பாரம்பரிய திருச்சிலுவைப்பாதை.

எக்காலத்திலும் விசேஷமாய் தபசு காலத்திலுஞ் செய்யத்தக்கது.

(இதைப் பக்தியோடே செபிப்பவர்கள் அர்ச்சியசிஷ்ட பாப்புகளாலே சேசுநாதர் பாடுபட்ட ஸ்தலமாகிய ஜெருசலேம் பட்டணத்தைத் தரிசித்துச் சந்திப்பவர்களுக்கு அளிக்கப்பட்ட பூரணப் பலன்களை எல்லாம் அடைவார்கள். ஆனால் இந்தப் பதினான்கு ஸ்தலங்களையும் ஒரே இடத்திலிருந்து சொல்லலாகாது. கொஞ்சமாகிலும் நடந்து பதினான்கு ஸ்தலங்களையும் சேசுநாதர் பட்ட பாடுகளை நினைத்து உருகிச் சொல்லவும்.)

பீடத்துக்கு முன்பாக சொல்லத்தக்க ஆயத்த ஜெபம்.

திவ்விய சேசுவே! எங்கள் நேசத்துக்குரிய இரட்சகரே! இதோ அடியோர்கள் எங்களுக்காகவும், மரித்த விசுவாசிகளுக்காகவும் உமது திவ்விய இரக்கத்தைக் கேட்டு மன்றாடும்படிக்கு தாழ்ச்சி வணக்கத்துடனே உமது திருப்பாதத்திலே விழுந்து கிடக்கிறோம். உம்முடைய திருப்பாடுகளைத் தியானிக்கப்போகிற அடியோர்களெல்லோருக்கும் அதுகளின் அளவில்லாப் பேறுபலன்களைத் தந்தருளும் சுவாமி. அழுகைப் பிரலாபத்துக்குரிய உமது திருச்சிலுவையின் பாதையை அநுசரிக்கையில் நாங்கள் முழுவதும் மனந்திரும்பி மெய்யான துக்க மனஸ்தாபப்பட்டு இவ்வுலகத்தின் துன்பம், பீடை, கஸ்தி, அவமானங்களைச் சந்தோஷத்துடனே ஏற்றுக்கொள்ளும்படியாக அனுக்கிரகம் செய்தருளும்.

ஆ! திவ்விய மாதாவே! அர்ச். மரியாயே! சிலுவையின் பாதையிலே எங்களுக்கு முந்தி நடந்ததினால் அதை எங்களுக்குக் காட்டிப் படிப்பித்தவர் நீரே. பக்தியுள்ள இந்த முயற்சியை அநுசரிக்கும் இந்நேரத்தில் இஸ்பிரீத்துசாந்துவானவர் எங்கள் இருதயத்தில் வருவிக்கும் நல்ல மனஸ்தாபத்தையும் தேவசிநேகத்தின் பற்றுதலையும் அர்ச்சியசிஷ்ட திரித்துவமாகிய சர்வேசுரன் தமக்குச் செய்யப்பட்ட நிந்தைகளுக்குப் பரிகாரமாக ஏற்றுக்கொள்ளும்படிக்கு நீரே மன்றாட வேணுமென்று உம்மை நோக்கி நம்பிக்கையோடே பிரார்த்திக்கிறோம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.


சேசுநாதர் சுவாமி பாடுபட்ட முதலாம் ஸ்தலம்.

பழிகளை சுமத்தி பரிகசித்தார் - உயிர்
பறித்திட எண்ணித் தீர்ப்பளித்தார்.
எனக்காக இறைவா எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதர் மரணத்திற்குத் தீர்வையிடப்படுகிறார்.

பிலாத்தென்கிற துரை விதித்த இந்த அநியாயமான மரணத் தீர்வைக்கு இயல்பாய் உட்பட்டதினாலே திவ்விய கர்த்தரிடத்தில் விளங்கின ஆச்சரியமான பொறுமையை சிரவணத்துடனே தியானிப்போமாக. ஆனால் அவருக்கு மரணத் தீர்வையிட்டது, பிலாத்தென்கிறவன் மாத்திரமல்ல, இவ்விடத்திலிருக்கிற நாமும் சகல பாவிகளும் அவரைக் கொலைப்படுத்த வேண்டி நம்முடைய பாவங்களாலே ஏற்பட்டோமென்று நன்றாய் யோசித்து அறியக்கடவோம். நம்முடைய அக்கிரமங்கள்தான் அவருடைய மரணத் தீர்வைக்குக் காரணமாயிற்று. ஆகையால் மெய்யான துக்கத்தோடே பிரலாபித்தழுது அவருடைய பாதத்தில் வீழ்ந்து அவருடைய பொறுத்தலையடைய அவரை நோக்கி மன்றாடுவோமாக.

ஜெபம்.
ஆ! திவ்விய கர்த்தாவே, மாசில்லாத சேசுவே! எங்கள் பாவ தோஷ அக்கிரமமே உம்மை மரணத் தீர்வைக்குட்படுத்தினதினாலே நாங்கள் மன நொந்து மிகுந்த மனஸ்தாபப்பட்டு எங்கள் பாவங்களையெல்லாம் அருவருத்துவிட்டு பிரலாபத்தினாலும் தபசினாலும் உம்முடைய இரக்கத்துக்கும் பொறுத்தலுக்கும் பாத்திரவான்களாகும்படி அனுக்கிரகஞ் செய்தருளும் சுவாமி.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.


சேசுநாதர் சுவாமி பாடுபட்ட இரண்டாம் ஸ்தலம்.

தாளாச் சிலுவை சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதர் தோள் மேல் சிலுவையை சுமத்துகிறார்கள்.

