தொபியாசு ஆகமம்

அதிகாரம் 01

1 நெப்தலி குலத்தினரான தொபியாசு என்பவர் நெப்தலி நகரில் வாழ்ந்து வந்தார். இந்நகர் கலிலேயா நாட்டின் மேற்பகுதியில் நாசூன் நகருக்கு மேல் செப்பேத் நகருக்கு இடப்பக்கத்தில் மேற்றிசைக்குப் போகிற பாதைக்கு அப்பால் இருக்கின்றது

2 அசீரிய அரசன் சல்மனாரின் காலத்தில், அவர் சிறைப்படுத்தப்பட்டு அடிமையானார். அவ்வடிமைத் தனத்தின் போதும். அவர் உண்மை வழியை விட்டு விலகாது நின்றார்,

3 தம் உடன் அடிமைகளான தம் குலச்சகோதரர்களுக்குத் தமக்கிருந்த எல்லாவற்றையும் நாளும் கொடுத்து வந்தார்.

4 நெப்தலி குலத்தில் அவரே மிகவும் இளையவர். ஆயினும், இளைஞர் செய்யும் சிறுபிள்ளைத்தனமான எச்செயலையும் அவர் செய்தவரல்லர்.

5 மேலும், இஸ்ராயேல் அரசன் எரொபோவாம் செய்து வைத்திருந்த பொற்கன்றுக் குட்டிகளை அனைவரும் வழிபட்டு வந்தபோதிலும், இவர்மட்டும் மற்றவர்களின் தொடர்பை விட்டு விலகினார்.

6 யெருசலேமிலுள்ள ஆண்டவரின் ஆலயத்திற்குப் போய், அங்கு இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரை வழிபட்டு தம் முதற் பலன்களையும், பத்தில் ஒரு பாகங்களையும் தவறாது ஒப்புக்கொடுத்து வந்தார்.

7 முன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை யூத மதத்தைத் தழுவியோருக்கும் புறவினத்தாருக்கும் தம் பொருட்களில் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்து வந்தார்,

8 அவர் இளமை முதல் இவை போன்ற நற்செயல்களைக் கடவுள் கட்டளைப்படி செய்து வந்தார்.

9 வயது வந்த போது, தம் குலத்தைச்சேர்ந்த அன்னாள் என்ற பெண்ணை மணந்து, அவள் முலம் ஒரு மகனைப் பெற்றார். அப்பிள்ளைக்குத் தம் பெயரையே சூட்டினார்,

10 சிறுவயது முதல் கடவுளுக்கு அஞ்சி, எலலாப் பாவங்களையும் விட்டு விலகி நடக்க வேண்டும் என்று அப்பிள்ளைக்கு நற்புத்தி புகட்டி வந்தார்.

11 அவ்வாறு வாழ்ந்து வருகையில் தான், அவர் தம் மனைவியோடும் மகனோடும் தம் குலத்தார் அனைவரோடும் சிறைப்படுத்தப்பட்டு நினிவே நகருக்குக் கொண்டு போகப்பட்டார்.

12 அங்கே அனைவரும் புறவினத்தாரின் உணவுகளை வாங்கி உண்டு வந்தனர். ஆனால் அவர் மட்டும் தம் ஆன்மாவைக் கறைப்படுத்தாதவாறு, அவற்றை விலக்கி வந்தார்.

13 இவ்வாறு அவர் தம் முழு இதயத்தோடும் ஆண்டவர் மேல் கருத்தாய் இருந்தார். எனவே, சல்மனசாரின் கண்களில் தயை கிடைக்கும்படி கடவுள் அவர் மேல் அருள் கூர்ந்தார்.

14 இதன் பயனாக, அவர் தம் விருப்பப்படியெல்லாம் செய்யவும், தாம் நினைத்த இடத்திற்கெல்லாம் போகவும் அரசன் அவருக்கு உரிமை அளித்திருந்தான்.

15 எனவே, தொபியாசு சிறைப்பட்டிருந்த எல்லாரிடமும் சென்று நல்ல அறிவுறைகளை அவர்களுக்குக் கூறி வருவார்.

16 அவர் மேதியருடைய நகரான இராஜேசுக்கு வந்த போது, அரசன் தமக்குப் பரிசாய்க் கொடுத்திருந்த பத்துத் தாலந்து வெள்ளி அவரிடம் இருந்தது.

17 அங்கே தம் இனத்தார் மத்தியிலே தம் குலத்தினரான கபேலுசு வறுமையில் வாடக் கண்ட அவர், கடன் பத்திரம் எழுதச்சொல்லி, மேற்சொல்லப்பட்ட பணத்தை அவனிடம் கொடுத்தார்.

18 பன்னாட்களுக்குப் பிறகு அரசன் சல்மனசார் இறந்தான். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் சென்னாக்கெரிப் அரியனை ஏறினான். இவனுக்கோ இஸ்ராயேல் மக்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது.

19 இதைக் கண்னுற்ற தொபியாசு, தம் சுற்றத்தார் யாவரையும் நாள் தோறும் போய்ப் பார்த்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, தமக்கு இருந்ததை அவர்கள் ஒவ்வொருவருக்கும் முடிந்த வரையில் கொடுத்து வருவார்.

20 பசித்தோர்க்கு உணவு அளிப்பார். ஆடையற்றோர்க்கு ஆடை வழங்குவார். இறந்தோரையும் கொலை செய்யப்பட்டோரையும் அடக்கம் செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்.

21 கடைசியாய் சென்னாக்கெரிப் புரிந்த தெய்வ நிந்தனையை முன்னிட்டுக் கடவுள் அவனுக்கு அனுப்பியிருந்த படுத்தோல்வியின் காரணமாக,அவன் யூதேயா நாட்டை விட்டுத் திரும்பி வந்து கோப வெறியால் இஸ்ராயேல் மக்களுள் பலரைக் கொன்று குவித்தான். தொபியாசோ அவர்கள் பிணங்களைப் புதைத்து வந்தார்.

22 இது அரசனுக்கு அறிவிக்கப்படவே, அவன் தொபியாசைக் கொல்லவும், அவர் உடமைகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்யவும் கட்டளையிட்டான்.

23 எல்லாவற்றையும் பறிக்கொடுத்த தொபியாசோ, தம் மகனோடும் மனைவியோடும் தப்பியோடி தமக்கு அன்பு காட்டிவந்த பலரின் துணை கொண்டு மறைந்த வாழ்வு நடத்தி வந்தார்.

24 அரசனோ நாற்பத்தைந்து நாட்களுக்குப் பின் தன் சொந்த மக்களாலேயே கொலை செய்யப்பட்டான்.

25 அப்பொழுது தொபியாசு தம் வீடு திரும்பினார். அவர் உடைமைகள் அனைத்தும் அவருக்குத் திரும்பித் தரப்பட்டன.

அதிகாரம் 02

1 பின்னர் ஆண்டவரின் திருவிழாவின் போது தொபியாசின் வீட்டில் பெரிய விருந்து ஒன்று தயாரிக்கப்பட்டது.

2 அப்பொழுது அவர் தம் மகனை நோக்கி, "நம் குலத்தாரில் தெய்வபயமுள்ள சிலரை விருந்துக்கு அழைத்துவா" என்று சொன்னார்.

3 அவனும் அவ்வாறே சென்றான். திரும்பி வந்த போது, "இஸ்ராயேல் மக்களுள் ஒருவன் கொலை செய்யப்பட்டுத் தெருவிலே கிடக்கிறான்" என்று தன் தந்தையிடம் சொல்லவே, அவர் அவ்வினாடியே பசியோடு பந்தியை விட்டு எழுந்து பிணம் கிடந்த இடத்திற்குச் சென்றார்.

4 சூரியன் மறைந்த பின் அவனை எச்சரிக்கையாய் அடக்கம் செய்யலாம் என்று எண்ணி, ஒருவருக்கும் தெரியாமல் பிணத்தைத் தம் வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு வந்தார்,

5 அதை அங்கே மறைத்து வைத்து விட்டு, ஆறாத்துயரோடும் திகிலோடும் உணவு அருந்தினர்.

6 ஏனெனில், "உங்கள் திருநாட்களைத் துக்கமும் புலம்பலும் நிறைந்த நாட்களாக மாற்றுவோம்" என்று இறைவாக்கினார் ஆமோசு மூலம் கடவுள் கூறியிருந்த வாக்கு அவரது நினைவுக்கு அப்போது வந்தது.

7 சூரியன் மறைந்த பின், அவர் போய்ப் பிணத்தைப் புதைத்தார்.

8 எனவே, அவருடைய அயலார் அனைவரும் அவரைக் கடிந்து பேசி, "இதே செயலைச் செய்ததற்காக முன்பு ஒரு முறை சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டும், எப்படியோ தப்பித்துக் கொண்டீர், மறுபடியும், நீர் இறந்தோரை அடக்கம் செய்யத் துணிந்தது ஏன்?" என்றனர்.

9 ஆனால் அரசனுக்கு அஞ்சுவதை விடத் தொபியாசு கடவுளுக்கே அதிகம் அஞ்சி வந்தார். ஆதலால், கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைத் தூக்கி வந்து தம் வீட்டிலேயே ஒளித்து வைத்து, நள்ளிரவில் அவற்றை அடக்கம் செய்து வந்தார்.

10 அன்றொரு நாள் நிகழ்ந்ததாவது: அவர் அன்று அடக்கம் செய்த களைப்பில், தம் வீட்டிற்குத் திரும்பி வந்து, அங்கே சுவரோரமாய்க் கீழே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.

11 அப்பொழுது தூக்கணாங்குருவிக் கூண்டிலிருந்து சூடான எச்சம் தூங்கிக் கொண்டிருந்த அவர் கண்களில் விழ, அவை குருடாயின.

12 புனித யோபின் பொறுமையைப் போல், இவரது பொறுமையும் இவருடைய சந்ததியாருக்கு எடுத்துக் காட்டாய் இருக்கும் பொருட்டே, இச்சோதனை இவருக்கு நேரிடக் கடவுள் திருவுளமானார்.

