அருளப்பர்

அதிகாரம் 01

1 ஆதியிலே வார்த்தை இருந்தார்: அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.

2 அவர் ஆதியிலே கடவுளோடு இருந்தார்.

3 அவர்வழியாகவே அனைத்தும் உண்டாயின; உண்டானதெதுவும் அவராலேயன்றி உண்டாகவில்லை.

4 அவருள் உயிர் இருந்தது; அவ்வுயிரே மனிதருக்கு ஒளி.

5 அவ்வொளி இருளில் ஒளிர்ந்தது; இருளோ அதை மேற்கொள்ளவில்லை.

6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் அருளப்பர்.

7 அனைவரும் தம்வழியாக விசுவசிக்கும்படி, ஒளியைக்குறித்துச் சாட்சியம் அளிப்பதற்கு அவர் சாட்சியாக வந்தார்.

8 அவர் ஒளியல்லர்; ஒளியைக்குறித்துச் சாட்சியம் அளிக்க வந்தவரே.

9 வார்த்தை உண்மையான ஒளி. ஒவ்வொருவனையும் ஒளிர்விக்கும் அவ்வொளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.

10 வார்த்தை உலகில் இருந்தார்; அவர்வழியாகத்தான் உலகம் உண்டானது; உலகமோ அவரை அறிந்துகொள்ளவில்லை.

11 தமக்குரிய இடத்திற்கு வந்தார்; அவருக்குரியவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

12 ஆனால், அவர் தமது பெயரிலே விசுவாசம் வைத்துத் தம்மை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் கடவுளின் மக்களாகும் உரிமை அளித்தார்.

13 இவர்கள் இரத்தத்தினாலோ உடல் ஆசையினாலோ ஆண்மகன் கொள்ளும் விருப்பத்தினாலோ பிறவாமல், கடவுளாலேயே பிறந்தவர்கள்.

14 வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சிமையை நாங்கள் கண்டோம். தந்தையிடமிருந்து அவர் பெற்ற இம்மாட்சிமை ஒரேபேறான அவருக்கு ஏற்ற மாட்சிமையே. ஆகவே அவர் அருளும் உண்மையும் நிறைந்து விளங்கினார்.

15 அருளப்பர் அவரைக்குறித்துச் சான்றாக, "எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் முன்னிடம் பெற்றார்; நான் சொன்னது இவரைப்பற்றியே ஏனெனில், எனக்குமுன்பு இருந்தார்." என உரக்கக் கூவினார்.

16 அவருடைய நிறைவிலிருந்து நாம் அனைவரும் அருளுக்குமேல் அருளைப் பெற்றுள்ளோம்.

17 ஏனெனில், திருச்சட்டம் மோயீசன்வழியாக அளிக்கப்பெற்றது; ஆனால், அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்துவழியாக வந்தன.

18 யாரும் கடவுளை என்றுமே கண்டதில்லை; தந்தையின் அணைப்பிலுள்ள ஒரேபேறானவர்தாம் அவரை வெளிப்படுத்தினார்.

19 யெருசலேமிலிருந்து யூதர்கள் குருக்களையும் லேவியரையும் அருளப்பரிடம் அனுப்பியபோது, அவர் கூறிய சான்றாவது: "நீர் யார் ?" என்று அவர்கள் கேட்க,

20 அவர், "நான் மெசியா அல்லேன்" என்று ஒப்புக்கொண்டார்; மறுக்காமல் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

21 "பின் என்ன ? நீர் எலியாசோ ?" என்று அவரைக் கேட்க, "நானல்லேன்" என்றார். "நீர் இறைவாக்கினரோ ?" என, "அல்லேன்" என்றார்.

22 "எங்களை அனுப்பினவர்களுக்கு மறுமொழி அளிக்கவேண்டுமே; உம்மைப்பற்றி என்ன சொல்லுகிறீர் ? நீர் யார் ?" என்று அவரை வினவினர்.

23 "இறைவாக்கினரான இசையாஸ் கூறியபடி: ' ஆண்டவருடைய வழியைச் செம்மைப்படுத்துங்கள் என்று பாலைவனத்தில் உண்டாகும் கூக்குரல் ' நான்" என்றார்.

24 அனுப்பப்பட்டவர் பரிசேயர்.

25 அவர்கள், "நீர் மெசியாவோ எலியாசோ இறைவாக்கினரோ அல்லவென்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் ?" என்று அவரைக் கேட்டார்கள்.

26 அதற்கு அருளப்பர், "நான் நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்.

27 அவர் எனக்குப்பின் வருபவர். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன்" என்றார்.

28 இது யோர்தானுக்கு அப்பாலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தது. அங்கே அருளப்பர் ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்.

29 மறுநாள், இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட அருளப்பர், "இதோ! கடவுளுடைய செம்மறி; இவரே உலகின் பாவங்களைப் போக்குபவர்.

30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் என்னிலும் முன்னிடம் பெற்றவர்; என்று நான் சொன்னது இவரைப்பற்றியே: ஏனெனில், அவர் எனக்குமுன்பே இருந்தார்.

31 நானும் இவரை அறியாதிருந்தேன். ஆயினும் இவர் இஸ்ராயேலுக்கு வெளிப்படும்பொருட்டே நான் நீரால் ஞானஸ்நானம் கொடுத்துவந்தேன்" என்றார்.

32 மேலும், அருளப்பர் சாட்சியம் கூறியதாவது: "ஆவியானவர் புறாவைப்போல வானிலிருந்து இறங்கி, இவர்மேல் தங்கியதைக் கண்டேன்.

33 நானும் இவரை அறியாதிருந்தேன். ஆனால், நீரால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர், 'ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பவர்' என்றார்.

34 நான் கண்டேன். இவரே கடவுளின் மகன் என்று சாட்சியம் கூறுகின்றேன்."

35 மறுநாள் மீண்டும் அருளப்பர் தம்முடைய சீடர் இருவரோடு இருக்கையில்,

36 இயேசு அப்பக்கம் நடந்து சென்றார். அருளப்பர் அவரை உற்றுநோக்கி, "இதோ! கடவுளுடைய செம்மறி" என்றார்.

37 சீடர் இருவரும் அவர் கூறியதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தனர்.

38 இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின்தொடர்வதைக் கண்டு, "என்ன வேண்டும் ?" என்று கேட்டார். அவர்கள், "ராபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் ?" என்றனர். - ராபி என்றால் போதகர் என்று பொருள்படும். - "வந்து பாருங்கள்" என்றார்.

39 அவர்கள் வந்து, அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்று அவரோடு தங்கினார்கள். அப்பொழுது பிற்பகல் ஏறக்குறைய நான்கு மணி.

40 அருளப்பர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் பெலவேந்திரர் ஒருவர். அவர் சீமோன் இராயப்பரின் சகோதரர்.

41 அவர் முதலில் தம் சகோதரராகிய சீமோனைக் கண்டுபிடித்து, "மெசியாவைக் கண்டோம்" என்றார். - மெசியா என்பதற்கு ' அபிஷுகம் செய்யப்பட்டவர் ' என்பது பொருள்.

42 - பின்பு அவரை இயேசுவிடம் அழைத்துவந்தார். இயேசு அவரை உற்றுநோக்கி, "நீ அருளப்பனின் மகனாகிய சீமோன், கேபா எனப்படுவாய்" என்றார். - கேபா என்பதற்கு இராயப்பர் என்பது பொருள்.

43 மறுநாள், இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். பிலிப்புவைக் கண்டு, "என்னைப் பின்செல்" என்றார்.

44 பிலிப்பு பெத்சாயிதா ஊரினர். அதுவே பெலவேந்திரர், இராயப்பர் இவர்களுடைய ஊர்.

45 பிலிப்பு நத்தனயேலைக் கண்டு, "இறைவாக்கினர்களும், திருச்சட்ட நூலிலே மோயீசனும் யாரைக்குறித்து எழுதினார்களோ அவரைக் கண்டோம். அவர் நாசரேத்தூர் சூசையின் மகன் இயேசு" என்றார்.

46 அதற்கு நத்தனயேல், "நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்றார். பிலிப்புவோ, "வந்து பார்" என்றார்.

47 நத்தனயேல் தம்மிடம் வருவதைக் கண்டு இயேசு அவரைப்பற்றி, "இதோ! உண்மையான இஸ்ராயேலன். இவன் கபடற்றவன்" என்றார்.

48 நத்தனயேல் அவரிடம், "எவ்வாறு என்னை அறிந்தீர் ?" என்று கேட்க, இயேசு அவரைப் பார்த்து, "பிலிப்பு உன்னை அழைப்பதற்குமுன் நீ அத்திமரத்தின்கீழ் இருக்கையில் நான் உன்னைக் கண்டேன்" என்றார்.

49 நத்தனயேல் அவரிடம், "ராபி, நீர் கடவுளின் மகன், நீரே இஸ்ராயேலின் அரசர்" என்று சொன்னார்.

50 இயேசுவோ அவரை நோக்கி, "உன்னை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதாலா நீ விசுவசிக்கிறாய் ? இதிலும் பெரியவற்றைக் காண்பாய்" என்றுரைத்தார்.

51 தொடர்ந்து, "வானம் திறந்திருப்பதையும், கடவுளுடைய தூதர்கள் மனுமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என்று உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

அதிகாரம் 02

1 மூன்றாம் நாள், கலிலேயாவிலுள்ள கானாவூரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. 'இயேசுவின் தாய் அங்கு இருந்தாள்.

2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைக்கப்பெற்றிருந்தனர்.

3 திராட்சை இரசம் தீர்ந்துவிடவே, இயேசுவின் தாய் அவரை நோக்கி, "இரசம் தீர்ந்துவிட்டது" என்றாள்.

4 அதற்கு இயேசு, "அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றார்.

5 அவருடைய தாய் பணியாட்களிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றாள்.

6 யூதரின் துப்புரவு முறைமைப்படி ஆறு கற்சாடிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் பிடிக்கும்.

7 இயேசு அவர்களை நோக்கி, "இச்சாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். அவர்கள் அவற்றை வாய்மட்டும் நிரப்பினார்கள்.

8 பின்பு அவர், "இப்பொழுது முகந்து பந்திமேற்பார்வையாளனிடம் எடுத்துச்செல்லுங்கள்" என்றார்.

9 அவர்கள் அப்படியே செய்தனர். பந்தி மேற்பார்வையாளன் திராட்சை இரசமாய் மாறின தண்ணீரைச் சுவைத்தான். இத் திராட்சை இரசம் எங்கிருந்து வந்ததென்று அவனுக்குத் தெரியாது. - ஆனால் தண்ணீரைக் கொண்டுவந்த பணியாட்களுக்குத் தெரியும். -

10 அவன் மணமகனை அழைத்து, "எல்லாரும் முதலில் நல்ல இரசத்தைப் பரிமாறுவர். நன்றாய்க் குடித்தபின் கீழ்த்தரமானதைத் தருவர். நீரோ நல்ல இரசத்தை இதுவரை வைத்திருந்தீரே" என்றான்.

11 இதுவே இயேசு செய்த அருங்குறிகளில் முதலாவது. இது கலிலேயாவிலுள்ள கானாவூரில் நிகழ்ந்தது. இவ்வாறு அவர் நமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீடர் அவரில் விசுவாசங்கொண்டனர்.

12 இதற்குப்பின், அவரும் அவருடைய தாயும் சகோதரரும் அவருடைய சீடரும் கப்பர் நகூமுக்குச் சென்றனர். அங்குச் சில நாட்களே தங்கினர்.

13 யூதர்களுடைய பாஸ்காத் திருவிழா நெருங்கியிருந்ததால் இயேசு யெருசலேமுக்குச் சென்றார்.

14 கோயிலிலே ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், அங்கே உட்கார்ந்திருந்த நாணயமாற்றுவோரையும் கண்டார்.

15 அப்போது கயிறுகளால் சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோயிலிலிருந்து துரத்தினார். ஆடு மாடுகளையும் விரட்டிவிட்டார். நாணயமாற்றுவோரின் காசுகளை வீசியெறிந்து, பலகைகளையும் கவிழ்த்துப்போட்டார்.

16 புறா விற்பவர்களைப் பார்த்து, "இதெல்லாம் இங்கிருந்து எடுத்துச்செல்லுங்கள். என் தந்தையின் இல்லத்தை வாணிபக்கூடமாக்க வேண்டாம்" என்றார்.

17 "உமது இல்லத்தின்மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்" என்று எழுதியுள்ளதை அவருடைய சீடர் நினைவுகூர்ந்தனர்.

18 அப்போது யூதர், "இப்படியெல்லாம் செய்கிறீரே, இதற்கு என்ன அறிகுறி காட்டுகிறீர் ?" என்று அவரைக் கேட்டனர்.

19 அதற்கு இயேசு, "இவ்வாலயத்தை இடித்துவிடுங்கள்; மூன்று நாளில் இதை எழுப்புவேன்" என்றார்.

20 யூதர்களோ, "இவ்வாலயத்தைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகளாயினவே, நீ மூன்றே நாளில் எழுப்பிவிடுவாயோ ?" என்று கேட்டனர்.

21 அவர் குறிப்பிட்டதோ அவரது உடலாகிய ஆலயத்தையே.

22 அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்தபொழுது, அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும், இயேசு கூறிய வார்த்தைகளையும் விசுவசித்தனர்.

23 பாஸ்காத் திருவிழாவின்போது அவர் யெருசலேமிலிருக்கையில், அவர் செய்த அருங்குறிகளைக் கண்டு, பலர் அவருடைய பெயரில் விசுவாசங்கொண்டனர்.

24 இயேசுவோ அவர்கள்பால் விசுவாசம் காட்டவில்லை. ஏனெனில், அவர் அனைவரையும் நன்கு அறிந்திருந்தார்.

25 மனிதனைப்பற்றி எவரும் அவருக்கு எடுத்துக்கூறத் தேவையில்லை. மனித உள்ளத்திலிருப்பதை அறிந்திருந்தார்.

அதிகாரம் 03

1 பரிசேயர் ஒருவர் இருந்தார். அவர்பெயர் நிக்கொதேமு; அவர் யூதப்பெரியோர்களுள் ஒருவர்.

2 அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, "ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவோம். தன்னோடு கடவுள் இருந்தாலன்றி எவனும் நீர் செய்கிற அருங்குறிகளைச் செய்யமுடியாது" என்றார்.

3 இயேசு மறுமொழியாக, "எவனும் மேலிருந்து பிறந்தாலன்றி, கடவுளுடைய அரசைக் காணமுடியாது என்று உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

4 அதற்கு நிக்கொதேமு, "ஒருவன் வயதானபின் எப்படிப் பிறக்கமுடியும் ? மீண்டும் தாயின் வயிற்றில் நுழைந்து பிறக்கக்கூடுமோ ?" என,

5 இயேசு கூறியதாவது: "உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்: ஒருவன் நீரினாலும் ஆவியினாலும் பிறந்தாலன்றி கடவுளுடைய அரசில் நுழையமுடியாது.

6 ஊனுடலால் பிறப்பது ஊனுடலே. ஆவியால் பிறப்பதோ ஆவி.

7 நீங்கள் மேலிருந்து பிறக்க வேண்டுமென்று நான் உமக்குக் கூறியதால் வியப்படையாதீர்.

8 காற்று தான் விரும்பிய பக்கம் வீசுகின்றது; அதன் ஓசை கேட்கிறது; ஆனால், எங்கிருந்து வருகின்றது என்பதோ, எங்குச் செல்கின்றது என்பதோ தெரிவதில்லை. ஆவியால் பிறக்கும் எவனும் அப்படியே."

9 நிக்கொதேமு மறுமொழியாக, "இது எவ்வாறு நடைபெற முடியும் ?" என்று கேட்க,

10 இயேசு கூறினார்: "நீர் இஸ்ராயேலில் பேர்பெற்ற போதகராயிருந்தும், இது உமக்குத் தெரியாதா! 11 "உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்: எமக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; யாம் கண்டதைக்குறித்தே சாட்சி கூறுகிறோம்; எம் சாட்சியத்தையோ நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

12 மண்ணுலகைச் சார்ந்தவைபற்றி நான் உங்களுக்குச் சொல்லியே நீங்கள் விசுவசிப்பதில்லையென்றால், விண்ணுலகைச் சார்ந்தவைபற்றி உங்களுக்குக் கூறினால், எவ்வாறு நீங்கள் விசுவசிக்கப் போகிறீர்கள் ?

13 வானகத்திலிருந்து இறங்கி வந்தவரேயன்றி வேறெவரும் வானகத்திற்கு ஏறிச்சென்றதில்லை. அப்படி வந்தவர் வானகத்திலிருக்கும் மனுமகனே.

14 மனுமகனில் விசுவாசங்கொள்ளும் அனைவரும் முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு,

15 மோயீசன் பாலைவனத்தில் பாம்பை உயர்த்தியதுபோல மனுமகனும் உயர்த்தப்படவேண்டும்.

16 தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

17 கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே.

18 அவரில் விசுவாசங்கொள்பவன் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; விசுவாசங்கொள்ளாதவனோ ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டன். ஏனெனில், அவன் கடவுளின் ஒரேபேறான மகனின் பெயரில் விசுவாசங்கொள்ளவில்லை.

19 அவர்கள் பெறும் தீர்ப்பு இதுவே: ஒளி உலகத்திற்கு வந்துள்ளது; மனிதர்களோ ஒளியைவிட இருளையே விரும்பினர்; ஏனெனில், அவர்களுடைய செயல்கள் தீயனவாயிருந்தன.

20 பொல்லாது செய்பவன் எவனும் ஒளியை வெறுக்கிறான். தன் செயல்கள் தவறானவை என்று வெளியாகாதபடி அவன் ஒளியிடம் வருவதில்லை.

21 உண்மைக்கேற்ப நடப்பவனோ, தன் செயல்கள் கடவுளோடு ஒன்றித்துச் செய்தவையாக வெளிப்படும்படி ஒளியிடம் வருகிறான்."

22 இதற்குப்பின், இயேசுவும் அவருடைய சீடரும் யூதேயா நாட்டிற்கு வந்தனர். அங்கே அவர் அவர்களோடு தங்கி, ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்.

23 சாலீமுக்கு அருகிலுள்ள அயினோன் என்னுமிடத்தில் நிறைய தண்ணீர் இருந்ததால், அருளப்பரும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தார். மக்கள் வந்து ஞானஸ்நானம் பெற்றனர்.

24 அருளப்பர் இன்னும் சிறைப்படவில்லை.

25 இதனால், அருளப்பரின் சீடர் சிலருக்கும் யூதன் ஒருவனுக்கும் துப்புரவுமுறைமைபற்றி வாக்குவாதம் உண்டாயிற்று.

26 அவர்கள் அருளப்பரிடம் வந்து, "ராபி, உம்மோடு யோர்தானுக்கு அப்பால் ஒருவர் இருந்தாரே, அவரைக்குறித்து நீர் சாட்சியம் கூறினீரே; இதோ! அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார்; எல்லாரும் அவரிடம் போகின்றனர்" என்றார்கள்.

27 அதற்கு அருளப்பர் கூறியதாவது: "கடவுள் கொடுத்தாலொழிய யாரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது.

28 "நான் மெசியா அல்லேன்; அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சி.

29 "மணமகளை உடையவன் மணமகனே; மணமகனின் சொல்லுக்காகக் காத்துநிற்கும் அவனுடைய நண்பன் மணமகனுடைய குரலைக் கேட்டுப் பெருமகிழ்வடைகின்றான். இதுவே என் மகிழ்ச்சி; இம்மகிழ்ச்சியும் நிறைவுற்றது.

30 அவர் வளரவேண்டும், நானோ குறையவேண்டும்.

31 மேலிருந்து வருபவர் எல்லாருக்கும் மேலானவர். மண்ணிலிருந்து உண்டானவன் மண்ணுலகைச் சார்ந்தவன்; அவன் மண்ணுலகைச் சார்ந்தவனாகவே பேசுகிறான். விண்ணுலகிலிருந்து வருபவரோ எல்லாருக்கும் மேலானவர்.

32 தாம் கண்டதையும் கேட்டதையுங்குறித்தே அவர் சாட்சியம் பகர்கின்றார். ஆனால், அவருடைய சாட்சியத்தை எவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.

33 அவருடைய சாட்சியத்தை ஏற்றுக்கொள்வதோ, கடவுள் உண்மையானவர் என்பதற்கு அத்தாட்சி தருவது போலாகும்.

34 ஏனெனில், கடவுள் அனுப்பியவர் கடவுளின் சொற்களைக் கூறுகிறார்; ஏனெனில், கடவுள் அவருக்கு ஆவியை அளவுபார்த்துக் கொடுப்பதில்லை.

35 தந்தை மகன்பால் அன்புசெய்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.

36 மகனில் விசுவாசங்கொள்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்; மகனில் விசுவாசங்கொள்ளாதவனோ வாழ்வைக் காணமாட்டான்; கடவுளின் சினமே அவன்மேல் வந்து தங்கும்."

அதிகாரம் 04

1 அருளப்பரைவிட இயேசு மிகுதியான சீடர்களைச் சேர்த்து ஞானஸ்நானம் கொடுக்கிறார் எனப் பரிசேயர் கேள்வியுற்றனர்.

2 இதை அறிந்த ஆண்டவர் யூதேயாவை விட்டு மீண்டும் கலிலேயாவுக்குச் சென்றார். -

3 உண்மையிலே ஞானஸ்நானம் கொடுத்தவர் இயேசு அல்லர், அவருடைய சீடர்களே. -

4 அவர் சமாரியா நாட்டுவழியாகச் செல்லவேண்டியிருந்தது.

5 வழியில் சமாரியா நாட்டிலுள்ள சீக்கார் என்னும் ஊருக்கு வந்தார். அவ்வூருக்கருகே யாக்கோபு தம் மகன் சூசைக்கு அளித்த நிலம் உண்டு.

6 அங்கே யாக்கோபின் கிணறு இருந்தது. பயணத்தால் களைத்திருந்த இயேசு அக்கிணற்றருகே அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.

