புதன்கிழமை மாலைச் செபம்

பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரித்து சாந்துடையவும் நாமத்தினாலே ஆமென். 

திரிகாலச் செபம்.

மதுரமான சேசுவே, எனக்கு நடுவராயிராமல் இரட்சகராயிரும்.

தேவ திருவுள வேலைகளிலும் செபத்தியானங்களிலும் நாள் அகன்றபின், சரீரம் சுகம் பெற இராக்காலம் வரச் செய்த மட்டற்ற வல்லபமும், மட்டற்ற ஞானமும், மட்டற்ற இரக்கமுமுடைத்தான எங்கள் தேவனே, நாங்கள் இந்த நாளில் ஆத்தும் சரீரத்திலும் மற்றும் வெளி விஷயங்களிலும் தேவரீரிடத்தில் பெற்றுக்கொண்ட சகல நன்மைகளையும் புத்தியில் நினைத்துக் கொண்டு எங்கள் சீவியத்தின் ஆரம்பந்தொட்டு இதுவரையிலும் நாங்கள் அடைந்த சகாய உபகாரங்களையும் அனுக்கிரகங்களையும் ஆராய்ந்து பார்த்து மன மகிழ்ச்சியோடேயும் நன்றியறிந்த நமஸ்காரங்களைக் கையேற்றுக்கொள்ளத் தாழ்ச்சியோடேயும் பிரார்த்திக்கிறோம்.

சர்வ லோகங்களையும் எங்கள் புத்திக்கெட்டாத சர்வ வியாபகத்தோடு ஆண்டு நடத்தும் நித்திய ஏக திரித்துவக் கடவுளே, பற்பல வேலைகளால் பலவீனப்பட்ட எங்களுடைய சரீர இளைப்பாற்றிக் காக இந்த இராத்திரி காலத்தைக் கட்டளையிட்டதற்காக உம்மை வணங்கித் தோத்திரம் செய்கிறோம்.

சென்மப் பாவத்தால் கெட்டுப் போன எங்கள் ஆத்துமம் மோட்சக் கதியை அடைய மனிதர் புத்திக்கெட்டாத இரட்சண்ணியத்தை உண்டுபண்ணின் தற்காகவும், அதை யாவரும் எளிதில் அடையத் தேவத்திரவிய அனுமானங்களை ஏற்படுத்தினதற்காகவும் மனம் பூரித்து உம்மை ஏத்தி ஸ்துதித்துப் போற்றிப் புகழ்ந்து நமஸ்கரிக்கிறோம்.

நாங்கள் அனுசரிக்க வேண்டுமென்று தேவரீர் நிரூபித்த கட்டளைகளை மீறி உமது நீதியின் பாதையை விட்டுப் பலவகையிலும் அகன்றோமென்று கண்டு மெத்தவும் மனம் நொந்து கஸ்தியோடு பிரலாபிக்கிறோம். இந்த இராத்திரியில் சடுதி மரணம், பொல்லாத கனவுகள் முதலிய தீமைகள் எங்களுக்கு வரவொட்டாமல் பனியையுண்ட புஷ்பங்கள் மலர்வது போல் நாளை காலை நேரத்தில் கற்புடையவராய்க் கண்விழித்து உமக்குப் பூசை நைவேத்தியங்களைச் செய்ய எங்களுக்கு அனுக்கிரகம் செய்தருளத் தேவரீரைத் தாழ்ச்சியோடு பிரார்த்திக்கிறோம்.

சர்வ வல்லபம் பொருந்திய கடவுளே! உமது இறக்கைகளின் கீழ் எங்களைக் காப்பாற்றியருளும். நாங்கள் இன்று செய்த குற்றங்களை நினைத்து கலங்கிக் கஸ்திப்படுகிறபடியால் அவைகளுக்குச் சம்பூரணத்தைக் கொடுத்தருளும். எங்கள் உடல் படுக்கையில் இளைப்பாறும் போது எங்கள் ஆத்துமம் உமது திரு இருதயத்தில் இளைப்பாறச் செய்தருளும்.

எங்கள் புத்தி மனது உமது ஊழியத்தில் நிலை கொண்டிருக்கவும், மரண சிந்தனையோடு எச்சரிக்கையா யிருக்கவும் நாங்கள் செய்யும் முயற்சிகளை கையேற்றுக்கொள்ளும். நல்ல நித்திரையால் எங்கள் சரீரம் உமது ஊழியத்திற்கு உபயோகப் படவும் ஆத்துமம் ஒளிகொண்டு உம்மையே நாடி நிற்கவும் செய்தருளும் சுவாமி. ஆமென்.

