யாகப்பர்

அதிகாரம் 01

1 உலகெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும், கடவுளுக்கும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துக்கும் ஊழியனான யாகப்பன் வாழ்த்துக் கூறி எழுதுவது:

2 என் சகோதரரே, பலவகைச் சோதனைகளுக்கு நீங்கள் உள்ளாகும் போது, அவை எல்லாம் மகிழ்ச்சி என்றே எண்ணுங்கள். உங்கள் விசுவாசம் சோதிக்கப்படுவதால், மனவுறுதி விளையும் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.

3 அம் மனவுறுதியோ நிறைவான செயல்களில் விளங்குவதாக!

4 இவ்வாறு நீங்கள் குறைபாடு எதுவுமின்றி, சீர்மை குன்றாமல் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள்.

5 உங்களுள் எவனுக்காவது ஞானம் குறைவாயிருந்தால், அவன் கடவுளிடம் கேட்கட்டும்; அவனுக்குக் கொடுக்கப்படும். முகம் கோணாமல் தாராளமாக எல்லாருக்கும் கொடுப்பவர் அவர்.

6 ஆனால் விசுவாசத்தோடு கேட்கவேண்டும். தயக்கம் எதுவும் கூடாது. தயக்கம் காட்டுபவன் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலைக்கு ஒப்பாவான்.

7 இத்தகையவன் ஆண்டவரிடம் ஏதாவது பெறக்கூடும் என நினைத்துக் கொள்ளலாகாது.

8 இவன் இரு மனம் உள்ளவன்; நிலையற்ற போக்கு உடையவன்.

9 தாழ் நிலையிலுள்ள சகோதரன், தன் உயர்வை எண்ணிப் பெருமை கொள்வானாக.

10 செல்வம் உள்ளவனோ தாழ் நிலையுற்றாலும் பெருமை கொள்வானாக. ஏனெனில், அவன் புல்வெளிப் பூக்களைப் போல் மறைந்து போவான்;

11 கதிரோன் எழ, வெயில் ஏறி, புல்லைத் தீய்த்து விடுகிறது. பூக்களோ உதிர்ந்து விட, அழகிய காட்சி மறைந்து விடுகிறது. அவ்வாறே செல்வமுள்ளவனும் தான் மேற்கொள்ளும் காரியங்களில் வாடிப்போவான்.

12 சோதனைகளை மனவுறுதியோடு தாங்குபவன் பேறுபெற்றவன். இதனால் அவனது தகைமை எண்பிக்கப்படும்; இறைவன் தம்மீது அன்பு செலுத்துவோர்க்கு வாக்களித்த வாழ்வை அவன் வெற்றி வாகையாகப் பெறுவான்.

13 சோதனைக்குள்ளாகும் எவனும் 'இச்சோதனை கடவுளிடமிருந்தே வருகிறது' எனச் சொல்லக் கூடாது. ஏனெனில், கடவுள் தீமைபுரியச் சோதிக்கப்படுபவர் அல்லர்; ஒருவரையும் அவர் சோதிப்பதுமில்லை.

14 ஒருவன் சோதனைக்குட்படுவது, தன் சொந்த இச்சையாலே தான். அதுவே அவனைக் கவர்ந்து தன்வயப்படுத்துகிறது.

15 இச்சையோ, கருவுற்றுப் பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை ஈன்றெடுக்கிறது.

16 என் அன்புச் சகோதரர்களே, ஏமாந்து போகவேண்டாம்.

17 நன்மையான எக்கொடையும், நிறைவான எவ்வரமும், விண்ணினின்றே வருகின்றன. ஒளியெல்லாம் படைத்த தந்தையே அவற்றிற்குப் பிறப்பிடம். அவரிடம் எவ்வகை மாற்றமும் இல்லை; மாறி மாறி நிழல் விழச் செய்யும் ஒளியன்று அவர்.

18 தம் படைப்புக்களுள் நாம் முதற் கனிகளாகும் பொருட்டு, உண்மையை அறிவிக்கும் வாக்கினால் நம்மை ஈன்றெடுத்தார். தாமே விரும்பியபடி இங்ஙனம் செய்தார்.

19 என் அன்புச் சகோதரர்களே, இவை உங்களுக்குத் தெரியும். இனி இறை வார்த்தையைக் கேட்பதற்கு விரைதல் வேண்டும்; பேசுவதற்கோ, தாமதித்தல் வேண்டும்; சினங்கொள்வதற்கும் தாமதித்தல் வேண்டும்.

