கொலோசையர்

அதிகாரம் 01

1 கிறிஸ்துவுக்குள் வாழ்வோரும் விசுவாசமுள்ள சகோதரர்களுமான கொலோசே நகரத்து இறைமக்களுக்கு,

2 கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயசுவின் அப்போஸ்தலனான சின்னப்பனும், சகோதரர் தீமோத்தேயுவும் எழுதுவது: நாம் தந்தையாகிய கடவுளிடமிருந்து உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!

3 உங்களுக்காகச் செபிக்கும்போது நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் தந்தையாகிய கடவுளுக்கு என்றும் நன்றிகூருகிறோம்.

4 ஏனெனில், வானகத்தில் உங்களுக்கென வைத்திருக்கும் நன்மைகளில் நீங்கள் நம்பிக்கை கொண்டதால் கிறிஸ்து இயேசுவில் உங்களுக்கு எத்தகைய விசுவாசம் உண்டென்றும் இறைமக்கள் அனைவரிடமும் நீங்கள் எவ்வித அன்பு காட்டுகிறீர்களென்றும் கேள்வியுற்றோம்.

5 நற்செய்தியாகிய உண்மை வார்த்தையை நீங்கள் முன்பு கேட்டபோது இந்நம்பிக்கை உங்களுக்கு உண்டாயிற்று.

6 இந்த நற்செய்தி உலகம் முழுவதும் பரவிப் பயனளித்து வளர்ந்து வருகிறது. அது உங்களையும் வந்தடைந்தது. கடவுளுடைய அருளைப் பற்றிய அச்செய்தியை நீங்கள் கேட்டு, அதன் உண்மையான பொருளை உணர்ந்த நாள்முதல் உங்களிடையிலும் வளர்ந்து வருகிறது.

7 எம் அன்புள்ள உடன் ஊழியரான எப்பாப்பிரா இந்த அருளைப் பற்றி உங்களுக்குக் கற்பித்தார். இவர் எங்கள் சார்பில் பணி செய்பவர், கிறிஸ்துவின் விசுவாசமுள்ள பணியாளர்.

8 தேவ ஆவியினால் உங்களிடம் உண்டான அன்பைப்பற்றி அவர்தான் எங்களுக்கு அறிவித்தார்.

9 அதனால் நாங்கள் இச்செய்தியைக் கேள்விப் பட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாது செபிக்கிறோம், நீங்கள் முழு ஞானத்தையும் தேவ ஆவிக்கேற்ற அறிவுத் திறனையும் அடைந்து இறைவனுடைய திருவுளத்தை உணரும் அறிவை நிறையப் பெறுமாறு மன்றாடுகிறோம்.

10 இவ்வாறு நீங்கள் அனைத்திலும் ஆண்டவருக்கு உகந்தவர்களாய் இருக்கும்படி, அவருக்கு ஏற்ப வாழ்க்கை நடத்துவீர்கள்; எல்லா வகையான நற்செயல்களால் நற்பயன் விளைத்து கடவுளை அறியும் அறிவில் நீங்கள் மேன்மேலும் வளர்வீர்கள்;

11 அவருடைய மாட்சிமை மிக்க ஆற்றலுக்கேற்ப எந்நிலையிலும் பொறுமையும் மன உறுதியும் கொண்டிருக்கும்படி முழு வல்லமையாலும் வலப்படுத்தப் பெறுவீர்கள்;

12 பரம தந்தை ஒளியினிடையே தம் மக்களுக்குத் தந்த உரிமைப் பேற்றில் பங்கு பெற நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கியதற்காக அவருக்கு மகிழ்வோடு நன்றிக்கூருவீர்கள்.

13 அவரே இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுவித்து, தம் அன்பார்ந்த மகனுடைய அரசில் கொண்டு வந்து சேர்த்தார்.

14 இம் மகனால் தான் நமக்கு மீட்பு உண்டு, பாவமன்னிப்பு உண்டு.

15 அவர் கட்புலனாகாக் கடவுளின் சாயல், படைப்புக் கெல்லாம் தலைப்பேறானவர்;

16 ஏனெனில், அவரில் அனைத்தும் உண்டாயிற்று. விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை கட்புலனாவன, கட்புலனாகாதன, அரியணை சூழ்வோர், ஆட்சி புரிவோர், தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்குவோர் ஆகிய வானதூதர் அனைவரும் உண்டானது அவரிலேதான். அவராலேயே அவருக்காகவே அனைத்தும் ஆயின.

