மலாக்கியாஸ் ஆகமம்

அதிகாரம் 01

1 ஓர் இறைவாக்கு. மலாக்கிய வாயிலாய் ஆண்டவர் இஸ்ராயேலுக்கு அருளிய வாக்கு.

2 உங்கள் மீது நாம் அன்பு வைத்தோம்" என்கிறார் ஆண்டவர். ஆனால் நீங்கள்," எங்கே உம் அன்பு?" என்கிறீர்கள். "ஏசா யாக்கோபுக்கு உடன்பிறந்தவன் தானே! எனினும் யாக்கோபின் மீது அன்பு வைத்தோம்,

3 ஏசாவின் மீது நாம் அன்பு கொள்ளவில்லை. அவனது மலைநாட்டைப் பாழாக்கினோம்; அவனது உரிமைச் சொத்தைப் பாலைநிலத்துக் குள்ளநரிகளுக்கு விட்டுவிட்டோம்" என்கிறார் ஆண்டவர்.

4 நாம் நிலைகுலைந்தோம்; ஆயினும் பாழானதை மீண்டும் கட்டியெழுப்புவோம்" என்று ஏதோம் கூறுமானால்," அவர்கள் கட்டியெழுப்பட்டும், நாம் இடித்துப்போடுவோம்; 'பொல்லாத நாடு' எனவும்,' ஆண்டவரின் சினத்திற்கு என்றென்றைக்கும் இலக்கான மக்களினம்' எனவும் அவர்கள் பெயர் பெறுவார்கள்" என்று சேனைகளின் ஆண்டவர் மறுமொழி தருகிறார்.

5 நீங்களே கண்ணாரக் காண்பீர்கள்; கண்ட பின், "இஸ்ராயேல் நாட்டெல்லைக்கு அப்பாலும் ஆண்டவர் மாண்புமிக்கவர்" எனச் சொல்லுவீர்கள்.

6 மகன் தந்தைக்கு மதிப்புத் தருகிறான், ஊழியன் தன் தலைவனுக்கு மதிப்புக் காட்டுகிறான். நாம் தந்தையாயின், நமக்குரிய மதிப்பு எங்கே? நாம் தலைவன் என்றால் நம்மட்டில் கொண்டிருக்க வேண்டிய அச்சம் எங்கே என்று சேனைகளின் ஆண்டவர் தம் திருப்பெயரை அவமதிக்கும் அர்ச்சகர்களாகிய உங்களைக் கேட்கிறார். நீங்களோ, 'உமது பெயரை நாங்கள் அவமதித்ததெவ்வாறு?' என்று கேட்கிறீர்கள்.

7 தீட்டுப்பட்ட காணிக்கையை நம் பீடத்தின் மேல் வைத்த போது நம் திருப்பெயரை அவமதித்தீர்கள். அப்படியிருந்தும், 'அதை நாங்கள் எவ்வகையில் தீட்டுப்படுத்தினோம்?' என்கிறீர்கள். ஆண்டவருடைய பலிமேடையை அவமதிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்களே!

8 குருடான மிருகங்களைப் பலியாகக் கொடுக்கிறீர்களே, அது தவறில்லையா? நொண்டியும் நோயுமாய்க் கிடந்தவற்றைக் கொண்டு வந்து பலியிடுகிறீர்களே, அது தவறில்லையா? அவற்றை உன் நாட்டுத் தலைவனுக்குக் கொடுத்துப் பார்; அவன் உன்மீது பூரிப்புக் கொள்வானோ? உனக்கு இன்முகம் காட்டுவானோ, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

9 'இப்பொழுதோ கடவுள் உங்கள்மேல் அருள்கூரும்படி அவர் திருமுன் இறைஞ்சி நிற்கிறீர்கள்.' இத்தகைய காணிக்கையை அவருக்குக் கொடுத்திருக்க, உங்களுள் யாருக்கேனும் அவர் இன்முகம் காட்டுவாரோ, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

10 வீணாக நம் பீடத்தின் மீது நீங்கள் தீ வளர்க்காதபடி கதவுகளை மூடி விடுபவன் உங்களுக்குள் ஒருவன் இருக்கக்கூடாதா! உங்கள் மேல் நமக்கு அன்பே இல்லை; உங்கள் கையிலிருந்து காணிக்கையெதுவும் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

