அப்போஸ்தலர் பணி

அதிகாரம் 01

1 தெயோபிலே, இயேசு தாம் தேர்ந்துகொண்ட அப்போஸ்தலர்கள் செய்யவேண்டியவற்றைப் பரிசுத்த ஆவியினால் கட்டளையிட்டு விண்ணேற்படைந்த நாள்வரை,

2 அவர் செய்தவை, போதித்தவை யாவற்றையும் என் நூலின் முதற்பகுதியில் எழுதினேன்.

3 தாம் பாடுபட்ட பின்னர், இயேசு நாற்பது நாள் அளவாக அவர்களுக்குத் தோன்றி, கடவுளின் அரசைப்பற்றிக் கூறி, பல சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காட்டினார்.

4 ஒருநாள் அவர் அவர்களோடு உண்ணும்போது, அவர்கள் யெருசலேமை விட்டு நீங்காமல் தந்தை வாக்களித்ததை எதிர்பார்க்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

5 "என் வாய்மொழியாக நீங்கள் கேட்டது இவ்வாக்குறுதியைப்பற்றித்தான்: அருளப்பர் நீரால் ஞானஸ்நானம் கொடுத்தார்; நீங்களோ இன்னும் சில நாட்களில் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்" என்றார்.

6 ஆகவே, கூடிவந்திருந்தவர்கள், "ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு அரசாட்சியை நீர் மீட்டுத்தரும் காலம் இதுதானோ?" என்று வினவினார்கள்.

7 அதற்கு அவர், "தந்தை தம் அதிகாரத்தால் குறித்துள்ள காலங்களையும் நேரங்களையும் அறிவது உங்களைச் சார்ந்ததன்று.

8 ஆனால், பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது, அவரது வல்லமையைப் பெற்று யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்றார்.

9 இதைச் சொன்னபின்பு, அவர்கள்கண்முன்பாக அவர் மேலே உயர்த்தப்பெற்றார். மேகம் ஒன்று வந்து அவர்களுடைய பார்வையிலிருந்து அவரை மறைத்துக்கொண்டது.

10 அவர் போகும்பொழுது, அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருந்தனர். அப்போது வெண்ணாடை அணிந்த இருவர் அங்கே தோன்றி,

11 "கலிலேயரே, ஏன் இப்படி வானத்தைப் பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? உங்கள் நடுவிலிருந்து வானகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பெற்ற இந்த இயேசு எவ்வாறு வானகம் செல்லக் கண்டீர்களோ, அவ்வாறே மீண்டும் வருவார்" என்றனர்.

12 பின்பு அவர்கள் ஒலிவத்தோப்பு என்னும் மலையிலிருந்து யெருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை யெருசலேமுக்கு அருகில் உள்ளது; ஓய்வுநாளில் நடக்கக்கூடிய தூரம்தான்.

13 இப்படித் திரும்பிவந்த இராயப்பர், அருளப்பர், யாகப்பர், பெலவேந்திரர், பிலிப்பு, தோமையார், பார்த்தொலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாகப்பர், தீவிரவாதி என்னும் சீமோன், யாகப்பரின் மகன் யூதா ஆகியவர்கள், தாங்கள் வழக்கமாய்த் தங்கும் மாடியறைக்குப் போனார்கள்.

14 இவர்கள் எல்லாரும் பெண்களோடும், இயேசுவின் தாய் மரியாளோடும், அவர் சகோதரரோடும் ஒரே மனதாய்ச் செபத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

15 அப்பொழுது ஒருநாள், அங்கே - ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் கூடியிருக்கையில் - இராயப்பர் அவர்கள் நடுவில் எழுந்துநின்று பேசியதாவது:

16 "சகோதரர்களே, இயேசுவைக் கைதுசெய்தவர்களுக்கு வழிகாட்டியான யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி, தாவீதின் வழியாக, முன்னறிவித்த மறைநூல்வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது. -

17 அவன் நம்முள் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்கு பெற்றிருந்தான்.

18 இந்த யூதாஸ் தன் அநீதச் செயலுக்குக் கிடைத்த கூலியைக்கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான். அவன் தலைகீழாய் விழ, அவன்வயிறு வெடித்துக் குடலெல்லாம் சிதறிப்போயின.

19 இது யெருசலேமில் குடியிருப்பவர் அனைவருக்கும் தெரிந்ததே. அதனால் அந்த நிலம் அவர்கள் மொழியில் அக்கெல்டாமா, அதாவது இரத்த நிலம், எனப்படுகிறது.

20 சங்கீத நூலில்: ' அவன் இல்லிடம் பாழாகட்டும், குடியற்றுப் போகட்டும் ' என்றும், ' அவன் அலுவலை வேறொருவன் ஏற்றுக்கொள்ளட்டும் ' என்றும் எழுதியுள்ளது.

21 "ஆகையால், அருளப்பரின் ஞானஸ்நானம் முதல் ஆண்டவராகிய இயேசு நம் நடுவினின்று எடுத்துக் கொள்ளப்பெற்ற நாள்வரை,

22 அவர் நம்மோடு பழகிய காலமெல்லாம் எங்களுடனிருந்தவர்களுள் ஒருவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாக எங்களோடு சேர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது."

23 எனவே, அவர்கள் இருவரைக் குறிப்பிட்டார்கள்: அவர்கள் ஒருவர் பர்சபாஸ் என்னும் சூசை; இவருக்கு யுஸ்துஸ் என்ற பெயருமிருந்தது; மற்றொருவர் மத்தியாஸ்.

24 "ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே, 'யூதாஸ் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி, இந்த அப்போஸ்தலர் ஊழியத்தில் இழந்துபோன இடத்தைப் பெறுவதற்கு,

25 இவ்விருவருள் யாரை நீர் தேர்ந்துகொள்கிறீர் எனக் காண்பித்தருளும்" என்று அவர்கள் மன்றாடினார்கள்.

26 பிறகு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாஸ் பேருக்கு விழவே, அவர் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

அதிகாரம் 02

1 பெந்தெகொஸ்தே என்னும் திருநாளின்போது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.

2 அப்பொழுது திடீரென, பெருங்காற்று வீசுவதுபோன்ற இரைச்சல் வானத்தினின்று உண்டாகி, அவர்கள் இருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

3 நெருப்புப்போன்ற நாவுகள் அவர்களுக்குத் தோன்றிப் பிளவுண்டு, ஒவ்வொருவர்மேலும் வந்து தங்கின.

4 எல்லாரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று, ஆவியானவர் அருளியபடி அயல்மொழிகளில் பேசத்தொடங்கினர்.

5 அச்சமயத்தில், வானத்தின்கீழ் இருக்கும் எல்லா நாட்டினின்றும் பக்தியுள்ள யூதர்கள் வந்து யெருசலேமில் தங்கியிருந்தார்கள்.

6 அந்த இரைச்சலைக் கேட்டு மக்கள் கூட்டமாகக் கூடினார்கள்; அவர்கள் பேசுவதை மக்கள் ஒவ்வொருவரும் தத்தம் மொழியில் கேட்டுத் திடுக்கிட்டார்கள்.

7 அனைவரும் திகைத்துப்போய் வியப்புடன், "இதோ! பேசுகிற இவர்கள் எல்லாரும் கலிலேயர் அல்லரோ?

8 அப்படியிருக்க அவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் நம் தாய்மொழியில் கேட்பதெப்படி?

9 பார்த்தர், மேதர், எலாமீத்தர் ஆகியோரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா,

10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சீரேனே நகரை அடுத்த லீபியாவின் பகுதிகள் ஆகிய நாடுகளில் வாழ்பவரும், உரோமையிலிருந்து வந்தவர்,

11 யூதர், யூதமதத்தைத் தழுவியவர், - கிரேத்தர், அரபியர் ஆகிய நாம் யாவரும் நம் மொழிகளிலேயே கடவுளின் மாபெரும் செயல்களை அவர்கள் பேசக் கேட்கிறோமே!" என்றனர்.

12 எல்லாரும் திகைத்துப்போய், "இதைப்பற்றி என்னதான் நினைப்பது ?" என்று ஒருவர் ஒருவரிடம் சொல்லிக்கொண்டு மனங்குழம்பி நின்றனர்.

13 சிலர் "இவர்களுக்கு மதுமயக்கமோ" என்று ஏளனம் செய்தனர்.

14 அப்பொழுது இராயப்பர் பதினொருவரோடு எழுந்துநின்று, மக்களை நோக்கி, உரத்த குரலில் பேசியதாவது: "யூதர்களே, மற்றும் யெருசலேம்வாழ் மக்களே, நான் சொல்வதை அறிந்துகொள்ளுங்கள்; என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்.

15 நீங்கள் நினைப்பதுபோல் இவர்கள் மதுமயக்கம் கொண்டவர்களல்லர்: இப்போது காலை ஒன்பது மணிதானே.

16 ஆனால், இது இறைவாக்கினரான யோவேல் கூறிய நிகழ்ச்சியே:

17 ' கடவுள் கூறுவது: இதோ! இறுதி நாட்களில் எல்லார்மேலும் என் ஆவியைப் பொழிவேன்; உங்கள் புதல்வர் புதல்வியர் இறைவாக்கு உரைப்பர், உங்கள் இளைஞர் காட்சிகள் அருளப்பெறுவர், உங்கள் முதியோர் கனவுகள் காண்பர்.

18 ஆம், அப்பொழுது என் அடியான், என் அடியாள் ஒவ்வொருவர்மீதும் என் ஆவியைப் பொழிவேன்; அவர்களும் இறைவாக்கு உரைப்பர்.

19 இன்னும், விண்ணில் அற்புதங்களும் மண்ணில் அருங்குறிகளும் காட்டுவேன்: எங்குமே இரத்தமும் நெருப்பும் புகையும்.

20 ஒளிவிளங்கும் பெருநாளாம் ஆண்டவரின் நாள் வருமுன், கதிரோன் இருளாகும், நிலவோ இரத்தமாய் மாறும்.

21 அப்பொழுது, ஆண்டவரின் பெயரைச் சொல்லி மன்றாடும் எவனும் மீட்புப் பெறுவான். '

22 "இஸ்ராயேல் மக்களே, நான் கூறுவதைக் கேளுங்கள்: புதுமைகள், அற்புதங்கள், அருங்குறிகளால் நாசரேத்தூர் இயேசு கடவுளது சான்று பெற்றவராக உங்கள்முன் எண்பிக்கப்பெற்றார். ஏனெனில், நீங்கள் அறிந்திருப்பதுபோல், இவற்றையெல்லாம் உங்கள் நடுவில் கடவுளே அவர்வழியாகச் செய்தார்.

23 கடவுளின் திட்டத்திற்கும் முன்னறிவுக்கும் ஏற்பக் கையளிக்கப்பட்ட இவரைத்தாம், நீங்கள் திருச்சட்டம் அறியாதவர்களைக்கொண்டு சிலுவையிலறைந்து கொன்றீர்கள்.

24 கடவுளோ அவரை மரண வேதனைகளினின்று விடுவித்து, உயிர்த்தெழச் செய்தார்; ஏனெனில், மரணம் அவரைத் தன்பிடியில் வைத்திருத்தல் இயலாதது.

25 அவரைப்பற்றித் தாவீது கூறுவது: ' ஆண்டவர் என்றுமே என் கண்முன் உள்ளார்; நான் அசைவுறாதபடி அவர் என் வலப்பக்கம் நிற்கிறார்.

26 இதனால் என் உள்ளம் மகிழ்ந்தது, என் நாவு அக்களிப்பு எய்தியது; என் உடலும் நம்பிக்கையில் நிலைத்திருக்கும்.

27 ஏனெனில், என் ஆன்மாவைப் பாதாளத்தில் விட்டுவிடமாட்டீர், உம் புனிதர் அழிவுகாண விடமாட்டீர்.

28 வாழ்வின் வழிகளை எனக்குக் காட்டினீர், உம் திருமுன் நிற்கும் என்னை மகிழ்வால் நிரப்புவீர். '

29 "சகோதரரே, மூதாதையாகிய தாவீதைப்பற்றி ஒளிவுமறைவின்றி உங்களுக்குக் கூறலாமா: அவர் இறந்தார், அடக்கம்செய்யப்பட்டார்; அவரது கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கின்றது.

30 எனவே, ' அவர் பாதாளத்தில் விடப்படவில்லை ' என்றும், ' அவர் உடல் அழிவு காணவில்லை ' என்றும் அவர் கூறியது,

31 கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்தேயாகும். ஏனெனில் தாவீது இறைவாக்கினரானதால், அவர்வழித் தோன்றல் ஒருவர் அவருடைய அரியணையில் அமர்வார் என்று கடவுள் ஆணையிட்டு உறுதியாகக் கூறியதை அவர் அறிந்திருந்தார்.

32 இந்த இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார்; இதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகள்.

33 இங்ஙனம், கடவுளின் வல்லமையால் உயர்த்தப்பெற்ற இவர், வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவியைத் தந்தையிடமிருந்து பெற்று, நீங்கள் இப்பொழுது காண்பதும் கேட்பதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.

34 வானகத்திற்கு ஏறிச்சென்றவர் தாவீதல்லர்; ஏனெனில், அவரே கூறுகிறார்:

35 ' ஆண்டவர் என் ஆண்டவரிடம்: நாம் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் எம் வலப்பக்கத்தில் அமரும் என்றார். '

36 "எனவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக ஆக்கினார் என்பதை இஸ்ராயேல் குலத்தவரெல்லாம் உறுதியாக அறிந்துகொள்வார்களாக."

37 இதைக் கேட்டு, அவர்கள் உள்ளம்குத்துண்டவர்களாய், இராயப்பரையும் மற்ற அப்போஸ்தலர்களையும் நோக்கி, "சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று வினவினார்கள்.

38 அதற்கு இராயப்பர், "மனந்திரும்புங்கள்; பாவமன்னிப்பு அடைவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீங்கள் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெறுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியாம் திருக்கொடையைப் பெறுவீர்கள்.

39 ஏனெனில், இறைவன் தந்த வாக்குறுதி உங்களுக்குரியதே; ஏன், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள எல்லாருக்கும், நம் கடவுளாகிய ஆண்டவர் அழைக்கும் ஒவ்வொருவருக்குமே உரியது" என்றார்.

40 இன்னும், அவர் பல ஆதாரங்களைக் காட்டி, சாட்சியங்கூறி, "நெறிகெட்ட இத்தலைமுறையிலிருந்து நீங்கி, உங்களை மீட்டுக்கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

41 அவருடைய அறிவுரையை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். இவ்வாறு, அன்று ஏறத்தாழ மூவாயிரம் பேர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

42 இவர்கள் அப்போஸ்தலர்களின் படிப்பினையைக் கேட்பதிலும், நட்புடன் உறவாடுவதிலும், அப்பம் பிட்குதலிலும், செபிப்பதிலும் நிலைத்திருந்தார்கள்.

43 அற்புதங்கள், அருங்குறிகள் பல அப்போஸ்தலர்கள்வழியாய் நடைபெற்றன; இதனால் மக்களிடையே அச்சம் நிலவியது.

44 விசுவசித்தவர்கள் எல்லாரும் ஒருமித்துத் தங்கள் உடைமைகள் அனைத்தையும் பொதுப்பொருளாய்க் கொண்டிருந்தார்கள்.

45 நிலபுலங்களையும் உடைமைகளையும் விற்று, அவரவர் தேவைக்கேற்ப எல்லாரும் பங்கிட்டுக்கொண்டனர்.

46 நாடோறும் தவறாமல் ஒரே மனதாய்க் கோயிலில் கூடினர்; வீடுகளில் அப்பத்தைப்பிட்டு, மனமகிழ்வோடும் கபடற்ற உள்ளத்தோடும் உணவைப் பகிர்ந்துகொண்டனர்.

47 இங்ஙனம் கடவுளைப் புகழ்ந்துவந்தனர்; மக்கள் அனைவருக்கும் வேண்டியவர்களாய் விளங்கினர். ஆண்டவரும் மீட்புப்பெறுவோரை நாள்தோறும் அவர்களோடு சேர்த்து வந்தார்.

அதிகாரம் 03

1 ஒருநாள், செபநேரமாகிய பிற்பகல் மூன்று மணிக்கு இராயப்பரும் அருளப்பரும் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

2 அப்போது, பிறவியிலேயே முடவனாயிருந்த ஒருவன் தூக்கிக்கொண்டு வரப்பட்டான்; கோயிலுக்குள் போகிறவர்களிடம் பிச்சைவாங்குவதற்காக நாள்தோறும் அவனைக் கோயிலின் 'அழகு வாயில் ' என்னும் வாசலருகில் வைப்பதுண்டு.

3 இராயப்பரும் அருளப்பரும் கோயிலுக்குள் நுழைகையில், அவர்களைப் பார்த்துப் பிச்சை கேட்டான்.

4 இராயப்பரும் அருளப்பரும் அவனை உற்றுநோக்கினர். இராயப்பர் "இங்கே பார்" என்றார்.

5 அவனோ ஏதேனும் கிடைக்கும் என்று அவர்களை ஆவலோடு நோக்கினான்.

6 இராயப்பர் அவனிடம், "வெள்ளியோ பொன்னோ என்னிடம் இல்லை; என்னிடம் உள்ளதை உனக்குக் கொடுக்கிறேன்; நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட! " என்று சொல்லி,

7 அவனது வலக்கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். உடனே அவனுடைய பாதங்களும் கணுக்கால்களும் வலுவடைந்தன.

8 அவன் துள்ளி எழுந்து நடக்கத்தொடங்கினான்; துள்ளி நடந்து கடவுளைப் புகழ்ந்துகொண்டே அவர்களுடன் கோயிலுக்குள் சென்றான்.

9 அவன் நடப்பதையும், கடவுளைப் புகழ்வதையும் மக்கள் எல்லாரும் கண்டனர்.

10 கோயிலின் 'அழகு வாயிலில் பிச்சைகேட்டு உட்கார்ந்திருந்தவன் அவனே என்று அறிந்துகொண்டனர். அவனுக்கு நிகழ்ந்ததைப் பார்த்து, திகைப்புற்று மலைத்துப்போயினர்.

11 அவன் இராயப்பரையும் அருளப்பரையும் விடாமல், அவர்களுக்குப் பின்னாலேயே போய்க்கொண்டிருக்கவே மக்களெல்லாரும் திகைப்புற்று, ' சாலொமோன் மண்டபம் ' என்னும் இடத்திற்கு அவர்களிடம் ஓடிவந்தனர்.

12 இராயப்பர் அதைக் கண்டு, கூட்டத்திற்குக் கூறியது: "இஸ்ராயேல் மக்களே, இதைக் கண்டு நீங்கள் வியப்பதேன்? எங்கள் சொந்த வல்லமையாலோ பக்தியின் பலத்தினாலோ இவனை நடக்கவைத்ததாக எண்ணி நீங்கள் எங்களை இப்படி விழித்துப் பார்ப்பதேன்?

13 ஆபிரகாம், ஈசாக், யாக்கோபின் கடவுள், நம் முன்னோர்களின் கடவுள் தம் ஊழியர் இயேசுவை மகிமைப்படுத்தினார்; நீங்களோ அவரைப் பகைவர்களிடம் கையளித்துவிட்டீர்கள்; பிலாத்து விடுதலைத்தீர்ப்பு அளித்தபோதும் பிலாத்துவின்முன் அவரை மறுதலித்தீர்கள்.

14 புனிதமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்கு விடுதலைசெய்யக் கேட்டுக்கொண்டீர்கள்.

15 வாழ்வுக்கு வழிகாட்டும் தலைவரைக் கொன்றீர்கள்; ஆனால் கடவுள் அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார். இதற்கு நாங்கள் சாட்சிகள்.

16 இதோ, உங்கள் கண்முன் நிற்கிறவன் உங்களுக்குத் தெரிந்தவன்; இயேசுவின் பெயர்மீதுள்ள விசுவாசத்தால், அவருடைய பெயரே இவனுக்கு வலுவூட்டியது; அவரால் உண்டாகிய விசுவாசமே, உங்கள் எல்லாருக்கும் முன்பாக, இவனுக்கு முழுக் குணம் அளித்துள்ளது.

17 "இனி, சகோதரர்களே, தெரியாமல் இப்படிச் செய்துவிட்டீர்கள் என்று அறிவேன்; அப்படியே உங்கள் தலைவர்களும் தெரியாமல் செய்துவிட்டார்கள்.

18 கடவுளோ, தம் மெசியா பாடுபட வேண்டுமென, இறைவாக்கினர் அனைவருடைய வாய்மொழியாலும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார்.

19 ஆகையால், உங்கள் பாவங்கள் ஒழியும்பொருட்டு மனம் மாறிக் கடவுளிடம் திரும்புங்கள்.

20 ஆண்டவர் அப்பொழுது இளைப்பாறும் காலத்தை அருளி, உங்களுக்கென மெசியாவாக ஏற்படுத்திய இயேசுவை அனுப்புவார்.

21 இந்த இயேசு, அனைத்தும் புதிதாக்கப்படும் காலம் வரும்வரை, வானகத்தில் இருத்தல்வேண்டும். தொன்றுதொட்டு வந்த தம் பரிசுத்த இறைவாக்கினர்களின் வாயிலாகக் கடவுள் அக்காலத்தைப்பற்றி அறிவித்திருந்தார்.

22 இவ்வாறு மோயீசன், ' கடவுளாகிய ஆண்டவர் என்னைப்போன்ற ஓர் இறைவாக்கினரை உங்கள் சகோதரர்களினின்று உங்களுக்கென எழச்செய்வார்; அவர் உங்களுக்கு என்ன சொன்னாலும் அதற்குச் செவிகொடுங்கள்.

23 அந்த இறைவாக்கினரின் சொல்லைக் கேளாத எவனும் மக்களினின்று களைந்தெறியப்படுவான் ' என உரைத்தார்.

24 அவ்வாறே, சாமுவேல் தொடங்கி இறைவாக்கு உரைத்த எல்லாரும் ஒருவருக்குப்பின் ஒருவராக இந்நாட்களைக்குறித்து முன்னறிவித்தனர்.

25 "நீங்களோ இறைவாக்கினர்களின் புதல்வர்கள்; ' உன் வித்தின்வழியாக மண்ணுலகின் குலமெல்லாம் ஆசிபெறும் ' என்று கடவுள் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம் முன்னோருடன் செய்துகொண்ட உடன்படிக்கைக்கு உரியவர்கள் நீங்கள்.

26 உங்களுக்கு அருள் வழங்கி, உங்களுள் ஒவ்வொருவனையும் அவன் தன் தீச்செயல்களினின்று விலக்குவதற்காக, கடவுள் தம் ஊழியரை உயிர்ப்பித்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.

அதிகாரம் 04

1 அவர்கள் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில், குருக்களும், கோயிலின் காவல்தலைவனும், சதுசேயர்களும் அங்குத் தோன்றினார்கள்.

2 அவர்கள் மக்களுக்குப் போதிப்பதையும், இயேசுவை எடுத்துக்காட்டாகக் கூறி, இறந்தோர் உயிர்த்தெழுவர் என அறிவிப்பதையும் கண்டு சினந்து,

3 அவர்களைப் பிடித்தார்கள்; ஏற்கெனவே பொழுதுபோயிருந்ததால், மறுநாள்வரை அவர்களைக் காவலில் வைத்தார்கள்.

4 தேவ வார்த்தையைக் கேட்டவர்களுள் பலர் விசுவாசங்கொண்டனர்; இப்படி விசுவசித்த ஆண்களின் எண்ணிக்கை ஐயாயிரமாயிற்று.

5 மறுநாள் மக்கள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் யெருசலேமில் கூடினார்கள்.

6 தலைமைக்குரு அன்னாஸ், கைப்பாஸ், யோவான், அலெக்சாந்தரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் அங்கே இருந்தனர்.

7 அப்போஸ்தலர்களை நடுவில் நிறுத்தி, "எந்த வல்லமையால், யார் பெயரால் இதை நீங்கள் செய்தீர்கள் ?" என்று வினவினர்.

8 அப்பொழுது இராயப்பர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பெற்று, அவர்களைப் பார்த்துக் கூறியதாவது: "மக்கள் தலைவர்களே, பெரியோர்களே,

9 நோயாளிக்கு நாங்கள் செய்த நன்மையைக்குறித்து விசாரிப்பீர்களாகில், இவன் எவ்வாறு குணமானான் என்று எங்களை இன்று கேட்பீர்களாகில்,

10 இவன் குணம் பெற்று உங்கள்முன் நிற்பது நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால்தான்; இது உங்கள் எல்லோருக்கும், இஸ்ராயேல் மக்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கட்டும். இந்த இயேசுவைத்தாம் நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள்; கடவுளோ அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார்.

11 ' வீடுகட்டுவோராகிய உங்களால் விலக்கப்பட்டு மூலைக்கல்லாய் அமைந்த கல் ' இவர்தாம்.

12 இவராலன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை; ஏனெனில், நாம் ' மீட்படைவதற்கு அவர் பெயரைத்தவிர இவ்வுலகில் மனிதருக்கு வேறு பெயர் அருளப்படவில்லை."

13 இராயப்பரும் அருளப்பரும் கல்வியறிவு அற்றவர்கள் எனச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களுடைய துணிவைக் கண்டு வியப்புற்றனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதும் தெரியும்.

14 எனினும் குணமான மனிதன் அவர்களுடன் நிற்பதைக் கண்டபோது ஒன்றும் மறுத்துப்பேச முடியவில்லை.

15 மன்றத்தை விட்டு வெளியேற அவர்களுக்குக் கட்டளையிட்டு, தமக்குள் ஆலோசனை செய்து,

16 "இவர்களை என்ன செய்யலாம்? சிறந்ததோர் அருங்குறி இவர்களால் நிகழ்ந்துள்ளது; யெருசலேமில் வாழ்வோர் அனைவருக்கும் அது நன்றாய்த் தெரியும்; அதை நம்மால் மறுக்க முடியாது.

17 ஆயினும், இது மக்களிடையே மேலும் பரவாதிருக்க, இப்பெயரைச் சொல்லி யாரிடமும் பேசலாகாது என இவர்களை எச்சரிப்போம்" என்று முடிவுசெய்தனர்.

18 இதன்பின் அவர்களை அழைத்து, இனி இயேசுவின் பெயரைச் சொல்லி, எதுவும் பேசவோ போதிக்கவோ கூடாது எனக் கட்டளையிட்டனர்.

19 அதற்கு இராயப்பரும் அருளப்பரும் மறுமொழியாக: "கடவுள் சொல்வதைக் கேட்பதற்கு மேலாக நீங்கள் சொல்வதைக் கேட்பது கடவுளுக்குமுன் நீதியா, நீங்களே தீர்மானியுங்கள்.

20 நாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பேசாமல் இருக்க எங்களால் இயலாது" என்றனர்.

21 இப்படி அற்புதமாய்க் குணமடைந்த மனிதன் நாற்பது வயதிற்கு மேற்பட்டவன்;

22 அவனுக்கு நிகழ்ந்ததைக்குறித்து எல்லாரும் கடவுளை மாட்சிமைப்படுத்தியதால், சங்கத்தினர் மக்களுக்கு அஞ்சி, அவர்களைத் தண்டிப்பதற்கு வழிகாணாமல், எச்சரித்து விடுதலைசெய்தனர்.

23 அவர்கள் விடுதலை அடைந்தபின் தம்மவர்களிடம் வந்து, தலைமைக்குருக்களும் பெரியோர்களும் தங்களுக்குச் சொன்ன யாவற்றையும் அறிவித்தார்கள்.

24 அதைக் கேட்டவர்கள் ஒருமிக்க உரத்த குரலில் கடவுளை நோக்கி, "ஆண்டவரே, விண், மண், கடல் யாவற்றையும், அவற்றில் அடங்கிய அனைத்தையும் ஆக்கியவர் நீரே.

25 நீரே பரிசுத்த ஆவியினால் உம் ஊழியர் தாவீதின் வாயிலாக மொழிந்தீர்: ' புறவினத்தார் சீறுவதேன் ? மக்கள் வீணான சூழ்ச்சி செய்வதேன் ?

26 ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக மாநில மன்னர் எழுந்தனர்; தலைவரும் ஒன்றுபட்டனர். '

27 "உள்ளபடியே, இந்நகரில் ஏரோதும் போஞ்சு பிலாத்தும் புறவினத்தாரும் இஸ்ராயேல் மக்களும் ஒன்றுபட்டு, நீர் அபிஷுகம்செய்த உம் புனித ஊழியராகிய இயேசுவை எதிர்த்து எழுந்தனர்.

28 உமது கைவன்மையும் திருவுளமும் தீர்மானித்ததெல்லாம் நிகழும்படி, இவ்வாறு செய்தனர்.

29 ஆண்டவரே, இப்பொழுது அவர்களது மிரட்டலைப் பாரும்; உமது வார்த்தையை முழுத்துணிவுடன் எடுத்துச்சொல்ல உம் ஊழியர்களுக்கு அருள்தாரும்.

30 உம் புனித ஊழியராகிய இயேசுவின் பெயரால் நோய்கள் தீரவும், அருங்குறிகள், அற்புதங்கள் நடைபெறவும் உமது கைவன்மையைக் காட்டும்" என மன்றாடினார்கள்.

31 இவ்வாறு மன்றாடவே, அவர்கள் குழுமியிருந்த இடம் அதிர்ந்தது; அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பெற்று, கடவுளின் வார்த்தையைத் துணிவுடன் எடுத்துச்சொன்னார்கள்.

32 விசுவாசிகள் அத்தனை பேரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்; அவர்களுள் ஒருவனும் தன் உடைமை எதன்மீதும் உரிமைப்பாராட்டவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.

33 அப்போஸ்தலர்கள் மிகுந்த வல்லமையோடு ஆண்டவராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியம் கூறினார்கள்; அனைவருமே மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர்.

34 வறுமைப்பட்ட நிலையில் அவர்களுள் ஒருவனும் இல்லை; ஏனெனில், நிலபுலம், வீடு உடையவர்கள் அவற்றை விற்று அத்தொகையைக் கொண்டுவந்து,

35 அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தார்கள்; அவர்கள் அதை, அவனவன் தேவைக்குத் தக்கவாறு, பகிர்ந்து கொடுத்தார்கள்.

36 சைப்பாஸ் தீவினரான சூசை என்னும் லேவியர் ஒருவர் இருந்தார்; அப்போஸ்தலர்கள் அவருக்குப் பர்னபா என்று பெயரிட்டார்கள்; ( அதற்கு 'ஆறுதலின் புதல்வன் ' என்பது பொருள் ).

37 அவரிடம் ஒரு நிலம் இருந்தது; அதை விற்று, தொகையைக் கொண்டுவந்து அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தார்.

அதிகாரம் 05

1 அனனியா என்ற வேறொருவனும் அவன் மனைவி சபிராளும் தம் நிலத்தை விற்றார்கள்.

2 விற்றதில் ஒரு பகுதியை அவன் வைத்துக்கொண்டு ஒரு பகுதியைக் கொண்டுபோய் அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தான். அவன் மனைவியும் அதற்கு உடந்தையாயிருந்தாள்.

3 அப்பொழுது இராயப்பர், "அனனியாவே, நிலம் விற்றதில் ஒரு பகுதியை நீ உனக்கென வைத்துக்கொண்டு, பரிசுத்த ஆவியை ஏமாற்றும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன் ?

4 அது உன் பெயரில் இருந்தவரையில் உன்னுடையது தானே; விற்ற பிறகும் தொகை முழுவதும் உனக்கு உரிமையாகத்தான் இருந்ததில்லையா ? பின், இத்தகைய எண்ணம் உன் உள்ளத்தில் உதித்தது எப்படி ? நீ பொய் சொன்னது மனிதரிடமன்று, கடவுளிடமே" என்றார்.

5 இதைக் கேட்டதும் அனனியா அப்படியே விழுந்து உயிர்விட்டான். இதைக் கேள்வியுற்ற அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது.

