஆபிரகாமை எதிர்கொண்டபோது, லேவி தம் முப்பாட்டனுக்குள் இருந்தார்.

11 லேவியக் குருத்துவத்தின் வழியாக நிறைவு உண்டானதெனில் ஆரோனின் முறைமைப்படி யென்றில்லாமல், 'மெல்கிசேதேக்கின் முறைமைப்படி' மற்றொரு குருவை ஏற்படுத்தவேண்டிய தேவையென்ன? -- மக்களுக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டம் இந்த லேவியக் குருத்துவத்தையே ஆதாரமாகக் கொண்டிருந்தது.

12 இனி, குருத்துவம் மாற்றமடைந்தால், சட்டமும் கட்டாயமாக மாற்றம் அடைய வேண்டும்--

13 உள்ளபடி, இவையெல்லாம் யாரைக் குறித்துச் சொல்லப்பட்டனவோ, அவர் வேறொரு மரபைச் சேர்ந்தவர். அம்மரபில் எவருமே பீடத்தில் திருப்பணி செய்ததில்லை.

14 நம்முடைய ஆண்டவர் யூதாவின் மரபில் தோன்றினார் என்பது தெரிந்ததுதானே? மோயீசன் குருக்களைப் பற்றிப் பேசியபோது, அந்த மரபைக் குறித்து ஒன்றும் குறிப்பிடவில்லை.

15 இப்படித் தோன்றிய அவ்வேறொரு குரு மெல்கிசேதேக்குக்கு ஒப்பானவராய்த் திருச் சட்டத்திலுள்ள கட்டளைப்படி இயல்பான பிறப்பினாலன்று,

16 அழியாத உயிரின் வல்லமையால் குருவாய்த் தோன்றினார் என்பதை நினைக்கும்போது, மேற்கூறியது இன்னும் தெளிவாகிறது.

17 "நீர் மெல்கிசேதேக் முறைமைப்படி, என்றென்றும் குருவாயிருக்கிறீர் " என்னும் சாட்சியம் உண்டன்றோ?

18 ஆம், முன்னைய கட்டளைக்கு வலிமையோ பயனோ இல்லாததால் அது நீக்கப்பட்டது.

19 ஏனெனில், திருச்சட்டம் எதையும் நிறைவுள்ளதாக்கவில்லை. அதைவிடச் சிறந்ததொரு நம்பிக்கை இப்போது தோன்றுகிறது. இந்த நம்பிக்கையால் நாம் கடவுளை அணுகுகிறோம்.

20 மேலும், ஆணையிட்டு அளிக்கப்பட்ட குருத்துவம் எவ்வளவோ உயர்ந்ததன்றோ?

21 லேவியர்கள் குருக்கள் ஆனபோது ஆணை எதுவும் இடப்படவில்லை. இவரோ, "ஆண்டவர் ஆணையிட்டார்; மனம் வருந்தார்; நீர் என்றென்றும் குருவாயிருக்கிறீர்" என்று தமக்குக் கூறியவரின் ஆணையால் குருவானார்.

22 இங்ஙனம் இயேசு எவ்வளவோ மேலான உடன்படிக்கையின் பிணையாகியுள்ளார்.

23 அன்றியும், அந்தக் குருக்கள் நிலைத்திராதபடி சாவு தடுத்ததால் குருக்கள் பலர் ஏற்படலாயினர்.

24 இவரோ என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவத்தைப் பெற்றுள்ளார்.

25 ஆகையால் தம் வழியாகக் கடவுளை அணுகிச் செல்வோரை முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார். அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே வாழ்கிறார்.

26 நமக்கேற்ற தலைமைக் குரு எத்தகையவரெனில்: புனிதர், குற்றமில்லாதவர், மாசற்றவர், பாவிகளினின்று பிரிக்கப்பட்டு வானகங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்.

27 ஏனைய தலைமைக் குருக்கள் செய்வதுபோல், இவர் முதன்முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும் நாள்தோறும் பலி ஒப்புக்கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில், தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தபோது ஒரே முறையில் எக்காலத்திற்குமே பலியை நிறைவேற்றிவிட்டார்.

28 திருச்சட்டம் குறைபாடுள்ள மனிதர்களையே தலைமைக் குருக்களாக ஏற்படுத்துகிறது. அச் சட்டத்துக்குப்பின் வந்த ஆணையோடு கூடிய திருவாக்கு என்றென்றும் நிறைவு பெற்ற மகனையே குருவாக ஏற்படுத்துகிறது.

அதிகாரம் 08

1 நாம் சொன்னவற்றில் தலையாயது: இத்தகைய தலைமைக் குரு நமக்கு வாய்த்துள்ளார்; அவர் மகத்துவமிக்கவரது அரியணையின் வலப்புறத்திலே வானகத்தில் அமர்ந்துள்ளார்.

2 அங்கே மனிதராலன்று கடவுளாலேயே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் இறைபணி ஆற்றுபவராயிருக்கின்றார்.

3 ஒவ்வொரு தலைமைக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருப்பதால், அவ்வாறு செலுத்துவதற்கு ஏதாவது இவருக்கும் இருந்திருக்கவேண்டும்.

4 உலகிலேயே இருந்திருப்பாரானால் இவர் குருவாக இருந்திருக்கமாட்டார். ஏனெனில், திருச்சட்டம் குறிப்பிடும் காணிக்கைகளை ஒப்புக்கொடுக்க ஏற்கெனவே வேறு குருக்கள் இருக்கின்றனர்.

5 இவர்கள் வானக இறைபணியின் வெறும் சாயலும் நிழலுமாயுள்ள பணியைப் புரிகிறார்கள். இதை, மோயீசன் கூடாரத்தை அமைக்கத் தொடங்கியபொழுது கடவுள் கொடுத்த கட்டளை குறிப்பிடுகிறது: ' மலைமீது உனக்குக் காண்பித்தவற்றின் மாதிரியாக எல்லாவற்றையும் செய்யப்பார் ' என்பது அக்கட்டளை.

6 மேலான வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டு, இயேசுவை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை எவ்வளவுக்கு மேலானதோ அவ்வளவுக்கு மேலானது அவர் பெற்றிருக்கும் இறைபணியலுவல்.

7 அந்த முதல் உடன்படிக்கை குறையில்லாததாக இருந்திருப்பின் மற்றொன்றிற்குத் தேவையே இருந்திராது.

