நோன்பு காலத்தின் வரையறை

தவக்காலத்தின் நோன்பு நாட்கள் 40 என்பதை வரையறை செய்வதில் மோசே, எலியா என்பவர்கள் வாழ்வுடன் இயேசு வாழ்வும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதே வேளையில் கல்லறையில் 40 மணித்தியாலங்கள் கிறிஸ்துவின் உடல் வைக்கப்பட்டிருந்தது என்பதும் கருத்திற் கொள்ளப்பட்டிருக்கலாம். தூய ஆவியின் வருகையை எதிர்பார்த்து 50 நாட்கள் சீடரும் மரியாவும் செபித்தார்கள் என்று கூறப்படினும் அவர்கள் 50 நாட்கள் முழுவதும் செபத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. இவ்வாறு ஆரம்பத்தில் 40 நாள் நோன்பு என்று குறிப்பிடும் போது 40 நாட்களில் ஒவ்வொருநாளும் நோன்பு இருந்தார்கள் எனக் கூறுவதற்கில்லை. இம்மரபு இடத்திற்கிடம் வேறுபட்ட நிலையில் விளக்கம் பெற்று வந்துள்ளது.

5ஆம் நூற்றாண்டில் உரோமாபுரியில் தவக்கால நோன்பு ஆறு வாரங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. எனினும் வரலாற்று ஆசிரியர் சோக்கிரட்டிஸ் என்பவரின் கருத்துப்படி சனி, ஞாயிறு தவிர்ந்ததாக முழுமையான மூன்று வாரங்களே நோன்புக் காலமாகப் பேணப்பட்டு வந்துள்ளது. மேலும், டுச்சேஸ்னிஸ் என்னும் ஆசிரியரின் கருத்துப்படி இம்மூன்று வாரங்களும் தொடர்ச்சியான காலமாகப் பேணப்பட வில்லை. இவை முதலாவது, நான்காவது, ஆறாவது வாரங்கள் கடைப் பிடிக்கப்பட்டன. இந்த மூன்று வாரங்களும் திருமுழுக்கிற்கு ஆயத்த காலமாகும்.

அலெக்ஸ்சாந்திரியாப் பகுதியில் 40 நாள் நோன்பு என்பது தூய வாரத்தில் மேற்கொள்ளவேண்டிய கடுமையானதும் அதிகம் வருத்துகின்ற இயல்பினைக் கொண்டதுமான நோன்பாகக் கடைப்பிடிக் கப்பட்டு வந்தது. தவக்கால் நோன்பு நாற்பது நாட்கள் என்பது வேறு பட்டதோர் விளக்கத்தையும் முன்வைத்தது. அதன்படி பலர் கருத்து கொள்வதுபோல் நோன்புக்காலம் நாற்பது நாட்கள் எனக் கொள்வதிலும் மேலாக 40 முழுநாள் நோன்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதா கும். இப்பின்னணியில் ஜெருசலேமில் தவக்கால நோன்பு எட்டு வாரங் களுக்கு நீடித்தது பொருத்தமானதொன்றாகவே தென்படுகின்றது. இங்கு சனி, ஞாயிறு நாட்கள் தவிர்ந்ததாக நோக்கும்போது வாரநாட்கள் ஐந்து எனக்கொண்டு கணிப்பிடின், எட்டு கிழமைகள் 40 நாட்களாகும். ஆனால் பல பகுதிகளில் மக்கள் ஆறு வாரங்கள் மட்டும் நோன்புக் காலமாகக் கொள்வதில் திருப்தி கண்டனர்.

புனித கிறகோரியர் காலத்தில் உரோமாபுரியில் ஆறு வாரங்கள் மட்டுமே நோன்பு நாட்களாகக் கணிக்கப்பட்டன. இதில் ஞாயிறு மட்டும் தவிர்ந்ததாக 36 நாட்கள் எனக் கொள்ளப்பட்டன. இவ்வாறான 36 நாட்களும் வருடத்தின் பத்தில் ஒரு பகுதியாகக் கொள்ளப்பட்டு மிகப் பொருத்தமான காலமாக சில மத்திய காலத்து எழுத்தாளர்களும் விளக்கம் கூறினர். பின்பு நோன்புக் காலம் 40 நாட்களாகக் கொள்ளப் படவேண்டும் என்னும் நோக்குடன் தவக்காலம் திருநீற்றுப் புதனுடன் ஆரம்பிக்கும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.