மக்கள் பாவம் செய்வதை நிறுத்தி, கடவுளின் பக்கம் திரும்பாவிட்டால், கம்யூனிஸ்ட் ரஷ்யா தன் தப்பறைகளை உலகெங்கும் பரப்பும், பல பெரும் இன்னல்கள் நேரிடும் என்று கம்யூனிஸம் தோன்றுமுன்பே தேவதாய் விபரமறியா மூன்று சிறுவர்களுக்குத் தோன்றி, அன்புடன் அறிவுறுத்தி எச்சரித்துள்ளார்கள்.
நம் அன்னை உரைப்படி பாவத்தின் தண்டனைதான் நாஸ்திகம். நம் சகோதரர்களான மனிதர்கள் நாஸ்திகராக மாறும் போது, அவர்கள் பாவத்தின் பயங்கரத் தண்டனைக் கருவியாக ஆகிறார்கள். நாஸ்திகத்தின் கோரத் தன்மையை உலகம் கண்கூடாகக் கண்டும் சும்மா இருக்கின்றது.
அதற்கிடையில் நடப்படும் ஒவ்வொரு செங்கொடியும் அந்த இடத்தில் செப தவம் சரியாகச் செய்யப்படவில்லை என்றும், கடவுளுக்கெதிரான காரியங்கள் மிஞ்சி வருகின்றன என்றும் காட்டும் அறிகுறியாக இருக்கிறது.
பக்தியுடன் சொல்லப்படும் ஒவ்வொரு ஜெபமாலையும், பாவப் பரிகாரமாகச் செய்யப்படும் பரித்தியாகங்களும், கம்யூனிஸத்தை மனந்திருப்பும் மருந்தாக உதவுகின்றன. ஆம்! கம்யூனிசத்தை மனந்திருப்ப வேறு வழி எதுவுமே இல்லை.
“இறுதியில் ரஷ்யா மனந்திரும்பும், என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும், உலகிற்கு ஒரு சமாதான காலம் கொடுக்கப்படும்” என்று உரைத்துள்ள பாத்திமா அன்னையின் நம்பிக்கையூட்டும் செய்தியைப் பெற்றுக் கொண்ட தாங்கள் இவ்வாக்குறுதியை விரைவுபடுத்த முன்வர வேண்டாமா?
அதிகம் ஜெபியுங்கள். ஜெபமாலை ஜெபியுங்கள். பிறரும் ஜெபிக்கும்படி தூண்டுங்கள். பரித்தியாகம் செய்யுங்கள். ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இருதயத்துக்கு ஒப்புக்கொடுத்து, அது மனந்திரும்ப மன்றாடுங்கள்.
துயரம் நிறைந்த மரியாயின் மாசற்ற இருதயம் வெல்க!