17 அனைத்துக்கும் முன்பே உள்ளவர் அவர்; அனைத்தும் அவரில் இணைந்து நிலைக்கும்.

18 திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் அவரே. ஆதியானவரும் அவரே. அனைத்திலும் முதன்மை பெறும்படி இறந்தோரினின்று பிறந்த தலைப்பேறு அவரே.

19 முழுநிறைவும் அவரில் குடிகொள்ள வேண்டுமென்று இறைவன் திருவுளம் கொண்டார்.

20 சிலுவையில் அவர் சிந்திய இரத்தத்தால் சமாதானம் உண்டாக்கி விண்ணிலும் மண்ணிலும் உள்ள யாவற்றையும் அவர் வழியாகத் தம்மோடு ஒப்புரவாக்க விரும்பினார்.

21 முன்னர் நீங்கள் இறைவனோடு உறவிழந்து நின்றீர்கள்; அவர்மீது பகையுள்ளம் கொண்டவர்களாய்த் தீய செயல்களில் மூழ்கி இருந்தீர்கள்.

22 இப்பொழுதோ உங்களை மாசு மறுவும் குறைப்பாடுமின்றிப் பரிசுத்தர்களாய்த் தம் திருமுன் நிறுத்த இறைவன் விரும்பி, கிறிஸ்துவுடைய ஊனுடலில் அவருடைய சாவின் வழியாக உங்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்.

23 ஆனால் நீங்கள் கேட்ட நற்செய்தியில் அடங்கியுள்ள நம்பிக்கையை நழுவவிடாது, விசுவாசத்தில் உறுதியாக ஊன்றி நிலைத்து நிற்கவேண்டும். வானத்தின் கீழுள்ள எல்லாப் படைப்புக்கும் அறிவிக்கப்பட்ட இந்த நற்செய்திக்குத் தான் சின்னப்பனாகிய நான் பணியாளன் ஆனேன்.

24 உங்களுக்காக நான் படும் துன்பங்களில் இப்பொழுது மகிழ்ச்சிகொள்கிறேன். திருச்சபையாகிய தம் உடலின் பொருட்டு கிறிஸ்துபடவேண்டிய வேதனைகளில் இன்னும் குறைவாய் இருப்பதை என் உடலில் நிறைவாக்குகிறேன்.

25 கடவுளின் வார்த்தையை அறிவிக்கும் அலுவலை. நிறைவேற்ற, கடவுள் உங்களை முன்னிட்டு எனக்களித்த பொறுப்பை ஏற்றுள்ளதால் நான் திருச்சபையின் பணியாளன் ஆனேன்.

26 நான் அறிவிப்பதோ மறைவான இறைத்திட்டம். ஊழூழியாக, தலைமுறை தலைமுறையாக ஒளிவிலிருந்த இத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளியாக்கப் பட்டுள்ளது.

27 ஏனெனில், இத்திட்டத்தின் மாட்சிமை புறவினத்தாரிடையே எவ்வளவு வளமிக்கதாய் உள்ளது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க இறைவன் திருவுளங் கொண்டார். கிறிஸ்து உங்களுக்குள் இருத்தலே அத்திட்டம் நாம் மாட்சிமை அடைவோம் என்பதற்கு அவரே, நம் நம்பிக்கை.

28 அவரையே நாங்கள் அறிவிக்கிறோம். கிறிஸ்துவுக்குள் ஒவ்வொருவருக்கும் முழு ஞானத்தோடு போதிக்கிறோம்.

29 என்னுள் வல்லமையோடு செயல்படும் ஆற்றலுக்கேற்ப இந்நோக்கத்திற்காகவே நான் பாடுபட்டு உழைக்கிறேன்,.