நம்முடைய திவ்விய போதகருமாய் பரம குருவுமாயிருக்கிற சேசுநாதர், கசைகள் முதலிய ஆயுதங்களினாலே அடியும் காயமும் பட்டு நொறுங்கி இரத்தக் கறைபிடித்த தமது திருத் தோளின் பேரில் தம்முடைய நிர்ப்பந்தமுள்ள சாவின் பயங்கரமான எத்தனமாகிய சிலுவையை எம்மாத்திரம் பிரியத்தோடும் மதுர குணத்தோடும் சுமந்து கொண்டாரென்று யோசிப்போமாக. சர்வேசுரனாலேயாவது படைக்கப்பட்ட வஸ்துக் களாலேயாவது நமக்கு வருகிற ஆக்கினை, கஸ்தி, துன்பங்களை மிகுந்த பொறுமையோடே ஏற்றுக் கொண்டு நமது சிலுவையாகிய அதுக்களை நாம் சுமக்கத்தக்க விதத்தை நம்முடைய திவ்விய கர்த்தர் இப்படியாய் நமக்குப் படிப்பிக்கச் சித்த மானார்.

ஜெபம்.
ஆ மதுர சேசுவே! தேவரீர் முழுவதும் மாசற்றவராயிருக்கையில் இந்தப் பாரமான சிலுவை உமது பேரிலல்ல, சகல அக்கிரமங்களும் நிறைந்த நிர்ப்பாக்கிய பாவிகளாகிய எங்கள் பேரிலே சுமத்தப்பட வேண்டியதாயிருந்தது. ஆகை யால் உம்முடைய நீதிக்கு உத்தரிக்கவும் பரலோக இராச்சியத்தில் சேரும் வழியாக உம்முடைய சித்தம் எங்களுக்கு நியமித்திருக்கிற பிரபஞ்ச துன்ப துரித பொல்லாப்புகளை உம்முடைய திவ்ய மாதிரிகையின்படியே நாங்கள் முறையிடாமல் பொறுமையோடே அனுபவிக்க மனத்திடனைக் கொடுத்தருளும் சுவாமி.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.


சேசுநாதர் சுவாமி பாடுபட்ட மூன்றாம் ஸ்தலம்.

விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதர் முதல் விசை தமது பாரமான சிலுவையோடு குப்புற விழுகிறார்.

நம்முடைய இரட்சகராகிய சேசுக்கிறிஸ்துநாதர் கபால மலையின் வழியில் மிகுந்த வருத்தத்தோடு நடந்து போகிறதை யோசிப்போமாக. அவர் பூங்காவனத்தில் இரத்த வேர்வை விட்ட போதும் சாட்டை கசைவார்களினாலே அடிபட்ட போதும் தமது திரு இரத்தத்தை மிகுதியாய்ச் சிந்தினதினாலே மெத்த பலவீனமடைந்ததைப் பற்றி தமது சிலுவையின் பாரத்தைத் தாங்க மாட்டாமல் குப்புற விழுகிறார். உடனே தம்மை நிஷ்டூர சேவகர் தூஷணித்தடித்தாலும் அவர் எள்ளளவுங் கோபிக்காமல் மறுபடி எழுந்து சிலுவை சுமக்கத் திருவுளமானார். இப்படி நம்முடைய பாவ அக்கிரமங்களைப் பரிகரிக்கவும் யாதொரு பாவத்தில் விழுகிற நிர்ப்பாக்கியம் நமக்கு நேரிட்ட பின்பு உடனே தகுந்த தபசினால் எழுந்திருக்க வேணு மென்று காண்பிக்கவும் கிருபை செய்தருளினார்.


ஜெபம்.
ஆ நல்ல சேசுவே! எப்பக்கத்திலும் எங்களுக்கு நேரிடுகிற தின்மை ஆபத்துக்களிலே நின்று எங்களைக் கைதூக்கி இரட்சியும். புண்ணிய நெறியில் மெத்த பலவீனரான அடியோர் களைத் திடப்படுத்தி நாங்கள் தைரியமாய்க் கபால மலை மட்டும் தேவரீரைப் பின் சென்று சீவியங் கொடுக்கிற விருட்சமாகிய சிலுவையின் இன்பமான பலனை அடையவும், தேவரீரோடு கூடப் பரகதியிலே நித்திய ஆனந்தத்தைச் சுதந்தரித்துக் கொள்ளவுந் தயை புரியும் சுவாமி.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.



சேசுநாதர் சுவாமி பாடுபட்ட நான்காம் ஸ்தலம்.


தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னை துயருற்றாள்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுகிறீஸ்துநாதர் தம்முடைய பரிசுத்த மாதா எதிர்கொண்டு வருகிறதைக் காண்கிறார்.

திவ்விய கர்த்தராகிய சேசுகிறீஸ்துநாதர் தம்முடைய பிரிய தாயாரை இம்மாத்திரம் கொடிய குரூரமான வேளையில் காண்கிறதினாலும் தேவமாதா தம்முடைய நேசக் குமாரன் எண்ணிறந்த ஜனங்களால் சூழவும் நிந்திக்கவும் தூஷணிக்கவும் பட்டு, வெகு நிஷ்டூரச் சேவகர் படைகளால் மானபங்கமாக கொலைக்களத்துக்கு நடத்திக் கொண்டு போகப்படுகிறதை பார்க்கிறதினாலும் இருவரும் அனுபவித்த கஸ்தி வியாகுலம் எம்மாத்திரமென்று யோசிப்போமாக. சேசுநாதர் படுகிற கொடூர நிர்ப்பந்தங்களைப் பார்த்து இரக்கமுள்ள மாதாவின் இருதயம் ஆயிரம் அம்புகளினால் ஊடுருவப்பட்டு துக்க சாகரத்தில் அமிழ்த்தினாற்போலாயிற்று. தம்முடைய பிரிய குமாரனைக் கொலை பாதகருடைய கையில் நின்று விடுவித்து மீட்க மகா ஆசையாயிருந்தார்கள். ஆனால் நமது இரட்சணியம் இப்படி நிறைவேற வேணுமென்றறிந்து தம்முடைய திவ்ய திருக்குமாரனுடைய பலியோடே கூடத் தமதன்பையும் பலியாக ஒப்புக்கொடுத்து அவருடைய சகல கஸ்தி துன்ப வாதைகளுக்கும் பங்காளியாகத் தன் சாவுக்கே அஞ்சாமல் அவரைக் கடைசி வரையிலும் பின் செல்கிறார்கள்.

ஜெபம்.
வியாகுல மாதாவே! துக்கம் நிறைந்த மரியாயே! பரிசுத்த பருவதமாகிய கபால மலை மட்டும் சேசுகிறீஸ்துவைப் பின்செல்லுகையில் நீர் கொண்டிருந்த மிகுந்த அன்பின் பற்றுதலையும் சிலுவையின் அடியிலே உம்மிடத்தில் விளங்கின மனத்திடனையும் அடியோர்கள் கண்டுபாவித்து, உம்மோடுகூடத் தைரியமாய்ச் சிலுவையடியிலே நிலைகொண்டு ஒருக்காலும் அதை விட்டுப் பிரியாதிருக்கும்படிக்கு எங்களுக்காக உம் திருக்குமாரனை வேண்டிக் கொள்ளும்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.



சேசுநாதர் சுவாமி பாடுபட்ட ஐந்தாம் ஸ்தலம்.

மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுகிறீஸ்துநாதர் தமது சிலுவையைச் சுமந்து போகிறதற்குச் சீரேனான சீமோன் உதவி செய்கிறார்.

நம்முடைய திவ்விய இரட்சகராகிய சேசு கிறீஸ்துநாதருக்கு நமது பேரிலுள்ள மட்டில்லாத அன்பை யோசிப்போமாக. அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்து போகிறதற்குப் புறத்தி யுதவியை ஏற்றுக்கொண்டதற்கு முகாந்தர மென்ன? அவரிடத்தில் பலத்தின் குறைவோ? அல்லவே, அவர்தான் சர்வலோகத்தையும் தாங்கி நடத்துகிறவர். ஆனால் நம்முடைய பீடை, கஸ்தி முதலான துன்பங்களை அவர் பட்ட நிர்ப்பந்தங்களோடே ஒன்றாகக் கூட்டி அவருடைய கசப்பான பாத்திரமாகிய பாடுகளுக்கு நம்மைப் பங்காளிகளாக்க வேணுமென்று அவ்விதமாய் நமக்குப் படிப்பிக்கச் சித்தமானார்.

ஜெபம்.
ஆ! எங்கள் திவ்விய உபாத்தியாய்ராகிய சேசுவே! பாடுகளின் பாத்திரத்திலே அதிகக் கசப்பாயிருந்ததெல்லாவற்றையும் தேவரீர்தாமே உட்கொண்டு அதிலே கொஞ்சமாத்திரம் எங்களுக்கு மீதி வைக்கக் கிருபை செய்தீரே. தேவரீர் உம்முடைய பாடுகளின் பாத்திரத்திலே எங்களுக்கு நியமித்த சொற்பமான பங்கு எங்களுக்கு வேண்டாமென்று நாங்களே எங்களுக்குச் சத்துராதிகளாய்த் தள்ளாமல், மனப்பற்றுதலாய் அதை ஏற்றுக் கொண்டு தேவரீர் நித்திய பேரின்ப இராச்சியத்தில் முத்திப்பேறு பெற்றவர்களுக்குத் திருப்தியாய்த் தந்தருளுகிற சொல்லிலடங்காத ஆனந்தத்துக்கும் அடியோர்கள் பங்காளிகளாகும்படிக்கு அநுக்கிரகம் செய்தருளும் சுவாமி.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.


சேசுநாதர் சுவாமி பாடுபட்ட ஆறாம் ஸ்தலம்.

நிலையாய் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

பக்தியுள்ள ஒரு ஸ்திரீயானவள் சேசுநாதருடைய திருமுகத்தைத் துடைக்கிறாள்.

அந்தப் பரிசுத்த ஸ்திரீயானவள் தன் திவ்விய கர்த்தரைத் தரிசிக்கத்தக்கதாக நிஷ்டூரச் சேவகர்களுடைய நெருங்கின படைநடுவே உட்புகுந்து போனதினாலே காண்பித்த அதிசயமான தைரியத்தை ஆச்சரியத்தோடே யோசிப்போமாக. சேசுநாதருடைய திருமுகமானது உமிழ்நீர், தூசி, வேர்வை, இரத்தத்தினால் மிகவும் கறைபிடித்திருக்கிறதை அவள் கண்டு மெத்தவும் மனதிரங்கியழுது பிரலாபிக்கிறாள். சகல அர்ச்சியசிஷ்டவர்களையும் ஆனந்தத்தினால் பரவசமாக்குகிறதுமாய், சம்மனசுக்கள் தானே அதன் சோதிப் பிரகாசத்தை நிமிர்ந்து பார்க்கக் கூடாமல் தங்களுடைய இறக்கைகளினாலே தங்களை மறைத்துக் கொள்ளும்படியாய் அவர்களுக்குப் பிரமிப்பை வருவிக்கிறதுமாயிருக்கிற இந்தத் திருமுகம் இப்படி வேற்றுருவாயிருக்கிறதின் மேற்சலித்து தேவசிநேகத்தின் மிகுதியினாலே ஒன்றுக்கும் பயப்படாமல் சேசுநாதருடைய திருப்பாதத்தை அண்டி வணக்கத்துடனே அவருடைய திருமுகத்தைத் துடைக்கிறாள். உடனே அத்திரு முகத்தின் மகிமையுள்ள சாயல் அதைத் துடைத்த வஸ்திரத்தில் பதிந்ததினால் அவளுடைய விசுவாசத்திற்குப் பலனாயிற்று.

ஜெபம்.
சகல மனுமக்களிலும் அதிக சுப செளந்தரியமுள்ள சேசுவே! தேவரீருக்கு எங்கள் பேரிலுள்ள பட்ச மிகுதியானது தேவரீரை எந்தக் கோலமாக்கிப் போட்டது! மெய்யாகவே இப்போது விசேஷமாய் எங்கள் ஆராதனைகளுக்கும் ஸ்துதிகளுக்கும் மிகவும் பாத்திரமாயிருக்கிறீர். ஆகையால் தேவரீருடைய திருச்சமூகத்தில் நாங்கள் சாஷ்டாங்கமாக விழுந்து தேவரீரை ஆராதித்து அடியோர்கள் உமக்குச் செய்த துரோகங்களை மன்னிக்கவும் எங்களுடைய ஆத்துமம் பாவத்தினாலே இழந்து போன தன் சுப செளந்தரியத்தை அதற்கு மறுபடி தந்தருளவும் வேணுமென்று தேவரீரைப் பக்தி வணக்கத்தோடு மன்றாடுகிறோம் சுவாமி.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.


