மரியன்னையின் கல்வாரி மலைப்பாதை.

நம் அன்னை பேசுகிறார்...

என் அன்பு மகனே! மகளே! என்னைப்பார். நான் தான் உன் தாய் அன்னை மாரியாள் பேசுகின்றேன். கபிரியேல் தூதரின் தேவசெய்திக்கு செவிமடுத்து என்னையே அடிமையாக கையளித்துத் தேவக் குமாரனை என் உள்ளத்தில் உதிரத்தில் சுமந்து பெற்றெடுத்தேன். முப்பது ஆண்டுகள் என் மகன் இயேசுவை கண்ணின் மணிபோல் கணிவுடன் காப்பாற்றி வந்தேன். பரம பிதாவின் சித்தத்திற்கு பணிந்து என் மகன் இயேசு மூன்று ஆண்டுகள் நற்ச்செய்தி பணி செய்தார். உலகம் என் மகனை வெறுத்தது. கசையடி முள்முடி அவருக்கு கொடுத்தது.

பாரச்சிலுவையை சுமந்த என் மகன் கல்வாரி மலைநோக்கி தள்ளாடித் தள்ளாடி, அடிமேல் அடிவைத்து, விழுந்து எழுந்து, நடந்துசென்று, கள்வர்கள் நடுவில் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை, என் மகனே! மகளே! உனக்கு எடுத்து சொல்கின்றேன். என் பின்னே வா. என் மகன் சுமந்த சிலுவை அவர் தோள் மீதிருந்து இன்னும் இறக்கப்படாமல் உங்களில், உங்கள் சகோதர ககோதரிகளின் தோள்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்து ஏற்று, கண்ணீர் சிந்த கருணையுடன் உங்களை அழைக்கிறேன். வா மகனே! வா மகளே!

முதல் ஸ்தலம்:

பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

என் மகன் இயேசுவுக்கு பிலாத்து அநியாயத் தீர்ப்பு அளிக்கின்றான்.

என் அன்பு மகளே! என் மகன் இயேசுவைப்பார். சிவப்பு அங்கி அணிந்தவராய், சிரசில் முள்முடி தாங்கியவராய், சிதைக்கப்பட்ட உடலில் எண்ணற்ற காயங்களோடு, கைகள் கட்டி தலைகவிழ்ந்தவராய், என் மகன் இயேசு பிலாத்துவின் முன் நிறுத்தப்படுகிறார். தலைமைக்குருக்களின் தூண்டுதலின் அடிப்படையில் "அவனை சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும்" என,  ஓநாய்கள் மந்தைப்போல் கூச்சலிடும் மக்களின் கூக்குரலுக்கு பயந்து, தன் மனைவியின் எச்சரிக்கையை துச்சமென தூக்கி எறிந்த பிலாத்து, "இவனை கொண்டு போய் நீங்களே உங்கள் சட்டப்படி சிலுவையில் அறைந்து கொள்ளுங்கள்" என்ற அநியாய தீர்ப்பை அறிவித்தான். என் மகன் இயேசுவின் அவலக்கோலத்தையும் பிலாத்துவின் அநியாயத்தீர்ப்பையும் எண்ணி நீ கலங்குகிறாய் கண்ணீர் வடிக்கின்றாய்.

என் அன்பு பிள்ளைகளே, உன் சுயநலத்திற்க்காக, உன் நற்பெயரைக் காப்பாற்றிக்கொள்ள, பிறரின் நிர்பந்தங்களுக்கு பயந்து, உன் வீட்டில் உள்ளவர்கள் மீது இல்லாதது பொல்லாதது சொல்லி, எத்தனை முறை அநியாயத் தீர்ப்பிட்டிருக்கின்றாய். உன்னுடைய அநியாயத் தீர்ப்பால் கண்ணீர் வடித்தவர்கள் எத்தனை பேர். அவர்களின் வேதனையை எண்ணிப்பார். மனம் வருந்து, கண்ணீர் சிந்து.