6 இளைஞர்கள் எழுந்து, அவனைத் துணியால் மூடி, வெளியே கொண்டுபோய்ப் புதைத்தார்கள்.

7 ஏறத்தாழ மூன்று மணி நேரத்துக்குப்பின் அவன்மனைவி வந்தாள்; நடந்ததொன்றும் அவளுக்குத் தெரியாது.

8 இராயப்பர் அவளை நோக்கி, "நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், சொல்" எனக் கேட்க, "ஆம், இவ்வளவுக்குத்தான்" என்றாள்.

9 அதற்கு இராயப்பர், "நீங்கள் இருவரும் ஆண்டவரின் ஆவியைச் சோதிக்க ஒன்றுபட்டதேன்? உன் கணவனைப் புதைத்தவர்களின் காலடிகள் கேட்கின்றன; இதோ! கதவருகில் வந்துவிட்டார்கள்; உன்னையும் கொண்டுபோவார்கள்" என்றார்.

10 என்றவுடனே, அவள் அவருடைய காலருகில் விழுந்து உயிர்விட்டாள். இளைஞர்கள் உள்ளே வந்தபோது, அவள் இறந்துகிடக்கக் கண்டார்கள்; வெளியே கொண்டுபோய் அவளுடைய கணவனுக்கருகில் அவளைப் புதைத்தார்கள்.

11 சபையினர் எல்லாரையும், இதைக் கேள்வியுற்ற அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது.

12 அப்போஸ்தலர்களுடைய கையால் பல அருங்குறிகளும் அற்புதங்களும் மக்களிடையே நிகழ்ந்தன. எல்லாரும் சாலொமோன் மண்டபத்தில் ஒன்றாய்க் கூடுவதுண்டு.

13 மற்றவர் யாரும் அவர்களோடு சேரத் துணியவில்லை; ஆனால் பொதுமக்கள் அவர்களைப்பற்றிப் பெருமையாகப் பேசினார்கள்.

14 பெருந்தொகையான ஆண்களும் பெண்களும் ஆண்டவரில் விசுவாசங்கொண்டு அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.

15 எனவே, இராயப்பர் போகும்போது, பிணியாளிகள் சிலர்மீது அவர் நிழலாவது விழும் என்று எதிர்பார்த்து, அவர்களைத் தெருக்களில் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடந்துவார்கள்.

16 யெருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் பிணியாளிகளையும், அசுத்த ஆவியால் துன்புற்றவர்களையும் தூக்கிக் கொண்டுவந்து திரளாகக் கூடுவார்கள்; அவர்கள் அனைவரும் குணமடைவர்.

17 தலைமைக்குருவுக்கும், சதுசேயர் கட்சியினரான அவருடைய ஆட்களுக்கும் பொறாமை பொங்கி எழ,

18 அவர்கள் அப்போஸ்தலர்களைக் கைதுசெய்து பொதுச்சிறையில் வைத்தார்கள்.

19 ஆனால், ஆண்டவருடைய தூதர் இரவில் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கூட்டிவந்து,

20 "நீங்கள் போய்க் கோயிலில் நின்று, இப்புது வாழ்வைப்பற்றிய அனைத்தையும் மக்களுக்குத் தயங்காமல் சொல்லுங்கள்" என்றார்.

21 இதைக் கேட்டு, அவர்கள் விடியற்காலையில் கோயிலுக்குப் போய்ப் போதிக்கத் தொடங்கினார்கள். தலைமைக்குரு தம் ஆட்களுடன் வந்து, இஸ்ராயேலரின் ஆலோசனைக்குழுவையும் தலைமைச்சங்கம் முழுவதையும் கூட்டி, அப்போஸ்தலர்களைக் கொண்டுவர, சிறைச்சாலைக்கு ஆள் அனுப்பினர்.

22 காவலர்கள் போனபோது, சிறைச்சாலையில் அவர்களைக் காணவில்லை.

23 திரும்பிவந்து, "சிறைச்சாலை பத்திரமாகப் பூட்டியிருப்பதையும் காவலர்கள் கதவு எதிரில் நிற்பதையும் கண்டோம்; திறந்தபோது உள்ளே ஒருவரையும் காணோம்" என்று அறிவித்தனர்.

24 இதைக் கேட்ட கோயிலின் காவலர்த் தலைவனும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நடந்திருக்கக் கூடும் என்று திகைப்புற்றனர்.

25 அப்போது ஒருவன் வந்து, "நீங்கள் சிறையில் வைத்தவர்கள் இதோ! கோயிலில் மக்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறார்களே" என்றான்.

26 இதைக் கேட்டதும் காவலர்த்தலைவன் தன் ஆட்களுடன் போய் அவர்களைக் கூட்டிவந்தான். மக்கள் கல்லால் எறியக்கூடுமெனப் பயந்து அவர்களை வலுவந்தம் செய்யவில்லை.

27 அவர்களைத் தலைமைச் சங்கத்தின் முன் நிறுத்தினான்.

28 தலைமைக் குரு அவர்களை நோக்கி, "இப்பெயரைச் சொல்லிப் போதிக்கலாகாது என்று உங்களுக்கு நாங்கள் கண்டிப்பாகக் கட்டளையிடவில்லையா ? ஆயினும், இதோ நீங்கள் யெருசலேம் எங்கும் உங்கள் போதனையைப் பரப்பிவிட்டீர்கள். அதோடு, அந்த மனிதனின் இரத்தப் பழியையும் எங்கள்மேல் சுமத்தப் பார்க்கிறீர்கள்" என்றான்.

29 அதற்கு இராயப்பரும் அப்போஸ்தலர்களும் மறுமொழியாக, "மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதற்கு மேலாகக் கடவுளுக்கல்லவா கீழ்ப்படிய வேண்டும் ?

30 நீங்கள் கழுமரத்தில் ஏற்றிக் கொலை செய்த இயேசுவை நம் முன்னோரின் கடவுள் உயிர்ப்பித்தார்.

31 இஸ்ராயேலருக்கு மனந்திரும்புதலையும், பாவமன்னிப்பையும் அருளும்படி கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலக்கையால் உயர்த்தினார்.

32 இதற்கு நாங்கள் சாட்சிகள்; கடவுள் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு அளிக்கும் பரிசுத்த ஆவியும் இதற்கு சாட்சி" என்றனர்.

33 இதைக் கேட்டுச் சங்கத்தினர் சீற்றங் கொண்டு அவர்களை ஒழித்துவிடத் திட்டமிட்டனர்.

34 அப்பொழுது கமாலியேல் என்னும் பரிசேயர் ஒருவர் சங்கத்தின் நடுவில் எழுந்தார். இவர் மக்கள் எல்லாரிடமும் மதிப்புப் பெற்றிருந்த ஒரு சட்ட வல்லுநர். இவர் அப்போஸ்தலர்களைச் சற்று நேரம் வெளியே அனுப்பக் கட்டளையிட்டு,

35 சங்கத்தை நோக்கி, "இஸ்ராயேலரே, இம்மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போவதைப் பற்றி எச்சரிக்கையாயிருங்கள்.

36 ஏனெனில், கொஞ்ச காலத்திற்கு முன்பு தெயுதாஸ் என்பவன் கிளம்பி, தான் ஒரு பெரிய மனிதன் என்று காட்டிக்கொண்டு வந்தான். ஏறத்தாழ நானூறு பேர் அவனுடன் சேர்ந்துகொண்டனர். ஆனால், இறுதியில் ஒழிந்தான். அவனைப் பின்பற்றிய அனைரும் சிதறிப் போகவே எல்லாம் ஒன்றுமில்லாமல் போயிற்று.

37 அவனுக்குப் பிறகு, மக்கள் தொகைக் கணக்கு எடுப்புக் காலத்தில் கலிலேயானான யூதாஸ் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்ய மக்களைத் தூண்டினான். அவனும் ஒழிந்தான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறுண்டனர்.

38 ஆகவே, நான் சொல்லுவது: இவர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் காரியத்தில் தலையிட வேண்டாம். ஏனெனில், இவர்கள் திட்டமிட்டிருப்பதும் செய்து வருவதும் மனிதருடைய செயலாயிருந்தால், சிதைந்துபோம்.

39 கடவுளுடையதாயின், நீங்கள் அவர்களைத் தொலைக்க முடியாது. மேலும், நீங்கள் கடவுளோடு போராடுவோர் ஆகக்கூடும்" என்றார். அவர் சொன்னதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர்.

40 பிறகு அப்போஸ்தலர்களை உள்ளே வரச்செய்து கசையால் அடிப்பித்து, இனி இயேசுவின் பெயரைச் சொல்லிப் பேசலாகாதெனக் கட்டளையிட்டு அனுப்பிவிட்டார்கள்.

41 அவர்களோ இயேசுவின் பெயருக்காகத் தாங்கள் இழிவுபடத் தக்கவர்களாய்க் கருதப்பட்டது பற்றி, மனமகிழ்ந்து மன்றத்தை விட்டு வெளியேறினர்.

42 நாள்தோறும் விடாமல் கோயிலிலும் வீடுகளிலும் போதித்து இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தனர்.

அதிகாரம் 06

1 அந்நாளில், சீடர்களின் தொகை பெருகவே, அவர்களிடையே கிரேக்கமொழி பேசுவோர், நாள்தோறும் நிகழும் அறப்பணியில், தங்கள் கைம்பெண்கள் கவனிக்கப்படவில்லையென எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முறையிட்டனர்.

2 எனவே, பன்னிருவரும் சீடர்களை ஒன்றாகக் கூட்டி, "பந்தியில் பணிவிடை செய்வதற்காகக் கடவுளின் வார்த்தையைப் போதியாமல் விடுவது முறையன்று.

3 ஆதலால் சகோதரரே உங்களிடையே நன்மதிப்புள்ளவர்களாய்த் தேவ ஆவியும் ஞானமும் நிரம்பப்பெற்ற எழுவரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை நாம் இப்பணிக்காக ஏற்படுத்துவோம்.

4 நாங்களோ செபத்திலும், தேவ வார்த்தையைப் போதிக்கும் பணியிலும் ஈடுபட்டிருப்போம்" என்றனர்.

5 இவ்வேற்பாடு அங்குக் கூடியிருந்த அனைவர்க்கும் ஏற்புடையதாய் இருந்தது. அப்போது அவர்கள் விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்து விளங்கிய முடியப்பரையும், பிலிப்பு, பிரொக்கோரு, நிக்கானோர், தீமோன், பர்மேனா, அந்தியோகிய நகரத்தினரும் யூத மதத்தைத் தழுவியவருமான நிக்கொலா இவர்களையும் தேர்ந்தெடுத்து அப்போஸ்தலர்முன் நிறுத்தினர்.

6 அப்போஸ்தலர்கள் செபம் செய்து, அவர்கள் மேல் கைகளை விரித்தனர்.

7 கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவிவந்தது. யெருசலேமில் சீடர்களின் தொகை மிகப் பெருகிற்று. யூத குருக்கள் பலரும் விசுவாசத்திற்குப் பணிந்தனர்.

8 முடியப்பர் அருளும் ஆற்றலும் நிறைந்தவராய் மக்களிடையே மாபெரும் அற்புதங்களையும் அருங்குறிகளையும் செய்து வந்தார்.

9 அப்போது, உரிமை அடைந்தோரின் செபக் கூடத்தைச் சார்ந்த சிலரும், சிரேனே, அலெக்சந்திரியா நகரினர் சிலரும், சிலிசியா, ஆசியா நாட்டினர் சிலரும் முடியப்பரோடு தர்க்கம் செய்யக் கிளம்பினர்.

10 ஆனால் அவரது ஞானத்தையும் அவர் வழியாய்ப் பேசிய தேவ ஆவியையும் அவர்கள் எதிர்த்து நிற்க முடியவில்லை.

11 ஆதலால், "இவன் கடவுளுக்கும் மோயீசனுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் கூறியதைக் கேட்டோம்" என்று சொல்லச் சிலரைத் தூண்டிவிட்டனர்.

12 அப்படியே மக்களையும் மூப்பரையும் மறைநூல் அறிஞரையும் ஏவினர். அவர்கள் உடனடியாகக் கிளம்பிப் போய் அவரைப் பிடித்து, தலைமைச் சங்கத்திற்கு இழுத்து வந்தனர்.

13 பொய்ச்சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தினர். இச்சாட்சிகள், "இவன் புனித இடத்திற்கும் திருச்சட்டத்திற்கும் எதிராக ஓயாது பேசி வருகிறான்.

14 'நாசரேத்தூர் இயேசு இவ்விடத்தை அழித்து விடுவார், மோயீசன் நமக்குக் காட்டிய முறைமைகளை மாற்றிவிடுவார்' என்று இவன் செல்லக் கேட்டோம்" என்றனர்.

15 சங்கத்தில் அமர்ந்திருந்தோர் அனைவரும் அவரை உற்று நோக்கியபோது, அவரது முகம் வானதூதரின் முகத்தைப் போல் இருப்பதைக் கண்டனர்.

அதிகாரம் 07

1 அப்பொழுது தலைமைக் குரு, "இதெல்லாம் உண்மைதானா?" என்று கேட்க, முடியப்பர் உரைத்ததாவது: "சகோதரர்களே, பெரியோர்களே, கேளுங்கள்:

2 நம் தந்தை ஆபிரகாம், காரான் ஊரில் குடியேறுமுன் மெசொ பொத்தாமியாவில் வாழ்ந்தபோது, மாட்சிமை மிக்க கடவுள் அவருக்குத் தோன்றி,

3 'உன் நாட்டையும் உறவினரையும் விட்டு நான் உனக்குக் காட்டும் நாட்டிற்குப் போ' என்றார்.

4 அப்படியே, அவர் கல்தேயருடைய நாட்டினின்று வெளியேறி காரானில் தங்கினார். அவர் தந்தை இறந்தபிறகு, நீங்கள் இப்போது இருக்கும் நாட்டில் கடவுள் அவரைக் குடியேற்றினார்.

5 இந்நாட்டில் கடவுள் அவருக்கு ஓரடி நிலம்கூட உடைமையாகக் கொடுக்கவில்லை. மக்கட்பேறு இல்லாதிருந்தும், அவருக்கும் அவர் வழித்தோன்றியவர்களுக்கும் இந்நாட்டை உரிமையாய்த் தருவதாக வாக்களித்தார்.

6 'அவர் வழித்தோன்றுபவர் வெளிநாட்டில் குடியிருப்பர். அந்நாட்டினர் அவர்களை நானூறு ஆண்டுகள் அடிமையாக்கிக் கொடுமைப் படுத்துவர்' என்று கடவுள் கூறினார்.

7 'ஆனால் அவர்களை அடிமைப்படுத்திய நாட்டினர்மீது தீர்ப்புக் கூறுவேன். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறி, இவ்விடத்தில் என்னை வழிபடுவர்' என்று கடவுள் உரைத்தார்.

8 விருத்தசேதன உடன்படிக்கையை அவருக்கு அருளினார். அதன் படியே ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்று, எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரு குலத் தந்தையரையும் பெற்றனர்.

9 "இக்குலத் தந்தையர்கள் சூசைமேல் பொறாமைகொண்டு எகிப்தில் அடிமையாகும் படி அவரை விற்றனர். ஆனால், கடவுள் அவருக்குத் துணைநின்று, இன்னல்கள் அனைத்தினின்றும் அவரை விடுவித்தார்.

10 ஞானத்தை அவருக்கு அளித்து, எகிப்து நாட்டு மன்னன் பார்வோனின் அன்பைப் பெறச்செய்தார். மன்னன் அவரை எகிப்து நாட்டிற்கும், தன் உடைமை அனைத்திற்கும் அதிகாரியாக்கினான்.

11 அப்பொழுது, எகிப்து, கானான் நாடுகளில் எங்கும் பஞ்சம் ஏற்பட, மக்கள் மிக வேதனையுற்றனர். நம் முன்னோர்களுக்கும் உணவு கிடைக்கவில்லை.

12 எகிப்து நாட்டில் உணவுப் பொருள்கள் கிடைப்பதாகக் கேள்விப்பட்ட யாக்கோபு நம் முன்னோர்களை அங்கு அனுப்பினார்.

13 அவர்களை இரண்டாம் முறை அனுப்பியபோது, சூசை தாம் யாரென அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். பார்வோனுக்கும் அவருடைய குடும்பத்தைப்பற்றித் தெரியவந்தது.

14 சூசை, தம் தந்தை யாக்கோபையும், தம் சுற்றத்தாரையும் அழைத்து வருமாறு சொல்லி அனுப்பினார். இப்படி வந்தவர்கள் மொத்தம் எழுபத்தைந்துபேர்.

15 இவ்வாறு யாக்கோபு எகிப்து நாட்டிற்குப் போனார். அவரும் நம் முன்னோரும் அங்கே இறந்தனர்.

16 அவர்களுடைய உடலைச் சீக்கேம் ஊருக்குக் கொண்டுவந்து, ஏமோர் என்பவரின் மக்களிடமிருந்து ஆபிரகாம் விலை கொடுத்து அவ்வூரில் வாங்கியிருந்த கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.

17 "கடவுள் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறுங்காலம் நெருங்கியது. நம் மக்களும் எகிப்தில் பலுகிப்பெருகி வந்தனர்.

18 நாளடைவில் சூசையை அறியாத அரசன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.

19 அவன் நம் குலத்தினரை வஞ்சகமாகத் துன்புறுத்தி, நம் முன்னோர் தம் குழந்தைகளை உயிர் பிழைக்க வொட்டாமல் வெளியே போட்டுவிடும்படி செய்தான்.

20 மோயீசன் பிறந்தது அக்காலத்தில்தான். அவர் கடவுளுக்கு உகந்தவராயிருந்தார்.

21 மூன்று மாதம் தந்தை வீட்டிலே வளர்க்கப்பட்டார். பின்பு குழந்தையை வெளியே போட்டுவிடவே, பார்வோனின் மகள் அதை எடுத்து, சொந்த மகனாக வளர்த்தாள்.

22 மோயீசன் எகிப்து நாட்டுக் கல்வி கேள்விகள் அனைத்தையும் கற்று, சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார்.

23 "அவருக்கு நாற்பது வயதானபோது, தம் சகோதரர்களான இஸ்ராயேல் மக்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் எழுந்தது.

24 அப்பொழுது அவர்களில் ஒருவனை எகிப்தியன் கொடுமைப் படுத்துவதை அவர் கண்டு, சகோதரனுக்குத் துணை நின்று, துன்பப்பட்டவனுக்காக அந்த எகிப்தியனைக் கொன்று பழிதீர்த்தார்.

25 தம் வழியாய்த் தம் சகோதரர்களுக்குக் கடவுள் மீட்பு அளிக்க விரும்புவதை அவர்கள் உணர்ந்துகொள்வர் என்று நினைத்தார். அவர்களோ உணர்ந்துகொள்ளவில்லை.

26 மறுநாள் அவர்களில் சிலர் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில், அவர் எதிர்ப்பட்டு, ' நண்பர்களே, நீங்கள் சகோதரர்கள் தானே! ஏன் ஒருவருக்கொருவர் தீங்கு செய்கிறீர்கள்? ' என்று சமாதானப்படுத்த முயன்றார்.

27 அயலானுக்குத் தீங்கு செய்தவன், ' உன்னை எங்களுக்குத் தலைவனாகவோ நடுவனாகவோ ஏற்படுத்தியது யார்?

28 நேற்று நீ எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்ல நினைக்கிறாயா?' என்று அவரை அப்பால் பிடித்துத் தள்ளினான்.

29 அவன் சொன்னதைக் கேட்டு மோயீசன் அங்கிருந்து ஓடிப்போய், மாதியாம் நாட்டில் தங்கினார். அங்கே அவருக்கு இரு புதல்வர் பிறந்தனர்.

30 " நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், சீனாய் மலையருகிலுள்ள பாலை நிலத்தில், எரியும் முட்புதரின் தழலில், வானதூதர் அவருக்குத் தோன்றினார்.

31 அக்காட்சியைக் கண்டு மோயீசன் வியப்புற்றார். அதைக் கூர்ந்து நோக்கநெருங்கிய போது,

32 ' நானே உங்கள் முன்னோரின் கடவுள். ஆபிரகாம், ஈசாக், யாக்கோபின் கடவுள் நானே ' என ஆண்டவரின் குரலொலி கேட்டது. மோயீசன் நடுநடுங்கி அக்காட்சியை நோக்கத் துணியவில்லை.

33 அப்பொழுது ஆண்டவர், ' உன் மிதியடிகளைக் கழற்றிப்போடு. ஏனெனில், நீ நிற்பது புனிதமான நிலம்.

34 எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தைக் கண்ணுற்றேன். அவர்களின் அழுகுரலைக் கேட்டேன். அவர்களை மீட்க இறங்கிவந்தேன். இதோ, உன்னை எகிப்துக்கு அனுப்புகிறேன், வா ' என்றார்.

35 "உன்னைத் தலைவனாகவோ நடுவனாகவோ ஏற்படுத்தியது யார்?' என்று முன்பு மறுத்து விட்டார்களே, அந்த மோயீசனையே, தலைவராகவும் மீட்பராகவும் கடவுள் முட்புதரில் தோன்றிய வானதூதரின் வழியாக அனுப்பினார்.

36 எகிப்து நாட்டிலும் செங்கடலிலும், நாற்பது ஆண்டுகள் பாலை நிலத்திலும், அற்புதங்களையும் அருங்குறிகளையும் ஆற்றி, அவர்களை வெளியே அழைத்து வந்தவர் இவரே.

37 ' என்னைப்போன்ற இறைவாக்கினர் ஒருவரைக் கடவுள் உங்கள் சகோதரர்களினின்று உங்களுக்கென எழுப்புவார் ' என்று இஸ்ராயேல் மக்களுக்குச் சொன்னவரும் இந்த மோயீசனே.

38 அவர்களது திருக்கூட்டம் பாலை நிலத்தில் கூடியபோது, சீனாய் மலையில் தம்முடன் பேசிய வான்தூதருக்கும், நம் முன்னோர்க்கும் இடை நின்றவர் இவரே. அங்கே அவர், உயிருள்ள திருமொழிகளை நமக்கு அளிப்பதற்காக, அவற்றைக் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

39 ஆனால், நம் முன்னோர் அவருக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரைப் புறக்கணித்தனர். அவர்களது உள்ளம் எகிப்தை நினைத்து ஏங்கி நிற்க,

40 ' எங்களுக்கு முன்செல்லத் தெய்வங்களைச் செய்து, கொடும். ஏனெனில், எங்களை எகிப்து நாட்டினின்று வெளியேற்றிய அந்த மோயீசனுக்கு என்ன நடந்ததோ, தெரியவில்லை ' என்று ஆரோனிடம் சொன்னார்கள்.

41 கன்றுக்குட்டியைச் செய்தது அச்சமயத்தில்தான். அச்சிலைக்குப் பலி செலுத்தினர். தம் கையாலே செய்த உருவத்திற்கு விழாக் கொண்டாடினர்.

42 இதனால் கடவுள் அவர்களிடமிருந்து விலகி, வான்படையை வணங்கும்படி அவர்களைக் கைவிட்டுவிட்டார். இதைப்பற்றி இறைவாக்கினர்கள் நூலில்: இஸ்ராயேல் குலத்தவரே, பாலை நிலத்தில் நாற்பது ஆண்டுகள் நீங்கள் எனக்குப் பலிகளும் காணிக்கைகளும் செலுத்தினீர்களா?

43 இல்லை, மோளோக்கின் கூடாரத்தையும், ரெப்பா தெய்வத்தின் விண் மீனையும் சுமந்துகொண்டு போனீர்கள் அன்றோ! இச்சிலைகளை நீங்கள் வணங்குவதற்கெனச் செய்துகொண்டீர்கள்; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் கடத்துவேன்' என்று எழுதியுள்ளது.

44 மோயீசனிடம் பேசிய இறைவன் கட்டளையிட்டபடி பாலை நிலத்தில் நம் முன்னோருக்குச் சாட்சியக் கூடாரம் இருந்தது. தாம் காட்டிய படிவத்திற்கேற்ப அதை மோயீசன் அமைக்க வேண்டுமென்று இறைவன் சொல்லியிருந்தார்.

45 அந்தக் கூடாரம் அடுத்த தலைமுறையில் வந்த நம் முன்னோர் கைக்கு வந்தது. தங்கள் முன்பாகக் கடவுள் விரட்டியடித்த புறவினத்தாரின் நாட்டை நம் மக்கள் யோசுவாவின் தலைமையில் கைப்பற்றியபோது, அந்தக் கூடாரத்தைத் தங்களுடன் கொண்டுவந்தனர். தாவீதின் நாள்வரை அது அங்கேயே இருந்தது.

46 கடவுளுக்கு உகந்தவரான தாவீது, யாக்கோபின் கடவுளுக்கு உறைவிடம் அமைக்க விரும்பி அவரை வேண்டிக்கொண்டார்.

47 ஆனால் இறைவனுக்கு இல்லம் அமைத்தவர் சாலொமோனே.

48 உன்னதமானவரோ, மனிதர் அமைக்கும் இல்லங்களில் உறைவதில்லை. இறைவாக்கினர் சொல்லியிருப்பது போல:

49 'வானமே என் அரியணை, வையமே என் கால் மணை. என்ன இல்லம் எனக்குக் கட்டுவீர்கள்? நான் தங்க இடம் ஏது?

50 இவையெல்லாம் அமைத்தது எனது கைத்திறனன்றோ? என்கிறார் ஆண்டவர் '

51 "திமிர் பிடித்தவர்களே, விருத்தசேதனமில்லாத உள்ளமும் செவியும் படைத்தவர்களே, பரிசுத்த ஆவியை நீங்கள் எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள். முன்னோருக்கேற்ற மக்கள் நீங்கள்.

52 இறைவாக்கினர்களுள் யாரைத்தான் உங்கள் முன்னோர் துன்புறுத்தவில்லை? அதுமட்டுமன்று, அவர்கள் நீதிமானுடைய வருகையை முன்னறிவித்தவர்களைக் கொலையும் செய்தனர். இப்போது நீங்கள் அந்த நீதிமானையே காட்டிக்கொடுத்து, கொலை செய்தீர்கள்.

53 வானதூதர்களின் வழியாக நீங்கள் திருச்சட்டத்தைப் பெற்றிருந்தும் அதைப் பின்பற்றவில்லை."

54 இதைக் கேட்டவர்கள், உள்ளத்தில் கோபம் பொங்க, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தனர்.

55 முடியப்பரோ பரிசுத்த ஆவியினால் நிறைந்தவராய் வானத்தை உற்று நோக்கினார். அப்போது, கடவுளின் மாட்சிமையையும், அவரது வலப் பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு,

56 "இதோ! வானம் திறந்துள்ளதையும், மனுமகன் கடவுளின் வலப்பக்கம் நிற்பதையும் காண்கிறேன்" என்றார்.

57 அதைக் கேட்டு அவர்கள் எல்லாரும் பெருங் கூக்குரலுடன் காதை மூடிக்கொண்டனர். ஒருமிக்க அவர்மேல் பாய்ந்து,

58 அவரை நகருக்கு வெளியே தள்ளி, அவரைக் கல்லால் எறியத் தொடங்கினர். சாட்சிகள் தங்கள் மேலாடைகளைச் சவுல் என்னும் ஓர் இளைஞனிடம் ஒப்படைத்தனர்.

59 அவர்கள் கல் எறிகையில் முடியப்பர், "ஆண்டவராகிய யேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும்" என்று வேண்டிக்கொண்டார்.

60 பிறகு முழங்காலிட்டு உரத்த குரலில், "ஆண்டவரே, இப்பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதீர்!" என்று சொல்லி உயிர் துறந்தார்.

அதிகாரம் 08

1 முடியப்பர் கொலைக்குச் சவுல் உடன்பட்டிருந்தார். அந்நாளில் யெருசலேமில் திருச்சபையை எதிர்த்துப் பெருங் கலாபனை எழுந்தது. அப்போஸ்தலர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறுண்டு போனார்கள்.

2 இறைப்பற்றுடையோர் சிலர் முடியப்பரை அடக்கம் செய்து அவருக்காகப் பெரிதும் துக்கம் கொண்டாடினர்.

3 சவுலோவென்றால் திருச்சபையை ஒழிக்க முயன்றார். வீடு வீடாய் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டு போய்ச் சிறையில் தள்ளினார்.

4 சிதறுண்டுபோனவர்கள் தாங்கள் சென்ற இடங்களில் நற்செய்தியை அறிவித்தனர்.

5 பிலிப்பு சமாரியா நகருக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கு மெசியாவை அறிவித்தார்.

6 பிலிப்பு செய்த அருங்குறிகளை மக்கள் கண்டபோது அல்லது அவற்றைக் குறித்துக் கேள்வியுற்றபோது, ஒருமனதாய்த் திரண்டு வந்து, அவர் சொல்வதைக் கருத்தாய்க் கேட்டனர்.

7 பேய் பிடித்திருந்த பலரிடமிருந்து அசுத்த ஆவிகள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியேறின. திமிர்வாதக்காரர், முடவர் பலர் குணமடைந்தனர்.

8 இதனால் அந்நகரில் பெருமகிழ்ச்சி உண்டாயிற்று.

9 அந்நகரில் சீமோன் என்னும் ஒருவன் இருந்தான். அவன் மந்திரங்கள் செய்து சமாரியா மக்களை மயக்கித் தான் ஒரு பெரிய மனிதனெனக் காட்டிக்கொண்டு வந்தான்.

10 மாபெரும் சக்தி எனும் கடவுளின் வல்லமை இவனே என்று சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும், அவன் சொல்வதை விரும்பிக் கேட்டனர்.

11 இப்படிக் கேட்டு வந்தது, அவன் தன் மாய வித்தைகளால் நெடுநாளாக அவர்களை மயக்கி வந்ததால்தான்.

12 ஆனால், பிலிப்பு கடவுளின் அரசைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவின் பெயரைக் குறித்தும் நற்செய்தி அறிவித்தபோது, ஆண்களும் பெண்களும் அவர் கூறியதை விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றனர்.

13 அப்பொழுது சீமோனும் விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றான். பெற்றபின் பிலிப்புவோடு கூடவே இருந்து அவர் செய்த அருங்குறிகளையும் அரிய புதுமைகளையும் கண்டு திகைத்து நின்றான்.

14 கடவுளின் வார்த்தையைச் சமாரியர் ஏற்றுக்கொண்டதை யெருசலேமிலிருந்த அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, இராயப்பரையும் அருளப்பரையும் அவர்களிடம் அனுப்பினர்.

15 அவர்கள் போய், சமாரியர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்காக வேண்டினர்.

16 ஏனெனில், அதுவரையில் அவர்களில் ஒருவர்மீதும் பரிசுத்த ஆவி இறங்கவில்லை. ஆண்டவராகிய கிறிஸ்துவின் பெயரால் ஞானஸ்நானம் மட்டுமே பெற்றிருந்தனர்.

17 ஆதலின், அப்போஸ்தலர்கள் அவர்கள்மீது கைகளை விரிக்கவே, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள்.

18 அப்போஸ்தலர்கள் கைகளை விரிப்பதால் பரிசுத்த ஆவி அளிக்கப் பெறுவதைக்கண்ட சீமோன்,

19 "எவன்மீது கைகளை விரிப்பேனோ, அவன் பரிசுத்த ஆவியை அடைந்துகொள்ளுமாறு எனக்கும் அந்த வல்லமையைக் கொடுங்கள்" என்று சொல்லிப் பணத்தைக் கொடுக்கப்போனான்.

20 இராயப்பரோ அவனை நோக்கி, "உன் பணத்தோடு நீயும் நாசமாய்ப் போ; பணத்தைக் கொடுத்துக் கடவுளின் கொடையையா வாங்க நினைத்தாய்?

21 இதில் உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. ஏனெனில், கடவுள்முன் உன் உள்ளம் நேர்மையற்றது.

