புனித பிரகாசியம்மாள்

பிரகாசியம்மாள் என்று அழைக்கப்படும் கன்னி மறைசாட்சியான புனித லூசியா,  சிசிலி என்னும் நாட்டில் சிராக்கூஸ் என்ற நகரில் கி பி 283 இல் பிறந்தார்.இவரது பெற்றோர் கிரேக்க நாட்டு உயர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் . தாயின் பெயர் யுற்றிக்கியா . குழைந்தைப்பருவ முதலே கிறிஸ்தவ மறையில் வளர்க்கப்பட்டு வந்தார் புனித பிரகாசியம்மாள்  . இவரது சிறு வயதிலேயே இவரது தந்தை மரித்துப் போகவே , தாயின் அரவணைப்பில் வளர்ந்தார் .உரிய காலம் வந்த போது இவரது தாயார் இவருக்கு திருமணம் செய்விக்க எண்ணினார் . புனித  பிரகாசியம்மாவோ சிறு வயது முதலே தன் கன்னிமையை இறைவனுக்கு இரகசியமாக அர்பணித்திருந்தார் . எனவே திருமணத்திற்கு மறுத்து வந்தார்

இந்நிலையில் இவரது தாயார் கடுமையான இரத்தப்போக்கு நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார் . அன்னையின் துயரைக் கண்ட புனித பிரகாசியம்மாள்  , "அம்மா . நாம் புனித ஆகத்தம்மாவின் (St .Agatha ) கல்லறைக்குத் திருப்பயணம் சென்று வரலாமா ? என்று கேட்டார். அவரது தாயும் அதற்கு இசைந்து , இருவரும்  புனித ஆகத்தமாவின் கல்லறை இருக்கும் நகரான கட்டோனியாவிற்கு திருப்பயணம் மேற்கொண்டனர்.அங்கு சென்று மிக உருக்கமாக மன்றாடினார். அன்று இரவு புனித ஆகத்தம்மாவின் கோவிலில் களைப்போடு தூங்கிக் கொண்டிருந்த புனித பிரகாசியம்மாவின் கனவில் புனித ஆகத்தம்மாள் தோன்றி "உன் தாய்க்குத் தேவையான உடல் நலத்தைப் பெற்றுக் கொடுக்க , உன்னுடைய மன்றாட்டே போதுமானதாக இருக்கும் பட்சத்தில் , நீ என்னிடம் ஏன் கேட்கின்றாய் ?உன் கற்பென்னும் லீலி மலரைக் கொண்டு இறைவனுக்கு ஏற்ற இல்லிடம் தரித்துள்ளாய். உனது விசுவாசமே உனது தாய் குணமடையப் போதுமானது "என்றார் . மேலும் "உன் தாயை இறைவன் குணமாக்குவார் . கட்டோனியாவில் எனக்கு உள்ளது போல் சிராக்கூசில் உனக்கு ஒரு இடம் கிடைக்கும் "என்றார்.

புனித பிரகாசியம்மாள்  இந்தக் கனவின் மூலம் திடன் பெற்றார் .அதன் படியே அவரது தாயார் நலமானார் .தன் தாய் பெற்ற அற்புத சுகத்தைக் கண்ட புனிதை  , இனி திருமணம் பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை என்றும், தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தார் . தன் கன்னிமையை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்ததை தன் தாய்க்குத் தெரிவித்தார் . தாயாரோ , ஒரு வாலிப பிரபுவுக்கு இவரை மணமுடிக்க வாக்குறுதி கொடுத்திருந்தார் . புதுமையாகச் சுகம் பெற்ற தாய் தன் நன்றிக்கடனைக் காட்ட மகளுக்குச் சம்மதம் தெரிவித்தார் . அதே வேளை "எனது இறப்பிற்குப் பின் நீ உன் விருப்பம் போல் எது வேண்டுமானாலும் செய்து கொள் என்று கூறினார் . புனிதை  அதில் திருப்தி அடையவில்லை . உடனடியாக நிறைவேற்ற எண்ணி , சிரக்கூசிர்க்கு வந்து தன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்தார் .