8 ஆனால் கடவுள் அவர்களைக் குற்றங் கூறிச் சொன்னதாவது: "ஆண்டவர் கூறுவது: இதோ, ஒருநாள் வரும். அந்நாளில் இஸ்ராயேல் குலத்தாரோடும் யூதாவின் குலத்தாரோடும் புதியதோர் உடன்படிக்கை செய்துகொள்வேன்.

9 எகிப்து நாட்டிலிருந்து அவர்களுடைய முன்னோரைக் கைப்பிடித்து அழைத்துக்கொண்டு போன நாளில், அவர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கைபோலிராது இவ்வுடன்படிக்கை. அவர்கள் என் உடன்படிக்கையில் நிலைத்திருக்கவில்லை, நானும் அவர்களைக் கைவிட்டேன், என்கிறார் ஆண்டவர்.

10 அந்நாட்களுக்குப்பின் இஸ்ராயேல் குலத்தாரோடு நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே, என்கிறார் ஆண்டவர்: என் சட்டங்களை அவர்களுடைய மனத்தில் புகுத்துவேன், அவர்களுடைய உள்ளங்களில் அவற்றைப் பொறித்து வைப்பேன். நான் அவர்களுக்குக் கடவுளாயிருப்பேன், அவர்கள் எனக்கு மக்களாயிருப்பர்.

11 'ஆண்டவரை அறிந்துகொள் ' என்று இனி ஒருவனும் தன் அயலானுக்கோ, தன் சகோதரனுக்கோ கற்பிக்க வேண்டியதில்லை. சிறுவர் முதல் பெரியோர் ஈறாக எல்லாரும் என்னை அறிவர்.

12 ஆம், நான் அவர்களுடைய அக்கிரமங்களை இரக்கத்தோடு மன்னிப்பேன். அவர்களுடைய பாவங்களை இனி நினையேன்."

13 'புதியதோர் உடன்படிக்கை' என்றதால் முந்தினதைப் பழமையாக்கிவிட்டார். பழமையானதும் நாள்பட்டதும் விரைவில் மறைந்துபோக வேண்டியதே.

அதிகாரம் 09

1 முந்திய உடன்படிக்கையில் வழிபாட்டு ஒழுங்குகளும் வழிபாட்டுக்குரிய இடமும் இருந்தன. அந்த இடமோ இம்மையைச் சார்ந்தது.

2 அதில் முன்கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு குத்துவிளக்கு, ஒரு மேசை, காணிக்கை அப்பங்கள், இவை இருந்தன. இதற்குத் 'தூயகம்' என்று பெயர்.

3 இரண்டாம் திரைக்குப்பின் 'திருத்தூயகம்' என்னும் கூடாரம் இருந்தது.

4 அதில் பொன்தூபப் பீடமும், முழுவதும் பொன்தகடு வேய்ந்த உடன்படிக்கைப் பேழையும் இருந்தன. இப்பேழையில் மன்னாவைக் கொண்டிருந்த பொற்சாடியும், ஆரோனின் துளிர்ந்த கோலும், உடன்படிக்கைக் கற்பலகைகளும் இருந்தன.

5 இறை மாட்சிமையின் திருமுன் நிற்கும் கெரூபிம் என்னும் தூதர்கள் பேழையின்மேல் இரக்கத்தின் இருக்கைக்கு நிழலிட்டுக் கொண்டிருந்தார்கள். இவையெல்லாம் விவரிக்க இப்போது தேவையில்லை.

6 இவை இவ்வாறு அமைந்திருக்க, குருக்கள் தங்கள் வழிபாட்டுப் பணிகளை நிறைவேற்றுவதற்கு எப்பொழுதும் முன்கூடாரத்தில் மட்டுமே நுழைவர்.

7 பின்கூடாரத்திலோ தலைமைக் குரு ஒருவரே, அதுவும் ஆண்டுக்கொரு முறைமட்டுமே நுழைவார். அப்போது கூட , தாமும் மக்களும் அறியாமையால் செய்த பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கும் பொருட்டு இரத்தத்தைக் கையில் ஏந்தாமல் நுழைவதில்லை.

8 முன்னைய கூடாரம் நீடிக்கும் பரிசுத்த இடத்திற்கு வழி இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்பதைப் பரிசுத்த ஆவி இதனால் காட்டினார்.

9 இவையெல்லாம், இக்காலத்தைச் சுட்டிக்காட்டும் உவமையாக அமைந்துள்ளன. இந்த நிலையில் செலுத்தப்படும் காணிக்கைகளும் பலிகளும் மனச்சாட்சியைப் பொறுத்தமட்டில் வழிபடுபவர்களை நிறைவுள்ளவர்களாக்க இயலாதவை.

10 ஏனெனில், இவை உடலைச் சார்ந்த ஒழுங்குகளே, உண்பது குடிப்பதுபற்றியும், பல்வேறு வகைப்பட்ட முழுக்குகள் பற்றியும் எழுந்த இவை புனரமைப்புக் காலம் வரை தான் இருக்கும்.

11 கிறிஸ்துவோ வரப்போகும் நன்மைகளுக்குத் தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் முன்னதை விட மேலானதும் நிறைவுள்ளதுமான கூடாரம் ஒன்றைக் கடந்து ஒரே முறையில் எக்காலத்திற்குமே தூயகத்தில் நுழைந்து விட்டார். இந்தக் கூடாரமோ மனிதரின் கையால் அமைக்கப்பட்டதன்று. அதாவது, இந்தப் படைப்புலகைச் சார்ந்ததன்று.

12 ஆட்டுக் கடாக்கள், இளங் காளைகளின் இரத்தத்தைக் கொண்டு கிறிஸ்து தூயகத்தில் நுழையவில்லை. தம் சொந்த இரத்தத்தைக் கொண்டே அதில் நுழைந்தார். இவ்வாறு நாம் முடிவில்லா மீட்பைக் கண்டடையச் செய்தார்.