மாதா வணக்கம்

என் ஆத்தும் மானது ஆண்டவரை வணங்கித் தோத்திரஞ் செய்கிறது. - என் இரட்சண்ணியமாகிய சர்வேசுரனிடத்தில் என் ஆத்துமம் ஆநந்தமாய் எழும்பி மனமகிழ்கின்றது. - தமது அடிமையானவளுடைய நீசத்தனத்தைக் கிருபாகடாட்சத்தால் பார்த்த படியினாலே, இதோ எல்லாரும் இக்காலமுதல் தலைமுறை தலைமுறையாக என்னைப் பாக்கியமுள்ளவள் என்பார்கள். - வல்லப மிக்கவர் தம்முடைய பெருமையுள்ளதுகளை என்னிடத்தில் செய்தருளினார். மேலும் அவருடைய நாமமானது அர்ச்சியசிஷ்ட நாமந்தானே. - தமக்குப் பயந்திருக்கிறவர்களுக்கே தலைமுறை தலைமுறையாகத் தமது கிருபையைச் செய்வார். - தம்முடைய கையின் பலத்தைக் காட்டித் தங்கள் தங்கள் இருதயத்தின் விசாரத்தினால் கர்வமுள்ள பேர்களைச் சிதறப் பண்ணினார். பலம் உடைத்தானவர்களை ஆசனத்தினின்று தள்ளி , - தாழ்ந்தவர்களை உயர்த்தினார். - பசித்திருக்கிறவர்களைத் தம்முடைய நன்மையினாலே நிரப்பித் தனமுள்ளவர்களை வறுமையுள்ளவர்களாக்கினார். - அபிரகாம் என்பவருக்கும் ஊழியுள்ள காலம் அவருடைய சுத்தப் பரம்பரையாகிய எங்கள் பிதாப்பிதாக்களுக்கும் சர்வேசுரன் திருவுளம் பற்றினபடியே, - தமது கிருபையை நினைத்துத் தம்முடைய தாசராகிய இஸ்ராயேல் சனங்களைப்பரிக்கிரகம் செய்தார்.

பிதாவுடையவும் சுதனுடை யவும் இஸ்பிரீத்து சாந்துடையவும் நாமத்தினாலே ஆமென்.

அமலோற்பவியான அர்ச். தேவமாதாவின் பிரதானமான ஐந்து மகிமைகளைக் குறித்து ஐந்து அருள் நிறைந்த மந்திரம் வேண்டிக்கொள்ளுகிற வகையாவது:

1- வது - பரலோகத்திற்கு இராக்கினியாயிருக்கிற அர்ச். மரியாயே, எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு அருள்.

2- வது - பூலோகத்திற்கு ஆண்டவளாயிருக்கிற அர்ச். மரியாயே, எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு அருள்.

3-வது - சமுத்திரத்தின் நட்சத்திரமாயிருக்கிற அர்ச். மரியாயே, எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு அருள்.

4 - வது - முக்காலமும் கன்னிகையான பரிசுத்தத்தனத்தைக் கொண்டிருக்கிற அர்ச். மரியாயே, எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு அருள்.

5-வது - எங்களால் அளவிட முடியாத ஞானப் பிரகாசத்தைக் கொண்டிருக்கிற அர்ச். மரியாயே, எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். - ஒரு அருள்.

என் இராசாவின் தாயாகிய பரிசுத்த மரியாயே! இப்பொழுதும் எப்பொழுதும் என் மரண சமயத்திலும் என் ஆத்துமத்தையும் சரீரத்தையும் உமது பரிசுத்த நம்பிக்கைக்கும், அடைக்கலத்திற்கும், தயாள இரக்கத்திற்கும் கையளிக்கிறேன். எனது துன்ப நிர்ப்பந்தங்களையும், எனது சீவிய முடிவையும் உமக்கே ஒப்புக்கொடுக்கிறேன். இன்னமும் உம்முடையவும் உமது திருக்குமாரனுடையவும் சித்தத்தின்படியே உமது பரிசுத்த வேண்டுதல் மூலமாக என்னுடைய கிரியைகள் எல்லாவற்றையும் ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென்.

