மாதாவின் கண்ணீர், மேலுடுப்பு, இரண்டு சங்கிலிகள்

மாதாவின் கண்ணீர் 

பரிசுத்த கன்னிகை, என்னுடன் பேசிய ஏறக் குறைய முழு நேரமும் அழுது கொண்டேயிருந்தார்கள். அவர்களின் கண்ணீர்கள் மெல்லப் பாய்ந்தன - ஒவ்வொன்றாக அவர்களின் முழங்கால்களில் விழுந்து பின் ஒளிச்சுடர்கள் போல் மறைந்தன. அக்கண்ணீர்கள். பிரகாசிப்பவையாகவும் அன்பால் நிரம்பியும் காணப்பட்டன. அவர்களுக்கு ஆறுதல் அளித்து கண்ணீர்களை நிறுத்த நான் ஆசித்தேன். ஆனால் மனிதர்களால் மறக்கப்பட்ட அவர்களின் அன்பை அதிகமாகக் காண்பிக்க இக்கண்ணீர்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டன போல் எனக்குத் தோன்றியது, நான் என்னை அவர்களின் கரங்களுக்குள் விழச் செய்து அவர்களிடம் இவ்வாறு சொல்ல விரும்பினேன் :

''என் அன்புள்ள தாயே, அழாதீர்கள், பூமியிலுள்ள எல்லா மனிதருக்காகவும் உங்களை நான் நேசிக்கிறேன்" என்று. ஆனால் அவர்கள் என்னைப் பார்த்து இப்படிக் கூறுவது போலிருந்தது. - மெலானி.

"என்னை அறியாதவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்!” என்று.

நான் வாழ்விற்கும் மரணத்திற்கும் நடுவில் இருந் தேன். ஒரு பக்கம் நேசிக்கப்பட வேண்டும் என்னும் இவ்வன்னையின் பெரிய ஆவல். மறுபக்கம் எவ்வளவு குளிர்ச்சியும் அலட்சியமும் ......... ஓ! என் தாயே! மிக்க அழகுடைய நேசத்துக்குரிய அன்னையே! என் அன்பே ! என் இருதயத்தின் இருதயமே!

நம் இனிய தாயின் கண்ணீர்கள், அவர்களின் ஒரு அரசியின், ஒரு எஜமாட்டியின் மகத்துவ சாயலைக் குறைக்காமல், அதற்கு மாறாக அவர்களை கூடுதலாக அலங்கரித்து அழகுறச் செய்தன. அதிக வல்லமையாலும் அதிக அன்பாலும் நிறையவும் செய்தன. அவை அவர்களை அதிக தாய்ப்பண்பும், அதிக இன்பமும் உடையவர் களாக்கின. அவை என் இருதயத்தை அனுதாபத் தாலும் அன்பாலும் பொங்க வைத்தன. அவர்களின் கண்ணீர்களை நான் துடைக்க ஆவல் கொண்டேன். ஒரு தாய், அதிலும் இத்தகைய தாய் அழுவதைப் பார்த்து அவர்களை ஆறுதல் படுத்தி அவர்களின் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்ற செய்ய முடிந்ததையெல்லாம் செய்யாதிருப்பது சாத்தியமா? ஓ! மாதாவே! நன்மையை விட மேலாக இருக்கிறீர்களே! கடவுளால் முடிந்த அளவு வரப்பிரசாத சலுகை களோடு உருவாக்கப்பட்டீர்கள். ஒரு சொல் முறைக்கு, சர்வேசுரனுடைய வல்லபத்தை மணந்து கொண்டீர்கள். நீங்கள் நல்லவர்கள். அதிலும் மேலாய் கடவுளின் நன்மைத்தனத்தைக் கொண்டே நல்லவர்களாயிருக்கிறீர்கள். உங்களைத் தமது பூவுலகை, மோட்சவுலக உச்ச சிறப்பான கைவேலையாகச் செய்ததினால் கடவுளே தம்மை நீட்டித்துக் கொண்டார்.

மாதாவின் மேலுடுப்பு

பரிசுத்த கன்னிகை ஒரு மஞ்சள் மேலுடுப்பு அணிந்திருந்தார்கள். மஞ்சள் என்றா சொன்னேன்? பல சூரியன்கள் ஒன்று சேர்ந்தாற்போல் அத்தனை பிரகாசமுடைய மேலுடுப்பு அணிந்திருந்தார்கள். அது தொடக் கூடிய பொருளாயில்லை. அது மகிமையால் செய்யப்பட்டிருந்தது. அது மின்னி மின்னி ஒளிவீசி உள்ளம் நிரப்பும் அழகோடு இருந்தது. பரிசுத்த கன்னிகையிடம் இருந்த ஒவ் வொன்றும் என்னை உறுதியோடு சேசுவின் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவரை ஆராதிக்கவும் நேசிக்கவும் என்னை சறுக்கியிழுத்துக் கொண்டு போவதாயிருந்தது.

இரண்டு சங்கிலிகள்

மாதா இரண்டு சங்கிலிகள் அணிந்திருந் தார்கள். ஒன்று மற்றதைவிட சற்று அகன்றதா யிருந்தது. ஒடுக்கமான சங்கிலியிலிருந்து நான் முன்பு கூறிய பாடுபட்ட சிலுவை தொங்கியது. இந்தச் சங்கிலிகள் (அவற்றை சங்கிலிகள் என்றுதான் அழைக்க வேண்டியதிருக்கிறது) பிரகாசமாய் ஜொலிக்கும் மகிமைக் கதிர்கள் போலிருந்தன. அவை மின்னி ஒளிவீசின. மாதாவின் பாத அணிகள் (அவற்றைப் பாத அணிகள் என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது) வெண்மையாயிருந்தன. ஆனால் வெள்ளி போன்ற ஒளியான வெண்மை, அவற்றைச் சுற்றிலும் ரோஜா மலர்கள் இருந்தன. இந்த ரோஜாக்களும் மிக ஒளி பொருந்திய அழகுடன் விளங்கின. ஒவ்வொரு பூவின் இதயத்திலிருந்தும் ஒரு வெகு அழகிய சுவாலை - அதுவும் மிக இனிய ஒளியாக இருந்தது. மாதாவின் காலணிகளில் தங்கக் கொளுக்கிகள் இருந்தன. - இவ்வுலகத்தின் தங்கமல்ல அது, பரலோகத்தின் பசும்பொன்.