நேர்மை

"உன் கண் நேர்மையானதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் பிரகாசமுள்ளதாயிருக்கும்'' (மத்.6:22).

சுவிசேஷம் முழுவதிலும், சேசுநாதரைச் சுட்டிக் காட்டும் இலட்சணம் என்னவென்று காண்கிறோம்: மகா உன்னதமும், உத்தமமுமான, நேர்மை பொருந்திய சிநேகமே அந்த இலட்சணம். உண்மையில், நல்லவர்களிடமும் முதலாய் நேர்மை என்ற புண்ணி யத்தைக் காண்பது வெகு வெகு அரிது. அது தாழ்ச்சியின் ஒளி என்றும், உண்மையின் பிரதிபிம்பம் என்றும் சொல்லலாம். அது சன்மார்க்கத் தெளிவு; அதில் எப்போதும் ஒருவகை அபூர்வ பரலோக ஆத்தும ஒளி ஜொலிக்கிறது. வளர்ப்புத் தவறாலும், நடத்தையின் சீர்கேட்டாலும், துர்மாதிரிகையாலும் நாம் எல்லோரும் சாதுரிய தந்திரக்காரர்களாகி விட்டோம். தப்பறையான அநேக இணக்க நியாயவாதங்கள் நமது ஜீவியத்தில் குவிந்து கிடக்கின்றன. நமது இருதயம், சிக்கல் எடுக்க முடியாத பின்னல் வலையாயிருக்கிறது; இந்தச் சிக்கலுக்குள் சேசுநாதர் தங்கியிருக்க முடியாது. அவர் மேலான நேர்மையுள்ளவர். ""நீங்கள் மனந்திரும்பிப் பாலர்களைப் போல் ஆகாவிட்டால்...'' (மத்.18:3), ""உங்களெல்லாரிலும் எவன் அதிக சிறியவனாயிருக்கிறானோ, அவனே அதிகப் பெரியவன்'' (லூக். 9:48), ""உங்கள் பேச்சு ஆம், ஆம், இல்லை, இல்லை என்பதா யிருக்கக்கடவது'' (மத்.5:37), ""உன் கண் நேர்மையானதாயிருந்தால், உன் சரீர முழுவதும் பிரகாசமுள்ளதாயிருக்கும்'' (மத்.6:22) என்று அவர் சொன்னது வீணல்ல.

சர்வேசுரனிடம் மிக அதிக நேர்மையாயிருங்கள். ஏனெனில் நீங்கள் அத்தகைய தகப்பனின் பிள்ளைகள். சிறு பிள்ளைகளுக்குரிய நியாயமும், பரிசுத்தமுமான தைரியத்தோடு - நெளிந்து வளைந்து போகாமல், கூரேதார்ஸ் (அர்ச். மரிய வியான்னி அருளப்பர்) சொன்னது போல், புள்ளிக்கு நேராய்ச் செல்லும் குண்டு போல் அவரிடம் நேராய்ப் போங்கள், அவரது இருதயத்தை நோக்கி நேராய்ச் செல்லுங்கள். இவ்விதம் செய்வதால் வெகு எளிதில் அவரது இருதயத்தைக் கைப்பற்றிக் கொள்ளலாம். அவரை உங்களுக்குத் தெரியும். அவரது இருதய போதகத்தையும், சுவிசேஷப் படிப்பினை யையும் அறிந்திருக்கிறீர்கள் என்று அப்போது தெளிவாகிறது. பெரிய வெற்றி பெறுவதற்கு, இனி ஒரு அடி எடுத்து வைத்தால் போதும்.

