1 மக்கபே ஆகமம்

அதிகாரம் 01

1 முதலில் கிரேசியாவில் ஆண்டு, பிறகு மசதோனியாவில் செங்கோல் செலுத்தின பிலிப்பு என்பவனின் புதல்வனான அலெக்சாந்தர் சேத்திம் நாட்டினின்று புறப்பட்டுப் பாரசீகருடையவும் மேதாருடையவும் அரசனான தாரியுஸ் என்பவனை வென்ற பிறகு,

2 போர்கள் பல புரிந்து வலிமை மிக்க கோட்டைகள் அனைத்தையும் பிடித்து, தன்னை எதிர்த்த அரசர்களைக் கொலை செய்து,

3 பூமியின் எல்லைகள் வரைக்கும் சென்று, எல்லா இனத்தாரையும் கொள்ளையடித்தான். பூமி முழுவதும் அவன் முன்பாக ஒடுங்கி அடங்கியது.

4 அவன் வலிமையுள்ள சேனைகளைச் சேர்த்துப் பெரியதொரு படையை நிறுவினான். ஆதலால் அவன் மனம் செருக்குற்று அகந்தை கொண்டது.

5 அவன் பல நாடுகளையும் அரசர்களையும் அடிமைப்படுத்தினான், அவர்களும் அவனுக்குத் திறை செலுத்தினார்கள்.

6 அதன் பிறகு அவன் கடின நோயுற்று, தான் சாகப்போவதை அறிந்தான்.

7 ஆதலால், தன்னுடன் வளர்க்கப்பட்ட இளம் வயதினரான பிரபுக்களை அழைத்து, தான் உயிரோடிருக்கும் போதே தன் நாட்டை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தான்.

8 அலெக்சாந்தர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆண்ட பிறகு இறந்தான்.

9 பிரபுக்களும் தங்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட இடங்களில் அரசர் ஆனார்கள்.

10 அவன் இறந்த பின் அவர்கள் எல்லாரும் முடிபுனைந்து, அவர்களுக்குப் பின் அவர்கள் பிள்ளைகளும் பல ஆண்டுகளாய் ஆண்டு வந்தார்கள். பூமியில் தீமைகளும் மிகுதி ஆயின.

11 அவர்களின் தலைமுறைகளில் அந்தியோக்கஸ் அரசனின் புதல்வனான பெரிய அந்தியோக்கஸ் கிரேக்க அரசின் நூற்று முப்பத்தேழாம் ஆண்டு ஆண்டான்.

12 இவன் உரோமையில் பிணையாளனாக இருந்தவன். அக்காலத்தில் இஸ்ராயேலில் தீயவர் பலர் தோன்றி: நம்மைச் சுற்றிலும் இருக்கும் இனத்தாரோடு நாம் உடன்படிக்கை செய்து கொள்வோம். ஏனென்றால், நாம் அவர்களை விட்டுப் பிரிந்திருந்த காலமெல்லாம் நம்மைப் பலவிதத் தீமைகள் சூழ்ந்து கொண்டன என்று மற்றவர்களிடம் கூறினார்கள்.

13 அவர்கள் சொன்னது மற்றவர்களுக்கும் நல்லதாகத் தோன்றியது.

14 ஆதலால், அவர்கள் சிலரை நியமித்தனர். அவர்கள் அரசனிடம் செல்ல, அரசனும் புறவினத்தாரின் வழக்கங்களை அவர்களும் அனுசரிக்க அனுமதி அளித்தான்.

15 புற மதத்தாருடைய வழக்கம் போல், அவர்களும் யெருசலேமில் கல்விக்கூடம் ஒன்று ஏற்படுத்தினார்கள்.

16 தங்கள் பரிசுத்த உடன்படிக்கையை விட்டு விட்டு, நூதன ஏற்பாடுகளை அனுசரித்து, அன்னியர்களோடு கலந்து, பொல்லாங்குகளுக்குத் தங்களையே கையளித்தார்கள்.

17 அந்தியோக்கஸ் தன் அரசை உறுதிப்படுத்திய பின்னர், எகிப்து நாட்டிலும் அரசாளத் தொடங்கினான்; இரண்டு நாடுகளையும் ஆண்டு வந்தான்.

18 வலிமை பொருந்திய சேனைகள், தேர்கள், யானைகள், குதிரைகள், கப்பல்கள் இவைகளோடு எகிப்து நாட்டில் புகுந்து.

19 எகிப்து மன்னனான தோலெமேயுசோடு அவன் போர்தொடுக்கவே, தோலெமேயுஸ் பயந்து, எதிர்த்து நிற்க மாட்டாமல் ஓடினான்.

20 பலரும் காயமுற்று மடிந்தார்கள். அவன் எகிப்து நாட்டில் பல கோட்டைகளைப் பிடித்தான். நாடெங்கும் கொள்ளையடித்தான்.

21 எகிப்தைக் கொள்ளையடித்த பிறகு அந்தியோக்கஸ் நூற்று நாற்பத்து மூன்றாம் ஆண்டு திரும்பி, இஸ்ராயேலைத் தாக்கி,

22 வலிமை பொருந்திய சேனையோடு யெருசலேம் சென்றான்.

23 அகந்தைச் செருக்கோடு கடவுள் ஆலயத்தில் புகுந்து, பொற்பீடத்தையும் விளக்குத் தண்டுகளையும் எல்லாப் பாத்திரங்களையும், அப்பங்கள் வைக்கப்படும் மேசைகளையும், தட்டுகளையும் கிண்ணங்களையும், பொன் தூபக் கலசங்களையும், திரையையும் முடிகளையும், ஆலயத்தின் முகப்பில் இருந்த பொன் அணிகளையும் கொள்ளையடித்து உடைத்து விட்டான்.

24 வெள்ளி, பொன், விலையுயர்ந்த பாத்திரங்கள் ஒளித்து வைத்திருந்த செல்வங்கள் இவைகளையெல்லாம் கொள்ளையடித்துத் தன் நாடு திரும்பினான்.

25 மனிதரைக் கொன்று, அதிகச் செருக்குற்றிருந்தான்.

26 இஸ்ராயேல் மக்களிடையேயும், அவர்கள் நாடெங்கும் அழுகை புலம்பலாக இருந்தது.

27 பிரபுக்களும் மூத்தோர்களும் புலம்பினார்கள். கன்னிப்பெண்களும் இளைஞரும் நலிந்தனர். பெண்களின் அழகு மாறிப்போயிற்று.

28 ஆடவர் எல்லாரும் முறையிட்டு அழுதார்கள். மரணப்படுக்கையில் அமர்ந்திருந்த பெண்கள் எல்லாரும் கண்ணீர் விட்டார்கள்.

29 மக்கள் படும் துன்பத்தைக் கண்ட பூமியும் இளகினது. யாக்கோபு குலமும் துக்கத்தில் மூழ்கினது.

30 இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசன் திறை வாங்கும் தலைவன் ஒருவனை யூத நகரங்களுக்கெல்லாம் அனுப்பினான். அவன் பல சேனைகளோடு யெருசலேம் சேர்ந்தான்.

31 அவன் அவர்களுக்குச் சமாதான வார்த்தைகளைக் கபடமாய்ச் சொல்லவே, அவர்களும் நம்பினார்கள்.

32 அவன் திடீரென்று நகரத்திற்குள் பாய்ந்து, மக்களை வெகுவாய் வதைத்து இஸ்ராயேலரில் பலரைக் கொன்றான்.

33 நகரத்தைக் கொள்ளையடித்து, அதைக் கொளுத்தி வீடுகளை இடித்து, சுற்று மதில்களைத் தகர்த்து எறிந்தான்.

34 பெண்களைச் சிறைப்படுத்தி, பிள்ளைகளையும் ஆடு மாடுகளையும் வீரர்கள் கொண்டு போனார்கள்.

35 அவர்கள் தாவீதின் நகரத்தைப் பெரிய மதில்களாலும் கோபுரங்களாலும் வலுப்படுத்தி, அதைத் தங்கள் கோட்டையாக்கிக் கொண்டார்கள்.

36 தீயவரையும் கயவரையும் அவ்விடத்தில் நிறுத்தி வலுப்படுத்தினார்கள். போர்க்கருவிகளையும் உணவு வகைகளையும் சேகரித்து, யெருசலேமில் கொள்ளையடித்த பொருட்களையும் சேர்த்து வைத்தார்கள்.

37 அவ்விடத்திலேயே அவர்கள் தங்கி உளவு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

38 கடவுளின் ஆலயத்திற்கு வருகிறவர்களுக்குத் தீங்காகவும், இஸ்ராயேலைக் கெடுக்கத் தேடும் பசாசைப் போலவும் இருந்தார்கள்.

39 புனித இடத்தைச் சுற்றிலும் மாசற்ற இரத்தத்தைச் சிந்தி, அதைத் தீட்டுப்படுத்தினார்கள்.

40 ஆதலால், அவர்களை முன்னிட்டு யெருசலேம் நகரத்தார் அதை விட்டு ஓடிப்போனார்கள். யெருசலேம் அன்னியருக்கு இருப்பிடமானது; உரியவருக்கோ அன்னியமானது. மக்கள் அதை விட்டு அகன்றார்கள்.

41 கடவுளின் ஆலயம் பாழாகிப் பாலைவனம் போல் ஆனது. திருநாட்கள் துக்க நாட்களாக மாறின. ஓய்வு நாட்கள் அசட்டை செய்யப்பட்டு, அவற்றின் பெருமை குலையலாயிற்று.

42 அது எவ்வளவுக்குப் பெருமையுற்றிருந்ததோ அவ்வளவுக்குச் சிறுமையும் அவமானமும் அடைந்தது, அதன் பெருமை துக்கமாய் மாறியது.

43 அந்தியோக்கஸ் மன்னன் தன் நாட்டு மக்கள் எல்லாரும் ஒன்றாய் இருக்க வேண்டுமென்றும், தத்தம் வழக்கங்களை விட்டுவிட வேண்டுமென்றும் ஓலை அனுப்பினான்.

44 அந்தியோக்கஸ் மன்னனின் வார்த்தைப்படி நடக்க எல்லாரும் இசைந்தார்கள்.

45 இஸ்ராயேலரிலும் பலர் அவனுக்கு அடிமைகளாக இசைந்து, சிலைகளுக்குப் பலியிட்டு ஓய்வுநாளைக் கெடுத்தார்கள்.

46 யூதர்களும் மற்றவர்களுடைய வழக்கங்களை அனுசரிக்கும்படி, யெருசலேமுக்கும் யூத நகரங்களுக்கும் சட்ட நூல்களைத் தூதர் வழியாக மன்னன் அனுப்பினான்.

47 அவர்கள் கடவுளின் ஆலயத்தில் பலிகளும், மற்ற இறை வழிபாடுகளும் நடவாதபடிக்கும்,

48 ஓய்வு நாட்களையும் மற்றத் திருநாட்களையும் அனுசரியாதபடிக்கும் தடுத்தார்கள்.

49 அரசன் புனித இடங்களையும், புனித இஸ்ராயேலரையும் கறைப்படுத்தும்படிக்கும் கட்டளையிட்டான்.

50 பீடங்கள், கோயில்கள், சிலைகள் இவைகளை அமைக்கவும், பன்றிகளையும் அசுத்தமான மிருகங்களையும் பலியிடவும் கட்டளையிட்டான்.

51 கடவுளின் கட்டளைகளையும், அவருடைய ஏற்பாடுகள் அனைத்தையும் மறந்து போகும்படியாகத் தங்கள் பிள்ளைகளை விருத்தசேதமின்றி விட்டு விடும்படிக்கும், அசுத்தமான பொருட்களாலும் தீய செயல்களாலும் அவர்கள் ஆன்மாக்களைக் கெடுக்கவும் கட்டளையிட்டான்.

52 அந்தியோக்கஸ் மன்னன் கட்டளைப்படி நடவாதவர்கள் சாவார்கள் என்று கட்டளை விதிக்கப்பட்டது.

53 இவ்வாறே நாடெங்கும் எழுதியனுப்பி, அதை அனுசரிக்கும்படி கட்டாயப்படுத்துவதற்கு அவன் தலைவர்களை நியமித்தான்.

54 யூத நகரங்கள் பலிகொடுக்கும்படி அவர்கள் கட்டளையிட்டார்கள்.

55 கடவுளுடைய கட்டளைகளை மீறியவர்களோடு வேறு பலரும் சேர்ந்து கொண்டு, நாட்டில் பற்பல தீமைகளைச் செய்தார்கள்.

56 இஸ்ராயேல் மக்களைத் தனியிடங்களுக்கும் மறைவிடங்களுக்கும் துரத்த, அவர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.

57 நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு காஸ்லேயு மாதம் பதினைந்தாம் நாள் கடவுளுடைய பீடத்தின் மேல் வெறுப்பூட்டும் சிலையை அவன் நிறுவினான்.

58 யூத நகரங்களைச் சுற்றிலும் அவர்கள் பீடங்களைக் கட்டினார்கள், வீடுகளின் கதவுகளுக்கு முன்பாகவும், மைதானங்களிலும் சாம்பிராணி ஏந்திப் பலியிட்டார்கள்.

59 கடவுளின் கட்டளைகள் அடங்கிய நூல்களைக் கிழித்து நெருப்பிலே எறிந்தார்கள்.

60 எவனெவனிடம் மறைநூல்களைக் கண்டார்களோ அவனையும், கடவுளின் கட்டளைகளை அனுசரிக்கிறவனையும் அரசன் ஆணைப்படி கொன்றார்கள்.

61 எல்லா நாடுகளிலும் எல்லா மாதங்களிலும் இஸ்ராயேல் மக்களில் எவரெவரைக் கண்டார்களோ அவர்களை எல்லாம் இவ்விதமாய்க் கொடுமை செய்தார்கள்.

62 மாதத்தின் இருபத்தைந்தாம் நாள் பீடத்துக்கு முன்பாக இருந்த மேடையில் பலியிட்டார்கள்.

63 தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்வித்த பெண்களை அந்தியோக்கஸ் கட்டளைப்படி அவர்கள் கொன்றார்கள்.

64 வீடுதோறும் பிள்ளைகளைத் தாய்மார் கழுத்திலும் தூக்கிட்டு, அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தவர்களைக் கொலைச் செய்தார்கள்.

65 இஸ்ராயேலரில் பலர் அசுத்தமான உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதில்லையென்று தங்களுக்குள் தீர்மானம் செய்து கொண்டார்கள். அசுத்தமான உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுத் தங்களை மாசுப்படுத்திக் கொள்வதை விடச் சாகத் துணிந்திருந்தார்கள்.

66 கடவுளின் புனித கட்டளைகளை மீற மனமற்றவர்களாய் இருந்தார்கள். ஆதலால், கொலையுண்டார்கள். எனவே மக்கள் மிக்க கோபம் கொண்டனர்.

அதிகாரம் 02

1 யோவாரிபின் புதல்வரில் குருவான சீமோனின் புதல்வர் அருளப்பனின் புதல்வராகிய மத்தத்தியாஸ் என்பவர் அப்பொழுது யெருசலேமை விட்டு மோதின் மலை சேர்ந்தார்.

2 அவருக்கு ஐந்து புதல்வர் இருந்தனர். அவர்கள்:

3 காதிஸ் எனப்பட்ட அருளப்பனும், தாசி எனப்பட்ட சீமோனும்,

4 மக்கபேயுஸ் என்ற யூதாசும், அபாரோன் எனப்பட்ட எலேயாசாரும்,

5 ஆபுஸ் எனப்பட்ட யோனாத்தாசும் ஆவர்.

6 யூத மக்களுக்கு யெருசலேமில் செய்யப்பட்ட கொடுமைகளை இவர்கள் கண்டார்கள்.

7 ஐயோ, எனக்குக் கேடாம்! என் மக்கள் படும் தொல்லையையும், புனித நகரத்தின் அழிவையும் நான் பார்க்கவோ பிறந்தேன்! பகைவர் கையில் அது அகப்படும் போது நான் இவ்விடம் உட்கார்ந்திருக்கலாமோ?

8 புனித இடம் அன்னியர் வசமானது. ஆலயம் கயவனைப் போல் ஆனது

9 அதன் மாட்சியின் பாத்திரங்கள் பறிமுதலாயின. அதன் மூத்தோர் தெருக்களில் கொலையுண்டார்கள். இளைஞரோ பகைவரின் வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள்.

10 அதன் அரசைக் கைப்பற்றாத இனத்தார் யார்? அதன் பொருட்களைக் கொள்ளையடிக்காதவர்கள் யார்?

11 அதன் அலங்காரமெல்லாம் அழிந்து போனது. தன்னுரிமையோடு நடந்தது போய், இப்போது அது அடிமை போல் ஆனது.

12 நம் புனித காரியங்களும் அழகும் ஒளியும் குன்றிப்போக, அவைகளைப் புறவினத்தார் தீட்டுப்படுத்தினார்கள்.

13 நாம் ஏன் இனியும் வாழ வேண்டும் என்று மத்தத்தியாஸ் சொல்ல,

14 அவரும் அவர் புதல்வரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, தவச்சட்டைகளை அணிந்து மிகவும் புலம்பினார்கள்.

15 மோதின் நகரத்திற்கு ஓடிப்போனவர்களைப் பலியிடவும், தூபம் ஏந்தவும், கடவுள் கட்டளையை மீறவும் கட்டாயப்பட்டவர்கள் அந்தியோக்கஸ் அரசனால் அனுப்பப்பட்டவர்கள் அவ்விடம் வந்தார்கள்.

16 இஸ்ராயேல் மக்களில் பலர் இசைந்தவர்களாய் அவர்களிடம் சென்றார்கள். ஆனால், மத்தத்தியாசும் அவர் புதல்வரும் உறுதியில் நிலைகொண்டார்கள்.

17 அந்தியோக்கசால் அனுப்பப்பட்டவர்கள் மத்தத்தியாசை நோக்கி: இந்த நகரத்தில் நீர் சீரும் சிறப்பும் மிக்க பிரபுவாய் இருக்கிறீர். உம் புதல்வரும் சகோதரரும் உமக்கு ஓர் அணிகலன் போல் இருக்கிறார்கள்.

18 ஆதலால், புறவினத்தாரும் யூத மக்களும், யெருசலேமில் தங்கினவர்களும் செய்த வண்ணம், நீரும் முதன் முதல் அரசன் கட்டளையை நிறைவேற்றும். நீரும் உம் புதல்வர்களும் அரசனின் நண்பர்களாவீர்கள். பொன், வெள்ளி, மற்றும் பல்வேறு பரிசுகளால் நீர் நிரப்பப்படுவீர், என்றார்கள்.

19 அதற்கு மறுமொழியாக மத்தத்தியாஸ் உரத்த சத்தமாய்: எங்கள் முன்னோரின் வழக்கத்தை அனுசரிப்பதை எல்லா இனத்தவரும் விட்டு விட்டு அந்தியோக்கஸ் அரசருக்குக் கீழ்ப்படிந்தாலும், அவர் கட்டளைகளை அனுசரிக்க இசைந்தாலும்,

20 நானும் என் புதல்வரும் என் சகோதரரும் எங்கள் முன்னோரின் கட்டளைக்கே கீழ்ப்படிவோம்.

21 கடவுள் எங்கள் மேல் இரக்கமும் கொள்வாராக. அவருடைய கட்டளைகளையும் ஏற்பாடுகளையும் விட்டு விடுவதனால் எங்களுக்கு யாதொரு இலாபமும் இல்லை.

22 அந்தியோக்கஸ் அரசரின் வார்த்தைகளைக் கேட்கவும் மாட்டோம். எங்கள் சட்டங்களால் விதிக்கப்பட்ட கட்டளைகளை மீறி வேறு விதமாய் நடக்கவும், பலியிடவும் மாட்டோம் என்றார்.

23 உடனே அரசன் கட்டளைப்படி மோதின் நகரத்துப் பீடத்தின் மேல் சிலைகளுக்குப் பலியிட யூதன் ஒருவன் எல்லாருக்கும் முன்பாக வந்தான்,

24 மத்தத்தியாஸ் அதைப் பார்த்தார். மனம் கசிந்தார், அவர் உடம்பு துடித்தது. கட்டளையின் ஒழுங்குப்படி கோபம் மூண்டு, அவன் மேல் பாய்ந்து, பீடத்தின் மீதே அவனைக் கொன்றார்.

25 அந்தியோக்கசால் அனுப்பப்பட்டு, பலியிடும்படி வற்புறுத்தின மனிதனையும் அதே நேரத்தில் கொன்று, பீடத்தையும் இடித்துத் தள்ளினார்.

26 சலோமியின் மகன் சாம்பரி என்பவனுக்குப் பினேயஸ் செய்தது போல, தாமும் கட்டளையின்பால் கொண்ட ஆர்வத்தால் துண்டப்பட்டார்.

27 அப்போது அந்த நகரத்தில் மத்தத்தியாஸ் உரத்த சத்தமாய்: உடன்படிக்கைக் கட்டளைக்குப் பிரமாணிக்கமுள்ளவன் எவனோ அவன் என் பின்னால் வரக்கடவான் என்று சொல்லி,

28 அவரும் அவர் புதல்வரும் தங்கள் சொத்துகளை விட்டுவிட்டு மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.

29 அப்போது பலர் நியாய ஏற்பாடுகளையும் நீதியையும் தேடி பாலைவனத்திற்குச் சென்றார்கள்.

30 அவர்களும் அவர்கள் புதல்வரும் மனைவியரும் மந்தைகளோடு அவ்விடத்தில் தங்கினார்கள். ஏனென்றால், அவர்கள் தீச் செயல்களில் மூழ்கியிருந்தார்கள்.

31 அரசன் கட்டளையை மீறிய பலர் பாலைவனத்தின் மறைவிடங்களுக்குப் போய்விட்டார்களென்றும், அவர்கள் பின்னால் இன்னும் பலரும் போயிருக்கிறார்களென்றும் தாவீதின் நகராகிய யெருசலேமில் இருந்த அரசனுடைய மனிதருக்கும் படைக்கும் தெரிவிக்கப்பட்டது.

32 இவர்கள் உடனே அவ்விடம் சென்று அவர்கள் மேல் ஓய்வுநாளில் போர்தொடுத்தனர். மேலும், இவர்கள்:

33 இன்னும் நீங்கள் எங்களை எதிர்க்கிறீர்களோ? வெளியே வந்து, அந்தியோக்கஸ் அரசன் கட்டளைப்படி செய்வீர்களேயானால் பிழைப்பீர்கள், என்றார்கள்.

34 அவர்களோ: ஓய்வு நாள்முறை தவறாதபடிக்கு வெளியே வரவுமாட்டோம்; அரசன் செற்படி நடக்கவுமாட்டோம், என்றார்கள்.

35 ஆதலால், இவர்கள் அவர்களை வலிமையோடு தாக்கினார்கள்.

36 ஆனால், அவர்கள் இவர்களை எதிர்க்கவுமில்லை. இவர்கள் மேல் கற்களை எறியவுமில்லை; தங்கள் குகைகளை அடைத்துக் கொள்ளவுமில்லை.

37 மாறாக, அமைதியான மனத்தோடு நாங்கள் எல்லோரும் சாவோம்; நீங்கள் எங்களை அநியாயமாய்க் கொலை செய்கிறீர்களென்பதற்கு வானமும் பூமியும் சாட்சியாய் இருக்கும், என்றார்கள்.

38 இவர்கள் ஓய்வு நாளில் அவர்களோடு சண்டை செய்ததால், அவர்களும் அவர்கள் மனைவியரும் பிள்ளைகளும் ஆயிரம் பேர் வரை தம் மந்தைகளோடு மாண்டார்கள்.

39 இதைக் கேள்வியுற்ற மத்தத்தியாசும் அவர் நண்பரும் அதிகத் துக்கம் அடைந்தார்கள்.

40 அப்போது ஒருவன் மற்றொருவனை நோக்கி: நமது உயிரையும் கட்டளையையும் காப்பாற்ற நமது சகோதரர் செய்தது போல நாமெல்லோரும் போர் செய்யாவிடில் நம்மையும் பூமியினின்று விரைவில் ஒழித்து விடுவார்கள், என்றான்.

41 திரும்பவும் அவர்கள் தங்களுக்குள் ஓய்வுநாளில் யார் நம்மை எதிர்த்துப் போரிட வந்தாலும், அவர்களோடு நாமும் போர்புரிவோம்; நம் சகோதரர் தாங்கள் ஒளிந்திருந்த இடத்தில் மடிந்தது போல நாமும் மடியாதிருக்கக்கடவோம் என்று தீர்மானித்துக் கொண்டார்கள்.

42 இஸ்ராயேலரில் வலிமை வாய்ந்தவர்களான அசிதேயரின் ஒரு கூட்டத்தார் அவர்களோடு சேர்ந்து கொண்டனர்.

43 இவர்கள் எல்லாரும் சட்டத்தை முன்னிட்டு ஒருமனதாகச் சேர்ந்தார்கள். கொடுமைக்குத் தப்பிக் கொள்ள ஓடிப்போனவர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டதால், அவர்களது சேனை வலுப்பெற்றது.

44 அவர்கள் படைகளைக் கூட்டி, பாவிகளைச் சினங்கொண்டும், தீயவர்களை மிகுந்த கோபத்தோடும் தாக்கினார்கள். இவர்களோ தப்பிக்கொள்ளத் தங்கள் இனத்தாரிடம் ஓடிவிட்டார்கள்.

45 மத்தத்தியாசும் அவர் நண்பரும் எங்கும் சுற்றித்திரிந்து பீடங்களை அழித்தார்கள்.

46 இஸ்ராயேல் எல்லைகளில் கண்ட விருத்தசேதனம் பெறாத பிள்ளைகளுக்குத் துணிவுடன் விருத்தசேதனம் செய்வித்தார்கள்.

47 அகந்தையின் மக்களை வதைத்துப் பின்தொடர்ந்தார்கள். அவர்கள் நினைத்த காரியங்களெல்லாம் வெற்றியாயின.

48 புறவினத்தாருடையவும் அரசர்களுடையவும் அடிமைத்தனத்தினின்று அவர்கள் விடுபட்டார்கள். தீயவர் தங்களை மேற்கொள்ள இடம் கொடுக்கவில்லை.

49 மத்தத்தியாஸ் சாகும் காலம் நெருங்கிய போது தம் பிள்ளைகளை நோக்கி: இப்போது அகந்தையின் அரசு உறுதிப்பட்டது. இது கடவுளுடைய தண்டனைக்கும் அழிவுக்கும் கோபத்துக்கும் உரிய காலம்.

50 ஆதலால், என் மக்களே, இப்போது கட்டளையை ஆர்வத்தோடு கடைப்பிடியுங்கள். உங்கள் முன்னோரின் உடன்படிக்கைக்காக உங்கள் உயிரைக் கொடுங்கள்.

51 உங்கள் முன்னோர்கள் தங்கள் காலத்தில் நடந்து கொண்ட முறையை நினைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் பெருமாட்சியையும் நிலைப்பேற்றையும் அடைவீர்கள்.

52 ஆபிரகாம் சோதனையில் விசுவாசியாய் நிலைகொள்ளவில்லையோ? நீதிமானாக எண்ணப்படவில்லையோ?

53 சூசை தமக்கு இக்கட்டு நேரிட்ட காலத்தில் கடவுளின் கட்டளையைக் காத்தார்; எகிப்து நாட்டின் ஆளுநரானார்.

54 நம் தந்தையான பினேயஸ் கடவுள் பால் மிக்க பற்றுக் கொண்டிருந்தமையால் நித்திய குருத்துவத்தின் உடன்படிக்கையைப் பெற்றுக் கொண்டார்.

55 யோசுவா கட்டளையை நிறைவேற்றியதால் இஸ்ராயேலின் தலைவரானார்.

56 காலேப், கடவுள் ஆலயத்தில் மக்களுக்குத் திடம் சொன்னதால் சொத்துரிமை பெற்றார்.

57 தாவீது தம் இரக்க சிந்தையால் என்றென்றைக்கும் அரசரானார்.

58 எலியாஸ், கடவுள் கட்டளைமேல் ஆர்வம் கொண்டிருந்ததால் விண்ணில் சேர்க்கப்பட்டார்.

59 அனானியாஸ், அசாரியாஸ், மிசாயேல் ஆகியோர் விசுவாசத்தால் நெருப்பினின்று மீட்கப்பட்டார்கள்.

60 தானியேல் தம் மாசற்ற தன்மையால் சிங்கத்தின் வாயினின்று காப்பாற்றப்பட்டார்.

61 தலைமுறை தலைமுறையாய் இவ்வாறே நடந்து வந்துள்ளதென்று அறிந்து கொள்ளுங்கள். ஏனென்றால், கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

62 தீயவனுடைய வார்த்தைகளுக்கு அஞ்சாதீர்கள். ஏனென்றால் அவன் பெருமை சகதியும் புழுவும் போல் இருக்கிறது.

63 அவன் இன்று உயர்த்தப்படுகிறான்; நாளை காணப்பட மாட்டான்; தான் உண்டான பூமிக்குத் திரும்பினவுடனே அவனைப் பற்றிய நினைவும் ஒழிந்து போகும்.

64 நீங்களோ, என் மக்களே, துணிவு கொள்ளுங்கள்; கட்டளைப்படி ஆண்மையுடன் செயநீபடுங்கள். ஏனென்றால், அதனால் மாட்சி அடைவீர்கள்.

65 இதோ, உங்கள் சகோதரன் சீமோன் மிகவும் முன்மதி உள்ளவன். அவன் சொல்வதை எப்பொழுதும் கேளுங்கள். அவன் உங்களுக்குத் தந்தை போல இருப்பானாக.

66 இளமை முதல் வலிமை படைத்தவனாகிய யூதாஸ் மக்கபேயுஸ் உங்கள் படைத்தலைவனாக இருந்து சண்டையை நடத்தக்கடவான்.

67 கட்டளையைப் பின்பற்றி நடக்கிறவர்கள் எல்லாரையும் ஒன்று சேர்த்து, உங்கள் மக்களை வதைக்கிறவர்களைப் பழிவாங்குங்கள்.