22 உனது தீயபோக்கை விட்டு, மனம் திரும்பி, ஆண்டவரை மன்றாடு; உன் உள்ளத்தில் எழுந்த இந்த எண்ணம் ஒரு வேளை மன்னிக்கப்படலாம்.

23 ஏனெனில், பிச்சுப் போன்ற கசப்பால் உன் உள்ளம் நிறைந்து, பாவத்திற்கு நீ அடிமையாய் இருக்கக் காண்கிறேன்" என்றார்.

24 அதற்குச் சீமோன், "நீங்கள் சொன்ன கேடு எதுவும் எனக்கு நேராதபடி ஆண்டவரிடம் எனக்காக மன்றாடுங்கள்" என்று கேட்டுக்கொண்டான்.

25 இவ்வாறு ஆண்டவரின் வார்த்தையை அறிவித்து, அதற்குச் சான்று பகன்ற பின், அப்போஸ்தலர் யெருசலேமிற்குத் திரும்பினர். வழியில் சமாரியா நாட்டின் பல ஊர்களில் நற்செய்தி அறிவித்தனர்.

26 ஒருநாள், ஆண்டவரின் தூதர் பிலிப்புவிடம், "யெருசலேமிலிருந்து காசா ஊருக்குப்போகும் சாலை வழியாய்த் தெற்கு நோக்கிப் புறப்பட்டுச் செல்" என்றார். இச்சாலை இன்று ஆள் நடமாட்டமற்றது. பிலிப்பு புறப்பட்டுச் சென்றார்.

27 எத்தியோப்பிய அரசியான காந்தாக்கே என்பவளின் மேலலுவலன் ஒருவன் இறைவனை வழிபட யெருசலேமிற்குச் சென்றிருந்தான்.

28 அவன் ஓர் அண்ணகன். அவ்வரசியின் பொருளமைச்சன். அவன் தனது ஊர் திரும்புகையில் தேரில் உட்கார்ந்து, இசையாஸ் எழுதிய இறைவாக்குகளைப் படித்துக்கொண்டிருந்தான்.

29 "தேரை அணுகி அதன் கூடவே போ" என்று ஆவியானவர் பிலிப்புவிடம் சொன்னார்.

30 பிலிப்பு விரைந்து ஓடி, அதை நெருங்கியபோது, அவன் இசையாஸ் எழுதிய இறைவாக்குகளைப் படிப்பதைக் கேட்டு, "படிப்பதன் பொருள் உமக்கு விளங்குகிறதா?" என்று வினவினார்.

31 அதற்கு அவன், "யாராவது எடுத்துச் சொன்னாலொழிய எப்படி விளங்கும்?" என்று சொல்லி, தேரில் ஏறி தன்னுடன் உட்காரும்படி பிலிப்புவை அழைத்தான்.

32 அப்போது அவன் படித்துக்கொண்டிருந்த மறைநூலின் பகுதி பின்வருமாறு: ' செம்மறிபோலக் கொல்லப்படுவதற்கு இழுத்துச் செல்லப்பட்டார். உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத ஆட்டுக்குட்டி போல், அவர் வாய் திறக்கவில்லை.

33 தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை. அவரது சந்ததியைப் பற்றிச் சொல்லுபவன் யார் ? ஏனெனில், அவரது வாழ்வு இவ்வுலகினின்று எடுபடும். '

34 அண்ணகன் பிலிப்புவிடம், "இறைவாக்கினர் யாரைக் குறித்து இதைக் கூறினார்? தன்னைக் குறித்தா? இன்னொருவரைக் குறித்தா? தயவு செய்து சொல்லும்" என்று கேட்டான்.

35 அதற்கு மறுமொழியாக, பிலிப்பு, மேற்சொன்ன மறைநூல் வாக்குகளை வைத்துக் கொண்டு, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவனுக்கு அறிவித்தார்.

36 இப்படி அவர்கள் போகும்போது, வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள்.

37 "இதோ, தண்ணீர் இருக்கிறது. நான் ஞானஸ்நானம் பெறத் தடை என்ன?" என்று கேட்டான் அண்ணகன்.

38 உடனே தேரை நிறுத்தச் சொன்னான். பிலிப்பு, அண்ணகன் இருவருமே தண்ணீரில் இறங்கினர். அவர் அவனுக்கு ஞானஸ்நானம் அளித்தார்.

39 இருவருமே தண்ணீரை விட்டு வெளியேறினபோது, ஆண்டவரின் ஆவியானவர் பிலிப்புவை அங்கிருந்து கொண்டுபோய்விட்டார். பின்னர் அண்ணகன் அவரைக் காணவில்லை. மகிழ்ச்சியோடு தன் வழியே சென்றான்.

40 பிலிப்புவோ, தாம் அசோத் என்னும் ஊரில் இருப்பதை உணர்ந்தார். பிறகு, சென்ற ஊர்களிலெல்லாம் நற்செய்தி அறிவித்துக் கடைசியாகச் செசரியாவை அடைந்தார்.

அதிகாரம் 09

1 அப்பொழுது சவுல் ஆண்டவருடைய சீடர்கள் மேல் சீறி எழுந்து, அவர்களைத் தொலைத்து விடுவதாக மிரட்டி வந்தார்.

2 தலைமைக் குருவை அணுகி, இப்புதிய நெறியைச் சார்ந்த ஆண் பெண் யாராயிருந்தாலும், அவர்களைக் கைதுசெய்து, யெருசலேமுக்குக் கொண்டுவரத் தமஸ்கு நகரிலுள்ள செபக் கூடங்களுக்குக் கட்டளைக் கடிதம் தரும்படி கேட்டார்.

3 பயணமாகி, தமஸ்கை நெருங்குகையில், திடீரென வானினின்று தோன்றிய ஓர் ஒளி அவரைச் சூழ்ந்துகொள்ள, தரையில் விழுந்தார்.

4 விழுந்ததும், "சவுலே, சவுலே, நீ என்னைத் துன்புறுத்துவதேன்?" என்ற குரலைக் கேட்டார்.

5 "ஆண்டவரே, நீர் யார்?" என்றார்.

6 அதற்கு ஆண்டவர், "நீ துன்புறுத்தும் இயேசுதான் நான். எழுந்து நகருக்குப் போ. நீ என்ன செய்ய வேண்டுமென்பது உனக்குத் தெரிவிக்கப்படும் ' என்று சொன்னார்.

7 அவருடன் பயணம் செய்தவர்கள், அங்கே ஒருவரையும் காணாமல், குரலைமட்டும் கேட்டு, வாயடைத்து நின்றனர்.

8 சவுல் எழுந்து நின்றார். கண் திறந்திருந்தும் ஒன்றையும் காணமுடியவில்லை. ஆகையால், உடனிருந்தோர் அவரைத் தமஸ்கு நகருக்குக் கையைப்பிடித்து அழைத்துச் சென்றனர்.

9 அங்கே அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்த மூன்று நாளும் அவர் உண்ணவுமில்லை குடிக்கவுமில்லை.

10 தமஸ்கு நகரில் அனனியா என்ற சீடர் ஒருவர் இருந்தார். ஆண்டவர் அவருக்குத் தோன்றி, ' அனனியாவே ' எனக் கூப்பிட, "ஆண்டவரே, இதோ அடியேன்" என்றார்.

11 அப்போது ஆண்டவர், "நேர்த் தெரு என்ற தெருவுக்குப் போய், யூதாவின் வீட்டில் தார்சு நகரத்துச் சவுல் என்பவரைப் பார். இதோ! அவர் செபித்துக்கொண்டிருக்கிறார்.

12 அனனியா என்னும் ஒருவர் வந்து தாம் பார்வை அடையும்படி தம்மீது கைகளை வைப்பதைக் காட்சி கண்டுள்ளார்" என்று கூறினார்.

13 அதற்கு அனனியா, "ஆண்டவரே, அந்த ஆள் யெருசலேமில் உம் மக்களுக்கு என்னென்ன தீங்கு செய்தான் என்பதைப் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

14 உமது பெயரைச் சொல்லி மன்றாடுபவர் அனைவரையும் சிறைப்படுத்த, அவன் தலைமைக் குருக்களிடம் அதிகாரம் பெற்றுக்கொண்டு, இங்கேயும் வந்திருக்கிறான்" என்றார்.

15 ஆண்டவர் அதற்கு, "நீ போ; ஏனெனில், புறவினத்தாருக்கும் அரசர்க்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் எனது பெயரை அறிவிக்க என்னால் தேர்ந்துகொள்ளப்பட்ட கருவி அவர்.

16 என் பெயரின் பொருட்டு அவர் எவ்வளவு பாடுபடவேண்டும் என்பதை நான் அவருக்குக் காண்பிப்பேன்" என்றார்.

17 இதைக் கேட்டபின் அனனியா அவ்வீட்டிற்குச் சென்று, அவர் மீது கைகளை விரித்து, "சகோதரர் சவுலே, ஆண்டவர் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார். நீர் வரும்பொழுது, வழியில் உமக்குத் தோன்றிய இயேசுவே அவர். நீர் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப் பெறவும், அவர் என்னை அனுப்பினார்" என்றார்.

18 என்றதும், அவர் கண்களிலிருந்து செதில் போன்றவை விழ, அவர் பார்வை அடைந்தார். உடனே ஞானஸ்நானம் பெற்றார்.

19 உணவு கொண்ட பின் தெம்படைந்தார். தமஸ்கு நகரில் சீடர்களுடன் சில நாள் இருந்தார்.

20 உடனடியாகச் செபக்கூடங்களில், இயேசு கடவுளின் மகன்தான் என்று அறிவிக்கத் தொடங்கினார்.

21 கேட்டவர்கள் அனைவரும் திகைப்புற்று, "யெருசலேமில் இயேசுவின் பெயரைச் சொல்லி மன்றாடுபவர்களை ஒழிக்கத் தலைப்பட்டவன் இவன் அன்றோ? அவர்களைச் சிறைப்படுத்தி, தலைமைக் குருக்களிடம் இழுத்துச் செல்ல இங்கேயும் வரவில்லையா?" என்றார்கள்.

22 சவுல் மேலும் திடம் கொண்டவராய் ' இயேசுவே மெசியா ' என்பதை எண்பித்து, தமஸ்கு நகரில் வாழ்ந்த யூதர்களைக் கலங்கடித்தார்.

23 இப்படிப் பல நாள் கழிந்த பிறகு யூதர்கள் அவரைத் தொலைக்கத் திட்டமிட்டனர்.

24 அவர்களுடைய சதித்திட்டம் சவுலுக்குத் தெரியவந்தது. அவரைத் தொலைத்துவிட வேண்டும் என்று இரவும் பகலும் நகர வாயில்களைக் காக்கவும் செய்தனர்.

25 ஆகவே இரவில் அவருடைய சீடர்கள் அவரைக் கூடையில் வைத்து மதில் மேலிருந்து வெளியே இறக்கிவிட்டார்கள்.

26 அவர் யெருசலேமுக்குச் சென்றபின் சீடர்களுடன் சேர்ந்துகொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர்.

27 அப்பொழுது பர்னபா அவரை அப்போஸ்தலர்களிடம் அழைத்துக் கொண்டுபோய், ஆண்டவர் அவருக்கு வழியில் தோன்றி அவரோடு பேசினதையும், தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் போதித்ததையும் அவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

28 அதுமுதல் சவுல் யெருசலேமில் அவர்களுடன் நெருங்கிப் பழகி, ஆண்டவர் பெயரால் துணிவோடு பேசலானார்.

29 கிரேக்க மொழி பேசுவோரிடம் போய் விவாதித்து வந்தார். அவர்களோ அவரைத் தொலைக்கப் பார்த்தனர்.

30 அதை அறிந்த சகோதரர்கள் அவரைச் செசரியாவுக்கு அழைத்துக்கொண்டு போய், தர்சு நகருக்கு அனுப்பிவைத்தனர்.

31 இதற்கிடையில் யூதேயா, கலிலேயா, சமாரியா நாடுகளிலெல்லாம் திருச்சபை அமைதியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, பரிசத்த ஆவியின் ஆறுதல் நிரம்பப் பெற்று வளர்ச்சியடைந்து வந்தது.

32 இராயப்பர் எல்லாச் சபைகளையும் விசாரித்து வருகையில் ஒருநாள், லித்தா நகரில் வாழ்ந்து வந்த இறை மக்களிடம் வந்து சேர்ந்தார்.

33 அங்கே, எட்டு ஆண்டளவாகப் படுக்கையாய்க் கிடந்த திமிர்வாதக்காரன் ஒருவனைக் கண்டார். அவன் பெயர் ஐனேயா.

34 இராயப்பர் அவனைப்பார்த்து, "ஐனேயா, இயேசுகிறிஸ்து உனக்குக் குணம் அளிக்கிறார், எழுந்து, நீயே உன் படுக்கையைச் சரிப்படுத்து" என்றார். உடனே அவன் எழுந்து நின்றான்.

35 அவனைக் கண்டு லித்தாவிலும் சாரோன் சமவெளியிலும் வாழ்ந்தவர் அனைவரும் ஆண்டவர் பக்கம் மனந்திரும்பினர்.

36 யோப்பாவிலுள்ள சீடர்களில் தபீத்தா என்றொருத்தி இருந்தாள். ( தபீத்தா என்பதற்கு மான் என்பது பொருள் ) பிறருக்கு நன்மை புரிவதும் அறங்கள் செய்வதுமே அவளது வாழ்க்கையாயிருந்தது.

37 அவள் நோய்வாய்ப்பட்டு ஒருநாள் இறந்துவிட்டாள். சவத்தைக் குளிப்பாட்டி, மாடி அறையில் கிடத்தினர்.

38 யோப்பாவிற்கு அருகிலுள்ள லித்தா நகருக்கு இராயப்பர் வந்திருப்பதைக் கேள்வியுற்ற சீடர்கள் அவரிடம் இருவரை அனுப்பி, "உடனே எங்கள் ஊர்வரைக்கும் வரவும்" என்று மன்றாடினர்.

39 இராயப்பர் புறப்பட்டு அவர்களோடு வந்தார். வந்ததும் அவரை மாடி அறைக்கு அழைத்துச் சென்றனர். கைம்பெண்கள் எல்லாரும் அவரைச் சூழ்ந்துகொண்டு, தபீத்தா உயிரோடிருக்கையில் தங்களுக்குச் செய்து கொடுத்திருந்த உள்ளாடைகளையும் மேலாடைகளையும் அவரிடம் காட்டி அழுதனர்.

40 எல்லாரையும் வெளியே அனுப்பிவிட்டு இராயப்பர் முழுங்கால்படியிட்டுச் செபித்தார். பின்பு, பிணத்தை நோக்கி "தபீத்தா, எழுந்திரு" என்றார். என்றதும், அவள், கண்ணைத் திறந்தாள். இராயப்பரைக் கண்டு எழுந்து உட்கார்ந்தாள்.

41 கைகொடுத்து இராயப்பர் அவளை எழுந்து நிற்கச்செய்தார். விசுவாசிகளையும் கைம்பெண்களையும் உள்ளே அழைத்து அவர்களிடம் அவளை உயிருடன் ஒப்புவித்தார்.

42 இச்செய்தி யோப்பா நகரெங்கும் பரவியது. ஆண்டவர்மேல் பலர் விசுவாசம் கொண்டனர்.

43 தோல் பதனிடும் சீமோனுடன் இராயப்பர் யோப்பாவில் பல நாள் தங்கியிருந்தார்.

அதிகாரம் 10

1 செசரியாவில் கொர்னேலியு என்பவன் ஒருவன் இருந்தான். இவன் இத்தாலிக்கா என்ற பட்டாளத்தில் நூற்றுவர் தலைவன்.

2 அவனும், அவன் வீட்டாரனைவரும் பக்தியுள்ளவர்கள். கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர்கள். அவன் யூதர்களுக்கு அறங்கள் பல செய்பவன். கடவுளை இடைவிடாமல் இறைஞ்சுபவன்.

3 ஒருநாள் ஏறக்குறைய பிற்பகல் மூன்று மணியளவில் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில், கடவுளின் தூதர் ஒருவர் தன்னிடம் வந்து, "கொர்னேலியு" எனக் கூப்பிடுவது தெளிவாகத் தெரிந்தது.

4 அத்தூதரை அவன் உற்று நோக்க, அச்சம் மேலிட்டவனாய், "ஆண்டவரே, என்ன?" என்று கேட்டான். அவர் அவனுக்கு, "நீர் செய்த மன்றாட்டுக்களும் அறங்களும் கடவுள் திருவடியைச் சேர்ந்துள்ளன. அவற்றை அவர் நினைவு கூர்ந்தார்.

5 இப்பொழுது யோப்பாவிற்கு ஆள் அனுப்பி இராயப்பர் என்னும் சீமோனை வரச்சொல்லும்.

6 தோல் பதனிடும் சீமோன் என்பவனின் வீட்டில் அவர் தங்கியிருக்கிறார். அவனது வீடு கடலோரத்தில் உள்ளது" என்றார்.

7 தன்னுடன் பேசிய தேவ தூதர் மறைந்ததும், தன் வேலையாட்களில் இருவரையும் தன் ஏவலாளருள் பக்தியுள்ள படை வீரன் ஒருவனையும் அழைத்து,

8 நிகழ்ந்ததெல்லாம் அவர்களிடம் விவரமாய்ச் சொல்லி, யோப்பாவிற்கு அனுப்பினான்.

9 அவர்கள் புறப்பட்டு வழிநடந்து மறுநாள் நகரை நெருங்கி வந்துகொண்டிருக்கும்போது, உச்சி வேளையில் இராயப்பர் செபிப்பதற்காக வீட்டின் மேல்தளத்திற்குச் சென்றார்.

10 அப்போது அவருக்குப் பசித்தது. சாப்பிட விரும்பினார். உணவுக்கு ஏற்பாடு செய்கையில் அவர் பரவசமாகி, ஒரு காட்சி கண்டார்.

11 வானம் திறந்திருப்பதையும், கப்பற்பாயைப் போன்றதொரு விரிப்பு நான்கு மூலைகளிலும் கட்டி, தரை நோக்கி இறக்கப்படுவதையும் கண்டார்.

12 தரையில் ஊர்வன, நடப்பன, வானில் பறப்பன யாவும் அதில் இருந்தன.

13 அப்பொழுது, "இராயப்பா, எழுந்து இவற்றைக் கொன்று சாப்பிடு" என்று ஒரு குரல் கேட்டது.

14 அதைக் கேட்ட இராயப்பர், "வேண்டாம், ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமான எதையும் ஒருபோதும் நான் சாப்பிட்டதே இல்லை" என்றார்.

15 "சுத்தம் என்று கடவுள் சொன்னதை, தீட்டு என்று நீ சொல்லாதே" என்று அக்குரல் திரும்பப் பேசிற்று.

16 இப்படி மும்முறை நடந்தது. பின்பு, அந்த விரிப்பு வானத்திற்கு எடுக்கப்பட்டது.

17 தான் கண்ட காட்சியின் பொருள் விளங்காது, இராயப்பர் தத்தளித்துக்கொண்டிருக்கையில் கொர்னேலியு அனுப்பிய ஆட்கள் சீமோனின் வீட்டைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, கதவண்டை வந்து கூப்பிட்டு,

18 "இராயப்பர் என்னும் சீமோன் இங்குத் தங்கியிருக்கிறாரா ?" என்று கேட்டனர்.

19 இராயப்பர் தாம் கண்ட காட்சியைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், ஆவியானவர், "இதோ, மூவர் உன்னைத் தேடி வந்துள்ளனர்.

20 கீழே இறங்கி, தயக்கமின்றி அவர்களோடு போ. ஏனெனில், அவர்களை நானே அனுப்பியுள்ளேன்" என்றார்.

21 இராயப்பர் கீழே வந்து அவர்களைப் பார்த்து, "நீங்கள் தேடுபவன் நான்தான். வந்த காரணம் யாது ?" என்று கேட்டார்.

22 அதற்கு அவர்கள் "எங்களை அனுப்பியவர் நூற்றுவர் தலைவர் கொர்னேலியு. அவர் ஒரு நீதிமான், கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர். யூதகுல மக்கள் அனைவரின் நன் மதிப்பையும் பெற்றவர். உம்மைத் தம் வீட்டிற்கு வரவழைத்து, நீர் கூறும் போதனைக்குச் செவிமடுக்க வேண்டுமெனத் தேவதூதர் அவருக்குக் கற்பித்தார்" என்றனர்.

23 எனவே, அவர் அவர்களை உள்ளே அழைத்துச் சென்று உபசரித்தார். மறுநாள் அவர்களுடன் புறப்பட்டார். யோப்பாவிலிருந்த சகோதரர் சிலர் அவரோடு சென்றனர்.

24 அடுத்த நாள் இராயப்பர் செசரியா நகரை அடைந்தார். அப்பொழுது கொர்னேலியு தம் சுற்றத்தாரையும் நெருங்கிய நண்பர்களையும் ஒன்றாக வரவழைத்துக் காத்துக்கொண்டிருந்தார்.

25 இராயப்பர் உள்ளே வரவே, கொர்னேலியு அவரை எதிர்கொண்டு அவர் காலில் விழுந்து வணங்கினார்.

26 இராயப்பர், "எழுந்திரும், நானும் மனிதன்தான்" என்று அவரை எழுப்பினார்.

27 அவருடன் பேசிக்கொண்டே உள்ளே போனார். அங்குப் பலர் கூடியிருக்கக் கண்டு,

28 அவர்களை நோக்கி, "அன்னிய குலத்தாருடன் உறவாடுவதோ, அவர்களுடைய வீட்டிற்குச் செல்வதோ ஒரு யூதனுக்குத் தகாது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் யாரையும் தீட்டு உள்ளவனென்றோ, அசுத்தமானவனென்றோ சொல்லலாகாது எனக் கடவுள் எனக்குக் காண்பித்தார்.

29 இதனால்தான் உமது அழைப்பிற்கு இணங்கி தடை சொல்லாமல் இங்கு வந்தேன். எதற்காக என்னை அழைத்தீர்? சொல்லும்" என்று கேட்டார்.

30 அதற்குக் கொர்னேலியு, "மூன்று நாட்களுக்குமுன் இதே நேரத்தில் என் வீட்டில் பிற்பகல் செபம் செய்துகொண்டிருந்தேன். அப்போது, இதோ! ஒளிமிக்க ஆடை அணிந்த ஒருவர் என்முன் நின்று,

31 "கொர்னேலியு, உம் மன்றாட்டை இறைவன் கேட்டருளினார். நீர் புரிந்த அறங்களைக் கடவுள் நினைவுகூர்ந்தார்.

32 ஆகவே, யோப்பாவுக்கு ஆள் அனுப்பி இராயப்பர் என்னும் சீமோனை வரச்சொல்லும்: கடலோரத்தில், தோல் பதனிடும் சீமோனின் வீட்டில் அவர் தங்கி இருக்கிறார்" என்றார்.

33 உடனே உமக்கு ஆள் அனுப்பினேன். நீர் தயவுகூர்ந்து வந்தமைக்கு நன்றி. இப்பொழுது ஆண்டவர் உமக்குக் கட்டளையிட்டதெல்லாம் கேட்பதற்கு நாங்கள் அனைவரும் கடவுள் திருமுன் இங்குக் கூடியுள்ளோம்" என்றார்.

34 அப்பொழுது இராயப்பர் பேசத்தொடங்கிச் சொன்னதாவது: "கடவுள் மனிதர்களிடையே வேற்றுமை பாராட்டுவதில்லை என்பதை இப்போது மெய்யாகவே உணர்கிறேன்.

35 எக்குலத்தவனாயினும், இறைவனுக்கு அஞ்சி அவருக்கு ஏற்புடையதைச் செய்பவனே அவருக்கு உகந்தவன்.

36 நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உமக்குக் கூறுவார்" என்று தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்குச் சொன்னார்.

37 அருளப்பர் அறிவித்த ஞானஸ்நானத்திற்குப் பின் கலிலேயா தொடங்கி யூதேயா நாடெங்கும் நிகழ்ந்தது என்னவென்று உங்களுக்குத் தெரியும். நாசரேத்தூர் இயேசுவைத்தான் குறிப்பிடுகிறேன்.

38 கடவுள் அவருக்குப் பரிசுத்த ஆவியையும் வல்லமையையும் அளித்து அபிஷுகம் செய்தார். கடவுள் அவரோடு இருந்ததால், அலகை துன்புறுத்திய அனைவரையும் குணமாக்கி, எங்கும் அவர் நன்மை செய்துகொண்டே சென்றார். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததே.

39 அவர் யூதேயா நாட்டிலும் யெருசலேமிலும் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். அவரைக் கழுமரத்தில் ஏற்றிக் கொன்றுபோட்டனர்.

40 ஆனால், கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிர்ப்பித்தார்.

41 உயிர்த்தவரைக் கடவுள் அனைவருக்கும் வெளிப்படுத்தாமல், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட சாட்சிகளுக்கே வெளிப்படுத்தினார். இறந்தோரிடமிருந்து அவர் உயிர்த்தபின் அவரோடு உண்டும் குடித்தும் வந்த நாங்களே சாட்சிகள்.

42 வாழ்வோரையும் இறந்தோரையும் நடுத்தீர்க்கக் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவர் அவரே என்பதை மக்களுக்கு அறிவிக்கவும், சாட்சியம் கூறவும் கடவுள் எங்களுக்குப் பணித்தார்.

43 அவரைக் குறித்தே இறைவாக்கினர் அனைவரும் சாட்சியம் பகர்கின்றனர். 'அவரை விசுவசிக்கும் அனைவரும் அவருடைய பெயரால் பாவ மன்னிப்புப் பெறுவர் ' என்று அவர்கள் கூறுகின்றனர்.

44 இவ்வாறு இராயப்பர் பேசிக்கொண்டிருக்கையில் அவருடைய வார்த்தைகளைக் கேட்ட அனைவர்மேலும் பரிசுத்த ஆவி இறங்கினார்.

45 பரிசுத்த ஆவியாம் திருக்கொடை புறவினத்தார்மேலும் பொழியப்படுவதைக் கண்டு, இராயப்பருடன் வந்திருந்த யூதகுல விசுவாசிகள் அனைவரும் திகைத்து நின்றனர்.

46 ஏனெனில், அவர்கள் பல மொழிகளில் பேசிக் கடவுளைப் போற்றுவதைக் கேட்டனர்.

47 அப்பொழுது இராயப்பர், "நம்மைப் போல் இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றபின் இவர்கள் நீரால் ஞானஸ்நானம் பெறுவதற்கு யார் தடைசெய்ய முடியும்?" என்று,

48 இயேசுகிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கக் கட்டளையிட்டார். பின்னர் சிலநாள் தங்களோடு தங்கும்படி அவர்கள் அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.

அதிகாரம் 11

1 கடவுளின் வார்த்தையைப் புறவினத்தார் கூட ஏற்றுக்கொண்டதை யூதேயாவிலுள்ள சகோதரரும் அப்போஸ்தலரும் கேள்விப்பட்டனர்.

2 இராயப்பர் யெருசலேமுக்குச் சென்றபோது, விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள்,

3 "நீர் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்கள் வீட்டிற்குப் போய் அவர்களோடு சாப்பிட்டீரே!" என்று அவருடன் வாதாடினர்.

4 அதற்கு இராயப்பர் நடந்ததை விவரமாக விளக்கிச் சொன்னதாவது:

5 "நான் யோப்பா நகரில் செபித்துக்கொண்டிருந்தபொழுது பரவசமாகிக் காட்சி கண்டேன். கப்பல் பாயைப்போன்ற ஒரு விரிப்பு நான்கு மூலைகளிலும் கட்டி வானத்தினின்று இறக்கப்பட்டு என்னிடம் வந்தது.

6 அதை நான் உற்று நோக்குகையில் காட்டு விலங்குகள், தரையில் நடப்பன, ஊர்வன, வானில் பறப்பன யாவும் கண்டேன்.

7 அப்பொழுது, 'இராயப்பா, எழுந்து இவற்றைக் கொன்று சாப்பிடு' என ஒரு குரல் கேட்டது.

8 அதற்கு நான், 'வேண்டாம், ஆண்டவரே. தீட்டும் அசுத்தமுமான எதையும் ஒருபோதும் நான் என் வாயில் வைத்ததேயில்லை' என்றேன்.

9 அதற்கு, 'சுத்தமெனக் கடவுள் சொன்னதை, தீட்டு என்று நீ சொல்லாதே' என மீளவும் அக்குரல் பேசிற்று. இப்படி மும்முறை நடந்தது.

10 பின் எல்லாம் வானத்திற்கு எடுக்கப்பட்டன.

11 அதே நேரத்தில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூவர் நான் தங்கி இருந்த வீட்டுக்கு முன்னே வந்து நின்றனர்.

12 தயக்கமின்றி அவர்களுடன் செல்லும்படி ஆவியானவர் எனக்குச் சொன்னார். எனவே, நானும் இந்த ஆறு சகோதரர்களும் புறப்பட்டு அவருடைய வீட்டை அடைந்தோம்.

13 அவர் தம் வீட்டில் வானதூதர் தோன்றியதாகவும், அந்தத் தூதர் யோப்பாவுக்கு ஆள் அனுப்பி இராயப்பர் என்னும் சீமோனை வரச்சொல்லும்;

14 நீரும் உம் வீட்டார் அனைவரும் மீட்புப் பெறுவதற்கான வார்த்தைகளை அவர் உமக்குக் கூறுவார்" என்று தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்குச் சொன்னார்.

15 "நான் பேசத் தொடங்கியதும், பரிசுத்த ஆவி முன்பு நம்மேல் இறங்கியதுபோலவே அவர்கள் மேலும் இறங்கினார்.

16 அப்போது 'அருளப்பர் நீரால் ஞானஸ்நானம் கொடுத்தார். நீங்களோ பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுவீர்கள்' என்று ஆண்டவர் கூறிய வார்த்தையை நினைவு கூர்ந்தேன்.

17 ஆகவே, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் விசுவாசம் கொண்ட நமக்கு அருளிய அதே திருக்கொடையைக் கடவுள் அவர்களுக்கும் அருளினார் என்றால், கடவுளுக்குத் தடைசெய்ய என்னால் எப்படி முடியும்?"

18 இதைக் கேட்டு அமைதி அடைந்தனர். அப்படியானால் வாழ்வுக்கு வழியாகும் மனமாற்றத்தைக் கடவுள் புறவினத்தாருக்குக் கூட அருளினார் என்று கடவுளை மகிமைப்படுத்தினர்.

19 முடியப்பர் பற்றிய கலாபனையால் விசுவாசிகள் பெனிக்கியா, சைப்ரஸ், அந்தியோகியா வரைக்கும் சிதறுண்டு போயினர். அவர்கள் யூதர்களுக்கு மட்டுமே அன்றி வேறு யாருக்கும் தேவ வார்த்தையை அறிவிக்கவில்லை.

20 ஆனால், இப்படிப் போனவர்களுள் சைப்ரஸ்தீவினர், சீரேனே ஊரார் சிலர் அந்தியோகியாவிற்கு வந்து கிரேக்கர்களை அணுகி, அவர்களுக்கும் ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தி அறிவித்தனர்.

21 ஆண்டவரின் கைவன்மை அவர்களுக்குத் துணை நின்றது. ஆதலின், பலர் ஆண்டவர்மேல் விசுவாசம் கொண்டு மனந்திரும்பினர்.

22 இச்செய்தி யெருசலேமிலுள்ள திருச்சபைக்கு எட்டவே, பர்னபாவை அந்தியோகியாவிற்கு அனுப்பினர்.

23 பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவராய், நற்பண்புடன் விளங்கிய இவர்,

24 அங்குப்போய் கடவுளின் அருளைக்கண்டு மனமகிழ்ந்தார். மன உறுதியுடன் ஆண்டவரில் நிலைத்து நிற்க அனைவரையும் ஊக்குவித்தார். திரளான மக்கள் ஆண்டவர் பக்கம் சேர்ந்தனர்.

25 சவுலை நாடி பர்னபா தர்சு நகருக்குச் சென்றார். அங்கு அவரைக் கண்டு அந்தியோகியாவிற்கு அழைத்து வந்தார்.