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

இரண்டாம் ஸ்தலம்:

தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.என் மகன் இயேசுவின் மேல் பாரச்சிலுவை சுமத்தப்படுகிறது.என் அன்பு மகனே! மகளே! விண்ணையும் மண்ணையும், உன்னையும் என்னையும் வார்த்தையால் படைத்த என் மகன் இயேசுவுக்கு உலகம் தந்த பரிசு பாரச்சிலுவை. முடவனை நடக்கச் செய்தார், பார்வையற்றவனுக்கு பார்வை அளித்தார். தொழுநோயாளனை சுகப்படுத்தினார். இறந்தவர்களை உயிர்ப்பித்தார். "எங்கு சென்றாலும் நன்மைகளையே செய்து சென்ற" என் மகன் இயேசு ராஜாவுக்கு யூத குலம் தந்த பரிசுதான் இப்பாரச்சிலுவை. மரத்தால் மனுக்குலத்திற்க்கு வந்த பாவத்தின் சுமையை போக்க மானுட மகன் மாபெறும் பாவச்சுமையாம் பாரச்சிலுவையை அன்புடன் அரவணைத்து முத்தமிட்டு கொடுமையினை எண்ணி கலங்குகிறாய் கண்ணீர் சிந்துகிறாய்.

என மகனே! என் மகளே! நல்லதை நினைத்து நல்லதை பேசி நல்லதையே செய்ய அழைக்கப்பட்ட நீ தீமையை எண்ணி தீய வார்த்தைகளை பேசி தீமையான செயல்களை செய்து உன் வீட்டில் சுற்றத்தில் தொழிலகத்தில் உள்ளவர்களுக்கு பாரச்சிலுவையாக இருந்து அவர்களை கண்ணீர் வடிக்கச் செய்தாயே அதை எண்ணி மணம் வருந்து! கண்ணீர் சிந்து!

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

மூன்றாம் ஸ்தலம்:

விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

என் மகன் இயேசு கீழே விழுத்தாட்டப்படுகிறார்.

என மகனே! என் மகளே! என் மகன் இயேசுவின் கண்களை கட்டி கண்ணத்தில் அறைந்து "உன்னை அடித்தவன் யாறென்று தீர்க்க தரிசனமாக சொல்" என்று ஏளனம் செய்தனர். கசையடி கொடுத்து பகட்டாடை உடுத்தி காறி உமிழ்ந்து கைகளில் ஒரு கோலைக்கொடுத்து எள்ளி நகையாடி ஏளனம் செய்தனர். குழந்தையின் கையில் உள்ள பந்தைப்போல, குரங்கின் கையில் உள்ள மாலையைப் போல என் மகனின் உடலை சிதைத்தனர். கல்வாரி மலை நோக்கி தளர்ந்த நிலையில் தள்ளாடி நடக்கும் என் மகன் இயேசுவின் கால்களை ஓர் போர் வீரன் வேண்டுமென்றே தட்டி விட அவர் வெட்டப்பட்ட கிளைபோல் பாரச்சிலுவையோடு சட்டென விழுகிறார். என் மகன் பாரச்சிலுவையின் கீழ் விழுந்து கிடப்பதை எண்ணி பதறி அழுகின்றாய்.

என் மகனே! மகளே! எத்தனை முறை பிறர் வாழ்வு கெட்டுப்போக திட்டமிட்டு செயல்பட்டு அவர்களை தலைகுனிய செய்தாய். பிறர் குடும்பம் சீரழிய வேண்டும் என்று பில்லி சூனியம் ஏவல் எடுப்பு செய்திருக்கின்றாய். உனக்கு பிடிக்காதவர்களின் பிள்ளைகள் மடிய வேண்டும் என சாபமிட்டு என்னை நோக்கி எத்தனை முறை மன்றாடியிருக்கிறாய். உம்மால் விழித்தாட்டப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட கொடுமையை எண்ணி மனம் வருந்து! கண்ணீர் சிந்து!

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

ஐந்தாம் ஸ்தலம்:

மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

பரமன் என் மகன், பாமரன் சீமோனின் உதவியை பாசமுடன் ஏற்றுக்கொள்கிறார்.