சேசுநாதர் சுவாமி பாடுபட்ட ஏழாம் ஸ்தலம்.

ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுகிறீஸ்துநாதர் இரண்டாம் விசை குப்புற விழுகிறார்.

அவதரித்த தேவனாகிய சேசுநாதர் மறுபடியும் இளைத்துக் களைத்து விழுகிறதை யோசிப்போமாக. பலியாகப் போகிற அந்தத் திவ்விய கர்த்தர் தம்முடைய பலியின் பயங்கரமுள்ள எத்தனமாகிய பாரமான சிலுவை மரத்தின் கீழே சோர்ந்து கிடக்கிறதையும் தம்மைக் கொலைப்படுத்தப் போகிற நிஷ்டூரச் சேவகர்களாலே மறுபடி கொடூரமாய் அடிபடுகிறதையும் தியானிப்போமாக. ஆராதனைக்குரிய இரட்சகர் நமது பேரில் வைத்த அளவில்லாத பட்சத்துக்கு அத்தாட்சி காண்பிக்கத்தக்கதாக இப்படி இரண்டாமுறை தரையிலே விழச் சித்தமானார். ஏனெனில் நாம் அடிக்கடி பற்பல குற்றங்களில் விழுந்தாலும் தைரியமற்று அவநம்பிக்கைப்படாமல் தம்முடைய தயவை நம்பிக்கொண்டு மறுபடி உறுதியான பிரதிக்கினையோடே எழுந்திருக்க வேணுமென்றும் சகல துன்ப சோதனைகளில் அகப்பட்டிருந்தாலும் மனத்திடனைக் கைவிடலாகாதென்றும் பரகதியின் வழி முள்ளும் முரடும் நிறைந்ததாயிருக்கிறதென்றும், பரலோக மகிமைப் பிரதாபத்தை அடையத் தக்கதாகச் செம்பொன் உலையில் சுத்தமாகிறாப் போலே உபத்திரவங்களின் வழியாய்ப் பரிசுத்தமாக வேணுமென்றும் அவ்விதமாய் நமக்குப் படிப்பிக்கத் திருவுளமானார்.

ஜெபம்.
ஆ! எங்களுக்குப் பலமாகிய சேசுவே! அடியோர்கள் எந்தப் பாவத்திலுந் திரும்ப விழாதபடிக்கு எங்களை மீட்கத்தக்கதாக அநுபவித்த இளைப்பு தவிப்பு வருத்தங்களை அடியோர்கள் வீணாக்கி முடிவில்லாத கேட்டுக்கும் நிர்ப்பாக்கியத்திற்கும் உள்ளாகாதபடி எங்களைக் காப்பாற்றி இரட்சியும் சுவாமி.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.


சேசுநாதர் சுவாமி பாடுபட்ட எட்டாம் ஸ்தலம்.

விழிநீர் பெருகிய மகளிருக்கு - அன்பு
மொழிநீர் நல்கி வழி தொடர்ந்தீர்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதர் தம்மைப் பின் சென்று புலம்புகிற ஜெருசலேம் பட்டணத்தின் புண்ணிய ஸ்திரீகளுக்கு ஆறுதல் சொல்கிறார்.

இவ்விடத்தில் நம்முடைய திவ்விய இரட்சகருடைய நிகரில்லாத தயாளத்தின் இரக்கத்தைப் பார்த்து ஆச்சரியப்படக்கடவோம். பிரலாபத்திற்குரிய அவருடைய கஸ்தி உபத்திரவங்களைக் கண்டு அழுது புலம்புகிற புண்ணிய ஸ்திரீகளுடைய வியாகுலப் பிரலாபத்தின் பேரில் மனமிரங்கி தாமே அநுபவிக்கிற நோக்காடுகளை மறந்தாற் போலே அவர்களுடைய மிகுதியான துக்கத்துக்கு வேண்டிய ஆறுதல்களை சொல்லுகிறதற்கு மாத்திரம் நினைவாயிருக்கிறார். தம்மைப் பற்றி அழாமல் தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் தேவ துரோகிகளான தங்கள் தேசத்தாரையும் பற்றி அழுது புலம்ப வேணுமென்று கற்பித்ததினாலே தமது பேரில் நாம் இரக்கமாயிருக்கிறது போதாமல் தம்முடைய உபாதைகளுக்குக் காரணமாயிருக்கிற நம்முடைய பாவங்களினிமித்தம் அழுது மனஸ்தாபப்பட்டு அதுகளினாலே நமக்கு வருகிற பயங்கரமான ஆக்கினைகளைத் தபசினாலே நிவர்த்தி பண்ண வேணுமென்று படிப்பித்தருளினார்.

ஜெபம்.
ஆ! நேசத்துக்குரிய சேசுவே! துன்பப்படுகிற ஆத்துமாக்களுக்கு மெய்யான ஆறுதல் தரும் கர்த்தாவே! இரக்கமுள்ள உமது கிருபாகடாட்சத்தால் எங்களை நோக்கியருளும். ஜெருசலேம் பட்டணத்தின் பக்தியுள்ள ஸ்திரீகளைப்போல் சிலுவையின் திருப்பாதையிலே மனத்திடனாய் உம்மைப் பின் சென்று, அவர்களைப் போலே உமது திருவாயில் நின்று ஞான சீவியந்தரும் வார்த்தைகளைக் கேட்டுக் கொள்ளவும் சொல்லிலடங்காத ஆனந்தமுள்ள உமது தயாளத்தின் ஆறுதலை அநுபவிக்கவும் அடியோர்களுக்குக் கிருபை செய்தருள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.


சேசுநாதர் சுவாமி பாடுபட்ட ஒன்பதாம் ஸ்தலம்.

மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திடும் நிலை தளர்ந்தீர்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுகிறீஸ்துநாதர் மூன்றாம் விசை தரையில் விழுகிறார்.