26 இருவரும் அச்சபையோடு ஓராண்டு முழுவதும் உறவாடினர்; அங்கே பலருக்குப் போதித்தனர். அந்தியோகியாவில் தான் முதன்முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.

27 அந்நாளில் இறைவாக்கினர் சிலர் யெருசலேமிலிருந்து, அந்தியோகியாவிற்கு வந்தனர்.

28 அவர்களுள் ஒருவர் அகபு என்பவர். அவர் ஆவியினால் ஏவப்பட்டு, உலகெங்கும் பெரும் பஞ்சம் உண்டாகுமென முன்னுரைத்தார். அது கிளாதியுஸ் பேரரசன் காலத்தில் உண்டாயிற்று.

29 ஆகவே, சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களாலான பொருளுதவியை யூதேயாவிலுள்ள சகோதரர்களுக்கு அனுப்பத் தீர்மானித்தனர்.

30 அதன்படியே அவர்கள் அத்தொகையைப் பர்னபா, சவுல் இவர்களின் வழியாக மூப்பர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள்.

அதிகாரம் 12

1 அக்காலத்தில் ஏரோது அரசன் திருச்சபையினர் சிலரைத் துன்புறுத்த முற்பட்டான்.

2 அருளப்பரின் சகோதரரான யாகப்பரை வாளால் கொன்றான்.

3 அது யூதர்களுக்கு மகிழ்ச்சியளித்ததைக் கண்டு, இராயப்பரையும் கைது செய்தான்.

4 இது நிகழ்ந்தது புளியாத அப்பத் திருவிழா நாட்களில். கைது செய்தபின், அவரைச் சிறையில் வைத்துக் காவல்காக்க நான்கு படைவீரர் கொண்ட நான்கு குழுக்களிடம் ஒப்படைத்தான். பாஸ்கா முடிந்ததும் மக்கள் முன்னிலையில் அவரை விசாரணைக்காக நிறுத்தலாம் என நினைத்தான்.

5 இராயப்பர் இவ்வாறு சிறையில் இருக்கையில் திருச்சபை அவருக்காகக் கடவுளிடம் இடையறாது மன்றாடிக்கொண்டிருந்தது.

6 ஏரோது அவரை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு முந்தினநாள் இரவில், இராயப்பர் இரு விலங்குகள் மாட்டப்பட்டு, இரு படை வீரர்களுக்கிடையே தூங்கிக் கொண்டிருந்தார். காவலர் வாயிலுக்கு எதிரே நின்று சிறையைக் காவல் செய்தனர்.

7 அப்போது இதோ! ஆண்டவருடைய தூதர் அங்கே தோன்ற, அறை முழுவதும் ஒளிமயமாயிற்று. தூதர் இராயப்பரைத் தட்டியெழுப்பி, "சீக்கிரம் எழுந்திரும்" என்றார். உடனே விலங்குகள் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்தன.

8 பின் வான தூதர், "உமது இடைக்கச்சையைக் கட்டி, மிதியடிகளைத் தொடுத்துக்கொள்ளும்" என்றார். அவரும் அவ்வாறே செய்தார். பிறகு வானதூதர், "உமது மேலாடையை அணிந்து கொண்டு என்னோடு வாரும்" என்றார்.

9 இராயப்பர் தூதரோடு வெளியே போனார். வான தூதரின் வாயிலாக நிகழ்ந்ததெல்லாம் உண்மை என்று அவர் உணரவில்லை. ஏதோ காட்சி காண்பதாக நினைத்துக்கொண்டார்.

10 முதற் காவலையும் இரண்டாங் காவலையும் கடந்து, நகருக்குச் செல்லும் வாயிலின் இருப்புக் கதவருகில் வந்தனர். அது தானாகவே திறந்தது. 'அவர்கள் வெளியே சென்று ஒரு தெருநெடுக நடந்துபோனதும், வான தூதர் அவரை விட்டகன்றார்

11 பின் இராயப்பர் தன்னுணர்வு பெற்று, "உண்மையாகவே, ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பி ஏரோதின் பிடியிலிருந்து என்னை விடுவித்து, யூத மக்கள் எதிர்பார்த்தவாறு நிகழாமல் என்னைக் காத்தார் என்று இப்பொழுது தெரிகிறது" என்றார்.

12 தம் நிலையை உணர்ந்துகொண்டு மாற்கு என்னும் அருளப்பருடைய அன்னையாகிய மரியாளின் வீட்டிற்குப் போனார்.

13 அங்கே பலர் கூடி செபித்துக்கொண்டிருந்தனர் அவர் தெருக் கதவைத் தட்டியபொழுது ரோதே என்னும் பணிப் பெண் யாரெனப் பார்க்க வந்தாள்.

14 அது இராயப்பரின் குரல் என்று தெரிந்துகொண்டு, மகிழ்ச்சி மிகுதியால் கதவைத் திறக்காமலே உள்ளே ஓடி, இராயப்பர் கதவருகில் நிற்பதாக அறிவித்தாள்.

15 அதற்கு அவர்கள், "உனக்குப் பைத்தியமா?" என்றனர். ஆனால் அவள் தான் சொல்வது உண்மையெனச் சாதித்தாள். அவர்களோ அது அவருடைய காவல் தூதராக இருக்குமோ என்றனர்.

16 இராயப்பர் விடாமல் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தார். கதவைத் திறந்தபோது, அவரைப் பார்த்துத் திகைத்துப்போயினர்

17 பேசாதிருக்கும்படி சைகை காட்டி, ஆண்டவர் தம்மைச் சிறையிலிருந்து வெளிவரச் செய்தது பற்றி எடுத்துச் சொல்லி, "இதை யாகப்பருக்கும் சகோதரர்களுக்கும் அறிவியுங்கள்" என்றார். பிறகு புறப்பட்டு வேறொரு இடத்திற்குப் போய்விட்டார்.

18 பொழுது புலர்ந்ததும், இராயப்பருக்கு என்ன ஆயிற்று என்பதுபற்றி படைவீரர்களிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டது.

19 ஏரோது அவரைத் தேடிப் பார்க்கச் சொன்னான். எங்கும் காணாமையால் காவலர்களை விசாரித்து அவர்களுக்கு மரணதண்டனை விதித்தான். பின் அவன் யூதேயாவை விட்டு செசரியாவுக்குச் சென்று அங்குத் தங்கினான்.

20 அந்நாளில் ஏரோது, தீர், சீதோன் நகரத்தார் மீது வெஞ்சினம்கொண்டிருந்தான். அந்நிலையில் தங்கள் நாடு அரசனுக்குட்பட்ட நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களை எதிர்பார்க்க வேண்டியிருந்ததால், அவர்கள் ஒருமனப்பட்டு அவனைக் காண வந்தனர். அரண்மனை மேற்பார்வையாளனான பிலாத்துவைத் தம் வயப்படுத்திக்கொண்டு அரசனது நட்புறவை நாடி நின்றனர்.

21 குறித்த நாளில் ஏரோது அரச உடையணிந்து மேடையில் வீற்றிருந்து அவர்களுக்கு உரையாற்றுகையில்,

22 "இது மனிதனின் பேச்சல்ல, ஒரு தெய்வத்தின் பேச்சே" என்று மக்கள் ஆர்ப்பரித்தனர்.

23 அவன் கடவுளுக்கு மகிமை செலுத்தாததினால், ஆண்டவரின் தூதர் அவனை உடனே தண்டிக்கவே, அவன் புழுத்துச் செத்தான்.

24 கடவுளின் வார்த்தை வளர்ச்சி பெற்றுப் பரவிவந்தது.

25 பர்னபாவும் சவுலும் தம் ஊழியத்தை முடித்துவிட்டு மாற்கு என்னும் அருளப்பரை அழைத்துக்கொண்டு யெருசலேமிலிருந்து திரும்பினர்.

அதிகாரம் 13

1 அந்தியோகியாவிலிருந்த சபையிலே இறைவாக்கினர்களும் போதகர்களும் இருந்தனர். அவர்கள், பர்னபா, நீகர் என்னும் சிமெயோன், சிரேனே ஊரான் லூகியு சிற்றரசன், ஏரோதுடன் வளர்ந்த மனாயீன், சவுல் என்பவராவர்.

2 ஒரு நாள் அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடுகையில் பரிசுத்த ஆவி, "சவுலையும் பர்னபாவையும் நான் தெரிந்தெடுத்த வேலைக்காக எனக்கென ஒதுக்கிவையுங்கள்" என்று அவர்களுக்குச் சென்னார்.

3 அவர்கள் நோன்பிருந்து செபம் செய்து, அவ்விருவர்மீது கைகளை விரித்து அவர்களை வழி அனுப்பினார்கள்.

4 இப்படிப் பரிசுத்த ஆவியால் அனுப்பப்பட்ட இவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றனர். அங்கிருந்து சைப்ரஸ் தீவுக்குக் கப்பல் ஏறினர்.

5 சாலமி துறையைச் சேர்ந்து யூதர்களின் செபக்கூடங்களில் கடவுளின் வார்த்தையை அறிவித்து வந்தனர். அருளப்பரைத் தங்களுக்குத் துணையாக அழைத்துச் சென்றனர்.

6 தீவு நெடுகப் பயணம் செய்து பாப்போ ஊர்வரை வந்தனர். அங்கே மந்திரவாதியும் போலித் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டனர். அவன் பெயர் பர்யேசு.

7 அவன் செர்குயுபவுலு என்ற ஆளுநனின் பரிவாரத்தில் ஒருவன். நல்லறிவுபடைத்த அவ்வாளுநன் பர்னபாவையும் சவுலையும் வரவழைத்து, கடவுளின் வார்த்தையைக் கேட்க ஆவலாயிருந்தான்.

8 ஆனால், எலிமா என்னும் அந்த மந்திரவாதி அவர்களை எதிர்த்து, ஆளுநன் விசுவசிப்பதைத் தடுக்க முயற்சி செய்தான். ( எலிமா என்பதற்கு மந்திரவாதி என்பதுதான் பொருள். )

9 அப்போது சின்னப்பர் என்னும் சவுல் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று அவனை உற்று நோக்கி,

10 "சூழ்ச்சியும் வஞ்சகமுமே உருவானவனே! அலகையின் வழிவந்தவனே! நன்மையானதற்கெல்லாம் பகைவனே! ஆண்டவரின் நேர்மையான வழியைப் புரட்டுவதை விட்டுவிடமாட்டாயா

11 இதோ! ஆண்டவரின் கை உன்மேல் ஓங்கியிருக்கிறது. நீ ஒளியைக் காணாது கொஞ்சகாலம் குருடனாயிருப்பாய்" என்றார். என்றதும் அவனுக்குப் பார்வை மங்கிற்று. இருள் அவனைச் சூழ்ந்தது. அவன் அங்குமிங்கும் தடவி, தனக்கு வழிகாட்ட ஓர் ஆள் தேடலானான்.

12 நடந்ததைக் கண்ட ஆளுநன் விசுவசித்தான். ஆண்டவரின் போதனையைக் கேட்டு மலைத்துப்போனான்.

13 சின்னப்பரும் அவருடன் இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பல் ஏறி பம்பிலியாவிலுள்ள பெர்கே துறையை அடைந்தனர். அருளப்பர் அவர்களை விட்டுப் பிரிந்து யெருசலேமிற்குத் திரும்பினார்.

14 பெர்கேயிலிருந்து பயணத்தைத் தொடர்ந்து பிசிதியா நாட்டு அந்தியோகியா வந்தனர்.

15 ஓய்வுநாளில் செபக்கூடத்திற்குப் போய் அமர்ந்தனர். திருச்சட்டமும் இறைவாக்குகளும் வாசித்து முடிந்தபின், செபக்கூடத் தலைவர்கள் அவர்களைப் பார்த்து, "சகோதரரே, மக்களுக்கு அறிவுரை கூற ஏதாவது இருந்தால் பேசலாம்" என்றனர்.

16 சவுல் எழுந்து சைகை காட்டி உரைத்ததாவது: "இஸ்ராயேலரே, கடவுளுக்கு அஞ்சுபவரே, கேளுங்கள்:

17 இஸ்ராயேலராகிய இம்மக்களின் கடவுள் நம் முன்னோரைத் தெரிந்தெடுத்தார். நம் மக்கள் எகிப்து நாட்டில் குடியேறியபோது அவர்களை மேன்மைப்படுத்தினார். ஓங்கிய தம் கை வன்மையால் அவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றி,

18 பாலை நிலத்தில் நாற்பது ஆண்டளவாய், அவர்கள் போன போக்கையெல்லாம் சகித்து வந்தார்.

19 பின்னர், கானான் நாட்டில் ஏழு இனத்தினரை ஒழித்து அவர்களுடைய நாடுகளை இவர்களுக்கு உரிமையாக்கினார்.

20 இவையெல்லாம் நடைபெற ஏறக்குறைய நானூற்று ஐம்பது ஆண்டுகளாயின. அதன்பின், இறைவாக்கினரான சாமுவேல் வரை அவர்களுக்கு நடுவர்களை அனுப்பினார்.

21 பின்னர் அவர்கள் ஓர் அரசனை ஏற்படுத்துமாறு வேண்டவே, கீஸ் என்பவனின் மகன் சவுலைக் கடவுள் அரசனாக ஏற்படுத்தினார். அவன் பென்யமீன் குலத்தினன்; நாற்பது ஆண்டுகள் ஆண்டான்.

22 பிறகு கடவுள் அவனை நீக்கிவிட்டு, தாவீதை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தினார். அவரைப்பற்றிக் கடவுள், ' யீசாயின் மகன் தாவீது என் மனத்துக்கு உகந்தவனாய் இருக்கக் கண்டேன். நான் விரும்பியதெல்லாம் அவன் செய்வான் ' என்று நற்சான்று கூறினார்.

23 அவரது மரபிலிருந்தே கடவுள் தாம் வாக்களித்தபடி இயேசுவை இஸ்ராயேலருக்கு மீட்பராக வரச்செய்தார்.

24 இயேசுவின் வருகைக்குமுன், அருளப்பர் இஸ்ராயேல் மக்கள் அனைவருக்கும், மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று அறிவித்து வந்தார்.

25 தம் பணி முடிவுறும் காலத்தில் அருளப்பர், ' நீங்கள் என்னை யாரென நினைக்கிறீர்களோ, அவரல்ல நான். இதோ! ஒருவர் எனக்குப்பின் வருகின்றார். அவருடைய மிதியடிகளை அவிழ்க்க நான் தகுதியற்றவன் ' என்றார்.

26 "சகோதரரே, ஆபிரகாம் வழி வந்தவர்களே, மற்றும் கடவுளுக்கு அஞ்சுபவர்களே, நமக்கன்றோ இந்த மீட்பைப் பற்றிய செய்தி அனுப்பப்பட்டது.

27 யெருசலேம் வாசிகளும், அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறிந்துகொள்ளவில்லை. ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளையும் புரிந்து கொள்ளவில்லை. ஆயினும் அவருக்குத் தீர்ப்பளித்தபோது அவ்வாக்கியங்களை நிறைவேற்றினர்.

28 சாவுக்குரிய குற்றம் எதுவும் காணாதிருந்தும் அவரைத் தொலைக்குமாறு பிலாத்துவைக் கேட்டனர்.

29 அவரைக் குறித்து எழுதப்பட்டவை அனைத்தும் நிறைவேறிய பின்னர் அவரைக் கழுமரத்திலிருந்து இறக்கி, கல்லறையில் வைத்தனர்.

30 கடவுளோ அவரை இறந்தோரிடமிருந்து எழுப்பினார்.

31 அவரும் கலிலேயாவிலிருந்து தம்முடன் யெருசலேம் வந்திருந்தவர்களுக்குப் பல நாட்கள் தோன்றினார். அவர்கள் இப்போது மக்கள்முன் அவருக்குச் சாட்சியாக நிற்கின்றனர்.

32 "நாங்களும் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தியாவது:

33 இயேசுவைக் கடவுள் உயிர்ப்பித்து, நம் முன்னோருக்கு அளித்த வாக்குறுதியை அவர்களுடைய மக்களாகிய நமக்கென நிறைவேற்றினார். அதைப்பற்றியே இரண்டாம் சங்கீதத்தில், ' நீர் எம் புதல்வர், இன்று உம்மை யாம் ஈன்றெடுத்தோம் ' என்று எழுதியுள்ளது.

34 மேலும், அவர் என்றுமே அழிவுக்கு ஆளாகாதபடி, இறந்தோரிடமிருந்து அவரை எழுப்பினார் என்பதைப் பற்றித்தான், ' தாவீதுக்குக் கூறிய தவறாத வாக்குறுதிகளை உங்களுக்கென நிறைவேற்றுவேன் ' என்று உரைத்தபோது கூறினார்.

35 எப்படியெனில் மற்றோரிடத்தில், ' உம்முடைய பரிசுத்தர் அழிவுற விடமாட்டீர் ' என்றுள்ளது.

36 ஆனால், தாவீது தம் தலைமுறையில் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றியபின் இறந்தார்.

37 தம் முன்னோர்களுடன் புதைக்கப்பட்டு அழிவுற்றார். ஆனால் யாரைக் கடவுள் எழுப்பினாரோ, அவர் அழிவுறவில்லை. "எனவே, சகோதரரே, இவர் வழியாகவே பாவமன்னிப்பு உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

38 இதைத் தெரிந்துகொள்ளுங்கள். மோயீசன் சட்டத்தின் வழியாக உங்கள் குற்றங்கள் எவற்றினின்றும் நீங்கள் விடுபடமுடியவில்லை.

39 ஆனால், விசுவசிக்கிற அனைவரும் இவர்வழியாக அவற்றினின்று விடுபடுவர்.

40 ஆகவே, இகழ்பவரே, பாருங்கள், வியப்புறுங்கள், ஒழிந்துபோங்கள். ஏனெனில்,

41 உங்கள் வாழ்நாளில் நான் ஒன்று செய்வேன். யார் சொன்னாலும் அதை நம்பமாட்டீர்கள் ' என்று இறைவாக்குகளின் நூலில் கூறியுள்ளது உங்களுக்கு நேராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

42 அவர்கள் வெளியே செல்லுகையில் அடுத்த ஓய்வுநாளில் அதைப்பற்றியே பேசும்படி மக்கள் அவர்களைக் கேட்டுக் கொண்டனர்.

43 கூட்டம் கலைந்த பின்னர் யூதர் பலரும், யூதமறையைத் தழுவிய புறவினத்தவர் பலரும் சின்னப்பரையும் பர்னபாவையும் பின் தொடர்ந்தனர். இவ்விருவரும் அவர்களுடன் உரையாடி, கடவுளுடைய அருளில் நிலையாயிருக்கும்படி ஊக்குவித்தனர்.

44 அடுத்த ஓய்வுநாளில் கடவுளின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் வந்து கூடினர்.

45 இக்கூட்டத்தைக் கண்டு, யூதர்கள் பொறாமை நிறைந்தவர்களாய்ச் சின்னப்பரைத் தூற்றி, அவர் சொன்னதை மறுத்துப் பேசினர்.

46 சின்னப்பரும் பர்னபாவும் துணிவோடு, "முதலில் உங்களுக்குத்தான் கடவுளின் வார்த்தையைப் போதிக்கவேண்டியிருந்தது. ஆனால், நீங்கள் அதைப் புறக்கணித்து, முடிவில்லா வாழ்விற்குத் தகுதியற்றவர்கள் என நீங்களே உங்களுக்குத் தீர்ப்பிட்டுக் கொண்டீர்கள். ஆதலால், இதோ, நாங்கள் உங்களைவிட்டு, 'புறவினத்தார்பால் செல்கிறோம்.

47 ஏனெனில், ' உலகின் இறுதி எல்லைவரைக்கும் மீட்பைக் கொண்டு செல்ல புறவினத்தாருக்கு ஒளியாக உன்னை ஏற்படுத்தினேன் ' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்" என்றனர்.

48 புறவினத்தார் இதைக் கேட்டு மகிழ்ந்து ஆண்டவரின் வார்த்தையை மகிமைப்படுத்தினர். முடிவில்லா வாழ்வுக்குக் குறிக்கப்பட்டவர்கள் அனைவரும் விசுவாசிகள் ஆயினர்.

49 ஆண்டவரின் வார்த்தை அந்நாடெங்கும் பரவிவந்தது.

50 யூதர்களோ யூதமறையைத் தழுவிய பெருங்குடிப் பெண்டிரையும் நகரப் பெரியோர்களையும் தூண்டினர். சின்னப்பருக்கும் பர்னபாவுக்கும் எதிராகக் கலகம் உண்டாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து வெளியேற்றினர்.

51 இவர்கள் தம் காலிலிருந்து தூசியை அவர்களுக்கு எதிராகத் தட்டிவிட்டு இக்கோனியாவுக்குப் போயினர்.

52 சீடர்களோ மகிழ்ச்சியாலும் பரிசுத்த ஆவியாலும் நிரம்பியவராய் வாழ்ந்தனர்.

அதிகாரம் 14

1 இக்கோனியாவிலும் அவ்வாறே நிகழ்ந்தது. அந்நகரில் யூதர்களின் செபக்கூடத்துக்குச்சென்று பேசியபோது யூதர், கிரேக்கர் பலரும் விசுவாசங்கொண்டனர்.

2 விசுவசியாத யூதர்கள் புறவினத்தாரைத் தூண்டி, சகோதரர்களுக்கு எதிராக அவர்கள் மனத்தைக் கெடுத்தனர்.

3 அப்போஸ்தலர்கள் இருவரும் அங்கே பல நாள் தங்கி, ஆண்டவரை நம்பி, துணிவுடன் பேசினர். ஆண்டவரும் தம் கருணையை வெளிப்படுத்தும் இப்போதனையை உறுதிப்படுத்த அவர்கள் கையால் அருங்குறிகளும் அற்புதங்களும் நிகழச் செய்தார்.

4 நகரமக்களோ இரண்டுபட்டனர். ஒரு சாரார் யூதரோடும், மற்றொரு சாரார் அப்போஸ்தலரோடும் சேர்ந்து கொண்டனர்.

5 புறவினத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து அப்போஸ்தலர்களை இழிவுபடுத்தி, கல்லாலெறியத் திட்டமிட்டனர்.

6 அப்போஸ்தலர்களோ அதை அறிந்து லிக்கவோனியா நாட்டு லீஸ்திரா, தெர்பை என்னும் ஊர்களுக்கும் சுற்றுப் புறங்களுக்கும் ஓடினர்.

7 அங்கெல்லாம் நற்செய்தி அறிவித்தனர்.

8 கால் வழங்காத ஒருவன் லீஸ்திராவில் இருந்தான்.

9 அவன் பிறவி முடவன், என்றுமே நடந்ததில்லை. சின்னப்பர் பேசுவதை அவன் கேட்டான். அவர் அவனை உற்று நோக்கி, குணம் பெறுவதற்கான விசுவாசம் அவனிடம் உள்ளதை உணர்ந்து,

10 உரத்த குரலில், "எழுந்திரு, கால் ஊன்றி நேராக நில்" என்றார். அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான்.

11 மக்கட் கூட்டம் சின்னப்பர் செய்ததைக் கண்டு லிக்கவோனிய மொழியில், "தெய்வங்களே மனித உருவில் நம்மிடையே இறங்கிவந்துள்ளன" என்று கூச்சலிட்டனர்.

12 சின்னப்பர் முக்கிய பேச்சாளராயிருந்ததால், அவரை மெர்க்குரி என்றும், பர்னபாவை ஜூப்பிட்டர் என்றும் அழைத்தனர்:

13 அப்போது, நகருக்கு எதிரிலுள்ள ஜூப்பிட்டர் கோயில் அர்ச்சகன், எருதுகளையும் மாலைகளையும் வாயிலுக்குக் கொண்டுவந்து, மக்களுடன் சேர்ந்து பலியிட முற்பட்டான்.

14 ஆனால், இதைக் கேள்வியுற்ற அப்போஸ்தலர் பர்னபாவும் சின்னப்பரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் ஓடி உரத்த குரலில்,

15 "நண்பர்களே, என்ன செய்கிறீர்கள்? நாங்களும், உங்களைப்போல எளிய நிலைக்குட்பட்ட மனிதர்கள்தானே. இப்பயனற்ற சிலைகளை விட்டுவிட்டு உயிருள்ள கடவுள் பக்கம் திரும்ப வேண்டுமென்று நற்செய்தியை அறிவிக்கிறோம். விண், மண், கடல் யாவற்றையும் அவற்றிலடங்கிய அனைத்தையும் ஆக்கியவர் அவரே.

16 கடந்த காலங்களில் அவர் எல்லா இனத்தாரும் தங்கள் மனம் போனபோக்கில் நடக்கவிட்டுவிட்டார்.

17 ஆயினும், தம்மை அறிந்துகொள்ள எத்தகைய சான்றும் இல்லாதபடி விட்டுவிடவில்லை. எவ்வாறெனில், வானினின்று உங்களுக்கு மழையைப் பொழிந்து, செழிப்புமிக்கப் பருவங்களை அளித்து, உங்கள் உள்ளம் மகிழ்ச்சி பொங்க, நிறைய உணவு கொடுத்து உங்களுக்கு நன்மை புரிந்துவந்தார்" என்றனர்.

18 இவ்வாறு பேசியதால் தங்களுக்கு மக்கட் கூட்டம் பலியிடுவதை ஒருவாறு தடுக்கமுடிந்தது.

19 அப்போது அந்தியோகியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களை ஏவி, சின்னப்பரைக் கல்லாலெறிந்தார்கள். அவர் இறந்துவிட்டதாக எண்ணி நகருக்கு வெளியே இழுத்துப் போட்டார்கள்.

20 சீடர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். பிறகு அவர் எழுந்து நகருக்குள் சென்றார். மறுநாள் பர்னபாவுடன் தெர்பைக்குப் புறப்பட்டார்.

21 அந்நகர மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து, பலரைச் சீடராக்கிய பின் லீஸ்திரா, இக்கோனியா, அந்தியோகியா ஆகிய ஊர்களுக்குத் திரும்பினர்.

22 சீடர்களின் மனத்தை உறுதிப்படுத்தி விசுவாசத்தில் நிலைத்துநிற்க வேண்டுமென்றும், ' பல துன்பங்களின் வழியாகவே நாம் கடவுளின் அரசிற்குள் நுழைய வேண்டுமென்றும் ' அறிவுறுத்தினர்.

23 ஒவ்வொரு சபைக்கும் மூப்பர்களை ஏற்படுத்தினர். நோன்பிருந்து செபம் செய்த பின்னர், அவர்கள் விசுவசித்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

24 பிசீதியாவைக் கடந்து பம்பிலியாவிற்கு வந்தனர்.

25 பெர்கேயில் தேவ வார்த்தையைப் போதித்து அத்தாலியாவிற்குச் சென்றனர்.

26 அவர்கள் இப்போது செய்து முடித்த பணிக்காக, கடவுளின் அருளுக்கு ஒப்படைக்கப்பட்டுச் சென்றது அந்தியோகியாவிலிருந்துதான்.

27 அங்கே வந்து சேர்ந்ததும், சபையைக் கூட்டிக் கடவுள் தங்களுக்காக அரிய பெரிய செயல்களைப் புரிந்ததையும், புறவினத்தாருக்கு விசுவாச வாயிலைத் திறந்துவிட்டதையும் எடுத்துரைத்தனர்.

28 அங்கே சீடர்களுடன் பலநாள் தங்கியிருந்தனர்.

அதிகாரம் 15

1 யூதேயாவிலிருந்து வந்த சிலர், "மோயீசனின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் நீங்கள் மீட்படைய முடியாது" என்று சகோதரர்களுக்குப் போதிக்கத் தொடங்கினர்.

2 சின்னப்பரும் பர்னபாவும் அவர்களை எதிர்த்தெழவே, கடும் வாக்குவாதம் உண்டாயிற்று. ஆகையால் சின்னப்பரும் பர்னபாவும் வேறு சிலரும் இச்சிக்கலைத் தீர்க்க யெருசலேமிலுள்ள அப்போஸ்தலர், மூப்பர்களிடம் செல்லத் தீர்மானித்தனர்.

3 அதன்படி, சபையினரால் வழியனுப்பப்பட்டு, புறவினத்தார் மனந்திரும்பிய செய்தியை அறிவித்துக்கொண்டு, பெனிக்கியா, சமாரியா வழியாகப் பிரயாணம் செய்தனர். இச்செய்தி சகோதரர் எல்லாருக்கும் பெரிதும் மகிழ்ச்சியளித்தது.

4 அவர்கள் யெருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது சபையாரும் அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் அவர்களை வரவேற்றனர். அப்போது, கடவுள் தங்களுக்காகச் செய்த அரிய பெரிய செயல்களை எடுத்துரைத்தனர்.

5 ஆனால் விசுவாசிகளான பரிசேயக் கட்சியினர் சிலர் கிளம்பி, "புறவினத்தார் விருத்தசேதனம் பெறவேண்டும், மோயீசனுடைய சட்டத்தைப் பின்பற்ற அவர்களுக்குக் கட்டளையிடவும் வேண்டும்" என வாதாடினர்.

6 இதை ஆய்ந்து பார்க்க அப்போஸ்தலரும் மூப்பர்களும் கூடினர்.

7 நெடுநேரம் வாதாடிய பின் இராயப்பர் எழுந்து, "சகோதரரே, புறவினத்தார் என் வாய்மொழியால் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசம் கொள்ளும்படி கடவுள் தொடக்கத்திலிருந்தே உங்களிடையில் என்னைத் தேர்ந்துகொண்டார். இது உங்களுக்குத் தெரிந்ததே.

8 உள்ளங்களை அறியும் கடவுள் நமக்கு அளித்ததுபோல், அவர்களுக்கும் பரிசுத்த ஆவியை அளித்து, அவர்கள் சார்பில் சாட்சியம் தந்தார்.

9 விசுவாசத்தினால் அவர்களுடைய உள்ளங்களை அவர் தூய்மையாக்கியதில் நமக்கும் அவர்களுக்குமிடையே எந்த வேறுபாடும் காட்டவில்லை.

10 எனவே, நம் முன்னோரோ, நாமோ சுமக்க முடியாத நுகத்தை இச்சீடர்கள் தோளின் மேல் ஏன் சுமத்துகிறீர்கள்? இப்படி ஏன் கடவுளைச் சோதிக்கிறீர்கள்?

11 புறவினத்தாரும் சரி, நாமும் சரி, மீட்புப்பெறுவது ஆண்டவராகிய இயேசுவின் அருளால்தான். இதுவே நம் விசுவாசம்" என்றார்.

12 இதைக் கேட்டு அனைவரும் அமைதியாகி, பர்னபா, சின்னப்பர் இவர்கள் வழியாக, கடவுள் புறவினத்தாரிடையே செய்த அருங்குறிகள், அற்புதங்களையெல்லாம் அவர்களே எடுத்துரைக்கக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

13 அவர்கள் பேசி முடித்தபின் யாகப்பர் கூறியதாவது:

14 "சகோதரரே, நான் சொல்லுவதைக் கேளுங்கள். புறவினத்தாரிடையே தமக்கென மக்களைத் தேர்ந்து கொள்ளக் கடவுள் முதன் முறையாக அவர்களை நாடி வந்த செய்தியை அவர்களுக்குச் சிமெயோன் எடுத்துக்கூறினார்.

15 இதற்கொப்ப இறைவாக்கினர்கள் எழுதியுள்ளதாவது:

16 'அதன்பின் நான் திரும்பி வந்து விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மறுபடியும் கட்டுவேன், அதில் பாழடைந்து போனதை மீண்டும் கட்டி எழுப்புவேன்.

17 அதைப் பார்த்து மற்ற மனிதர்களும், எனக்கு அர்ச்சிக்கப்பட்ட புறவினத்தார் எல்லாரும் ஆண்டவரைத் தேடுவர்,

18 என்று தொன்று தொட்டு இவற்றை வெளிப்படுத்தும் ஆண்டவர் கூறுகிறார்.