20 ஏனெனில், சினங்கொள்வதால் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் விளைவதில்லை.

21 ஆகவே, பெருக்கெடுக்கும் தீமையையும் மாசு அனைத்தையும் அகற்றி, உங்கள் உள்ளத்திலே ஊன்றப்பெற்ற வார்த்தையை அமைந்த மனத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்; இவ்வார்த்தையே உங்கள் ஆன்மாவை மீட்க வல்லது.

22 இறை வார்த்தையின்படி நடப்பவர்களாய் இருங்கள். அதைக் கேட்பதோடு மட்டும் நின்று விடாதீர்கள். அப்படிச் செய்வது உங்களையே ஏமாற்றிக் கொள்வதாகும்.

23 ஏனெனில் கேட்பதோடு மட்டும் நின்று அதன்படி நடவாதவன், தன் முகச்சாயலைக் கண்ணாடியில் பார்த்து விட்டுப் போனதும்,

24 அச்சாயல் எப்படியிருந்ததென்பதை உடனே மறந்து விடும் ஒருவனுக்கு ஒப்பாவான்.

25 ஆனால் நிறைவான திருச்சட்டத்தை, விடுதலையாக்கும் அச்சட்டத்தைக் கூர்ந்து நோக்கி அதிலே நிலைப்பவன் அதைக் கேட்பதோடு மட்டும் நின்று விடுவதில்லை; கேட்பதை மறந்து விடுவதுமில்லை; அதன்படி நடக்கிறான். அதன்படி நடப்பதால் அவன் பேறு பெற்றவன்.

26 இறைவனின் தொண்டனாகத் தன்னைக் கருதும் ஒருவன் நாவடக்கமற்றவனாயிருப்பின், அவனது தொண்டு வீணானதே. இத்தகையவன் தன்னையே ஏமாற்றிக்கொள்கிறான்.

27 தந்தையாகிய கடவுள் முன்னிலையில் புனிதமும் மாசற்றதுமான தொண்டு எதுவெனில், வேதனையுறும் அனாதைகள், கைம்பெண்கள் இவர்களை ஆதரிப்பதும், உலகத்தால் மாசுபடாமல் தன்னைக் காத்துக் கொள்வதுமே.

அதிகாரம் 02

1 என் சகோதரர்களே, மாட்சிமை மிக்க நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசமுள்ள நீங்கள் மக்களின் தோற்றத்தைப் பார்த்து அவர்களை நடத்தாதீர்கள்.

2 நீங்கள் கூடியுள்ள இடத்தில், பொன் மோதிரமணிந்து பகட்டான உடை உடுத்திய ஒருவன் வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அழுக்குக் கந்தையோடு ஏழை ஒருவனும் அங்கே வருகிறான்.

3 பகட்டாக உடுத்தியவனைப் பார்த்து, "ஐயா, தயவுசெய்து இங்கே அமருங்கள்" என்று கவனித்துக் கொள்கிறீர்கள். ஏழையிடமோ, "அடே, அங்கே நில்" என்கிறீர்கள், அல்லது "தரையில் உட்கார்" என்கிறீர்கள்.

4 இப்படி உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தவறான முறையில் தீர்ப்பிடுகிறீர்கள் அல்லவா?

5 என் அன்புச் சகோதரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்: உலகினர் கண்ணுக்கு ஏழையாய் உள்ளவர்களைக் கடவுள் விசுவாசத்தில் செல்வமுடையவர்களாகவும், தம்மீது அன்பு செலுத்துபவர்களுக்கு வாக்களித்த அரசில் உரிமை தரவும் தேர்ந்துகொள்ளவில்லையா?

6 நீங்களோ, ஏழைகளை அவமதிக்கிறீர்கள். உங்களைக் கொடுமைப்படுத்துகிறவர்கள் யார்?

7 உங்களை நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்பவர்கள் யார்? பணக்காரர்கள் அல்லரா? யாருக்கு நீங்கள் உரியவர்களாய் இருக்கிறீர்களோ அவருடைய திருப்பெயரைப் பழித்துரைப்பவர்கள் அவர்கள் அல்லரோ?

8 "உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான் மீதும் அன்பு காட்டுவாயாக" என்று மறைநூல் கூறும் இறையரசின் திருச்சட்டத்தை நீங்கள் கடைப்பிடிப்பீர்களாகில் நன்று.

