தவக்கால நோன்பில் தளர்வு

மேற்கூறப்பட்ட விடயத்திலிருந்து மத்திய காலப்பகுதியில் தவக் காலமானது ஜரோப்பாவின் பெரும் பகுதிகளில் ஆறு வாரங்களை உள்ளடக்கியதாகவும், ஞாயிறு உட்பட எல்லா நாட்களும் நோன்பு நாட்களாகக் கொள்ளப்பட்டன.

இங்கு ஆரம்பம் முதல் எல்லா இறைச்சி வகைகளும் விலக்கப்பட்டிருந்தன. மேலும் (Lacticinia) என்னும் உணவு வகை ஞாயிறு தினத்தில் விலக்கப்பட்டிருந்தது. நோன்பு நாட்களில் ஒரு உணவு மட்டும் அதுவும் மாலை நேரத்தில் மட்டும் உட்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

எனினும் நோன்பு நாள் உணவு பி.ப. 3 மணி அளவில் உட்கொள்வது சகிப்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது மேலும் முன்நோக்கி நகர்த்தப்பட்டு பி.ப. 2 மணிக்கு நோன்பு உணவை உட்கொள்வது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு உட்கொள்ளும் உணவு மதியச் செபம், பி.ப. 3 மணிச் செபம், மாலைச் செபம் என்பவற்றுடன் நெருங்கிய தொடர்புள்ளதாகக் காணப்பட்டது.

இதனால் பி.ப. 3 மணியில் செய்யப்படும் செபம் மதியத்திற்கு மாற்றம் பெற்று தவக் காலத்தில் மதிய செபத்தின் பின்பு உணவு உட்கொள்ளும் மரபு வழக்கிற்கு வந்தது. எனினும் இவ்வாறான வழக்கிற்கு மறுப்பான காரணங்களும் முன்வைக்கப்பட்டன. அதேவேளையில் தவக்கால நோன்பின்போது மதியத்தில் உணவு உட்கொள்வோர் நோன்பின் விதி களை மீறவில்லை எனக் கொள்ளப்பட்டது.

தவக்கால நோன்பின் தன்மையின் மற்றொரு தளர்வாகக் கொள்ளப்பட்டது நோன்பு நாட்களில் மாலையில் உட்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்ட எளிய சிற்றுண்டியாகும். இத்தளர்வு துறவு மடங் களில் மாலையில் வேலைக்களைப்பின் காரணமாக ஒரு மிடறு நீர் உட்கொள்ளலாம் எனவும் அனுமதிக்கப்பட்டது.

இது படிப்படியாக மேலும் பல தளர்வு நிலைக்கு வழிவகுத்தது. சிறிய அளவு உணவாக அல்லது ஊட்டமளிக்கும் பானமாக உட்கொள்வது அனுமதிக்கப்பட்டது. இது நோன்பை மீறும் செயலல்ல எனத் தோமஸ் அக்வினார் உட்பட மேலும் சில இறையியலாளர்கள் கருத்தாகும்.

இது மேலும் தளர்வு பெற்று எட்டு அவுன்ஸ் உணவு உட்கொள்ளலாம் என்னும் நிலை வழக்கிற்கு வந்தது. இந்நிலை பிற்பட்ட காலங்களில் மேலும் தளர்வு பெற்றது. காலையில் தேனீர் அல்லது காப்பியுடன் சிறு துண்டு பாண் உட்கொள்ளும் வழக்கம் சகிப்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தவக்காலத்திலேயே முதலில் ஞாயிறு தினத்திலும் பின்பு வாரத்தில் ஒரு நாள், இரண்டு நாட்கள், மூன்று, நான்கு, ஐந்து நாட்கள் இறைச்சி உண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. நீண்ட காலமாக இறைச்சி விலக்கப்பட்டிருந்த பெரிய வியாழக்கிழமையிலும் இறைச்சி உண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.