லூக்காஸ்

அதிகாரம் 01

1 மாண்புமிக்க தெயோப்பிலுவே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளைத் தொடக்கமுதல் கண்கூடாய்க் கண்டவர்கள் தேவவார்த்தையின் பணியாளராகி நம்மிடம் ஒப்படைத்துள்ளனர்.

2 ஒப்படைத்தவாறே அவற்றைப் பலர் நிரல்பட எழுத முயன்றுள்ளனர்.

3 அப்படியே நானும் யாவற்றையும் நுணுகி ஆய்ந்தறிந்து,

4 நீர் கேட்டு அறிந்தது உறுதி எனத் தெளியும்பொருட்டு முறையாக வரைவது நலமெனக் கண்டேன்.

5 ஏரோது, யூதேயா நாட்டு அரசனாக இருந்த காலத்தில், அபியா வகுப்பைச் சார்ந்த சக்கரியாஸ் என்னும் குரு ஒருவர் இருந்தார். அவர் மனைவி, ஆரோன் குலத்தவள்; பெயர் எலிசபெத்து.

6 இவ்விருவரும் ஆண்டவருடைய கற்பனைகள் முறைமைகளின்படி குறைகூற இடமில்லாமல் கடவுள் முன்னிலையில் நீதிமான்களாய் நடந்துவந்தனர்.

7 எலிசபெத்து மலடியாய் இருந்தமையால், அவர்களுக்கு மகப்பேறு இல்லை. மேலும், இருவரும் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தனர்.

8 இவ்வாறு இருக்க, தம் பிரிவின் முறை வந்தபோது சக்கரியாஸ் கடவுள் முன்னிலையில் குருத்துவப் பணிசெய்து வருகையில்,

9 இறைவழிபாட்டு முறைமைப்படி ஆலயத்துள் சென்று தூபங்காட்ட அவருக்குச் சீட்டுவிழுந்தது.

10 தூபங்காட்டுகிற வேளையிலே, மக்களெல்லாரும் கூட்டமாய் வெளியே செபித்துக்கொண்டிருந்தனர்.

11 அப்பொழுது ஆண்டவருடைய தூதர் தூபப்பீடத்தின் வலப்பக்கத்தில் நின்றவண்ணம் அவருக்குத் தோன்றினார்.

12 அவரைக் கண்டு சக்கரியாஸ் கலங்கினார்; அவரை அச்சம் ஆட்கொண்டது.

13 வானதூதர் அவரிடம், " சக்கரியாசே, அஞ்சாதே, உன் வேண்டுகோள் ஏற்கப்பெற்றது. உன் மனைவி எலிசபெத்து உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவருக்கு ' அருளப்பர் ' எனப் பெயரிடுவாய்.

14 உனக்கு அகமகிழ்வும் அக்களிப்பும் உண்டாகும். அக்குழந்தையின் பிறப்பால் பலரும் மனமகிழ்வர்.

15 அவர் ஆண்டவர்முன்னிலையில் மேலானவராய் இருப்பார்; திராட்சை இரசமோ மதுவோ குடிக்க மாட்டார். தாய் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெறுவார்.

16 அவர் இஸ்ராயேலர் பலரை அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்பக்கம் திருப்புவார்.

17 தந்தையரையும் மக்களையும் ஒப்புரவாக்குவார். இறைவனுக்கு அடங்காதவர்களை நீதிமான்களின் மனநிலைக்குத் திருப்புவார். இவ்வாறு, ஆண்டவருக்கு ஏற்ற மக்களை ஆயத்தப்படுத்துவார். எலியாசை ஆட்கொண்டிருந்த தேவ ஆவியும் வல்லமையும் உடையவராய் அவர் ஆண்டவருக்குமுன்னே செல்வார் " என்றார்.

18 சக்கரியாஸ் தூதரிடம், " இவையாவும் நிகழும் என எனக்கு எப்படித் தெரியும் ? நானோ வயதானவன், என் மனைவியும் வயதுமுதிர்ந்தவள் " என்றார்.

19 அதற்குத் தூதர், " நான் கடவுளின் திருமுன் நிற்கும் கபிரியேல். உன்னிடம் பேசவும், இந்நற்செய்தியை உனக்கு அறிவிக்கவும் அனுப்பப்பெற்றேன்.

20 இதோ! இவை நடைபெறும் நாள்வரை நீ பேசாமலும் பேச முடியாமலும் இருப்பாய். ஏனெனில், உரிய காலத்தில் நிறைவேறும் என் சொல்லை நீ நம்பவில்லை " என்றார்.

21 மக்கள் சக்கரியாசுக்காகக் காத்திருந்தனர். ஆலயத்தில் அவர் காலாந்தாழ்த்தியது பற்றி வியப்படைந்தனர்.

22 அவர் வெளியே வந்தபொழுது, அவர்களிடம் பேச முடியவில்லை. ஆலயத்தில் ஏதோ காட்சி கண்டிருக்கவேண்டும் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவர் அவர்களுக்குச் சைகைகள் காட்டி நின்றார். அது முதல் ஊமையாகவே இருந்தார்.

23 தம்முடைய திருப்பணி நாட்கள் கடந்ததும் அவர் வீடு திரும்பினார்.

24 அடுத்து அவர் மனைவி எலிசபெத்து கருத்தரித்து ஐந்து மாதமளவும் பிறர் கண்ணில் படாதிருந்து,

25 " மக்களுக்குள் எனக்கிருந்த இழிவைப்போக்க ஆண்டவர் என்னைக் கடைக்கண் நோக்கி இந்நாளில் இவ்வாறு செய்தருளினார் " என்றாள்.

26 ஆறாம் மாதத்திலே, கபிரியேல் தூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்.

27 அவள் தாவீது குலத்தவராகிய சூசை என்பருக்கு மண ஒப்பந்தமானவள். அவள் பெயர் மரியாள்.

28 தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார்.

29 இவ்வார்த்தைகளை அவள் கேட்டுக் கலங்கி, இவ்வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.

30 அப்போது வானதூதர் அவளைப் பார்த்து, " மரியே, அஞ்சாதீர்; கடவுளின் அருளை அடைந்துள்ளீர்.

31 இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.

32 அவர் மேன்மை மிக்கவராயிருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.

33 அவர் யாக்கோபின் குலத்தின்மீது என்றென்றும் அரசாள்வார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.

34 மரியாள் தூதரிடம், "இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே" என்றாள்.

35 அதற்கு வானதூதர், "பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளுடைய மகன் எனப்படும்.

36 இதோ! உம் உறவினளான எலிசபெத்தும் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறாள். மலடி எனப்படும் அவளுக்கு இது ஆறாம் மாதம்.

37 ஏனெனில், கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" என்றார்.

38 மரியாளோ, "இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்றாள். என்றதும் வானதூதர் அவளிடமிருந்து அகன்றார்.

39 அந்நாட்களில், மரியாள் புறப்பட்டு யூதா மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்று,

40 சக்கரியாசின் வீட்டிற்கு வந்து எலிசபெத்தை வாழ்த்தினாள்.

41 மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டவுடனே, அவள் வயிற்றினுள்ளே குழந்தை துள்ளியது.

42 எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே.

43 என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நான் வாய்ப்புப் பெற்றது எப்படி?

44 உமது வாழ்த்து என் காதில் ஒலித்ததும், என் வயிற்றினுள்ளே குழந்தை அக்களிப்பால் துள்ளியது.

45 ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசுவசித்தவள் பேறுபெற்றவளே" என்று உரக்கக் கூவினாள்.

46 அப்போது மரியாள் உரைத்ததாவது: "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது.

47 என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களிகூருகின்றது.

48 ஏனெனில், தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார். இதோ! இந்நாள் முதல் எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே.

49 ஏனெனில், வல்லமை மிக்கவர் எனக்கு அரும்பெரும் செயல் பல புரிந்தார். அவர்தம் பெயர் புனிதமாமே.

50 அவர்தம் இரக்கம் அவரை அஞ்சுவோர்க்குத் தலைமுறை தலைமுறையாய் உள்ளதாமே.

51 அவர் தமது கைவன்மையைக் காட்டினார், நெஞ்சிலே செருக்குற்றவர்களைச் சிதறடித்தார்.

52 வலியோரை அரியணையினின்று அகற்றினார், தாழ்ந்தோரை உயர்த்தினார்.

53 பசித்தோரை நலன்களால் நிரப்பினார், செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார்.

54 நம் முன்னோருக்கு அவர் சொன்னது போலவே ஆபிரகாமுக்கும் அவர்தம் வழிவந்தோர்க்கும் என்றென்றும் இரக்கம்காட்ட நினைவுகூர்ந்து

55 தம் அடியானாகிய இஸ்ராயேலை ஆதரித்தார்."

56 மரியாள் ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்தபின்பு வீடுதிரும்பினாள்.

57 எலிசபெத்துக்குப் பேறுகாலம் வந்தது. ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.

58 அவளுக்கு ஆண்டவர் மிகுந்த இரக்கம் காட்டியதைக் கேள்விப்பட்டு அயலாரும் உறவினரும் அவளோடு மகிழ்ந்தனர்.

59 எட்டாம் நாள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்து, சக்கரியாஸ் என்று அவன் தந்தையின் பெயரையே அவனுக்கு இட விரும்பினர்.

60 ஆனால், அவன்தாய் மறுத்து, "அப்படியன்று, அருளப்பன் என்று அவனை அழைக்கவேண்டும்" எனக் கூறினாள்.

61 அதற்கு அவர்கள், "உன் உறவினருள் இப்பெயர் கொண்டவர் ஒருவரும் இல்லையே" என்று சொல்லி,

62 குழந்தைக்கு என்ன பெயரிட விரும்புகிறீர்?" என்று தந்தையிடம் சைகை காட்டிக் கேட்டனர்.

63 அவர் எழுது பலகையொன்றைக் கொண்டுவரச் சொல்லி, "இவன் பெயர் அருளப்பன்" என்று எழுதினார்.

64 அனைவரும் வியப்படைந்தனர். அந்நேரமே அவரது வாய் திறக்க, நா கட்டவிழ, பேசத்தொடங்கி, கடவுளைப் போற்றினார்.

65 அயலார் அனைவரையும் அச்சம் ஆட்கொண்டது. இச்செய்தியெல்லாம் யூதேயா மலை நாடெங்கும் பரவலாயிற்று.

66 கேள்விப்பட்டவர்கள் யாவரும் அதை உள்ளத்தில் பதித்து, "இக்குழந்தை எத்தகையவன் ஆவானோ?" என்றனர். உண்மையில் ஆண்டவருடைய அருட்கரம் அவனோடு இருந்தது.

67 அவன் தந்தை சக்கரியாஸ் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று உரைத்த இறைவாக்காவது:

68 இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவர் போற்றி! ஏனெனில், தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

69 தொன்றுதொட்டு வந்த தம் பரிசுத்த இறைவாக்கினர்களின் வாயினால் அவர் மொழிந்தது போலவே,

70 தம் அடியானாகிய தாவீதின் குலத்திலே மீட்கும் வல்லமை எழச் செய்தருளினார்.

71 இவ்வாறு நம் பகைவரிடமிருந்தும், நம்மை வெறுப்பவர் அனைவரின் கையிலிருந்தும் மீட்டருளினார்.

72 நம் முன்னோர்க்கு இரக்கங்காட்டி, நம் பகைவரின் வாயினின்று விடுதலை பெற்று,

73 "அச்சமின்றி நம் வாழ்நாளெல்லாம் அவர் முன்னிலையில், புனிதத்தோடும் நீதியோடும் அவருக்குப் பணிபுரிய, "

74 தாம் வழிவகுப்பதாக அவர் நம் தந்தையாம் ஆபிரகாமுக்கு அளித்த உறுதிமொழியையும்,

75 தமது பரிசுத்த உடன்படிக்கையையும் நினைவுகூர்ந்தருளினார்.

76 நீயோ பாலனே, உன்னதரின் வாக்குரைப்பவன் எனப்படுவாய்.

77 பாவமன்னிப்பில் உளதாகிய மீட்பை அவர் தம் மக்களுக்கு அறிவித்து, ஆண்டவருடைய வழிகளை அமைக்க அவர்முன்னே செல்வாய்.

78 இருளிலும், இறப்பின் நிழலிலும் இருப்போர்க்கு ஒளி காட்டவும், அமைதிப்பாதையில் நம் காலடிகளைச் செலுத்தவும்,

79 நம் கடவுளின் இரக்கப் பெருக்கத்தால், வானினின்று இளஞாயிறு நம்பால் எழுந்து வரும்".

80 பாலனோ, ஆன்ம வலிமையோடு வளர்ந்துவந்தார். இஸ்ராயேலுக்கு வெளிப்படும்வரையிலும் பாலைவனத்தில் மறைந்து வாழ்ந்தார்.

அதிகாரம் 02

1 அந்நாளில் உலக முழுமையும் மக்கள் தொகையைக் கணக்கிடும்படி செசார் அகுஸ்துவிடமிருந்து கட்டளை பிறந்தது.

2 முதலாவதான இக்கணக்கு சீரியா நாட்டைக் கிரேனியு ஆண்ட காலத்தில் எடுக்கப்பட்டது.

3 அதன்படி அனைவரும் பெயரைப் பதிவுசெய்யத் தத்தம் ஊருக்குச் சென்றனர்.

4 சூசையும் கருப்பவதியாயிருந்த மனைவி மரியாளோடு பெயரைப் பதிவுசெய்யக் கலிலேயா நாட்டு நாசரேத்தூரை விட்டு,

5 யூதேயா நாட்டிலுள்ள பெத்லெகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். ஏனெனில், அவர் தாவீதின் குலத்தவரும் குடும்பத்தவருமாக இருந்தார்.

6 அவர்கள் அங்கிருந்தபொழுது, அவளுக்குப் பேறுகாலம் வந்தது.

7 அவள் தலைப்பேறான மகனை ஈன்றெடுத்து, துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தினாள். ஏனெனில், சத்திரத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

8 அதே பகுதியில் இடையர் வெட்டவெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.

9 ஆண்டவருடைய தூதர் அவர்களுக்குத் தோன்ற, விண்ணொளி அவர்களைச் சூழ்ந்து சுடர்ந்தது. மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.

10 வானதூதர் அவர்களை நோக்கி, " அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.

11 இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.

12 குழந்தை ஒன்றைத் துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அறிகுறியாகும்" என்றார்.

13 உடனே வானோர் படைத்திரள் அத்தூதரோடு சேர்ந்து,

14 " உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. உலகிலே அவர் தயவுபெற்றவர்க்கு அமைதி ஆகுக! " என்று கடவுளைப் புகழ்ந்தது.

15 தூதர்கள் அவர்களை விட்டு வானகம் சென்றபின், இடையர் ஒருவரையொருவர் நோக்கி, " வாருங்கள், பெத்லெகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்த இந்நிகழ்ச்சியைக் காண்போம் " என்று சொல்லிக் கொண்டு,ஃ

16 விரைந்து சென்று, மரியாளையும் சூசையையும், முன்னிட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டனர்.

17 கண்ட பின்னர், அப்பாலனைப் பற்றித் தமக்குக் கூறப்பட்டதைப் பிறருக்கு அறிவித்தனர்.1

18 கேட்ட யாவரும் தங்களுக்கு இடையர் கூறியதுபற்றி வியப்படைந்தனர்.

19 மரியாளோ இந்நிகழ்ச்சிகளை எல்லாம் உள்ளத்தில் இருந்திச் சிந்தித்து வந்தாள்.

20 இடையர் தாம் கண்டது கேட்டதெல்லாம் நினைத்துக் கடவுளை மகிமைப் படுத்திப் புகழ்ந்துகொண்டே திரும்பினார். அவர்களுக்குச் சொன்னபடியே எல்லாம் நிகழ்ந்திருந்தது.

21 எட்டாம் நாள் வந்தபோது, குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டியிருந்தது. தாய் கருத்தரிக்கும் முன்பே தூதர் குறிப்பிட்டிருந்த ' இயேசு ' என்னும் பெயரை அதற்கு இட்டார்கள்.

22 மோயீசன் சட்டப்படி அவர்களுக்குச் சுத்திகார நாள் வந்தபோது குழந்தையை யெருசலேமுக்குக் கொண்டுபோயினர்.

23 'தலைப்பேறான எந்த ஆணும் ஆண்டவருடைய உரிமையாகக் கருதப்படும்' என்று ஆண்டவருடைய சட்டத்தில் எழுதியிருந்தபடி அதனை ஆண்டவர் திருமுன் நிறுத்தவும்,

24 அச்சட்டத்திலே கூறியுள்ளபடி ஒரு சோடி காட்டுப் புறாக்கள் அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைப் பலியாகக் கொடுக்கவும் வேண்டியிருந்தது.

25 அப்போது யெருசலேமிலே சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நீதிமான், கடவுள் பக்தர். இஸ்ராயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர் பார்த்திருந்தவர். பரிசுத்த ஆவி அவர்மீது இருந்தார்.

26 ஆண்டவருடைய மெசியாவைக் காண்பதற்குமுன் தாம் சாவதில்லை என்று பரிசுத்த ஆவியால் அறிவிக்கப்பெற்றிருந்தார்.

27 அவர் தேவ ஆவியின் ஏவுதலால் கோயிலுக்கு வந்தார். திருச்சட்ட முறைமைப்படி குழந்தைக்குச் செய்யவேண்டியதை நிறைவேற்றுவதற்குப் பாலன் இயேசுவைப் பெற்றோர் கொண்டு வந்தபோது,

28 சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு,

29 "ஆண்டவரே, இப்போது உம் அடியானை அமைதியாகப் போகவிடும். ஏனெனில், உமது வாக்கு நிறைவேறிற்று.

30 மக்கள் அனைவரும் காண நீர் ஆயத்தம் செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.

31 இதுவே புறவினத்தாருக்கு இருள் அகற்றும் ஒளி.

32 இதுவே உம் மக்கள் இஸ்ராயேலை ஒளிர்விக்கும் மாட்சிமை" என்று கடவுளைப் போற்றினார்.

33 குழந்தையைக் குறித்துக் கூறியவற்றைக் கேட்டு அதன் தாயும் தந்தையும் வியந்து கொண்டிருந்தனர்.

34 சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாளைப் பார்த்து, "இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்; எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான்.

35 உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்-- இதனால் பலருடைய உள்ளங்களினின்று எண்ணங்கள் வெளிப்படும்" என்றார்.

36 அன்றியும், ஆசேர் குலத்தைச் சார்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்றொருத்தி இருந்தாள். அவள் இறைவாக்குரைப்பவள்.

37 வயதில் மிக முதிர்ந்தவள்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவனோடு வாழ்ந்தபின், கைம்பெண் ஆனாள். ஏறக்குறைய எண்பத்து நான்கு வயதானவள். கோயிலை விட்டு நீங்காமல் நோன்பாலும் செபத்தாலும் அல்லும் பகலும் பணிபுரிந்து வந்தாள்.

38 அவளும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து, யெருசலேமின் விடுதலையை எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் குழந்தையைப்பற்றி எடுத்துரைத்தாள்.

39 ஆண்டவருடைய சட்டப்படி எல்லாம் நிறைவேற்றியபின், அவர்கள் கலிலேயாவில் உள்ள தம் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப் போனார்கள்.

40 பாலனோ வளர்ந்து வலிமை பெற்றார்; ஞானம் நிறைந்தவராகவும் இருந்தார்; கடவுள் அருளும் அவர்மீது இருந்தது.

41 ஆண்டுதோறும் அவருடைய பெற்றோர் பாஸ்காத் திருவிழாவுக்காக யெருசலேமுக்குப் போவார்கள்.

42 அவருக்குப் பன்னிரண்டு வயது நடக்கும்போது திருவிழாவின் முறைப்படி யெருசலேமுக்குச் சென்றனர்.

43 திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.

44 யாத்திரிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் ஒருநாள் வழிநடந்த பின்னர் உற்றார் உறவினரிடையே அவரைத் தேடினார்கள்.

45 அவரைக் காணாததால் தேடிக்கொண்டு யெருசலேமுக்குத் திரும்பினார்கள்.

46 மூன்று நாளுக்குப்பின் அவரைக் கோயிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை வினவுவதுமாய் இருந்தார்.

47 கேட்டவர் அனைவரும் அவருடைய மறுமொழிகளில் விளங்கிய அறிவுத்திறனைக் கண்டு திகைத்துப்போயினர்.

48 அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு மலைத்துப்போயினர். அவருடைய தாய் அவரைப் பார்த்து, " மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்துவிட்டாய் ? இதோ! உன் தந்தையும் நானும் உன்னை ஏக்கத்தோடு தேடிக்கொண்டிருந்தோமே! " என்றாள்.

49 அதற்கு அவர், " ஏன் என்னைத் தேடினீர்கள் ? என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா ?" என்றார்.

50 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை.

51 பின்பு அவர் அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தாள்.

52 இயேசு வளர வளர ஞானத்திலும் முதிர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் மேன்மேலும் உகந்தவரானார்.

அதிகாரம் 03

1 திபேரியு செசார் ஆட்சியேற்ற பதினைந்தாம் ஆண்டில், போன்சியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராகவும், கலிலேயா நாட்டுக்கு ஏரோதும், இத்துரேயா -- திராக்கோனித்து நாட்டுக்கு அவன் சகோதரன் பிலிப்பும், அபிலேனே நாட்டுக்கு லிசானியாவும் சிற்றரசர்களாகவும்,

2 அன்னாஸ், கைப்பாஸ் தலைமைக்குருக்களாகவும் இருக்க,சக்கரியாசின் மகனான அருளப்பருக்குப் பாலைவனத்தில் கடவுளின் வாக்கு அருளப்பட்து.

3 பாவமன்னிப்படைய, மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று அவர் யோர்தான் ஆற்றை அடுத்த நாடெல்லாம் சுற்றி அறிவித்தார்.

4 இதைப்பற்றி இசையாஸ் இறைவாக்கினரின் திருச்சொல் ஆகமத்தில், " பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது: ஆண்டவர்வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள்;

5 பள்ளத்தாக்குகளெல்லாம் நிரவப்படுக, மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படுக, கோணலானவை நேராகவும், கரடுமுரடானவை சமமான வழிகளாகவும் ஆக்கப்படுக.

6 மனிதரெல்லாரும் கடவுளின் மீட்பைக் காண்பர் " என்று எழுதியிருந்தது.

7 தம்மிடம் ஞானஸ்நானம் பெறப் புறப்பட்டு வந்த மக்கட்கூட்டத்தை அவர் நோக்கி, " விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவர் யார்?

8 எனவே, மனந்திரும்பியவருக்கேற்ற செயல்களைச் செய்துகாட்டுங்கள். 'ஆபிரகாமே எங்களுக்குத் தந்தை' என்று சொல்லிக் கொள்ளத் துணியவேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்கு மக்களை எழுப்பக் கடவுள் வல்லவர் என்று உங்களுக்குக் கூறுகிறேன்.

9 ஏற்கனவே, அடிமரத்தில் கோடரி வைத்தாயிற்று; நற்கனி கெடாத மரமெல்லாம் வெட்டுண்டு தீயில் போடப்படும்" என்றார்.

10 அப்போது, "நாங்கள் செய்யவேண்டியதென்ன?" என்று மக்கள்கூட்டம் அவரைக் கேட்டது.

11 அதற்கு அவர், "இரண்டு அங்கி வைத்திருப்பவன் இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவு உடையவனும் அவ்வாறே செய்யட்டும்" என்றார்.

12 ஆயக்காரர் ஞானஸ்நானம் பெற வந்து, "போதகரே, நாங்கள் செய்யவேண்டியதென்ன?" என்று அவரைக் கேட்க,

13 அவர், "உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்குமேல் கேட்கவேண்டாம்" என்று பதிலளித்தார்,

14 "நாங்கள் செய்யவேண்டியதென்ன?" 'என்று படை வீரரும் கேட்டனர். அவரோ, "ஒருவரையும் பயமுறுத்திப் பணம் பறிக்கவேண்டாம். பொய்க் குற்றம் சாட்ட வேண்டாம். கிடைக்கும் சம்பளமே போதுமென்றிருங்கள்" என்றார்.

15 அந்நாட்களில் மக்கள் எதிர்ப்பார்த்த நிலையில் இருக்கவே, ஒருவேளை அருளப்பரே மெசியாவாக இருக்கலாம் என்று எல்லாரும் உள்ளத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர்.

16 அப்போது அருளப்பர் அவர்களிடம், " நானோ உங்களுக்கு நீரால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். ஆனால், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியாலும் நெருப்பாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

17 அவர் தம் களத்தைத் துப்புரவாக்கிக் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்க்க, சுளகைக் கையில் கொண்டுள்ளார். பதரையோ அவியா நெருப்பில் சுட்டெரிப்பார் " என்றார்.

18 மேலும், பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.

19 சிற்றரசனான ஏரோதை, அவன் சகோதரனின் மனைவியான ஏரோதியாள்பற்றியும், இன்னும் அவன் இழைத்த எல்லாத் தீச்செயல்கள் பற்றியும் அருளப்பர் கண்டிக்கவே,

20 தான் செய்த கொடுமை எல்லாம் போதாதென்று அவரைச் சிறையிலடைக்கவும் செய்தான்.

21 மக்களெல்லாம் ஞானஸ்நானம் பெறும்வேளையில் இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, செபித்துக்கொண்டிருக்க, வானம் திறந்தது.

22 பரிசுத்த ஆவி புலப்படும் வடிவெடுத்து, புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து குரலொலி உண்டாகி, " நீரே என் அன்பார்ந்த மகன். உம்மிடம் நான் பூரிப்படைகிறேன் " என்றது.

23 இயேசு போதிக்கத் தொடங்கும்பொழுது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது. அவரை மக்கள் சூசையின் மகன் என்று கருதினர்.

24 சூசை ஏலியின் மகன்; ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்;

25 யோசேப்பு மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா ஆமோசின் மகன்; ஆமோஸ் நாகூமின் மகன்; நாகூம் ஏஸ்லியின் மகன்; ஏஸ்லி நாகாயின் மகன்;

26 நாகாய் மாகாத்தின் மகன்; மாகாத்து மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா சேமேயின் மகன்; சேமேய் யோசேக்கின் மகன்; யோசேக்கு யோதாவின் மகன்;

27 யோதா யோவனாவின் மகன்; யோவானா ரேசாவின் மகன்; ரேசா சொரொ பாபேலின் மகன்; சொரொபாபேல் சலாத்தியேலின் மகன்; சலாத்தியேல் நேரியின் மகன்;

28 நேரி மெல்கியின் மகன்; மெல்கி அத்தியின் மகன்; அத்தி கோசாமின் மகன்; கோசாம் எல்மதாமின் மகன்; எல்மதாம் ஏரின் மகன்;

29 ஏர் ஏசுவின் மகன்; ஏசு எலியேசரின் மகன்; எலியேசர் யோரீமின் மகன்; யோரீம் மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்;

30 லேவி சிமியோனின் மகன்; சிமியோன் யூதாவின் மகன்; யூதா யோசேப்பின் மகன்; யோசேப்பு யோனாமின் மகன்; யோனாம் எலியாக்கீமின் மகன்;

31 எலியாக்கீம் மெலெயாவின் மகன்; மெலெயா மென்னாவின் மகன்; மென்னா மாத்தாத்தாவின் மகன்; மாத்தாத்தா நாத்தாமின் மகன்; நாத்தாம் தாவீதின் மகன்.

32 தாவீது யெஸ்ஸேயின் மகன்; யெஸ்ஸேய் ஓபேதின் மகன்; ஓபேது போவாசின் மகன்; போவாஸ் சாலாவின் மகன்; சாலா நகசோனின் மகன்;

33 நகசோன் அமினதாபின் மகன்; அமினதாபு அத்மீனின் மகன்; அத்மீன் ஆர்னியின் மகன்; ஆர்னி எஸ்ரோமின் மகன்; எஸ்ரோம் பேரேசின் மகன்; பேரேஸ் யூதாவின் மகன்;

34 யூதா யாக்கோபின் மகன்; யாக்கோபு ஈசாக்கின் மகன்; ஈசாக்கு ஆபிரகாமின் மகன். ஆபிரகாம் தேராகின் மகன்; தேராகு நாகோரின் மகன்;

35 நாகோர் செரூகின் மகன்; செரூகு ரெகூவின் மகன்; ரெகூ பேலேகின் மகன்; பேலேகு ஏபேரின் மகன்; ஏபேர் சாலாவின் மகன்;

36 சாலா காயினானின் மகன்; காயினான் அர்ப்பகசாத்தின் மகன்; அர்ப்பகசாத்து சேமின் மகன்; சேம் நோவாவின் மகன்; நோவா லாமேக்கின் மகன்; லாமேக்கு மெத்துசலாவின் மகன்;

37 மத்துசலா ஏனோக்கின் மகன்; ஏனோக்கு யாரேதின் மகன்; யாரேது மகலாலெயேலின் மகன்; மகலாலெயேல் காயினானின் மகன்;

38 காயினான் ஏனோசின் மகன்; ஏனோஸ் சேத்தின் மகன்; சேத் ஆதாமின் மகன்; ஆதாமோ கடவுளின் மகன்.

அதிகாரம் 04

1 இயேசு பரிசுத்த ஆவியால் நிறைந்தவராய் யோர்தான் ஆற்றங்கரையினின்று திரும்பியபின், பாலைவனத்தில் தங்குமாறு ஆவியானவரால் நடத்தப்பெற்றார்.

2 அங்கு நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் உண்ணவில்லை. அந்த நாட்கள் கழிந்ததும், அவருக்குப் பசியெடுத்தது.

3 அப்பொழுது அலகை அவரை நோக்கி, "நீர் கடவுளின் மகனானால் அப்பமாக மாறும்படி இந்தக் கல்லுக்குச் சொல்லும்" என்றது.

4 அதற்கு இயேசு, "மனிதன் உயிர் வாழ்வது அப்பத்தினால் மட்டுமன்று' என எழுதி இருக்கின்றதே" என்றார்.

5 பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலக அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி,

6 "இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும், இவற்றின் மகிமையையும் உமக்குக் கொடுப்பேன். ஏனெனில், இவை யாவும் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 'என் விருப்பம்போல் எவருக்கும் இவற்றைக் கொடுக்கமுடியும்.

7 எனவே நீர் தெண்டனிட்டு என்னை வணங்கினால் இவையாவும் உம்முடையவை ஆகும்" என்றது.

8 அதற்கு இயேசு, " உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரைமட்டுமே ஆராதிப்பாயாக ' என எழுதியிருக்கின்றதே " என்றார்.

9 பின்னர் அலகை அவரை யெருசலேமுக்குக் கூட்டிச் சென்று, கோயிலில் முகட்டில் நிறுத்தி, " நீர் கடவுளின் மகனனானால் இங்கிருந்து கீழேகுதியும்.

10 ஏனெனில், ' உம்மைக் காக்கும்படி தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார் ' என்றும்,

11 'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று எழுதியுள்ளது" என்றது.

12 அதற்கு இயேசு, "உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே' என்றும் சொல்லியிருக்கிறது " என்றார்.

13 இவ்வாறு, அலகை எல்லா விதத்திலும் இயேசுவைச் சோதித்தபின், குறித்த காலம் வரும்வரைக்கும் அவரை விட்டுச் சென்றது.

14 பின்னர், ஆவியானவரின் வல்லமை பூண்டவராய் இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார். அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.

15 யூதர்களுடைய செபக்கூடங்களில் அவர் போதித்துவந்தார். யாவரும் அவரை மகிமைப்படுத்தினர்.

16 அவர் தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்தார். வழக்கப்படி ஓய்வுநாளன்று செபக்கூடத்திற்கு வந்து வாசிக்க எழுந்தார்.

17 இசையாஸ் எழுதிய இறைவாக்குகளின் ஏட்டுச் சுருளை அவரிடம் கொடுத்தனர். அதை விரித்ததும் பின்வரும் பகுதியைக் கண்டார்.

18 'ஆண்டவருடைய ஆவி என்மேலே, ஏனெனில், என்னை அபிஷுகம் செய்துள்ளார். 'எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலையடைவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு வழங்கவும்,

19 ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பினார் '.

20 பின்னர் ஏட்டைச் சுருட்டிப் பணிவிடைக் காரனிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். செபக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே நோக்கியவண்ணமாயிருந்தன.

21 அப்போது அவர், " நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று " என்று கூறலானார்.

22 யாவரும் அவரைப் பாராட்டி, அவர் வாயினின்று எழுந்த அருள்மொழிகளை வியந்து, " இவர் சூசையின் மகனன்றோ ?" என்றனர்.

23 பின் அவர் அவர்களை நோக்கி, "' மருத்துவனே, உன்னையே குணமாக்கிக்கொள் ' என்ற பழமொழியை எனக்கே சொல்லிக்காட்டி, ' கப்பர்நகூம் ஊரில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டதெல்லாம், உம் சொந்த ஊராகிய இங்கேயும் செய்யும் ' எனக் கண்டிப்பாக நீங்கள் கூறுவீர்கள் " என்றார்.

24 மேலும், அவர், " உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்கப்படுவதில்லை.

25 உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: எலியாசின் காலத்தில் மூன்று ஆண்டுகள் ஆறு மாதங்களாக வானம் வறண்டு நாடெங்கும் பஞ்சம் உண்டானபோது, இஸ்ராயேல் நாட்டில் கைம்பெண்கள் பலர் இருந்தனர்.

26 ஆயினும் சீதோன் நாட்டின் சரெப்தா ஊர்க் கைம்பெண் ஒருத்தியிடமின்றி வேறு எவரிடமும் எலியாஸ் அனுப்பப்படவில்லை.

27 இறைவாக்கினரான எலிசேயுவின் காலத்திலும் இஸ்ராயேல் நாட்டில் தொழுநோயாளர் பலர் இருந்தனர். ஆயினும் சீரியா நாட்டு நாமானைத் தவிர வேறு எவரும் குணமாக்கப்படவில்லை " என்றார்.

28 இவற்றைக் கேட்டுச் செபக்கூடத்தில் இருந்த அனைவரும் வெகுண்டெழுந்து,

29 அவரை ஊருக்கு வெளியே தள்ளி, அவ்வூர் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடக் கொண்டுசென்றனர்.

30 அவரோ அவர்களிடையே நடந்து தம் வழியே போனார்.

31 பின் கலிலேயா நாட்டுக் கப்பர்நகூம் ஊருக்கு வந்து, அங்கே மக்களுக்கு ஓய்வு நாளில் போதித்து வந்தார்.

32 அவர் அதிகாரத்தொனியோடே பேசினதால் அவருடைய போதனையைக் குறித்து மலைத்துப் போயினர்.

33 அப்போது, செபக்கூடத்தில் அசுத்தப்போய் பிடித்த ஒருவன் இருந்தான்.

34 அவன், " ஐயோ! நாசரேத்தூர் இயேசுவே, எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர் ? எங்களைத் தொலைக்க வந்தீரோ ? நீர் யாரென்று எனக்குத் தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர் " என்று உரக்கக் கத்தினான்.

35 அப்போது இயேசுவா, " பேசாதே, இவனை விட்டுப் போ " என்று அதட்டினார். அப்பொழுது, அப்பேய் அவனை அவர்கள்நடுவே வீழ்த்தி, அவனுக்கு ஒரு தீங்குமிழைக்காமல் அவனை விட்டு அகன்றது.

36 அதனால் திகில் எல்லாரையும் ஆட்கொள்ள, " இவர் வார்த்தை எத்தகையதோ ? அதிகாரத்தோடும் வல்லமையோடும் இவர் அசுத்தப் பேய்களுக்கும் கட்டளையிடுகிறார், அவை போய்விடுகின்றனவே! " என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.

37 அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறமெல்லாம் பரவியது.

38 பின்னர், அவர் செபக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்கு வந்தார். சீமோனுடைய மாமியார் கடுஙகாய்ச்சலால் துன்பப்பட்டுக் கொண்டிருந்ததால் அவளுக்காக அவரிடம் வேண்டினர்.

39 அவர் அவளருகில் நின்று காய்ச்சலைக் கடிந்துகொண்டார். காய்ச்சல் அவளை விட்டு அகல, அவள் உடனே எழுந்து அவர்களுக்குப் பணிவிடை புரிந்தாள்.

40 பொழுது சாயும்வேளையில் யாவரும் தங்களிடையே இருந்த பற்பல பிணியாளரை அவரிடம் கொண்டுவந்தனர். ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்துக் குணமாக்கினார்.

41 பேய்கள், "நீரே கடவுளின் மகன்" என்று கூவிக்கொண்டு பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று அவை அறிந்திருந்ததால், இயேசு அவற்றை அதட்டிப் பேச விடவில்லை.

42 பொழுது புலரவே, அவர் புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடினர். அவரிடம் வந்ததும் தங்களை விட்டு அகலாதபடி அவரை நிறுத்தப்பார்த்தனர்.

43 அவரோ, " நான் மற்ற ஊர்களுக்கும் கடவுளுடைய அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும். இதற்காகவே அனுப்பப்பட்டேன் " என்று அவர்களிடம் கூறினார்.

44 அதன்படியே, கலிலேயாவின் செபக்கூடங்களில் தூது உரைத்துவந்தார்.

அதிகாரம் 05

1 ஒருநாள் அவர் கெனேசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தபோது, திரளான மக்கள் கடவுளின் வார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர்.

2 அப்போது, ஏரிக்கரையில் இரண்டு படகுகள் இருக்கக் கண்டார். மீனவர்களோ படகை விட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தனர்.

3 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் ஏறி, கரையிலிருந்து சற்றே தள்ளச் சொல்லி, அமர்ந்துகொண்டு படகிலிருந்தே கூட்டத்திற்குப்போதிக்கலனார்.

4 பேசி முடிந்ததும் சீமோனிடம், "ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்" என்று கூறினார்.

5 அதற்குச் சீமோன், "குருவே, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொல்லை நம்பி வலைகளைப் போடுகிறேன்" என்றார்.

6 அவ்வாறே செய்ததும் ஏராளமான மீன்களை வளைத்துப் பிடித்தனர். வலைகள் கிழியத் தொடங்கவே,

7 மற்றப் படகிலிருந்த தங்கள் தோழர்களுக்குச் சைகை காட்டி உதவிக்கு வருமாறு அழைத்தனர். அவர்களும் வந்து படகுகள் இரண்டையும் நிரப்ப, அவை மூழ்குவனபோல் இருந்தன.

8 இதைக்கண்ட சீமோன் இராயப்பர் இயேசுவின் காலில் விழுந்து, "ஆண்டவரே, பாவியேனை விட்டு அகலும்" என்றார்.

9 அவரும் அவரோடிருந்த அனைவரும் அகப்பட்ட மீன் பாட்டைக் கண்டுத் திகிலுற்றனர்.

10 சீமோனுடைய கூட்டாளிகளான செபெதேயுவின் மக்கள், யாகப்பரும் அருளப்பரும் அவ்வாறே திகிலுற்றனர். இயேசுவோ சீமோனை நோக்கி, "அஞ்சாதே, இன்று முதல் நீ மனிதர்களைப் பிடிப்பவன் ஆவாய்" என்றார்.

11 அவர்கள் படகுகளைக் கரைச் சேர்த்ததும், யாவற்றையும் துறந்து அவரைப் பின்தொடர்ந்தார்கள்.

12 அவர் ஓர் ஊரில் இருந்தபோது, இதோ! உடலெல்லாம் தொழுநோயாயிருந்த ஒருவன் இயேசுவைக் கண்டு முகங்குப்புற விழுந்து, "ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்று மன்றாடினான்.

13 அவர் தம் கையை நீட்டி, "விரும்புகிறேன், குணமாகு" என்று சொல்லி அவனைத் தொட்டார். உடனே தொழுநோய் அவனை விட்டு நீங்கியது.

14 ஒருவருக்கும் இதைச் சொல்லவேண்டாம்" என்று அவனுக்குக் கட்டளையிட்டு, "போய், உன்னைக் குருவிடம் காட்டி, நீ குணமானதற்காக மோயீசன் கற்பித்தபடி காணிக்கை செலுத்து. அது அவர்களுக்கு அத்தாட்சியாகும்" என்றார்.

15 அவரைப்பற்றிய பேச்சு இன்னும் மிகுதியாய்ப் பரவிற்று. அவர் சொல்வதைக் கேட்கவும், தங்கள் பிணிகள் நீங்கவும் மக்கள் திரள் திரளாக அவரிடம் வருவார்கள்.

16 அவரோ தனிமையான இடங்களுக்குச் சென்று செபஞ்செய்வது வழக்கம்.

17 ஒருநாள் அவர் போதித்துக்கொண்டிருக்கும்பொழுது கலிலேயா, யூதேயா நாடுகளிலுள்ள எல்லா ஊர்களிலிருந்தும் யெருசலேமிலிருந்தும் வந்த பரிசேயரும் சட்டவல்லுநரும் அமர்ந்திருந்தனர். நோய் நீக்குவதற்கென ஆண்டவருடைய வல்லமை இயேசுவோடு இருந்தது.

18 அப்போது இதோ! திமிர்வாதம் கொண்ட ஒருவனைச் சிலர் கட்டிலோடு தூக்கி வந்து, உள்ளே கொண்டுபோய் அவர் முன்னே கிடத்த முயன்றனர்.

19 கூட்ட மிகுதியால் உள்ளே கொண்டுபோக வழியறியாது கூரைமேல் ஏறி ஓடுகளைப் பிரித்து அவனைக் கட்டிலோடு நடுவில் இயேசுவின் முன்பாக இறக்கினார்.

20 அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, "அன்பனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

21 மறைநூல் அறிஞரும் பரிசேயரும், "கடவுளைத் தூஷித்துப்பேசும் இவர் யார்? கடவுள் ஒருவரேயன்றிப் பாவத்தை மன்னிக்க வல்லவர் யார்?" என்று எண்ணினர்.

22 அவர்களுடைய எண்ணங்களை அறிந்த இயேசு அவர்களிடம், " நீங்கள் உள்ளத்தில் எண்ணுவதென்ன ?

23 எது எளிது ? ' உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன ' என்பதா ? ' எழுந்து நட என்பதா ?" என்று கேட்டார்.

24 "மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு"-- திமிர்வாதக்காரனை நோக்கி- "நான் உனக்குச் சொல்லுகிறேன்: எழுந்து, உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு, வீட்டிற்குப்போ" என்றார்.

25 உடனே அவன் அவர்கள்எதிரில் எழுந்து, தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு, கடவுளை மகிமைப் படுத்திக்கொண்டே வீடு சென்றான்.

26 அனைவரும் திகைப்புற்றுக் கடவுளை மகிமைப் படுத்தினர். அன்றியும் அச்சம் மேலிட்டவராய், "இன்று புதுமையானவற்றைக் கண்டோம்" என்றனர்.

27 அதன் பின் வெளியே சென்று, சுங்கத் துறையில் அமர்ந்திருந்த லேவி என்ற ஆயக்காரனைக் கண்டு, "என்னைப் பின் செல்" என்றார்.

28 அவர் எழுந்து, அனைத்தையும் விட்டு அவரைப் பின்சென்றார்.

29 லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரிய விருந்து செய்தார். ஆயக்காரரும் பிறரும் பெருங்கூட்டமாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்திருந்தனர்.

30 பரிசேயரும் அவர்களைச் சார்ந்த மறைநூல் அறிஞரும் முணுமுணுத்து, அவருடைய சீடர்களிடம், "ஆயக்காரரோடும் பாவிகளோடும் நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்றனர்.

31 இயேசு அதற்கு, "மருத்துவன் நோயற்றவர்க்கன்று, நோயுற்றவர்க்கே தேவை.

32 நீதிமான்களை அன்று, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்" என்று மறுமொழி கூறினார்.

33 அவர்களோ, "அருளப்பரின் சீடர் அடிக்கடி நோன்பு இருந்து செபம் செய்கின்றனர். பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே" என்று அவரிடம் சொன்னார்கள்.

34 அதற்கு இயேசு, "மணமகன் தன் தோழர்களோடு இருக்குமளவும் அவர்களை நோன்பிருக்கச் செய்யக் கூடுமா?

35 மணமகன் அவர்களை விட்டுப்பிரியும் நாள் வரும், அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்" என்றார்.

36 மேலும் அவர்களுக்கு ஓர் உவமை கூறினார். அதாவது, "புதிய போர்வையிலே ஒரு துண்டைக் கிழித்துப் பழைய போர்வைக்கு ஒட்டுப்போடுவார் யாருமில்லை. அவ்வாறு போட்டால் புதியதும் கிழிபடும், அதிலிருந்து கிழித்த துண்டும் பழையதோடு பொருந்தாது.

37 புதுத் திராட்சை இரசத்தைப் பழஞ் சித்தைகளில் ஊற்றி வைப்பர் எவருமில்லை. வைத்தால், புது இரசம் சித்தைகளைக் கிழித்துச் சிந்திப்போவதுமல்லாமல், சித்தைகளும் பாழாகும்.

38 ஆனால், புதுத் திராட்சை இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைக்க வேண்டும்.

39 பழைய திராட்சை இரசத்தைக் குடித்தவன் புதியதை விரும்புவதில்லை. பழையதே சிறந்தது என்பான்" என்றார்.

அதிகாரம் 06

1 ஓர் ஒய்வு நாளன்று விளைச்சல் வழியே அவர் செல்லும் பொழுது, சீடர் கதிர்களைக் கொய்து கையில் கசக்கித் தின்றனர்.

2 பரிசேயருள் சிலர், "ஓய்வுநாளில் செய்யத் தகாததை நீங்கள் செய்வதேன்?" என்றனர்.

3 அதற்கு இயேசு, "தாவீதும் அவருடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபொழுது, அவர் என்ன செய்தார் என்று நீங்கள் வாசித்ததில்லையோ?

4 அவர் கடவுளின் இல்லத்தில் நுழைந்து, குருக்கள் தவிர மற்றெவரும் உண்ணக் கூடாத காணிக்கை அப்பங்களை எடுத்து, தாம் உண்டதுமன்றி, கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தாரே" என்றார்,

5 மேலும், "மனுமகன் ஓய்வுநாளுக்கு ஆண்டவர்" என்றார்.

6 மற்றோர் ஓய்வு நாளில் செபக்கூடத்திற்குப் போய்ப் போதிக்கலானார். வலது கை சூம்பிப்போன ஒருவன் அங்கு இருந்தான்.

7 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் அவரிடம் குற்றம் காணும்படி, ஓய்வு நாளில் குணமாக்குவாரா என்று பார்த்துக் கொண்டே இருந்தனர்.

8 அவர்களுடைய எண்ணங்களை அவர் அறிந்து, சூம்பிய கையனை நோக்கி, "எழுந்து நடுவில் நில்" என்றார். அவன் எழுந்து நின்றான்.

9 இயேசு அவர்களிடம், "உங்களை ஒன்று கேட்கிறேன்: ஓய்வு நாளில் எது செய்வது முறை? பிறருக்கு நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?" என்று கேட்டார்.

10 எல்லாரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தபின், அவனை நோக்கி, "கையை நீட்டு" என்றார். அப்படியே செய்தான்: கை குணமாயிற்று.

11 அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாமென்று கலந்துபேசலாயினர்.

12 அந்நாட்களில் அவர் செபிக்கும்படி மலைக்குச் சென்று, கடவுளை வேண்டுவதில் இரவெல்லாம் கழித்தார்.

13 பொழுது புலர்ந்ததும், தம் சீடரை அழைத்து அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 'அப்போஸ்தலர்' என்று பெயரிட்டார்.

14 அவர்கள் யாரெனில்: இராயப்பர் என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் பெலவேந்திரர் யாகப்பர், அருளப்பர், பிலிப்பு, பார்த்தொலொமேயு,

15 மத்தேயு, தோமையார், அல்பேயின் மகன் யாகப்பர், 'தீவிரவாதி' எனப்படும் சீமோன்,

16 யாகப்பரின் சகோதரர் யூதா, காட்டிக்கொடுத்தவனான யூதாஸ் இஸ்காரியோத்தும் ஆவர்.

17 அவர் அவர்களோடு இறங்கி வந்து சமதளமான ஓரிடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் பெருங்கூட்டமாய் இருந்தனர். யூதேயா முழுவதிலிருந்தும் யெருசலேமிலிருந்தும், தீர், சீதோன் கடற்கரையிலிருந்தும் மாபெரும் திரளாக மக்களும் வந்திருந்தனர். அவர் சொல்லுவதைக் கேட்கவும், தங்கள் நோய்கள் நீங்கிக் குணமாகவும் அவர்கள் வந்திருந்தனர்.

18 அசுத்த ஆவிகளால் தொல்லைப் பட்டவர்கள் குணமானார்கள்.

19 அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு யாவரையும் குணமாக்கியதால், அங்குத் திரண்டிருந்த யாவரும் அவரைத் தொடுவதற்கு முயன்றனர்.

20 அவரோ தம் சீடரை ஏறெடுத்துப் பார்த்துக் கூறியதாவது: "ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்; ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே.

21 இப்பொழுது பசியாய் இருப்பவர்களே, நீங்கள் பேறுபெற்றவர்கள்; ஏனெனில், நிறைவு பெறுவீர்கள். "இப்பொழுது அழுபவர்களே, நீங்கள் பேறுபெற்றவர்கள்; ஏனெனில், சிரிப்பீர்கள்.

22 மனுமகன் பொருட்டு மனிதர் உங்களை வெறுத்துப் புறம்பாக்கி வசைகூறி, உங்கள் பெயரே ஆகாது என்று இகழ்ந்து ஒதுக்கும்பொழுது நீங்கள் பேறுபெற்றவர்கள்.

23 அந்நாளில் துள்ளி அகமகிழுங்கள். ஏனெனில், இதோ! வானகத்தில் உங்கள் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய முன்னோரும் இறைவாக்கினருக்கு அவ்வாறே செய்தனர்.

24 ஆனால் பணக்காரர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், உங்களுக்கு ஆறுதல் கிடைத்து விட்டது.

25 இப்பொழுது திருப்தியாயிருப்பவர்களே உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், பசியாயிருப்பீர்கள். "இப்பொழுது சிரிப்பவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், துயருற்று அழுவீர்கள்.

26 மனிதர் எல்லாரும் உங்களைப் புகழும்பொழுது உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், அவர்களுடைய முன்னோரும் போலித் தீர்க்கதரிசிகளுக்கு அவ்வாறே செய்தனர்.

27 "நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்: உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

28 உங்களைச் சபிக்கிறவர்களுக்கு ஆசிகூறுங்கள். உங்களைத் தூற்றுவோருக்காகச் செபியுங்கள்.

29 ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு, மறுகன்னத்தையும் காட்டு. உன் மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் மறுக்காதே.

30 உன்னிடம் கேட்பவன் எவனுக்கும் கொடு. உன் உடைமைகளைப் பறிப்பவனிடமிருந்து திருப்பிக் கேட்காதே.

31 பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

32 உங்களுக்கு அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்தால், அதனால் உங்களுக்கு என்ன பலன்? பாவிகளும் தமக்கு அன்பு செய்பவர்களுக்கு அன்பு செய்கின்றனரே.

33 உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால், அதனால் உங்களுக்கு என்ன பலன்? பாவிகளும் அவ்வாறு செய்கின்றனரே.

34 எவரிடமிருந்து திரும்பிப்பெற எதிர்ப்பார்க்கிறீர்களோ, அவர்களுக்கே கடன் கொடுத்தால் உங்களுக்கு என்ன பலன்? ஏனெனில், சரிக்குச் சரி பெறுமாறு பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கின்றனரே.

35 உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள். அவர்களுக்கு நன்மை புரியுங்கள். ஒன்றும் எதிர்பாராமல் கடன் கொடுங்கள். அப்போது உங்களுக்கு மிகுதியான கைம்மாறு கிடைக்கும். உன்னதரின் மக்களாயிருப்பீர்கள். ஏனெனில், அவர் நன்றிகெட்டவர்க்கும் தீயவர்க்கும் பரிவு காட்டுகிறார்.

36 உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.

37 தீர்ப்பிடாதீர்கள், நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். கண்டனம் செய்யாதீர்கள், கண்டனம் பெறமாட்டீர்கள்.

38 மன்னியுங்கள், மன்னிக்கப்படுவீர்கள். கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். ஏனெனில், எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்."

39 அவர்களுக்கு ஓர் உவமையும் கூறினார்: "குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? இருவரும் குழியில் விழமாட்டார்களா? சீடன் குருவுக்கு மேற்பட்டவனல்லன்.

40 தேர்ச்சிபெற்ற எவனும் தன் குருவைப் போன்றிருப்பான்.

41 உன் கண்ணிலே உள்ள விட்டத்தைக் கவனியாது, உன் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பைப் பார்ப்பதேன்?

42 உன் கண்ணிலுள்ள விட்டத்தைப் பார்க்காத நீ, உன் சகோதரனை நோக்கி, 'தம்பி, உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுக்கவிடு' என்று எப்படிச் சொல்லலாம்? வெளிவேடக்காரனே, முதலில் உன் கண்ணிலிருந்து விட்டத்தை எடுத்தெறி; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்க நன்றாய்க் கண்தெரியும்.

43 கெட்ட கனி தரும் நல்ல மரமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.

44 ஒவ்வொரு மரத்தையும் அறிவது அதனதன் கனியாலே. ஏனெனில், முட்செடியில் அத்திப்பழம் பறிப்பாருமில்லை; நெருஞ்சியில் திராட்சைக்குலை கொய்வாருமில்லை.

45 நல்லவன் தன் உள்ளமாகிய நற்கருவூலத்தினின்று நல்லவற்றை எடுத்துக்கொடுக்கிறான். தீயவனோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக்கொடுக்கிறான். ஏனெனில், உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும்.

46 "நான் சொல்லுவதைச் செய்யாமல் 'ஆண்டவரே, ஆண்டவரே' என்று என்னை நீங்கள் அழைப்பானேன்?

47 "என்னிடம் வந்து என் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவன் எவனும் யாருக்கு ஒப்பாவான் என்று உங்களுக்குக் கூறுவேன்.

48 அவன், ஆழத்தோண்டி, பாறைமீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டுகிறவனுக்கு ஒப்பாவான். ஆறு பெருக்கெடுத்து வீட்டின்மீது மோதியும், அதை அசைக்க முடியாமல் போயிற்று. ஏனெனில், நன்றாகக் கட்டியிருந்தது.

49 ஆனால், கேட்டும் அதன்படி நடக்காதவன், அடித்தளமில்லாமல் மண்மீது வீடு கட்டியவனுக்கு ஒப்பாவான். ஆறு அதன் மீது மோதியதும் அது இடிந்து விழுந்தது. அவ்வீட்டிற்குப் பெரும் அழிவு ஏற்பட்டது."