 இதை அறிந்த வாலிப பிரபு கடுங்கோபம் கொண்டான் . அவன் பல விதங்களில் எதிர்த்த போதும் பிரகாசியம்மாள்  பின் வாங்கவில்லை .இறுதி முயற்சியாய்'இவள் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவள் 'என்று உயர் அதிகாரியான பிரிபெக்ட் பஸ்காசியூசிடம் தெரிவிப்பேன் என்றான் . காரணம் அப்போது கொடுங்கோலாட்சி நடத்தி வந்த தியோக்கிலேசியான் பேரரசன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களைக் கொடூரமாய்க் கொன்று குவித்தான் . எங்கும் இரத்த ஆறு ஓடியது . "உன்னை அடித்து நொறுக்கும்போது , உனக்கு பேசுவதற்குக் கூட நா எழாது "என்றான் . "இறையடியாள் நான் . சரியான சொற்களை சரியான நேரத்தில் சொல்ல பரிசுத்த  ஆவியார் துணை நிற்பார் .ஏனெனில் பரிசுத்த வாழ்வு வாழ்வோர் யாவரும் பரிசுத்த  ஆவியின் ஆலயங்கள் " என்றார் . "விலை மகளிர் நடுவே உன்னைத் தள்ளுவார்கள் . அப்போது பரிசுத்த  ஆவியார் பறந்து விடுவார் "என்றான் . "எனது விருப்பத்திற்கு மாறாக நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் எனக்கு இரு மடங்கு வெற்றி கிடைக்கும் என்று புரிந்து கொள் "என்றார் , புனிதை  .

இதையெல்லாம் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பஸ்காசியூஸ் , புனித  பிரகாசியம்மாவை விலை மகளிர் இருக்குமிடத்தில் தள்ள சொன்னான் .. அவனது உத்தரவுக்கு இணங்கி அவரைக் கடத்திக் கொண்டு போக வந்தவர்களால் அவரை அசைக்க முடியவில்லை . கற்பாறை போல் அவர் அசையாது நின்றார் . ஆத்திரமடைந்த அரசன் , அவர் மீது கொதிக்கும் தாரை ஊற்றச் சொன்னான் . அது அவரை எதுவும் செய்ய முடியவில்லை .. அவரை அடித்துத் துன்புறுத்தி அவர் கண்களைப் பிடுங்கச் சொன்னான் .காவலர்கள் அவர் கண்களைப் பிடுங்கவே , ஆண்டவர் அற்புதமாய் அவரது கண்களைச் சரி செய்து மீண்டும் பார்வை தந்தார் . [எனவே தான் இன்று வரை கண் நோய்களில் இருந்து விடுதலை பெற புனித பிரகாசியம்மாவை  மன்றாடுகின்றனர் . லூசியா என்னும் சொல்லுக்கு ஒளி / வெளிச்சம் என்று பொருள். எனவே தான் புனித லூசியாவை  பிரகாசியம்மாள்  என்றும் அழைக்கின்றனர்].இறுதியில் மன்னன் அவரை உயிருடன் தீயில் இடக் கட்டளை இட்டான் . அவருக்கு எந்த ஆபத்தும் நேரிடாவிட்டால் , கத்தியால் குத்திக் கொல்ல ஆணை பிறப்பித்தான் . அவர் பிழைத்தால் மக்கள் அனைவரும் கிறிஸ்தவ மார்க்கத்தைத் தழுவக் கூடும் என்று அஞ்சினான் . புனிதையைச் சுற்றி தீ வளர்த்த போதும் , அவருக்கு ஏதும் நேரிடவில்லை . பின் இறுதியாக , கத்தியால் தொண்டையில் குத்தப்பட்டு இறந்தார் . கி பி 1204 இல் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது .

புனித பிரகாசியம்மாளுக்கு நவநாள் ஜெபம்

உயிருள்ள பக்தியும் ,
பரலோக பேரின்ப பேறும் பெற்ற கன்னியுமான புனித பிரகாசியம்மாளே,
நீர் இறைவனால் அடைந்த அருட்கொடையின் வல்லமையினால்
 சிறிது காலமே குறையற்ற முழுமை அழகு பெற்று,
 உமது அன்புப் பர்த்தாவாகிய இயேசுநாதருக்கு கன்னிமையைக் கையளித்து,
அவருக்காக மிகுந்த வேதனைப்பட்டு ,
அசையாத தூணாய் கன்னிமையைக் கறையின்றிக் காத்து ,
ஆன்மாவைக் கையளித்தீரே !
நீர் சீர்க்கூசா நகரத்தின் நல் பரிசாகவும்,
 கன்னிமைக்கு அடைக்கலமாகவும்
 உம்முடைய பக்தி அதிகரித்த யாவருக்கும்
நித்தம் உமது உபகார நன்மையைச் செய்து வருகிறீரே !
ஆகையால் புனித கன்னிகையே !
நீர் எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி,
 இவ்வுலகில் படர்ந்துள்ள இருள் நீங்க,
 நாங்கள் ஞான ஒளி பெற ,அருள் பொழிந்தருளும் .
அதனால் நாங்கள், இறைவன் பேரிலும்,
 உமது பேரிலும் பயபக்தியாய் இருந்து ,
பாவத்தை வெறுத்து உமது தயை மிகு மன்றாட்டினால் பரலோக பேரின்பம் அடைவோமாக

ஆமென்

இயேசுவுக்கு புகழ் !!! மாமரித்தாயே வாழ்க