11 கதிரவன் எழும் திசையிலிருந்து மறையும் திசை வரையில் மக்களினங்கள் நடுவில் நம் திருப்பெயர் பெருமைமிக்கது; எங்கெணும் நம் திருப்பெயருக்குத் தூபமும் தூய காணிக்கையும் செலுத்தப்படுகின்றன; ஏனெனில் மக்களினங்கள் நடுவில் நம் திருப்பெயர் பெருமைமிக்கது, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

12 ஆனால், ஆண்டவருடைய பலிமேடை தீட்டுப்பட்டுள்ளது என்றும், அதன்மேல் வைத்த பலியுணவு அவமதிக்கப்படலாம் என்றும் சொல்லி, நீங்கள் நமது பெயரின் பரிசுத்தத்தைக் குலைக்கிறீர்கள்.

13 'எவ்வளவு தொல்லை!' என்று சொல்லி நம்மை இழிவுபடுத்துகிறீர்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். கொள்ளையடித்ததையும் நொண்டியானதையும் நோயுற்றதையும் கொண்டுவருகிறீர்கள்; இவற்றைத்தானே நமக்குக் காணிக்கையாய்க் கொண்டுவருகிறீர்கள்! உங்கள் கையிலிருந்து நாம் அதை ஏற்றுக்கொள்ளலாமோ, என்று கேட்கிறார் ஆண்டவர்.

14 தன் மந்தையிலிருக்கும் பழுதற்ற கடாவை நேர்ந்து கொண்டு, பழுதுள்ள ஒன்றை ஆண்டவருக்குப் பலியிடுகிற வஞ்சகள் சபிக்கப்படுக! நாமே மாமன்னர், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; மக்களினங்கள் யாவும் தம் திருப்பெயருக்கு அஞ்சுகின்றன.

அதிகாரம் 02

1 இப்படியிருக்க, அர்ச்சகர்களே, நாம் உங்களுக்குத் தரும் கட்டளை இதுவே.

2 இதற்கு நீங்கள் செவிமடுக்காவிடில், நம் திருப்பெயருக்கு மகிமை தரும்படி உங்கள் உள்ளத்தில் நீங்கள் கருதாவிட்டால், உங்கள் மேல் சாபத்தை அனுப்புவோம்; உங்களுக்குரிய ஆசீர்வாதங்களைச் சபிப்போம்; உண்மையில் ஏற்கனவே அவற்றைச் சபித்தாயிற்று; ஏனெனில் உள்ளத்தில் அதைப் பதிய வைப்பார் யாருமில்லை, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

3 இதோ, உங்கள் கையை முறிப்போம், உங்கள் காணிக்கைகளாகிய கழிவுப் பொருட்களை உங்கள் முகத்திலேயே வீசியடிப்போம்; அவற்றுடன் உங்களையும் நமது திருமுன்னிருந்து தள்ளிப்போடுவோம்.

4 அப்போது, நாம் லேவியோடு செய்துகொண்ட உடன்படிக்கை நிலைத்திருக்கவே, இந்தக் கட்டளையை உங்களுக்குக் கொடுத்தோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

5 நாம் அவனோடு செய்த உடன்படிக்கை வாழ்வுக்கும் சமாதானத்திற்கும் அறிகுறியாய் நின்றது; இறையச்சத்தை அவனுக்குத் தந்தோம்; அவனும் நமக்கு அஞ்சி, நமது திருப்பெயருக்கு நடுங்கினான்.

6 உண்மைக்கேற்ற படிப்பினைகள் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டன; தீமையேதும் அவன் உதடுகளில் கண்டதில்லை. அவன் நம்மிடத்தில் சமாதானத்தோடும் நேர்மையோடும் நடந்துகொண்டான்; அக்கிரமத்திலிருந்து பலரைத் திருப்பிக்கொணர்ந்தான்.

7 அர்ச்சகரின் உதடுகள் அறிவைக் கொண்டிருக்கவேண்டும்; அவர் வாயினின்று மக்கள் படிப்பினைகளைக் கேட்கின்றனர்; ஏனெனில் சேனைகளின் ஆண்டவருடைய தூதர் அவர்.