என் அன்பு மகனே! மகளே! என் மகன் இயேசு, ஏழை குடும்பத்தில் பிறந்த என் கணவர் சூசையப்பரையும், என்னையும் தெரிந்து கொண்டார். ஏழையாக ஊருக்கு வெளியே இருக்கும் சத்திரத்தில் பிறக்கவும் திருவுளம் கொண்டார். ஏழை எளியவர்களை சிறுவயது முதல் நேசித்தார். எனவேதான் ஏழை மீனவர்களை தன் சீடர்களாக தெரிந்தெடுத்தார். "ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர்! ஏனெனில் கடவுளின் அரசு உங்களதே! என எடுத்தியம்பினார். எளியவர்களோடு இருப்பதில் இன்பம் கொண்டார். பணம் மனிதனின் மனதை மயக்கி சீரழிக்கும் மருந்து என்பதை உணர்ந்த அவர், பணம்-பகட்டான வாழ்வு நம்மை வானக வாழ்வுக்கு அழைத்துச் செல்லாது என்பதை உனர்ந்தவர், அதை அடியோடு வெறுத்தார். ஏழை சீமோன் உதவியை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.

என் மகனே! மகளே! பண ஆசைதான் எல்லா தீமைக்கும் ஆணிவேர். பொருளாசை சிலைவழிப்பாட்டிற்கு சமம். ஏழையாய் இருப்பது இறைவனின் சாபம் என்று தவறாக எண்ணி பணத்தையும் பகட்டான உடையையும் வசதி நிறைந்த வாழ்க்கையையும் தேடி ஓடி சோர்ந்து போன, உன் அவலநிலையை எண்ணி மனம் வருந்து! கண்ணீர் சிந்து!

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.நான்காம் ஸ்தலம்:தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

மண்ணில் விழுந்த என் மகனை ஓடி வந்து சந்தித்தேன்.

என் அன்பு மகனே! மகளே! "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் தான் பலன் கொடுக்கும்" என்ற என் மகனின் வார்த்தைகளை உண்மையென நிரூபிக்க என் மகன் இயேசுவை கீழே விழச் செய்தார்களோ! பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த என் உதிரம் பதறியது. முப்பது ஆண்டுகள் அன்போடு ஆசையோடு ஊட்டி வளர்த்த என் மகனின் உடல் மண்ணில் சரிந்து சாய்ந்த போது என் உடலில் பூகம்பம் வெடித்தது. தான் ஆடா விட்டாலும் தன் தசையாடும் என்பார்களே. விழுந்த என் மகன் இயேசுவுக்கு ஏற்பட்ட வேதனையை விட என் உள்ளத்தில் செல்லொனா வேதனை அனுபவித்தேன். போர் வீரர்கள் மத்தியில் காய்ந்த இலைபோல வீழ்ந்த என் மகனை தேற்ற ஓடினேன். "என் மகன் இயேசு இராஜாவே! உன் பின்னே நான் வருகிறேன் துணிந்து செல்" என என் பார்வையால் பார்த்தேன்.

என் மகனே! மகளே! என் மகன் இயேசு என்னை ஒருபோதும் மனம் நோகச் செய்ததில்லை. ஆனால் நீ, உன் தந்தை, தாயை மனம் நோகச் செய்தாய், அவமதித்தாய், கீழ்ப்படிய மறுத்தாய், அடித்தாய், முதுமையில் அவர்களை ஆதரிக்கவில்லை. பிச்சை எடுக்கச் செய்தாய், உன் தாய் தந்தைக்கு உன்னால் ஏற்பட்ட கொடுமைகளை எண்ணி மனம் வருந்து! கண்ணீர் சிந்து!

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.ஆறாம் ஸ்தலம்:நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

வெரோனிக்காளின் வீரச் செயலுக்கு என் மகன் இயேசு விருது அளிக்கின்றார்.

என் அன்பு மகனே! மகளே! திருடர்களால் உடைமைகள் பறிக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டு குற்றுயிராய் விடப்பட்ட வழிப்போக்கனைக் கண்ட குருவும், லேவியனும் கண்டும் காணதவாறு கருணையின்றி கடந்து சென்றார்கள். என் மகன் இயேசுவை கசையால் அடித்து காறி உமிழ்ந்து காலால் உதைத்து கொடுமைப்படுத்தியதை பார்த்தவர்கள் பார்க்காதவாறு போர் வீரர்களுக்குப் பயந்து, ஒதுங்கி கை கட்டி, வாய் பொத்தி நிற்கின்றார்கள். நல்லவரை ஏன் துன்புறுத்திகிறீர்கள் என்று யாரும் கேட்கவில்லை. உண்மை பேசியவரை ஏன் இம்சைப் படுத்துகிறீர்கள் என்று யாரும் தடுக்கவும் வரவில்லை. என் மகன் இயேசுவுக்கு உதவி செய்ய ஒரு சிலரை அழைத்தேன். அவர்களும் வர பின் வாங்கினார்கள்.என் மகனுக்கு யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்ற ஏக்கத்தோடு இருந்த வேளையில் வீரப் பெண் வெரோணிக்கா ஓடோடி வந்து என் மகனின் முகத்தைத் துடைத்தது என் மகனுக்கும் எனக்கும் ஆறுதல் அளித்தாள்.