68 அவர்கள் உங்களுக்குச் செய்துள்ள கொடுமையை அவர்களுக்குச் செய்யுங்கள். ஆனால், கட்டளையைப் பொறுத்தமட்டில் எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்லி,

69 அவர்களை ஆசீர்வசித்த பிறகு தம் முன்னோரோடு சேர்க்கப்பட்டார்.

70 அவர் நூற்று நாற்பத்தாறாம் ஆண்டு இறந்தார். மோதின் நகரத்தில் தம் முன்னோர் கல்லறையில் தம் புதல்வரால் அடக்கம் செய்யப்பட்டார். எல்லா இஸ்ராயேலரும் மிகவும் துக்கப்பட்டார்கள்.

அதிகாரம் 03

1 அப்போது மக்கபேயுஸ் எனப்பட்ட யூதாஸ் தம் தந்தைக்குப் பின் தலைவரானார்.

2 அவருடைய சகோதரரும், அவர் தந்தையோடு சேர்ந்திருந்த எல்லாரும் அவருக்குத் துணை நின்று, இஸ்ராயேலைக் காக்க இனிதே போர் புரிந்தார்கள்.

3 அவரே தம் மக்களின் மாட்சி பெருகச் செய்தார்; அரக்கனைப் போல் இரும்புக்கவசம் அணிந்தார். சண்டைகளில் போர்க்கருவிகளைத் தாங்கினார். தம் வாளால் பாளையத்தைப் பாதுகாத்தார்.

4 அவர் தம் செயல்களில் சிங்கத்துக்கு ஒப்பானார்; இரை தேடும் போது முழங்கும் சிங்கக்குட்டி போலானார்; தீயவரைத் தேடி, அவர்களைப் பின்தொடர்ந்தார்.

5 தம் மக்களை வதைத்தவர்களை நெருப்பில் மடிய வைத்தார்.

6 அவர் மேல் உள்ள பயத்தால் பகைவர் மிரண்டு ஓடினர். கொடுமை செய்தவர்கள் நடுங்கினார்கள். அவரால் எங்கும் மீட்பு உண்டானது.

7 அவர் செய்தவற்றையெல்லாம் கண்ட பல அரசர்கள் கோபத்தால் பொங்கி எழுந்தார்கள். ஆனால் யாக்கோபின் தலைமுறையோ மகிழ்ச்சி கொண்டது. அவர் பெயரை அவர்கள் என்றென்றைக்கும் வாழ்த்துவார்கள்.

8 அவர் யூத நகரங்களுக்குச் சென்று, தீயவரை ஒழித்து, இஸ்ராயேலினின்று கடவுளின் கோபத்தை நீக்கினார்.

9 பூமியின் கடைசி எல்லைவரை அவருடைய பெயர் விளங்கப்பெற்றது. அவர் ஆபத்திலிருந்தவர்களை மீட்டு ஒன்று சேர்த்தார்.

10 அப்போது அப்பொல்லோனியுஸ் என்பவன் புற இனத்தாரைச் சேர்த்து சண்டை செய்வதற்காகப் பெரும் படையைச் சமாரியாவில் கூட்டினான்.

11 அதை அறிந்த யூதாஸ் அவனை எதிர்த்து முறியடித்து, அவனையும் கொன்றர். பலர் காயப்பட்டு விழுந்தார்கள். அவர்கள் உடைமைகளை அவர் கைப்பற்றினார்.

12 அப்பொல்லோனியுசின் வாளை யூதாஸ் எடுத்தக்கொண்டார்; அதைக் கொண்டே தம் வாழ்நாளெல்லாம் சண்டை செய்தார்.

13 யூதாஸ் விசுவாசிகள் கூட்டத்தையும் சபையையும் தம்மோடு சேர்த்துக் கொண்டாரென்பதைக் கேள்வியுற்ற சீரியா படைத்தலைவனான சேரோன்:

14 என் பெயர் விளங்கச் செய்வேன்; அரசில் மாட்சி பெறுவேன்; அரசனின் வார்த்தையை இகழ்ந்த யூதாசோடும், அவனைச் சேர்ந்தவர்களோடும் போர்புரிவேன், என்றான்.

15 போருக்கு ஆயத்தமானான்; இஸ்ராயேல் மக்களைப் பழிவாங்கும்படி தீயவருடைய படையைத் தனக்கு வலிமையான உதவியாகக் கொண்டு சென்றான்.

16 அவர்கள் பெத்தோரோனை நெருங்கும் பொழுது யூதாஸ் சிலரோடு அவர்களை எதிர்த்துப் போனார்.

17 பெரும்படை ஒன்று தங்களை எதிர்த்து வருவதைக் கண்ட அவர்கள் யூதாசிடம்: இவ்வளவு திரளான கூட்டங்களோடும், வலிமை மிக்க படையோடும் சொற்பமாய் இருக்கும் நாம் எவ்விதம் சண்டை செய்யக் கூடும்? இன்று நாம் பசியினாலும் களைத்துப் போயிருக்கிறோமே, என்றார்கள்.

18 அதற்கு யூதாஸ்: சிலரது கையில் பலர் அகப்பட்டுக்கொள்வது எளிதான காரியம். பலர் என்றாலும் சிலர் என்றாலும், அவர்களைக் காப்பாற்றுவதில் கடவுள் முன்னிலையில் வேறுபாடு இல்லை.

19 ஏனென்றால் வெற்றி கொள்வது திரளான படைகளால் அன்று; ஆனால், கடவுளிடமிருந்து வரும் வலிமையினால் தான்.

20 நம்மையும், நம் மனைவி மக்களையும் சிதறடித்துக் கொள்ளையடிக்க அகந்தைச் செருக்கோடு அவர்கள் வருகிறார்கள்.

21 நாமோ நமது உயிரையும் கட்டளையையும் காப்பாற்றப் போர் செய்வோம்.

22 நம் கண்களுக்கு முன்பாகவே ஆண்டவர் அவர்களை நசுக்குவார். நீங்களோ அவர்களுக்கு அஞ்சாதிருங்கள், என்றார்.

23 பேசி முடித்தவுடனே அவர் பகைவர் மேல் பாய்ந்தார். சேரோனும், அவன் படைகளும் அவருக்கு முன்பாக முறியடிக்கப்பட்டார்கள்.

24 சமவெளி வரை பெத்தோரோன் இறக்கத்தில் அவர் அவனைப் பின்தொடர்ந்தார். பகைவரில் எண்ணுறு பேர் கொலையுண்டார்கள். மற்றவர்களோ பிலிஸ்தேயர் நாட்டுக்கு ஓடிவிட்டார்கள்.

25 சுற்றிலும் இருந்த புறவினத்தாருக்கெல்லாம் யூதாஸ் மீதும் அவருடைய சகோதரர் மீதும் அச்சமும் திகிலும் உண்டாயின.

26 அவருடைய பெயர் அரசனுக்கு எட்டியது. யூதாசின் சண்டைகளைப் பற்றி எல்லா இனத்தாரும் பேசலாயினர்.

27 செய்திகளை அந்தியோக்கஸ் மன்னன் கேள்விப்பட்டவுடனே, கோபவெறி கொண்டு தன் நாடெங்கும் ஆள் அனுப்பி, சேனைகளையெல்லாம் ஒன்று சேர்த்து, பெரும்படை திரட்டினான்.

28 தன் கருவூலத்தைத் திறந்து, படைகளுக்கு ஆண்டுச் சம்பளத்தை அளித்து, எதற்கும் தயாராய் இருக்கும்படி கட்டளையிட்டான்.

29 தன் கருவூலத்தில் செல்வம் குறைவதையும், நிகழ்ந்த போர்களாலும், எப்போதும் கையாண்டு வந்த வழக்கங்களை நாட்டில் கைக்கொள்ளதாபடி தான் செய்த கொடுமையாலும் நாடுகளிலிருந்து திறை வந்து சேராததையும் கண்டான்.

30 தனக்கு முன்னிருந்த அரசர்களைவிடத் தாராளமாகவும் ஏராளமாகவும் கொடுத்தவன், செலவுக்கும் வெகுமதி அளிப்பதற்கும் தன் கருவூலத்தில் போதுமான செல்வம் இல்லையென்று அஞ்சினான்.

31 மனத்தில் மிகக் கலக்கமுற்று நாடுகளுடைய திறையை வாங்குவதற்கும், திரளான செல்வங்களைச் சேகரிப்பதற்கும் பாரசீக நாடு போகத் தீர்மானித்தான்.

32 அவன் அரச குலத்தின் பிரபுவான லிசியாஸ் என்பவனை எப்பிராத் நதி முதல் எகிப்து நதிவரை உள்ள நாட்டில் அரசாங்க காரியங்களையும்,

33 தான் திரும்பும் வரையில் தன் மகன் அந்தியோக்கஸ் என்பவனையும் கவனித்துக் கொள்ளும்படி ஏற்படுத்தினான்.

34 அவனிடம் பாதிப்படைகளையும் யானைகளையும் ஒப்படைத்து, தான் செய்ய நினைத்திருந்த அனைத்தையும், யூதேயா, யெருசலேம் நகர மக்களையும் பற்றிய தன் கட்டளைகளைக் கொடுத்தான்.

35 இஸ்ராயேலின் வல்லமையையும், யெருசலேமில் எஞ்சியிருந்தவர்களையும் அடக்கி அழித்தொழிக்கவும், அவர்கள் பெயரையே அவ்விடத்திலிருந்து அழித்துவிடவும் படைகளை அவர்களுக்கு எதிராய் அனுப்ப வேண்டுமென்றும்,

36 அவர்களுடைய நாடெங்கும் அன்னியரைக் குடியேற்றி அவர்களுக்கே பகிர்ந்து கொடுக்க வேண்டுமென்றும் கட்டளையிட்டான்.

37 பின்னர் மன்னன் மீதிப் படைகளை நடத்திக் கொண்டு தன் நாட்டின் அந்தியோக்கியா நகரத்தை விட்டு நூற்று நாற்பத்தேழாம் ஆண்டு புறப்பட்டான்; எப்பிராத் நதியைக் கடந்து மலை நாடுகள் வழியாய்ச் சென்றான்.

38 லிசியாஸ் என்பவனோ மன்னனுடைய நண்பரில் வலிமை வாய்ந்தவனான தொரிமீனியன் புதல்வன் தோலெமேயையும் நிக்கானோரையும் கோர்ஜியாவையும் தேர்ந்துகொண்டு,

39 நாற்பதினாயிரம் படை வீரரையும் ஏழாயிரம் குதிரை வீரரையும், யூதேயா நாடு சென்று அதை அரசன் கட்டளைப்படி அழித்தொழிப்பதற்கு அனுப்பினான்.

40 அவர்களும் தங்கள் படைகளோடு சென்று, எம்மாவுஸ் நகருக்கு அருகே சமவெளியில் பாளையம் இறங்கினார்கள்.

41 அந்நாட்டு வியாபாரிகள் இதைக் கேள்விப்பட்டு, இஸ்ராயேல் மக்களை அடிமைகளாய் வாங்குவதற்குத் திரளான வெள்ளியையும் பொன்னையும் எடுத்துக் கொண்டு தங்கள் ஊழியரோடு பாளையத்துக்கு வந்தார்கள். சீரியா முதலிய மற்ற நாட்டுப் படைகளும் அவர்களோடு சேர்ந்து கொண்டன.

42 யூதாசும் அவர் சகோதரரும் ஆபத்துகள் அதிகரிப்பதையும், எதிரிப்படைகள் தங்கள் நாட்டை நெருங்கி வருவதையும் கண்டு, தங்கள் மக்களை அழித்தொழிக்க மன்னன் கொடுத்திருக்கும் கட்டளையை அறிந்தவர்களாய், தங்களுக்குள்:

43 நம் மக்களின் தளர்ச்சியை நீக்கித் திடப்படுத்தி, அவர்களையும் நமது வேத கட்டளைகளையும் காப்பாற்றப் போர்புரிவோம் என்று சொல்லி,

44 பகைவரை எதிர்க்கத் தயாராய் இருக்கவும், கடவுளை வேண்டவும், அவர் இரக்கத்தையும் தயவையும் மன்றாடவும் ஒன்று கூடினார்கள்.

45 யெருசலேம், குடிகள் இல்லாமல் பாலைவனம் போல் இருந்தது. ஏனென்றால், ஒருவரும் உள்ளே போகவும் வெளியே வரவும் காணப்படவில்லை. கடவுளின் ஆலயம் காலால் மிதிக்கப்பட்டது. அன்னியர்கள் கோட்டைக்குள் இருந்தார்கள். அது புறவினத்தாரின் உறைவிடமானது. யாக்கோபு குலத்தின் மகிழ்ச்சி ஒழிந்து போனது. புல்லாங்குழல், வீணை ஒலி கேட்கப்படவேயில்லை.

46 எல்லாரும் சேர்ந்து யெருசலேமுக்கு எதிரில் இருந்த மாஸ்பாவுக்கு வந்தார்கள். ஏனென்றால், இஸ்ராயேலருக்கு முற்காலத்தில் செபக்கூடம் ஒன்று மாஸ்பாவில் இருந்தது.

47 அன்று அவர்கள் நோன்பு பிடித்து, தவச்சட்டை அணிந்து, தலை மீது சாம்பலைத் தூவித் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்கள்.

48 தங்கள் சிலைகளின் சாயல்களிலிருந்து புறவினத்தார் அறிந்துகொள்ள முயன்றதை; மறை நூல்களைத் திறந்து கண்டு கொண்டார்கள் இவர்கள்.

49 குருக்கள் அணியும் ஆடையணிகளையும் முதற்பலன்களையும் மற்றக் காணிக்கைகளைக் கடவுள் கொண்டு வந்தார்கள். முதியவர்களைக் கடவுள் ஊழியத்தில் காலம் கழித்துச் செபிக்கும்படி தூண்டினார்கள்.

50 வானத்தை நோக்கி உரத்த சத்தமாய்க் கூவி: இவர்களை என்ன செய்வோம்? எவ்விடம் கூட்டிப் போவோம்?

51 உமது ஆலயம் தீட்டுப்பட்டுக் காலில் மிதிப்பட்டது. உம் குருக்கள் சிறுமையடைந்து துக்கத்தில் மூழ்கினார்கள்

52 எங்களை அழித்தொழிக்க இதோ புறவினத்தார் எதிர்த்து வந்துள்ளார்கள், அவர்கள் எங்களைப் பற்றிக் கொண்டிருக்கும் எண்ணங்களை நீர் அறிவீர்.

53 ஆண்டவரே, நீர் எங்களுக்கு உதவி புரியாவிடில், நாங்கள் அவர்களை எவ்விதம் எதிர்த்து நிற்க முடியும் என்று சொல்லி,

54 எக்காளங்களை உரத்து ஒலிக்கச் செய்தார்கள்.

55 அதன் பிறகு யூதாஸ் படைகளை நடத்தப் பற்பல நிலைகளில் தலைவர்களை நியமித்தார்.

56 வீடுகள் கட்டிக் கொண்டவர்களையும், கொடிமுந்திரி நட்டவர்களையும், அச்சத்தால் பீடிக்கப் பட்டவர்களையும் தத்தம் வீடுகளுக்குத் திரும்பிப் போகுமாறு வழக்கப்படி கட்டளையிட்டார்.

57 அதன் பிறகு படைகளை நடத்திச் சென்று எம்மாவுக்குத் தென்புறத்தில் அவர்கள் பாளையம் இறங்கினார்கள்.

58 அப்பொழுது யூதாஸ்: நம்மேல் படையெடுத்து நம்மையும் நமது மறையையும் அழிக்க வந்த பகைவர்களை எதிர்த்துச் சண்டை செய்ய, ஆயுதந்தாங்கித் துணிவு கொண்டு காலையில் தயாராய் இருங்கள்.

59 ஏனென்றால், நம் மக்களுக்கு வரும் கொடுமைகளையும், நமது மறைக்கு வரும் அழிவையும் பார்ப்பதை விட நாம் போரில் மடிவதே நலம்.

60 ஆனால், கடவுள் திருவுளம் எதுவோ அதுவே நிறைவேறட்டும், என்றார்.

அதிகாரம் 04

1 கோர்ஜியா ஐயாயிரம் காலாட்படைகளையும், ஆயிரம் தேர்ந்த குதிரைவீரரையும் நடத்திக் கொண்டு இரவு வேளையில், திடீரென்று யூதர் பாளையத்தை அடுத்து, அவர்களைத் தாக்கப் போனான்.

2 கோட்டையில் இருந்தவர்கள் அவனுக்கு வழிகாட்டினார்கள்,

3 இதைக் கேள்விப்பட்ட யூதாசும் தம் வீர சேனைகளோடு எம்மாவுசில் இருந்த பெரும்படையை எதிர்க்கச் சென்றார்.

4 ஏனென்றால் பாளையத்தில் இருந்த படை சிதறிப்போயிருந்தது.

5 கோர்ஜியா இரவில் யூதாசின் பாளையத்துக்கு வந்து, ஒருவரையும் காணாமல் அவர்களை மலையில் தேடினான். ஏனென்றால்: நம்மைக் கண்டு அவர்கள் ஓடி விட்டார்கள் என்று சொன்னான்.

6 பொழுது விடிந்த போது மூவாயிரம் ஆட்களோடு மட்டும் யூதாஸ் தம் பாளையம் திரும்பி வந்தார். அவர்களுக்குக் கேடயமும் இல்லை, வாளும் இல்லை.

7 பகைவர் பாளையமோ வலிமை படுத்தப்பட்டு, போருக்குப் பழக்கப்பட்ட கவசமணிந்த வீராராலும், குதிரைப் படையினராலும் சூழப்பட்டு இருக்கக் கண்டார்கள்.

8 யூதாஸ் தம்மோடு கூட இருந்தவர்களை நோக்கி: அக்கூட்டத்தைக் கண்டு அஞ்சாதீர்கள். அவர்கள் தாக்குவதைக் கண்டு பயப்படாதீர்கள்.

9 செங்கடலில் நம் முன்னோர் பார்வோனால் பெரிய படையோடு பின்தொடரப்பட்ட போது எவ்விதம் காப்பாற்றப்பட்டார்கள் என்பதை நினைத்துக் கொள்ளுங்கள்.

10 இப்போது விண்ணை நோக்கி அபயக் குரலெழுப்புவோம். ஆண்டவர் நம்மீது இரக்கம் வைத்து, நம் முன்னோரோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவு கூர்வார். இன்றே நமக்கு முன்பாகப் படையை முறியடிப்பார்.

11 அப்பொழுது, இஸ்ராயேலை மீட்டுக் காப்பாற்றுகிறவர் ஒருவர் இருக்கிறார் என்று எல்லா இனத்தவரும் அறிவர், என்று சொன்னார்.

12 அன்னியர் தங்கள் கண்களை ஏறெடுத்து, எதிர்ப்பக்கத்தினின்று அவர்கள் வருவதைக் கண்டார்கள்.

13 போர் தொடுக்கத் தங்கள் பாளையத்தினின்று வெளிப்பட்டார்கள். யூதாசோடு இருந்தவர்களும் எக்காளத்தை ஊதினார்கள்.

14 ஒருவரையொருவர் தாக்கினார்கள். அன்னியர் சேனை முறியடிக்கப்படவே, அவர்கள் சமவெளிக்கு ஓட்டம் பிடித்தனர்.

15 கடைசியில் இருந்தவர்கள் எல்லாரும் வாளுக்கு இரையானார்கள். மற்றவர்களை ஜெசரோன் வரையிலும், இதுமேயா, அசோதுஸ், ஜாம்னிய சமவெளிகள் வரையிலும் துரத்திப்போனார்கள். அவர்களிலும் மூவாயிரம் பேர்வரை மடிந்தார்கள்.

16 யூதாஸ் தம் படைகள் பின்தொடரத் திரும்பி வந்தார்.

17 அவர் தம் மக்களை நோக்கி; கொள்ளைப் பொருட்களின் மேல் ஆசை வேண்டாம். ஏனென்றால், போர் நமக்கு எதிராய் நடக்கிறது.

18 கோர்ஜியாவும் அவன் படைகளும் நமக்கு அருகிலேயே மலையில் இருக்கின்றனர். இப்போது பகைவர்களை எதிர்த்துப் போர் செய்யுங்கள்; பிறகு தொல்லையின்றி கொள்ளையிடலாம் என்று சொன்னார்.

19 யூதாஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே சில படை வீரர் மலை மீது காணப்பட்டனர்.

20 கோர்ஜியா தன் படைகள் துரத்தப்பட்டதையும், தன் கூடாரங்கள் தீக்கிரையானதையும் கண்டான். ஏனென்றால், காணப்பட்ட புகை, காரியம் முடிந்து விட்டது என விளக்கியது.

21 அவர்கள் இதைப் பாத்ததனால் மிகவும் பயந்து, யூதாசும் அவர் படைகளும் போருக்கு ஆயத்தமாய் இருப்பதையும் கண்டு நடுங்கினார்கள்.

22 அன்னிய நாடுகளுக்கு ஓடிப்போனார்கள்.

23 யூதாசோ அவர்கள் பாளையத்தைக் கொள்ளையிடுவதற்குத் திரும்பினார். இவர்கள் திரண்ட பொன், வெள்ளி, விலையுயர்ந்த பட்டாடைகள், கடற்சிப்பி, முத்துகள், விலையேறப்பெற்ற பொருட்கள் இவற்றைக் கைப்பற்றினார்கள்.

24 திரும்புகையில், நன்மை மிக்கவரும், என்றென்றும் இரக்கமுள்ளவருமான விண்ணகக் கடவுளை இன்னிசை பாடி வாழ்த்தினார்கள்.

25 அன்று இஸ்ராயேலிடையே பெரிய மீட்பு உண்டாயிற்று.

26 அன்னியர்களில் தப்பித்தவர்கள் எல்லாரும் வந்து, நடந்த யாவற்றையும் லீசியாசிடம் அறிவித்தார்கள்.

27 அவன் அவற்றைக் கேள்வியுற்று மனம் நொந்து ஊக்கம் இழந்தான். ஏனென்றால், இஸ்ராயேல் மீது தான் கொண்டிருந்த எண்ணமும், அரசன் கட்டளையும் நிறைவேறாமற் போனதால் வருந்தினான்.

28 அடுத்த ஆண்டு அவன் அவர்களோடு சண்டை செய்வதற்கெனத் தேர்ந்தெடுத்த அறுபதினாயிரம் வீரரையும், ஐயாயிரம் குதிரை வீரரையும் படைதிரட்டினான்.

29 அவர்கள் யூதேயா நாட்டுக்கு வந்து பெத்தோரோனில் பாளையம் இறங்கவே, யூதாசும் பதினாயிரம் வீரரோடு அவர்களை எதிர்த்து நின்றார்.

30 பகைவருடைய வலிமை மிக்க சேனையைப் பார்த்து, அவர் கடவுளை மன்றாடிச் சொன்னதாவது: உம் ஊழியனாகிய தாவீதின் கையால் அரக்கனுடைய வலிமையை அழித்தவரும், சவுலின் புதல்வன் யோனத்தாசுடையவும் அவன் துணைவனுடையவும் கையால் அன்னியருடைய பாளையங்களை அழித்தொழித்தவருமான இஸ்ராயேலரின் மீட்பரே, உமக்குப் புகழ்ச்சி உண்டாகக்கடவது.

31 இந்தப் பகைவர் படையை உம் மக்களாகிய இஸ்ராயேல் கையில் காட்டிக் கொடுத்தருளும். அவர்கள் படைகளும் குதிரை வீரரும் வெட்கித் தோல்வி அடையக்கடவார்கள்.

32 அவர்களிடத்தில் பயத்தை வருவித்து, அச்சத்தால் அவர்கள் துணிவை அடக்கியருளும். நடுக்கத்தால் அவர்கள் குன்றிப்போவார்களாக.

33 உம்மை நேசிக்கிறவர்களுடைய வாளால் அவர்களை அழித்து விடும். உமது பெயரை அறிந்த யாவரும் இன்னிசைகளால் உம்மைத் துதிப்பார்களாக.

34 அவர்கள் போர்த்தொடுத்தார்கள். லிசியாஸ் படையில் ஐயாயிரம் பேர் மாண்டார்கள்.

35 லிசியாஸ் தன்னவர்கள் ஓடுவதையும், யூதர்கள் வாழவும் மாளவும் துணிந்திருப்பதையும் கண்டு, அந்தியோக்கிய நகரம் போய், திரும்பவும் திரளான படையோடு யூதேயா நாட்டை எதிர்த்துவர வீரர்களைச் சேர்த்தான்.

36 யூதாசும் அவர் சகோதரரும்: இதோ, நம் பகைவர் முறியடிக்கப்பட்டார்கள். இப்போது கடவுள் ஆலயத்தைத் தூய்மைப் படுத்திப் புதுப்பிப்போமாக, என்றார்கள்.

37 படைவீரர் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலை மீது ஏறினார்கள்,.

38 பாழடைந்திருந்த பரிசுத்த இடத்தையும், தீட்டுப்படுத்தப்பட்ட பீடத்தையும், நெருப்பினாலே எரிந்து போன கதவுகளையும், காட்டிலும் மலைகளிலும் இருப்பது போல முட்செடிகள் அடர்ந்த முகப்பு வாயிலையும், இடிபட்டிருந்த அறைகளையும் பார்த்து,

39 தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு பெரிதும் புலம்பி, தங்கள் தலைகளில் சாம்பலைப் போட்டுக் கொண்டார்கள்.

40 தரையில் குப்புற விழுந்து, எக்காளங்களை ஊதி, வானத்தை நோக்கி உரத்த சத்தமாய் கூவினார்கள்.

41 கடவுள் ஆலயம் தூய்மைப் படுத்தப்படும் வரையிலும் கோட்டையில் இருந்தவர்களோடு போர்புரியும்படி யூதாஸ் தம் படைகளுக்குக் கட்டளையிட்டார்.

42 கடவுள் கட்டளை மீது நன்மனம் கொண்டவர்களான குற்றமற்ற குருக்களைத் தேர்ந்துகொண்டார்.

43 அவர்களும் கடவுள் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தி, தீட்டுப்படுத்தப்பட்ட கற்களை அசுத்தமான இடத்தில் எறிந்துவிட்டார்கள்.

44 தீட்டுப்படுத்தப்பட்ட பலிபீடத்தை என்ன செய்வதென்று அவர் யோசித்தார்.

45 அதைப் புறவினத்தார் தீட்டுப் படுத்தியிருந்தமையால், அதனால் தங்களுக்கு யாதொரு கெடுதியும் வராதபடிக்கு அதை அழித்துவிட வேண்டுமென்ற நல்ல யோசனை பிறந்தது. அப்படியே அதனை அழித்து விட்டார்கள்.

46 அக்கற்களை என்ன செய்யவேண்டுமென்று ஓர் இறைவாக்கினர் தங்களுக்கு அறிவிக்கும் வரையில், அவைகளைக் கடவுள் ஆலயமிருந்த மலையில் ஒரு தகுந்த இடத்தில் பத்திரப்படுத்தினார்கள்.

47 கட்டளைப்படி முழுக்கற்களைக் கொண்டு முன்னிருந்த வண்ணம் புதிதான பீடத்தைக் கட்டினார்கள்.

48 புனித இடத்தையும் கடவுள் ஆலயத்துள் இருந்த மற்றக் கட்டடங்களையும் கட்டினார்கள். ஆலயத்தையும் முகப்பு வாயிலையும் புனிதப்படுத்தினார்கள்,

49 புதிதான பாத்திரங்களைச் செய்து புனிதப்படுத்தி, விளக்குத் தண்டுகளையும், சாம்பிராணிப் பீடத்தையும், மேசையையும் ஆலயத்துக்குக் கொண்டு வந்தார்கள்.

50 பீடத்தின் மீது சாம்பிராணி ஏற்றி, தண்டுகளின் மேலிருந்த விளக்குகளைக் கொளுத்தவே கடவுள் ஆலயம் ஒளிர்ந்தது.

51 மேசையின் மேல் அப்பங்களை வைத்து அலுவல்களையெல்லாம் முடித்தார்கள்.

52 நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு காஸ்பேயு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் பொழுது விடியு முன் எழுந்திருந்து,

53 கட்டளைப்படி தாங்கள் செய்திருந்த புதுப்பீடத்தின் மேல் பலி ஒப்புக்கொடுத்தார்கள்.

54 புறவினத்தார் கடவுள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தின நேரத்திலும் நாளிலும், இன்னிசைகளாலும் வீணைகளாலும் இசைக் கருவிகளாலும் மணிகளாலும் கடவுள் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.

55 எல்லா மக்களும் முகம் குப்புற விழுந்து, தங்களுக்கு உதவியாய் இருந்த கடவுளை ஆராதித்து வானமட்டும் வாழ்த்தினார்கள்.

56 எட்டு நாள் வரையிலும் பீடக் காணிக்கை செலுத்தி, மகிழ்ச்சியோடு பலிகளை ஒப்புக்கொடுத்து, நன்றிக்கு அடையாளமாகவும், வாழ்த்துக்காகவும் காணிக்கை செலுத்தினார்கள்.

57 பொன்முடிகளாலும் பதக்கங்களாலும் கடவுள் ஆலயத்தின் முகப்பை அலங்கரித்து, நிலைகளையும் பக்கத்து அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள்.

58 மக்களுக்குள் நிறைந்த அக்களிப்பு உண்டாக, அதுவரையிலும் அவர்கள் பட்ட அவமானம் நீங்கினது.

59 யூதாசும் அவர் சகோதரரும் இஸ்ராயேலர் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் ஆண்டு தோறும் காஸ்லேயு மாதம் இருபத்தைந்தாம் நாள் முதல் எட்டு நாள் வரையிலும் அக்களிப்போடும் அகமகிழ்ச்சியோடும் பீடக்காணிக்கை கொண்டாடப்பட வேண்டுமென்று தீர்மனித்தார்கள்.

60 அக்காலத்திலேயே சீயோன் மலையை வலுப்படுத்தி, சுற்றிலும் உயர்ந்த மதில்களையும் உறுதியான கோபுரங்களையும், முன்போலத் திரும்பவும் புறவினத்தார் தீட்டுப்படுத்தாத விதமாய்க் கட்டினார்கள்.