8 ஆனால் நீங்கள் நெறிதவறினீர்கள்; உங்களுடைய போதனையால் பலரை இடறிவிழச் செய்தீர்கள்; லேவியோடு செய்த உடன்படிக்கையைக் கெடுத்துவிட்டீர்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

9 ஆதலால் எல்லா மக்கள் முன்னிலையிலும் உங்களை இழிவுக்கும் தாழ்வுக்கும் உள்ளாக்குவோம்; ஏனெனில், நம் வழிகளை நீங்கள் கடைப்பிடிக்கவுமில்லை; உங்கள் போதனைகளில் பாரபட்சமும் காட்டினீர்கள்."

10 நம் யாவருக்கும் ஒரே தந்தையன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் பிரமாணிக்கம் தவறுகிறோம், நம் தந்தையரின் உடன்படிக்கையை முறிக்கிறோம்?

11 யூதா பிரமாணிக்கம் தவறினான்; இஸ்ராயேலிலும் யெருசலேமிலும் அருவருப்பானவை நடந்தன. ஏனெனில், ஆண்டவருக்கு உகந்த பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்திவிட்டு, யூதா வேற்றுத் தெய்வத்தின் மகளை மணந்துகொண்டான்.

12 இதைச் செய்பவன் எவனாயிருந்தாலும், அவன் சந்ததி முழுவதையும் யாக்கோபின் கூடாரங்களிலிருந்தும், சேனைகளின் ஆண்டவர் முன் பலிசெலுத்தும் கூட்டத்திலிருந்தும் ஆண்டவர் தொலைத்து விடுவாராக!

13 நீங்கள் செய்யும் இன்னொன்றையும் கூறுவோம்: நீங்கள் தரும் காணிக்கையைக் கண்ணோக்குவதில்லை யென்றும், கனிவோடு ஏற்றுக்கொள்வதில்லையென்றும் சொல்லி ஆண்டவருடைய பீடத்தை நீங்கள் கண்ணீராலும், அழுகையாலும் பெருமூச்சுகளாலும் நிரப்புகிறீர்கள்.

14 காரணம் என்ன?" என நீங்கள் கேட்கிறீர்கள்; காரணம் இதுவே: உனக்கும், நீ இளமையில் மணந்த உன் மனைவிக்கும் இடையில் நிகழ்ந்த மணவுடன்படிக்கைக்கு ஆண்டவரே சாட்சி; அப்படியிருக்க, உடன்படிக்கையால் உன் துணைவியாய் ஏற்றுக்கொண்ட உன் மனைவிக்கு நீ பிரமாணிக்கம் தவறினாயே!

15 உடலும், வாழ்வின் மூச்சும் கொண்ட ஒரே உயிரையன்றோ அவர் உண்டாக்கினார்? இந்த ஓருயிரும் எதைத் தேடுகின்றது? கடவுள் அருளும் மக்கட்பேற்றையன்றோ? ஆதலால், எவனும் தான் இளமையில் மணந்த மனைவிக்குப் பிரமாணிக்கம் தவறாமல் இருக்கும்படி எச்சரிக்கையாய் இருக்கட்டும்.

16 ஏனெனில், மணமுறிவை நாம் வெறுக்கிறோம், என்கிறார் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர்; மேலாடையில் படிந்திருக்கும் அந்த நெறிகெட்ட நடத்தையைக் காட்டிக்கொள்வதையும் நாம் வெறுக்கிறோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். ஆதலால் எச்சரிக்கையாயிருங்கள்; பிரமாணிக்கம் தவறாதீர்கள்."

17 உங்களுடைய வார்த்தைகள் ஆண்டவருக்குச் சலிப்பையே தந்தன." அவருக்கு நாங்கள் எவ்வகையில் வருத்தம் தந்தோம்?" என்று நீங்கள் கேட்கிறீர்கள். "தீமை செய்கிறவர்கள் அனைவரும் ஆண்டவரின் முன்னிலையில் நல்லவர்கள், அவரும் அவர்களின் மட்டில் பூரிப்படைகிறார்" என்று சொல்லுகிறீர்களே! அல்லது, "நீதியின் கடவுள் எங்கே?" என்று கேட்கிறீர்களே!