அதிகாரம் 07

1 இவை எல்லாம் மக்களுக்குச் சொல்லி முடித்தபின் இயேசு கப்பர்நகூம் ஊருக்கு வந்தார்.

2 நூற்றுவர்தலைவன் ஒருவனுடைய ஊழியன் நோயுற்றுச் சாகக்கிடந்தான். தலைவன் அவன்மீது மிகுந்த பற்றுக்கொணடிருந்தான்.

3 இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு, யூதரின் மூப்பரை அவரிடம் அனுப்பித் தன் ஊழியனைக் காப்பாற்ற வருமாறு வேண்டினான்.

4 அவர்களும் இயேசுவிடம் வந்து, வருந்திக் கேட்டதாவது: " உம்மிடம் இவ்வரம் பெறுவதற்கு அவர் தகுதியுள்ளவரே.

5 ஏனெனில், நம் மக்கள்மீது அவருக்கு அன்பு மிகுதி. நமக்கெனச் செபக்கூடம் கட்டியிருக்கிறார்."

6 இயேசு அவர்கள்கூடப் போனார். வீட்டுக்குச் சற்றுத் தொலைவிலிருந்தபொழுதே அவரிடம் நூற்றுவர் தலைவன் நண்பர்களை அனுப்பி," ஆண்டவரே, இவ்வளவு தொந்தரை வேண்டாம்; நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்.

7 அதனால்தான் நானும் உம்மிடம் வரத் தகுதியற்றவன் எனக் கருதினேன். ஒரு வார்த்தை சொல்லும். என் ஊழியன் குணமாகட்டும்.

8 ஏனெனில், நான் அதிகாரத்திற்கு உட்பட்டவனாயினும் எனக்கு அடியிலும் படைவீரர் உள்ளனர். ஒருவனை நோக்கி, ' போ ' என்றால், போகிறான்; வேறொருவனை நோக்கி, ' வா ' என்றால், வருகிறான். என் ஊழியனைப் பார்த்து, ' இதைச் செய் ' என்றால், செய்கிறான் " என்றான்.

9 அதைக் கேட்ட இயேசு அவனை வியந்து தம்மைப் பின்தொடரும் மக்கட் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "இஸ்ராயேல் மக்களிடையிலும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்றார்.

10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து ஊழியன் உடல்நலத்தோடு இருப்பதைக் கண்டார்கள்.

11 அதன்பின் நயீன் என்ற ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் திரளான மக்களும் அவரோடு சென்றுகொண்டிருந்தனர்.

12 இயேசு ஊர்வாயிலை நெருங்கியபொழுது, இறந்த ஒருவனைத் தூக்கிவந்தனர். தாய்க்கு அவன் ஒரே பிள்ளை. அவளோ கைம்பெண். ஊராரும் அவளோடு பெருங்கூட்டமாக இருந்தனர்.

13 அவளைக் கண்டு ஆண்டவர் அவள்மீது மனமிரங்கி, "அழாதே." என்றார்.

14 பின்பு முன்னால் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிவந்தவர்கள் நின்றார்கள். நின்றதும், "இளைஞனே, உனக்கு நான் சொல்லுகிறேன், எழுந்திரு" என்றார்.

15 இறந்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினான். தாயிடம் அவனை ஒப்படைத்தார்.

16 அனைவரையும் அச்சம் ஆட்கொள்ள, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியுள்ளார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று அவர்கள் கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.

17 அவரைப்பற்றிய பேச்சு யூதேயா முழுவதிலும் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

18 அருளப்பனின் சீடர் இவற்றையெல்லாம் அவருக்குத் தெரிவித்தனர்.

19 அருளப்பர் தம் சீடருள் இருவரை அழைத்து, "வரப்போகிறவர் நீர்தாமோ ? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ?" என்று கேட்டுவர ஆண்டவரிடம் அனுப்பினார்.

20 அவர்கள் அவரிடம் வந்து, "' வரப்போகிறவர் நீர்தாமோ? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ? என்று கேட்குமாறு ஸ்நாபக அருளப்பர் எங்களை உம்மிடம் அனுப்பினார்" என்று சொன்னார்கள்.

21 அந்நேரத்தில் நோய் நோக்காடுகளாலும், பொல்லாத ஆவிகளாலும் வருந்தியவர்களைக் குணமாக்கி, குருடர் பலருக்குப் பார்வை அளித்துக்கொண்டிருந்தார்.

22 அவர் அவர்களுக்கு மறுமொழியாக, "நீங்கள் போய்க் கண்டதையும் கேட்டதையும் அருளப்பருக்கு அறிவியுங்கள்: குருடர் பார்க்கின்றனர், முடவர் நடக்கின்றனர், தொழுநோயாளர் குணமடைகின்றனர், செவிடர் கேட்கின்றனர், இறந்தவர் உயிர்க்கின்றனர், எளியவருக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.

23 என்னைப்பற்றி இடறல்படாதவன் பேறுபெற்றவன்" என்றார்.

24 அருளப்பருடைய தூதர்கள் சென்ற பின்பு அவரைப்பற்றி மக்கட்கூட்டத்திற்கு இயேசு சொன்னதாவது: "எதைப் பார்க்கப் பாலைவனத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையோ?

25 பின் எதைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடை அணிந்த மனிதனையோ? இதோ! அலங்கார ஆடை அணிந்து இன்பமாய் வாழ்வோர் அரச மாளிகையில் உள்ளனர்.

26 பின் எதைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினருக்கும் மேலானவரைத்தான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

27 இவரைப்பற்றித்தான், 'இதோ! என் தூதரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்' என்று எழுதியுள்ளது.

28 "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பெண்களிடம் பிறந்தவர்களுள் அருளப்பருக்கு மேலானவர் யாருமில்லை. ஆயினும் கடவுளுடைய அரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்.

29 அருளப்பர் சொன்னதை மக்கள் எல்லாரும் கேட்டு, அவர் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பெற்று, கடவுளின் திட்டம் ஏற்றத்தக்கது என்று காட்டினார்கள். ஆயக்காரரும்கூட ஞானஸ்நானம் பெற்றனர்.

30 ஆனால் பரிசேயரும் சட்டவல்லுநரும் அவர் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பெறாமல் கடவுளுடைய திட்டத்தை, தங்களைப் பொறுத்தமட்டில், வீணாக்கினார்கள்.

31 " இத்தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன் ? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்?

32 பொது இடத்தில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் அழைத்து, ' நாங்கள் குழல் ஊதினோம், நீங்கள் ஆடவில்லை; நாங்கள் புலம்பினோம், நீங்கள் அழவில்லை ' என்று கூறும் சிறுவரைப் போன்றவர்கள் இவர்கள்.

33 ஏனெனில், ஸ்நாபக அருளப்பர் வந்தபோது அப்பம் உண்ணவில்லை, திராட்சை இரசம் குடிக்கவுமில்லை. ' அவரைப்பேய்பிடித்தவன்' என்று சொல்லுகிறீர்கள்.

34 மனுமகன் வந்தபோதோ உண்டார்; குடித்தார். 'அவரை இதோ! போசனப் பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன் ' என்று சொல்லுகிறீர்கள்.

35 ஆனால் தேவஞானம் சரி என்று அதை ஏற்றுக்கொண்ட மக்கள் அனைவராலும் விளங்கிற்று."

36 பரிசேயன் ஒருவன் அவரைத் தன்னுடன் உண்பதற்கு அழைத்தான். அவரும் பரிசேயனுடைய வீட்டுக்கு வந்து உணவருந்த அமர்ந்தார்.

37 இதோ! பாவி ஒருத்தி அந்நகரிலே இருந்தாள். பரிசேயனுடைய வீட்டில் அவர் உணவருந்தப்போகிறார் என்று அறிந்து பரிமளத்தைலம் நிறைந்த படிகச்சிமிழ் ஒன்றை எடுத்து வந்தாள்.

38 அவருடைய கால்மாட்டில் பின்புறமாக இருந்து, அழுதுகொண்டே அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு அப்பாதங்களில் தைலம் பூசினாள்.

39 அவரை அழைத்த பரிசேயன் இதைக் கண்டு, "இவர் இறைவாக்கினராய் இருந்தால் தம்மைத்தொடும் இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார். இவளோ பாவி" என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

40 இயேசு அவனை நோக்கி, " சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும் " என்றான்.

41 "கடன் கொடுப்பவன் ஒருவனுக்கு கடன்காரர் இருவர் இருந்தனர். ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கடன்பட்டிருந்தனர்.

42 கடனைத் திருப்பிக்கொடுக்க அவர்களால் முடியாமற்போகவே இருவர்கடனையும் மன்னித்துவிட்டான். அவர்களுள் யார் அவனுக்கு அதிகமாக அன்புசெய்வான்?"

43 யாருக்கு அதிகக் கடனை மன்னித்தானோ அவன்தான் என்று நினைக்கிறேன்" என்றான் சீமோன். " நீர் சொன்னது சரி என்றார் அவர்.

44 பின்பு அப்பெண்ணின் பக்கம் திரும்பி, சீமோனிடம், " இவளைப் பார்த்தீரா? நான் உம் வீட்டுக்குள் வந்தபொழுது, நீர் என் பாதங்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவளோ என் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்தாள்.

45 நீர் எனக்கு முத்தமளிக்கவில்லை; இவளோ, நான் உள்ளே வந்ததுமுதல் என் பாதங்களை முத்தம் செய்து ஓயவில்லை.

46 நீர் என் தலையில் எண்ணெய் பூசவில்லை; இவளோ என் பாதங்களுக்குப் பரிமளத்தைலம் பூசினாள்.

47 அதனால் நான் உமக்குச் சொல்வதாவது: அவள் செய்த பாவங்கள் பல மன்னிக்கப்பட்டன. அவள் காட்டிய பேரன்பே அதற்குச் சான்று. குறைவாக மன்னிப்புப் பெறுபவனோ குறைவாக அன்புசெய்கிறான் " என்றார்.

48 பின் அவளை நோக்கி, " உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.

49 " பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?" என்று அவரோடு பந்தி அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

50 அவரோ அப்பெண்ணை நோக்கி, "உன் விசுவாசம் உன்னை மீட்டது, சமாதானமாய்ப் போ" என்றார்.

அதிகாரம் 08

1 பின்னர் கடவுளின் அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே இயேசு ஊர் ஊராய்ச் செல்லலானார். பன்னிருவரும் அவருடன் சென்றனர்.

2 பொல்லாத ஆவிகளினின்றும் பிணிகளினின்றும் குணமான பெண்கள் சிலரும் அவர்களோடு இருந்தனர். இப்பெண்கள் யாரெனில், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மதலேன் என்னும் மரியாள்,

3 ஏரோதின் காரியத்தலைவன் கூசாவின் மனைவி அருளம்மாள், சூசன்னா, மற்றும் பெண்கள் பலர் இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.

4 பெருந் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் அவரிடம் வந்தபோது அவர் உவமையாகக் கூறியது:

5 "விதைப்பவன் விதையை விதைக்கச் சென்றான். விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரமாய் விழுந்தன; அவை மிதிபட்டு வானத்துப் பறவைகளால் தின்னப்பட்டன.

6 சில பாறைமீது விழுந்தன; முளைத்தும் ஈரமின்மையால் காய்ந்துபோயின

7 சில முட்செடிகளின் நடுவே விழுந்தன; 'கூடவளர்ந்த முட்செடிகளோ அவற்றை நெரித்துவிட்டன.

8 சில நன்னிலத்தில விழுந்தன; அவை முளைத்து நூறு மடங்கு பலன் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்."

9 பின்னர், அவருடைய சீடர், "இவ்வுவமையின் பொருள் யாது?" என்று வினவினர்.

10 அவர் அவர்களுக்குச் கூறியது: "கடவுளுடைய அரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவாறும், கேட்டும் உணராதவாறும் அவை உவமைகளாகக் கூறப்பட்டன.

11 "இந்த உவமையின் பொருளாவது: விதை கடவுளின் வார்த்தை.

12 வழியோரமாய் விழுந்த விதை, அவ்வார்த்தையைக் கேட்பவர்களைக் குறிக்கிறது. அவர்கள் அதைக் கேட்கிறார்கள். ஆனால், அலகை வந்து அவர்கள் விசுவாசித்து மீட்புப்பெறாதபடி அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.

13 பாறைமீது விழுந்த விதை, அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கிறது. மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலம் விசுவசித்து, சோதனை வேளையில் பின்வாங்குகிறார்கள்.

14 முட்செடிகள் நடுவில் விழுந்த விதை, வார்த்தையைக் கேட்கும் வேறு சிலரைக் குறிக்கிறது. அவர்களும் கேட்கிறார்கள். ஆனால், நாளாவட்டத்தில் கவலைகள், செல்வம், வாழ்வின் இன்பங்களால் அது நெரிக்கப்பட்டு முதிர்ச்சியடைவதில்லை.

15 நல்ல நிலத்தில் விழுந்த விதையோ வார்த்தையைக் கேட்டுச் சீரிய செம்மனத்தில் பதித்து நிலையாயிருந்து பலன் அளிப்பவர் ஆவர்.

16 எவனும் விளக்கை ஏற்றிப் பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. உள்ளே வருபவர் ஒளியைக் காணும்படி அதை விளக்குத் தண்டின் மீது வைப்பான்.

17 வெளிப்படாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. அறியப்படாமலும் வெளியாகாமலும் மறைந்திருப்பது ஒன்றுமில்லை.

18 ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் தேவவார்த்தையைக் கேட்கிறீர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். உள்ளவனுக்குக் கொடுக்கப்படும். இல்லாதவனிடமிருந்து, உள்ளதாகக் கருதுவதும் எடுக்கப்படும்."

19 அவருடைய தாயும் சகோதரரும் அவரிடம் வந்தனர். ஆனால் கூட்ட மிகுதியினால் அவரை அணுகமுடியவில்லை.

20 உம் தாயும் சகோதரரும் உம்மைக் காண விரும்பி வெளியே நிற்கின்றனர்" என்று அவருக்கு அறிவித்தனர்.

21 அதற்கு அவர், "கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்" எனக் கூறினார்.

22 ஒருநாள் தம்முடைய சீடரோடு படகேறி, "ஏரியின் அக்கரைக்குச் செல்வோம்" என அவர்களுக்குச் சொன்னார். அவர்களும் படகைச் செலுத்தினார்கள்.

23 அவர்கள் படகு ஓட்டுகையில் அவர் உறங்கினார். அப்போது புயற்காற்று கடலில் வீசியது. படகு நீரால் நிறைந்துபோகவே, அவர்கள் ஆபத்திற்குள்ளானார்கள்.

24 அவரிடம் வந்து, "குருவே, குருவே, மடிந்துபோகிறோம்" என்று அவரை எழுப்பினர். அவர் எழுந்து காற்றையும் கொந்தளிப்பையும் கடியவே, அவை அடங்கின. அமைதி உண்டாயிற்று.

25 பின்னர், அவர் அவர்களிடம், "உங்கள் விசுவாசம் எங்கே?" என்றார். அவர்களோ அச்சமுற்று, "காற்றுக்கும் கடலுக்கும் இவர் ஆணையிட அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யாராயிருக்கலாம்!" என்று ஒருவருக்கொருவர் வியப்புடன் பேசிக்கொண்டனர்.

26 பின்பு கலிலேயாவிற்கு எதிரே இருக்கும் கெரசேனர் நாட்டை நோக்கிப் படகை ஓட்டினர்.

27 கரையேறியதும் அந்த ஊரைச் சார்ந்த ஒருவன் அவருக்கு எதிரே வந்தான். அவன் பேய்பிடித்தவன். நெடுநாளாய் ஆடையணியாது, வீட்டிலும் தங்காது, கல்லறைகளில் தங்கியிருந்தான்.

28 இயேசுவைக் கண்டதும், கூக்குரலிட்டு அவர்முன் விழுந்து, " இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, என் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர் ? உம்மை மன்றாடுகிறேன்: என்னை வதைக்கவேண்டாம்" என உரக்கக் கத்தினான்.

29 ஏனெனில், அம்மனிதனை விட்டகலும்படி இயேசு அசுத்த ஆவிக்குக் கட்டளையிட்டிருந்தார். எத்தனையோ முறை அது அவனைப் பிடித்து ஆட்டியிருக்கிறது. அவன் சங்கலியும் விலங்கும் மாட்டிக் காவல்காக்கப்பட்டிருந்தும் அவ்வேளைகளில் கட்டுகளை உடைப்பான்; பேயும் அவனைப் பாலைவனத்திற்கு இழுத்துச் செல்லும்.

30 " உன் பெயர் என்ன?" என்று இயேசு அவனைக் கேட்டார். "படை" என்றான்.- ஏனெனில், பல பேய்கள் அவனுக்குள் புகுந்திருந்தன.-

31 பாதாளத்திற்குச் செல்லத் தங்களுக்குக் கட்டளை இடாதபடி அவரை வேண்டின.

32 அங்கே பல பன்றிகள் கூட்டமாக மலையில் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றிற்குள் போக விடையளிக்குமாறு பேய்கள் அவரை வேண்டவே, அவர் விடைகொடுத்தார்.

33 பேய்கள் அம்மனிதனை விட்டுப் பன்றிகளுக்குள் புகுந்தன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து மூழ்கிப்போயிற்று.

34 மேய்ந்தவர்களோ நடந்ததைக் கண்டு ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் அறிவித்தார்கள்.

35 அதைக் காண மக்கள் புறப்பட்டு இயேசுவிடம் வந்தனர். பேய்கள் நீங்கியவன் தன்னுணர்வுடன் ஆடை அணிந்து இயேசுவின் காலடியில் இருக்கக் கண்டு, அஞ்சினர்.

36 நடந்ததைக் கண்டவர்கள், பேய்பிடித்தவன் எப்படி விடுவிக்கப் பெற்றான் என்று அவர்களுக்கு அறிவித்தனர்.

37 கெரசேனர் நாட்டு மக்கள் எல்லாரும் திரண்டு வந்து, தங்களை விட்டகலும்படி அவரைக் கேட்டனர். ஏனெனில், அச்சம் அவர்களை ஆட்கொண்டது. அவர் படகிலேறித் திரும்பிப்போனார்.

38 பேய்கள் நீங்கியவன் "நானும் உம்மோடு வரவிடும்" என்று மன்றாடினான்.

39 இயேசுவோ, "நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போ. கடவுள் உனக்குச் செய்ததெல்லாம் தெரியப்படுத்து" என்று கூறி அவனை அனுப்பிவிட்டார். அவன் நகரெங்கும் சென்று இயேசு தனக்குச் செய்ததெல்லாம் அறிவிக்கலானான்.

40 இயேசு திரும்பி வரும்போது, மக்கள் திரள் அவரை வரவேற்றது. ஏனெனில், எல்லாரும் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

41 இதோ! செபக்கூடத்தலைவனான யாயீர் என்னும் ஒருவன் வந்து இயேசுவின் காலில் விழுந்து தன் வீட்டுக்கு வரும்படி வேண்டினான்.

42 ஏறக்குறைய பன்னிரண்டு வயதுள்ள அவனுடைய ஒரே மகள் சாகக்கிடந்தாள். அவர் போகையில் மக்கள் திரள் அவரை நெருக்கியது.

43 பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி அக்கூட்டத்தில் இருந்தாள். ஒருவராலும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை.

44 அவள் அவருக்குப் பின்னே சென்று அவருடைய போர்வையின் விளிம்பைத் தொட்டவுடனே பெரும்பாடு நின்றது.

45 என்னைத் தொட்டது யார்?" என்று இயேசு கேட்டார். "யாரும் தொடவில்லை" என்று அனைவரும் சொல்ல, இராயப்பரும் அவருடன் இருந்தோரும், "குருவே, மக்கள் திரள் உம்மைச் சூழ்ந்து நெருக்குகிறதே" என்றனர்.

46 "யாரோ என்னைத் தொட்டார்கள், வல்லமை என்னிடமிருந்து வெளியேறியதை நான் உணர்ந்தேன்" என்று இயேசு கூறினார்.

47 தான் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து, அவள் நடுங்கிக்கொண்டு அவரிடம் வந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும், உடனே குணமானதையும் எல்லாருக்கும் முன்பாகத் தெரிவித்தாள்.

48 அவரோ அவளை நோக்கி, "மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று. சமாதானமாய்ப் போ" என்றார்.

49 அவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, செபக்கூடத் தலைவன் வீட்டிலிருந்து ஒருவன் வந்து, "உம் மகள் இறந்துவிட்டாள். போதகரை இனித் தொந்தரை செய்யாதீர்" என்றான்.

50 இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தகப்பனிடம், "அஞ்சாதே, விசுவசி, அதுபோதும்; அவள் பிழைப்பாள்" என்றார்.

51 அவர் வீட்டிற்கு வந்ததும் இராயப்பர், யாகப்பர், அருளப்பர், சிறுமியின் தாய் தந்தையர் இவர்களைத் தவிர வேறெவரையும் தம்மோடு உள்ளே வரவிடவில்லை.

52 அனைவரும் அவளுக்காக மாரடித்து அழுதுகொண்டிருந்தனர். அவரோ, "அழ வேண்டாம். அவள் சாகவில்லை, தூங்குகிறாள்" என்றார்.

53 ஆனால் அவர்கள், அவள் இறந்துவிட்டாள் என அறிந்திருந்ததால் அவரை ஏளனம் செய்தார்கள்.

54 அவரோ, அவள் கையைப் பிடித்து, "குழந்தாய், எழுந்திரு " என்று கூப்பிட்டார்.

55 உயிர் திரும்பி வரவே, அவள் உடனே எழுந்தாள். அவளுக்கு உணவு கொடுக்கச் சொன்னார்.

56 அவளுடைய பெற்றோர் திகைத்துப் போயினர். நிகழ்ந்ததை எவருக்கும் சொல்ல வேண்டாம் என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

அதிகாரம் 09

1 பன்னிருவரையும் அழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் நோய்களைக் குணமாக்கவும், வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்கு அளித்தார்.

2 இறையரசைப்பற்றிச் செய்தியை அறிவிக்கவும் நோயாளிகளைக் குணமாக்கவும் அவர்களை அனுப்பினார்.

3 அப்போது அவர்களைப் பார்த்து, "வழிப்பயணத்திற்குக் கோலோ பையோ, உணவோ பணமோ, ஒன்றும் எடுத்துச் சொல்லாதீர்கள். இரண்டு உள்ளாடைகளை யாரும் வைத்திருக்க வேண்டாம்.

4 எந்த வீட்டுக்குப் போனாலும், அங்கே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள்.

5 யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிடின் அவர்களுடைய ஊருக்கு வெளியே போய் அவர்களுக்கு எதிர்சாட்சியாக உங்கள் கால்களிலிருக்கும் தூசியைத் தட்டிவிடுங்கள்" என்றார்.

6 அவர்கள் புறப்பட்டு ஊர் ஊராகச் சென்று, எங்கும் நற்செய்தியைப் பரப்பி நோயாளிகளைக் குணமாக்கினர்.

7 நிகழ்ந்ததெல்லாம் கேள்வியுற்ற சிற்றரசன் ஏரோது மனம் கலங்கினான். ஏனெனில், சிலர், "அருளப்பர் இறந்தோரிடமிருந்து உயிர்த்திருக்கிறார்" என்றனர்.

8 வேறு சிலர், "எலியாஸ் மறுபடியும் தோன்றியிருக்கிறார்" என்றனர். மற்றும் சிலர், "முற்காலத்து இறைவாக்கினர்களுள் ஒருவர் உயிர்த்தெழுந்திருக்கிறார்" என்றனர்.

9 ஏரோதோ, "அருளப்பரா? அவர் தலையை நான்தான் வெட்டினேனே. இவர் யாரோ? இவரைப்பற்றி இப்படியெல்லாம் கேள்விப்படுகிறேனே" என்று சொல்லி, அவரைக் காண வாய்ப்புத் தேடினான்.

10 அப்போஸ்தலர் திரும்பி வந்து தாங்கள் செய்ததெல்லாம் அவருக்குத் தெரிவித்தனர். அவர் அவர்களை அழைத்துக் கொண்டு தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் ஊருக்குச் சென்றார்.

11 அதை அறிந்த மக்கள் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் அவர்களை வரவேற்றுக் கடவுளின் அரசைப்பற்றி அவர்களுக்குப் போதித்து, குணமாக வேண்டியவர்களைக் குணமாக்கினார்.

12 பொழுது சாயத்தெடங்கவே, பன்னிருவர் அவரிடத்தில் வந்து, "சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் போய், விடுதியும் உணவும் பார்த்துக்கொள்ளும்படி மக்களை அனுப்பிவிடும். நாமுள்ள இடமோ பாழ்வெளி" என்றனர்.

13 அதற்கு அவர், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்றார். அவர்களோ, "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தான் உண்டு. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால் தான் முடியும்" என்றனர்.

14 ஏனெனில், ஆண்களே, ஏறக்குறைய ஐயாயிரம் பேர் இருந்தனர். அவர் சீடர்களை நோக்கி, "இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தி அமரச் செய்யுங்கள்" என்றார்.

15 அவர்கள், அவர் சொன்னபடியே, அனைவரையும் பந்தி அமரச் செய்தார்கள்.

16 அதன்பின், ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைபுகழ் கூறி, பிட்டு, சீடருக்கு அளித்து மக்கட்கூட்டத்திற்குப் பரிமாறச் சொன்னார்.

17 அனைவரும் வயிறார உண்டனர். மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

18 ஒருநாள் இயேசு தனியே செபித்துக்கொண்டிருக்கும்பொழுது, அவருடைய சீடரும் அவருடன் இருந்தனர். அவர் அவர்களை நோக்கி, "மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?" எனக்கேட்டார்.

19 அவர்கள், "சிலர் ஸ்நாபக அருளப்பர் என்றும், சிலர் எலியாஸ் என்றும், சிலர் முற்காலத்து இறைவாக்கினர்களுள் ஒருவர் உயிர்த்தார் என்றும் சொல்லுகின்றனர்" என்றார்கள்.

20 "நீங்களோ என்னை யார் என்று அவர்களைக் கேட்டார். இராயப்பர் மறுமொழியாக, "நீர் கடவுளின் மெசியா" என்றார்.

21 இதை ஒருவருக்கும் சொல்லக்கூடாது என்று கண்டிப்பான கட்டளை இட்டார்.

22 மேலும், "மனுமகன் பாடுகள் பல படவும். மூப்பராலும் தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு, கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று சொன்னார்.

23 அவர்கள் எல்லாரையும் பார்த்து, "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.

24 ஏனெனில், தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துவிடுவான். என்பொருட்டுத் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக் கொள்வான்.

25 ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன்னையே பாழாக்கினால் பயன் என்ன? தனக்கே கேடு வருவித்தால் பயன் என்ன?

26 என்னைப் பற்றியும் என் வார்த்தைகளைப் பற்றியும் வெட்கப்படுகிறவன் எவனோ, அவனைப் பற்றி மனுமகன் தமக்கும் தந்தைக்கும் பரிசுத்த வானதூதருக்கும் உரிய மாட்சிமையில் வரும்பொழுது வெட்கப்படுவார்.

27 "நான் உங்களுக்கு உண்மையாகச் சொல்லுவதாவது: கடவுளின் அரசைக் காணும்வரை இங்கிருப்பவர்களுள் சிலர் சாவுக்குள்ளாக மாட்டார்கள்" என்றார்.

28 இதெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டு நாள் ஆனபின்பு, இராயப்பரையும் யாகப்பரையும் அருளப்பரையும் அழைத்துக் கொண்டு செபம் செய்ய மலை மீது ஏறினார்.

29 அவர் செபித்துக்கொண்டிருக்கும்பொழுது அவரது முகத்தோற்றம் மாறியது. அவரது ஆடையும் வெண்மையாய் ஒளிவீசியது.

30 இதோ! அவருடன் இருவர் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் மோயீசனும் எலியாசும்.

31 அவர்கள் விண்ணொளியிடையே தோன்றி, யெருசலேமில் நிறைவேறப் போகின்ற அவருடைய இறுதிப் பயணம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.

32 இராயப்பரும் அவரோடு இருந்தவர்களும் தூக்க மயக்கமாயிருந்தனர். விழித்தெழுந்து, அவருடைய மாட்சிமையையும், அவரோடு நின்ற இருவரையும் கண்டனர்.

33 அவ்விருவரும் அவரை விட்டுப் பிரியும்பொழுது இராயப்பர் இயேசுவிடம், "குருவே, நாம் இங்கே இருப்பது எத்துணை நன்று! உமக்கொன்றும், மோயீசனுக்கொன்றும், எலியாசுக்கொன்றுமாகக் கூடாரம் மூன்று அமைப்போம்" என்று- தாம் சொல்லுவது இன்னதென்று அறியாமல்- கூறினார்.

34 அவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்பொழுது, மேகம் ஒன்று வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அவர்கள் அம்மேகத்தினுள் நுழையும்போது, சீடர்கள் அச்சம் கொண்டனர்.

35 அப்பொழுது, "இவரே என் மகன், நான் தேர்ந்துகொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற குரலொலி மேகத்திலிருந்து கேட்டது.

36 அக்குரலொலி கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். அவர்களோ தாம் கண்டவற்றை அந்நாட்களில் ஒருவரிடமும் சொல்லாமல் மௌனங்காத்தனர்.

37 மறுநாள் அவர்கள் மலையிலிருந்து இறங்கி வரும்பொழுது பெருங்கூட்டம் ஒன்று அவர்களை எதிர்கொண்டது.

38 கூட்டத்திலிருந்த ஒருவன், "போதகரே, என் மகனைக் கடைக்கண் நோக்குமாறு உம்மை மன்றாடுகிறேன். 'அவன் எனக்கு ஒரே மகன்.

39 இதோ! ஆவி அவனை ஆட்கொள்ளுகிறது, திடீரென்று கத்துகிறான். அவன் நுரைதள்ளுகிறான். அவனை அலைக்கிழிக்கின்றது. அவனை நொறுக்கி விடுகிறது. எளிதில் அவனை விட்டுப்போவதில்லை.

40 அதை ஓட்டும்படி உம் சீடரை மன்றாடினேன். அவர்களால் முடியவில்லை" என்று கத்தினான்.

41 அதற்கு இயேசு, "விசுவாசமில்லாத சீர்கெட்ட தலைமுறையே, எதுவரை உங்களுடன் இருந்து உங்களைப் பொறுத்துக் கொண்டிருப்பேன்? உன் மகனை இங்குக் கெண்டுவா" என்றார்.

42 அச்சிறுவன் வந்து கொண்டிருக்கையிலேயே பேய் அவனைக் கீழே தள்ளி அலைக்கழித்தது. இயேசு அசுத்த ஆவியைக் கடிந்து, சிறுவனைக் குணமாக்கி, அவனுடைய தந்தையிடம் ஒப்படைத்தார்.

43 அனைவரும் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்துப்போயினர். 'அவர் செய்ததெல்லாம் பார்த்து எல்லாரும் வியந்து கொண்டிருக்க,

44 இயேசு சீடரிடம், "நான் சொல்லுவதை மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: மனுமகன் மனிதரிடம் கையளிக்கப்படப் போகிறார்" என்றார்.

45 அவர்களோ அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு அது மறைபொருளாயிருந்தது. ஆயினும் அவர் சொன்னதைப்பற்றி அவரைக் கேட்க அஞ்சினர்.

46 தங்களுள் பெரியவன் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.

47 இயேசு, அவர்கள் உள்ளக்கருத்தை அறிந்து, ஒரு குழந்தையின் கையைப் பிடித்துத் தம் அருகே நிறுத்தி,

48 அவர்களை நோக்கி, "என் பெயரால் இக்குழந்தையை ஏற்றுக்கொள்பவன் எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள்பவன் எவனும் என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்ளுகிறான். உங்கள் அனைவருள் சிறியவன் எவனோ, அவனே பெரியவன்" என்றார்.

49 குருவே, ஒருவன் உம் பெயரால் பேயோட்டுவதைக் கண்டு அவனைத் தடுக்கப்பார்த்தோம். ஏனெனில், அவன் நம்மைச் சாராதவன்" என்று அருளப்பர் கூறினார்.

50 இயேசு அவரை நோக்கி, "அவனைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், உங்களுக்கு எதிராக இல்லாதவன் உங்கள் சார்பாக இருக்கிறான்" என்றார்.

51 இயேசு விண்ணேற்படையும் நாட்கள் நெருங்கிவரவே, யெருசலேமுக்குச் செல்ல முனைந்து நின்றவராய்,

52 தமக்கு முன்பாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் சென்று முன்னேற்பாடு செய்யும்படி சமாரியருடைய ஊர் ஒன்றுக்கு வந்தார்கள்.

53 அவர் யெருசலேமுக்குச் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

54 அவருடைய சீடர் யாகப்பரும் அருளப்பரும் இதைக் கண்டு, "ஆண்டவரே, இவர்களை அழிக்க வானத்திலிருந்து நெருப்பு விழும்படி நாங்கள் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறீரோ?" என்றனர்.

55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி அவர்களைக் கடிந்துகொண்டார்.

56 பின்பு, வேறு ஓர் ஊருக்குச் சென்றனர்.

57 அவர்கள் வழியேபோகையில் ஒருவன் அவரிடம், "நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்செல்வேன்" என்றான்.

58 இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" என்றார்.

59 அவர் வேறொருவனை நோக்கி, "என்னைப் பின்செல்" என, அவன், "ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர விடைகொடும்" என்றான்.

60 இயேசு அவனைப் பார்த்து, "இறந்தோர் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும். நீ போய் கடவுளுடைய அரசை அறிவி" என்றார்.

61 இன்னொருவன், "ஆண்டவரே, உம்மைப் பின்செல்வேன்; ஆனால் முதலில் வீட்டில் சொல்லிவிட்டுவர விடைதாரும்" என்றான்.

62 இயேசுவோ அவனை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவன் எவனும் கடவுளின் அரசிற்குத் தகுதியற்றவன்" என்றார்.

அதிகாரம் 10

1 இதற்குப்பின், ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் அவர்களை இருவர் இருவராகத் தமக்குமுன்னால் அனுப்பினார்.

2 அப்போது அவர்களைப் பார்த்துக் கூறினதாவது: "அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்.

3 செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்.

4 பணப்பையோ கைப்பையோ மிதியடியோ எதுவும் எடுத்துச் செல்லவேண்டாம். வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்தவேண்டாம்.

5 நீங்கள் எந்த வீட்டுக்குப் போனாலும், முதலில், 'இவ்வீட்டுக்குச் சமாதானம்' என்று வாழ்த்துங்கள்.

6 சமாதானத்துக்குரியவன்அங்கு இருந்தால், உங்கள் சமாதானம் அவனிடம் தங்கும்; இல்லையேல் உங்களிடம் திரும்பிவிடும்.

7 அவர்களிடம் உள்ளதை உண்டு குடித்து அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில், வேலையாள் கூலிக்கு உரிமை உடையவன். வீடு வீடாய்ச் செல்லவேண்டாம்.

8 நீங்கள் போகும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுகிறதை உண்டு,

9 அங்குள்ள பணியாளரைக் குணமாக்கி, கடவுளின் அரசு உங்களை நெருங்கியுள்ளது' என்று மக்களுக்குத் தெரிவியுங்கள்.

10 மாறாக, நீங்களும் போகும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தெருவில் சென்று,

11 'எங்கள் காலில் ஒட்டிய உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிப்போடுகிறோம்; இருப்பினும் கடவுளின் அரசு நெருங்கியுள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள்.

12 அந்நாளில் சோதோமுக்கு நேரிடுவது அவ்வூருக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாயிராது என உங்களுக்குக் கூறுகிறேன்.

13 " கொராசின் நகரே, உனக்கு ஐயோ கேடு! பெத்சாயிதா நகரே, உனக்கு ஐயோ கேடு! ஏனெனில், உங்களிடம் செய்த புதுமைகள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருப்பின், முன்பே கோணி உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பர்.

14 ஆனால், தீர்வைநாளில் தீர், சீதோனுக்கு நேரிடுவது உங்களுக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாயிராது.

15 கப்பர்நகூமே, வானளாவ உயர்வாயோ ? பாதாளம்வரை தாழ்ந்திடுவாய்.

16 " உங்களுக்குச் செவிசாய்ப்பவன் எனக்குச் செவிசாய்க்கிறான். உங்களைப் புறக்கணிப்பவன் என்னைப் புறக்கணிக்கிறான். என்னைப் புறக்கணிப்பவனோ என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறான்."

17 பின்பு, எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் வந்து, "ஆண்டவரே, உம் பெயரால் பேய்கள்கூட எங்களுக்கு அடங்குகின்றன" என்றனர்.

18 அதற்கு அவர், " வானத்தினின்று மின்னலைப்போலச் சாத்தான் விழக் கண்டேன்.

19 இதோ! பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வலிமையை வெல்லவும் உங்களுக்கு வல்லமை அளித்தேன்.

20 எதுவும் உங்களுக்குத் தீங்கு இழைக்காது. ஆயினும் ஆவிகள் உங்களுக்கு அடங்கி இருக்கின்றன என்று மகிழவேண்டாம். ஆனால் உங்கள் பெயர் வானகத்தில் எழுதியுள்ளது என்றே மகிழுங்கள்" என்றார்.

21 அந்நேரத்தில் இயேசு பரிசுத்த ஆவியினால் அக்களிப்புற்றுக் கூறியதாவது: " தந்தையே, விண்ணிற்கும் மண்ணிற்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் இவற்றை மறைத்துச் சிறுவருக்கு வெளிப்படுத்தியதால் உம்மைப் புகழ்கிறேன். ஆம், தந்தாய், இதுவே உமது திருவுள்ம்.

22 என் தந்தை எல்லாவற்றையும் எனக்குக் கையளித்துள்ளார். மகன் யாரென்று தந்தையன்றி வேறெவனும் அறியான். தந்தை யாரென்று மகனும், மகன் எவனுக்கு வெளிப்படுத்துவாரோ அவனுமன்றி வேறெவனும் அறியான்."

23 அவர் தம் சீடர்பக்கம் திரும்பி அவர்களுக்கு மட்டும் தனிமையாகக் கூறியதாவது: "நீங்கள் காண்பதைக் காணும் கண்கள் பேறுபெற்றவை.

24 ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: இறைவாக்கினர், அரசர் பலர் நீங்கள் காண்பதைக் காணவிரும்பியும் காணவில்லை. நீங்கள் கேட்பதைக் கேட்கவிரும்பியும் கேட்கவில்லை."

25 சட்ட வல்லுநர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்க, "போதகரே, முடிவில்லாத வாழ்வு பெற, நான் செய்யவேண்டிய தென்ன?" என்று வினவினார்.

26 அதற்கு அவர், " திருச் சட்ட நூலில் என்ன எழுதியுள்ளது? அதில் என்ன வாசிக்கிறீர் ?" என்றார்.

27 அவர் மறுமொழியாக, "உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு வலிமையோடும் முழு மனத்தோடும் அன்புசெய்வாயாக. உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல், உன் அயலான்மீதும் நீ அன்புகாட்டுவாயாக" என்றார்.

28 அவரோ, "சரியாய்ப் பதில்சொன்னீர்; இப்படியே செய்யும்; வாழ்வீர் " என்றார்.

29 அவர், தாம் கேட்டது சரியான கேள்வி என்று காட்ட விரும்பி, " என் அயலான் யார்?" என்று இயேசுவை வினவினார்.

30 அதற்கு இயேசு, "யெருசலேமிலிருந்து யெரிக்கோவுக்கு ஒருவன் இறங்கிச் செல்லுகையில், கள்வர்கையில் அகப்பட்டான். அவர்கள் அவன் ஆடைகளைப் பறித்துக்கொண்டு அவனைக் காயப்படுத்திக் குற்றுயிராய் விட்டுச் சென்றார்கள்.

31 அதே வழியாக ஒரு குருவும் இறங்கிச் செல்ல நேர்ந்தது. அவர் அவனைக் கண்டும் விலகிச்சென்றார்.

32 அவ்வாறே லேவியன் ஒருவனும் அவ்விடத்துக்கு வந்து அவனைக் கண்டு விலகிச்சென்றான்.

33 ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன் அவனருகில் வந்து, அவனைக் கண்டு, மனமிரங்கினான்.

34 அவனை அணுகி எண்ணெயும் திராட்சை இரசமும் வார்த்து, அவன் காயங்களைக் கட்டித் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவனைக் கண்காணித்தான்.

35 மறுநாள் இரு வெள்ளிக்காசுகளை எடுத்துச் சாவடிக்காரனிடம் கொடுத்து, 'இவனைக் கண்காணித்துக் கொள். இதற்குமேல் செலவானால் திரும்பி வரும்போது கொடுத்துவிடுவேன்' என்றான்.

36 கள்வர்கையில் அகப்பட்டவனுக்கு இம்மூவருள் எவன் அயலான் என்று உமக்குத் தோன்றுகிறது ?" என்றார்.

37 அதற்கு அவர், "அவனுக்கு இரக்கம் காட்டியவன்தான்" என்றார். இயேசு, " நீரும் போய் அவ்வாறே செய்யும்" என்று கூறினார்.

38 அவர்கள் போகும்பொழுது ஓர் ஊருக்குள் வர, மார்த்தாள் என்னும் பெண் ஒருத்தி தன் வீட்டில் அவரை வரவேற்றாள்.

39 அவளுக்கு மரியாள் என்னும் சகோதரி இருந்தாள். அவள் ஆண்டவருடைய காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

40 மார்த்தாளோ பலவகையாய்ப் பணிவிடை புரிவதில் பரபரப்பாயிருந்தாள். அவள் வந்து, "ஆண்டவரே, நான் உமக்குப் பணிபுரிய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா ? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும்" என்றாள்.

41 அதற்கு ஆண்டவர், " மார்த்தா, மார்த்தா, நீ பல காரியங்களைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.

42 ஆனால், தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது " என்றார்.

அதிகாரம் 11

1 அவர் ஒருநாள் ஓரிடத்தில் செபம் செய்துகொண்டிருந்தார். அது முடிந்தபின், சீடருள் ஒருவர் அவரைப் பார்த்து, "ஆண்டவரே, அருளப்பர் தம் சீடருக்குச் செபிக்கக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்" என்றார்.

2 அதற்கு அவர், "நீங்கள் செபிக்கும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்: 'தந்தாய், உமது பெயர் பரிசுத்தம் எனப் போற்றப்படுக, உமது அரசு வருக;

3 எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு நாள்தோறும் அளித்தருளும்,

4 எங்கள் பாவங்களை மன்னித்தருளும், ஏனெனில், எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர் அனைவரையும் நாங்களும் மன்னிக்கிறோம். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் " ' என்றார்.

5 மேலும் "உங்களுள் ஒருவன் தன் நண்பனிடமே நள்ளிரவில் சென்று, ' நண்பா, எனக்கு மூன்று அப்பம் கடன்கொடு.

6 ஏனெனில், பயணம்செய்யும் என் நண்பன் ஒருவன் என்னிடம் வந்திருக்கிறான். அவனுக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை ' என்று சொல்லுகிறான் என வைத்துக் கொள்வோம்.

7 அவனும் உள்ளிருந்து மறுமொழியாக, ' என்னைத் தொந்தரவுசெய்யாதே. கதவு பூட்டியாயிற்று. என் குழந்தைகளும் என்னோடு படுக்கையில் உள்ளனர். எழுந்து உனக்குக் கொடுக்கமுடியாது ' என்று சொல்லுகிறான்.

8 நண்பனோ கதவைத் தட்டிக்கொண்டே இருந்தால், அவன் தன் நண்பன் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவனுடைய தொல்லையின் பொருட்டாவது எழுந்து, அவனுக்கு எத்தனை தேவையோ அத்தனையும் கொடுப்பான் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

9 "மேலும் உங்களுக்குச் சொல்லுகிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.

10 ஏனெனில், கேட்கிற எவனும் பெறுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

11 உங்களில் ஒருவன் தன் தந்தையிடம் அப்பம் கேட்டால், அவனுக்குக் கல்லையா கொடுபபான்? மீன் கேட்டால், மீனுக்குப் பதிலாகப் பாம்பையா கொடுப்பான் ?

12 முட்டை கேட்டால், தேளையா கொடுப்பான் ?

13 ஆகவே, தீயோராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிவீர்களானால், வானகத்திலுள்ள உங்கள் தந்தை, தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய்ப் பரிசுத்த ஆவியை அளிப்பார்! " என்றார்.

14 ஒருநாள் அவர் பேய் ஓட்டிக்கொண்டிருந்தார். அது ஊமைப்பேய். பேயை ஓட்டி விடவே, ஊமையன் பேசினான். மக்கள் வியப்படைந்தனர்.

15 அவர்களுள் சிலர், " பேய்கள் தலைவனான பெயல்செபூலைக் கொண்டே இவன் பேய் ஓட்டுகிறான்" என்றனர்.

16 வேறு சிலர் அவரைச் சோதிக்க, வானிலிருந்து அருங்குறி ஒன்று காட்டும்படி கேட்டனர்.

17 அவர்களுடைய எண்ணங்களை அறிந்த இயேசுவோ, "தனக்கு எதிராகப் பிரியும் எந்த அரசும் பாழாய்ப் போம்; வீடுகளும் ஒன்றன் மேல் ஒன்றாய் விழுந்தழியும்.

18 பெயல்செபூலைக்கொண்டு நான் பேய் ஓட்டுகிறேன் என்று சொல்லுகிறீர்களே; தனக்கு எதிராகத் தானே பிரியும் சாத்தானின் அரசு எப்படி நிலைக்கும்?

19 நான் பேய்களை ஓட்டுவது பெயல்செபூலைக்கொண்டு என்றால், உங்கள் மக்கள் யாரைக்கொண்டு ஓட்டுகிறார்கள். எனவே, அவர்களே உங்களுக்குத் தீர்ப்பிடுவார்கள்.

20 நான் பேய்களை ஓட்டுவது கடவுளின் விரலால் என்றால், கடவுளின் அரசு உங்களிடம் வந்துள்ளது.

21 வலியவன் போர்க்கோலம் பூண்டு தன் அரண்மனையைப் பாதுகாத்தால், அவன் உடைமைகள் பத்திரமாக இருக்கும்.

22 அவனிலும் வலியவன் ஒருவன் எதிர்த்துவந்து அவனை வென்றால், அவன் நம்பியிருந்த போர்க்கருவிகளையெல்லாம் பறித்துக்கொண்டு கொள்ளைப் பொருளையும் பங்கிடுவான்.

23 "என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.

24 "அசுத்த ஆவி ஒருவனை விட்டு வெளியேறியபின் வறண்ட இடங்களிலெல்லாம் சுற்றி அலைந்து, இளைப்பாற இடம் தேடிக் கண்டடையாமல், 'நான் விட்டுவந்த என் வீட்டிற்கே திரும்புவேன்' என்று சொல்லுகிறது.

25 திரும்பி வந்து, அவ்வீடு கூட்டி அழகுபடுத்தியிருப்பதைக் காண்கிறது.

26 மீண்டும் சென்று தன்னிலும் பொல்லாத வேறு ஏழு பேய்களை அழைத்துவர, அவை அதனுள் நுழைந்து குடியிருக்கின்றன. அம்மனிதனின் பின்னைய நிலை முன்னைய நிலையினும் மோசமாயிற்று" என்றார்.

27 அவர் இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது, கூட்டத்திலிருந்த பெண் ஒருத்தி, "உம்மைத் தாங்கிய வயிறும், நீர் பாலுண்ட கொங்கைகளும் பேறுபெற்றவையே" என்று குரலெடுத்துக் கூறினாள்.

28 அவரோ, "ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" என்றார்.

29 கூட்டம் பெருகப் பெருக, அவர் கூறலானார்: "இத்தலைமுறை பொல்லாத தலைமுறை. அருங்குறி ஒன்று கேட்கிறது. யோனாஸ் இறை வாக்கினரின் அருங்குறியேயன்றி வேறெந்த அருங்குறியும் அதற்கு அளிக்கப்படாது.

30 எவ்வாறு யோனாஸ் நினிவே மக்களுக்கு அருங்குறியாய் இருந்தாரோ, அவ்வாறே மனுமகனும் இத்தலைமுறைக்கு அருங்குறியாய் இருப்பார்.

31 தீர்வையின்போது தென்னாட்டு அரசி இத்தலைமுறையின் மக்களுக்கு எதிராக எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வாள். ஏனெனில், சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க உலகின் கடையெல்லையிலிருந்து வந்தாள். சாலோமோனிலும் மேலானது இதோ! இங்குள்ளது.

32 தீர்வையின்போது, நினிவே மக்கள் இத்தலைமுறைக்கு எதிராக எழுந்து இதனைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில், அவர்கள் யோனாஸ் உரைத்த தூதைக் கேட்டு மனந்திரும்பினார்கள். யோனாசிலும் மேலானது இதோ! இங்குள்ளது.

33 ' எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை. மாறாக, உள்ளே வருவோரெல்லாரும் வெளிச்சத்தைக் காணும்படி விளக்குத் தண்டின்மீது வைக்கிறான்.

34 உன் கண்தான் உடலுக்கு விளக்கு. உன் கண் தெளிவாக இருந்தால், உடல் முழுவதும் ஒளியோடு விளங்கும். உன் கண் கெட்டிருந்தால், உடல் இருண்டிருக்கும்.

35 எனவே. உன்னிலுள்ள ஒளி இருளாயிருக்கிறதா என்றுபார்.

36 இருள் சிறிதுமின்றி உன் உடல் முழுவதும் ஒளியாயிருந்தால், விளக்கு தன் கதிரால் உனக்கு ஒளிச்செய்வதுபோல், உன் உடல் முழுவதும் ஒளியோடு விளங்கும்."

37 அவர் பேசிக்கொண்டிருக்கையில் பரிசேயன் ஒருவன் தன்னோடு உண்பதற்கு அவரை அழைத்தான். இயேசுவும் வந்து அமர்ந்தார்.

38 உண்பதற்கு முன்னால் கைகால் கழுவாததைக் கண்டு பரிசேயன் வியப்படைந்தான்.

39 ஆண்டவர் அவனை நோக்கி, "நீங்களோ, பரிசேயரே, கிண்ணத்தையும் உணவுப் பாத்திரத்தையும் வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள். உங்கள் உள்ளத்திலோ கொள்ளையும் தீமையும் நிறைந்துள்ளன.

40 அறிவிலிகளே, வெளிபுறத்தை உண்டாக்கியவரே உட்புறத்தையும் உண்டாக்கினார் அன்றோ?

41 பாத்திரத்தில் உள்ளதைப் பிச்சைகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு எல்லாம் தூயதாய் இருக்கும்.

42 ஆனால் பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் புதினா, சதாப்பு, காய்கறி முதலியனவற்றுள் பத்திலொரு பாகம் செலுத்துகிறீர்கள். ஆனால், நீதியையும் கடவுளன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தாம் கடைப்பிடித்திருக்க வேண்டும்; அவற்றையும் விடலாகாது.

43 பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும், பொது இடங்களில் வணக்கத்தையும் விரும்புகிறீர்கள்.

44 உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், அடையாளம் தெரியாத சவக்குழிகள் போல் இருக்கிறீர்கள். அவற்றை அறியாமல் மனிதர் அவற்றின்மேல் நடந்துபோகிறார்கள் " என்றார்.

45 சட்ட வல்லுநருள் ஒருவன் அவரிடம், "போதகரே, இப்படிப் பேசி எங்களையும் அவமானப்படுத்துகிறீர் " என்றான்.

46 அவர் கூறியதாவது: "சட்டவல்லுநரே, உங்களுக்கும் ஐயோ கேடு! ஏனெனில், தாங்கமுடியாத சுமையை மக்கள்மேல் சுமத்துகிறீர்கள். நீங்களோ அச்சுமையை ஒரு விரலாலும் தொடுவதில்லை.

47 "இறைவாக்கினர்களுக்குக் கல்லறை கட்டுகிற உங்களுக்கு ஐயோ கேடு! உங்கள் முன்னோரே அவர்களைக் கொன்றவர்கள்.

48 உங்கள் முன்னோரின் செயல்களுக்கு நீங்களும் உடன்படுகிறீர்கள் என்பதற்கு, இவ்வாறு சாட்சி அளிக்கிறீர்கள். ஏனெனில், உங்கள் முன்னோர் அவர்களைக் கொலைசெய்தனர்; நீங்களோ அவர்களுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள்.

49 "அதனால் தான் கடவுளின் ஞானம் இங்ஙனம் கூறியது: 'இறைவாக்கினர்களையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடம் அனுப்புவேன். அவர்களுள் சிலரைக் கொல்லுவார்கள்; சிலரைத் துன்புறுத்துவார்கள்.'

50 ஆபேலுடைய இரத்தம்முதல், பீடத்திற்கும் புனித இல்லத்திற்கும் இடையே மடிந்த சக்கரியாசின் இரத்தம்வரை, உலகம் தோன்றியது முதல் சிந்தப்பட்ட இறைவாக்கினர்கள் அனைவரின் இரத்தத்திற்காக இத்தலைமுறையிடம் கணக்கு கேட்கப்படும்.

51 ஆம், உங்களுக்குச் சொல்லுகிறேன்: இத்தலைமுறையிடம் கணக்கு கேட்கப்படும்.

52 "சட்டவல்லுநரே. உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், அறிவின் திறவுகோலைக் கைப்பற்றிக்கொண்டு நீங்களும் நுழையவில்லை; நுழைவோரையும் தடுத்தீர்கள்."

53 அவர் அங்கிருந்து புறப்பட்டபோது, பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவர்மீது சீறி எழுந்து,

54 அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்கும்படி சூழ்ச்சியாகக் கேள்விகள் பல கேட்கலாயினர்.

அதிகாரம் 12

1 அப்போது ஒருவரையொருவர் மிதித்துக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்கையில், அவர் தம் சீடருக்குக் கூறியதாவது: "பரிசேயரின் வெளிவேடமாகிய புளிப்பு மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

2 வெளிப்படாதபடி மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாதபடி ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை.

3 ஆதலின், நீங்கள் இருளில் கூறியதெல்லாம் ஒளியில் கேட்கப்படும். அறைகளில் காதோடு காதாய்ப் பேசியது கூரைமீதிருந்து அறிவிக்கப்படும்.

4 " என் நண்பர்களாகிய உங்களுக்குச் சொல்லுகிறேன்: உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்.