61 அதைக் காக்கும்படி படைகளை அவ்விடத்தில் நிறுத்தி. இதுமேயா நாட்டினரை எதிர்த்துத் தள்ள பெத்சூராவையும் அவர் வலுப்படுத்தினார்.

அதிகாரம் 05

1 பீடத்தையும் புனித இடத்தையும் கட்டினதைக் கேள்விப்பட்ட சுற்றிலுமிகுந்த புறவினத்தார் மிகவும் கோபம் கொண்டார்கள்.

2 தங்கள் மத்தியில் இருந்த யாக்கோபு குலத்தை அழித்தொழிக்க நினைத்து, அவர்களைக் கொல்லவும் கொடுமைப் படுத்தவும் ஆரம்பித்தார்கள்.

3 இதுமேயாவில் எசாயுவின் மக்களும், அக்கிராபத்தானேயில் இருந்தவர்களும் இஸ்ராயேலரைச் சூழ்ந்து கொண்டபடியால், யூதாஸ் அவர்களோடு போர் புரிந்து பெரிதும் சேதப்படுத்தினார்.

4 தம் மக்களைப் பிடிப்பதற்குக் கண்ணி போலும், படுகுழிபோலுமிருந்த பேயான் மக்களுடைய கெட்ட எண்ணத்தை அறிந்திருந்த அவர், வழியில் பதுங்கி ஏற்ற காலத்தை எதிர்நோக்கி இருந்தார்.

5 கோபுரங்களில் அவர்களைச் சூழ்ந்து வளைத்து, வெளியில் விடாமல் காத்து, அவர்களைத் துன்பப்படுத்தி, அவர்கள் இருந்த கோபுரங்களையும் அவற்றில் உள்ளவைகளையும் தீக்கு இரையாக்கினார்

6 அவர் அம்மோன் குலத்தவரிடம் சென்று, வலிமை மிக்க சேனையையும், திரளான மக்களையும், அவர்கள் தலைவனாய் இருந்த திமோத்தேயுஸ் என்பவனையும் கண்டார்.

7 அவர்களோடு போர்கள் பல புரிந்து, அவர்களை வதைத்து அழித்தார்.

8 காசேர் நகரையும், அதைச் சேர்ந்த நாடுகளையும் பிடித்த பிறகு யூதேயா நாடு திரும்பினார்.

9 கலாத்தில் இருந்த மக்கள் தங்கள் எல்லைகளுக்குள்ளாக இருந்த இஸ்ராயேலரை அழிக்கப் படைதிரட்டினார்கள். எனவே, இவர்கள் தாத்தேமான் கோட்டைக்கு ஓடிப்போனார்கள்.

10 யூதாசுக்கும் அவர் சகோதரருக்கும் இவர்கள் எழுதி அனுப்பினதாவது: சுற்றுப் பக்கத்து மக்கள் எங்களை ஒழித்துவிட ஒன்று கூடியிருக்கிறார்கள்.

11 நாங்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் கோட்டையைப் பிடிக்க ஆயத்தம் செய்கிறார்கள். திமோத்தேயுஸ் என்பவன் அவர்கள் படைத்தலைவன்.

12 ஆதலால், இப்போது நீர் வந்து, ஏற்கனவே எங்களுக்குள் பலர் கொல்லப்பட்டமையால், எங்களை அவர்கள் கைகளினின்று காப்பாற்ற வேண்டும்.

13 துபினைச் சுற்றிலுமிருந்த எங்கள் சகோதரர் எல்லாரும் கொலையுண்டார்கள். அவர்கள் மனைவியரையும் பிள்ளைகளையும் சிறைப்படுத்தினார்கள்; நாட்டைக் கொள்ளையடித்தார்கள். ஏறக்குறைய ஆயிரம் பேரைக் கொலை செய்தார்கள்.

14 இப்படியாக வாசித்துக் கொண்டிருக்கும் போதே, கலிலேயா நாட்டிலிருந்து கிழிந்த ஆடைகளோடு வேறு தூதர்கள் வந்து,

15 தங்களுக்கு எதிராய்த் தோலெமாயிதா, தீர், சீதோன் நகரத்தார் ஒன்று கூடியிருக்கிறார்கள். என்றும், தங்களை அழித்தொழிக்கக் கலிலேயா நாடு முழுவதும் அன்னியர் வந்து நிறைந்திருக்கிறார்கள் என்றும் சொன்னார்கள்.

16 யூதாசும் மற்றவரும் இந்த வார்த்தைகளைக் கேள்விப்பட்ட போது பெரிய கூட்டமொன்று கூட்டி, ஆபத்திலும், பகைவராலும் அழிந்தொழியும் தருணத்திலும் இருந்த தங்கள் சகோதரருக்குத் தாங்கள் செய்ய வேண்டியதைப் பற்றித் தீர்மானித்தார்கள்.

17 யூதாஸ் தம் சகோதரனான சீமோனை நோக்கி: நீ வீரரைத் தேர்ந்து கொண்டு கலிலியா நாட்டிலுள்ள உன் சகோதரரை மீட்கச் செல். நானும், என் சகோதரன் யோனத்தாசும் கலாத்தியாவுக்குப் போவோம் என்றார்.

18 யூதேயாவைக் காப்பதற்காக சக்கரியாசின் புதல்வன் சூசையையும், அசாரியாசையும் மக்கட் தலைவர்களாக மீதிப் படைகளோடு விட்டுவிட்டு:

19 இம்மக்களுக்குத் தலைவர்களாய் இருங்கள்; நாங்கள் திரும்பி வரும் வரையிலும் பகைவரோடு போர் செய்யாதீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சென்றார்.

20 கலிலேயா நாடு செல்வதற்காகச் சீமோனுக்கு மூவாயிரம் வீரரும், கலாத்திம் செவ்தற்காக யூதாசுக்கு எண்ணாயிரம் பேரும் நியமிக்கப்பட்டார்கள்.

21 சீமோன் கலிலேயாவுக்குச் சென்று புறவினத்தாரோடு பல போர்கள் செய்தான். அவர்கள் அவன் முன்பாகப் பயந்து ஓடினார்கள். அவன் தோலெமாயிதா நகர் வரைக்கும் அவர்களைப் பின்தொடர்ந்தான்.

22 அவர்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர்வரை மாண்டார்கள். அவன் அவர்களுடைய பொருட்களையும் கொள்ளையடித்தான்.

23 கலிலேயாவிலும் ஆர்பாத்திலும் இருந்தவர்களை அவர்களுடைய மனைவி மக்களோடும், அவர்களுக்குச் சொந்தமான பொருட்கள் எல்லாவற்றோடும் தன்னோடு கூட்டிக் கொண்டு மகிழ்ச்சியாய் யூதேயா நாட்டுக்கு வந்தான்.

24 யூதாஸ் மக்கபேயுசும், அவர் சகோதரன் யோனத்ததாசும் யோர்தான் நதியைக் கடந்து மூன்று நாட்களாகப் பாலைவனத்தில் நடந்தார்கள்.

25 நாபுத்தேயமார் அவர்களை எதிர்கொண்டு போய், அவர்களைச் சமாதானமாய் ஏற்றுக் கொண்டு, கலாத்தில் அவர்கள் சகோதரருக்கு நடந்த யாவற்றையும் வெளிப்படுத்தினார்கள்.

26 மேலும், வலிமை மிக்க மிகப்பெரிய கோட்டைகளாகிய பராசா, போசோர், அலிமிஸ், காஸ்போர், மாஜெத், கார்னாயிம் என்ற இடங்களில் பலர் அடைக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள்.

27 இன்னும் கலாத் நாட்டின் மற்ற நகரங்களிலும் பலர் அடைபட்டிருப்பதாயும், ஒரே நாளில் அவர்களைப் பிடித்து எல்லாரையும் அழித்தொழிப்பதற்குப் பகைவர் படைகள் மறுநாளே வரத் தீர்மானித்திருப்பதாயும் சொன்னார்கள்.

28 ஆதலால், யூதாசும் தம் படையைத் திருப்பிப் பாலைவனம் வழியாய்ப் போசோர் நகரத்துக்கு உடனே சென்று, அந்நகரத்தைப் பிடித்தார்; ஆடவர் எல்லாரையும் வாளுக்கு இரையாக்கி, நகரத்தைக் கொள்ளையடித்துக் கொளுத்தி விட்டார்.

29 பிறகு அவர்கள் இரவு வேளையில் புறப்பட்டுக் கோட்டை வரை சென்றார்கள்.

30 பொழுது விடியும் வேளை கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், கோட்டையைப் பிடிப்பதற்கும், அதிலுள்ளவர்களைத் தாக்குவதற்கும் ஏணிகளோடும் ஆயுதங்களோடும் வந்த எண்ணிலடங்காத மக்கட் திரளைக் கண்டார்கள்.

31 போர் தொடங்கி விட்டதென்று யூதாஸ் கண்டார். எக்காள ஒலி போலப் போர்க்குரல் வானத்தை எட்டியது. நகரத்தின் உள்ளேயிருந்தும் கூக்குரல் எழுந்தது.

32 ஆதலால், அவர் தம் படையை நோக்கி: இன்று உங்கள் சகோதரருக்காகச் சண்டை செய்யுங்கள் என்றார்.

33 தம் படையை மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பகைவர் பின்னால் நடந்தார். அவர்கள் எக்காளங்களை ஊதினார்கள்; ஆண்டவரை நோக்கி உரத்த குரலில் வேண்டினார்கள்.

34 திமோத்தேயுசின் படை வீரர் மக்கபேயுஸ் தான் வருகிறாரென்று அறிந்தவுடனே அவர் முன் ஓட்டம் பிடித்தார்கள். யூதாஸ் அவர்களைப் பெரிதும் துன்புறுத்த, அன்று அவர்களில் எண்ணாயிரம் பேர் வரை கொலையுண்டார்கள்.

35 யூதாஸ் மாஸ்பாவை நோக்கி நடந்து, அதைத் தாக்கிப் பிடித்தார்; ஆடவர் எல்லாரையும் கொன்று, நகரத்தைக் கொள்ளையடித்துக் கொளுத்தி விட்டார்.

36 அவ்விடமிருந்து புறப்பட்டுக் கலாத் நாட்டிலே காஸ்போன், மாஜெத், போசார், இன்னும் மற்ற நகரங்களையும் பிடித்தார்.

37 அதன் பிறகு திமோத்தேயுஸ் வேறொரு படை திரட்டி ஆற்றுக்கு அக்கரையில் இராபோன் நகருக்கு எதிரில் பாளையம் இறங்கினான்.

38 யூதாஸ் பகைவர் படையை உளவு பார்க்க ஆட்களை அனுப்ப, அவர்கள் திரும்பி வந்து: நம்மைச் சுற்றிலும் இருக்கும் இனத்தாரெல்லாம் அவனோடு சேர்ந்து பெரும்படையாய் இருக்கிறார்கள்.

39 தங்களுக்கு உதவியாக அராபியரையும் கூட்டி வந்து, உம்மோடு போர் செய்ய ஆயத்தமாகி, ஆற்றுக்கு அப்புறம் பாளையம் இறங்கியிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். யூதாஸ் அவர்களை எதிர்த்துச் சென்றார்.

40 அப்பொழுது திமோத்தேயுஸ் தன் படைகளோடு ஆற்றின் அருகில் வந்து, அவனே முதலில் ஆற்றைக் கடந்து நம்மிடம் வந்தாலொழிய நாம் அவனை எதிர்ப்பது கூடாது. ஏனென்றால், வலிமை மிகுந்திருப்பதால் அவன் நம்மைத் தோற்கடிப்பான்.

41 ஆற்றைக் கடக்கப் பயந்து அக்கரையில் பாளையம் இறங்குவானேயாகில், நாமே அக்கரைக்குச் சென்று அவனை எதிர்க்கலாம் என்று மொழிந்தான்.

42 ஆற்றங்கரையை அடைந்த யூதாஸ், அங்கே பெரியோரை நிறுத்தி: ஒருவரையும் விட்டு விடாதீர்கள்; ஆனால், எல்லாரும் போர்புரிய வரட்டும் என்று சொல்லி, முதன் முதல் தாமே தம் மக்களோடு ஆற்றைக் கடந்தார்.

43 பகைவர்கள் முறியடிக்கப்பட்டு, தங்கள் போர்க்கருவிகளை எறிந்து விட்டுக் கார்னாயிமில் இருந்த கோயிலுக்குள் ஓடிப்போனார்கள்.

44 அவர் நகரத்தைப் பிடித்து, கோயிலையும் அதில் இருந்தவர்களையும் நெருப்புக்கு இரையாக்கினார். கார்னாயிம் நகரம் அழிந்து, யூதாசின் முன் எதிர்த்து நிற்க முடியாமல் போயிற்று.

45 யூதாஸ், கலாத்தில் இருந்த சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லா இஸ்ராயேலரையும், அவர்கள் மனைவி மக்களையும், ஒரு பெரும் படையையும் யூதேயா நாடு செல்வதற்காகச் சேர்த்தார்.

46 அவர் எப்பிரோன் வரையிலும் வந்தார். போகும் வழியில் கட்டப்பட்டிருந்த அப்பெரிய நகரம் மிகவும் வலுப்படுத்தப்பட்டதென்றும், வலப்பக்கமோ இடப்பக்கமோ போக வழியில்லை, நகரத்தின் நடுவில் தான் போக வேண்டுமென்றும் கண்டார்.

47 நகரில் இருந்தவர்கள் அதிலேயே ஒளிந்து கொண்டு, கதவுகளைக் கற்களால் அடைத்திருந்தார்கள். யூதாஸ் அவர்களை நோக்கி:

48 நாங்கள் எங்களுடைய நாடு போய்ச் சேர்வதற்கு உங்கள் நகரத்தின் வழியாய்ப் போகிறோம். ஒருவரும் உங்களுக்குத் தீங்கு செய்யார். நாங்கள் கால்நடையாய்த் தான் போவோம் என்று சமாதான வார்த்தைகளைச் சொல்லி அனுப்பினார்.

49 கதவுகளைத் திறக்க அவர்களுக்கும் மனம் வரவில்லை. யூதாஸ், அவனவன் தான் இருந்த இடத்துக்கு முன்பாகவே நகரைத் தாக்க வேண்டுமென்று பாளையத்தில் அறிக்கையிடும்படி செய்தார்.

50 வீரர்களும் அவ்விதமே செய்தார்கள், பகல் முழுவதும் இரவு முழுவதும் அந்த நகரத்தைத் தாக்கி, அவர் அதைப் பிடித்தார்.

51 ஆடவர் எல்லாரும் வாளால் மடிந்தார்கள். அவர் நகரை அழித்தார்; பொருட்களைக் கொள்ளையடித்து, கொலையுண்டவர்களைத் தாண்டி நகரத்தைக் கடந்தார்.

52 யோர்தானைக் கடந்து பெத்சான் நகரத்துக்கு எதிரில் இருந்த ஒரு பெரிய மைதானத்தில் போகையில்,

53 யூதாஸ் எல்லாருக்கும் பின்னால் (கடைசியில்) வந்தவர்களுடன் சேர்ந்து நடந்து யூதேயா நாடு சேருமட்டும் வழி முழுமையும் தம் மக்களுக்குத் திடம் சொல்லிக் கொண்டு வந்தார்.

54 அவர்கள் அக்களிப்போடும் அகமகிழ்வோடும் சீயோன் மலை ஏறி தங்களில் யாரும் அழிவுறாமல் அமைதியாய்த் திரும்பி வந்ததற்காகப் பலிகளை ஒப்புக்கொடுத்தார்கள்.

55 கலாத் நாட்டில் யூதாசும் யோனத்தாசும் இருந்த காலத்திலும், தோலெமாயிதை எதிர்த்துக் கலிலேயாவில் அவர் சகோதரன் சீமோன் இருந்த காலத்திலும்,

56 அவர்கள் அடைந்த வெற்றிகளையும் புரிந்த போர்களையும் சக்காரியாஸ் புதல்வன் சூசையும், படைத்தலைவன் அசாரியாவும் கேள்விப்பட்டு:

57 நாமும் நமது பெயர் விளங்கும்படி செய்வோம்; நம்மைச் சுற்றிலும் இருக்கும் மக்களை எதிர்த்துச் சண்டை செய்வோம் என்று சொல்லி,

58 தங்கள் படைகளைச் சேர்த்து யாம்னியாவை எதிர்த்துப் போனார்கள்.

59 கோர்ஜியா என்பவன் நகரத்துக்கு வெளியே வந்து அவர்களை எதிர்த்துப் போர்தொடுத்தான்.

60 சூசையும் அசாரியாவும் யூதேயா எல்லைகள் வரை ஓடினார்கள். அன்று இஸ்ராயேல் மக்களில் இரண்டாயிரம் பேர் மாண்டனர். மக்கள் பெரும் தோல்வி அடைந்து ஓடினார்கள்.

61 ஏனென்றால், தாங்கள் வீரமிக்கவர்கள் ஆவோம் என்று எண்ணி, யூதாசும் அவர் சகோதரரும் சொன்னவற்றைக் கேளாததனால் தான் இப்படித் தோல்வி அடைந்தார்கள்.

62 இஸ்ராயேலுக்கு மீட்பு உண்டானது அவர்கள் கோத்திரத்தாரால் அன்று.

63 யூதாசின் படைகளோ இஸ்ராயேல் அனைவராலும், அவர்கள் பெயரைக் கேள்விப்பட்ட எல்லா இனத்தாராலும் கொண்டாடப் பட்டன.

64 எல்லாரும் அவர்களை எதிர் கொண்டு போய் மகிழ்ச்சியாய் அழைத்து வந்தார்கள்.

65 யூதாசும் அவர் சகோதரரும் புறப்பட்டு தென்னாட்டில் இருந்த எசாயு புதல்வரை எதிர்த்துப் போர் செய்தார்கள்; கேபுரோன் நகரையும்,அதைச் சேர்ந்த ஊர்களையும் அழித்தார்கள்; சுற்றிலும் இருந்த அதன் சுவர்களையும் கொளுத்தினார்கள்.

66 அன்னியரின் நாட்டில் புகுவதற்குப் படையெடுத்துச் சமாரியாவுக்குச் சென்றார்கள்.

67 அக்காலத்தில், கட்டளையின்றி தங்கள் வீரத்தைக் காட்டும்படி சண்டைக்குப் போன குருக்கள் சண்டையில் மாண்டார்கள்.

68 அன்னியருடைய நாட்டில் அசோத்துஸ் நகரை யூதாஸ் அடைந்து, அதன் பீடங்களை அழித்து, பொய்த் தேவர்களுடைய சிலைகளைச் சுட்டெரித்து, நகரத்தைக் கொள்ளையடித்து யூதேயா நாடு திரும்பினார்.

அதிகாரம் 06

1 அந்தியோக்கஸ் அரசன் மேல்நாடுகளுக்குச் சென்று, பாரசீக நாட்டில் பேர்போனதும் வெள்ளி, பொன் இவைகள் மிகுந்ததுமான எலிமாயித் நகரம் இருப்பதாகக் கேள்விப்பட்டான்.

2 அதில் செல்வம் நிறைந்த கோயிலும், கிரேசியாவில் முதன் முதல் அரசு செலுத்தின மசதோனியா மன்னனான பிலிப்பின் மகன் அலெக்சாந்தர் அங்கே விட்டுப்போன பொன்திரைகளும் கவசங்களும் கேடயங்களும் இருந்தன.

3 அரசன் வந்து நகரைக் கைப்பற்றிக் கொள்ளையடிக்க முயன்றான். ஆனால், நகரத்தின் உள்ளே இருந்தவர்களுக்கு அவன் எண்ணம் தெரிய வந்ததால் அவனால் முடியவில்லை.

4 அவர்கள் எல்லாரும் சண்டைக்குப் புறப்பட்டார்கள். அவன் அங்கிருந்து துயரத்தோடு ஓடிப் பபிலோனியா திரும்பினான்.

5 அவன் பாரசீகத்தில் இருந்த போதே யூதேயா நாட்டிலிருந்த அவன் படைகள் அழிக்கப்பட்ட செய்தி அவனுக்கு அறிவிக்கப்பட்டது.

6 லிசியாஸ் பெரிய படையோடு முதலில் சென்று முறியடிக்கப்பட்டானென்றும், அழிக்கப்பட்ட தன் படைகளிடமிருந்து எடுத்துக் கொண்ட போர்கருவிகளாலும் பொருட்களாலும் அவர்கள் வலிமை மிக்கவர்களானார்களென்றும்.

7 யெருசலேமில் தான் கட்டிய பீடத்தின் மேல் வைத்திருந்த வெறுப்பூட்டும் சிலைகளை அழித்து விட்டார்களென்றும், புனித இடத்தைச் சுற்றிலும் முன்போல் உயர்ந்த சுவர்கள் எழுப்பினார்களென்றும், தன் நகரமாகிய பெத்சூராவைச் சுற்றியும் அவ்விதமே செய்திருப்பதாகவும் அவன் கேள்விப் பட்டான்.

8 செய்திகளைக் கேள்விப்பட்ட அரசன் பயந்து மிகவும் நடுங்கினான். தான் நினைத்த வண்ணம் நடவாததனால், படுக்கையில் விழுந்து துயரத்தில் ஆழ்ந்தான்.

9 அவன் அவ்வாறு பலநாள் இருந்தான்; ஏனென்றால் துயரம் மேன் மேலும் அதிகரித்ததனால், தான் சாகப்போவதாக நினைத்தான்.

10 அவன் தன் நண்பர் எல்லாரையும் அழைத்து: என் கண்களினின்று தூக்கம் அகன்றது. கவலையினால் என் இதயம் தளர்ந்து பலவீனமானது.

11 என் இதயத்துள் நான் சொல்லிக் கொண்டது என்னவென்றால்: எவ்வளவு துயரத்திற்கு ஆளானேன்! இப்போது துயரக்கடலில் அமிழ்ந்தினேன். முன்போ, அதிகார மிகுதியால் மகிழ்ந்திருந்தேன்.

12 யெருசலேமில் நான் புரிந்த தீமைகளை இப்போது நினைவுகூர்கிறேன். அதில் இருந்த பொன், வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்து, யூதேயாவில் குடியிருந்தவர்களைக் காரணமின்றியே அழித்தொழிக்கும் படி படைகளை அனுப்பினேன்.

13 ஆதலால் தான் தீமைகள் என்னைச் சூழ்ந்து கொண்டனவென்று கண்டு கொண்டேன். இதோ, அன்னிய நாட்டில் துயர மிகுதியால் சாகிறேன் என்று புலம்பினான்.

14 அவன் தன் நண்பரில் ஒருவனான பிலிப்பு என்பவனை அழைத்துத் தன் நாட்டிற்கு அவனைத் தலைவனாக நியமித்து,

15 தன் மகனாகிய அந்தியோக்கஸ் என்பவனைப் பாதுகாத்துக் காப்பாற்றவும், நாட்டை அரசாளவும், தன் முடியையும் அரச ஆடையையும் மோதிரத்தையும் கொடுத்தான்.

16 அவ்விடத்திலேயே நூற்று நாற்பத்தொன்பதாம் ஆண்டு அந்தியோக்கஸ் அரசன் இறந்தான்.

17 அரசன் இறந்து போனானென்றும், தான் இளமையில் வளர்த்து வந்த அவன் மகன் அந்தியோக்கஸ் என்பவனை அரசனாக நியமித்தானென்றும் லீசியாஸ் அறிந்து கொண்டான்; அவனுக்கு எப்பாத்தோர் என்னும் பெயருமிட்டான்.

18 கோட்டையில் இருந்தவர்கள் கடவுள் ஆலயத்தைச் சுற்றி இஸ்ராயேலரை வளைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு எப்போதும் தீமை விளைவித்துப் புறவினத்தாரை வலுப்படுத்த முயன்றார்கள்.

19 யூதாஸ் அவர்களை அழித்தொழிக்க எண்ணி, அவர்களைச் சுற்றிலும் முற்றுகையிட மக்கள் அனைவரையும் அழைத்தார்.

20 நூற்றைம்பதாம் ஆண்டு எல்லாரும் ஒன்று கூடி முற்றுகையிட்டு, கல் எறியும் கருவிகளையும் வேறு போர்க் கருவிகளையும் செய்தார்கள்.

21 முற்றுகைக்குள் இருந்த சிலர் வெளியே வந்து இஸ்ராயேலில் தீயவரான சிலரைத் தங்களுடன் சேர்த்துக் கொண்டார்கள்.

22 இவர்கள் அரசனிடம் சென்று: எவ்வளவு காலம் எங்களுக்கு நீதி செலுத்தாமலும் எங்கள் பகைவரைப் பழிவாங்காமலும் இருப்பீர்?

23 நாங்கள் உம்முடைய தந்தைக்குக் கீழ்ப்படியவும், அவர் கட்டளைகளின்படி நடக்கவும், அவர் தீர்மானங்களை நிறைவேற்றவும் உடன்பட்டிருந்தோம்.

24 இதனால் எங்களுடைய மக்களின் புதல்வர் எங்களை விட்டு அகன்றார்கள். எங்களில் அகப்பட்டவர்கள் எல்லாரும் கொலை செய்யப்பட்டார்கள். எங்கள் சொத்துக்களும் பறிபோயின.

25 எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் நாடெங்கும் அவர்கள் தீமை செய்தார்கள்.

26 இன்று யெருசலேம் கோட்டையைத் தாக்க வருகிறார்கள்; பெத்சூராவையும் வலுப்படுத்திக் கொண்டார்கள்.

27 நீர் விரைவில் அவர்களைத் தடுக்காவிடில், இதனினும் பெரிய காரியங்களைச் செய்வார்கள். அவர்களை அடக்குவது முடியாததாகும் எனக் கூறினார்கள்.

28 இதைக் கேட்ட அரசன் கோபம் கொண்டான்; தன் நண்பரெல்லாரையும் படைத்தலைவர்களையும் குதிரைப்படைத் தலைவர்களையும் அழைத்தான்.

29 அன்னிய நாடுகளிலிருந்தும், கடற்கரை நகரங்களிலிருந்தும் அவன் ஆதரவிலிருந்த படைகளெல்லாம் வந்து சேர்ந்தன.

30 அவன் படையின் கணக்கு: இலட்சம் காலாட்கள்; இருபதினாயிரம் குதிரைவீரர்; சண்டைக்குப் பழக்கப் பட்ட முப்பத்திரண்டு யானைகள்.

31 அவர்கள் இதுமேயா வழியாகச் சென்று பெத்சூராவைச் சூழ்ந்து கொண்டு, பலநாள் போர்புரிந்து போர்க் கருவிகளைச் செய்தார்கள். உள்ளிருந்தவர்களோ வெளியே வந்து பகைவர்படைகளைத் தீக்கிரையாக்கி வீரத்தோடு போர்செய்தார்கள்.

32 யூதாஸ் கோட்டையிலிருந்து புறப்பட்டு, அரசனுடைய பாளையத்துக்கு எதிராய்ப் பேத்சக்ராவில் பாளையம் இறங்கினார்.

33 அரசன் பொழுது விடியுமுன் எழுந்து பேத்சக்கரா வழியாய்த் தன் படைகளை வேகமாய் நடத்திப் போருக்கு ஆயத்தமாக்க, அவர்கள் எக்காளங்களை ஊதினார்கள்.

34 யானைகளைச் சண்டைக்குத் தூண்டுவதற்காக, அவர்கள் அவைகளுக்குக் கொடி முந்திரிப் பழத்தினுடையவும் கம்பளிப் பழத்தினுடையவும் சாற்றைக் குடிக்கக் கொடுத்தார்கள்.

35 மிருகங்களைச் சாரிசாரியாகப் பிரித்து, ஒவ்வொரு யானையோடும் இரும்புக் கவசங்களையும் செப்புத் தலைச்சீராக்களையும் அணிந்த ஆயிரம் வீரரும், ஐந்நூறு தேர்ந்தெடுத்த குதிரைவீரரும் அருகே இருந்தனர்.

36 யானைகள் போன இடமெல்லாம் இவர்களும் போனார்கள். எங்கெங்கே போயினவோ அங்கேயே தாங்களும் போய், அவற்றை விட்டுப் பிரியவில்லை.

37 ஒவ்வொரு யானையின் மீதும் அதைக் காப்பதற்கு மரத்தினால் செய்யப்பட்ட வலிமை பொருந்திய அம்பாரிகள் வைக்கப்பட்டிருந்தன; போர்க்கருவிகளும் இருந்தன. இந்தியர் யானையை நடத்த, முப்பத்திரண்டு வீரர்கள் ஒவ்வொரு அம்பாரியின் மேல் இருந்து கொண்டு போர்செய்தார்கள்.

38 அரசன் மீதியான குதிரைப் படையை இரு பகுதிகளாகப் பிரித்து, தன் படையை எக்காளத் தொனியால் தூண்டவும், நெருங்கி அணியணியாய் இருந்த காலாட்களுக்குத் துணிவூட்டவும் செய்தான்.

39 பொன், செப்புக் கேடயங்களின் மேல் சூரிய ஒளி பட்ட போது பக்கத்து மலைகளில் ஒளி வீசி, எரிகிற விளக்குகள் போல் அவை ஒளிர்ந்தன.

40 உயர்ந்த மலைகளின் வழியாய் அரசனுடைய படையின் ஒரு பகுதி நடந்தது. மற்றொரு பகுதி சமவெளியில் நடந்தது. அவர்கள் எச்சரிக்கையாயும் வரிசை வரிசையாயும் போனார்கள்.

41 படைத்திரளின் கொக்கரிப்பினாலும், கூட்டமாக நடந்ததால் ஏற்பட்ட சத்தத்தாலும், போர்க்கருவிகள் நெருங்கி மோதினதால் உண்டான ஓசையினாலும் பூமியில் வாழ்ந்தவர்கள் நடுங்கினார்கள். ஏனென்றால், படை திரண்டதும் வலுத்ததுமாய் இருந்தது.

42 யூதாசும் தம் படையோடு போர் செய்யச் சென்றார். அரசனுடைய படையில் அறுநூறு பேர் மாண்டார்கள்.

