வியாழக்கிழமை காலைச் செபம்

பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே, ஆமென்.

சேசு மரியே சூசையே, என் ஆத்துமம் உங்களோடே சமாதான ஐக்கியமாக என் உடலை விட்டுப் பிரியக்கடவது.

திரிகாலச் செபம் செபிக்கவும்.

ஓ பரலோகத்தில் பிரசன்னமாய் எழுந்தருளியிருக்கும் சர்வ வல்லவரான கடவுளே! தேவரீர் இந்தப் பூலோகத்திலிருக்கும் ஜீவன்களில் கடையனாகிய என்னையும் ஒன்றாகப் படைத்து மதித்திருப்பதினாலே நான் அதிக வணக்கத்தோடு தேவரீரை வணங்கி ஸ்துதிக்கிறேன்.

தேவரீர் எனக்குத் தாராளமாய் என்றும். கெடாத ஆசீர்வாதங்களைப் பொழிந்திருப்பதினாலே நான் என் ஆத்துமத்தின் முழு பலத்தைக் கொண்டு தேவரீடைய திரு நாமத்தைத் துதித்துப் புகழ்கிறேன்.

தேவரீருடைய நேசத்தினாலே என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதற்கும், தேவரீருடைய , சொந்தச் சாயலாக என்னைப் படைத்ததற்கும், தேவரீருடைய சுதனைக் கொண்டு என்னை மீட்டு இரட்சித்ததற்கும், தேவரீர் என்னை சுத்திகரித்ததற்கும், என்னை உலகத்தின் சகலவித தந்திர யுத்தத்திலிருந்து விலக்கிக் காத்ததற்கும், மேலான காரியங்களில் என் எண்ணங்கள் செல்லச் செய்ததற்கும், கடந்த இராத்திரியில் என்னைப் பலவித அபாயங்களில் விழவொட்டாமல் தேவரீருடைய தயாள பாதுகாவலில் வைத்திருந்து யாதொரு பொல்லாப்பில்லாமல் இதுபரியந்தம் காப்பாற்றின சகாயத்திற்கும் தேவரீரை நமஸ்கரித்து வாழ்த்தி ஸ்துதிக்கிறேன்.

ஓ ஆண்டவரே! எனக்குத் தேவரீருடைய இரக்கத்தை இவ்விதமே இனிமேலுசெய்துவரச் சித்தங் கூர்ந்தருளும். தேவரீர் என்னை என் நித்திரையிலிருந்து எழுப்பியருளினது போலப் பாவத்திலிருந்து என் ஆன்மாவை எழுப்பியருளும். தேவரீருடைய கிருபையால் அத்தினம் நான் தேவரீருடைய திருச் சமூகத்தின் முன் பரிசுத்த சகல கீழ்ப்படிதல்களிலும் சரியான நெறியாய் நடந்து கொள்ளுவேன்.

ஓ இரக்கம் நிறைந்த கடவுளே! இத்தினம் என்னைச் சகலவித கேட்டிலிருந்து அப்புறப்படுத்தி நான் சமாதான பாதையில் நடக்க எனக்கு வழிகாட்டியருளும். நான் செய்திருக்கும் தீர்மானப்பிரகாரம் தக்க தருணத்தில் சன்மார்க்க விஷயங்களைச் செய்வதற்கு என் ஏற்பாட்டைப் பலப்படுத்தியருளும்.

நான் பாவத்தைக் கட்டிக் கொள்ளும் தருணங்களை விலக்கிவிடும். பிரதானமாய் என் அனுபவத்தால் என் ஆத்துமத்திற்கு மகா இடறலாயிருக்கும் இவ்வித (இங்கே இந்தப் பாவங்களின் பேரைச் சொல்லவும்) கொடிய பாவங்களை நான் கட்டிக் கொள்ளாமல் என்னை நீக்கிக் காத்தருளும். ஆண்டவரே! நான் என் பலவீனத் தினால் தேவரீரை மறந்துவிடுகிறேன்.

தேவரீரோ என்றால் என்னை உமது ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கின்றீர். நான் எத்தனை முறை என் சுபாவத்தின் துர்ப்பலத்தால் பாவத்தில் விழுகிறேனோ அத்தனை முறையும் தேவரீருடைய இரக்கத்தின் சகாயத்தால் இப்பாவங்களிலிருந்து எழுந்திருக்க அனுக்கிரகித் தருளும். நான் என் சீவிய காலத்தில் செய்யவேண்டிய கடமைகளைச் சுறுசுறுப்பாகச் செய்து பிறசிநேகத்தோடு இருக்கச் செய்யும்.