என் மகனே! மகளே! தீமை செய்பவனை விட தீமையை பார்த்துக் கண்டிக்காமல் இருப்பவன் இருமடங்கு தீமை செய்கிறான். அநியாயம் என்று தெரிந்தும், ஆமைபோல் ஊமையாகி ஒதுங்கிச் செல்கிறாய். உதவி செய்ய முடிந்தும் ஊர்வம்பு நமக்கெதற்கு என்ற அலட்சியத்தால் விலகிச் செல்கின்றாய். எனக்கு ஆறுதல் கிடைக்காதா என ஏக்கத்தோடு காத்திருக்கும் உள்ளத்திற்கு, காயப்பட்டு கண்ணீர் வடிக்கும் அனாதைக்கு, இது இவள் பாவத்தால் வந்தது என ஏளனம் பேசி, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறாய். தீமையைக் கண்டும் கானதவாறு செல்லும் உன் அலட்சியப் போக்கால் ஏற்படும் கொடுமைகளை எண்ணி மனம் வருந்து! கண்ணீர் சிந்து!

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

ஏழாம் ஸ்தலம்:

ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

என் மகன் இயேசு கால் தடுமாறி விழுகின்றார்.

என் அன்பு மகனே! மகளே!என் மகன் இயேசு நடந்து சென்ற கல்வாரி மலைப்பாதை கரடு முரடுள்ள கற்கள் முட்கள் நிறைந்த கடினப்பாதை. கல்லின் மேல் கால் வைக்க கால் தடுமாறி முகம் குப்புற விழுகின்றார். "அம்மா! அம்மா! தடுமாறி விழுந்து விட்டேன் அம்மா" என்றஎன் மகனின் அலறல் என் காதில் மட்டும் தான் ஒலித்தது. "என் மகனே! இயேசுவே! உன் தாய் நான்! உன் பின்னே வருகின்றேன் திடம் கொள் எழுந்து நட" என்ற எனது குரல் என் மகனுக்கு மட்டும் கேட்க்கின்றது. எழுந்து நடக்கின்றார். பாவப் பாதாள சிறையில் விழுந்து கிடந்த மனிதனைத் தூக்க மனித சாயலில் வந்த என் மகன் இயேசு பாரச் சிலுவையின் அடியில் தடுமாறி விழுந்ததை எண்ணி நீ கலங்குகின்றாய். கண்ணீர் வடிக்கின்றாய்.

என் மகனே! மகளே! உன் வாழ்க்கையில் பள்ளங்கள்-மேடுகள், வெற்றிகள்-தோல்விகள், சாதனைகள்-வேதனைகள், இன்பங்கள்-துன்பங்கள், புகழ்ச்சிக் கீதங்கள்-பழிச்சொற்கள், நிந்தைகள் வருவது சகஜம். துன்பத்தைக் கண்டு துவளாதிருக்கும் உள்ளத்தையும், இன்பத்தைக் கண்டு இளகாதிருக்கும் உறுதியான மனதையும் என் மகனிடம் கேள். தவறி தடுமாறி விழும்போதெல்லாம் எழுந்து நடக்க வரம் கேள்.

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

எட்டாம் ஸ்தலம்:

விழிநீர் பெருகிய மகளிருக்கு - அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

பாவத்திற்காக கண்ணீர் சிந்த எருசலேம் பெண்களை என் மகன் இயேசு அழைக்கிறார்.