43 சௌரா மகன் எலெயாசார், அரசனுடைய போர்க்கருவிகளால் நிறைக்கப்பட்டு, மற்ற யானைகளை விடப் பெரிதாய் இருந்த ஒரு யானையைக் கண்டு, அரசன் தான் அதன் மேல் இருக்கிறானென்று எண்ணினான்.

44 அவன் தன் மக்களைக் காப்பதற்கும், புகழ் அடைவதற்கும் தன்னைத் தானே கையளித்தான்.

45 வெகு துணிவோடு பகைவர் படையின் நடுவே ஓடி, வலப்புறத்திலும் இடப்புறத்திலும் தன் முன்பாக அகப்பட்டதெல்லாம் கொன்று அழித்து,

46 அந்த யானையின் கால்களின கீழ் நுழைந்து சென்று அதைக் கொன்றான். அதுவும் அவன் மேல் விழுந்தது.

47 அவனும் இறந்தான். ஆனால், யூத மக்கள் அரசனுடைய வலிமையையும், அவனது படையின் வீரத்தையும் கண்டு பின்வாங்கினார்கள்.

48 அரசனுடைய படை அவர்களுக்கு எதிராய் யெருசலேம் சென்று, யூதேயாவையும் சீயோன் மலையையும் தாக்கியது.

49 அவன் பெத்சூராவில் இருந்தவர்களோடு சமாதானம் செய்துகொண்டான். ஓய்வுநாளை முன்னிட்டு உணவுக்கு ஒன்றுமில்லாமையால் எல்லாரும் நகருக்கு வெளியே வந்தார்கள்.

50 அரசன் பெத்சூராசைப் பிடித்து அதைக் காப்பதற்குக் காவலரை நியமித்தான்.

51 தன் படையைப் புனித இடத்துக்கு நடத்தி, அங்குப் பலநாள் தங்கினான். அவ்விடத்தில் இடிக்கும் கருவிகளையும் இயந்திரங்களையும் நெருப்பு ஈட்டிகளையும் கல் எறியும் பொறிகளையும் வேல்களையும் அம்பு எய்யும் வில்லுகளையும் கவன்களையும் செய்தான்.

52 முற்றுகைக்குள் இருந்தவர்களும் அவனுக்கு எதிராய்ப் போர்க்கருவிகளைச் செய்து பலநாள் எதிர்த்துப் போராடினார்கள்.

53 ஏழாவது ஆண்டானபடியால், நகரத்தில் உணவுப் பொருட்கள் ஒன்றும் இல்லாதிருந்தது. யூதேயாவில் தங்கியிருந்தவர்கள் மீதி வைத்திருந்ததைச் செலவழித்து விட்டார்கள்.

54 புனித இடத்தைக் காக்க சில வீரர்கள் மட்டும் இருந்தார்கள். ஏனென்றால், பசியினால் வருந்தினமையால் பலர் தங்கள் இடம் போய்ச் சேர்ந்தார்கள்.

55 அந்தியோக்கஸ் அரசன் உயிரோடிருந்த போதே, அவனால் அவன் மகன் அந்தியோக்கஸ் என்பவனைக் காப்பாற்றவும், அவன் நாட்டை ஆளவும் நியமிக்கப்பட்ட பிலிப்பு என்பவன், பாரசீகம், மேதியா ஆகிய நாடுகளோடு திரும்பி வந்தான் என்றும்,

56 அரச காரியங்களைத் தானே நடத்தத் தேடுகிறான் என்றும் லிசியாஸ் கேள்விப்பட்டான்.

57 அவன் உடனே அரசனிடமும், மற்றப் படைத் தலைவர்களிடமும் போய்: நாளுக்கு நாள் நாம் வலிமை குன்றி வருகிறோம். உணவும் வெகு சொற்பமே உள்ளது. நாம் முற்றுகை போட்டிருக்கும் இடமோ அதிகப் பாதுகாப்புள்ளதாய் இருக்கிறது. நமது நாட்டின் காரியங்களையும் ஒழுங்குபடுத்த வேண்டி இருக்கிறது.

58 ஆதலால், இப்போது இந்த மனிதரோடு நாம் உறவுகொண்டாடி, அவர்களோடும் அவர்களைச் சேர்ந்தவர்களோடும் சமாதானம் செய்து கொள்வோம்.

59 அவர்கள் முன் போலத் தங்களுக்குரிய சடங்குகளை நிறைவேற்றிக் கொள்ளும்படி விட்டுவிட்டோம். அவர்களுக்கு உரிய சடங்குகளை நாம் அவமதித்ததனால் அல்லவா அவர்கள் கோபமும் மூண்டு இவைகளையெல்லாம் செய்தார்கள் என்று சொன்னான்.

60 அவன் சொன்ன வார்த்தைகளை அரசனும் பிரபுக்களும் எற்றுக் கொண்டு, யூதரோடு சமாதானம் செய்வதற்கு ஆள் அனுப்ப, அவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

61 மேலும், அரசனும் பிரபுக்களும் அதை உறுதிப்படுத்தி ஒப்புக்கொண்டு, கோட்டையை விட்டுப் போனார்கள்.

62 அரசன் சீயோன் மலைக்குச் சென்று, அதன் வலுத்த பாதுகாப்புகளையெல்லாம் கண்டு, தான் உறுதிப் படுத்தின சமாதானத்தை மீறிச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த சுவர்களை அழிக்கும்படி கட்டளை கொடுத்து விட்டு,

63 விரைவாய் அந்தியோக்கியா நகரம் திரும்பினான்; அவ்விடத்தில் பிலிப்பு ஆட்சி செலுத்தி வருவதைக் கண்டு, அவனோடு போர் செய்து நகரைக் கைப்பற்றினான்.

அதிகாரம் 07

1 நூற்றைம்பத்தோராம் ஆண்டு செலேயுக்கஸ் புதல்வன் தெமெத்திரியுஸ் உரோமையினின்று புறப்பட்டு, சில மனிதரோடு கடற்கரை நகரம் சேர்ந்து அவ்விடத்தில் ஆண்டு வந்தான்.

2 தன் முன்னோருடைய தலைநகருக்குள் அவன் புகுந்த போது, அவனுடைய படைவீரர் அந்தியோக்கஸ் என்பவனையும் லிசியாசையும் பிடித்து, அவனுக்கு முன் அவர்களைக் கூட்டி வந்தார்கள்.

3 அவன் அதைக் கேள்விப்பட்டு: அவர்களை என்முன் கொண்டு வராதீர்கள் என்றான்.

4 அவர்களைப் படைவீரர் கொன்று விட்டார்கள். தெமெத்திரியுசும் நாட்டில் அரியணை ஏறினான்.

5 இஸ்ராயேலில் தீயவரும் அக்கிரமிகளும் அவனிடம் வந்தார்கள். தலைமைக்குரு ஆக ஆசை கொண்ட அவர்களுடைய தலைவன் ஆல்சிமுசும் வந்தான்.

6 அவர்கள் அரசனிடம் இஸ்ராயேல் மக்கள் மேல் குற்றம் சாட்டி: உம்முடைய நண்பரெல்லாரையும் யூதாசும் அவன் சகோதரரும் கொன்று, எங்களையும் எங்கள் நாட்டை விட்டுத் துரத்தி விட்டார்கள்.

7 ஆதலால், இப்போது உமக்கு நம்பிக்கையுள்ள ஒரு மனிதனை அனுப்பும். அவன் போய் எங்களுக்கும் அரசருடைய நாடுகளுக்கும் அவர்கள் செய்துள்ள கொடுமைகளையெல்லாம் பார்க்கட்டும்; அவர்களுடைய நண்பரையும், அவர்களுக்கு உதவி செய்தவர்களையும் தண்டிக்கட்டும் என்றார்கள்.

8 அரசன் தன் நண்பரில் பெரியாற்றுக்கு அப்பக்கம் இருந்த நாட்டில் பெரியவனும், அரசனிடம் உண்மை உள்ளவனுமாக இருந்து ஆண்டு வந்த பாக்கீது என்பவனைத் தேர்ந்து கொண்டு,

9 யூதாஸ் செய்த கொடுமைகளைப் பார்வையிட அவனை அனுப்பி வைத்தான்; மேலும், கொடியவனான ஆல்சிமுஸ் என்பவனையும் குருவாக ஏற்படுத்தி, இஸ்ராயேல் மக்களைப் பழிவாங்கவும் கட்டளை கொடுத்தான்.

10 அவர்கள் பெரும் படையுடன் யூதேயா நாட்டுக்கு மிக விரைவாய் வந்தார்கள்; யூதாசிடமும் அவர் சகோதரிடமும் தூதுவர்களை அனுப்பி, கபடமாய்ச் சமாதான வார்த்தைகளைப் பேசினார்கள்.

11 ஆனால், அவர்கள் அவ்வார்த்தைகளுக்குச் செவிமடுக்கவில்லை. ஏனென்றால், பெரும் படையோடு வந்திருந்ததைக் கண்டனர்.

12 மறை நூலறிஞர் கூடி, நியாயமானவைகளைக் கேட்க ஆல்சிமுசிடமும் பாக்கீதிடமும் சென்றார்கள்.

13 இஸ்ராயேல் மக்களில் அசிதேயர் முதன் முதல் அவர்களுடன் சமாதானம் செய்து கொள்ள முயன்றார்கள்.

14 ஏனென்றால், ஆரோன் கோத்திரத்தில் குரு ஒருவன் வந்திருக்கிறான்; அவன் நம்மை மோசம் செய்ய மாட்டான் என்று சொல்லிக் கொண்டார்கள்.

15 அவனும் அவர்களுக்குச் சமாதான வார்த்தைகளைச் சொல்லி: உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் தீங்கு செய்ய மாட்டோம் என்று ஆணையிட்டான்.

16 அவர்கள் அவனை நம்பினார்கள்; அவன் அவர்களில் அறுபது பேரைப் பிடித்து ஒரே நாளில் கொன்றான்.

17 ஏனென்றால், மறைநூலில்: யெருசலேமைச் சுற்றிலும் உம் புனித ஊழியர்களுடைய உடலைச் சிதைத்தார்கள்; அவர்களின் இரத்தத்தைச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம் செய்ய ஒருவருமில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது.

18 மக்கள் எல்லாரும் பயந்து நடுங்கினார்கள் ஏனெனில் அவர்களிடத்தில் உண்மையும் நீதியும் இல்லை; தங்கள் வார்த்தையை மீறி, தாங்கள் ஆணையிட்டதற்கு எதிராக நடந்தார்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.

19 பாக்கீது யெருசலேமை விட்டு அகன்று பெத்சேக்காவைத் தாக்கினான்; ஆட்களை அனுப்பி, தன்னை விட்டு ஓடிப்போனவர்களைப் பிடித்து, மக்களில் சிலரைக் கொன்று ஒரு பெரும் கிணற்றில் போடும்படி செய்தான்.

20 அந்த நாட்டை ஆல்சிமுசிடம் ஒப்புவித்து, அவனுக்கு உதவியாகச் சில படைகளை விட்டு விட்டு பாக்கீது அரசனிடம் சென்றான்.

21 ஆல்சிமுஸ் தன் குருத்துவத்தை நிலைநிறுத்தக் கூடுமான முயற்சி செய்தான்.

22 மக்களைக் கலகப்படுத்தினவர்கள் எல்லாரும் அவனோடு சேர்ந்து கொண்டு, யூதேயா நாட்டைக் கைப்பற்றி, இஸ்ராயேலுக்கு அதிகத் தீங்கு செய்தார்கள்.

23 ஆல்சிமுசும் அவனுடன் இருந்தவர்களும் புறவினத்தார் செய்ததை விட அதிகமாக இஸ்ராயேல் மக்களுக்குச் செய்த கொடுந் துன்பங்களை யூதாஸ் கண்டு,

24 யூதேயா நாட்டு எல்லைகளைச் சுற்றி வந்து, தம்மை விட்டுப் போனவர்களைப் பழிவாங்கினார். அதன் பிறகு ஒருவரும் தம் நாட்டை விட்டுப் போகவில்லை.

25 யூதாசும் அவருடன் இருந்தவர்களும் அதிக வலிமை மிக்கவர்களென்று ஆல்சிமுஸ் கண்டு, அவர்களை எதிர்ப்பது கூடாதென்று அறிந்து, அரசனிடம் திரும்பிப் போய், அவர்கள் மீது பல குற்றங்களைச் சுமத்தினான்.

26 அரசன் தலையான பிரபுக்களில் ஒருவனான நிக்கானோரை அனுப்பினான். இவன் இஸ்ராயேலின் பகைவன், அம்மக்களை அழித்தொழிக்கும்படி இவனுக்கு அரசன் கட்டளையிட்டான்.

27 நிக்கோனார் பெரும் படையோடு யெருசலேம் வந்து, யூதாசுக்கும் அவர் சகோதரருக்கும் கபடமாய்ச் சமாதான வார்த்தைகளை சொல்லி அனுப்பி: எனக்கும் உங்களுக்குமிடையே சண்டை வேண்டாம்.

28 சமாதானமாய்ச் சிலரோடு உங்களைப் பார்க்க வருவேன் என்று சொல்லி, யூதாசிடம் வந்து ஒருவரை ஒருவர் சமாதானமாய்க் கண்டு கொண்டார்கள்.

29 ஆனால், பகைவர் யூதாசைப் பிடிக்கத் தயாராய் இருந்தார்கள்.

30 அவன் தம்மைக் கபடமாய்ப் பிடித்துக் கொள்ள வந்தானென்று யூதாஸ் அறிந்து, அவனுக்கு அஞ்சி, அவனைத் திரும்பவும் பார்க்க மனமில்லாதவராய் இருந்தார் ¢

31 நிக்கானோர் தன் எண்ணம் வெளியாகிவிட்டதை அறிந்து, காப்பார்சலாமா அருகில் யூதாசை எதிர்த்துப் போர் செய்யப் போனான்.

32 நிக்கானோர் படையில் ஏறக்குறைய ஐயாயிரம் பேர் மாண்டார்கள்; மற்றவர்கள் தாவீதின் நகரத்துக்கு ஓடிப் போனார்கள்.

33 இதன் பிறகு நிக்கானோர் சீயோன் மலையில் ஏறினான். மக்களுடைய குருக்களில் சிலர் அவனைச் சந்திக்கவும், அரசனுக்குக் கொடுக்கும் காணிக்கைகளை அவனிடம் கொடுக்கவும் சென்றார்கள்.

34 அவன் அவர்களைக் கேலி செய்து நிந்தித்து இகழ்ந்தான்; செருக்குடன் பேசினான்; கோபமாய்ச் சபதம் கூறி:

35 யூதாசும் அவன் படையும் என் கையில் காட்டிக் கொடுக்கப்படாமல் போனால், வெற்றி வீரனாய் நான் திரும்பி வரும் போது உங்கள் ஆலயத்தைக் கொளுத்தி விடுவேன் என்று சொல்லி, வெகு கோபமாய்ப் போய் விட்டான்.

36 குருக்கள் உட்புகுந்து, பீடத்துக்கும் ஆலயத்துக்கும் முன்பாக நின்றுகொண்டு, அழுகையோடு:

37 ஆண்டவரே, உம்முடைய பெயரைப் போற்றுவதற்கு இந்த ஆலயத்தைத் தேர்ந்துகொண்டீர். உம் மக்கள் உம்மை நோக்கி வேண்டவும், உமது உதவியை மன்றாடவும் ஏற்பட்ட இடமன்றோ இது?

38 அந்த மனிதனையும் அவன் படைகளையும் பழிவாங்கும். அவர்கள் வாளுக்கு இரையாகக்கடவார்கள். அவர்கள் சொன்ன தெய்வ நிந்தைகளை நினைவு கூர்ந்து, அவர்கள் வாழும்படி விட்டுவிடாதீர் என்று மன்றாடினார்கள்.

39 நிக்கானோர் யெருசலேமை விட்டு நீங்கிப் பெத்தோரோனில் பாளையம் இறங்கினான். அவ்விடத்தில் சீரியா படையும் அவனைச் சேர்ந்துகொண்டது.

40 யூதாசும் மூவாயிரம் பேரோடு அதார்சாவில் பாளையம் இறங்கி, கடவுளை நோக்கி:

41 ஆண்டவரே, சொன்னாக்கெரியு என்னும் அரசனால் அனுப்பப்பட்டவர்கள் உம்மைத் தெய்வ நிந்தை சொன்னதால் வானதூதர் போய் அவர்களில் இலட்சத்து எண்பத்தையாயிரம் பேர்களைக் கொலை செய்தார்.

42 அவ்வாறே எங்களுக்கு முன்பாக இன்று இப்படையையும் அழித்தருளும். அவன் உம்முடைய ஆலயத்தைப் பற்றித் தெய்வ நிந்தை சொன்னானென்று மற்றவர்கள் அறியட்டும். அவன் கெட்ட எண்ணத்திற்கு ஏற்றபடி அவனைத் தண்டித்தருளும் என்று வேண்டினார்.

43 ஆதார் மாதம் பதின்மூன்றாம் நாள் அவர்கள் போர்செய்தார்கள். நிக்கானோர் படை தோல்வி அடைய, அவனே முதலில் மடிந்தான்.

44 நிக்கானோர் மடிந்ததைக் கண்ட அவன் படைவீரர் தங்கள் போர்க்கருவிகளை எறிந்து விட்டு ஓட்டம் பிடித்தார்கள்.

45 அதார்சா முதல் காசாரா வரும் வரை அவர்களை ஒருநாள் முழுவதும் பின்தொடர்ந்து, பிறருக்கு அறிவிக்கும் படியாக அவர்களுக்குப் பின்னால் இவர்கள் எக்காளங்களை ஊதினார்கள்.

46 சுற்றுப்பக்கத்து யூதேயா ஊர்களின் மக்களெல்லாம் புறப்பட்டு, மிக்கத் துணிவோடு அவர்களைத் தாக்கினார்கள்; மறுபடியும் அவர்களை எதிர்த்து எல்லாரையும் கொன்றார்கள்.

47 தப்பிப்பிழைத்தவன் ஒருவனும் இல்லை. அவர்கள் பொருட்களைக் கொள்ளை அடித்தார்கள்; நிக்கானோர் தலையையும், அவன் அகந்தையோடு நீட்டிக் காட்டின வலக்கையையும் வெட்டி வந்து யெருசலேமுக்கு முன்பாகத் தொங்க விட்டார்கள்.

48 மக்கள் மிக்கக் களிப்புற்று அந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடினர்.

49 ஆதார் மாதம் பதின்மூன்றாம் நாளாகிய அந்நாளை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டுமெனத் தீர்மானித்தார்கள்.

50 சிறிது காலம் யூதேயா நாட்டில் அமைதி நிலவியது.

அதிகாரம் 08

1 உரோமையர் மிக்க வலிமை வாய்ந்தவர்களென்றும், கேட்பதற்கெல்லாம் அவர்கள் சம்மதிக்கிறார்களென்றும் யூதாஸ் கேள்விப் பட்டார். அவர்கள் மிக்க வீரம் உள்ளவர்களாதலால், அவர்களை அண்டிப் போனவர்கள் எல்லாரும், அவர்களோடு நட்பு கொண்டார்கள்.

2 அவர்கள் கலாசியாவைக் கைப்பற்றி அதைத் தங்களுக்குத் திறைகட்டும்படி செய்ததையும், அதற்காக அவர்கள் செய்த போர்களையும், அதற்கு அவர்கள் செய்த நன்மைகளையும் அவர் கேள்விப்பட்டார்.

3 அவர்கள் இஸ்பானியாவில் எவ்வளவு செய்தார்களென்றும், அந்நாட்டிலிருந்த பொன், வெள்ளிச் சுரங்கங்களை எவ்விதம் தங்கள் வயப்படுத்தினார்களென்றும், தங்கள் புத்திக் கூர்மையினாலும் பொறுமையினாலும் எல்லா இடங்களையும் கைப்பற்றினார்களென்றும்,

4 தங்களுக்கு அதிகத் தொலைவிலிருந்த நாடுகளைப் பிடித்து, பூமியின் எல்லைகளினின்று அந்நாடுகளைக் கீழ்ப்படுத்தவந்த அரசர்களை வென்று பெரிதும் சேதப்படுத்தினார்களென்றும், மற்ற அரசர்கள் ஆண்டு தோறும் அவர்களுக்குத் திறை செலுத்தி வருகிறார்களென்றும்,

5 தங்களுக்கு எதிராய்ப் படையெடுத்து வந்த பிலிப்புவையும், சேத்தையர் அரசனான பெர்சனையும், தங்களுக்கு எதிராய் ஆயுதம் தாங்கி வந்த மற்றவர்களையும் முறியடித்துக் கீழ்ப்படுத்தினார்களென்றும்,

6 ஆசியாவின் அரசனான பெரிய அந்தியோக்கஸ் நூற்றிருபது யானைகளோடும் குதிரை வீரரோடும் தேர்களோடும் பெரும்படையோடும் அவர்களை எதிர்த்து வந்த போது தோற்கடிக்கப்பட்டானென்றும்,

7 அவனை உயிரோடு பிடித்து, அவனும், அவனுக்குப் பிறகு அரசாள்பவர்களும் தங்களுக்குத் திறை செலுத்தும்படியாகவும், பிணைகள் கொடுக்கும்படியாகவும் ஏற்பாடு செய்தார்களென்றும்,

8 அவர்கள் நாடுகளில் மிகவும் செழிப்பான இந்தியா, மேதியா, லிதோஸ் நாடுகளை அவர்களிடமிருந்து கைப்பற்றி எயுமேன் அரசனுக்குக் கொடுத்தார்களென்றும்,

9 கிரேசியா நாட்டார் அவர்களை கீழ்ப்படுத்த எண்ணியிருந்த போது அவர்கள் அதை அறிந்து,

10 படைத்தலைவன் ஒருவனை அவர்களுக்கு எதிராய் அனுப்பி, அவர்களோடு போர் செய்து அவர்களில் பலரைக் கொன்று, அவர்கள் மனைவி மக்களைச் சிறைப் படுத்தி, பொருட்களையும் பறித்து, நாட்டையும் கைப்பற்றி, சுவர்களைத் தகர்த்துடைத்து, அவர்களை அந்நாள் வரை அடிமைத்தனத்தில் அடக்கி வைத்தார்களென்றும்,

11 தங்களை எதிர்த்து வந்த மற்ற நாடுகளையும் தீவுகளையும் அழித்துத் தங்கள் ஆளுகைக்கு உட்படுத்தினார்களென்றும்,

12 ஆனால், தங்களோடு சமாதானமாயிருந்த தங்கள் நண்பரோடு நட்பைக் காப்பாற்றினார்களென்றும், அண்மையிலும் தொலைவிலுமிருந்த நாடுகளைத் தங்கள் கைவசப்படுத்தினார்களென்றும், அவர்கள் பெயரைக் கேட்ட யாவரும் அவர்களுக்கு அஞ்சினார்களென்றும்,

13 யார் யார் அரசாள வேண்டுமென்று மனம் வைத்து உதவி செய்தார்களோ அவர்களை அரசாளச் செய்தும், யார் யாரை நீக்க வேண்டுமென்று எண்ணினார்களோ அவர்களை நீக்கியும் வந்தார்களென்றும், மிகவும் வலிமை வாய்ந்தவர்களென்றும்,

14 இத்தகைய புகழிலும் அவர்களுக்குள் மற்றவர்களை விடப் பெரியவன் என்று காண்பிக்க முடிதரித்தவனும் அரசவுடை அணிந்தவனும் யாரும் இல்லையென்றும்,

15 தங்கள் தகைமைக்கு ஏற்ற காரியங்களை ஆய்ந்து நடத்த ஒரு சங்கம் ஏற்பாடு செய்து, சங்கத்தாராகிய முந்நூற்றிருபது பேருடைய கருத்துகளை நாள்தோறும் கேட்டார்களென்றும்,

16 தங்கள் நாடெங்கும் ஆட்சி செய்ய ஆண்டுதோறும் ஒரே மனிதனுக்கு அதிகாரமனைத்தும் கொடுத்தார்களென்றும், தங்களுக்குள் பொறாமையில்லாமலும் கறுவில்லாமலும் ஒருவனுக்கே கீழ்ப்படிந்து வந்தார்களென்றும் கேள்விப்பட்டார்.

17 ஆதலால், யூதாஸ், யாக்கோபு மகன் அருளப்பனின் புதல்வன் எயுபோலமுசையும், எலேயாசார் புதல்வன் யாசோனையும் தேர்ந்தெடுத்து, உரோமையரோடு சமாதானமும் நட்பும் செய்து கொள்வதற்காகவும்,

18 இஸ்ராயேல் நாட்டை அடிமைப்படுத்திய கிரேக்கருடைய கொடுமையினின்று தங்களை விடுவிக்கக் கேட்கும்படியாகவும் உரோமைக்கு அவர்களை அனுப்பினார்.

19 அவர்கள் வெகுதூரம் கடந்து உரோமைக்குச் சென்று, சங்கத்தில் நுழைந்து:

20 யூதாஸ் மக்கபேயுசும் அவர் சகோதரரும் யூத மக்களும் உங்களோடு நட்பும் சமாதானமும் செய்து கொள்வதற்கும், எங்களை உங்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் நீங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாகவும் எங்களை அனுப்பினார்கள் என்றார்கள்.

21 அவர்கள் சொல்லியது அனைவருக்கும் பிடித்திருந்தது.

22 சமாதானத்தினுடையவும் உடன்படிக்கையினுடையவும் நினைவாக அவர்கள் எழுதி, திரும்பவும் அவற்றைச் செப்புத் தகடுகளில் எழுதி யெருசலேமுக்கு அனுப்பினார்கள்.

23 அதாவது: என்றென்றும் கடலிலும் தரையிலும் உரோமையருக்கும் யூத இனத்தாருக்கும் நன்மை உண்டாவதாக, வாளும், பகைவரும் அவர்களை விட்டு விலகி இருக்கட்டும்.

24 உரோமையருக்கு எதிராக, அல்லது அவர்கள் நாடுகளில் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராகப் பகைவர் சண்டை செய்தால்,

25 யூத இனத்தார் காலத்துக்குத் தகுந்தபடி முழுமனத்தோடு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

26 உரோமையருடைய ஏற்பாட்டின்படி, சண்டை செய்கிறவர்களுக்குத் தானியமோ படைக்கருவிகளோ பணமோ கப்பல்களோ கொடுத்தல் கூடாது. ஆனால், அவர்களிடத்தில் ஒன்றும் வாங்காமலே அவர்களுக்கு உதவவேண்டும்.

27 இவ்விதமே யூத இனத்தாருக்கு எதிராகச் சண்டை நடக்குமாயின், காலத்துக்குத் தகுந்தபடி உரோமையர் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

28 உரோமையர் ஏற்பாட்டின்படி, சண்டை செய்கிறவர்களுக்குத் தானியமோ படைக்கருவிகளோ பணமோ கப்பல்களோ கொடுத்தல் கூடாது. ஆனால், கபடில்லாமல் அவர்கள் கட்டளைகளை அனுசரிக்க வேண்டும்.

29 இதுதான் உரோமையர் யூத மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை.

30 இதில் எழுதப்பட்டிருப்பதைப் பிற்காலத்தில் அவர்களேனும் இவர்களேனும் ஏதாகிலும் கூட்டவோ குறைக்கவோ வேண்டுமாயின், இரு திறத்தாரின் சம்மதத்தின் மேல் செய்யலாம். குறைக்கப்படுவதும் சேர்க்கப்படுவதும் எதுவோ அதனை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.

31 தெமெத்திரியுஸ் அரசன் யூத இனத்தாருக்குச் செய்த கொடுமைகளைப் பற்றியோவென்றால், நாங்கள் அவனுக்கு: எங்கள் நண்பர்களும் கூட்டாளிகளுமான யூதரை நீ ஏன் கொடுமைப் படுத்தினாய்?

32 திரும்பவும் அவர்கள் எங்களிடம் முறையிடுவார்களாயின், உனக்கு எதிராய் அவர்களுக்கு எல்லா உதவியும் செய்து, கடலிலும் தரையிலும் உன்னை எதிர்த்துச் சண்டை செய்வோம் என்று எழுதியிருக்கிறோம் என்றார்கள்.

அதிகாரம் 09

1 அப்பொழுது நிக்கானோரும் அவன் படைகளும் தோல்வியுற்றதைத் தெமெத்தரியுஸ் கேள்விப்பட்டு, பாக்கீதையும் ஆல்சிமுசையும் தன் வலப்படைப் பிரிவோடு திரும்பவும் யூதேயா நாட்டுக்கு அனுப்பினான்.

2 அவர்கள் கல்கலா வழியாய்ச் சென்று, அர்பெல்லாவில் இருக்கும் மசாலோத்தில் பாளையம் இறங்கினர்; அந்நகரத்தைப் பிடித்துப் பலரைக் கொலைசெய்தனர்.

3 அவர்கள் நூற்றைம்பத்திரண்டாம் ஆண்டு முதல் மாதத்தில் யெருசலேம் மீது படையெடுத்தார்கள்.

4 இருபதினாயிரம் காலாட்படைகளும் இரண்டாயிரம் குதிரை வீரரும் பேரேயாவில் இறங்கினார்கள்.

5 லியிசாவில் யூதாஸ் பாளையம் இறங்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் அவரோடு இருந்தார்கள்.

6 அவர்கள் பகைவரின் படைத்திரளைக் கண்டு மிகவும் பயந்தார்கள்; பலர் பாளையத்தினின்று ஓடி விட்டார்கள்; எண்ணுறு பேர் மட்டும் நிலைத்திருந்தார்கள்.

7 தம் படை குறைந்துபோவதை யூதாஸ் கண்டு, சண்டை நெருங்கியிருப்பதையும் உணர்ந்து, அவர்களை ஒன்று சேர்ப்பதற்கு நேரமில்லாததால் மனம் தத்தளித்துத் திடனற்றுப்போனார்.

8 அவர் தம்முடன் நிலைத்திருந்தவர்களை நோக்கி: நம்மால் எதிர்த்துச் சண்டை செய்யக்கூடுமானால் பகைவருடன் போர்தொடுப்போம் என்றார்.

