பாத்திமா காட்சிகள் - திருச்சபை அதிகாரியின் விசாரணை

சங். டாக்டர் மனுவேல் நூன் போர்மிகோ (லிஸ்பன் மறை மாநில அதிபரால் இக்காட்சிகள் பற்றி ஆராய்ந்து கூறும்படி முதன் முதல் அனுப்பப்பட்டவர்) ஐந்தாம் காட்சியை செப்டம்பர் 13, 1917-ல் நேரில் வந்து பார்த்தார்.  பல மக்களையும் கண்டு பேசினார். 

அதே மாதம் 29-ம் தேதி, காட்சி கண்ட சிறுவர் மூவரையும் விசாரணை செய்ய அல்யுஸ்திரல் கிராமத்திற்கு வந்தார். அவரை அக்குழந்தைகளின் தாய்மார் இருவரும் (மரிய ரோசாவும், ஒலிம்பியாவும்) மரியாதையுடன் வரவேற்றார்கள். லூஸியா அன்று கோவா தா ஈரியாவுக்குச் சென்றிருந்தாள். பிரான்சிஸும், ஜஸிந்தாவும் தெருவில் விளையாடச் சென்றிருந்தனர்.

முதலில் ஜஸிந்தா வீட்டுக்கு வந்தாள்.  வந்திருந்த குருவைக் கண்டு அவள் முதலில் சற்று பயந்தாலும், பிரான்சிஸ் வந்தவுடன் அவளுக்குப் பயம் மாறி தைரியம் ஏற்பட்டது. பிரான்சிஸ் அவன் போக்கில் உள்ளே நுழைந்தான். தலையிலிருந்த தொப்பியை அகற்றும்படி அவனிடம் ஜஸிந்தா சாடை காட்டியதை அவன் கவனிக்கவில்லை.  வந்திருந்த குருவையே உன்னிப்பாகக் கவனித்தான். அவர் முதலில் பிரான்சிஸை மட்டும் தனியே விசாரித்தார். ஜஸிந்தாவை வெளியே போகச் சொல்லி விட்டார். பின் ஜஸிந்தாவை விசாரித்தார். இதற்குள் லூஸியா வந்து விட்டாள்.

லூஸியாவைப் பற்றி இவருடைய கருத்து: மூன்று குழந்தைகளிலும், திடமும் இயல்பாக நடந்து கொள்ளும் தன்மையும் லூஸியாவிடம் அதிகம் இருந்தன.  அவள் ஒரு உடல் செளக்கியமுள்ள, திடகாத்திரமான, சர்வ சாதாரணமான சிறுமி.  அவளிடம் எந்த வித அசாதாரணத்தையும் காண முடியவில்லை. அவள் பேச்சிலும் தோற்றத்திலும் தற்புகழ்ச்சியான எதுவும் இல்லை.  எந்தவித நோயின் அடையாளமும் தென்படவேயில்லை.

லூஸியாவைத்தான் அவர் அதிகம் விசாரணை செய்தார்.

“போன வருடமும் அப்பெண் உனக்குத் தோன்றியதாகக் கூறுகிறார்களே, அப்படியா?” (போர்வை போர்த்திய உருவம் தோன்றியதை இலேசாக சங். மனுவேல் போர்மிகோ கேள்விப்பட்டிருக்க வேண்டும்.) என்று கேட்டார் குரு.  லூஸியா மிக அமைதியுடன்:

“போன  வருடம்  அவர்கள்  எனக்குக் காணப்படவில்லை. 

இந்த வருடமும் மே மாதத்திற்கு முன் நான் அவர்களைக் காண வில்லை. அப்படி நான் யாரிடமும் சொல்லவில்லை. ஏனென்றால் அது உண்மையில்லை.” 

“கோவா தா ஈரியாவில் நிறைய பேர் ஒவ்வொரு 13-ம் தேதியிலும் காட்சியின் போது கூடியிருக்க வேண்டும் என்று அப்பெண் விரும்பினாளா?” 

“அதைப் பற்றி அவர்கள் எதுவும் சொல்லவில்லை.” 

“ஒரு இரகசியத்தை உன்னிடம் கூறி அதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவள் கூறியது உறுதிதானா?” 

“ஆம்.” 

“உன்னிடம் மட்டும்தான் அதைக் கூறினாளா, உன் தோழர்களிடமும் கூறினாளா?” 

“எங்கள் மூவரிடமும் கூறினார்கள்.” 

“நீ அதை உன் பாவசங்கீர்த்தனம் கேட்கும் குருவிடமாவது கூறுவாயா?” 

லூஸியா இதில் சற்றுத் திகைத்தாள்.  பதில் கூறவில்லை.

“ஆட்சித் தலைவர் உன்னிடம் வற்புறுத்திக் கேட்ட போது, நீ இரகசியமில்லாத ஒன்றை இரகசியம் போல் கூறிவிட்டு, பின்னால் அவரை ஏமாற்றி விட்டதாகக் கூறினாயாமே, உண்மையா?” 

“இல்லை.  நான் ஆட்சித் தலைவரை ஏமாற்றவில்லை. அவர் நான் அந்த இரகசியத்தை வெளியிட வேண்டும் என்று விரும்பினார். அவ்வாறு செய்யக் கூடாததால் நான் ஒன்றும் பேசவில்லை. அந்த அம்மா கூறியவற்றை, இரகசியம் தவிர எல்லாவற்றையும் அவரிடம் கூறினேன்.  ஒருவேளை அதனால் அவர் நான் இரகசியத்தையும் அவரிடம் கூறியதாக நினைத்திருக்கக் கூடும்.” 