அதிகாரம் 03

1 இதோ, நமக்கு முன்பாக நம் தூதரை அனுப்புவோம்; அவர் நமக்குமுன் வழியை ஆயத்தம் செய்வார்; நீங்கள் தேடுகின்ற ஆண்டவர் தீடீரெனத் தம் கோயிலுக்கு வருவார்; நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

2 ஆனால் அவர் வரும் நாளைத் தாங்க வல்லவன் எவன்? அவர் தோன்றும்போது அவர் முன் நிற்கக்கூடியவன் யார்? ஏனெனில் அவர் புடமிடுகிறவனின் நெருப்புப்போலும், வண்ணாரின் காரம் போலும் இருப்பார்.

3 புடமிடுபவன் போலவும் வெள்ளியைச் சுத்தம் செய்பவன் போலவும் உட்காருவார்; லேவியின் மக்களைத் தூய்மையாக்கிப் பொன், வெள்ளியைப்போலப் புடம்போடுவார்; அவர்களும் ஆண்டவருக்கு ஏற்புடைய முறையில் காணிக்கையும் செலுத்துவர்.

4 அதன்பிறகு யூதாவின் காணிக்கையும் யெருசலேமின் காணிக்கையும், பண்டை நாட்களில்- முற்காலத்தில்- இருந்தது போல் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்கும்.

5 அப்போது, மந்திர வித்தைக்காரர், விபசாரிகள், பொய்யாணையிடுபவர்கள், கூலிக்காரர்க்குக் கூலி கொடுக்காத வம்பர்கள், கைம்பெண்களையும் திக்கற்றவர்களையும் கொடுமைப்படுத்துகிறவர்கள், அந்நியரை விருந்தோம்பாமல் புறக்கணிக்கிறவர்கள், நமக்கு அஞ்சி நடக்காதவர்கள் ஆகியவர்களுக்கு எதிராக நாமே சாட்சியாய் நின்று தீர்ப்பு வழங்க விரைந்து வருவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

6 யாக்கோபின் மக்களே, ஆண்டவராகிய நாம் மாறாதவராய் இருப்பதால் தான், நீங்கள் இன்னும் அழியாமல் இருக்கிறீர்கள்.

7 உங்கள் தந்தையரின் நாள் முதலே நம் கற்பனைகளை விட்டகன்று போனீர்கள்; அவற்றைக் கடைப்பிடிக்கவுமில்லை. நம்மிடம் திரும்பி வாருங்கள், நாமும் உங்களிடம் திரும்பி வருவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர். ஆனால், 'நாங்கள் எவ்வாறு திரும்பி வருவோம்?' என்கிறீர்கள்.

8 மனிதன் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? ஆனால் நீங்கள் நம்மைக் கொள்ளையடிக்கிறீர்களே! 'எவ்வகையில் உம்மை நாங்கள் கொள்ளையடிக்கிறோம் 'என்று கேட்கிறீர்களா? நீங்கள் தரவேண்டிய பத்திலொரு பங்கிலும் காணிக்கைகளிலுந்தான்.

9 நீங்கள் அனைவரும் நம்மையே கொள்ளையடிப்பதால், நீங்கள் பெருஞ் சாபனைக்கு உள்ளானவர்கள்.

10 பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டு வந்து களஞ்சியத்தில் கொட்டுங்கள்; அப்பொழுது நம் கோயிலில் உணவு இருக்கும்; அவ்வாறு செய்த பின், வானத்தின் பலகணிகளைத் திறந்து உங்கள் மீது பொங்கி வழியும்படி ஆசீரைப் பொழிகிறோமா இல்லையா என்று சோதித்துப் பாருங்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

11 அழிவு விளைவிப்பனவற்றை உங்களை முன்னிட்டு நாம் கண்டிப்போம்; அவை உங்கள் நிலத்தின் விளைவை அழிக்கமாட்டா; உங்கள் தோட்டத்தில் உள்ள திராட்சைக் கொடிகள் கனிகொடுக்கத் தவறமாட்டா, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

12 அப்போது மக்களினங்கள் யாவும் உங்களைப் பேறுபெற்றவர்கள் என்பார்கள்; ஏனெனில் உங்கள் நாடு இனிமையின் இருப்பிடமாய் இருக்கும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

13 நம்மைப் புண்படுத்தும் சொற்களையே சொல்லி வந்திருக்கிறீர்கள், என்கிறார் ஆண்டவர். ஆயினும், 'உமக்கு எதிராய் என்ன பேசினோம்?' என்று கேட்கிறீர்கள்.

