பாத்திமா காட்சிகள் - திருச்சபை அதிகாரியின் விசாரணை தொடர்ச்சி...

இத்தனை தகவல்களையும், இன்னும் தமக்குத் தேவை என்று கருதிய செய்திகளையும் சேகரித்துக் கொண்டு சங். மனுவேல் போர்மிகோ அக்டோபர் 11-ம் நாள் இரண்டாம் தடவையாக அல்யுஸ்திரலுக்கு வந்தார். அவருடன் நான்கு சாட்சிகள் இருந்தனர்.  லூஸியாவிடம் முதலில் கேட்டார்:

“ஜனங்கள் நம்பும்படியாக அந்த அம்மா என்ன செய்வதாகச் சொன்னாள்?” 

“ஒரு புதுமை செய்வதாக.” 

“இதை எப்போது சொன்னாள்?” 

“சில தடவைகள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். மூன்றாம் காட்சியில் நான் கேட்ட போது கூறினார்கள்.” 

“அந்த நாளில் புதுமை எதுவும் நடக்காவிட்டால் மக்கள் உனக்கு ஏதும் செய்து விடுவார்கள் என நீ பயப்படவில்லையா?” 

“எனக்கு பயமில்லை.” 

“அந்த அம்மா தன் மீது சிலுவை வரைவதையாவது, ஜெபிப்பதையாவது, ஜெபமாலை மணிகளை உருட்டுவதையாவது கண்டாயா?” 

“இல்லை.” 

“பாவிகள் மனந்திரும்புமாறு ஜெபிக்கும்படி கூறினார்களா?”

“இல்லை.  யுத்தம் முடிவடையும்படி ஜெபமாலை ஜெபிக்குமாறு கூறினார்கள்.” 

இதுபற்றி லூஸியா பின்னால் விவரிக்கும்போது தேவ அன்னை பாவிகளுக்காக ஜெபிப்பதை விட அதிகமாக பரித்தியாகம் செய்யும்படி கேட்டதாகக் கூறியுள்ளாள்.

“மற்றவர்கள் அந்த அம்மாவின் உடையில் நட்சத்திரம், ரோஜாப்பூ இவைகள் காணப்பட்டதாகக் கூறுகிறார்களே, நீ அப்படி ஏதாவது பார்த்தாயா?

“நான் ஒன்றும் பார்க்கவில்லை.” 

“சரி, “சிறு மி­ன்” என்ற புத்தகத்தை உன் அம்மா வாசிக்க நீ கேட்டிருக்கிறாயா?  அதில் ஒரு சிறுவனுக்கும், சிறுமிக்கும் தேவதாய் காட்சி தந்ததாகக் கூறப்பட்டுள்ளதே” (சலேத் மாதா காட்சிகள், 1846).

“அதுபற்றி அடிக்கடி நினைத்திருக்கிறாயா? மற்ற சிறுமிகளிடம் சொல்லியிருக்கிறாயா?” 

“அதை நினைப்பதில்லை.  மற்றவர்களிடம் அது பற்றி நான் சொல்லவில்லை.”

மேலே கொடுக்கப்பட்டுள்ளது லூஸியாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சிலவேயாகும்.  இதேபோல் சங். மனுவேல் போர்மிகோ மற்ற இருவரிடமும் நிறைய கேட்டார். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு கூறுவோம்.

லூஸியாவைக் கேட்டு முடித்த பின் ஜஸிந்தாவைக் கேள்வி கேட்டார் அக்குரு.

“அந்த இரகசியத்தை நீயும் கேட்டாயா, அல்லது லூஸியாவுக்கு மட்டும்தான் அது கூறப்பட்டதா?” 

“நானும் கேட்டேன்.” 

“இரண்டாம் நாள்.  அந்தோனியார் திருநாளன்று.” 

“இந்த இரகசியம் நீங்கள் பணக்காரர் ஆவீர்கள் என்பதா?” 

“இல்லை.” 

“நீங்கள் நல்லவர்களாகவும், சந்தோ­மாகவும் இருப்பீர்கள் என்பதைப் பற்றியா?” 

“ஆம், எங்கள் மூவருக்கும் அது நல்லதுதான்.” 

“அந்த இரகசியத்தைச் சொல்லக் கூடாதா?” 

“கூடாது.” 

“ஏன்?” 

“நாங்கள் இதை ஒருவரிடமும் சொல்லக் கூடாதென்று அந்த அம்மா சொல்லியிருக்கிறார்கள்.” 

“ஜனக் கூட்டம் இந்த இரகசியத்தை அறிந்தால், அவர்கள் வருந்துவார்களா?” 

“ஆம்.” 

ஜஸிந்தாவிடம் கேள்வி கேட்டுக் குறித்துக் கொண்ட பின் பிரான்சிஸிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

“உன் வயதென்ன?”

“ஒன்பது.”

“நீ மாதாவைப் பார்க்கத்தான் செய்தாயா, அல்லது அவர்கள் கூறியதைக் கேட்கவும் செய்தாயா?”

“நான் அவர்களைப் பார்த்தேன்.  அவர்கள் கூறிய எதையும் நான் கேட்கவில்லை.”

“அவர்கள் தலையைச் சுற்றி ஏதாவது ஒளி காணப்பட்டதா?”