19 ஆதலால், கடவுள்பக்கம் மனந்திரும்புகிற புறவினத்தாருக்குத் தொல்லை கொடுத்தலாகாது.

20 என் முடிவு இதுவே. அவர்கள் சிலைகளால் தீட்டுப்பட்டதைத் தொடாமல் கெட்ட நடத்தையை விலக்கி, மூச்சடைத்துச் செத்ததின் இறைச்சி, மிருக இரத்தம் இவற்றை உண்ணாமல் இருக்குமாறு அவர்களுக்கு எழுதுங்கள்.

21 முன்னாள்தொட்டு மோயீசனின் சட்டத்தைப் போதிப்பவர்கள் எல்லா ஊர்களிலும் உள்ளனர். இச்சட்டம் ஓய்வு நாள் தோறும் செபக்கூடங்களில் வாசிக்கப்பட்டு வருகிறது.

22 அப்பொழுது, அவர்களுள் இருவரைத் தெரிந்தெடுத்து, சின்னப்பர், பர்னபா இவர்களோடு அந்தியோகியாவிற்கு அனுப்புவதென அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் திருச்சபையினர் அனைவரும் தீர்மானித்தனர். அவ்விருவர், சகோதரர்களுள் செல்வாக்குப் பெற்றிருந்த பர்சபா வென்னும் யூதாசும், சீலாவும் ஆவர்.

23 இவர்கள் வழியாகப் பின்வரும் கடிதம் எழுதி அனுப்பினர்: "அந்தியோகியா, சீரியா, சிலிசியா ஆகிய இடங்களில் உள்ள புறவினச் சகோதரர்களுக்கு-உங்கள் சகோதரர்களான அப்போஸ்தலரும் மூப்பரும் வாழ்த்துக்கூறி எழுதுவது:

24 எங்களுள் சிலர் அங்கு வந்து தங்கள் பேச்சினால் உங்களைக் கலக்கமுறச்செய்து மனத்தைக் குழப்பினர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எக்கட்டளையும் தந்ததில்லை.

25 ஆகையால் நம் ஆண்டவர், இயேசு கிறிஸ்துவின் பெயருக்காகத்

26 தங்கள் உயிரையே கையளித்துள்ள, எங்கள் அன்புக்குரிய சின்னப்பர், பர்னபா ஆகியவர்களோடு நாங்கள் தெரிந்தெடுத்தோரை உங்களிடம் தூதுவராக அனுப்ப ஒருமனத்தோடு தீர்மானித்தோம்.

27 எனவே, யூதாசையும் சீலாசையும் உங்களிடம் அனுப்புகிறோம். நாங்கள் எழுதியுள்ளதை இவர்கள் உங்களுக்கு வாய்மொழியாகச் சொல்லுவார்கள்.

28 பரிசுத்த ஆவியும் நாமும் கூறும் தீர்மானம் இதுவே: இன்றியமையாதவை தவிர, எச்சுமையும் உங்கள்மேல் சுமத்தப்படலாகாது.

29 சிலைகளுக்குப் படைத்தது, மிருக இரத்தம், மூச்சடைத்துச் செத்ததின் இறைச்சி இவற்றை உண்ணாமலிருப்பதோடு, கெட்ட நடத்தையிலிருந்து விலகி நில்லுங்கள். இவற்றைத் தவிர்த்தலே முறை. வணக்கம்."

30 விடை பெற்றபின் தூதுவர் அந்தியோகியாவுக்குச் சென்றனர். அங்குச் சபையரைக் கூட்டிக் கடிதத்தைக் கொடுத்தனர்.

31 அக்கடிதத்தை வாசித்தபின், அதனால் கிடைத்த ஊக்கத்தினால் மகிழ்ச்சி கொண்டனர்.

32 யூதாசும் சீலாவும் இறைவாக்கினர்களாதலின் அறிவுரை பல கூறி, சகோதரர்களைத் திடப்படுத்தினர்.

33 சில நாளுக்குப்பின்

34 சகோதரர்களிடம் சமாதான வாழ்த்துப் பெற்றுத் தங்களை அனுப்பியோரிடம் திரும்பினர்.

35 சின்னப்பரும் பர்னபாவும் அந்தியோகியாவில் தங்கி வேறு பலருடன் ஆண்டவரின் வார்த்தையை அறிவித்தும் போதித்தும் வந்தனர்.

36 சில நாளுக்குப்பின் சின்னப்பர் பர்னபாவிடம், "நாம் ஆண்டவரின் வார்த்தையை அறிவித்த நகரங்களுக்கெல்லாம் திரும்பச்சென்று, சகோதரர்களைச் சந்தித்து அவர்களுக்கு என்னவாயிற்று என்று பார்த்து வருவோம்" என்றார்.

37 மாற்கு என்ற அருளப்பரையும் தங்களோடு அழைத்துச் செல்ல வேண்டுமென்பது பர்னபாவின் விருப்பம்.

38 ஆனால் தங்களோடு பணிபுரிய வராமல் தங்களைப் பம்பிலியா நாட்டில் விட்டு விலகிய அவரை அழைத்துச் செல்ல சின்னப்பர் விரும்பவில்லை.

39 இதனால் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரியும் அளவுக்கு அவர்களிடையே கடுமையான விவாதம் உண்டாயிற்று. பர்னபா மாற்கை அழைத்துக் கொண்டு சைப்பிரசுக்குக் கப்பல் ஏறினார்.

40 சின்னப்பரோ சீலாவைத் தம்மோடு வரும்படி அழைத்துக்கொண்டார். சகோதரர்கள் அவரை ஆண்டவர் கையில் ஒப்படைத்து வழியனுப்பினர்.

41 அவர் சீரியா, சிலிசியா நாடெங்கும் சென்று ஆங்காங்குள்ள சபைகளை உறுதிப்படுத்தினார்.

அதிகாரம் 16

1 அவர் தெர்பேவுக்குச் சென்று, அங்கிருந்து லீஸ்திராவுக்கு வந்து சேர்ந்தார். அங்கே தீமோத்தேயு என்ற சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் யூத இனத்தைச் சார்ந்த ஒரு கிறிஸ்துவப் பெண். தந்தையோ கிரேக்க இனத்தினன்.

2 இந்தத் தீமோத்தேயு லீஸ்திரா, இக்கோனியா நகரங்களிலுள்ள சகோதரர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்,

3 சின்னப்பர் அவரைத் தம்முடன் அழைத்துச் செல்ல விரும்பினார். அவருடைய தந்தை கிரேக்க இனத்தினன் என அனைவரும் அறிந்திருந்ததால் அவ்விடங்களிலிருந்த யூதர்களின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார்.

4 அவர்கள் ஊர்தோறும் செல்லுகையில், யெருசலேமிலிருந்த அப்போஸ்தலரும், மூப்பரும் தீர்மானித்த கட்டளைகளை அங்குள்ளோரிடம் ஒப்படைத்து அவற்றைக் கடைப்பிடிக்கக் கற்பித்தனர்.

5 ஆகவே சபைகள் விசுவாசத்தில் வேரூன்றி நாடோறும் தொகையிற் பெருகிவந்தன.

6 பிறகு, தேவ வார்த்தையை ஆசியாவில் போதிக்காதபடி பரிசுத்த ஆவி அவர்களைத் தடுக்கவே, அவர்கள் பிரிகியா, கலாத்தியா பகுதிகளைக் கடந்து சென்றனர்.

7 அவர்கள் மீசியாவின் எல்லைக்கு வந்தபொழுது பித்தினியாவுக்குச் செல்லப் பார்த்தனர். ஆனால் இயேசுவின் ஆவி அவர்களைப் போகவிடவில்லை.

8 எனவே, மீசியாவைக் கடந்து துரோவா நகரை அடைந்தனர்.

9 அங்கே சின்னப்பர், இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மகெதோனியா நாட்டினன் ஒருவன் தோன்றி, "நீர் மகெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்" என்று தம்மை வேண்டுவதாகக் கண்டார்.

10 காட்சி முடிந்ததும் நற்செய்தியை அவர்களுக்கு அறிவிக்கக் கடவுள் எங்களை அழைத்துள்ளார் என்று முடிவு செய்து உடனே மகெதோனியா செல்ல வழி தேடினோம்.

11 துரோவாவில் கப்பலேறி சமெத்ராக்கே தீவுக்கும், மறுநாள் நெயாப்பொலிக்கும் நேராகப் போனோம்.

12 அங்கிருந்து பிலிப்பி நகருக்கு வந்து சேர்ந்து, அங்கே சில நாட்கள் தங்கியிருந்தோம். அது மகெதோனியா நாட்டில் உள்ள ஒரு மாவட்டத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்று, உரோமையர்களின் குடியேற்ற நகரம்.

13 ஓய்வுநாளில் நகர வாயிலைக் கடந்து ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கே யூதர்கள் செபிக்கும் இடம் இருக்குமெனக் கருதினோம். அப்படியே பெண்கள் சிலர் அங்குக் கூடியிருந்தனர். அமர்ந்து அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினோம்.

14 தியத்தைரா நகரைச் சார்ந்த பெண்ணொருத்தி அங்கிருந்தாள். அவள் பெயர் லீதியா; இரத்தாம்பரம் விற்பவள், யூதமறையைத் தழுவியவள். சின்னப்பருடைய போதனையை அவள் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் கூறியதை மனத்தில் இருத்தும்படி ஆண்டவர் அவளது இருதயத்தில் அருளொளி வீசினார்.

15 அவளும் அவளுடைய வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றதும், "ஆண்டவரிடம் நான் விசுவாசமுள்ளவள் என்று நீங்கள் கருதினால், என் வீட்டிற்கு வந்து தங்குங்கள்" என்று எங்களை இறைஞ்சி வற்புறுத்திக் கேட்டுக்கொண்டாள்.

16 ஒருநாள் நாங்கள் செபம் செய்யும் இடத்திற்குச் செல்லும்போது குறி சொல்ல ஏவும் ஆவியால் பீடிக்கப்பட்டிருந்த பணிப்பெண் ஒருத்தி எங்களுக்கு எதிரே வந்தாள்.

17 அவள் தன் மாந்திரகத்தால் தன்னுடைய எசமானர்களுக்கு ஏராளமான வருவாய் சம்பாதித்துக் கொடுப்பாள். "இவர்கள் உன்னத கடவுளின் ஊழியர்கள். மீட்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறார்கள்" என்று கத்திக்கொண்டே அவள் சின்னப்பரையும் எங்களையும் பின் தொடர்ந்தாள்.

18 இவ்வாறு அவன் பலநாள் செய்துவந்தாள். சின்னப்பர் எரிச்சல் கொண்டு அவள் பக்கம் திரும்பி, "இயேசு கிறிஸ்துவின் பெயரால் உனக்குக் கட்டளையிடுகிறேன். இவளை விட்டுப் போ" என்று அந்த ஆவியிடம் கூறினார். அந்நேரமே அது வெளியேறியது.

19 அவளுடைய எசமானர்கள் தங்கள் வருவாய்க்குரிய வாய்ப்பெல்லாம் போய்விட்டதே என்று சின்னப்பரையும் சீலாவையும் பிடித்து நகரத் தலைவர்கள்முன் நிறுத்தப் பொதுவிடத்திற்கு இழுத்துச் சென்றனர்.

20 அவர்களை நடுவர்கள் முன் கொண்டுபோய், ' இவர்கள் நம் நகரில் கலகம் விளைவிக்கிறார்கள்.

21 யூதர்களாகிய இவர்கள் இங்கே வந்து உரோமையர்களாகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ பின்பற்றவோ தகாத ஒழுக்க முறைமைகளைப் பரப்புகிறார்கள்" என்றனர்.

22 மக்கட் கூட்டம் அவர்களை எதிர்த்தெழுந்தது; நடுவர்கள் அவர்களுடைய மேலாடைகளைக் கிழித்தெறிந்து, அவர்களைச் சாட்டையால் அடிக்கக் கட்டளையிட்டனர்.

23 அவர்களை நையப் புடைத்தபின் சிறையில் தள்ளி, பத்திரமாகக் காவல் செய்யுமாறு சிறைக் காவலனுக்குக் கட்டளையிட்டனர்.

24 இக்கட்டளையின்படி அவன் அவர்களை உட்சிறையில் தள்ளி, கால்களைத் தொழு மரத்தில் சேர்த்துப் பிணித்துவிட்டான்.

25 நள்ளிரவு வந்தது. சின்னப்பரும் சீலாவும் கடவுளைப் புகழ்ந்து பாடிச் செபித்துக்கொண்டு இருந்தனர். மற்றக் கைதிகளோ கேட்டுக் கொண்டிருந்தனர்.

26 அப்பொழுது திடீரெனச் சிறைக்கூடத்தின் அடித்தளமே ஆடும் அளவுக்கு, பெரியதொரு நில நடுக்கம் ஏற்பட்டது. உடனே, கதவுகளெல்லாம் திறந்தன; அனைவரின் விலங்குகளும் தகர்ந்து விழுந்தன.

27 சிறைக் காவலன் விழித்துக் கொண்டான். சிறைக் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்து, கைதிகள் தப்பி ஓடியிருப்பர் என்று எண்ணி, வாளை உருவித் தன் உயிரை மாய்த்துக் கொள்ளப்போனான்.

28 ஆனால், சின்னப்பர் உரத்த குரலில், "தீங்கு எதுவும் செய்து கொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்குத்தான் இருக்கிறோம்" என்று கத்தினார்.

29 சிறைக்காவலன் விளக்கைக் கொண்டு வரச்சொல்லி உள்ளே ஓடினான். அவன் நடுங்கிக்கொண்டே சின்னப்பர், சீலா இவர்களின் காலில் விழுந்தான்.

30 அவர்களை வெளியே அழைத்து வந்து, "ஐயன்மீர், மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான்.

31 அதற்கு அவர்கள், "ஆண்டவராகிய இயேசுவின்மேல் விசுவாசம் கொள். நீயும் உன் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்றனர்.

32 பிறகு அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த அனைவருக்கும் ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்தனர்.

33 அவ்விரவு நேரத்திலேயே அவர்களை அழைத்துச்சென்று, அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றனர்.

34 அப்போது அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து, விருந்து வைத்தான். கடவுளை விசுவசிக்கும் பேறு கிடைத்தது பற்றி தன் வீட்டார் அனைவரோடும் கூடிக் களிகூர்ந்தான்.

35 விடிந்தபின், நடுவர்கள் அம்மனிதர்களை விடுதலை செய்யச் சொல்லி, நகர்க் காவலர்களை அனுப்பினர்.

36 சிறைக்காவலன் இச்செய்தியைச் சின்னப்பருக்கு அறிவித்து, "உங்களை விடுதலை செய்ய வேண்டுமென நடுவர்கள் சொல்லி அனுப்பியுள்ளனர். எனவே நீங்கள் சமாதானமாகப் போய் விடலாம்" என்றான்.

37 ஆனால், சின்னப்பர் அவர்களிடம் "உரோமைக் குடிமக்களாகிய எங்களை அவர்கள் தண்டனைத் தீர்ப்பிடாமலே பொது மக்கள் முன்னிலையில் சாட்டையால் அடித்துச் சிறையில் தள்ளினார்கள். இப்பொழுது யாருக்கும் தெரியாமல் அனுப்பிவிடுகிறார்களா? முடியாது; அவர்களே வந்து எங்களை விடுதலை செய்யட்டும்" என்றார்.

38 நகர்க் காவலர்கள் இச்செய்தியை நடுவர்களுக்கு அறிவித்தார்கள். கைதிகள் உரோமைக் குடிமக்கள் எனக் கேட்டு நடுவர் அஞ்சி,

39 அவர்களிடம் வந்து, அவர்களுடன் நயந்து பேசி, நகரை விட்டு அகலுமாறு கேட்டுக் கொண்டே, அவர்களை வெளியே அழைத்துச் சென்றனர்.

40 அவர்களும் சிறையினின்று வெளியேறி லீதியாவின் வீட்டிற்குச் சென்றனர். சகோதரர்களைக் கண்டு ஆறுதல் கூறியபின், அங்கிருந்து பயணமாயினர்.

அதிகாரம் 17

1 அம்பிப்பொலிஸ், அப்பொலொனியா ஊர்களைக் கடந்து தெசலோனிக்கே நகரை அடைந்தனர்.

2 சின்னப்பர் தம் வழக்கப்படி யூதர்களிடம் சென்று, தொடர்ச்சியாக மூன்று ஓய்வுநாட்கள் அவர்களுடன் வாதாடலானார்.

3 மறை நூலை எடுத்துரைத்து, மெசியா பாடுபடவும், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழவும் வேண்டும் என விளக்கிக்காட்டுவார். "நான் உங்களுக்கு அறிவிக்கும் இந்த இயேசுதான் அந்த மெசியா" என்று கூறி முடிப்பார்.

4 அவர் சொன்னதை யூதர்கள் சிலரும், யூத மறையைத் தழுவிய திரளான கிரேக்கர்களும், பெருங்குடி மகளிர் பலரும் உண்மையென ஒப்புக்கொண்டு சின்னப்பர், சீலா இவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.

5 யூதர்களோ பொறாமைகொண்டு பொல்லாத போக்கிரிகள் சிலரைக் கூட்டமாகத் திரட்டி, நகரிலே அமளி உண்டாக்கினர். சின்னப்பரையும் சீலாவையும் பொது மக்கள் அவைக்கு அழைத்துச் செல்லவேண்டுமென்று யாசோனின் வீட்டைச் சூழ்ந்து கொண்டனர்.

6 அவர்களைக் காணாது, யாசோனையும் சகோதரர் சிலரையும், நகராட்சிக் குழுவினரிடம் இழுத்து வந்து, "உலகமெங்கும் குழப்பம் உண்டாக்குகிற இவர்கள் இங்கேயும் வந்துவிட்டனர்.

7 யாசோன் இவர்களைத் தன் வீட்டில் ஏற்றுள்ளான். இவர்கள் அனைவரும் இயேசு என்ற வேறு ஓர் அரசன் இருப்பதாகச் சொல்லி, செசாரின் கட்டளையை எதிர்த்து நடக்கிறார்கள்" என்று கூச்சலிட்டனர்.

8 இதைக் கேட்ட மக்களிடையிலும், நகராட்சிக் குழுவினரிடையிலும் அவர்கள் கலக மூட்டினர்.

9 யாசோனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பிணைபெற்றுக் கொண்டு அவர்களை விட்டுவிட்டனர்.

10 அன்றிரவே, சகோதரர்கள் தாமதமின்றிச் சின்னப்பரையும் சீலாவையும் பெரோயாவுக்கு அனுப்பிவிட்டனர். அவர்கள் அங்குச் சேர்ந்தபின் யூதர்களின் செபக் கூடத்திற்குப் போனார்கள்.

11 அங்குள்ளவர்கள் தெசலோனிக்கே நகர் யூதர்களைவிடப் பெருந்தன்மையுள்ளவர்கள். தேவ வார்த்தையை மிக்க ஆவலுடன் ஏற்றுக்கொண்டு, அப்போஸ்தலர்கள் போதிப்பது மறைநூலுடன் ஒத்துள்ளதா என்று நாள்தோறும் ஆராய்ந்து வந்தனர்.

12 யூதர் பலரும் கிரேக்கர்களுள் பெருங்குடி மகளிரும், ஆண்கள் பலரும் விசுவசித்தனர்.

13 ஆனால், சின்னப்பர் பெரோயாவிலும் கடவுளின் வார்த்தையை அறிவித்த செய்தி, தெசலோனிக்கே நகரின் யூதர்களுக்கு எட்டவே. அங்கேயும் அவர்கள் வந்து, மக்கட் கூட்டத்தைத் தூண்டிக் கலக மூட்டினர்.

14 உடனே, சகோதரர்கள் சின்னப்பரைக் கடற்கரை வரைக்கும் செல்லுமாறு அனுப்பினர். ஆனால், சீலாவும் தீமோத்தேயுவும் ஊரிலேயே தங்கினர்.

15 சின்னப்பருடன் சென்றவர்கள் அவரை ஏத்தென்ஸ் வரை அழைத்துக் கொண்டு போனார்கள். அதிவிரைவில் தம்மிடம் வந்து சேரவேண்டும் என்று சீலாவுக்கும் தீமோத்தேயுக்கும் அவர் கொடுத்த கட்டளையைப் பெற்றுக் கொண்டு அவர்கள் ஊர் திரும்பினர்.

16 ஏத்தென்ஸ் நகரில் அவர்களைச் சின்னப்பர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அந்நகரில் சிலைகள் நிறைந்து இருப்பதைக் கண்டு, அவர் உள்ளத்தில் சீற்றம் பொங்கியது.

17 எனவே, அவர் செபக்கூடத்தில் யூதரோடும், யூதமறை தழுவியவரோடும், பொதுவிடத்தில் எதிர்ப்பட்டவர்களோடும் ஒவ்வொரு நாளும் வாதாடி வந்தார்.

18 எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் ஆகிய மெய்ந்நூல் அறிஞர் சிலர், அவருடன் கலந்து உரையாடினர். சிலர், "இவன் என்ன பிதற்றுகிறான் ? என்னதான் சொல்லுகிறான்?" என்றனர். இயேசுவையும் உத்தானத்தையும் பற்றி அவர் அறிவித்து வந்ததால் வேறு சிலர், "இவன் அன்னிய தெய்வங்களுக்காகப் பிரச்சாரம் செய்பவன் போலும்" என்றனர்.

19 பிறகு அவரை அரையொபாகு என்னும் மன்றத்திற்கு அழைத்துச் சென்று, "நீர் கூறும் இப்புதிய போதனை என்னவென்று நாங்கள் அறியலாமா?

20 நீர் எங்களுக்குச் சொல்லுவது நூதனமாயுள்ளதே; அதன் பொருள் என்னவென அறிய விரும்புகிறோம்" என்றனர்.

21 ஏத்தென்ஸ் நகரத்தாரும் அங்கு வாழும் அந்நியர்களும் புதுப்புதுச் செய்திகளைச் சொல்வதிலும் கேட்பதிலும் மட்டுமே காலம் கழித்து வந்தனர்.

22 சின்னப்பர் அரையொபாகு மன்ற நடுவில் எழுந்து நின்று, "ஏத்தென்ஸ் நகரப்பெருமக்களே, நீங்கள் எவ்வகையிலும் மிக்க மதப்பற்றுள்ளவர்கள் என்று தெரிகிறது.

23 நீங்கள் வழிபடுபவற்றைச் சுற்றிப்பார்த்து" வருகையில் ' நாம் அறியாத தெய்வத்திற்கு ' என்று எழுதியிருந்த பீடம் ஒன்றையும் கண்டேன். சரி, யாரென்று அறியாமலே நீங்கள் வழிபடும் தெய்வத்தையே உங்களுக்கு நான் அறிவிக்கப்போகிறேன்.

24 உலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள், விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவராம் அவர், மனிதனின் கையால் உருவான கோயில்களில் வாழ்வதில்லை.

25 அனைத்திற்கும் மூச்சு, உயிர் எல்லாமே அளிக்கும் அவர், மக்களின் கையால் பணிவிடை பெறுவது தமக்கு ஏதோ தேவைப்படுவதாலன்று.

26 ஒரே மூலத்திலிருந்து மனுக்குலம் முழுவதையும் உண்டுபண்ணி, அதை மாநிலத்தில் வாழச் செய்தார். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலப் பகுதிகளையும், அவர்கள் குடியிருக்கவேண்டிய எல்லைகளையும் அவர்களுக்கு வரையறுத்துக் கொடுத்தார்.

27 அவர்கள் தம்மைத் தேடவேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்தார். இருட்டில் தடவித்தேடுவது போலாவது ஒருவேளை அவர்கள் தம்மைத் தேடிக் கண்பிடிக்கக் கூடுமென்றே இங்ஙனம் கடவுள் செய்தார். ஏனெனில், அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார்.

28 ' நாம் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் அவரிலேதான். ' உங்கள் புலவர்களில் ஒருவர் கூறுவதுபோல், நாமும் அவரினமே.

29 நாம் கடவுளின் இனத்தவராதலால், பொன், வெள்ளி, கல் இவற்றைக் கொண்டு மனிதனின் கலைத்திறனும் அறிவும் அமைத்த வேலைப்பாட்டிற்குத் தெய்வீகம் ஒப்பானதென்று எண்ணலாகாது.

30 மக்கள் அறியாமையால் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்ததைக் கடவுள் பொருட்படுத்தாமல், இப்போது உலகெங்கும் எல்லாரும் மனந்திரும்பவேண்டும் என மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறார்.

31 ஏனெனில், அவர் ஒரு நாளைக் குறித்துள்ளார். அந்நாளில் தாம் நியமித்த மனிதனைக்கொண்டு ' உலகை நீதியோடு தீர்ப்பிடுவார். இதை அனைவருக்கும் எண்பிக்க, இறந்தோரிடமிருந்து அவரை உயிர்ப்பித்தார்" என்றார்.

32 இறந்தோரின் உயிர்ப்பு என்று கேட்டதும் சிலர் ஏளனம் செய்தனர். வேறு சிலரோ, இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும் கேட்போம் என்றனர்.

33 இத்துடன் சின்னப்பர் மன்றத்தை விட்டு வெளியே சென்றார்.

34 ஒரு சிலர் விசுவாசங்கொண்டு அவருடன் சேர்ந்துகொண்டனர். அவர்களில் அரையொப்பாகு சங்கத்தின் உறுப்பினராகிய தியொனீசியூஸ் ஒருவர். மற்றும் தாமரி என்பவளும், வேறு சிலரும் இருந்தனர்.

அதிகாரம் 18

1 அதன்பின் சின்னப்பர் ஏத்தென்ஸ் நகரைவிட்டுக் கொரிந்துவுக்கு வந்தார்.

2 அங்கு பொந்த்து நாட்டைச் சேர்ந்த ஆக்கிலா என்ற யூதன் ஒருவனையும், அவனுடைய மனைவி பிரிஸ்கிலாவையும் கண்டார். கிலவுதியு பேரரசன் யூதர் எல்லாரையும் உரோமையினின்று வெளியேறக் கட்டளையிட்டதால், அவர்கள் அண்மையில்தான் இத்தாலியாவிலிருந்து வந்திருந்தார்கள். சின்னப்பர் அவர்கள் வீட்டுக்குச் சென்றார்.

3 அவர்கள் கூடாரம் செய்பவர்கள். சின்னப்பரும் அதே தொழிலைச் செய்பவராதலால் அவர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார்.

4 ஓய்வு நாள்தோறும் செபக்கூடத்தில் விவாதித்து யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் விசுவாசமூட்ட முயன்றார்.

5 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்த பின்னர், சின்னப்பர், தேவ வார்த்தையைப் போதிப்பதில் கண்ணும் கருத்துமாயிருந்தார். ' இயேசுதான் மெசியா ' என்று யூதர்களிடம் வலியுறுத்திக் கூறுவார்.

6 ஆனால் அவர்கள் அதை எதிர்த்துப் பழித்தபோது, அவர் தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, ' உங்கள் குற்றத்தின் விளைவு உங்கள் தலைமேல் விழட்டும். அது என் குற்றமில்லை.

7 இனி, நான் புற இனத்தாரிடம் போகிறேன்" என்றார். அவ்விடத்தை விட்டுவிட்டு, யூத மறையைத் தழுவிய தித்தியுயுஸ்து என்பவரின் வீட்டுக்குப் போனார். அவ்வீடு செபக்கூடத்தை அடுத்திருந்தது.

8 அந்தச் செபக்கூடத்தலைவன் கிறிஸ்பு, தன் குடும்பத்தார் அனைவருடன் ஆண்டவரில் விசுவாசம் கொண்டான். சின்னப்பர் கூறியதைக் கேட்ட கொரிந்தியர் பலரும் விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றனர்.

9 ஓரிரவு ஆண்டவர் சின்னப்பருக்குக் காட்சியில் தோன்றி, "அஞ்சாதே, போதித்துக் கொண்டேயிரு, நிறுத்திவிடாதே, நான் உன்னோடிருக்கிறேன்.

10 உனக்குத் தீங்கிழைக்க எவனும் எதிர்த்தெழமாட்டான். இந்நகரில் எனக்குரிய மக்கள் பலர் உள்ளனர்" என்றார்.

11 எனவே, சின்னப்பர் தேவவார்த்தையை மக்களுக்குப் போதித்துக்கொண்டு ஓராண்டு ஆறுமாதம் அங்கே தங்கியிருந்தார். நீதி மன்றத்தில் சின்னப்பர்

12 ஆனால் கல்லியோன் என்பவன் அகாயாப் பகுதியில் ஆளுநனாக இருக்கையில், யூதர்கள் சின்னப்பருக்கு எதிராக ஒருமிக்க எழுந்து,

13 "சட்டத்துக்கு முரணான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களை இவன் தூண்டிவிடுகிறான்" என்று அவரை நீதிமன்றத்திற்கு இழுத்துவந்தனர்.

14 சின்னப்பர் பேச வாயெடுக்குமுன், கல்லியோன் யூதர்களைப் பார்த்து, "யூதர்களே, இதில் ஏதாவது அநீதியோ, அக்கிரமமோ இருந்திருக்குமானால், நான் முறைப்படி விசாரித்திருப்பேன்.

15 ஆனால், இதெல்லாம் வெறும் சொற்களையும் பெயர்களையும் உங்கள் சட்டத்தையும் பற்றிய பூசல்தான். ஆதலின் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நடுவனாயிருக்க எனக்கு விருப்பமில்லை" என்று சொல்லி,

16 அவர்களை நீதிமன்றத்திலிருந்து துரத்திவிட்டான்.

17 அவர்கள் அனைவரும் செபக்கூடத் தலைவனான சொஸ்தேனேயைப் பிடித்து மன்றத்திற்கு எதிரே அடித்தனர். ஆனால், கல்லியோன் இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

18 சின்னப்பர் இன்னும் பல நாட்கள் கொரிந்து நகரில் தங்கினார். பின்பு, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு சீரிய நாட்டுக்குக் கப்பல் ஏறினார். பிரிஸ்கிலாவும் ஆக்கிலாவும் அவருடன் சென்றனர். தாம் செய்திருந்த பொருத்தனையின்படி, கெங்கிரைத் துறையில் அவர் முடிவெட்டிக்கொண்டார்.

19 எபேசு நகரை அடைந்ததும் அவர்களை அங்குவிட்டுப் பிரிந்து, செபக்கூடத்திற்குப் போய் யூதர்களுடன் விவாதித்தார்.

20 இன்னும் சிறிதுகாலம் தங்களுடன் தங்கவேண்டுமென்று அவர்கள் அவரை வேண்டினர். ஆனால் அதற்கு அவர் இணங்காமல் "கடவுளுக்கு விருப்பமானால் மீண்டும் உங்களிடம் வருவேன்" என்று சொல்லி, விடைபெற்று, எபேசு நகரிலிருந்து புறப்பட்டார்.

21 அவர் செசரியாவில் இறங்கி யெருசலேமுக்குச் சென்றார்.

22 அங்குள்ள சபையினரைப் பார்த்துவிட்டு அந்தியோகியா திரும்பினார்.

23 அந்நகரில் சிறிது காலம் தங்கிய பின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிசியா ஆகிய நாடுகளெங்கும் சுற்றி, சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார்.

24 அலெக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ என்ற யூதர் ஒருவர் எபேசுக்கு வந்திருந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர். மறைநூல் வல்லுநர்.

25 ஆண்டவரது அருள்நெறியைக் கற்றறிந்த ஆர்வமிக்க உள்ளத்துடன் இயேசுவைப் பற்றிய செய்திகளைப் பிழையறப் போதித்து வந்தார். ஆனால், அருளப்பரின் ஞானஸ்நானம் மட்டுமே அவருக்குத் தெரிந்திருந்தது.

26 அவர் செபக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கிலாவும் ஆக்கிலாவும் அவரைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு போய், கடவுளின் அருள்நெறியை அவருக்குத் திட்டவட்டமாய் விளக்கினர்.