13 இவர் இளமை முதல் எப்போழுதும் கடவுளுக்கு அஞ்சி, அவர் கட்டளைகளைக் கடைப்பிடித்து வந்திருந்தபடியால், பார்வையிழந்த இந்த அவல நிலையிலும், அதுப்பற்றிக் கடவுளுக்கு எதிராய் அவர் முறையிடவில்லை.

14 அதற்கு மாறாக, அவர் தெய்வ பயத்தில் நிலையாய் நின்று தம் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு நன்றி கூறி வந்தார்.

15 ஏனெனில், புனித யோபை மன்னர்கள் பழித்தது போல், இவருடைய உற்றார் உறவினரும் இவரது நடத்தையை இகழ்ந்து பேசினார்கள்.

16 நீர் எதை நம்பித் தர்மம் கொடுத்தும், இறந்தோரை அடக்கம் செய்தும் வந்தீரோ, அந்த உமது நம்பிக்கை வீண்போயிற்று அன்றோ?" என்று அவரைப் பழித்து வந்தார்கள்.

17 தொபியாசோ அவர்களைக் கடிந்து, "நீங்கள் இவ்வாறு பேசாதீர்கள். ஏனெனில், நாம் புனிதர்களின் மக்கள்.

18 கடவுள் மேல் என்றுமே தளரா விசுவாசம் கொண்டிருப்போருக்கு அவர் அளிக்கவிருக்கும் மறுவுலக வாழ்வை எதிர்பார்ப்போர் நாம்" என்பார்.

19 அவருடைய மனைவி அன்னாள் நாள் தோறும் நெசவு வேலைக்குப் போய்த் தன் சொந்த உழைப்பால் பெறக்கூடிய ஊதியத்தை வீட்டிற்குக் கொண்டு வருவாள்

20 ஒருநாள், அவள் ஓர் ஆட்டுக் குட்டியை வாங்கி அதை வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு வந்தாள்.

21 அவளுடைய கணவர் அது கத்தக்கேட்டு, "இது களவு செய்யப்பட்ட ஆடு அல்ல என்று பார்த்துக் கொள். களவு செய்யப்பட்டதாயின் அதன் உரிமையாளரிடம் திரும்பிக் கொடுத்து விடு. ஏனெனில், களவு செய்யப்பட்ட பொருளைத் தொடுவதும் உண்ணுவதும் நமக்கு ஆகாது" என்றார்.

22 இதைக்கேட்ட அவருடைய மனைவி கோபம் கொண்டு, "உமது நம்பிக்கை எல்லாம் வீண் என்றும், உம் தருமச் செயல்கள் அனைத்தும் இவ்வளவு தான் என்றும் இப்போது நான் தெளிவாய்க் காண்கிறேன்" என்றாள்.

23 இவ்வாறு அவள் அவரை ஏசினாள்.

அதிகாரம் 03

1 அப்போது தொபியாசு பெருமூச்செறிந்து கண்ணீர் விட்டு அழுது செபிக்கத் தொடங்கினார். "ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர்.

2 உம் தீர்ப்புகள் அனைத்தும் நேர்மையானவையே; உம் வழிகள் எல்லாம் இரக்கமும் உண்மையும் நீதியுமானவையே.

3 ஆண்டவரே, இப்பொழுது அடியேனை நினைவு கூர்ந்தருளும். என் பாவங்களுக்காகப் பழிவாங்கவும் வேண்டாம்; என் குற்றங்களையும் என் பெற்றோரின் தீச்செயல்களையும் நினைக்கவும் வேண்டாம்.

4 ஏனெனில், நாங்கள் உம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தோமில்லை. அதன் பொருட்டு நீர் எங்களை எந்நாடுகளில் சிதறடித்தீரோ, அந்நாட்டுக் குடிகளெல்லாம் எங்களைக் கொள்ளையிடவும் சிறைப்படுத்தவும் சாகடிக்கவும் கேலி செய்யவும், இட்டுக்கட்டி எங்களைப் பழிக்கவும் எங்களை அவர்கள் கையில் ஒப்புவித்து விட்டீரே.

5 இப்போதும் ஆண்டவரே, நாங்கள் உம் கட்டளைகளின்படி செயல் புரியாமலும், உமது திருமுன் நேர்மையுடன் நடவாமலும் போனதாலன்றோ உமது பயங்கரமான தீர்ப்புகளுக்கு ஆளானோம்?

6 எனவே ஆண்டவரே, உமது விருப்பம்போல் என்னை நடத்தி, என்னை அமைதியில் இளைப்பாறக் கட்டளையிட்டருளும். ஏனெனில், நான் உயிர் வாழ்வதை விட இறப்பதே மேல்" என்று வேண்டிக் கொண்டார்.

7 அதே நாளில் நிகழந்ததாவது: மேதியருடைய ஊராகிய இராஜேசு நகரில் இரகுவேலின் மகள் சாராளை அவளுடைய தந்தை வீட்டு ஊழியக்காரிகளில் ஒருத்தி பழித்துப் பேசினாள்.

8 அதற்குக் காரணம், அவள் ஏழு கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள். அவர்கள் அவளோடு சேர்ந்தவுடன் அசுமோதேயுசு என்ற பேய் அவர்களைக் கொன்று போட்டது.

9 ஆகையால் அவ்வூழியக்காரி செய்த குற்றத்தைக் குறித்து சாராள் அவளைக் கடிந்து பேசின போது, வேலைக்காரி அவளை நோக்கி, "நீ உன் கணவர்களைக் கொன்றவள்; உன் வயிற்றில் பிறந்த மகனையோ, மகளையோ நாங்கள் பூமியின் மீது காணாதிருக்கட்டும்.

10 நீ ஏற்கெனவே ஏழு கணவர்களைக் கொன்றுவிட்டாய். அவ்விதமே என்னையும் கொல்ல உனக்கு விருப்பமோ?" என்றாள். இவ்வார்த்தையைக் கேட்டவுடன் சாராள் தன் வீட்டின் மாடிக்குப் போய் மூன்று நாள் இரவு பகலாக ஒன்றும் உண்ணாமலும் குடியாமலும் இருந்தாள்.

11 செபத்தில் நிலைத்து, இந்த நிந்தையினின்று தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் விட்டு அழுது கடவுளை இறைஞ்சி மன்றாடி வந்தாள்.

12 மூன்றாம் நாளில், அவள் தன் செபத்தை முடித்துக் கடவுளை வாழ்த்தத் தொடங்கினாள்:

13 எங்கள் முன்னோரின் கடவுளே, உமது திருப்பெயர் வாழ்த்தப் பெறுவதாக' நீர் கடிந்து கொண்டாலும் தயை காட்டுகிறீர். துன்ப காலத்தில் உம்மை மன்றாடுகிறவர்களின் பாவங்களை மன்னிக்கிறீர்.

14 ஆண்டவரே, உம்மை நோக்கியே என் முகத்தைத் திருப்புகிறேன். என் கண்களை ஏறெடுத்து உம்மை நோக்கியே கூப்பிடுகிறேன்.

15 ஆண்டவரே, நிந்தை என்ற சங்கிலியால் கட்டுண்ட எண்னைக் காத்தருளும். இன்றேல், பூமியினின்று என்னை எடுத்துக் கொள்ளும்.

16 இதுவே என் மன்றாட்டு. நான் ஒருபோதும் கணவன் மீது தவறான ஆசை கொண்டிருந்ததில்லை என்றும், எல்லாச் சிற்றின்ப ஆசைகளிலுமிருந்தும் என் ஆன்மாவைத் தூய்மையாய்க் காத்து வந்துள்ளேன் என்றும் ஆண்டவராகிய உமக்குத் தெரியுமே!

17 பொறுப்பற்றவர்களோடு நான் ஒருகாலும் சேர்ந்ததுமில்லை சரசம் பண்ணினவர்களோடு நான் ஒருகாலும் கூடினதுமில்லை.

18 நான் உமக்கு அஞ்சிக் கணவனை ஏற்றுக் கொண்டேனே அன்றி, சிற்றின்ப வேட்கையை நிறைவேற்ற அல்லவே.

19 ஒன்றில், நான் அவர்களுக்குத் தகுந்தவள் அல்ல; அல்லது ஒருவேளை நீர் வேறொருவனுக்கு என்னை நியமித்திருந்ததால், அவர்கள் எனக்குத் தகுந்தவர்கள்' அல்லர் போலும்.

20 உமது திருவுளத்தை அறிய மனிதனுக்கு ஆற்றல் உண்டோ? ஆயினும், உம்மை வழிபடுவோர் அனைவர்க்கும் ஒன்றுமட்டும் உறுதி:

21 அதாவது, ஒருவன் தன் வாழ்நாளில் சோதிக்கப்பட்டால் முடிவில் அவன் வெற்றி அடைவான்; துன்பதுயரம் வந்துற்றால் அவற்றினின்று விடுதலை பெறுவான்; தண்டிக்கப்பட்டால் உம் இரக்கத்தைப் பெறுவான்.

22 காரணம், எங்கள் அழிவில் நீர் மகிழ்பவர் அல்ல. ஏனெனில், புயலுக்குப்பின் நீர் அமைதி அளிக்கின்றீர்; கண்ணீர், புலம்பலுக்குப்பின் மகிழ்ச்சி தருகின்றீர்.

23 இஸ்ராயேலின் கடவுளே, உமது திருப்பெயர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவதாக!" என்றாள்.

24 அந்நேரத்திலேயே அவர்கள் இருவரின் மன்றாட்டுகளும் உன்னத கடவுளின் மகிமைத் திருமுன் கேட்டருளப்பட்டன.

25 ஆதலால், ஒரே காலத்தில் ஆண்டவர் திருமுன் மன்றாடி வேண்டிக்கொண்ட அவ்விருவரின் குறையும் நீங்கும் பொருட்டு ஆண்டவரின் புனித தூதர் இரபாயேலைக் கடவுள் அனுப்பி வைத்தார்.

அதிகாரம் 04

1 தொபியாசு தாம் சாகும்படி செய்து கொண்ட விண்ணப்பம் கேட்டருளப்படும் என்று நம்பி, தம் மகன் தோபியை அருகே அழைத்தார்.

2 அவனை நோக்கி, "மகனே, என் வாய்மொழிகளைக் கேட்டு அவற்றை உன் இதயத்தின் ஆழத்தில் பதிய வை.

