சிலுவைப்பாதை என்னும் பதம் கிறிஸ்துவின் பாடுகளின் முக்கிய சில நிகழ்வுகளைக் காட்சியாகப் புலப்படுத்தும் படங்களையோ, சுரூபங்களையோ குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
ஒவ்வொரு காட்சி அமைப்பும் ஒரு நிகழ்வை முக்கியப்படுத்திக் காண்பிப்பதாக அமைந் துள்ள வேளையில் தவக்காலத்துடன் தொடர்புபட்ட பக்தி முயற்சியின் பிரதிபலிப்பாகவும் இது விளங்கியது.
இவ்வாறான காட்சி அமைப்பு கற்களினாலோ, மரத்தினாலோ, உலோகத்தினாலோ செதுக்கப்பட்டதாக அல்லது வார்க்கப்பட்டதாக அல்லது ஓவியங்களாக வரையப்பட்டதாக அமைப்புப்பெற்றன. இவற்றுள் சில சிறந்த கலைப் படைப்புக்களாகவும் இன்றுவரை பேணப்படுகின்றன.
சிலுவைப்பாதைக் காட்சியமைப்புக்கள் அல்லது நிலைகள் இன்று பொதுவாக எல்லா ஆலயங்களிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை ஆலயங்களுக்குள் ஆலயச் சுவர்களில் சம அளவான இடைவெளியைக் கொண்டவையாக அமைக்கப் பட்டிருக்கின்றன. சில இடங்களில் ஆலயத்திற்குச் செல்லும் பாதையிலும் வேறு சில இடங்களில் திருயாத்திரைத் தலங்களில் திறந்த வெளிகளிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
17ஆம் நூற்றாண்டிற்கு முன்பு சிலுவைப்பாதைச் சின்னங்கள் அமைக்கப்பட்டமைக்கோ அல்லது பயன்படுத்தப்பட்டமைக்கோ, மக்கள் மயப்படுத்தப்பட்டமைக்கோ போதிய சான்றுகள் கிடைத்தில.
தற்போது சிலுவைப்பாதைச் சின்னங்கள் அல்லது காட்சி அமைப்புக்கள் 14 நிலைகள் எனக் கத்தோலிக்க திருச்சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் நிலைகளின் எண்ணிக்கை இடத்திற்கிடம், காலத்திற்குக் காலம் மாறுபட்ட தொகையினைக் கொண்டவையாகக் காணப்பட்டன.
அங்கீகரிக்கப்பட்ட 14 நிலைகளும் கீழ்வரும் காட்சியமைப்பை கொண்டுள்ளன.
1. கிறிஸ்து மரணத்திற்குத் தீர்வையிடப்படல்
2. கிறிஸ்துவின் மேல் சிலுவை சுமத்தப்படல்
3. முதலாம் முறை சிலுவையுடன் கீழ் விழுதல்
4. தமது தாயாரைச் சந்தித்தல்
5. சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் சிலுவை சுமக்க நிர்ப்பந்திக்கப்படுதல்
6. வெரோனிக்கா என்னும் பெண் இயேசுவின் முகத்தைத் துடைத்தல்
7. கிறிஸ்து இரண்டாம் முறை சிலுவையுடன் விழுதல்
8. ஜெருசலேம் நகர்ப் பெண்களை கிறிஸ்து சந்தித்தல்
9. கிறிஸ்து மூன்றாம் முறை சிலுவையுடன் விழுதல்
10. கிறிஸ்துவின் ஆடைகள் களையப்படுதல்
11. சிலுவையில் அறையப்படுதல்
12. சிலுவையில் கிறிஸ்துவின் மரணம் அடைதல்
13. சிலுவையினின்று அவரது உடல் இறக்கப்படுதல்
14. கல்லறையில் அடக்கம் செய்யப்படல்
இவற்றுடன் இன்று கிறிஸ்துவின் உயிர்ப்பும் சில இடங்களில் இடம் பெறுவதுண்டு.
✠ No. 15, Laurel City, State MD, Prince Georges County MaryLand, Zip Code: 20725, United States. All Rights Reserved. ✠