அதிகாரம் 02

1 உங்களுக்காகவும், லவோத்திக்கேயா நகர் மக்களுக்காகவும், என்னை நேரில் பார்த்திராத மற்றனைவருக்காகவும் நான் எவ்வளவு பாடுபடுகிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

2 அவர்களின் உள்ளங்கள் ஊக்கமடைந்து, அவர்கள் அன்பினால் ஒன்றாய் இணைக்கப்பட்டு, கடவுளுடைய திட்டத்தின் மறைபொருளை அறிந்துணரச் செய்யக் கூடிய அறிவுத் திறனின் வளத்தை நிறைவாகப் பெறவேண்டுமேன்றே நான் இங்ஙனம் பாடுபடுகிறேன். கிறிஸ்துவே அந்த மறைபொருள்.

3 அவருக்குள்ளே இறைவனின் ஞானமும் அறிவுமாகிய செல்வம் எல்லாம் மறைந்துள்ளது.

4 போலி வாதங்களால் எவனும் உங்களை ஏமாற்றாதபடி இதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

5 என் உடல் உங்களை விட்டுப் பிரிந்திருந்தாலும் என் உயிர் உங்களோடுதான் இருக்கின்றது. உங்களிடையே நிலவும் ஒழுங்கு முறைமையையும், கிறிஸ்துவில் உங்களுக்குள்ள உறுதியான விசுவாசத்தையும் கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன்.

6 எனவே, ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவைப்பற்றிய அறிவைப் பெற்றுக்கொண்டதற்கு ஏற்ப, அவரோடு ஒன்றித்து நடந்து வாருங்கள்.

7 அவரில் வேரூன்றி, அவர்மீது உங்கள் வாழ்க்கையாகிய கட்டடத்தை எழுப்புங்கள்.. உங்களுக்குப் போதித்தவாறு, விசுவாசத்தில் உறுதிபெற்று நன்றி மிக்கவர்களாய்த் திகழுங்கள்.

8 மேலும் மனிதப் பரம்பரையில் வந்த போலி ஞானத்தாலும், பொருளற்ற ஏமாற்றுப் பேச்சாலும் யாரும் கவரப்படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இப்போலி ஞானம் கிறிஸ்துவைச் சார்ந்ததன்று. இவ்வுலகப் பூதங்களையே சார்ந்தது.

9 ஏனெனில், அவருள்தான் கடவுள் தன்மையின் முழு நிறைவும் உடலுருவில் குடிகொண்டிருக்கிறது. அவருள்ளே நீங்களும் நிறைவு பெற்றவர்களாய் இருக்கிறீர்கள்.

10 தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்குவோர் முதலிய தூதர் அனைவருக்கும் தலைவர் அவரே.

11 கையால் செய்யாத விருத்தசேதனம் ஒன்றை நீங்கள் அவருள் பெற்றிருக்கிறீர்கள். பாவத்திற்குட்பட்ட உடலைக் களைந்துவிடுவதே இவ்விருத்தசேதனம். இதுவே கிறிஸ்துவினின்று உண்டான விருத்தசேதனம்.

12 ஞானஸ்நானத்தில் அவரோடு புதைக்கப்பட்டிருக்கிறீர்கள். இறந்தோரிடமிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல் மீது கொண்ட விசுவாசத்தால், அவரோடு நீங்களும் உயிர்த்தெழுந்தீர்கள்.

13 நீங்கள் பாவிகளாய் இருந்தாலும், உடலில் செய்யப்படும் விருத்தசேதனம் கூட உங்களுக்கு இல்லாததாலும இறந்தவர்களாயிருந்தீர்கள். உங்களை இறைவன் மீண்டும் அவரோடு உயிர்பெறச் செய்தார். அவர் நம் குற்றங்களையெல்லாம் மன்னித்துவிட்டார்.

14 நமக்கு எதிரான விதிகள் பலகொண்ட கடன்பத்திரம் ஒன்று இருந்தது; அதை அழித்துவிட்டார்,. சிலுவையில் அதை அறைந்து ஒழித்துவிட்டார்.

15 தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்குவோர் முதலிய தூதருடைய படைக்கலங்களைப் பறித்துக்கொண்டு சிலுவையில் கிடைத்த வெற்றியால், எல்லாரும் அவர்களைக் காண, இழுத்துக்கொண்டு பவனி சென்றார்.

16 எனவே, உணவு பானம் குறித்தோ, திருவிழா அமாவாசை ஓய்வுநாள் குறித்தோ உங்களை யாரும் குறைகூற விடாதீர்கள்.

