பிதாவே! தாங்கள் செய்கிறது இன்னதென்று அவர்கள் அறியாததினாலே அவர்களுக்குப் பொறுத்தல் தந்தருளும்

"பிதாவே! தாங்கள் செய்கிறது இன்னதென்று அவர்கள் அறியாததினாலே அவர்களுக்குப் பொறுத்தல் தந்தருளும்" என்றீரே.

ஓ திவ்விய சேசுவே! அந்த வாக்கியத்தினால் அத்தியந்த தயை காட்டி உம்மைத் தூஷிக்கிறவர்களுமாய் கடின வாதைப்படுத்துகிறவர்களுமாயிருந்த நிஷ்டூர கொடியவர்களுடைய பாவங்களையும் மற்றப் பாவிகளும் நானும் சிறு வயது முதல் இந்நாள் வரையிலும் செய்த சகல பாவத்துரோகங்களையும் பொறுக்கச் சொல்லி, அவர்களுக்காகவும் எனக்காகவும் உம்முடைய பிதாவாகிய சர்வேசுரனை வேண்டிக்கொண்டீரே.

இப்படியிருக்க உம்மைப் பற்றி தேவ பிதாவை வேண்டிக்கொள்ளுகிறதற்கு எனக்கு நம்பிக்கையும் தைரியமும் உண்டாகின்றது. ஆதலால் கிருபை நிறைந்த பிதாவாகிய சர்வேசுரா, இதோ உம்முடைய திவ்விய குமாரன் எனக்காக மன்றாடினார்.

ஆராதனைக்குரிய கர்த்தாவே! உமக்கும் உகந்த பிள்ளையாகிய சேசுநாதருடைய மன்றாட்டைக் கேட்டு என் பாவங்களைப் பொறுத்துக் கொள்ளும்.

உத்தம பிதாவே! நான் எம்மாத்திரம் நீசப் பாவியாயிருந்தாலும் உமக்கு மிகவும் பிரிய குமாரனாகிய சேசு கிறிஸ்துநாதருடைய திருக் காயங்களைப் பார்த்து என்னுடைய பாவங்களைப் பொறுத்துக் கொள்ளும்.

மேலும், என் மதுரமான சேசுவே, தேவரீர் சிலுவையில் அறையுண்டிருக்கிற சமயத்தில் மனிதர் உமக்குச் செய்த துரோகங்களை எல்லாம் பொறுத்ததுமல்லாமல், அவர்களுக்காக நீர் பிதாவாகிய சர்வேசுரனை மன்றாடினது போலே, உமது சமூகத்தில் அற்பப் புழுவாயிருக்கிற நானும் புறத்தியார் எனக்குச் செய்த விரோதங்களையும், அவமானங்களையும், இவை முதலான சகல குற்றங்களையும் முழுமனதோடே பொறுக்கிறதும் தவிர, அவர்களுக்காக நல்ல மனத்தோடே உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன்.

ஆகையினால் மனிதரால் எனக்கு வந்த மனஸ்தாபமெல்லாம் மறந்து விட்டு, இப்போதைக்கும் என் மரண நேரத்திலும் எனக்கு தேவரீருடைய தயவும் பொறுத்தலும் தப்பாமல் கிடைக்கும்படி கேட்கிறது போல், எனக்குப் பொல்லாங்கு செய்தவர்களுடைய பாவங்களைப் பாராமல் அவர்களுக்கு நன்மை செய்தருளத்தக்கதாக உம்மை மன்றாடுகிறேன்.

இதன்றியே நான் புறத்தியாருக்கு வருவித்த கஸ்தியெல்லாம் அவர்கள் எனக்குப் பொறுக்க வேண்டுமென்று தாழ்ச்சியோடு மன்றாடிக் கேட்கிறேன்.

ஆமென்.