14 கடவுளுக்கு ஊழியம் செய்வது வீண்; அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்தும், சேனைகளின் ஆண்டவர் முன்னிலையில் மன உருக்கத்தோடு நடந்தும் நமக்கு என்ன பயன்?

15 ஆணவங்கொண்டவர்களே பேறுபெற்றவர்கள் என்பது தான் இனி எங்கள் கருத்து; தீமை செய்கிறவர்கள் முன்னேறுவது மட்டுமல்ல; கடவுளை அவர்கள் சோதிக்கும் போது அவர்கள் தப்பித்துக் கொள்ளுகிறார்கள் 'என்றெல்லாம் நீங்கள் சொல்லவில்லையா?"

16 அப்போது, ஆண்டவருக்கு அஞ்சி நடந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசினர்; ஆண்டவர் கவனித்துக் கேட்டார்; ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவர் பெயரைச் சிந்திக்கிறவர்களைக் குறித்துவைக்கும் நினைவுநூல் ஒன்று அவர் முன்னிலையில் எழுதப்பட்டது.

17 நாம் செயலாற்றும் அந்த நாளில் அவர்கள் நம் உரிமைமக்களாய், தனிப்பெரும் சொத்தாய் இருப்பர், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; தந்தை தமக்கு ஊழியம் செய்யும் மகனுக்கு இரக்கம் காட்டுவதுபோல நாம் அவர்களுக்கு இரக்கம் காட்டுவோம்.

18 அப்போது, மறுபடியும் நேர்மையானவனுக்கும் தீயவனுக்கும், கடவுளுக்கு ஊழியம் செய்கிறவனுக்கும், அவருக்கு ஊழியம் செய்யாதவனுக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டுணர்வீர்கள்.

அதிகாரம் 04

1 இதோ அந்த நாள் சூளைபோல் எரிந்துகொண்டு வரும்; அப்போது ஆணவங்கொண்டவர், கொடியவர் அனைவரும் அதில் போடப்பட்ட வைக்கோலாவர். அப்படி வருகின்ற அந்த நாள், அவர்களுடைய வேரோ கிளையோ இல்லாதபடி அவர்களை முற்றிலும் சுட்டெரித்துவிடும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

2 ஆனால் நமது திருப்பெயருக்கு அஞ்சி நடக்கும் உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான்; தன் இறக்கைகளில் நலத்தைத் தாங்கி வருவான். நீங்களும் தொழுவத்திலிருந்து துள்ளியோடும் கன்றைப்போலத் துள்ளியோடுவீர்கள்.

3 நாம் செயலாற்றப்போகும் அந்த நாளில், கொடியவர்களை நீங்கள் கால்களால் மிதித்துத் தள்ளுவீர்கள்; அவர்கள் உங்கள் உள்ளங்காலடிகளில் சாம்பல் போலக் கிடப்பார்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

4 ஓரேப் மலையில் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும் நம் ஊழியனாகிய மோயீசன் வாயிலாய்க் கட்டளையிட்ட திருச்சட்டத்தையும் கட்டளைகளையும் முறைமைகளையும் நினைவுகூருங்கள்

5 இதோ, பெரியதும் நடுக்கத்துக்குரியதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாசை உங்களிடம் அனுப்புவோம்.

6 நாம் வந்து உலகத்தைச் சாபனையால் தண்டிக்காதபடி, தந்தையரின் உள்ளங்களை அவர்கள் பிள்ளைகளிடமும், பிள்ளைகளின் உள்ளங்களை அவர்கள் தந்தையரிடமும் அவர் திருப்பிவிடுவார்."