9 அவர்களோ அவரைத் தடுத்து: நம்மில் வெகு சிலரே எஞ்சியிருப்பதால் நம்மால் முடியாது; ஆனால், இப்போது உயிருடன் நம் சகோதரரிடம் திரும்புவோம்; பிறகு, பகைவர்களை எதிர்ப்போம் என்றார்கள்.

10 அதற்கு யூதாஸ்: அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடுவதென்பது நமக்கு அழகன்று; நமது காலம் வந்து விட்டதேயானால், நம் சகோதரருக்காகத் துணிவுடன் சாவோம்; நமது புகழுக்கு இழுக்கு நேராவண்ணம் செய்வோம் என்றார்.

11 எதிர்ப்படையினர் பாளையத்தை விட்டுப் புறப்பட்டு அவர்களுக்கு எதிரில் வந்தனர். குதிரை வீரர் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர். கவணெறிவோரும் அம் பெய்கிறவர்களும் படைக்குமுன் சென்றார்கள். படையின் முன் வரிசையில் இருந்தவர்கள் மாவீரர்.

12 பாக்கீது வலப்பக்கத்தில் இருந்தான். படை இரு பிரிவுகளாய்ச் சென்றது. அவர்கள் எக்காளம் ஊதினார்கள்.

13 யூதாஸ் பக்கம் இருந்தவர்களும் எக்காளம் ஊதினார்கள். படை ஓசையால் பூமி அதிர்ந்தது. காலை முதல் மாலை வரை போர் நடந்தது.

14 பாக்கீதின் படை வலப்பக்கத்தில் வலிமை மிக்கதாயிருக்கிறதென்று யூதாஸ் கண்டு, தம் வீரரோடு அதைத் தாக்கினார்.

15 வலப்பக்கத்துப் படை சிதறுண்டு போகவே, அதை அசோத்துஸ் மலை வரை பின்தொடர்ந்து போனார்.

16 வலப்பக்கத்துப் படை முறியடிக்கப்பட்டதைக் கண்ட இடப்பக்கத்துப் படை யூதாசையும் அவருடன் இருந்தவர்களையும் பின்தொடர்ந்து சென்றது.

17 சண்டை வலுப்பெறவே, இரு தரப்பிலும் பலர் காயப்பட்டு மாண்டனர்.

18 யூதாசும் மாண்டார்; மற்றவர்களோ ஓடி விட்டார்கள்.

19 யோனத்தாசும் சீமோனும் தங்கள் சகோதரர் யூதாசைத் தூக்கிக் கொண்டு போய் மோதின் நகரத்தில் தங்கள் முன்னோர் கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.

20 இஸ்ராயேல் மக்களெல்லாரும் அவரைப் பற்றி வெகு துக்கம் கொண்டாடி, பலநாள் அழுது புலம்பினார்கள்:

21 இஸ்ராயேல் மக்களைக் காப்பாற்றி வந்த அந்த மாவீரர் எப்படி மாண்டார் என்றார்கள்.

22 யூதாஸ் புரிந்த பிற போர்களைப்பற்றியும், அவர் வலிமை, புகழ் பற்றியும் இவ்விடத்தில் எழுதப்படவில்லை. ஏனென்றால், அது அதிகமாய் விரிந்துபோகும்.

23 யூதாஸ் இறந்த பின் தீயவர் இஸ்ராயேலின் எல்லைகளெங்கும் நடமாடினார்கள்.

24 தீயவர்கள் நாலா பக்கத்திலும் தலைகாட்டினார்கள். அக்காலத்தில் பெரியதொரு பஞ்சம் உண்டாகவே, நாட்டு மக்கள் அனைவரும் பாக்கீதுக்குத் தங்களைத் தாமே கையளித்தார்கள்.

25 பாக்கீது தீயவரைத் தேர்ந்துகொண்டு, அவர்களை நாட்டுக்குத் தலைவர்களாக நியமித்தான்.

26 அவர்கள் யூதாசின் நண்பரைத் தேடிப்பிடித்துப் பாக்கீதிடம் கூட்டி வந்தார்கள். அவன் அவர்கள் மீது பழி சுமத்தி அவர்களை இகழ்ந்தான்.

27 இஸ்ராயேலில் இறைவாக்கினர் ஒருவரும் காணப்படாமையால், அதுவரை நேர்ந்திராப் பெரும் கலக்கம் அவர்களுக்கு அப்போது உண்டானது.

28 யூதாசின் நண்பரெல்லாரும் கூடி யோனத்தாசை நோக்கி:

29 உன் சகோதரர் இறந்த நாள் முதல் நம் பகைவர் மீதும் பாக்கீதின் மீதும், நம் இனத்தைப் பகைக்கிறவர்கள் மீதும், எதிர்த்துப் போராட அவரை ஒத்தவன் ஒருவனும் இல்லை.

30 ஆதலால், இன்று உன்னையே எங்கள் தலைவராகவும் படைத்தளபதியாகவும் தேர்ந்துகொண்டோம் என்று கூறினார்கள்.

31 அப்பொழுது யோனத்தாசும் தம் சகோதரர் யூதாசுக்குப் பதிலாய்த் தலைமை ஏற்றார்.

32 இதை அறிந்த பாக்கீது அவரைக் கொல்லத் தேடினான்.

33 யோனத்தாசும் அவர் சகோதரன் சீமோனும் அவரோடு இருந்தவர்களும் இதைக் கேள்வியுற்று, தேக்குவா எனும் பாலைவனத்திற்கு ஓடிப்போய், ஆஸ்பார் ஏரிக்கரையின் ஓரமாய்த் தங்கினார்கள்.

34 இதை அறிந்த பாக்கீது தன் படைகளோடு யோர்தானைக் கடந்து, ஓய்வுநாளில் வந்து சேர்ந்தான்.

35 யோனத்தாஸ் மக்கட்தலைவனாகத் தம் சனோதரனை அனுப்பி, தம் நண்பராகிய நபுதேயரிடமிருந்த திரளான ஆயுதச் சேமிப்புகளைத் தமக்கு இரவலாகக் கொடுக்கும்படி கேட்டார்.

36 யாம்ரியின் மக்கள் மதாபாவினின்று புறப்பட்டு அருளப்பனைப் பிடித்து, அவனிடம் இருந்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள்.

37 அதன் பிறகு யாம்ரியின் மக்கள் சிறப்பான திருமணங்கள் செய்கிறார்களென்றும், மிகச் சிறப்பாய் கானான் நாட்டுப் பெரிய பிரபுக்களுள் ஒருவரின் மகளைப் பெண் கொள்கிறார்களென்றும் யோனத்தாசுக்கும் அவர் சகோதரன் சீமோனுக்கும் தெரிய வந்தன.

38 அவர்கள் தங்கள் சகோதரன் அருளப்பன் கொலையுண்டதை நினைத்து, மலையில் மறைவாய் ஒளிந்து கொண்டிருந்தனர்.

39 தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தனர். வெகு ஆடம்பர ஆரவாரம் தெரிந்தது. மணவாளனும், அவன் நண்பர், சகோதரரும் மேள வாத்தியங்களோடும் ஆயுதம் தாங்கியவர்களோடும் தங்கள் எதிரில் வரக் கண்டார்கள்.

40 தாங்கள் பதுங்கியிருந்த இடத்தினின்று எழுந்து அவர்களைக் கொன்று பலரைக் காயப்படுத்தவே, மற்றவர்கள் மலைகளுக்கு ஓடிப் போனார்கள். அவர்கள் பொருட்களையும் கொள்ளையடித்தார்கள்

41 திருமணக் கொண்டாட்டம் துக்கமாக மாறினது. மேள வாத்தியங்களும் அழுகைக் குரலாய் மாறின.

42 தங்கள் சகோதரனுடைய இரத்தத்துக்காக அவர்கள் பழிவாங்கினார்கள், பின்னர் யோர்தான் நதிக் கரைக்குத் திரும்பினார்கள்.

43 இதைக் கேள்விப்பட்ட பாக்கீதும் பெரும்படையோடு யோர்தான் கரைக்கு ஓய்வு நாளில் வந்து சேர்ந்தான்.

44 யோனத்தாஸ் தம்முடன் இருந்தவர்களை நோக்கி: எழுந்து நம்முடைய பகைவேராடு சண்டை செய்வோம். ஏனென்றால், இன்று நேற்றைப் போலவும் அல்ல, அதற்கு முந்தின நாளைப் போலவும் அல்ல.

45 முன்னால் பகைவர்களும், பின்னால் யோர்தான் நதியும், அங்குமிங்கும் சதுப்பு நிலங்களும் காடுகளும் இருக்கின்றன. நாம் தப்பிப்போக இடமில்லை.

46 நம்முடைய பகைவர் கைகளினின்று நம்மைக் காப்பாற்ற விண்ணை நோக்கிக் கூக்குரல் எழுப்புங்கள் என்று சொல்லிப் போர்தொடுத்தார்.

47 பாக்கீதைத் தாக்க யோனத்தாஸ் கையை நீட்டினார்.

48 அவனோ பின்னடைந்தான். யோனத்தாசும் அவரோடு இருந்தவர்களும் யோர்தான் நதியில் குதித்து, அதை நீந்திக் கடந்தார்கள்.

49 அன்று பாக்கீது படையில் ஆயிரம் பேர் மாண்டார்கள்; எஞ்சியவர் யெருசலேம் திரும்பினர்.

50 அவர்கள் யூதேயாவில் வலிமை மிக்க கோட்டைகளைக் கட்டினார்கள். யெரிக்கோ, அம்மாவும், பெத்தோரோன், பேத்தேல், தாம் நாத்தா, பாரா, தோப்போ முதலிய நகரங்களில் இருந்த கோட்டைகளையும் மதில்களினாலும் கதவுகளினாலும் பூட்டுகளினாலும் வலுப்படுத்தினார்கள்.

51 பாக்கீது இஸ்ராயேலரைத் துன்பப்படுத்த அந்தக் கோட்டைகளில் காவலரையும் வைத்தான்.

52 பெத்சூராவிலும் காசாராவிலும் கோட்டையையும் வலுப்படுத்தி, காவலரையும் நியமித்து, அவர்களுடைய உணவுக்கும் ஏற்பாடு செய்தான்.

53 அந்நகரங்களிலுள்ள பிரபுக்களின் மக்களைப் பிணையாளிகளாகக் கொண்டு, அவர்களை யெருசலேம் கோட்டைக்குள் காவலில் வைத்தான்.

54 நூற்றைம்பத்து மூன்றாம் ஆண்டு இரண்டாம் மாதம் ஆல்சிமுஸ் என்பவன் கடவுள் ஆலயத்தின் உட்சுவர்களை இடிக்கவும், இறைவாக்கினார்கள் செய்தவற்றை அழிக்கவும் கட்டளையிட்டான்; அழிக்கவும் ஆரம்பித்தான்.

55 அப்பொழுது ஆல்சிமுஸ் கடவுளால் தண்டிக்கப்பட்டான். அவன் துவக்கின அலுவல்கள் நின்று போயின. அவன் வாய் அடைபட்டது. பாரிசவாயுவினால் பீடிக்கப்பட்டு, ஒன்றும் பேசமுடியாமலும், தன் குடும்ப காரியங்களை ஒழுங்குபடுத்த முடியாமலும் இருந்தான்.

56 இவ்வாறு மிகவும் துன்பப்பட்டு ஆல்சிமுஸ் இறந்தான்.

57 ஆல்சிமுஸ் இறந்ததைக் கண்டு பாக்கீது அரசனிடம் திரும்பினான். நாடு இரண்டாண்டுக் காலம் அமைதியாய் இருந்தது.

58 தீயவர் தங்களுக்குள்: யோனத்தாசும் அவனோடு இருக்கிறவர்களும் நம்பிக்கையுடன் அமைதியோடு வாழ்கிறார்கள். இப்போது நாம் பாக்கீதை அழைத்து வருவோமேயானால், ஒரே இரவில் அவன் அவர்கள் எல்லாரையும் பிடித்துக் கொள்வான் என்று எண்ணி,

59 அவனிடம் சென்று அவனுக்கு ஆலோசனை கொடுத்தார்கள்.

60 அவன் பெரும் படையோடு வரத் தலைப்பட்டான். யோனத்தாசையும் அவரோடு இருந்தவர்களையும் பிடிக்கும்படி இரகசியமாகத் தன் தோழர்களுக்குக் கடிதம் அனுப்பினான். அவர்களுடைய திட்டம் வெளியாகி விட்டதால், அவர்களால் ஒன்றும் செய்யக் கூடவில்லை.

61 யோனத்தாஸ் அத்தீய எண்ணத்திற்குக் காரணமாய் இருந்த அந்நாட்டு மனிதரில் ஐம்பது பேரைப் பிடித்துக் கொலைசெய்தார்.

62 யோனத்தாசும் சீமோனும் அவர்களோடு இருந்தவர்களும் பாலைவனத்தில் இருந்த பெத்பேசன் எனும் இடம் சேர்ந்து, இடிக்கப்பட்டவைகளைக் கட்டி வலுப்படுத்தினார்கள்.

63 பாக்கீது இதை அறிந்து, படை முழுவதையும் கூட்டி, யூதேயோவில் இருந்தவர்களுக்குத் தெரிவித்தான்.

64 பெத்பேசனுக்கு மேல்புறம் பாளையம் இறங்கி, பலநாள் முற்றுகை போட்டிருந்தான்;

65 யோனத்தாஸ் தன் சகோதரன் சீமோனை நகரில் விட்டுவிட்டு, நாட்டுக்குள் சென்று பெரும்படையோடு வந்தார்.

66 ஓதாரன் என்பவனையும், அவன் சகோதரனையும், பாசெரோன் மக்களையும் அவர்கள் கூடாரங்களில் தாக்கி, அவர்களை அழிக்கத் தொடங்கினார்.

67 வீரத்திலும் அதிகரித்தார். சீமோனும் அவனோடு இருந்தவர்களும் நகரை விட்டுப் புறப்பட்டுப் பகைவரின் போர்க்கருவிகளைக் கொளுத்திவிட்டார்கள்.

68 பாக்கீதை எதிர்த்துச் சண்டை செய்து, அவனைத் தோற்கடித்தார்கள். அவன் எண்ணங்களையும் திட்டங்களையும் அழித்து, அவனை மிகுந்த துன்பத்துக்கு உட்படுத்தினார்கள்.

69 அந்நாட்டிற்கு வரும்படி தனக்கு ஆலோசனை கூறியிருந்த தீயவர் மேல் கோபம் கொண்டு, அவர்களில் பலரைப் பாக்கீது கொன்றான்; தானும் மற்றவர்களோடு தன் நாட்டிற்குத் திரும்பிப்போகவும் நினைத்தான்.

70 அதை அறிந்த யோனத்தாஸ் அவனுடன் சமாதானம் செய்வதற்கும், சிறையில் அடைபட்டவர்களை விடுவிப்பதற்கும் தூதர்களை அனுப்பினார்.

71 பாக்கீது நன்மனத்தோடு ஏற்றுக்கொண்டு, அவர் கேட்டதற்கு இசைந்து தன் வாழ்நாள் முழுவதும் அவருக்குத் தீமையே செய்வதில்லையென்று ஆணையிட்டுக் கூறினான்.

72 முன்பு தான் யூதேயா நாட்டில் சிறைப்படுத்தினவர்களை விடுவித்தான்; தன் நாடு திரும்பிப்போய், இனி மேல் வருவதில்லையென்று தீர்மானம் செய்து கொண்டான்.

73 இஸ்ராயேலில் போர் ஒழிந்தது, யோனத்தாஸ் மக்மாசில் வாழ்ந்திருந்து மக்களுக்கு நீதி செலுத்தி வந்தார்; இஸ்ராயேலில் தீயவரை அழித்தொழித்தார்.

அதிகாரம் 10

1 நூற்றறுபதாம் ஆண்டு மகா அலெக்சாந்தர் எனப்பட்ட அந்தியோக்கஸ் புதல்வன் படையெடுத்துத் தோலெமாயிதைப் பிடித்தான். அவர்களும் அவனை ஏற்றுக்கொண்டார்கள்.

2 அவன் அவ்விடத்தில் அரசாண்டான். தெமெத்திரியுஸ் இதைக் கேள்விப்பட்டு,. திரளான சேனைகளைச் சேர்த்து அவனோடு போர்செய்யப் புறப்பட்டான்.

3 தெமெத்திரியுஸ் யோனத்தாசைப் புகழ்ந்து சமாதான வார்த்தைகளைச் சொல்லி அவருக்குக் கடிதம் அனுப்பினான்.

4 நமக்கு எதிராய் அவன் அலெக்சாந்தரோடு உடன்படிக்கை செய்துகொள்வதற்கு முன்பே நாம் அவனோடு சமாதானம் செய்துகொள்வோம்.

5 ஏனென்றால், அவனுக்கும் அவன் சகோதரருக்கும் அவன் இனத்தாருக்கும் நாம் செய்த தீமைகள் யாவற்றையும் அவன் நினைத்துக் கொள்வான் என்று சொன்னான்.

6 ஆதலால், படைகளைக் கூட்டவும், போர்க்கருவிகளைச் செய்யவும் அவருக்கு அதிகாரமளித்து, அவரைத் தன் தோழனாக்கிக் கொண்டு கோட்டையிலிருந்த பிணையானிகளை அவரிடம் அனுப்பி வைத்தான்.

7 யோனத்தாஸ் யெருசலேம் வந்து, எல்லா மக்களும், கோட்டைக்குள் இருந்தவர்களும் கேட்கும்படி கடிதத்தை வாசித்தார்.

8 படைகளைக் கூட்ட அவருக்கு அரசன் அதிகாரம் அளித்திருந்ததைக் கேட்டு, அவர்கள் மிகவும் பயந்தார்கள்.

9 பிணையாளிகள் யோனத்தாசிடம் அனுப்பப்பட்டார்கள். அவர் அவர்களுடைய உற்றார் உறவினரிடத்தில் அவர்களை ஒப்புவித்தார்.

10 யோனத்தாஸ் யெருசலேமில் வாழ்ந்து, நகரத்தைக் கட்டவும் புதுப்பிக்கவும் ஆரம்பித்தார்.

11 சுவர்களைக் கட்டும்படியாகவும், சீயோன் மலையைச் சுற்றிலும் கருங்கற்களால் வலுப்படுத்தவும் வேலைக்காரருக்குக் கட்டளையிட்டார். அவ்வண்ணமே அவர்கள் செய்தார்கள்.

12 பாக்கீது கட்டின கோட்டைக்குள் இருந்த அன்னிய நாட்டினர் ஓடிவிட்டார்கள்.

13 ஒவ்வொருவனும் தான் இருந்த இடம் விட்டுத் தன் நாடு போய்ச்சேர்ந்தான்.

14 பெத்சூராவில் மட்டும் சிலர் தங்கியிருந்தார்கள். அவர்கள் கடவுளுடைய கட்டளைகளையும் சட்டங்களையும் அனுசரியாதவர்கள். அந்நகர் தஞ்சமளிக்கும் ஓர் இடமாக இருந்தது.

15 தெமெத்தரியுஸ் யோனத்தாசுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மன்னன் அலெக்சாந்தர் கேள்விப்பட்டான்; அவரும் அவர் சகோதரரும் செய்த போர்களையும் அடைந்த வெற்றிகளையும் செய்த வேலைகளையும் அறிந்து கொண்டான்.

16 அவன்: இத்தகைய மனிதனை நாம் காணக்கூடுமோ? அவனை நாம் நம்முடைய நண்பனும் தோழனுமாகக் கொள்வோம் என்று சொல்லி,

17 கடிதம் எழுதினான்:

18 அலெக்சாந்தர் மன்னர் நம் சகோதரனாகிய யோனத்தாசுக்கு வாழ்த்துக் கூறுகிறோம்.

19 நீ சிறந்த வீரனென்றும், நம் நண்பனாய் இருப்பதற்கு உகந்தவனென்றும், கேள்விப்பட்டோம்.

20 ஆதலால், இன்று உன்னை உன் இனத்தாருக்குத் தலைமைக்குருவாக நியமிக்கிறோம். நீ மன்னருடைய நண்பன் எனப்படுவாய். (அதற்கு அடையாளமாக, அவன் அரசவுடையும் பொன்முடியும் அனுப்பினான்.) நம்முடைய காரியங்களை உன்னுடையவைகளாகப் பாவித்து, நம்மீது கொண்டுள்ள நட்பு மாறாதிருக்க வேண்டும்.

21 நூற்றறுபதாம் ஆண்டு ஏழாம் மாதம் உடன்படிக்கைப் பெட்டகத்தின் பெரிய திருநாளில் யோனத்தாஸ் திருவுடை அணிந்து கொண்டார். படைகளைக் கூட்டித் திரளான போர்க்கருவிகளையும் செய்வித்தார்.

22 தெமெத்திரியுஸ் இதைக் கேள்விப்பட்டுத் துக்கம் அடைந்தான்.

23 ஏனென்றால், அவன்: அலெக்சாந்தர் தன்னை வலுப்படுத்திக்கொள்ள யூதருடைய நட்பை முந்திக் கைப்பற்றினபடியால், நாம் அதற்கு என்ன செய்யப்போகிறோம்?

24 நானும் அவர்களுக்கு விருப்பமான வார்த்தைகளை எழுதி, அவர்கள் எனக்கு உதவியாக வரும்படி உயர்ந்த பதவிகளையும் பரிசுகளையும் அளிப்பேன் என்று சொல்லி, அவர்களுக்கு எழுதினதாவது:

25 தெமெத்திரியுஸ் மன்னர் யூத மக்களுக்கு வாழ்த்துக் கூறுகிறோம்.

26 நீங்கள் நம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காப்பாற்றினீர்களென்றும், நமது நட்பில் நிலைத்தீர்களென்றும், நம் பகைவர்களோடு சேரவில்லையென்றும், கேள்விப்பட்டு மகிழ்ந்தோம்.

27 இன்னும் நம்மீதுள்ள பிரமாணிக்கத்தைக் காப்பாற்றுங்கள். நமக்காக நீங்கள் செய்து வந்த யாவற்றிற்கும் பரிசு அளிப்போம்.

28 உங்கள் மீது சுமத்தப்பட்ட வரிகளில் பலவற்றை நீக்குவோம். தவிர, உங்களுக்கு நாம் சிறப்புப் பரிசும் அளிப்போம்.

29 இப்போது, நீங்களும், யூத மக்கள் யாவரும் செலுத்தி வந்த வரிகளை மன்னிக்கிறோம். உப்புத் தீர்வையை நீக்கி விடுகிறோம். பொன் முடியையும், உங்கள் விளைச்சலில் நீங்கள் செலுத்தி வரும் மூன்றிலொரு பகுதியையும் மன்னிக்கிறோம்.

30 மரங்களிலிருந்து நமக்குச் சேர வேண்டிய பாதி விளைச்சலையும் இன்று முதல் உங்களுக்கு விட்டு விடுகிறோம். இது முதல் எக்காலமும் யூதேயா நாட்டிலும் சமாரியாவிலும் கலிலேயாவிலும், அதோடு சேர்க்கப்பட்ட மூன்று நகரங்களிலும் ஒன்றும் வாங்கப்பட மாட்டாது.

31 யெருசலேமும், அதைச் சேர்ந்த இடங்களும் புனிதமாகவும் தன்னுரிமையோடும் இருக்கக்கடவன. பத்திலொரு பகுதியும் வரியும் அதைச் சேரக்கடவன.

32 யெருசலேமிலுள்ள கோட்டையையும் உங்கள் அதிகாரத்தில் வைக்கிறோம். அதைக் காப்பதற்கும், தாம் தேர்ந்து கொள்ளும் மனிதரை நியமித்துக் கொள்வதற்கும் தலைமைக்குருவுக்கு அதிகாரம் அளிக்கிறோம்.

33 எமது நாடெங்கும் இருக்கும் யூதேயா நாட்டுக் கைதிகள் அனைவருக்கும் வரி, மந்தைகளுக்காகச் செலுத்தும் தீர்வை முதலியவற்றை மன்னித்து, அவர்களையும் அனுப்பி விடுகிறோம்.

34 முக்கியமான எல்லாத் திருநாட்களையும் ஓய்வு நாட்களையும் அமாவாசை நாட்களையும் வழக்கிலிருக்கும் திருநாட்களையும், பெரிய திருநாளுக்கு முந்தின மூன்று நாட்களையும், பிந்தின மூன்று நாட்களையும் எமது அரசுக்குட்பட்ட எல்லா யூதருக்கும் விடுமுறை நாட்களாகவும், ஓய்வுநாட்களாகவும் ஏற்படுத்துகிறோம்.

35 அவர்களில் ஒருவனுக்கும் எதிராய் எக்காரியத்திலும் யாதொன்றைச் செய்யவும் நடத்தவும் எவனுக்கும் அதிகாரமில்லை.

36 யூதரில் முப்பதினாயிரம் பேர் வரை மன்னர் படையில் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள். மன்னர் படைகளுக்குச் செய்யப்படுவது போல் அவர்களுக்கும் வேண்டியவைகளெல்லாம் கொடுக்கப்படும். மன்னருடைய கோட்டையைக் காப்பதற்கும் அவர்களில் பலர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

37 நம்பிக்கையோடு செய்ய வேண்டிய மதிப்புள்ள வேலைகளுக்கு அவர்களே தலைவர்களாக நியமிக்கப் படுவார்கள். மன்னர் கட்டளைப்படி யூதேயா நாட்டில் அவர்களே தலைவர்களாய் இருந்து, தங்கள் வழக்கப்படி நடப்பார்கள்.

38 சமாரியாவினின்று யூதேயாவில் சேர்க்கப்பட்ட மூன்று நகரங்களும் யூதேயாவைச் சேர்ந்தவை என்றே பாவிக்கப்படும். அவை தலைமைக்குருவின் அதிகாரத்துக்கேயன்றி, வேறு எந்த அதிகாரத்துக்கும் உட்பட்டவை அல்ல.

39 யெருசலேம் ஆலயப்பராமரிப்புச் செலவுக்காக நாம் தானமாகத் தோலெமாயிதையும், அதைச் சேர்ந்த நகரங்களையும் கொடுக்கிறோம்.

40 மேலும், நமக்குச் சொந்தமான வருமானத்தில் பதினையாயிரம் சீக்கில் என்னும் வென்னி நாணயங்களை ஆண்டுதோறும் கொடுப்போம்.

41 கடந்த ஆண்டுகளில் நம்மால் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் இன்னும் கெடாமல் இருக்கும் பணமெல்லாம் ஆலயத்தின் வேலைகளுக்காகக் கொடுக்கும்படி செய்வோம்.

42 ஆலயத்தின் வருமானத்தினின்று இதுவரையிலும் எடுத்துவந்த ஐயாயிரம் சீக்கில் நாணயங்களும் கடவுளுக்கு ஊழியம் செய்து வரும் குருக்களைச் சேரும்.

43 எக்காரியத்திலும் மன்னருடைய கோபத்துக்கு உள்ளான எவனாவது யெருசலேமிலும், அதன் எல்லைகளுக்குள்ளும் உள்ள ஆலயங்களில் தஞ்சமென்று ஓடுவானாகில் அவன் மன்னிக்கப்படுவான்; நம் நாட்டில் அவனுக்குச் சொந்தமானவற்றையும் அவன் தன் விருப்பப்படி அனுபவிக்கக்கடவான்.

44 ஆலயங்களைக் கட்டுவதற்கும், பழுதுப்பார்ப்பதற்கும் அரச கருவூலத்தினின்று செலவுக்குக் கொடுக்கப்படும்.

45 யெருசலேம் சுவர்களைக் கட்டுவதற்கும், சுற்றிலும் வலுப்படுத்துவதற்கும், யூதேயாவில் சுற்றுச் சுவர்களைக் கட்டுவதற்கும் அரச கருவூலத்தினின்று கொடுக்கப்படும்.

46 யோனத்தாசும் மக்களும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அவற்றை நம்பவுமில்லை; ஏற்றுக் கொள்ளவுமில்லை. ஏனென்றால், அவன் இஸ்ராயேலுக்குச் செய்த பெரும் தீங்குகளையும், வருவித்த துன்பங்களையும் நினைத்துக் கொண்டார்கள்.

47 அலெக்சாந்தர் மீதோ விருப்புக் கொண்டார்கள். ஏனென்றால், அவன் சமாதான வார்த்தைகளைச் சொல்லி, எப்போதும் அவர்களுக்கு உதவியாகவும் இருந்தான்.

48 அலெக்சாந்தர் பெரும் படை திரட்டி தெமெத்திரியுசை எதிர்த்துச் சென்றான்.

49 இரண்டு மன்னர்களும் போர் தொடுத்தார்கள். தெமெத்திரியுஸ் படை முறியடிக்கப்பட்டது. அலெக்சாந்தர் அவனைத் துரத்திப் படைகள் மீது பாய்ந்தான்.

50 சூரியன் மறையும் வரையில் கொடிய போர் நிகழ்ந்தது. தெமெத்திரியுஸ் அன்று மாண்டான்.

51 அலெக்சாந்தர் எகிப்து மன்னன் தோலெமேயுசுக்குத் தூதர்களை அனுப்பி:

52 நான் என் நாடு திரும்பி வந்தேன்; என் முன்னோரின் அரியணையில் அமர்ந்தேன். என் ஆட்சியை அடைந்தேன்; தெமெத்திரியுசைத் தோற்கடித்தேன்; என் நாட்டைக் கைவசப்படுத்திக் கொண்டேன்.

53 அவனோடு போர்தொடுத்து, அவனும் அவன் படைகளும் என்னால் முறியடிக்கப்பட்டனர். அவனது அரியணையிலும் நான் அமர்ந்தேன்.

54 ஆதலால், இப்போது நாம் இருவரும் நட்புச் செய்து கொள்வோம். உன் மகளை எனக்கு மனைவியாகக் கொடு. நான் உன் மருமகனாய் இருப்பேன், உனக்கு ஏற்றப் பரிசுகளை வழங்குவேன் என்று சொல்லியனுப்பினான்.