தேவரீருடைய தயாளம் நிறைந்த திருவுளச் செயற்படிக்கும், தேவரீருடைய திவ்விய பிரியத்தின் பிரகாரமும் அவ்வுலகத்தில் உண்டாகிற சகலவித துன்ப துரிதங்களையும் சிலுவைகளையும் நான் பொறுமையோடு அனுபவித்துச் சுமக்கச் செய்தருளும். தேவரீருடைய ஆசீர்வாதம் என் கிரியைகளின் பேரில் இருக் கட்டும்.

தேவரீருடைய கிருபை என் எத்தனங்களை நடத்தட்டும். என் வாழ்நாளின் முழு காலமும், என் இருதயத்தின் பிரதான நோக்கமும் தேவரீருடைய மகிமை விருத்தியை அடையவே சார்ந்திருக்கட்டும். பிறருக்கு நன்மையும் என் சொந்த ஆத்துமத்திற்கு நித்திய இரட்சிப்பும் எங்கள் ஆண்டவராயும், ஏக இரட்சகராயும் இருக்கிற சேசு கிறிஸ்துநாதரால் நாங்கள் அடைவோமாக.

ஓ ஆண்டவரே! தேவரீர் கட்டளையிட்டிருக்கிறதை நான் செய்ய எனக்கு உமது இரக்கத்தைத் தந்தருளும். உமக்குப் பிரியமானதைச் செய்ய என்னை ஏவியருளும். தேவரீர் விதிப்பதை நான் அனுபவிக்க எனக்கு உமது கிருபையைத் தந்தருளும். நீர் அனுப்புகிற துன்பங்களைச் சகிக்க எனக்கு உதவி கொடுத்தருளும்.

சகல வல்லமை பொருந்திய கடவுளாகிய பிதாச் சுதன் இஸ்பிரித்து சாந்து என் பேரில் இரங்கி என் இருதயத்தில் எக்காலமும் குடிகொண்டிருக்கக்கடவது.

ஓ பரிசுத்த திரித்துவமே! சர்வ சக்தியுள்ள கடவுளே, பிதா, சுதன், இஸ்பிரீத்து சாந்துவாகிய ஆண்டவரே! தேவரீரை அடியேன் நமஸ்கரித்து ஆராதிக்கிறேன். தேவரீருக்குப் பொருந்தாமலிருக்கிற பாவக் கறைகளை என் இருதயத்திலும், உமது சகல விசுவாசிகளின் இருதயங்களிலுமிருந்து விலக்கிப் போட நான் என்னை முழுவதிலும் தேவரீருடைய திவ்விய அதிகாரத்துக்குட்படுத்தித் தேவரீரை வணக்கத்தோடு மன்றாடுகிறேன்.

தேவரீருடைய பார்வைக்கு முன் நன்மை உள்ளவைகளாகக் காணப்படுகிற யாவற்றையும் எங்களுக்குக் கட்டளையிட்டருளும். இவ்வுலகத்தில் நாங்கள் தேவரீர் சொல்லுகிறதைச் செய்து இவ்வுலகத்தில் தேவரீர் வாக்குத்தத்தம் செய்திருப்பதை அனுபவிக்கக்கடவோம்!

ஓ ஆண்டவரே நான் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும். (உண்டானால் என் பெண்சாதி, பிள்ளைகளை) தகப்பன் தாயார் சகோதரர் சகோதரிகள் உறவின்முறையார் உபகாரிகள் சிநேகிதர்கள் அறிமுகமானவர்கள் இன்னும் என் வேண்டுதலுக்கு உரிமையானவர்கள் எவர்களோ அவர்களையும் தேவரீரிடத்தில் ஒப்புவிக்கிறேன்.

பரிசுத்த கத்தோலிக்கத் திருச்சபையையும் அதன் பரிபாலனத்தையும் அதில் காணப்பட்ட தலைவரையும் தேவரீருடைய வசத்தில் ஒப்புவிக்கிறேன். ஓ ஆண்டவரே சகலரும் தேவரீரைக் கண்டறிந்து பூசித்து நமஸ்கரித்துத் தேவரீரை நேசிக்கவும் இரக்கம் செய்தருளும்.