7 சமாரியப்பெண் ஒருத்தி தண்ணீர் மொள்ள வந்தாள். "எனக்குத் தண்ணீர் கொடு" என்று இயேசு அவளிடம் கேட்டார்.

8 அவருடைய சீடரோ உணவு வாங்குவதற்காக ஊருக்குள் சென்றிருந்தனர்.

9 அச் சமாரியப்பெண் அவரைப் பார்த்து, "யூதனாகிய நீர் என்னிடம் தண்ணீர் கேட்பதெப்படி ? நான் சமாரியப்பெண் ஆயிற்றே! " என்றாள். - ஏனெனில், யூதர் சமாரியரோடு பழகுவதில்லை. -

10 இயேசுவோ மறுமொழியாகக் கூறினார்: "கடவுளுடைய கொடை இன்னதென்பதையும், ' தண்ணீர் கொடு ' என்று உன்னிடம் கேட்பவர் இன்னாரென்பதையும் நீ உணர்ந்திருந்தால், ஒருவேளை நீயே அவரிடம் கேட்டிருப்பாய். அவரும் உயிருள்ள தண்ணீரை உனக்களித்திருப்பார்"

11 அவளோ, "ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறோ ஆழமானது. அப்படியிருக்க எங்கிருந்து உமக்கு உயிருள்ள தண்ணீர் கிடைக்கும் ?

12 நம்முடைய தந்தை யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ ? அவரே எங்களுக்கு இந்தக் கிணற்றை வெட்டிக் கொடுத்தார். அவரும் அவர்பிள்ளைகளும் கால்நடைகளும் இதன் தண்ணீரைக் குடித்தார்கள்" என்றாள்.

13 இயேசு அவளை நோக்கிக் கூறியது: "இத்தண்ணீரைக் குடிக்கும் எவனும் மீண்டும் தாகங்கொள்வான்.

14 நான் தரும் தண்ணீரைக் குடிப்பவனோ என்றுமே தாங்கொள்ளான். நான் அவனுக்கு அளிக்கும் தண்ணீரோ, அவன் முடிவில்லா வாழ்வடைய அவனுக்குள் பொங்கியெழும் ஊற்றாகும்"

15 அதற்கு அவள், "ஐயா, அத்தகைய தண்ணீரை எனக்குக் கொடும். அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது, தண்ணீர் மொள்ள இவ்வளவு தொலைவு வரத் தேவையும் இருக்காது" என்றாள்.

16 இயேசு அவளிடம், "போய், உன் கணவனை இங்கு அழைத்துவா" என,

17 அவள், "எனக்குக் கணவனில்லையே" என்றாள். இயேசுவோ, " ' எனக்குக் கணவனில்லை ' என்று நீ சொன்னது சரிதான்.

18 கணவர் உனக்கு ஐவர் இருந்தனர். இப்பொழுது உன்னோடிருப்பவனோ உன் கணவன் அல்லன். நீ சொன்னது உண்மையே" என்றார்.

19 அதற்கு அவள், "ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.

20 எங்கள் முன்னோர் இம்மலையில் தொழுதனர். நீங்களோ தொழ வேண்டிய இடம் யெருசலேமிலேதான் என்கிறீர்கள்" என்றாள்.

21 இயேசு அவளை நோக்கிக் கூறினார்: "மாதே, என்னை நம்பு. நேரம் வருகிறது: அப்பொழுது நீங்கள் பரம தந்தையைத் தொழுவது இம்மலையிலுமன்று, யெருசலேமிலுமன்று.

22 நீங்கள் தொழுவது இன்னதென்று உங்களுக்குத் தெரியாது. நாங்கள் தொழுவது இன்னதென்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில், மீட்பு வருவது யூதர்களிடமிருந்தே.

23 நேரம் வருகின்றது - ஏன், வந்தேவிட்டது; - அப்பொழுது மெய்யடியார்கள் ஆவியிலும் உண்மையிலும் பரம தந்தையைத் தொழுவார்கள். ஏனெனில், தம்மைத் தொழும்படி தந்தை இத்தகையோரையே தேடுகிறார்.

24 கடவுள் ஆவியானவர்; ஆதலால் அவரைத் தொழுபவர்கள் ஆவியிலும் உண்மையிலும்தான் அவரைத் தொழுதல் வேண்டும்."

25 அதற்கு அவள், "மெசியா - அதாவது, கிறிஸ்து - வருவார் என்று எனக்குத் தெரியும், அவர் வரும்பொழுது எங்களுக்கு அனைத்தையும் அறிவிப்பார்" என,

26 இயேசு, "உன்னோடு பேசும் நானே அவர்" என்றார்.

27 அதற்குள் அவருடைய சீடர் வந்து, அவர் ஒரு பெண்ணோடு பேசுவதைக் கண்டு வியப்படைந்தனர். ஆயினும், "என்ன வேண்டும் ?" என்றோ, "அவளோடு என்ன பேசுகிறீர் ?" என்றோ எவரும் கேட்கவில்லை.

28 அப்பெண் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு ஊருக்குச் சென்று,

29 "நான் செய்ததெல்லாம் ஒருவர் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ ?" என்று எல்லாரிடமும் சொன்னாள்.

30 அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு, அவரைப் பார்க்கப் போனார்கள்.

31 இதற்கிடையில் அவருடைய சீடர், "ராபி, உண்ணும்" என்று அவரைக் கேட்டுக்கொண்டனர்.

32 அவரோ, "உங்களுக்குத் தெரியாத உணவு ஒன்று எனக்குள்ளது" என்றார்.

33 அதைக் கேட்டுச் சீடர்கள், "யாராகிலும் அவருக்கு உணவு கொண்டுவந்திருப்பார்களோ ?" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

34 இயேசுவோ: "என்னை அனுப்பினவரின் விருப்பத்தின்படி நடந்து, அவரது வேலையைச் செய்து முடிப்பதே என் உணவு.

35 அறுவடைக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன என்று நீங்கள் சொல்லுவது உண்டன்றோ ? இதோ! உங்களுக்குச் சொல்லுகிறேன்: கண்களை ஏறெடுத்து வயல்களைப் பாருங்கள்; பயிர் அறுவடைக்கு முற்றியிருக்கின்றது! 36 அறுப்பவன் இப்பொழுதே கூலி பெற்றுவருகிறான். விளைச்சலை முடிவில்லா வாழ்வுக்குச் சேகரிக்கிறான். இதனால் விதைப்பவனும் அறுப்பவனும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர்.

37 நீங்கள் வருந்தி உழைக்காததை அறுக்க உங்களை அனுப்பினேன்.

38 மற்றவர்கள் உழைத்தார்கள். அவ்வுழைப்பின் பயனை அடைந்தவர்களோ நீங்கள். ' விதைப்பவன் ஒருவன், அறுத்துக்கொள்பவன் வேறொருவன் ' என்னும் முதுமொழி இவ்வாறு உண்மையாயிற்று."

39 "நான் செய்ததெல்லாம் எனக்குச் சொன்னார்" என்று சாட்சியம் கூறிய பெண்ணுடைய வார்த்தையின்பொருட்டு, அவ்வூரிலேயே சமாரியர் பலர் அவரில் விசுவாசங்கொண்டனர்.

40 சமாரியர் அவரிடம் வந்து, தங்களோடு தங்கும்படி அவரை வேண்டினர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.

41 அவருடைய வார்த்தையின்பொருட்டு இன்னும் பலர் விசுவாசங்கொண்டனர்.

42 "உன் வார்த்தையின்பொருட்டன்று நாங்கள் விசுவசிப்பது; நாங்களே அவர் சொன்னதைக் கேட்டு, அவர் உண்மையாகவே உலகின் மீட்பர் என அறிந்துகொண்டோம்" என்று அப்பெண்ணிடம் சொன்னார்கள்.

43 அவ்விரண்டு நாளுக்குப்பின், அவர் அங்கிருந்து கலிலேயாவுக்குப் போனார்.

44 இறைவாக்கினருக்குத் தம் சொந்த நாட்டில் மதிப்பில்லை என்று இயேசுவே கூறியிருந்தார்.

45 திருவிழாவின்போது யெருசலேமிலே அவர் செய்ததெல்லாம் கண்டிருந்த கலிலேயர், அவர் கலிலேயாவுக்கு வந்தபொழுது அவரை வரவேற்றனர். ஏனெனில், அவர்களும் திருவிழாவிற்குச் சென்றிருந்தனர்.

46 அவர் கலிலேயாவிலுள்ள கானாவூருக்கு மீண்டும் வந்தார். அங்கேதான் முன்பு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிக்கொடுத்தார். கப்பர்நகூம் ஊரில் அரச அலுவலர் ஒருவர் இருந்தார். அவருடைய மகன் பிணியுற்றிருந்தான்.

47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்திருப்பதைக் கேள்வியுற்ற அவர் அவரிடம் சென்று, தம் மகனைக் குணமாக்கவரும்படி அவரை வேண்டினார்; அவருடைய மகன் சாகக்கிடந்தான்.

48 இயேசுவோ அவரிடம், "அருங்குறிகளையும் அற்புதங்களையும் கண்டாலன்றி நீங்கள் விசுவசிக்கமாட்டீர்கள்" என்றார்.

49 அரச அலுவலர் அவரைப் பார்த்து, "ஆண்டவரே, என் குழந்தை இறந்துபோகுமுன்னே வாரும்" என்றார்.

50 இயேசு அவரிடம், "நீர் போகலாம், உம் மகன் உயிரோடிருக்கிறான்" என்றார். அவர், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டார்.

51 வழியிலேயே அவருடைய ஊழியர் எதிரே வந்து, பிள்ளை பிழைத்துக்கொண்டான் என்று அறிவித்தனர்.

52 எத்தனை மணிக்கு நலமடையலானான் என்று அவர் அவர்களை வினவ, "நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்குக் காய்ச்சல் விட்டது" என்றனர்.

53 "உம் மகன் உயிரோடிருக்கிறான்" என்று இயேசு சொன்னதும் அதே நேரத்தில்தான் என்பது தந்தையின் நினைவுக்கு வந்தது. ஆகவே, அவரும் அவருடைய குடும்பம் முழுவதும் விசுவாசங்கொண்டனர்.

54 இதுவே இயேசு செய்த அருங்குறிகளில் இரண்டாவது. இதை யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்தபின் செய்தார்.

அதிகாரம் 05

1 இதன்பின் யூதர்களின் திருவிழா வந்தது. இயேசுவும் யெருசலேமுக்குச் சென்றார்.

2 யெருசலேமில் ' ஆட்டுக்குள ' த்தைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் அமைந்த ஒரு கட்டடம் உண்டு. அதற்கு எபிரேய மொழியில் பெத்சாயிதா என்பது பெயர்.

3 இம்மண்டபங்களில் - குருடர்கள், நொண்டிகள், வாதநோயாளிகள் முதலிய - பிணியாளிகள் எல்லாரும் கூட்டமாய்ப் படுத்துக்கிடப்பர். இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள்.

4 ஏனெனில், ஆண்டவரின் தூதர் அக்குளத்தினுள் சிலவேளைகளில் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவன், எவ்வித நோயுற்றிருந்தாலும் குணமடைவான்.

5 முப்பத்தெட்டு ஆண்டுகளாகப் பிணியுற்றிருந்த ஒருவன் அங்கே படுத்துக்கிடந்தான்.

6 இயேசு அவனைக் கண்டு, அவன் வெகுகாலமாக அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, "குணமாக விரும்புகிறாயா ?" என்று அவனைக் கேட்டார்.

7 பிணியாளி, "ஆண்டவரே, தண்ணீர் கலங்கும்போது, என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆளில்லை; நான் போவதற்குமுன் வேறொருவன் இறங்கிவிடுகிறான்" என்றான்.

8 இயேசு அவனை நோக்கி, "எழுந்து, படுக்கையைத் தூக்கிக்கொண்டு நட" என்றார்.

9 உடனே அவன் குணமடைந்து, தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடக்கலானான்.

10 அன்று ஓய்வுநாள். குணம்பெற்றவனை யூதர்கள் நோக்கி, "இன்று ஓய்வுநாள், படுக்கையைத் தூக்கிச்செல்வது முறையன்று" என்றார்கள்.

11 அவன் மறுமொழியாக, "என்னைக் குணமாக்கியவரே படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடக்கச்சொன்னார்" என்றான்.

12 அவர்கள் அவனிடம், " படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடக்கச்சொன்னவர் யார்? " என்று வினவினர்.

13 குணமானவனுக்கோ அவர் யாரென்று தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் கூட்டமாயிருந்ததால், இயேசு அங்கிருந்து ஏற்கெனவே நழுவிப் போய்விட்டார்.

14 பின்பு இயேசு அவனைக் கோயிலில் கண்டு, "இதோ! குணம் அடைந்துள்ளாய்; இதிலும் கேடானதெதுவும் உனக்கு நேராதபடி இனி பாவம் செய்யாதே" என்றார்.

15 அவன் போய், தன்னைக் குணமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.

16 இயேசு இதை ஓய்வுநாளில் செய்ததற்காக யூதர்கள் அவருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினர்.

17 இயேசு அவர்களிடம், "என் தந்தை இந்நேரம்வரை செயலாற்றுகிறார். நானும் செயலாற்றுகிறேன்" என்றார்.

18 இப்படிச் சொன்னதால், யூதர்கள் அவரைக் கொல்ல வேண்டுமென்று மேலும் உறுதிபூண்டனர். ஏனெனில், ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதோடு கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று சொல்லி, தம்மைக் கடவுளுக்குச் சமமாக்கிவந்தார்.

19 இயேசு அவர்களை நோக்கிக் கூறியதாவது: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மகன் தாமாகவே ஒன்றும் செய்ய முடியாது. தந்தை செய்யக் காண்கிறதையே செய்வார். எதெதை அவர் செய்கிறாரோ, அதையெல்லாம் மகனும் அவ்வாறே செய்கிறார்.

20 தந்தை மகனை நேசித்து, தாம் செய்வதெல்லாம் அவருக்குக் காட்டுகிறார். இவற்றிலும் பெரிய செயல்களை அவருக்குக் காட்டுவார்; அவற்றைக் கண்டு நீங்களும் வியப்புறுவீர்கள்.

21 தந்தை இறந்தவர்களை எழுப்பி, அவர்களுக்கு உயிரளிப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்க்கு உயிரளிக்கின்றார்.

22 தந்தை எவனுக்கும் தீர்ப்பிடுவதில்லை.

23 எல்லாரும் தம்மை மதிப்பதுபோல மகனையும் மதிக்கவேண்டுமென்று, தீர்ப்பிடும் உரிமை முழுவதையும் தந்தை மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவன் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பதில்லை.

24 உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: எனது வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரிடத்தில் விசுவாசம் கொள்பவன், முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான். அவன் தீர்ப்புக்குள்ளாகாமல், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்துசென்றுவிட்டான்.

25 உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நேரம் வருகின்றது, - ஏன், வந்தேவிட்டது. - அப்பொழுது கடவுளுடைய மகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர்.

26 ஏனெனில், தந்தை தம்மிலே உயிர்கொண்டுள்ளதுபோல மகனும் தம்மிலே உயிர்கொண்டிருக்கும்படி அவருக்கு அளித்துள்ளார்.

27 தீர்ப்பிடும் அதிகாரத்தையும் அவருக்கு அளித்துள்ளார்; ஏனெனில், அவர் மனுமகன்.

28 இதைக்குறித்து வியப்புறாதீர்கள்; இதோ! நேரம் வருகிறது. அப்போது கல்லறையில் இருப்பவர்கள் எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவர்.

29 அப்போது நல்லது செய்தவர் வாழ்வுபெற உயிர்த்தெழுவர். பொல்லாது செய்தவர் தண்டனைத்தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.

30 நானாகவே ஒன்றும் செய்ய முடியாது; தந்தை சொற்படியே தீர்ப்பிடுகிறேன். என் தீர்ப்பு நீதியானது. ஏனெனில், என் விருப்பத்தை நாடாமல், என்னை அனுப்பியவர் விருப்பத்தையே நாடுகிறேன்.

31 "என்னைப்பற்றி நானே சாட்சியம் கூறினால், எனது சாட்சியம் செல்லாது.

32 என்னைப்பற்றிச் சாட்சியங்கூற வேறொருவர் இருக்கிறார். அவர் என்னைப்பற்றிச் கூறும் சாட்சியம் செல்லும்; இதை நானறிவேன்.

33 நீங்கள் அருளப்பரிடம் ஆள் அனுப்பினீர்கள், அவரும் உண்மைக்குச் சாட்சியம் கூறினார்.

34 எனக்கோ மனிதன் தரும் சாட்சியம் தேவையில்லை. ஆனால் நீங்கள் மீட்புப்பெறும்படி இதை நினைவூட்டுகிறேன்.

35 அருளப்பர் எரிந்து சுடர்விடும் விளக்கு; அவருடைய ஒளியில் நீங்கள் சற்றுநேரமே களிப்புற விரும்பினீர்கள்.

36 அருளப்பருடைய சாட்சியத்திலும் மேலான சாட்சியம் எனக்கு உண்டு: நான் செய்துமுடிக்க தந்தை எனக்கு அருளியுள்ள செயல்களே, நான் செய்துவரும் அச்செயல்களே, தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்குச் சான்று.

37 இங்ஙனம், என்னை அனுப்பின தந்தையே என்னைப்பற்றிச் சாட்சியம் தந்துள்ளார். ஆயினும் நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதுமில்லை, அவர் உருவத்தைக் கண்டதுமில்லை;

38 அவருடைய வார்த்தை உங்களிடத்தில் நிலைத்திருப்பதாயில்லை. ஏனெனில், அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவசிப்பதில்லை.

39 "மறைநூலை ஆய்ந்துபார்க்கிறீர்கள், அதில் முடிவில்லா வாழ்வு கிடைப்பதாக நினைக்கிறீர்கள் அல்லவா! அதுவே என்னைப்பற்றிச் சாட்சியம் தருகிறது.

40 இருப்பினும், வாழ்வு பெறும்படி என்னிடம் வர உங்களுக்கு விருப்பமில்லை.

41 மனிதர் தரும் மகிமை எனக்குத் தேவையில்லை.

42 உங்களைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்: கடவுளன்பு உங்களிடம் இல்லை.

43 நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன்; நீங்களோ என்னை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இன்னொருவன் தன் பெயராலேயே வருவானாகில், அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.

44 ஒரே கடவுள் தரும் மகிமையை நாடாது, ஒருவருக்கொருவர் தரும் மகிமையைத் தேடிக்கொள்கிறீர்களே; நீங்கள் எப்படி விசுவசிக்கக் கூடும் ?

45 தந்தையிடத்தில் உங்களைக் குற்றஞ்சாட்டுபவன் நான் என்று எண்ணாதீர்கள்: உங்களைக் குற்றஞ்சாட்டுபவர் ஒருவர் உண்டு; அவர்தாம் நீங்கள் நம்பியிருக்கிற மோயீசன்.

46 மோயீசனை நீங்கள் விசுவசித்தால், என்னையும் விசுவசிப்பீர்கள். ஏனெனில், அவர் என்னைப்பற்றித்தான் எழுதினார்.

47 அவர் எழுதியதை விசுவசியாவிட்டால், என் வார்த்தைகளை எவ்வாறு விசுவசிப்பீர்கள் ?"

அதிகாரம் 06

1 இதன்பின், இயேசு கலிலேயாக் கடலின் அக்கரைக்குச் சென்றார். - அதற்குத் திபெரியாக் கடல் என்றும் பெயர்.

2 அவர் பிணியாளிகளுக்குச் செய்துவந்த அருங்குறிகளைக் கண்டதனால், பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது.

3 இயேசு மலைமேல் ஏறி, அங்குத்தம் சீடர்களோடு அமர்ந்தார்.

4 யூதர்களின் திருவிழாவாகிய பாஸ்கா அண்மையிலிருந்தது.

5 இயேசு ஏறெடுத்துப்பார்த்து, பெருங்கூட்டம் ஒன்று தம்மிடம் வருவதைக் கண்டு, "இவர்கள் எல்லாருக்கும் உணவளிப்பதற்கு எங்கிருந்து அப்பம் வாங்குவது ?" என்று பிலிப்புவைக் கேட்டார்.

6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிக்கவே இவ்வாறு கேட்டார்.

7 அதற்குப் பிலிப்பு, "இருநூறு வெள்ளிக்காசுக்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கொரு சிறு துண்டுகூட வராதே" என்றார்.

8 அவருடைய சீடருள் ஒருவரும், சீமோன் இராயப்பருடைய சகோதரருமான பெலவேந்திரர்,

9 "இங்கே ஒரு பையனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பமும் இரண்டு மீனும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இது எப்படி போதும் ?" என்று சொன்னார்.

10 இயேசுவோ, "மக்களைப் பந்தியமர்த்துங்கள்" என்றார். அங்கே நல்ல புல்தரை இருந்தது. எல்லாரும் அமர்ந்தனர். அவர்களுள் ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.

11 இயேசு அப்பங்களை எடுத்து, நன்றிகூறி, பந்தியமர்ந்தவர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அவ்வாறே மீன்களையும் கொடுத்தார். வேண்டியமட்டும் வாங்கியுண்டார்கள்.

12 அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார்.

13 அவர்களும் அவ்வாறே சேர்த்து, மக்கள் எல்லாரும் உண்டபின், ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினர்.

14 இயேசு செய்த இந்த அருங்குறியைக் கண்டு, மக்கள், "உலகிற்கு வரப்போகும் இறைவாக்கினர் உண்மையிலே இவர்தாம்" என்றார்கள்.

15 ஆகவே, அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டுபோய், அரசனாக்க விரும்புகின்றனர் என்பதை அறிந்து, இயேசு அவர்களை விட்டு விலகித் தனியாக மீண்டும் மலைக்குச் சென்றார்.

16 இரவானதும் அவருடைய சீடர் கடலுக்கு வந்து, படகு ஏறி, அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்குப் புறப்பட்டனர்.