17 இவையெல்லாம் வர இருந்தவற்றின் வெறும் நிழலே. உண்மைப் பொருளோ கிறிஸ்துவின் உடல் தான்.

18 போலித் தாழ்ச்சியையும், வான தூதர்களை வணங்குவதையும் விரும்புகின்ற எவரும் உங்களைக் கண்டனம் செய்ய விடாதீர்கள். இவையெல்லாம் விரும்புவோர் போலிக்காட்சிகளை அடிப்படையாக வைத்து, உலகச் சிந்தனையால் வீண் இறுமாப்புக் கொண்டு தலையாயிருப்பவரோடு உள்ள தொடர்பை விட்டுவிடுகின்றனர்.

19 இவர் செயலால் தான் உடல் முழுமையும் மூட்டுகளாலும், தசை நார்களாலும் இறுக்கிப் பிணிக்கப்பட்டு ஒன்றாய் இணைந்து கடவுள் விரும்பும் வளர்ச்சி பெறுகின்றது.

20 கிறிஸ்துவோடு நீங்கள் இறந்து, உலகப் பூதங்களின் பிடியினின்று விடுதலை அடைந்தீர்கள் அல்லவா? அப்படியானால் இன்னமும் இவ்வுலக வாழ்க்கையே வாழ்வதுபோல், அதன் விதிகளுக்கு உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதேன் ?

21 இதைத் தொடாதே, அதைச் சுவைக்காதே, இதில் கை வைக்காதே" என்று தடுக்கிறார்கள்.

22 அவ்வாறு தடுக்கப்படும் பொருள்கள் பயன்படுத்துவதால் அழிந்து விடுபவை அல்லவா? இவையனைத்தும் மனிதருடைய கட்டளைகளும் படிப்பினைகளுமே.

23 மனிதர்களே வகுத்துக்கொண்ட வழிபாடு, போலித் தாழ்ச்சி, உடல் ஒறுத்தல் முதலியவற்றைக் கொண்டுள்ளதால் இப்படிப்பினைகள் ஞானம்போல் தோன்றலாம். ஆனால், அவற்றிற்கு மதிப்பேதும் இல்லை. இச்சைகளைத் தீர்க்கத்தான் அவை பயன்படும்.

அதிகாரம் 03

1 கிறிஸ்துவோடு நீங்கள் உயிர்த்தெழுந்தவர்களாயின் மேலுலகில் உள்ளவற்றை நாடுங்கள். அங்கேதான், கிறிஸ்து கடவுளின் வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார்.

2 இவ்வுலகில் உள்ளவற்றின்மீது மனத்தைச் செலுத்தாமல் மேலுலகிலுள்ளவற்றின் மீதே மனத்தைச் செலுத்துங்கள்.

3 ஏனெனில், நீங்கள் இறந்து விட்டீர்கள். உங்கள் உயிர் கிறிஸ்துவோடு கடவுளுக்குள் மறைந்துள்ளது.

4 நம்முடைய உயிராகிய கிறிஸ்து தோன்றும்பொழுது, நீங்களும் அவரோடு மாட்சிமையில் தோன்றுவீர்கள்.

5 ஆகவே உங்களில் உலகிற்கடுத்தவற்றைச் சாகச் செய்யுங்கள். கெட்ட நடத்தை, கற்பின்மை, காமம், தீய இச்சைகள், சில வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.

6 இவையே, கடவுளுடைய சினத்தை வரவழைக்கின்றன.

7 இத்தீயவற்றில் உழன்ற காலத்தில் நீங்களும் இவ்வாறுதான் நடந்துகொண்டீர்கள்.

8 ஆனால், இப்பொழுது நீங்கள் இதையெல்லாம் விலக்குங்கள். சினம், சீற்றம், தீயமனம் ஆகியவற்றையெல்லாம் நீக்குங்கள். பழிச்சொல், நாணங்கெட்ட பேச்சு எதுவும் உங்கள் வாயில் வராதிருக்கட்டும்.

9 இனி ஒருவரிடம் ஒருவர், பொய் பேசாதீர்கள். ஏனெனில் பழைய இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்து விட்டு.

10 தன்னை உண்டாக்கியவரின் சாயலுக்கேற்ப, உண்மை அறிவை அடையும் பொருட்டுப் புதுப்பிக்கப்பட்டு வரும் புதிய இயல்பை அணிந்துகொண்டீர்கள்.