9 ஆனால் நீங்கள் ஒருவனின் தோற்றத்தைப் பார்த்து அவனை நடத்தினால், நீங்கள் செய்வது பாவம். திருச்சட்டத்தை மீறுகிறவர்களென அச்சட்டமே உங்களைக் கண்டனம் செய்கிறது.

10 சட்டம் முழுவதையும் கடைப்பிடிக்கும் ஒருவன், ஒன்றில் மட்டும் தவறினால், சட்டம் முழுவதையும் மீறிய குற்றத்திற்கு ஆளாகிறான்.

11 ஏனெனில், "விபசாரம் செய்யாதே" என்று கூறியவர், "கொலை செய்யாதே" என்றும் கூறியுள்ளார். நீ விபசாரம் செய்யாவிடினும் கொலை செய்தால் சட்டத்தை மீறியவன் ஆகிவிட்டாய்.

12 விடுதலையாக்கும் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்பட வேண்டியவர்களுக்கு ஏற்றதாய் உங்கள் பேச்சும் நடத்தையும் அமைதல் வேண்டும்.

13 இரக்கம் காட்டாதவனுக்கு இரக்கமற்ற தீர்ப்புத்தான் கிடைக்கும். இரக்கம் காட்டுபவன் தீர்ப்புக்கு அஞ்ச வேண்டியதில்லை.

14 என் சகோதரர்களே, தன்னிடம் விசுவாசம் உண்டு எனச் சொல்லுகிறவன் செயலில் அதைக் காட்டாவிட்டால் அதனால் பயன் என்ன? அந்த விசுவாசம் அவனை மீட்க முடியுமா?

15 போதிய உடையோ அன்றாட உணவோ இல்லாத சகோதர சகோதரி யாரேனும் இருந்தால், தேவையானது ஒன்றையும் கொடாமல்,

16 ஒருவன் அவர்களைப் பார்த்து, "சுகமாகப் போய் வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக்கொள்ளுங்கள்" என்பானாகில் பயன் என்ன?

17 விசுவாசமும் இதைப் போலவே செயலோடு கூடியதாய் இராவிட்டால், அது தன்னிலே உயிரற்றதாகும்.

18 ஆனால், "ஒருவனிடம் விசுவாசம் உள்ளது, இன்னொருவனிடம் செயல் உள்ளது; அதனால் என்ன?" என்று யாராவது சொல்லக்கூடும். செயல்கள் இல்லாத அந்த விசுவாசத்தை எனக்குக் காட்டு. நான் செயல்களைக் கொண்டு என் விசுவாசத்தை உனக்குக் காட்டுகிறேன்.

19 கடவுள் ஒருவரே என்று நீ விசுவசிக்கிறாய், நல்லது தான். பேய்கள் கூட அதை விசுவசிக்கின்றன; விசுவசித்து நடுங்குகின்றன.

20 அறிவிலியே, செயலற்ற விசுவாசம் பயனற்றதென நீ அறிய வேண்டுமா? நம் தந்தையாகிய ஆபிரகாமைப் பார்.

21 தம் மகன் ஈசாக்கைப் பீடத்தின் மேல் பலி கொடுத்த போது, செயல்களால் அன்றோ இறைவனுக்கு ஏற்புடையவரானார்?

22 விசுவாசமும் செயல்களும் ஒருங்கே செயலாற்றின என்பதும், செயல்களால் விசுவாசம் நிறைவு பெற்றது என்பதும் இதிலிருந்து புலப்படுகிறதன்றோ?

23 இவ்வாறு "ஆபிரகாம் கடவுளை விசுவசித்தார்; அதனால் கடவுள் அவரைத் தமக்கு ஏற்புடையவர் என மதித்தார்" என்ற மறைநூல் வாக்கு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பன் எனவும் அழைக்கப் பெற்றார்.

24 ஆகவே, மனிதன் விசவாசத்தினால் மட்டுமன்று, செயல்களாலும் இறைவனுக்கு ஏற்புடையவனாகிறான் என்று தெரிகிறது.

25 அவ்வாறே, ராகாப் என்ற விலைமாது தூதவர்களை வரவேற்று, வேறு வழியாய் அனுப்பிய போது, செயல்களால் அன்றோ இறைவனுக்கு ஏற்புடையவளானாள்?

26 ஆன்மாவை இழந்த உடல் எப்படி உயிரற்றதோ, அப்படியே செயலற்ற விசுவாசமும் உயிரற்றதே.

