தீத்துஸ்

அதிகாரம் 01

1 கடவுளின் ஊழியனும் இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனுமான சின்னப்பன் யான் தீத்துவுக்கு எழுதுவது:

2 நம் இருவருக்கும் பொதுவான விசுவாச வாழ்வில் என் உண்மை மகனான உமக்கு, பரம தந்தையாகிய கடவுளிடமிருந்தும், நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் சமாதானமும் உண்டாகுக!

3 கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களுக்கு விசுவாசம் உண்டாகவும், பக்தி நெறிக்கு ஏற்ற உண்மையை அவர்கள் அறிந்து கொள்ளவும், முடிவில்லா வாழ்வின் நம்பிக்கையில் அவர்கள் நிலைபெறவுமே நான் அனுப்பப்பெற்றேன்.

4 இவ்வாழ்வை எல்லாக் காலங்களுக்கு முன்பே பொய்யாக் கடவுள் தாமே வாக்களித்தார். அதற்கொப்ப, குறிப்பிட்ட காலத்தில் நற்செய்தியறிவிப்பின் வாயிலாகத் தம் வார்த்தையை அவர் வெளிப்படுத்தினார். இந்நற்செய்தியறிவிப்பு நம் மீட்பராகிய கடவுளின் கட்டளைப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

5 நான் திருத்தாமல் விட்டு வந்ததை நீர் சீர்திருத்தவும், நான் உமக்குப் பணித்தவாறு நகரந்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தவும் வேண்டியே, உம்மைக் கிரேத்தா தீவிலே விட்டு வந்தேன்.

6 நீர் ஏற்படுத்தும் மூப்பர்கள் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருத்தல் வேண்டும் ஒருமுறை மட்டுமே திருமணமானவராக இருக்கவேண்டும் அவர்களுடைய மக்கள் விசுவாசிகளாக இருக்கவேண்டும்; இவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று பெயரெடுத்தவர்களாகவோ, அடங்காதவர்களாகவோ இருத்தல் ஆகாது.

7 விசுவாசிகளை மேற்பார்வையிடுவோர் கடவுளுடைய கண்காணிப்பாளருக்கு ஏற்ப, குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருத்தல் வேண்டும். அகந்தை, கடுஞ்சினம், குடிவெறி, கலகம், இழிவான ஊதியத்தின்மேல் ஆசை ஆகியவற்றை விலக்கி,

8 விருந்தோம்பல், நன்மையில் நாட்டம், விவேகம், நீதி, புனிதம், தன்னடக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து ஃ

9 நற்போதனையோடு பொருந்தியதும் நம்பிக்கைக்குரியதுமான படிப்பினையை உறுதியாய்ப் பற்றிக்கொள்பவராய் இருக்கவேண்டும். அப்போதுதான் நலமிக்க போதனையைப் போதித்து அறிவுரை கூறவும், எதிர்த்துப் பேசுவோர்க்கு மறுப்புக் கூறவும் அவர் வல்லவராக இருக்கமுடியும்.

10 ஏனெனில், கட்டுக்கடங்காதவர், வீண் வாதம் செய்பவர், மோசக்காரர் பலர் இருக்கின்றனர். இவர்களுள் பெரும்பாலோர் யூத மதத்திலிருந்து வந்தவர்களாயிருப்பர். இவர்களுடைய வாயை அடக்க வேண்டும்.

11 இழிவான ஊதியத்திற்காக இவர்கள் தகாதவற்றைப் போதித்து முழுக் குடும்பங்களையே சீர்குலைத்து விடுகின்றனர்.

12 தெய்வ வாக்கினன் என அவர்களே கருதிய ஒருவன் சொன்னபடி: 'கிரேத்தா தீவினர் ஓயாப் பொய்யர்; கொடிய காட்டுமிராண்டிகள்; பெருந்தீனிச் சோம்பேறிகள்.'

13 இந்தச் சாட்சியம் உண்மையே. இவ்வாறிருக்க, யூதக் கட்டுக் கதைகளிலும் உண்மையை விரும்பாத மனிதருடைய கற்பனைகளிலும் கருத்தைச் செலுத்தாமல்,

14 தங்கள் விசுவாசத்தைப் பழுதின்றிக் காத்துக்கொள்ளும்படி நீர் அவர்களைக் கண்டிப்புடன் கடிந்துகொள்ளும்.