3 கடவுள் என் உயிரை எடுத்துக் கொண்ட பின் என் உடலை அடக்கம் செய். உன் தாயின் வாழ்நாள் முழுவதும் அவளை மதித்துப் போற்று.

4 அவளது வயிற்றில் நீ இருக்கும் போது உன் பொருட்டு அவள் எத்தனை துன்ப துயரங்களை அனுபவித்தாள் என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும்.

5 அவளும் உயிர் நீத்தப்பின் என் அருகிலேயே அவளை அடக்கம் செய்.

6 உன் வாழ்நாள் எல்லாம் கடவுளை உன் எண்ணத்தில் கொண்டிரு. ஒருகாலும் பாவத்துக்கு இணங்காதபடியும், நம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளை மீறாதபடியும் எச்சரிக்கையாய் இரு.

7 உன் உடைமையிலிருந்து தானம் செய். எந்த ஏழையைக் கண்டாலும் புறக்கணியாது அவனுக்குப் பரிவு காட்டு. அவ்வாறு செய்தால் கடவுளும் உன்னைப் புறக்கணியாமல் உனக்குப் பரிவு காட்டுவார்.

8 உன் நிலைமைக்கு ஏற்ப பிறர் மேல் இரக்கம் காட்டு.

9 உனக்கு மிகுதியான செல்வம் இருக்கும் போது ஏராளமாய்க் கொடு; குறைந்த செல்வம் இருக்கும் போது கொஞ்சமாய், ஆனால் நன்மனத்தோடு கொடுக்கும்படி கவனித்துக்கொள்.

10 இவ்வாறு நீ செய்தால், தேவைப்படும் நாளில் அதுவே உனக்குப் பேருதவியாய் இருக்கும்.

11 ஏனெனில் ஈகை எல்லாப் பாவங்களினின்றும் சாவினின்றும் ஒருவனை மீட்கிறது. அத்தோடு ஆன்மாவை இருளினின்று விடுவிக்கிறது.

12 தானம் கொடுப்போர் அனைவர்க்கும் அவர்களின் ஈகை உன்னத கடவுளின் திருமுன் ஆழ்ந்த நம்பிக்கையைத் தரும்.

13 எவ்வித விபசாரத்திற்கும், மகனே, இடம் கொடாதே. உன் மனைவியைத் தவிர வேறெந்தப் பெண்ணோடும் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் பாவம் புரிய இணங்காதே.

14 உன் சிந்தையிலாவது சொல்லிலாவது எப்போதேனும் ஆணவம் தலைகாட்ட விடாதே. ஏனெனில் எல்லாக் கேடுகளுக்கும் அடிப்படை ஆணவமே.

15 எவனாவது உனக்கு ஏதேனும் ஒரு வேலை செய்திருந்தால், உடனே அவனுக்குக் கூலி கொடுக்கவேண்டும். வேலைக்காரரது கூலி ஒருபோதும் உன்னிடம் இருக்கலாகாது.

16 அயலான் உனக்கு வருத்தமுண்டாகும்படி செய்த எதையும் நீ மற்றவனுக்கு ஒருபோதும் செய்யாதபடி பார்த்துக்கொள்.

17 பசித்தவர்களுக்கும் ஏழைகளுக்கும் உன் உணவைப் பங்கிட்டு உண்பதும், உடையற்றவர்களை உன் சொந்த ஆடைகளால் உடுத்துவதும் நல்லது.

18 உன் அப்பத்தையும் இரசத்தையும் நீதிமானின் கல்லறையில் வைத்துப் பரிமாறு;

19 பாவிகளோடு கூடி உண்ணாதே. ஞானியிடம் எப்போதும் ஆலோசனை கேள்.

20 எக்காலத்தும் கடவுளை ஏத்திப் போற்று. அவர் உன்னை வழி நடத்தும்படியும், உன் ஆலோசனைகள் எல்லாம் அவரிடத்தில் நிலைகொள்ளும்படியும் அவரை மன்றாடு

21 மகனே, நான் இன்னுமொரு செய்தியை உன்னிடம் கூறவேண்டும். அதாவது: நீ சிறுவனாய் இருந்த போது, கபேலுசு என்பவனுக்கு நான் பத்துத் தாலந்து வெள்ளி கடன் கொடுத்தேன். அவன் மேதியர்களின் நகரான இராஜேசில் குடியிருக்கிறான்.

22 அந்த கடன் பத்திரம் என்னிடம் இருக்கிறது. ஆகவே நீ அவனிடம் சென்று மேற்சொன்ன தொகையை அவனிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவன் கொடுத்த சீட்டை அவனுக்கு,த திரும்பிக் கொடுத்துவிடும்படி ஆவன செய்.

23 அஞ்சாதே மகனே' நாம் ஏழ்மையில் வாழ்வது உண்மையே. ஆயினும், நாம் கடவுளுக்கு அஞ்சி, எவ்விதப் பாவத்தையும் விட்டு விலகி நன்மை செய்து வருவோமானால், ஏராளமான நன்மைகள் நம்மை வந்தடையும்" என்று கூறினார்.

அதிகாரம் 05

1 அப்போது தோபி தந்தையை நோக்கி, "தந்தாய் நீர் எனக்குக் கட்டளையிட்டவற்றை எல்லாம் நான் செய்து முடிப்பேன்.

2 ஆனால் அப்பணத்தை மட்டும் எப்படித் திரும்பப் பெறுவது என்று அறியேன். கபேலுசுக்கு என்னைத் தெரியாது; எனக்கு அவனைத் தெரியாது. அவன் என்னை அறிந்துகொள்ளும் பொருட்டு நான் அவனுக்கு என்ன அடையாளம் காட்ட முடியும்? அதுமட்டுமன்று; அவ்வூருக்குப் போகிற வழி முதலாய் எனக்குத் தெரியாதே" என்று மறுமொழி சொன்னான்.

3 அதைக் கேட்ட அவனுடைய தந்தை அவனைப் பார்த்து, "அவன் எழுதிக் கொடுத்த கடன் சீட்டு என்னிடம் இருக்கிறது. நீ அதை அவனுக்குக் காண்பித்தாலே போதும். அவன் தாமதமின்றி உன்னிடம் பணத்தைக் கொடுத்து விடுவான்.

4 ஆயினும் நான் உயிரோடுடிருக்கும் போதே நீ அவனிடம் சென்று கொடுத்த கடனைப் பெற்று வரும் பொருட்டு இப்போதே நம்பிக்கைக்குரிய ஒருவனைத் தேடிப்பார். உன்னோடு வருவதற்கு அவன் கேட்கும் கூலியையும் விசாரித்து வா" என்றார்.

5 எனவே, தோபி புறப்பட்டுப்போய், தன் இடையை வரிந்து கட்டிக்கொண்டு பயணத்துக்குத் தயாராயிருக்கிறவனைப் போல் நின்று கொண்டிருந்த அழகிய இளைஞர் ஒருவரைக் கண்டான்.

6 அவர் கடவுளின் தூதர் என்று அறியாத தோபி அவரை வாழ்த்தி, "தம்பி, நீ யார்?" என்று வினவ, அவர், "இஸ்ராயேல் மக்களுள் ஒருவன் நான்" என்றார்,

7 தோபி மறுபடியும், "மோதியருடைய நாட்டுக்குப் போகும் வழி உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.

8 அதற்கு அவர், "தெரியும்; பலமுறை நான் அவ்வழியே போய் வந்நிருக்கிறேன். ஏக்பாத்தானிசு மலை மீதுள்ள மேதியருடைய இராஜேசு நகருக்கும் போயிருக்கிறேன். அங்கே நம் சகோதரரில் ஒருவனான கபேலுசு என்பவன் இருக்கிறான். நான் அவன் வீட்டிலே தங்கியுமிருக்கிறேன்" என்றார்.

9 அதைக்கேட்டுத் தோபி, "தயவுசெய்து சற்று நேரம் இங்கேயே இரு; நான் போய் என் தந்தையிடம் இவற்றைத் தெரிவித்து விட்டு வருகிறேன்" என்றான்.

10 தோபி போய்த் தன் தந்தைக்கு அவற்றை எல்லாம் அறிவித்தான். இதைக் கேட்ட தந்தை வியப்புற்று அவரைத் தம்மிடம் அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டார்.

11 எனவே அவரும் வந்து, "மகிழ்ச்சி உம்மோடு என்றும் இருப்பதாக" என்று தொபியாசை வாழ்த்தினார்.

12 அதற்குத் தொபியாசு, "இருளில் உழன்றுக்கொன்டு விண்ணக ஒளியைக் காணாதிருக்கும் எனக்கு என்ன மகிழ்ச்சி!" என்று சொன்னார்.

13 அதற்கு அவர், "திடமாயிரும்; கடவுள் விரைவில் உமக்கு நலம் அளிப்பார்" என்றார்.

14 தொபியாசு அவரை நோக்கி, "மேதியருடைய இராஜேசு நகரிலிருக்கிற கபேலுசிடம் என் மகனைக் கூட்டிச்செல்ல உன்னாலே கூடுமா? நீ திரும்பி வந்த பின் உனக்குக் கூலி தருவேன்" என்றார்.

15 கடவுளின் தூதர் அவரைப்பார்த்து, "நான் அவனை அழைத்துப் போய்த் திரும்பவும் உம்மிடம் கூட்டிவருவேன்" என்று மறுமொழி கூறினார்.

16 அதைக் கேட்ட தொபியாசு, "தம்பி, நீ யார்? எந்தக் குலத்தைச் சேர்ந்தவன்? தயவு செய்து சொல்" என, தூதர் அவரை நோக்கி, "உம் மகனுடன் போக ஒரு கூலியாளைத் தானே நீர் தேடுகிறீர்?

17 கூலியாளின் குலத்தைப் பற்றி உமக்குக் கவலை ஏன்? ஆயினும் நான் உமக்கு மனவருத்தம் கொடுக்க விரும்பவில்லை.

18 நான் பெரிய அனானியாசின் மகன்; என் பெயர் அசாரியாசு" என்றார்.