“ஆம்.”

“உன்னால் அவர்கள் முகத்தை நன்றாய்ப் பார்க்க முடிந்ததா?”

“கொஞ்சம்தான் பார்க்க முடிந்தது.  ஒளியினால் முழுதும் பார்க்க முடியவில்லை.”

“அவர்கள் உடையில் ஏதாவது அலங்காரங்கள் இருந்ததா?”

“விளிம்புகளில் தங்க ஜரிகை போலிருந்தது.”

“(ஜெபமாலையின்) பாடுபட்ட சுரூபம் என்ன நிறம்?”

“வெள்ளை.”

“ஜெபமாலையின் சங்கிலி என்ன நிறம்?”

“அதுவும் வெள்ளைதான்.”

“ஜனங்கள் அந்த இரகசியத்தை அறிந்தால் வருந்துவார்களா?”

“ஆம்.” 

ஒருவாறு இப்படி முடிந்தன கேள்விகள்.  சங். போர்மிகோ சுவாமிக்கு இந்த மட்டும் திருப்திதான். குழந்தைகள் உண்மையையே கூறுகின்றனர் என்று அவருக்குப் புலப்பட்டது.  எந்த சந்தேகம் இருந்தாலும் அது நீங்குவதற்கு இன்னும் அதிக நாள் காத்திருக்க வேண்டியதில்லையே!  

அக்டோபர் மாதம் 13-ம் தேதிக்கு இன்னும் இரண்டே நாட்கள்தானே உள்ளன!  அன்று எப்படியும் காட்சி வேளையில் தானும் கோவா தா ஈரியாவில் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் அவர் திரும்பிச் சென்றார்.

அக்டோபர் மாதம் 12-ம் தேதி புலர்ந்தது.  லூஸியாவின் பெற்றோர்க்கு ஒரே கவலை.  “நாளை விடிந்தால் என்ன நடக்குமோ? இப்படிக் காட்சி கண்டேன், காட்சி கண்டேன் என்று கதையைக் கட்டி வளர்த்து விட்டதே இந்தப் பிள்ளை!  அதுவும் இந்த ஆறு மாதமும் அதையே தொடர்ந்து சொல்லிப் பிடிவாதம் பிடிக்கிறாளே!  

அது போதாதென்று நாளை பகல் 12 மணிக்குப் பெரிய புதுமை நடக்கப் போகிறது என்று உலகமெல்லாம் அறிவித்து விட்டு, இப்படி பச்சைத் தண்ணீர் போல சும்மா உட்கார்ந்திருக்கிறாளே! ஆண்டவரே!  இதை நினைத்துப் பார்க்கக் கூட எங்களால் முடியவில்லையே! நாளை இந்தப் புதுமை நடக்காமல் போகும்போது, ஏமாற்றப்பட்ட மக்கள் சும்மா போவார்களா?  அவளைத் துண்டு துண்டாய்க் கிழித்து விட மாட்டார்களா?” என்று அவர்கள் அங்கலாய்த்தார்கள்.  அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

அல்யுஸ்திரலிலுள்ள சிலரும் இவ்வாறே பேசினார்கள்.  “நாளை புதுமை நடக்காமல் போனால் ஜனக் கூட்டம் இவளைச் சும்மா பார்த்துக் கொண்டிருக்காது” என்றார்கள்.  ஒரு பெண் எரிச்ச லுடன், “லூஸியா இப்படி எல்லோரையும் அழிப்பதற்கு முன் அவளை உயிரோடு எரித்து விட வேண்டும்” என்று கூறினாள். இதையயல்லாம் அனுபவித்து நொந்து போனாள் மரிய ரோஸா. தன் மகளிடம் கடைசி முயற்சி ஒன்றைச் செய்ய முயன்றாள்.

“இப்போதாவது கேளம்மா லூஸியா. நாம் உண்மையை உள்ளபடி வெளியே கூறிவிட வேண்டும். நாளை கோவா தா ஈரியாவில் நாம் சாகத்தான் போகிறோம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அந்த அம்மா குறிப்பிட்டபடி புதுமை செய்யாமல் போனால், ஜனக்கூட்டம் நம்மைக் கொன்று விடும்” என்றாள் மரிய ரோஸா.

“அம்மா, நான் பயப்படவில்லை. அவர்கள் வாக்களித்தபடி நிச்சயம் எல்லாவற்றையும் செய்வார்கள்” என்றாள் லூஸியா.

“நாம் சாகத் தயாராக இருக்க வேண்டும்  பாவசங்கீர்த்தனம் செய்து கொள்ளப் போவது நல்லது” என்றாள் மரிய ரோஸா.

“அம்மா, உங்களுடன் பாவசங்கீர்த்தனத்துக்கு வர வேண்டுமென்றால் நான் வருகிறேன்.  ஆனால் நீங்கள் சொல்லும் காரணத்திற்காக அல்ல” என்று லூஸியா பதிலளித்தாள்.

இதற்குப் பின் மரிய ரோஸா எதுவும் கூறவில்லை. அன்று பிற்பகலிலேயே  வானம் இருண்டு பெரும் மழைக்கு அடையாளங்கள் தோன்றின.

ஞானத்துக்கு இருப்பிடமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.