11 இப்புது வாழ்வில் கிரேக்கனென்றும் யூதனென்றும் இல்லை; விருத்தசேதனம் பெற்றவனென்றும் பெறாதவனென்றும் இல்லை. மிலேச்சன் என்றும், சீத்தியன் என்றும் இல்லை. அடிமையென்றும் உரிமைக்குடிமகனென்றும் இல்லை. கிறிஸ்துவே அனைவரிலும் அனைத்துமானவர்.

12 ஆதலால், கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டு அவரால் அன்பு செய்யப்பட்ட இறைமக்கள் நீங்கள். இரங்கும் உள்ளம், பரிவு, தாழ்ச்சி, சாந்தம், பொறுமை ஆகிய பண்புகளை அணிந்து கொள்ளுங்கள்.

13 ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவர் மீது ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால், மன்னித்துவிடுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல் நீங்களும் மன்னியுங்கள்.

14 இவையெல்லாவற்றிற்கும் மேலாக அன்பை அணிந்துகொள்ளுங்கள். அதுவே எல்லா நற்பண்புகளையும் பிணைந்து நிறைவு அளிப்பது.

15 கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் இதயங்களில் ஆட்சி புரிவதாக. இச் சமாதானத்திற்கே நீங்கள் ஒரே உடலின் உறுப்பினராய் அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாயும் இருங்கள்.

16 கிறிஸ்துவின் வார்த்தை நிறை வளத்தோடு உங்களுள் குடிகொள்வதாக. முழு ஞானத்தோடு ஒருவருக்கொருவர் போதியுங்கள். அறிவு புகட்டுங்கள். தேவ ஆவி ஏவிய சங்கீதங்களையும் புகழ்ப்பாக்களையும் பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடுங்கள்.

17 எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் செய்து, அவர் வழியாகத் தந்தையாகிய கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

18 மனைவியரே, உங்கள் கணவருக்கு பணிந்து நடங்கள். இதுவே ஆண்டவருக்குள் வாழும் முறை.

19 கணவர்களே, உங்கள் மனைவியர்க்கு அன்பு காட்டுங்கள், அவர்கள் மேல் எரிந்து விழாதீர்கள்.

20 பிள்ளைகளே, எல்லாவற்றிலும் பெற்றோர்ருக்குக் கீழ்ப்படிந்திருங்கள். இதுவே ஆண்டவருக்கு உகந்தது.

21 தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்ட வேண்டாம்; அவர்கள் மனந்தளர்ந்து போகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

22 அடிமைகளே, இவ்வுலகத்தில் உங்கள் தலைவராயிருப்போருக்கு எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்திருங்கள். மனிதர்களுக்கு உகந்தவராகலாம் என்று, கண்முன் மட்டும் உழைப்பவர்களாயிராமல், ஆண்டவருக்கு அஞ்சி நேர்மையான உள்ளத்தோடு கீழ்ப்படியுங்கள்.

23 நீங்கள் எந்த வேலை செய்தாலும் மனிதருக்காகச் செய்வதுபோல் செய்யாமல், ஆண்டவருக்காகவே செய்வதுபோல நெஞ்சாரச் செய்யுங்கள்.

24 அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களைத் தம் வாரிசுகளாக்குவார் என உங்களுக்குத் தெரியுமன்றோ? நீங்கள் ஊழியம் செய்யவேண்டியது ஆண்டவராகிய கிறிஸ்துவுக்கே.

25 ஏனென்றால் அநீதி புரிபவன் அநீதியின் பலனையே பெறுவான். இறைவன் முகத்தாட்சணியம் பார்ப்பதில்லை.

அதிகாரம் 04

1 தலைவர்களே, உங்களுக்கும் ஒரு தலைவர் வானகத்தில் இருக்கிறார் என்பதை மனத்திற்கொண்டு, நீதி நியாயத்தோடு அடிமைகளை நடத்துங்கள்.

2 செபத்தில் நிலைத்திருங்கள்,. அதில் விழிப்பாயிருங்கள், நன்றி கூற மறவாதீர்கள்.