பாவப் பாதையில் நிற்போரை உத்தம வழிக்குக் கொண்டு வந்து சேரும். இன்னமும் தேவரீரை அறியாமலிருக்கும் தவறான மார்க்கங்களை ஒழித்து அவர்கள் உண்மையான விசுவாசத்தை நாடவும் மீட்பைப் பெறவும் செய்தருளும். ஓ ஆண்டவரே! எங்களுக்கு உமது இரக்கத்தைத் தந்து எங்களை உமது சமாதானத்தில் வைத்தருளும்.

எங்களுடைய சித்தம் அல்ல தேவரீருடைய சித்தம் நிறைவேறக்கடவது. துன்பத் திலும் நிர்ப்பாக்கியத்திலும் சோதனைகளிலும் உட்பட்டிருக்கிற ஆத்துமங்களைத் தேற்றியருளும். ஆத்தும சரீர வேதனைப் படுபவர்களை அவ்வேதனையிலிருந்து நீக்கியருளும்.

கடைசியாய்த் தேவரீருடைய பரிசுத்தப் பாதுகாவலில் பூலோகம் முழுவதையும் ஒப்புவிக்கிறேன். உயிரோடு இருப்பவர்கள் பாவ விமோசனம் பெறவும் மரித்தவர்கள் நித்திய காலம் இளைப்பாற்றி அடையவும் சித்தம் கூர்ந்தருளத் தேவரீரைப் பார்த்து மன்றாடுகிறேன். ஆமென்.

மாதா மன்றாட்டு

மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயத்தை இரந்து உம்முடைய மன்றாட்டு களின் உதவியைக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப் பட்டதாத ஒருபொழுதும் உலகத்திற் சொல்லக் கேள்விப்பட்ட தில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான் கன்னிகையே, தயையுள்ள தாயே, இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெரு மூச்செறிந்து அழுது பாவியாகிய நான் உம்முடைய தயாளத்திற்குக் காத்துக் கொண்டு உமது சமுகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே, என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டு எனக்குத் தந்தருளும் ஆமென்.

ஜென்ம பாவம் இல்லாமல் உற்பவித்த அர்ச் மரியாயே! பாவிகளுக்கு அடைக்கலமே இதோ உம்முடைய அடைக்கலமாக ஓடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம் திருக் குமாரனைப் பார்த்து வேண்டிக்கொள்ளும்.

பர. அருள். திரி. (இப்படி மூன்று முறை சொல்லவும்)

ஆண்டவர் நம்மைச் சகல தீமைகளினின்று காப்பாற்றி ஆசீர்வதித்து நித்திய காலம் சீவியர்களாய் ஆக்கக்கடவது. விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத் தினால் சமாதானத்தில் இளைப்பாறக்கடவன. ஆமென்

ஆசீர்வாதம் பெறும் செபம்

எங்கள் ஆண்டவராகிய சேசுகிறிஸ்துநாதருடைய சமாதான மும் அவருடைய பரிசுத்த பாடுகளின் பலனும் கன்னி சுத்தங் கெடாத பரிசுத்தக் கன்னிமரியாயின் வேண்டுதலும் அர்ச்சிய சிஷ்டவர்களுடைய மன்றாட்டும் ஆண்டவரின் சம்மனசுகளின் வேண்டுதலும் என்னோடிருந்து இப்பொழுதும் என் மரண நேர பரியந்தமும் என்னைக் காக்கக்கடவது ஆமென்.

கிறிஸ்துவினுடைய ஆத்துமமே, என்னை அர்ச்சியசிஷ்ட வனாகச் செய்தருளும். கிறிஸ்துவினுடைய திருச் சரீரமே , என்னை இரட்சித்துக் கொள்ளும். கிறிஸ்துவினுடைய திரு இரத்தமே, என்னை உம்முடைய வசமாக்கி எனக்குத் திருப்தி உண்டாகச் செய்தருளும். கிறிஸ்துவினுடைய விலாவினின்று ஓடிவிழுந்த திருத் தண்ணீரே, என்னைக் கழுவும். கிறிஸ்துவின் திருப்பாடுகளே , எனக்குத் தேற்றரவு உண்டாகச் செய்தருளும். நல்ல சேசுவே, நான் கேட்கிறதைத் தந்தருளும். உம்முடைய திருக் காயங் களுக்குள்ளே என்னை மறைத்துக் கொள்ளும். என்னை உம்மை விட்டுப் பிரியவிடாதேயும். துஷ்ட சத்துருக்களிடத்திலிருந்து இரட்சித்துக்கொள்ளும். என் மரணத் தருவாயிலே நீர் என்னை அனைத்து உமது சந்நிதியிலே உட்பட்ட சகல அர்சிஷ்டவர்களோடே ஊழியுள்ள காலம் நான் உம்மை ஸ்தோத்திரம் செய்யும் படிக்கு அடியேன் வரக் கற்பித்தருளும், ஆண்டவரே ஆமென்.