“அந்த அம்மா நீ வாசிக்கக் கற்றுக் கொள்ளும்படி சொன்னார்களா?” 

“ஆம். இரண்டாவது காட்சியில்.” 

“அக்டோபர் மாதம் உன்னை மோட்சத்துக்குக் கூட்டிச் செல்வேன் என்று அவர்கள் கூறியிருந்தார்கள்தானே?  அப்போ நீ வாசிக்கக் கற்றுக் கொள்வதால் என்ன பயன்?” 

“அந்த அம்மா என்னை அக்டோபர் மாதம் மோட்சத்திற்குக் கூட்டிச் செல்வதாகச் சொல்லவில்லை. அப்படி நானும் யாரிடமும் கூறவில்லை.” 


“காட்சியின் போது ஏன் நீ அந்த அம்மாவைப் பார்ப்பதை விட்டு விட்டு உன் கண்ணைக் கீழே தாழ்த்தினாய்?” 

“அவர்களைப் பார்க்க அதிக ஒளியாயிருந்தது.” 

“அவள் உனக்கு ஏதும் ஜெபம் சொல்லிக் கொடுத்தாளோ?” 

“ஆம்.  அதை ஜெபமாலையின் ஒவ்வொரு பத்து மணி முடிவிலும் சொல்லும்படி கூறினார்கள்.” 

“அது உனக்கு மனப்பாடமாகத் தெரியுமா?” 

“ஆம்.” 

“சொல் பார்ப்போம்.” 

“ஓ என் சேசுவே, எங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும்.  எல்லா ஆன்மாக்களையும் விசே­மாய் யார் அதிகத் தேவையிலிருக்கிறார்களோ, அவர்களையும் மோட்சத் திற்கு அழைத்தருளும்.” 

முதல் விசாரணை இவ்வாறு முடிந்தது.  எல்லாக் கேள்வி பதில்களும் எழுதப்பட்டன. சங். டாக்டர் மனுவேல் போர்மிகோவுக்கு மொத்தத்தில் திருப்தி ஏற்பட்டது. ஆனால் அவர் முழு திருப்தியடையவில்லை.  எனவே மேலும் அவர் பல நுணுக்கமான கேள்விப் பட்டியல் ஒன்றைத் தயாரித்தார்.  

குழந்தைகளின் மன ரூபிகரம், பசாசின் தந்திரம் இப்படி நுட்பமான எதுவும் இருந்தால், உடனே அறியும்படியாக, மேலும் பல கேள்விகளைத் தயாரித்துக்கொண்டு அக்டோபர் மாதம் 10-ம் நாள் புறப்பட்டார்.  பாத்திமாவிலிருந்து இரண்டு மைல் தூரத்திலிருக்கும் மோன்தெலோ என்ற இடத்திற்கு இரவு 11 மணிக்கு வந்தார்.  அங்கு தன் பெயரையும், அடையாளத்தையும் முழுவதும் மாற்றிக் கொண்டார். 

கொன்சால்வஸ் என்ற குடும்பத்தினருடன் தங்கினார்.  அவர்கள் அல்யுஸ்திரலில் உள்ள குடும்பங்களை நன்கு அறிந்தவர்கள். எனவே அவர்களிடம் அந்தோனி சாந்தோஸ், மார்ட்டோ ஆகிய இருவர் பற்றியும், அவர்கள் குடும்பங்கள் பற்றியும் பல கேள்விகள் கேட்டு, முழுத் தகவலையும் சேகரித்தார்.

அவர் சேகரித்த தகவல்களின்படி மார்ட்டோ (பிரான்சிஸ், ஜஸிந்தா இவர்களின் தந்தை) அந்த வட்டாரத்திலேயே மிகவும் நம்பகமானவர், கண்ணியமுள்ளவர். அவர் மனைவியும் நன்கு மதிக்கப்பட்டவள். இருவரும் நல்ல கத்தோலிக்கர். தாங்கள் விசுவசித்த உண்மைகளின்படி நடப்பவர்கள்.

அந்தோனி  சாந்தோஸ்   இப்போது   சற்று   மதுப்  பழக்கம் உடையவர் என்றாலும் நேர்மையுள்ளவர். எளிய சுபாவம். மரிய ரோஸா நல்ல உழைப்பாளி, பொறுப்பு வாய்ந்தவள்.

இவ்விரு குடும்பத்தினரிடமும் இக்காட்சிகளினால் எவ்வித உயர்வோ, அகந்தையோ, லாப நோக்கமோ கிடையாது.  இரு குடும்பத்தாரும் இக்காட்சியின் செய்திகளைப் போற்றி, குழந்தைகளை ஊக்குவித்ததாகத் தெரியவில்லை. குறிப்பாக மரிய ரோஸா தன் மகளை எவ்வளவு தடைசெய்ய முடியுமோ, அவ்வளவு தடை செய்து வருகிறாள்.

இவ்விரு குடும்பங்களிலுமுள்ள பிள்ளைகளும் ஊரில் பொதுவாகவே எல்லோராலும் விரும்பப்படுகிறவர்கள்.  முதல் ஒன்றிரண்டு காட்சிகளின் செய்தி பரவிய போது ஊரில் பெரும்பாலோர் அதை நம்பவில்லை. ஆனால் வர வர இக்கருத்து மாறிவந்துள்ளது.  

ஆகஸ்ட் 13ல் அநேகர் மேக உருண்டையைக் கண்டதிலிருந்தும், மற்றும் பல அடையாளங்களிலிருந்தும், இப்போது பொதுவாக இக்குழந்தைகள் உண்மையையே பேசி வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது.