சக்கரியாஸ் ஆகமம்

அதிகாரம் 01

1 தாரியுஸ் அரசனின் இரண்டாம் ஆட்சியாண்டில் எட்டாம் மாதத்தில் அத்தோ என்பவரின் மகனான பராக்கியாவின் மகன் சக்கரியாஸ் என்ற இறைவாக்கினருக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:

2 ஆண்டவர் உங்கள் தந்தையர் மேல் கடுஞ்சினம் கொண்டிருந்தார்.

3 ஆதலால் நீ இம்மக்களுக்குக் கூறு: சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நம்மிடம் திரும்பி வாருங்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; அப்போது நாமும் உங்கள்பால் திரும்புவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

4 முன்னாளில் இறைவாக்கினர்கள் உங்கள் தந்தையரை நோக்கி, 'இதோ, சேனைகளின் ஆண்டவரது வாக்கு: உங்களுடைய தீய நெறிகளையும், உங்களுடைய தீய செயல்களையும் விட்டுத் திரும்புங்கள்' என்று முழக்க மிட்டனர்; ஆயினும் அவர்கள் நமக்குச் செவிமடுக்கவுமில்லை; நம்மைப் பொருட்படுத்தவுமில்லை; அவர்களைப் போல நீங்களும் இராதீர்கள், என்கிறார் ஆண்டவர்.

5 உங்கள் தந்தையர் எங்கே? இறைவாக்கினர்களும் என்றென்றைக்கும் வாழ்வார்களோ?

6 நம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்கு நாம் கட்டளையிட்டிருந்த நம் வார்த்தைகளும் முறைமைகளும் உங்கள் தந்தையர் மட்டில் பலிக்கவில்லையா? ஆகையால் அவர்கள் மனம் வருந்தி, 'சேனைகளின் ஆண்டவர் எங்கள் நெறிகளுக்கும் செயல்களுக்கும் ஏற்ப எங்களை நடத்தத் திருவுளங் கொண்டார், அவ்வாறே எங்களை நடத்தினார்' என்று சொன்னார்கள்."

7 மன்னன் தாரியுசின் இரண்டாம் ஆட்சியாண்டில் பதினோராம் மாதத்தின்- அதாவது ஷுபாத் மாதத்தின்- இருபத்து நான்காம் நாள், அத்தோ என்பவரின் மகனான பராக்கியாவின் மகன் சக்கரியாஸ் என்கிற இறைவாக்கினருக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:

8 இதோ, சிவப்புக் குதிரை மேலேறி வந்த மனிதன் ஒருவனை இரவில் காட்சியில் கண்டேன். அவன் பள்ளத்தாக்கின் இடுக்கில் வளர்ந்திருந்த மீர்த்துச் செடிகள் நடுவில் நின்று கொண்டிருந்தான்; அவனுக்குப் பின்னால் செந்நிறத்தனவும் பொன்னிறத்தனவும் வெண்ணிறத்தனவுமான குதிரைகள் நின்று கொண்டிருந்தன.

9 அப்போது நான், 'ஐயா இவை எதைக் குறிக்கின்றன?' என்று கேட்டேன். என்னிடம் பேசிய வானதூதர், 'இவை எதைக் குறிக்கின்றன என்று உனக்குக் காட்டுவேன்' என்றார்.

10 மீர்த்துச் செடிகள் நடிவில் நின்று கொண்டிருந்த ஆள், 'இவை உலகெங்கும் சுற்றித் திரிந்து வரும்படி ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்களைக் குறிக்கின்றன' என்று சொன்னான்.

11 இவர்கள் மீர்த்துச் செடிகளின் நடுவில் நின்ற ஆண்டவருடைய தூதரிடம், 'உலகெங்கும் நாங்கள் சுற்றி வந்தோம்; இதோ உலகம் முழுவதும் அமைதியாய் இருக்கிறது' என்றார்கள்.

12 அப்போது ஆண்டவரின் தூதர், 'சேனைகளின் ஆண்டவரே, இந்த எழுபது ஆண்டுகளாய் நீர் உமது கோபத்தைக் காட்டிய யெருசலேமின் மேலும், யூதாவின் நகரங்கள் மேலும் இன்னும் எத்தனை காலத்திற்கு இரக்கம் காட்டாமல் இருப்பீர்?' என்றார்.

13 அதற்கு ஆண்டவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த தூதரிடம் இன்சொற்களையும் ஆறுதல் மொழிகளையும் கூறினார்.

14 ஆகவே, என்னிடம் பேசிய தூதர் என்னைப் பார்த்து, 'நீ உரத்த குரலில் கூவி அறிவிக்க வேண்டியது: சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: யெருசலேமின் மீதும், சீயோன் மீதும் நாம் மிகுந்த அன்பார்வம் கொண்டிருக்கிறோம்.

15 ஆனால் இன்பமாய் வாழ்கின்ற புறவினத்தார் மீது கடுஞ்சினம் கொண்டுள்ளோம்; ஏனெனில் நாம் சிறிதளவே சினமுற்றிருந்த போது, அவர்கள் வரம்பு கடந்து அழிவு செய்தனர்.

16 ஆதலால் பரிவோடு நாம் யெருசலேமுக்குத் திரும்பி வருவோம், என்கிறார் ஆண்டவர்; அங்கே நமது இல்லம் கட்டப்படும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; யெருசலேமின் மீது அளவுநூல் பிடிக்கப்படும்.

17 மறுபடியும் அறிவி: சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நம்முடைய நகரங்களில் மீண்டும் வளம் பொங்கி வழியும்; ஆண்டவர் மீண்டும் சீயோனைத் தேற்றுவார்; யெருசலேமைத் திரும்பவும் தேர்ந்துகொள்ளுவார்' என்று சொல்லச் சொன்னார்."

18 பின்பு நான் கண்களை உயர்த்திப் பார்த்த போது, இதோ, நான்கு கொம்புகள் காணப்பட்டன.

19 என்னிடம் பேசிய தூதரைப் பார்த்து, "இவை எதைக் குறிக்கின்றன?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இவை தான் யூதாவையும் இஸ்ராயேலையும் யெருசலேமையும் சிதறடித்த கொம்புகள்" என்றார்.

20 அப்போது ஆண்டவர் கொல்லர்கள் நால்வரை எனக்குக் காட்டினார்.

21 இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?" என்று நான் கேட்டேன். அவர், "எவனும் தலையெடுக்காதபடி யூதாவைச் சிதறடித்த கொம்புகள் இவையே; இவர்களோ, யூதாவின் நாட்டைச் சிதறடிக்கும்படி தங்கள் கொம்புகளை உயர்த்தி வந்த மக்களினங்களின் கொம்புகளை வெட்டி முறித்துத் திகிலுண்டாக்க வந்தவர்கள்" என்று மறுமொழி சொன்னார்.

அதிகாரம் 02

1 நான் என் கண்களை உயர்த்திப் பார்த்த போது, இதோ, அளவு நூலைக் கையில் பிடித்திருந்த ஒருவர் தென்பட்டார்.

2 எங்கே போகிறீர்?" என்று அவரைக் கேட்டேன். அதற்கு அவர், "யெருசலேமை அளந்து அதன் நீளத்தையும் அகலத்தையும் பார்க்கப் போகிறேன்" என்றார்.

3 இதோ, என்னிடம் பேசிய தூதர் கிளம்பிப் போகும் போது, வேறொரு தூதர் அவருக்கு எதிரில் வந்தார்.

4 வந்தவர் முன்னவரை நோக்கி, "விரைந்து போய் அந்த இளைஞரிடம், 'யெருசலேமில் இருக்கின்ற திரளான மனிதர்களையும் கால்நடைகளையும் முன்னிட்டு அந்நகரம் மதில் சூழா ஊர்களைப் போலவே இருக்கும்.

5 ஏனெனில் நாமே அதனைச் சுற்றி நெருப்புச் சுவராய் அமைவோம், நாமே அதனுள் மகிமையாக இருப்போம், என்கிறார் ஆண்டவர்' என்று சொல்" என்றார்.

6 எழுந்திருங்கள் எழுந்திருங்கள், வடநாட்டிலிருந்து ஓடிவிடுங்கள், என்கிறார் ஆண்டவர். ஏனெனில் வானத்தின் நாற்றிசைகளிலும் உங்களை நாம் சிதறடித்தோம், என்கிறார் ஆண்டவர்.

7 பபிலோன் மகளிடத்தில் வாழ்கின்ற சீயோனே, எழுந்து தப்பியோடு!

8 ஏனெனில் சேனைகளின் ஆண்டவர்- அவருடைய மகிமை தான் என்னை இங்கே அனுப்பிற்று- உங்களைச் சூறையாடிய மக்களினங்களைக் குறித்துச் சொல்லுகிறார்: "உங்களைத் தொடுகிறவன் நம் கண்மணியையே தொடுகிறான்;

9 இதோ, அவர்கள் மேல் நம் கையை நீட்டப்போகிறோம்; தங்களுக்குத் தொண்டு செய்தவர்களுக்கே அவர்கள் கொள்ளைப் பொருளாவார்கள். அப்போது சேனைகளின் ஆண்டவர் தாம் என்னை அனுப்பினார் என்பதை அறிந்து கொள்ளுவீர்கள்.

10 சீயோன் மகளே, அகமகிழ்ந்து அக்களி, இதோ, வருகிறோம், வந்து உன் நடுவில் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர்.

11 அந்நாளில் பலநாட்டு மக்களினங்கள் ஆண்டவரிடம் வந்து சேர்ந்து கொள்வார்கள்; அவர்கள் அவருடைய மக்களாய் இருப்பார்கள், அவர் உன் நடுவில் குடிகொண்டிருப்பார்; அப்போது சேனைகளின் ஆண்டவர் தாம் என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

12 அப்போது ஆண்டவர் யூதாவைப் பரிசுத்த நாட்டில் தம் உரிமைச் சொத்தாய் உடைமையாக்கிக் கொள்வார்; யெருசலேமை மீண்டும் தேர்ந்துகொள்வார்."

13 மனிதர்களே, நீங்களனைவரும் ஆண்டவர் முன் மௌனமாயிருங்கள்; ஏனெனில் அவர் தம் பரிசுத்த இடத்திலிருந்து எழுந்தருளினார்.

அதிகாரம் 03

1 பின்னர் அவர் தலைமைக்குருவாகிய யோசுவாவைக் காட்டினார்; இவர் ஆண்டவரின் தூதர் முன்னிலையில் நின்றிருந்தார்; இவர் மேல் குற்றஞ்சாட்ட வந்திருந்த சாத்தான் வலப்பக்கத்தில் நின்று கொண்டிருந்தான்.

2 ஆண்டவர் சாத்தானைப் பார்த்து, "சாத்தானே, ஆண்டவர் உன்னைக் கண்டிப்பாராக! யெருசலேமைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் உன்னைக் கண்டிப்பாராக! நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளியல்லவா இவர்?" என்று சொன்னார்.

3 யோசுவாவோ அழுக்குப் படிந்த ஆடைகளையுடுத்தவராய்த் தூதர் முன் நின்று கொண்டிருந்தார்.

4 தூதரோ தம் முன்னால் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, "அழுக்குப் படிந்த ஆடைகளை இவரிடமிருந்து அகற்றுங்கள்" என்றார்; பின் அவரிடம், "இதோ, உன்னிடமிருந்து உன் அக்கிரமத்தை அகற்றிவிட்டேன்; சிறந்த ஆடையை உனக்கு உடுத்தினேன்" என்றார்.

5 மேலும், "தலைப்பாகையொன்றை அவர் தலையில் சூட்டுங்கள்" என்றார். அவ்வாறே அவர்கள் அவருக்குத் தலைப்பாகை சூட்டிச் சிறந்த ஆடைகளை உடுத்தினர்; ஆண்டவரின் தூதரோ அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தார்.

6 பின்பு, ஆண்டவரின் தூதர் யோசுவாவுக்குச் செய்த அறிக்கை அதுவே:

7 சேனைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நம்முடைய நெறிகளில் வழுவாமல் ஒழுகி நம் கற்பனைகளைக் கடைப்பிடித்தால், நம் இல்லத்தில் நீ ஆளுவாய்; நம் பிராகாரங்களுக்கும் பொறுப்பாய் இருப்பாய்; இங்கே நிற்கும் தூதர்களோடு சேர்ந்து கொள்ள உனக்கு உரிமை தருவோம்.

8 தலைமைக் குருவாகிய யோசுவாவே, நீயும், உன் முன்னால் அமர்ந்திருக்கும் உன் நண்பர்களும் கேளுங்கள்; அவர்கள் நல்லடையாளமான மனிதர்கள்: இதோ, நாம் நம் ஊழியனைக் கொண்டு வருவோம்: 'தளிர்' என்பது அவர் பெயர்.

9 இதோ, யோசுவாவின் முன்பு நாம் நாட்டுகின்ற கல் இதுவே; இந்த ஒரே கல்லில் ஏழு கண்கள் ஒளிர்கின்றன; நாமே அதில் எழுத்துகளைப் பொறிப்போம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; மேலும் ஒரே நாளில் இந்த நாட்டின் அக்கிரமத்தை அகற்றுவோம்.

10 அந்நாளில், ஒவ்வொருவனும் தன் அயலானைத்தன் திராட்சைக்கொடியின் கீழும், அத்திமரத்தின் கீழும் வந்து தங்கி இளைப்பாற அழைப்பான், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."

அதிகாரம் 04

1 என்னிடம் பேசிய தூதர் மறுபடியும் வந்து உறக்கத்திலிருந்து எழுப்புவதைப்போல் என்னை எழுப்பினார்.

2 எழுப்பி, "என்ன காண்கிறாய்?" என்று என்னைக் கேட்க, நான், "இதோ, பொன் மயமான விளக்குத் தண்டு ஒன்றைக் காண்கிறேன்; அதன் உச்சியில் வட்டில் ஒன்றுள்ளது; அதன் மேல் சுற்றிலும் ஏழு அகல் விளக்குகள் இருக்கின்றன; ஒவ்வொரு விளக்குக்கும் ஏழு மூக்குகள் உள்ளன.

3 மேலும் ஒலிவமரங்கள் இரண்டு- ஒன்று தண்டுக்கு வலப்புறமும், மற்றது இடப்புறமும்- இருக்கின்றன" என்றேன்.

4 அப்போது என்னிடம் பேசிய தூதரை நோக்கி, "ஐயோ, இவை எதைக் குறிக்கின்றன?" என்று கேட்டேன்.

5 என்னிடம் பேசிய தூதர் மறுமொழியாக, "இவை எதைக் குறிக்கின்றன என்று உனக்குத் தெரியாதா?" என்றார்; நான் "தெரியாது, ஐயா" என்றேன்.

6 அப்போது அவர் என்னிடம், "சொரொபாபெலுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு இதுவே: ஆற்றலாலுமன்று, வல்லமையாலுமன்று, ஆனால் நமது ஆவியாலே ஆகும், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

7 மாபெரும் மலையே, நீ என்ன? சொரொபாபெலின்முன் சமவெளியாய் விடு; அவரே தலைக்கல்லைக் கொண்டுவருவார். அப்போது மக்கள், 'அதன் மேல் அருள் பொழிக!, அருள் பொழிக!' என்று ஆர்ப்பரிப்பார்கள் "என்றார்.

8 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

9 சொரொபாபெலின் கைகள் இந்தக் கோயிலுக்கு அடிப்படை போட்டன; அவருடைய கைகளே அவ்வேலையை முடிக்கும். அப்போது சேனைகளின் ஆண்டவர்தாம் என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை அறிந்துகொள்வீர்கள்.

10 தொடக்க வேலையின் நாளை அவமதித்தவர்கள் யார்? சொரொபாபெலின் கையில் தூக்குநூல் குண்டைக் கண்டு அகமகிழ்வார்கள். "அந்த ஏழு விளக்குகள் உலகெலாம் சுற்றிப் பார்க்கின்ற ஆண்டவரின் கண்கள்" என்றார் அந்தத் தூதர்.

11 அப்போது நான், "விளக்குத் தண்டுக்கு வலப்புறமும் இடப்புறமும் இருக்கும் ஒலிவமரங்கள் இரண்டும் எதைக் குறிக்கின்றன?" என்று கேட்டேன்;

12 தொடர்ந்து நானே, "எண்ணெய் ஊற்றுவதற்கென இருக்கும் பொற் குழாய்கள் இரண்டினருகிலும் உள்ள அந்த ஒலிவமரக் கிளைகள் இரண்டுக்கும் பொருள் என்ன?" என்றேன்.

13 அதற்கு அவர், "இவை என்னவென்று உனக்குத் தெரியாதா?" என்று கேட்க, நான், "தெரியாது, ஐயா" என்றேன்.

14 அப்போது அவர், "அனைத்துலக ஆண்டவர் திருமுன் நிற்கின்ற அபிஷுகம் செய்யப்பட்ட இருவர் இவர்கள்" என்று விடை பகர்ந்தார்.

அதிகாரம் 05

1 மீண்டும் நான் கண்களை உயர்த்திய போது, இதோ, பறக்கின்ற ஓலைச்சுருள் ஒன்றைக் கண்டேன்.

2 அந்தத் தூதர், "என்ன பார்க்கின்றாய்?" என்று என்னைக் கேட்க, நான், "பறக்கும் ஓலைச்சுருள் ஒன்றைக் காண்கிறேன்; அதன் நீளம் இருபது முழமும், அகலம் பத்து முழமும் உள்ளது" என்றேன்.

3 அதற்கு அவர் என்னிடம், "நாடெங்கும் உலவி வரும் சாபனையே இது; ஏனெனில் கள்வனெவனும் அதில் எழுதப்பட்டுள்ளபடி இங்கிருந்து விரட்டப்படுவான்; பொய்யாணை இடுகிறவனெவனும் அதில் எழுதப்பட்டுள்ளபடி இங்கிருந்து விரட்டப்படுவான்.

4 நாம் அதனை வெளியில் அனுப்புவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; அது கள்வன் வீட்டிலும், நமது திருப்பெயரால் பொய்யாணை செய்கிறவன் வீட்டிலும் நுழைந்து, அங்கே தங்கி, மரங்கள், கற்கள் இவற்றோடு அவ்வீட்டையும் அழித்து விடும்" என்றார்.

5 என்னிடம் பேசிய தூதர் வெளியே வந்து, என்னிடம், "உன் கண்களை உயர்த்திப் பார், அங்கே போவது என்ன?" என்று கேட்டார்.

6 என்ன அது?" என்று நான் திரும்பிக்கேட்டேன். அவர், "அது வெளியேறிப்போகும் மரக்கால்" என்றார். தொடர்ந்து அவரே, "அதுதான் உலகெங்கும் பரவியிருக்கும் அக்கிரமம்" என்று சொன்னார்.

7 இதோ, அதனுடைய ஈயமூடி திறக்கப்பட்டது; மரக்காலுக்குள் பெண்ணொருத்தி உட்கார்ந்திருப்பதைக் கண்டேன்!

8 அப்போது அந்தத் தூதர், "இவளே அந்த அக்கிரமம்" என்றார்; உடனே, அவளை அந்த மரக்காலுக்குள் திணித்து அதன் வாயைப் பளுவான ஈயமூடியால் அடைத்தார்.

9 இப்போது என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன்; இதோ, இரண்டு பெண்கள் வெளிப்பட்டார்கள்! நாரையின் இறக்கைகள் போல் அவர்களுக்கும் இறக்கைகள் இருந்தன; அவற்றில் காற்று நிரம்பியிருந்தது; அவர்கள் அந்த மரக்காலை விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் தூக்கிக் கொண்டு பறந்தனர்.

10 என்னிடம் பேசிய தூதரைப் பார்த்து, "மரக்காலை எங்கே தூக்கிக்கொண்டு போகிறார்கள்?" என்று கேட்டேன்.

11 அவர், "சென்னார் நாட்டுக்குக் கொண்டுபோகிறார்கள்; ஆங்கே அதற்கொரு கோயில் கட்டப்போகிறார்கள்; கட்டியானதும், மரக்காலை அதற்குரிய மேடையில் வைப்பார்கள்" என்றார்.

அதிகாரம் 06

1 மறுபடியும் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, இதோ, இரண்டு மலைகளுக்கு இடையிலிருந்து நான்கு தேர்கள் புறப்பட்டு வருவதைக் கண்டேன்; அந்த மலைகள் வெண்கல மலைகள்.

2 முதல் தேரில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் தேரில் கருப்புக் குதிரைகளும்,

3 மூன்றாம் தேரில் வெள்ளைக் குதிரைகளும், நான்காம் தேரில் பல வண்ணமுள்ள கொழுத்த குதிரைகளும் பூட்டியிருந்தன.

4 என்னிடம் பேசிய தூதரிடம், "ஐயா, இவை என்ன?" என்று கேட்டேன்.

5 அதற்கு மறுமொழியாக அந்தத் தூதர், "இவை அனைத்துலக ஆண்டவரின் திருமுன் நின்றிருந்த பின், புறப்பட்டு வானத்தின் நாற்றிசைக் காற்றுகளை நோக்கிச் செல்கின்றன.

6 கருப்புக் குதிரைகள் பூட்டிய தேர் வடநாட்டுக்குப் போகிறது; வெண்ணிறக் குதிரைகள் மேற்றிசை நாட்டுக்குப் போகின்றன; பலவண்ணக் குதிரைகளோ தென்னாட்டுக்குப் போகின்றன" என்றார்.

7 கொழுத்த குதிரைகள் வெளிப்பட்டதும், உலகெங்கும் சுற்றி வரத் துடித்தன; அப்போது அவர், "போய்ச் சுற்றி வாருங்கள்" என்றார். உடனே கிளம்பி உலகெங்கும் சுற்றித் திரிந்தன.

8 அவர் என்னைக் கூவியழைத்து, "இதோ, வடநாட்டை நோக்கிப் போகும் குதிரைகள் நமது ஆவியை வடநாட்டின் மேல் இறங்கச் செய்தன" என்று சொன்னார்.

9 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:

10 நாடுகடத்தப்பட்டுப் பபிலோனில் இருக்கிறவர்களிடமிருந்து வந்திருக்கிற ஓல்தாயி, தோபியாஸ், இதாயியா ஆகியவர்கள் கொடுப்பதைப் பெற்றுக்கொள்; அன்றைக்கே புறப்பட்டு சொப்போனியாவின் மகன் யோசியாசின் வீட்டுக்குப் போ.

11 அங்கே அவர்கள் தந்த பொன், வெள்ளியைக் கொண்டு முடிசெய்து, தலைமைக் குருவாகிய யோசதேக்கின் மகன் யோசுவாவின் தலையில் அதைச் சூட்டு; சூட்டி,

12 'சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: "இதோ, 'தளிர்' என்னும் பெயரினர்; ஏனெனில் இவர் தம் வேரிலிருந்தே தளிர்ப்பார், ஆண்டவரின் திருக்கோயிலைக் கட்டுவார்.

13 இவர் தான் ஆண்டவரின் திருக்கோயிலைக் கட்டுவார், அரச மகிமையைப் பூண்டுகொள்வார், அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்வார். அவருடைய அரியணை அருகில் அர்ச்சகர் ஒருவர் இருப்பார்; இருவர்க்கும் இடையில் நிறைவான சமாதானம் இருக்கும்" என்று சொல்.

14 அந்த மணிமுடி ஆண்டவரின் திருக்கோயிலில் ஓல்தாயி, தோபியாஸ், இதாயியா ஆகியோர்க்கும், சொப்போனியாவின் மகன் யோசியாசுக்கும் நினைவுச் சின்னமாய் இருக்கும்.

15 தொலை நாட்டிலிருப்பவர்களும் வந்து ஆண்டவரின் திருக்கோயிலைக் கட்ட உதவி செய்வார்கள்; அப்போது சேனைகளின் ஆண்டவர் தாம் உங்களிடம் என்னை அனுப்பினார் என்பதை அறிந்து கொள்வீர்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சொல்லுக்கு நீங்கள் கவனமாய்க் கீழ்ப்படிந்தால், இதெல்லாம் நிறைவேறும்."

அதிகாரம் 07

1 மன்னன் தாரியுசின் நான்காம் ஆட்சியாண்டில் கஸ்லேவ் என்னும் ஒன்பதாம் மாதத்தின் நான்காம் நாள் ஆண்டவரின் வாக்கு சக்கரியாசுக்கு அருளப்பட்டது.

2 பேத்தேல் என்னும் ஊர்மக்கள் சராசார், ரோகோமெலேக் ஆகியவர்களுடன் தங்கள் ஆட்களை, ஆண்டவரின் அருளை மன்றாடவும்,

3 சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்தில் இருக்கும் அர்ச்சகர்களையும், இன்னும் இறைவாக்கினர்களையும் கண்டு, "இத்தனை ஆண்டுகளாகச் செய்து வந்தது போல், ஐந்தாம் மாதத்தில் துக்கம் கொண்டாடி எங்களை ஒடுக்கிக் கொள்ள வேண்டுமோ?" என்று கேட்டு வரவும் அனுப்பினார்கள்.

4 அப்போது, சேனைகளின் ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:

5 இந்த நாட்டின் எல்லா மக்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் நீ கூற வேண்டியது இதுவே: இந்த எழுபது ஆண்டுகளாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் நோன்பிருந்து நீங்கள் துக்கம் கொண்டாடினீர்களே, எமக்காகவா நோன்பிருந்தீர்கள்?

6 நீங்கள் உண்ணும் போதும், குடிக்கும் போதும் உங்களுக்காகத் தானே உண்ணுகிறீர்கள், குடிக்கிறீர்கள்?

7 யெருசலேமில் மக்கள் குடியேறிய பின் வளம் பெருகிய போது, அதனைச் சூழ்ந்திருந்த நகரங்கள், தென்னாடு, பள்ளச் சமவெளி நிலம் ஆகியவற்றில் மக்கள் குடியேறிய போதும், ஆண்டவர் முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாக முழங்கிய சொற்களும் இவையே அல்லவா?"

8 ஆண்டவரின் வாக்கு தொடர்ந்து சக்கரியாசுக்கு அருளப்பட்டது:

9 சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையான தீர்ப்புக் கூறுங்கள்; ஒவ்வொருவனும் தன் சகோதரனுக்கு இரக்கமும் அன்பும் காட்டுவானாக!

10 கைம்பெண்ணையோ அனாதைப் பிள்ளையையோ அந்நியனையோ ஏழையையோ துன்புறுத்தவேண்டா; உங்களுள் எவனும் தன் உள்ளத்தில் தன் சகோதரனுக்குத் தீமை செய்யக் கருதக்கூடாது."

11 ஆயினும் அவர்கள் செவிமடுக்க மறுத்தார்கள், புறங்காட்டிப் பின்வாங்கினார்கள், கேட்காதிருக்கும் பொருட்டுத் தங்கள் காதுகளைச் செவிடாக்கிக் கொண்டார்கள்.

12 சேனைகளின் ஆண்டவர் தம் ஆவியால் ஏவி முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாய்த் தந்த திருச்சட்டத்தையும் வார்த்தைகளையும் கேட்டு விடாதபடி தங்கள் உள்ளத்தை வைரம் போலக் கடினமாக்கிக் கொண்டார்கள். ஆதலால் சேனைகளின் ஆண்டவர் கடுஞ்சினம் கொண்டார்.

13 நாம் கூப்பிட்ட பொழுது அவர்கள் கேட்காமல் இருந்தது போலவே, அவர்கள் கூப்பிட்ட பொழுது நாம் கேட்கவில்லை" என்கிறார் சேனைகளின் ஆண்டவர்;

14 ஆகவே, அவர்கள் முன்பின் அறியாத எல்லா மக்களினங்களின் நடுவில் சிதறச்செய்தோம்; இவ்வாறு, அவர்கள் விட்டுச் சென்ற நாடு பாழாயிற்று; அந்நாட்டில் போவான் வருவான் எவனுமே இல்லை; இன்ப நாட்டைப் பாழாக்கி விட்டார்கள்."

அதிகாரம் 08

1 சேனைகளின் ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:

2 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: சீயோன்மீது நாம் அளவில்லா அன்பார்வம் கொண்டுள்ளோம், அவளைக் காப்பதற்காக அடங்காத ஆத்திரத்தோடு ஆர்வம் கொண்டுள்ளோம்.

3 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: சீயோனுக்கு நாம் திரும்பி வரப்போகிறோம், யெருசலேமின் நடுவில் குடிகொள்ளுவோம்; யெருசலேம் நகரம் பிரமாணிக்கமுள்ள நகரமென்றும், சேனைகளின் ஆண்டவருடைய மலை பரிசுத்த மலையென்றும் பெயர் பெற்று விளங்கும்.

4 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: யெருசலேமின் பொதுவிடங்களில் மறுபடியும் கிழவர்களும் கிழவிகளும் அமர்ந்திருப்பார்கள்; வயதில் முதிர்ந்தவர்களானதினால் ஒவ்வொருவரும் கையில் கோல் வைத்திருப்பர்.

5 நகரத்தின் தெருக்களில் சிறுவர்களும் சிறுமிகளும் நிறைந்து தெருக்களிலே விளையாடுவார்கள்.

6 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இம்மக்களுள் எஞ்சியிருப்போர்க்கு அந்நாட்களில் இதெல்லாம் பெரும் புதுமையாய்த் தோன்றுமாயின், நமக்கும் அது புதுமையாகத் தோன்றுமோ, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

7 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் நம்முடைய மக்களை நாம் மீட்டு வருவோம்;

8 அவர்களைக் கூட்டி வருவோம், அவர்களும் யெருசலேமின் நடுவில் குடியிருப்பர்; அவர்கள் நம் மக்களாய் இருப்பார்கள், நாம் அவர்களுக்குக் கடவுளாயிருப்போம்; எங்களுக்கிடையில் பிரமாணிக்கமும் நீதியும் நிலவும்."

9 இன்னும் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "திருக்கோயிலை மீண்டும் கட்டும்படி சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்திற்கு அடிப்படையிட்ட நாளிலிருந்து இறைவாக்கினர்களின் வாய்மொழிகளை இந்நாட்களில் கேட்டு வருகின்ற மக்களே, உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.

10 ஏனெனில் இந்நாள் வரையில் மனிதனுக்கோ மிருகத்துக்கோ கூலி கொடுக்கப்பட்டதில்லை; போவார் வருவாருக்குப் பகைவர் தந்த தொல்லையிலிருந்து பாதுகாப்பும் இல்லை; ஏனெனில் ஒருவனுக்கு எதிராக இன்னொருவன் எழும்படி விட்டுவிட்டோம்.

11 ஆனால் இப்பொழுது இம்மக்களுள் எஞ்சியிருப்பவர்களை முன்னாட்களில் நடத்தியது போல நாம் நடத்த மாட்டோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

12 ஏனெனில் சமாதானம் விதைக்கப்படும், திராட்சைக்கொடி தன் கனியைக் கொடுக்கும், நிலம் தன் பலனைத் தரும், வானம் பனியைப் பொழியும்; இவற்றையெல்லாம் இம்மக்களுள் எஞ்சியிருப்போர் உரிமையாக்கிக் கொள்ளும்படி செய்வோம்.

13 யூதா வீடே, இஸ்ராயேல் வீடே, புறவினத்தார் நடுவில் உங்கள் பெயர் சாபனைச் சொல்லாய் இருந்தது; ஆனால் நாம் உங்களை மீட்டபின் உங்கள் பெயர் ஆசிமொழியாய் இருக்கும்; ஆதலால் அஞ்சவேண்டா; உங்கள் கைகள் வலிமை பெறட்டும்."

14 ஏனெனில் சேனைகளின் ஆண்டவர் கூறும் வாக்கு இதுவே: "உங்கள் தந்தையர்கள் நமக்குச் சினமூட்டிய போது, நாம் இரக்கம் காட்டாமல் உங்களக்குக் தீங்கு செய்யத் தீர்மானித்தோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்;

15 அவ்வாறே மீண்டும் இந்நாட்களில் யெருசலேமுக்கும் யூதாவின் வீட்டுக்கும் நன்மை செய்யத் தீர்மானித்திருக்கிறோம்; ஆகையால் அஞ்சவேண்டா.

16 நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை இவையே: ஒருவரிடம் ஒருவர் உண்மையே பேசுங்கள்; உங்கள் ஊர்ச் சபையில் நீங்கள் தரும் தீர்ப்பு உண்மையானதும், சமாதானத்திற்கு வழி கோலுவதுமாய் இருக்கட்டும்;

17 ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய உங்கள் உள்ளத்தில் திட்டம் போடாதீர்கள், பொய்யாணை செய்ய விரும்பாதீர்கள்; ஏனெனில் இவற்றையெல்லாம் நாம் வெறுக்கிறோம், என்கிறார் ஆண்டவர்."

18 சேனைகளின் ஆண்டவருடைய வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:

19 சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான்காம் மாதத்தின் உண்ணா நோன்பும், ஐந்தாம் மாதத்தின் உண்ணா நோன்பும், ஏழாம் மாதத்தின் உண்ணா நோன்பும், பத்தாம் மாதத்தின் உண்ணா நோன்பும் யூதாவின் வீட்டாருக்கு மகிழ்ச்சியும் அக்களிப்பும் கொண்டாட்டங்களும் நிறைந்த காலங்களாய் மாறிவிடும்; ஆனால் உண்மையையும் சமாதானத்தையும் விரும்பிக் கடைப்பிடியுங்கள்.

20 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: மக்களினங்களும், பல நகரங்களின் மாந்தரும் இன்னும் வருவார்கள்;

21 ஒரு நகரத்தின் மக்கள் இன்னொரு நகரத்தாரிடம் போய், 'ஆண்டவருடைய அருளை மன்றாடவும், சேனைகளின் ஆண்டவரைத் தேடவும் உடனே புறப்பட்டுப்போவோம், வாருங்கள்; நாங்களும் வருகிறோம்' என்று சொல்லுவார்கள்.

22 பல்வேறு நாட்டினரும் வலிமை வாய்ந்த மக்களினங்களும் சேனைகளின் ஆண்டவரைத் தேடவும், ஆண்டவருடைய அருளை மன்றாடிக் கேட்கவும் யெருசலேமுக்கு வருவார்கள்.

23 சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாட்களில் ஒவ்வொரு மொழி பேசும் இனத்தாரிலிருந்து பத்துப் பேர் சேர்ந்து ஒரு யூதனுடைய மேலாடையைப் பிடித்துக் கொண்டு, நாங்களும் உன்னோடு வருகிறோம்; ஏனெனில் கடவுள் உங்களோடிருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்' என்பார்கள்."

அதிகாரம் 09

1 ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு ஆதிராக் நாட்டில் இருக்கிறது, தமஸ்கு நகரத்தில் தங்கியிருக்கிறது; ஏனெனில், இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களைப் போலவே, ஆராம் நாட்டு நகரங்களும் ஆண்டவருக்கே சொந்தம்.

2 அதற்கு எல்லையாய் அமைந்திருக்கும் ஏமாத்தும், ஞானத்தில் சிறந்திருக்கும் தீரும் சீதோனும் சொந்தமே.

3 தீர் தன்னைச் சுற்றி அரண் அமைத்துக் கொண்டது; தூசியைப்போல வெள்ளியும், தெருக்களின் சேற்றைப் போல பொன்னையும் சேர்த்து வைத்தது.

4 ஆனால் இதோ, ஆண்டவர் அந்நகரைப் பிடித்துக்கொள்வார், அதன் செல்வப் பெருக்கைக் கடலில் தள்ளுவார். அந்நகரமும் நெருப்புக்கு இரையாகும்.

5 அஸ்காலோன் அதைக் கண்டு அஞ்சி நடுங்கும், காசாவும் கண்டு மனவேதனையால் துடிக்கும், அக்காரோன் தன் நம்பிக்கை குலைந்ததால் துயரடையும், காசாவில் அரசன் இல்லாமல் அழிந்துபோவான்; அஸ்காலோன் குடிகளற்றுக்கிடக்கும்.

6 அசோத்தில் கலப்பினத்து மக்கள் குடியிருப்பார்கள், பிலிஸ்தியரின் செருக்கை நாம் அழித்தொழிப்போம்.

7 இரத்தம் வடியும் இறைச்சியை அதன் வாயினின்றும், அருவருப்பான உணவை அதன் பற்களிடையிலிருந்தும் அகற்றுவோம். அவ்வினத்தாரும் நம் கடவுளுக்குரிய எஞ்சினோராய் இருப்பர், யூதாவில் ஒரு கோத்திரம் போல் இருப்பர்; அக்காரோன் ஊரார் எபுசேயரைப் போல் இருப்பர்.

8 அங்குமிங்கும் திரிகிறவர்களுக்கு எதிராக நாமே நம் இல்லத்தினருகில் காவல் வீரனைப் போலப் பாளையமிறங்கித் தங்குவோம். கொடுமை செய்பவன் எவனும் அதன்மேல் வாரான்; ஏனெனில் அதன் நிலைமையை நாமே கண்ணால் கண்டோம்.

9 சீயோன் மகளே, மிகுந்த மகிழ்ச்சியால் அக்களி, யெருசலேம் மகளே, ஆர்ப்பரி; இதோ, உன் அரசர் உன்னிடம் வருகிறார், நீதியும் வெற்றியும் பெற்றுக்கொண்ட அந்த வீரர் எளியவர்; கழுதையின் மேலும், பொதிமிருகக் குட்டியின் மேலும் அமர்ந்து வருகிறார்.

10 எப்பிராயீமிடமிருந்து, தேர்ப்படையையும், யெருசலேமிலிருந்து குதிரைப்படையையும் அழிப்போம்; போர்க்கருவியான வில் முறிக்கப்படும்; புறவினத்தார்க்குச் சமாதானத்தை அறிவிப்பார்; அவருடைய ஆட்சி ஒரு கடல் முதல் மறுகடல் வரையும், பேராறு முதல் மாநிலத்தின் எல்லைகள் வரையும் செல்லும்.

11 உன்னோடு நாம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு நீரற்ற பாதாளத்திலிருந்து சிறைப் பட்டவர்களை விடுவிக்கிறோம்.

12 நம்பிக்கையுள்ள கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்; இரு மடங்கு நன்மைகள் தருவோமென இன்று நாம் உங்களுக்கு அறிவிக்கிறோம்.

13 யூதா என்னும் வில்லை நாணேற்றினோம், எப்பிராயீமை அதிலே அம்பாய் வைத்தோம்; கிரிஸ் நாடே, உன்னுடைய மக்கள் மீது சீயோனே, உன் மக்களை ஏவிவிட்டு, உன்னை வல்லவனின் வாளாக்குவோம்.

14 அப்போது ஆண்டவர் அவர்கள் மீது தோன்றுவார், அவரது அம்பு மின்னலைப் போலப் பாய்ந்து செல்லும்; இறைவனாகிய ஆண்டவர் எக்காளவொலி எழுப்புவார், தென்றிசைச் சூறாவளி நடுவில் நடந்து போவார்.

15 சேனைகளின் ஆண்டவர் அவர்களைப் பாதுகாப்பார்; கவண் வீரர்களை அவர்கள் விழுங்குவர், மிதித்துத் துவைப்பர்; இரசத்தைப் போல் இரத்தம் குடித்துப் போதை கொள்வர்; கிண்ணம் போல நிரம்பியும், பீடத்தின் கொம்புகள் போல நனைந்தும் இருப்பர்.

16 அந்நாளில் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் அவர்களை மீட்பார்; ஏனெனில் அவர்களும் அவர் தம் மக்களின் மந்தையே; மணிமுடியில் பதித்த விலையுயர்ந்த கற்களைப் போல் அவரது நாட்டில் அவர்கள் ஒளிர்வார்கள்.

17 ஆம், அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி! எவ்வளவு அழகு! தானியம் இளங்காளையரைத் தழைக்கச் செய்யும், புதுத் திராட்சை இரசம் கன்னிப் பெண்களைச் செழிக்கச் செய்யும்.

அதிகாரம் 10

1 இளவேனிற் காலத்தில் ஆண்டவரிடமிருந்து மழை கேளுங்கள்; ஆண்டவர் தாம் மின்னல்களை உண்டாக்குகிறவர்; மனிதர்களுக்கு மழையைத் தருகிறவர் அவரே, பயிர் பச்சைகளை முளைப்பிப்பவரும் அவரே.

2 குலதெய்வங்கள் சொல்வது வீண், குறிசொல்பவர்கள் பொய்களையே பார்த்துச் சொல்லுகிறார்கள்; கனவு காண்கிறவர்கள் ஏமாற்றுக் கனவுகளையே காண்கின்றனர், அவர்களுடைய ஆறுதல் மொழிகள் வெறும் சொற்கள் தான். ஆதலால் மக்கள் ஆடுகளைப் போல் அலைகின்றனர், ஆயனில்லாததால் துன்புறுகின்றனர்.