17 ஏற்கெனவே இருண்டிருந்தது. இயேசுவோ இன்னும் அவர்களிடம் வந்துசேரவில்லை.

18 புயற்காற்றெழுந்தது; கடல் பொங்கிற்று.

19 அவர்கள் ஏறக்குறைய மூன்று நான்கு கல் தொலைவு படகு ஓட்டியபின், இயேசு கடல்மேல் நடந்து படகுக்கருகில் வருவதைக் கண்டு அஞ்சினர்.

20 அவரோ, "நான்தான், அஞ்சாதீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார்.

21 அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினர். ஆனால் படகு அதற்குள் அவர்கள் சேரவேண்டிய கரை போய்ச் சேர்ந்தது.

22 பின்தங்கியிருந்த மக்கள் மறுநாளும் கடலின் அக்கரையிலேயே இருந்தனர். முந்தின நாள் அங்கே ஒரு படகுதான் இருந்தது என்பதும், அதில் சீடர் மட்டும் போனார்களேயன்றி, இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதும் அவர்கள் நினைவுக்கு வந்தது.

23 ஆண்டவர் நன்றிகூறித் தந்த அப்பத்தை உண்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து வேறு படகுகள் இதற்குள் வந்து சேர்ந்தன.

24 இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கு இல்லாததைக் கண்டு, மக்கள் அப்படகுகளில் ஏறிக் கப்பர்நகூமுக்கு அவரைத் தேடிவந்தார்கள்.

25 கடலின் இக்கரையில் அவரைப் பார்த்து, "ராபி, எப்பொழுது இங்கு வந்தீர் ?" என்று கேட்டனர்.

26 இயேசு மறுமொழியாக: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் என்னைத் தேடுவது அருங்குறிகளைக் கண்டதாலன்று, அப்பங்களை வயிறார உண்டதால்தான்.

27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்; முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள். அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்; ஏனெனில், அவருக்கே தந்தையாகிய கடவுள் தம் அதிகாரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்" என்றார்.

28 அவர்கள் அவரை நோக்கி, "கடவுளுக்கேற்ற செயல்களைச் செய்ய நாங்கள் என்ன செய்யவேண்டும் ?" என,

29 இயேசு, "அவர் அனுப்பியவரை விசுவசிப்பதே கடவுளுக்கேற்ற செயல்" என்றார்.

30 அவர்கள், "உம்மை நாங்கள் விசுவிசிக்க ஓர் அருங்குறி பார்க்கவேண்டும்; என்ன அருங்குறி செய்வீர் ? என்ன செயல் ஆற்றுவீர் ?

31 ' அவர்கள் உண்பதற்கு வானத்திலிருந்து உணவு அருளினார் ' என்று எழுதியுள்ளதற்கேற்ப எங்கள் முன்னோர் பாலைவனத்தில் மன்னாவை உண்டனரே" என்று கேட்டனர்.

32 இயேசு அவர்களை நோக்கி, "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: வானத்திலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோயீசன் அல்லர்; வானத்திலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.

33 ஏனெனில், வானினின்று இறங்கி வந்து உலகிற்கு உயிர் அளிப்பவரே கடவுள் தரும் உணவு" என்றார்.

34 அவர்களோ, "ஆண்டவரே, இவ்வுணவை எப்பொழுதும் எங்களுக்குத் தாரும்" என்றனர்.

35 அதற்கு இயேசு கூறினார்: "நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது; என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது.

36 ஆனால், நான் உங்களுக்குச் சொன்னதுபோல, நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவசிப்பதாயில்லை.

37 தந்தை எனக்குத் தருவதெல்லாம் என்னிடம் வந்துசேரும். என்னிடம் வருபவனையோ நான் தள்ளிவிட்டேன்.

38 ஏனெனில், என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்.

39 என்னை அனுப்பினவருடைய விருப்பமோ: அவர் எனக்குத் தந்ததில் எதையும் நான் அழியவிடாமல், கடைசி நாளில் உயிர்ப்பிக்க வேண்டுமென்பதே.

40 ஆம், என் தந்தையின் விருப்பம் இதுவே: மகனைக் கண்டு, அவரில் விசுவாசம் கொள்பவன் எவனும் முடிவில்லா வாழ்வு பெறவேண்டும்; நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்."

41 "வானினின்று இறங்கிவந்த உணவு நானே" என்று அவர் சொன்னதால் யூதர்கள் முணுமுணுத்து,

42 "சூசையின் மகனாகிய இயேசு அன்றோ இவன் ? இவனுடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியுமே! ' நான் வானினின்று இறங்கி வந்தேன் ' என்று இவன் சொல்வதெப்படி ?" என்றார்கள்.

43 அதற்கு இயேசு கூறியது: "உங்களுக்குள்ளே முணுமுணுக்கவேண்டாம்.

44 "என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவனும் என்னிடம் வர இயலாது; நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்.

45 ' கடவுளிடமிருந்தே அவர்கள் எல்லாரும் கற்றுக்கொள்வர் ' என்று இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது; தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட எவனும் என்னிடம் வருகிறான்.

46 தந்தையை யாரேனும் நேரடியாகக் கண்டார் என்றல்ல, கடவுளிடமிருந்து வந்தவர் தவிர வேறு ஒருவரும் கண்டதில்லை. இவர் ஒருவரே தந்தையைக் கண்டுள்ளார்.

47 உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: விசுவசிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்.

48 நானே உயிர் தரும் உணவு.

49 பாலைவனத்தில் உங்கள் முன்னோர் மன்னாவை உண்டனர்; ஆயினும் இறந்தனர்.

50 ஆனால், நான் குறிப்பிடும் உணவை உண்பவன் சாகான். இதற்காகவே இவ்வுணவு வானினின்று இறங்கியது.

51 நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான். நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே."

52 "நாம் உண்பதற்கு இவன் தன் தசையை எவ்வாறு அளிக்கக்கூடும் ?" என்று யூதர் தமக்குள் வாக்குவாதம் செய்துகொண்டிருக்க,

53 இயேசு அவர்களை நோக்கிச் சொன்னார்: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுமகனின் தசையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய உங்களுக்குள் உயிர் இராது.

54 என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான். நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்.

55 என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம்.

56 என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்.

57 உயிருள்ள தந்தை என்னை அனுப்பினார், நானும் அவரால் வாழ்கின்றேன். அதுபோல் என்னைத் தின்பவனும் என்னால் வாழ்வான்.

58 வானினின்று இறங்கிவந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவுபோல் அன்று: அவர்களோ இறந்தார்கள்; இவ்வுணவைத் தின்பவனோ என்றுமே வாழ்வான்."

59 கப்பர்நகூமிலுள்ள செபக்கூடத்தில் போதிக்கையில் இதையெல்லாம் சொன்னார்.

60 அவருடைய சீடருள் பலர் இதைக் கேட்டு, "இந்தப் பேச்சு மிதமிஞ்சிப்போகிறது, யார் இதைக் கேட்பார் ?" என்றனர்.

61 இதைப்பற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்துகொண்டு, "இது உங்களுக்கு இடறலாக உள்ளதோ ?

62 இதற்கே இப்படியென்றால், மனுமகன் முன்னர் இருந்த இடத்திற்கு ஏறிச்செல்வதை நீங்கள் கண்டால் என்ன சொல்வீர்களோ! 63 "உயிர் அளிப்பது ஆவியே, ஊனுடல் ஒன்றுக்கும் உதவாது. நான் சொன்ன சொற்கள் உங்களுக்கு ஆவியும் உயிருமாகும்.

64 "ஆனால், விசுவசியாதவர் சிலர் உங்களிடையே இருக்கின்றனர்" என்று அவர்களுக்குச் சொன்னார். ஏனெனில், விசுவசியாதவர் யார், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் யார் என்று இயேசு தொடக்கத்திலிருந்தே அறிந்திருந்தார்.

65 மேலும், " 'என் தந்தை அருள்கூர்ந்தாலொழிய எவனும் என்னிடம் வர இயலாது' என இதன்பொருட்டே நான் உங்களுக்குச் சொன்னேன் " என்றார்.

66 அன்றே அவருடைய சீடருள் பலர் அவரை விட்டுப் பிரிந்தனர். அதுமுதல் அவர்கள் அவரோடு சேரவில்லை.

67 இயேசு பன்னிருவரை நோக்கி, "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா ?" என்றார்.

68 அதற்குச் சீமோன் இராயப்பர், "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.

69 நீரே கடவுளின் பரிசுத்தர்; இதை நாங்கள் விசுவசிக்கிறோம்; இதை நாங்கள் அறிவோம்" என்று மறுமொழி கூறினார்.

70 இயேசு அவர்களை நோக்கி, "பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்துகொண்டேன் அன்றோ ? ஆயினும், உங்களுள் ஒருவன் பேயாய் இருக்கிறான்" என்றார்.

71 அவர் இதைச் சொன்னது சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசைப்பற்றியே. ஏனெனில், பன்னிருவருள் ஒருவனாகிய அவன் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தான்.

அதிகாரம் 07

1 இந்நிகழ்ச்சிக்குப்பின், இயேசு கலிலேயாவிலே நடமாடி வந்தார். யூதர்கள் அவரைக் கொல்லத் தேடியதால் யூதேயாவில் நடமாட விரும்பவில்லை.

2 யூதர்களின் கூடாரத் திருவிழா அண்மையிலிருந்தது.

3 அவருடைய சகோதரர் அவரை நோக்கி, " ' யூதேயாவிலுள்ள உம் சீடரும் நீர் புரியும் செயல்களைக் காணும்படி, இவ்விடத்தைவிட்டு அங்கே செல்லும்.

4 ஏனெனில், பொதுமக்கள் கவனத்தைக் கவர விரும்புகிறவன் எவனும், மறைவில் செயலாற்றுவதில்லை. நீர் இதெல்லாம் செய்துவருவதால், உம்மை உலகிற்கு வெளிப்படுத்தலாமே! " என்றனர்.

5 ஏனெனில், அவருடைய சகோதரர்கள்கூட அவரில் விசுவாசங்கொள்ளவில்லை.

6 இயேசு அவர்களை நோக்கி, "எனக்குக் குறித்த நேரம் இன்னும் வரவில்லை. உங்களுக்கோ எந்த நேரமும் ஏற்ற நேரம்தான்.

7 உலகம் உங்களை வெறுக்கமுடியாது, என்னையோ வெறுக்கிறது. ஏனெனில், அதனுடைய செயல்கள் தீயவை என்பதற்கு நான் சாட்சியாய் நிற்கிறேன்.

8 இத்திருவிழாவிற்கு நீங்கள் போங்கள், நான் வரவில்லை. எனக்குக் குறித்த காலம் இன்னும் நிறைவாகவில்லை" என்றார்.

9 இப்படிச் சொல்லிக் கலிலேயாவிலே தங்கிவிட்டார்.

10 அவருடைய சகோதரர் திருவிழாவுக்குப் போனபின், அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாகச் சென்றார்.

11 திருவிழாவின்போது யூதர், "அவர் எங்கே ?" என்று அவரைத் தேடினர்.

12 சிலர், "அவர் நல்லவர்" என்றனர். சிலரோ, "இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறான்" என்றனர். மக்கள் கூடியிருந்த இடங்களிலெல்லாம் இப்படி அவரைப்பற்றி முணுமுணுவென்று பேசிக்கொண்டனர்.

13 யூதர்களுக்கு அஞ்சி அவரைப்பற்றி எவனும் வெளிப்படையாகப் பேசவில்லை.

14 பாதித் திருவிழா முடிந்தபின், இயேசு கோயிலுக்குச் சென்று போதிக்கத் தொடங்கினார்.

15 அதைக் கேட்ட யூதர்கள், "யாரிடமும் பாடம் கேட்காத இவனுக்கு இவ்வளவு அறிவு எப்படி வந்தது ?" என்று வியந்தார்கள்.

16 இயேசுவோ, "என் போதனை என்னுடையதன்று, என்னை அனுப்பினவருடையதே.

17 அவருடைய விருப்பத்தின்படி நடக்க விரும்புகிறவன் இப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா, நானாகவே இதைச் சொல்லுகிறேனா என்பதை அறிந்துகொள்வான்.

18 தானாகவே பேசுகிறவன் தன் சொந்த மகிமையைத் தேடுகிறான். தன்னை அனுப்பினவருடைய மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவன்; அவனிடத்தில் அநீதியில்லை.

19 மோயீசனிடமிருந்து வந்த திருச்சட்டம் உங்களுக்கில்லையா ? இருப்பினும், உங்களுள் யாரும் அச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை! 20 "நீங்கள் என்னைக் கொல்லத் தேடுவானேன் ?" என்றார். அதற்கு மக்கள், "உனக்குப் பேய்பிடித்துவிட்டதா! எவன் உன்னைக் கொல்லத்தேடுகிறான் ?" என்றனர்.

21 அதற்கு இயேசு மறுமொழியாக, "ஓய்வுநாளில் நான் செய்த ஒரே ஒரு செயலுக்காக நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள்.

22 மோயீசன் உங்களுக்கு விருத்தசேதனக் கட்டளை தந்தாரே. - உண்மையில், அதைத் தந்தவர் மோயீசன் அல்லர்; அது நம் முன்னோர் காலத்திலிருந்தே உள்ளது. - அந்த விருத்தசேதனத்தை நீங்கள் ஓய்வுநாளில்கூடச் செய்கிறதில்லையா ?

23 மோயீசன் தந்த அச்சட்டத்தை மீறாதிருக்கும்படி ஓய்வுநாளிலும் நீங்கள் விருத்தசேதனம் செய்திருக்கிறீர்களென்றால், அதே ஓய்வு நாளில் நான் முழு மனிதனையும் குணமாக்கினேன் என்பதற்காக என்மேல் நீங்கள் கோபம் கொள்வதேன் ?

24 வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பிடாதீர்கள்; நீதியின்படியே தீர்ப்பிடுங்கள்" என்றார்.

25 யெருசலேம் நகரத்தார் சிலர், "இவரையன்றோ கொல்லத் தேடுகின்றனர் ?

26 இதோ! இவர் வெளிப்படையாய்ப் பேசுகிறார். யாரும் ஒன்றும் சொல்லக் காணோமே! இவர் மெசியாவென்று தலைவர்கள் உண்மையிலே அறிந்துகொண்டார்களோ ?

27 மெசியா தோன்றும்பொழுதோ, அவர் எங்கிருந்து வருவார் என்பது ஒருவனுக்கும் தெரியாது. ஆனால், இவர் எங்கிருந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியுமே" என்றனர்.

28 ஆகவே, இயேசு கோயிலிலே போதிக்கையில் உரக்கச் சொன்னதாவது: "ஆம், ஆம், என்னை அறிவீர்கள்தான். நான் எங்கிருந்து வருகிறேன் என்பதையும் அறிவீர்கள். ஆயினும், நானாகவே வரவில்லை: என்னை அனுப்பினவரோ உண்மையுள்ளவர். நீங்கள் அவரை அறியவில்லை.

29 நானோ அவரை அறிவேன். ஏனெனில், நான் அவரிடமிருந்து வருகிறேன்; என்னை அனுப்பியவரும் அவரே."

30 இதைக் கேட்டு, யூதர்கள் அவரைப் பிடிக்க நினைத்தனர். ஆனால், அவருடைய நேரம் இன்னும் வராததால், எவனும் அவரைத் தொடவில்லை.

31 கூட்டத்தில் பலர், "மெசியா வரும்பொழுது இவர் செய்வதைவிட அதிக அருங்குறிகளைச் செய்வாரா ?" என்று சொல்லிக்கொண்டு, அவரில் விசுவாசங்கொண்டனர்.

32 அவரைப்பற்றி மக்கள் இவ்வாறு முணுமுணுத்துப் பேசுவதைப் பரிசேயர்கள் கேள்வியுற்றனர். ஆகையால் அவர்களும் தலைமைக் குருக்களும் அவரைப் பிடிக்கக் காவலர்களை அனுப்பினர்.

33 இயேசுவோ: "இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். பின், என்னை அனுப்பியவரிடம் செல்வேன்.

34 என்னைத் தேடுவீர்கள், ஆனால் காணமாட்டீர்கள். நானிருக்கும் இடத்திற்கு உங்களால் வர முடியாது" என்றார்.

35 அப்போது யூதர்கள், "நாம் அவனைக் காணமுடியாதவாறு எங்கே செல்லப்போகிறான்? கிரேக்கர்களிடையே சிதறிவாழ்வோரிடம் போய், கிரேக்கர்களுக்குப் போதிக்கப் போகிறானோ?

36 ' என்னைத் தேடுவீர்கள், ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்குமிடத்திற்கு, உங்களால் வரமுடியாது ' என்று சொன்னானே; இதற்குப் பொருள் என்ன ?" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.

37 திருவிழாவின் இறுதியான பெருநாளிலே, இயேசு எழுந்துநின்று உரத்த குரலில், "யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்! என்னில் விசுவாசங்கொள்பவன் குடிக்கட்டும்!

38 மறைநூல் கூறுவதுபோல், ''அவனுடைய உள்ளத்திலிருந்து உயிருள்ள நீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்" என்றார்.

39 தம்மில் விசுவாசங்கொள்வோர் பெறப்போகும் ஆவியானவரைக்குறித்து, அவர் இவ்வாறு சொன்னார். ஆவியானவரோ இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில், இயேசு இன்னும் மகிமைபெறவில்லை.

40 கூட்டத்தில் சிலர் இந்த வார்த்தைகளைக் கேட்டு, ' உண்மையாகவே இவர்தான் வரப்போகும் இறைவாக்கினர் ' என்றனர்.

41 சிலர், ' இவர் மெசியா ' என்றனர். வேறு சிலரோ, ' கலிலேயா நாட்டிலிருந்தா மெசியா வருவார் ?

42 தாவீதின் மரபிலிருந்தும், தாவீது குடியிருந்த பெத்லெகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என மறைநூல் கூறவில்லையா ? ' என்றனர்.

43 இப்படி அவரைக்குறித்து மக்களிடையே பிளவு ஏற்பட்டது.

44 அவர்களுள் சிலர் அவரைப் பிடிக்க விரும்பினர். ஆனால், எவனும் அவரைத் தொடவில்லை.

45 தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் அனுப்பிய காவலர்கள் திரும்பி வந்தார்கள். அவர்கள் காவலரிடம், "அவனை ஏன் பிடித்துக்கொண்டு வரவில்லை?" என்று கேட்டனர்.

46 காவலரோ, "எவரும் அவரைப்போல் என்றுமே பேசினதில்லை! என்றனர்.

47 அதற்குப் பரிசேயர்கள், "நீங்களும் ஏமாந்துபோனீர்களோ ?

48 தலைவர்களிலாவது பரிசேயர்களிலாவது அவனை விசுவசித்தவர்கள் யாரேனும் உண்டா ?

49 திருச்சட்டமறியாத இக்கூட்டமோ சாபத்துக்குள்ளானது" என்றார்கள்.

50 அவர்களுள் ஒருவர் நிக்கொதேமு. - அவரே முன்னொரு நாள் இயேசுவிடம் வந்தவர். - அவர் அவர்களைப் பார்த்து,

51 "ஒருவன் செய்கிறது இன்னதென்று முதலில் அவனது வாக்குமூலத்தைக் கேட்டு அறிந்துகொள்ளாமல், நம் சட்டம் அவனுக்குத் தீர்ப்பளிக்குமா ?" என்றார்.

52 அவர்களோ அவரிடம், "நீரும் கலிலேயரோ? மறைநூலை ஆராய்ந்துபாரும். கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் எவரும் தோன்றுவதில்லை என்பது தெரியவரும்" என்றனர்.

53 அனைவரும் வீடு திரும்பினர்.

அதிகாரம் 08

1 இயேசுவோ ஒலிவமலைக்குச் சென்றார்.

2 விடியற்காலையில் அவர் கோயிலுக்கு வர, மக்கள் எல்லாரும் அவரிடம் வந்தார்கள். அவர் அமர்ந்து, அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.

3 விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை மறைநூல் வல்லுநரும் பரிசேயரும் கொண்டுவந்து நடுவில் நிறுத்தி,

4 "போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டாள்.

5 இப்படிப்பட்டவர்களைக் கல்லாலெறிந்து கொல்லவேண்டுமென்பது மோயீசன் நமக்குக் கொடுத்த சட்டம். நீர் என்ன சொல்லுகிறீர் ?" என்றனர்.

6 அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது கண்டுபிடிக்கும்படி, அவரைச் சோதிக்க இப்படிக கேட்டனர். இயேசுவோ குனிந்து, விரலாலே தரையில் எழுதத்தொடங்கினார்.

7 அவர்கள் அந்தக் கேள்வியைத் திரும்பத்திரும்பக் கேட்டதால், அவர் நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்" என்றார்.

8 மீண்டும் குனிந்து தரையில் எழுதலானார்.

9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியவர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அவர்கள் போய்விட்டார்கள். கடைசியில் இயேசுமட்டும் இருந்தார்; அப்பெண்ணோ அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தாள்.

10 அவர் நிமிர்ந்துபார்த்து, "மாதே, எங்கே அவர்கள் ? உனக்கு எவரும் தீர்ப்பிடவில்லையா ?" என்று கேட்டார்.

11 அவளோ, "ஒருவரும் தீர்ப்பிடவில்லை, ஆண்டவரே" என, இயேசு, "நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ" என்றார்.

12 இதற்குப்பின் இயேசு மக்களைப்பார்த்துக் கூறினார்: "நானே உலகின் ஒளி; என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான். உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான்."

13 பரிசேயரோ அவரிடம், "உம்மைப்பற்றி நீரே சாட்சியம் கூறுகின்றீர்; உம்முடைய சாட்சியம் செல்லாது" என்றனர்.

14 இயேசு மறுமொழியாகச் சொன்னதாவது: "என்னைப்பற்றி நானே சாட்சியம் கூறினும் என் சாட்சியம் செல்லும். ஏனெனில், நான் எங்கிருந்து வந்தேன், எங்கே செல்கிறேன் என்று எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன் என்றோ எங்கே செல்கிறேன் என்றோ உங்களுக்குத் தெரியாது.