5 யாருக்கு அஞ்சவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிப்பேன். கொன்றபின் நரகத்தில் வீழ்த்தவும் வல்லவருக்கு அஞ்சுங்கள். ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.

6 இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா? அவற்றில் ஒன்றும் கடவுள் முன்னிலையில் மறக்கப்படுவதில்லையே! 7 ஆம், உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது. அஞ்சாதீர்கள். ஏனெனில், குருவிகள் பலவற்றிலும் நீங்கள் மேலானவர்கள்.

8 " நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்முன் என்னை வெளிப்படையாக ஏற்றுக்கொள்பவன் எவனோ, அவனை மனுமகனும் கடவுளின் தூதர்கள்முன் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார்.

9 மனிதர்முன் என்னை மறுதலிக்கிறவனோ கடவுளின் தூதர்முன் மறுதலிக்கப்படுவான்.

10 " மனுமகனுக்கு எதிராய்ப் பேசுகிறவன் எவனும் மன்னிப்புப்பெறுவான் ஆனால், பரிசுத்த ஆவியைப் பழிப்பவனோ மன்னிப்புப்பெற்றான்.

11 "செபக்கூடங்களுக்கும், ஆள்வோர்முன்னும் அதிகாரிகள்முன்னும், உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது, எப்படிப் பதில் சொல்வது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என்று கவலைப்பட வேண்டாம்.

12 ஏனெனில், அவ்வேளையில் என்ன சொல்ல வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கற்பிப்பார்."

13 அப்போது, கூட்டத்தில் ஒருவன், "போதகரே, என் சகோதரன் என்னுடன் சொத்தைப் பங்கிட்டுக்கொள்ளுமாறு சொல்லும்" என்றான்.

14 அதற்கு அவர், "அன்பனே, நியாயம் தீர்க்கவோ பாகம்பிரிக்கவோ என்னை ஏற்படுத்தியவர் யார்?" என்றார்.

15 பின் மக்களைப் பார்த்து, "எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாயிருங்கள். ஏனெனில், ஒருவனுக்கு எவ்வளவு தானிருந்தாலும் செல்வப்பெருக்கினால் வாழ்வு. வந்துவிடாது" என்றார்.

16 பின்னர், அவர்களுக்கு இவ்வுவமையைச் சொன்னார்: "பணக்காரன் ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.

17 அவன், 'விளைபொருளைச் சேர்த்து வைக்க இடமில்லையே, என்ன செய்வது' என்று தனக்குள் எண்ணி,

18 'சரி, என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன். அங்கு என் உடைமை, கோதுமை எல்லாம் சேர்த்துவைத்து:

19 நெஞ்சே, பல்லாண்டுகளுக்கு வேண்டிய பொருள் உனக்கு ஏராளமாய் உள்ளது. இளைப்பாறு; உண்டு குடித்து, விருந்தாடு என்று சொல்லிக்கொள்வேன்' என்றான்.

20 ஆனால் கடவுள், 'அறிவிலியே, இன்றிரவே உன் உயிரைவாங்கப் போகிறார்கள். நீ தேடி வைத்தது யாருக்குக் கிடைக்குமோ?' என்றார்.

21 கடவுள் முன் செல்வம் இல்லாதவனாய், தனக்காகவே செல்வந்திரட்டுகிறவன் இவ்வாறே இருக்கிறான்."

22 பின்னர், அவர் தம் சீடருக்குக் கூறியதாவது: "ஆதலால் உங்களுக்குச் சொல்லுகிறேன்: உயிர் வாழ எதை உண்பதென்றோ, உடலை மூட எதை உடுப்பதென்றோ கவலைப்பட வேண்டாம்.

23 ஏனெனில், உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவை.

24 காக்கைகளைக் கவனியுங்கள். அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை. அவற்றிற்குக் குதிருமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுளே அவற்றிற்கு உணவளிக்கிறார். பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ மேலானவர்கள்.

25 கவலைப்படுவதால் உங்களில் எவன் தன் வளர்த்திக்கு ஒரு முழம் கூட்டமுடியும் ?

26 ஆதலால், மிகவும், சின்னஞ்சிறிய செயலையும் செய்ய இயலாத நீங்கள் மற்றவைபற்றிக் கவலை கொள்வானேன்?

27 காட்டுமலர்கள் எப்படி வளர்கின்றன என்று கவனியுங்கள். அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆயினும் சாலொமோன்கூடத் தம் மாட்சியிலெல்லாம் இவற்றுள் ஒன்ரறப்போல் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

28 குறைவான விசுவாசம் உள்ளவர்களே, வயலில் இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் புல்லைக் கடவுள் இவ்வாறு உடுத்துவாரானால், உங்களுக்கு எவ்வளவுதான் செய்யமாட்டார்?

29 எதை உண்பது, எதைக் குடிப்பது என்ற நினைவாக இருக்க வேண்டாம். அவற்றை ஏக்கத்தோடு தேட வேண்டாம்.

30 ஏனெனில், உலகத்தில் புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடியலைவர். இவை உங்களுக்குத் தேவை என்று உங்கள் தந்தைக்குத் தெரியும்.

31 கடவுளின் அரசையே முதலில் தேடுங்கள். இவை அனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக்கொடுக்கப்படும்.

32 "சிறு மந்தையே, அஞ்சாதே; ஏனெனில், உங்கள் தந்தை தம் அரசை உங்களுக்குக் கொடுக்கத் திருவுளம் கொண்டார்.

33 "உங்கள் உடைமைகளை விற்றுப் பிச்சையிடுங்கள். இற்றுப்போகாத பணப்பைகளையும், வானகத்தில் குறையாத செல்வத்தையும் தேடிக்கொள்ளுங்கள். அங்கே திருடன் அண்டுவதில்லை, பூச்சி அரிப்பதுமில்லை.

34 உங்கள் செல்வம் எங்குள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

35 "இடுப்பில் வரிந்துகட்டியிருங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும்.

36 திருமணவிருந்துக்குப் போன தம் தலைவன், எப்பொழுது வருவானோ என்று காத்திருக்கிறவர்களைப்போல, நீங்களும் இருங்கள். அவன் வந்து தட்டியவுடனே திறக்க வேண்டுமென்றோ?

37 எவ்வூழியர் விழித்திருக்கக் காண்பானோ, அவ்வூழியர் பேறுபெற்றவர். உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: அவன் இடுப்பில் வரிந்துகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிலமர்த்தி, ஒவ்வொருவனையும் அணுகி அவர்களுக்குப் பணிவிடை புரிவான்.

38 அவன் இரண்டாம் சாமத்தில் வந்தாலும், மூன்றாம் சாமத்தில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருக்கக் கண்டால், அவ்வூழியர்கள் பேறுபெற்றவர்கள்.

39 திருடன் இன்ன சாமத்தில் வருவான் என்று வீட்டுத்தலைவனுக்குத் தெரிந்தால், வீட்டில் கன்னம்வைக்க விடமாட்டானன்றோ?

40 இதையுணர்ந்து நீங்களும் ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."

41 இதைக்கேட்ட இராயப்பர், "ஆண்டவரே, இவ்வுவமை எங்களுக்கு மட்டுமா? எல்லாருக்குமா?" என்று வினவினார்.

42 ஆண்டவர் கூறியதாவது: "தக்க காலத்தில் தன் வேலையாட்களுக்குப் படியளக்க, தலைவன் ஏற்படுத்திய நம்பிக்கையும் விவேகமும் உள்ள கண்கானிப்பாளன் யார் ?

43 எந்த ஊழியன் அவ்வாறு செய்துகொண்டிருப்பதைத் தலைவன் வந்து காண்பானோ அவன் பேறுபெற்றவன்.

44 அவனைத் தன்னுடைமைக்கெல்லாம் அதிகாரியாக ஏற்படுத்துவான் என உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்.

45 ஆனால், 'என் தலைவர் வரக் காலந்தாழ்த்துகிறார்' என்று அவ்வூழியன் தனக்குள் சொல்லிக்கொண்டு, வேலைக்காரர் வேலைக்காரிகளை அடித்து, மயக்கமுற உண்டு குடிக்கத் தொடங்கினால்,

46 அவ்வூழியன் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் தலைவன் வந்து அவனை நீக்கிவிட்டு, விசுவாசமற்றவர் கதிக்கு அவனை உள்ளாக்குவான்.

47 "தன் தலைவனின் விருப்பத்தை அறிந்திருந்தும், முன்னேற்பாடு செய்யாமலும், அவனது விருப்பத்தின்படி நடவாமலும், இருந்த ஊழியன் நன்றாய் அடிபடுவான்.

48 அவன் விருப்பத்தை அறியாமல் தண்டனைக் குரியவற்றைச் செய்பவனோ கொஞ்சம் அடிபடுவான். எவனுக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும். எவனிடம் அதிகம் ஒப்படைத்தார்களோ அவனிடம் இன்னும் அதிகமாய்க் கேட்பார்கள்.

49 " மண்ணுலகில் தீயை மூட்டவே வந்தேன். இப்போதே அது பற்றியெரிய வேண்டுமென்று எவ்வளவோ விரும்புகிறேன்! 50 நான் பெற வேண்டிய ஞானஸ்நானம் ஒன்று உண்டு. அது நிறைவேறுமளவும் நான் எவ்வளவோ ஏக்கமாயிருக்கிறேன்.

51 நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.

52 இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் மூவர் இருவருக்கு எதிராகவும், இருவர் மூவருக்கு எதிராகவும் பிரிந்திருப்பர்.

53 தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் எதிராகப் பிரிக்கப்படுவர்."

54 அவர் கூட்டத்தை நோக்கி, "மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள். அப்படியே நடக்கிறது.

55 தெற்கிலிருந்து காற்று அடிப்பதைப் பார்க்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள். அதுவும் அப்படியே நடக்கிறது.

56 வெளிவேடக்காரரே, வானின் தோற்றத்தையும் பூமியின் தோற்றத்தையும் உய்த்துணர நீங்கள் அறிந்திருந்தும், இக்காலத்தை நீங்கள் உய்த்துணராமல் இருப்பது எப்படி?

57 "எது நீதியானதென்று நீங்களாகவே ஏன் தீர்மானிக்க முடியாது ?

58 நீ உன் எதிரியோடு அதிகாரியிடம் செல்லும்போது, வழியிலேயே வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய். இல்லையேல், அவன் உன்னை நீதிபதியிடம் இழுத்துக்கொண்டு போக, நீதிபதி உன்னைச் சேவகனிடம் கையளிக்கக்கூடும். சேவகன் உன்னைச் சிறையில் அடைக்க நேரிடும்.

59 கடைசிக் காசைத் திருப்பிக் கொடுக்குமளவும், அங்கிருந்து நீ வெளியேறமாட்டாய் என உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

அதிகாரம் 13

1 அவ்வேளையில் சிலர் அவரிடம் வந்து, பிலாத்து கலிலேயரின் இரத்தத்தை அவர்களுடைய பலியோடு கலந்தார் என்ற செய்தியை அறிவித்தனர்.

2 அவர் மறுமொழியாக, "இக்கலிலேயர் இத்தகைய சாவுக்கு உள்ளானார்கள் என்பதால், மற்றெல்லாக்கலிலேயரையும் விட இவர்கள் பாவிகள் என்று கருதுகிறீர்களா?

3 அப்படியன்று என, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மனந்திரும்பாவிடில் நீங்கள் எல்லோரும் அவ்வாறு அழிவீர்கள்.

4 சிலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே; அவர்கள் யெருசலேமில் வாழ்ந்த மற்றெல்லாரையும்விடக் குற்றவாளிகள் என்று கருதுகிறீர்களா?

5 அப்படியன்று என, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மனந்திரும்பாவிடில், நீங்கள் எல்லோரும் அவ்வாறு அழிவீர்கள்" என்றார்.

6 மேலும் அவர் இந்த உவமையைக் கூறினார்; "ஒருவன் தன் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டுவைத்திருந்தான். அவன் வந்து அதிலே பழம் தேடியபொழுது ஒன்றுங்காணவில்லை.

7 ஆகவே, தோட்டக்காரனிடம், 'மூன்று ஆண்டுகளாக வந்து, இந்த அத்திமரத்திலே பழம் தேடுகிறேன். ஒன்றும் காணவில்லை. இதை வெட்டிவிடு. ஏன் வீணாக இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது?' என்றான்.

8 அதற்கு அவன், 'ஐயா, இந்த ஆண்டும் இருக்கட்டும். சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்.

9 காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்' என்றான்."

10 ஓய்வுநாளில் அவர் செபக்கூடம் ஒன்றில் போதித்துக்கொண்டிருந்தார்.

11 பதினெட்டு ஆண்டுகளாகப் பேயால் நோயுற்றிருந்த பெண் ஒருத்தி அங்கிருந்தாள். அவள் நிமிர்ந்து பார்க்கவும் முடியாத ஒரு கூனி.

12 அவளைக் கண்ட இயேசு, தம்மிடம் அழைத்து, அவளிடம், "அம்மா, உன் நோயினின்று நீ விடுபட்டாய்" என்று , தம் கைகளை அவள்மீது வைத்தார்.

13 உடனே அவள் நிமிர்ந்து, கடவுளை மகிமைப்படுத்தலானாள்.

14 இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைப் பார்த்து, செபக்கூடத்தலைவன் கோபவெறி கொண்டு, கூட்டத்தை நோக்கி, "வேலை செய்ய ஆறு நாள் உண்டே அந்நாட்களில் வந்து குணம்பெற்றுப் போங்கள். ஓய்வுநாளில் ஆகாது" என்றான்.

15 ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக, "வெளிவேடக்காரே, ஓய்வு நாளில் உங்களுள் ஒவ்வொருவனும் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய்த் தண்ணீர்காட்டுவதில்லையோ?

16 ஆபிரகாமின் மகளாகிய இவளைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டிவைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவளை ஓய்வுநாளிலே விடுவிப்பது ஆகாத செயலா?" என்றார்.

17 என்றதும், அவருடைய எதிரிகள் அனைவரும் வெட்கிப்போயினர். அவர் செய்த மாட்சிக்குரிய செயல்களை எல்லாம் பார்த்து, கூட்டம் அனைத்தும் மகிழ்ந்தது.

18 அதன்பின் அவர், "கடவுளின் அரசு எதற்கு ஒப்பானது? அதை நான் எதற்கு ஒப்பிடுவேன்?

19 அது கடுகுமணிக்கு ஒப்பாகும். ஒருவன் அதை எடுத்துத் தன் தோட்டத்திலே விதைக்கிறான். அது வளர்ந்து பெரிய மரமாயிற்று. வானத்துப் பறவைகளும் அதனுடைய கிளைகளில் வந்து தங்குகின்றன" என்றார்.

20 மீண்டும் அவர் சொன்னதாவது: "கடவுளின் அரசை எதற்கு ஒப்பிடுவேன்?

21 அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும். அதைப் பெண் ஒருத்தி எடுத்து மூன்றுபடி மாவில் பொதிந்துவைக்கிறாள். மாவு முழுவதும் புளிப்பேறுகிறது."

22 நகரங்கள் ஊர்கள்தோறும் போதித்துக்கொண்டே அவர் யெருசலேம்நோக்கிப் பயணம்செய்தார்.

23 ஒருவன் அவரைப் பார்த்து, "ஆண்டவரே, மீட்புப்பெறுபவர் சிலர்தாமோ?" என்று கேட்க, அவர் மக்களுக்குக் கூறியது:

24 "ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள். ஏனெனில், பலர் நுழைய முயன்றும் முடியாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

25 வீட்டுத் தலைவர் எழுந்து கதவைத் தாளிட, நீங்கள் வெளியே நின்று கதவைத் தட்டிக்கொண்டே, 'ஆண்டவரே, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்பீர்கள். அதற்கு அவர், 'நீங்கள் எவ்விடத்தாரோ, யானறியேன்' என்று கூறுவார்.

26 பின்பு நீங்கள், 'உம்முடன் உண்டோம், குடித்தோம்; நீரும் எங்கள் தெருக்களில் போதித்தீரே' என்று சொல்லுவீர்கள்.

27 ஆனால், அவர், 'நீங்கள் எவ்விடத்தாரோ, யானறியேன். அநீதிபுரியும் அனைவரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்' என்பார்.

28 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபும், இன்னும் எல்லா இறைவாக்கினர்களும் கடவுளின் அரசில் இருப்பதையும், நீங்கள் புறம்பே தள்ளப்படுவதையும் காணும்போது, புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்.

29 கிழக்கிலும் மேற்கிலும், வடக்கிலும் தெற்கிலும் இருந்து மக்கள் வந்து கடவுளின் அரசில் பந்தி அமர்வார்கள்.

30 " இதோ! கடைசியானோர் சிலர் முதலாவர், முதலானோர் சிலர் கடைசியாவர்."

31 அந்நேரத்தில் பரிசேயர் சிலர் அவரிடம் வந்து, "இங்கிருந்து போய்விடும். ஏரோது உம்மைக் கொல்ல வேண்டுமென்றிருக்கிறான்" என்றனர்.

32 அதற்கு அவர், "நீங்கள் போய் அந்தக் குள்ளநரியிடம் இதை அறிவியுங்கள்: 'இன்றும் நாளையும் போய் ஓட்டுகிறேன். நோய்களையும் குணமாக்குகிறேன். மூன்றாம் நாள் முடிவடைவேன்.

33 ஆயினும், இன்றும் நாளையும் அடுத்த நாளும் நான் என்வழியே செல்ல வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் யெருசலேமுக்கு வெளியே மடிவது முறையாகாதே! '

34 "யெருசலேமே, இறைவாக்கினர்களைக் கொன்று, உன்னிடம் அனுப்பப்பட்டோரையும் கல்லால் எறியும் யெருசலேமே, கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் ஒன்றுசேர்ப்பதுபோல, நானும் உன் மக்களை ஒன்றுசேர்க்க எத்தனையோ முறை விரும்பினேன்! நீயோ உடன்படவில்லை.

35 இதோ! உங்கள் வீடு குடியற்றுப்போகும். 'ஆண்டவருடைய பெயரால் வருகிறவர் வாழி' என்று நீங்கள் கூறும் நாள்வரை என்னைக் காண மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

அதிகாரம் 14

1 ஓய்வுநாளில் பரிசேயரின் தலைவன் ஒருவன் வீட்டில் அவர் உணவருந்தச் சென்றபோது, அவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.

2 அங்கே அவருக்கு எதிரே, நீர்க்கோவை நோயுற்ற ஒருவன் இருந்தான்.

3 இயேசு சட்ட வல்லுநரையும் பரிசேயரையும் நோக்கி, "ஓய்வுநாளில் குணமாக்குதல் முறையா? இல்லையா?" எனக் கேட்டார்.

4 அவர்கள் பேசாதிருந்தனர். அவர் அவன்கையைப் பிடித்துக் குணமாக்கி அனுப்பிவிட்டார்.

5 பின் அவர்களிடம், "உங்களுள் ஒருவனுடைய மகனோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வுநாளென்றாலும் உடனே அவன் தூக்கிவிடமாட்டானோ?" என்றார்.

6 அதற்கு மறுமொழி கூற அவர்களால் முடியவில்லை.

7 மேலும், அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதலிடங்களைத் தேர்ந்துகொள்வதைக் கண்டு, அவர்களுக்கு உவமையாகக் கூறினதாவது:

8 " உன்னை ஒருவன் மணவிருந்திற்கு அழைக்கும்போது, நீ முதலிடத்தில் அமராதே. ஏனெனில், உன்னைவிட மதிப்பிற்குரிய ஒருவரை அவன் அழைத்திருக்கலாம்.

9 உன்னையும் அவரையும் அழைத்தவன் வந்து உன்னை நோக்கி, 'இவருக்கு உன் இடத்தை விடு' என்பான். அப்போது நீ வெட்கிக் கடைசி இடத்திற்குச் செல்லவேண்டியிருக்கும்.

10 மாறாக, உன்னை ஒருவன் அழைக்கும்போது கடைசி இடத்தில் போய் அமர்ந்துகொள். அப்படிச் செய்தால் உன்னை அழைத்தவன் வந்து உன்னை நோக்கி, 'நண்ப, மேலிடத்திற்குப்போம்' என்று சொல்வான். அப்பொழுது உன்னுடன் பந்தியிலிருப்பவர் முன்பாக நீ பெருமை அடைவாய்.

11 ஏனெனில், தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தாழ்த்துகிறவனோ உயர்த்தப்பெறுவான்."

12 பின் தம்மை அழைத்திருந்தவனை நோக்கி, "நீ பகல் உணவிற்காவது இராவுணவிற்காவது, உன் நண்பர்களையோ சகோதரர்களையோ உறவினர்களையோ, செல்வரான அண்டை வீட்டாரையோ அழைக்காதே. அவர்களும் உன்னைத் திரும்ப அழைக்கலாம். அப்போது உனக்குக் கைம்மாறு கிடைத்துவிடும்.

13 மாறாக, நீ விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிடு.

14 அப்போது நீ பேறுபெற்றவன். ஏனெனில், உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நீதிமான்கள் உயிர்த்தெழும்போது உனக்குக் கைம்மாறு கிடைக்கும்" என்றார்.

15 அவருடன் பந்தியில் இருந்தவர்களுள் ஒருவன் இதைக்கேட்டு அவரை நோக்கி, "கடவுளின் அரசில் விருந்து உண்பவன் பேறுபெற்றவன்" என்றான்.

16 அதற்கு அவர் கூறியதாவது: "ஒருவன் பெரிய விருந்துசெய்ய விரும்பிப் பலரை அழைத்தான்.

17 விருந்துக்கு நேரமானதும், 'எல்லாம் ஏற்பாடாயிற்று, வாருங்கள்' என்று அழைக்கப்பெற்றவர்களிடம் சொல்லும்படி தன் ஊழியனை அனுப்பினான்.

18 எல்லாரும் ஒன்றுபோலச் சாக்குச் சொல்லத் தொடங்கினர். 'தோட்டம் வாங்கியிருக்கிறேன். அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்கவேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றான் ஒருவன்.

19 ' நான் ஐந்து ஏர் மாடு வாங்கியிருக்கிறேன். அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றான். இன்னொருவன்.

20 'நான் மணமுடித்துள்ளேன். ஆதலால் என்னால் வரமுடியாது ' என்றான் வேறொருவன்.

21 "ஊழியன் திரும்பிவந்து இதையெல்லாம் தன் தலைவனுக்கு அறிவித்தான். வீட்டுத் தலைவன் சினமுற்றுத் தன் ஊழியனிடம், 'நகரத்தின் தெருக்களிலும் சந்துகளிலும் விரைவில் சென்று, ஏழைகள், ஊனர்கள், குருடர்கள், முடவர்கள் ஆகியோரை இங்கே கூட்டிவா' என்றான்.

22 ஊழியனும், 'ஐயா, நீர் கட்டளையிட்டப்படி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது' என்றான்..

23 அதற்குத் தலைவன், 'சாலைகளிலும் வேலியோரங்களிலும் போய் என் வீடு நிறையும்படி மக்களை வற்புறுத்திக் கூட்டிவா.

24 அழைக்கப்பெற்றவர்களுள் எவனும் என் விருந்தைச் சுவைக்கமாட்டான் என உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றான்."

25 ஒருநாள் அவருடன் பெருங்கூட்டம் சென்று கொண்டிருந்தது. அவர் அவர்கள் பக்கம் திரும்பிக் கூறியதாவது:

26 "என்னிடம் வருகிறவன் தன் தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையுமே வெறுக்காவிட்டால் என் சீடனாயிருக்க முடியாது.

27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.

28 " உங்களுள் யாராவது கோபுரங்கட்ட விரும்பினால் வேலையை முடிக்கத் தன்னால் முடியுமாவென்று பார்ப்பதற்கு, முதலில் உட்கார்ந்து, வேண்டிய செலவைக் கணிக்க மாட்டானா?

29 இல்லாவிடில் அதற்கு அடித்தளமிட்டபின் முடிக்க முடியாததைக் கண்ணுறும் யாவரும்,

30 'இவன் கட்டத் தொடங்கினான், முடிக்கவில்லை' என்று ஏளனம் செய்வர்.

31 அல்லது, ஓர் அரசன் மற்றோர் அரசன் மேல் போர்தொடுக்கப் போகுமுன், இருபதாயிரம் பேருடன் தன்னை எதிர்த்து வருபவனை பத்தாயிரம் பேருடன் எதிர்க்க முடியுமோ என்று, முதலில் அமர்ந்து ஆராய்ந்து பார்க்க மாட்டானா?

32 எதிர்க்க முடியாதெனில், அவன் இன்னும் தொலைவிலிருக்கும்பொழுதே தூதுவிடுத்து, சமாதானத்திற்கு ஆவன கோருவான்.

33 இவ்வாறே தன் உடைமையெல்லாம் துறக்காவிடில் உங்களுள் எவனும் என் சீடனாயிருக்க முடியாது.

34 "உப்பு நல்லதுதான். ஆனனால் உப்பு சாரமற்றுப்போனால் வேறு எதனால் சாரம் ஏற்றப்பெறும்?

35 நிலத்திற்கோ எருக்குழிக்கோ பயனற்றது. வெளியில்தான் கொட்டப்படும். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்."

அதிகாரம் 15

1 அவர் சொல்வதைக் கேட்க ஆயக்காரரும் பாவிகளும் அவரை அணுகிய வண்ணமாயிருந்தனர்.

2 அதனால் பரிசேயரும் மறைநூல் வல்லுநரும், "இவர் பாவிகளை வரவேற்கிறார். அவர்களோடு உண்கிறார்" என்று முணுமுணுத்தனர்.

3 அப்போது அவர் பின்வரும் உவமையைக் கூறினார்:

4 "உங்களுள் ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்க, அவற்றில் ஒன்றை இழந்தால் அவன் தொண்ணுற்றொன்பது ஆடுகளைப் பாழ்வெளியில் விட்டுவிட்டு, இழந்த ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச்செல்ல மாட்டானா?

5 கண்டுபிடித்தபின் அதைத் தன் தோள்மேல் போட்டுக்கொண்டு,

6 மகிழ்ச்சியோடு வீட்டிற்கு வந்து நண்பர்களையும் அண்டைவீட்டாரையும் அழைத்து, என்னோடு மகிழுங்கள். ஏனெனில், இழந்துபோன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பான்.

7 அவ்வாறே, மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணுற்றொன்பது நீதிமான்களைக் குறித்து வானத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."

8 " ஒரு பெண்ணிடம் இருந்த பத்து வெள்ளிக் காசுகளுள் ஒன்று காணாமற்போய் விட்டால், விளக்கேற்றி, வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை, அவள் அக்கறையோடு தேடுவதில்லையா?

9 அதைக் கண்டுபிடித்தபின், தன் தோழியரையும் அண்டை வீட்டுப் பெண்களையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள். ஏனெனில், காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்துவிட்டேன்.' என்பாள்.

10 அவ்வாறே, மனந்திரும்பும் ஒரு பாவியைக்குறித்துக் கடவுளுடைய தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."

11 அவர் மேலும் கூறியதாவது: "ஒருவருக்கு மக்கள் இருவர் இருந்தனர்.

12 இளையவன் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு வரவேண்டிய பங்கைக் கொடும்' என்றான். அவர் தம் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்துகொடுத்தார்.

13 சில நாட்களுக்குப்பின் இளைய மகன் தன் சொத்தை எல்லாம் விற்றுப் பணத்தைத் திரட்டிக்கொண்டு தொலைநாட்டிற்குப் பயணமானான். அவ்விடத்தில் ஊதாரித்தனமாக வாழ்ந்து, சொத்தை எல்லாம் அழித்தான்.