19 அதற்குத் தொபியாசு, "நீ பெரிய குடும்பத்தில் தோன்றியவன். உனது குலத்தைப் பற்றி நான் அறிய விரும்பினதற்காகக் கோபம் கொள்ள வேண்டாம்" என்று வேண்டினார்.

20 கடவுளின் தூதர் அவரை நோக்கி, "நான் உம் மகனை நலமே கூட்டிப் போய்த் திரும்பவும் நலமே உம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்" என்றார்.

21 அதற்குத் தொபியாசு, "நல்லது, நலமே போய் வாருங்கள். உங்கள் பயணத்தின் போது கடவுள் உங்களோடு இருப்பாராக! அவருடைய தூதரும் உங்களுக்குத் துணையாய் இருப்பாராக!" என்று சொல்லி வாழ்த்தினார்.

22 பயணத்திற்குத் தேவையான அனைத்தும் தயாரனபின், தோபி தன் தாய் தந்தையிடம் விடை பெற்றான். இருவரும் புறப்பட்டு வழி நடந்தனர்.

23 அவர்கள் புறப்பட்டுச் சென்றதும், அவனுடைய தாய் கண்ணீர் விட்டு அழுது, "நமது முதிர்ந்த வயதில் நமக்கு ஊன்றுகோலாய் இருக்க வேண்டிய மகனை நம்மை விட்டுத் தூரமாய்ப் போகும்படி ஏன் அனுப்பினீர்?

24 பணத்தை வாங்குவதற்காக நீர் அவனை அனுப்பியிருக்கிறீரே; அப்பணம் ஒருபோதும் இல்லாதிருந்திருந்தால் எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்!

25 ஏனெனில் நமது ஏழ்மை நிலையே நமக்குப் போதுமென்று இருந்திருக்க வேண்டும்! நம் மகன் நம்மோடு இருப்பதே நமக்குப் பெரும் செல்வம் என்று எண்ணியிருந்திருக்க வேண்டும்!" என்றாள்.

26 அதற்குத் தொபியாசு, "அழாதே, நம் மகன் நலமே சென்று நலமே நம்மிடம் திரும்பி வருவான்; நீயும் அவனைக் கண்ணாரக் காண்பாய்.

27 ஏனெனில், ஆண்டவருடைய நல்ல தூதர் அவனோடு இருக்கிறார் என்றும், நம் மகன் நம்மிடம் மகிழ்ச்சியோடு திரும்பும் பொருட்டு அவரே வேண்டிய எல்லாவற்றையும் நல்ல முறையிலே அவனுக்குச் செய்து முடிப்பார் என்றும் நான் நம்புகிறேன்" என்றார்.

28 இவ்வார்த்தைகளைக் கேட்ட தோபியின் தாய் அழுவதை நிறுத்தி அமைதியுற்றாள்.

அதிகாரம் 06

1 தோபி புறப்பட்டபோது அவன் வீட்டு நாயும் இவனைத் தொடர்ந்து சென்றது. அவன் திகிரிஸ் நதிக்கரையை அடைந்து முதன் முறையாக அங்குத் தங்கலானான்.

2 அவன் நதியிலே கால் அலம்பப் போன போது, இதோ! பெரிய மீன் ஒன்று அவனை விழுங்க வந்தது.

3 தோபி அதைக் கண்டு அஞ்சி, "ஐயா, என்னை விழுங்க வருகிறதே!" என்று அலறினான்.

4 கடவுளின் தூதர் அவனை நோக்கி, "அதைச் செவுள்களாலே பிடித்து இழு" என்றார். அவனும் அவ்வாறே செய்து கரை வரை அதை இழுக்க, அது அவன் முன்பாகவே துடிதுடித்துச் செத்தது.

5 பின்னர் கடவுளின் தூதர் தோபியைப் பார்த்து, "மீனின் வயிற்றைக் கிழித்து, அதன் இதயத்தையும் பித்தப் பையையும் ஈரலையும் எடுத்துப் பத்திரமாய் வை. ஏனெனில் நல்ல மருந்துகளைத் தயாரிக்க அவை உதவும்" என்றார்.

6 அவனும் அவ்வண்ணமே செய்தான். பின்பு மீனின் ஒரு பகுதியை அப்போதைய தேவைக்கு எடுத்துக் கொண்டு போய்ப் பொரித்தார்கள். மீதியை உப்பு போட்டு மேதியருடைய இராஜேசு நகரை அடையும் வரைத் தங்கள் செலவுக்காகப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார்கள்.

7 பிறகு தோபி கடவுளின் தூதரை நோக்கி, "சகோதரன் அசாரியாசே, நீ மீனிலிருந்து எடுத்துப் பதனப்படுத்தச் சொல்லியவை எதற்கு மருந்தாகும்? தயவுசெய்து சொல்" என்று கேட்டான்.

8 அதற்குக் கடவுளின் தூதர் அவனை நோக்கி, "அதனுடைய இதயத்தின் ஒரு பகுதியை நெருப்பில் போட்டால், அதிலிருந்து கிளம்பும் புகையானது ஆண், பெண் அனைவரிடமும் உள்ள எவ்விதப் பேய்களையும் ஓட்டி விடும். அதன் பின்னர் அவை அவர்களை நெருங்கா.

9 அதன் பித்த நீரையோ கண் படலமுள்ளவர்கள் கண்ணிலே பூசினால் அவர்கள் நலம் அடைவார்கள்" என்றார்.

10 அதன் பிறகு தோபி கடவுளின் தூதரைப் பார்த்து, "நாம் இன்று எங்கே தங்கலாம் என்று நினைக்கிறீர்?" என்று கேட்டான்.

11 அதற்குத் தூதர், "இந்த ஊரில் உன் குலத்தினனும் உனக்கு உறவினனுமான இரகுவேல் வாழ்ந்து வருகிறான். சாராள் என்ற பெயர் கொண்ட ஒரு மகள் அவனுக்கு உண்டு. அவளைத் தவிர அவனுக்கு வேறு மகனோ மகளோ இல்லை.

12 நீ அவளை உன் மனைவியாகக் கொள்வாயானால் அவனுடைய உடைமைகள் அனைத்தும் உனக்குக் கட்டாயம் வந்து சேரும்.

13 எனவே, அவளை உனக்கு மனைவியாகத் தரும்படி அவளுடைய தந்தையிடம் கேள். அவனும் அவளை உனக்கு மணம் செய்து கொடுப்பான்" என்றார்.

14 தோபி அவரை நோக்கி, "ஆனால் அவள் ஏழு கணவர்களுக்கு வாழ்க்கைப் பட்டிருந்ததாகவும், அவர்கள் அனைவருமே இறந்து விட்டதாகவும் கேள்விப்பட்டேனே, மேலும் பேய் தான் அவர்களைக் கொன்றுப் போட்டதாகவும் சொல்லுகிறார்களே.

15 அப்படி என்றால் எனக்கும் அவ்வாறே நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சுகிறேன். நானோ என் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அப்படி இருக்க, நான் செத்தால் வயதான அவர்கள் என் மேலுள்ள ஏக்கத்தினால் உயிரை விடுவார்கள்" என்று மறுமொழி சொன்னான்.

16 இரபாயேல் என்ற தூதர் அவனுக்கு மறு மொழியாக, "நான் சொல்வதைக் கேள். பேயின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள் யார் யார் என்று உனக்குக் காண்பிப்பேன்.

17 தங்களிடமிருந்தும் தங்கள் எண்ணத்தினின்றும் கடவுளைக் தள்ளிவிட்டு, அறிவற்ற குதிரையையும் கோவேறு கழுதையையும் போல் தமது காம இச்சையை நிறைவேற்றுவதற்காகத் திருமணம் செய்து கொள்பவர்கள் மேல் மட்டுமே பேய்க்கு வல்லமை உண்டு.

18 நீயோ அவளை ஏற்றுக் கொண்டபின் மணவறையில் நுழைந்து மூன்று நாள் வரை அவளோடு தொடர்பு கொள்ளாது அவளோடு சேர்ந்து செபம் மட்டும் செய்.

19 அன்றிரவு நீ மீனின் ஈரலைப் புகைக்கவே பேய் ஓடிப் போகும்.

20 இரண்டாம் இரவு புனித குலத் தந்தையார் கூட்டத்தில் நீயும் ஏற்றுக் கொள்ளப் பெறுவாய்.

21 மூன்றாம் இரவு உங்களுக்கு நல்ல மகப்பேறு கிடைக்கும் பொருட்டு நீ இறை ஆசீரை அடைந்திடுவாய்.

22 மூன்றாம் இரவு கழிந்த பின், ஆபிரகாம் சந்ததியில் மகப்பேற்றைப் பெறக் கருதி, மோக இச்சையை நிறைவேற்றுவது பற்றி அத்துணை நினையாது, மகப்பேற்றையே தலையானதாய் விரும்பித் தெய்வ பயத்தோடு அக்கன்னிப் பெண்ணுடன் உறவு கொள்" என்றார்.

அதிகாரம் 07

1 அவர்கள் இரகுவேல் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அவர் அதிக மகிழ்ச்சியோடு அவர்களுக்கு இல்லிடம் கொடுத்தார்.

2 மேலும் இரகுவேல் தோபியை உற்று நோக்கிய பின் தம் மனைவி அன்னாளிடம், "இவ்விளைஞனைப் பார்த்தால் என் உறவினர் போல் தோன்றுகிறது அன்றோ?" என்று சொன்னார்.

3 இவ்வாறு பேசின பின் இரகுவேல், "என் சகோதரர்களான இளைஞர்களே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "நாங்கள் நெப்தலி குலத்தினர்; நினிவே நகரில் அடிமைகளாய் வாழ்ந்து வருகிறோம்" என்றனர்.

4 மேலும் அவர், "என் சகோதரன் தொபியாசை அறிவீர்களோ?" என்று கேட்க, அவர்கள், "ஆம், அறிவோம்" என்றனர்.

5 பின்னர் இரகுவேல் தொபியாசைப் பற்றிப் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கையில் கடவுளின் தூதர் அவரைப் பார்த்து, "நீர் விசாரித்த அந்தத் தொபியாசு இவனுடைய தந்தை தான்" என்றார்.

