என்னை உண்டாக்கினவருமாய் இரட்சிக்கிறவருமாயிருக்கிற சேசுவே என் அன்புள்ள கர்த்தாவே, எனக்காகவே இத்தனை பாடுபட்டீர். நீச மனிதனுமாய்ப் பாவியுமாயிருக்கிற அடியேன் பிறந்த நாள் துவங்கி இந்நாள் வரையில் உமக்கெதிராக வெகுடாவ தோஷங்களைக் கட்டிக்கொண்டேன். இப்படி அநேகம் ஆகாத நடத்தையாய் நடந்ததற்குப் பின்பு என்னுடைய பாவக்கிர துர்க்குணங்களை நன்றாய்க் கண்டுபிடித்து வெட்கிக்கிடக்கிறேன்.
சுவாமி, இப்போதாயினும் அந்தப் பாவங்களுக்காக மெய்யாகவே மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பி உம்முன் மட்டில்லாத கிருபாகடாட்சத்தை நம்பிக்கொண்டு பொறுத்தலைக் கேட்கிறேன். இனி எப்படியானாலும் உம்முடைய பாவனையாகச் சீவிக்கவும், உமது தோத்திரமாக நல்ல மரணத்தை அடையவும் மிகுந்த ஆசையாயிருக்கிறேன்.
ஆனால் இப்படிப்பட்ட உத்தமமான நன்மைகளை அடைகிறதற்கு நான் அபாத்திரவானாயிருக்கிற தினால், உம்முடைய திருப் பாதத்திலே விழுந்து எனக்காக எப்பொழுதும் திறக்கப்பட்டிருக்கிற இந்த அர்ச். காயங்களைப் பார்த்து நான் மன்றாடுகிற சகாயத்தை எனக்குக் கட்டளையிட்டருளும் சுவாமி.
மனிதரெல்லோரையும் இரட்சிக்கத்தக்கதாக இவ்வுலகத்தில் எழுந்தருளிவந்த திவ்விய சேசுவே, சகலமான புண்ணியங்களையும் உம்முடைய சுகிர்த வார்த்தைகளினாலும் கிரியைகளினாலும் கற்பித்ததற்குப் பிற்பாடு கபால மலையின் மீது சிலுவையில் அறையுண்டிருக்கும் போது சகலரும் நல்ல மரணத்தை அடைகிறதற்கு உத்தம மாதிரிகையாயிருந்தீரே.
இப்படிப்பட்ட உத்தம மாதிரிகையின் பாவனையாக அடியேனும் மற்றச் சகல கிறீஸ்துவர்களும் புண்ணியத்தினால் பாக்கியமான மரணத்தை அடையத்தக்கதாகப் பிரயாசப்பட வேண்டுமென்று உம்முடைய தப்பில்லாத வேதப் பிரமாணத்திலே கற்பித்தீரே சுவாமி.
இப்படிப்பட்ட திவ்விய வேதத்திற்குப் பற்பல பாவங்களால் துரோகியாயிருக்கற நான், உம்முடைய கோபாக்கினைக்குப் பாத்திரமாயிருந்தாலும் உமது அளவில்லாத தயவையும், தேவரீர் எனக்காக சிந்தின திரு இரத்தத்தின் பலனையும் நம்பிக்கொண்டு உம்முடைய அநுக்கிரகத்தினால் நல்ல ஆயத்தம் செய்து உம்முடைய பாவனையாகப் பரிசுத்தத் தனத்தோடே மரணமடைவதற்குத் தக்க பிரயாசைப்படுவேன்.
திவ்வியகுருவாயிருக்கிற சேசுவே! என் ஆராதனைக்குரிய கர்த்தாவே, தேவரீர் சிலுவையிலே அறையுண்டிருக்கும் போது. எனக்குப் படிப்பினையாக ஏழு வாக்கியங்களைத் திருவுளம் பற்றினீரே, அவைகளில் அடங்கிய உசிதமான அர்த்தத்தை அடியேன் கண்டுபிடித்து தேவரீரிடத்தில் அந்நேரத்திலிருந்த மனப் பற்றுதலை அடியேன் அடையும்படிக்கு அநுக்கிரகம் செய்தருளும்.
ஆமென்.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