ஆராதனைக்குரிய சேசுநாதர் மிகுந்த பிரயாசத்தோடே கபாலமலையின் உச்சியிலே சேருகிறதை யோசிப்போமாக. அவ்விடத்தில் நின்று கொடிய பாவிகளின் கையால் தாம் பலியாகப் போகிற ஸ்தலத்தை நோக்கிப் பார்க்கிறார். உடனே அவருக்குண்டான துயரமான கவலை யென்னவென்றால், தம்முடைய இரத்தத்தின் பலனைத் தங்களுக்கு வியர்த்தமாக்கி நரகத்தில் விழும் எண்ணிறந்த பாவிகளுடைய நித்திய கேட்டையும் நம்முடைய இடைவிடாத பாவ அக்கிரமங்களையும் நினைத்து விசனப்படுகிறார். அவர் இன்னும் அனுபவிக்கப் போகிற சகல நிர்ப்பந்தங்களையும் விட அந்தத் துயரமான நினைவு அவருடைய இரக்கமுள்ள இருதயத்தைக் கஸ்திப்படுத்தி வாதிக்கிறது. அதைப் பற்றி அவருடைய திரு ஆத்துமம் துக்க சாகரத்தில் அமிழ்ந்தினதினாலே அவர் பலனற்றுத் தயங்கி களைத்துப் பூங்காவனத்திலே மரண அவஸ்தைப்பட்டது போலவே இங்கேயும் அயர்ந்து தரையில் குப்புற விழுகிறார்.

ஜெபம்.
ஆ! சிநேகப் பலியான சேசுவே! இங்கேயோ மனிதருடைய இரட்சணியத்துக்காக உம்முடைய பிராணனைக் கொடுக்கப் போகிறீர்? ஆண்டவரே! அடியோர்கள் பரலோகத்தில் எங்கள் புகழ்ச்சியின் பலியை நித்திய காலமும் உமக்கு ஒப்புக்கொடுக்கப் பாத்திரவான்களாகும்படி உம்முடைய திரு இரத்தப் பலியின் பேறுபலன்களை எங்களுக்குத் தந்தருள வேணுமென்று தேவரீரை மன்றாடுகிறோம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.


சேசுநாதர் சுவாமி பாடுபட்ட பத்தாம் ஸ்தலம்.

உடைகள் களைந்திட உம்மைத் தந்தீர் - இரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதருடைய வஸ்திரங்களை உரிகிறார்கள்.

எண்ணிக்கையில்லாத ஜனங்களுக்கு முன்பாகக் கொலைகாரர்கள் சேசுகிறீஸ்துநாதருடைய திரு வஸ்திரங்களை நிஷ்டூரத்தோடும் மானபங்கத் தோடும் உரிந்தபோது நம்முடைய திவ்விய இரட்சகர் அனுபவித்த துக்கமும் வேதனையும் எம்மாத்திரமென்று யோசிப்போமாக. அவர் சர்வாங்கத்திலும் பட்ட காயங்களோடே அவருடைய வஸ்திரங்கள் ஒட்டிக் காய்ந்திருந்த படியினாலே அதுகளை உரியப்பட்ட போது அவருடைய காயங்களெல்லாம் திரும்பவும் திறந்து போக, அவருடைய திருச்சதை எப்பக்கத்திலும் கிழிய, இரத்தம் வெள்ளமாயோட கதைகள் முதலிய ஆயுதங்களால் அடிபட்டதினாலே அவருக்குண்டான கொடூர வேதனைகளையெல்லாம் மறுபடி ஒருமிக்க அநுபவித்தார். மனிதருடைய அசுசியான சுகங்களையும் துன்மார்க்க அக்கிரமங்களையும் பற்றி உத்தரிக்கிறதற்கு ஆண்டவருடைய திருச்சரீரத்தில் உண்டான கொடூர நோக்காடுகளைப் பார்த்துச் சகல பாவங்களையும் வெறுத்து விடாதிருக்கலாமோ?

ஜெபம்.
ஆ! மதுர சேசுவே! திவ்விய ஆட்டுக்குட்டியே பலியாகிறதற்குக் கொலைக் களத்துக்கு வந்து சேர்ந்தீர். ஐயோ! தேவரீர் முறையிடுகிறதற்கு வாய் திறவாமல் எவ்வளவோ பொறுமையாயிருக்கிறீர். தேவரீருடைய மவுனம் மகாதிடமுள்ள பிரசங்கம் போல் கஸ்தியில் எங்கள் பொறுக்காமையையும் முறைப்பாடுகளையும் அடக்க வேணுமென்று எத்தனையோ உறுதியாகக் கற்பிக்கின்றது. மேலும் இஷ்டப்பிரசாதமாகிய விலைமதிக்கப்படாத வரத்தை நாங்கள் இழந்த நிர்ப்பாக்கியத்துக்குப் பரிகாரமாக உம்முடைய வஸ்திரங்கள் உரியப்படச் சித்தமானீரே! ஆகையால் ஆராதனைக்குரிய இரட்சகரே! நாங்கள் எங்களிடத்திலுள்ள பழைய துர்க்குணங்களை உரிந்து போட்டு, உம்முடைய தேவ இஷ்டப் பிரசாதமாகிய திவ்விய ஆடையைத் தரித்துக் கொண்டு உம்முடைய திரு இருதயத்தின் சற்குணங்களை அநுசரிக்கும்படி எங்களுக்குக் கிருபை செய் தருளும் சுவாமி.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.


சேசுநாதர் சுவாமி பாடுபட்ட பதினோராம் ஸ்தலம்.

பொங்கிய உதிரம் வடிந்திடவே
உம்மைத் தொங்கிடச் செய்தார் சிலுவையிலே.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுகிறீஸ்துநாதரை சிலுவையில் அறைகிறார்கள்.

நம்முடைய திவ்விய இரட்சகராகிய சேசுநாதர் சிலுவையிலே அறையப்படுகிறதற்காக இயல்பாய்க் கொலைகாரருக்குத் தம்மைக் கையளித்துச் சிலுவை மரத்திலே தம்முடைய கை கால்களை நீட்டி விரித்துக் கொடுக்கிறதை யோசிப்போமாக. அவருடைய திருக் கைகால்களிலே கொடிய பாதகர் பெரும் இருப்பாணிகளை வைத்துச் சுத்தியாலே அடித்துத் துளைக்கிற போது அவர் அநுபவித்த வேதனை, நிர்ப்பந்தம் இவ்வளவென்று சொல்லக் கூடுமோ? அப்போது அவருடைய திருச்சதை கிழிய எலும்புகளின் மூட்டுகள் பிசக, நரம்புகள் தெறித்து இரத்தத் தாரைகள் அறுந்து போக, உதிரம் வெள்ளமாயோட, அவர் தவித்து அயர்ந்து மெத்த பலவீனப் பட்டதல்லாமலும் இத்தனை கடின நிர்ப்பந்தங்களோடே கூட மகா கொடிய தாகத்தின் உபத்திர வத்தையும் அநுபவித்தார்.