என் அன்பு மகனே! மகளே! "பாவம் செய்தேன். பாவத்தின் மேல் பாவம் கட்டிக்கொண்டேன். அதனால் எனக்கு என்ன தீமை வந்தது" என்று சொல்லும் என் பிள்ளைகள் எத்தனை பேர். மனுக்குலப் பாவத்தினால் உருவாக்கப்பட்ட பாரச் சிலுவையை என் மகன் இயேசு தோளில் சுமந்து வந்த பரிதாபத்தை எண்ணி எருசலேம் பெண்கள் கதறி அழ "எனக்காக அழாதீர்கள் உங்கள் பாவங்களுக்காக, உங்கள் பிள்ளைகளின் பாவங்களுக்காக தினமும் கதறி அழுங்கள்" என்கிறார். ஏனெனில் பாவத்திற்காக அவர் பாதத்தில் அழுத பாவியை பாராட்டி "இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டன. காரணம் இவள் காட்டிய பேரன்பே" என்றார்.

என் மகனே! மகளே! "உலகத்திலுள்ள பாவிகலெல்லாம் பெரும்பாவி நானே" என்றார் புனித சின்னப்பர். "தன் பாவத்திற்காக வாழ்நாள் முழுவதும் மனம் வருந்தி அழுதார் புனித இராயப்பர்" ஆண்டவருக்கு எதிராக நான் பாவம் செய்தேன் என்கிறார் தாவீது. நாம் தண்டிக்கப்படுவது முறையே, நம் செயல்களுக்கு தக்கபலனை பெறுகின்றோம் என்று ஏற்றுக் கொண்டான் நல்லக்கள்ளன். "இயேசுவே நான் பாவி உம் இரக்கத்தால் என்னை கழுவி தூய்மையாக்கும்" என தினமும் அறிக்கையிட்டு உன் பாவங்களுக்காகவும் உன் குடும்பத்தாரின் பாவங்களுக்காகவும் கண்ணீர் சிந்து.

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

ஒன்பதாம் ஸ்தலம்:

மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சுமைதாங்கியாகிய என் மகன் இயேசு, மண் மீது சாய்ந்தார்.

என் அன்பு மகனே! மகளே! "சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லோரும் என்னிடம் வாருங்கள் உங்களை நான் இளைப்பாற்றுவேன்" என்றழைத்த என் மகன் இயேசு ஏழை எளியவர்களின் சுமைகளை சுமந்தார். பாவிகளின் நண்பராயினார். வழிமாறி தடம் புரண்ட மக்களுக்கு வாழ்வின் வழியானார். ஓளியிழந்து இருண்டு போன மனக்கண்களுக்கு ஒளி விளக்கானார். வாழ்வில் களையிழந்து வாழ்நாளில் விளிம்பிற்கு துன்ப துயரத்தால் தள்ளப்பட்ட கைவிடப்பட்ட அனாதைகளின் அடைக்கலமானார். இதயத்தில் இரக்கம் இல்லாதவர்கள் அன்பு இல்லாதவர்களே ஊனமுற்றவர்கள் உடலில் ஊனமுற்ற தொழுநோயாளிகள் ஊனமுற்றவர்களே அல்ல என்று உரக்கக் கூவினார். உண்மையை மட்டும் பேசி நன்மையை நாள்தோறும் செய்த என் மகன் இயேசு என்னும் சுமைதாங்கி மண்ணில் சாய்ந்தார் என்று கண்ணீர் சிந்துகிறாய்.

என் மகனே! மகளே "என்னைப் பின் செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்து நாள்தோறும் தன் சிலுவையை சுமந்துகொண்டு என்னை பின் தொடரட்டும்" என்ற என் மகனின் அன்புக் குரலைக் கேட்டு உன் வாழ்வில் வரும் சுமைகளையும் உன்னை அன்பு செய்கின்றவர்களின் சுமைகளையும் உன் குடும்பத்தின் சுமைகளையும் தாங்கி நீ வழி நடக்கும் போது மண் மீது சாயலாம். கண்ணீர் சிந்தலாம் அது உனக்கு மீட்புத் தரும். மாறாக உனக்கும் உன்னைச் சார்ந்தவர்களுக்கும் நீ எத்தனை முறை சுமக்க முடியாத சுமையாக பாரமாக இருந்தாய். அதை எண்ணி மனம் வருந்து! கண்ணீர் சிந்து!.

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

பத்தாம் ஸ்தலம்:

உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

நித்திய தேவன் என் மகன் இயேசு நிர்வாணமாக்கப்படுகிறார்.