15 தூய உள்ளத்தோருக்கு எல்லாம் தூயவையே மாசுள்ள மனத்தினருக்கும், விசுவாசம் இல்லாதவர்க்கும் எதுவுமே தூயதாயிராது. அவர்களுடைய மனமும் மனச் சாட்சியும் கூட மாசுள்ளவையாயிருக்கின்றன.

16 கடவுளை அறிந்திருப்பதாக அவர்கள் வாயால் சொல்லுகின்றனர்; ஆனால், நடத்தையால் அவரை மறுக்கின்றனர்; அடங்காத இந்த மனிதர்கள் அருவருப்புக்குரியவர்கள்; எந்த நற்செயலுக்கும் தகுதியற்றவர்கள்.

அதிகாரம் 02

1 நீரோ நலமிக்க போதனைக்கேற்பப் பேசுவீராக

2 வயது முதிர்ந்தவர்கள் மிதமிஞ்சிக் குடியாமல், கண்ணியமும் விவேகமும் உள்ளவர்களாய் விசுவாசம், அன்பு, மன உறுதி இவற்றைப் பழுதின்றிக் காத்துக்கொள்ளச் சொல்லும்.

3 அவ்விதமே வயதுமுதிர்ந்த பெண்களும் மரியாதைக்குரிய நடையுடை பாவனையுள்ளவர்களாய்ப் புறணி பேசாமல், குடிவெறிக்கு அடிமையாகாமல் இருக்கவேண்டும்.

4 இவர்கள் இளம் பெண்களுக்கு விவேகத்தை யூட்டும் நல்ல அறிவுரை கூறுபவர்களாய் இருக்கவேண்டும். இளம் பெண்கள் தம் கணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அன்புகாட்டி,

5 தங்கள் வீட்டு வேலையைக் கவனித்துக் கொண்டு விவேகம், கற்பு, இரக்கமனம், கணவர்க்குப் பணிவு ஆகிய நற்பண்புகளைக் கொண்டவர்களாய் இருக்கும்படி அவ்வயதான பெண்கள் கற்பிப்பார்களாக. அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை பழிப்புக்குள்ளாகாது.

6 அவ்வாறே இளைஞர்களும் எல்லாவற்றிலும் விவேகத்துடன் நடந்துகொள்ள அறிவு புகட்டும்.

7 நன்னடத்தையால் அவர்களுக்கு முன்மாதிரியாய் விளங்குவீராக. போதிப்பதில் வாய்மையும் பெருந்தன்மையும் காட்டும்.

8 யாரும் குறை காணமுடியாத, நலமிக்க வார்த்தைகளைப் பேசும். அப்போது நம்மைப்பற்றித் தீமையாகச் சொல்வதற்கு எதுவுமின்றி எதிரிகள் நாணிப்போவர்.

9 அடிமைகள் தம் தலைவர்களுக்கு எல்லாவற்றிலும் பணிந்து நடந்து, எதிர்த்துப் பேசாமல் அவர்களுக்கு உகந்தவர்களாய் இருக்க முயலும்படி சொல்லும்.

10 சிறுகளவும் செய்யாமல், நடத்தையில் நல்லவர்கள், முழு நம்பிக்கைக்குரியவர்கள் எனக் காட்டுவார்களாக. இவ்வாறு அவர்கள், கடவுளாகிய நம் மீட்பருடைய போதனைக்கு எல்லா வகையிலும் அணிகலனாய் இருப்பார்கள்.

11 மாந்தர் அனைவருக்கும் மீட்பளிக்கும் கடவுளின் அருள் பிரசன்னமாகி

12 நாம் இறைப் பற்றின்மையையும் உலக இச்சைகளையும் விட்டொழித்து விவேகத்தோடும் நீதியோடும் பக்தியோடும் இம்மையில் வாழ நம்மைப் பயிற்றுகிறது.

13 இவ்வாறு வாழும் நாமோ, மகத்துவமிக்க கடவுளும், நம் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சிமை பிரசன்னமாவதால், மகிழ்வளிக்கும் நம்முடைய நம்பிக்கை நிறைவேறுமென எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

14 இவர் நம்மை எல்லா அக்கிரமத்திலிருந்தும் மீட்கவும், நம்மைத் தூயவர்களாக்கி, நற்செயல்களில் ஆர்வமுள்ள ஓரினமாகத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவும் தம்மை நமக்காகக் கையளித்தார்.

