தியாகம் அல்லது ஒப்புக்கொடுத்தல்

"பிதாவே, என் ஆத்துமத்தை உம்முடைய கரங்களிலே ஒப்புக்கொடுக்கிறேன்'' (லூக். 23:46).

பிதாவே, என் ஆவி, என் உயிர், என் ஆசை, நம்பிக்கை, எனது நித்திய ஜீவியம் எல்லாவற்றையும் உமது கரங்களில் ஒப்புக்கொடுக் கிறேன்.

சரியாய்ச் சொல்ல வேண்டுமானால், விசுவாச நோக்கமும், மரணத்தைப் போல் வலுவான சிநேகமும் நம்பிக்கையும் உண்டு பண்ணுகிற உன்னதமும் ஒருங்கே சேர்ந்தால், தியாகம் அதிலிருந்து தானாக ஏற்படும் என்று சொல்ல வேண்டும். நாம் யாதொன்றும் செய்யாமலிருக்க, சர்வேசுரன் சகலமும் செய்வார் என்று கையைக் கட்டிக் கொண்டிருக்கிற சோம்பேறித்தனத்துக்கும், மெய்யான சிநேகத்தின் விசேஷ அத்தாட்சியாய் விளங்கும் சுயபரித்தியாகத் திற்கும் எள்ளளவும் சம்பந்தம் கிடையாது.

மற்றெல்லாக் காரியங்களிலும் போல் இதிலும், ""நான் உங்க ளுக்கு மாதிரிகை காண்பித்திருக்கிறேன்'' (அரு.13:15) என்று சேசு நாதர் சொல்லக்கூடும். அவர் தமது மாசற்ற தாயாரின் திருவுதரத்தில் அவதாரமானதிலும், நாசரேத்தூரில் மரியம்மாளுக்கும் சூசையப் பருக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்ததிலும் உள்ள தியாகத்தைப் பற்றிப் பேசாமல், நற்கருணை வழியாய் நமது உள்ளத்தில் இறங்கி வருவதி லுள்ள தியாகத்தைக் கவனிப்போம். உலக நாட்டமும், மறதியும், பிரமாணிக்கமின்மையுமுள்ளவனின் இருதயத்தில் அவர் அநேக சமயங்களில் தங்கியிருக்க வேண்டியிருப்பதைப் பற்றி விசேஷமான முறையில் குறிப்பிட்டுச் சொல்வேன். அந்த சமயத்தில் அவன் இஷ்டப் பிரசாத அந்தஸ்தில் இருக்கிறானென்று வைத்துக் கொண்டாலும், அவன் நேற்று அவ்விதம் இருந்தானா? நாளைக்கு அவ்விதம் இருப் பானா? நாம் பிரமாணிக்க வாக்குறுதி சொல்லும் சமயங்களில் எத்தனையோ தடவை சேசுநாதர் நியாயமாய், நமது பேச்சைத் தடுத்து, ""போதும், போதும், நிறுத்து. நீ என்னை நேசிக்கிறாய் என்றும், நேசிப்பாயென்றும் உறுதிமொழி சொல்லிக் கொண்டிராதே. இதைப் போல் அநேக தடவை இவ்வார்த்தைகளைக் கேட்டாயிற்று. அதன்பின் அத்தனை தடவையும் என் இருதயத்தைக் குத்தியிருக் கிறாய்'' என்று சொல்லக்கூடும். சேசுநாதர் அவ்வாறு சொல்கிறாரா? இல்லை. பலவீனராகிய நாம் அவரை உட்கொண்டு, நாம் அவருக்குச் சொந்தமென்று சொல்லும்போது, அவர் நமது வார்த்தைக்கு அன்புடன் செவிசாய்க்கிறார். அவர் ""உன்னை நம்ப மாட்டேன்'' என்று ஒருக்காலும் சொல்வதில்லை. நேற்று அவரைக் கனமாய் நிந்தித்தவர்களுக்குக் கதவைச் சாத்திக்கொள்வதுமில்லை. அவர் தமது கரங்களை நீட்டி, ஒன்றையும் நமக்கு இல்லை எனறு சொல் லாமல், தமது ஆத்துமத்தையும், சரீரத்தையும், இரத்தத்தையும், தேவசுபாவத்தையும் நமக்குக் கொடுக்கிறார். நாம் அர்ச்சியசிஷ்டவர்களாயிருந்தால் எப்படியோ, அப்படியே நாம் எப்போதும் அர்ச்சியசிஷ்டவர்களாயிருந்ததுபோலவும் சேசுநாதர் நமக்கு முழு வதும் சொந்தமாகிறார். அவர் சிநேகத்தினிமித்தம் தம்மை நமக்குக் கையளிக்கிறார். இது எத்தகைய மேன்மையான அதிசயத்திற்குரிய மாதிரிகை என்போம்! நாமும் அவ்வாறு செய்வோமாக! சேசுவின் இருதயத் தங்கப் பேழைக்குக் களிமண்ணான நம்மைக் கையளிப்பது நியாயமே. ஆனால் பரலோக அரசர் களிமண்ணால் செய்த பாண்ட மும், கறைபட்ட மண்பாத்திரமுமான நமது எளிய இருதயத்திற்குத் தம்மைக் கையளிப்பது எப்பேர்ப்பட்ட தெய்வீகப் பைத்தியம்!