15 நீங்கள் உலகுக்கு ஏற்றவாறு தீர்ப்பிடுகிறீர்கள்; நானோ எவனுக்கும் தீர்ப்பிடுவதில்லை.

16 அப்படி நான் தீர்ப்பிட்டாலும், என் தீர்ப்பு செல்லும். ஏனெனில், தீர்ப்பிடுவதில் நான் தனியாயில்லை, என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்.

17 இருவருடைய சாட்சியம் செல்லும் என்று உங்கள் சட்டத்திலே எழுதியுள்ளது அன்றோ ?

18 என்னைப்பற்றிச் சாட்சியம் நானும் கூறுகிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் கூறுகிறார்."

19 அவர்களோ, "உம் தந்தை எங்கே ?" என்று கேட்க, இயேசு மறுமொழியாகச் சொன்னார்: "நீங்கள் என்னையும் அறிவீர்கள், என் தந்தையையும் அறிவீர்கள். என்னை நீங்கள் அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்."

20 இயேசு கோயிலில் போதிக்கையில், காணிக்கையறை அருகில் இப்படிக் கூறினார். அவருடைய நேரம் இன்னும் வராததால், எவனும் அவரைப் பிடிக்கவில்லை.

21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கிக் கூறினார்: "நான் செல்கிறேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனால், உங்கள் பாவத்தில் மடிவீர்கள். நான் செல்லுமிடத்திற்கு உங்களால் வரமுடியாது."

22 யூதர்களோ, " ' நான் செல்லுமிடத்திற்கு உங்களால் வர முடியாது ' என்று சொல்லுகிறானே, இவன் என்ன, தற்கொலை செய்து கொள்ளப்போகிறானோ ?" என்றார்கள்.

23 அவரோ அவர்களை நோக்கிக் கூறினார்: "நீங்கள் மண்ணைச் சார்ந்தவர்கள்; நானோ விண்ணைச் சார்ந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள்; நானோ இவ்வுலகைச் சார்ந்தவனல்லேன்.

24 ஆகையால்தான், உங்கள் பாவங்களிலே மடிவீர்கள் என்று நான் கூறினேன். நானே இருக்கிறேன் என்று நீங்கள் விசுவசியாவிடில், உங்கள் பாவங்களிலே மடிவீர்கள்."

25 அவர்களோ, "நீர் யார் ?" என்று வினவ, இயேசு கூறினார்: "நான் யாரென்று உங்களுக்குத் தொடக்கமுதல் சொல்லிவந்தேனோ, அவர்தாம் நான்.

26 உங்களைப்பற்றிப் பேசவும் தீர்ப்பிடவும் பல காரியங்கள் உள்ளன; ஆனால், என்னை அனுப்பியவர் உண்மையானவர்; நான் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகிற்கு எடுத்துச்சொல்லுகிறேன்."

27 இப்படிச் சொன்னதில் அவர் தம் தந்தையைக் குறிப்பிட்டார் என்று அவர்கள் உணரவில்லை.

28 ஆகவே இயேசு அவர்களை நோக்கிக் கூறினார்: "மனுமகனை நீங்கள் உயர்த்திய பின்பு, நானே இருக்கிறேன், நானாகவே எதையும் செய்வதில்லை; என் தந்தை எனக்குக் கற்பித்ததையே நான் எடுத்துச்சொல்லுகிறேன் என்று அறிந்து கொள்வீர்கள்.

29 என்னை அனுப்பினவர் என்னோடு இருக்கிறார்; அவர் என்னைத் தனியே விட்டுவிடவில்லை; ஏனெனில் நான் அவருக்கு உகந்ததையே எப்பொழுதும் செய்கிறேன்."

30 அவர் இவற்றைச் சொன்னபோது, பலர் அவரில் விசுவாசங்கொண்டனர்.

31 பின்னர், தம்மை விசுவசித்த யூதர்களுக்கு இயேசு கூறினார்: "நீங்கள் என் வார்த்தையில் நிலைத்திருப்பீர்களாகில், உண்மையாகவே என் சீடராயிருப்பீர்கள்.

32 உண்மையை அறிவீர்கள்; அவ்வுண்மையும் உங்களுக்கு விடுதலையளிக்கும்."

33 அவர்கள், "ஆபிரகாமின் வழிவந்தவர்கள் நாங்கள்; ஒருபோதும் யாருக்கும் அடிமைகளாயிருந்ததில்லை; அப்படியிருக்க, 'நீங்கள் விடுதலை பெறுவீர்கள்' என்று நீர் சொல்வதெப்படி?" என்று கேட்டனர்.

34 இயேசுவோ மறுமொழியாகக் கூறினார்: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமை.

35 வீட்டில் அடிமைக்கு நிலையான இடமில்லை; மகனுக்கோ எப்பொழுதும் இடமுண்டு.

36 எனவே, மகன் உங்களுக்கு விடுதலையளித்தால்தான், உங்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.

37 நீங்கள் ஆபிரகாமின் வழிவந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும்; ஆயினும், என் வார்த்தை உங்களில் இடம்பெறாததால், நீங்கள் என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்.

38 நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்லுகிறேன்; நீங்களோ உங்கள் தந்தையிடம் கேட்டறிந்ததைச் செய்கிறீர்கள்."

39 அப்பொழுது அவர்கள், "ஆபிரகாமே எங்கள் தந்தை" என்றார்கள். அவர்களுக்கு இயேசு கூறினார்: "நீங்கள் ஆபிரகாமின் மக்களாயிருந்தால், ஆபிரகாமின் செயல்களைச் செய்வீர்கள்.

40 ஆனால், கடவுள் எனக்குக் கூறிய உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை இப்பொழுது கொல்லத் தேடுகிறீர்கள்; ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.

41 நீங்கள் செய்துவருவதோ உங்கள் தந்தையின் செயல்கள்தாம்." அவர்கள், "நாங்கள் வேசித்தனத்தில் பிறந்தவர்கள் அல்ல. எங்களுக்கு ஒரே தந்தை உண்டு: கடவுளே அவர்" என்றனர்.

42 இயேசுவோ அவர்களை நோக்கிக் கூறினார்: "கடவுள் உங்கள் தந்தையாயிருப்பின் எனக்கு அன்பு செய்வீர்கள்; ஏனென்றால், நான் கடவுளிடமிருந்து புறப்பட்டு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவர்தாம் என்னை அனுப்பினார்.

43 நான் சொல்வதை ஏன் நீங்கள் கண்டுணர்வதில்லை? நான் சொல்வதை கேட்க உங்களால் முடியாமற்போவதால்தான்.

44 அலகையே உங்களுக்குத் தந்தை; உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்களுக்கு விருப்பம். ஆதிமுதல் அவன் ஒரு கொலைகாரன்: அவனிடம் உண்மையில்லாததால் அவன் உண்மையின்பால் நிலைத்துநிற்கவில்லை. அவன் பொய் சொல்லும்பொழுது தன்னுள் இருப்பதையே பேசுகிறான். ஏனெனில், அவன் பொய்யன், பொய்க்குத் தந்தை.

45 நான் உண்மையைக் கூறுவதால்தான் நீங்கள் என்னை விசுவசிப்பதில்லை.

46 என்னிடத்தில் பாவமுண்டென உங்களுள் யார் எண்பிக்கக்கூடும்? நான் உங்களுக்கு உண்மையைக் கூறினால், என்னை ஏன் விசுவசிப்பதில்லை?

47 கடவுளால் பிறந்தவன் அவருடைய சொல்லுக்குச் செவிமடுக்கிறான். நீங்களோ கடவுளால் பிறக்கவில்லை. ஆதலால் செவிமடுப்பதில்லை" என்றார்.

48 யூதர்களோ அவரைப் பார்த்து, "நீ சமாரியன், பேய்பிடித்தவன் என்று நாங்கள் சொன்னது சரிதானே?" என்றனர்.

49 இயேசுவோ, "நான் பேய்பிடித்தவன் அல்லேன் என் தந்தைக்கு நான் மதிப்பளிக்கிறேன். நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள்.

50 நான் என் மகிமையைத் தேடுவதில்லை. அதை எனக்குத் தேடித்தருபவர் ஒருவர் இருக்கிறார், இதில் தீர்ப்பிடுகிறவர் அவரே.

51 உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒருவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பானாகில் என்றுமே சாகான்" என்றார்.

52 எனவே யூதர்கள், "நீ பேய்பிடித்தவன் என்பது இப்பொழுது தெளிவாகிறது. ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் அவ்வாறே இறந்தனர். நீயோ, 'ஒருவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பானாகில் என்றுமே சாவுக்குள்ளாகமாட்டான்' என்று சொல்லுகிறாய்.

53 நம் தந்தை ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் இறந்தார். இறைவாக்கினர்களும் இறந்தனர். உன்னை யாரென நினைத்துக்கொள்கிறாய்?" என்று வினவினர்.

54 அதற்கு இயேசு, "நான் என்னையே மகிமைப்படுத்தினால், என் மகிமை வீண் மகிமை. என் தந்தையே என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரையே நீங்கள் நம் கடவுள்' என்று சொல்லுகிறீர்கள்.

55 எனினும், நீங்கள் அவரை அறியவில்லை, நானோ அவரை அறிவேன். அவரை நான் அறியேன் என்றால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். ஆனால் நான் அவரை அறிவேன்; அவருடைய வார்த்தையையும் கடைப்பிடிக்கிறேன்.

56 உங்கள் தந்தை ஆபிரகாம் எனது நாளைக் காட்சியில் கண்டு களிகூர்ந்தார்; அந்நாளைக் கண்டார்; பெருமகிழ்ச்சி கொண்டார்" என்றார்.

57 யூதர்கள், "உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைப் பார்த்திருக்கிறாயோ?" என்றனர்.

58 இயேசுவோ அவர்களிடம், "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பே நான் இருக்கிறேன்" என்றார்.

59 இதைக் கேட்டு அவர்கள் அவர்மேல் எறியக் கல் எடுத்தனர். இயேசுவோ மறைவாக நழுவிக் கோயிலிலிருந்து வெளியேறினார்.

அதிகாரம் 09

1 இயேசு போய்க்கொண்டிருக்கும்போது பிறவிக் குருடன் ஒருவனைக் கண்டார்.

2 "ராபி, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா?" என்று அவருடைய சீடர் அவரை வினவினர்.

3 இயேசு, "இவன் செய்த பாவமும் அன்று, இவன் பெற்றோர் செய்த பாவமும் அன்று. கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்.

4 "பகலாய் இருக்கும்வரை என்னை அனுப்பினவருடைய செயல்களை நாம் செய்யவேண்டியிருக்கிறது. இரவு வருகின்றது. அப்பொழுது எவனும் வேலைசெய்ய முடியாது.

5 இவ்வுலகில் இருக்கும்வரை நான் உலகிற்கு ஒளி" என்றார்.

6 இதைச் சொன்னபின், தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறுண்டாக்கி, அச்சேற்றை அவனுடைய கண்கள்மேல் பூசி,

7 அவனை நோக்கி, "நீ போய்ச் சீலோவாம் குளத்தில் கழுவு" என்றார். (சீலோவாம் என்பதற்கு ' அனுப்பப்பட்டவர் ' என்பது பொருள். ) அவன் போய்க் கழுவினான், பார்வையோடு திரும்பி வந்தான்.

8 அக்கம்பக்கத்தாரும், முன்பு அவனைப் பிச்சைக்காரனாகப் பார்த்துவந்தவர்களும், "இவன்தானே அங்கே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன்?" என்றனர்.

9 சிலர், "இவன்தான்" என்றும், சிலரோ, "அவனல்லன், அவனைப் போலிருக்கிறான்" என்றும் சொல்லிக்கொண்டனர். அவனோ, "நான்தான்" என்றான்.

10 அவர்கள், "உனக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?" என்று கேட்டனர்.

11 அவன், "இயேசு என்பவர் சேறுண்டாக்கி என் கண்களில் பூசி, 'சீலோவாம் குளத்திற்குப் போய்க் கழுவு' என்றார். நான் போய்க் கழுவினேன், பார்வை பெற்றேன்" என்றான்.

12 அவர்கள், "அவர் எங்கே?" என்று அவனைக் கேட்க, அவன் "தெரியாது" என்றான்.

13 முன்பு குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடம் கூட்டிக்கொண்டு போயினர்.

14 இயேசு சேறுண்டாக்கி அவனுக்குப் பார்வை அளித்த நாள் ஓர் ஓய்வுநாள்.

15 எனவே பரிசேயரும், "எப்படிப் பார்வை அடைத்தாய்?" என்ற அதே கேள்வியைக் கேட்டனர். அவனோ அவர்களிடம், "என் கண்களின் மேல் அவர் சேற்றைத் தடவினார்; போய்க் கழுவினேன்; இப்போது பார்க்கிறேன்" என்றான்.

16 பரிசேயர்களுள் சிலர், "அவன் கடவுளிடமிருந்து வந்தவன் அல்லன். ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதில்லை" என, சிலர், "பாவியானவன் இத்தகைய அருங்குறிகளை எப்படிச் செய்யமுடியும் ?" என்றனர். எனவே, அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.

17 அவர்கள் மீண்டும் குருடனை நோக்கி, "உனக்குப் பார்வை அளித்தவனைக் குறித்து நீ என்ன சொல்லுகிறாய்?" என, அவன், "அவர் ஓர் இறைவாக்கினர்" என்றான்.

18 பார்வையடைந்தவனுடைய பெற்றோரை அழைத்துக் கேட்கும்வரை யூதர்கள், அவன் குருடனாயிருந்து பார்வை பெற்றான் என்பதை நம்பவில்லை.

19 உங்கள் மகன் பிறவிக்குருடன் என்று சொல்லுகிறீர்களே, இவன்தானா? இவனுக்கு இப்பொழுது எப்படிக் கண் தெரிகிறது?" என்று அவர்களை வினவினர்.

20 அதற்கு அவனுடைய பெற்றோர், "இவன் எங்கள் மகன்தான். பிறவியிலேயே குருடன்தான். இவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும்.

21 ஆனால், இப்பொழுது எப்படிக் கண் தெரிகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இவனுக்குப் பார்வை கொடுத்தவர் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது. அவனையே கேட்டுக்கொள்ளுங்கள். அவன் வயது வந்தவன்; நடந்ததை அவனே சொல்லட்டும்" என்றனர்.

22 யூதர்களுக்கு அஞ்சியே அவனுடைய பெற்றோர் இவ்வாறு கூறினர். ஏனெனில், அவரை மெசியாவாக எவனாவது ஏற்றுக்கொண்டால், அவனைச் செபக்கூடத்திற்குப் புறம்பாக்கவேண்டுமென யூதர்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர்.

23 அதனால்தான் அவனுடைய பெற்றோர், "அவன் வயது வந்தவன், அவனையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றனர்.

24 குருடனாயிருந்தவனை மீண்டும் அழைத்து அவனிடம், "நீ கடவுளை மகிமைப்படுத்து; அவன் பாவி என்பது எங்களுக்குத் தெரியும்" என்றனர்.

25 அவனோ, "அவர் பாவியோ, அல்லரோ, எனக்குத் தெரியாது. ஒன்றுதான் தெரியும்; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்" என்றான்.

26 மீண்டும் அவர்கள், "அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?" என்று வினவ,

27 அவன், "ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கவனிக்கவில்லை. மறுபடியும் ஏன் அதைக் கேட்கவேண்டும்? நீங்களும் அவருடைய சீடர்களாக விரும்புகிறீர்களோ?" என்றான்.

28 அவர்கள் அவனைத் திட்டி, "நீதான் அந்த ஆளுடைய சீடன். நாங்களோ மோயீசனுடைய சீடர்.

29 கடவுள் மோயீசனோடு பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும். இவன் எங்கிருந்து வந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது" என்று சொன்னார்கள்.

30 அதற்கு அவன், "என்ன விந்தையாயிருக்கிறது! எனக்குப் பார்வை கொடுத்திருக்கிறார். இவர் எங்கிருந்து வந்தார் என்பது தெரியாதென்கிறீர்களே!

31 பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை. இறைப்பற்றுள்ளவனாய் அவர் விருப்பத்தின்படி நடக்கிறவனுக்கே செவிசாய்க்கிறார். இது நமக்கு நன்றாய்த் தெரியும்.

32 பிறவியிலேயே குருடனாயிருந்த ஒருவனுக்கு யாரும் பார்வையளித்ததாக ஒருபோதும் கேள்விப்பட்டதேயில்லை.

33 இவர் கடவுளிடமிருந்து வராதிருந்தால் ஒன்றுமே செய்திருக்க முடியாது" என்றான்.

34 அப்போது அவர்கள், "பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குப் போதிக்கிறாய்?" என்று சொல்லி அவனை வெளியே தள்ளிவிட்டார்கள்.

35 அவர்கள் அவனை வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்வியுற்றார். பின்பு அவனைக் கண்டபொழுது, "மனுமகனில் உனக்கு விசுவாசம் உண்டா ?" என,

36 அவன், "ஆண்டவரே, அவர் யார் எனச் சொல்லும், நான் அவரில் விசுவாசம் கொள்வேன்" என்றான்.

37 இயேசு, அவனை நோக்கி, "நீ அவரைப் பார்த்திருக்கிறாய். உன்னுடன் பேசுகிறவரே அவர்" என்று கூற,

38 அவன், "ஆண்டவரே, விசுவசிக்கிறேன்" என்று சொல்லி அவரைப் பணிந்து வணங்கினான்.

39 அப்போது இயேசு, "நான் தீர்ப்பிடவே இவ்வுலகத்திற்கு வந்தேன். பார்வையற்றோர் பார்வைபெறவும், பார்வையுள்ளோர் குருடராகவுமே நான் வந்தேன்" என்று கூறினார்.

40 அவருடனிருந்த பரிசேயர் சிலர் இதைக் கேட்டு, "நாங்களுமா குருடர்?" என்று வினவ,

41 இயேசு, "நீங்கள் குருடராய் இருந்தால், உங்களுக்குப் பாவம் இராது. ஆனால், 'எங்களுக்கு கண் தெரிகிறது' என்கிறீர்கள். ஆதலால், உங்கள் பாவத்திலேயே நீங்கள் நிலைத்திருக்கிறீர்கள்" என்றார்.

அதிகாரம் 10

1 "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆட்டுப்பட்டிக்குள் வாயில்வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக்குதிப்பவன் திருடன், கொள்ளைக்காரன்.

2 வாயில்வழியாக நுழைபவனே ஆடுகளின் ஆயன்;

3 அவனுக்கே காவலன் வாயிலைத் திறந்துவிடுகிறான்; ஆடுகளும் அவனுடைய குரலைத் தெரிந்துகொள்ளுகின்றன. அவன் தன் சொந்த ஆடுகளைப் பெயர்சொல்லிக் கூப்பிட்டு வெளியில் ஓட்டுகின்றான்.

4 தன் ஆடுகளை வெளியில் கொண்டுபோனபின் அவற்றிற்குமுன் நடந்துபோகிறான். அவனது குரல் அவற்றிற்குத் தெரியுமாதலால் ஆடுகள் அவனைப் பின்தொடர்கின்றன.

5 அந்நியனையோ அவைபின்தொடராமல், அவனை விட்டு ஓடிப்போகும். ஏனெனில், அந்நியருடைய குரலை அவை அறிந்துகொள்வதில்லை."

6 இதை இயேசு அவர்களுக்கு உவமையாகச் சொன்னார். சொன்னது என்னவென்று அவர்கள் கண்டுணரவில்லை.

7 ஆதலால் இயேசு மீண்டும் அவர்களை நோக்கிக் கூறியதாவது: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆட்டுமந்தைக்கு வாயில் நானே.

8 எனக்கு முன்பு வந்தவர்கள் அனைவரும் திருடர், கொள்ளைக்காரர். அவர்களுக்கு ஆடுகள் செவிகொடுக்கவில்லை.

9 நானே வாயில். என் வழியாக நுழைபவன் மீட்புப்பெறுவான். உள்ளே போவான், வெளியே வருவான், மேய்ச்சலைக் கண்டடைவான்.

10 திருடுவதற்கும் கொல்லுவதற்கும் அழிப்பதற்குமேயன்றி வேறெதற்கும் திருடன் வருவதில்லை. நானோ, ஆடுகள் உயிர்பெறும்படி வந்தேன்; அதை மிகுதியாய்ப் பெறும்பொருட்டே வந்தேன்.

11 நல்ல ஆயன் நானே: நல்ல ஆயன் ஆடுகளுக்காகத் தன்னுயிரையே கொடுப்பான்.

12 கூலிக்கு மேய்ப்பவன், ஆடுகளைச் சொந்தமாகக் கொண்டுள்ள ஆயனாயிராததால்,

13 ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போகிறான்; ஏனெனில், கூலியாள் கூலியாள்தான்; ஆடுகளின்மீது அவனுக்கு அக்கறையில்லை. ஓநாய் வந்து ஆடுகளை அடித்துக்கொண்டு போகிறது, மந்தையைச் சிதறடிக்கிறது.

14 நல்ல ஆயன் நானே.

15 தந்தை என்னை அறிவதுபோலவும், நான் தந்தையை அறிவதுபோலவும், என் ஆடுகளை நான் அறிவேன்; அவையும் என்னை அறிகின்றன. என் ஆடுகளுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன்.

16 இக்கிடையைச் சேராத வேறு ஆடுகள் எனக்கு உள்ளன. அவற்றையும் நான் கூட்டிச் சேர்க்கவேண்டும். அவை என் குரலுக்குச் செவிகொடுக்கும். ஒரே ஆயனும் ஒரே மந்தையும் உண்டாகும்.

17 என் உயிரை மீண்டும் பெற்றுக்கொள்ளும்படி நான் அதைக் கையளிக்கிறேன்; ஆதலால் தந்தை என்னிடம் அன்புகூர்கிறார்.