என் அன்பு மகனே! மகளே! பரிசுத்த நிலையில் படைக்கப்பட்ட மனிதன் இறைவனோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தபொழுது அவனது நிர்வாணம் அவனுக்கு அவமானம் தரவில்லை. அருவறுப்பையும் உணர்த்தவில்லை. "நான் எனக்குப் போதும் இறைவன் எனக்கு வேண்டாம்" என்று கீழ்படிய மறுத்து தன்னைப் படைத்த இறைவனுக்கு எதிராகப் போராடத் துணிந்த மனிதனுக்கு நிர்வாணம் அவமானத்தைத் தந்தது. அருவறுப்பை உணர்த்தியது. மனுக்குலப் பாவத்தினால் வந்த நிர்வாணத்தின் அவமானத்தை போக்க வந்த என் மகன் இயேசு பலர் மத்தியில் நிர்வாணத்தின் அவமானத்தை அனுபவித்தார். வயல்வெளி மலர்களை உடுத்தியவர், வானத்துப் பறவைகளுக்கு தினமும் உணவுகொடுத்துக் காப்பவர் ஆடையின்றி நிர்வாணத்தின் கொடுமையை அனுபவிப்பதை எண்ணி நீ கலங்குகிறாய். கண்ணீர் வடிக்கிறாய்.

என் மகனே! மகளே! "நிர்வாணியாய் என் தாய் வயிற்றினின்று வெளிப்பட்டேன் நிர்வாணியாகவே திரும்பிப் போவேன்" என்ற யோபுவின் வார்த்தையை எண்ணிப் பார். பிறரைப் பற்றி புறங் கூறும் உன் இல்லாத பொல்லாத வார்த்தைகளினால் நற்பெயர் என்ற ஆடை உரிக்கப்பட்டு நிர்வாணத்தின் அவமானத்தின் கொடுமையை அனுபவித்து கண்ணீர் சிந்தியவர்கள் எத்தனை பேர். உன் கணவன் மீது மனைவி மீது சந்தேகப்பட்டு பிறர் மத்தியில் அவர்களைக் குறித்து தவறான கட்டுக் கதைகளையும் பொய் மூட்டைகளையும் அவிழ்த்து விட்டு நிர்வாணத்தின் அவமானத்தை அவர்கள் அனுபவிக்க விட்டு விட்டு நிம்மதி அடைய நினைக்கும் நிர்ப்பாக்கியர்களே உங்களுக்கு வரப்போகும் நிர்வாண நிர்பாக்கியத்ததை எண்ணி மனம் வருந்துங்கள். கண்ணீர் சிந்துங்கள்.

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

பதினொன்றாம் ஸ்தலம்:

பொங்கிய உதிரம் வடிந்திடவே
உம்மைத் தொங்கிடச் செய்தார் சிலுவையிலே.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

என் மகன் இயேசுவின் பரிசுத்த உடல் பாரச் சிலுவையோடு அறையப்படுகின்றது.

என் அன்பு மகனே! மகளே! "உங்கள் உடல் கடவுளின் பரிசுத்த ஆவியின் ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா? உங்கள் உடலில் கடவுளை மகிமைப் படுத்துங்கள். கடவுளின் ஆலயத்தை எவனாவது அழித்தால் கடவுளே அவனை அழித்து விடுவார்" என்ற இறைவார்த்தைகளை எண்ணிப்பார். "உன் கண்தான் உன் உடலுக்கு விளக்கு. ஒரு பெண்ணை இச்சையோடு நோக்குபவன் எவனும் ஏற்கனவே தன் உள்ளத்தில் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்று" என்னும் வேத வசனங்களை நினைத்துப்பார். என் மகன் கர்த்தர் இயேசுவின் உடல் கழுமரத்தில் மூன்று ஆணிகளால் அறையப்பட்டு துடிதுடித்ததை எண்ணிக் கலங்குகிறாய் கண்ணீர் வடிக்கிறாய்.

என் மகனே! மகளே! "மனிதன் செய்யும் பாவமெல்லாம் உடலுக்குப் புறம்பானது. கெட்ட நடத்தை சொந்த உடலுக்கே எதிரான பாவம்" என்பதை உணர்ந்து விபச்சாரப் பார்வை, சிந்தனை, குடும்பத்தில் பிரமாணிக்கத்துக்கெதிராக கொண்ட தகாத உறவுகள், ஓரினச்சேர்க்கை, சுய இன்பம் போன்ற பலவீன பாவங்களை எண்ணி மனம் வருந்து. "இயேசுவே என் பரிசுத்த உடலுக்கு எதிராகவும் பிறர் உடலுக்கு எதிராகவும் செய்த எண்ணற்ற என் பாவங்களை மன்னியும். உம் இரத்தத்தால் என் உடலைக் கழுவிப் பரிசுத்தாமக்கும்" என செபித்து கண்ணீர் சிந்து.