55 தோலெமேயுஸ் அவனுக்கு மறுமொழியாக: நீ உன் நாடு திரும்பி வந்து அவர்களுடைய அரியணை ஏறின நாள் பேறுபெற்ற நாள்.

56 நீ எழுதியுள்ளபடி நான் செய்வேன். நாம் ஒருவரை ஒருவர் பார்க்கிறதற்கு நீ தோலெமாயிதுக்கு வா. அப்போது நீ கேட்டபடி என் புதல்வியை உனக்குக் கொடுப்பேன் என்று சொன்னான்.

57 தோலெமேயுசும், அவன் புதல்வி கிளேயோப்பாத்திராவும் எகிப்தை விட்டுப் புறப்பட்டு, நூற்றருபத்திரண்டாம் ஆண்டு தோலெமாயிது வந்தார்கள்.

58 அலெக்சாந்தர் மன்னனும் அவனைக் காண வந்தான். தொலெமேயுஸ் தன் புதல்வி கிளேயோப்பாத்திராவை அலெக்சாந்தருக்குக் கொடுத்தான்; தோலெமாயிதில் அரசர்கள் செய்வது போல மிகச் சிறப்புடன் திருமணமும் செய்வித்தான்.

59 அலெக்சாந்தர் மன்னன் யோனத்தாசுக்குத் தன்னை வந்து காணும்படி எழுதினான்.

60 அவரும் வெகு சிறப்பாய் வந்து, இரு மன்னர்களையும் சந்தித்தார்; அவர்களுக்குத் திரளான பொன்னும் வெள்ளியும் பரிசுகளும் கொடுத்தார்.

61 அவர்கள் முன் அன்பைப் பெற்றார். இஸ்ராயேலில் தீயவரும், தீய எண்ணமுள்ளவர்களும் அவர் மீது குற்றம்சாட்ட முற்பட்டார்கள். ஆனால், மன்னன் ஒன்றுக்கும் செவிசாயக்கவில்லை.

62 அவன் யோனத்தாசின் உடையைக் கழற்றி அவருக்கு அரசவுடை அணிவிக்கும்படி கட்டளையிட்டான். அவர்கள் அப்படியே செய்தார்கள். மன்னன் அவரைத் தன்னுடன் அமரும்படி செய்தான்.

63 மேலும், தன் பிரபுக்களை நோக்கி: நீங்கள் இவனுடன் நகரின் மத்தியில் சென்று, இவனை எக்காரியத்திலும் எவனும் குற்றம் சாட்டக் கூடாதென்றும் எல்லாரும் அறியச் சொல்லுங்கள் என்று கூறினான்.

64 எங்கும் வெளிப்படுத்தப்பட்ட அவர் மாட்சியைக் கேள்வியுற்றும், அவர் அரசவுடை அணிந்திருப்பதைப் பார்த்தும் அவரைக் குற்றம் சாட்டினவர்கள் எல்லாரும் ஓடிவிட்டார்கள்.

65 மன்னன் அவரை மேன்மைப்படுத்தி, தன் நண்பரில் முதல்வராக ஏற்றுக் கொண்டு, அரசில் தலைவரும் அதிகாரியுமாய் நியமித்தான்.

66 சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் யோனத்தாஸ் யெருசலேம் திரும்பினார்.

67 நூற்றறுபத்தைந்தாம் ஆண்டு தெமெத்திரியுஸ் புதல்வன் தெமெத்திரியுஸ் என்பவன் கிரேத்து நாட்டினின்று தன் முன்னோருடைய நாட்டிற்கு வந்தான்.

68 அலெக்சாந்தர் மன்னன் இதைக் கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்து அந்தியோக்கியாவுக்குத் திரும்பினான்.

69 தெமெத்திரியுஸ் மன்னன் செலேசீரியாவில் தலைவனாயிருந்த அப்பொல்லோனியுசைப் படைத்தலைவனாக நியமித்தான். அவன் பெரும் படை சேர்த்து யாம்னியாவுக்குச் சென்று, தலைமைக்குருவாகிய யோனத்தாசுக்கு:

70 நீ ஒருவன் மட்டுமே எங்களை எதிர்க்கிறாய். மலைகளில் எங்களுக்கு எதிராய் நீ ஆட்சி செலுத்துவதால், எனக்கு நிந்தையும் அவமானமும் ஏற்படுகிறது.

71 ஆதலால், நீ வீரமுள்ளவனானால், சமவெளிக்கு இறங்கி வா. அவ்விடத்தில் நமது வலிமையைப் பார்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், சண்டைகளில் நான் வெற்றியடைவேன்.

72 நான் யாரென்றும், என்னுடன் உதவிக்கு வந்தவர்கள் யாரென்றும் கேட்டு அறிந்து கொள். உன் முன்னோர் அவர்களை எதிர்க்க முடியாமல் தங்கள் சொந்த நாட்டிற்கு இருமுறை ஓடியது போல, நீயும் எங்களை எதிர்த்து நிற்க முடியாது என்று சொல்கிறார்கள்.

73 கல்லும் பாறையும், ஓடிப் போவதற்கு இடமும் இல்லாத சமவெளியில் எங்கள் திரளான குதிரைப் படைகளையும் சேனைகளையும் எவ்விதம் எதிர்த்து நிற்கப் போகிறாய் என்று சொல்லியனுப்பினான்.

74 அப்பொல்லோனியுசின் வார்த்தைகளைக் கேட்ட யோனத்தாஸ் மனம் கலங்கினார். பதினாயிரம் பேரைத் தேர்ந்துகொண்டு, அவர்களோடு யெருசலேமினின்று புறப்பட்டார்; அவருடைய சகோதரன் சீமோனும் அவருக்கு உதவியாக வந்தான்.

75 யோப்பெ அருகே அவர்கள் பாளையம் இறங்கினார்கள். அயாப்பெயில் அப்பொல்லோனியுசின் காவலர்கள் இருந்தபடியால் அதனுள் புக முடியவில்லை. ஆகையால், அவர் அதைத் தாக்கினார்.

76 நகரத்தில் இருந்தவர்கள் பயந்து கதவுகளைத் திறந்தார்கள். யோப்பெ நகரத்தை யோனத்தாஸ் கைப்பற்றினார்.

77 இதை அறிந்த அப்பொல்லோனியுஸ் மூவாயிரம் குதிரை வீரரோடும், திரளான சேனைகளோடும் வந்தான்.

78 அசோத்துஸ் நகருக்குப் போவது போல நடந்து, குதிரை வீரர் மீது தனக்குண்டான நம்பிக்கையினால் திடீரென்று சமவெளியில் வெளிப்பட்டான். யோனத்தாஸ் அவனைப் பின்தொடர்ந்து வந்து சண்டை செய்தார்.

79 அப்பெல்லோனியுஸ் தன் பாளையத்தில் ஆயிரம் குதிரை வீரரைப் பின்னால் விட்டிருந்தான்.

80 யோனத்தாஸ் தமக்குப் பின்னால் பகைவர் மறைந்திருக்கிறார்களென்றும் அறிந்தார். பகைவர் அவருடைய சேனைகளைச் சூழ்ந்து கொண்டு, காலை முதல் மாலை வரையிலும் அவர்கள் மீது அம்புகள் எய்தார்கள்.

81 யோனத்தாஸ் கட்டளையிட்டப்படி மக்களும் நின்றார்கள்; குதிரைகளும் சோர்ந்து போயின.

82 சீமோன் தன் படையை நடத்திப் பகைவர் தம் காலாட்கள் மேல் பாய்ந்தான். குதிரை வீரர் களைத்துப் போயிருந்தனர். ஆதலால், பகைவர் முறியடிக்கப்பட்டு ஓடிப்போனார்கள்.

83 சமவெளியில் தோற்கடிக்கப்பட்டவர்கள் அசோத்துஸ் நகரத்துக்கு ஓடி, தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்கள் கடவுள் தாகோன் ஆலயத்தில் புகுந்து கொண்டார்கள்.

84 யோனத்தாஸ் அசோத்துசையும், சுற்றிலுமிருந்த நகரங்களையும் கொளுத்தி விட்டு, எல்லாவற்றையும் பறிமுதல் செய்தார். தாகோன் கோயிலையும், அதில் இருந்தவர்களையும் கொளுத்தி விட்டார்.

85 வாளுக்கு இரையானவர்களும் நெருப்பில் மாண்டவர்களும் ஏறக்குறைய எண்ணாயிரம்பேர்.

86 யோனாத்தாஸ் அவ்விடமிருந்து புறப்பட்டு அஸ்காலோன் சேர்ந்தார். அந்நகர மக்கள் மரியாதைகள் செய்து, அவரை எதிர்கொண்டு அழைக்கப்போனார்கள்.

87 ஏராளமான பொருட்களைக் கொள்ளையடித்துக் கொண்டு யோனத்தாஸ் தம்மைச் சேர்ந்தவர்களோடு யெருசலேம் திரும்பினார்.

88 அலெக்சாந்தர் இவைகளைக் கேள்விப்பட்டபோது இன்னும் யோனத்தாசை அதிக மேன்மைப்படுத்தி,

89 அரச குலத்தின் பிரபுக்களுக்குக் கொடுக்கும் வழக்கம் போல் அவருக்குப் பொன்சரடு அனுப்பினான். மேலும், அக்காரோனையும், அதைச் சேர்ந்த ஊர்களையும் அவருக்கு உரிமை ஆக்கினான்.

அதிகாரம் 11

1 கடலோரத்தின் மணற்போல் எகிப்து மன்னன் படைகளைச் சேர்த்து, திரளான கப்பல்களையும் கட்டினான்; அலெக்சாந்தரின் நாட்டைக் கபடமாய்க் கைப்பற்றித் தன் நாட்டோடு சேர்க்கத் தேடினான்.

2 சமாதான வார்த்தைகளைச் சொல்லி, சீரியாவிற்குச் சென்றான். நகர மக்கள் தங்கள் நகரங்களின் கதவுகளைத் திறந்து வைத்து அவனுக்கு எதிர் கொண்டு போனார்கள். ஏனென்றால், அவன் தன் மாமனானபடியால், அவனுக்கு எதிர் கொண்டு போகும்படி அலெக்சாந்தர் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான்.

3 தோலெமேயுஸ் நகருள் புகுந்த போது, ஒவ்வொரு நகரிலும் காவலரை நியமித்தான்.

4 அவன் அசோத்துஸ் நகருக்கு அருகே வந்த போது, கொளுத்தப்பட்ட தாகோன் ஆலயத்தையும், அசோத்துஸ் நகரத்தையும், இடிப்பட்ட மற்ற இடங்களையும், பூமி மேல் கிடந்த பிணங்களையும், சண்டையில் விழுந்தவர்களுக்கு வழியில் அமைக்கப்பட்ட கல்லறைகளையும் அவனுக்குக் காண்பித்தார்கள்.

5 அவன் மனத்தில் பொறாமை உண்டாகும்படி: இவைகளை யோனத்தாஸ் தான் செய்தான் என்றார்கள். ஆனால், மன்னன் மௌனமாய் இருந்தான்.

6 யோனத்தாஸ் யோப்பெயுக்குச் சிறப்புடன் வர, இருவரும் சந்தித்தனர். அவ்விடத்திலேயே இரவு தங்கினார்கள்.

7 எலுயுத்தெருஸ் எனும் நதி வரை அவர் அலெக்சாந்தர் கூடப்போய் விட்டுவிட்டு, யெருசலேம் திரும்பினார்.

8 தோலெமேயுஸ் கடலோரத்திலிருந்த சேலேயூசியா வரையிருந்த நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு, அலெக்சாந்தருக்குக் கேடு பல நினைத்தான்.

9 தெமெத்திரியுசிடம் தூதரை அனுப்பி, நமக்குள் உடன்படிக்கை செய்து கொள்வோம். அலெக்சாந்தரிடம் இருக்கும் என் புதல்வியை உனக்குக் கொடுக்கிறேன். நீ உன் முன்னோர் நாட்டில் ஆட்சி செலுத்தலாம்.

10 அவனுக்கு என் புதல்வியைக் கொடுத்ததன் பொருட்டு வருந்துகிறேன். என்னை அவன் கொலை செய்யத் தேடினதினால் தான் அப்படிச் செய்தேன் என்று சொல்லி,

11 தான் அவனது நாட்டை விரும்பினபடியால், இப்படியாக அவனைக் குற்றம் சாட்டினான்.

12 தன் புதல்வியை அவனிடத்தினின்று நீக்கி, தெமெத்திரியுசுக்குக் கொடுத்து விட்டான்; அலெக்சாந்தரையும் விட்டு விலகினான். ஆதலால், அவன் பகையும் வெளியாயிற்று.

13 பிறகு தோலெமேயுஸ் அந்தியோக்கியாவில் புகுந்து, எகிப்து, ஆசியா ஆகிய நாடுகளின் இருமுடிகளையும் அணிந்து கொண்டான்.

14 அப்பொழுது அலெக்சாந்தர் சிலிசியாவில் இருந்தான். ஏனென்றால், அவ்விடம் இருந்தவர்கள் கலகம் செய்து கொண்டிருந்தார்கள்.

15 அலெக்சாந்தர் கேள்விப்பட்டு அவனை எதிர்த்து வந்தான். தோலெமேயுசும் தன் சேனைகளுடன் வலிமையோடு அவனைத் தாக்கித் துரத்தியடித்தான்.

16 உதவி தேடும்படியாக அலெக்சாந்தர் அராபிய நாடு ஓடினான்.

17 தொலெமேயுசின் புகழ் பரவியது. அராபியத் தலைவன் சாப்தியேல் என்பவன் அலெக்சாந்தருடைய தலையை வெட்டித் தோலெமேயுசுக்கு அனுப்பினான்.

18 மூன்று நாட்களுக்குப் பிறகு தோலெமேயுஸ் இறந்தான்; பாளையத்தில் இருந்தவர்கள் கையால் கோட்டைக்குள் இருந்தவர்களும் மாண்டார்கள்.

19 நூற்றறுபத்தேழாம் ஆண்டு தெமெத்திரியுஸ் அரியணை ஏறினான்.

20 அக்காலத்தில் யோனத்தாஸ் யெருசலேமிலிருந்த கோட்டையைப் பிடிப்பதற்கு யூதேயாவில் இருந்தவர்களைத் திரட்டி, அதைத் தாக்குவதற்கு நிறையப் போர்க்கருவிகளைச் செய்தார்.

21 தங்கள் இனத்தாரையே பகைத்திருந்த தீயவர் சிலர் தெமெத்திரியுஸ் மன்னனிடம் சென்று, யோனத்தாஸ் கோட்டையை முற்றுகையிட்டிருப்பதாக அறிவித்தார்கள்.

22 இதைக் கேட்டு அவன் கோபம் கொண்டு, உடனே தோலெமாயிது வந்து, கோட்டையை முற்றுகையிடாமல் விரைவில் தன்னை வந்து காணும்படி யோனத்தாசுக்கு எழுதினான்.

23 இதை அறிந்த யோனத்தாஸ், கோட்டை முற்றுகையை நடத்தும்படி கட்டளையிட்டார்; இஸ்ராயேலில் முதியோரையும் குருக்களையும் தேர்ந்து கொண்டு, தம்மை ஆபத்துக்குக் கையளித்தார்.

24 பொன், வெள்ளி, ஆடைகள், இன்னும் பல பரிசுகளை எடுத்துக்கொண்டு தோலெமாயிதுவில் இருந்த தெமெத்திரியுஸ் மன்னனிடம் சென்றார். அவனது தயவைப் பெற்றார்.

25 அவர் இனத்தாரில் சில தீயவர் அவரைக் குற்றம் சாட்டினார்கள்.

26 ஆனால், மன்னன் தனக்கு முன்னிருந்தவர்கள் செய்தவண்ணம் அவருக்கு மரியாதை காட்டி, எல்லாருக்கும் முன்பாக அவரை மேன்மைப்படுத்தினான்.

27 தலைமைக் குருத்துவத்தையும், அவருக்கிருந்த மற்றப் பதவிகளையும் உறுதிப்படுத்தி, அவரைத் தன் நண்பரில் முதல்வராய் ஏற்றுக் கொண்டான்.

28 யூதேயாவையும் மூன்று மாவட்டங்களையும் சமாரியாவையும், அதைச் சேர்ந்த ஊர்களையும் வரி செலுத்துவதினின்று விலக்கும்படி யோனத்தாஸ் மன்னனை மன்றாடி, தாம் முந்நூறு தாலேந்துகள் கொடுப்பதாயும் வாக்குக் கொடுத்தார்.

29 மன்னன் அதற்கு இசைந்து, இவைகளையெல்லாம் பற்றி யோனத்தாசுக்கு எழுதித் தந்த விதமாவது:

30 தெமெத்திரியுஸ் மன்னர் யோனத்தாசுக்கும், யூத இனத்தாருக்கும் வாழ்த்துக் கூறுகிறோம்.

31 உங்களைப் பற்றி நம் தந்தை லாஸ்தேனுக்கு நாம் எழுதிய கடிதத்தின் நகல் ஒன்று உங்களுக்கும் அனுப்பினோம்:

32 தெமெத்திரியுஸ் மன்னர், தந்தை லாஸ்தேனுசுக்கு வாழ்த்துக் கூறுகிறோம்.

33 நம் நண்பர்களும் நம்மிடம் உண்மையுள்ளவர்களுமான யூத குலத்தாருக்கு, அவர்கள் நம் மீது கொண்டிருக்கும் பற்றுதலுக்குப் பதிலாக அவர்களுக்கு நன்மை செய்யத் தீர்மானித்தோம்.

34 ஆதலால், யூதேயா முழுவதையும், சமாரியாவினின்று பிரிக்கப்பட்ட லிதா, ராமாத்தான் முதலிய மூன்று நகரங்களையும், அவற்றைச் சேர்ந்த ஊர்களையும், அவர்களின் உடைமையாக உறுதிப்படுத்தியுள்ளோம். முன்பு, மன்னர் இவைகளிடமிருந்து வாங்கி வந்த வருமானத்தையும், நிலம், மரம், இவைகளிலிருந்து வந்த வருமானத்தையும், யெருசலேமில் பலியிடுகிறவர்களுடைய பராமரிப்புக்காக ஏற்படுத்தத் தீர்மானித்தோம்.

35 நமக்குச் சேரவேண்டிய பத்திலொரு பகுதியும் திறையும் உப்புத் தீர்வையும், நமக்குக் கொண்டு வர வேண்டிய முடிகளையும் இது முதல் மன்னித்தோம்.

36 இவையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்து விடுகிறோம். செய்த ஏற்பாடுகள் யாவும் இது முதல் என்றும் உறுதியாய் இருக்கக்கடவன.

37 இக்கட்டளையினுடைய நகல் ஒன்று எடுத்து, யோனத்தாசுக்குக் கொடுத்து, புனித மலையில் காணக்கூடிய இடத்தில் அதை வைக்கச் செய்யவும்.

38 நாடு அமைதியில் இருப்பதையும், எவரும் தன்னை எதிர்க்காதிருப்பதையும் தெமெத்திரியுஸ் மன்னன் கண்டு, தீவுகளில் திரட்டிய அன்னியருடைய சேனையைத் தவிர மற்ற சேனைகளுக்கெல்லாம் உத்தரவளித்து, ஒவ்வொருவனையும் தன்தன் இருப்பிடம் அனுப்பினான். இவ்விதம் செய்ததால் அவன் முன்னோரின் சேனைகள் யாவும் அவனுக்கு எதிராகக் கிளம்பின.

39 முன்னர் அலெக்சாந்தர் பக்கம் இருந்த திரிபோன் என்பவன் தெமெத்திரியுஸ் மீது சேனைகள் முறையிடுவதைக் கண்டு அலெக்சாந்தரின் புதல்வன் அந்தியோக்கஸ் என்பவனை வளர்த்து வந்த அராபிய மன்னன் எமால்குவேலிடம் சென்று,

40 தந்தைக்குப் பதிலாய் ஆட்சிசெய்வதற்கு அவனைத் தன்னிடம் ஒப்புவிக்கும்படி வருந்திக் கேட்டுக்கொண்டான்; தெமெத்திரியுஸ் செய்த யாவையும், சேனைகளுக்கு அவன்மீதுள்ள பகையையும் சொல்லிக் காட்டினான்; பலநாள் அவ்விடத்தில் தங்கியிருந்தான்.

41 யெருசலேம் கோட்டையிலும், மற்றக் கோட்டைகளிலும் இருந்தவர்கள் இஸ்ராயேலைத் துன்புறுத்தியதால், அவர்களைத் துரத்தி விடும்படி தெமெத்திரியுஸ் யோனத்தாஸ் ஆளனுப்பினார்.

42 தெமெத்திரியுஸ் யோனத்தாசுக்கு: உனக்கும் உன் இனத்தாருக்கும் நான் உதவுவது இப்பொழுது மட்டுமன்று, இன்னும் வாய்ப்பு கிடைக்கும் போது உன்னையும் உன் இனத்தாரையும் மேன்மைப்படுத்துவேன்.

43 இப்போதோ என் சேனைகள் யாவும் போய்விட்டபடியால் உன் படைகளை எனக்கு உதவியாக அனுப்பினால் நலம் என்று சொல்லியனுப்பினான்.

44 யோனத்தாஸ் மூவாயிரம் படைவீரரை அந்தியோக்கியாவுக்கு அனுப்பினார். அவர்கள் மன்னனிடம் சேரவே, மன்னன் அவர்கள் வந்ததன் பொருட்டு மகிழ்ச்சி கொண்டான்.

45 நகரத்தில் இருந்த இலட்சத்து இருபதினாயிரம் பேர் மன்னனைக் கொலை செய்யத் தேடினார்கள்.

46 மன்னன் அரண்மனைக்குள்ளே ஓடி ஒளிந்து கொண்டான். நகரத்தில் இருந்தவர்கள் வீதிகளில் நின்று கொன்று அவன் மீது போர் தொடுத்தார்கள்.

47 மன்னன் யூதரைத் தன் உதவிக்கு அழைத்தான். அவர்கள் அவன் உதவிக்குச் சென்று நகரத்தில் சுற்றி,

48 அன்று இலட்சம் பேரைக் கொன்று, நகரைக் கொளுத்தி விட்டு, ஏராளமான பொருட்களைக் கொள்ளையடித்து மன்னனைக் காப்பாற்றினார்கள்.

49 யூதர் தாங்கள் நினைத்ததெல்லாம் அடைந்தார்களென்று நகரத்தில் இருந்தவர்கள் கண்டு, மனம் தளர்ந்து மன்னனிடம் சென்று:

50 எங்கள்மீது இரக்கம் காட்டும்; யூதர்கள் எங்களையும் நகரத்தையும் அழிக்காதிருக்கட்டும் என்று மன்றாடி,

51 தங்கள் போர்க்கருவிகளை எறிந்து விட்டுச் சமாதானம் செய்துகொண்டார்கள். யூதர்கள் அரசன் முன்பாகவும், அவன் நாட்டில் அனைவருக்கும் முன்பாகவும், பேரும் புகழும் பெற்று, பற்பல பொருட்களோடு யெருசலேம் திரும்பினார்கள்.

52 தெமெத்திரியுஸ் தன் நாட்டில் ஆட்சி புரிந்தான்.

53 நாடும் அமைதியாய் இருந்தது. ஆனால், தான் சொன்ன யாவற்றையும் மறுத்து யோனத்தாசை விட்டு நீங்கி, அவரால் தான் பெற்ற நன்மைகளுக்கு பதில்நன்றி காட்டாமல் அவரை மிகவும் துன்புறுத்தினான்.

54 இதன் பிறகு திரிபோன் இளம் வயதினனான அந்தியோக்கஸ் என்பவனைக் கூட்டிக் கொண்டு திரும்பிவர, அவனும் முடியணிந்து அரசாளத் தொடங்கினான்.

55 தெமெத்திரியுஸ் அனுப்பிய சேனைகளெல்லாம் அந்தியோக்கஸ் என்பவனோடு சேர்ந்து, அவனை எதிர்க்கவே அவன் தோல்வியடைந்து ஓடினான்.

56 திரிபோன் யானைகளையும் பிடித்து அந்தியோக்கியாவைக் கைப்பற்றினான்.

57 இளைஞன் அந்தியோக்கஸ் யோனத்தாசுக்கு: நீ மன்னருடைய நண்பரில் ஒருவனாய் இருக்கும்படியாக உன்னைத் தலைமைக்குருவாக ஏற்படுத்தி, நான்கு நகர்களுக்குத் தலைவனாக நியமித்தோம் என்று எழுதி, அவர் உபயோகத்துக்காகப் பொற்பாத்திரங்களை அனுப்பி,

58 பொற்பாத்திரத்தில் அருந்தவும், அரசவுடை அணியவும், பொற்சரடு அணிந்துகொள்ளவும் அதிகாரமளித்தான்.

59 அவர் சகோதரன் சீமோனைத் தீர் எல்லையினின்று எகிப்து எல்லைகள் வரை தலைவனாக நியமித்தான்.

60 யோனத்தாஸ் புறப்பட்டு, ஆற்றுக்கு அப்புறமிருக்கும் நகரங்களுக்குச் சென்றார். சீரியா படைகள் யாவும் அவரது உதவிக்கு வந்தன. அவர் அஸ்கலோன் நகரம் சேரவே, எல்லாரும் மிக்க மரியாதையோடு அவரை எதிர்கொண்டு அழைத்தார்கள்.

61 அவர் அவ்விடமிருந்து காசாவுக்குப் போனார். காசாவில் இருந்தவர்கள் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே இருந்தார்கள். அவர் அதை முற்றுகையிட்டு, சுற்றிலுமிருந்த ஊர்களைக் கொளுத்திக் கொள்ளையடித்தார்.

62 காசா நகரத்தார் கேட்டுக் கொண்டதற்கு அவர் இசைந்தார்; அவர்களின் மக்களைப் பிணையாளிகளாக ஒப்புக்கொண்டு, அவர்களை யெருசலேமுக்கு அனுப்பினார்; தமஸ்கு நகர் வரையிலுமுள்ள நாட்டைக் கடந்தார்.

63 தெமெத்திரியுசின் படைத்தலைவர்கள் தம்மை எதிர்த்துத் தடுப்பதற்காகக் கலிலேயாவிலுள்ள காதேஸ் நகரத்தில் பெரும்படையோடு கூடியிருப்பதை யோனத்தாஸ் கேள்விப்பட்டு, அவர்களை எதிர்த்துப் போனார்;

64 தம் சகோதரன் சீமோனை நாட்டிலேயே விட்டு விட்டுப் போனார்.

65 சீமோன் பெத்சூராவைத் தாக்கி, பலநாள் எதிர்த்துப் போர்செய்து, அதில் இருந்தவர்களை வெளியே போகவிடாமல் அடைத்து வைத்திருந்தான்.

66 அவர்கள் அவனோடு சமாதானம் செய்து கொள்ளும்படி கேட்டார்கள். அவன் அவர்கள் கேட்டபடியே இசைந்து, அவர்களை அவ்விடத்திலிருந்து அகற்றி நகரையும் பிடித்து, அதில் காவல் வைத்தான்.

67 யோனத்தாஸ் தம் படைகளோடு கெனேசார் கடலோரம் வந்து, பொழுது விடியுமுன் அசோர் சமவெளியில் காத்திருந்தார்.

68 அன்னியர் படை சமவெளியில் அவரை எதிர்த்து வந்து, மலைகளில் பதுங்கியிருந்தது. அவர் அவர்களை எதிர்த்துப்போனார்.

69 பதுங்கியிருந்தவர்கள் எழுந்து போர் செய்தார்கள்.

70 யோனத்தாசுடன் இருந்தவர்கள் எல்லாரும் ஓடினார்கள்; படைத்தலைவர்களான அப்சலோமின் புதல்வன் மத்தத்தியாசும், கால்பி புதல்வன் யூதாசும் தவிர வேறு ஒருவரும் இல்லை.

71 யோனத்தாஸ் தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு மண்ணைத் தம் தலை மேல் போட்டுக் கடவுளை மன்றாடினார்.

72 போர் செய்தவர்களை எதிர்த்துப் போய், அவர்களை முறியடித்து வெற்றியடைந்தார்.

73 அவரிடமிருந்து ஓடினவர்கள் இதைக்கண்டு, திரும்பி வந்து, காதேசில் பகைவர் பாளையம் வரையிலும் அவர்களைத் துரத்திப் பின்தொடர்ந்து அவ்விடம் சேர்ந்தார்கள்.

74 அன்று பகைவரில் மூவாயிரம் பேர் மாண்டார்கள். யோனத்தாசும் யெருசலேம் திரும்பினார்.

அதிகாரம் 12

1 காலம் தமக்கு ஏற்றதாக இருப்பதைக் கண்ட யோனத்தாஸ் சிலரைத் தேர்ந்து கொண்டு, உரோமையரோடு உடன்படிக்கையை உறுதிப்படுத்தவும் புதுபிக்கவும் அவர்களை உரோமைக்கு அனுப்பினார்.

2 அவ்வாறே ஸ்பார்த்தியருக்கும் மற்ற இடங்களுக்கும் கடிதங்கள் அனுப்பினார்.

3 அவர்கள் உரோமைக்குச் சென்று, சங்கத்தில் நுழைந்து: "தலைமைக்குரு யோனத்தாசும் யூத குலத்தாரும் உங்களோடு முன்போல நட்பும் சமாதான உடன்படிக்கையும் செய்யும்படியாக எங்களை அனுப்பினார்" என்று சொன்னார்கள்.

4 யூதர்கள் சமாதானமாய்த் தங்கள் நாடுசேர உதவும்படியாக அந்ததந்த இடங்களுக்கு எழுதப்பட்டிருந்த கடிதங்களை உரோமையர் அவர்களிடம் கொடுத்தார்கள்.

5 ஸ்பாத்தியருக்கு யோனத்தாஸ் எழுதின கடிதமாவது:

6 தலைமைக்குருவான யோனத்தாசும், மூத்தோரும் குருக்களும், யூத குலத்தைச் சேர்ந்த மற்றவர்களும் சகோதரரான ஸ்பார்த்தியருக்கு வாழ்த்துக் கூறுகிறோம்.