"நான் உனக்கு மாதிரிகை காட்டுகிறேன், அதைப் போல் செய்து என்னைப் பின்பற்று.'' மகன் தாய்க்கும், மனைவி கணவனுக்கும், ஒருவர் ஒருவருக்குத் தம்மைக் கையளிப்பதில்தான் மெய்யான சிநேகம் அடங்கியிருக்கிறது. ஆனால் சேசுநாதருக்கு ஒப்பிட்டுப் பேசக் கூடிய தாய் அல்லது மணவாளி உண்டா? அவரது ஞானத்தின்மட்டிலும், நீதியின் மட்டிலும், விசேஷமாய் அவரது இரக்கமுள்ள சிநேகத்தின் மட்டிலும் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்குமானால், நியாயப் படி நான் என்னை முழுவதும் அவரது நோக்கங்களுக்கு, அவரது இருதயத்துக்குக் கையளிக்க வேண்டும். என் தற்கால நித்திய கால நன்மை மற்றெவரையும்விட சேசுநாதருக்கு நன்றாய்த் தெரியும். தமது மட்டற்ற சிநேகத்தால் ஏவப்பட்டு, எப்போதும் என்னைப் பற்றிக் கவலை கொண்டு, அவர் சகலத்தையும் தமது மகிமைக்கும் எனது நன்மைக்கும் பயன்படுத்துகிறார். ஆதலால் ""ஆண்டவரே, உமக்கு என்ன பிரியமோ, செய்தருளும். என்னை எவ்விதம் வைத் திருந்தாலும் சரி, சுட்டாலும், பிய்த்தாலும், சுகப்படுத்தினாலும், காயப்படுத்தினாலும் சரி, உமது பிரியம்போல் ஆகக்கடவது. வாழ் விலும் மரணத்திலும் உம்மை நான் புகழ்வேனாக!'' என்று அவரிடம் சொல்வதல்லவா உன்னத ஞானமாகும்?

பிள்ளை தன் தாயின் கரங்களில் போய் விழுவதல்லவோ, இயற்கைக்கும், புத்திக்கும் உகந்த செய்கை? அது அவளது கரங்களில் விளையாடும், தூங்கும், அன்புடன் அரவணைக்கப்பட்டுப் போ´க்கப்படும். சகல தாய்மார்களிலும் அதிக நேசத்திற்குரிய தாயிடம் மாத்திரமல்ல, சேசுநாதரிடமே நம்மை ஒப்படைக்கிற விஷயமாகிய ஞான ஜீவியத்தில், நாம் ஏன் அவ்விதம் செய்யக் கூடாது? அவருக்கு என்னை முழுவதும் கையளிக்காமல், மெய் யாகவே அவரை நேசிக்க முடியுமா? 

"உம்முடைய இராச்சியம் வருக, உம்முடைய சித்தம்... செய்யப்படுவதாக'' என்ற ஜெபத்தை உன்னதமான முறையில் அநுசரிப்பது, சிநேகத்தின் நிமித்தம் தன்னைக் கையளிப்பதல்லவா? இன்றைக்கு, சவுக்கியமோ, வியாதியோ, ஆஸ்தியோ, வறுமையோ, எது எனக்கு நன்மையென்று நான் அறிவது எப்படி? ஆனால் அவருக்குத் தெரியும். ஆதலால், அவர் பிரியம்போல், தந்தையின் இருதய நோக்கம்போல் செய்யட்டும். சொற்புத்தியும், சுயபுத்தியும் இல்லாத சிறுபிள்ளை நான். ஆதலால் என்னை ஆலோசனை கேளாமல், அவர் என் விஷயமாய்த் தீர்மானம் செய்துகொண்டு நடப் பிப்பாராக! இதுவே புத்தியும், விமரிசையுமல்லவா? சகலத்துக்கும் மேலாக சர்வேசுரனை சிநேகிப்பது இதல்லவா?

இவ்வாறு, சேசுவே, என் வாழ்வு இன்பமாயிருந்தாலும், துன்பமாயிருந்தாலும், உமது கரங்களில் உமது இருதயத்தில் நான் சாய்ந்திருப்பேன். மற்றப்படி நான் நிமிர்ந்தாலும், விழுந்தாலும், எனக்குக் கிடைப்பது தித்திப்பானாலும், கசப்பானாலும், அது உம் சித்தப்படி ஆகக்கடவது. பலவீனமுள்ள என் சுபாவத்துக்கு எதுவும் சரிதானென்று நான் சொல்ல முடியாது. கற்றாழைச் சாறையும், கரும்புச் சாறையும் காட்டினால், அது எதைத் தெரிந்துகொள்ளும் என்பதைப் பற்றிச் சந்தேகமில்லை. ஆனால் உமது தெய்வீக ஒளியின் உதவியாலும், வரப்பிரசாத உதவியாலும், இதோ சேசுவே, சகலத் திலும் உமது சித்தப்படி நடக்கவும், என்னை முழுவதும் உமக்குக் கையளிக்கவும் விரும்புகிறேன் என்று சொல்ல வந்திருக்கிறேன்.

அர்ச்சியசிஷ்டவர்கள் அநுபவித்த மாறாத அமைதிக்கு அந்தரங்கக் காரணம் வேறில்லை. அவர்களும் நம்மைப் போல் கணக்கற்ற மாறுபாடுகளுக்கும், சோதனைகளுக்கும் உள்ளாகியிருந் தார்கள். ஆயினும் அவர்களது ஆத்துமத்தில் அமைதி சம்பூரணமா யிருந்தது. எரிகிற உலையில் சோதிக்கப்பட்டாலும் இன்னும் ஆழ்ந்த இன்பத்தில் அமிழ்ந்தியிருந்தார்கள் என்றும், இப்பரதேசத்திலேயே பரலோக வாழ்வைச் சுவைத்தார்கள் என்றும் சொல்ல வேண்டும். சேசுநாதரின் சித்தத்துக்கும் விருப்பத்துக்கும் முற்றிலும் அமைந்து, நாமே எதையும் ஆசிக்காமலும், தள்ளிவிடாமலும், முட்களையும், மலர்களையும் சரிசமானமாய் அன்புடன் ஏற்றுக்கொண்டு, அவரது இருதயத்தில் வாழ்வது எவ்வளவோ நன்மையானதென்று அறிவோ மாக! சேசுநாதரைத் தவிர மற்றதெல்லாம் நமக்கு ஒரு பொருட்டல்ல என்று பூரண அமைதியுடன் வாழும் உன்னத சிகரத்தை அடைய இந்நாட்களில் தீர்மானிப்போமாக! இந்தத் தீர்மானங்களை நிறை வேற்ற முயற்சிப்பதிலும்கூட, நாம் அவரது இருதயத்துக்கு முழுவதும் கீழ்ப்படிந்த மனதுள்ளவர்களாயிருப்போமாக!

அவ்விதமாயின், அவர் அர்ச். மர்கரீத் மரியம்மாளுக்குச் சொன்னபடி நமக்கும் சொல்லக்கூடும்: ""நான் ஆத்துமங்களை நடத்து வதில் வெகு தேர்ச்சியுள்ளவன். அவர்கள் தங்களை மறந்து எனக்கு முழுவதும் அமைந்து நடப்பார்களாகில், அற்ப ஆபத்தின்றி அவர்களை நடத்திச் செல்வேன்.'' இந்த ஆத்தும குரு தவறமாட்டார், உன்னைக் கைவிட மாட்டார்; அவரை ஒருவரும் வேறிடத்துக்கு மாற்ற முடியாது, மரிக்க மாட்டார். அவரை எப்போதும் கண்டு பேசலாம். அவர் எப்போதும் விழித்திருந்து காத்துக்கொண்டிருக் கிறார். உனது சிறிய படகின் சுக்கான் கைப்பிடியை அவரிடம் கொடு. உன் பயணம் அப்போது வெகு பரிசுத்தமாயிருக்கும். சேசு நாதர் படகை நடத்தி உன்னை அக்கரை சேர்க்கையில், விழித்துப் பார்ப்பது இன்பமாயிருக்கும்.

கண்ணை மூடிக்கொண்டு, அவரது கரங்களில் உன்னை ஒப்படைத்துவிடு; அவரது இருதயத்துக்கு உன்னைக் கையளித்து விடு.