14 எல்லாவற்றையும் செலவழித்தபின்பு, அந்நாடெங்கும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. 'அப்போது அவன் வறுமையுறலானான்.

15 அந்நாட்டுக் குடிகளுள் ஒருவனிடம் அண்டிப் பிழைக்கச் சென்றான். அவன் அவனைப் பன்றி மேய்க்கத் தன் வயலுக்கு அனுப்பினான்.

16 பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தன் வயிற்றை நிரப்ப விரும்பினான். ஆனால், அதையும் அவனுக்கு அளிப்பாரில்லை.

17 அறிவு தெளிந்து, 'என் தந்தையின் கூலியாட்கள் எத்தனையோ பேருக்கு நிறைய உணவு இருக்க, நான் இங்குப் பசியால் மடிகிறேன்! எழுந்து என் தந்தையிடம் போவேன்.

18 போய், "அப்பா, வானகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் குற்றம் செய்தேன்.

19 இனிமேல் நான் உம்முடைய மகன் என்று எண்ணப்படத் தகுதியற்றவன். என்னை உம்முடைய கூலியாட்களுள் ஒருவனாக நடத்தும்" என்று அவரிடம் சொல்வேன்' என்றான்.

20 அப்படியே எழுந்து தன் தந்தையிடம் வந்தான். "அவன் தொலைவில் வரும்போதே அவனுடைய தந்தை அவனைக் கண்டு மனமுருகி, ஓடிப்போய் அவனைக் கட்டி அணைத்து முத்தமிட்டார்.

21 மகன் அவரிடம், 'அப்பா, வானகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் குற்றம்செய்தேன். இனிமேல் உம்முடைய மகன் என்று எண்ணப்பட நான் தகுதியற்றவன்' என்றான்.

22 தந்தையோ ஊழியர்களை நோக்கி, 'முதல்தரமான ஆடை கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள். கைக்கு மோதிரமும், கால்களுக்கு மிதியடிகளையும் விரைவில் அணிவியுங்கள்.

23 கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். விருந்து கொண்டாடுவோம்.

24 ஏனெனில், இறந்துபோயிருந்த என் மகன் இவன் மீண்டும் உயிர்பெற்றுள்ளான்; காணாமற்போயிருந்தவன் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்' என்றார். அவர்கள் விருந்து கொண்டாடத் தொடங்கினர்.

25 "அப்போது மூத்த மகன் வயலில் இருந்தான். வயலிருந்து திரும்பி வீட்டை நெருங்கியபொழுது நடனத்தையும் இசைமுழக்கத்தையும் கேட்டு,

26 ஊழியர்களுள் ஒருவனை அழைத்து நடப்பதென்னவென்று வினவினான்.

27 அதற்கு ஊழியன், 'உம் தம்பி வந்துவிட்டார். அவர் நலமாகத் தம்மிடம் வந்து சேர்ந்ததால், உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றான்.

28 அவனோ சினந்து உள்ளே நுழைய மனமில்லாதிருந்தான். எனவே, அவனுடைய தந்தை வெளியில் வந்து அவனை அழைத்தார்.

29 அவன் தன் தந்தையிடம், 'இதோ! இத்தனை ஆண்டுகளாக உமக்கு ஊழியம் செய்துவருகிறேன்; உம்முடைய கட்டளையை என்றும் மீறியதில்லை. ஆயினும் என் நண்பரோடு விருந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டிகூட நீர் எனக்குக் கொடுத்ததில்லை.

30 விலைமாதரோடு உமது சொத்தை யெல்லாம் அழித்துவிட்ட இந்த மகன் இவன் வந்தபொழுது, அவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கின்றீரே! ' என்றான்.

31 "அதற்குத் தந்தை, 'மகனே, நீ என்றும் என்னுடன் இருக்கிறாய். என்னுடையதெல்லாம் உன்னுடையதே.

32 நாம் விருந்தாடி மகிழ்வது முறையே. ஏனெனில், உன் தம்பி இறந்துபோயிருந்தான், உயிர்த்துவிட்டான்; காணாமற்போயிருந்தான், கிடைத்துவிட்டான்' என்றார்."

அதிகாரம் 16

1 மேலும் அவர் தம் சீடர்களுக்குச் சொன்னதாவது: "பணக்காரன் ஒருவனிடம் கண்காணிப்பாளன் ஒருவன் இருந்தான். தன் தலைவனின் உடைமைகளை விரயம் செய்ததாக அவன்மீது குற்றம் சாட்டப்பட்டது

2 தலைவன் அவனை அழைத்து, 'என்ன இது? நான் உன்னைப்பற்றி இப்படியெல்லாம் கேள்விப்படுகிறேன். உன் கண்காணிப்புக் கணக்கை ஒப்புவி. நீ இனி என் கண்காணிப்பாளனாய் இருக்க முடியாது' என்றான்.

3 அப்போது கண்காணிப்பாளன், 'இனி என்ன செய்வது? கண்காணிப்பினின்று என்னைத் தலைவன் நீக்கிவிடப்போகிறானே. மண்வெட்டவோ எனக்கு வலிமையில்லை; பிச்சையெடுக்கவோ வெட்கமாய் இருக்கிறது.

4 கண்காணிப்பினின்று நான் தள்ளப்படும்போது, பிறர் என்னைத் தங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளும்படி என்னசெய்யவேண்டுமென்பது எனக்குத் தெரியும்' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

5 " பின்பு, அவன் தன் தலைவனிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக அழைத்தான். ஒருவனைப் பார்த்து, 'என் தலைவனிடம் நீ எவ்வளவு கடன்பட்டிருக்கிறாய்?' என்று கேட்க,

6 அவன், 'நூறு குடம் எண்ணெய்' என்றான். அதற்கு அவன், 'இதோ! உன் கடன்பத்திரம், உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுது' என்றான்.

7 பின்னர், மற்றொருவனிடம், 'நீ எவ்வளவு கடன்பட்டிருக்கிறாய்?' என, அவன், 'நூறு கலம் கோதுமை' என்றான். அதற்கு அவன், 'இதோ! உன் கடன்பத்திரம், எண்பது என எழுது' என்றான்.

8 "அந்த அநீத கண்காணிப்பாளன் விவேகத்தோடு நடந்துகொண்டதற்காகத் தலைவன் அவனை மெச்சிக்கொண்டான். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தம்போன்றவர்களிடத்தில் மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்.

9 "ஆகையால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: அநீத செல்வத்தைக்கொண்டு நண்பர்களைச் சம்பாதித்துக்கொள்ளுங்கள். அது உங்களைக் கைவிடும்பொழுது, இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.

10 மிகச் சிறிய காரியத்தில் நம்பத்தக்கவன், பெரியதிலும் நம்பத்தக்கவனே. மிகச் சிறியதில் நீதியற்றவன், பெரியதிலும் நீதியற்றவனே.

11 அநீத செல்வத்தின்மட்டில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய் இருந்தால், உங்களை நம்பி உண்மைப்பொருளை ஒப்படைப்பவர் யார் ?

12 உங்களுக்குப் புறம்பான பொருட்கள் மட்டில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய் இருந்தால், உங்களுடையதை உங்களுக்கு அளிப்பவர் யார்?

13 எந்த வேலைக்காரனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. ஏனெனில், ஒருவனை வெறுத்து மற்றவனிடம் அன்பாயிருப்பான். அல்லது, ஒருவனை சார்ந்துகொண்டு மற்றவனைப் புறக்கணிப்பான். கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது.

14 பொருளாசை மிக்க பரிசேயர் இதெல்லாம் கேட்டு அவரை ஏளனம் செய்தனர்.

15 அவர்களுக்கு அவர் கூறியதாவது: "மனிதர்முன் நீதிமான்களாகக் காட்டிக்கொள்ளுகிறவர்கள் நீங்கள்தாம். கடவுளோ உங்கள் உள்ளங்களை அறிவார். மனிதர்களுக்கு மேன்மையானது கடவுளுக்கு அருவருப்பானது.

16 "திருச்சட்டமும் இறைவாக்கினர்களும் அருளப்பர் காலம்வரைதான். அதுமுதல் கடவுளின் அரசைப்பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. அதில் ஒவ்வொருவனும் பலவந்தமாய் நுழைகிறான்.

17 "திருச்சட்டத்தின் ஒரே ஒரு புள்ளி விட்டுப்போவதினும் விண்ணும் மண்ணும் மறைவது எளிதாகும்.

18 "தன் மனைவியை விலக்கிவிட்டு, வேறு ஒருத்தியை மணப்பவன் விபசாரம் செய்கிறான் தன் கணவனால் விலக்கப்பட்டவனை மணப்பவனும் விபசாரம் செய்கிறான்.

19 "பணக்காரன் ஒருவன் இருந்தான். அவன் விலையுயர்ந்த ஆடையும், மெல்லிய உடையும் அணிந்து நாள்தோறும் ஆடம்பரமாய் விருந்தாடுவான்.

20 அவனுடைய வாசலருகே இலாசர் என்னும் ஏழை ஒருவன் கிடந்தான்; அவன் உடலெல்லாம் ஒரே புண்ணாயிருந்தது

21 அவன் அப்பணக்காரனின் பந்தியில் சிந்தினவற்றைக்கொண்டு பசியாற்ற விரும்பினான். நாய்கள் கூட வந்து அவனுடைய புண்களை நக்கும்.

22 இந்த ஏழை இறந்தான்; வானதூதர் அவனைத் தூக்கிச்சென்று ஆபிரகாமின் அருகிலேயே அமர்த்தினர். பணக்காரனும் இறந்தான்; புதைக்கப்பட்டான்.

23 " அவன் பாதாளத்திலே வேதனைப்படுகையில் ஏறெடுத்துப் பார்த்தான். தொலைவில் ஆபிரகாமையும், அவர் அருகிலேயே அமர்ந்திருந்த இலாசரையும் கண்டான்.

24 ' தந்தை ஆபிரகாமே, என்மீது இரங்கி, இலாசர் தன்விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து, என் நாவைக் குளிரச்செய்யும்படி அவனை அனுப்பும். நான் இந்நெருப்பில் வேதனைப்படுகிறேன்' என்று கத்தினான்.

25 ஆபிரகாம் அவனை நோக்கி, 'மகனே, வாழ்நாளில் உனக்கு இன்பசுகமே கிடைத்தது, இலசாருக்குத் துன்ப துயரமே கிடைத்தது. இதை நினைத்துப்பார். ஆனால், இப்பொழுது அவன் இங்கே ஆறுதலடைகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.

26 அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பாதாளம் ஒன்று அமைந்துள்ளது. எனவே, இங்கிருந்து உங்களிடம் கடந்துவர ஒருவன் விரும்பினாலும் முடியாது; அங்கிருந்து எங்களிடம் தாண்டிவருவதும் கிடையாது ' என்றார்.

27 அதற்கு அவன், 'தந்தையே, அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டுகிறேன்.

28 எனக்குச் சகோதரர் ஐவர் இருக்கின்றனர். அவர்களும் இந்த வேதனைக் களத்திற்கு வராதபடி அவன் எச்சரிக்கட்டும்' என்றான்.

29 ஆபிரகாமோ, 'அவர்களுக்கு மோயீசனும் இறைவாக்கினர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார்.

30 அவனோ, 'அப்படியன்று, தந்தை ஆபிரகாமே, இறந்தோரிடமிருந்து யாராவது அவர்களிடம் சென்றால், மனந்திரும்புவர்' என்றான்.

31 அதற்கு அவர், 'மோயீசனுக்கும் இறைவாக்கினர்களுக்கும் செவிசாய்க்காவிடில் இறந்தோரிடமிருந்து ஒருவன் உயிர்த்தெழுந்தாலும் நம்பமாட்டார்கள் ' என்றார்."

அதிகாரம் 17

1 மேலும், இயேசு தம் சீடரை நோக்கி, "இடறல் வராமல் இருக்க முடியாது. ஆனால், யாரால் வருகின்றதோ, அவனுக்கு ஐயோ கேடு! 2 அவன் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாயிருப்பதைவிட, அவன் கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டி கடலில் தள்ளுவது அவனுக்கு நலம்.

3 எச்சரிக்கையாயிருங்கள். " உன் சகோதரன் குற்றம் செய்தால் அவனைக் கடிந்துகொள். மனம் வருத்தினால் அவனை மன்னித்துவிடு.

4 அவன் ஒரு நாளில் ஏழு முறை உனக்கெதிராகக் குற்றம் செய்து, ஏழு முறையும் உன்னிடம் திரும்பி வந்து, 'நான் மனம் வருந்துகிறேன்' என்றால், அவனை மன்னித்துவிடு" என்றார்.

5 பின்பு அப்போஸ்தலர்கள், "எங்களிடம் விசுவாசத்தை அதிகமாக்கும்" என்று ஆண்டவரைக் கேட்டார்கள்.

6 ஆண்டவரோ, "கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் இம்முசுக்கட்டை மரத்தை நோக்கி, 'வேருடன் பெயர்ந்து கடலில் ஊன்றிக்கொள்' என்பீர்களாகில், உங்களுக்கு அது கீழ்ப்படியும்.

7 "உழுவதற்கோ மேய்ப்பதற்கோ உங்களிடம் ஓர் ஊழியன் இருந்தால், அவன் வயலிலிருந்து திரும்பி வரும்பொழுது, 'நீ உடனே என்னோடு வந்து சாப்பிடு' என்று உங்களுள் எவனாவது சொல்லுவானா?

8 மாறாக, 'எனக்குச் சாப்பாடு ஆயத்தம்செய். உன் இடையை வரிந்துகட்டிக்கொண்டு நான் உண்டு குடிக்குமளவும் எனக்குப் பணிவிடைசெய்; பின்பு நீ உண்டு குடிக்கலாம்' என்று சொல்லமாட்டானா?

9 தான் கட்டளையிட்டதைச் செய்ததற்காகத் தன் ஊழியனுக்கு நன்றி சொல்வானா?

10 அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிட்டதெல்லாம் செய்தபின், 'நாங்கள் பயனற்ற ஊழியர்கள், செய்ய வேண்டியதைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்" என்றார்.

11 அவர் யெருசலேமுக்குப் போகையில், சமாரியா, கலிலேயா நாடுகள்வழியாகச் சென்றார்.

12 ஓர் ஊருக்குள் வரும்பொழுது, தொழுநோயாளிகள் பத்துப்பேர் அவருக்கு எதிரே வந்தனர். தொலைவில் நின்றுகொண்டே,

13 "குருவே, இயேசுவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்" என்று உரக்கக்கூவினர்.

14 அவர்களைக் கண்டதும், "நீங்கள் போய்க் குருக்களிடம் உங்களைக் காட்டுங்கள் " என்றார். அவ்வாறே செல்லும்போது அவர்கள் குணமடைந்தனர்.

15 அவர்களுள் ஒருவன் தான் குணமடைந்ததைக் கண்டு உரத்த குரலில் கடவுளை மகிமைப்படுத்திக்கொண்டு, திரும்பி வந்து,

16 அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து நன்றிசெலுத்தினான். அவனோ சமாரியன்.

17 இயேசு அவனைப் பார்த்து, 'பத்துப்பேரும் குணமடையவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?

18 திரும்பி வந்து கடவுளை மகிமைப்படுத்த இந்த அந்நியனைத்தவிர வேறு ஒருவரையும் காணோமே! " என்றார்.

19 மேலும், "எழுந்து போ, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்று அவனிடம் கூறினார்.

20 கடவுளின் அரசு எப்பொழுது வரும்?" என்று பரிசேயர் வினவ, அவர் மறுமொழியாக, "கடவுளின் அரசு கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது.

21 'இதோ இங்கே! அதோ அங்கே! 'என்று சொல்வதிற்கில்லை. ஏனெனில், கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" என்றார்.

22 மேலும் அவர் சீடர்களிடம் மனுமகனுடைய நாட்களில் ஒன்றையாவது காண வேண்டும் என்று விரும்புவீர்கள். ஆனால் காண மாட்டீர்கள்.

23 உங்களிடம், 'இதோ இங்கே! அதோ அங்கே!' என்பார்கள். நீங்களோ போகவேண்டாம்; அவர்கள்பின் ஓடவேண்டாம்.

24 மின்னல் வானத்தின் ஒரு முனையில் மின்னி எதிர்முனைக்குப் பாய்வதுபோலவே, மனுமகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.

25 ஆனால் முதலில் அவர் மிகவும் பாடுபட்டு இந்தத் தலைமுறையால் புறக்கணிக்கப்பட வேண்டும்.

26 நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மனுமகன் வரும் காலத்திலும் நடக்கும்.

27 நோவா பெட்டகத்தில் நுழைந்த நாள்வரை மக்கள் உண்டு குடித்ததும், பெண் கொண்டு கொடுத்தும் வந்தனர். பெருவெள்ளம் வந்து அனைவரையும் அழித்தது.

28 அவ்வாறே, லோத்தின் காலத்திலும் நடந்தது: உண்டு குடித்தனர்; விற்று வாங்கினர்; நட்டனர். கட்டினர்.

29 லோத்து சோதோமை விட்டுச் சென்ற நாளில், வானிலிருந்து தீயும் கந்தகமும் பெய்து எல்லாரையும் அழித்தது.

30 மனுமகன் வெளிப்படும் நாளிலும் அவ்வாறே இருக்கும்.

31 "அந்நாளில் கூரைமேல் இருப்பவன், வீட்டிலுள்ள தன் பொருட்களை எடுப்பதற்கு இறங்கவேண்டாம். அப்படியே வயலில் இருப்பவன் திரும்பி வரவேண்டாம்.

32 லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்.

33 தன் உயிரைப் பாதுகாக்கத் தேடுகிறவன் அதை இழந்துவிடுவான். இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.

34 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: அந்த இரவில் ஒரே படுக்கையில் இருவர் இருப்பர், ஒருவன் எடுக்கப்படுவான்; மற்றவன் விடப்படுவான்.

35 இரு பெண்கள் சேர்ந்து மாவரைப்பர். ஒருத்தி எடுக்கப்படுவாள்; மற்றவள் விடப்படுவாள்."

36 அதற்கு அவர்கள், "எங்கே ஆண்டவரே?" என்றார்கள்.

37 அவரோ, "பிணம் எங்கேயோ அங்கேயே கழுகுகள் கூடும்" என்றார்.

அதிகாரம் 18

1 மனந்தளராமல் எப்பொழுதும் செபிக்க வேண்டுமென்பதற்கு அவர் ஓர் உவமை சொன்னார்:

2 " ஒரு நகரில் நடுவன் ஒருவன் இருந்தான். அவன் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை, மனிதனையும் மதிப்பதில்லை.

3 அந்நகரில் இருந்த கைம்பெண் ஒருத்தி, ' என் எதிராளியைக் கண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று அவனிடம் கேட்டுக்கொண்டே வந்தாள்.

4 அவனுக்கோ வெகுகாலம்வரை மனம் வரவில்லை. பின்னர் அவன், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மனிதனை மதிப்பதுமில்லை;

5 என்றாலும், இக்கைம்பெண் என்னைத் தொந்தரைசெய்வதால் நான் அவளுக்கு நீதி வழங்குவேன். இல்லாவிட்டால், எப்போதும் என் உயிரை வாங்கிக் கொண்டே யிருப்பாள்' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்."

6 அதன்பின் ஆண்டவர், "அந்த நீதியற்ற நடுவன் சொன்னதைப் பாருங்கள்.

7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் நீதிவழங்காமல் இருப்பாரோ ? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரோ?

8 விரைவிலேயே அவர்களுக்கு நீதி வழங்குவார் என உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ ?" என்றார்.

9 தம்மை நீதிமான்களென நம்பிப் பிறரை புறக்கணிக்கும் சிலரை நோக்கி, அவர் இந்த உவமையைச் சொன்னார்:

10 " இருவர் செபம் செய்யக் கோயிலுக்குச் சென்றனர். ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

11 பரிசேயன் நின்றுகொண்டு, 'கடவுளே, கள்வர், அநீதர், விபசாரர் முதலான மற்ற மனிதரைப் போலவோ, இந்த ஆயக்காரனைப்போலவோ நான் இராததுபற்றி உமக்கு நன்றிசெலுத்துகிறேன்.

12 வாரத்திற்கு இருமுறை நோன்பிருக்கிறேன். என் வருவாயிலெல்லாம் பத்திலொரு பகுதி கொடுக்கிறேன்' என்று தனக்குள்ளே செபித்தான்.

13 ஆயக்காரனோ தொலைவில் நின்று, வானத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாமல், 'கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்" என்று சொல்லி மார்பில் அறைந்து கொண்டான்.

14 இறைவனுக்கு ஏற்புடையவனாகி வீடுதிரும்பியவன் இவனே, அவனல்லன் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்."

15 கைக்குழந்தைகளை அவர் தொட வேண்டுமென்று அவர்களையும் அவரிடம் கொண்டுவந்தனர். இதைக்கண்ட அவருடைய சீடர், அவர்களை அதட்டினர்.

16 இயேசுவோ அவர்களை அழைத்து, "குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்; தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே.

17 உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசைக் குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது" என்றார்.

18 தலைவன் ஒருவன், "நல்ல போதகரே, என்ன செய்தால் எனக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்?" எனக் கேட்டான்.

19 அதற்கு இயேசு, "என்னை நல்லவர் என்பானேன்? கடவுள் ஒருவரன்றி நல்லவர் எவருமில்லை.

20 கட்டளைகள் உனக்குத் தெரியுமே: விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச்சான்று சொல்லாதே, தாய் தந்தையரைப் போற்று" என்றார்.

21 அதற்கு அவன், "என் சிறுவமுதல் இவையெல்லாம் கடைப்பிடித்து வருகிறேன்" என்றான்.

22 இதைக் கேட்டு இயேசு, "இன்னும் ஒன்று உனக்குக் குறைவாயிருக்கிறது. உனக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குப் பகிர்ந்துகொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்பு வந்து என்னைப் பின்செல்" என்றார்.

23 அவன் அதைக் கேட்டு வருத்தப்பட்டான். ஏனெனில், அவன் பெரிய பணக்காரன்.

24 இயேசு அவனைப் பார்த்து, "கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது! 25 ஏனெனில், பணக்காரன் கடவுளின் அரசில் நுழைவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.

26 அதைக் கேட்டவர்கள், "பின் யார்தாம் மீட்புப் பெறமுடியும் ?" என,

27 அவர் "மனிதரால் கூடாதது கடவுளால் கூடும் " என்றார்.

28 அப்போது இராயப்பர், "இதோ! எங்கள் உடைமைகளை விட்டுவிட்டு நாங்கள் உம்மைப் பின்சென்றோமே" என்று சொல்ல,

29 அவர் அவர்களை நோக்கி, "தன் வீட்டையோ மனைவியையோ சகோதரரையோ பெற்றோரையோ மக்களையோ கடவுளின் அரசின் பொருட்டுத் துறந்துவிடும் எவனும்

30 இம்மையில் அதைவிட மிகுதியும், மறுமையில் முடிவில்லா வாழ்வும் பெறாமல் போகான் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்றார்.

31 இயேசு பன்னிருவரையும் அழைத்து அவர்களிடம், "இதோ! யெருசலேமுக்குப் போகிறோம். மனுமகனைக்குறித்து இறைவாக்கினர்கள் எழுதியதெல்லாம் நிறைவேறும்.

32 புற இனத்தாரிடம் கையளிக்கப்பட்டு, ஏளனத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாகித் துப்பப்படுவார்.

33 அவர்கள் அவரைச் சாட்டையால் அடித்த பின் கொல்லுவார்கள். அவரோ மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" என்றார்.

34 இவற்றில் எதுவும் அவர்களுக்கு விளங்கவில்லை. 'அவர் சொன்னதின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது. அவர் கூறியதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.

35 அவர் யெரிக்கோவை நெருங்கியபொழுது குருடன் ஒருவன் வழியோரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.

36 திரளான மக்கள் நடந்து செல்வதைக்கேட்டு, அது என்ன வென்று வினவினான்.

37 நாசரேத்தூர் இயேசு அவ்வழியே செல்வதாக அவனுக்கு அறிவித்தனர்.

38 அவன், "இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்" என்று கத்தினான்.

39 முன்னே சென்றவர்கள், பேசாதிருக்கும்படி அவனை அதட்டினர். அவனோ, "தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்" என்று இன்னும் அதிகமாய்க் கூவினான்.

40 இயேசு நின்று, அவனைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.

41 அவன் நெருங்கி வந்ததும், "உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று அவனைக் கேட்க, அவன், "ஆண்டவரே, நான் பார்வை பெறவேண்டும்" என்றான்.

42 இயேசு அவனை நோக்கி, "பார்வை பெறுக; உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது" என்றார்.

43 அவன் உடனே பார்வை பெற்று, கடவுளை மகிமைப் படுத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தான். மக்கள் அனைவரும் இதைக்கண்டு கடவுளைப் புகழ்ந்தேத்தினர்.

அதிகாரம் 19

1 அவர் யெரிக்கோவுக்கு வந்து அதனூடே போய்க்கொண்டிருந்தார்.

2 அங்கே சக்கேயு என்னும் ஒருவன் இருந்தான். அவன் தலைமை ஆயக்காரன், பெரிய பணக்காரன்.

3 இயேசு யாரென்று பார்க்க வழிதேடினான். கூட்டமாயிருந்ததாலும், அவன் குள்ளானயிருந்ததாலும் அவரைப் பார்க்கமுடியவில்லை.

4 அவரைக் காணும்பொருட்டு முன்னே ஓடி ஒருகாட்டு அத்திமரத்தில் ஏறிக்கொண்டான். ஏனெனில், அவர் அவ்வழியே வரவிருந்தார்.

5 இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது, ஏறெடுத்து அவனை நோக்கி, "சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" என்றார்.

6 அவன் விரைவாய் இறங்கி மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றான்.

7 இதைக் கண்ட அனைவரும், "பாவியோடு தங்குவதற்குப் போயிருக்கிறாரே" என்று முணுமுணுத்தனர்.

8 ஆனால் சக்கேயு எழுந்து, "ஆண்டவரே, இதோ! என் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். எவனையாவது ஏமாற்றி எதையாவது கவர்ந்திருந்தால், நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று ஆண்டவரிடம் சொன்னான்.

9 அதற்கு இயேசு, " இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று. இவனும் ஆபிரகாமின் மகன்தானே.

10 இழந்துபோனதைத் தேடி மீட்கவே மனுமகன் வந்துள்ளார்" என்றார்.

11 மக்கள் இதைக் கேட்டுக்கொண்டிருக்கையில் அவர் யெருசலேமுக்கு அருகில் இருந்ததாலும், கடவுளின் அரசு உடனே வெளிப்படும் என்று அவர்கள் எண்ணியதாலும்,

12 அவர் தொடர்ந்து ஓர் உவமை சொன்னார்: "பெருங்குடி மகன் ஒருவன் அரசபதவி பெற்றுதரத் தொலைநாட்டிற்குப் புறப்பட்டான்.

13 தன் ஊழியர் பத்துப்பேரை அழைத்து பத்துப் பொற்காசுகளை அவர்களுக்குக் கொடுத்து, 'நான் வரும்வரை வாணிகம் செய்யுங்கள்' என்றான்.

14 அவனுடைய குடிமக்களோ அவனை வெறுத்தனர். ஆகையால், 'இவனை எங்கள் அரசனாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று சொல்லும்படி அவனுக்குப்பின் தூதுவிடுத்தனர்.

