மணவிலக்கு சரியா?

மோசே அனுமதித்திருந்த மணவிலக்கு சட்டத்திற்கு எதிரான கட்டளையை இயேசு கிறிஸ்து வழங்கினார். பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் மணவிலக்கு செய்கிறவர் விபசாரம் செய்வதாக அவர் சாடுகிறார்.

மணவிலக்கு கூடாது

பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், “ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?” என்று கேட்டனர். அவர் மறுமொழியாக, “படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்’ என்று நீங்கள் மறைநூலில் வாசித்தது இல்லையா?” என்று கேட்டார். மேலும் அவர், “இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டு தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து, “அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?” என்றார்கள். அதற்கு அவர் “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கி விடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை” என்றார். (மத்தேயு 19:3-8)

விபசாரம் செய்கிறார்

“‘தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்.” (மத்தேயு 5:31-32)