அதிகாரம் 03

1 என் சகோதரர்களே, நீங்கள் எல்லோரும் போதகர்களாக விரும்பாதீர்கள். போதகர்களாகிய நாங்கள் கண்டிப்பான தீர்ப்புக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்பது தெரியுமன்றோ?

2 ஏனெனில், நாம் அனைவரும் பலவற்றில் தவறுகிறோம். தவறான பேச்சுக்கு இடங்கொடாதவன் தன் முழு உடலையும் கட்டுப்படுத்த வல்லவன்; அவனே நிறைவு பெற்றவன்.

3 குதிரைகளைப் பாருங்கள். அவற்றை அடக்க வாயில் கடிவாளம் போட்டு முழுக் குதிரையையே கட்டுப்படுத்தி விடுகிறோம்.

4 கப்பல்களைப் பாருங்கள். அவை எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும், புயல் காற்றில் அடிபட்டாலும், கப்பலோட்டி சிறியதொரு சுக்கானைக் கொண்டு தான் விரும்பும் திசையிலெல்லாம் அவற்றைச் செலுத்துகிறான்.

5 மனிதனின் நாவும் அவ்வாறே. அது உடலின் மிகச் சிறிய உறுப்பு தான். ஆயினும் பெரிய காரியங்களைச் சாதிப்பதாகப் பெருமையடிக்கிறது. சிறியதொரு நெருப்புப் பொறி எவ்வளவு பெரிய காட்டை எரித்து விடுகிறது, பாருங்கள்.

6 நாவும் அந்த நெருப்பு போலத்தான். அக்கிரம உலகின் உருவே அது. நம் உடலின் உறுப்புக்களுள் அமைக்கப்பட்டு உடல் முழுவதையும் கறைப்படுத்தி, மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தை எரிக்கும் நெருப்பு போல் உள்ளது. அந்நெருப்போ நரகத்திலிருந்தே வருகிறது.

7 காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் நீந்துவன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதன் அடக்கிவிடலாம், அடக்கியும் உள்ளான். நாவையோ எம் மனிதனாலும் அடக்க முடிவதில்லை.

8 ஓயாமற் தொல்லைப்படுத்தும் தீமை அது; சாவு விளைக்கும் நஞ்சு நிறைந்தது அது.

9 பரம தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவதும் அந்நாவாலே; கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதனைத் தூற்றுவதும் அந்நாவாலே.

10 போற்றுவதும் தூற்றுவதும் ஒரே வாய்தான். என் சகோதரர்களே, இப்படி இருத்தலாகாது.

11 ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா?

12 என் சகோதரர்களே, அத்திமரம் ஒலிவப் பழங்களையும், திராட்சைச் செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா? அங்ஙனமே உப்பு நீரிலிருந்து நன்னீர் வராது.

13 உங்களுள் ஞானமும் அறிவும் படைத்தவன் யாராவது இருந்தால், அவன் அவற்றைத் தனது நன்னடத்தையினால் எண்பிக்கட்டும்; அவன் செயல்கள் ஞானத்தால் விளையும் சாந்தத்தோடு விளங்கட்டும்.

14 ஆனால், உங்கள் உள்ளத்தில் மனக்கசப்பும் பொறாமையும் கட்சி மனப்பான்மையும் இருந்தால், அதைப் பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். உண்மையை எதிர்த்துப் பொய் பேச வேண்டாம்.

15 இத்தகைய ஞானம் விண்ணினின்று வருவதன்று; மண்ணுலகையே சார்ந்தது, கீழ் நாட்டத்தைப் பின்பற்றுவது, பேய்த்தன்மை வாய்ந்தது.

16 பொறாமையும் கட்சி மனப்பான்மையும் எங்குள்ளதோ, அங்கே குழப்பமும் எல்லா தீச்செயல்களும் இருக்கும்.

17 விண்ணினின்று வரும் ஞானமோ தீய எண்ணத்துடன் கலவாதது; இதுவே அதன் தலையான பண்பு. மேலும் அது சமாதானத்தை நாடும்; பொறுமையைக் கடைப்பிடிக்கும்; இணக்கத்தை விரும்பும்; இரக்கமும் நற்செயல்களும் பெருகச் செய்யும்; நடுநிலை தவறாது; கள்ளமறியாது.

18 சமாதானம் செய்வோர், சமாதானத்தில் விதைக்கும் விதையிலிருந்து இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வென்னும் கனி விளைகிறது.

அதிகாரம் 04

1 உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணம் என்ன? உங்கள் உடலில் போராட்டம் விளைவிக்கும் கீழ்த்தர ஆசைகள் அல்லவா?