3 ஆயர்கள் மேல் நாம் சினங்கொண்டோம், வெள்ளாட்டுக் கடாக்களைத் தண்டிப்போம்; சேனைகளின் ஆண்டவர் தம் மந்தையாகிய யூதாவின் வீட்டாரைக் கண்காணிக்கிறார்; வீரமிகும் போர்க் குதிரைகளைப் போல் அவற்றை ஆக்குவார்.

4 யூதாவினின்றே மூலைக்கல் தோன்றும், அதினின்றே கூடாரத்தைத் தாங்கும் முளையும், போர்க்களத்தில் பயன்படும் வில்லும், ஆளுநர் அனைவரும் கிளம்புவார்கள்.

5 தெருவில் சேற்றை மிதிப்பது போலப் பகைவரை மிதிக்கும் மாபெரும் வீரர்களாய்ப் போர்க்களத்தில் விளங்குவர்; ஆண்டவர் அவர்களோடிருப்பதால் வீரத்தோடு போர்புரிவர்; குதிரை மேல் வரும் மாற்றாரை நாணச்செய்வர்.

6 யூதாவின் வீட்டாரை வலிமைப்படுத்துவோம், யூதாவின் வீட்டாரை மீட்டுக்கொள்வோம்; அவர்கள் மட்டில் நாம் இரக்கம் கொண்டுள்ளதால் அவர்கள் திரும்பி வருவார்கள்; ஒருபோதும் நம்மால் புறக்கணிக்கப் படாதவர்கள் போலிருப்பர்; ஏனெனில் நாமே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்; ஆகவே அவர்களின் மன்றாட்டைக் கேட்டருள்வோம்.

7 அப்போது எப்பிராயீம் மக்கள் வீரரைப் போலாவர், மதுவருந்தியவர்கள் போல் அவர்கள் உள்ளம் மகிழும்; அவர்களுடைய பிள்ளைகள் கண்டு களிப்பார்கள், ஆண்டவரில் அவர்கள் உள்ளம் அக்களிக்கும்.

8 சீழ்க்கையடித்து நாம் அவர்களை ஒன்று கூட்டுவோம், ஏனெனில் அவர்களை மீட்டவர் நாமே; முன் போலவே அவர்கள் பெருகிப் பலுகுவார்கள்.

9 புறவினத்தார் நடுவில் அவர்களை நாம் சிதறடித்தாலும், தொலைநாடுகளில் நம்மை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்; தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள்.

10 எகிப்து நாட்டிலிருந்து அவர்களை மீட்டுக் கொணர்வோம், அசீரியாவிலிருந்து அவர்களைக் கூட்டி வருவோம்; கலகாத், லீபான் நாடுகளுக்கு அவர்களைக் கொண்டு வருவோம், இனி இடமில்லை என்னும்படி வந்து சேருவார்கள்.

11 எகிப்து நாட்டின் கடலை அவர்கள் கடந்து செல்வார்கள், கடலலைகள் அடித்து நொறுக்கப்படும், நைல் நதியின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் செருக்கு தாழ்த்தப்படும், எகிப்து நாட்டின் கொடுங்கோல் பறிக்கப்படும்.

12 ஆண்டவரில் தான் அவர்கள் வல்லமை இருக்கும், அவருடைய பெயரில் அவர்கள் பெருமை கொள்வர்" என்கிறார் ஆண்டவர்.

அதிகாரம் 11

1 லீபானே, உன் வாயில்களைத் திற, நெருப்பு உன் கேதுரு மரங்களை எரிக்கட்டும்.

2 தேவதாரு மரங்களே, புலம்பியழுங்கள்; ஏனெனில் கேதுரு மரங்கள் வீழ்ந்தன, சிறந்த மரங்கள் பாழாயின. பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே, புலம்பியழுங்கள்; ஏனெனில் அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.

3 ஆயர்களின் புலம்பல் கேட்கிறது, ஏனெனில் அவர்கள் பெருமை பாழாகிவிட்டது; சிங்கங்களின் கர்ச்சனை கேட்கிறது, ஏனெனில் யோர்தான் காடு அழிக்கப்பட்டது.

4 என் கடவுளாகிய ஆண்டவர் கூறிய வாக்கு இதுவே: "அடிக்கப்படப்போகும் ஆடுகளை மேய்;

5 அவற்றை வாங்குகிறவர்கள் அவற்றைக் கொல்லுகிறார்கள்; ஆயினும் அவர்களுக்குத் தண்டனை கிடைப்பதில்லை; அவற்றை விற்கிறவர்களோ, 'ஆண்டவர்க்குப் புகழ் உண்டாவதாக! எங்களுக்குச் செல்வம் சேர்ந்தது' என்று சொல்லுகிறார்கள்; அவற்றின் சொந்த இடையர்களே அவற்றின் மீது இரக்கம் காட்டுகிறதில்லை.

6 இனி, இந்த நாட்டில் வாழ்கிறவர்கள் மேல் நாம் இரக்கம் காட்டமாட்டோம், என்கிறார் ஆண்டவர். இதோ, ஒவ்வொருவனையும் அவன் அயலானுடைய கையிலும், அரசனுடைய கையிலும் சிக்கும்படி, மனிதர்களை நாம் கையளிக்கப்போகிறோம்; அவர்கள் நாட்டைப் பாழ்படுத்துவார்கள்; அவர்கள் கையிலிருந்து யாரையும் நாம் தப்புவிக்கமாட்டோம்."

7 அவ்வாறே கொல்லப்படப்போகிற ஆடுகளை நான் ஆட்டு வணிகருக்காக மேய்க்கும் ஆயனானேன். நான் இரண்டு கோல்களை எடுத்து, 'பரிவு' என்று ஒன்றுக்கும், 'ஒன்றிப்பு' என்று மற்றதற்கும் பெயரிட்டேன்; ஆடுகளை மேய்த்து வந்தேன்.

8 ஒரே மாதத்தில் நான் மூன்று இடையர்களை அகற்றினேன்; அவர்களை என்னால் பொறுக்க முடியவில்லை; அவர்களும் என்னை வெறுத்தார்கள்.

9 ஆகையால், "உங்களை இனி நான் மேய்க்கப் போவதில்லை; சாகிறது சாகட்டும், அழிக்கப்படுவது அழிக்கப்படட்டும்; எஞ்சியிருப்பவை ஒன்றன் சதையை மற்றொன்று பிடுங்கித் தின்னட்டும்" என்று சொல்லி,

10 'பரிவு' என்கிற என் கோலையெடுத்து, மக்களினங்கள் யாவற்றுடனும் நான் செய்திருந்த உடன்படிக்கை முறியும்படி கோலை ஒடித்துப் போட்டேன்.

11 அன்றே உடன்படிக்கை முறிந்தது; என்னைக் கவனித்துக் கொண்டிருந்த ஆட்டு வணிகர், இது ஆண்டவரின் வாக்கு என்பதை உணர்ந்து கொண்டார்கள்.

12 அப்போது நான் அவர்களைப் பார்த்து, "உங்களுக்குச் சரியென்றுபட்டால், எனக்குக் கூலி கொடுங்கள்; இல்லையேல், வேண்டாம்" என்று சொன்னேன். அப்போது அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிப் பணங்களை நிறுத்தனர்.

13 ஆண்டவர் என்னைப் பார்த்து, "சிறந்த மதிப்பாக உன்னை மதிப்பிட்டு அவர்கள் கொடுத்த இப்பணத்தைக் கருவூலத்தில் எறிந்து விடு" என்றார். அவ்வாறே அந்த முப்பது வெள்ளிப் பணங்களை ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் போட்டு விட்டேன்.

14 யூதாவுக்கும் இஸ்ராயேலுக்கும் இருந்த சகோதர ஒருமைப்பாடு முறியும்படி, 'ஒன்றிப்பு' என்னும் என் இரண்டாம் கோலையும் ஒடித்துப் போட்டேன்.

15 பின்பு ஆண்டவர் எனக்குக் கூறிய வாக்கு இதுவே: "இன்னொரு முறை மதியற்ற இடையனுக்குரிய கருவிகளை எடுத்துக் கொள்.