6 அப்போது இரகுவேல் எழுந்து தாவி அவனை முத்தமிட்டு அழுதார். பின்னர் அவன் தோளின் மேல் சாய்ந்து கண்ணீர் விட்டு அழுது கொண்டு,

7 மகனே, நீ நல்லவனும் உத்தமனுமான மனிதனின் மகன். ஆகவே, உனக்கு ஆசீர் உண்டாகுக என்றார்.

8 அந்நேரத்தில் அவர் மனைவி அன்னாளும், அவர்களுடைய மகள் சாராளும் கண்ணீர் சொரிந்து அழத் தொடங்கினர்.

9 பேசி முடிந்ததும், ஆடு அடித்து, விருந்து செய்ய இரகுவேல் கட்டளையிட்டார். பின்பு பந்தியில் அமரும் படி அவர்களை அழைத்தார்.

10 அதற்குத் தோபி, "நீர் முதன் முதல் எனது விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்து, உம் மகள் சாராளை எனக்குத் தருவதாக வாக்குறுதி கொடுத்தாலொழிய நான் சாப்பிடமாட்டேன், குடிக்கவும் மாட்டேன்" என்றான்.

11 இதைக் கேட்டவுடன் இரகுவேல் திடுக்கிட்டுப் பயந்தான். ஏனெனில், சாராளிடம் உறவு வைத்திருந்த அவளுடைய ஏழு கணவர்களுக்கும் நேரிட்டதை நினைத்து, இவனுக்கும் அவ்விதமே நிகழக்கூடும் என்று அஞ்சி இருமனப் பட்டவராய் பதில் ஏதும் சொல்லாமல் இருந்தார்.

12 இது கண்டு கடவுளின் தூதர் அவரை நோக்கி, "அவளை இவனுக்கு மணம் முடித்துக் கொடுக்க நீர் அஞ்ச வேண்டாம். ஏனெனில் தெய்வ பயமுள்ள இவனுக்கு உம் மகள் மனைவியாக உடன்படத்தான் வேண்டும். இதனால் அன்றோ வேறு மனிதர் அவளோடு உறவு கொள்ள முடியாது போயிற்று?" என்றார்.

13 அதற்கு இரகுவேல், "கடவுள் என் மன்றாட்டுகளையும் என் கண்ணீர்களையும் தமது திருமுன் ஏற்றுக் கொண்டார் என்பது பற்றி இப்போது எனக்கு ஐயமே இல்லை.

14 மோயீசன் கட்டளையிட்டபடியே இவள் தன் உறவினனோடு மணம் புரிய வேண்டியதாயிற்று. அதனால் தான் கடவுள் உங்களை என்னிடம் அனுப்பியுள்ளார் என்று உறுதியாக நம்புகிறேன். எனவே ஐயம் வேண்டாம். நான் அவளை உனக்கு மணம் முடித்துக் கொடுப்பேன்" என்றார்.

15 பின்னர் தம் மகளின் வலக்கையைப் பிடித்துத் தோபியின் வலக்கையோடு சேர்த்து வைத்து, ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் உங்களோடு இருப்பாராக! அவரே உங்கள் இருவரையும் இணைத்துத் தம் நிறையாசீர் உங்களிடம் நிறைவேறச் செய்வாராக!" என்றார்.

16 மேலும் ஒரு தாளை எடுத்து அதில் திருமணப் பதிவு செய்தனர்.

17 கடவுளைப் புகழ்ந்து பாடிய பின் விருந்து உண்டனர்.

18 இரகுவேல் தம் மனைவி அன்னாளைத் தம்மிடம் அழைத்து இன்னொரு மணவறையைத் தயாரிக்கச் சொன்னார்.

19 அதன் பிறகு அவர் தம் மகள் சாராளை அதில் கூட்டிக்கொண்டு போய்க் கண்ணீர் விட்டு அழுதார்.

20 மகளே, நீ தைரியமாயிரு. முன்பு நீ பட்ட துயரத்திற்கு எல்லாம் சேர்த்து விண்ணக இறைவன் உனக்கு இப்போது இன்பத்தை அருள்வார், என்று மொழிந்தார்.

அதிகாரம் 08

1 இரவு உணவு அருந்திய பின்பு, இளைஞனை அவளிடம் கூட்டி வந்து விட்டனர்.

2 தோபியோ, கடவுளின் தூதரது வார்த்தையை நினைவு கூர்ந்தவனாய்த் தன் பையிலிருந்த ஈரலின் ஒரு துண்டை எடுத்து, அதை நெருப்பிலிட்டான்.

3 அப்போது இரபாயேல் என்ற தூதர் பேயைப் பிடித்து மேற்கு எகிப்தின் பாலைவனத்தில் கட்டிப்போட்டான்

4 பின்னர் தோபி கன்னியைப் பார்த்து, "சாராளே, எழுந்திரு. இன்றிரவும் நாளையும் நாளைக் கழித்தும் நாம் கடவுளை மன்றாடுவோம். ஏனெனில், இம் மூன்றிரவும் கடவுளுடன் நாம் ஒன்றித்திருந்து, மூன்றாவது இரவு கழிந்த பின் நமது இல்வாழ்வில் இணைவோம்.

5 நாம் புனிதர்களின் மக்கள் அல்லவா? கடவுளை அறியாத புறவினத்தாரைப் போல் நாம் உறவு கொள்ளக் கூடாது" என்று புத்தி சொன்னான்.

6 எனவே இருவரும் எழுந்து தங்களுக்கு வாழ்வு பிறக்க வேண்டும் என்று உருக்கத்துடன் வேண்டிக் கொண்டனர்.

7 அப்பொழுது தோபி சொன்ன செபமாவது: "எங்கள் முன்னோரின் ஆண்டவரான கடவுளே, விண்ணும் மண்ணும் கடலும் நீர் ஊற்றுகளும் அருவிகளும் அவற்றிலுள்ள எல்லாப் படைப்புகளும் உம்மை வாழ்த்தட்டும்!

8 நீர் களிமண்ணைக் கொண்டு ஆதாமைப் படைத்து, ஏவாளை அவனுக்குத் துணைவியாகக் கொடுத்தீர்.

9 இப்பொழுதும், ஆண்டவரே, நான் என் உறவினளாகிய இப்பெண்னை மணந்து கொண்டது உமது திருப்பெயர் என் சந்ததியில் என்றென்றும் வாழ்த்தப்படும்படியாகவே அன்றி, என் உடல் இச்சையை நிறைவேற்றுவதற்காக அல்ல என்று நீர் அறிவீர்."

10 சாராளும் கடவுளை நோக்கி, "ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும். நாங்கள் இருவருமே நலமுடன் முதிர் வயதை அடைய அருள் தாரும்" என்று வேண்டிக் கொண்டாள்.

11 கோழி கூவும் நேரத்தில் இரகுவேல் தம் ஊழியர்களை அழைத்து வரக் கட்டளையிட்டார். அவர்கள் அவரோடு போய்த் தரையில் ஒரு குழியை வெட்டினர்.

12 ஏனெனில் இரகுவேல், "முன்பு அவளோடு உறவு வைத்திருந்த ஏழு கணவர்களுக்கும் வந்த கதி இவனுக்கும் நேரிட்டிருக்கக் கூடும்" என்று தமக்குள்ளே கூறிக்கொண்டார்.

13 குழி வெட்டியதும் இரகுவேல் தம் மனைவியிடம் திரும்பி வந்து அவளை நோக்கி, "நீ உன் வேலைக்காரிகளில் ஒருத்தியை அனுப்பி, அவன் இறந்து பட்டானோ என்று பார்த்து வரச் சொல்.

14 ஏனெனில், அவன் இறந்து போயிருந்தால் பொழுது விடியு முன்பே அவனைப் புதைத்து விட வேண்டும்" என்றார்.

15 அவள் வேலைக்காரிகளில் ஒருத்தியை அனுப்பி வைத்தாள். இவள் மணவறையில் நுழைந்து அவர்கள் இருவரும் நலமுடன் சேர்ந்து படுத்துத் தூங்குவதைக் கண்டு திரும்பி வந்து அவர்களுக்கு அந்நற்செய்தியை அறிவித்தாள்.

16 இரகுவேலும் அவர் மனைவி அன்னாளும் ஆண்டவரைப் புகழ்ந்தனர்.

17 இஸ்ராயேலின் ஆண்டவரான கடவுளே, நாங்கள் நினைத்திருந்தபடி நிகழாததனால் உம்மைப் போற்றிப் புகழ்கின்றோம்.

18 நீர் எங்கள் மேல் இரங்கி எங்களை வதைத்திருந்த எதிரியை எம்மிடமிருந்து அகற்றி,

19 எமது ஒரே மகனும், ஒரே மகளுமான இவ்விருவர் மேலும் இரக்கம் வைத்தீர். ஆண்டவரே, மண்ணின் எவ்விடத்திலும் நீர் ஒருவரே கடவுள் என்று எல்லா இனத்து மக்களும் அறிந்து கொள்ளும்படி, இவ்விருவரும் உம்மை முற்றும் துதிக்கவும், உமக்கு நன்றியறிதலாகவும், தங்கள் உடல் நலத்தின் பொருட்டும் அவர்கள் உமக்குப் பலிகளை ஒப்புக் கொடுக்கவும் அருள் செய்யும்" என்றனர்.

20 உடனே இரகுவேல் தம் ஊழியரை அழைத்து அவர்கள் வெட்டியிருந்த குழியை விடியு முன் மூடி விடக் கட்டளையிட்டார்.

21 பிறகு தம் மனைவியைப் பார்த்து, ஒரு விருந்தையும், வழிப் பயணத்திற்குத் தேவையான எல்லாவித உணவு வகைகளையும் தயாரிக்கக் கட்டளையிட்டார்.

22 மேலும், இரண்டு கொழுத்த பசுக்களையும் நான்கு செம்மறிக் கிடாய்களையும் அடிக்கச் சொல்லித் தம் அயலார், நண்பர் ஆகிய அனைவருக்கும் விருந்து தயார் செய்தார்.

23 பின்னர் தோபி தம்மோடு இரண்டு வாரம் தங்கியிருக்குமாறு இரகுவேல் அவனை வேண்டிக் கொண்டார்.