15 "அரச பதவி பெற்றுத் திரும்பி வந்தபின், பணம் வாங்கிய ஒவ்வொருவனும் சம்பாதித்தது எவ்வளவு என்று அறிய அவ்வூழியரைத் தன்னிடம் அழைத்துவரச் சொன்னான்.

16 முதல் ஊழியன் வந்து, 'அரசே, உமது பொற்காசு பத்துப் பொற்காசுகளைச் சம்பாதித்துள்ளது' என்றான்.

17 அவனோ, ' நன்று நன்று, நல்ல ஊழியனே, மிகச் சிறியதில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தால், பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரு' என்றான்.

18 வேறொருவன் வந்து, 'அரசே, உமது பொற்காசு ஐந்து பொற்காசுகளை ஆக்கியுள்ளது' என்றான்.

19 அவனிடமும் அரசன், 'நீ ஐந்து நகர்களுக்குத் தலைவனாய் இரு' என்றான்.

20 இன்னொருவன் வந்து, 'அரசே, இதோ! உமது பொற்காசு. உமக்கு அஞ்சி இதை ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருந்தேன்.

21 ஏனெனில், நீர் கண்டிப்புள்ளவர்; வைக்காததை எடுப்பவர், விதைக்காததை அறுப்பவர்' என்றான்.

22 அரசன் அவனைப் பார்த்து, 'கெட்ட ஊழியனே உன்வாய்ச் சொல்லைக்கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்புள்ளவன், வைக்காததை எடுப்பவன், விதைக்காததை அறுப்பவன் என்பதை அறிந்தும்,

23 நீ ஏன் என் பணத்தை வட்டிக்காரரிடம் கொடுத்துவைக்கவில்லை? நான் வந்து வட்டியோடு திரும்பப்பெற்றிருப்பேனே' என்றான்.

24 பின், சூழநின்றவர்களை நோக்கி, 'இவனிடமிருந்து பொற்காசைப் பிடுங்கி, பத்துப் பொற்காசுகள் உடையவனுக்குக் கொடுங்கள்' என்றான்.

25 அதற்கு அவர்கள், 'அரசே, அவனிடம் பத்துப் பொற்காசுகள் உள்ளனவே! ' என்றார்கள்.

26 அரசனோ, 'உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

27 "அன்றியும் என்னைத் தங்கள் அரசனாக ஏற்க விரும்பாத என் பகைவர்களை இங்குக் கொண்டுவந்து, என்முன் வெட்டி வீழ்த்துங்கள்' என்றான்."

28 இதெல்லாம் சொன்ன பின்பு, அவர் யெருசலேமை நோக்கி அவர்களுக்கு முன்னால் நடந்துபோனார்.

29 அவர் ஒலிவத்தோப்புமலைக்கு அருகில் இருந்த பெத்பகே, பெத்தானியா என்ற ஊர்களை அடுத்து வந்தபோது, சீடருள் இருவரை அழைத்து,

30 "எதிரே இருக்கும் ஊருக்குப் போங்கள். அதில் நுழையும்போது இதுவரை யாரும் ஏறாத கழுதைக்குட்டி ஒன்று கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.

31 'ஏன் அவிழ்க்கிறீர்கள்?' என்று யாராவது உங்களைக் கேட்டால், அவரிடம், 'இது ஆண்டவருக்குத் தேவை' என்று கூறுங்கள்" எனச் சொல்லி அனுப்பினார்.

32 அனுப்பப்பட்டவர்கள் சென்று, அவர் சொன்னபடியே கண்டனர்.

33 அவர்கள் கழுதைக்குட்டியை அவிழ்த்தபொழுது அதற்கு உரியவர்கள், 'கழுதைக்குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள்?" என்று அவர்களைக் கேட்க,

34 " இது ஆண்டவருக்குத் தேவை என்றனர்.

35 அக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, தங்கள் போர்வைகளை அதன்மேல் போட்டு, இயேசுவை ஏறச் செய்தனர்.

36 அவர் செல்லும்போது வழியில் தங்கள் போர்வைகளை விரித்தனர்.

37 அவர் ஒலிவமலைச் சாரலை நெருங்கியதும், சீடர் கூட்டமெல்லாம் தாங்கள் கண்ட புதுமைகள் அனைத்தையும்பற்றி மகிழ்ச்சியோடு, உரத்த குரலில்,

38 'ஆண்டவர் பெயரால் அரசராக வருகிறவர் வாழி! வானகத்தில் அமைதியும் உன்னதங்களில் மகிமையும் உண்டாகுக!' என்று கடவுளைப் புகழத் தொடங்கியது.

39 கூட்டத்திலிருந்த பரிசேயர் சிலர் அவரை நோக்கி, "போதகரே, உம்முடைய சீடர்களைக் கண்டியும்" என்றனர்.

40 அவர் மறுமொழியாக, "இவர்கள் பேசாதிருந்தால், கற்களே கூவும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

41 அவர் நகரை நெருங்கியபோது அதைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டுப் புலம்பியதாவது:

42 "சமாதானத்திற்கான வழியை நீயும் இந்நாளில் அறிந்திருக்கலாகாதா? இப்பொழுதோ, அது உன் கண்ணுக்கு மறைந்துள்ளது.

43 ஒருநாள் வரும், அன்று உன் பகைவர் உன்னைச் சுற்றிலும் அரண் எழுப்பி உன்னைச் சூழ்ந்துகொண்டு எப்பக்கத்திலிருந்தும் நெருக்கி,

44 உன்னைனயும் உன்னிடமுள்ள உன் மக்களையும் நொறுக்கித் தரைமட்டமாக்கி, உன்னிடம் கல்லின்மேல் கல் இராதபடி செய்வார்கள். -- ஏனெனில், கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறியவில்லை." வியாபாரிகளை விரட்டுதல்

45 பின்பு அவர் கோயிலுக்குள் சென்று அங்கே விற்பவர்களைத் துரத்தத் தொடங்கி,

46 அவர்களை நோக்கி, "'என் வீடு செபவீடாகும்' என்று எழுதியிருக்கிறது. நீங்களோ அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்" என்றார்.

47 அவர் நாடோறும் கோயிலில் போதித்து வந்தார். தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் மக்களுள் பெரியோர்களும் அவரைத் தொலைக்கப்பார்த்தனர்.

48 ஆனால் எப்படித் தொலைப்பதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில், மக்கள் எல்லாரும் அவர்சொல்வதைக் கேட்டு அவர்வசப்பட்டிருந்தனர்.

அதிகாரம் 20

1 ஒருநாள் அவர் கோயிலில் மக்களுக்குப் போதித்து நற்செய்தியை அறிவிக்கும்போது, தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் மூப்பர்களோடு அங்கு வர நேர்ந்தது.

2 "எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர்? அல்லது உமக்கு இந்த அதிகாரம் கொடுத்தவர் யார் என்று எங்களுக்குச் சொல்லும்" என அவரைக் கேட்டனர்.

3 அதற்கு இயேசு, "நானும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்லுங்கள்.

4 அருளப்பருடைய ஞானஸ்நானம் வானகத்திலிருந்து வந்ததா? மனிதரிடமிருந்து வந்ததா?" என்று கேட்டார்.

5 அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதாவது: "' வானகத்திலிருந்து வந்தது' என்போமாயின், 'ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?' என்று கேட்பார்.

6 'மனிதரிடமிருந்து வந்தது' ¢எனபோமாயின், மக்கள் அனைவரும் நம்மைக் கல்லால் எறிந்து கொல்வர். ஏனெனில், அருளப்பரை இறைவாக்கினர் என்று நம்பியிருக்கின்றனர்,"

7 எனவே, அவருக்கு மறுமொழியாக, "எங்கிருந்து வந்ததெனத் தெரியாது" என்றார்கள்.

8 அதற்கு இயேசு, "நானும் எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறேன் என உங்களுக்குச் சொல்லேன்" என்றார்.

9 பின்னும் அவர் இவ்வுவமையை மக்களுக்குச் சொல்லத் தொடங்கினார்: "ஒருவன் ஒரு திராட்சைத் தோட்டம் வைத்து, குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விட்டுவிட்டு நீண்டகாலம் வெளியூர் சென்றிருந்தான்.

10 பருவகாலத்தில் தோட்டத்துப் பலனைக் குடியானவர்கள் தனக்குக் கொடுக்கும்படி, ஊழியன் ஒருவனை அனுப்பினான். குடியானவரோ அவனை அடித்து வெறுங்கையாய் அனுப்பிவிட்டனர்.

11 மீண்டும் ஓர் ஊழியனை அனுப்பினான். அவனையும் அவர்கள் அடித்து இழிவுபடுத்தி வெறுங்கையாய் அனுப்பினார்கள்.

12 மூன்றாம் முறையாக ஒருவனை அனுப்பினான். அவனையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினார்கள்.

13 திராட்சைத் தோட்டத்துக்குரியவன், 'இனி என்ன செய்வது? என் அன்பார்ந்த மகனை அனுப்புவேன். அவனையாவது அவர்கள் மதிக்கக்கூடும்' என்றான்.

14 குடியானவர்கள் அவனைக் கண்டதும், 'இவனே சொத்துக்குரியவன். சொத்து நம்முடையதாகும்படி இவனைக் கொன்றுபோடுவோம்' என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டு,

15 அவனைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றார்கள். "அப்படியானால், தோட்டத்துக்குரியவன் அவர்களை என்ன செய்வான்?

16 அவன் வந்து, அக்குடியானவர்களை ஒழித்து, தோட்டத்தை வேறு ஆட்களுக்கு விடுவான்." இதைக் கேட்ட அவர்கள், "ஐயோ, வேண்டாமே! ', என்றனர்.

17 அவர் அவர்களை நோக்கி, "கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக்கல்லாய் அமைந்தது! ' என்று எழுதியிருக்கிறதே, அதன் பொருள் என்ன?

18 அக்கல்லின் மேல் விழுபவன் எவனும் நொறுங்கிப்போவான். அது எவன்மேல் விழுமோ, அவன் தவிடுபொடியாவான்." என்றார்.

19 தங்களைக் குறித்தே இவ்வுவமையை அவர் கூறினார் என்று உணர்ந்து, தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் அப்போதே அவரைப் பிடிக்க வழிதேடினர். ஆனால் பொது மக்களுக்கு அஞ்சினர்.

20 ஆகையால் அவர்கள் சமயம்பார்த்து வேவுகாரர்களை அனுப்பினார்கள். இவர்கள் ஆளுநரின் ஆட்சி அதிகாரத்திற்கு அவரைக் கையளிக்கும்படி, நேர்மையானவர்களைப்போல நடித்து, அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்கப் பார்த்தனர்.

21 " போதகரே, நீர் சொல்வதும் போதிப்பதும் சரியே. முகத்தாட்சணியம் பாராமல் கடவுளின் வழியை உண்மைக்கேற்பப் போதிக்கின்றீர் என்று எங்களுக்குத் தெரியும்.

22 செசாருக்கு நாங்கள் வரிகொடுப்பது முறையா, இல்லையா?" என்று அவரைக் கேட்டனர்.

23 அவர் அவர்களுடைய சூழ்ச்சியைக் கண்டுகொண்டு,

24 "ஒரு வெள்ளிக்காசை எனக்குக் காட்டுங்கள். அதிலுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்றார். "செசாருடையவை" என்றனர்.

25 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "அப்படியானால், செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்று சொன்னார்.

26 மக்கள் முன்னிலையில் அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்க முடியாமல், அவருடைய மறுமொழியைக் கேட்டு வியந்து பேசாதிருந்தனர்.

27 பின்னர், உயிர்த்தெழுதல் இல்லை என்று கூறும் சதுசேயருள் சிலர் அவரை அணுகி,

28 "போதகரே, மனைவியுள்ள ஒருவன் பிள்ளையின்றி இறந்துவிடுவானாயின், அவனுடைய சகோதரன் அவளை மணந்து தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று மோயீசன் எழுதிவைத்துள்ளார்.

29 இவ்வாறிருக்க, சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவன் ஒருத்தியை மணந்து மகப்பேறின்றி இறந்தான்.

30 இரண்டாம், மூன்றாம் சகோதரரும் அவளை மணந்தனர்.

31 இவ்வறே எழுவரும் பிள்ளையின்றி இறந்தனர்.

32 இறுதியாக அப்பெண்ணும் இறந்தாள்.

33 உயிர்த்தெழும்போது அவள் யாருக்கு மனைவியாக இருப்பாள்? எழுவரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தனரே! " என்றனர்.

34 இயேசு அவர்களிடம், "இவ்வுலகிள் மக்கள் பெண்கொண்டும் கொடுத்தும் வருகின்றனர்.

35 மறு உலகையும், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுதலையும் அடைவதற்குத் தகுதியுள்ளவராக எண்ணப்படுவோர் அங்கே பெண்கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை.

36 ஏனெனில், இனி, அவர்கள் இறக்கமாட்டார்கள். வானதூதருக்கு ஒப்பாயிருப்பார்கள். மேலும் உயிர்த்த மக்களாயிருப்பதால் கடவுளின் மக்களாயும் இருப்பார்கள்.

37 இறந்தோர் உயிர்த்தெழுவர் என்பதை, மோயீசனும் முட்செடியைப்பற்றிய பகுதியில் வெளிப்படுத்தினார். அதில் ஆண்டவரை, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று குறிப்பிடுகிறார்.

38 அப்படியெனில், அவர் வாழ்வோரின் கடவுளேயன்றி, இறந்தோரின் கடவுள் அல்லர். ஏனெனில், அவருக்கு எல்லாரும் உயிருள்ளவர்களே" என்றார்.

39 அதற்கு மறைநூல் அறிஞர் சிலர், "போதகரே, நன்றாய்ச் சொன்னீர்" என்றனர்.

40 இதற்குப் பின்னர் அவரை எதுவும் கேட்க அவர்கள் துணியவில்லை.

41 மேலும் அவர் அவர்களிடம், "மெசியாவைத் தாவீதின் மகன் என்று எப்படிக் கூறலாம்?

42 ஏனெனில், 'ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது,

43 நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கத்தில் அமரும்' எனத் தாவீதே சங்கீத ஆகமத்தில் சொல்லுகிறார்.

44 ஆகவே, தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, தாவீதுக்கு அவர் மகனாகமட்டும் இருப்பது எப்படி?" என்று வினவினார்.

45 மக்கள் எல்லாரும் கேட்டுக்கொண்டிருக்க, அவர் தம் சீடரிடம்,

46 "மறைநூல் அறிஞர்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் நீண்ட அங்கி தரித்து நடமாட விரும்புகிறார்கள். பொது இடங்களில் வணக்கத்தையும், செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும், விருந்துகளில் முதல் இடங்களையும் பெற ஆசிக்கிறார்கள்.

47 கைம்பெண்களின் உடைமைகளை விழுங்குகிறார்கள். பார்வைக்கோ நீண்ட செபம் செய்கிறார்கள். இவர்கள் அதிக தண்டனைக்கு ஆளாவார்கள்" என்றார்.

அதிகாரம் 21

1 அவர் ஏறெடுத்துப் பார்க்கையில், பணக்காரர் தம் காணிக்கைகளை உண்டியலில் போடுவதைக் கண்டார்.

2 வறுமைமிக்க கைம்பெண் ஒருத்தியும் இரண்டு செப்புக்காசுகளைப் போடுவதைக் கண்டு,

3 " இந்த ஏழைக்கைம்பெண் மற்றெல்லாரையும்விட அதிகம் போட்டாள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

4 ஏனெனில், அவர்கள் அனைவரும் தங்களிடம் மிகுதியாயிருந்த பணத்திலிருந்து கடவுளுக்குக் காணிக்கை போட்டனர். இவளோ தன் வறுமையிலும் தன் பிழைப்புக்கானது முழுவதையுமே போட்டுவிட்டாள்" என்றார்.

5 கோயிலைப்பற்றிச் சிலர் பேசிக்கொணடிருக்கையில், அது நல்ல கற்களாலும் பொருந்தனைக் கொடைகளாலும் அழகு செய்யப்பட்டுள்ளது என்றபோது அவர்,

6 "ஒருநாள் வரும்: நீங்கள் காணும் இதெல்லாம், கல்லின்மேல் கல் இராதபடி இடிபடும்" என்றார்.

7 "போதகரே, இவை எப்பொழுது நடக்கும்? இவை நடைபெறவிருக்கும்பொழுது தோன்றும் அறிகுறி என்ன?" என்று அவர்கள் அவரை வினவினர்.

8 அதற்கு அவர், "ஏமாறாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பலர் என் பெயரை வைத்துக்கொண்டு, 'நானே அவர், குறித்த காலம் நெருங்கிவிட்டது' என்பார்கள். அவர்கள்பின்னே போகாதீர்கள்.

9 போர்களைப் பற்றியும் குழப்பங்களைப்பற்றியும் கேள்விப்படும்போது திகிலடையாதீர்கள். இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் முடிவு உடனே வராது" என்றார்.

10 மேலும் அவர் சொன்னதாவது: "நாடு நாட்டையும், அரசு அரசையும் எதிர்த்து எழும்.

11 பற்பல இடங்களில் கொடிய நிலநடுக்கமும் கொள்ளைநோய்களும் பஞ்சமும் உண்டாகும்; அச்சமூட்டும் நிகழ்ச்சிகளும் வானத்தில் பெரிய அறிகுறிகளும் தோன்றும்.

12 "இதற்கெல்லாம் முன்னதாக என் பெயரின்பொருட்டு உங்களைப் பிடித்து, செபக்கூடங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் இழுத்துச் சென்று, அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் உங்களைக் கையளித்துத் துன்புறுத்துவர்.

13 எனக்கு நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்.

14 எனவே, என்னபதில் அளிக்கலாம் என்று முன்னதாகவே எண்ணிப்பார்க்க வேண்டாம்; இதை உள்ளத்தில் இருத்துங்கள்.

15 உங்கள் எதிரிகள் எவருமே உங்களை எதிர்த்து நிற்கவோ மறுத்துப் பேசவோ கூடாதபடி உங்களுக்குப் பேச்சுவன்மையும் ஞானமும் அருளுவேன்.

16 உங்கள் பெற்றோரும் உடன்பிறந்தோரும் உறவினரும் நண்பரும் உங்களைக் காட்டிக்கொடுப்பர். 'உங்களுள் சிலர் கொல்லப்படுவர்

17 என்பெயரைக் குறித்து உங்களை எல்லாரும் வெறுப்பர்.

18 ஆயினும் உங்கள் தலைமயிர் ஒன்றுகூட விழவேவிழாது.

19 நிலைத்துநின்றால், உங்கள் ஆன்மாக்களை மீடடுக்கொள்வீர்கள்.

20 "யெருசலேமைப் படைகள் முற்றுகையிடக் காணும்போது, அதன் அழிவு நெருங்கி விட்டது என்று அறிந்துகொள்ளுங்கள்.

21 அப்போது யூதேயாவிலிருப்பவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகட்டும். நகருக்குள் இருப்பவர்கள் வெளியேறட்டும். நாட்டுப்புறங்களில் இருப்பவர்கள் நகருக்குள்ளே வராதிருக்கட்டும்.

22 தண்டனையின் காலம் அது. எழுதியுள்ளதெல்லாம் அப்போது நிறைவேற வேண்டும்.

23 அந்நாட்களில் கருப்பவதிகளுக்கும் பாலூட்டுவோருக்கும் ஐயோ பரிதாபம்! ஏனெனில், நாட்டிலே மிகுந்த நெருக்கடியும், இம்மக்களின்மேல் தேவகோபமும் உண்டாகும்.

24 இவர்கள் வாள்முனையில் மடிவார்கள்; புறநாடுகளுக்கெல்லாம் அடிமைகளாகக் கொண்டுசெல்லப் படுவார்கள். புறவினத்தாரின் காலம் நிறைவேறுமட்டும் யெருசலேம் புறவினத்தாரால் மிதிபடும்.

25 "கதிரவனும் நிலாவிலும் விண்மீன்களிலும் அறிகுறிகள் தென்படும். மண்ணுலகில் கடற்கொந்தளிப்பின் முழக்கத்தினால் நாடுகள் குழப்பமடைந்து இடுக்கண் உறும்.

26 உலகத்திற்கு என்ன நேருமோ என்னும் ஏக்கத்தினாலும் அச்சத்தினாலும் மக்கள் உயிர்விடுவார்கள்.

27 வானத்தின் படைகள் அசைக்கப்படும். அப்பொழுது மனுமகன் மிகுந்த வல்லமையோடும் மாட்சிமையோடும் மேகத்தின்மீது வருவதைக் காண்பார்கள்.

28 இவை நிகழத்தொடங்கும்போது, தலைநிமிர்ந்து நில்லுங்கள்; உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது."

29 மேலும், அவர் அவர்களுக்குச் சொன்ன உவமையாவது: "அத்திமரத்தையும் மற்ற மரங்களையும் பாருங்கள்.

30 அவை தளிப்பதைப் பார்க்கும்பொழுது, இதோ! கோடைக்காலம் அண்மையில் உள்ளது என்று அறிந்து கொள்ளுகிறீர்கள்.

31 அவ்வாறே, நீங்களும் இதெல்லாம் நடைபெறுவதைக் காணும்போது கடவுளின் அரசு அண்மையில் உள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள்.

32 இவை யாவும் நடைபெறும்வரை இத்தலைமுறை ஒழியாது என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

33 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா.

34 "களியாட்டத்தாலும் குடிவெறியாலும் உலகக் கவலையாலும் உங்கள் உள்ளங்கள் மந்தமடையாதபடியும், அந்நாள் எதிர்பாராமல் கண்ணிபோல் உங்களைச் சிக்கவைக்காதபடியும் எச்சரிக்கையாயிருங்கள்.

35 ஏனெனில், மண்ணுலகெங்கும் வாழும், அனைவர்மேலும் அந்நாள் வந்து விடியும்.

36 நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்பித்துக்கொண்டு மனுமகன்முன் நிற்க நீங்கள் வலிமையுள்ளவர்களாய் இருக்கும்படி, எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."

37 அவர் பகலிலே கோயிலில் போதிப்பார். இரவிலோ ஒலிவத்தோப்பு மலைக்குப் போய் வெட்டவெளியில் தங்குவார்.

38 பொழுது விடிந்ததும், கோயிலில் அவர் சொல்வதைக்கேட்க மக்கள் எல்லாரும் அவரிடம் வருவார்கள்.

அதிகாரம் 22

1 பாஸ்கா எனப்படும் புளியாத அப்பத் திருவிழா அடுத்திருந்தது.

2 தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எப்படித் தொலைக்கலாமென்று வழிதேடிக்கொண்டிருந்தனர். ஆனால், பொதுமக்களுக்கு அஞ்சினர்.

3 பன்னிருவருள் ஒருவனான இஸ்காரியோத்து எனப்படும் யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.

4 தலைமக்குருக்களிடமும் காவல்தலைவர்களிடமும் சென்று, தான் இயேசுவை அவர்களுக்கு எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்பதைப்பற்றிக் கலந்துபேசினான்.

5 அவர்கள் மகிழ்ச்சியுற்று, அவனுக்குப் பணம் கொடுக்க உடன்பட்டார்கள்.

6 அவனும் ஒப்புக்கொண்டு கூட்டம் இல்லாதபோது அவரைக் காட்டிக்கொடுக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

7 அப்போது பாஸ்காச் செம்மறியைப் பலியிட வேண்டிய புளியாத அப்பத் திருவிழா வந்தது.

8 "நாம் பாஸ்காப் பலியுணவை உண்பதற்கு நீங்கள் போய் ஏற்பாடுசெய்யுங்கள்" என்று இயேசு இராய்பபரையும் அருளப் பரையும் அனுப்பினார்.

9 எங்கே ஏற்பாடுசெய்ய வேண்டும் என்கிறீர்?" என்று அவர்கள் அவரிடம் கேட்டனர்.

10 "நீங்கள் நகருக்குள் போகும்போது, ஒருவன் தண்ணீர்க்குடம் சுமந்துகொண்டு உங்களுக்கு எதிரே வருவான். அவன் நுழையும் வீட்டிற்கு அவன்பின்னே சென்று,

11 அந்த வீட்டுத் தலைவனிடம், ' நான் என் சீடருடன் பாஸ்கா உணவை உண்பதற்கான அறை எங்கே என்று போதகர் உம்மைக் கேட்கிறார் ' எனச் சொல்லுங்கள்.

12 இருக்கை முதலியன அமைந்துள்ள ஒரு பெரிய மாடி அறையை அவன் உங்களுக்குக் காட்டுவான். அங்கே ஏற்பாடுசெய்யுங்கள் " என்றார்.

13 அவர்கள் போய், தங்களிடம் அவர் சொல்லியவாறே நிகழ்ந்ததைக் கண்டு, பாஸ்கா உணவுக்கு ஏற்பாடுசெய்தார்கள்.

14 நேரம் வந்ததும், அவர் பந்தியமர்ந்தார்; அப்போஸ்தலரும் அவருடன் அமர்ந்தனர்.

15 "நான் பாடுபடுவதற்கு முன் உங்களோடு இந்தப் பாஸ்கா உணவை உண்ண ஆசைமேல் ஆசையாய் இருந்தேன்.

16 ஏனெனில், கடவுளுடைய அரசில் இது நிறைவேறுமளவும், இதை இனி உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்றார்.

17 பின்பு கிண்ணத்தை எடுத்து, நன்றிகூறி, " இதை வாங்கி உங்களுக்குள் பகிர்ந்துகொள்ளுங்கள்.

18 ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசு வரும்வரை திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன் " என்றார்.

19 மேலும் அப்பத்தை எடுத்து, நன்றிகூறி, பிட்டு, அவர்களுக்கு அளித்து, " இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் " என்றார்.

20 அவ்வாறே, உணவு அருந்தியபின் கிண்ணத்தை எடுத்து, "இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை.

21 "என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ! என்னோடு பந்தியில் அமர்ந்து உண்ணுகிறான்.

22 மனுமகன் தேவ ஏற்பாட்டின்படி போகத்தான் போகிறார். ஆனால் அவரைக் காட்டிக்கொடுப்பவனுக்கு ஜயோ கேடு! " என்றார்.

23 "அப்படியானால் நம்முள் யார் இதைச் செய்யப்போகிறவன்?" என்று அவர்கள் தஙகளுக்குள்ளே வினவத்தொடங்கினர்.

24 மேலும் தங்களுள் யாரைப் பெரியவனாகக் கருதவேண்டும் என்ற வாக்குவாதம் அவர்களிடையே உண்டாயிற்று.

25 அதற்கு அவர், "புறவினத்தாரின் அரசர்கள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகின்றார்கள். அப்படி அதிகாரம் செலுத்துவோர் 'நன்மை புரிவோர்' எனப்படுகின்றனர்.

26 நீங்களோ அப்படி இருத்தல் ஆகாது. ஆனால், உங்களுள் பெரியவன் சிறியவன்போலவும், தலைவன் பணிவிடை புரிபவன்போலவும் இருக்கட்டும்.

27 யார் பெரியவன்? பந்தியில் அமர்பவனா, பணிவிடை செய்பவனா? பந்தியில் அமர்பவன் அன்றோ? நானோ உங்கள் நடுவே பணிவிடை புரிபவனைப் போல் இருக்கிறேன்.

28 "என் துன்ப சோதனைகளில் என்னுடன் நிலைத்துநின்றவர்கள் நீங்களே.