காவலான சம்மனசை நோக்கி வேண்டுதல்

எனது காவலான சர்வேசுரனுடைய சம்மனசானவரே! தெய்வீக இரக்கத்தினால் உமக்குக் கையளிக்கப்பட்ட என்னைப் பரிசுத்தப்படுத்திக் காத்து நடத்தியருளும்.

ஆசீர்வாதம் அடையும் செபம்

பிதாவாகிய சர்வேசுரா! என்னை ஆசீர்வதித்தருளும், சேசு கிறீஸ்துநாதரே! என்னைக் காப்பாற்றியருளும், இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா! என்னை இந்த இராக்காலத்திலும் எப்போதும் துலக்கிப் பரிசுத்தப்படுத்தியருளும் - ஆமென்.

ஓ! சர்வேசுரா, உமது கையில் என் ஆத்துமத்தை ஒப்புக் கொடுக்கிறேன். சேசுவே, என் ஆத்துமத்தைக் கையேற்றுக் கொள்ளும்.

சேசு மரியே சூசையே, என் இருதயத்தையும் ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கிறேன்.

பின் ஐம்பத்து மூன்று மணிச் செபம்

அர்ச். சூசையப்பர் பிரார்த்தனை

சுவாமி கிருபையாயிரும், மற்றதும். 

அர்ச். சூசையப்பருடைய கன்னிப் பத்தினியான அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அர்ச். கன்னிமரியம்மாளுக்குப் பரிசுத்த பத்தாவாகச் சர்வேசுரனால் சகல மனிதரிலும் தெரிந்து கொள்ளப்பட்ட அர்ச். சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மனோவாக்குக் கெட்டாத ஆசீர்வாத நன்மை வரங்களால் நிறைந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பிதாப்பிதாக்களுக்குத் தலைமையானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவமாதாவுக்கு ஏற்ற உதவியானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னித் தாயாருக்கு விரத்தப் பத்தாவாயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னிமை விரதம் மாறாத சம்சாரத்துக்கு முதல் மாதிரிகையானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இவ்வுலகத்தில் தேவமாதாவுக்கு ஆறுதலாயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தாவீதரசனுடைய புத்திரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவசுதன் உம்முடைய குமாரனாக எண்ணவும் சொல்லவும் படத்திருவுளமானதினால் உன்னத மேன்மை பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வாதிகர்த்தர் உமக்குக் கீழ்ப்படிய மகிமை பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரன் தாவீதரசனைப்போல தமது திரு இருதயத்திற்குச் சரிப்பட்டவரென்று ஏற்றுக் கொண்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனுடைய திருவுளத்தின் பரம இரகசியங்களில் மேலான இரகசியத்தை அவரால் அறிந்து கொள்வதற்குப் பாத்திரமானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

இவ்வுலகத்தின் பிரபுக்களில் ஒருவரும் அறியாத பரம இரகசியத்தை அறிவதற்கு வரம் பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அநேக இராசாக்களும் தீர்க்கதரிசிகளும் காணவும் கேட்கவும் விரும்பி இருந்தாலும் காணாமலும் கேளாமலும் போன இரட்சகரைக் கண்டு திருமொழி கேட்டதுமன்றி அவரை ஏந்தவும் நடத்தவும் முத்தமிடவும் வளர்க்கவும் காக்கவும் பேறு பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கன்னித்தாயாருக்கு அடுத்து முதலானவராகத் திவ்விய குழந்தையான நாதரை ஆராதித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

அவதரித்த ஞானமானவரை நடப்பித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வலோக நாயகனை வளர்த்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரலோகத்தின் பொக்கிஷமானவரைக் காத்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட உலக மீட்பரை மீட்டுக் கொண்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலக இரட்சகரைக் காப்பாற்றினவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வத்தையும் நடத்துகிறவரை நடத்தினவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரதேசியான தேவனைப் பராமரித்து ஆதரித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரம ஆலோசனைக்கு உதவியானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சகல குடும்பங்களிலும் மேன்மையும் பரிசுத்தத்தனமுமுள்ள திவ்விய குடும்பத்துக்குத் தலைமையானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரலோக இராசாவாலும் இராக்கினியாலும் பணிவிடை செய்யப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசு நாதருக்கும் கன்னி மரியம்மாளுக்கும் மிகவும் நேரானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பூலோகத்தில் பிறந்த பூமான்களில் உமக்குச் சரியொத்தவர் ஒருவருமில்லையென்கிற மேன்மை பெற்றவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சம்மனசுகளிலும் முக்கியமான மகிமைப் பேரைச் சுதந்தரித்துக் கொண்டது போலே அவர்களிலும் உத்தமரானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதரும் தேவமாதாவும் தங்களுடைய திருமுக தரிசனையாலும் திருவாக்கினாலும் திவ்விய மாதிரிகையினாலும் இடைவிடாத சுகிர்த சஞ்சரிப்பினாலும் அநேக வருஷகாலம் நிலவிய இஷ்டப்பிரசாதங்களால் பூரிக்கப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