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

பன்னிரெண்டாம் ஸ்தலம்:

இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

கைவிடப்பட்ட கர்த்தர் கழுமரத்தில் மரிக்கின்றார்.

 என் அன்பு மகனே! மகளே! “என் கடவுளே!என் கடவுளே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என என் மகன் இயேசு கதறினார். ஏனெனில் உலகத்தை அவர் நேசித்தார். உலகம் அவரை வெறுத்தது. சீடர்களை அவர் நேசித்தார். யூதாசு அவரைக் காட்டிக் கொடுத்தான், இராயப்பர் மறுதலித்தார். மற்றவர் சிதறி ஓடினர். பலரை அவர் குணப்படுத்தினார். பலரும் பலவாராக ஏளனம் பேசினர். வருவோர் போவோர் வசைபாடினர். துன்பத்தில் தோள் கொடுக்க ஆளில்லாமல் கைவிடப்பட்டவராக எல்லாராலும் வெறுக்கப்பட்டவராக ஊருக்கு வெளியே கல்வாரி மலையில் கல்வர்களின் நடுவில் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே வேதனையோடு மரித்த என் மகன் இயேசுவின் கொடுமையை எண்ணி நீ கலங்குகிறாய் கண்ணீர் வடிக்கிறாய்.

என் மகனே! மகளே! எனக்கு என் தாயின் அன்பு கிடைக்கவில்லையே, என் தந்தை என்னை வெறுக்கின்றார், என் பிள்ளைகள் என்னை ஆதரிக்கவில்லை, என் கணவன் என் மீது சந்தேகப்பட்டு என்னை வெறுக்கின்றார், குடிக்கின்றார், அடிக்கின்றார், என் குடும்பத்தைக் கவனிப்பதில்லை, என் மனைவி எனக்கு துரோகம் செய்துவிட்டாள், என்னை மதிப்பதில்லை, பிள்ளைகள் மத்தியில் என்னை அவமதிக்கின்றாள், என்னை எல்லோரும் வெறுக்கின்றார்கள், நான் யாருக்காக வாழவேண்டும் சாவதே மேல், நான் அனாதை, தனிமரம், என்றெல்லாம் எண்ணி கைவிடப்பட்ட நிலையில் தள்ளப்பட்ட கல்லாக இருக்கும் நீ, அனாதைகளின் அடைக்கலமாம், என் மகன் இயேசுவிடம் அடைக்கலம் தேடு. அவர் உன்னை ஆதரிப்பார். அழாதே!

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

பதிமூன்றாம் ஸ்தலம்:

துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலின் மடிசுமந்து.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

மரித்த என் மகன் இயேசுவின் உடலை மடியில் வைத்துக் கதறினேன்.

என் அன்பு மகனே! மகளே! உன் தாயாகிய என்னைப் பார். எனக்கு வந்த வேதனையைக் கேள். எனக்கு பத்தாவாகிய சூசையப்பர் என்னையும் என் மகனையும் தனியே தவிக்கவிட்டு மரித்துப்போனார். என்னை நேசித்தஎன் ஒரே அன்பு மகன் இயேசுவும் "அம்மா இதோ! உன் மகன்" எனக் கூறி அருளப்பர் கையில் ஒப்படைத்து விட்டு என்னை அனாதையாக்கிவிட்டு மரித்துப்போனார். நான் விதவையாகிவிட்டேன். என்னை அம்மா அம்மா என்றழைக்க ஆளில்லாத நிலையில் நான் தனிமரமானேன். என் மகன் என்னோடு இருந்தபோது சொன்ன அன்பான வார்த்தைகளையும், செய்த பாசமிக்க செயல்களையும் எண்ணி எண்ணி "இயேசுவே, என் அன்பு இயேசுவே, என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டாயே" என்று விம்மி ஓலமிட்டு அழுதேன். வருவோர் போவோரின் இழிச்சொல்லும் என் வேதனையை அதிகப்படுத்தியது. என் வேதனையை எண்ணி நீ கலங்குகிறாய். கண்ணீர் வடிக்கிறாய்.