ஜெபம்.
ஓ! பாவமே, ஓ! சபிக்கப்பட்ட பாவமே, எங்கள் இரட்சணியத்தின் பலியாகிய திவ்விய கர்த்தரைச் சொல்லிலடங்காத இத்தனை நிஷ்டூர ஆக்கினைக்குள்ளாக்கி துக்க சாகரத்தில் அமிழ்த்தினது நீயே. ஆ! கிறீஸ்தவர்களே! நமது பேரில் இரட்சகரிடத்தில் எவ்வளவோ மிகுதியான அன்பு எவ்வளவோ அதிகமான நேசம்! அதைப் பார்த்து நம்முடைய நெஞ்சம் பிளந்து தேவ சிநேகத்தின் அக்கினியால் பற்றி எரியக்கடவது. நம்முடைய ஆத்துமம் இவ்வுலகத்தின் சுக செல்வங்களையெல்லாம் வெறுத்து விடக்கடவது. நம்முடைய இருதயம் சேசுநாதருடைய திரு இருதயத்தோடு கூட எப்போதைக்கும் சிலுவையில் அறையப்படவும், நம்முடைய கண்கள் இரவும் பகலும் பிரளயமாய்க் கண்ணீர் விட்டழவும் கடவது.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.



சேசுநாதர் சுவாமி பாடுபட்ட பன்னிரண்டாம் ஸ்தலம்.


இன்னுயிர் அகன்றது உமை விட்டு - பூமி
இருளில் ஆழ்ந்தது ஒளி கெட்டு.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுகிறிஸ்துநாதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.

எல்லாப் பரிசுத்தத்தனத்தையும் உடையவராகிய சேசுகிறீஸ்துநாதர் இரண்டு பாதகர் நடுவிலே சிலுவையில் உயிர்விடுகிறதைப் பார்த்து அவருடைய அன்பின் மிகுதியையும், மதுரத் தன்மையையும் யோசித்து ஆச்சரியப்படுவோமாக. அவர் தம்முடைய பிதாவை நோக்கித் தம்மைக் கொலைப்படுத்துகிறவர்களுக்காகப் பொறுத்தலைக் கேட்கிறார். நல்ல கள்ளனைப் பார்த்து இன்றுதானே நம்மோடே கூடப் பரகதி யிலிருப்பாயென்று திருவுளம் பற்றுகிறார். தம்முடைய பிரிய சீஷனுக்குத் தம்முடைய திருத் தாயாரை மாதாவாக ஒப்புக்கொடுக்கிறார். தம்முடைய பிதாவின் கையில் தமது ஆத்துமத்தை ஒப்புவித்து எல்லாம் நிறைவேறிற்றென்று உரைத்து நமக்காக உயிர் விடுகிறார்.

உடனே படைக்கப்பட்ட வஸ்துக்களெல்லாம் அவருடைய தேவத்துவத்தைப் பிரசித்தப்படுத்துகின்றன. சூரியன் மங்கி நிற்க, பூமியதிர, கற்பாறைகள் பிளந்து போக, உலகமெல்லாம் தன்னைச் சிருஷ்டித்தவர் மரிக்கிறதைப் பார்த்துத் துக்கத்தினாலே அழிந்து போக விரும்புவதாகத் தோன்றுகிறது.

ஜெபம்.
ஓ! பாவிகளே, இப்படிப்பட்ட பிரலாபத்திற்குரிய சமயத்தில் நீங்கள் மாத்திரம் மனமிளகாமலிருப்பீர்களோ? மரிக்கிற உங்கள் திவ்விய இரட்சகரை நோக்கிப் பாருங்கள்; உங்கள் பாவங்கள் எம்மாத்திரம் நிர்ப்பந்தமான அந்தஸ்தில் அவரை வைத்ததென்று கண்டறியுங்கள். ஆகிலும் நீங்கள் உங்கள் பாவங்களை வெறுத்து மெய்யான மனஸ்தாபப்பட்டால் உங்களுக்குப் பொறுத்தலைத் தந்தருளச் சித்தமாயிருக்கிறார். இதோ உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறதற்கு அவருடைய திருப்பாதம் கட்டுண்டிருக்கிறது. உங்களைத் தயவோடு அணைத்துக் கொள்ளுகிறதற்குத் தம்முடைய திருக்கரங்களை விரித்துக் கொண்டிருக்கிறார். உங்கள் பேரில் தம்முடைய வரப்பிரசாதங்களைத் திரளாய்ச் சொரிய விடுகிறதற்கு அவருடைய திருவிலா திறக்கவும் அவருடைய திரு இருதயம் ஊடுருவவும்பட்டிருக்கிறது. உங்களுக்குச் சமாதானமும் ஆறுதலும் கொடுக்கிறதற்கு அனந்தபட்சத்தின் குறிப்பாக அவருடைய திருச்சிரசு உங்கள் முகமாய்ச் சாய்ந்திருக்கிறது. ஆகையால் நாமெல்லோரும் அவருடைய திருச் சிலுவையடியிலே ஓடி நின்று அவர் நமக்காகத் தம்முடைய உயிரைத் தந்தபடியினாலே நமது உயிரை அவருக்கு என்றென்றைக்கும் ஒப்புக் கொடுப்போமாக.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.


சேசுநாதர் சுவாமி பாடுபட்ட பதின்மூன்றாம் ஸ்தலம்.

துயருற்றுத் துடித்தாள் உளம் நொந்து - அன்னை
உயிரற்ற உடலின் மடிசுமந்து.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதருடைய திருச்சரீரத்தைச் சிலுவையில் நின்று இறக்கி அவருடைய திருத்தாயார் மடிமேல் வளர்த்துகிறார்கள்.