2 பிறர் பொருள்மீது ஆசை வைக்கிறீர்கள்; அதைப் பெறாததால், கொலை செய்கிறீர்கள்; பேராசை கொள்கிறீர்கள்; ஆசைப்படுவதை அடைய முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். ஆசைப்படுவதை ஏன் அடைய முடியவில்லை? இறைவனிடம் கேட்காததால் தான்.

3 கேட்டாலும் ஏன் அடைவதில்லை? தீய எண்ணத்தோடு கேட்பதாலே. கிடைப்பதைக் கீழ்த்தர ஆசைகளை நிறைவேற்றுவதில் செலவழிக்கவே கேட்கிறீர்கள்.

4 விபசாரிகள் போல் வாழ்பவர்களே, உலகத்தோடு நட்பு கொள்வது, கடவுளைப் பகைப்பது என அறியீர்களோ? உலகுக்கு நண்பனாக விரும்பும் எவனும், கடவுளுக்குப் பகைவனாகிறான்.

5 நம்முள் குடியிருக்கச் செய்த ஆன்மாவை இறைவன் பேராவலோடு நாடுகிறார் என மறைநூல் கூறுவது வீண் என எண்ணுகிறீர்களோ?

6 நாம் அதற்கேற்ப வாழ நமக்குத் தேவைக்கு மேலாகவே அருளையும் வழங்குகிறார்; ஆகவேதான், " செருக்குற்றவர்களைக் கடவுள் எதிர்க்கிறார்; தாழ்ச்சியுள்ளவர்களுக்கோ அருளை அளிக்கிறார்" என்று எழுதியுள்ளது.

7 ஆகவே கடவுளுக்குப் பணிந்து நடங்கள்.

8 அலகையை எதிர்த்து நில்லுங்கள், அது ஓடி விடும். கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள்; இருமனத்தோரே, இதயங்களைப் புனிதப்படுத்துங்கள்.

9 உங்கள் இழி நிலையை உணர்ந்து புலம்பி அழுங்கள். உங்கள் சிரிப்பு அழுகையாக மாறட்டும்; மகிழ்ச்சி துயரமாகட்டும்.

10 ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்: அவர் உங்களை உயர்த்துவார்.

11 சகோதரர்களே, ஒருவரைப்பற்றியொருவர் அவதூறு பேசாதீர்கள். தன் சகோதரனுக்கு எதிராக அவதூறு பேசுபவன் அல்லது தீர்ப்பிடுகிறவன் திருச்சட்டத்திற்கு எதிராகவே பேசுகிறான். அச்சட்டத்திற்கே தீர்ப்பிடுகிறான். சட்டத்திற்கு நீ தீர்ப்பிட்டால், நீ அதை நிறைவேற்றுபவன் அல்ல; தீர்ப்பிடுகிறவன் ஆகிறாய்.

12 திருச்சட்டத்தைக் கொடுத்தவரும் தீர்ப்பிடுகிறவரும் ஒருவரே. அவரே ஆக்கவும் அழிக்கவும் வல்லவர். அவ்வாறாயின் உன் அயலானுக்குத் தீர்ப்பிட நீ யார்?

13 "இன்றோ நாளையோ அந்த நகர்க்குச் செல்வோம், அங்கே ஓராண்டு தங்கி வியாபாரம் செய்வோம்; பணம் சம்பாதிப்போம்" என்றெல்லாம் பேசுகிறீர்களே, சற்றுக் கேளுங்கள்.

14 நாளைக்கு உங்கள் வாழ்க்கை என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியாதே. நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகையே நீங்கள்.

15 ஆகவே அப்படிப் பேசாமல், "ஆண்டவர்க்குத் திருவுளமானால் நாம் உயிர் வாழ்வோம், இன்னின்ன செய்வோம்" என்று சொல்வதே சரி.

16 நீங்கள் இப்போது வீம்பு பாராட்டித் தற்பெருமை கொள்ளுகிறீர்கள்.

17 இதுபோன்ற தற்புகழ்ச்சி நல்லதன்று. ஒருவனுக்கு நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதைச் செய்யாவிட்டால் அவனுக்கு அது பாவம்.

அதிகாரம் 05

1 பணக்காரரே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் அவல நிலையை நினைத்து அலறி அழுங்கள்.

2 உங்கள் செல்வம் மட்கிப்போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டு விட்டன.