13 உண்மையில் ஆட்டுக் கடாக்கள், காளைமாடுகள் இவற்றின் இரத்தமும், கிடாரியின் சாம்பலும் மாசுள்ளவர்கள் மீது தெளிக்கப்படும் பொழுது, உடலில் தூய்மையைப் பொறுத்த வரை, அவர்களைப் பரிசுத்தராக்குமெனில், முடிவில்லாத் தேவ ஆவியால் தம்மையே மாசற்ற பலியாய்க் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம்,

14 நாம் உயிருள்ள கடவுளுக்கு வழிபாடு செலுத்தும்படி நம்முடைய மனச்சாட்சியைச் சாவுக்குரிய செயல்களிலிருந்து எவ்வளவோ மேலாகத் தூய்மைப்படுத்தும் அன்றோ? கிறிஸ்துவின் இரத்தத்தால் புதிய உடன்படிக்கை

15 முந்தின உடன்படிக்கையின் காலத்தில் செய்யப்பட்ட குற்றங்களிலிருந்து மக்களை விடுவிக்கக் கிறிஸ்து இறந்தார். இங்ஙனம் சாவொன்று நிகழ்ந்துள்ளதால், அழைக்கப்பட்டவர்கள் புதிய உடன்படிக்கையால் வாக்களிக்கப்பட்ட முடிவில்லா உரிமையைப் பெற முடிந்தது. இவ்வகையில் அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராக இருக்கிறார்.

16 ஏனெனில், உரிமையளிக்கும் சாசனம் எங்கே உள்ளதோ, அங்கே சாசனம் எழுதியவனுடைய சாவு எண்பிக்கப்படவேண்டும்.

17 சாவுக்குப் பின்னரே சாசனம் உறுதி பெறும். சாசனம் எழுதியவன் உயிரோடிருக்கும் வரை சாசனம் செல்லாது.

18 அதனால் தான் முந்தின உடன்படிக்கையும் இரத்தம் சிந்தப்படாமல் தொடங்கப் பெறவில்லை.

19 திருச்சட்டத்திலுள்ள கட்டளைகளையெல்லாம் மோயீசன் மக்கள் அனைவருக்கும் அறிவித்த பின்னர், இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து சிவப்பு நூலால் கட்டிய ஈசோப் செடியால் உடன்படிக்கை ஏட்டின் மீதும், மக்கள் அனைவர் மீதும் அதைத் தெளித்தார்.

20 தெளித்துக் கொண்டே, "கடவுள் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே" என்றார்.

21 அவ்வாறே கூடாரத்தின் மீதும் இறைபணிக்குதவும் பொருட்கள் எல்லாவற்றின் மீதும் இரத்தம் தெளித்தார்.

22 உண்மையில் திருச்சட்டப்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தினால் தூய்மையாக்கப்படுகின்றன; இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு என்பது இல்லை.

23 ஆகையால் வானகத்துள்ளவற்றின் சாயல்களே இவ்வாறு தூய்மை பெற வேண்டியிருந்தன என்றால், வானகத்துள்ளவை அவற்றிலும் மேலான பலிகளாலன்றோ தூய்மை பெற வேண்டியிருக்கும்!

24 உள்ளபடி, கிறிஸ்து நுழைந்தது மனிதரின் கையால் ஆகிய தூயகம்; அது உண்மையான தூயகத்தின் முன்னடையாளமே. நமக்காகப் பேசும்படி கடவுளின் திருமுன் நிற்பதற்கு அவர் வானகத்திற்குள்ளேயே நுழைந்து விட்டார்.

25 தமதல்லாத இரத்தத்தைக் கையிலேந்தி ஆண்டு தோறும் தூயகத்திற்குள் நுழையும் தலைமைக் குருவைப் போல், கிறிஸ்து செய்யவில்லை. அவர் வானகத்திற்குள் நுழைந்தது தம்மைத் திரும்பத் திரும்ப ஒப்புக்கொடுப்பதற்காக அன்று.

26 அப்படி ஒப்புக்கொடுப்பதாய் இருந்தால் படைப்புக் காலந்தொட்டு திரும்பத் திரும்பப் பாடுபட வேண்டியிருக்கும். அதற்கு மாறாக, உலகின் இறுதிக் காலமான இப்போது தம்மைத் தாமே பலியிட்டு, பாவங்களைத் தொலைக்க ஒரே முறை உலகில் தோன்றினார்.

27 மனிதர் ஒரே முறை சாவுக்கு உட்படுகின்றனர்; பின்னர் தீர்ப்பு வருகிறது.

28 அவ்வாறே கிறிஸ்துவும் பல்லோர் பாவங்களைப் போக்கும் பொருட்டு ஒரே முறையில் எக்காலத்திற்குமே தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். மீண்டும் தோன்றுவார். அப்போது பாவத்திற்குப் பரிகாரம் செய்வதற்காக அன்று, தமக்காகக் காத்திருப்பவர்களுக்கு மீட்பு அளிக்கும் பொருட்டே தோன்றுவார்.

அதிகாரம் 10

1 வரப்போகும் நன்மைகளின் உண்மை உருவைத் திருச்சட்டம் எடுத்துக்காட்டவில்லை. அவற்றின் நிழலாக மட்டுமே உள்ளது. அதனால் தான், ஆண்டுதோறும் இடைவிடாமல் ஒப்புக்கொடுத்து வரும் அதே பலிகளால் இறைவனை அணுகி வருபவர்களை நிறைவுள்ளவர்களாக்கத் திருச்சட்டத்திற்கு வலிமையில்லை.

2 இருந்திருந்தால் பலிகளை ஒப்புக்கொடுப்பது நின்றிருக்குமன்றோ? ஏனெனில், பலிகளால் வழிபடுபவர்கள் ஒரே முறையில் எக்காலத்திற்குமே தூய்மை அடைந்தவர்களாய், பாவத்தினின்று விடுபட்ட மனச்சாட்சியைப் பெற்றிருப்பார்களன்றோ?

3 மாறாக, அந்தப் பலிகளினாலே பாவம் நீங்கவில்லை என்பது தான் ஆண்டுதோறும் நினைவூட்டப்படுகிறது.

4 காளைமாடுகள், ஆட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது.

5 அதனால் தான் உலகிற்கு வரும் போது கிறிஸ்து: "பலியோ, காணிக்கையோ, நீர் விரும்பவில்லை. ஆனால், எனக்கு ஓர் உடலை அமைத்தளித்தீர்.

6 தகனப் பலிகளோ, பாவப் பரிகாரப் பலிகளோ உமக்கு உகந்தவையாய் இல்லை.