உருக்கம் நிறைந்த தேவமாதா தம்முடைய திருக்குமாரனாகிய சேசுநாதருடைய மரணத்துக்குப் பின் அனுபவித்த சொல்லிலடங்காத துயரத்தை யோசிப்போமாக. அவருடைய சீஷர்கள் அவருடைய திருச்சரீரத்தைச் சிலுவையில் நின்று இறக்குகிறபோது வியாகுல மாதா எவ்வளவோ துக்க துயரத்தோடே அதைத் தம்முடைய கைகளிலேந்தி மடிமேல் வளர்த்திக் கொண்டு அழுகிறார்கள். அவருடைய திருமுகம் வெளுத்து வெற்றுருவாகி இரத்தக் கறை பிடித்திருக்கிறதையும் கண்விழி பஞ்சடைந்து மங்கியிருக்கிறதையும் திருவாய் மூடியிருக்கிறதையும் திருவிலா நிறக்கப்பட்டிருக்கிறதையும் கைகால் ஊடுருவப் பட்டிருக்கிறதையும் பார்த்துத் துக்க சாகரத்தில் அமிழ்ந்திப் பரிதவிக்கிறார்கள். அந்தக் காட்சியானது தேவமாதாவுக்குத் தன் சாவைவிட மகா கொடிய நிர்ப்பந்தமாயிருக்கிறது. அவர்களுடைய வியாகுலத்தின் மிகுதியும் பேறுபலனுஞ் சர்வேசுரனுக்கு மாத்திரம் தெரியக் கூடும்.

ஜெபம்.
ஆ! வியாகுலமுள்ள மரியாயே! உம்முடைய துக்க சாகரத்துக்குக் காரணம் நாங்கள் தானல்லவோ? உம்முடைய நேச குமாரனாகிய சேசுநாதரை சிலுவையில் அறைந்ததினால் உம்முடைய திரு இருதயத்தைக் குத்தி ஊடுருவினது எங்கள் பாவமென்கிற வாள்தானே. ஆ! தயாளமுள்ள தாயே! அடியோர்களுக்காக மன்றாடிப் பொறுத்தலை அடைந்தருளும். சிலுவையில் மரித்த எங்கள் அன்பரை உம்முடைய திருக்கரங்களில் ஆராதிக்க உத்தாரம் கட்டளையிடும். சிலுவையின் அடியிலே நீர் அனுபவித்த நிகரில்லாத வியாகுல துக்கத்தை அடியோர்கள் ஒருக்காலும் மறவாதபடிக்கு அதை எங்கள் இருதயங்களில் உறுதியாய்ப் பதியப் பண்ணியருள வேணுமென்று உம்முடைய பாதத்திலே விழுந்து மன்றாடுகிறோம்.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.



சேசுநாதர் சுவாமி பாடுபட்ட பதினான்காம் ஸ்தலம்.


ஒடுங்கிய உமதுடல் பொதியப்பட்டு - நீர்
அடங்கிய கல்லறை உமதன்று.
எனக்காக இறைவா எனக்காக
இடர்பட வந்தீர் எனக்காக,
இடர்பட வந்தீர் எனக்காக.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

சேசுநாதருடைய திருச்சரீரம் அடக்கம் செய்யப்படுகிறது.

ஜெபம்.
திவ்விய சேசுவே! எங்களுக்கு மிகவும் பிரியமுள்ள இரட்சகரே! எங்கள் இரட்சணியத்தின் திவ்விய பிணையுமாய், ஆராதனைக்குப் பாத்திரமாயிருக்கிற உமது திருச்சரீரம் இதோ ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எங்களை மீட்டுரட்சிக்கத் தக்கதாக தேவரீர் அநுபவித்த கடின நிர்ப்பந்தங்களையும் அடைந்த அவமானமுள்ள மரணத்தையும் அடிக்கடி நினைத்துத் தியானிக்கிறதே இந்தக் கண்ணீர்க் கணவாயிலே எங்களுக்கு மிகவும் ஆறுதலாயிருக் கும்படியாகத் தயை புரியும். தேவரீருடைய அன்பின் தேவதிரவிய அனுமானமாகிய தேவ நற்கருணை வழியாய் உம்மை உட்கொள்கிறதற்கு நாங்கள் புது இருதயத்தோடே அண்டி வரவேணுமென்று கற்பிக்கத்தக்கதாக தேவரீர் ஒரு புதுக் கல்லறையில் அடக்கம் செய்யப்படச் சித்தமானீரே. ஆகையால் தேவரீர் எங்கள் பாவ அழுக்கெல்லாம் போக்கி எங்களைச் சுத்திகரித்துத் தேவ நற்கருணையாகிற உமது திருப்பந்திக்கு நாங்கள் அடிக்கடி பங்காளி களாயிருக்கிறதற்கு எங்களைப் பாத்திரவான்களாகச் செய்தருளும். இந்தக் கல்லறையிலே தானே அடியோர்களுடைய சகல அக்கிரமங்களையும் ஆசாபாசங்களையும் புதைத்து, நாங்கள் எங்கள் பாவ துர்க்குணங்களுக்கும் பிரபஞ்ச சகல காரியங்களுக்கும் மரித்தவர்களாய் உம்மோடு கூட மறைவாய் ஜீவித்துப் பாக்கியமான மரணத்தை அடையவும் உமது மகிமைப் பிரதாபத்திலே வெளியரங்கமாய் தேவரீரைத் தரிசிக்கவும் பேறு பெற்றவர்களாகும்படிக்குக் கிருபை செய்தருளும் சுவாமி.

1 பரலோகத்திலிருக்கின்ற...
1 அருள் நிறைந்த...
1 திரித்துவ தோத்திரம்...
1 ஓ என் சேசுவே...
ஆமென்.

எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி. எங்கள் பேரில் தயவாயிரும். மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமங்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது. ஆமென்.



பிரார்த்திக்கக்கடவோம்.