3 உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சாட்சியாய் இருக்கும்; உங்கள் சதையைத் தின்று விடும். இறுதி நாளுக்காக நீங்கள் உங்களுக்கென நெருப்பைத் தான் குவித்து வைத்திருக்கிறீர்கள்.

4 உங்கள் வயலில் அறுவடை செய்தவர்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள். கொடுக்காத கூலி கூக்குரலிடுகிறது. அறுவடையாளர் எழுப்பும் அப்பேரொலி வான்படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது.

5 இவ்வுலகிலே இன்பப் பெரு வாழ்வில் மூழ்கியிருந்தீர்கள். உங்களுடைய அழிவு நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்திருக்கிறீர்கள்.

6 நீதிமானுக்குத் தண்டனைத் தீர்ப்பளித்துக் கொலைசெய்தீர்கள். அவனோ உங்களை எதிர்க்கவில்லை.

7 ஆகவே சகோதரர்களே, ஆண்டவரின் வருகை வரை பொறுமையாயிருங்கள். பயிரிடுபவனைப் பாருங்கள். நிலத்தில் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன் மாரியும் பின் மாரியும் வருமளவும் பொறுமையோடு காத்திருக்கிறான்.

8 நீங்களும் பொறுமையாயிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில், ஆண்டவரது வருகை அண்மையிலுள்ளது.

9 சகோதரர்களே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதபடி ஒருவர்க்கெதிராய் ஒருவர் குறை கூறி முறையிடாதீர்கள். இதோ! நடுவர், வாசலிலே நிற்கிறார்.

10 சகோதரர்களே, ஆண்டவர் பெயரால் பேசின இறைவாக்கினரை நினைத்துக் கொள்ளுங்கள். துன்பத்தைத் தாங்குவதிலும், பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் அவர்களை மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.

11 இத்தகைய மனவுறுதியுள்ளவர்களைப் பேறு பெற்றவர்கள் என்கிறோம். யோபின் மன உறுதியைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் அவருக்கு என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆண்டவர் மிகுந்த இரக்கமும் தயவுமுள்ளவர் என்று அறிந்திருக்கிறீர்கள்.

12 குறிப்பாக, என் சகோதரர்களே, ஆணையிடாதீர்கள். விண்ணுலகின் மீதோ மண்ணுலகின் மீதோ, வேறெதன் மீதோ ஆணையிட வேண்டாம். நீங்கள், ஆம் என்றால் ஆம் என்றிருக்கட்டும்; இல்லை என்றால் இல்லை என்றிருக்கட்டும். இப்படிச் செய்தால் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.

13 உங்களுள் யாரேனும் துன்புற்றால் செபிக்கட்டும். மகிழ்ச்சியாயிருந்தால் இறைப்புகழ் பாடட்டும்.

14 உங்களுள் ஒருவன் நோயுற்றிருந்தால் அவன் திருச்சபையின் மூப்பர்களை அழைக்கட்டும்; அவர்கள் ஆண்டவர் பெயரால் அவன் மீது எண்ணெய் பூசி, அவனுக்காகச் செபிப்பர்.

15 விசுவாசமுள்ள செபம் நோயாளியைக் குணமாக்கும். ஆண்டவர் அவனை எழுப்பி விடுவார்.

16 அவன், பாவம் செய்தவனாயிருந்தால், மன்னிப்புப் பெறுவான். ஆகவே, ஒருவர்க்கொருவர் பாவ அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவருக்காக ஒருவர் செபியுங்கள்; அப்போது குணமடைவீர்கள். நீதிமான் முழு உள்ளத்தோடு செய்யும் மன்றாட்டு ஆற்றல் மிக்கது.

17 எலியாஸ் நம்மைப் போல் எளிய நிலைக்குட்பட்ட மனிதர் தான். ஆயினும், மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாகச் செபித்தார். மூன்று ஆண்டு ஆறு மாதங்கள் மழையில்லாது போயிற்று.

18 திரும்பவும் செபித்தார் வானம் பொழிந்தது; நிலம் விளைந்தது.

19 என் சகோதரர்களே, உங்களுள் ஒருவன் உண்மையை விட்டு விலகித் திரியும் போது, அவனை ஒருவன் மனந்திருப்பினால்,

20 தவறான வழியினின்று பாவியை மனந்திருப்புகிறவன் அவனது ஆன்மாவையே இறப்பினின்று மீட்பான் என்றும், திரளான பாவங்கள் அகலச் செய்வான் என்றும் அறிவீர்களாக.