16 ஏனெனில் இதோ, அழிந்து போவதைக் காப்பாற்றாதவனும், காணாமற் போனதைக் தேடாதவனும், காயம் பட்டதைக் குணமாக்காதவனும், நலமுடனிருப்பதை உண்பிக்காதவனும், ஆனால் கொழுத்தவற்றின் இறைச்சியைத் தின்பவனும், அவற்றின் குளம்புகளைக் கூடத் தறிப்பவனாகிய ஓர் இடையனை இந்த நாட்டில் தோன்றச் செய்வோம்.

17 மந்தையைக் கைவிடுகிற பயனற்ற இடையனுக்கு ஐயோ கேடு! அவன் கையையும் வலக்கண்ணையும் வாள் வெட்டுவதாக! அவனுடைய கை முற்றும் உலர்ந்து போகட்டும், அவனது வலக்கண் இருண்டு குருடாகட்டும்! "

அதிகாரம் 12

1 ஓர் இறைவாக்கு. இஸ்ராயேலைக் குறித்து அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: விண்ணை விரித்தவரும், மண்ணுலகை நாட்டியவரும், மனிதனின் ஆவியை அவனுக்குள் கொடுத்தவருமான ஆண்டவர் கூறுவது இதுவே:

2 இதோ, சுற்றியுள்ள மக்களினங்களுக்கெல்லாம் போதையேற்றும் மதுக்கிண்ணமாக நாம் யெருசலேமைச் செய்யப்போகிறோம்; யெருசலேமுக்கு எதிராக முற்றுகையிடப்படும் போது அக்கிண்ணம் யூதாவுக்குக் கொடுக்கப்படும்.

3 அந்நாளில் மக்களினங்களுக்கெல்லாம் யெருசலேமை ஒரு பளுவான கல்லாக்குவோம்; அதைத் தூக்குகிறவர் யாவரும் காயமடைவர், உலகத்தின் மக்களினங்கள் அனைத்தும் அதற்கெதிராய்த் திரண்டு வருவர்.

4 அந்நாளில், குதிரைகளுக்கெல்லாம் திகிலையும், அவற்றின் மேல் வரும் வீரர்களுக்குப் பைத்தியத்தையும் உண்டாக்குவோம். மக்களினங்களின் குதிரை ஒவ்வொன்றையும் குருடாக்குவோம்; ஆனால், யூதாவின் வீட்டாரைக் கண்ணோக்குவோம், என்கிறார் ஆண்டவர்.

5 அப்போது யூதாவின் குலங்கள் தங்களுக்குள், 'யெருசலேம் மக்களின் வலிமை அவர்களுடைய கடவுளாகிய சேனைகளின் ஆண்டவரில் தான் இருக்கிறது' என்று சொல்லிக் கொள்வார்கள்.

6 அந்நாளில் யூதாவின் குலங்களை விறகுகள் நடுவில் வைத்த தீயைப் போலவும், வைக்கோல் கட்டுகளுக்குள் இட்ட கொள்ளியைப் போலவும் ஆக்குவோம்; சூழ்ந்துள்ள மக்களினங்கள் யாவற்றையும் அவர்கள் வலப்பக்கமும் இடப்பக்கமும் விழுங்குவார்கள்; யெருசலேம் மக்களோ முன்னிருந்த இடத்திலேயே- யெருசலேமிலேயே குடியிருப்பார்கள்.

7 தாவீதின் வீட்டாருடைய பெருமையும், யெருசலேம் மக்களுடைய பெருமையும் யூதாவின் பெருமையை விட மிகுந்து விடாமலிருக்க, ஆண்டவர் முதலில் யூதாவின் கூடாரங்களுக்கே வெற்றி தருவார்.

8 அந்நாளில், யெருசலேமில் வாழும் மக்களை ஆண்டவர் பாதுகாப்பார்; அப்போது அவர்களுள் நிற்க வலுவில்லாதவன் கூடத் தாவீதைப் போல் இருப்பான்; தாவீதின் வீட்டார் கடவுளைப் போலும், அவர்கள் முன் செல்லும் ஆண்டவரின் தூதரைப் போலும் இருப்பார்கள்.

9 அந்நாளில் யெருசலேமுக்கு எதிராக வரும் மக்களினங்கள் அனைத்தையும் அழிக்க வழி செய்வோம்.

10 ஆனால் நாம் தாவீதின் வீட்டார் மேலும், யெருசலேம் மக்கள் மேலும் இரக்க உள்ளத்தையும், மன்றாடும் மனநிலையையும் பொழிவோம்; அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனை நோக்குவர்; நோக்கி, ஒருவன் தன் ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து விட்டுப் புலம்புவது போலும், இறந்து போன தன் தலைப் பேற்றுக்காக ஒருவன் கதறியழுவது போலும் அவனுக்காக அழுவார்கள்.

11 அந்நாளில் யெருசலேமில் எழும்பும் புலம்பல் மெகித்தோ சமவெளியில் ஆதாதிரம்மோன் பட்டணத்தில் எழுந்த புலம்பலை போலப் பெரிதாயிருக்கும்.

12 குடும்பம் குடும்பமாய் நாடெங்கும் அழுது புலம்புவர்; தாவீதின் வீட்டாரின் குடும்பங்கள் ஒருபுறமும், அவர்களுடைய பெண்கள் மறுபுறமும்,

13 நாத்தான் வீட்டாரின் குடும்பங்கள் ஒருபுறமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு புறமும், லேவி வீட்டாரின் குடும்பங்கள் ஒருபுறமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு புறமும், செமேயி கோத்திரங்கள் ஒருபக்கமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு பக்கமுமாய்ப் புலம்புவார்கள்;

14 மற்றுமுள்ள கோத்திரங்களின் எல்லாக் குடும்பங்களும் அவற்றிலுள்ள பெண்களும் தனித்தனியே புலம்பியழுவார்கள்.

அதிகாரம் 13

1 அந்நாளில், பாவத்தையும் கறையையும் போக்கித் தூய்மையாக்கும் ஊற்றொன்று தாவீதின் வீட்டாருக்கெனவும், யெருசலேம் மக்களுக்கெனவும் புறப்படும்.

2 அந்நாளில், சிலைகளின் பெயர்களை நாட்டிலிருந்து அழித்து அப்புறப்படுத்துவோம்; அதன் பின் அவற்றை யாரும் நினைக்கமாட்டார்கள்; மேலும் போலித் தீர்க்கதரிசிகளையும் அசுத்த ஆவியையும் நாட்டிலிருந்து ஓட்டிவிடுவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

3 எவனாவது மறுபடி தீர்க்கதரிசியாகத் தோன்றுவானாகில், அவனைப் பெற்றெடுத்த தாய் தந்தையர், 'நீ ஆண்டவர் பெயரால் பொய்கள் பேசுகிறபடியால், நீ உயிர் வாழ்தல் கூடாது' என்று அவனிடம் சொல்லுவார்கள்; அவன் தீர்க்கதரிசனம் சொல்லும் போதே அவனைப் பெற்றெடுத்த தாய் தந்தையர் அவனைக் குத்திக் கொன்று போடுவார்கள்.

4 அந்நாளில் தீர்க்கதரிசிகளுள் ஒவ்வொருவனும் தீர்க்கதரிசனம் சொல்லும் போது தான் சொல்லும் காட்சியைக் குறித்துத் தானே வெட்கப்படுவான்; பொய் சொல்வதற்காக மயிராலான மேலாடையைப் போர்த்துக் கொண்டு வரமாட்டான்;

5 ஆனால், 'நான் ஒரு தீர்க்கதரிசி அல்லேன்; நிலத்தை உழுகிற உழவன் தான்; என் இளமை முதலே நான் நிலத்தை உழுது பயிர்செய்து வாழ்ந்து வருகிறேன்' என்று சொல்லுவான்.

6 உன் உடலில் இந்தக் காயங்கள் உண்டானதெப்படி?' என்று அவனைக் கேட்டால்,' என் நண்பர்களின் வீட்டில் நான் பட்ட காயங்கள் இவை' என்று அவன் சொல்வான்."

7 வாளே, எழுந்திரு; என் மேய்ப்பனுக்கும், என் நெருங்கிய நண்பனுக்கும் எதிராக நீ கிளம்பி வா, என்கிறார் சேனைகளின் ஆண்டவர். மேய்ப்பனை வெட்டுவோம், ஆடுகள் சிதறிப்போம், நம் கையைச் சிறியவை மேல் திருப்புவோம்.