3 கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை எடுத்துக் கூறுவதைத் தேவ வார்த்தையை அறிவிக்கும் வாய்ப்பைக் கடவுள் எங்களுக்குத் தந்தருளும் படி எங்களுக்காவும் செபியுங்கள். 'இம் மறைபொருளின் பொருட்டே நான் விலங்கிடப்பட்டிருக்கிறேன்.

4 பேச வேண்டிய முறையில் பேசி நான் அந்த மறைபொருளை வெளிப்படுத்தும்படி வேண்டுங்கள்.

5 திருச்சபையைச் சேராதவர்களிடம் ஞானத்தோடு பழகுங்கள். நாம் வாழும் இக்காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்.

6 உங்கள் பேச்சு இனியதாகவும், சாரமுள்ளதாகவும் இருக்கட்டும். இங்ஙனம் ஒவ்வொருவருக்கும் எவ்வாறு பதில் அளிக்க வேண்டுமென அறிந்துகொள்வீர்கள்.

7 அன்புள்ள சகோதரர் தீக்கிக்கு என்னைப் பற்றிய செய்தியெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார். அவர் நம்பிக்கைக்குரிய பணியாளர், ஆண்டவருடைய பணியில் என் உடனுழைப்பாளர்.

8 எங்களைப் பற்றி உங்களுக்கு அறிவித்து, உங்கள் உள்ளங்களைத் தேற்றுவதற்கென்றே அவரை உங்களிடம் அனுப்பினேன்.

9 நம்பிக்கைக்குரிய அன்புத் தம்பி ஒனேசிமுவைக் கூட அனுப்புகிறேன். அவன் உங்கள் சபையைத் சேர்ந்தவன்தான். அவர்கள் இங்கு நடப்பதையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

10 என்னோடு கைதியாயிருக்கிற அரிஸ்தர்க்கும் பர்னபாவின் நெருங்கிய உறவினரான மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்- இவர் வந்தால் நீங்கள் என்னென்ன செய்யவேண்டுமேன்று உங்களுக்குத் தெரியும். 'இவர் உங்களிடம் வந்தால் உபசரியுங்கள்-

11 யுஸ்து எனப்படும் இயேசுவும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்லுகிறார். விருத்தசேதனம் பெற்றவர்களுள் இவர்கள் மட்டுமே கடவுளுடைய அரசுக்காக என்னுடன் உழைப்பவர்கள். இவர்கள் எனக்கு ஆறுதலாகவும் இருந்தனர்.

12 உங்கள் சபையைச் சார்ந்த எப்பாப்பிராவிடமிருந்தும் உங்களுக்கு வாழ்த்து, கடவுளுடைய திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றுவதில் முற்றும் தேறினவர்களாய், ஞான நிறைவில் நிலைத்து நிற்கும்படி கிறிஸ்து இயேசுவின் ஊழியரான அந்த எப்பாப்பிரா உங்களுக்காக எப்போதும் கவலையோடு செபித்துவருகிறார்.

13 உங்களுக்காகவும், லவோதிக்கேயா, எராப்போலி ஆகிய நகரங்களில் உள்ளவர்களுக்காகவும் அவர் பாடுபட்டு உழைக்கிறார் என்பதற்கு நான் சாட்சி.

14 அன்புமிக்க மருத்துவர் லூக்காவும் தேமாவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.

15 லவோதிக்கேயாவிலுள்ள சகோதரர்களுக்கும் நிம்பாளுக்கும், அவருடைய வீட்டில் கூடும் சபைக்கும் என் வாழ்த்து,

16 இக்கடிகத்தை நீங்கள் வாசிக்கக் கேட்டபின், லவோதிக்கேயா திருச்சபையிலும் வாசிக்கச் செய்யுங்கள். அவ்வாறே லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள்.

17 " ஆண்டவருக்குள் நீர் பெற்றுக்கொண்ட திருப்பணியை நிறைவேற்றக் கருத்தாயிரும் " என்று அர்க்கிப்புவுக்குச் செல்லுங்கள்.

18 இவ்வாழ்த்து சின்னப்பனான நான் என் கைப்பட எழுதியது. நான் விலங்கிடப்பட்டிருக்கிறேன்¢ என்பதை நினைவுகூருங்கள். இறை அருள் உங்களோடு இருப்பதாக!.