7 அப்பொழுது நான் கூறியது: இதோ! இறைவா, உம் திருவுளத்தை நிறைவேற்ற வந்துவிட்டேன், என்னைக் குறித்தே மறைநூல் சுருளில் எழுதியுள்ளது" என்கிறார்.

8 "திருச்சட்டப்படி ஒப்புக்கொடுக்கப்பட்ட போதிலும், பலிகள், காணிக்கைகள், தகனப் பலிகள், பாவப் பரிகாரப் பலிகள் இவற்றையெல்லாம் நீர் விரும்பவில்லை, இவை உமக்கு உகந்தவையாய் இல்லை" என்று முதலில் கூறுகிறார்.

9 பின்பு, 'இதோ, உமது திருவுளத்தை நிறைவேற்ற வந்துவிட்டேன்' என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை எடுத்து விடுகிறார்.

10 இந்தத் திருவுளத்தால் தான், ஒரே முறையில் எக்காலத்திற்குமே ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவினுடைய உடலின் பலியால் நாம் பரிசுத்தராக்கப்பட்டோம்.

11 ஒவ்வொரு குருவும் நாடோறும் இறைபணி ஆற்றுகையில், கையில் திரும்பத் திரும்ப அதே பலிகளை ஒப்புக்கொடுத்து வருகிறார். அவையோ பாவங்களை ஒரு போதும் போக்கி விட இயலாதவை.

12 ஆனால், இவர் என்றென்றைக்கும் பயன்தரும் ஒரு பலியைப் பாவங்களுக்காக ஒப்புக்கொடுத்து, 'கடவுளின் வலப்புறத்தில் அமர்ந்துள்ளார்.'

13 அங்கே, 'தம் பகைவர் தமக்குக் கால்மணையாக்கப்படும் வரை' காத்திருக்கிறார்.

14 தாம் பரிசுத்தராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்.

15 இதைப் பற்றிப் பரிசுத்த ஆவியும் நமக்குச் சாட்சியம் அளிக்கின்றார்.

16 எவ்வாறெனில், "ஆண்டவர் கூறுகின்றார்: அந்நாட்களுக்குப் பின் அவர்களோடு நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே:

17 என் சட்டங்களை அவர்களுடைய உள்ளத்தில் பதிப்பிப்பேன். அவர்களுடைய மனத்தில் அவற்றைப் பொறித்து வைப்பேன்" என்று சொன்ன பின், "அவர்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையேன்" என்று தொடர்ந்து சொல்கிறார்.

18 இவற்றிற்கு மன்னிப்புக் கிடைத்த பின், பாவப்பரிகாரப் பலிக்கு இடமேயில்லை.

19 ஆகையால் சகோதரர்களே, இயேசு தம் உடலாகிய திரைச்சீலையைக் கடந்து, புதியதும் உயிருள்ளதுமானதொரு பாதையை நமக்குத் திறந்து வைத்தார்.

20 அதன் வழியாய்த் தூயகம் நுழைய அவருடைய இரத்தத்தின் ஆற்றலால் நமக்குத் துணிவு உண்டு.

21 கடவுளின் வீட்டின் மீது அதிகாரம் பெற்ற ஒரு தலைமைக் குருவும் நமக்கு இருக்கிறார்.

22 ஆகையால் கெட்ட மனச்சாட்சியிலிருந்து துப்புரவாக்கப்பட்ட உள்ளமும், தூய நீரில் கழுவப்பட்ட உடலும் கொண்டவர்களாய் நேர்மை உள்ளத்தோடும், முழு விசுவாச உறுதியோடும் அவரை அணுகிச் செல்வோமாக.

23 நாம் அறிக்கையிடும் நம்பிக்கையைத் தயக்கமின்றிப் பற்றிக்கொள்வோமாக.

24 நமக்கு வாக்களித்தவர் உண்மையுள்ளவர். அன்பு செய்யவும் நற்பணிகள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக.

25 சிலர் வழக்கமாக நம் கூட்டங்களுக்கு வருவதில்லை. அதைப்போல் நாமும் செய்யலாகாது. ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதி நாள் எவ்வளவுக்கு அருகிலிருப்பதாகக் காணப்படுகிறதோ அவ்வளவுக்கு உற்சாகமாக ஊக்கமூட்டுங்கள்.

26 உண்மையை அறியும் பேறு பெற்ற பின்னரும், நாம் வேண்டுமென்றே பாவத்தில் நிலைத்திருந்தால், இனி வேறு எந்தப் பரிகாரப் பலியுமே இராது.

27 எஞ்சியிருப்பது அச்சத்தோடு காத்திருக்க வேண்டிய தீர்ப்பும், பகைவரை விழுங்கப் போகும் கோபக் கனலுமே.

28 மோயீசனுடைய சட்டத்தைப் புறக்கணித்தவன், இரக்கம் பெறாமல், இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சியத்தின் மேல் சாகத்தான் வேண்டும் என்றிருந்தது.

29 அப்படியென்றால் கடவுளின் மகனையே காலால் மிதித்தவன், தன்னைப் பரிசுத்தப்படுத்திய உடன்படிக்கை இரத்தத்தையே இழிவுபடுத்தியவன். அருள் தரும் ஆவியையே அவமதித்தவன், எவ்வளவு பெரிய தண்டனைக்குத் தகுதியுள்ளவன் ஆவான் என்று எண்ணிப்பாருங்கள்.

30 "பழி வாங்குவது என் உரிமை; நானே பதிலுக்குப் பதில் செய்வேன்" என்றும், "ஆண்டவர் தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குவார்"

31 என்றும் உரைத்தவர் யாரென்பது தெரியுமன்றோ? உயிருள்ள கடவுளின் கையில் அகப்படுதல் பயங்கரமானது.

32 நீங்கள் ஒளிபெற்றபின் பாடுகள் நிறைந்த போராட்டத்தைத் தாங்கிக்கொண்ட முன்னைய நாட்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

33 அந்நாட்களிலே, நீங்கள் வசை மொழிக்கும் வேதனைக்கும் ஆளாகி, மக்கள் முன்னிலையில் நகைப்புக்கு உள்ளானீர்கள். இவ்வாறு துன்புற்றோருக்குப் பக்கத் துணையாயிருந்தீர்கள்.

34 மெய்தான், சிறையிடப்பட்டவர்களுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள்; உங்கள் உடைமைகள் பறிமுதலான போதும், அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். ஏனெனில், மேலானவையும் நிலையுள்ளவையுமான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்று உணர்ந்தீர்கள்.