புத்திக்கூர்மையும், ஆழ்ந்த அறிவும் உள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் பேசும் பேச்சையும் அர்ச்சியசிஷ்டவர்கள் பேசும் பேச்சையும் ஒப்பிட்டுப் பாருங்கள். கல்விச் செறுக்குள்ளவர்கள் பேசும் விதம் தெளிவற்று, மறைமுகமானதும், வாய்க்குள் நுழையக் கடினமானதுமாயிருக்கும். அத்தகைய ஆத்துமங்கள் சேசுநாதரோடு உரையாடுவதைக் கேட்டு சம்மனசுக்கள் சில சமயம் திகைப்புறக் கூடும். அதற்கு மாறாய், குழந்தை தெரேசம்மாள் சொல்லும் வார்த்தை களில் இதமும் தைரியமும் விளங்குகின்றன. ""நான் சேசுவாகவும், நீர் தெரேசாவாகவும் இருந்தால்'' என்று சொல்லத் துணிந்தாள் தெரேசம் மாள். ""பரிசுத்த மாமரியின் மக்கள் செல்லும் சாதாரண பாதையில் நானும் போகும்படி ஏன் விடுகிறதில்லை? ஆண்டவரே, நான் சபை யிலிருந்து தள்ளுண்டு போவதற்கு நீர்தான் காரணமாயிருப்பீர்'' என்றுரைத்தாள் அர்ச். மர்கரீத் மரியம்மாள். ஆண்டவர் மற்றவர் களை விடத் தமது சிநேகிதர்களைத்தான் அதிகமாய்ச் சோதித்தார் என்று தெரேசம்மாள் கேட்டதும், ""இதனால்தான் உமக்குச் சிநேகி தர்கள் மிகக் குறைவு'' என்று பதிலுரைத்தாள். சிறு பிள்ளைகளைப் போலும், அர்ச்சியசிஷ்டவர்களைப் போலும் சேசுநாதரோடு பேசப் பயப்படாதீர்கள். அவர் தாமே கற்றுக் கொடுத்த பரலோக மந்திரம், சிக்கலற்ற நேர்மையான ஜெபம் அல்லவா? ""பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே - உம்முடைய இராச்சியம் வருக - எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்'' - விசேஷமாய், ஜீவிய அப்பமாகிய உம்மையும் உமது இருதயத்தையும் தாரும். ஓ! சேசுவே, எங்கள் வாழ்வாயிரும்.

அரசரோடு சந்திப்பு மகா சங்கடமும், மனக் கிலேசமும் விளைவிக்கக் கூடியது. ஏனெனில் நாம் இருக்க வேண்டிய முறை இன்னது, சொல்ல வேண்டிய வார்த்தைகள் இன்னவை என்று ஏற்கெனவே படித்தறிந்து, ஆசார முறைப்படி சகலமும் அனுசரிக்க வேண்டும். திவ்ய நற்கருணை சந்திப்போ நம் இருதயத்தில் சமாதான அமைதியை உண்டுபண்ணுகிறது. நாம் நமது சொந்த வீட்டில் இருக் கிறோம். இராஜாதிராஜன் பாதத்தில், சேசுவே, உமது பாதத்தில், பாக்கியமாயிருக்கிறோம்.

இப்போது சொல்லப் போகிற சரித்திரம் உங்களுக்கு நற்படிப் பினையாயிருக்கும். நாசரேத்தூர் உரையாடல் என்று அதற்குப் பெய ரிட்டுக் கொள்வோம். எட்டு வயதுச் சிறுமி புதுநன்மை வாங்கு வதற்குத் தகுந்த விதமாய் ஆயத்தம் செய்து, பக்தி உருக்க தாராளத் துடன் அதை உட்கொண்டாள். நமதாண்டவர் தாராள குணத்தில் யாராகிலும் தம்மை மிஞ்ச விடமாட்டார். ஆதலால் அந்தச் சிறுமி காட்டின சிநேகத்திற்குச் சன்மானமாக ஒரு புதுமை செய்யச் சித்த மானார். அந்த நாள் முதல், தினந்தோறும் அவளோடு உரையாட லானார். அவளுக்கு இது சிறிதும் ஆச்சரியமாகத் தோன்றவில்லை. ஏனெனில் எல்லாருமே தன்னைப் போல் சேசுநாதரோடு பேசவும், அவர் சொல்வதைக் கேட்கவும் கூடுமென்று எதார்த்தமாய் நினைத் திருந்தாள். இருவரும் சகோதரனும் சகோதரியும் போல் யாதொரு களங்கமின்றி உரையாடினார்கள்.

ஒருநாள் சேசுநாதர் அவளைப் பார்த்து, ""நீ மெய்யாகவே என்னை அதிகமாய் நேசிக்கிறாயா?'' என்று கேட்டார். இதைக் கேட்டதும் அவளுக்கு ஆத்திரம் உண்டாயிற்று. ஏனெனில் இது சந்தேகத்தால் ஏற்பட்ட கேள்விபோல் தோன்றிற்று. ஆதலால் உடனே, ""நேச சேசுவே, நீர் அந்த மாதிரி கேட்கக் கூடாது'' என்றாள். ஏன் என்று சேசுநாதர் கேட்க, ""ஏனெனில் நான் என் இருதயத்தை உமக்குக் கொடுத்துவிட்டேன். அது உமக்குச் சொந்தமென்று உமக்கு நன்றாய்த் தெரியுமே'' என்று பதிலுரைத்தாள். அதற்கு சேசுநாதர், ""ஆம், தெரியும். ஆனால் நீயே அதைச் சொல்ல வேண்டுமென்று விரும்பினேன். வெகு சிலர்தான் இக்காலத்தில் என்னை நேசிக்கிறார்கள்'' என்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு, உருக்கமாய்ப் பேசிக் கொண்டிருக்கிற சமயத்தில், அந்தச் சிறுமி சேசுநாதரைப் பார்த்து, ""கடவுளாகிய நீர் என்னைப் போன்ற சிறு பெண்ணைச் சிநேகிக்கக் கூடும் என்பது மெய்தானா?'' என்று கேட்டாள். சேசுநாதர், ""நீ அந்த மாதிரி என்னைக் கேட்கக் கூடாது'' என்று பதிலுக்குப் பதில் கொடுத்தார். இதைக் கேட்ட சிறுமி நடுக்கமுற்று, தவறு செய்துவிட்டேனோ என்று பயந்து, ""ஏன் கேட்கக்கூடாது?'' என்றாள். ""ஏனெனில் நான் சிநேகிக்கிறேன் என்று உனக்கு நன்றாய்த் தெரியும். நீ எனக்குச் சொந்தமான பிள்ளை, எனது சிறிய அப்போஸ்தலி, என் இருதயம் உனக்குச் சொந்தம்'' என்று சேசுநாதர் சொல்ல, ""சரி, நீர் என்னைச் சிநேகிக்கிறீர் என்று எனக்குத் தெரியும். நேச சேசுவே, நீரே அப்படி என்னிடம் சொல்ல வேண்டுமென்று தான் நான் விரும்பினேன்'' என்று சிறுமி தெரிவித் தாள். இவ்வாறு தினமும் அவர்களுக்குள் உரையாடல் நடந்து வந்தது.

ஆயினும், இது மிகவும் நுட்பமான விஷயமானதாலும், இது வெறும் ரூபிகரத் தோற்றமாயிருக்கக் கூடும் என்பதாலும் இதைச் சரியாய்ச் சோதிக்க வேண்டும், அந்தப் பிள்ளையிடம் நமதாண்டவர் தாமே மெய்யாகவே பேசினாரா என்று அவரிடமிருந்து ஓர் அத்தாட்சி பெற வேண்டும் என்று தீர்மானித்தேன். ஆதலால் ஒரு நாள் அவளைப் பார்த்து, ""ஒரு பெரும்பாவி மனந்திரும்பும்படி ஆண்டவ ரைக் கேள்'' என்று சொன்னேன். அடுத்த தடவை, அவள் பாவ சங்கீர்த்தனத்திற்கு வந்தபோது, ""சுவாமி, அது வரப் போகிறது'' என்று களங்கமற்ற விதமாய்ச் சொன்னாள். ""என்ன சொல்கிறாய் மகளே, என்ன வரப் போகிறது?'' என்று கேட்டேன். ""சுவாமி, நீங்கள் சின்ன சேசுவை ஓர் ஆத்துமத்துக்காகக் கேட்டீர்கள் அல்லவா? ஞாபகமில் லையா? நீங்கள் என்னிடம் சொன்ன மறுநாள், சேசுநாதர் என்னோடு பேசத் துவக்கும்போது, ""சேசுவே, தயவுசெய்து ஒரு நிமிடம் பொறுத் துக் கொள்ளும்; இன்றைக்கு நான் முதலில் பேச வேண்டும்'' என்று சொல்லி, நீங்கள் என்னிடம் சொன்னதை அவரிடம் தெரிவித்து, அவர் சர்வேசுரனாயிருப்பதால், நீங்கள் குறிப்பிட்ட ஆத்துமம் எது வென்று அவருக்கு நன்றாய்த் தெரிந்திருக்குமென்றும் சொன்னேன். அப்போது சேசுநாதர் அன்பான புன்சிரிப்புடன், ""ஆம், எனக்குத் தெரியும். ஆன்மாக்களையே எப்போதும் என்னிடம் கேள். சுவாமியாரும் அப்படியே கேட்கச் சொல். அவருக்குக் கிடைக்கும். நீ அடுத்த தடவை பாவசங்கீர்த்தனம் செய்தபின், அவர் குறிப்பிட்ட மனிதன், எவரும் மனந்திருப்ப முடியாத அந்த மனிதன், அவரிடம் போய்ப் பாவசங்கீர்த்தனம் செய்வான். ஆனால் அதற்கு ஈடாக, நீ உன் சிநேகத்தாலும், நற்கருணை அருந்துவதாலும் பரித்தியாக முயற்சிகளாலும் முன்பைவிட அதிகமாய் எனது சிறிய அப்போஸ்தலி யாயிருக்க வேண்டும். எப்போதும் மிகவும் கீழ்ப்படிதலுள்ள வளாகவும் இருக்க வேண்டும்'' என்றார்.''

இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும்போது, திடீரென நிறுத்தி, ""சுவாமி, தயவுசெய்து உடனே எனக்குப் பாவப் பொறுத்தல் ஆசீர் வாதம் கொடுங்கள். அந்த ஆத்துமம் இதோ வருகிறது'' என்று அவசரப்பட்டு அறிவித்தாள். நான் அவளுக்குப் பாவப்பொறுத்தல் கொடுத்தேன். அவள் தன் அபராதத்தைத் தீர்க்கும்படி பீடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், முழுவதும் வேதவிரோத மான வாழ்வு வாழ்ந்துவந்த ஒருவன் பாவசங்கீர்த்தனத் தொட்டியை நோக்கி வருவதைக் கண்டேன். அவன் என்னருகில் வந்து, ""சுவாமி, என்ன நேரிட்டதோ எனக்குத் தெரியாது. ஆனால் இன்று காலை யிலிருந்து என்னிடம் ஒரு பெரிய மாற்றம் உண்டாயிருக்கிறது. இதுதான் என் முதல் பாவசங்கீர்த்தனம்'' என்று சொன்னான். சேசு நாதர் அவனைத் தோற்கடித்து விட்டார். ஒரு சிறுபிள்ளை செய்த சிநேகம் நிறைந்த ஜெபங்களுக்கும், பரித்தியாக முயற்சிகளுக்கும் சன்மானமாக இந்த ஆத்துமத்தை அவர் அவளுக்குக் கொடுத்தார்.

நாம் அர்ச்சியசிஷ்டவர்கள் ஆகாததற்குக் காரணம் நமது மிதமிஞ்சின ஆசாரம்தான் என்று நினைக்கிறேன். சிறு பிள்ளைகளும், அவர்களைப் போல் தங்களை ஆக்கிக் கொள்பவர்களும் பாக்கிய வான்கள். ""நமக்கு எத்தனை வயதானாலும், நமது அந்தஸ்து எவ்வளவு மேலானதானாலும், நேர்மையிலும், எதார்த்தத்திலும் நாம் எப்போ தும் சிறு பிள்ளைகளாயிருக்கக் கூடும்'' என்று குழந்தை தெரேசம் மாள் எழுதியிருக்கிறாள். ""நீ சிநேகிப்பதுபோல ஜெபம் செய்'' என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். சர்வேசுரனோடு நீ பேசும் விதத் தில் ஆசார முறையை அதிகம் கவனிக்காதே. சிறு குழந்தை தாயிடம் பேசுவதுபோல் பேசு. நல்ல நல்ல வார்த்தைகளைத் தேடிக் கொண் டிராதே. பயனற்ற நியாயமும் காரணமும் கூறிக் கொண்டிராதே. திருச் சபை உண்டாக்கியிருக்கிற ஜெபங்களைக் கவனி. எவ்வளவு எதார்த்தமுள்ளவை, ஜோடனையற்றவை, பிரார்த்தனைகளிலும், பூசையிலும், சங்கீத மாலையிலும் சொன்ன வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் நூறு, ஆயிரம் தடவை சொல்வது. ""ஆமென்,'' ""எங்கள் பேரில் இரக்கமாயிரும்,'' ""பிதாவுக்கும் சுதனுக்கும் இஸ்பிரீத்துசாந்து வுக்கும் மகிமை உண்டாகக் கடவது,'' இந்த வகையிலேயே திருச் சபையின் பொது ஜெபங்கள் எல்லாம் இருக்கின்றன. அதிலே வித்தை இல்லை, விநோதம் இல்லை, பின்னல் சிக்கல் ஒன்றுமில்லை, எல்லாம் அழகாயிருக்கிறது, தெய்வீகம் நேர்மை பொருந்தியதாயிருக்கிறது.

ஞான ஜீவியத்தில், இந்தச் சட்டம் முக்கியமாய் அநுசரிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். இந்தப் பாடத்தில் மிகவும் தேர்ந்த ஆசிரியை, குழந்தை தெரேசம்மாள். காலஞ்சென்ற கர்தினால் பூர்ன், அவளது குணத்தைப் புகழ்ந்து பேசுகையில், ""பரிசுத்ததனத்தில் கணித சாஸ்திரத்தை அகற்றியொழித்த பெருமை அவளுக்கே உரியது'' என்று சர்வ நியாயத்துடன் சொல்லியிருக்கிறார். பிரபலமான அவளது ""சிறிய வழியை'' ஆராய்ந்து பாருங்கள். அவளது ஞான ஜீவியத் தையும் ஜெப ஜீவியத்தையும் சிந்தித்துப் பாருங்கள்; அவளுடைய தோழிகளான சகோதரிகள் மட்டில் அவள் நடந்து கொண்ட மேரை யைக் கவனியுங்கள். சகலத்திலும் வசியப்படுத்தும் களங்கமற்ற நேர்மை சிறந்து விளங்கும். புதுமை வரங்களால் அவளை நிரப்பி, நமக்கு சர்வேசுரன் அவளைத் தந்திருப்பது, சுவிசேஷத்துக்குரிய நேர்மைக்கு அவளே சிறந்த மாதிரி என்று நாம் அறிந்துகொள்வதற் காகவே என்று சொல்லத்தகும். சர்வேசுரன் தமது பராமரிப்பில், அந்தந்தக் காலத்திற்கேற்ற சில அர்ச்சியசிஷ்டவர்கள் மூலமாய்ப் பற்பல சமயங்களில் சில பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறார். இதை நாம் கண்டுணராமல் போவது நமது பெருங்குறை. இந்தப் பாடங்களுள் குழந்தை தெரேசம்மாள் வழியாய் நாம் அறிந்திருப் பதை விட போதகத்தில் சிறந்ததும், சிந்தனைகளை உற்பத்தி பண்ணக்கூடியதும் செல்வாக்குள்ளதுமான வேறொன்றைக் காண்பது மிக அரிது. அவளது போதகத்தை நாம் கண்டுணரப் பிரயாசைப் படுவோமாக!

சிறந்த ஆசிரியர் ஒருவர் சொல்வதாவது: ""அதிசயமும், இனிமையும் பொருந்திய சிறிய அர்ச்சியசிஷ்டவளே, உமக்கு வந்தனம். சுவிசேஷத்தின்படி, புத்தகங்களின் வழியாய் அடைந்த அறிவிலாவது, அவைகளுக்கு அர்த்தம் கூறத் தலைப்படுவதிலாவது மெய்யான மேன்மை அடங்கவில்லை என்று உமது சாந்தமுள்ள புன்முறுவலால் எங்களுக்குக் கற்றுக்கொடுத்ததற்காக மெத்த வந்தனம். குழந்தை தெரேசம்மாளே, தப்பறையான எண்ணங்களும், அபிப்பிராயங்களும் கொண்டு, தங்களைப் போல் மேதாவிகளும், கல்விமான்களும் கிடையாதென்ற கர்வத்தால், நல்வழியை விட்டு நழுவியிருந்த அநேகருக்குப் புத்தி புகட்டினதற்காக வந்தனம். எங்க ளெல்லோரையும் விட நீரே புத்தியிலும், ஞானத்திலும், படிப்பிலும் அதிகத் தேர்ந்தவர்; உமது ஜீவியம் நேர்மையும், வீரியமும் ஒன்று சேர்ந்த ஓர் அதிசயம்; தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படு கிறான். களங்கமற்றவன் ஆழ்ந்த அறிவுள்ளவன். சிநேகிக்கத் தெரிந் தவனுக்கு எல்லாம் தெரியும். சிறிது சிறிதாய் அன்பினால் சாகக் கூடியவன் அப்போஸ்தலர்களுள் அதிக நன்மை செய்கிறவன் என்று உமது ஜீவியத்தால் எண்பித்திருக்கிறீர்.''

லீமா நகரத்தில் அர்ச். ரோஸம்மாளும், குழந்தை சேசு நாதரும் கைகோர்த்துக் கொண்டு, அடிக்கடி நடந்துபோன தோட் டத்தின் ஒரு சிறிய பாகம் இன்னும் இருக்கிறது. அதில் இன்னும் ஒரு பழைய மரத்தின் அடிப்பகுதி இருக்கிறது. அதில் அவள் உட்கார்ந்து கொண்டிருப்பாள். குழந்தை சேசுநாதர் தோட்டத்துப் பூக்களைப் பறித்து, அவள் மடியில் கொண்டுவந்து வைப்பார். அவள் அவை களால் ஒரு முடி செய்து, அதைச் சின்ன அரசரின் தலையில் வைப் பாள். அப்போது அவர் புன்சிரிப்புடன், ""எனது நேச மணவாளியே, நீ முட்களை உனக்கென்று தெரிந்துகொண்டதால், உனக்குப் புஷ்பங் களைக் கொடுக்க ஆசிக்கிறேன்'' என்பார். இவ்விதம் சொல்லிக் கொண்டு, குழந்தை சேசு தமது தலையிலிருந்து முடியை எடுத்து அவள் தலையில் வைத்து, ""எனது பிரிய ரோஸ், என் இருதயம் உனக்குச் சொந்தம்'' என்பார்.

லீமா ரோஸம்மாள் குழந்தை தெரேசம்மாளுக்கு முந்திப் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஜீவித்தவள். அவர்கள் இருவரும் நடந்து சென்ற பாதை வித்தியாசமானதென்றும் தோன்றுகிறது. ஆயினும், அவ்விருவரும் பேசுகிற மொழி ஒன்று, பாடுகிற கீதம் ஒன்றே. அவர்கள் இரண்டு ரோஜாப் பூக்கள்; குழந்தை சேசு அவ்விரண்டின் இதழ்களையும் தமது மகிமைக்காகப் பறித்துக் கொள்ள விரும்பினார். அவர்கள் இருவரிடமும் விளங்கிய நேர்மை, சிறுபிள்ளைக் குணம், இருதய சாந்தம் இவைகளின் நிமித்தம், அவர்கள் தமக்கு உரியவர்களென்று தெரிந்துகொண்டார். அவர்கள் ஒவ்வொருவரும் குழந்தை சேசுவோடு தங்களுக்குத் தெரிந்த விதத்தில் உறவாடுகையில், ""நான் சிறியவளானது பற்றி உன்னதமானவருக்கு உகந்தவள் ஆனேன்'' என்று சொல்ல முடியும்.

நாம் சர்வேசுரனோடு பழகுவதில் இயல்பாயிருப்போமாக என்று மீண்டும் சொல்கிறேன். (இயல்பு என்பதும் நேர்மை என்பதும் ஒன்றே.) ஏனெனில் நேர்மை தாழ்ச்சியையும், நம்பிக்கையையும் காட்டுகிறது. நமது அயலாரோடு புழங்குவதிலும் நேர்மையாயிருப் போமாக. சேசுவைத் தவிர அவர்களிடம் வேறெதையும் தேடாமலும் சிநேகியாமலும் இருப்போமாக. நமது சொந்த இலாபங்களை மறந்து, அவருடைய சிநேகத்தின் பொருட்டு நமது சகோதரர்களுக்கு உதவி புரிந்து ஊழியம் செய்வோமாக. கடைசியாய், நம்மோடும் நாம் நேர்மையாயிருப்போமாக. நமக்குள்ள நற்குணங்களை, இல்லை என்று சொல்வது நன்றிகெட்டதனமும், போலித் தாழ்ச்சியும் ஆகும். அவை நம்மாலானவை என்று எண்ணுவதும், அவைகளை எடுத்துக் காட்டு வதும் ஆங்காரமாகும். நமது குறைகளையும், எரிச்சல் முறுமுறுப் பில்லாமல் ஏற்றுக்கொள்வோமாக. அவ்விதம் செய்தால், சேசுநாத ருடைய இருதயத்தோடு நெருங்கி உறவாடுவதில், அவைகளைத் திருத்திக் கொள்வதற்கான எண்ணமும், தைரியமும் உண்டாகும்.