27 அவர் அகாயாவிற்குப் போகவிரும்பவே, சகோதரர் அவரை ஊக்குவித்து, வரவேற்கும்படி சீடர்களுக்கு எழுதினர். அவர் அங்குச் சேர்ந்தபொழுது விசுவாசத்தின் அருளைப் பெற்றவர்களுக்குப் பெரிதும் உதவியாய் இருந்தார்.

28 இயேசுவை மெசியா என்று மறைநூலின் வாயிலாக எண்பித்து யூதர்களோடு எல்லாருக்குமுன் வன்மையாய் வாதாடி அவர்களுடைய தவற்றை, எடுத்துக்காட்டினார்.

அதிகாரம் 19

1 அப்பொல்லோ கொரிந்திலிருக்கும்பொழுது, சின்னப்பர் மலைப்பாங்கான நாட்டைக் கடந்து எபேசுக்கு வந்தார்.

2 அங்குச் சீடர் சிலரைக் கண்டு, "நீங்கள் விசுவாசத்தைத் தழுவியபொழுது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டீர்களா? என்று கேட்டார்கள். அவர்கள், "பரிசுத்த ஆவி இருக்கிறார் என்று கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே" என்றனர்.

3 அதற்கு அவர், "அப்படியானால் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?" என, "அருளப்பரின் ஞானஸ்நானம்" என்றனர்.

4 சின்னப்பர் அப்பொழுது, "அருளப்பர் கொடுத்தது மனந்திரும்பியதைக் காட்டும் ஞானஸ்நானம். அதைக் கொடுத்தபோது, தமக்குப்பின் வருபவர் மீது விசுவாசம்கொள்ள வேண்டுமென மக்களுக்குச் சொன்னார்: அவர் அப்படிக் குறிப்பிட்டது இயேசுவைத்தான்" என்றார்.

5 அதைக் கேட்டு அவர்கள் ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் ஞானஸ்நானம் பெற்றனர்.

6 சின்னப்பர் அவர்கள் மேல் கைகளை விரித்ததும், பரிசுத்த ஆவி அவர்கள் மேல் இறங்கினார். அப்பொழுது அவர்கள் பல மொழிகளைப் பேசவும் இறைவாக்கு உரைக்கவும் தொடங்கினர்.

7 அவர்கள் ஏறக்குறைய பன்னிரண்டு பேர்.

8 பின், அவர் செபக்கூடத்திற்குச் சொன்னார். அங்கு மூன்று மாதமளவும் கடவுளின் அரசைப்பற்றி மக்களிடம் துணிவுடன் பேசி அவர்களோடு வாதித்துத் தாம் சொல்வது உண்மையென ஏற்கச் செய்தார்.

9 சிலர் பிடிவாதத்தினால், விசுவசியாமல் எல்லாருக்குமுன் இப்புது நெறியை இகழ்ந்து பேசியபொழுது, அவர் தம் சீடர்களை அழைத்துக்கொண்டு அவர்களை விட்டு விலகினார். திரன்னு என்பவனின் கல்விக் கூடத்தில் நாள்தோறும் போதித்து வந்தார்.

10 இவ்வாறு ஈராண்டுகள் நடைபெற்றது. அதனால் ஆசியாவில் வாழ்ந்த யூதர், கிரேக்கர் எல்லாருமே ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டனர்.

11 சின்னப்பரின் கையால் கடவுள் அரிய பெரிய புதுமைகள் செய்தார்.

12 அவரது உடலில் பட்ட கைக்குட்டை, துண்டு ஏதாவது நோயாளிகளின் மேல் வைத்தாலே போதும், நோய்கள் நீங்கும், பொல்லாத ஆவிகள் போய்விடும்.

13 இப்படியிருக்க ஊர்களில் திரிந்து பேயோட்டும் யூதர் சிலரும், பொல்லாத ஆவியால் பீடிக்கப்பட்டவர்கள் மேல் ஆண்டவராகிய இயேசுவின் பெயரைப் பயன்படுத்தப் பார்த்து, "சின்னப்பர் அறிவிக்கும் இயேசுவின் பெயரால் உங்களுக்கு ஆணையிடுகிறேன்" என்றனர்.

14 இவ்வாறு செய்தவர்களுள் ஸ்கேவா என்னும் யூதத் தலைமைக் குரு ஒருவனின் ஏழு மக்களும் இருந்தனர்.

15 ஆனால், பொல்லாத ஆவி அதற்கு மறுமொழியாக, "இயேசுவை அறிவேன்; சின்னப்பரையும் எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் யார்?" என்று கேட்டது.

16 பொல்லாத ஆவியால் பீடிக்கப்பட்டவன் அவர்கள் மேல் பாய்ந்து அவர்களை அமுக்கித் திணறடிக்கவே அவர்கள் காயமுற்றவராய், ஆடையிழந்து அவ்வீட்டைவிட்டு ஓடிப் போனார்கள்.

17 இது எபேசில் வாழ்ந்த யூதர், கிரேக்கர் எல்லாருக்கும் தெரிய வந்தது. அவர்கள் அனைவரையும் அச்சம் ஆட்கொண்டது. ஆண்டவராகிய இயேசுவின் பெயர் புகழ்பெற்றது.

18 விசுவசித்தவர்களுள் பலர் தாங்களும் செய்துவந்த செய்வினைகளை ஒப்புக்கொண்டு அவற்றை வெளிப்படுத்தினர்.

19 மாயவித்தைக் காரர்களுள் பலர் தங்கள் நூற்களைக் கொண்டு வந்து எல்லார் முன்னிலையிலும் அவற்றை எரித்தனர். அவற்றின் விலையைக் கணக்கிட்டதில் ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசு எனத் தெரிந்தது.

20 இங்ஙனம், ஆண்டவரது வார்த்தை ஆற்றல் வாய்ந்ததாய்ப் பரவி வன்மை கொண்டு விளங்கிற்று.

21 இதற்குப்பின் சின்னப்பர் மக்கெதோனியா, அகாயா வழியாக யெருசலேமுக்குப் போகத்திட்டமிட்டார். அங்கே சென்றபின் உரோமைக்கும் போகவேண்டும் என்பது அவருடைய கருத்து.

22 ஆதலால் தமக்குத் துணைவராயிருந்த தீமோத்தேயு, எரஸ்து என்னும் இருவரையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டார். அவரோ, சிறிது காலம் ஆசியாவில் தங்கினார்.

23 அக்காலத்தில் கிறிஸ்துவ நெறியைக் குறித்துப் பெருங்கலகம் ஏற்பட்டது.

24 தெமேத்திரியு என்னும் பொற்கொல்லன் ஒருவன் இருந்தான். அவன் வெள்ளியினால் தியானா தேவதையின் கோயிலைப் போன்ற சிறு படிவங்கள் செய்வான். அதனால் கம்மியர்களுக்குக் கிடைத்த வருவாய் சிறிதன்று.

25 இத்தொழிலையும், இதுபோன்ற வேறு தொழில் செய்பவர்களையும் ஒன்றுகூட்டி, "தோழர்களே, இத்தொழில் நமக்கு வளமான வாழ்வு அளிக்கிறது என்பது நீங்கள் அறிந்ததே.

26 ஆனால், ' இந்தச் சின்னப்பன் வந்து, ' கையால் செய்யப்பட்ட தெய்வங்கள் தெய்வங்களே அல்ல ' என எபேசு நகரில் மட்டுமன்று, ஏறக்குறைய ஆசியா முழுவதுமே பிரச்சாரம் செய்து, பெருந்திரளான மக்களின் மனத்தை மயக்குகிறான். இதை நீங்கள் பார்க்கவில்லையா? இது உங்கள் செவிக்கு எட்டவில்லையா? இதனால் நமக்கு ஆபத்துத்தான்.

27 நமது தொழில் மதிப்பற்றுப் போவது மட்டுமன்று, மாபெரும் தேவதை தியானாவின் கோயில்கூட தன் பெயரை இழந்துவிடும். அதுமட்டுமா, ஆசியா முழுவதும், ஏன், உலகமெங்குமே வணக்கத்தைப் பெறும் நம் தேவதையின் மாண்பு மங்கிப்போகுமே" என்றான்.

28 இதைக் கேட்டு அவர்கள் வெகுண்டெழுந்து, "எபேசியரின் மாபெரும் தியானா வாழ்க!" என்று கத்தினார்கள்.

29 நகரெங்கும் ஒரே குழப்பம். சின்னப்பரின் வழித்துணைவர்களாகிய காயு, அரிஸ்தர்க்கு என்னும் மக்கெதோனியரைப் பிடித்திழுத்துக்கொண்டு, எல்லாரும் ஒருமிக்க நாடகத் திடலை நோக்கி ஓடினர்.

30 சின்னப்பர் பொதுமக்களின் அவையினுள் செல்ல விரும்பினார். ஆனால், சீடர்கள் அவரைத் தடுத்தார்கள்.

31 ஆசிய நாட்டு அதிகாரிகள் சிலர் அவருடைய நண்பராயிருந்தமையால் அவரிடம் ஆள் அனுப்பி, நாடகத்திடலில் நுழைய வேண்டாமெனக் கேட்டுக்கொண்டனர்.

32 சபையில் குழப்பம் ஏற்பட்டிருந்ததால் பலர் பலவிதமாகக் கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். எதற்காகக் கூடினோம் என்பதே பெரும்பாலோருக்குத் தெரியவில்லை.

33 யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னுக்குத்தள்ள, கூட்டத்தில் சிலர் அவனை மக்கள் எதிரில் வரச் செய்தனர். அலெக்சந்தர் சைகை காட்டி, மக்களுக்கு நியாயம் எடுத்துச்சொல்ல விரும்பினான்.

34 ஆனால், அவன் யூதன் என மக்கள் அறிந்ததும், ' எபேசியரின் மாபெரும் தியானா வாழ்க!" என்று அனைவரும் ஒரே குரலாய் முழங்கினர். இம்முழக்கம் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடித்தது.

35 அவைத் தலைவன் மக்களை அமைதிப்படுத்தி, "எபேசியப் பெருமக்களே, தியானாவின் கோயிலும், வானிலிருந்து வந்த சிலையும் எபேசியரது நகரின் பாதுகாப்பில் இருக்கின்றனவென்று அறியாதவரும் உளரோ?

36 இதை எவரும் மறுக்க முடியாது. எனவே, அமைதியாக இருங்கள். பதற்றங்கொண்டு ஒன்றும் செய்துவிடாதீர்கள்.

37 நீங்கள் இழுத்துக்கொண்டு வந்திருக்கும் இவர்கள் தெய்வங்களை இழிவுபடுத்துவோரும் அல்லர்; நம் தேவதையைத் தூற்றுவோரும் அல்லர்.

38 தெமேத்திரியுவுக்கும், அவனுடைய உடன் தொழிலாளருக்கும் எவன்மீதாவது வழக்குண்டென்றால் நீதி வழங்கக் குறித்த நாட்கள் உண்டு; ஆளுநரும் உள்ளனர்; போய் முறையிட்டுக் கொள்ளட்டும்.

39 வேறு எதைப்பற்றியாகிலும் கேள்வியிருந்தால், சட்டப்படி கூடுகின்ற சபையில் அதைத் தீர்த்துக்கொள்ளலாம். இன்று நிகழ்ந்ததைப் பார்த்தால் நாம் கலகம் விளைவித்ததாகக் குற்றச்சாட்டு நம்மேல் விழக்கூடும்.

40 ஏனெனில், இந்தக் கிளர்ச்சிக்கு எக்காரணமுமில்லை. இதற்குக் காரணம் காட்டவும் நம்மால் இயலாது"

41 என்று சொல்லிக் கூட்டத்தைக் கலைத்துவிட்டான்.

அதிகாரம் 20

1 கலகம் அடங்கிய பின், சின்னப்பர் சீடர்களை வரச்சொல்லி, அவர்களுக்கு அறிவுரை கூறி, விடை பெற்றுக்கொண்டு மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டார்.

2 அந்நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று, ஆங்காங்குள்ளோர்க்கு அறிவுரைகள் பல கூறினார். பிறகு கிரேக்க நாட்டை அடைந்து,

3 அங்கு மூன்று மாதங்கள் தங்கினார். சீரியாவுக்குக் கப்பலேற இருக்கையில் அவருக்கு எதிராக யூதர்கள் சதி செய்தனர். ஆகவே, அவர் மக்கெதோனியா வழியாகத் திரும்பத் தீர்மானித்தார்.

4 பெரோயா நகரத்துப் பிருவின் மகன் சோபத்தர், தெசலோனிக்கரான அரிஸ்தார்க்கு, செக்குந்து, தெர்பை நகரத்தானாகிய காயு, தீமோத்தேயு, ஆசியா நாட்டைச் சேர்ந்த தீகிக்கு, துரோப்பீமு ஆகியோர் அவருக்கு வழித்துணையாய்ச் சென்றனர்.

5 இவர்கள் முன்னே சென்று துரோவாவில் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

6 நாங்களோ புளியாத அப்பத் திருநாட்களுக்குப்பின் பிலிப்பிலிருந்து கப்பல் ஏறினோம். ஐந்து நாளில் துரோவாவில் அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம். அங்கு ஏழு நாள் தங்கினோம்.

7 வாரத்தின் முதல் நாளில் அப்பத்தைப் பிட்குதற்காக நாங்கள் கூடியிருந்தோம். மறுநாள் சின்னப்பர் ஊரை விட்டுப் போகவேண்டியிருந்தது. அங்கிருந்தவர்களுடன் உரையாடத் தொடங்கி நள்ளிரவுவரை பேசிக்கொண்டே போனார்.

8 நாங்கள் கூடியிருந்த மாடியறையில் விளக்குகள் பல இருந்தன.

9 ஐத்திகு என்ற இளைஞன் ஒருவன் சன்னலின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தான். சின்னப்பர் பேசப் பேச ஆழ்ந்த தூக்கம் அவனை ஆட்கொண்டது. தூக்க மயக்கத்தால் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தான். அவனைத் தூக்கி எடுத்த போது பிணமாகக் கிடந்தான்.

10 சின்னப்பர் இறங்கிவந்து, அவன் மேல் குனிந்து, அவனை அணைத்து, "புலம்பலை நிறுத்துங்கள். உயிர் அவனுக்குள் இருக்கின்றது" என்றார்.

11 மீண்டும் மாடிக்குச் சென்று, அப்பத்தைப் பிட்டு உண்டபின், விடியும்வரை நெடுநேரம் உரையாடிவிட்டுப் புறப்பட்டார்.

12 உயிர்பெற்ற அப்பையனை அழைத்துச் சென்றனர். அதனால் அவர்கள் மிக்க ஆறுதல் அடைந்தனர்.

13 நாங்கள் கப்பல் ஏறி, சின்னப்பருக்கு முன்னதாகவே அஸ்ஸோ ஊருக்குச் சென்றோம். அங்கிருந்து தம்மைக் கப்பலில் ஏற்றிச்செல்ல வேண்டுமென்று அவர் ஏற்பாடு செய்திருந்தார். அவ்வூர்வரைக்கும் தரை வழியாக நடந்து போக விரும்பினார்.

14 அஸ்ஸோ ஊரில் அவர் எங்களோடு சேர்ந்து கொண்டபின் அவரை ஏற்றிக்கொண்டு மித்திலேனே நகருக்குப் போனோம்.

15 அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் கீயு தீவுப் பக்கமாகச் சென்றோம். மூன்றாம் நாள் சாமு தீவை அடைந்து அதற்கடுத்த நாள் மிலேத்துத் துறைமுகத்தை அடைந்தோம்.

16 ஆசியாவில் தாமதம் ஏற்படாதபடி சின்னப்பர் எபேசுக்குப் போகாமலே செல்லத் தீர்மானித்திருந்தார். கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகையன்று யெருசலேமில் இருக்க வேண்டுமெனத் துரிதமாய்ச் சென்றார்.

17 மிலேத்திலிருந்து எபேசுக்கு ஆள் அனுப்பிச் சபையின் மூப்பர்களை வரவழைத்தார்.

18 அவர்கள் வந்தபின் அவர் அவர்களிடம் பேசிய மொழிகள் இவை: "நான் ஆசியாவிற்கு வந்த நாள்முதல் எப்போதும் உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.

19 கண்ணீர் சிந்தும் அளவுக்கு, யூதர்களின் சூழ்ச்சியினால் எனக்கு ஏற்பட்ட இன்னல்கள் பலவற்றிடையே ஆண்டவருக்கு மிக்க தாழ்மையுடன் ஊழியம் செய்தேன்.

20 நன்மை தரும் யாவற்றையும் உங்களுக்கு அறிவிக்க நான் பின்வாங்கவில்லை; வீடு வீடாகவும் போய்ப் போதித்தேன்.

21 ' மக்கள் கடவுள் பக்கம் மனந்திரும்ப வேண்டும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் கொள்ளவேண்டும் ' என யூதருக்கும் கிரேக்கருக்கும் வற்புறுத்திக் கூறினேன். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததே.

22 ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டவனாய், இதோ! நான் இப்போது யெருசலேமுக்குச் செல்லுகிறேன். அங்கு எனக்கு என்னென்ன நேருமோ, நான் அறியேன்.

23 சங்கிலிகளும் வேதனைகளும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று நான் செல்லும் ஊர்தோறும் பரிசுத்த ஆவி எனக்கு உறுதி கூறுவது மட்டுமே அறிவேன்.

24 ஆனால், நான் என் உயிரை ஒரு பொருட்டாய்க் கணிக்கவில்லை. அதைப் பெரிதென மதிக்கவில்லை. கடவுளுடைய அருளைப்பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவராகிய இயேசு என்னிடம் ஒப்படைத்த பணியை நிறைவேற்றி, என் வாழ்க்கைப் பயணத்தை முடிப்பேனாகில் அதுவே போதும்.

25 "உங்களிடையே பழகி இறையரசைப்பற்றிய செய்தியைப் போதித்து வந்தேன். இனிமேல், அந்தோ! உங்களுள் ஒருவனும் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை என்று எனக்குத் தெரியும்.

26 கடவுளின் திட்டம் முழுவதையும் உங்களுக்கு அறிவிக்க நான் பின்வாங்கவில்லை.

27 ஆகவே, நான் இன்று உங்களுக்குக் கூறும் ஒரு வார்த்தை: யாருடைய அழிவுக்கும் நான் குற்றவாளியல்ல.

28 "எனவே, உங்களைப்பற்றி விழிப்பாயிருங்கள்; மந்தை முழுவதைக் குறித்தும் விழிப்பாயிருங்கள். ஏனெனில், கடவுள் தமது இரத்தத்தினால் சொந்தமாக்கிக் கொண்ட தம் திருச்சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களை அம்மந்தைக்கு மேற்பார்வையாளராக ஏற்படுத்தியுள்ளார்.

29 நான் சென்றபின் கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே நுழையும். அவை மந்தையைத் தாக்காமல் விடா என்பதை அறிவேன்.

30 உங்களிடமிருந்தே சிலர் தோன்றி, சீடர்களையும் தம்மிடம் கவர்ந்து கொள்ளுமளவுக்கு உண்மையைத் திரித்துக்கூறுவர்.

31 எனவே, விழிப்பாயிருங்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக அல்லும் பகலும் அயராமல் நான் உங்கள் ஒவ்வொருவர்க்கும் கண்ணீரோடு அறிவுரை கூறிவந்தேன் என்பதை நினைவில் வையுங்கள்.

32 இப்பொழுது உங்களைக் கடவுளுக்கும், அவருடைய அருள் வார்த்தைக்கும் ஒப்படைக்கிறேன். அவ்வார்த்தை உங்களுக்கு முழு வளர்ச்சியையும், அர்ச்சிக்கப்பட்டவர் அனைவரோடு பங்கையும் அளிக்கவல்லது.

33 "ஒருவருடைய பொன்னையோ வெள்ளியையோ ஆடையையோ நான் விரும்பவில்லை.

34 என்னுடைய தேவைகளுக்காகவும், என்னோடு இருப்பவர்கள் தேவைகளுக்காகவும் இந்தக் கைகளே உழைத்தன என்பது உங்களுக்கே தெரியும்.

35 இவ்வாறு பாடுபட்டு உழைத்து பலவீனரைத் தாங்க வேண்டுமென்று பலவகையில் காட்டினேன். ' பெறுவதினும் தருவதே இன்பம் ' என்று ஆண்டவராகிய இயேசு சொன்னதை நினைவில் வைத்தல் வேண்டும்."

36 இப்படிச் சொன்ன பின், எல்லாரோடும் முழங்கால் படியிட்டுச் செபித்தார்.

37 அப்போது எல்லாரும் சின்னப்பரைக் கட்டி அணைத்து முத்தமிட்டுப் பெரிதும் புலம்பி அழலாயினர்.

38 இனி நீங்கள் என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று அவர் சொன்னதுதான் அவர்களுக்கு மிக்க துயரம் வருவித்தது. அப்படியே கப்பல்வரைச் சென்று அவரை வழியனுப்பினர்.

அதிகாரம் 21

1 அவர்களிடமிருந்து பிரிந்து கப்பலேறி, நேர் வழியாக, கோஸ் தீவிற்கும், மறுநாள் ரோது தீவிற்கும் சென்றோம். அங்கிருந்து புறப்பட்டு பத்தாரா துறைமுகத்தை அடைந்தோம்.

2 அங்கே பெனிக்கியா நாட்டுக்குச் செல்லும் கப்பலொன்றைக் கண்டு அதில் ஏறிப் பயணமானோம்.

3 வழியில் சைப்ரஸ் தீவு தென்பட்டது. அங்கே போகாமல் அதன் தென்புறமாக சீரியா நாட்டை நோக்கி பயணத்தைத் தொடர்ந்து தீர் துறைமுகத்தை அடைந்தோம்; அங்கே கப்பலின் சரக்கை இறக்கவேண்டியிருந்தது.

4 அங்கே சீடர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஏழுநாள் தங்கினோம். அவர்கள் தேவ ஆவியினால் ஏவப்பட்டு யெருசலேமுக்குப் போகவேண்டாம் எனச் சின்னப்பருக்குக் கூறினார்கள்.

5 ஆயினும், அந்நாட்கள் கழிந்ததும் புறப்பட்டுப் போனோம். பெண்கள், குழந்தைகளோடு அனைவரும் எங்களைப் புறநகர்வரை வழியனுப்ப வந்தனர். கடற்கரையில் முழங்காலிட்டு வேண்டினோம்.

6 அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு கப்பல் ஏறினோம்; அவர்கள் வீடு திரும்பினார்கள்.

7 தீர் நகரிலிருந்து புறப்பட்டு பித்தெலெமயிஸ் துறைமுகம் வந்தடைந்து கடற்பயணத்தை முடித்தோம். அங்குச் சகோதரர்களைக் கண்டு நலம் உசாவி அவர்களுடன் ஒருநாள் தங்கி,

8 மறுநாள் புறப்பட்டு, செசரியாவுக்கு வந்தோம். நற்செய்திப் போதகர் பிலிப்புவின் வீட்டிற்குப் போனோம். அவர் திருப்பணியாளர் எழுவருள் ஒருவர்.

9 மணமாகாத நான்கு புதல்வியர் அவருக்கு இருந்தனர். அவர்கள் இறைவாக்குரைப்பவர்கள்.

10 பலநாள் அங்குத் தங்கினோம். அப்பொழுது இறைவாக்கினராகிய அகபு என்னும் ஒருவர் யூதேயாவிலிருந்து வந்தார்.

11 எங்களிடம் வந்தபோது, சின்னப்பரின் இடைக்கச்சையை எடுத்துத் தன் கால்களையும் கைகளையும் கட்டிக்கொண்டு, "பரிசுத்த ஆவி கூறுவதைக் கேளுங்கள்: இக்கச்சைக்குரியவனை யெருசலேமில் யூதர்கள் இதுபோலத்தான் கட்டுவார்கள். கட்டி, புறவினத்தாருக்குக் கையளிப்பார்கள்" என்றார்.

12 இதைக் கேட்டதும் நாங்களும் அங்கிருந்தவர்களும் சின்னப்பரை யெருசலேமுக்குப் போகவேண்டாம் என்று கெஞ்சிக் கேட்கலானோம்.

13 ஆனால், அவர், "நீங்கள் இப்படி அழுது என் உள்ளம் உடையச் செய்வானேன்? ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்காக யெருசலேமில் விலங்கிடப்படுவதற்குமட்டுமன்று இறப்பதற்கும் தயார்" என்றார்.

14 நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவர் ஏற்றுக்கொள்ளாததால் ஆண்டவர் திருவுளப்படியாகட்டும் என்று பேசாமலிருந்துவிட்டோம்.

15 அந்நாட்களுக்குப் பின், நாங்கள் பயண ஏற்பாடுகளைச் செய்து முடித்து யெருசலேமுக்குப் புறப்பட்டோம்.

16 செசரியாவிலிருந்து எங்களுடன் சீடர் சிலர் வந்தனர். சைப்ரஸ் தீவினனான மினாசோன் என்னும் பழைய சீடன் ஒருவனுடைய வீட்டில் தங்கும்படியாக எங்களை அழைத்துச் சென்றனர்.

17 நாங்கள் யெருசலேமை அடைந்தபொழுது சகோதரர்கள் எங்களை மகிழ்வுடன் வரவேற்றனர்.

18 மறுநாள், சின்னப்பர் யாகப்பரைக் காணச் சென்றார். நாங்களும் அவருடன் சென்றோம். அங்கே மூப்பர் எல்லாரும் கூடியிருந்தனர்.

19 சின்னப்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கூறித் தமது திருப்பணியின் வாயிலாகக் கடவுள் புறவினத்தாரிடையே செய்ததெல்லாம் ஒவ்வொன்றாக விவரிக்கத் தொடங்கினார்.

20 அதைக் கேட்ட அவர்கள் கடவுளை மகிமைப்படுத்தினார்கள். ஆயினும் அவரைப் பார்த்து, "சகோதரரே, யூதர்களில் எத்தனையோ ஆயிரம்பேர் விசுவாசிகளாயுள்ளது உமக்குத் தெரியுமல்லவா? அத்தனை பேரும் திருச்சட்டத்தின் மீது மிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.

21 இப்பொழுது உம்மைப்பற்றி ஒரு பேச்சு இவர்கள் செவிக்கு எட்டியுள்ளது. புறவினத்தாரிடையே வாழும் யூதர்கள் மோயீசனை விட்டுவிடும்படி நீர் போதிக்கிறீராமே. தம் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யவேண்டாம், பழைய முறைமைகளைப் பின்பற்ற வேண்டாம் என்கிறீராமே.

22 நீர் இங்கு வந்துள்ளதைப்பற்றி எப்படியும் கேள்விப்படுவர்.

23 இனி என்ன செய்வது? சரி, நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி செய்யும். பொருத்தனை செய்துகொண்ட நால்வர் இங்கே உள்ளனர்.

24 இவர்களை அழைத்துக்கொண்டுபோய், இவர்களோடு துப்புரவுச் சடங்கு செய்துகொள்ளும். இவர்கள் முடி வெட்டிக்கொள்ளும் சடங்கிற்காகச் செய்ய வேண்டிய செலவையெல்லாம் நீரே செய்யும். அதனால் உம்மைப்பற்றிக் கேள்விப்பட்டதில் உண்மை ஒன்றுமில்லை என்றும், நீரும் சட்டத்தைக் கடைப்பிடித்து நடப்பவரே என்றும் அனைவரும் அறிந்துகொள்வர்.

25 விசுவாசிகளான புறவினத்தாரைப் பற்றி நாங்கள் செய்த முடிவுகளாவன: சிலைகளுக்குப் படைத்தது, மிருக இரத்தம், மூச்சடைத்துச் செத்ததின் இறைச்சி இவற்றை உண்ணலாகாது. கெட்ட நடத்தையை விலக்க வேண்டும். இவற்றைக் குறித்து ஏற்கெனவே எழுதியுள்ளோம்" என்றனர்.

26 சின்னப்பர் அந்த நால்வரை அழைத்துக்கொண்டு போய், மறுநாள் அவர்களுடன் துப்புரவுச் சடங்கு செய்துகொண்டு கோயிலுக்குள் நுழைந்தார். துப்புரவு நாட்கள் எப்போது முடியும் என்று தெரிவித்து, அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் பலி செலுத்தவேண்டிய நாளையும் குறிப்பிட்டார்.

27 குறிப்பிட்ட அந்த ஏழு நாட்கள் நிறைவுறப் போகையில் ஆசியாவிலிருந்து வந்த யூதர்கள் அவரைக் கோயிலில் கண்டு, மக்கள் எல்லாரையும் தூண்டிவிட்டு,

28 "இஸ்ராயேல் மக்களே, ஓடிவாருங்கள். நம் மக்களுக்கும் திருச்சட்டத்திற்கும், இப்புனித இடத்திற்கும் எதிராக எங்கும், எல்லாருக்கும் போதிப்பவன் இவன்தான். அதுமட்டுமன்று, கிரேக்கர்களைக் கோயிலுக்குள் கூட்டி வந்து இப்பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தியுள்ளான்" என்று கத்திக்கொண்டே அவரைப் பிடித்தனர்.

29 ஏனெனில், எபேசியனாகிய துரோப்பீமு என்பவனை நகரில் சின்னப்பருடன் இருந்ததைக் கண்டிருந்தனர். அவர் அவனைக் கோயிலுக்குள் அழைத்துக்கொண்டு போயிருப்பார் என எண்ணினர்.

30 நகரெங்கும் குழப்பம் உண்டாயிற்று, நாலா பக்கத்திலிருந்தும் மக்கள் ஓடி வந்தனர். சின்னப்பரைப் பிடித்துக் கோயிலுக்கு வெளியே இழுத்து, கோயில் கதவுகளை அடைத்தனர்.

31 அவர்கள் அவரைக் கொல்வதற்குக் கிளர்ச்சி செய்கையில் யெருசலேம் முழுவதும் கலவரம் அடைந்துள்ளது என்ற செய்தி படைத் தலைவனுக்கு எட்டியது.

32 உடனே, அவன் போர்வீரர்களையும் நூற்றுவர் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு அங்கே ஓடி வந்தான். அவர்கள் படைத்தலைவனையும் போர்வீரர்களையும் கண்டதும் சின்னப்பரை அடிப்பதை நிறுத்தினார்கள்.

33 அப்பொழுது படைத்தலைவன் கூட்டத்தையணுகி அவரைப் பிடித்து, இரு சங்கிலிகளால் கட்டச் சொன்னான். அவன் யார்? அவன் செய்ததென்ன? என்றெல்லாம் விசாரித்தபோது

34 கூட்டத்திலிருந்தவர்கள் பலர் பலவிதமாகக் கூச்சலிட்டனர். குழப்ப மிகுதியினால் ஒன்றும் சரியாகப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆகவே, அவரைக் கோட்டைக்குள் கூட்டிச் செல்லுமாறு கட்டளையிட்டான்.

35 படியருகே வந்தபோது கூட்டம் கட்டு மீறி நெருக்கியதால் போர்வீரர்கள் அவரைத் தூக்கிக்கொண்டுபோக வேண்டியதாயிற்று.

36 ஏனெனில், மக்கள் திரள், "அவன் ஒழிக! ஒழிக!" என்று ஆர்ப்பரித்துக் கொண்டே பின்தொடர்ந்தது.

37 அவர்கள் அவரைக் கோட்டைக்குள் கொண்டுபோக இருக்கையில், சின்னப்பர் படைத் தலைவனிடம், "உம்மிடம் ஒன்று சொல்லட்டுமா?" என்றார். அவன், "உனக்குக் கிரேக்க மொழியும் தெரியுமா?

38 அப்படியானால், சிறிது காலத்துக்கு முன் ஒரு குழப்பத்தை உண்டாக்கி நாலாயிரம் கொள்ளைக் கூட்டத்தாரைப் பாலைவனத்திற்குக் கூட்டிச்சென்ற அந்த எகிப்தியன் அல்லையோ நீ?" என்றான்.

39 அதற்குச் சின்னப்பர், "நான் ஒரு யூதன். சிலிசியா நாட்டிலுள்ள தர்சு நகரைச் சார்ந்தவன். புகழிலே குறைவற்ற அந்நகரின் குடிமகன், மக்களிடம் பேச விடை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

40 படைத்தலைவன் விடைதந்தபின், சின்னப்பர் படிகளின்மேல் நின்றுகொண்டு, அமைதியாக இருக்கும்படி மக்களை நோக்கிச் சைகை காட்டினார். ஆழ்ந்த அமைதி உண்டாகவே, சின்னப்பர் எபிரேய மொழியில் பேசத் தொடங்கினார்.

அதிகாரம் 22

1 "சகோதரரே, தந்தையரே, நான் இப்பொழுது சொல்லப்போகும் நியாயத்திற்குச் செவி கொடுங்கள்" என்றார்.

2 அவர் எபிரேய மொழியில் பேசுவதைக் கேட்டதும், இன்னும் மிகுந்த அமைதி நிலவியது.

3 அப்பொழுது சின்னப்பர் தொடர்ந்து கூறியது: "நான் ஒரு யூதன். சிலிசியா நாட்டிலுள்ள தர்சு நகரத்திலே பிறந்தவன். ஆனால் இந்த யெருசலேமில்தான் வளர்ந்தேன். கமாலியேலின் பாதத்தண்டை அமர்ந்து, நம் முன்னோரின் சட்டத்தை மிக நுணுக்கமாகக் கற்றேன். இன்று நீங்கள் எல்லோரும் கடவுள்மேல் ஆர்வம் கொண்டுள்ளதுபோல நானும் கொண்டிருந்தேன்.

4 இப்புதிய நெறியைப் பூண்டோடு ஒழித்து விடுவதென்று, அதைச் சார்ந்தவர்களைத் துன்புறுத்தினேன். ஆண்களையும் பெண்களையும் கைது செய்து சிறையிலடைத்தேன்.

5 இதற்குத் தலைமைக் குருவும் மூப்பர் சபையும்கூட சாட்சி. இவர்களிடமிருந்து தமஸ்கு நகர்ச் சகோதரர்களுக்குக் கடிதம் பெற்றுக்கொண்டு அந்நகருக்குப் புறப்பட்டேன். அங்குள்ள கிறிஸ்தவர்களைக் கைதுசெய்து தண்டிக்கும்படி யெருசலேமுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டேன்.

6 "அப்படிப் பயணமாகி நான் தமஸ்கை நெருங்குகையில், நண்பகல் நேரத்தில், திடீரென வானினின்று தோன்றிய பேரொளி என்னைச் சூழ்ந்துகொண்டது,

7 நானோ, தரையில் விழுந்தேன். ' சவுலே, சவுலே, நீ என்னைத் துன்புறுத்துவதேன்?" என்ற குரலைக் கேட்டேன்.

8 அதற்கு நான், ஆண்டவரே, நீர் யார்? ' என்றேன். ஆண்டவர், ' நீ துன்புறுத்தும் நாசரேத்தூர் இயேசுதான் நான் ' என்றார்.

9 என்னோடு இருந்தவர்கள் ஒளியை மட்டும் கண்டார்கள். ஆனால் என்னோடு பேசியவரின் குரலைக் கேட்கவில்லை.

10 பின்னும் நான், ' ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்? ' என்று கேட்டேன். அதற்கு ஆண்டவர், ' எழுந்து தமஸ்கு நகருக்குச் செல். நீ செய்யவேண்டியவை அனைத்தும் உனக்கு அங்கே தெரிவிக்கப்படும் ' என்றார்.

11 ஒளியின் மிகுதியால் நான் பார்க்கமுடியாமல் போயிற்று. ஆதலின், என்னோடு இருந்தவர்கள் என் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல, தமஸ்கு வந்து சேர்ந்தேன்.

12 "அந்நகரில் அனனியா என்னும் ஒருவர் இருந்தார். அவர் திருச்சட்டத்தின்படி பக்தியாய் ஒழுகியவர். அவ்வூரில் வாழ்ந்த யூதர்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவர்.

13 அவர் என்னிடம் வந்து, "சகோதரர் சவுலே, பார்வை பெறுக" என்றார். அந்நேரமே நான் பார்வை பெற்று அவரைப் பார்த்தேன்.

14 அப்பொழுது அவர், "தம் திருவுளத்தை அறியவும், நீதிமானைக் காணவும், அவருடைய வார்த்தைகளைக் கேட்கவும் நம் முன்னோரின் கடவுள் உம்மை ஏற்படுத்தியுள்ளார்.

15 ஏனெனில், நீர் கண்டவை கேட்டவை அனைத்தையும் குறித்து எல்லா மக்கள் முன்னிலையிலும் அவருக்குச் சாட்சியாக இருக்கவேண்டும்.

16 இனித் தாமதமேன்? எழுந்து அவருடைய பெயரைச் சொல்லி, மன்றாடி, ஞானஸ்நானம் பெற்று உம் பாவக்கறைகளைப் போக்கிக்கொள்ளும்" என்றார்.

17 "யெருசலேமுக்குத் திரும்பி வந்தபின், ஒருநாள் கோயிலில் செபிக்கையில் நான் பரவசமானேன்.

18 ஆண்டவர் தோன்றி, ' தாமதியாமல் யெருசலேமை விட்டு விரைவாகப் புறப்படு. ஏனெனில் என்னைப்பற்றி நீ அளிக்கும் சாட்சியத்தை இந்நகரத்தார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ' என்றார்.

19 அதற்கு நான், ஆண்டவரே, உம்மீது விசுவாசம் கொள்பவர்களைச் சிறைப்படுத்தினேன். செபக்கூடந்தோறும் சென்று அவர்களைச் சாட்டையால் அடித்தேன்.

20 உம் சாட்சியான முடியப்பரின் இரத்தம் சிந்தப்பட்டபோது, நானும் அதற்கு உடன்பட்டு அங்கேயிருந்தேன். அவரைக் கொலை செய்தவர்களின் மேலாடைகளுக்குக் காவலாயிருந்தேன். இதெல்லாம் அவர்களுக்குத் தெரியுமே ' என்றேன்.

21 அவரோ என்னிடம், ' புறப்படு, ஏனெனில் தொலைவிலுள்ள புறவினத்தாரிடம் உன்னை அனுப்பப்போகிறேன் ' என்றார்."

22 இதுவரைக்கும் அவர்கள் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு "ஒழியட்டும் இந்தப் பயல். இவன் உயிரோடு இருக்கவே தகுதியற்றவன்" என்று உரக்கக் கூவினர்.

23 இவ்வாறு கத்திக்கொண்டே தங்கள் மேலாடைகளைக் தூக்கி வீசி, புழுதியை வாரி இறைத்தனர்.

24 மக்கள் இவ்வாறு அவருக்கு எதிராகக் கத்துவதன் காரணத்தைப் படைத்தலைவன் அறிய விரும்பி, அவரைக் கோட்டைக்குள் கொண்டுபோய்ச் சாட்டைகளால் அடித்து விசாரிக்க கட்டளையிட்டான்.

25 அவர்கள் அவரை வார்களால் அடிப்பதற்குக் கட்டியபொழுது சின்னப்பர் தமது அருகில் நின்ற நூற்றுவர் தலைவனிடம், "உரோமைக் குடிமகன் ஒருவனைச் சாட்டையால் அடிக்க உங்களுக்கு உரிமையுண்டோ? அதுவும் தண்டனைத் தீர்ப்பிடாமலே" என்றார்.

26 அதைக் கேட்ட நூற்றுவர் தலைவன் படைத்தலைவனிடம் சென்று சின்னப்பர் கூறியதைத் தெரிவித்து, "என்ன செய்கிறீர்கள்? இவன் உரோமைக் குடிமகனாயிற்றே?" என்றான்.

27 படைத் தலைவன் சின்னப்பரிடம் வந்து, "நீ உரோமைக் குடிமகனா? சொல்" என்றான். அதற்கு அவர், "ஆம், நான் உரோமைக் குடிமகன்தான்" என்றார்.

28 அதற்குப் படைத்தலைவன், "நான் பெருந்தொகை கொடுத்தன்றோ இக்குடி உரிமையைப் பெற்றேன்" என, சின்னப்பர், "எனக்கோ இது பிறப்புரிமை" என்றார்.

29 உடனே, அவரை விசாரிக்க இருந்தவர்கள் அவரை விட்டு அகன்றனர். படைத் தலைவனோ, தான் விலங்கிட்டவன் உரோமைக் குடிமகன் என அறிந்ததும் அச்சமுற்றான்.

30 யூதர்கள் அவர்மேல் சாட்டிய குற்றம் யாது என்பதைப் படைத்தலைவன் சரியாகத் தெரிந்துகொள்ள விரும்பி, மறுநாள் அவரை விடுதலை செய்து, தலைமைக் குருக்களையும் தலைமைச் சங்கத்தார் அனைவரையும் கூடும்படி கட்டளையிட்டான். பின்னர், சின்னப்பரைக் கொண்டுவந்து அவர்கள் முன்னிலையில் நிறுத்தினான்.

அதிகாரம் 23

1 சின்னப்பர் தலைமைச் சங்கத்தாரை நோக்கி, "சகோதரரே, நான் இந்நாள்வரை கடவுள் முன்னிலையில், யாவற்றிலும் என் மனச்சான்றின்படி நேர்மையாக வாழ்ந்து வந்தேன்" என்றார்.

2 அப்பொழுது, தலைமைக்குரு அனனியா அவரை வாயில் அறையும்படி அருகில் நின்றவர்களைப் பார்த்துச் சொன்னார்.

3 சின்னப்பர் அவரிடம், "வெள்ளையடித்த சுவரே, கடவுளே உன்னை அடிப்பார்; சட்டத்தின்படி எனக்குத் தீர்ப்பிட அமர்ந்திருக்கும் நீ, சட்டத்திற்கு முரணாக, என்னை அடிக்கச் சொல்லுகின்றாயே" என்றார்.

4 அருகில் நின்றவர்கள், "கடவுளுடைய தலைமைக் குருவையே பழித்துரைக்கின்றாயே" என்றார்கள்.

5 அதற்குச் சின்னப்பர், "சகோதரர்களே, இவர் தலைமைக் குரு என்று எனக்குத் தெரியாதே! ' மக்களின் தலைவரை இழித்துரைக்காதே ' என எழுதியுள்ளது அன்றோ? என்றார்.

6 அச்சங்கத்தில் ஒருசாரார் சதுசேயர், மற்றொரு சாரார் பரிசேயர் என்பதை அறிந்திருந்த சின்னப்பர் அவர்களைப் பார்த்து, "சகோதரர்களே, நான் ஒரு பரிசேயன், பரிசேயரின் வழித்தோற்றலே. இறந்தோர் உயிர்த்தெழுவர் என்ற என் நம்பிக்கையைக் குறித்துத் தீர்ப்புக்குள்ளாயிருக்கிறேன்" என்று உரக்கக் கத்தினார்.

7 அவர் இப்படிச் சொன்னதும், பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாயிற்று.

8 சபையும் இரண்டுபட்டது. ஏனெனில், சதுசேயர் உயிர்த்தெழுதலோ வானதூதரோ ஆவியோ உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. பரிசேயரோ, இவையெல்லாம் உண்டென்று ஒப்புக்கொள்வர். எனவே, பேரிரைச்சல் எழுந்தது.

9 அப்பொழுது பரிசேயர் கட்சியைக் சார்ந்த மறைநூல் அறிஞர் சிலர் எழுந்து இவனிடத்தில் ஒரு தவற்றையும் காணோம்; ஓர் ஆவியோ, ஒரு வான தூதரோ இவனோடு பேசியிருந்தாலென்ன?" என்று வாதாடினர்.

10 இப்படி வாக்குவாதம் முற்றவே, சின்னப்பரைக் கண்டதுண்டமாக்கிவிடுவார்களோ எனப் படைத்தலைவன் அஞ்சி, படை வீரர்களை அனுப்பி அவரைக் கூட்டத்தின் நடுவிலிருந்து கோட்டைக்குக் கொண்டுபோகக் கட்டளையிட்டான்.

11 அன்றிரவு ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "தைரியமாயிரு, என்னைக் குறித்து நீ யெருசலேமில் சாட்சியம் தந்ததுபோல், உரோமையிலும் சாட்சியம் தரவேண்டும்" என்றார்.

12 பொழுது புலர்ந்தபின், யூதர்கள் ஒன்றுகூடி, சின்னப்பரைக் கொன்றுபோடாமல் உண்பதில்லை, குடிப்பதில்லை என்று சூளுரைத்துச் சதி செய்தனர்.

13 இச் சதியில் சேர்ந்தவர்கள் நாற்பது பேருக்கு மேலிருக்கும்.

14 அவர்கள், தலைமைக் குருக்கள், மூப்பர்களிடம் சென்று, "நாங்கள் சின்னப்பரைக் கொன்றுபோடாமல் உணவுகொள்வதில்லை எனச் சபதமிட்டுச் சூளுரைத்துள்ளோம்.

15 எனவே, நீங்கள் தலைமைச் சங்கத்தாரோடு சேர்ந்து அவனைக் குறித்து இன்னும் திட்டவட்டமாய் அறிய மனதுள்ளவர்கள்போல் நடித்து, அவனை உங்களிடம் கூட்டி வரும்படி படைத் தலைவனுக்குச் சொல்லுங்கள். அவன் வந்து சேருமுன், அவனைக் கொன்றுபோட நாங்கள் தயாராயிருக்கிறோம்" என்றனர்.

16 இப்படி, சின்னப்பருக்கு எதிராகச் செய்த சூழ்ச்சிபற்றிய செய்தி, அவருடைய சகோதரியின் மகனுக்கு எட்டியது. அவன் கோட்டைக்குப் போய், உள்ளே நுழைந்து சின்னப்பரிடம் இதைத் தெரிவித்தான்.

17 சின்னப்பர், நூற்றுவர் தலைவன் ஒருவனை அழைத்து, "இவ்விளைஞனைப் படைத்தலைவரிடம் கூட்டிச் செல்லும். இவன் அவரிடம் ஒரு செய்தி சொல்லவேண்டுமாம்" என்றார்.

18 அவ்வாறே அவன் அவனைப் படைத்தலைவனிடம் அழைத்துச்சென்று, "சின்னப்பன் என்னும் கைதி என்னைக் கூப்பிட்டு இவ்விளைஞனை உம்மிடம் கொண்டுபோகும்படி கேட்டுக்கொண்டான். இவன் உம்மிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டியதிருக்கிறதாம்" என்றான்.

19 படைத்தலைவன் இளைஞனின் கையைப் பிடித்துத் தனியே அழைத்துக் கொண்டுபோய், "நீ என்னிடம் என்ன தெரிவிக்கவேண்டும்?" என்று கேட்டான்.

20 அதற்கு அவன், "யூதர்கள் ஒன்றுகூடி ஒரு தீர்மானம் செய்திருக்கிறார்கள். அதன்படி, சின்னப்பரைக் குறித்து இன்னும் திட்டவட்டமாய் அறிய மனதுள்ளவர்கள் போல் நடித்து அவரைத் தலைமைச் சங்கத்திற்கு நாளைய தினம் கூட்டிக்கொண்டு வரும்படி உம்மைக் கேட்பார்கள்.

21 ஆனால், நீர் அவர்களை நம்பவேண்டாம். ஏனெனில், அவர்களில் நாற்பது பேருக்குமேல் அவரைத் தாக்கக் காத்திருக்கிறார்கள். அவரைக் கொன்று போடாமல் உண்பதில்லை, குடிப்பதில்லை எனச் சூளுரைத்துள்ளனர். யூதர்களின் வேண்டுகோளுக்கு நீர் இணங்குவீர் என எதிர்பார்த்து இவர்கள் தயாராயிருக்கிறார்கள்" என்றான்.

22 தனக்கு இதை அறிவித்ததாக யாருக்கும் சொல்ல வேண்டாமெனப் படைத்தலைவன் இளைஞனுக்குக் கட்டளையிட்டு அனுப்பிவிட்டான்.

23 பின்பு அவன் நூற்றுவர் தலைவர் இருவரை அழைத்து, "இருநூறு காலாட்படைவீரரும், எழுபது குதிரை வீரரும், இருநூறு வேல் வீரரும் இரவு ஒன்பது மணிக்குச் செசரியா நகருக்குப் புறப்படத் தயார் செய்யுங்கள். குதிரைகளையும் ஏற்பாடு செய்யுங்கள்.

24 சின்னப்பரைக் குதிரைமேல் ஏற்றி ஆளுநர் பெலிக்சிடம் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கவேண்டும்" என்றான்.

25 பின்வருமாறு ஒரு கடிதமும் எழுதிக் கொடுத்தான்:

26 ' மாட்சிமை மிக்க ஆளுநர் பெலிக்சுக்கு, கில்வுதியுலீசியா வாழ்த்துக் கூறிவரைவது:

27 நான் அனுப்பும் இந்த ஆளை யூதர்கள் பிடித்துக் கொல்ல இருந்தனர். இவன் உரோமைக் குடிமகன் என அறிந்ததும், நான் படைவீரர்களுடன் சென்று இவனை விடுவித்தேன்.

28 இவன் மேல் அவர்கள் சாட்டிய குற்றம் என்னவென்று திட்டமாய் அறியவிரும்பி அவர்களுடைய தலைமைச் சங்கத்திற்கு இவனை அழைத்துச் சென்றேன்.

29 சாவுக்கோ, சிறைத் தண்டனைக்கோ உரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. அவர்களுடைய சட்டத்துக்கடுத்த சிக்கல்கள் பற்றி ஏதோ குற்றம் சாட்டப்பட்டான்.

30 மேலும், இவனுக்கெதிராகச் செய்யப்பட்ட சதியைக் குறித்து எனக்குச் செய்தி கிடைத்தது. எனவே, இவனை உம்மிடம் உடனே அனுப்பியுள்ளேன். இவனைக் குற்றம் சாட்டுகிறவர்கள் இவன்மேல் தங்களுக்குள்ள முறைப்பாடுகளை எல்லாம் உம்முன் எடுத்துரைக்கலாம் என அவர்களுக்கு அறிவித்திருக்கிறேன்."

31 ஆகவே, தங்களுக்கிட்ட கட்டளையின்படி படைவீரர் இரவிலே அந்திப்பத்திரி ஊர் வரைக்கும் சின்னப்பரை அழைத்துக்கொண்டு சென்றனர்.

32 மறுநாள் குதிரை வீரரை அவரோடு அனுப்பிவிட்டு, மற்றவர்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள்.

33 குதிரை வீரர்கள் செசரியா நகர் அடைந்ததும் ஆளுநனிடம் கடிதத்தைக் கொடுத்துச் சின்னப்பரை அவனிடம் ஒப்படைத்தனர்.

34 அவன் அதைப்படித்த பின்பு "இவன் எந்த மாகாணத்தைச் சார்ந்தவன்?" எனக்கேட்டான். சிலிசியாவைச் சார்ந்தவன் என அறிந்து,

35 ' உன்மேல் குற்றம் சாட்டுகிறவர்கள் வந்தபின் உன்னை விசாரிக்கிறேன்" என்று சொல்லி, ஏரோதனின் அரண்மனையில் அவரைக் காவலில் வைக்கும்படி கட்டளையிட்டான்.

அதிகாரம் 24

1 ஐந்து நாளைக்குப்பின், தலைமைக் குரு அனனியா மூப்பர் சிலரோடும், தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்கறிஞனோடும் செசரியாவுக்கு வந்தார். அவர்கள் ஆளுநனிடம் சின்னப்பருக்கு எதிராக முறையிட்டார்கள்.

2 சின்னப்பரை அங்குக் கொண்டுவந்து நிறுத்தியதும், தெர்த்துல்லு அவர்மேல் இவ்வாறு குற்றம் சாட்டத் தொடங்கினான்: "மாட்சிமை மிக்க பெலிக்ஸ் அவர்களே, நாடெங்கும் பேரமைதி நிலவுவது உம்மாலே, எங்கும் எத்துறையிலும் இந்நாடு சீரடைந்து ஓங்குவது உமது பராமரிப்பினாலே, இதைமிகுந்த நன்றியோடு ஏற்றுக்கொள்கிறோம்.

3 இனியும், தங்கள் நேரத்தைப் போக்காமல்,

4 நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை உமக்கே உரித்தான கருணையோடு கேட்கக் கோருகின்றோம்..

5 இவன் ஒரு பெரும் தொல்லை. யூதர்களிடையே உலகெங்கும் கலகம் மூட்டுகிறவன்.

6 நசரேயருடைய கட்சியில் ஒரு தலைவன் எனக் கண்டோம்.

7 கோயிலைக்கூட இவன் மாசுபடுத்த முயன்றான்.

8 ஆகவே, நாங்கள் இவனைப் பிடித்தோம். இவனை விசாரித்தால் நாங்கள் சாட்டுகிற எல்லாக் குற்றங்களையும் நீரே திட்டமாய் அறியக்கூடும்" என்றான்.

9 யூதர்களும் அவனோடு சேர்ந்துகொண்டு, ' இவை யாவும் உண்மைதான் ' என்றார்கள்.

10 அப்போது, சின்னப்பர் பேசும்படி ஆளுநன் சைகை காட்டவே, அவர் கூறியது: "நீர் பல்லாண்டுகளாக இந்நாட்டில் நடுவராயிருக்கின்றீரென அறிவேன். ஆதலால், துணிவோடு என் வழக்கைக் கூறுகிறேன்.

11 நான் இறைவனை வழிபடுவதற்கு யெருசலேம்சென்று இன்னும் பன்னிரண்டு நாட்களுக்கு மேல் ஆகவில்லை. நீர் இதை விசாரித்து அறிந்து கொள்ளலாம்.

12 கோயிலிலாவது செபக்கூடங்களிலாவது, நகரத்தின் எந்த மூலையிலாவது நான் யாரோடாவது வாதாடியதையோ, மக்களிடையே கலகமூட்டியதையோ, யாருமே கண்டதில்லை.

13 இப்போது என்மேல் இவர்கள் சாட்டுகிற குற்றங்களை எண்பிக்க முடியாது.

14 "ஆயினும், ஒன்றை மட்டும் ஏற்றுக்கொள்கிறேன். இவர்கள் மதக் கட்சி என்று அழைக்கும் புது நெறியைப் பின்பற்றி, நான் எங்கள் முன்னோர்களின் கடவுளை வழிபட்டு வருகிறேன். திருச்சட்டத்திலும் இறைவாக்கு நூல்களிலும் உள்ள யாவற்றையும் விசுவசிக்கிறேன்.

15 நீதிமான்களும் அநீதரும் உயிர்த்தெழுவர் என்று இவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பது போலவே, நானும் கடவுளின்மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

16 இங்ஙனம், நான் கடவுளுக்கும் மனிதருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியோடு நடக்க முயன்று வருகிறேன்.

17 "பல ஆண்டுகளுக்குப்பின், நான் என் இனத்தாருக்குப் பணஉதவி செய்யவும், கோயிலில் காணிக்கை செலுத்தவும் வந்தேன்.

18 காணிக்கை செலுத்தும் போதுதான் என்னைக் கோயிலில் கண்டார்கள். அப்போது நான் தூய்மையாக்கப்பட்ட நிலையில் இருந்தேன். எந்தக் கூட்டத்திலும் எந்தக் கலகத்திலும் நான் சேரவில்லை.

19 ஆனால் ஆசியாவிலிருந்து வந்த யூதர்கள் சிலர் அங்கு இருந்தனர். எனக்கு எதிராக ஏதாவது இருந்திருந்தால் அவர்களல்லவா உம்மிடம் வந்து குற்றம் சாட்டியிருக்க வேண்டும்.

20 அல்லது இங்கு இருப்பவர்களாவது, நான் தலைமைச் சங்கத்தார் முன் நின்றபோது என்னிடம் கண்ட குற்றத்தைக் கூறட்டும்.

21 அவர்கள் நடுவில் நின்று ' இறந்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து உங்கள்முன் நான் இன்று தீர்ப்புக்குள்ளாயிருக்கிறேன் ' என்று வெளிப்படையாகச் சொன்னது தவிர, வேறு என்ன குற்றம் கண்டார்கள்?"

22 ஆனால், கிறிஸ்துவ நெறியைப்பற்றி நன்கறிந்திருந்த பெலிக்ஸ், "படைத்தலைவர் லீசியா வந்தபின் உங்கள் வழக்கை விசாரித்து முடிவு செய்வேன்" என விசாரணையை ஒத்திவைத்தான்.

23 சின்னப்பரைக் காவலில் வைக்க நுற்றுவர் தலைவனுக்குக் கட்டளையிட்டான். ஆனால், கடுங்காவல் வேண்டாமென்றும், அவரைச் சார்ந்தவர்கள் பணிவிடை புரிவதைத் தடுக்க வேண்டாமென்றும் கூறினான்.

24 சில நாட்களுக்குப்பின் பெலிக்ஸ், யூதப் பெண்ணான தன் மனைவி துருசில்லாளோடு சிறைக்கு வந்து சின்னப்பரை அழைப்பித்தான். கிறிஸ்து இயேசுவின்மேல் கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள விசுவாசத்தைக் குறித்து அவர் பேச, அவன் கேட்கலானான்.

25 ஆனால் நீதி, கற்பு, வரவிருக்கும் தீர்வை முதலியவை பற்றி அவர் எடுத்துரைத்தபோது பெலிக்ஸ் அச்சமுற்று, "இன்றைக்குப் பேசியதுபோதும், நீ போகலாம், சமயம் வாய்க்கும்போது மீண்டும் உன்னை அழைப்பேன்" என்றான்.

26 ஆனால் சின்னப்பர் தனக்குப் பணம் கொடுப்பார் என பெலிக்ஸ் எதிர்பார்த்ததால், அவரை அடிக்கடி அழைப்பித்து அவரோடு உரையாடி வந்தான்.

27 ஈராண்டுகள் கழித்து, பெலிக்சுக்குப் பின் பொர்க்கியு பெஸ்து ஆளுநன் பதவியேற்றான். பெலிக்ஸ் யூதர்களுக்குத் தயவு காட்ட விரும்பி, சின்னப்பரைச் சிறையிலேயே விட்டுச் சென்றான்.

அதிகாரம் 25

1 பெஸ்து பதவியேற்ற மூன்று நாட்களுக்குப் பின் செசரியாவிலிருந்து யெருசலேம் சென்றான்.

2 தலைமைக் குருக்களும் யூத முதல்வர்களும் பெஸ்துவிடம் சின்னப்பருக்கு எதிராக முறையிட்டனர்.

3 சின்னப்பருக்கு விரோதமான முறையில் தங்களுக்குத் தயவுகாட்டி அவரை யெருசலேமுக்கு அனுப்பி வைக்க மன்றாடினர். ஏனெனில், அவரை வழியில் கொன்றுபோடச் சூழ்ச்சி செய்திருந்தனர்.

4 அதற்கு பெஸ்து, "சின்னப்பன் செசரியாவிலேயே காவலில் இருக்கட்டும். நாம் விரைவில் அங்குப் போவோம்.

5 அவன்மேல் தவறு ஏதாவது இருப்பின், உங்கள் தலைவர்கள் என்னோடு வந்து குற்றம் சாட்டட்டும்" என்றான்.

6 அவன் யெருசலேமில் எட்டு அல்லது பத்து நாட்களுக்குமேல் தங்கவில்லை, அதன்பின் செசரியா திரும்பினான். மறுநாள் நீதி இருக்கைமீது அமர்ந்து சின்னப்பரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.

7 அவர் வந்தவுடன் யெருசலேமிலிருந்து வந்திருந்த யூதர்கள் அவரைச் சூழ்ந்து நின்று தங்களால் எண்பிக்க முடியாத பல பெருங் குற்றங்களை அவர்மேல் சாட்டத் தொடங்கினார்கள்.

8 அக்குற்றங்களை மறுத்துச் சின்னப்பர், "நான் யூதருடைய சட்டத்திற்கோ கோயிலுக்கோ செசாருக்கோ எதிராக ஒரு குற்றமும் செய்யவில்லை" என்று மறுத்துக் கூறினார்.

9 பெஸ்து யூதர்களுக்குத் தயவு காட்ட விரும்பிச் சின்னப்பரிடம், "நீ யெருசலேமுக்குப் போய் அங்கே என் முன் இவைபற்றி விசாரிக்கப்பட இசைவாயா?" என்று கேட்டான்.

10 சின்னப்பர் மறுமொழியாக, "செசாருடைய நீதி இருக்கையின்முன் நிற்கிறேன். இங்கேயே எனக்குத் தீர்ப்புக் கிடைக்க வேண்டும். யூதர்களுக்கு நான் எத்தீங்கும் செய்யவில்லை. உமக்கும் இது நன்றாகத் தெரியும்.

11 நான் குற்றவாளியாயிருந்து சாவுத் தண்டனைக்குரிய குற்றம் ஏதாவது செய்திருந்தால் சாவதற்குப் பின் வாங்கமாட்டேன். ஆனால், இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்களில் எதுவும் உண்மையன்றெனில், என்னை இவர்களுக்குத் தானமாக அளித்துவிட யாருக்கும் உரிமையில்லை. இவ்வழக்கு செசாரின் மன்றத்திற்கே செல்லவேண்டும்" என்றார்.

12 அப்போது பெஸ்து தன் மன்றத்தாரோடு கலந்து பேசி, "இவ்வழக்கு செசாருடைய மன்றத்திற்குச் செல்லவேண்டுமென்றா சொன்னாய்? செசாரிடமே செல்க" என்றான்.

13 சிலநாள் சென்ற பிறகு அகிரிப்பா அரசனும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டு கொள்ள செசரியாவுக்கு வந்தனர்.

14 அவர்கள் அங்குச் சில நாள் தங்கியிருக்கவே, பெஸ்து சின்னப்பரைப் பற்றிய செய்தியெல்லாம் அரசனிடம் சொன்னான். அவன் சொன்னது: "பெலிக்ஸ் காவலில் விட்டுப்போன கைதி ஒருவனிருக்கிறான்.

15 நான் யெருசலேமுக்குப் போயிருந்தபோது, தலைமைக் குருக்களும் யூத மூப்பர்களும் அவனுக்கெதிராகத் தீர்ப்பிட வேண்டினர்.

16 நான் அதற்கு மறுமொழியாக, ' குற்றஞ் சாட்டப்பட்டவன் குற்றஞ் சாட்டியவர்களுக்கு எதிரே நின்று மறுப்புக்கூற வாய்ப்பளிக்காமல், அவனை அவர்களுக்குத் தானம்போல் அளித்துவிடுவது உரோமையருக்கு முறையன்று ' எனக் கூறினேன்.

17 ஆகவே, அவர்கள் என்னோடு இங்கு வந்தபோது காலந்தாழ்த்தாது, மறுநாளே நான் நீதி இருக்கையில் அமர்ந்து அந்த ஆளை அழைத்துவரச் சொன்னேன்.

18 ஆனால், குற்றம் சாட்டினவர்கள் அவனுக்கு எதிராகப் பேச எழுந்த போது நான் எதிர்பார்த்த குற்றங்களில் எதையும் அவன்மேல் சுமத்தவில்லை.

19 அவன்மேல் சொன்னதெல்லாம் ஏதோ தங்கள் மதத்தைப்பற்றிய பூசலாகத்தான் இருந்தது. இயேசு என்னும் ஒருவனைப் பற்றிக்கூட தர்க்கம் நடந்தது. இறந்துபோயிருந்த அந்த இயேசு உயிரோடிருப்பதாகச் சின்னப்பன் சாதித்துக்கொண்டிருந்தான்.

20 நான் இதெல்லாம் எப்படி விசாரிப்பது என்று தெரியாமல் தயங்கியவனாய், ' நீ யெருசலேமுக்குச் சென்று அங்கு இதைப்பற்றி விசாரிப்பதற்கு இசைவாயா ? ' என்று அவனைக் கேட்டேன்.

21 அதற்குச் சின்னப்பன், மாட்சிமை மிக்க மன்னரது தீர்ப்புக்கெனத் தன் வழக்கை ஒதுக்கி வைக்கும்படி கேட்டுக்கொண்டான். ஆகவே, செசாரிடம் அனுப்பும்வரை அவனைக் காவலில் வைக்க நான் கட்டளையிட்டேன்."

22 அப்போது அகிரிப்பா, "அவன் பேசுவதை நானும் கேட்க விரும்புகிறேன்" என்று பெஸ்துவிடம் சொன்னான். அதற்கு அவன், "நாளைக்கு நீர் கேட்கலாம்" என்றான்.

23 மறுநாள் அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்தோடு வந்து, படைத்தலைவர்களோடும் நகரத்துப் பெருங்குடி மக்களோடும் அவைக்கூடத்தினுள் நுழைந்தனர். பெஸ்துவின் கட்டளைப்படி சின்னப்பர் அழைத்து வரப்பட்டார்.

24 அப்பொழுது பெஸ்து, "அகிரிப்பா மன்னர் அவர்களே, எம்மோடு ஈண்டு குழுமியிருக்கும் பெருமக்களே, இதோ! உங்கள் முன்நிற்கும் இவனுக்கு எதிராக யெருசலேமிலும் இங்கும் யூதமக்கள் என்னிடம் விண்ணப்பம் செய்து கொண்டனர். இவனை இனி உயிரோடு விட்டுவைக்கக் கூடாதெனக் கூக்குரலிடுகின்றனர்.

25 சாவுத் தண்டனைக்குரியதெதுவும் இவன் செய்யவில்லையெனக் கண்டேன். இவனோ, இவ்வழக்கு ' மாட்சிமிக்க மன்னருடைய மன்றத்திற்கே செல்லவேண்டும் ' என்றான். ஆகவே இவனை அங்கே அனுப்பத் தீர்மானித்தேன்.

26 ஆனால், மன்னர் பெருமானுக்கு இவனைப்பற்றித் திட்டவட்டமாக எழுத ஒன்றுமில்லை. ஆகவே, உங்கள் அனைவர் முன்னிலையிலும், சிறப்பாக அகிரிப்பா மன்னர் அவர்களே, உம் முன்னிலையிலும் இவனை விசாரித்த பின்பு, எழுத ஏதாகிலும் கிடைக்கலாமென எதிர்பார்த்து, அவனை இங்கே அழைத்துவரச் செய்தேன்.

27 ஏனெனில், ஒருவன் மேல் சாட்டப்பட்ட குற்றங்களைக் குறிப்பிடாமல் கைதி ஒருவனை அனுப்புவது அறிவீனம் என எனக்குத் தோன்றுகிறது" என்றான்.

அதிகாரம் 26

1 அகிரிப்பா சின்னப்பரிடம், "இப்போது நீ உன் வழக்கை எடுத்துரைக்கலாம்" என்று சொல்ல, சின்னப்பர் கையுயர்த்தி, தன் நியாயத்தை எடுத்துச்சொல்லத் தொடங்கிக் கூறியதாவது:

2 "அகிரிப்பா மன்னர் அவர்களே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்களைக் குறித்து, தங்கள் முன்னிலையில் இன்று நான் மறுப்புக் கூறுவது எனக்குக் கிடைத்ததோர் அரிய வாய்ப்பெனக் கருதுகிறேன்.

3 ஏனெனில், யூதரின் ஒழுக்க முறைமைகளையும் சிக்கல்களையும் நீர் நன்கு அறிந்தவர். எனவே, நான் சொல்லுவதைப் பொறுமையோடு கேட்கும்படி வேண்டுகிறேன்.

4 "என் இளமை முதல் என் இனத்தாரிடை யெருசலேமிலே நான் எங்ஙனம் வாழ்ந்து வந்தேன் என்பது யூதர்கள் அனைவரும் அறிந்ததே.

5 நீண்ட காலமாகவே என்னை அவர்கள் அறிவார்கள். நம் மதத்திலுள்ள மிகக் கண்டிப்பான பிரிவினரின் முறைப்படி நான் ஒரு பரிசேயனாக வாழ்ந்தேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும். மனமிருந்தால், இதற்கு அவர்களே சான்று கூறலாம்.

6 நம் முன்னோருக்குக் கடவுள் அருளிய வாக்குறுதியில் நான் நம்பிக்கை வைப்பதால் தான் இப்போது தீர்ப்புக்குள்ளாயிருக்கிறேன்.

7 நம்முடைய பன்னிரு குலத்தினரும் அல்லும் பகலும் இடைவிடாது, இறைவனை வழிபட்டு, இந்த வாக்குறுதி நிறைவேறுமென்று நம்பியிருக்கின்றனர். அரசே, இந்த நம்பிக்கையின் பொருட்டு தான் யூதர்கள் என்மேல் குற்றம் சாட்டுகின்றனர்.

8 இறந்தோரைக் கடவுள் எழுப்புவது நம்பக்கூடாததொன்றென நீங்கள் எண்ணுவதேன்?

9 "நானோவெனில் நாசரேத்தூர் இயேசுவின் பெயரை மும்முரமாக எதிர்ப்பது என் கடமையெனக் கருதியிருந்தேன். அவ்வாறே யெருசலேமில் எதிர்க்கவும் செய்தேன்.

10 தலைமைக் குருவிடம் அதிகாரம் பெற்று இறை மக்கள் பலரை நானே சிறையிலடைத்தேன். அவர்களைக் கொல்லுவதற்கு நான் என் வாக்குரிமை அளித்தேன்.

11 செபக்கூடந்தோறும் சென்று பன்முறை அவர்களைத் தண்டனைக்கு ஆளாக்கினேன். அவர்கள் தேவதூஷணம் சொல்லும்படி வலுவந்தம் செய்தேன். எனது கோபவெறியில் வெளியூர்களுக்கும் போய் அவர்களைத் துன்புறுத்தினேன்.

12 "இப்படியிருக்க, தலைமைக் குருக்களிடம் அதிகாரமும் ஆணையும் பெற்று, ஒருநாள் தமஸ்கு நகருக்குச் சென்று கொண்டிருந்தேன்.

13 அப்போது, அரசே, வழியில் நண்பகலில் கதிரோனைவிட மிகுதியாய்ச் சுடர்வீசிய ஓர் ஒளியைக் கண்டேன். வானிலிருந்து தோன்றிய அது என்னையும் என்னோடு வந்தவர்களையும் சூழ்ந்து கொண்டது.

14 எல்லோரும் தரையில் விழுந்தோம். அப்போது, ' சவுலே, சவுலே, நீ என்னைத் துன்புறுத்துவதேன்? தாற்றுக்கோலை உதைப்பது உனக்குத்தான் துன்பம் ' என ஒரு குரல் எபிரேய மொழியில் சொல்லக் கேட்டேன்.

15 நானோ, ' ஆண்டவரே, நீர் யார்? ' என்றேன். அதற்கு ஆண்டவர், ' நீ துன்புறுத்தும் இயேசு தான் நான். எழுந்து நிமிர்ந்து நில்.

16 என் ஊழியனாகவும் சாட்சியாகவும் உன்னை ஏற்படுத்தவே உனக்குத் தோன்றினேன். நீ இப்பொழுது என்னைக் கண்ட இக்காட்சியைக் குறித்தும், இனி உனக்குத் தோன்றி காண்பிக்கப்போகும் காட்சிகளைக் குறித்தும் நீ சாட்சியம் பகர வேண்டும்.

17 உன் மக்களினின்றும் புறவினத்தாரினின்றும் உன்னை விடுவிப்பேன். இப்புறவினத்தாரிடமே உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களுடைய கண்களைத் திறப்பாய்.

18 அவர்கள் இருளை விட்டு ஒளிக்கு வந்து பேயின் அதிகாரத்திலிருந்து கடவுள் பக்கம் திரும்பச் செய்வாய். இவ்வாறு அவர்கள் என்னில் கொள்ளும் விசுவாசத்தால் பாவமன்னிப்புப் பெற்று, அர்ச்சிக்கப்பட்டவர்களோடு பங்கு அடைவார்கள் ' என்றார்.

19 ஆகையால் அகிரிப்பா மன்னர் அவர்களே, நான் அந்த வானகக் காட்சிக்குக் கீழ்ப்படியாமல் போகவில்லை.

20 "முதலில் தமஸ்கு மக்களிடமும், அடுத்து யெருசலேமிலும், யூதேயா நாடெங்கும் உள்ளவர்களிடமும், பின் புறவினத்தாரிடமும் போய் அவர்கள் மனம்மாறிக் கடவுளிடம் திரும்பவும், மனந்திரும்பியவர்களுக்கேற்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமென அறிவித்தேன்.

21 இதற்காகத்தான் கோயிலில் யூதர்கள் என்னைப் பிடித்துக் கொல்ல முயன்றார்கள்.

22 ஆனால், நானோ கடவுளின் உதவி பெற்று, சிறியோர், பெரியோர் யாவர்க்கும் இன்றுவரை சாட்சியம் கூறுபவனாயுள்ளேன்.

23 இதன்படி மெசியா பாடுபடுவாரென்றும், இறந்தோரினின்று முதலானவராய் உயிர்த்தெழுந்து, தம்மினத்தாருக்கும் புறவினத்தாருக்கும் ஒளியை அளிப்பாரென்றும், இறைவாக்கினர்களும், மோயீசனும் முன்னறிவித்ததையன்றி வேறொன்றையும் நான் கூறுவதில்லை."

24 இவ்வாறாகச் சின்னப்பர் தன் நியாயத்தை எடுத்துச் சொல்லுகையில் பெஸ்து உரத்த குரலில்: "சின்னப்பா, என்ன உளறுகிறாய்! உன்னுடைய மிகுந்த படிப்பு உன் மூளையைக் குழப்பிவிட்டது போலும்!" என்றான்.

25 அதற்குச் சின்னப்பர், "மாட்சிமை மிக்க பெஸ்து அவர்களே, நான் உளறவில்லை; தெளிந்த அறிவோடுதான் பேசுகிறேன். நான் சொல்லுவதெல்லாம் உண்மையே.

26 மேற்சொன்னதை அரசரும் அறிவார். எனவே, அவருக்கு முன்பாகத் துணிவுடன் பேசுகிறேன். இதில் எதையாவது அவர் அறியாமல் இருப்பாரென நான் நினைக்கவில்லை. ஏனெனில், இதெல்லாம் ஒரு மூலையில் நடந்ததன்று.

27 அகிரிப்பா அரசே, நீர் இறைவாக்குகளை நம்புகிறீரா? நம்புகிறீரென்று அறிவேன்" என்றார்.

28 அதைக்கேட்ட அகிரிப்பா சின்னப்பரிடம், "நீ சொல்வதை நம்பச் செய்து, சிறிது நேரத்திற்குள்ளே என்னைக் கிறிஸ்தவனாக்கி விடுவாய்போலிருக்கிறதே" என்றான்.

29 அதற்குச் சின்னப்பர், "சிறிது நேரமோ, அதிக நேரமோ, நீர் மட்டுமல்ல, நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எல்லாரும் என்னைப்போல் ஆகும்படி கடவுள் அருள் புரிவாராக. ஆனால், இந்த விலங்குகள் மட்டும் உங்களுக்கு வேண்டாம்" என்றார்.

30 பின்பு அரசனும் ஆளுநனும் பெர்னீக்கேயாளும் அவர்களோடு அமர்ந்திருந்தவர்களும் எழுந்தனர்.

31 தனியே சென்று, இவன் சாவுக்கோ சிறைத்தண்டனைக்கோ உரிய குற்றம் ஒன்றும் செய்யவில்லை எனத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

32 அகிரிப்பா பெஸ்துவிடம் "இவ்வழக்கு செசாரிடம் செல்ல வேண்டுமன்று இவன் சொல்லாதிருந்தால் இவனை விடுதலை செய்திருக்கலாமே" என்றான்.

அதிகாரம் 27

1 நாங்கள் கப்பலேறி இத்தாலியாவுக்குப் போக முடிவு செய்தபோது, சின்னப்பரையும் வேறு கைதிகள் சிலரையும் அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த யூலியு என்னும் நூற்றுவர் தலைவனிடம் ஒப்படைத்தனர்.

2 அதிராமித்தியம் ஊர்க்கப்பல் ஒன்று ஆசியா நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்லத் தயாராயிருந்தது. நாங்கள் அதிலேறிப் பயணமானோம். தெசலோனிக்கே ஊரானாகிய அரிஸ்தர்க்கு என்னும் மக்கதோனியா நாட்டவன் எங்களோடிருந்தான்.

3 மறுநாள் சீதோன் துறைமுகம் சேர்ந்தோம். யூலியு சின்னப்பரிடம் மிகப்பரிவு காட்டி, அவர் தம்முடைய நண்பர்களிடம் செல்லவும், அவர்களால் உபசரிக்கப் படவும் அனுமதித்தான். ஆகவே, அங்கிருந்து புறப்பட்டோம்.

4 எதிர்க்காற்று வீசியதால் சைப்ரஸ் தீவின் ஒதுக்கிலே சென்றோம்.

5 பின்பு சிலிச்சியா, பம்பிலியா நாடுகளை ஒட்டியுள்ள கடலைக் கடந்து லீசியா நாட்டு மீரா நகரையடைந்தோம்.

6 அங்கே அலெக்சாந்திரியா நகரக் கப்பல் ஒன்று இத்தாலியாவுக்குப் புறப்படப் போவதைக் கண்டு நூற்றுவர் தலைவன் எங்களை அதில் ஏற்றினான்.

7 மெதுவாய், பலநாள் கடின பயணம் செய்து கினீது நகர் எதிரே வந்தோம். பின்பு எதிர்க்காற்று இன்னும் வீசிக்கொண்டிருந்ததால் சல்மோனே முனையைக் கடந்து கிரேத்தாத் தீவின் ஒதுக்கிலே சென்றோம்.

8 அதன் கரையோரமாகக் கடின பயணம் செய்து லசேயா நகர் அருகிலுள்ள செந்துறையென்னும் இடத்தையடைந்தோம்.

9 இவ்வாறு பலநாட்கள் கழிந்தன. நோன்பு நாட்களும் கடந்து போயின. இனி, கடற்பயணம் செய்வது ஆபத்தானது என்பதால் சின்னப்பர்,

10 "நண்பர்களே, இப் பயணம் விபத்துக்குரியது எனத் தோன்றுகிறது. கப்பலுக்கும் சரக்குக்கும் மட்டுமன்று, நமது உயிருக்குமே கேடு வரலாம்" என எச்சரித்தார்.

11 ஆனால், நூற்றுவர் தலைவன் சின்னப்பர் சொன்னதை நம்பாமல் கப்பலோட்டியும் கப்பலுக்குரியவனும் சொன்னதை நம்பினான்.

12 மேலும், மாரிக் காலத்தில் தங்குவதற்கு அந்தத் துறைமுகம் ஏற்றதாயில்லை. ஆகையால், அதை விட்டுப் போய்விட வேண்டுமெனப் பெரும்பாலோர் விரும்பினர். கூடுமானால் கிரேத்தா தீவிலுள்ள பெனிக்ஸ் துறைமுகம் சென்று மாரிக்காலத்தை அங்குக் கழிக்கலாம் என எண்ணினர். இத்துறைமுகம் தென் மேற்கையும் வட மேற்கையும் நோக்கி இருக்கிறது.

13 தெற்கிலிருந்து காற்று மெதுவாய் வீசவே தங்கள் எண்ணம் கைகூடியதாக எண்ணி, நங்கூரம் தூக்கி, கிரேத்தாத் தீவின் கரையோரமாகச் சென்றனர்.

14 ஆனால் சிறிது நேரத்திற்குள் வாடைக் கொண்டல் என்னும் புயல் காற்று அத்தீவிலிருந்து அடித்தது.

15 கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டது. காற்றை எதிர்த்துச் செல்ல முடியாததால் போகவேண்டிய திசையை விட்டு காற்றடித்த திசையிலேயே புயல் எங்களை அடித்துக்கொண்டு போயிற்று.

16 கௌவுதா என்ற ஒரு சிறு தீவின் ஒதுக்கிலே செல்லும்போது கடின முயற்சியோடு கப்பலின் படகைத் தூக்கிக் கட்டினோம்.

17 அதைத் தூக்கியபின் வடக் கயிற்றினால் கப்பலைச் சுற்றிக் கட்டினார்கள். ஆழமில்லாத சிர்த்திஸ் வளைகுடாவில் கப்பல் அகப்பட்டுக் கொள்ளுமோ என அஞ்சித் தடுப்புப் பலகையை இறக்கினார்கள். இவ்வாறு காற்றடித்த திசையிலே சென்று கொண்டிருந்தனர்.

18 கடும் புயல் எங்களை மிகவும் அலைக்கழிக்கவே, மறுநாள் சரக்குகளைக் கடலில் எறியத் தொடங்கினர்.

19 மூன்றாம் நாள் கப்பலின் தளவாடங்களையும் தங்கள் கையாலேயே எடுத்தெறிந்தனர்.

20 பல நாளாய்க் கதிரவனோ, விண் மீன்களோ தென்படவில்லை. கடும் புயல் அடித்தபடியே இருந்தது. தப்பிப் பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லாமல் போயிற்று.

21 அத்தோடு அவர்கள் பலநாள் ஒன்றும் உண்ணாமலிருந்து விட்டார்கள். அப்போது சின்னப்பர் அவர்கள் நடுவில் நின்று, "நண்பர்களே, நான் சொன்னதைக் கேட்டு நீங்கள் கிரேத்தாத் தீவை விட்டுப் புறப்படாமலிருந்திருக்க வேண்டும். அப்போது இந்த ஆபத்தும் கேடும் நேர்ந்திருக்காது.

22 ஆயினும் மனந்தளராதீர்கள். கப்பலுக்கு மட்டும் சேதம் ஏற்படும். உங்கள் உயிருக்கு ஆபத்து எதுவும் நேராது.

23 ஏனெனில், என்னை ஆட்கொண்டவரும் நான் வழிபடுபவருமாகிய கடவுளின் தூதர் ஒருவர் நேற்றிரவு எனக்குத் தோன்றி,

24 ' சின்னப்பா, அஞ்சாதே, செசார் முன்னிலையில் நீ போய் நிற்க வேண்டும். இதோ! உன் பொருட்டுக் கடவுள் உன்னோடு பயணம்பண்ணுகிற யாவருக்கும் உயிர்ப்பிச்சையளித்துள்ளார் ' என்றார்.

25 எனவே, நண்பர்களே, மனம் தளராதீர்கள். நான் கடவுளை நம்புகிறேன். எனக்கு அறிவித்துள்ளபடியே நடக்கும்.

26 ஆயினும், நாம் ஒரு தீவில் தள்ளப்பட வேண்டியிருக்கிறது" என்றார்.

27 பதினான்காம் நாள் இரவு, நாங்கள் ஆதிரியாக் கடலில் இங்குமங்கும் அலைக்கழிக்கப்படுகையில், நள்ளிரவில் கரை அருகேயிருப்பதுபோல் மாலுமிகளுக்குத் தோன்றிற்று.

28 அவர்கள் விழுதுவிட்டு ஆழம் பார்த்தபோது நூற்றிருபது அடியிருந்தது. சற்றுத்தூரம் சென்றபிறகு,

29 மறுபடியும் விழுதுவிட்டுப் பார்த்தபோது தொண்ணுறடி இருந்தது. பாறையில் மோதுமோவென அஞ்சிக் கப்பலின் பின்னணியத்திலிருந்து நான்கு நங்கூரங்களை இறக்கினர். எப்போது பொழுது விடியுமோவென்றிருந்தனர்.

30 மாலுமிகளோ கப்பலை விட்டுத் தப்பியோட வழி தேடினார்கள். கப்பல் முன்னணியத்திற்கு எதிரிலே சற்றுத் தள்ளி நங்கூரங்களை இறக்குவதுபோல நடித்து, படகைக் கடலில் இறக்கினார்கள்.

31 இதைக் கண்ட சின்னப்பர் நூற்றுவர் தலைவனையும் படை வீரர்களையும் பார்த்து, ' இந்த மாலுமிகள் கப்பலில் தங்காவிடில் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் ' என எச்சரித்தார்.

32 உடனே படை வீரர் படகின் கயிறுகளை அறுத்து அதைக் கடலில் விழச் செய்தனர்.

33 பொழுது விடிய சற்று முன் சின்னப்பர் எல்லாரையும் பார்த்து, "கவலையால் பதினான்கு நாளாய் ஒன்றும் உண்ணாமலிருக்கிறீர்களே, ஏதாவது சாப்பிடுங்கள்.

34 இல்லாவிட்டால் எப்படி உயிர் பிழைக்க முடியும்?" என்று உணவு கொள்ள வற்புறுத்தினார். "உங்களுள் எவனுக்கும் ஒரு தலை மயிர்கூட சேதமடையாது" என்றார்.

35 இப்படிப் பேசிய பின், அவர் அப்பம் ஒன்றை எடுத்து எல்லாருக்கும்முன் கடவுளுக்கு நன்றி கூறி, அதைப் பிட்டு உண்ணத் தொடங்கினார்.

36 அதைக் கண்டு மற்ற எல்லாரும் மனந்தேறியவர்களாய்ச் சாப்பிட்டார்கள்.

37 எல்லாருமாகக் கப்பலில் இருநூற்று எழுபத்தாறு பேர் இருந்தோம்.

38 அவர்கள் பசியாற உண்டபின் கோதுமையைக் கடலில் எறிந்து கப்பலின் பளுவைக் குறைத்தார்கள்.

39 பொழுது புலர்ந்தபோது தங்கள் கண்ணுக்குத் தென்பட்டது எந்த இடம் எனத் தெரியவில்லை. வளைகுடா ஒன்றில் மணல் கரையுள்ள ஒரு பகுதியைக் கண்டு, அங்கே கப்பலைச் செலுத்த முடியுமாவென்று பார்த்தனர்.

40 எனவே, கயிறுகளை அவிழ்த்து நங்கூரங்களைக் கடலிலேயே விட்டுவிட்டுச் சுக்கான் கட்டுகளைத் தளர்த்தினர். முன்பாயை விரித்துக் கப்பலைக் காற்றுக்கிசைவாகக் கரையை நோக்கிச் செலுத்தினர்.

41 ஆழமற்ற ஓரிடத்தில் கப்பல் மோதிற்று. அதனால் அதன் முன்னணியம் மண்ணில் புதைந்து அசையாமல் போகவே, பின்னணியம் அலைகளின் வலிமையால் சிதைவுறத் தொடங்கிற்று.

42 கைதிகளுள் எவனும் நீந்தித் தப்பி ஓடி விடாதபடி படைவீரர் அவர்களைக் கொன்று போட எண்ணீனர்.

43 ஆனால், நூற்றுவர் தலைவன் சின்னப்பரைக் காப்பாற்ற விரும்பி அவர்கள் எண்ணியபடி செய்ய விடவில்லை. நீத்தக்கூடியவர்கள் முதலில் கடலில் குதித்துக் கரை சேரவும்,

44 மற்றவர்கள் பலகைகளையாவது, கப்பலின் சிதைவுண்ட துண்டுகளையாவது பிடித்துக்கொண்டு கரை சேரவும் கட்டளையிட்டான். இவ்வாறு எல்லாரும் தப்பிக் கரை சேர்ந்தனர்.

அதிகாரம் 28

1 நாங்கள் தப்பிக் கரை சேர்ந்தபின், அத்தீவின் பெயர் மால்த்தாவென அறிந்தோம்.

2 அத்தீவில் வாழ்ந்தவர்கள் எங்களிடம் பரிவுடன் நடந்து கொண்டனர். மழை பெய்து குளிராய் இருந்தபடியால், அவர்கள் நெருப்பு மூட்டி எங்களை அருகில் அழைத்துச் சென்றனர்.

3 அப்போது சின்னப்பர் சுள்ளிகளைப் பொறுக்கி நெருப்பிலே போடுகையில் வெப்பத்தினால் ஒரு விரியன் பாம்பு வெளியே வந்து அவருடைய கையைக் கவ்விக் கொண்டது.

4 அவர் கையில் பாம்பு தொங்குவதை அத்தீவின் வாசிகள் கண்டு, "இவன் ஒரு கொலைக்காரனாகதான் இருக்க வேண்டும். கடலுக்குத் தப்பித்துக்கொண்டாலும் தெய்வ நீதி இவனை உயிரோடிருக்க விடவில்லை" எனத் தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

5 ஆனால், அவர் பாம்பை நெருப்பில் உதறி விட்டு எத்தீங்குமின்றியிருந்தார்.

6 அவருக்கு வீக்கம் காணும் அல்லது திடீரென விழுந்து இறந்துவிடுவார் என அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். நெடு நேரமாகியும், அவர்கள் எதிர்பார்த்தது போல் அவருக்கு எத்தீங்கும் நேரவில்லை. இதைக் கண்டு தங்கள் எண்ணத்தை மாற்றி அவர் ஒரு தெய்வம் எனக் கூறலானார்கள்.

7 அத்தீவுக்குத் தலைவனான புப்லியு என்பவனுடைய நிலங்கள் அருகே இருந்தன அவன் எங்களை வரவேற்று மூன்று நாள் அன்போடு உபசரித்தான்

8 புப்லியுவினுடைய தந்தை காய்ச்சலாலும் சீதபேதியாலும் நோயுற்றுக் கிடந்தான். சின்னப்பர் அவனிடம் போய்ச் செபம் செய்து அவன்மேல் கைகளை வைத்து அவனைக் குணமாக்கினார்.

9 அதன் பிறகு அத்தீவில் நோயுற்றிருந்த மற்றவர்களும் அவரிடம் வந்து குணம் பெற்றனர்.

10 அவர்கள் எங்களுக்குப் பல வகையிலும் மரியாதை செலுத்தினார்கள். நாங்கள் கப்பலில் ஏறும்போது எங்களுக்குத் தேவையானவற்றையும் தந்தார்கள்.

11 மூன்று மாதங்களுக்குப்பின், அத்தீவில் மாரிக்காலத்தின் போது தங்கியிருந்த கப்பல் ஒன்றில் ஏறிப் புறப்பட்டோம். அது அலெக்சந்திரியா நகரக் கப்பல், "மிதுனம்" என்பது அதன் பெயர்.

12 சிரக்கூசா துறைமுகம் அடைந்து அங்கே மூன்று நாள் தங்கினோம்.

13 அங்கிருந்து கரையோரமாகச் சுற்றி ரேகியு துறைமுகம் அடைந்தோம். மறுநாள் தெற்கிலிருந்து காற்று வீசவே, புறப்பட்டு இரண்டாம் நாள் புத்தெயோலி துறைமுகம் சேர்ந்தோம்.

14 அங்கே சகோதரர் சிலர் இருக்கக் கண்டோம். ஒரு வாரம் தங்களுடன் தங்கும் படி அவர்கள் எங்களைக் கேட்டுக்கொண்டார்கள். அதன்பின் உரோமைக்குச் சென்றோம்.

15 அங்குள்ள சகோதரர்கள் எங்களைப்பற்றிக் கேள்வியுற்று, அப்பியு சந்தை,' 'மூன்று விடுதி என்னும் இடங்கள் வரையிலும் எங்களை எதிர்கொண்டு வந்தார்கள். இவர்களைக் கண்ட சின்னப்பர் கடவுளுக்கு நன்றி கூறி, மனத்திடம் பெற்றார்.

16 நாங்கள் உரோமை சேர்ந்தபோது காவல் செய்கிற படை வீரனோடு தனி வீட்டில் தங்குவதற்குச் சின்னப்பர் உத்தரவு பெற்றுக்கொண்டார்.

17 மூன்று நாளுக்குப்பின், சின்னப்பர், யூதப் பெரியோர்களை வரவழைத்தார். அவர்கள் ஒன்றுகூடியபின் அவர்களைப் பார்த்து, "சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, முன்னோருடைய முறைமைகளுக்கு மாறாகவோ நான் எதுவும் செய்யவில்லை. எனினும் யெருசலேமில் கைதியாக்கப்பட்டு உரோமையருக்குக் கையளிக்கப்பட்டேன்.

18 அவர்கள் என்னை விசாரித்து சாவுத் தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாதபடியால் என்னை விடுதலையாக்க விரும்பினார்கள்.

19 ஆனால், யூதர்கள் அதை ஏற்றுக் கொள்ளாததால் என் வழக்கு செசாருடைய மன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்று உரிமை கோர அவசியம் ஏற்பட்டது. எனினும் நான் இப்படிச் செய்தது, என் இனத்தார் மேல் குற்றம் சாட்டவேண்டுமென்றல்ல.

20 இதனால் தான் நான் உங்களைக் கண்டு பேச அழைத்தேன். இஸ்ராயேல் மக்களுக்குள்ள நம்பிக்கையை நானும் கொண்டிருப்பதால் தான் இவ்வாறு விலங்கிடப்பட்டுள்ளேன்" என்றார்.

21 அதற்கு அவர்கள், "உம்மைப்பற்றி யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவில்லை. நீர் தீமை செய்ததாக சகோதரர்களில் யாரும் இங்கே வந்து ஒன்றும் அறிவிக்கவில்லை. அதைப்பற்றியப் பேச்சும் எழவில்லை.

22 இக்கட்சியைப் பற்றி நாங்கள் அறிந்திருப்பது மக்கள் இதை எங்கும் எதிர்த்துப் பேசுகிறார்கள் என்பதே. இதைப்பற்றி உம்முடைய கருத்தை நீரே எடுத்துச் செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்" என்றனர்.

23 அதற்காக ஒருநாளைக் குறித்தனர். அன்று யூதர் பலர் அவர் தங்கியிருந்த விடுதிக்கு வந்து குழுமினர். மோயீசனுடைய சட்டத்திலிருந்தும் இறைவாக்குகளிலிருந்தும் சான்றுகள் பல எடுத்துக்காட்டி, கடவுளின் அரசைப் பற்றி வலியுறுத்திப் பேசி, இயேசுவைச் சார்ந்தவற்றை அவர்கள் ஏற்கச் செய்ய முயன்றார். காலை முதல் மாலை வரை இப்படி உரையாடினார்.

24 அவர் கூறியதைச் சிலர் ஏற்றுக்கொண்டனர்; வேறு சிலர் நம்பவில்லை.

25 இவ்வாறு தங்களிடையே கருத்து வேறுபட்டவர்களாய் கலைந்து போகையில், சின்னப்பர் அவர்களை நோக்கி, "இன்னும் ஒரு வார்த்தை, கேளுங்கள்; இறைவனாக்கினரான இசையாஸ் வாயிலாக, பரிசுத்த ஆவி உங்கள் முன்னோருக்குக் கூறியது பொருத்தமே.

26 அவர் கூறியது: 'நீ போய் அந்த மக்களுக்குச் சொல்: கேட்டுக்கேட்டும் நீங்கள் உணர்வதில்லை, பார்த்துப் பார்த்தும் நீங்கள் காண்பதில்லை,

27 அவர்கள், கண்ணால் காணாமலும் காதால் கேட்காமலும் உளத்தால் உணராமலும் அவர்கள் மனந்திரும்பாமலும் நான் அவர்களைக் குணமாக்காமலும் இருக்கும்படி, இம்மக்களின் உள்ளம் மழுங்கி விட்டது; இவர்கள் காது மந்தமாகி விட்டது; கண்ணை மூடிக்கொண்டனர்.'

28 எனவே, கடவுள் அருளிய இந்த மீட்பு புறவினத்தார்க்கு அளிக்கப்பட்டுள்ளது என்று உங்களுக்குச் தெரிந்திருக்கட்டும். 'அவர்கள் செவி கொடுப்பார்கள்" என்றார்.

30 வாடகை கொடுத்து ஓர் இடத்தில் அவர் ஈராண்டுகள் தங்கினார்.

31 தம்மைக் காண வந்தோரை உபசரித்து, மிக்கத் துணிவோடு, தடையெதுவுமின்றி அவர்களுக்குக் கடவுளின் அரசைப்பற்றிய செய்தியை அறிவித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மைகளைப் போதித்து வந்தார்.