18 எனது உயிரை என்னிடமிருந்து பறிப்பவன் எவனுமில்லை; நானாகவே என் உயிரைக் கையளிக்கிறேன். உயிரைக் கையளிக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதனை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு; இதுவே என் தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்ட கட்டளை."

19 இவ்வார்த்தைகளின்பொருட்டு யூதரிடையே பிளவு உண்டாயிற்று.

20 அவர்களுள் பலர், "இவன் பேய்பிடித்த வெறியன். இவன் சொல்வதை ஏன் கேட்கிறீர்கள் ?" என்றனர்.

21 மற்றவர்களோ, "இவை பேய்பிடித்தவனுடைய வார்த்தைகளல்ல. குருடர்களுக்குப் பேய் பார்வை அளிக்கமுடியுமா ?" என்றனர்.

22 யெருசலேமில் கோயில் அபிஷுகத்திருநாள் நடைபெற்றது. அப்பொழுது குளிர்காலம்.

23 கோயிலில் சாலமோன்மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார்.

24 யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, "எவ்வளவு காலத்திற்கு எங்களைத் தயங்கவைப்பீர் ? நீர் மெசியாவாக இருந்தால் தெளிவாகச் சொல்லிவிடும்" என்று கேட்டனர்.

25 அதற்கு இயேசு கூறியது: "நான் சொல்லிவிட்டேன், நீங்கள்தாம் விசுவசிக்கிறதில்லை. என் தந்தையின்பெயரால் நான் புரியும் செயல்களே எனக்குச் சாட்சியம்.

26 ஆனால், நீங்கள் என் ஆடுகளைச் சேர்ந்தவர்களாக இராததால், விசுவசிக்கிறதில்லை.

27 என் ஆடுகள் எனது குரலுக்குச் செவி கொடுக்கின்றன; நானும் அவற்றை அறிவேன். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.

28 நான் அவற்றிற்கு முடிவில்லாவாழ்வு அளிக்கிறேன்; அவை என்றும் அழியா. எவனும் என் கையிலிருந்து அவற்றைக் கவர்ந்துகொள்வதில்லை.

29 அவற்றை எனக்களித்த என் தந்தை அனைவரிலும் பெரியவர்; என் தந்தையின் கையிலிருந்து எவனும் அவற்றைக் கவர்ந்துகொள்ள முடியாது.

30 நானும் தந்தையும் ஒன்றே."

31 இதைக் கேட்ட யூதர் அவரைக் கல்லால் எறியும்படி கல் எடுத்தனர்.

32 இயேசுவோ, "தந்தையின் ஆற்றலால் மேலான செயல்கள் பல உங்களுக்குச் செய்துகாட்டியிருக்கிறேன். அவற்றில் எச்செயலுக்காக என்னைக் கல்லால் எறியப்போகிறீர்கள் ?" என்று கேட்டார்.

33 யூதர்கள் மறுமொழியாக, "மேலான செயல்களுக்காக நாங்கள் உன்னைக் கல்லால் எறியவில்லை. தெய்வ நிந்தனை செய்தற்காகவே அப்படிச் செய்கிறோம். ஏனெனில், நீ மனிதனாயிருந்தும் உன்னைக் கடவுளாக்கிக் கொள்கின்றாய்" என்றார்கள்.

34 அதற்கு இயேசு கூறியது: " ' நீங்கள் தேவர்கள் என நான் கூறினேன் ' என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளதன்றோ ?

35 எனவே, கடவுளின் வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அச்சட்டம் கூறுகிறது. மறைநூலோ ஒழிந்துபோக முடியாது.

36 அவ்வாறிருக்க, தந்தையால் அர்ச்சிக்கப்பெற்று உலகிற்கு அனுப்பப்பட்ட நான், என்னைக் ' கடவுளின் மகன் ' என்று சொன்னதற்காக, ' தெய்வ நிந்தனை செய்கிறாய் ' என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம் ?

37 நான் என் தந்தையின் செயல்களைச் செய்யாவிடில், நீங்கள் என்னை விசுவசிக்கவேண்டாம்.

38 ஆனால், நான் அவற்றைச் செய்தால் என்னை விசுவசிக்காவிட்டாலும், என் செயல்களையாவது விசுவசியுங்கள்; இங்ஙனம், தந்தை என்னிலும், நான் தந்தையிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள், அவ்வறிவில் நிலைகொள்வீர்கள்."

39 இதைக் கேட்டு அவர்கள் அவரைப் பிடிக்கப் பார்த்தார்கள். அவரோ அவர்கள் கையிலிருந்து தப்பிச்சென்றார்.

40 இயேசு மீண்டும் யோர்தானைக் கடந்து, அருளப்பர் முதலில் ஞானஸ்நானம் கொடுத்துவந்த இடத்திற்குச் சென்றார்.

41 அவர் அங்குத் தங்கியிருந்தபோது, பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், "அருளப்பர் ஓர் அருங்குறியும் செய்யவில்லை; ஆனால் அருளப்பர் இவரைப்பற்றிக் கூறியதெல்லாம் மெய்யாயிற்று" என்று பேசிக்கொண்டார்கள்.

42 அங்கே பலர் அவரில் விசுவாசங்கொண்டனர்.

அதிகாரம் 11

1 லாசர் என்னும் ஒருவன் பிணியுற்றிருந்தான். அவன் பெத்தானியா ஊரினன். அதுவே மரியாள், அவளுடைய சகோதரி மார்த்தாள் இவர்களுடைய ஊர். -

2 இந்த மரியாள்தான், முன்னொருநாள் ஆண்டவருக்குப் பரிமளத்தைலம் பூசி, அவருடைய பாதங்களைக் கூந்தலால் துடைத்தவள். பிணியுற்றிருந்த லாசர் அவளுடைய சகோதரன். -

3 அவனுடைய சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, "ஆண்டவரே, இதோ! நீர் நேசிக்கிறவன் பிணியுற்றுள்ளான்" என்று தெரிவித்தார்கள்.

4 இயேசு இதைக் கேட்டு, "இப்பிணி சாவில்வந்து முடியாது, கடவுளின் மகிமைக்காகவே இப்படி ஆயிற்று; இதனால் கடவுளுடைய மகன் மகிமை பெற வேண்டியிருக்கிறது" என்றார்.

5 மார்த்தாள், அவளுடைய சகோதரி மரியாள், லாசர் இவர்களிடம் இயேசு அன்பு கொண்டிருந்தார்.

6 அவன் பிணியுற்றிருந்த செய்தியைக் கேட்ட பின்பு, அவர் அங்கேயே இரண்டு நாள் தங்கிவிட்டார்.

7 அந்த இரண்டு நாள் கழித்துத் தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்றார்.

8 அவருடைய சீடர், "ராபி, இப்போதுதான் யூதர்கள் உம்மைக் கல்லால் எறியப்பார்த்தார்களே; நீர் மீண்டும் அங்குப் போகிறீரா ?" என,

9 இயேசு மறுமொழியாகக் கூறினார்: "பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் உண்டன்றோ ? பகலில் நடப்பவன் இடறி விழுவதில்லை; ஏனெனில், அவன் இவ்வுலகின் ஒளியைக் காண்கிறான்.

10 இரவில் நடப்பவனோ இடறி விழுகிறான்; ஏனெனில், அவனிடம் ஒளியில்லை."

11 இதைக் கூறியபின் அவர் அவர்களிடம், "நம் நண்பன் லாசர் தூங்குகிறான், அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பச் செல்லுகிறேன்." என்றார்.

12 அவருடைய சீடரோ, "ஆண்டவரே, தூங்கினால் நலம் அடைவான்" என்றனர்.

13 இயேசு குறிப்பிட்டது அவனுடைய சாவையே. அவர்களோ வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக நினைத்தார்கள்.

14 அப்போது இயேசு, "லாசர் இறந்துவிட்டான்.

15 உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டு, நான் அங்கு இல்லாமற்போனதுபற்றி மகிழ்கிறேன். வாருங்கள், அவனிடம் செல்வோம்" என்று தெளிவாகச் சொன்னார்.

16 திதிமு என்னும் தோமையார் உடன்சீடரிடம், "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார்.

17 இயேசு அங்கு வந்தபொழுது, லாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.

18 பெத்தானியா யெருசலேமுக்கு அருகில் உள்ளது. இரு ஊருக்கும் ஏறக்குறைய இரண்டு கல் தொலை.

19 சகோதரன் இறந்ததற்காக மார்த்தாள், மரியாள் இவர்களுக்கு ஆறுதல் அளிக்க யூதர் பலர் வந்திருந்தனர்.

20 இயேசு வந்திருப்பதைக் கேள்வியுற்றதும் மார்த்தாள் அவரை எதிர்கொண்டு போனாள்.

21 மரியாளோ வீட்டிலேயே இருந்தாள். மார்த்தாள் இயேசுவிடம், "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்.

22 இப்பொழுதுகூட நீர் கடவுளிடமிருந்து கேட்பதெல்லாம் அவர் உமக்கு அருள்வார் என்று எனக்குத் தெரியும்" என்றாள்.

23 இயேசு அவளை நோக்கி, "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார்.

24 அதற்கு மார்த்தாள், "இறுதிநாளில் எல்லாரும் உயிர்த்தெழும்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்" என்றாள்.

25 அவளிடம் இயேசு, "உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் விசுவாசங்கொள்பவன் இறப்பினும் வாழ்வான்.

26 உயிர் வாழ்கையில் என்னில் விசுவாசம் கொள்பவன் என்னும் ஒருபோதும் சாகான். இதை விசுவசிக்கிறாயா ?" என்று கேட்டார்.

27 அவளோ, "ஆம் ஆண்டவரே, நீர் மெசியா; இவ்வுலகிற்கு வரும் கடவுளின் மகன் நீர்தான் என்று நான் விசுவசிக்கிறேன்" என்றாள்.

28 இப்படிச் சொன்னபின் மார்த்தாள் தன் சகோதரி மரியாளை அழைக்கச் சென்றாள். அவளிடம் வந்து, "போதகர் வந்துவிட்டார். உன்னை அழைக்கிறார்" என்று காதோடு காதாய்ச் சொன்னாள்.

29 அதைக் கேட்டதும் மரியாள் விரைந்தெழுந்து அவரிடம் போனாள்.

30 இயேசு ஊருக்குள் இன்னும் வரவில்லை. தம்மை மார்த்தாள் எதிர்கொண்ட இடத்திலேயே இருந்தார்.

31 மரியாளின் வீட்டில் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர், அவள் விரைந்தெழுந்து வெளியே சென்றதைக் கண்டு, அழுவதற்குத்தான் கல்லறைக்குச் செல்லுகிறாள் என்றெண்ணி அவளோடு போனார்கள்.

32 இயேசு இருந்த இடத்திற்கு மரியாள் வந்ததும், அவரைக் கண்டு காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்" என்றாள்.

33 மரியாள் அழுவதையும், அவளோடு வந்த யூதர் அழுவதையும் இயேசு கண்டபொழுது,

34 மனம் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள் ?" என்று கேட்க, "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள்.

35 அப்போது இயேசு கண்ணீர் விட்டார்.

36 அதைக் கண்ட யூதர்கள், "அவன்மேல் இவருக்கு எவ்வளவு நேசம், பாருங்கள்!" என்றனர்.

37 அவர்களுள் சிலர், "குருடனுக்குப் பார்வையளித்த இவர், இவன் சாகாமலிருக்கச் செய்ய முடியவில்லையா ?" என்றனர்.

38 இயேசு மீண்டும் மனம் குமுறியவராய்க் கல்லறைக்குச் சென்றார். அது ஒரு குகை; அதைக் கல் ஒன்று மூடியிருந்தது.

39 "கல்லை எடுத்து விடுங்கள்" என்றார் இயேசு. செத்தவனுடைய சகோதரி மார்த்தாள் அவரை நோக்கி, "ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே! " என்றாள்.

40 அதற்கு இயேசு, "உனக்கு விசுவாசம் இருந்தால், கடவுளின் மகிமையைக் காண்பாய் என்று நான் சொல்லவில்லையா ?" என்றார்.

41 அப்பொழுது கல்லை அப்புறப்படுத்தினர். இயேசு கண்களை ஏறெடுத்து, "தந்தாய், நீர் எனக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.

42 நீர் என்றும் எனக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். ஆனால், சூழ்ந்து நிற்கும் கூட்டத்தின் பொருட்டே நான் இப்படிச் சொல்கிறேன். நீரே என்னை அனுப்பினீர் என்று இவர்கள் விசுவசிக்கவே இப்படிச் சொல்கிறேன்" என்றார்.

43 இதைச் சொன்னபின், உரத்த குரலில், "லாசரே, வெளியே வா" என்றார்.

44 என்றதும் இறந்தவன் வெளியே வந்தான். அவனுடைய கை கால்கள் துணியால் சுற்றிக் கட்டுண்டிருந்தன. அப்போது இயேசு, "கட்டவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" என்றார்.

45 மரியாளிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரில் விசுவாசங்கொண்டனர்.

46 சிலரோ பரிசேயர்களிடம் சென்று இயேசு செய்ததெல்லாம் அறிவித்தனர்.

47 தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, "இந்த ஆள் பல அருங்குறிகளைச் செய்கிறானே, என்ன செய்யலாம் ?

48 இவனை இப்படியே விட்டுவிட்டால் எல்லாரும் இவனில் விசுவாசம்கொள்வர். உரோமையர் வந்து நம் புனித இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே" என்றனர்.

49 அவ்வாண்டின் தலைமைக்குருவாயிருந்த கைப்பாஸ், சங்கத்தில் எழுந்து மற்றவர்களை நோக்கி, "உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.

50 நம் இனம் முழுவதுமே அழிந்துபோகாதபடி ஒருவன் மட்டும் மக்களுக்காக இறப்பது நலம் என்பதை நீங்கள் உணரவில்லையே" என்றார்.

51 இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவ்வாண்டின் தலைமைக் குருவாயிருந்தபடியால், இயேசு தம் இனத்தினருக்காக இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டு இறைவாக்காகக் கூறினார்.

52 உள்ளபடி அவர் இறப்பது தம் இனத்தினருக்காக மட்டுமன்று. சிதறிக் கிடந்த கடவுளின் மக்களை ஒன்றாய்ச் சேர்ப்பதற்காகவுமே.

53 அவரைக் கொல்ல அன்றே முடிவுசெய்தனர்.

54 அதுமுதல் இயேசு யூதர்களிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. பாலைவனத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போய், எப்பிராயீம் என்ற ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.

55 யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையிலிருந்தது. பாஸ்காவுக்கு முன்னே, பலர் துப்புரவுச் சடங்கு செய்வதற்காக நாட்டுப் புறங்களிலிருந்து யெருசலேமுக்குப் போனார்கள்.

56 அங்கே இயேசுவைத் தேடினார்கள். "அவர் திருவிழாவுக்கு வருவாரா ? வரமாட்டாரா ? என்ன நினைக்கிறீர்கள் ?" என்று கோயிலில் கூடிவந்தவர்களிடையே பேச்சு நடந்தது.

57 தலைமைக் குருக்குளும் பரிசேயரும் அவரைப் பிடிக்கவிரும்பி, அவர் இருக்குமிடம் யாருக்காவது தெரிந்தால், தங்களிடம் வந்து அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தனர்.

அதிகாரம் 12

1 பாஸ்காவுக்கு ஆறுநாள் இருக்கும்போது, இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கேதான் அவர் லாசரை இறந்தோரினின்று உயிர்ப்பித்தது.

2 அங்கு அவருக்கு விருந்து அளித்தனர். மார்த்தாள் பணிவிடை செய்தாள். அவரோடு பந்தியமர்ந்தவர்களுள் லாசரும் ஒருவன்.

3 மரியாள் நரந்தம் என்னும் விலையுயர்ந்த நல்ல பரிமளத்தைலம் ஓர் இராத்தல் கொண்டுவந்து, இயேசுவின் பாதங்களில் பூசி அவற்றைக் கூந்தலால் துடைத்தாள். தைலத்தின் நறுமணம் வீடு முழுவதும் பரவியது.

4 அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவனும், அவருடைய சீடருள் ஒருவனுமான யூதாஸ் இஸ்காரியோத்து,

5 "ஏன் இந்தத் தைலத்தை முந்நூறு வெள்ளிக்காசுக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாது ?" என்றான்.

6 ஏழைகள்மீது கவலையிருந்ததாலன்று அவன் இப்படிக் கூறியது; திருடனாயிருந்ததால்தான். தன்னிடம் ஒப்படைத்திருந்த பொதுப்பணத்திலிருந்து காசை அவன் எடுத்துக்கொள்வதுண்டு.

7 இயேசுவோ, "விட்டுவிடு: எனது அடக்க நாளைக் குறிக்கும்படி இதைச் செய்யட்டும்.

8 ஏனெனில், ஏழைகள் உங்களோடு என்றும் உள்ளனர்; நானோ உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை" என்றார்.

9 அவர் அங்கிருப்பதைக் கேள்வியுற்ற யூதர் பெருங்கூட்டமாக வந்தனர். இயேசுவுக்காக மட்டும் வரவில்லை; இறந்தவர்களிடமிருந்து இயேசு உயிர்ப்பித்த லாசரைக் காண்பதற்காகவும் வந்தனர்.

10 அவன் பொருட்டு யூதருள் பலர் இயேசுவிடம் போய் அவரில் விசுவாசங்கொண்டனர்.

11 ஆதலால், லாசரையும் கொன்றுபோடத் தலைமைக் குருக்கள் முடிவு செய்தனர்.

12 மறுநாள் திருவிழாவுக்கு வந்திருந்த பெருங்கூட்டம் இயேசு யெருசலேமுக்கு வருகிறார் எனக் கேள்வியுற்று,

13 கையில் குருத்தோலைகளோடு அவரை எதிர்கொண்டுபோய், ' ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி! இஸ்ராயேலின் அரசர் வாழி! ' என்று ஆர்ப்பரித்து வரவேற்றனர்.

14 வழியிலிருந்த ஒரு கழுதைக்குட்டியின்மேல் இயேசு அமர்ந்தார்.

15 இதைக் குறித்தே, ' சீயோன் மகளே, அஞ்சவேண்டாம். இதோ! உன் அரசர், கழுதைக்குட்டியின் மேல் ஏறி வருகிறார் ' என்று எழுதியுள்ளது.

16 முதலில் அவருடைய சீடர் இதையெல்லாம் உணரவில்லை. இயேசு மகிமை அடைந்தபொழுது, அவரைப்பற்றி இங்ஙனம் எழுதியிருந்ததென்றும், எழுதியபடியே அவருக்கு நடந்ததென்றும் நினைவுகூர்ந்தனர்.

17 கல்லறையிலிருந்த லாசரை இயேசு அழைத்து இறந்தோரினின்று உயிர்ப்பித்தபொழுது அவரோடிருந்த மக்கள், அந்தப் புதுமையைக் குறித்துச் சாட்சியம் சொல்லி வந்தனர்.

18 அவர் செய்த இவ்வருங்குறியைப்பற்றிக் கேள்வியுற்றதால்தான் மக்கள் கூட்டமாக அவரை எதிர்கொண்டு வந்தார்கள்.

19 இதைக் கண்ட பரிசேயர், "பார்த்தீர்களா! உங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதோ! உலகமே அவன்பின் ஓடுகிறது! " என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.

20 வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தவர்களுள் கிரேக்கர் சிலர் இருந்தனர்.

21 கலிலேயா நாட்டு பெத்சாயிதா ஊரினராகிய பிலிப்புவினிடம் இவர்கள் வந்து, "ஐயா! இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்று கேட்டுக்கொண்டார்கள்.

22 பிலிப்பு வந்து பெலவேந்திரரிடம் சொல்ல, பெலவேந்திரரும் பிலிப்புவும் இயேசுவிடம் சொன்னார்கள்.

23 அதற்கு இயேசு, "மனுமகன் மகிமைபெறும் நேரம் வந்துவிட்டது.

24 உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: கோதுமைமணி மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய, அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான், மிகுந்த பலனளிக்கும்.

25 தன் உயிரை நேசிக்கிறவன் அதை இழந்துவிடுகிறான்; இவ்வுலகில் தன் உயிரை வெறுப்பவனோ அதை முடிவில்லா வாழ்வுக்குக் காப்பாற்றிக்கொள்கிறான்.

26 எனக்குப் பணிவிடை செய்பவன் என்னைப் பின்செல்லட்டும்; எங்கே நான் இருக்கிறேனோ, அங்கே என் பணியாளனும் இருப்பான். எவனாவது எனக்குப் பணிவிடைசெய்தால், அவனுக்கு என் தந்தை மதிப்பளிப்பார்.

27 இப்பொழுது எனது ஆன்மா கலக்கமடைந்துள்ளது. நான் என்ன சொல்வேன் ? ' தந்தாய், இந்நேரத்தின் சோதனையிலிருந்து என்னைக் காப்பாற்றும் என்பேனோ ? ' இல்லை, இதற்காகத்தானே இந்நேரம்வரை வாழ்ந்தேன்.

28 தந்தாய், உமது பெயரை மகிமைப்படுத்தும்!" அப்பொழுது வானத்திலிருந்து, "மகிமைப்படுத்தினேன், மீண்டும் மகிமைப்படுத்துவேன்" என்ற குரலொலி வந்தது.

29 சூழ்ந்துநின்ற மக்கள் அதைக் கேட்டு, இடி இடித்தது என்றனர். வேறு சிலரோ, "வானதூதர் ஒருவர் அவரோடு பேசினார்" என்றனர்.

30 ஆனால் இயேசு கூறினார்: "இக்குரலொலி உங்கள்பொருட்டு உண்டானதேயன்றி, என்பொருட்டன்று.

31 "இப்பொழுதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இப்பொழுதே இவ்வுலகின் தலைவன் புறம்பே தள்ளப்படுவான்.

32 நானோ உலகினின்று உயர்த்தப்பெற்றபின் அனைவரையும் என்பால் ஈத்துக்கொள்வேன்."

33 தாம் இறக்கப்போவது எவ்வாறு என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.