திவ்விய சேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம். அதேனென்றால் உம்முடைய அர்ச்சியசிஷ்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

நாங்கள் சேசுகிறீஸ்துவின் திருவாக்குத் தத்தங்களுக்குப் பாத்திரவான்களாகத் தக்கதாக, மிகவும் வியாகுலமுள்ள கன்னிகையே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஆண்டவரே! எங்கள் இரட்சண்ணியத்தின் அடையாளங்களை, தேவரீருடைய திரு ஊழியராகிய அர்ச். பிரான்சீஸ்குவினிடத்தில் பதியச் செய்தீர்.

நமக்கு அதிசிரேஷ்ட மேற்றிராணியாராகிய அர்ச்சியசிஷ்ட பாப்பானவருக்காக வேண்டிக் கொள்வோமாக. கர்த்தர் அவரை ஆதரித்துக் காப்பாற்றி இவ்வுலகில் பாக்கியவானாக்கி அவருடைய சத்துராதிகளிடத்தில் அவரைக் கையளிக்காமல் இரட்சித்துக் கொள்வாராக.

மரித்த விசுவாசிகளுக்காக வேண்டிக் கொள்வோமாக. நித்திய இளைப்பாற்றியை அவர்களுக்குத் தந்தருளுஞ் சுவாமி. முடிவில்லாத ஒளி அவர்களுக்குப் பிரகாசிக்கக்கடவது.

பிரார்த்திக்கக்கடவோம்.

சர்வேசுரா சுவாமி! எங்கள் ஆண்டவராகிய சேசுகிறீஸ்துநாதர் பாவிகளாகிய யூதர்களுடைய கையிற் காட்டிக் கொடுக்கப்பட்டு சிலுவையின் நிர்ப்பந்தத்தை அனுபவித்து இரட்சித்தருளின இந்தக் குடும்பத்தைக் கிருபைக் கண்கொண்டு பாரும். நித்திய சீவியமுள்ள கடவுளின் குமாரனாகிய சேசுகிறீஸ்து நாதரே சுவாமி! தேவரீர் உலகத்தின் இரட்சணியத்துக்காக மத்தியான வேளையிற் சிலுவை மரத்தில் அறையப்பட்டு, உயர்த்தப்பட்டு, எங்கள் பாவங்களுக்கு விமோசனமாக உம்முடைய விலைமதியாத திரு இரத்தத்தைச் சிந்தினீரே. அடியோர்கள் மரித்த பிற்பாடு மோட்ச இராச்சியத்தில் பிரவேசித்து நித்திய ஆனந்த மகிமைப் பிரதாபத்தை அடையத்தக்கதாக அநுக்கிரகம் செய்தருள வேண்டுமென்று தேவரீரைத் தாழ்ச்சி வணக்கத்துடனே மன்றாடுகிறோம்.

திவ்விய சேசுவே! தேவரீர் பாடுபட்ட நேரத்தில் வியாகுலமென்கிற வாளினால் ஆத்துமத்திலே ஊடுருவப்பட்ட உம்முடைய திருமாதாவாகிய அர்ச்சியசிஷ்ட கன்னிமரியம்மாள் உம்முடைய தயாளமுள்ள சந்நிதியில் எங்களுக்காக இப்போதைக்கும் எங்கள் மரண நேரத்திலும் மனுப் பேசத் தேவரீர் தயை புரிய வேணுமென்று உம்மைப் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம் சுவாமி.

எங்கள் ஆண்டவராகிய சேசுக்கிறிஸ்துவே! உலகத்தின் பக்தியானது குளிர்கிறதாயிருந்த காலத்திலே உம்முடைய திவ்விய சிநேகத்தின் அக்கினியினாலே எங்கள் இருதயத்தைப் பற்றியெரியச் செய்யும்படிக்கு அர்ச்சியசிஷ்ட பிரான்சிஸ்குவின் சரீரத்தில் உம்முடைய பாடுகளின் திரு அடையாளங்களைப் புதுமையாகப் பதியச் செய்தீரே. அவருடைய மன்றாட்டுகளையும் பேறுபலன்களையும் குறித்து அடியோர்கள் எங்கள் சிலுவையை எப்போதைக்கும் சுமந்து கொள்ளவும் நல்ல தபசின் கனிகளைத் தரவும் தயாபரராய் அநுக்கிரகம் செய்தருளும் சுவாமி.

சர்வ வல்லவருமாய் நித்தியருமாயிருக்கிற சர்வேசுரா! உம்முடைய திரு ஊழியனாயிருக்கிற எங்கள் அதிசிரேஷ்ட மேற்றிராணியாராகிய பாப்பானவர் மேல் தயவாயிரும். அவர் உம்முடைய வரப்பிரசாதத்தைக் கொண்டு தேவரீருக்கு பிரியமுள்ளவைகளை விரும்பி தம்மால் இயன்ற மட்டும் அவைகளை நிறைவேற்றும்படிக்கு நித்திய ஈடேற்றத்தின் நெறியில் அவரை உம்முடைய தயாளத்தின்படியே நடப்பித்துக் கொள்ளும் சுவாமி.

பொறுத்தலைத் தந்தருள விரும்புகிறவருமாய் மனுமக்களின் இரட்சணியத்தை விரும்புகிற வருமாயிருக்கிற சர்வேசுரா சுவாமி! எப்பொழுதுங் கன்னிகையாயிருக்கிற அர்ச்சியசிஷ்ட கன்னிமரியம்மாளுடைய மன்றாட்டையும், உம்முடைய சகல அர்ச்சியசிஷ்டவர்களின் வேண்டுதல் களையும் கேட்டு தேவரீர் இப்பரதேசத்தினின்று மறுலோகத்தில் சேர்ந்த எங்கள் சபைக் கூட்டத்தார், சகோதரர், உறவின் முறையார், உபகாரிகளை நித்திய ஆனந்த பாக்கியத்துக்குப் பங்காளிகளாகக் கிருபை செய்தருள வேணுமென்று உம்முடைய தயாளத்தை நோக்கி மன்றாடுகிறோம்.

இந்த மன்றாட்டுகளையெல்லாம் எங்கள் ஆண்டவருமாய்த் தேவரீரோடும் இஸ்பிரீத்துசாந்துவோடும் ஏக தேவனுமாய்ச் சதாகாலம் சீவியருமாய்ப் பரிபாலனம் செய்கிறவருமாயிருக்கிற சேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்துத் தந்தருளும் சுவாமி.

ஆமென் சேசு.