8 நாடெங்கும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெட்டுண்டு மாண்டு போவார்கள், மூன்றில் ஒரு பங்கு மக்களே எஞ்சியிருப்பார்கள், என்கிறார் ஆண்டவர்.

9 இந்த மூன்றிலொரு பங்கையும் நெருப்பிலிட்டு வெள்ளியைச் சுத்தம் செய்வது போலச் சுத்தம் செய்வோம், பொன்னைப் புடமிடுவது போல் அவர்களைப் புடமிடுவோம்; அவர்கள் நம் பெயரைக் கூவியழைப்பார்கள், நாமும் அவர்களுக்குச் செவிசாய்ப்போம்; 'இவர்கள் எம் மக்கள்' என்போம் நாம், 'ஆண்டவர் எங்கள் கடவுள்' என்பார்கள் அவர்கள்."

அதிகாரம் 14

1 இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது; அப்போது, உன்னிடமிருந்து பறிக்கப்பட்ட கொள்ளைப் பொருட்கள் உன் நடுவிலேயே பங்கிடப்படும்.

2 யெருசலேமுக்கு எதிராகப் போர் புரியும்படி மக்களினங்கள் அனைத்தையும் நாம் ஒன்று கூட்டப் போகிறோம்; நகரம் பிடிபடும்; வீடுகள் கொள்ளையிடப்படும்; பெண்கள் பங்கப்படுத்தப்படுவர்; நகர மாந்தருள் பாதிப்பேர் அடிமைகளாய் நாடு கடத்தப்படுவர்; ஆனால் எஞ்சியிருக்கும் மக்கள் நகரை விட்டு போகமாட்டார்கள்.

3 பின்பு ஆண்டவர் வெளியே கிளம்பி வந்து போர்க் காலத்தில் போரிடுவது போல் அந்த மக்களினங்களுக்கு எதிராகப் போர்புரிவார்.

4 அந்நாளில் அவர் கால்கள் யெருசலேமுக்கு முன்னால் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் ஒலிவ மரங்களடர்ந்த மலையின் மேல் நிலைகொள்ளும்; ஒலிவ மலையானது கிழக்கு மேற்காக மிக விரிந்த பள்ளத்தாக்கினால் பிளவுபடும்; அம்மலையின் ஒரு பகுதி வடக்கிலும், மற்றப்பகுதி தெற்கிலுமாகப் பிரிந்து விலகும்.

5 அந்த மலைகளின் பள்ளத்தாக்கு ஓடுவீர்கள்; ஏனெனில் மலைகளின் பள்ளத்தாக்கு அதன் பக்கத்துப் பள்ளத்தாக்கைத் தொடும்; நீங்களோ யூதாவின் அரசனாகிய யோசியாசின் காலத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது ஓடிப் போனது போல் ஓடுவீர்கள். அப்போது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் வருவார்; அவரோடு பரிசுத்தர்கள் அனைவரும் வருவார்கள்.

6 அந்நாளில், குளிரோ உறைபனியோ இராது.

7 அந்த நாள் விந்தையான நாளாயிருக்கும்- அது ஆண்டவருக்குத்தான் தெரியும்; பகலுக்குப் பின் இரவே வராது; மாலை வேளையிலும் ஒளியிருக்கும்.

8 அந்நாளில் உயிருள்ள நீர் யெருசலேமிலிருந்து புறப்பட்டு ஓடும்; அதில் ஒரு பாதி கீழ்க் கடலிலும், மறு பாதி மேற்கடலிலும் போய்க் கலக்கும்; அது கோடைகாலத்திலும் குளிர்காலத்திலும் ஓடிக் கொண்டிருக்கும்.

9 அந்நாளில், ஆண்டவர் உலக முழுவதற்கும் அரசராவார்; ஆண்டவர் ஒருவரே, அவரது திருப்பெயரும் ஒன்றே.

10 கேபா முதல் யெருசலேமுக்குத் தெற்கிலுள்ள இரெம்மோன் வரையில் உள்ள நாடு முழுவதும் சம வெளியாக்கப்படும். தன் இடத்திலேயே ஓங்கி உயர்ந்திருக்கும் யெருசலேமில் மக்கள் குடியேறுவர்; பென்யமீன் வாயில் முதல் முந்திய வாயில் இருந்த இடம் வரையில்- மூலை வாயில் வரையிலும், அனானேயல் கோபுரம் முதல் அரசனுடைய திராட்சை ஆலைகள் வரையில் மக்கள் குடியேறியிருப்பார்கள்.

11 அங்கே மக்கள் அமைதியாய் வாழ்வார்கள்; இனி அவர்கள் சாபனைக்கு ஆளாக மாட்டார்கள்; யெருசலேம் அச்சமின்றி இருக்கும்.

12 யெருசலேமுக்கு எதிராக எழுந்து போர் புரிந்த எல்லா மக்களினங்கள் மேலும் ஆண்டவர் அனுப்பப் போகிற கொள்ளை நோய் இதுவே: நடமாட்டமாய் இருக்கும் போதே ஒவ்வொருவனுடைய உடல் தசையும் அழுகி விழும்; அவர்களுடைய கண்கள் தம் குழிகளிலேயே அழுகி விடும்; அவர்களுடைய நாக்குகளும் வாய்க்குள்ளேயே அழுகிப் போகும்.

13 அந்நாளில் ஆண்டவர் அவர்களுக்குள் பெரிய கலகத்தை எழுப்புவார்; ஒருவன் மற்றொருவன் கையைப் பற்றுவான்; ஒவ்வொருவனும் தன் தன் அயலானுக்கு எதிராய்க் கையுயர்த்துவான்.

14 யூதா கூட யெருசலேமுக்கு எதிராகப் போர்தொடுக்கும். சுற்றியுள்ள எல்லா மக்களினங்களுடைய செல்வங்களாகிய பொன், வெள்ளி, ஆடைகள் முதலியவை குவியல் குவியலாய்ச் சேர்க்கப்படும்.

15 இந்தக் கொள்ளை நோய் போலவே அவர்களுடைய பாசறைகளில் இருக்கும் குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள், இன்னும் மற்றெல்லா மிருகங்களுக்கும் கொள்ளை நோய் உண்டாகும்.

16 யெருசலேமுக்கு எதிராய் வந்த எல்லா மக்களினங்களிலும் எஞ்சியிருக்கும் ஒவ்வொருவரும் ஆண்டு தோறும் சேனைகளின் ஆண்டவராகிய அரசரை வணங்கவும், கூடாரத் திருவிழாவைக் கொண்டாடவும் போவார்கள்.

17 உலகத்தின் இனத்தாருள் எவரேனும் சேனைகளின் ஆண்டவராகிய அரசரை வணங்க யெருலேமுக்குப் போகவில்லையானால், அவர்களுக்கு மழை பெய்யாது.

18 எகிப்து நாட்டு மக்கள் அவர் திருமுன்னிலைக்கு வழிபாடு செய்ய வரவில்லையாயின், கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத மக்களினங்களை ஆண்டவர் வதைத்த அதே கொள்ளை நோயால் அவர்களையும் வதைப்பார்.

19 இதுதான் கூடாரத் திருவிழாவைக் கொண்டாட வராத எகிப்துக்கும், மற்றெல்லா இனத்தாருக்கும் கிடைக்கப் போகும் தண்டனை.

20 அந்நாளில், குதிரைகளின் கழுத்தில் கட்டியுள்ள மணிகளில், 'ஆண்டவருக்கென அர்ச்சிக்கப்பட்டவை' என்று எழுதப்பட்டிருக்கும். ஆண்டவரின் இல்லத்தில் இருக்கும் பானைகள் பீடத்தின் முன்னிருக்கும் கிண்ணங்களைப் போலிருக்கும்;

21 யெருசலேமிலும் யூதாவிலுமுள்ள பானை ஒவ்வொன்றும் சேனைகளின் ஆண்டவருக்கென அர்ச்சிக்கப் பட்டதாய் இருக்கும்; பலியிடுபவரெல்லாம் பலியிட்ட இறைச்சியைச் சமைக்க அவற்றை எடுத்துப் பயன் படுத்துவார்கள். மேலும் அந்நாளில் சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்தில் வாணிகள் எவனும் இருக்கமாட்டான்.