35 இவ்வுறுதியான நம்பிக்கையை இப்பொழுது இழந்து விடாதீர்கள். இதற்குப் பெரிய கைம்மாறு உண்டு.

36 நீங்கள் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி அவர் வாக்களித்ததைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மன உறுதி தேவை.

37 ஏனெனில், "இன்னும் மிக மிகச் சொற்பக் காலமே இருக்கிறது. வரவிருப்பவர் வந்துவிடுவார், காலம் தாழ்த்தமாட்டார்.

38 நீதி நெறியில் நடக்கும் என் அடியான் விசுவாசத்தால் வாழ்வு பெறுவான். எவனாவது பின் வாங்கினால் அவனில் நான் பூரிப்பு அடையேன்."

39 நாமோ அழிவுக்கேதுவான முறையில் பின்வாங்குபவர்களல்ல; ஆனால், நம் ஆன்மாவைக் காத்துக் கொள்வதற்காக விசுவாசத்தில் வாழ்பவர்கள்.

அதிகாரம் 11

1 விசுவாசம் என்பது நாம் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பவை கிடைக்கும் என்னும் நிலையான உறுதி.

2 கண்ணுக்குப் புலப்படாதவை பற்றி மனந்தளராத நிலை. இந்த விசுவாசத்தின் பொருட்டே நம் முன்னோர் நற்பெயர் பெற்றனர்.

3 உலகங்களெல்லாம் கடவுளின் திருச்சொல்லால் உருவாயின என்றும், ஆகவே காணாதவற்றினின்று காண்பவை உண்டாயின என்றும் விசுவாசத்தினாலேயே உணர்கிறோம்.

4 விசுவாசத்தினால் தான் ஆபேல் காயினை விட மேலான பலியைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தான்; விசுவாசத்தினாலேயே, அவன் நல்லவன் எனக் கடவுளிடமிருந்து சான்று பெற்றான்; ஏனெனில், அவனுடைய காணிக்கைகள் ஏற்றவையெனக் கடவுளே சான்று பகர்ந்தார். இறந்தும் அவ்விசுவாசத்தினால் இன்னும் பேசுகிறான்.

5 விசுவாசத்தினாலேயே ஏனோக் சாவைக் காணாதபடி எடுத்துக்கொள்ளப்பட்டார். கடவுள் அவரை மேலே எடுத்துக் கொண்டதால் மறைந்து போய்விட்டார். மேலே எடுத்துக்கொள்ளப்படுமுன்பே கடவுளுக்கு உகந்தவர் என்று நற்சான்று பெற்றவரானார்.

6 விசுவாசத்தினாலன்றி ஒருவனும் கடவுளுக்கு உகந்தவனாயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்கிறவன் அவர் இருக்கிறார் என்றும், தம்மைத் தேடுபவர்களுக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறாரென்றும் விசுவசிக்க வேண்டும்.

7 விசுவாசத்தினாலே, தம் கண்ணுக்கு மறைவாயிருந்ததைக் குறித்து நோவா இறைவனால் எச்சரிக்கப்பெற்ற போது, தம் குடும்பத்தைக் காப்பாற்றப் பயபக்தியோடு பேழையை அமைத்தார். அதே விசுவாசத்தினால் உலகைக் கண்டனம் செய்து, விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவராகும் பேற்றுக்கு உரிமையாளர் ஆனார்.

8 இறைவனின் அழைப்பை ஏற்ற ஆபிரகாமை கீழ்ப்படிந்து தம் உரிமைச் சொத்தாகப் பெறவிருந்த இடத்திற்குப் போனது விசுவாசத்தினாலேயே.

9 போகவேண்டிய இடத்தை அறியாதிருந்தும் புறப்பட்டுப் போனார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறி, அதே வாக்குறுதியின் உடன் உரிமையாளர்களான ஈசாக், யாக்கோபுடன் கூடாரங்களில் குடியிருந்து, வேற்று நாட்டினர் போல் வாழ்ந்தது, விசுவாசத்தினாலேயே.

10 ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ளதொரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதன் சிற்பியும் ஆக்குநரும் கடவுளே.

11 சாராள் வயதான காலத்திலும் ஒரு மகனை ஈன்றெடுக்க ஆற்றல் பெற்றது விசுவாசத்தினாலே தான்.

12 ஏனென்றால், வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என்று அவன் கருதினான். இவ்வாறு உயிரிழந்தவர் போலிருந்த ஒரே ஆள், விண்மீன்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் கணக்கற்ற மக்களுக்குத் தந்தையானார்.

13 இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலேயே இறந்தனர்: வாக்களிக்கப்பட்டவற்றைக் கைக்கொள்ளவில்லையெனினும், அவற்றைத் தொலைவில் கண்டனர்; கண்டு வாழ்த்தினர். இவ்வுலகில் தாங்கள் வேற்று நாட்டினர் எனவும், அந்நியர்களெனவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

14 இவ்வாறு ஒப்புக்கொள்பவர்களோ நம் தாய்நாட்டைத் தேடுவோர் எனக் காட்டுகின்றனர்.

15 தாங்கள் விட்டுவந்த நாட்டையே நினைவில் வைத்திருந்தால் திரும்பிச் செல்ல வாய்ப்பு இல்லாமலா இருந்திருக்கும்!

16 ஆனால், அவர்கள் உண்மையில் நாடியது ஒரு மேலான நாட்டை, அதாவது விண்ணக நாட்டையே. அதனால்தான் கடவுளும் தம்மை 'அவர்களுடைய கடவுள்' என அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. தாமே அவர்களுக்காக ஒரு நகரை அமைத்துள்ளார் அல்லரோ?

17 விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் தாம் பரிசோதிக்கப்பட்ட பொழுது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தார்.

18 "உன் பெயர் நீடிக்க, ஈசாக்கின் வழியாய் உனக்கு மக்கள் பிறப்பார்கள்" என்று இறைவன் கூறியிருந்தார். வாக்குறுதிகளைப் பெற்றிருந்தும் ஆபிரகாம் தம் ஒரே மகனைப் பலியிடத் தயங்கவில்லை.

19 ஏனெனில், கடவுள் இறந்தோரையும் எழுப்ப வல்லவர் என்பதை மனதில் கொண்டிருந்தார். எனவே, தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார். இது ஒரு முன்னடையாளமாயிற்று.