24 இரகுவேல் தம் உடைமைகள் அனைத்திலும் ஒரு பாதியைத் தோபிக்குக் கொடுத்தார். அத்தோடு தங்கள் சாவுக்குப்பின் அந்த மறு பாதியும் அவனுக்குச் சொந்தமாகும் என்று எழுதிக் கொடுத்தார்.

அதிகாரம் 09

1 தோபி கடவுளின் தூதரைச் சாதாரண மனிதன் என்றே கருதி வந்தான். ஒருநாள் அவரைத் தம்மிடம் அழைத்து, "சகோதரன் அசாரியாசே, நான் சொல்வதற்குச் செவி மடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

2 என்னை நான் உனக்கு அடிமையாக ஒப்புவித்தாலும், அதனால் உனது கண்காணிப்புக்குத் தகுதியானவன் ஆவேனோ?

3 ஆயினும் நீ விலங்குகளோடும் ஊழியர்களோடும், மேதியருடைய இராஜேசு நகரிலிருக்கும் கபேலுசிடம் சென்று பத்திரத்தை அவனிடம் கொடுத்துக் கடன் பணத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு, அவனையும் என் திருமணத்திற்கு அழைத்து வரும்படி உன்னை வேண்டுகிறேன்.

4 ஏனெனில் என் தந்தை நாட்களை எண்ணிக் கொண்டிருப்பார், இதற்கு அதிகமாக நான் இன்னும் ஒரு நாள் தாமதித்தாலும் அவருடைய மனம் மிகவும் துயரப்படும். இது உனக்குத் தெரியாத காரியம் அன்று.

5 மேலும் நான் இங்கேயே தங்கும்படி இரகுவேல் ஆணையிட்டுக் கேட்டுக் கொண்டுள்ளதும் உனக்குத் தெரிந்ததே. அவருடைய ஆணையை மீறுவதும் அழகல்லவே" என்றான்.

6 அப்போது இரபாயேல் இரகுவேலின் ஊழியர்களில் நால்வரைக் கூட்டிக் கொண்டு இரண்டு ஒட்டகங்களோடு மேதியர்களின் இராஜேசு நகருக்குள் சென்றார். அங்கே கபேலுசைக் கண்டு, அவனது பத்திரத்தை அவனிடம் கொடுத்து, அவனிடமிருந்து பணம் முழுவதையும் பெற்றுக் கொண்டார்.

7 பிறகு தொபியாசின் மகன் தோபிக்கு நடந்ததை எல்லாம் அவனுக்கு விவரமாய்ச் சொல்லி அவனைத் தம்மோடு திருமணத்திற்கு வரும்படி செய்தார்.

8 அவன் இரகுவேலின் வீட்டில் நுழையவே, சாப்பிட உட்கார்ந்திருந்த தோபி எழுந்து அவனை எதிர் கொண்டு போக, இருவரும் கட்டித் தழுவிக் கொண்டனர், கபேலுசு கண்ணீர் விட்டு அழுது கடவுளைத் துதித்தான்.

9 இஸ்ராயேலின் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக! ஏனெனில் நீ மகா உத்தமரும் நீதிமானரும் கடவுளுக்குப் பயப்படுபவரும் ஈகைக் குணமுடையவருமான மனிதரின் மகன்.

10 உன் மனைவியின் மேலும் உங்கள் இருவரின் பெற்றோரின் மேலும் இறை ஆசீர் தங்கக்கடவது!

11 நீங்கள் உங்கள் புதல்வரையும் புதல்வியரையும் மூன்றாம் நான்காம் தலைமுறை வரை காணும் பேறு பெறுவீர்களாக! என்றென்றும் ஆட்சி செய்கின்ற இஸ்ராயேலின் கடவுள் உங்கள் சந்ததியை ஆசீர்வதிப்பாராக!" என்று ஆசிமொழி கூறினார். அதற்கு எல்லாரும், "ஆமென்" என்று சொல்லி, பந்தியமர்ந்து தெய்வ பயத்தோடு திருமண விருந்து கொண்டாடினார்கள்.

அதிகாரம் 10

1 திருமணத்தை முன்னிட்டுத் தோபி நீண்ட நாட்கள் தங்கி விட்டதால் அவன் தந்தை தொபியாசு கவலையுற்றார். "என் மகன் தாமதிக்க என்ன காரணமோ?

2 அவன் அங்கே நிறுத்தப்படக் காரணம் என்ன? கபேலுசு தான் செத்து விட்டானோ? அதனால் பணம் கொடுக்க யாருமில்லாமல் போயிற்றோ?" என்று தமக்குள் சொல்லி, தம் மனைவி அன்னாளோடு சேர்ந்து மிகவும் வருந்தினர்.

3 தங்கள் மகன் குறித்த காலத்திற்குள் தங்களிடம் திரும்பி வராதது பற்றி இருவருமே கண்ணீர் விட்டு அழத் தொடங்கினர்.

4 அவனுடைய தாய் ஆறாத்துயரில் முழ்கி, கண்ணீர் சிந்தினாள். "ஐயோ! மகனே! நாங்கள் உன்னைப் பிற நாட்டுக்குப் போகும்படி ஏன் அனுப்பினோம்? எங்கள் கண்ணொளியும், முதுமையின் ஊன்றுகோலும், வாழ்வின் ஆறுதலும், எங்கள் சந்ததி பலுகிப்பெருகும் என்ற நம்பிக்கையும் நீயே அன்றோ!

5 நீ தானே எங்களுக்கு எல்லாம். அப்படியிருக்க நாங்கள் உன்னைத் (தூர நாட்டிற்கு) அனுப்பி வைத்தது எங்கள் குற்றம் அன்றோ?" என்று புலம்பி அழுவாள்.

6 தொபியாசு அவளைப் பார்த்து, "அமைதியாய் இரு; ஏன் கலங்குகிறாய்? நம் மகன் நலமாய்த் தான் இருப்பான். ஏனெனில் அவனோடு நாம் துணைக்கு அனுப்பி வைத்த மனிதன் நம்பிக்கைக்குரியவன்" என்று சொல்வார்.

7 அப்படியிருந்தும் அவள் ஒரு விதத்திலும் ஆறுதல் கொள்ளாமல் நாள்தோறும் வெளியே சென்று சுற்றும் முற்றும் பார்த்துத் தொலையில் அவன் வருவதைக் காணலாம் என்று, அவன் வரக் கூடிய வழிகளை எல்லாம் ஆவலோடு பார்த்துக் கொண்டிருப்பாள்.

8 இதற்கிடையில், இரகுவேல் தம் மருமகனைப் பார்த்து, "நீ இங்கேயே தங்கியிரு. நீ நலமாயிருக்கிறாய் என்று ஆள் அனுப்பி உன் தந்தை தொபியாசுக்குச் செய்தி சொல்லச் சொல்வேன்" என்றார்.

9 அதற்குத் தோபி, "என் தாயும் தந்தையும் நாட்களை எண்ணி எண்ணி ஆறாத்துயரால் மனம் நொந்து போயிருப்பார்கள். இது உண்மை" என்றான்.

10 இரகுவேல் தோபியை எவ்வளவோ கெஞ்சி மன்றாடியும் இவன் ஒருவிதத்திலும் இணங்காததைக் கண்டு சாராளையும், தமக்குள்ள ஊழியர், வேலைக்காரிகள், ஆடுமாடு, ஒட்டகம், பசு மாடு, சொத்து முதலியவற்றில் சரி பாதியையும் ஏராளமான பணத்தையும் அவனுக்குக் கொடுத்து, தோபியைப் பத்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் அனுப்பிவைத்தார்.

11 கடவுளின் புனித தூதர் வழியில் உங்களோடு இருந்து சுகத்தோடு உங்களைக் கூட்டிக் கொண்டு போவாராக! உங்கள் தாய் தந்தையர் எல்லா விதத்திலும் நலமே இருக்கக் கண்டு நீங்கள் களிகூர்வீர்களாக! நான் சாகுமுன் உங்கள் பிள்ளைகளைக் காணும் பேறு எனக்குக் கிடைப்பதாக!" என்று வாழ்த்தி வழியனுப்பினார்.

12 சாராளின் தாய் தந்தையர் தங்கள் மகளைக் கட்டி முத்தமிட்டனர்;

13 மாமன், மாமியை மதிக்கவும், கணவனுக்கு அன்பு செய்யவும், குடும்பத்தை நலமுற நடத்தவும், வீட்டை முறையாக ஆளவும், தன் மேல் எவனும் குற்றம் சாட்டிப் பேசாத விதமாய் ஒழுக்கமுடன் நடக்கவும் வேண்டும் என்று தங்கள் மகளுக்கு அறிவுரை கூறி விடை கொடுத்து அனுப்பினர்.

அதிகாரம் 11

1 அவர்கள் புறப்பட்டுப் போய் நினிவே நகருக்குப் பாதி வழியில் இருக்கிற காரான் என்ற ஊருக்குப் பதினோராம் நாளில் வந்து சேர்ந்தனர்.

2 கடவுளின் தூதர் தோபியை நோக்கி, "சகோதரன் தோபி, நீ உன் தந்தையை விட்டு வந்த போது அவர் இருந்த நிலையை அறிவாயன்றோ?

3 உனக்கு விருப்பமானால் நாம் முன்னே நடந்து செல்வோம். உன் மனைவியும் ஊழியர்களும் விலங்குகளுமோ நமக்குப் பின்னால் மெதுவாக வரட்டும்" என்றார்.

4 இதற்கு எல்லாரும் ஒத்துக் கொள்ளவே இரபாயேல் தோபியை நோக்கி, "மீனின் பித்தப் பையை உன்னோடு எடுத்துக்கொள்; அது தேவைப்படும்" என, தோபி பித்தப் பையின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

5 பாதை அருகே ஒரு மேடு இருந்தது. அன்னாள் நாளும் அங்குச் சென்று அதன் மேல் உட்கார்ந்து கொள்வாள். ஏனெனில், அங்கிருந்து நாடு வெகுதூரம் தெரியும்.

6 ஒருநாள் அவள் அவ்வாறு மகனின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், அதோ, தொலைவில் தன் மகனே வருகிறான் என்று கண்டதும் துரிதமாய்ப் போய்த் தொபியாசுக்குச் செய்தி சொல்லி, "உம் மகன் அதோ வருகிறான்" என்றாள்.

