கிறிஸ்துவின் பாடுகளுடன் தொடர்புபட்ட முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்த இடங்கள் பூசிக்கப்பெற்று பக்திக்குரிய இடங்களாகப் பேணப் பட்டதுடன் கொன்ஸ்ரன்ரயின் மன்னன் காலத்திலிருந்து மக்கள் இவ் இடங்களைத் திருயாத்திரைக்குரிய இடங்களாகத் தரிசித்தனர். கிறிஸ்து வின் தாய் தூய கன்னி மரியா தனது வாழ்நாட்களில் தினந்தோறும் இப்புனித இடங்களைத் தரிசித்தார் எனப் பாரம்பரியம் கூறுகின்றது. புனிதர் ஜெறோம் தமது வாழ்நாட்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இப்புனித இடங்களுக்குத் திருயாத்திரை மேற்கொண்டதாகக் குறிப்பிடுகின்றார். எனினும், கி.பி. 380களில் நடைமுறையிலிருந்த பல பக்தி முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிடப்படாமைக்கான காரணங்கள் அறியப்படுவது கடினமாயுள்ளது.
ஆன்மீகப் பயன்பாடு
கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு என்னும் சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களையும் இவற்றுடன் தொடர்புள்ள ஏனைய சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களையும் ஜெருசலேம் சென்று நேரடியாகத் தரிசிக்க முடியாத மக்கள் ஆன்மீக நிலையில் இவ்விடங்களைத் தரிசிப்பதற்கும், அதன் வழி ஆன்மீகப் புதுப்பித்தலை ஏற்படுத்துவதற்குமே சிலுவைப் பாதைப்பக்தி முயற்சி தோற்றம் பெற்றது. இப்பக்தி முயற்சியானது கத்தோலிக்கத் திருச்சபையில் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும், பாராட்டையும் பெற்று, ஆன்மீக அனுபவநிலையில் மக்களுக்கு அதிக நன்மை அளித்துள்ளது.
பதின்நான்கு நிலைகளில் ஒவ்வொரு நிலையிலும் முன்வைக்கப் படுகின்ற பாடுகளின் சிந்தனையைத் தியானித்து, மனித வாழ்வுடன் ஒப்புநோக்கி ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி பெற மக்களுக்கு உதவி அளிக்கும் பக்தி முயற்சியாகும். சிலுவைப்பாதைப் பக்தி முயற்சியின் போது ஒரு நிலைக் காட்சி அமைப்பையும் மற்றைய நிலைக் காட்சி அமைப்பையும் குறிக்கும் சின்னங்களுக்கிடையில் (படம் அல்லது சுரூபம்) காணப்படும் இடைவெளியை மக்கள் கடந்து குறிப்பிட்ட காட்சி அமைப்பிற்கு முன்பு முழந்தாட்பணிந்து தியானித்து செபிப்பர். இவ்வாறு ஒரு சிலுவைப்பாதை காட்சி அமைப்பு நிலையிலிருந்து மற்றைய காட்சி அமைப்பு நிலைக்குச் செல்வது பாடுகளின் நிகழ்வுகள் இடம்பெற்ற புனித பூமிக்குத் திருயாத்திரை மேற்கொள்ளும் மன் நிலையை அளிக்கின்றது. இவ்வாறாகத் திருச்சிலுவைப்பாதைப் பக்தி முயற்சியை மேற்கொள்வது கிறிஸ்துவின் பாடுகளுடன் தொடர்புபட்ட வரலாற்றுச் சம்பவங்கள் இடம் பெற்ற இடங்களை ஜெருசலேம் நகரில் நேரில் தரிசிப்பது போன்ற உணர்வை அளிக்கின்றது. இப் பின்னணியிலேயே சிலுவைப்பாதைப் பக்தி முயற்சிக்கு வித்திட்டது புனித பூமியாகிய ஜெருசலேம் எனச் சிலர் கருதுகின்றனர்.
முக்கிய நிகழ்வு, இடங்கள், பிரதி அமைப்பு
புனித பூமிக்குத் திருயாத்திரை மேற்கொள்ள வசதியற்ற மக்களின் நலன்கருதியும், அவர்களின் ஆவலையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்யும் நோக்குடனும் புனித பூமியின் முக்கிய தலங்களின் பிரதி அமைப்பு வேறு இடங்களில் அமைக்கும் செயற்திட்டம் ஆரம்ப காலங்களில் இருந்தே மேற்கொள்ளப்பட்டது. Bolonga என்னுமிடத்தில் ஆயரால் San Stefano என்னும் துறவற மடத்தில் 5ஆம் நூற்றாண்டி லேயே கிறிஸ்துவின் பாடுகளின் முக்கிய நிகழ்வுகள் சம்பவித்த புனித தலங்களைக் குறிக்கும் பல தொடர்ச்சியான சிற்றாலயங்கள் அமைக்கப் பட்டன. இந்த இடமே ஜெருசலேம் என அழைக்கப்படும் அளவிற்கு மக்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் பெற்றது. இதுவும் பிற்பட்ட காலத்தில் சிலுவைப்பாதைக் காட்சி அமைப்பின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் 5ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இன்று நாம் சிலுவைப்பாதை எனக் கொள்ளும் நிலைக்கு இப்பக்தி முயற்சி மக்கள் மத்தியில் அறியப்பட்டி ருக்கவில்லை . 12ஆம், 13ஆம் நூற்றாண்டுகளில் புனித பூமியைத் தரிசித்த பலரின் குறிப்பின்படி திருப்பயணம் மேற்கொண்டோர் (யாத்திரீகர்கள்) ஒரு குறிப்பிட்ட பாதையின் வழியே வழிநடத்தப்பட்ட டார்கள். அதாவது, கிறிஸ்துவின் பாடுகளுடன் தொடர்புபட்ட இடங் களை இணைக்கும் பாதை எனக் கொள்ளப்பட்டது. எனினும் இப்புனித பாதையுடன் தொடர்புபட்ட நிகழ்வுகளே பின்பு சிலுவைப்பாதையின் காட்சி அமைப்புக்களாக மாற்றம் பெற்றன எனக் கொள்வதற்குத் தெளிவான குறிப்புக்கள் எவையும் கிடைத்தில.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