34 அதற்கு மக்கள், "மெசியா என்றுமே நிலைத்திருப்பார் எனத் திருச்சட்டநூலிலிருந்து நாங்கள் அறிந்திருக்கிறோம். அப்படியிருக்க, ' மனுமகன் உயர்த்தப்பட வேண்டும் ' என்று நீர் சொல்லுவதெங்ஙனம் ? யார் அந்த மனுமகன்?" என்று கேட்டார்கள்.

35 இயேசு அவர்களை நோக்கிக் கூறினார்: "இன்னும் சற்று நேரமே ஒளி உங்களோடு இருக்கும். இருளில் நீங்கள் அகப்படாதபடி ஒளி இருக்கும்பொழுதே நடந்துசெல்லுங்கள். இருளில் நடப்பவனுக்குத் தான் போவது எங்கே என்பது தெரியாது.

36 ஒளி உங்களோடு இருக்கும்பொழுதே, ஒளியின்மீது விசுவாசங்கொள்ளுங்கள்; அப்போது ஒளியின் மக்களாவீர்கள்." இதைச் சொன்னபின், இயேசு அவர்களை விட்டுப் போய் மறைந்துகொண்டார்.

37 அவர்கள் கண்ணுக்கு முன்பாக இத்தனை அருங்குறிகளை இயேசு செய்திருந்தும் அவர்கள் அவரில் விசுவாசங்கொள்ளவில்லை.

38 இவ்வாறு, "ஆண்டவரே நாங்கள் அறிவித்ததைக் கேட்டு எவன் விசுவசித்தான்? ஆண்டவருடைய கைவண்மை யாருக்கு வெளிப்பட்டது ?" என்று இறைவாக்கினர் இசையாஸ் மொழிந்தது நிறைவேறவேண்டியிருந்தது.

39 ஆகையால், அவர்களால் விசுவசிக்க முடியவில்லை.

40 மேலும், "அவர்கள் கண்ணால் காணாமலும் உள்ளத்தால் உணராமலும் மனந்திரும்பாமலும் இருக்கவும், நானும் அவர்களைக் குணமாக்காதிருக்கவும், அவர்களுடைய கண்களைக் குருடாக்கி உள்ளத்தை மழுங்கச்செய்தார்" என்றும் இசையாஸ் கூறியுள்ளார் அன்றோ ?

41 அவருடைய மகிமையைக் கண்டபொழுது இசையாஸ் இதைக் கூறினார்; இப்படிச் சொன்னது அவரைப்பற்றியே.

42 எனினும், தலைவர்களுள்கூடப் பலர் அவரில் விசுவாசம் கொண்டனர். ஆனால் செபக்கூடத்துக்குப் புறம்பாகாதவாறு அதை வெளிப்படையாகக் காட்டவில்லை. ஏனெனில், பரிசேயர்களுக்கு அஞ்சினர்.

43 கடவுள் தரும் மகிமையைவிட மனிதரால் கிடைக்கும் மகிமையையே விரும்பினர்.

44 இயேசு, உரக்கக் கூவிச் சொன்னது: "என்மேல் விசுவாசம் கொள்கிறவன் என்மேல் அன்று, என்னை அனுப்பினவர்மேல்தான் விசுவாசம் கொள்கிறான்.

45 என்னைக் காண்கிறவனும் என்னை அனுப்பினவரையே காண்கிறான்.

46 என்னில் விசுவாசங்கொள்பவன் எவனும் இருளிலேயே இருந்துவிடாதபடி, நான் ஒளியாக இவ்வுலகிற்கு வந்தேன்.

47 நான் சொல்வதை ஒருவன் கேட்டபின் அதன்படி நடவாவிடில், அவனுக்குத் தீர்ப்பிடுவது நானல்லேன்; ஏனெனில், நான் உலகிற்குத் தீர்ப்பிட வரவில்லை, உலகை மீட்கவே வந்தேன்.

48 என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதவனுக்குத் தீர்ப்பிடும் ஒன்று உண்டு: நான் கூறிய வார்த்தையே அவனுக்கு இறுதி நாளில் தீர்ப்பிடும்.

49 ஏனெனில், நானாகவே பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன கூறவேண்டும், என்ன பேசவேண்டும் என்று எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

50 அவருடைய கட்டளையோ முடிவில்லா வாழ்வு என்பது எனக்குத் தெரியும். எனவே, நான் சொல்வதெல்லாம் என் தந்தை எனக்குக் கூறியவாறே சொல்லுகிறேன்."

அதிகாரம் 13

1 பாஸ்காத் திருவிழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகினின்று தந்தையிடம் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டதென்று இயேசு அறிந்திருந்தார். உலகிலிருந்த தம்மவர்மேல் அன்புகூர்ந்திருந்த அவர், இறுதிவரை அவர்கள்மேல் அன்புகூரலானார்.

2 இராவுணவு நடைபெறலாயிற்று. இயேசுவைக் காட்டிக்கொடுக்குமாறு சீமோனின் மகனான யூதாஸ் இஸ்காரியோத்தை ஏற்கனவே அலகை தூண்டியிருந்தான்.

3 தந்தை தம் கையில் அனைத்தையும் ஒப்படைத்துள்ளார் என்றும், தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல கடவுளிடம் திரும்பிச் செல்லவேண்டும் என்றும் அறிந்தவராய்,

4 இயேசு பந்தியிலிருந்து எழுந்து, மேலாடையைக் களைந்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்.

5 பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய பாதங்களைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

6 சீமோன் இராயப்பரிடம் வந்தார்; அவர் இயேசுவிடம், "ஆண்டவரே, நீரா என் பாதங்களைக் கழுவுவது ?" என்றார்.

7 அதற்கு இயேசு, "நான் செய்வது இன்னதென்று உனக்கு இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்" என்றார்.

8 இராயப்பரோ, "நீர் என் பாதங்களை ஒருபோதும் கழுவ விடமாட்டேன்! " என, இயேசு, "நான் உன்னைக் கழுவாவிடில், உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.

9 அப்போது சீமோன் இராயப்பர், "அப்படியானால், ஆண்டவரே, என் பாதங்களை மட்டுமன்று, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்!" என்றார்.

10 இயேசு அவரை நோக்கி, "குளித்துவிட்டவன் தன் பாதங்களைமட்டும் கழுவினால் போதும்; மற்றப்படி அவன் முழுவதும் தூய்மையாயிருக்கிறான். நீங்களும் தூய்மையாயிருக்கிறீர்கள். ஆனால் எல்லோரும் தூய்மையாயில்லை" என்றார்.

11 தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவனென்று அவருக்குத் தெரிந்திருந்ததால், "நீங்கள் எல்லோரும் தூய்மையாய் இல்லை" என்றார்.

12 அவர்களுடைய பாதங்களைக் கழுவியபின், அவர் தம் மேலாடையை அணிந்துகொண்டு, மீண்டும் பந்தியில் அமர்ந்து, அவர்களை நோக்கிக் கூறினார்: "நான் உங்களுக்குச் செய்தது இன்னதென்று விளங்கிற்றா ?

13 நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுவது சரியே; நான் அவர்தாம்.

14 ஆகவே, ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களைக் கழுவவேண்டும்.

15 நான் உங்களுக்கு மாதிரி காட்டினேன்: நான் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள்.

16 "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஊழியன் தலைவனுக்கு மேற்பட்டவன் அல்லன்; அப்போஸ்தலனும் தன்னை அனுப்பியவருக்கு மேற்பட்டவன் அல்லன்.

17 "இதையெல்லாம் அறிந்து அதன்படி நடப்பீர்களாகில் நீங்கள் பேறுபெற்றவர்கள்.

18 நான் சொல்வது உங்கள் எல்லோரையும்பற்றி அன்றி; நான் தேர்ந்துகொண்டவர்கள் எனக்குத் தெரியும். ஆனால், ' என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான் ' என்ற மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டும்.

19 "அப்படி நிகழும்போது, நானே இருக்கிறேன் என்று நீங்கள் விசுவசிக்கும்பொருட்டு, நிகழ்வதற்கு முன்னதாக, இப்பொழுதே உங்களுக்குக் கூறுகிறேன்.

20 உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்பவனோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்."

21 இப்படிச் சொன்னபின், இயேசு மனக்கலக்கத்தோடு, "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்" என்று வெளிப்படையாகக் கூறினார்.

22 இப்படிக் கூறியது யாரைப்பற்றி என்று சீடர் அறியாமல் திகைப்புற்று ஒருவரையொருவர் பார்த்தனர்.

23 இயேசுவுடைய சீடர்களுள் ஒருவர் அவருடைய மார்புபக்கமாய் அமர்ந்திருந்தார். அவர்மேல்தான் இயேசு அன்புகொண்டிருந்தார்.

24 சீமோன் இராயப்பர் அவருக்குச் சைகை காட்டி, "யாரைப்பற்றிச் சொல்கிறார் என்று கேள்" என்றார்.

25 அவர் இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, "ஆண்டவரே, அவன் எவன் ?" என்று கேட்டார்.

26 இயேசு மறுமொழியாக, "அப்பத்துண்டை நான் எவனுக்குத் தோய்த்துக் கொடுக்கிறேனோ, அவன்தான்" என்றுசொல்லி, அப்பத்தைத் தோய்த்து, சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.

27 யூதாஸ் அப்பத்துண்டைப் பெற்றபின், அவனுக்குள் சாத்தான் நுழைந்தான். அப்போது இயேசு அவனிடம், "செய்யவேண்டியதை விரைவில் செய்" என்றார்.

28 எதற்காக அவனிடம் இப்படிச் சொன்னார் என்பதைப் பந்தியில் இருந்த யாரும் கண்டுணரவில்லை.

29 யூதாசிடம் பொதுப்பணம் இருந்ததால், "திருநாளுக்கு வேண்டியதை வாங்கிவா," அல்லது "ஏழைகளுக்கு ஏதாவது கொடு" என்று இயேசு அவனுக்குச் சொல்லியிருக்கலாம் எனச் சிலர் எண்ணிக்கொண்டனர்.

30 அப்பத்துண்டை அவன் பெற்றுக்கொண்டவுடனே வெளியே போனான். அப்பொழுது இரவு.

31 அவன் வெளியே போனபின், இயேசு சொன்னதாவது: "இப்பொழுது மனுமகன் மகிமை பெற்றார், கடவுளும் அவரால் மகிமை பெற்றார்.

32 கடவுள் அவரால் மகிமை பெற்றாரானால், கடவுளும் தம்மில் அவரை மகிமைப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.

33 "அன்புச் குழந்தைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். என்னைத் தேடுவீர்கள்; நான் யூதர்களுக்குச் சொன்னதுபோல் உங்களுக்கும் இப்பொழுது சொல்லுகிறேன்: நான் செல்லுமிடத்திற்கு உங்களால் வரமுடியாது.

34 நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்: நீங்கள் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள். நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள்.

35 நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."

36 அப்போது சீமோன் இராயப்பர், "ஆண்டவரே, எங்குச் செல்லுகிறீர் ?" என்றார். இயேசு மறுமொழியாக, "நான் செல்லுமிடத்திற்கு என்னைப் பின்தொடர இப்பொழுது உன்னால் முடியாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்" என்றார்.

37 அதற்கு இராயப்பர், "ஆண்டவரே, ஏன் இப்பொழுது நான் உம்மைப் பின்தொடர முடியாது ? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்" என்றார்.

38 அதற்கு இயேசு கூறியது: "நீ எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயோ ? உண்மையிலும் உண்மையாக உனக்குச் சொல்லுகிறேன்: நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன், கோழி கூவாது.

அதிகாரம் 14

1 உள்ளம் கலங்கவேண்டாம். கடவுள்மீது விசுவாசம்வையுங்கள், என்மீதும் விசுவாசம் வையுங்கள்.

2 என் தந்தையின் இல்லத்திலே உறைவிடங்கள் பல உள்ளன; இல்லாதிருந்தால் உங்களுக்குச் சொல்லி இருப்பேன். ஏனெனில், உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்.

3 நான் போய் உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்தபின், திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்; அப்போது, நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.

4 நான் போகும் இடத்திற்கு வழி உங்களுக்குத் தெரியும்."

5 தோமையார் அவரிடம், "ஆண்டவரே, நீர் செல்லுமிடமே எங்களுக்குத் தெரியாதிருக்க, அங்கே போகும்வழி எப்படித் தெரியும் ?" என்றார்.

6 இயேசு அவரிடம் கூறியதாவது: "நானே வழியும் உண்மையும் உயிரும். என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை.

7 நீங்கள் என்னை அறிந்திருந்தால், என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தவர்களாய் இருக்கிறீர்கள், அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்."

8 "இதைக் கேட்ட பிலிப்பு, "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும், அதுவே போதும்" என்றார்.

9 இயேசு அவரை நோக்கிக் கூறினார்: "பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும், நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா ? "என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான். பின், ' தந்தையை எங்களுக்குக் காட்டும் ' என்று நீ கேட்பதெப்படி ?

10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருக்கிறதாக நீ விசுவசிக்கிறதில்லையா ? நான் உங்களுக்குக் கூறும் சொற்களை நானாகவே கூறுவதில்லை: என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் என் தந்தையே.

11 நான் சொல்வதை நம்புங்கள்: நான் தந்தையினுள் இருக்கிறேன், தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்பாவிடில், செயல்களின் பொருட்டேனும் நம்புங்கள்.

12 உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: என்னில் விசுவாசங்கொள்பவன் நான் செய்யும் செயல்களையும் செய்வான்; ஏன், அவற்றினும் பெரியனவும் செய்வான்; ஏனெனில், நான் தந்தையிடம் செல்லுகிறேன்.

13 நீங்கள் என் பெயரால் கேட்பதெல்லாம் செய்வேன்; இதனால் தந்தை மகனில் மகிமை பெறுவார்.

14 என் பெயரால் நீங்கள் எதைக்கேட்டாலும், அதை நான் செய்வேன்.

15 உங்களுக்கு என்மீது அன்பிருந்தால், என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.

16 நானும் தந்தையைக் கேட்பேன்: தந்தை மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருவார்; அவர் உங்களோடு என்றும் இருப்பார்.

17 அவர் உண்மையின் ஆவியானவர்; உலகம் அவரைப் பெற்றுக்கொள்ள முடியாது; ஏனெனில், உலகம் அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்களோ அவரை அறிவீர்கள்; ஏனெனில், அவர் உங்களோடு தங்கி உங்களுள் இருக்கிறார்.

18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன்; உங்களிடம் திரும்பி வருவேன்.

19 இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள்; ஏனெனில், நான் வாழ்கிறேன், நீங்களும் வாழ்வீர்கள்.

20 நான் என் தந்தையினுள்ளும், நீங்கள் என்னுள்ளும், நான் உங்களுள்ளும் இருப்பதை நீங்கள் அந்நாளில் அறிந்துகொள்வீர்கள்.

21 என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவனே எனக்கு அன்புகாட்டுகிறவன்; எனக்கு அன்புகாட்டுகிறவன் மேல் என் தந்தையும் அன்புகூர்வார். நானும் அவன்மேல் அன்புகூர்ந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்."

22 யூதாஸ்- இஸ்காரியோத்து யூதாஸ் அல்லன்- அவரை நோக்கி: "ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாது எங்களுக்கு மட்டும் வெளிப்படுத்துவதாகச் சொல்லுகிறீரே, ஏன் அப்படி?" என,

23 இயேசு மறுமொழியாகக் கூறினார்: "ஒருவன் எனக்கு அன்பு செய்தால் என் வார்த்தையைக் கேட்பான்; என் தந்தையும் அவன்மேல் அன்புகூர்வார்; நாங்களும் அவனிடம் வந்து, அவனோடு குடிகொள்வோம்.

24 எனக்கு அன்பு செய்யாதவன் என் வார்த்தைகளைக் கேட்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தையோ என்னுடையதன்று: என்னை அனுப்பிய தந்தையுடையதே.

25 இதெல்லாம் நான் உங்களோடிருக்கும் போதே உங்களுக்குச் சொன்னேன்.

26 தந்தை என் பெயரால் அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியான துணையாளரும் உங்களுக்கு எல்லாம் அறிவுறுத்துவார்; நான் உங்களுக்குக் கூறியதெல்லாம் நினைவூட்டுவார்.

27 சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன்; நான் உங்களுக்கு அளிக்கும் சமாதனமோ உலகம் தரும் சமாதானம்போல் அன்று. உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம்.

28 நான் போகிறேன், போய் உங்களிடம் திரும்பிவருவேன் என்று நான் சொன்னதை கேட்டீர்கள்; உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால், நான் தந்தையிடம் போவதுபற்றி மகிழ்வீர்கள். ஏனெனில், தந்தை என்னிலும் மேலானவர்.

29 இவை நிகழும்போது, நீங்கள் விசுவசிக்கும்பொருட்டு, இவை நிகழ்வதற்கு முன்னதாக, இப்பொழுதே உங்களுக்குச் சொன்னேன்.

30 நான் உங்களோடு பேச இனி அதிக நேரமில்லை; ஏனெனில், இவ்வுலகின் தலைவன் வருகிறான். அவனுக்கோ என்மேல் அதிகாரமில்லை.

31 ஆனால், நான் தந்தைக்கு அன்புசெய்கிறேன் என்பதையும், அவர் எனக்குக் கட்டளையிட்டபடியே நடக்கிறேன் என்பதையும் உலகம் தெரிந்துகொள்ளவேண்டும். எழுந்திருங்கள், இங்கிருந்து போவோம்.

அதிகாரம் 15

1 "நானே உண்மையான திராட்சைக்கொடி; என் தந்தையே பயிரிடுபவர்.

2 என் கிளைகளில் கனிகொடாத எக்கிளையையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் கிளையையோ மிகுந்த கனி தரும்படி கழித்துவிடுவார்.

3 நான் உங்களுக்குக் கூறிய வார்த்தையால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாக இருக்கிறீர்கள்.

4 நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என்னில் நிலைத்திருங்கள். கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது. அவ்வாறே, நீங்களும் என்னில் நிலைத்திருந்தாலன்றி, கனி தர முடியாது.

5 நான் திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவன் என்னுள்ளும் நான் அவனுள்ளும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனி தருவான். ஏனெனில், என்னை பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

6 ஒருவன் என்னுள் நிலைத்திராவிடில், கிளையைப்போல வெட்டி எறியப்பட்டு, உலர்ந்து போவான்; அக்கிளைகளை ஒன்று சேர்த்து, நெருப்பில் போட்டுச் சுட்டெரிப்பார்கள்.

7 நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால், விரும்பியதெல்லாம் கேளுங்கள், உங்களுக்கு அருளப்படும்.

8 நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராக விளங்குவதே என் தந்தைக்கு மகிமை.

9 தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன். என் அன்பில் நிலைத்திருங்கள்.

10 நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.

11 என் மகிழ்ச்சி உங்களில் இருக்கும்படியும், உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெறும்படியும் நான் உங்களுக்கு இதெல்லாம் கூறினேன்.

12 நான் உங்களிடம் அன்புகூர்ந்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை.நி31339

13 தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை.

14 நான் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் நீங்கள் செய்தால், நீங்கள் என் நண்பர்கள்.

15 உங்களை நான் இனி ஊழியர் என்று சொல்லேன்; ஏனெனில், தலைவன் செய்வது இன்னது என்று ஊழியனுக்குத் தெரியாது. ஆனால் உங்களை நண்பர்கள் என்றேன்; ஏனெனில், தந்தையிடமிருந்து நான் கேட்டதையெல்லாம் உங்களுக்கு அறிவித்தேன்.

16 நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை, நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்; நீங்கள் உலகில் சென்று பலன் தரும்படியாகவும், அந்தப் பலன் நிலைத்திருக்கும்படியாகவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே, நீங்கள் தந்தையை என் பெயரால் கேட்பதெல்லாம் அவர் உங்களுக்கு அருள்வார்.

17 நீங்கள் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை.

18 "உலகம் உங்களை வெறுக்கிறதென்றால், உங்களை வெறுக்குமுன்னே அது என்னை வெறுத்தது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

19 நீங்கள் உலகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால், உலகம் தனக்குச் சொந்தமானதை நேசிக்கும்; நீங்களோ உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல; ஏனெனில், நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்தேன். ஆதலால் தான் உலகம் உங்களை வெறுக்கின்றது.

20 ஊழியன் தலைவனுக்கு மேற்பட்டவன் அல்லன் என்று நான் உங்களுக்குக் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள்; உங்களையும் துன்புறுத்துவார்கள். என் வார்த்தையைக் கேட்டிருந்தால்தானே, உங்கள் வார்த்தையையும் கேட்பார்கள்.

21 என்னை அனுப்பினவரை அறியாததால் என் பெயரைக்குறித்து இப்படியெல்லாம் உங்களை நடத்துவார்கள்.

22 நான் வந்து அவர்களுக்குப் போதியாமல் இருந்திருந்தால், அவர்களுக்குப் பாவம் இராது. இப்பொழுதோ தங்கள் பாவத்திற்குச் சாக்குச் சொல்ல வழியில்லை.

23 என்னை வெறுப்பவன் என் தந்தையையும் வெறுக்கிறான்.

24 யாரும் செய்திராத செயல்களை நான் அவர்களிடையே செய்யாமல் இருந்திருந்தால், அவர்களுக்குப் பாவம் இராது. இப்பொழுதோ என்னையும் என் தந்தையையும் கண்டார்கள், கண்டும் வெறுத்தார்கள்.

25 காரணமின்றி என்னை வெறுத்தனர்' என்று அவர்களுது சட்டத்தில் எழுதியுள்ளது இவ்வாறு நிறைவேற வேண்டும்.

26 நான் தந்தையிடமிருந்து உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார்; அவர் தந்தையிடமிருந்து வரும் உண்மையின் ஆவியானவர். அவர் வந்து என்னைப்பற்றிச் சாட்சியம் கூறுவார்.