7 அப்போது இரபாயேல் தோபியை நோக்கி, "நீ உன் வீட்டில் நுழைந்தவுடன் உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவருக்கு நன்றி கூறி உன் தந்தையிடம் போய், அவரை முத்தமிட்ட பின்பு, தாமதியாது,

8 நீ கொண்டு வரும் மீன் பித்தத்தை எடுத்து அவரது கண்களில் பூசு. உடனே உன் தந்தையின் கண்கள் திறக்கப்பட்டு அவர் விண்ணக ஒளியைக் கண்டு உன்னைப் பார்த்து அகமகிழ்வார். இது உறுதி" என்றார்.

9 அந்நேரத்தில் அவர்களோடு போயிருந்த நாய், முன்னறிவிக்கும் தூதனைப் போல் வந்து வாலையாட்டித் தன் மகிழ்ச்சியைக் காட்டத் தொடங்கிற்று.

10 அப்போது கண்பார்வை அற்றிருந்த தந்தை எழுந்து கால் தட்டுத் தடுமாறி ஒரு வேலைக்காரனின் துணையோடு துரிதமாய் நடந்து மகனை எதிர் கொண்டு போனார்.

11 அவரும் அவர் மனைவியும் அவனை வாரி அணைத்து முத்தமிட்டு மகிழ்ச்சி மிகுதியால் இருவரும் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினர்.

12 பின்னர் கடவுளைத் தொழுது அவருக்கு நன்றி நவின்றபின் அவர்கள் உட்கார்ந்தனர்.

13 அப்போது தோபி மீன் பித்தத்தில் கொஞ்சம் எடுத்துத் தன் தந்தையின் கண்களில் பூசினான்.

14 அரை மணி நேரம் சென்ற பின் அவர் கண்களிலிருந்து முட்டைத் தோல் போன்ற ஒரு படலம் வெளி வரத் தொடங்கிற்று.

15 தோபி அதைப் பிடித்து அவர் கண்களிலிருந்து இழுக்க, தந்தை உடனே பார்வை அடைந்தார்.

16 அதனால் அவரும் அவர் மனைவியும் அவருக்கு அறிமுகமானார் அனைவருமே கடவுளைப் புகழ்ந்து கொண்டிருந்தனர்.

17 இஸ்ராயேலின் ஆண்டவரான கடவுளே, நான் உம்மைத் துதிக்கிறேன். ஏனெனில் நீரே என்னைத் தண்டித்தீர்; நீரே என்னை மீட்டீர். இதோ, நான் என் மகனைக் காணப்பெற்றேன்" என்று தொபியாசு கடவுளைப் புகழ்ந்தார்.

18 ஏழு நாளுக்குப் பிறகு அவருடைய மகனின் மனைவி சாராள் ஊழியக்காரர்களோடும், ஆடுமாடு ஒட்டகங்களோடும் நலமே வந்து சேர்ந்தாள். அவள் தன் திரண்ட சீதனப் பணத்தையும், கபேலுசுவிடமிருந்து பெற்ற பணத்தையும் கொணர்ந்தாள்.

19 பின்பு தோபி தன் தாய் தந்தையரைப் பார்த்து வழித்துணையாகத் தனக்குக் கிடைத்த மனிதன் மூலம் கடவுள் தனக்குச் செய்திருந்த நன்மைகள் எல்லாவற்றையும் விரிவாய் எடுத்துக் கூறினான்.

20 அப்பொழுது தொபியாசின் உறவினரான ஆக்கியோரும் நாபாத்தும் அவர் பொருட்டு மகிழ்வுற்று, கடவுள் அவருக்குச் செய்திருந்த எல்லா நன்மைகளுக்காகவும் அவரை வாழ்த்தினர்.

21 அவர்கள் அனைவரும் ஏழு நாள் வரை விருந்துண்டு மகிழ்ச்சி கொண்டாடினர்.

அதிகாரம் 12

1 பிறகு தொபியாசு தம் மகனை அழைத்து, "உன்னோடு வந்த இந்தப் புண்ணியவானுக்கு என்ன கொடுக்கலாம்?" என்று கேட்டார்.

2 அதற்குத் தோபி மறுமொழியாக, "தந்தாய், நாம் அவருக்கு என்ன வெகுமதி கொடுக்கப் போகிறோம்? அவர் செய்த உதவிகளுக்குத் தகுதியான கைம்மாறும் உண்டோ?

3 அவர் என்னை நலமே அழைத்துக்கொண்டு போனார்; திரும்பவும் என்னை நலமே கூட்டிக் கொண்டு வந்தார். அவரே கபேலுசிடமிருந்து பணத்தை வாங்கி வந்தவர். எனக்கு ஒரு மனைவியைத் தேடிக்கொள்ளச் செய்ததுமன்றி, அவளிடமிருந்த பேயை ஓட்டினதால் அவளுடைய பெற்றோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். உம்மையும் விண்ணக ஒளியைக் காணும்படி செய்திருக்கிறார். அவராலே நாம் எல்லா நன்மைகளாலும் நிரப்பப்பட்டிருக்கிறோம். இவற்றிற்குத் தகுந்த கைம்மாறு செய்ய நம்மால் முடியாது.

4 ஆயினும் தந்தையே, நீர் அவரைப் பார்த்து, நான் கொணர்ந்த எல்லாச் சொத்துகளிலும் சரி பாதியையாவது அவர் பெற்றுக்கொள்ளும் படி அவரைத் தாங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறேன்" என்றான்.

5 அதன் பின் தந்தையும் மகனும் அவரைத் தனியே அழைத்து, மேற்சொன்ன சொத்தில் பாதியை ஏற்றுக் கொள்ளும்படி அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டனர்.

6 அப்போது அசாரியாசு அவர்களை நோக்கி, "விண்ணக இறைவன் உங்கள் மேல் இரக்கம் காட்டியுள்ளபடியால், அவரை வாழ்த்திப் போற்றி, உயிர்வாழ் மாந்தர் அனைவர் முன்னிலையிலும் அவரது மகிமையை அறிக்கையிடுங்கள்.

7 ஏனெனில் அரசனின் இரகசியத்தை மறைத்துக் காப்பாற்ற வேண்டியது உண்மையே. இருந்த போதிலும் கடவுளின் செயல்களை வெளிப்படுத்திக் கொண்டாடுவது மதிப்பிற்குரிய செயலாகும்.

8 நோன்போடு கூடிய செபமே நன்று. பொற் குவியல்களைக் குவிப்பதை விடத் தான தருமம் செய்வதே மேல்.

9 ஏனெனில், தானம் ஆன்மாவைச் சாவினின்று மீட்கும்; பாவங்களைப் போக்கும்; கடவுளின் இரக்கத்தையும் நித்திய வாழ்வையும் அளிக்கும்.

10 பாவமும் தீச்செயல்களும் புரிபவர்கள் தங்கள் ஆன்மாவுக்கு எதிரிகளாய் இருக்கிறார்கள்.

11 நானே உங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவேன். இரகசியமாயிருந்தாலும் ஒரு வார்த்தை கூட உங்களுக்குச் சொல்லாமல் விட மாட்டேன்.

12 நீர் கண்ணீரோடு மன்றாடி இறந்தோரைப் புதைத்து, உம் உணவை மறந்து, செத்தவர்களைப் பகலில் உம் வீட்டில் ஒளித்து வைத்திருந்து இரவில் புதைத்து வந்தீர் அல்லவா? அப்பொழுது நான் உம் மன்றாட்டை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தேன்.

13 நீர் அவருக்குப் பிரியமானவராய் இருந்ததனால் உம்மைப் பரிசோதிக்கச் சோதனைகள் வர வேண்டியிருந்தன.

14 இப்போதோ உமக்கு நலம் அளிக்கவும் உம் மகனின் மனைவி சாராளைப் பேயினின்று விடுதலையாக்கவும் நான் கடவுளால் அனுப்பப்பட்டுள்ளேன்.

15 ஏனெனில் நான் ஆண்டவரின் திருமுன் நிற்கும் ஏழு வானவர்களுள் ஒருவன்; என் பெயர் இரபாயேல்" என்றார்.

16 இவற்றைக் கேட்டதும் அவர்கள் திகைத்து நடுங்கித் தரையில் முகம் குப்புற விழுந்தனர்.

17 மறுபடியும் கடவுளின் தூதர் அவர்களை நோக்கி, "உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக! அஞ்சாதீர்கள்.

18 ஏனெனில் நான் உங்களோடு இருந்த போது இறைவனின் திருவுளப்படிதான் இருந்தேன். நீங்கள் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்.

19 உங்களுடன் நான் உண்ணுவதாயும் குடிப்பதாயும் தோன்றினேன். ஆயினும் நான் மனிதருக்குப் புலப்படாத உணவையும் பானத்தையுமன்றோ பயன்படுத்திக் கொள்ளுகிறேன்?

20 இப்பொழுது என்னை அனுப்பினவரிடம் திரும்பிப் போகும் காலம் வந்துள்ளது. நீங்களோ கடவுளைப் போற்றி அவர்தம் வியப்புக்குரிய செயல்களை வெளிப்படுத்தக் கடவீர்கள்" என்றார்.

21 இவற்றைச் சொன்னபின் அவர் மறைந்து போய்விட்டார். பிறகு அவர்கள் அவரை ஒருபோதும் காணவேயில்லை.

22 அப்பொழுது அவர்கள் முகம் குப்புற விழுந்து மூன்று மணி நேரம் நெடுந்தெண்டனாய்க் கிடந்து, கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். பின்பு எழுந்திருந்து அவர் புரிந்திருந்த வியப்புக்குரிய செயல்கள் எல்லாவற்றையும் அறிவிக்கத் தொடங்கினர்.

அதிகாரம் 13

1 வயது முதிர்ந்த தொபியாசு வாய் மலர்ந்து கடவுளைத் துதித்துக் கூறியதாவது: "ஆண்டவரே, நீர் என்றென்றும் பெரியவர். உமது ஆட்சி என்றென்றும் நிலைநிற்கும்.

2 ஏனெனில், தண்டிப்பவரும் மீட்பவரும் நீரே. பாதாளத்தில் அமிழ்த்துகிறவரும் அதினின்று எழுப்புகிறவரும் நீரே. ஒருவனும் உமது கைக்குத் தப்பமுடியாது.

3 இஸ்ராயேல் மக்களே, ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள். புறவினத்தார் முன்னிலையில் அவருக்குப் புகழ் பாடுங்கள்.

4 ஏனெனில் அவர்தம் வியப்புக்குரிய செயல்களை நீங்கள் வெளிப்படுத்தி, அவரை அன்றி எல்லாம் வல்ல கடவுள் வேறுயாரும் இல்லை என்று, அவரை இன்னும் அறியாத புறவினத்தார்க்கு நீங்கள் அறிவிக்கும் பொருட்டே அவர் அவர்கள் மத்தியில் உங்களைச் சிதறடித்தார்.

5 நம் தீச்செயல்களின் காரணமாக அவர் நம்மைத் தண்டித்தார். தமது இரக்கத்தின் பொருட்டு நம்மை மீட்பார்.

6 நம் நடுவில் அவர் செய்தவற்றைப் பாருங்கள். அச்சத்தோடும் நடுக்கத்தோடும் அவரை மகிமைப் படுத்துங்கள். என்றும் ஆளும் அரசரை உங்கள் செயல்களால் ஏத்திப் போற்றுங்கள்.

7 நானோ அடிமை நாட்டில் இருந்து கொண்டே அவரைப் புகழ்ந்து பாடுவேன். ஏனெனில் அவர் பாவியான மக்கள் மீது தமது மகிமையை வெளிப்படுத்தினார்.

8 ஆகையால், ஓ பாவிகளே, மனம் திரும்புங்கள். கடவுள் உங்களுக்கு இரக்கம் காட்டுவார் என்று நம்பி அவரது திருமுன் நேர்மையோடு நடங்கள்.

9 நான் அவரில் மகிழ்ச்சி கொள்வேன். என் ஆன்மாவும் அவரிடத்திலேயே அக்களிப்புக் கொள்ளும்.

10 ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே, அவரைத் துதியுங்கள். இன்ப நாட்களை எண்ணி அவரை மகிமைப்படுத்துங்கள்.

11 கடவுளின் நகரான யெருசலமே, உன் செயல்களை முன்னிட்டே ஆண்டவர் உன்னைத் தண்டித்தார்.

12 ஆண்டவராகிய கடவுள் உனக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தருளினர். அவர் எக்காலமும் அரசாண்டு வருகின்றார். அவர் உன் நடுவே தமது கூடாரத்தைப் புதிதாய்க் கட்டவும், சிறைப்பட்டவர்கள் அனைவரையும் திரும்பவும் உன்னிடம் அழைத்துக் கொண்டு வரவும், ஊழியுள்ள காலம் வரை நீ களித்து மனமகிழும் பொருட்டு அவரை வாழ்த்துவாயாக.

13 நீ ஒளிவிட்டு மிளிர்வாய். மண்ணுலக மாந்தர் அனைவரும் உன்னை வணங்குவர்.

14 தொலைவினின்று அவர்கள் உன்னிடம் வருவார்கள். காணிக்கை கொண்டுவந்து உன் அகத்தில் கடவுளைத் தொழுவார்கள். உனது நாட்டைப் புனித நாடு என்று போற்றுவார்கள்.

15 ஏனெனில் உன் நடுவிலிருந்து கொண்டு உன் மாபெரும் பெயரைக் கூவி அழைப்பார்கள்.

16 உன்னைப் பழித்தவர்கள் சபிக்கப்படுவார்கள்; உன்னை இகழ்ந்தவர்கள் அனைவரும் தண்டிக்கப் படுவார்கள். உன்னைக் கட்டி எழுப்பினவர்களோ ஆசீர் பெறுவார்கள்.

17 உன் மக்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டுக் கடவுளில் ஒன்றுபடுவார்கள். ஆதலால் நீ அவர்களில் மகிழ்ச்சி அடைவாய்.

18 உன்பால் அன்பு கொண்டு உன் சமாதானத்தில் மகிழ்வுறும் யாவரும் பேறு பெற்றோர்.

19 என் ஆன்மாவே, ஆண்டவரை வாழ்த்துவாயாக; ஏனெனில் நம் ஆண்டவரான கடவுள் தமது நகரான யெருசலேமை எல்லா இடுக்கண்களினின்றும் மீட்டுள்ளார்.

20 என் சந்ததியில் சிலராவது யெருசலேமின் சிறப்பைக் காணும் பேறுபெற்றால் நான் மகிழ்வுறுவேன்.

21 யெருசலேமின் கதவுகள் நீலமணிகளாலும் மரகதக் கல்லாலும் செய்யப்படும். அதைச் சுற்றிலுமுள்ள சுவர் முழுவதும் விலையேறப் பெற்ற கற்களால் கட்டப்படும்.

22 அதன் தெருக்கள் எல்லாம் தூய வெண் கற்களால் பாவப்படும். அதன் தெருக்களில் 'அல்லேலூயா' என்று பண் இசைப்பர்.

23 அதை மேன்மைப் படுத்திய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! அவர் அதனை என்றென்றும் ஆண்டு நடத்துவாராக! ஆமென்."

அதிகாரம் 14

1 இத்தோடு தொபியாசின் பொன்னுரை முடிவுற்றது. பார்வை அடைந்தபின் அவர் நாற்பத்திரண்டு ஆண்டுகள் உயிர் வாழ்ந்து தம் பேரப்பிள்ளைகளின் மக்களையும் காணும் பேறுபெற்றார்.

2 இவ்வாறு நூற்றிரண்டு ஆண்டுகள் வாழ்ந்த பின் நினிவே நகரில் சிறப்பாய் அடக்கம் செய்யப்பட்டார்.

3 அவர் தம் ஐம்பத்தாறாம் வயதில் பார்வை இழந்து, அறுபதாம் வயதில் மறுபடியும் பார்வை அடைந்திருந்தார்.

4 அவரது வாழ்வின் எஞ்சிய ஆண்டுகளோ மகிழ்ச்சி நிறை ஆண்டுகளாய் இருந்தன. அவர் தெய்வ பயம் நிறைந்தவராய் வாழ்ந்து வந்திருந்ததனால் சமாதானமாய் இறந்தார்.

5 சாகும் வேளையில் அவர் தம் மகன் தோபியையும், அவனுடைய புதல்வரும் தம் பேரர்களுமான ஏழு இளைஞர்களையும் தம்மிடம் வரவழைத்து அவர்களை நோக்கி, "நினிவேயின் அழிவு விரைவில் வரும்.

6 ஏனெனில், ஆண்டவரது வாக்கு நிறைவுறும். அப்பொழுது இஸ்ராயேல் நாட்டினின்று சிதறடிக்கப்பட்டுள்ள நம் சகோதரர்கள் திரும்பவும் அங்குப் போய்ச் சேர்வார்கள்.

7 பாலைவனம் முழுவதிலும் மக்கள் குடியேறி வாழ்வார்கள். அங்கே தீக்கு இரையான ஆண்டவரின் ஆலயம் மறுபடியும் கட்டி எழுப்பப்படும். ஆண்டவருக்கு அஞ்சும் அனைவரும் அவ்விடத்திற்குத் திரும்பிப் போவார்கள்.

8 புறவினத்தாரும் தங்கள் சிலைகளைக் கைவிட்டு யெருசலேமில் குடியேறி வாழ்வார்கள்.

9 மண்ணின் எல்லா மன்னர்களும் இஸ்ராயேல் அரசரை வழிபட்டு யெருசலேமில் மகிழ்ந்திருப்பார்கள்.

10 ஆகையால் என் மக்களே, உங்கள் தந்தையின் சொற்களைக் கேளுங்கள்: உண்மை வழி நின்று ஆண்டவருக்கு ஊழியம் செய்யுங்கள். அவருக்கு விருப்பமானதையே செய்ய முயலுங்கள்.

11 உங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை புகட்டி நீதிவழி நடந்து தானம் செய்யவும், கடவுளை நினைத்து என்றென்றும் உண்மையோடும் முழு ஆற்றலோடும் அவரைப் போற்றவும் வேண்டும் என்று எச்சரித்து வையுங்கள்.

12 இறுதியாக, என் சொல்லுக்குச் செவி கொடுங்கள்: இங்குத் தங்காதீர்கள். நீங்கள் உங்கள் அன்னையை என் அருகில் ஒரே கல்லறையில் அடக்கம் செய்த உடனே தாமதம் செய்யாது இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள்.

13 ஏனெனில், இந்த நகர் தன் தீச்செயல்களினாலேயே அழியும் என்று நான் அறிவேன்" என்றார்.

14 தாய் இறந்த பின் தோபி தன் மனைவியுடனும் மக்களுடனும் பேரப்பிள்ளைகளுடனும் நினிவே நகரை விட்டுப் புறப்பட்டுத் தன் மாமன் மாமியிடம் திரும்பினான்.

15 அவர்கள் மிக முதிர்ந்த வயதிலும் நலமாய் இருக்கும் பொருட்டு தோபி அவர்களை நன்றாகக் கவனித்து வந்தான்; அவர்கள் இறந்த வேளையில் அவர்கள் கண்களை மூடினான். அப்பொழுது இரகுவேலுடைய எல்லாச் சொத்துகளும் அவன் உடைமைகள் ஆயின. அவன் தன் மக்களின் மக்களை ஐந்தாம் தலைமுறை வரை கண்டு களித்தான்.

16 இவ்வாறு தெய்வ பயம் உள்ளவனாய் அவன் தொண்ணுற்றொன்பது ஆண்டுகள் வாழ்ந்தான். பின்னர் அவர்கள் மகிழ்ச்சியுடன் அவனைப் புதைத்தனர்.

17 அவனுடைய உற்றார் உறவினரும் சந்திதியார் அனைவரும் நன்னடத்தையிலும் புனித வாழ்க்கையிலும் நிலைத்து நின்றனர். இவ்வாறு அவர்கள் கடவுளுக்கும் மனிதருக்கும் அந்நாட்டுக் குடிகள் அனைவருக்குமே உகந்தவர்களாய்த் திகழ்ந்து வந்தனர்.