முப்பத்து மூன்று மணிச் செபம்.

ஆராதனைக்குரிய தேவநற்கருணையின் பிரார்த்தனை

சுவாமி கிருபையையிரும், மற்றதும்

பரலோகத்திலிருந்து எழுந்தருளி வந்த சீவியமுள்ள அப்பமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கிருபை நிறைந்த இரட்சகராய் மறைந்திருக்கிற தேவனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

முத்தர்களை வளர்க்கும் அப்பமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கன்னியரை விளைவிக்கிற திராட்சைப் பழத்தின் இரசமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இராசாக்களுக்கு இன்பமான முழுமையும் செழுமையுமுள்ள அப்பமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இடைவிடாத பூசைப் பலியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரிசுத்த பூசித காணிக்கையே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மாசில்லாத செம்மறிப்புருவையே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மிகவும் பரிசுத்தமான திவ்விய விருந்தே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சம்மனசுகளுடைய போசனமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மறைந்திருக்கிற மன்னா என்கிற உணவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சர்வேசுரனுடைய அற்புதங்களை நினைப்பூட்டுதலே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சுபாவத்திற்கு மேலான திவ்விய அப்பமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

மாமிசமாய் அவதரித்த தெய்வீக வார்த்தையே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்களிடத்தில் வாசமாயிருக்கிற தேவ சுதனே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

ஆசீர்வாதத்தின் பாத்திரமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரிசுத்த பலியான பரம் கர்த்தாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

விசுவாசத்தின் பரம தேவ ரகசியமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பூசிக்கத்தக்க மேலான தேவத்திரவிய அனுமானமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சகல பலிகளிலும் மேன்மையும் பரிசுத்தத்தனமுமுள்ள திவ்விய பலியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சீவியர்களுக்கும் மரித்தோர்களுக்கும் பாவ நிவாரணமும் பரிகாரமுமான பலியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

எங்கள் பாவங்களைப் போக்கவும் விலக்கவும் பரலோகத் திலிருந்து இறங்கின அமிழ்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சகல அற்புதங்களிலும் ஆச்சரியமான அற்புதமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

கர்த்தருடைய திருப்பாடுகளையும் கடின மரணத்தையும் ஞாபகப்படுத்துகிற பலியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சகல பரிபூரண வரப்பிரசாதங்களையும் விட மேலான வரப் பிரசாதமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சர்வேசுரனுக்கு மனுமக்கள் பேரிலுள்ள அத்தியந்த சிநேகத்தின் அத்தாட்சியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தேவ உதிரத்தின் பெருக்கமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

அளவற்ற அர்ச்சியசிஷ்டதனமும் அத்தியந்த மகிமையுமுள்ள தேவரகசியமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய சீவியத்தைப் பெறுவிக்கிற பரம் சஞ்சீவியே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தேவ பக்தி அச்ச நடுக்கத்துக்குரியதும் உயிர் தருகிறதுமாகிய தேவ வார்த்தையின் அளவில்லாத வல்லமையால் மாமிசமாகச் செய்யப்பட்ட திரு அப்பமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

இரத்தம் சிந்தாப் பலியே எங் விருந்தினரும் ஞானப் போசனுமுமான கர்த்தாவே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சம்மனுசுகள் வணக்கத்துடன் பரிமாறுகின்ற மதுரமான திவ்விய விருந்தே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நிறைந்த கிருபை நேசத்தின் தேவத்திரவிய அனுமானமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தேவசிநேகப் பந்தமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பலியிடுகின்ற பரம குருவும், பலியிடப்பட்ட பலிப் பொருளான இரட்சகரே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சர்வானந்த ஊரணியும் உம்மை அனுபவிக்கிறவர்களுக்கு மனோவாக்கு கெடாத இன்பமுமாகிய ஞான மதுரமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

பரிசுத்த ஆத்துமாக்களுக்குத் திடமான திவ்விய போசனமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

சர்வேசுரனுடைய சமாதானத்தில் மரிக்கிறவர்கள் பரகதிக்கேறும் பிரயாணத்திற்குரிய திவ்விய அப்பமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

நித்திய பேரின்ப மகிமைக்கு அடையாளமே, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி.

