பிலமோன்

அதிகாரம் 01

1 கிறிஸ்து இயேசுவின் கைதியான சின்னப்பனும், சகோதரர் தீமோத்தேயுவும் ஆகிய யாம் எங்கள் உடனுழைப்பாளரான அன்புமிக்க பிலேமோனுக்கும்,

2 அவர் வீட்டில் கூடும் சபைக்கும், சகோதரி அப்பியாளுக்கும், ஞானப்போரில் என் துணைவரான அர்க்கிப்புவுக்கும் எழுதுவது:

3 நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!

4 என் செபங்களில் உம்மைக் குறிப்பிட்டு என் கடவுளுக்கு என்றும் நன்றி கூறுகின்றேன்.

5 ஏனெனில், ஆண்டவராகிய இயேசுவின் மீதும், இறைமக்கள் அனைவர் மீதும் நீர் கொண்டுள்ள அன்பையும் விசுவாசத்தையும் பற்றிக் கேள்விப்படுகிறேன்.

6 உம் விசுவாசம் உம்மில் பிறருக்கு உதவிசெய்யும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அந்த ஆர்வம் செயல்பட வேண்டுமென்றும், கிறிஸ்துவுக்காக நாம் செய்யக்கூடிய எல்லா நன்மைகளையும் நீர் அறிந்துணர வேண்டுமென்றும் நான் வேண்டுகிறேன்.

7 உம்மிடம் காணும் அன்பை நினைத்துப் பெருமகிழ்வும் ஆறுதலும் கொள்கிறேன். ஆம், சகோதரரே, உம்மால் இறைமக்களின் நெஞ்சம் குளிர்ந்தது.

8 நீர் செய்ய வேண்டியதை உமக்குக் கட்டளையிட, கிறிஸ்துவுக்குள் எனக்கு முழு உரிமை உண்டு என்றாலும்

9 அன்பின் பெயரால் வேண்டுகோள் விடுப்பதே நலமெனக் கருதுகிறேன். வயதுசென்ற சின்னப்பனாகிய நான், இப்பொழுது கிறிஸ்துவின் கைதியாக இருக்கும் நான்,

10 சிறையிலிருக்கையில் நான் ஈன்றெடுத்த பிள்ளை ஒனேசிமுவுக்காக உம்மை வேண்டுகிறேன்.

11 முன்பு உமக்குப் பயனற்றவனாக இருந்த அவன் இப்பொழுது எனக்கும் உமக்கும் பயனுள்ளவனாக இருக்கிறான்.

12 அவனை உம்மிடம் அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் உயிரையே அனுப்புவது போலாகும்.

13 நற்செய்திக்காகச் சிறையில் இருக்கும் எனக்கு உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள நினைத்தேன்.

14 ஆனால் உம்முடைய உடன்பாடின்றி ஒன்றும் செய்யவிரும்பவில்லை. நீர் செய்யப்போகும் நன்மையைக் கட்டாயத்தின்மேல் செய்யாமல், மனதாரச் செய்யவேண்டும் என்று நினைத்தேன்.

15 இனி என்றுமே பிரியாத முறையில் அவன் உம்மோடு இருக்கவேண்டுமென்றே அவன் உம்மை விட்டுச் சிறிதுகாலம் பிரிந்திருந்தான்போலும் இனி அவனை நீர் அடிமையாக அன்று,

16 அடிமையைவிட மேலானவனாக, அதாவது அன்புமிக்க சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவனே. அப்படியானால் உலக வழக்கின்படியும், ஆண்டவரில் ஏற்பட்ட புதிய உறவின்படியும் அவன் எவ்வளவோ மேலாக உம் அன்புக்குரியவனாக இருக்கவேண்டும்!

17 எனவே, நமக்குள்ள உறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனை ஏற்றுக்கொள்ளும்.

18 அவன் உமக்கு ஏதாவது அநீதி செய்திருந்தால் அல்லது கடன்பட்டிருந்தால் அதை என் கணக்கிலே எழுதிக்கொள்ளும்.

19 "நானே ஈடுசெய்வேன்" எனச் சின்னப்பனாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன். நீர் உம்மையே எனக்குக் கடனாகச் செலுத்த வேண்டியவர் என நான் சொல்லவிரும்பவில்லை.

20 ஆம், சகோதரரே, ஆண்டவரின் பெயரால் எனக்கு இந்த உதவி செய்யும். கிறிஸ்துவின் பெயரால் என் உள்ளம் குளிரச் செய்யும்.

21 நான் சொன்னால் கேட்பீர் என்னும் நம்பிக்கையோடு உமக்கு எழுதுகிறேன். நான் கேட்பதற்கு மேலாகவே நீர் செய்வீர் என்பது எனக்குத் தெரியும்.

22 தவிர, நான் வரும்போது தங்குவதற்கு ஏற்பாடு செய்யவும். இறைவன் உங்கள் செபங்களுக்குச் செவி சாய்த்து நான் மீண்டும் உங்களோடிருக்க அருள்புரிவார் என நம்புகிறேன்.

23 என்னோடு கிறிஸ்து இயேசுவின் கைதியாய் இருக்கிற எப்பாப்பிரா உமக்கு வாழ்த்துக் கூறுகிறார்.

24 என் உடன் ஊழியர்களான மாற்கு, அரிஸ்தர்க்கு, தேமா, லூக்கா இவர்களுடைய வாழ்த்துக்கள்.

25 ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக.