தவக்கால நோன்பு: தோற்றமும், வளர்ச்சியும்

தவக்காலத்தின் முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாக நோன்பு மேற்கொள்ளுதல் ஆரம்பத்திருச்சபையினின்று பேணப்பட்டு வருவதாக அறியப்படுகின்றது.

கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருச்சபையின் தந்தையர்கள் அப்போஸ்தலர் காலத்திலிருந்தே 40 நாட்கள் தவக்கால நோன்பு கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.

புனித சிங்கராயர் கி.பி. 461இல் நோன்பு பற்றிக் கூறுமிடத்து அப்போஸ்தலர்கள் ஏற்படுத் திய 40 நாள் நோன்பு எனக் கூறுகின்றார். கி.பி. 433இல் வாழ்ந்த திருச்சபை வரலாற்று ஆசிரியர் சோக்கிரட்டிஸ் என்பவரும், கி.பி. 420இல் வாழ்ந்த புனித ஜெறோம் என்பவரும் இக்கருத்தை ஆதரிக்கும் வேளையில் நவீன ஆய்வாளர்கள் இக்கருத்தை மறுக்கின்றனர்.

இவர்களின் கூற்றுப்படி முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் உயிர்ப்பு விழாவின் முன்பு இடம் பெற்ற நோன்பானது இடத்துக்கிடம் வேறுபட்ட நிலையில் கடைப்பிடிக்கப்பட்டதோடு, கால அளவிலும் மாறுபட்ட கருத்துக் காணப்பட்டது.

இரேனியுஸ் என்பவர் இந்த விடயம் பற்றிக் குறிப்பிடும்போது எப்போது உயிர்ப்பு விழா கொண்டாடப்பட வேண்டும் என்பது பற்றியும் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன எனக் கூறுகின்றார். மேலும் அவர் இது பற்றிக் குறிப்பிடும்போது சிலர் ஒரு நாளும் வேறு சிலர் 40 மணித்தியாலங்களும் நோன்பு கடைப்பிடித்தாகக் கூறுகின்றார்.

இவ்வாறான வேறுபாடுகள் திருச்சபையின் ஆரம்ப காலத்திலிருந்து நிலவி வருகின்ற காரணத்தினால் இது அப்போஸ்தலிக்கப் பாரம்பரியத்திலிருந்து தோன்றியது எனக் கூறமுடியாது. இது தொடர்பாக ஏனைய எழுத்தாளர்களும் 40 நாட்கள் நோன்பு ஆரம்ப காலங்களில் நிலவியமைக்கு ஆதாரமில்லை என்றே கூறுகின்ற னர். நிசேயா பொதுச்சங்கத்திற்கு முன்பு வாழ்ந்தோர் அப்போஸ்தலிக்க பாரம்பரியமாக தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டிருப்பின் அது பற்றிக் கூறியிருப்பார் எனக் கொள்ளலாம்.

அலெக்ஸ்சாந்திரியா நாட்டைச் சேர்ந்த புனித டயோனிசியஸ் என்பவரின் எழுத்துகளில் அல்லது 'டிடாக்கே' என்னும் இலக்கியத்தில் தவக்காலம் பற்றி எந்தவித குறிப்பும் இடம்பெறவில்லை . எனினும் பாஸ்கா விழா பற்றி இரண்டு நூல்களிலும் தகவல்கள் பரவலாகக் காணக் கிடக்கின்றன. மேலும் இவர்களின் கருத்துப்படி அப்போஸ்தலரின் காலத்திலே கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவானது ஆண்டு விழாவாக அல்லாமல் வாராந்த விழாவாகவே கொண்டாடப்பட்டுள்ளது. இந் நிலையை விளக்கமாகக் கூறும்போது ஞாயிறு வழிபாடு வழியாக கிறிஸ்துவின் உயிர்ப்பு நினைவுகூரப்பட்ட வேளையில் வெள்ளிக்கிழமை நோன்பு கிறிஸ்துவின் மரணத்தின் அடையாளமாக நினைவுகூரப்பட்டது. இரண்டாம் நூற்றாண்டு வரையும் உயிர்ப்பு விழா கொண்டாடும் காலம் பற்றியும் மாறுபட்ட நடைமுறைகள் வழக்கில் இருந்துள்ளன. பாஸ்கு விழாவை வாராந்த முறையில் கொண்டாடுவது எல்லா கிறிஸ்தவர்கள் மத்தியிலும் காணப்பட்ட ஒரு மரபாகும். உயிர்ப்பு விழா வருடாவருடம் கொண்டாடும் மரபு மேற்கு, கிழக்கு நாடுகளின் பல்வேறு பகுதிகளில் நிலவிய சூழலினால் ஏற்பட்ட ஒரு மரபாகும். இவ்வாறாக உயிர்ப்புவிழா கொண்டாடும் மரபுடன் இணைந்ததாக நோன்பும் வழக்கில் வந்தது. எனினும் இந்நோன்பானது ஒருவார காலத்திற்கு நீடிக்காதவிடத்தும் மிகவும் கடுமையானதும் அதிகம் வருத்துகின்ற இயல்பினை உடையதுமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

4ஆம் நூற்றாண்டின் முற்கூறில் தவக்காலத்தைக் குறிக்க (40வது நாள்) என்னும் கிரேக்கச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கி.பி. 331இல் புனித அத்தனேசியுஸ் தமது மக்களுக்கு 40 நாள் நோன்பு பற்றிக் கூறியுள்ளார். எனினும் தூய வாரத்தில் கடைப்பிடிக்கவேண்டிய கடுமை யான நோன்புக்காலம் இங்கு குறிப்பிடப்படுகின்ற 40 நாட்களுக்குள் உள்ளடக்கப்படவில்லை . மேலும் புனித அத்தனேசியுஸ் 339 இல் உரோமாபுரியையும் ஏனைய மேற்கு நாடுகளையும் தரிசித்த பின்பு நோன்பு கடைப்பிடிப்பது பற்றித் தமது அலெக்ஸ்சாந்திரியா மக்களுக்கு மிகவும் அழுத்தமான முறையில் அறிவுறுத்துகின்றார். 'எல்லாக் கிறிஸ்தவர்களும் நோன்பைக் கடைப்பிடிக்கும்போது எகிப்தில் வாழும் நாம் ஏனையோருக்கு கேலிக்குரியவர்களாகி நாம் மட்டும் இதைக் கடைப்பிடிக்காதவர்கள் என எண்ணப்பட்ட இடமளிக்கக்கூடாது' எனக் கூறுகின்றார். எனினும், புனித அம்புறோஸ் காலத்திலிருந்தே ஐரோப்பா வில் தவக்கால நோன்பு 40 நாட்களுக்குக் கடைப்பிடிக்கப்பட்டது.