7 முன் உங்கள் நாட்டை ஆண்டு வந்த ஆரியுஸ் என்பவரால், நீங்கள் எங்கள் சகோதரர்களென்று எங்கள் தலைமைக்குருவான ஓனியாசுக்கு எழுதியனுப்பப்பட்டிருந்தது. இத்துடன் அனுப்பியிருக்கும் கடிதத்தைக் கொண்டு இதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

8 உங்களால் அனுப்பப்பட்ட மனிதனை ஓனியாஸ் மரியாதையோடு ஏற்றுக்கொண்டார்; நட்பையும் உடன்படிக்கைகையும் பற்றி எழுதியிருந்த கடிதத்தையும் ஒப்புக்கொண்டார்.

9 எங்கள் கைகளிலிருக்கும் மறைநூல்களினின்று நாங்கள் ஆறுதலடைவதனால் எங்களுக்கு இவையொன்றும் தேவையில்லாதிருப்பினும்,

10 உங்களிடமிருந்து பிரிந்து போகாதபடிக்கு உங்கள் உறவையும் நட்பையும் புதுப்பிக்க வேண்டி உங்களிடம் அனுப்பினோம். ஏனென்றால், உங்களிடமிருந்து செய்தி கேள்விப்பட்டுப் பலநாளாயிற்று.

11 நாங்களோ எங்கள் திருநாட்களிலும், மற்ற நல்ல நாட்களிலும் செலுத்தும் பலிகளில் இடைவிடாமல் உங்களை நினைப்பதுமல்லாமல், மற்றச் சடங்குகளிலும் சகோதரரை நினைவு கூர்கிறோம்.

12 உங்கள் புகழ் கண்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

13 எங்களைப் பற்பல துன்பங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன; பல போர்கள் நடந்தன. எங்களைச் சுற்றிலுமிருக்கும் மன்னவர்கள் எங்களை எதிர்த்துச் சண்டை செய்தார்கள்.

14 இந்தப் போர்களில் உங்களுக்காவது, இன்னும் பிற தோழர்கள், நண்பர்களுக்காவது தொந்தரவு கொடுக்க எங்களுக்கு விருப்பம் இருந்ததில்லை.

15 கடவுளுடைய உதவி எங்களுக்கு இருந்தமையால், அவர் எங்களைக் காப்பாற்றினார். எங்கள் பகைவர்கள் தாழ்த்தப்பட்டார்கள்.

16 ஆதலால், அந்தியோக்கஸ் புதல்வன் நுமேனியுசையும், யாசோன் புதல்வன் அந்திப்பாத்தரையும் உரோமையரோடு முன்னிருந்த நட்பையும் சமாதானத்தையும் புதுப்பிக்க அவர்களிடம் அனுப்பியிருக்கிறோம்.

17 நமது ஒற்றுமையைப் புதுப்பிக்கும்படியான கடிதத்தையும் அவர்கள் உங்களிடம் கொடுப்பார்கள்.

18 நாங்கள் எழுதியதற்குப் பதில் எழுதும்படி கேட்டுக்கொள்கிறோம்.

19 ஓனியாசுக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதமாவது:

20 ஸ்பார்த்தியர் மன்னர் ஆரியுஸ், தலைமைக்குரு ஓனியாசுக்கு வாழ்த்துகள் அனுப்புகிறோம்..

21 ஸ்பார்த்தியரும் யூதரும் சகோதரரென்றும், ஆபிரகாமின் மக்கள் என்றும் நூல்களில் காணப்படுகிறது.

22 நாம் அதனை அறிந்திருப்பதை முன்னிட்டு, நீங்கள் சமாதானத்தைப் பற்றி எழுதினால் நலமாயிருக்கும்.

23 நாம் உங்களுக்கு எழுதுவது என்னவென்றால், நம் மந்தைகளும், நமக்குச் சொந்தமான யாவும் உங்களுடையனவாகவும், உங்களுக்குச் சொந்தமான யாவும் நம்முடையனவாகவும் இருக்கட்டும். இதை உங்களுக்கு அறிவிக்கிறோம் என்பதாம்.

24 அப்பொழுது தெமெத்திரியுசின் படைத்தலைவர்கள் முன்னிருந்த சேனைகளை விட அதிகமான சேனைகளோடு தன்னை எதிர்த்துச் சண்டை போட வந்திருப்பதாக யோனத்தாஸ் கேள்விப்பட்டார்.

25 யெருசலேமை விட்டுப் புறப்பட்டு, அமாதீத்தர் நாட்டில் அவர்களை எதிர்த்துச் சென்றார். ஏனென்றால், தம்முடைய நாட்டிற்குள் நுழையும்படி அவர் காத்திருக்கவில்லை.

26 அவர்கள் பாளையத்துக்கு ஒற்றர்களை அனுப்பினார். இரவில் அவரைத் தாக்க எண்ணியிருக்கிறார்களென்று அவர்கள் அவருக்கு அறிவித்தார்கள்.

27 பொழுது இறங்கிய போது, தம்முடையவர்கள் விழித்து இரவு முழுவதும் படைக்கருவிகளோடு தயாராய் இருக்கும்படி கட்டளையிட்டு, தம் பாளையத்தைச் சுற்றிலும் காவலரை நியமித்தார்.

28 யோனத்தாஸ் தம் சேனைகளோடு சண்டைக்கு ஆயத்தமாய் இருக்கிறாரென்று பகைவர் கேள்விப்பட்டுப் பயந்து, மனக்கலக்கமுற்று, தாங்கள் பாளையம் இறங்கியிருந்த இடத்தில் நெருப்பு மூட்டிவிட்டு ஓட்டம் பிடித்தார்கள்.

29 யோனத்தாசும் அவர் படைகளும் பொழுது விடியுமட்டும் அதை அறிந்தார்களில்லை. அப்போது தான் நெருப்பு வெளிச்சத்தைக் கண்டார்கள்.

30 யோனத்தாஸ் அவர்களைப் பின்தொடர்ந்தும், அவர்களைப் பிடிக்க முடியவில்லை. ஏனென்றால், அவர்கள் எலேயுத்தேருஸ் நதியை ஏற்கனவே கடந்து விட்டார்கள்.

31 சபாதேயர் என்னப்பட்ட அராபியரிடம் யோனத்தாஸ் சென்று, அவர்களை வென்று, அவர்கள் பொருட்களைக் கொள்ளையடித்தார்.

32 பின் அவ்விடம் விட்டுத் தமஸ்கு வந்து, அந்நாடெங்கும் சென்றார்.

33 சீமோன் புறப்பட்டு அஸ்காலோனுக்கும் அதையடுத்த கோட்டைகளுக்கும் வந்தான்; யோப்பாவைத் தாக்கி, அதைக் கைப்பற்றினான்.

34 ஏனென்றால், தெமெத்திரியுஸ் படைகளுக்கு உதவிசெய்ய அவர்கள் மனம் கொண்டிருந்தார்களென்று கேள்விப்பட்டிருந்தான்; அதைக் காப்பதற்குக் காவலரை ஏற்படுத்தினான்.

35 யோனத்தாஸ் திரும்பி வந்து, மக்களின் மூத்தோரைக் கூட்டி, யூதேயாவில் கோட்டைகள் கட்டும்படியும்,

36 யெருசலேமில் மதில்கள் அமைக்கும்படியும், கோட்டைக்கும் நகரத்துக்கும் மத்தியில் உயர்ந்த மதில் எழுப்பி, அதை நகரத்தினின்று பிரித்துத் தனியாக்கி, யாதொன்றும் வாங்கவும் விற்கவும் கூடாத நிலையில் வைக்கும்படியும் தீர்மானித்தார்.

37 நகரத்தைக் கட்டும்படியாக எல்லாரும் கூடினர். கிழக்கில் ஆற்றோரமாய் இருந்த சுவர் விழுந்து போயிருந்தமையால், அவர் அதைக் கட்டி எழுப்பினார். அது காப்தேத்தா என்று அழைக்கப்பட்டது.

38 சீமோன் செப்பேலாவில், அதியதா நகரைக் கட்டி, வலுப்படுத்திக் கதவுகளும் பூட்டுகளும் போட்டான்.

39 திரிபோன் என்பவன் ஆசியாவை ஆளவும் முடிபுனையவும், மன்னன் அந்தியோக்கஸ் என்பவனைக் கொல்லவும் எண்ணம் கொண்டிருந்த போது,

40 யோனத்தாஸ் தன்னைத் தடுத்துத் தன்னுடன் எதிர்த்துச் சண்டை செய்வாரென்று பயந்து, அவரைப் பிடித்துக் கொல்லும்படி தேடினான்; ஆதலால், பெத்சானுக்குப் புறப்பட்டுச் சென்றான்.

41 யோனத்தாஸ் நாற்பதினாயிரம் படை வீரரோடு அவனை எதிர்த்து கொண்டு போய் பெத்சான் சேர்ந்தார்.

42 தன்னை எதிர்ப்பதற்குப் பெரும்படையோடு யோனத்தாஸ் வந்திருப்பதைத் திரிபோன் கண்டு பயந்து,

43 அவரை மிகுந்த மரியாதையோடு வரவேற்று, தன் நண்பரிடத்தில் அவரைப் புகழ்ந்து பேசி, அவருக்குப் பரிசளித்தான்; தனக்குக் கீழ்ப்படிவது போலவே அவருக்கும் கீழ்ப்படிய வேண்டுமென்று தன் படைகளுக்கு உத்தரவிட்டான்.

44 மேலும், யோனத்தாசை நோக்கி: நமக்குள் சண்டை இல்லாதபோது மக்களைத் தொல்லைப்படுத்துவானேன்?

45 ஆதலால், அவர்களை அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி விட்டு, உன்னுடன் இருக்கச் சிலபேரை மட்டும் தேர்ந்து கொண்டு என்னோடு தோலெமாயிது நகரம் வா. அதையும், மற்றக் கோட்டைகளையும், படைகளையும், அலுவல் ஆற்றும் தலைவர்கள் அனைவரையும் உன்னிடம் ஒப்புவித்து விட்டு நான் திரும்பிப் போவேன்; அதற்காகவே நான் வந்தேன் என்று கூறினான்.

46 யோனத்தாஸ் அவனை நம்பி, அவன் சொற்படி செய்து படைகளை அனுப்பி விட்டார். அவர்களோ யூதேயா நாடு சென்றார்கள்.

47 அவர் தம்மோடு மூவாயிரம் வீரர்களை வைத்துக் கொண்டு, இவர்களில் ஈராயிரம் வீரர்களைக் கலிலேயாவுக்குத் திரும்பிப் போகச் சொன்னார்; எஞ்சியிருந்த ஆயிரம் வீரர்களோ அவருடன் சென்றார்கள்.

48 யோனத்தாஸ் தோலெமாயிது நகருக்குள் நுழைந்த போது அந்நகரத்தார் கதவுகளை அடைத்து விட்டார்கள்; அவரைப் பிடித்துக் கொண்டார்கள்; அவருடன் வந்தவர்கள் எல்லாரையும் வாளுக்கு இரையாக்கினார்கள்.

49 அதுவுமின்றி, யோனத்தாசுடைய நண்பரெல்லாரையும் கொல்வதற்குப் படைகளையும் குதிரை வீரரையும் கலிலேயாவுக்கும் பெரிய சமவெளிக்கும் திரிபோன் அனுப்பினான்.

50 யோனத்தாசும் அவருடன் இருந்தவர்களும் பிடிபட்டு மாண்டார்களென்று அவர்கள் அறிந்து, தங்களுக்குத் தாங்களே துணிவு ஊட்டிக் கொண்டு, சண்டைக்குத் தயாராய் வந்தார்கள்.

51 தொடர்ந்து வந்தவர்களோ இவர்கள் தங்கள் உயிரைக் கொடுக்கத் துணிந்திருப்பதைக் கண்டு, திரும்பிப் போய் விட்டார்கள்.

52 பிறகு இவர்கள் அமைதியாய் யூதேயா நாடு திரும்பிச் சென்றார்கள்; யோனத்தாசுக்காகவும் அவருடன் மாண்டவர்களுக்காகவும் பெரிதும் துக்கம் கொண்டாடினார்கள். இஸ்ராயேலும் அழுது புலம்பியது.

53 இவர்களைச் சுற்றிலுமுள்ள இனத்தார் இவர்களை அழித்தொழிக்கத் தேடினார்கள்.

54 ஏனென்றால், இவர்களை நடத்துகிறவனும் இவர்களுக்கு உதவி செய்கிறவனும் இல்லை. ஆதலால், இப்போது இவர்களுடன் நாம் சண்டை செய்து, இவர்களை ஒழித்து, மனித வரலாற்றில் இவர்கள் பெயரே அற்றுப் போகும்படி செய்தால் நலம் என்று தங்களுக்குள் கூறிக்கொண்டார்கள்.

அதிகாரம் 13

1 யூதேயா நாடு வந்து அதை அழித்தொழிக்கும்படியாகத் திரிபோன் என்பவன் திரளான சேனைகளைச் சேர்த்திருக்கிறான் என்று சீமோன் கேள்விப்பட்டார்.

2 மக்கள் பயந்து நடுக்கமுற்றிருப்பதைக் கண்டு அவர் யெருசலேம் சென்று மக்களை ஒன்றாகச் சேர்த்து,

3 அவர்களுக்கு அவர் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைச் சொன்னார்: நானும் என் சகோதரரும் என் குடும்பத்தாரும் நம் கட்டளைகளுக்காகவும் கடவுள் ஆலயத்துக்காகவும் எத்தனை போர்கள் புரிந்தோமென்றும், எவ்வகைத் தொல்லைகளில் அகப்பட்டிருந்தோமென்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

4 இவற்றை முன்னிட்டன்றோ இஸ்ராயேலுக்காக என் சகோதரரெல்லாரும் மாண்டார்கள்; நான் மட்டும் எஞ்சியிருக்கிறேன்.

5 துன்ப காலத்தில் நான் என் உயிரை ஒரு போதும் காப்பாற்றப் போவதில்லை. என் சகோதரரை விட நான் மேம்பட்டவன் அல்ல.

6 ஆதலால், என் இனத்தாரும், கடவுளின் ஆலயமும், நம் பிள்ளைகளும், மனைவியரும் (பட்ட துன்பங்களுக்காகப்) பழிவாங்குவேன். ஏனென்றால், புறவினத்தார் எல்லாரும் நம்மீதுள்ள பகையினால் நம்மை அழித்தொழிக்கக் கூடியிருக்கிறார்கள்.

7 இவற்றைக் கேட்டதும் மக்களுக்குத் துணிவு உண்டாயிற்று.

8 எல்லாரும் உரத்த குரலில்: உம் சகோதரராகிய யூதாசுக்கும் யோனத்தாசுக்கும் பதிலாக நீரே எங்கள் படைத் தலைவராய் இருக்கிறீர்.

9 நீர் எங்கள் போர்களை நடத்தும்; நீர் கட்டளையிடுவதையெல்லாம் நாங்கள் செய்வோம் என்றார்கள்.

10 அப்போது அவர் எல்லாச் சேனைகளையும் ஒன்று சேர்த்து, யெருசலேம் சுற்று மதில்களை விரைவிலே கட்டினார்.

11 அப்சலோம் புதல்வன் யோனத்தாசையும், அவனுடன் புதிய சேனைகளையும் யோப்பாவுக்கு அனுப்பினார். அவன் அதிலிருந்தவர்களை வெளியே துரத்தி விட்டு அவ்விடத்தில் தங்கியிருந்தான்.

12 திரிபோன் தோலெமாயிதை விட்டு, காவலில் இருந்த யோனத்தாசையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, திரளான சேனைகளோடு யூதேயா நாடு வரப் புறப்பட்டான்.

13 சீமோன் சமவெளிக்கு எதிரில் அத்துஸ் ஓரமாய்ப் பாளையம் இறங்கினார்.

14 சீமோன் தம் சகோதரர் யோனத்தாசுக்குப் பதிலாகப் படையெடுத்து வந்திருக்கிறாரென்றும், தன்னுடன் போர் செய்யப் போகிறாரென்றும் திரிபோன் அறிந்து, அவரிடம் தூதுவரை அனுப்பி:

15 உம் சகோதரர் யோனத்தாஸ் செய்து வந்த காரியங்களை முன்னிட்டு, அரசருக்குக் கொடுக்க வேண்டிய வரிக்காக அவரை நாங்கள் எங்களிடம் நிறுத்தி வைத்திருக்கிறோம்.

16 ஆதலால், இப்போது அவர் ஓடி விடாதபடிக்குப் பிணையாக நீர் நூறு வெள்ளிக் காசுகளையும், அவருடைய இரு புதல்வரையும் அனுப்பினால், அவரை விடுவிக்கிறோம் என்று சொன்னான்.

17 அவன் கபடமாய்ப் பேசுகிறானென்று சீமோன் அறிந்திருந்தும், இஸ்ராயேல் மக்களின் கோபத்துக்கும் பகைக்கும் தாம் ஆளாகாதபடி பணத்தையும் பிள்ளைகளையும் ஒப்புவிக்கும்படி கட்டளையிட்டார்.

18 அவர்கள்: பணத்தையும் பிள்ளைகளையும் அனுப்பாததால் தானே யோனத்தாஸ் மடிந்தார் என்று சொல்வார்களென்று எண்ணி,

19 பிள்ளைகளையும் நூறு வெள்ளிக் காசுகளையும் அனுப்பினார். திரிபோனோ தான் சொல்லியதை மீறி, யோனத்தாசை அனுப்பவில்லை.

20 அதன் பிறகு, திரிபோன் நாட்டை அழிப்பதற்கு அதற்குள் புகுந்தான்; அதோருக்குப் போகும் வழியாய்ச் சென்றான். அவன் சென்ற விடமெல்லாம் சீமோனும் தம் சேனைகளோடு சென்றார்.

21 கோட்டைக்குள் இருந்தவர்கள், திரிபோன் விரைவாய்ப் பாலைவனம் வழியாய் வந்து தங்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பும்படியாக அவனிடம் தூதுவர்களை அனுப்பினார்கள்.

22 அன்று இரவே போகும்படியாகத் திரிபோன் தன் குதிரை வீரரைத் தயாராக்கினான். ஆனால், பனி மிகுதியாக இருந்தபடியால் அவன் கலாத்துக்குப் போகவில்லை.

23 பாஸ்காமா அருகே வந்தபோது, அவன் யோனத்தாசையும் அவருடைய பிள்ளைகளையும் அவ்விடத்தில் கொன்றான்.

24 பிறகு திரிபோன் தன் சொந்த நாடு சேர்ந்தான்.

25 சீமோன் ஆட்களை அனுப்பித் தம் சகோதரர் யோனத்தாசின் எலும்புகளை எடுத்து வரச் செய்து, அவற்றைத் தம் முன்னோரின் நகரமாகிய மோதினில் அடக்கம் செய்தார்.

26 இஸ்ராயேலர் எல்லாரும் பெருந்துக்கம் கொண்டாடினார்கள்; அவருக்காகப் பலநாள் புலம்பினார்கள்.

27 சீமோன் தம் தந்தையினுடையவும் சகோதரருடையவும் கல்லறையின் மேல் கட்டடம் ஒன்று எழுப்பி, முன்னும் பின்னும் சலவைக் கற்கள் பதித்தார்.

28 தந்தைக்கும் தாய்க்கும் நான்கு சகோதரர்களுக்கும் ஒன்றுக்கு முன் ஒன்றாக ஏழு கோபுரங்களை எழுப்பினார்.

29 இவைகளைச் சுற்றிலும் உயர்ந்த தூண்களை எழுப்பி, அத்தூண்களின் மேல் அவர்கள் நினைவாக போர்க் கருவிகளையும் வைத்தார். கடற்பயணம் செய்யும் யாவரும் காணும்படி போர்க்கருவிகளுக்கு அருகே கற்களில் வெட்டப்பட்ட கப்பல்களையும் அமைத்தார்.

30 மோதின் நகரில் இந்நாள் வரை இருக்கும் கல்லறை அதுவே.

31 திரிபோன் இளம் வயதினனான அரசன் அந்தியோக்கஸ் என்பவனோடு பயணம் செய்யும்போது கபடமாய் அவனைக் கொன்று,

32 அவனுக்குப் பதிலாய் அரசாண்டு, ஆசியாவில் முடிபுனைந்து, நாடுகளில் தொல்லைகள் பல விளைவித்தான்.

33 சீமோன் யூதேயாவில் கோட்டைகளைக் கட்டி, உயர்ந்த கோபுரங்களாலும் அகன்ற சுவர்களாலும் கதவுகளாலும் பூட்டுகளாலும் வலுப்படுத்தினார்; கோட்டைக்குள் உணவு வகைகளையும் சேர்த்து வைத்தார்.

34 திறை செலுத்துவதினின்று தம் நாட்டை விடுவிக்கும்படி கேட்க வேண்டி, சீமோன் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தெமெத்திரியுசிடம் அனுப்பினார். ஏனென்றால், திரிபோன் செய்வதெல்லாம் கொள்ளையடிக்கும் செயலேயாகும்.

35 தெமெத்திரியுஸ் மன்னன் அவர்களுக்கு மறுமொழியாக:

36 தெமெத்திரியுஸ் மன்னர் தலைமைக்குருவும், மன்னர்கள் நண்பருமான சீமோனுக்கும், மூத்தோருக்கும், யூத இனத்தாருக்கும் வாழ்த்துக் கூறுகிறோம்.

37 நீங்கள் அனுப்பிய பொன்முடியும், குருத்தோலையும் பெற்றுக் கொண்டோம். உங்களுடன் உறுதியான சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளவும், உங்களுக்கு நாம் அனுப்பிய நன் கொடைகளைக் கொடுக்க மன்னரால் ஏற்படுத்தப்பட்ட தலைவர்களுக்கு எழுதவும் ஆயத்தமாயிருக்கிறோம்.

38 உங்களைப் பொறுத்த மட்டில், நாம் செய்துள்ள ஏற்பாடுகள் யாவும் உறுதியாய் இருக்கட்டும், நீங்கள் கட்டிய கோட்டைகளை உங்களுக்குச் சொற்தமாக விட்டு விடுகிறோம்.

39 இந்நாள் வரை நீங்கள் செய்துள்ள குற்றங்களையும் தீமைகளையும் மன்னிக்கிறோம். நீங்கள் கொடுக்க வேண்டிய முடியையும் கேட்காமல் விட்டு விடுகிறோம். இன்னும் யெருசலேமினின்று நமக்குச் சேர வேண்டிய வரி ஏதேனும் உண்டானால், அதையும் மன்னிக்கிறோம்.

40 உங்களில் யாரேனும் நம்முடைய படைகளில் சேர்வதற்குத் தகுதியுடையவராயிருந்தால், அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். நம்மிடையே சமாதானம் நிலவட்டும் என்று எழுதினான்.

41 நூற்றெழுபதாம் ஆண்டு இஸ்ராயேல் மக்கள் புறவினத்தாரின் அடிமைத் தளையினின்று நீங்கினார்கள்.

42 அது முதல் இஸ்ராயேல் மக்கள் பலகைகளிலும் பொதுப்புத்தகங்களிலும், தலைமைக்குருவும் சிறந்த படைத்தலைவரும் யூத பிரபுவுமான சீமோன் ஆட்சி செலுத்தின முதல் ஆண்டு என்று எழுதத் தொடங்கினார்கள்.

43 அந்நாட்களில் சீமோன் காசா நகரத்தை முற்றுகையிட்டு, படைகளால் அதைச் சூழ்ந்துகொண்டு, போர்ப்பொறிகளைச் செய்வித்து, நகரைச் சுற்றிவளைத்து, கோபுரமொன்றைத் தாக்கி நகரைப் பிடித்துக் கொண்டார்.

44 போர்ப்பொறியினுள் இருந்தவர்கள் திடீரென்று நகரினுள் நுழைய நகரில் பெரிய பரபரப்பு உண்டாயிற்று.

45 நகரில் இருந்தவர்கள் தங்கள் மனைவி மக்களோடு மதில் மேல் ஏறி, தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, தங்களோடு சமாதானம் செய்யும்படி சீமோனைக் கேட்டுக்கொண்டார்கள்:

46 நாங்கள் செய்த தீமைகளுக்கு எங்களைத் தண்டியாமல், எங்கள் மீது இரக்கம் வையும் என்று மன்றாடினார்கள்.

47 சீமோனும் மனம் இரங்கி, அவர்களோடு நகருக்கு வெளியே துரத்தி விட்டு, சிலைகள் வைத்திருந்த வீடுகளைத் தூய்மைப்படுத்தி முடிந்த பின்பு, ஆண்டவருக்குப் புகழ்ச்சியாக இன்னிசைகள் பாடிக் கொண்டு நகருக்குள் புகுந்தார்.

48 அதனின்று எல்லாத் தீட்டுகளையும் நீக்கி, மறைக்கட்டளை ஒழுங்குகளை அனுசரிக்கச் செய்ய சிலரை ஏற்படுத்தினார். நகரத்திற்கு அரண் அமைத்து அதைத் தம் உறைவிடமாக்கிக் கொண்டார்.

49 யெருசலேம் கோட்டைக்குள் இருந்தவர்கள் வெளியே வரவும், நாட்டுக்குள் புகவும், வாங்கவும் விற்கவும் தடைசெய்யப் பட்டிருந்தனர். ஆதலால்,அவர்கள் பசியினால் வருந்தினார்கள். அவர்களில் பலர் பஞ்சத்தால் மாண்டார்கள்.

50 தங்களை விட்டு விடும்படி அவர்கள் சீமோனை மன்றாடினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்; அவர்களை அவ்விடத்தினின்று துரத்தி விட்டு, கோட்டையைத் தீட்டுகளினின்றும் தூய்மைப்படுத்தினார்.

51 நூற்றெழுபத்தோராம் ஆண்டு இரண்டாம் மாதம் இருபத்து மூன்றாம் நாள் இஸ்ராயேலின் பெரும் பகைவன் ஒழிந்தமையால், நன்றிப் புகழ்ச்சியாகக் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு, வீணை முதலிய இசைக்கருவிகள் முழங்க, இன்னிசை வாழ்த்துகள் பாடிக்கொண்டு கோட்டைக்குள் புகுந்தார்கள்.

52 இந்நாள் ஆண்டு தோறும் மகிழ்ச்சியாய்க் கொண்டாடப்பட வேண்டுமென்று அவர் கட்டளையிட்டார்.

53 கோட்டைக்கு அருகில் இருந்த ஆலயத்தின் மலையை வலுப்படுத்தி, அதில் அவரும் அவருடன் இருந்தவர்களும் வாழலாயினர்.

54 தம் புதல்வன் அருளப்பன் போரில் வீரம் நிறைந்தவனென்று சீமோன் கண்டு, அவனைப் படைகளுக்கெல்லாம் தலைவனாக நியமித்தார். அவன் காசாவில் வாழ்ந்தான்.

அதிகாரம் 14

1 திரிபோனை எதிர்த்துச் சண்டை செய்வதற்கு உதவி கேட்கும்படியாக, நூற்றெழுபத்திரண்டாம் ஆண்டு தெமெத்திரியுஸ் தன் படைகளைக் கூட்டிக்கொண்டு மேதியா நாடு சென்றான்.

2 தெமெத்திரியுஸ் தன் எல்லைகளுக்குள் நுழைந்தானென்று பாரசீகம், மேதியா நாடுகளின் அரசனான ஆர்சாசெஸ் கேள்விப்பட்டு, அவனை உயிரோடு பிடித்துத் தன்னிடம் கொண்டுவருவதற்காகத் தன் படைத்தலைவரில் ஒருவனை அனுப்பினான்.

3 அவன் தெமெத்திரியுசின் படையை நோக்கிச் சென்று, அதை முறியடித்து, அவனைப் பிடித்து, ஆர்சாசெஸ் அரசனிடம் கூட்டிச் சென்று சிறைப்படுத்தினான்.

4 சீமோனுடைய ஆட்சியில் யூதேயா நாடு அமைதியாய் இருந்தது. அவர் தம் இனத்தாருக்கு நன்மை செய்துவந்தார். அவர்கள் எந்நாளும் அவரது ஆட்சித்திறனிலும் புகழிலும் மகிழ்ந்திருந்தனர்.

5 யோப்பாவைத் துறைமுகப் பட்டினமாகக் கொண்டு, அதனின்று தீவுகளுக்குச் சென்றது, அவர் செய்த புகழுக்குரிய செயல்களில் ஒன்று.

6 தம் நாட்டின் எல்லைகளை விரிவாக்கி, நாடு முழுவதையும் அவர் கீழ்ப்படுத்தினார்.

7 பலரைச் சிறைப்படுத்தி, காசாராவையும் பெத்சூராவையும் கோட்டையையும் தம் வயப்படுத்தினார். அவைகளிலிருந்த ஒழுக்கக் கேடுகளை நீக்கினார். அவரை எதிர்த்தவர்கள் ஒருவரும் இல்லை.

8 ஒவ்வொருவனும் சமாதானத்தில் தன் தன் நிலத்தைப் பயிரிட்டு வந்தான். யூதேயா நாட்டில் நல்ல விளைச்சல் உண்டாயிற்று. நாட்டிலுள்ள மரங்களும் கனிகளைக் கொடுத்தன.

9 முதியோர் எல்லாரும் பொதுவிடங்களில் அமர்ந்து, நிலத்தின் செழுமையைப் பற்றிப் பேசினார்கள். இளைஞரோ போருடைகளையும் போர் அணிகளையும் அணிந்தார்கள்.

10 நகரங்களில் உணவுப் பொருட்களைச் சேகரித்து வைத்து, அவற்றை (நகரங்களை) அவர் ஆயுதக் கிடங்குகளாகவும் ஏற்படுத்தினார். பாரெங்கும் அவர் புகழ் பரவியது.

11 அவர் நாட்டில் அமைதியை நிலைநாட்டினார்.

12 இஸ்ராயேல் பெரிதும் மகிழ்ந்திருந்தது. எல்லாரும் தத்தம் கொடிமுந்திரித் தோட்டங்களிலும் அத்திமரத் தோப்புகளிலும் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அச்சம் வருவிப்பவர் எவரும் இல்லை.