20 விசுவாசத்தினால் தான் ஈசாக்கு பிற்காலத்தில் நிகழ வேண்டியவற்றைக் குறிப்பிட்டு யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் ஆசி அளித்தார்.

21 யாக்கோபு சாகும் பொழுது சூசையின் மக்கள் ஒவ்வொருவர்க்கும் ஆசி அளித்ததும், தமது ஊன்றுகோலின் மீது சாய்ந்து கொண்டு இறைவனைத் தொழுததும் விசுவாசத்தினாலேயே.

22 இறக்கும் தருவாயிலிருந்த சூசை இஸ்ராயேல் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைக் குறிப்பிட்டதும், தம் எலும்புகளை என்ன செய்யவேண்டுமென்று கற்பித்ததும் விசுவாசத்தினாலேயே.

23 மோயீசன் பிறந்த பொழுது குழந்தை அழகாயிருப்பதைக் கண்டு, அதன் பெற்றோர் அரசன் ஆணைக்கு அஞ்சாமல், மூன்று மாதம் அதை மறைத்து வைத்தது விசுவாசத்தினாலேயே.

24 மோயீசன் வளர்ந்த பின்னர், தாம் பார்வோன் மகளின் மகன் எனப்பட மறுத்ததும் விசுவாசத்தினால் தான்.

25 பாவ இன்பங்களைச் சொற்பக்காலம் துய்ப்பதை விட, கடவுளுடைய மக்களோடு துன்புறுவதையே அவர் விரும்பினார்.

26 இறைவனால் அபிஷுகம் பெற்றவர்கள் படவேண்டிய நிந்தையை, எகிப்தின் கருவூலங்களினும் மேலான செல்வமாகக் கருதினார். ஏனெனில் தமக்குக் கிடைக்கப்போகும் கைம்மாற்றைக் கண் முன் வைத்திருந்தார்.

27 அரசனின் கடுஞ்சினத்திற்கு அஞ்சாமல் அவர் எகிப்து நாட்டை விட்டுச் சென்றதும் விசுவாசத்தினாலேயே. கண்ணுக்குப் புலப்படாத இறைவனைக் கண்ணால் பார்ப்பவர் போல், தளராமல் நிலைத்து நின்றார்.

28 அவர் பாஸ்காவைக் கொண்டாடியதும், முதற்பேறானவர்களை அழிக்க வந்த தூதன் இஸ்ராயேலரைத் தொடாதபடி இரத்தத்தைக் கதவு நிலைகள் மேல் தெளித்ததும் விசுவாசத்தினாலேயே.

29 இஸ்ராயேல் மக்கள் கட்டாந்தரையைக் கடப்பது போலச் செங்கடலைக் கடந்தனர். எகிப்தியரோ, அவ்வழியே கடக்க முயன்ற போது மூழ்கி விட்டனர்.

30 இஸ்ராயேலர் ஏழு நாள் வலம் வந்த பின்னர், யெரிக்கோவின் மதில்கள் விழுந்ததும் விசுவாசத்தினால் தான்.

31 விலைமகளான ராகாப் ஒற்றர்களை உபசரித்து ஏற்று, அவிசுவாசிகளுடன் அழியாமல் தப்பித்துக் கொண்டது விசுவாசத்தினாலேயே.

32 இன்னும் சொல்ல வேண்டுமா? கிதியோன், பாராக், சாம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் ஆகியோரைப் பற்றியும் இறைவாக்கினர்களைப் பற்றியும் கூற எனக்கு நேரமில்லை.

33 விசுவாசத்தினால் தான் அவர்கள் அரசுகளை எதிர்த்து வென்றனர்; நீதி வழங்கினர்; வாக்களித்தவற்றைப் பெற்றுக்கொண்டனர்;

34 சிங்கத்தின் வாயை அடைத்தனர்; தீயின் கொடுமையைத் தணித்தனர்; வாள்முனைக்குத் தப்பினர்; வலிமையற்றவராயிருந்தும் வலிமை பெற்றனர்; போரில் வீரம் காட்டினர்; மாற்றார் படைகளை முறியடித்தனர்.

35 இறந்த தம்மவர் உயிருடன் எழுந்து வரப் பெண்கள் கண்டார்கள். மேலான உயிர்த்தெழுதலை அடைந்து கொள்ளும் பொருட்டு, சிலர் விடுதலை பெற விரும்பாமல் வதைக்கப்பட்டு மடிந்தனர்.

36 வேறு சிலர் ஏளனத்துக்கும் சாட்டையடிகளுக்கும் ஆளாயினர்; விலங்கிடப்பட்டுச் சிறையில் வாடினர்.

37 கல்லால் எறியப்பட்டனர்; வாளால் அறுக்கப்பட்டனர்; பட்டயத்துக்கு இரையாயினர்; ஆட்டுத் தோலையும் செம்மறியின் தோலையும் போர்த்தி அலைந்தனர்; வறுமையுற்று வாடினர்; துன்புறுத்தப்பட்டனர்; கொடுமைக்காளாயினர்.

38 உலகமோ அவர்களைக் கொண்டிருக்க அருகதையற்றுப் போயிற்று. குகைகளிலும் நிலப் பொந்துகளிலும் பாலை வெளிகளிலும் மலைகளிலும் அலைந்தனர்.

39 இவர்களனைவரும் விசுவாசம் கொண்டிருந்ததினாலே நற்பெயர் பெற்றனர். ஆயினும் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை.

40 ஏனெனில், நம்மோடு சேர்ந்தாலொழிய அவர்கள் நிறைவு பெறலாகாது என்று கடவுள் நம்மை மனத்திற்கொண்டு மேலானதொரு திட்டம் வகுத்திருந்தார்.

அதிகாரம் 12

1 எனவே, எண்ணிக்கையில்லாச் சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க, நமக்குத் தடையாயிருக்கும் எந்தச் சுமையையும், நம்மை எளிதில் வயப்படுத்தும் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.

2 விசுவாசத்தைத் தொடங்கி வைத்தவரும், அதை நிறைவுபெறச் செய்பவருமான இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைப்போம். அவர் தம் முன்னே வைத்திருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, நிந்தையைப் பொருட்படுத்தாமல், சிலுவையைத் தாங்கினார். இப்பொழுது கடவுளது அரியணையின் வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார்.