15 இவற்றை நீர் எடுத்துக் கூறி, அறிவுறுத்திக் கடிந்துகொள்ளும். முழு அதிகாரத்தோடு பேசும். யாரும் உம்மை அவமதிக்க விடாதீர்.

அதிகாரம் 03

1 தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பணிந்து கீழ்ப்படிய மக்களுக்கு நினைவூட்டும்.

2 அவர்கள் எந்த நற்செயலுக்கும் தயாராயிருக்கவும், பழிச்சொல்லும் வீண் சண்டையும் விலக்கி, அமைதியுடன் எல்லாரிடமும் நிறைவான சாந்தத்தோடு பழகவும் வேண்டும்.

3 நாமும் ஒருகாலத்தில் மதிகேடராய் யாருக்கும் அடங்காமல் நெறி தவறியிருந்தோம்; பல்வேறான இச்சைகளுக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமைப்பட்டு, பொறாமையும் தீய மனமும் கொண்டவர்களாய் வாழ்ந்தோம்; வெறுப்புக்குரியோராய்ப் பிறரையும் வெறுத்து வந்தோம்.

4 நம் மீட்பராகிய கடவுளின் பரிவும் நேயமும் பிரசன்னமானபோது,

5 நீதிநெறியைப் பின்பற்றி நாமே செய்த நற்செயல்களை முன்னிட்டன்று, தம் இரக்கத்தை முன்னிட்டே புதுப்பிறப்பைத் தரும் முழுக்கினாலும், புத்துயிர் அளிக்கும் பரிசுத்த ஆவியாலும் இறைவன் நம்மை மீட்டார்.

6 இந்த ஆவியை அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக நம்மீது நிரம்பப் பொழிந்தார்.

7 கிறிஸ்துவின் அருளினால் நாம் இறைவனுக்கு ஏற்புடையவர்களாகி நமக்குள்ள நம்பிக்கையால் முடிவில்லா வாழ்வுக்கு உரிமையாளராவதற்கே இவ்வாறு செய்தார்.

8 இது உண்மையான வார்த்தை. ஆகவே, கடவுள்மேல் விசுவாசமுள்ளவர்கள் நற்செயல்களில் ஈடுபடக் கருத்தாயிருக்கும்படி நீர் வற்புறுத்தவேண்டும் என்பது என் விருப்பம். இவை நல்லவை, மக்களுக்குப் பயன்படுபவை

9 ஆனால், மூட ஆராய்ச்சிகள், தலைமுறைகளைப் பற்றிய ஆய்வுகள், சண்டை சச்சரவுகள், சட்டத்தைப்பற்றிய வாக்குவாதங்கள் இவற்றை விலக்கும். இவை பயனற்றவை; வீணானவை.

10 கட்சி விளைவிப்பவனை இரு முறை எச்சரித்தபின் விட்டு விலகும்.

11 அப்படிப்பட்டவன் நெறி பிறழ்ந்தவன்; தனக்குத் தானே தீர்ப்பைத் தேடிக்கொண்ட பாவி. இது உமக்குத் தெரிந்ததே.

12 உம்மிடம் அர்த்தெமாவையோ, தீக்கிக்குவையோ நான் அனுப்பும்பொழுது நீர் நிக்கொப்போலி நகருக்கு என்னிடம் விரைவில் வந்துசேரும். அங்கேதான் குளிர்காலத்துக்குத் தங்கத் தீர்மானித்திருக்கிறேன்.

13 அப்பொல்லோவையும் வழக்கறிஞரான சேனாவையும் வழிகூட்டி அனுப்பிவையும். அவர்களுக்கு எவ்விதக் குறையும் ஏற்படாதபடி அக்கறையோடு பார்த்துக்கொள்ளும்.

14 நம்மவர்களும் வாழ்க்கைத் தேவைகளை நிறைவுசெய்யும்படி கண்ணியமான வேலைகளில் ஈடுபடக் கற்றுக்கொள்வார்களாக. அவர்கள் பயனற்றவர்களாயிருத்தலாகாது.

15 என்னோடு இருக்கும் அனைவரும் உமக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். விசுவாசத்தில் நம்மை நேசிக்கிறவர்களுக்கு என் வாழ்த்துக்களைக் கூறும். இறை அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.