சேசுநாதரின் பூங்காவன அவஸ்தை

"அவருடைய வியர்வையானது இரத்தமாக வடிந்து, தரையில் விழுந்தது" (லூக். 22:44).

ஒலிவ மரத்தடியில்தான் உலக இரட்சகரின் உதிரம் நம்மை இரட்சிக்க முதன் முதலில் வழிந்தோடியது. ஒலிவத் தளிரானது சமாதானத்தைக் குறிப்பிடுகிறது. ஆதலால் சமாதான அரசராகிய திவ்ய சேசு தம் இரத்தத்தின் முதல் பங்கை சமாதானத்திற்கு எனத்தத்தம் செய்தார் (இசை. 9:6).

நமது அன்புள்ள ஆண்டவர் தம்முடைய நெற்றியில் இருந்து வழிந்த இரத்த வியர்வையை அந்நேரமே நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தம் பரம் பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தார். மனிதனின் கைப்பாரம் (பாவம்) மனுமகனின் பேரில் விழுந்து, அவருடைய இரத்தத்தைச் சிந்து முன்பே, தேவ பிதாவின் திருக்கரத்தின் பாரம் திவ்ய சுதனின் திருச்சரீரத்தில் விழுந்ததால் வழிந்த இரத்தம் இப்பாவ உலகில் விழுந்து அதை அர்ச்சித்துப் பரிசுத்தப்படுத்தியது. 

சேசுநாதர் ஜெத்சமெனித் தோட்டத்திற்குள் பிரவேசிக்கிறார். நம் பாவங்களின் பிணையாக அவர் தம்மைத் தேவ பிதாவின் நீதிக்குக் கையளிக்கிறார். உடனே மனிதர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அவர் மேல் சுமத்தப்படுகின்றன. அவை அவரைப் பிதாவின் முன் குற்றவாளியாக்கு கின்றன. அக்குற்றத்தை அவரால் மறுக்க முடியவில்லை. ஆதலால் பரிபூரண பரிசுத்தராகிய அவர் தம்மேல் ஏற்றுக்கொண்ட பாவங்களைக் கண்டு வெட்கமும் அவமானமும் அடைகிறார். இந்த எல்லையற்ற அவமானம் அவரது திரு இரத்தத்தைப் பொங்கி எழும்படிச் செய்கிறது.

மேலும், ஆண்டவர் தமது கொடிய பாடுகளும் மரணமும் பல கோடி மனிதர்களுக்கு வீணாய்ப் போவதைப் பார்க்கிறார். அவர் மனம் ஏங்குகிறது. நெஞ்சம் துயரக் கடலில் ஆழ்கிறது. எனினும், தமது பிதாவின் திருச்சித்தத்தை நிறைவேற்ற அவர் முயற்சி செய்கிறார். மட்டற்ற அவரது துயரம், அவரை மரணத்திற்கு உள்ளாக்குவதாக இருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து, தீவிர வேகம் அடைந்த அவரது திரு இரத்தம், நாளங்களைக் கடந்து வியர்வையாய் வெளிவருகிறது. அன்புள்ள ஆண்டவர் நமக்காக வடிக்கும் இரத்தக் கண்ணீரும், சிந்தும் இரத்த வியர்வையும், அவர் நம்மை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்று அறிவிக்கின்றன.

தேவ- மனிதர் இதோ இந்நேரத்தில் தாம் பானம் பண்ண வேண்டுமெனத் தரப்படும் துன்பங் களின் கசப்பான பாத்திரம் தம்மை விட்டு அகலும்படி மன்றாடுகிறார். தன்னந்தனியாய், எவ்வித ஆறுதலும் அற்றவராய், அவர் இரந்து கேட்கிற மன்றாட்டிற்கு, ஏக பிதாவின் மறுமொழி என்ன? அந்தக் கசப்பான பாத்திரத்தை அவர் பானம் பண்ண வேண்டும் என்பதே. தேவ பிதாவின் திருச்சித்தத்தை அறிந்ததும், "ஆகக்கடவது' என்று அமைந்த மனத்தோடு சம்மதிக்கிறார்.

சிருஷ்டிகரிடமிருந்து வரும் "ஆகக்கடவது" என்ற தெய்வீகக் கட்டளைக்கு, சிருஷ்டிகள் தலைவணங்கி, "ஆகக்கடவது” என்று கூறிக் கீழ்ப்படிவதிலேயே சகலஞானமும் அடங்கியுள்ளது.