3 பாவிகளால் தமக்கு உண்டான எவ்வளவோ எதிர்ப்பைத் தாங்கிக் கொண்ட அவரைச் சிந்தையில் இருத்துங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போகமாட்டீர்கள்.

4 பாவத்திற்கு எதிராகச் செய்யும் போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே!

5 தம் பிள்ளைகளிடம் பேசுவது போல் இறைவன் உங்களுக்குத் தந்த அறிவுரையை நீங்கள் மறந்து விட்டீர்களோ? "என் மகனே, ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்தும் போது, அதைப் பொருட்படுத்தாமலிராதே. அவர் தண்டிக்கும் போது, தளர்ந்து போகாதே.

6 ஏனெனில், ஆண்டவர் யார் மேல் அன்பு கூர்கிறாரோ, அவனைக் கண்டித்துத் திருத்துகிறார். தாம் ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகள் அனைவரையும் ஒறுக்கிறார்."

7 திருத்தப்படுவதற்காகத் தான் நீங்கள் துன்புறுகிறீர்கள். கடவுள் உங்களைத் தம் மக்கள் என நடத்துகிறார்.

8 தகப்பன் கண்டித்துத் திருத்தாத மகன் உண்டோ? இறைவன் தம் பிள்ளைகள் எல்லாரையும் கண்டித்துத் திருத்தி வந்திருக்கிறார். நீங்கள் அவ்வாறு திருத்தப்படாவிடின், உண்மையான பிள்ளைகளல்ல, வேசிப் பிள்ளைகளே.

9 உடலை நமக்களித்த தந்தையர் நம்மைக் கண்டித்துத் திருத்தினார்கள். அவர்களை நாம் மதித்து வந்தோம். அப்படியானால் ஆவியை நமக்களித்த தந்தைக்கு நாம் எவ்வளவோ பணிந்து நடக்கவேண்டும் அன்றோ? அப்பொழுது தான் வாழ்வு பெறுவோம்.

10 மேலும் அவர்கள் தங்கள் விருப்பம்போல் கண்டித்துத் திருத்தினார்கள்; அது சொற்பக் காலத்துக்கே பயன்பட்டது. இறைவனோ நம்மைத் தம் பரிசுத்தத்தில் பங்கு பெறும்படி, நம் நன்மைக்காகவே, கண்டித்துத் திருத்துகிறார்.

11 கண்டித்துத் திருத்தம் பெறுவது இப்பொழுது இன்பமாயிராமல் துன்பமாகத் தான் தோன்றும். ஆனால், அவ்வாறு பயிற்றப் பட்டவர்கள் பின்னர் அமைதியையும் நீதி வாழ்வையும் பயனாகப் பெறுவர்.

12 எனவே, 'சோர்வுற்ற கைகளையும், தளர்ந்து போன முழங்கால்களையும் திடப்படுத்துங்கள்.' 'நீங்கள் நடந்து செல்லும் பாதையை நேர்மையாக்குங்கள்.'

13 அப்போதுதான் ஊனமான உறுப்பு மூட்டு பிசகாது நலமடையும்.

14 எல்லாருடனும் சமாதானமாயிருக்க முயலுங்கள்; பரிசுத்தத்தை நாடுங்கள். பரிசுத்தம் இல்லாமல் ஆண்டவரை ஒருவனும் காணமாட்டான்.

15 உங்களுள் யாரும் கடவுளின் அருளை இழந்து போகாமலும், கசப்பான நச்சு வேர் எதுவும் உங்களுக்குள் முளைத்துக் கேடு விளைவிக்காதபடியும், அதனால் பலர் கெட்டுப் போகாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

16 உங்களுள் யாரும் காமுகராகவோ, ஏசாவைப் போல் உலகப் பற்றுள்ளவராகவோ இராதபடி கவனமாயிருங்கள். இந்த ஏசாவு ஒரு வேளை உணவுக்கு ஈடாகத் தன் தலைப்பேற்றுரிமையை விற்றுப்போட்டான்.

17 பின்னர் அவன் தனக்குரிய ஆசியைப் பெற்றுக் கொள்ள விரும்பியும் தள்ளி விடப்பட்டான். கண்ணீர் சிந்தி அதைக் கேட்டும், தந்தையின் மனத்தை மாற்றுவதற்கு வழியில்லாமல் போயிற்று. இது உங்களுக்குத் தெரியுமன்றோ?

18 நீங்கள் வந்தடைந்திருப்பது சீனாய் மலையன்று:

19 அங்கே எரிகின்ற நெருப்பும், இருண்ட மேகமும் காரிருளும் சூழ்ந்திருந்தன; சுழல் காற்று வீசியது; எக்காளம் முழங்கியது; பேசும் குரலொன்று ஒலித்தது; அதைக் கேட்டு நின்றவர்கள், அக்குரல் அதற்கு மேல் பேச வேண்டாமெனக் கேட்டுக் கொண்டார்கள்.

20 ஏனெனில், "இம்மலையை ஒரு கால்நடை தொட்டால் கூட அதைக் கல்லாலெறிந்து கொன்றுவிட வேண்டும்" என்று அக்குரல் தந்த கட்டளையை அவர்களால் தாங்க முடியவில்லை.

21 அக்காட்சி எவ்வளவு அச்சம் விளைத்ததெனில் மோயீசனும், "நான் அச்சத்தால் நடுங்குகிறேன்" என்றார்.

22 நீங்கள் வந்தடைந்திருப்பதோ சீயோன் மலை, உயிருள்ள கடவுளின் நகர், வானக யெருசலேம். அங்கே எண்ணற்ற வானதூதர் சூழ்ந்துள்ளனர்.

23 வானகத்தில் பெயர் எழுதியுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை அங்கே விழாக் கூட்டமெனக் கூடியுள்ளது. நிறைவுபெற்ற நீதிமான்களின் ஆவிகளோடு சேர்ந்து அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும்,

24 புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளரான இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள்; ஆபேலின் இரத்தத்தை விட மேலான முறையில் கூக்குரலிடும் இரத்தத் தெளிப்பின் பயனைப் பெற வந்திருக்கிறீர்கள்.