27 நீங்கள்கூட சாட்சியம் கூறுவீர்கள்; ஏனெனில், தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.

அதிகாரம் 16

1 "நீங்கள் இடறல்படாதவாறு, இவையெல்லாம் நான் உங்களுக்குச் சொன்னேன்.

2 உங்களைச் செபக்கூடத்திற்குப் புறம்பாக்குவார்கள்; இதோ! நேரம் வருகிறது, அப்போது உங்களைக் கொல்லுபவர்கள் கடவுளுக்குப் பலி செலுத்துவதாக எண்ணிக்கொள்வார்கள்.

3 தந்தையையோ என்னையோ அறியாதிருப்பதால்தான், உங்களை இப்படி நடத்துவார்கள்.

4 அந்நேரம் வரும்பொழுது, முன்பே நான் இப்படி உங்களுக்குச் சொன்னதாக நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்; இதற்காகத்தான் இதெல்லாம் உங்களுக்குக் கூறினேன். "தொடக்கத்திலேயே இவற்றை உங்களுக்குச் சொல்லவில்லை; ஏனெனில், உங்களோடு இருந்தேன்;

5 இப்பொழுதோ என்னை அனுப்பியவரிடம் போகிறேன். ஆயினும் ' எங்கே போகிறீர் ? ' என்று உங்களுள் யாரும் என்னைக் கேட்கவில்லை.

6 ஆனால், நான் இதை உங்களுக்குக் கூறியதால், உங்கள் உள்ளத்தில் வருத்தம் நிறைந்துள்ளது.

7 எனினும் நான் உங்களுக்குச் சொல்வது உண்மை: நான் போவதே உங்களுக்கு நல்லது; போகாவிடில், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்; போனால்தான் அவரை உங்களிடம் அனுப்புவேன்.

8 பாவம் யாரைச் சாரும், நியாயம் யார்பக்கம் உள்ளது, இறைவனின் தீர்ப்பு எத்தகையது என்பதை அவர் வந்தபின் எடுத்துக்காட்டி, உலகினர் செய்த தவற்றை மெய்ப்பிப்பார்.

9 பாவம் உலகினரையே சாரும் என்று காட்டுவார்: ஏனெனில், அவர்கள் என்னில் விசுவாசம் கொள்ளவில்லை.

10 நியாயம் என் பக்கம் உள்ளது என்று காட்டுவார்: ஏனெனில், நான் தந்தையிடம் செல்கிறேன்; இனிமேல் நீங்கள் என்னைப் பார்க்கமுடியாது.

11 இறைவனின் தீர்ப்பு எத்தகையது என்று காட்டுவார்: ஏனெனில், இவ்வுலகின் தலைவன் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டான்.

12 நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியவை இன்னும் பல உண்டு; ஆனால் அவற்றை இப்பொழுது உங்களால் தாங்கமுடியாது.

13 உண்மையின் ஆவியானவர் வந்தபின், நிறைஉண்மையை நோக்கி உங்களை வழி நடத்துவார்; அவர் பேசுவதைக் தாமாகப் பேசுவதில்லை; கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.

14 உங்களுக்கு அறிவிப்பதை எனக்குள்ளதிலிருந்தே பெற்றுக்கொள்வதால், அவர் என்னை மகிமைப்படுத்துவார்.

15 தந்தையுடையதெல்லாம் என்னுடையதே; எனவேதான், உங்களுக்கு அறிவிப்பதை எனக்குள்ளதிலிருந்து பெற்றுக்கொள்கிறார் என்றேன்.

16 "இன்னும் சிறிதுகாலத்தில் என்னைக் காணமாட்டீர்கள், பின்னும் சிறிது காலத்தில் மீண்டும் என்னைக் காண்பீர்கள்."

17 இதைக் கேட்டு அவருடைய சீடர், "இன்னும் சிறிது காலத்தில் என்னைக் காணமாட்டீர்கள். பின்னும் சிறிது காலத்தில் மீண்டும் என்னைக் காண்பீர்கள் ' என்றும், ' தந்தையிடம் செல்கிறேன் ' என்றும் இவர் சொல்வதின் பொருள் என்ன?" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர்.

18 "இந்தச் 'சிறிது காலம்' என்பது என்ன ? அவர் சொல்வது நமக்கு விளங்கவில்லையே! " என்றனர்.

19 அவர்கள் தம்மை வினவ விரும்புவதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி, "'இன்னும் சிறிது காலத்தில் என்னை காணமாட்டீர்கள், பின்னும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்று நான் சொன்னதைப்பற்றி உங்களுக்குள் உசாவுகிறீர்கள் அல்லவா ?

20 "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், உலகமோ மகிழும்; நீங்கள் துன்புறுவீர்கள், ஆனால் உங்கள் துன்பம் இன்பமாக மாறும்.

21 குழந்தை பிறக்கும்போது தாயானவள் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் துன்புறுகிறாள்; குழந்தையைப் பெற்றெடுத்த பின்போ, உலகில் மனிதன் ஒருவன் தோன்றினான் என்ற மகிழ்ச்சியால் தன் வேதனையை மறந்துவிடுகிறாள்.

22 அதுபோலவே, இப்பொழுது நீங்களும் துன்புறுகிறீர்கள்; ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்பொழுது உங்கள் உள்ளம் மகிழ்வுறும்; உங்கள் மகிழ்ச்சியை உங்களிடமிருந்து எவனும் பறித்துவிடமாட்டான்.

23 அந்நாளில் என்னிடம் எதுவும் கேட்கமாட்டீர்கள். உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் தந்தையிடம் எதைக் கேட்டாலும், அதை என் பெயரால் உங்களுக்குத் தருவார்.

24 இதுவரையில் என் பெயரால் நீங்கள் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்; அப்போது உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெறும்.

25 இவையெல்லாம் நான் உங்களிடம் உருவகமாய்ப் பேசினேன். இதோ! நேரம் வருகிறது; அப்போது உருவகமாய் உங்களிடம் பேசேன்; என் தந்தையைப்பற்றித் தெளிவாய் எடுத்துச்சொல்வேன்.

26 அந்நாளில் என் பெயரால் நீங்கள் வேண்டுவீர்கள்; ஆயினும், உங்களுக்காகத் தந்தையிடம் மன்றாடுவேன் என்று நான் சொல்லவில்லை.

27 தந்தையே உங்களை நேசிக்கிறார்; ஏனெனில், நீங்கள் என்னை நேசித்து நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று விசுவசித்தீர்கள்.

28 தந்தையிடமிருந்து புறப்பட்டு உலகிற்கு வந்தேன். இப்பொழுது உலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்கின்றேன்" என்றார்.

29 அப்பொழுது அவருடைய சீடர்கள், "இப்பொழுதுதான் தெளிவாகப் பேசுகிறீர்; உருவகம் ஒன்றும் இல்லை! 30 உமக்கு எல்லாம் தெரியும், யாரும் உம்மைக் கேள்விகேட்கத் தேவையில்லை என்று இப்பொழுது தெரிகிறது. கடவுளிடமிருந்து நீர் வந்தீர் என்று இதனால் விசுவசிக்கிறோம்" என்றார்கள்.

31 அதற்கு இயேசு "இப்பொழுது நீங்கள் விசுவசிக்கிறீர்களா ?

32 இதோ! நேரம் வருகிறது, வந்தேவிட்டது; அப்பொழுது நீங்கள் சிதறுண்டு, ஒவ்வொருவரும் தத்தம் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியாய் விட்டுவிடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை; தந்தை என்னோடு இருக்கிறார்.

33 என்னில் நீங்கள் சமாதானத்தைக் கண்டடையும்படி இதையெல்லாம் நான் உங்களுக்குச் சொன்னேன். உலகில் உங்களுக்கு வேதனை உண்டு; ஆயினும் தைரியமாயிருங்கள்: நான் உலகை வென்றுவிட்டேன்" என்றார்.

அதிகாரம் 17

1 இப்படிப் பேசியபின், இயேசு வானத்தை அண்ணாந்துபார்த்து மன்றாடியதாவது: "தந்தாய், நேரம் வந்துவிட்டது: உம் மகன் உம்மை மகிமைப்படுத்துமாறு நீர் உம் மகனை மகிமைப்படுத்தும்.

2 ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் எல்லாருக்கும் அவர் முடிவில்லா வாழ்வைக் கொடுக்கும்பொருட்டு, மனுமக்கள் அனைவர்மீதும் நீர் அவருக்கு அதிகாரம் அளித்திருக்கிறீர்.

3 முடிவில்லா வாழ்வு என்பது: உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே.

4 நீர் எனக்குச் செய்யக் கொடுத்த பணியைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மகிமைப்படுத்தினேன்.

5 தந்தாய், உலகம் உண்டாகுமுன்பு, உம்மிடம் எனக்கிருந்த அதே மகிமையை அளித்து, இப்பொழுது என்னை உம்முன் மகிமைப்படுத்தும்.

6 உலகிலிருந்து பிரித்து நீர் எனக்கு அளித்த மக்களுக்கு உமது பெயரை வெளிப்படுத்தினேன். அவர்கள் உமக்கு உரியவர்களாயிருந்தார்கள்; அவர்களை என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உமது வார்த்தையைக் கேட்டார்கள்.

7 நீர் எனக்குத் தந்ததெல்லாம் உம்மிடமிருந்தே வந்ததென்பது இப்பொழுது அவர்களுக்குத் தெரியும்.

8 ஏனெனில், நீர் எனக்கு அறிவித்ததையே நான் அவர்களுக்கு எடுத்துச்சொன்னேன்; அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையாகவே அறிந்துகொண்டார்கள்; நீர் என்னை அனுப்பினீர் என்பதையும் விசுவசித்தார்கள்.

9 அவர்களுக்காக நான் உம்மை மன்றாடுகிறேன்; நான் மன்றாடுவது உலகிற்காக அன்று, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே. ஏனெனில், அவர்கள் உமக்குரியவர்கள்.

10 என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்களால் நான் மகிமை பெற்றிருக்கிறேன்.

11 இனி, நான் உலகில் இரேன்; அவர்களோ உலகில் இருக்கின்றார்கள்; நான் உம்மிடம் வருகிறேன். பரிசுத்த தந்தாய், நாம் ஒன்றாய் இருப்பதுபோல, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் ஒன்றாயிருக்கும்படி உமது பெயரால் அவர்களைக் காத்தருளும்.

12 நான் அவர்களோடு இருந்தபொழுது, அவர்களை உமது பெயரால் காத்து வந்தேன். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களைக் காப்பாற்றினேன். அவர்களுள் ஒருவனும் அழிவுறவில்லை. மறைநூல் நிறைவேறும்படி, அழிவுக்குரியவன்மட்டுமே அழிவுற்றான்.

13 இப்பொழுது உம்மிடம் வருகிறேன்; என் மகிழ்ச்சி அவர்கள் உள்ளத்தில் நிறைவேறும்படி, உலகிலிருக்கும்பொழுதே நான் இதைச் சொல்லுகிறேன்.

14 உமது வார்த்தையை அவர்களுக்கு அளித்தேன், உலகமோ அவர்களை வெறுத்தது; ஏனெனில், நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்.

15 உலகிலிருந்து அவர்களை எடுத்துவிடும்படி நான் மன்றாடவில்லை, தீயவனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே உம்மை மன்றாடுகிறேன்.

16 நான் உலகைச் சார்ந்தவனாயிராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்.

17 உண்மையினால் அவர்களை அர்ச்சித்தருளும்; உமது வார்த்தையே உண்மை.

18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல நானும் அவர்களை உலகிற்கு அனுப்பினேன்.

19 அவர்கள் உண்மையினாலேயே அர்ச்சிக்கப்பெறும்படி அவர்களுக்காக என்னையே அர்ச்சனையாக்குகிறேன்.

20 இவர்களுக்காகமட்டும் நான் மன்றாடவில்லை; இவர்களுடைய வார்த்தையின்வழியாக என்னில் விசுவாசம் கொள்பவர்க்காகவும் மன்றாடுகிறேன்.

21 எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக. தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்; நீர் என்னை அனுப்பினீர் என்று இதனால் உலகம் விசுவசிக்கும்.

22 நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்கு அளித்த மகிமையை நான் அவர்களுக்கு அளித்தேன்.

23 இவ்வாறு நான் அவர்களுள்ளும், நீர் என்னுள்ளும் இருப்பதால், அவர்களும் ஒருமைப்பாட்டின் நிறைவை எய்துவார்களாக; இங்ஙனம், நீர் என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல் அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்.

24 தந்தாய், நானிருக்கும் இடத்திலே நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் என்னோடிருக்கும்படி விரும்புகிறேன். இதனால், உலகம் உண்டாகுமுன்பு நீர் என்மேல் அன்பு வைத்து எனக்களித்த மகிமையை அவர்கள் காண்பார்கள்.

25 நீதியுள்ள தந்தாய், உலகம் உம்மை அறியவில்லை, நானோ உம்மை அறிவேன். நீர் என்னை அனுப்பினீர் என்று இவர்களும் அறிந்துகொண்டார்கள்.

26 நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்களுள் இருக்கவும், நானும் அவர்களுள் இருக்கவும் உமது பெயரை அவர்களுக்கு அறிவித்தேன், இன்னும் அறிவிப்பேன்."

அதிகாரம் 18

1 இயேசு இவற்றைக் கூறியபின், தம் சீடரோடு கெதரோன் அருவியைக் கடந்துபோனார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடரோடு அதில் நுழைந்தார்.

2 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசுக்கும் அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடரும் அடிக்கடி அங்குக் கூடுவதுண்டு.

3 யூதாஸ் படைவீரர்களையும், தலைமைக்குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் அழைத்துக்கொண்டு, விளக்குகளோடும், பந்தங்களோடும் படைக்கருவிகளோடும் அங்கே வந்தான்.

4 தமக்கு நிகழப்போவதையெல்லாம் அறிந்த இயேசு முன்சென்று, "யாரைத் தேடிவந்தீர்கள் ?" என்று அவர்களைக் கேட்டார்.

5 அவர்களோ, "நாசரேத்தூர் இயேசுவை" என்று சொல்ல, இயேசு "நான்தான்" என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு இருந்தான்.

6 "நான்தான்" என்று அவர் சொன்னதும், அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.

7 "யாரைத் தேடிவந்தீர்கள் ?" என்று மீண்டும் அவர்களைக் கேட்டார். அவர்கள், "நாசரேத்தூர் இயேசுவை" என்று சொல்ல,

8 இயேசு, "நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே; என்னை நீங்கள் தேடிவந்திருந்தால் இவர்களைப் போகவிடுங்கள்" என்றார்.

9 "நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் ஒருவனையும் நான் அழிவுறவிடவில்லை" என்று அவர் கூறியிருந்தது இவ்வாறு நிறைவேற வேண்டியிருந்தது.

10 சீமோன் இராயப்பரிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி, அவனது வலக்காதை வெட்டினார். அவ்வூழியனின் பெயர் மால்குஸ்.

11 இயேசு இராயப்பரை நோக்கி, "உன் வாளை உறையில் போடு. தந்தை எனக்குக் கொடுத்த துன்பகலத்தில் நான் குடிக்காதிருப்பேனோ ?" என்றார்.

12 படைவீரரும் படைத்தலைவனும் யூத காவலரும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,

13 முதலில் அன்னாசிடம் கொண்டுபோயினர். ஏனெனில், அவர் அவ்வாண்டில் தலைமைக்குருவாயிருந்த கைப்பாசுக்கு மாமனார்.

14 இந்தக் கைப்பாசுதான் "மக்களுக்காக ஒருவன்மட்டும் இறப்பது நலம்" என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்.

15 சீமோன் இராயப்பரும் வேறொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். இந்தச் சீடர் தலைமைக்குருவுக்கு அறிமுகமானவராயிருந்ததால், இயேசுவோடு அப்பெரியகுருவின் வீட்டுமுற்றத்தில் நுழைந்தார்.

16 இராயப்பரோ வெளியில் வாயிலருகே நின்றுகொண்டிருந்தார். தலைமைக்குருவுக்கு அறிமுகமாயிருந்த சீடர் வெளியே சென்று வாயில்காப்பவளிடம் சொல்லி, இராயப்பரை உள்ளே அழைத்துவந்தார்.

17 வாயில்காக்கும் ஊழியக்காரி இராயப்பரை நோக்கி, "நீயும் அம்மனிதனின் சீடர்களுள் ஒருவன் அன்றோ ?" என, அவர், "நான் அல்லேன்" என்றார்.

18 அப்போது குளிராயிருந்ததால், ஊழியரும் காவலரும் கரிநெருப்பு மூட்டிச் சுற்றிநின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தனர். இராயப்பரும் அவர்களோடு நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.

19 தலைமைக்குரு இயேசுவின் சீடர்களைப்பற்றியும் அவருடைய போதனையைப்பற்றியும் அவரை வினவினார்.

20 இயேசு மறுமொழியாக, "நான் உலகிற்கு வெளிப்படையாகப் பேசினேன்; செபக்கூடங்களிலும், யூதர் அனைவரும் கூடிவருகிற கோயிலிலும் எப்பொழுதும் போதித்தேன்: மறைவாகப் பேசியது ஒன்றுமில்லை.

21 என்னை ஏன் வினவுகிறீர் ? அவர்களுக்கு என்ன சொன்னேன் என்று நான் சொன்னதைக் கேட்டவர்களிடம் விசாரித்துப்பாரும்; நான் கூறியது அவர்களுக்குத் தெரியுமே" என்றார்.

22 என்றதும், அங்கு நின்றுகொண்டிருந்த காவலன் ஒருவன், "தலைமைக்குருவுக்கு இப்படியா மறுமொழி கூறுவது ?" என்று சொல்லி, இயேசுவைக் கன்னத்தில் அறைந்தான்.

23 அதற்கு இயேசு, "நான் பேசியது தவறாயிருந்தால், எது தவறு என்று காட்டு; பேசியது சரியானால் ஏன் என்னை அடிக்கிறாய் ?" என்றார்.

24 பின்பு, அன்னாஸ் அவரைக் கட்டுண்டிருந்தவாறே தலைமைக்குருவாகிய கைப்பாசிடம் அனுப்பினார்.

25 சீமோன் இராயப்பர் அங்கு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரைப் பார்த்து, "நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவனன்றோ ?" என்று கேட்டார்கள். அவர், "நான் அல்லேன்" என்று மறுத்தார்.

26 தலைமைக் குருக்களின் ஊழியருள் ஒருவன் இராயப்பரால் காது அறுபட்டவனுக்கு உறவினன்; அவன் இராயப்பரிடம், "தோட்டத்தில் நான் உன்னை அந்த ஆளோடு காணவில்லையா ?" என்று கேட்டான்.

27 இராயப்பர் மீண்டும் மறுத்தார்; உடனே கோழி கூவிற்று.

28 அதன்பின் இயேசுவைக் கைப்பாசிடமிருந்து பிலாத்துவின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்பதற்குத் தீட்டுப்படாமலிருக்க அரண்மனைக்குள் அவர்கள் நுழையவில்லை.

29 எனவே பிலாத்து அவர்களைக் காண வெளியே வந்து, "இவன்மேல் நீங்கள் சாட்டும் குற்றம் என்ன ?" என்று கேட்டார்.

30 அதற்கு அவர்கள், "இவன் குற்றவாளியாய் இராதிருந்தால் நாங்கள் இவனை உமக்குக் கையளித்திருக்கமாட்டோம்" என்றார்கள்.

31 அப்போது பிலாத்து, "இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி நீங்களே தீர்ப்பிடுங்கள்" என, யூதர்கள், "எவனையும் கொல்ல எங்களுக்கு உரிமையில்லை" என்றார்கள்.

32 தமக்கு எத்தகைய சாவு நேரிடும் என்பதைக் குறிப்பிட்டு இயேசு கூறியது இப்படி நிறைவேற வேண்டியிருந்தது.

33 பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போய் இயேசுவை வரச்சொல்லி, "நீ யூதர்களின் அரசனோ ?" என்று கேட்டார்.

34 இயேசு மறுமொழியாக, "நீராகவே இதைக் கேட்கின்றீரா, மற்றவர் என்னைப்பற்றி உம்மிடம் கூறினரா ?" என்றார்.

35 அதற்குப் பிலாத்து, "நான் யூதனா ? உன் இனத்தாரும் தலைமைக்குருக்களும் உன்னை என்னிடம் கையளித்தார்களே, என்ன செய்தாய் ?" என்றார்.

36 இயேசுவோ, "என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று; என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததாயிருந்தால், நான் யூதரிடம் கையளிக்கப்படாதபடி என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால், என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று" என்றார்.

37 எனவே, பிலாத்து அவரை நோக்கி, "அப்படியானால் நீ அரசன்தானா ?" என்று கேட்க, இயேசு, " ' அரசன் ' என்பது நீர் சொல்லும் வார்த்தை. உண்மைக்குச் சாட்சியம் கூறுவதே எனது பணி; இதற்காகவே பிறந்தேன், இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவன் எவனும் எனது குரலுக்குச் செவிமடுக்கிறான்" என்றார்.

38 அதற்குப் பிலாத்து, "உண்மையா! அது என்ன ?" என்று சொல்லிவிட்டு, மீண்டும் வெளியே சென்று யூதரை நோக்கி, "இவனிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை.

39 பாஸ்காத் திருவிழாவின்போது உங்களைப் பிரியப்படுத்த ஒருவனை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே. அதன்படி யூதரின் அரசனை நான் விடுதலைசெய்வது உங்களுக்கு விருப்பமா ?" என்று வினவினார்.

40 அதற்கு எல்லாரும், "இவன் வேண்டாம், பரபாசே வேண்டும்! " என்று மீண்டும் உரக்கக் கூவினர். அந்தப் பரபாசோ ஒரு கள்வன்.

அதிகாரம் 19

1 பின்பு பிலாத்து இயேசுவைக் கொண்டுபோய், சாட்டையால் அவரை அடிக்கச்செய்தான்.