13 அப்பொழுது அரசர்கள் அவர்களுக்கு அஞ்சி இருந்தனர்.

14 அவர் ஏழைகளைப் பாதுகாத்து, கட்டளைகளை அனுசரிக்கும்படி செய்து, எல்லா அக்கிரமங்களையும் தீமைகளையும் அகற்றினார்.

15 புனித இடத்தை அலங்கரித்து ஆலயத்தின் பாத்திரங்களை அதிகமாய்ச் சேகரித்து வைத்தார்.

16 யோனத்தாஸ் இறந்து போனாரென்று உரோமையிலும் ஸ்பார்த்தாவிலும் கேள்வியுற்று, அவர்கள் மிக்க துயரம் அடைந்தார்கள்.

17 அவருக்குப் பதிலாக அவர் சகோதரர் சீமோன் தலைமைக்குருவாகத் தெரிந்துகொள்ளப்பட்டாரென்றும், நாடு முழுமையும், நகரங்கள் யாவையும் தம் ஆட்சிக்கு உட்படுத்தினார் என்றும் கேள்விப்பட்ட போது,

18 அவருடைய சகோதரர்காளகிய யூதாசோடும் யோனத்தாசோடும் தாங்கள் செய்திருந்த சமாதான உடன்படிக்கையையும் நட்பையும் புதுபிக்கும்படி பித்தளைத்தகடுகளில் அவருக்கு எழுதினார்கள்.

19 யெருசலேம் ஆலயத்துக்கு முன்பாக அவை வாசிக்கப்பட்டன.

20 ஸ்பார்த்தியர் எழுதியது; ஸ்பார்த்திய பிரபுக்களும் நகரங்களும் தலைமைக்குரு சீமோனுக்கும் மூத்தோருக்கும் குருக்களுக்கும், மற்ற யூத மக்களுமாகிய சகோதரர்களுக்கும் வாழ்த்துகள்.

21 எங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் உங்கள் மகிமை, பெருமை, மகிழ்ச்சிகளைப் பற்றி எங்களுக்கு அறிவித்தார்கள். நாங்களும் அவர்கள் வருகையினால் மகிழ்ச்சி அடைந்தோம்.

22 அவர்கள் எங்கள் மக்கள் சபையில் சொல்லிய யாவையும் நாங்கள் எழுதிக் கொண்டோம். அதாவது: அந்தியோக்கஸ் புதல்வன் நுமேனியுசும், யாசோன் புதல்வன் அந்திப்பாத்தரும் யூதருடைய தூதர்களாக முன்செய்திருந்த உடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொள்வதற்காக வந்தார்கள்.

23 அவர்களை மரியாதையாய் ஏற்றுக்கொள்வதற்கும், ஸ்பார்த்தியருடைய நினைவாக மக்கள் சபையின் நூற்களில் எழுதி வைப்பதற்கும் மக்கள் விருப்பம் கொண்டார்கள். இதன் நகல் ஒன்றைத் தலைமைக் குருவாகிய சீமோனுக்கு அனுப்பி இருக்கிறோம்.

24 இதன் பிறகு சீமோன் உரோமையரோடு உடன்படிக்கை செய்ய நுமேனியுசை ஆயிரம் காசு நிறையுள்ள ஒரு பெரிய பொற் கேடயத்தோடு உரோமைக்கு அனுப்பினார்.

25 உரோமை மக்கள் இதைக் கேள்விப்பட்ட போது: சீமோனுக்கும் அவர் புதல்வர்களுக்கும் நாங்கள் எவ்விதம் நன்றி செலுத்தப் போகிறோம்?

26 ஏனென்றால், அவர் தம் சகோதரரை முன்னிருந்த நிலையில் உறுதிப்படுத்தினார்; இஸ்ராயேலின் பகைவர்களை முறியடித்தார்; அதன் சுதந்திரத்தை நிலைநாட்டினார் என்று கூறினார்கள். எனவே, அவர்கள் அதனைப் பித்தளைத் தகடுகளில் எழுதி, சீயோன் மலையில் காணக்கூடிய இடத்தில் வைத்தார்கள்.

27 எழுதப்பட்டிருந்தது என்னவென்றால்: நூற்றெழுபத்திரண்டாம் ஆண்டு எலுல் மாதம் பதினெட்டாம் நாள்- சீமோன் தலைமைக்குருவான மூன்றாம் ஆண்டு- அசராமெலில்,

28 குருக்களும் மக்களும், குல பிரபுக்களும், நாட்டின் மூத்தோரும் கூடிய பெரிய சபையில் அறிவிக்கப்பட்டது என்னவென்றால்: நமது நாட்டில் பற்பல போர்கள் நடந்தன.

29 யாரிப் கோத்திரத்தில் மத்தத்தியாஸ் புதல்வர் சீமோனும், அவர் சகோதரரும் தாங்களே ஆபத்துக்குத் துணிந்து, தங்கள் கடவுள் ஆலயத்தையும் கட்டளையையும் காப்பதற்குத் தங்கள் பகைவரை எதிர்த்து, தங்கள் இனத்தாரைப் பெரிதும் மாட்சிப்படுத்தினார்கள்.

30 யோனத்தாஸ் தம் இனத்தாரைக் கூட்டி, தாம் தலைமைக்குருவாகி, அவர்கள் மீது ஆட்சி செலுத்தி வந்தார்.

31 பகைவர்கள் அவர்களைக் கீழ்ப்படுத்தவும், அவர்கள் ஆலயத்தைக் கைக்கொள்ளவும் முயன்றார்கள்.

32 அப்போது சீமோன் அவர்களை எதிர்த்துத் தம் இனத்தாருக்காகச் சண்டை செய்து ஏராளமான பணம் செலவழித்து, தம் இனத்தாரில் வீரமுள்ளவர்களுக்குப் போர்க்கருவிகளைச் சேகரித்துக் கொடுத்து, அவர்களுக்குச் சம்பளமும் வழங்கினார்.

33 யூதேயா நகரங்களையும், முன் பகைவர்களின் போர்க் கருவிகள் வைக்கப்பட்டிருந்த யூதேயா நாட்டின் எல்லையிலுள்ள பெத்சூரா நகரத்தையும் வலுப்படுத்தி, அவ்விடத்தில் யூத வீரரைக் காவலாக வைத்தார்.

34 கடலோரத்தில் இருந்த யோப்பாவையும், முன் பகைவர்கள் வாழ்ந்து வந்த அசோத்துஸ் எல்லைகளிலுள்ள காசாராவையும் வலுப்படுத்தி, அவ்விடங்களிலும் யூதரைக் காவல் வைத்தார். அவர்களுக்குத் தேவையானதெல்லாம் கொடுத்தார்.

35 மக்கள் சீமோன் செய்தவைகளையும், தம் இனத்தாருக்கு அவர் செய்ய எண்ணியிருந்த மகிமையையும், கண்டு, இவையெல்லாம் அவரால் உண்டானதைப் பற்றியும், அவருக்குத் தம் இனத்தார் மீதுள்ள நீதி, விசுவாசத்தைப் பற்றியும், அவர் எல்லா வகையிலும் தம் மக்களை மேன்மைப்படுத்தத் தேடியதைப் பற்றியும் குறித்து அவரைத் தங்கள் தலைவராகவும், குருக்கள் தலைவராகவும் ஏற்படுத்தினார்கள்.

36 அந்நாட்களில் அவர் ஆட்சியின் கீழ் எல்லாம் கைகூடியது. ஏனைய மக்கள் அந்நாட்டினின்று துரத்தப்பட்டார்கள். யெருசலேமில் தாவீதின் நகரிலும் கோட்டையிலும் இருந்து கொண்டு, கடவுள் ஆலயத்தைச் சுற்றிலுமிருந்தவைகளைத் தீட்டுப்படுத்திக் களங்கம் உண்டாகியவர்களும் துரத்தப்பட்டார்கள்.

37 நாட்டினுடையவும் நகரினுடையவும் காவலுக்கு யூத வீரரை ஏற்படுத்தி, யெருசலேமின் மதில்களை அவர் உயர்த்தினார்.

38 தெமெத்திரியுஸ் மன்னன் அவரைத் தலைமைக்குருவாக நியமித்தான்.

39 அதே சமயத்தில் அவரைத் தன் நண்பனாகவும் கொண்டு, அவரை மிக்க மகிமை, பெருமைகளால் விளங்கச் செய்தான்.

40 ஏனென்றால், உரோமையரால் நண்பர்கள், தோழர்கள், சகோதரர்களென்று யூதர்கள் அழைக்கப்படுவதையும், சீமோனுடைய பிரதிநிதிகளை அவர்கள் மரியாதையாய் ஏற்றுக் கொண்டதையும் கேள்விப்பட்டிருந்தான்.

41 மேலும் உண்மையான இறைவாக்கினர் ஒருவர் உதிக்கும் வரையில், யூதர்களும் அவர்கள் குருக்களும்: காலமெல்லாம் அவரே தங்கள் தலைவரும் தலைமைக்குருவுமாய் இரக்க இசைந்ததுமன்றி,

42 தங்களுக்குத் தலைவராகவும், தங்கள் மறைபற்றிய காரியங்களைக் கவனிக்கவும், தங்கள் வேலைகளையும் நாட்டையும் படையையும் காவலரையும் நடத்தும் பெரியோரை நியமிக்கவும்,

43 கடவுள் ஆலயத்தைப் பாதுகாக்கவும் அவரை நியமித்தார்களென்றும், அனைவரும் அவருக்குக் கீழ்ப்படிவதென்றும், அவர் பெயராலேயே எல்லா ஒப்பந்தங்களையும் எழுதுவதென்றும், அவர் கருஞ்சிவப்பு மேலாடையும் பொன்னாடையும் அணிந்து கொள்வதென்றும்,

44 இப்போது தீர்மானிக்கப்பட்டவைகளில் எதையேனும் மக்கள், குருக்கள் இவர்களில் எவரும் மறுக்கக் கூடாதென்றும், அவர் வார்த்தைகளுக்கு எவரும் எதிர்த்துப் பேசக் கூடாதென்றும், அவர் அனுமதி இல்லாமல் நாட்டில் சபை கூடுவதில்லையென்றும், கருஞ்சிவப்பு மேலாடையும் பொன் கொக்கியும் அணிவதில்லையென்றும்,

45 இவைகளுக்கு எதிராகச் செய்பவன் அல்லது இவைகளை மறுப்பவன் எவனும் குற்றவாளியாவான் என்றும் தீர்மானித்தார்கள்.

46 இவைகளையெல்லாம் மக்கள் ஒத்துக் கொண்டு சீமோனை ஏற்றுக் கொண்டார்கள்.

47 சீமோனும் இசைந்து தலைமைக்குரு பதவியை நிறைவேற்றவும், யூத குலத்தாருக்கும் குருக்களுக்கும் தலைவராகவும் அதிகாரியாகவும் இருக்கவும், அனைத்தையும் முன்னின்று நடத்தவும் ஒப்புக்கொண்டார்.

48 இவைகளைப் பித்தளைத் தகடுகளில் எழுதி, காணக்கூடிய இடத்தில் கடவுள் ஆலயத்தின் முன்வாயிலில் வைப்பதென்று அவர்கள் ஏற்பாடு செய்தார்கள்.

49 சீமோனுடையவும், அவர் புதல்வருடையவும் உபயோகத்துக்காக நகல் ஒன்று கடவுள் ஆலயத்தின் கருவூலப் பெட்டியில் வைக்கப்பட்டது.

அதிகாரம் 15

1 கடலின் தீவுகளினின்று தெமெத்திரியுஸ் புதல்வனான அந்தியோக்கஸ் மன்னன் யூத குலத்தின் தலைமைக்குருவும் தலைவருமான சீமோனுக்கும் எல்லா மக்களுக்கும் கடிதம் எழுதினான்.

2 அதில் சொல்லப்பட்டவை என்னவென்றால்: தலைமைக்குரு சீமோனுக்கும் யூத குலத்தாருக்கும் அந்தியோக்கஸ் மன்னர் வாழ்த்துக் கூறுகிறோம்.

3 நம்முடைய முன்னோரின் நாட்டைச் சில தீயவர் கைப்பற்றிக் கொண்டபடியால், நாம் அதைத் திரும்பவும் பழைய நிலைக்குக் கொணரத் தீர்மானித்திருக்கிறோம். அதற்காகவே சிறந்த சேனையையும் போர்க் கப்பல்களையும் சேகரித்திருக்கிறோம்.

4 நம்முடைய நாட்டிற்குத் தீமை செய்தவர்களையும், நம் ஆட்சிக்குட்பட்ட பல நகரங்களையும், அழித்தவர்களையும் பழிவாங்குவதற்காக நாட்டினுள் புக மனம் கொண்டுள்ளோம்.

5 ஆதலால், நமக்கு முன்னிருந்த அரசர்கள் அனைவரும் உனக்கு விலக்கியிருந்த எல்லா வரிகளையும், உனக்கு வழங்கியிருந்த எல்லாக் கொடைகளையும் நாமும் இப்போது ஏற்றுக் கொள்கிறோம்.

6 உன் நாட்டில் உன் பெயரால் நாணயம் அடிக்க அனுமதி அளிக்கிறோம்.

7 யெருசலேம் நகர் புனிதமானதாகவும் சுதந்திரம் உள்ளதாகவுமிருக்கவும், செய்யப்பட்ட எல்லாப் போர்க் கருவிகளும், நீ கட்டி வாழ்ந்து வரும் கோட்டைகளும் உன் ஆளுகையின் கீழ் இருக்கவும் உத்தரவளிக்கிறோம்.

8 கடந்த காலத்துக்கும் வருங்காலத்திற்கும், இன்று முதல் எப்போதைக்கும் அரசருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கடன்களெல்லாம் உனக்கு மன்னிக்கப்பட்டன.

9 நமது நாட்டை நாம் அடைந்த பிறகு, உங்கள் பெயர் பூவுலகெங்கும் விளங்கும்படி, உன்னையும் உன் இனத்தாரையும் ஆலயத்தையும் பெரிதும் மாட்சிப்படுத்துவோம்.

10 நூற்றெழுபத்து நான்காம் ஆண்டு அந்தியோக்கஸ் தன் முன்னோரின் நாட்டினுள் புகுந்தான். எல்லாப் படைகளும் அவனைச் சேர்ந்து கொண்டன. ஆதலால், திரிபோனுடன் சிலர் மட்டுமே தங்கியிருந்தனர்.

11 அந்தியோக்கஸ் மன்னன் அவனைப் பின் தொடரவே, அவன் கடலோரமாய் ஓடித் தோராவை அடைந்தான்.

12 ஏனென்றால், தன் மேல் பழிகள் பல சுமத்தப்பட்டிருப்பதையும், தன் படைகள் தன்னை விட்டகன்றதையும், அறிந்திருந்தான்.

13 அந்தியோக்கஸ் நூற்றிருபதினாயிரம் படை வீரரோடும், எண்ணாயிரம் குதிரை வீரரோடும் தோரா நகரைத் தாக்கினான்.

14 நகரைச் சுற்றி வளைத்துக் கொண்டு, கப்பல்களும் அருகில் வரும்படி செய்தான்; கடற்பக்கமும் தரைப்பக்கமும் நகரை நெருக்கி, எவனும் வெளியே போகாமலும் உள்ளே நுழையாமலும் செய்தான்.

15 அரசர்களுக்கும் பல இனத்தாருக்கும் எழுதப்பட்ட கடிதங்களோடு நுமேனியுசும் அவனுடன் இருந்தவர்களும் உரோமையினின்று திரும்பி வந்தார்கள்.

16 அவைகளில்: உரோமையருடைய தூதர் லூசியுஸ் தோலெமேயுஸ் மன்னனுக்கு வாழ்த்துகள்.

17 யூதருடைய தலைமைக்குருவான சீமோனாலும் யூத மக்களாலும் முன் செய்திருந்த சமாதான உடன்படிக்கையையும் நட்பையும் புதுப்பிக்கும்படி அனுப்பப்பட்ட எங்கள் நண்பரான யூத பிரதிநிதிகள் எங்களிடம் வந்தார்கள்.

18 அவர்கள் ஆயிரம் பொற்காசு நிறையுள்ள பொன்கேடயம் ஒன்று கொண்டு வந்தார்கள்.

19 ஆதலால், அவர்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கும், அவர்களை எதிர்த்துப் போர்செய்கிறவர்களுக்கு உதவி செய்யாதபடிக்கும் அரசர்களுக்கும் நாடுகளுக்கும் எழுதுகிறோம்.

20 அவர்கள் கொண்டு வந்த கேடயத்தைப் பெற்றுக்கொள்வது எங்களுக்கு நலமாகத் தோன்றியது.

21 ஆதலால், தீயவர் யாரேனும் அவர்கள் நாட்டினின்று உங்களிடம் ஓடி வந்து விடுவார்களேயானால், தங்கள் சட்டப்படி அவர்களைப் பழிவாங்கும்படியாகத் தலைமைக்குருவான சீமோனிடம் அவர்களை ஒப்புவித்து விடுங்கள் என்று எழுதியிருந்தது.

22 இவ்வாறே தெமெத்திரியுஸ் மன்னனுக்கும், அத்தாலுஸ், அரியார்த்துஸ், அர்சாக்கஸ் மன்னர்களுக்கும்,

23 எல்லா நாடுகளுக்கும், லாம்சாக்கஸ், ஸ்பார்த்தியர், தேலோஸ், மிந்தோஸ், சீசியோன், காரியா, சாமோஸ், பாம்பீலியா, லீசியா, அலிக்கார்நாசுஸ், கோவோ, சீதெ, அராதுஸ், ரோதுஸ், பாசேலிதஸ், கார்த்தீனா, நீதுஸ், சீப்புருஸ், சிரேனே, முதலிய இனத்தாருக்கும் நாடுகளுக்கும் எழுதியிருந்தது.

24 அவர்கள் இதன் நகலைத் தலைமைக்குரு சீமோனுக்கும் யூதமக்களுக்கும் அனுப்பினார்கள்.

25 அந்தியோக்கஸ் மன்னன் திரும்பவும் தோரா நகரைத் தாக்கி, போரில் பலப் பொறிகளை பயன்படுத்தி எதிர்த்தான். திரிபோன் தப்பித்துக் கொள்ளாதபடி அவனை அடைத்து வைத்தான்.

26 சீமோன் அவனுக்கு உதவியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாயிரம் வீரரும், வெள்ளியும் பொன்னும் திரளான பாத்திரங்களும் அனுப்பினார்.

27 ஆனால், அந்தியோக்கஸ் அவற்றை ஏற்றக்கொள்ள மனமில்லாமல், சீமோனுடன் தான் செய்திருந்த உடன்படிக்கையை உதறி விட்டு அவரை விட்டகன்றான்.

28 அதன் பிறகு, சீமோனுடன் பேச்சு நடத்தத் தன் நண்பரில் ஒருவனான அத்தேனோபியுசை அனுப்பி: நீங்கள் எமது நாட்டின் நகரங்களாகிய யோப்பா, காசாரா, யெருசலேம் கோட்டை இவைகளைக் கைப்பற்றி இருக்கிறீர்கள்.

29 அவைகளைக் கொடுமைப்படுத்தி, நாட்டில் பெருந்தீமைகள் புரிந்து, எமது நாட்டின் பல இடங்களில் ஆட்சி செலுத்துகிறீர்கள்.

30 இப்போது நீங்கள் கைப்பற்றியுள்ள நகரங்களை விட்டு விட்டு, யூதேயாவின் எல்லைக்கு அப்பால் நீங்கள் ஆட்சி செலுத்தி வந்த நாடுகளின் திறையைச் செலுத்தி விடுங்கள்.

31 இல்லாவிடில் அவைகளுக்காக ஐந்நூறு வெள்ளித் தாலேந்துகளுக்காகக் கட்டவேண்டிய கப்பங்களுக்கும் பதிலாக வேறு ஐந்நூறு தாலேந்துகளும் கட்டி விடுங்கள். தவறினால் உங்களைத் தாக்குவோம் என்று சொல்லச் சொன்னான்.

32 மன்னனின் நண்பன் அந்தேனோபியுஸ் யெருசலேம் வந்து, சீமோனுடைய ஆடம்பர மாட்சியையும், பொன்னும் வெள்ளியும் நிறைந்திருந்த மகிமையையும், எங்கும் விளங்கிய அலங்காரத்தையும் கண்டு வாயடைத்து நின்றான்.

33 மன்னனுடைய வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தான். சீமோன் அவனுக்கு மறுமொழியாக: நாங்கள் அன்னிய நாட்டைப் பிடித்துக் கொள்ளவுமில்லை; அன்னியப் பொருட்களை வைத்துக் கொள்ளவுமில்லை. ஆனால், எங்கள் பகைவரால், சிறிது காலமாக அநியாயமாய்ப் பறிக்கப்பட்டிருந்த எங்கள் முன்னோரின் சொத்துக்களைத் திரும்பப் பெற்றுள்ளோம்.

34 தக்க சமயம் வாய்த்தமையால் எங்கள் முன்னோரின் சொத்துகளை நாங்கள் திரும்பவும் அடைந்தோம்.

35 ஆனால், நீ கோரும் யோப்பா, காசாராவைப் பொறுத்த மட்டில், அந்நகரங்கள் எங்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் பெருந்தீமைகள் செய்தன. ஆயினும், அவைகளுக்காக நூறு தாலேந்துகள் கொடுப்போம் என்று கூறினார். அத்தேனோபியுஸ் மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.

36 மன்னனிடம் கோபமாய்த் திரும்பிப் போய், தான் கேட்டதையும் சீமோனின் மாட்சியையும் தான் கண்ட யாவற்றையும் அறிவித்தான். மன்னன் பெரும் சினங்கொண்டான்.

37 இதற்கிடையே திரிபோன் ஒர்த்தோசியாதாவுக்கு கப்பலில் ஓடிப்போனான்.

38 அந்தியோக்கஸ் மன்னன் செந்தேபேயுசைக் கடற்கரைப் பகுதிக்குத் தலைவனாக நியமித்து, காலாட் படையையும் குதிரைப் படையையும் அவனிடம் ஒப்படைத்தான்.

39 யூதேயா நாட்டுக்கு எதிரில் பாளையம் இறங்கவும், கெதோரைக் கட்டவும், நகரத்தின் கதவுகளை அடைக்கவும், மக்களை எதிர்க்கவும் அவனுக்குக் கட்டளையிட்டான். மன்னனோ திரிபோனைப் பின்தொடர்ந்து போனான்.

40 செந்தேபேயுஸ், யாம்னியா சேர்ந்து மக்களை வதைக்கவும், யூதேயா நாட்டைக் கொள்ளையடிக்கவும், மக்களைச் சிறைசெய்யவும் சாகடிக்கவும், கெதோரைக் கட்டவும் தொடங்கினான்.

41 மன்னன் கட்டளைப்படி யூதேயா நாட்டில் புகுந்து நடமாட, அவ்விடத்தில் குதிரைப் படையையும் சேனைகளையும் நியமித்தான்.

அதிகாரம் 16

1 அருளப்பன் காசாராவினின்று சென்று, மக்களுக்கு எதிராய்ச் செந்தேபேயுஸ் செய்த யாவற்றையும் தன் தந்தையாகிய சீமோனிடம் அறிவித்தான்.

2 அப்போது சீமோன் தம் இரு மூத்த புதல்வியராகிய யூதாசையும் அருளப்பனையும் அழைத்து, அவர்களை நோக்கி: நானும் என் சகோதரரும் என் தந்தையின் குடும்பமும் எங்கள் இளமை முதல் இந்நாள் வரை இஸ்ராயேலின் பகைவர்களை எதிர்த்து வென்றோம். செய்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கண்டு, பலமுறை இஸ்ராயேலைக் காப்பாற்றினோம்.

3 இப்போதோ நான் முதியவனாகி விட்டேன். ஆதலால் நீங்களும் என் சகோதரரும் எனக்குப் பதிலாய் இருந்து, நம் மக்களுக்காகச் சண்டை செய்யுங்கள். கடவுளும் உங்களுக்கு உதவியாய் இருப்பார் என்று கூறினார்.

4 நாட்டில் இருபதினாயிரம் வீரரையும் குதிரை வீரரையும் அவர்கள் தேர்ந்து கொண்டார்கள்; செந்தேபேயுசை நோக்கிச் சென்றார்கள்; மோதினில் இளைப்பாறினார்கள்.

5 காலையில் எழுந்து சமவெளியை அடைந்தார்கள், அவர்களை எதிர்த்துத் திரளான காலாட்களும், குதிரை வீரரும் வந்தார்கள். இரு படைகளுக்கும் நடுவே நதி ஒன்று இருந்தது.

6 அருளப்பனும் அவன் படைகளும் பகைவருக்கு முன்சென்றார்கள். தன் படைகள் நதியைக் கடக்க அஞ்சுவதைக் கண்டு, தானே முந்திக் கடந்தான். அவனைக் கண்டு அவன் படைகளும் அவனுக்குப்பிறகே நதியைக் கடந்தன.

7 அவன் மக்களையும், குதிரை வீரர்களையும் காலாட்களுக்கு நடுவில் இருக்கச் செய்தான்; ஏனென்றால், பகைவரின் குதிரைப்படை திரளாய் இருந்தது.

8 அவன் புனித எக்காளங்களை ஒலிக்கச் செய்ய, செந்தேபேயுசும் அவன் படைகளும் ஓட்டம் பிடித்தார்கள். அவர்களில் பலர் காயப்பட்டு விழுந்தார்கள்; மீதியாய் இருந்தவர்கள் கோட்டைக்குள் ஓடி ஒளிந்தார்கள்.

9 அப்போது அருளப்பனின் சகோதரன் யூதாஸ் காயமடைந்தான். அருளப்பனோவென்றால் தான் கட்டிய சேதிரோன் வருமட்டும் பகைவரைப் பின்தொடர்ந்தான்.

10 அவர்கள் அசோத்துஸ் சமவெளிகளில் இருந்த கோபுரங்கள் வரை ஓடினார்கள். அவன் அவைகளைத் தீக்கிரையாக்கினான். அவர்களில் இரண்டாயிரம் பேர் மாண்டார்கள். அருளப்பன் அமைதியாய் யூதேயா திரும்பினான்.

11 யெரிக்கோ சமவெளியில் அபோபுஸ் புதல்வன் தோலெமேயுஸ் தலைவனாக இருந்தான். வெள்ளியும் பொன்னும் அவனிடம் ஏராளமாய் இருந்தன.

12 ஏனென்றால், அவன் தலைமைக்குருவின் மருமகனாய் இருந்தான்.

13 ஆதலால் அவன் செருக்குற்று, நாடு முழுமைக்கும் தானே தலைவனாயிருக்க விரும்பினான்; சீமோனையும் அவர் மக்களையும் கபடமாய் அகற்றி விட எண்ணினான்.

14 சீமோன் யூதேயா நாட்டின் நகரங்களைச் சுற்றி, அவைகளைப் பார்வையிட வந்த போது, நூற்றெழுபத்தேழாம் ஆண்டு சாபாத் என்ற பதினோராம் மாதம் தம் புதல்வர்களாகிய மத்தத்தியாஸ், யூதாஸ் இவர்களோடு யெரிக்கோவில் தங்கினார்.

15 அபோபுசின் புதல்வன் தான் கட்டியிருந்த தோக் என்னும் சிறு கோட்டைக்குள் அவர்களைக் கபடமாய் வர வேற்று, அவர்களுக்குப் பெரிய விருந்து செய்தான். ஆனால், அவ்விடத்தில் சிலரை ஒளித்து வைத்திருந்தான்.

16 சீமோனும் அவர் புதல்வரும் நன்கு உண்டு மயக்கம் கொண்டிருந்த போது தோலெமேயுஸ் தன்னைச் சேர்ந்தவர்களோடு எழுந்து, போர்க்கருவிகளோடு உணவறையினுள் புகுந்து, அவரையும் அவருடைய இரு புதல்வரையும் சில ஊழியர்களையும் கொன்றான்.

17 இவ்வாறு இஸ்ராயேலுக்குத் துரோகம் செய்து, நன்மைக்குத் தீமை செய்தான்.

18 தோலெமேயுஸ் இச்செய்திகளை அந்தியோக்கஸ் மன்னனுக்கு எழுதியனுப்பி, தனக்கு உதவியாகப் படைகளை அனுப்பவும், நாட்டையும் நகரங்களையும் கப்பங்களையும் தனக்குக் கொடுத்து விடவும் கேட்டுக் கொண்டான்.

19 அருளப்பனைக் கொல்வதற்காக வேறு சிலரைக் காசாராவுக்கு அனுப்பினான்; படைத்தலைவர்கள் தன்னிடம் வந்து சேரும்படியாகவும், தான் வெள்ளியும் பொன்னும் வெகுமதிகளும் அளிப்பதாகவும் அவர்களுக்கு எழுதியனுப்பினான்.

20 யெருசலேமையும், கடவுள் ஆலயம் இருந்த மலையையும் கைப்பற்றச் சிலரை அனுப்பினான்.

21 ஒருவன் காசாராவிலிருந்த அருளப்பனிடம் முன்னதாகவே ஓடிவந்து, அவன் தந்தையும் சகோதரரும் கொலையுண்டதை அறிவித்து: அவன் உம்மையும் கொலைசெய்ய ஆட்களை அனுப்பியிருக்கிறான் என்றான்.

22 அருளப்பன் இதைக் கேள்விப்பட்டுப் பெரிதும் திகிலடைந்தான்: தன்னைக் கொலை செய்ய வந்தவர்களைப் பிடித்துக் கொன்றான்; ஏனென்றால், அவர்கள் தன்னைக் கொல்லத் தேடினார்களென்று அறிந்திருந்தான்.

23 அருளப்பன் புரிந்த மற்றவைகளும் போர்களும் வீரச் செயல்களும் கட்டின கட்டடங்களும், செய்த யாவும்,

24 அவன் தந்தைக்குப் பிறகு அவன் தலைமைக்குருவான நாள் முதல் அவன் அக்குருத்துவப் பணி ஆற்றிய நாட்களின் குறிப்புப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.