தயாபரராயிருந்து எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் யேசுவே

தேவரீருடைய திருச் சரீரத்தையும் திரு இரத்தத்தையும் தகுதியின்றி உட்கொள்ளுகிற துரோகத்திலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

சரீர ஆசாபாச துரிச்சையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

கண்களுடைய துரிச்சையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

நடக்கையின் ஆங்காரத்திலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

சகல பாவச் சமயத்திலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

பாஸ்கு என்கிற உன்னதப் பலிப் பூசையை உம்முடைய சீடர்களோடே நிறைவேற்றத் தேவரீருக்கு இருந்த விருப்பத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீர் இந்தப் பரம தேவத் திரவிய அனுமானத்தை ஸ்தாபித்தருளிய மிகுந்த பற்றுதலான நேசத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீர் உம்முடைய சீடர்களின் பாதங்களைக் கழுவின் அத்தியந்த தாழ்ச்சியைப் பார்த்து, எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

தேவரீர் எங்களுக்காப் பலிபீடத்தில் ஒப்புக்கொடுத்தருளுகிற விலைமதியாத திரு இரத்தத்தைப் பார்த்து, எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

உமது பரிசுத்தத் திருச் சரீரத்திலே பதிந்த ஐந்து திருக்காயங்களைப் பார்த்து, எங்களை இரட்சித்துக்கொள்ளும் சுவாமி.

பாவிகளாயிருக்கிற நாங்கள் தேவரீரை மன்றாடுகிறோம் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

அடியோர்களிடத்தில் இந்த ஆச்சரியமான தேவத்திரவிய அனுமானத்தின் பேரிலுள்ள விசுவாசப் பக்தி வணக்கம் மென் மேலும் பெருகவும் இறுதிவரை திடமாயிருக்கவும் செய்தருளுமென்று தேவரீரை மன்றாடுகிறோம் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

நல்ல பாவசங்கீர்த்தனத்தின் மூலமாக அடிக்கடி தேவ நற்கருணை வாங்குவதற்கு அடியார்களைத் தக்கவர்களாக்க வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்களிடத்திலிருந்து சகல அக்கியானம் பதிதத்தனம் பாவத்துரோகம் இருதயக் குருட்டாட்டத்தை நீக்கி எங்களை இரட்சித்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

இந்த ஆராதனைக்குரிய தேவத்திரவிய அனுமானத்தின் விலை மதியாத திவ்விய பலன்களை எங்களுக்குத் தந்தருள் வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகிறோம் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

எங்கள் மரண சமயத்தில் பரலோகப் பிரயாணத்திற்குரிய இந்தத் திவ்விய அப்பத்தைக் கொண்டு அடியோரைப் பலப்படுத்தித் தேற்றவும் இரட்சிக்கவும் கிருபை செய்தருள வேண்டுமென்று தேவரீரை மன்றாடுகின்றோம் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் சுவாமி.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற... மற்றதும் 

தன்னில் சகல இன்பமுள்ள திவ்விய அப்பத்தை பரலோகத்தினின்று அடியோர்களுக்குத் தந்தருளினிரே சுவாமீ

பிரார்த்திக்கக்கடவோம். 

சர்வேசுரா சுவாமீ! ஆச்சரியத்துக்குரிய தேவரகசியமாகிய தேவ நற்கருணையிலே உம்முடைய திருப்பாடுகளின் ஞாபகம் எப்பொழுதும் எங்களிடத்தில் நிலைத்திருக்கத் திருவுளமானீரே தேவரீர் எங்களை இரட்சித்தருளும். அதன் பலனை அடியோர்கள் என்றென்றைக்கும் உணரத் தக்கதாக உமது திருச்சரீரமும் திரு - இரத்தமும் அடங்கிய இந்தத் தேவத்திரலிய அனுமானத்தை நாங்கள் மிகுந்த பக்தியோடே வணங்க அனுக்கிரகம் செய்தருள் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

ஆமென்.