பரிசுத்தக் கற்புள்ள விரத்தராயிருந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மிகுதியான தாழ்ச்சியில் அதிகரித்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தேவசிநேக அக்கினிச் சூளையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

தியான யோகத்தில் உயர்ந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

நீதிமானும் உத்தமருமானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதருடைய அணைப்பிலும் தேவமாதாவின் திருக்கரங்களிலும் பாக்கியமான மரணத்தை அடைந்தவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சேசுநாதரோடே கூட உயிர்த்தவர்களில் ஒருவரானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

ஆத்துமத்திலும் சரீரத்திலும் விசேஷ மகிமை வரங்களால் அலங்கரிக்கப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திவ்விய குமாரனுடைய பத்திராசனத்துக்கும் தேவமாதாவின் சிங்காசனத்துக்கும் மிகவும் அடுத்தவராக மகிமையில் உயர்த்தப்பட்டவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

சர்வேசுரனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் ஈடேற்றத்திற்கு மிகவும் உதவி செய்கிறவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய சகோதரராகிய மனுமக்களின் பிரபுவானவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

திருச் சனத்தின் திடனாயிருக்கிறவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உம்முடைய பிரசைகளுக்கு உறுதித் தேற்றரவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

மரிக்கிறவர்களுக்கு அடைக்கலமாயிருக்கிறவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

எங்களுக்கு ஆதரவாயிருக்கிறவரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

உலகத்தின் பாவங்களைப் போக்குகிற, மற்றதும். 

கர்த்தர் தம்முடைய திருமாதாவுக்கு ஆறுதலாகவும் தமது திரு மனுஷகத்தை வளர்க்கிறவராகவும் பூலோகத்தில் பரம தேவ ஆலோசனையின் ஏக பிரமாணிக்க உதவியாகவும் ஏற்படுத்தின் பணிவிடைக்காரன் பாக்கியவானாமே.

அர்ச். சூசையப்பரே! என் ஆத்துமத்தையும் உம்முடைய அடியோர்களின் ஆத்துமங்களையும் புறக்கணியாமல், கிருபாகடாட்சத்தோடே பார்த்தருளும்.

பிரார்த்திக்கக்கடவோம்

சர்வத்துக்கும் வல்ல சர்வேசுரா சுவாமீ! தேவரீர் அர்ச். பரிசுத்த கன்னி மரியம்மாளுக்கு மாசற்ற பத்தாவாகவும் உம்முடைய திவ்விய குமாரனை இவ்வுலகில் வளர்க்கும் தகப் பனாகவும் அர்ச். சூசையப்பரை முன்னால் தெரிந்து கொண்டீரே. அவருடைய புண்ணிய பலன்களைப் பார்த்து எத்தேசத்திலும் தப்பறைகள் நீங்கவும் திருச்சபை வளரவும் அவரை நம்பின் நாங்கள் எல்லோரும் புண்ணியத்திலே நிலைநின்று நல்ல மரணத்தை அடையவும் அவரோடே எப்போதும் தேவரீரை ஸ்துதித்து மோட்ச பாக்கியத்தை அனுபவிக்கவும் கிருபை செய்தருளும். இந்த மன்றாட்டுகளை எல்லாம் உம்மோடேயும் இஸ்பிரீத்து சாந்துவோ டேயும் ஏக சர்வேசுரனுமாய் நித்திய சீவியருமாய் இராச்சிய பரிபாலனம் செய்கிறவருமாயிருக்கிற சேசுநாதருடைய திரு முகத்தைப் பார்த்துத் தந்தருளும்.

ஆமென்.