என் மகனே! மகளே! உன் அன்புக்காக ஏங்கும் உன் தாய், உன் தந்தை, உன் மனைவி, உன் கணவன், உன் பிள்ளைகள் இவர்களை எண்ணிப்பார். என் மகள், மகன் என்னை பார்க்க வரவில்லையே என ஏங்கும் பெற்றோர்கள் எத்தனை பேர்! என் கணவன் என்னையும் என் பிள்ளைகளையும் தனியே தவிக்க விட்டு ஓடிப்போனார், திரும்பி வரவில்லையே என்று ஏங்கும் மனைவிகள் எத்தனைபேர்! என் அன்புப் பெற்றோர் மரித்துப் போனார்கள் எனக் கண்ணீர் வடிக்கும் பிள்ளைகள் எத்தனை பேர்! உனது அன்பிற்காக ஏங்கித்தவிக்கும் உள்ளங்களை அன்பு செய்யாமல் மனநோகச் செய்த குற்றத்தை நினைத்து கண்ணீர் சிந்து.

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.பதிநான்காம் ஸ்தலம்:ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்
அடங்கிய கல்லறை உமதன்று.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

மரித்த என்மகனின் உடலை மாற்றான் கல்லறையில் அடக்கம் செய்தேன்.

என் அன்பு மகனே! மகளே! "அப்பா உம் கரத்தில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்" என்ற அலறல் கல்வாரி மலையெங்கும் எதிரொலிக்க என் மகன் இயேசு மரித்து போனார். அடுத்த நாள் ஓய்வு நாள். கல்லறை தோண்ட நேரமில்லை. அன்று என் மகன் பிறக்க இடம் வேண்டும் என தேடி அலைந்தேன். சத்திரத்தில் இடமில்லை, மாட்டுத் தொழுவத்தில் இடம் கிடைத்தது. இன்று என் மகனை அடக்கம் செய்ய கல்லறை வேண்டும் என கையேந்தி நின்றேன். பலர் கைவிரிக்க ஒருவர் மட்டும் உதவினார். அவர் பின்னே வந்தேன். என் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று அழுதேன், அழுதேன்.

என் மகனே! மகளே! மனிதனே நீ மண்ணாய் இருக்கின்றாய். மண்ணுக்கே திரும்புவாய். மனிதனின் வாழ்வு வயல்வெளி புல்லுக்கும் மலருக்கும் சமம். புல் உலர்ந்து போகிறது, மலர் மடிந்து போகின்றது. வாழ்வு எப்படியோ அப்படியே உன் மரணம் அமையும். உனக்கு வரப்போகும் சாவை என்னி உன் பாவ வாழ்வை மாற்றிக்கொள்ள மனம் வருந்து! கண்ணீர் சிந்து!

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.

பதினைந்தாம் ஸ்தலம்.

திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உமது அர்ச்சிஷ்ட பாரமான திருச் சிலுவையாலே உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

என் மகன் இயேசு உயிர்த்தார்.

என் அன்பு மகனே! மகளே! என் மகன் இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார் எனக்கும் சீடர்களுக்கும் காட்சி கொடுத்து எங்களைத் தேற்றினார். மகிழ்ச்சி கொண்டோம். நீயும் என்னைப் போல் இயேசுவுக்காக, இயேசுவோடு அவரின் நற்செய்திக்கு சான்று பகர்ந்து வாழ்ந்தால் உனக்கும் அவர் காட்சியில் தோன்றுவார். உன் துன்பங்களில் வேதனைகளில் உன்னைத் தேற்றுவார். விண்ணக மகிழ்ச்சி உன்னகம் வரும். உன்னத பேரின்பம் அடைவாய்.

ஒரு பரலோக மந்திரம்,
மூன்று அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.

ஆமென்.

பொறுத்தருளும் கர்த்தாவே! உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும். என்றென்றும் எங்கள்மேல் கோபமாயிராதேயும் சுவாமி. (மூன்று முறை)

பரிசுத்த பாப்பானவரின் கருத்துக்களுக்காக செபிப்போமாக.

ஒரு பரலோக மந்திரம்,
ஐந்து அருள் நிறைந்த மந்திரம்,
ஒரு திரித்துவ ஜெபம் சொல்வோம்.

ஆமென்.