2 மேலும் படைவீரர் முள்ளால் ஒரு முடியைப் பின்னி, அவருடைய தலையில் வைத்து, அவருக்குச் சிவப்புப்போர்வை உடுத்தினர்.

3 அருகில் வந்து, "யூதரின் அரசே, வாழி!" என்று சொல்லிக்கொண்டு, அவருடைய கன்னத்தில் அறைமேல் அறை அறைந்தனர்.

4 பிலாத்து மீண்டும் வெளியே வந்து, மக்களைப் பார்த்து, "இதோ! நான் அவனை உங்கள்முன் வெளியே கொண்டுவருகிறேன். அவனிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லையென அறிந்துகொள்ளுங்கள்! " என்றார்.

5 ஆகவே, இயேசு முண்முடி தாங்கி, சிவப்புப் போர்வை அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களை நோக்கி, "பாருங்கள், இதோ! மனிதன்" என்றார்.

6 அவரைக் கண்டதும் தலைமைக்குருக்களும் காவலர்களும், "சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்! " என்று கத்தினர். அப்போது பிலாத்து, "நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறைந்துகொள்ளுங்கள்: நானோ இவனிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை" என்றார்.

7 அதற்கு யூதர், "எங்களுக்குச் சட்டம் ஒன்று உண்டு; அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில், தன்னைக் கடவுளின் மகன் ஆக்கிக்கொண்டான்" என்றனர்.

8 இவ்வார்த்தையைக் கேட்டுப் பிலாத்து இன்னும் அதிகமாக அஞ்சினார்.

9 மீண்டும் அரண்மனைக்குள் சென்று இயேசுவை நோக்கி, "நீ எங்கிருந்து வந்தவன் ?" என்று கேட்க, இயேசு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.

10 அப்போது பிலாத்து, "என்னிடம் ஒன்றும் சொல்லமாட்டாயா ? உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரமுண்டு, விடுவிக்கவும் அதிகாரம் உண்டு, தெரியாதா ?" என்றார்.

11 இயேசுவோ, "மேலிருந்து உமக்கு அருளப்படாதிருந்தால், என்மேல் உமக்கு எவ்வதிகாரமும் இராது. ஆதலால் என்னை உம்மிடம் கையளித்தவன்தான் பெரிய பாவத்துக்குள்ளானான்" என்றார்.

12 அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடினார். யூதர்களோ, "இவனை விடுவித்தால், நீர் செசாருடைய நண்பர் அல்ல. தன்னை அரசனாக்கிக்கொள்ளும் எவனும் செசாரை எதிர்க்கிறான்" என்று கூவினார்கள்.

13 பிலாத்து இவ்வார்த்தைகளைக் கேட்டு, இயேசுவை வெளியே அழைத்துவந்து நீதியிருக்கைமீது அமர்ந்தார். அது ' கல்தளம் ' என்ற இடத்தில் இருந்தது. அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் கபத்தா என்பது பெயர்.

14 அன்று பாஸ்காவுக்கு ஆயத்தநாள்; ஏறக்குறைய நண்பகல். அப்போது பிலாத்து யூதர்களை நோக்கி, "இதோ! உங்கள் அரசன்! " என்றார்.

15 அவர்களோ, "ஒழிக, ஒழிக! இவனைச் சிலுவையில் அறையும்! " என்று கத்தினார்கள். அதற்குப் பிலாத்து, "உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைவதா?" என்று கேட்க, தலைமைக்குருக்கள், "செசாரைத் தவிர வேறு அரசர் எங்களுக்கில்லை" என்று சொன்னார்கள்.

16 அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையும்படி அவர்களிடம் கையளித்தார். ஆகவே, அவர்கள் அவரைக் கூட்டிக்கொண்டு போனார்கள்.

17 இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு - எபிரேய மொழியிலே கொல்கொத்தா - எனப்படும் இடத்திற்குச் சென்றார்.

18 அதற்கு ' மண்டை ஓடு ' என்பதுபொருள். அங்கு இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவரோடு வேறு இருவரை இரு பக்கங்களிலும், இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.

19 பிலாத்து அறிக்கை ஒன்று எழுதிச் சிலுவையில் பொருத்தச்செய்தார்; "நாசரேத்தூர் இயேசு யூதரின் அரசன்" என்று அதில் எழுதியிருந்தது.

20 இயேசுவைச் சிலுவையில் அறைந்த இடம் நகருக்கு அருகில் இருந்ததால், யூதர் பலர் அவ்வறிக்கையைப் படித்தனர். அது எபிரேயம், இலத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதியிருந்தது.

21 யூதரின் தலைமைக்குருக்கள் பிலாத்துவிடம் சென்று, " ' யூதரின் அரசன் ' என்று எழுதவேண்டாம்; ' யூதரின் அரசன் நான் ' என்று அவன் கூறியதாக எழுதும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.

22 ஆனால் பிலாத்து, "நான் எழுதியது எழுதியதுதான்" என்றார்.

23 அவரைச் சிலுவையில் அறைந்தபின், படைவீரர் அவருடைய உடைகளை நான்கு பாகமாகப் பிரித்து, ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டனர். அங்கியையும் எடுத்துக்கொண்டனர்; அந்த அங்கி மேலிருந்து அடிவரை தையலில்லாமல் நெய்யப்பட்டிருந்தது.

24 அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, "இதைக் கிழிக்கவேண்டாம்; இது யாருக்கு வரும் என்று பார்க்கச் சீட்டுப்போடுவோம்" என்றார்கள்."என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள், என் உடைமீது சீட்டுப்போட்டார்கள்" என்று எழுதியுள்ள மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேற வேண்டியிருந்தது. படைவீரர் இப்படிச் செய்துகொண்டிருந்தபோது,

25 இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும், மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.

26 இயேசு தம் தாயையும் அருகில் நின்றதம் அன்புச் சீடரையும் கண்டு, தம் தாயை நோக்கி, "அம்மா, இதோ! உம் மகன்" என்றார்.

27 பின்பு சீடரை நோக்கி, "இதோ! உன் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவளைத் தம் வீட்டில் ஏற்றுக்கொண்டார்.

28 பின்பு, எல்லாம் நிறைவேறியது என்று அறிந்த இயேசு, "தாகமாயிருக்கிறது" என்றார்; மறைநூல் நிறைவேறவே இப்படிச் சொன்னார்.

29 அங்கே ஒரு பாத்திரம் நிறையக் காடி இருந்தது. அதில் கடற்காளானைத் தோய்த்து, ஈசோப்பில் பொருத்தி, அதை உயர்த்தி அவரது வாயில் வைத்தார்கள்.

30 காடியைச் சுவைத்தபின் இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" என்றார். பின்பு தலைசாய்த்து ஆவியைக் கையளித்தார்.

31 அன்று பாஸ்காவுக்கு ஆயத்த நாள். - அடுத்த நாள் ஓய்வுநாளாகவும் பெருவிழாவாகவும் இருந்தது. - அந்த விழாவின்போது சிலுவையில் சவங்கள் இருத்தலாகாதென்று, கால்களை முறித்துப் பிணங்களை எடுத்துவிடப் பிலாத்துவினிடம் யூதர் விடைகேட்டனர்.

32 ஆகவே, படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையுண்டிருந்த இருவரின் கால்களையும் முறித்தனர்.

33 பின்பு இயேசுவிடம் வந்தனர்; அவர் ஏற்கெனவே இறந்திருப்பதைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.

34 ஆனால், படைவீரன் ஒருவன் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினான்; உடனே இரத்தமும் நீரும் வெளிவந்தன.

35 இதைப் பார்த்தவனே இதற்குச் சாட்சியம் கூறியுள்ளான். - அவனுடைய சாட்சியம் உண்மையானதே; தான் கூறுவது உண்மை என்பது அவனுக்குத் தெரியும். - எனவே, நீங்களும் விசுவாசம் கொள்வீர்களாக.

36 "அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிபடாது" என்று எழுதியுள்ள மறைநூல் வாக்கு நிறைவேறுவதற்கே இவ்வாறு நிகழ்ந்தது.

37 மீண்டும், "தாங்கள் ஊடுருவக்குத்தியவரை நோக்குவார்கள்" என்பது மறைநூலின் வேறொரு வாக்கு.

38 அரிமத்தியாவூர் சூசை என்று ஒருவர் இருந்தார். அவரும் இயேசுவின் சீடர். - ஆனால் யூதர்களுக்கு அஞ்சி அதைக் காட்டிக்கொள்ளவில்லை. - மேற்சொன்ன நிகழ்ச்சிகளுக்குப்பின், அவர் இயேசுவின் சடலத்தை எடுத்துவிடப் பிலாத்திடம் விடைகேட்டார். பிலாத்து விடையளித்தார். அவர் வந்து இயேசுவின் சடலத்தை எடுத்தார். -

39 முன்னொருநாள் இரவில் இயேசுவைப் பார்க்கப்போன - நிக்கொதேமுகூட அங்கு வந்தார். அவர் வெள்ளைப் போளமும் அகில்தூளும் கலந்து நூறு இராத்தல் கொண்டுவந்தார்.

40 இயேசுவின் சடலத்தை எடுத்து, யூதரின் அடக்க முறைப்படி பரிமளப்பொருட்களுடன் துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.

41 அவர் சிலுவையில் அறையுண்ட இடத்தில் தோட்டம் ஒன்று இருந்தது. அத்தோட்டத்தில், புதுக் கல்லறை ஒன்று இருந்தது. அதில் யாரையும் அதுவரை வைத்ததில்லை.

42 அருகிலேயே அந்தக் கல்லறை இருந்ததாலும், அன்று யூதரின் பாஸ்காவுக்கு ஆயத்த நாளானதாலும் இயேசுவை அதில் வைத்தனர்.

அதிகாரம் 20

1 வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் இருட்டாயிருக்கும்பொழுதே, மதலேன் மரியாள் கல்லறைக்கு வந்தாள். கல்லறைவாயிலில் இருந்த கல் எடுபட்டிருப்பதைக் கண்டாள்.

2 கண்டதும், சீமோன் இராயப்பரிடமும், இயேசுவினால் நேசிக்கப்பட்டவராகிய மற்றச் சீடரிடமும் ஓடிவந்து, அவர்களைப் பார்த்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து எடுத்துவிட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, அறியோம்" என்றாள்.

3 இராயப்பரும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.

4 இருவரும் ஒருமிக்க ஓடினார்கள்; மற்றச் சீடரோ இராயப்பரைவிட விரைவாக ஓடி அவருக்குமுன் கல்லறையை அடைந்தார்.

5 குனிந்து உள்ளே பார்த்தபோது, தரையில் துணிகள் கிடக்கக் கண்டார். ஆனால் உள்ளே நுழையவில்லை.

6 அவர் பின்னாலேயே சீமோன் இராயப்பரும் வந்தார். கல்லறைக்குள் நுழைந்து தரையில் கிடந்த துணிகளையும்,

7 இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் தனியாகச் சுருட்டி ஒரு பக்கமாக வைக்கப்பட்டிருந்தது.

8 கல்லறைக்கு முதலில் வந்த மற்றச் சீடரும் உள்ளே நுழைந்து பார்த்தார்; பார்த்து விசுவசித்தார்.

9 இயேசு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழவேண்டும் என்னும் மறைநூல் வாக்கை இதுவரை அவர்கள் உணரவில்லை.

10 பின்பு சீடர்கள் வீடுதிரும்பினார்கள்.

11 மரியாள் கல்லறைக்கருகில் வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்துபார்த்தாள்.

12 வெண்ணாடை அணிந்த வானதூதர் இருவரை அங்கே கண்டாள். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும், மற்றவர் கால்மாட்டிலுமாக அமர்ந்திருந்தனர்.

13 அவர்கள் அவளை நோக்கி, "அம்மா, ஏன் அழுகிறாய் ?" என, அவள், "என் "ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர். எங்கே வைத்தனரோ, தெரியவில்லை" என்றாள்.

14 இப்படிச் சொன்னபின், திரும்பிப் பார்த்தபொழுது இயேசு நிற்பதைக் கண்டாள். ஆனால், அவர் இயேசு என்று அவள் அறிந்துகொள்ளவில்லை.

15 இயேசு அவளை நோக்கி, "அம்மா, ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் ?" என்று கேட்டார். அவளோ அவரைத் தோட்டக்காரன் என்றெண்ணி அவரிடம், "ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கு வைத்தீர் ? சொல்லும். நான் அவரை எடுத்துச்செல்வேன்" என்றாள்.

16 இயேசு அவளை நோக்கி, "மரியே! " என்றார். அவர் திரும்பிப்பார்த்து, "ராபூனி!" என்றாள். இந்த எபிரேயச் சொல்லுக்குப் போதகரே என்பது பொருள்.

17 இயேசு அவளை நோக்கிக் கூறியதாவது: "என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில், நான் மேலெழும்பி என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. என் சகோதரர்களிடம்போய், ' என் தந்தையும் உங்கள் தந்தையும், என் கடவுளும் உங்கள் கடவுளுமாகியவரிடம் நான் மேலே எழும்பிச் செல்கிறேன் ' என்று அவர்களுக்குச் சொல்."

18 மதலேன் மரியாள் சீடரிடம் வந்து, "ஆண்டவரைக் கண்டேன், அவர் எனக்கு இப்படிச் சொன்னார்" என்று அறிவித்தாள்.

19 வாரத்தின் முதல் நாளாகிய அன்று மாலை, சீடர்கள் தாங்கள் கூடியிருந்த இடத்திலே யூதருக்கு அஞ்சிக் கதவுகளை மூடிவைத்திருக்கையில், இயேசு வந்து அவர்களிடையே நின்று, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்.

20 இவ்வாறு சொல்லி, அவர்களுக்குத் தம் கைகளையும் விலாவையும் காண்பித்தார். ஆண்டவரைக் கண்டு சீடர்கள் மகிழ்வுற்றார்கள்.

21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்குச் சமாதானம். "என் தந்தை என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார்.

22 பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

23 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார்.

24 பன்னிருவருள் ஒருவரான திதிமு என்ற தோமையார் இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.

25 மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றதற்கு அவர், "அவருடைய கைகளில் ஆணியால் உண்டான தழும்பைப் பார்த்து, ஆணிகள் இருந்த இடத்தில் என் விரலையிட்டு, அவர் விலாவில் என் கையையிட்டாலொழிய விசுவசிக்கமாட்டேன்" என்றார்.

26 எட்டு நாளுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் வீட்டில் இருந்தார்கள். தோமையாரும் அவர்களோடிருந்தார். கதவுகள் மூடியிருக்க, இயேசு வந்து அவர்களிடைய நின்று, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்.

27 பின்பு தோமையாரை நோக்கி, "இங்கே உன் விரலையிடு; இதோ! என் கைகள். உன் கையை நீட்டி என் விலாவில் இடு; விசுவாசம் அற்றவனாயிராதே, விசுவாசங்கொள்" என்றார்.

28 அப்போது தோமையார் அவரை நோக்கி, "என் ஆண்டவரே, என் கடவுளே! " என்றார்.

29 இயேசுவோ, "என்னைக் கண்டதால் நீ விசுவாசங்கொண்டாய்! காணாமலே விசுவசிப்பவர்கள் பேறுபெற்றோர்" என்றார்.

30 இந்நூலில் எழுதப்பெறாத வேறு பல அருங்குறிகளையும் இயேசு தம் சீடர்கள் கண்முன் செய்தார்.

31 இயேசு கடவுளின் மகனாகிய மெசியா என்று நீங்கள் விசுவசிக்கும்படியும், விசுவசித்து அவர் பெயரால் வாழ்வு பெறும்படியும் இந்நூலிலுள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

அதிகாரம் 21

1 பின்னர், இயேசு சீடருக்குத் திபேரியாக் கடலருகே மீண்டும் தோன்றினார்; தோன்றியது இவ்வாறு:

2 சீமோன் இராயப்பர், திதிமு என்ற தோமையார், கலிலேயா நாட்டுக் கானாவூர் நத்தனயேல், செபெதேயுவின் மக்கள், இயேசுவின் சீடர்களுள் வேறு இருவர் ஆகிய இவர்கள் கூடியிருந்தார்கள்.

3 அப்போது சீமோன் இராயப்பர் அவர்களை நோக்கி, "மீன் பிடிக்கப் போகிறேன்" என்றார். மற்றவர்களும், "உன்னோடு நாங்களும் வருகின்றோம்" என்றார்கள். போய்ப் படகிலேறினார்கள். அன்று இரவு அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.

4 விடியற்காலையில் இயேசு கரையில் நின்றார். ஆனால் அவரை இயேசு என்று சீடர் அறிந்துகொள்ளவில்லை.

5 இயேசு அவர்களை நோக்கி, "பிள்ளைகளே, மீன் ஒன்றும் படவில்லையா ?" என்று கேட்டார். அவர்கள், "ஒன்றுமில்லை" என்றனர்.

6 அப்போது அவர், "படகின் வலப்பக்கமாய் வலை வீசுங்கள்; மீன்படும்" என்றார். அப்படியே வலை வீசினார்கள்; மீன்கள் ஏராளமாய் விழுந்ததால் அவர்கள் வலையை இழுக்க முடியவில்லை.

7 இயேசு அன்புசெய்த சீடர், "அவர் ஆண்டவர்தாம்! " என இராயப்பருக்குச் சொன்னார். "அவர் ஆண்டவர்தாம்" என்று சீமோன் இராயப்பர் கேட்டவுடன், தம் ஆடையைக் களைந்துவிட்டிருந்ததால் மேலாடையைக் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.

8 மற்றச் சீடர்களோ வலையை மீன்களுடன் இழுத்துக்கொண்டு படகிலே வந்தார்கள். ஏனெனில், அவர்கள் கரையிலிருந்து வெகு தொலைவில் இல்லை. ஏறக்குறைய இருநூறுமுழம் தொலைவில் தான் இருந்தார்கள்.

9 கரையில் இறங்கியவுடன் கரிநெருப்பு மூட்டியிருப்பதையும், அதன்மேல் மீன் வைத்திருப்பதையுங் கண்டார்கள்; அப்பமும் இருந்தது.

10 இயேசு அவர்களை நோக்கி, "நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்கள் சில கொண்டுவாருங்கள்" என்றார்.

11 சீமோன் இராயப்பர் படகேறி வலையைக் கரைக்கு இழுத்துவந்தார். அதில் பெரிய மீன்கள் நிறைந்திருந்தன. அவை நூற்றைம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலைகிழியவில்லை.

12 இயேசு அவர்களைப் பார்த்து, "சாப்பிட வாருங்கள்" என்றார். அவர் ஆண்டவர் என்றறிந்து சீடருள் எவரும், "நீர் யார் ?" என்று அவரைக் கேட்கத் துணியவில்லை.

13 இயேசு அருகில் வந்து அப்பத்தை எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

14 இயேசு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தபின், தம் சீடர்க்கு இப்பொழுது தோன்றியது மூன்றாம்முறை.

15 அவர்கள் சாப்பிட்டு முடிந்தபின், இயேசு சீமோன் இராயப்பரை நோக்கி, "அருளப்பனின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாய் எனக்கு அன்புசெய்கிறாயா ?" என்று கேட்டார். அவர் அதற்கு, "ஆம், ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றார். இயேசுவோ அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளை மேய்" என்றார்.

16 இரண்டாம் முறையாக இயேசு அவரை நோக்கி, "அருளப்பனின் மகனான சீமோனே, நீ எனக்கு அன்புசெய்கிறாயா ?" என, அவர் அவரை நோக்கி, "ஆம், ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றார். இயேசுவோ அவரிடம், "என் ஆடுகளைக் கண்காணி" என்றார்.

17 மூன்றாம் முறையாக அவரை நோக்கி, "அருளப்பனின் மகனான சீமோனே, என்னை நீ நேசிக்கிறாயா ?" என்று கேட்டார். "என்னை நேசிக்கிறாயா ?" என்று அவர் மூன்றாம் முறையாகக் கேட்டதால், இராயப்பர் மனம்வருந்தி இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே; நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும்" என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்.

18 "உண்மையிலும் உண்மையாக உனக்குச் சொல்லுகிறேன்: நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு, உனக்கு விருப்பமான இடத்திற்குச் சென்றாய்; வயது முதிர்ந்தபொழுதோ நீ கைகளை விரித்துக்கொடுப்பாய், வேறொருவன் உன்னைக் கட்டி உனக்கு விருப்பமில்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வான்" என்றார்.

19 இராயப்பர் எத்தகைய மரணத்தால் கடவுளை மகிமைப்படுத்துவார் என்பதைக் குறிப்பிட்டு இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின், "என்னைப் பின்செல்" என்றார்.

20 இராயப்பர் திரும்பிப்பார்த்து, இயேசு அன்புசெய்த சீடர் பின்னால் வருவதைக் கண்டார். - இராவுணவின்போது அவர்மார்பிலே சாய்ந்து, "ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுப்பவன் யார் ?" என்று கேட்டவர் அவரே.

21 அவரைக் கண்டு இராயப்பர் இயேசுவிடம், "ஆண்டவரே, இவனுக்கு என்ன ஆகும் ?" என்று கேட்டார்.

22 அதற்கு இயேசு, "நான் வருமளவும் இவன் இப்படியே இருக்கவேண்டும் என்பது எனக்கு விருப்பமாயிருந்தால் உனக்கென்ன ? நீயோ என்னைப் பின்செல்" என்றார்.

23 இதிலிருந்து அந்தச் சீடர் இறக்கமாட்டார் என்ற பேச்சு சகோதரர்களிடையே பரவியது. ஆனால் இயேசு, "நான் வருமளவும் இவன் இப்படியே இருக்கவேண்டும் என்பது எனக்கு விருப்பமாயிருந்தால் உனக்கென்ன ?" என்று கூறினாரேயன்றி, இறக்கமாட்டான் என்று கூறவில்லை.

24 இச்சீடரே இவற்றுக்குச் சாட்சி. இவரே இவைகளையெல்லாம் எழுதிவைத்தவர். இவருடைய சாட்சியம் உண்மை என்று அறிவோம்.

25 இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்.