29 என் தந்தை எனக்கு அரசுரிமை வழங்கியதுபோல நானும் உங்களுக்கு அதை வழங்கப்போகிறேன்.

30 எனவே, என் அரசில் என்னுடன் பந்தியில் உண்பீர்கள், குடிப்பீர்கள். இஸ்ராயேலின் பன்னிரு கோத்திரங்களுக்கும் நடுவராக அரியணையில் வீற்றிருப்பீர்கள்.

31 "சீமோனே, சீமோனே, இதோ! சாத்தான் உங்களைக் கோதுமைப்போலப் புடைக்க உத்தரவு பெற்றுகொண்டான்.

32 ஆனால் உன் விசுவாசம் தவறாதபடி உனக்காக மன்றாடினேன். நீ திருந்தியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து" என்றார்.

33 அதற்கு இராயப்பர், "ஆண்டவரே, உம்மோடு சிறைக்கும் சாவுக்கும் உள்ளாக ஆயத்தமாய் இருக்கிறேன்" என்றார்.

34 இயேசுவோ, "இராயப்பா, 'நான் அவரை அறியேன்' என்று நீ மும்முறை மறுதலிக்குமுன், இன்று கோழி கூவாது என் உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

35 பின்பு அவர்களை நோக்கி, "பணப்பை, கைப்பை, மிதியடி எதுவுமில்லாமல் உங்களை நான் அனுப்பியபோது உங்களுக்கு ஏதாவது குறைவாய் இருந்ததா?" என்று வினவினார்.

36 இல்லை" என்றனர்.'"இப்பொழுதோ பணப்பை உள்ளவன் அதை எடுத்துக்கொள்ளட்டும். கைப்பை உள்ளவனும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவன், தன் மேலாடையை விற்றுவிட்டு வாள் ஒன்று வாங்கிக் கொள்ளட்டும்.

37 ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: 'நெறிகெட்டவர்களோடு ஒன்றாக எண்ணப்பட்டார்' என்று எழுதியுள்ளது என்மட்டில் நிறைவேறவேண்டும். என்னைப் பற்றியதெல்லாம் நிறைவுபெறுகின்றது" என்றார்.

38 அவர்கள், "ஆண்டவரே, இதோ! இரண்டு வாள் இங்கு உள்ளன என்றனர். அவரோ, "போதும்" என்றார்.

39 அங்கிருந்து வெளியே புறப்பட்டுச் சென்று வழக்கப்படி ஒலிவமலைக்கு வந்தார். அவருடைய சீடர் அவரைப் பின்தொடர்ந்தனர்.

40 அவ்விடத்தை அடைந்ததும் அவர்களை நோக்கி, "சோதனைக்கு உட்படாதபடி செபியுங்கள்" என்றார்.

41 பின்னர், அவர்களை விட்டுக் கல்லெறி தொலைவு சென்று முழங்காலிலிருந்து,

42 "தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்; எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்.

43 அப்போது வானதூதர் ஒருவர் அவருக்குத் தோன்றி, அவரைத் திடப்படுத்தினார்.

44 கொடிய வேதனைக்குள்ளாகவே, மேலும் உருக்கமாய்ச் செபித்தார். அவருடைய வியர்வை பெரும் இரத்தத் துளிகளாக நிலத்தில் விழுந்தது.

45 செபத்தை விட்டெழுந்து, தம் சீடரிடம் வந்தார். அவர்கள் துயரத்தால் உறங்குவதைக் கண்டு,

46 அவர்களை நேக்கி, "ஏன் உறங்குகிறீர்கள்? எழுந்திருங்கள், சோதனைக்கு உட்படாதபடி செபியுங்கள்" என்றார்.

47 அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே, இதோ! ஒரு கூட்டம் வந்தது. பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ் என்பவன் அவர்களுக்கு முன்சென்று இயேசுவை முத்தமிட அணுகினான்.

48 இயேசு அவனை நோக்கி, "யூதாசே, முத்தமிட்டோ மனுமகளைக் காட்டிக்கொடுக்கிறாய்?" என்றார்.

49 சூழநின்றவர்கள் நடக்கப்போவதை உணர்ந்து, அவரிடம், "ஆண்டவரே, வாளால் வெட்டுவோமா?" என்று கேட்டனர்.

50 அவர்களுள் ஒருவன் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி அவனுடைய வலக்காதைத் துண்டித்தான்.

51 போதும், விடுங்கள்" என்று இயேசு சொல்லி, அவன் காதைத் தொட்டுக் குணப்படுத்தினார்.

52 இயேசு தம்மைப் பிடிக்க வந்திருந்த தலைமைக்குருக்களையும், கோயிலின் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி, "நீங்கள் கள்வனிடம் வருவதுபோல வாளோடும் தடியோடும் வந்தீர்களோ?

53 நாள்தோறும் கோயிலில் நான் உங்களோடு இருந்தும் நீங்கள் என்மேல் கைவைக்கவில்லை. ஆனால் இது உங்கள் நேரம்; இருள் ஆட்சிபுரியும் நேரம்" என்றார்.

54 பின்னர், அவர்கள் அவரைப் பிடித்து, தலைமைக்குருவின் இல்லத்திற்குக் கூட்டிச்சென்றனர். இராயப்பரோ தொலைவிலே பின்தொடர்ந்தார்.

55 முற்றத்தின் நடுவில் அவர்கள் நெருப்பு மூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்தனர். இராயப்பரும் அவர்களோடு போய் உட்கார்ந்துகொண்டார்.

56 ஊழியக்காரி ஒருத்தி, அவர் அனல் அருகே உட்கார்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, "இவனும் அவனுடன் இருந்தான்" என்றாள்.

57 அவரோ, "எனக்கு அவரைத் தெரியாதம்மா" என்று மறுத்தார்.

58 சற்று நேரத்திற்குப்பின் மற்றொருவன் அவரைக் கண்டு, "நீயும் அவர்களுள் ஒருவன்தான்" என, இராயப்பரோ, 'இல்லையப்பா" என்றார்.

59 ஏறக்குறைய ஒருமணிநேரம் கழித்து இன்னொருவன், "உண்மையாகவே, இவனும் அவனோடு இருந்தான்; ஏனெனில் இவன் கலிலேயன்தான்" என்று அழுத்தமாய்க் கூறினான்.

60 இராயப்பரோ, "நீ சொல்வது எனக்குத் தெரியதப்பா" என்றார். உடனே, அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே கோழி கூவிற்று.

61 ஆண்டவர் திரும்பி இராயப்பரை உற்றுநோக்கவே, "இன்று கோழி கூவுமுன்னர் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று ஆண்டவர் கூறிய வார்த்தையை அவர் நினைவுகூர்ந்து,

62 வெளியே போய் மனம் வெதும்பி அழுதார்.

63 இயேசுவைக் காவல் செய்துகொண்டிருந்தவர்கள் அவரை அடித்து ஏளனம் செய்தனர்.

64 அவருடைய முகத்தை மூடி, "உன்னை அடித்தவன் யாரென்று தீர்க்கதரிசனமாகச் சொல்" என்றனர்.

65 இன்னும் அவரைப் பலவாறு பழித்துப்பேசலாயினர்.

66 பொழுது விடிந்ததும் மூப்பர் சபையினரும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் ஒன்றுகூடித் தங்கள் நீதிமன்றத்திற்கு அவரைக் கூட்டிப்போய், "நீ மெசியாவானால், எங்களுக்குச் சொல்" என்றனர்.

67 அவர் அவர்களை நோக்கி, "நான் உங்களுக்குச் சொன்னால் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள்.

68 நான் உங்களை வினவினாலோ, நீங்கள் விடையளிக்கவும் மாட்டீர்கள்.

69 இனிமேல் மனுமகன் வல்லமையுள்ள கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருப்பார்" என்றார்.

70 அதற்கு அனைவரும், "அப்படியானால் நீ கடவுளின் மகனா?" என, அதற்கு அவர், "நான் கடவுளின் மகன் என்று நீங்களே சொல்லுகிறீர்கள்" என்றார்.

71 அவர்களோ, " நமக்கு இன்னும் சாட்சியம் எதற்கு? இவன் வாயிலிருந்தே இதைக் கேட்டோமே" என்றனர்.

அதிகாரம் 23

1 அவர்கள் எல்லாரும் கூட்டமாக எழுந்து, பிலாத்திடம் அவரைக் கூட்டிச்சென்றனர்.

2 இவன் நம் மக்களிடையே குழப்பம் உண்டாக்குகிறன். செசாருக்கு வரிசெலுத்தக் கூடாதென்கிறான். 'தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்ளுகிறான். இப்படியெல்லாம் இவன் செய்யக்கண்டோம்" என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினர்.

3 நீ, யூதரின் அரசனோ?" என்று பிலாத்து வினவ, அவர் மறுமொழியாக, "நீர்தாம் சொல்லுகிறீர்" என்றார்.

4 அப்போது, பிலாத்து தலைமைக்குருக்களையும் மக்களையும் நோக்கி, "இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்" என்றார்.

5 அவர்கள், " கலிலேயா தொடங்கி இவ்விடம்வரை, யூதேயா எங்கும் இவ்ன போதித்து மக்கிளிடையே கிளர்ச்சிசெய்கிறான் " என்று வற்புறுத்திக்கூறினார்கள்.

6 இதைக் கேட்டதும், பிலாத்து, " இவன் கலிலேயனா ? " என்று வினவினார்.

7 அவர் ஏரோதின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அறிந்ததும், அந்நாட்களிலே யெருசலேமில் தங்கியிருந்த எரோதிடம் அவரை அனுப்பினார்.

8 ஏரோது இயேசுவைக் கண்டபொழுது மிக்க மகிழ்ச்சியுற்றான். ஏனெனில், அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே, அவர் அருஞ்செயல் எதாவது செய்யக் காணலாம் என்று நம்பி அவரைப் பார்க்க நெடுநாளாக ஆவலாயிருந்தான்.

9 பற்பல கேள்விகளை அவரிடம் கேட்டான். அவரோ அவனுக்கு மறுமொழியே கூறவில்லை.

10 தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் அவர்மீது மும்முரமாகக் குற்றஞ்சாட்டியவண்ணம் நின்றனர்.

11 ஏரோது தன் படையோடு சோர்ந்து அவரை அவமானப்படுத்தி, எள்ளி நகையாடி, அவருக்குப் பகட்டான உடை அணிவித்துப்பிலாத்திடம் திருப்பியனுப்பினான்.

12 அதுவரை ஒருவரோடொருவர் பகைமைகொண்டிருந்த ஏரோதும் பிலாத்தும் அன்றே நண்பராயினர்.

13 பிலாத்து தலைமைக்குருக்களையும் தலைவர்களையும் மக்களையும் ஒன்று கூட்டி,

14 அவர்களை நோக்கி, "மக்களிடையே குழப்பம் உண்டாக்குபவன் என்று இவனை என்னிடம் கொண்டுவந்தீர்களே. இதோ! உங்கள் முன்னிலையில் ஓன்றும் இவனிடம் நான் காணவில்லை.

15 ஏரோதும் காணவில்லை. அவர் இவனை என்னிடம் திருப்பி அனுப்பிவிட்டார்.

16 சாவுக்குரியதொன்றும் இவன் செய்யவில்லை.

17 ஆகவே, இவனைத் தண்டித்து விடுதலைசெய்வேன்" என்றார்.

18 மக்களோ ஒருவாய்ப்பட, "இவனை ஒழித்துவிடும்; பரபாசை எங்களுக்கு விடுதலை செய்யும்" என்று உரக்கக் கத்தினர்-

19 பரபாசோ நகரிலே நடந்த ஒரு குழப்பத்தில் கலந்து கொலைசெய்ததாகச் சிறைப்பட்டவன்.

20 பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களிடம் பேசினார்.

21 அவர்களோ, "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று கத்தினர்.

22 மூன்றாம் முறையாக அவர்களை நோக்கி, " இவன் செய்த தீங்கு என்ன? சாவுக்குரிய குற்றமொன்றும் இவனிடம் காணோம். ஆகவே, இவனைத் தண்டித்து விடுதலைசெய்வேன் " என்றார்.

23 அவர்களோ அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டனர். அவர்கள் கூச்சலே வெற்றிகண்டது.

24 அவர்கள் கேட்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்பளித்தார்.

25 குழப்பத்தில் கலந்து கொலைசெய்ததற்காகச் சிறைப்பட்டவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலைசெய்தார். இயேசுவையோ அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டார்.

26 அவரைக் கூட்டிச்செல்லும்போது வயலிலிருந்து வந்து கொண்டிருந்த சீரேனே ஊரானாகிய சீமோன் என்பவனைப் பிடித்து, அவன்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின்னால் அதைச் சுமந்துபோகச் செய்தனர்.

27 திரளான மக்களும், அவருக்காக மாரடித்துக்கொண்டு புலம்பும் பெண்களும் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்தனர்.

28 இயேசு அப்பெண்கள்பக்கம் திரும்பி, "யெருசலேம் மகளிரே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள்.

29 ஒருநாள் வரும்: அன்று, 'மலடிகள் பேறுபெற்றவர்கள்; பிள்ளைப்பேறற்ற வயிறுகளும் பாலூட்டாத கொங்கைகளும் பேறுபெற்றவை' என்பார்கள்.

30 அபபொழுது மலைகளைப் பார்த்து, 'எங்கள்மேல் விழுங்கள்; 'குன்றுகளைப் பார்த்து, 'எங்களை மூடிவிடுங்கள். என்று சொல்லத் தொடங்குவார்கள்.

31 பச்சைமரத்திற்கே இப்படிச் செய்கிறார்கள் என்றால், பட்டமரத்திற்கு என்ன நேருமோ?" என்றார்.

32 மரணதண்டனைக்காக இரு குற்றவாளிகளையும் அவரோடே கூட்டிச்சென்றனர்.

33 மண்டை ஒடு' எனப்படும் இடத்திற்கு வந்தபின் அவரையும், அவரது வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் மற்றவனுமாக அக்குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தனர்.

34 இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார். அவர்கள் அவருடைய ஆடைகளைப் பகிர்ந்துகொள்ளச் சீட்டுப்போட்டனர்.

35 மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். தலைவர்களும், "மற்றவர்களைக் காப்பாற்றினான். இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பெற்றவருமானால் தன்னையே காப்பாற்றிக்கொள்ளட்டும்!" என்று அவரை ஏளனம்செய்தனர்.

36 படைவீரர்களும் அணுகி அவருக்குக் காடியைக் கொடுத்து,

37 நீ யூதரின் அரசனானால் உன்னையே காப்பாற்றிக் கொள்" என்று எள்ளி நகையாடினர்.

38 'இவன் யூதரின் அரசன்' என்று எழுதியிருந்த பலகையை அவர் தலைக்கு மேல் வைத்திருந்தனர்.

39 சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியா அல்லவா? உன்னையும் எங்களையும் காப்பாற்று!" என்று அவரைப் பழித்தான்.

40 மற்றவனோ, "கடவுள்மட்டில் உனக்கு அச்சமே இல்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாயிருக்கிறாய்.

41 நாம் தண்டிக்கப்படுவது முறையே. ஏனெனில், நம் செயல்களுக்குத்தக்க பலனைப் பெறுகிறோம். இவரோ ஒரு குற்றமும் செய்யவில்லை" என்று அவனைக் கடிந்துகொண்டான்.

42 பின்பு அவன், "இயேசுவே, நீர் அரசுரிமையோடு வரும்போது, என்னை நினைவுகூரும்" என்றான்.

43 அவனுக்கு இயேசு, "இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

44 அப்போது ஏறக்குறைய நண்பகல் வேளை. மூன்று மணிவரை கதிரோன் மறைந்திருக்க, நாடெங்கும் இருள் உண்டாயிற்று.

45 ஆலயத்தின் திரை நடுவில் கிழிந்தது.

46 தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரக்கக் கூவினார். இதைச் சொன்னதும் உயிர்நீத்தார்.

47 நிகழ்ததைக் கண்ட நூற்றுவர்தலைவன் "உள்ளபடியே, இவர் நீதிமான்தான்" என்று சொல்லி, கடவுளை மகிமைப்படுத்தினான்.

48 வேடிக்கை பார்க்கவந்த மக்கட்கூட்டம் நிகழ்ந்ததைக் கண்டு மார்பில் அறைந்துகொண்டு திரும்பியது.

49 அவருக்கு அறிமுனமானவர்களும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்தொடர்ந்த பெண்களும் தொலைவில் நின்று இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தனர்.

50 சூசை என்ற ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்கத்தின் உறுப்பினர். நல்லவர், நீதிமான்.

51 அவர்களுடைய திட்டத்திற்கும் செயலுக்கும் அவர் இணங்கவில்லை. யூதர்களுடைய ஊராகிய அரிமத்தியாவைச் சார்ந்தவர்; கடவுளுடைய அரசை எதிர்ப்பார்த்திருந்தவர்.

52 அவர் பிலாத்துவை அணுகி இயேசுவின் உடலைக் கேட்டார்.

53 அதைச் சிலுவையிலிருந்து இறக்கி, கோடித் துணியில் சுற்றி, பாறையில் குடைந்திருந்த கல்லறையில் அடக்கம் செய்தார். அதுவரை யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.

54 அன்று ஆயத்த நாள். ஓய்வுநாள் தொடங்கும் வேளை.

55 கலிலேயாவிலிருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்களும் சூசையுடன் கூடவேயிருந்து கல்லறையையும் உடலை அங்கு வைத்த வகையையும் கவனித்தனர்.

56 திரும்பிச் சென்று வாசனைப்பொருளையும் பரிமளத் தைலங்களையும் ஆயத்தப்படுத்தினர். கட்டளைப்படி ஓய்வுநாள் அனுசரித்தனர்.

அதிகாரம் 24

1 வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் பெண்கள் தாங்கள் ஆயத்தப்படுத்தியிருந்த வாசனைப்பொருள்களை எடுத்துக்கொண்டு கல்லறைக்கு சென்றனர்.

2 கல்லறைவாயிலில் இருந்த கல் புரட்டியிருக்கக் கண்டனர்.

3 உள்ளே நுழைந்தபோது, அவர்கள் ஆண்டவராகிய இயேசுவின் உடலைக் காணவில்லை.

4 ஆதலால் மனம் கலங்கினர். அப்பொழுது, இதோ! மின்னொளி வீசும் ஆடையணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர்.

5 பெண்களோ அச்சங்கொண்டு, முகம் கவிழ்ந்து நின்றனர். தூதர்கள் அவர்களைப் பார்த்து, "உயிருள்ளவரை இறந்தோரிடையே தேடுவானேன்?

6 அவர் இங்கே இல்லை; உயிர்த்துவிட்டார்.

7 மனுமகன் பாவிகளிடம் கையளிக்கப்பட்டுச் சிலுவையில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவேண்டுமென்று, அவர் கலிலேயாவில் இருக்கும்போதே உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள்" என்றனர்.

8 அவர்களும் அவர் சொன்னதை நினைவுகூர்ந்தனர்.

9 கல்லறையை விட்டுத் திரும்பிவந்த பெண்கள் பதினொருவருக்கும், மற்றெல்லாருக்கும் இதெல்லாம் அறிவித்தனர்.

10 அப்பெண்கள்: மதலேன்மரியாளும் அருளம்மாளும் இயாகப்பரின் தாய் மரியாளும் ஆவர். அவர்களோடு சேர்த்து மற்றப் பெண்களும் இதை அப்போஸ்தலர்களுக்குக் கூறினர்.

11 பெண்கள் கூறியது வெறும் பிதற்றலாகத் தோன்றியதால் அவர்கள் நம்பவில்லை.

12 இராயப்பரோ எழுந்து கல்லறைக்கு ஓடினார். குனிந்து பார்க்கையில் துணிகள் மட்டும் கிடக்கக் கண்டார். நிகழ்ந்ததைக் குறித்து வியந்து கொண்டே வீடு திரும்பினார்.

13 அன்றே இதோ! அவர்களுள் இருவர் யெருசலேமிலிருந்து ஏழு கல் தொலைவிலிருந்த எம்மாவுஸ் என்ற ஊருக்குப் போய்க் கொண்டிருந்தனர்.

14 நடந்ததெல்லாம் பற்றித் தங்களுக்குள் பேசிக்கொண்டே சென்றனர்.

15 இப்படிப் பேசி உசாவுகையில், இயேசுவே அவர்களோடு சேர்ந்துகொண்டு வழிநடக்கலானார்.

16 ஆனால், அவரைக் கண்டுகொள்ளாதபடி அவர்களின் பார்வை தடைபட்டிருந்தது.

17 எதைப்பற்றி நீங்கள் உரையாடிக்கொண்டு செல்லுகிறீர்கள்?" என்று அவர் அவர்களைக் கேட்டார். அவர்களோ வாடிய முகத்தோடு நின்றனர்.

18 அவர்களுள் ஒருவரான கிலேயோப்பா என்பவர் அவருக்கு மறுமொழியாக, "யெருசலேமில் உள்ளவர்களுள் நீர் ஒருவர்தாம் இந்நாட்களிலே நடந்ததை அறியாதவர் போலும்!" என்றார்.

19 அதற்கு அவர், "என்ன நடந்தது?" என்று கேட்டார். அவர்களோ, "நாசரேத்தூர் இயேசுவைப்பற்றிய செய்திதான். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராயிருந்தார்.

20 தலைமைக்குருக்களும் தலைவர்களும் அவரை மரணதண்டனைக்கு உள்ளாகும்படி கையளித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.

21 இஸ்ராயேலுக்கு விடுதலை அளிப்பவர் அவரே என நாங்கள் நம்பியிருந்தோம். அதுமட்டுமன்று. இதெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள் ஆகின்றது.

22 மேலும், எங்களைச் சார்ந்த பெண்கள் சிலர் எங்களைத் திகைக்கச்செய்தனர். அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்று,

23 அவரது உடலைக் காணாது திரும்பிவந்து, வானதூதர்களைக் காட்சியில் கண்டதாகவும், இயேசு உயிரோடு இருக்கிறார் என்று அவர்கள் கூறினதாகவும் சொல்லுகிறார்கள்.

24 எங்கள் தோழருள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னபடியே இருக்கக் கண்டனர். அவரையோ காணவில்லை" என்றனர்.

25 அவர் அவர்களை நோக்கி, "அறிவில்லாதவர்களே, இறைவாக்கினர்கள் கூறியதெல்லாம் விசுவசிப்பதற்கு மந்த புத்தியுள்ளவர்களே, '

26 மெசியா இப்பாடுகளைப் பட்டன்றோ மகிமையடையவேண்டும் ?" என்று சொல்லி, '

27 மோயீசன்முதல் இறைவாக்கினர்கள் அனைவரும் எழுதிவைத்த வாக்குகளிலிருந்து தொடங்கி தம்மைக்குறித்த மறைநூல் பகுதிகளுக்கெல்லாம் விளக்கம் தந்தார்.

28 அவர்கள் தாங்கள் போகும் ஊரை நெருங்கினர். அவர் இன்னும் வழி நடக்க வேண்டியவர்போலக் காட்டிக்கொண்டார்.

29 அவர்களோ, "எங்களோடே தங்கும். மாலை நேரமாகிறது, பொழுதும் சாய்கிறது" என்று சொல்லி, அவரைக் கட்டாயப்படுத்தினர். அவரும் அவர்களோடு தங்குவதற்குச் சென்றார்.

30 அங்கு அவர்களுடன் பந்தியமர்ந்திருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, இறைபுகழ் கூறி, பிட்டு, அவர்களோடு அளித்தார்.

31 அப்போது, அவர்கள் கண்கள் திறக்கப்பட, அவரைக் கண்டுகொண்டனர். அவரோ அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.

32 அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, " வழியில் அவர் நம்மோடு உரையாடி மறைநூலைத் தெளிவாக்குகையில், நம் உள்ளம் உருகவில்லையா! " என்றனர்.

33 அந்நேரமே, எழுந்து யெருசலேமுக்குத் திரும்பிச்சென்று, பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் கூடியிருக்கக் கண்டனர்.

34 கூடியிருந்தவர்கள், "உண்மையாகவே ஆண்டவர் உயிர்த்தார், சீமோனுக்குக் காட்சி அளித்தார்" எனப் பேசிக்கொண்டிருந்தனர்.

35 அவ்விரு சீடர் வழியில் நடந்ததையும், அப்பத்தைப் பிட்கையில் அவரைக் கண்டுகொண்டதையும் அவர்களுக்கு விவரித்தனர்.

36 இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு, அவர்கள் நடுவே தோன்றி, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்.

37 அவர்கள் திடுக்கிட்டு, அச்சம்கொண்டு, ஏதோ ஆவியைக் காண்பதாக எண்ணினர்.

38 அப்போது அவர் அவர்களை நோக்கி, "ஏன் இந்தக் கலக்கம்? உங்கள் உள்ளத்தில் இத்தகைய எண்ணங்கள் எழுவானேன்?

39 என் கைகளையும் கால்களையும் பாருங்கள். நானேதான்; தொட்டுப்பாருங்கள். நீங்கள் என்னிடம் காணும் எலும்பும் தசையும் ஆவிக்குக் கிடையாது" என்றார்.

40 இப்படிச் சொன்ன பின்பு தம் கைகளையும் கால்கைளையும் அவர்களுக்குக் காட்டினார்.

41 அவர்களோ மகிழ்ச்சி மிகுதியால் இன்னும் நம்பாமல் வியந்துகொண்டிருக்கும்பொழுது, "உண்பதற்கு இங்கு ஏதாவது உங்களிடம் உண்டா?" என்றார்.

42 பொரித்த மீன் துண்டொன்று அவருக்குக் கொடுத்தனர்.

43 அதை எடுத்து அவர்கள் முன் சாப்பிட்டார்.

44 அவர் அவர்களைப் பார்த்து, "மோயீசனின் சட்டத்திலும் இறைவாக்குளிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியுள்ளதெல்லாம் நிறைவேண்டும் என்று, நான் உங்களோடு இருந்தபோதே சொன்னேனே; இப்போது நடப்பது அதுதான்" என்றார்.

45 மறைநூல் அவர்களுக்கு விளங்கும்படி அவர்களுடைய மனக்கண்ணைத் திறந்தார்.

46 பின்னர், அவர்களை நோக்கி, "மறைநூலில் எழுதியுள்ளது இதுதான்: மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்;

47 பாவமன்னிப்படைய மனந்திரும்ப வேண்டுமென்று யெருசலேமில் தொடங்கி, புறவினத்தார் அனைவருக்கும் அவர்பெயரால் அறிவிக்கப்படும்.

48 இவற்றிற்கெல்லாம் நீங்கள் சாட்சி.

49 இதோ! என் தந்தை வாக்களித்ததை நான் உங்களுக்கு அனுப்பப்போகிறேன். உன்னைதத்திலிருந்து வரும் வல்லமையை நீங்கள் அணிந்துகொள்ளும்வரை நகரிலேயே தங்கி இருங்கள்" என்றார்.

50 பெத்தானியாவை நோக்கி அவர்களைக் கூட்டிச்சென்று, கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசிகூறினார்.

51 அப்படி ஆசி கூறுகையில் அவர்களை விட்டுப் பிரிந்து, வானகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பெற்றார்.

52 அவர்கள் தெண்டனிட்டு வணங்கிப் பொருமகிழ்ச்சியுடன் யெருசலேம் திரும்பினர்.

53 கோயிலில் கடவுளை இடைவிடாமல் போற்றிப் புகழ்ந்துகொண்டிருந்தனர்.