25 எனவே, இறைவனின் குரலொலியைச் செவிமடுக்க மறுத்துவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வுலகில் தேவ வார்த்தையைப் பேசியவருக்குச் செவிசாய்க்க மறுத்த அவர்கள் தப்பிக்க முடியவில்லையென்றால், விண்ணிலிருந்து பேசுபவரைப் புறக்கணித்தால் நாம் எப்படித்தான் தப்பமுடியும்?

26 யார் தம்முடைய குரலால் அன்று வையகத்தை அசைந்தாடச் செய்தாரோ, அவர் இன்று "இன்னுமொரு முறை வையகத்தை நடுக்கமுறச் செய்வேன். வையகத்தை மட்டுமன்று, வானகத்தையும் நடுக்கமுறச் செய்வேன்" என உறுதி கூறுகிறார்.

27 'இன்னுமொருமுறை' என்றது அசைபவை, படைக்கப் பட்டவையாதலால் மாற்றம் அடையும் என்பதைக் குறிக்கும். அப்போது தான் அசையாதவை நிலைநிற்கும்.

28 ஆதலால் அசையாத அரசைப் பெற்றுக் கொண்ட நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோமாக. இந்நன்றியுணர்ச்சியில் பயபக்தியோடும், அச்சத்தோடும் கடவுளுக்கு ஏற்ற முறையில் வழிபாடு செய்வோமாக.

29 ஏனெனில், நம் கடவுள் சுட்டெரிக்கும் நெருப்பாக இருக்கிறார்.

அதிகாரம் 13

1 சகோதர அன்பில் நிலைத்திருங்கள்.

2 விருந்தோம்பலை மறவாதீர்கள். 'விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வானதூதர்களையும் உபசரித்ததுண்டு.

3 சிறைப்பட்டுள்ளவர்களோடு நீங்களும் சிறைப்பட்டிருப்பது போல, அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள். துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால், துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள்.

4 திருமணம் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுவதாக. பள்ளியறை மஞ்சம் மாசுறாது இருக்கட்டும். காமுகரும் விபசாரரும் கடவுள் தீர்ப்புக்கு உள்ளாவர்.

5 பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளது போதுமென்றிருங்கள். ஏனெனில், 'நான் ஒருபோதும் உன்னைக் கைவிடேன்; உன்னை விட்டுப் பிரியேன்' என்று இறைவனே கூறுகிறார்.

6 இதனால் நாம் துணிவோடு 'கடவுளே எனக்குத் துணை, அஞ்சேன், மனிதர் எனக்கு என்ன செய்யமுடியும்?" என்று சொல்ல முடியும்.

7 உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவு கூருங்கள். அவர்களது வாழ்வின் நற்பயனை எண்ணிப் பார்த்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.

8 இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.

9 பல்வேறு நூதனமான போதனைகளால் கவரப்படாதிருங்கள். உள்ளங்களை அருளால் உறுதிப்படுத்தலே சிறந்தது. உணவு பற்றிய முறைமைகள் இதற்கு உதவா. இவற்றைக் கடைப்பிடித்தவர்கள் பயனொன்றும் அடையவில்லை.

10 நமக்கொரு பீடமுண்டு: அதில் படைக்கப்பட்டதை உண்பதற்கு கூடாரத்தில் வழிபடுவோர்க்கு உரிமையில்லை.

11 எந்த மிருகங்களில் இரத்தம் பாவப் பரிகாரமாகத் தூயகத்திற்குள் தலைமைக் குருவினால் எடுத்துச் சொல்லப்படுகிறதோ, அவற்றின் உடல் பாசறைக்குப் புறம்பே எரிக்கப்படுகின்றது.

12 அதனால்தான் இயேசுவும் தம் சொந்த இரத்தத்தால் மக்களைப் பரிசுத்தப்படுத்த வேண்டி, நகர் வாயிலுக்கு வெளியே பாடுபட்டார்.

13 ஆகவே நாமும் அவர் பட்ட நிந்தையை ஏற்று அவரிடம் போய்ச்சேர, பாசறையை விட்டு வெளியேறுவோமாக.

14 ஏனெனில், நிலையான நகர் நமக்கு இங்கு இல்லை; வரப்போகும் நகரையே நாடிச் செல்கிறோம்.

15 ஆகவே நாம் அவர் வழியாக எப்போதும் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியை ஒப்புக் கொடுப்போமாக. அவருடைய பெயரை அறிக்கை செய்வதால் நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலி.

16 பிறருக்கு உதவிபுரியவும், உங்களுக்குள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளையே கடவுள் உவந்து ஏற்கிறார்.

17 உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்: அவர்களுக்குப் பணிந்திருங்கள். அவர்கள் உங்களைக் குறித்துக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதால், உங்கள் ஆன்ம நலனில் விழிப்பாய் இருக்கின்றனர். இப்பொறுப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியானதாய் இருக்கும்படி நடந்துகொள்ளுங்கள். மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது. எங்களுக்காக மன்றாடுங்கள்.

18 எங்கள் மனச்சாட்சி குற்றமற்றதென்றே நம்புகிறேன். எல்லாவற்றிலும் நேர்மையோடு நடக்க வேண்டுமென்பதே எம் விருப்பம்.

19 உங்களிடம் கூடிய விரைவில் நான் வந்து சேரும்படி நீங்கள் மன்றாட இன்னும் மிகுதியாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

20 ஆடுகளின் மகத்துவமிக்க மேய்ப்பரான நம் ஆண்டவராகிய இயேசுவை, முடிவில்லா உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, இறந்தோரிடமிருந்து எழுப்பியவரும் சமாதானத்தின் ஊற்றுமாகிய கடவுள்,

21 தமது திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்ய உங்களுக்குத் தகுதி அளித்து, தமக்கு உகந்ததை இயேசு கிறிஸ்துவின் வழியாக நம்மில் செய்தருள்வாராக. இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

22 சகோதரரே, நான் உங்களுக்குக் கூறும் இவ்வறிவுரையை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன். சுருக்கமாகவே உங்களுக்கு எழுதியுள்ளேன்.

23 இன்னும் ஒரு செய்தி. நம் சகோதரர் தீமோத்தேயு விடுதலையாகி விட்டார். அவர் விரைவில் வந்து சேர்ந்தால் அவரோடு நான் உங்களைப் பார்க்க வருவேன்.

24 உங்கள் தலைவர்களுக்கும், இறைமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள். இத்தாலிய நாட்டுச் சகோதரர் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.

25 இறை அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.