பிலிப்பியர்

அதிகாரம் 01

1 கிறிஸ்து இயேசுவுக்குள் பிலிப்பி நகரில் வாழ்கின்ற இறைமக்கள், மேற்பார்வையாளர், திருப்பணியாளர் அனைவருக்கும், கிறிஸ்து இயேசுவின் ஊழியர்களான சின்னப்பனும் தீமோத்தேயுவும் எழுதுவது:

2 நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், அண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!

3 செபத்தில் உங்களைக் குறிப்பிடும்போதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.

4 உங்கள் அனைவருக்காகவும் நான் மன்றாடும் பொழுதெல்லாம் தொடக்கத்திலிருந்தே இன்றுவரை

5 நீங்கள் நற்செய்தித் திருப்பணியில் பங்கேற்று வருவதை நினைத்து, மகிழ்ச்சியுடன் மன்றாடுகிறேன்.

6 உங்களில் சிறந்ததொரு வேலையைத் தொடங்கியவர், இயேசு கிறிஸ்துவின் நாள்வரை அதைத் தொடர்ந்து செய்து நிறைவுபெறச் செய்வார் என நான் நம்பியிருக்கிறேன்.

7 உங்கள் எல்லோரையும் பற்றி எனக்கு இத்தகைய உணர்ச்சிகள் எழுவது இயற்கைதானே! ஏனெனில், நான் சிறையில் இருந்தபொழுதும், நான் நற்செய்திக்காகப் போராடி அதை நிலைநாட்டிய பொழுதும், என்னுடனிருந்து எனக்குக் கிடைத்த வரத்தில் பங்குகொண்ட நீங்கள் என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள்.

8 கிறிஸ்து இயேசுவுக்குரிய அதே பரிவுள்ளத்தோடு உங்கள் எல்லோர் மீதும் எவ்வளவோ ஏக்கமாயிருக்கிறேன். இதற்குக் கடவுளே சாட்சி.

9 எனவே மேலானவற்றையே பகுத்தறியச் செய்யும் அறிவையும் உள்ளுணர்வு அனைத்தையும் உங்களுக்குத் தர வேண்டும் என்பதே என் செபம்.

10 இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் பெறும் ஏற்புடைய வாழ்வின் பயனால் நிரப்பப்பட்டு,

11 கிறிஸ்துவின் நாளை எதிர்நோக்கி, கடவுளின் மகிமைக்காவும் புகழுக்காவும் நீங்கள் குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்து வருவீர்கள்.

12 சகோதரர்களே, எனக்கு நேர்ந்தவையெல்லாம் நற்செய்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுபவை ஆயின.

13 இதை நீங்கள் அறிய வேண்டும் என விரும்புகிறேன். கிறிஸ்துவுக்காக நான் சிறைப்பட்டது அரண்மனைக் காவற்படையினர் அனைவருக்கும் மற்ற யாவருக்குமே நன்கு தெரியவந்தது.

14 ஆகவே, சகோதரர்களுள் மிகப் பலர் என் சிறை வாழ்வினால் ஆண்டவருக்குள் உறுதிகொண்டு கடவுளின் வார்த்தையை அச்சமின்றி அறிவிக்க மேலும் துணிவு கொண்டிருக்கின்றனர்.

15 இவர்களுன் சிலர் பொறாமையாலும் போட்டி மனப்பான்மையாலும் கிறிஸ்துவை அறிவிக்கின்றனர்; வேறு சிலரோ நல்ல மனத்தோடு அறிவிக்கின்றனர்.

16 இவர்களைத் தூண்டுவது அன்பே. நற்செய்திக்காகப் போராடவே நான் குறிக்கப்பட்டிருக்கிறேன் என இவர்கள் அறிவார்கள்.

17 மற்றவர்களோ கட்சி மனப்பான்மையால் கிறிஸ்துவை அறிவிக்கின்றனர். அவர்களுடைய நோக்கம் நேர்மையானதன்று. என் சிறை வாழ்வின் வேதனையை இன்னும் மிகுதியாக்க நினைக்கின்றனர்.

18 அதனாலென்ன ? அவர்களுடைய நோக்கம். வஞ்சகமானதோ, நேர்மையானதோ; எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகின்றார். அது எனக்கு மகிழ்ச்சியே ஆம், இனியும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

19 உங்கள் மன்றாட்டினாலும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையாலும் இதெல்லாம் எனக்கு மீட்பளிப்பதாய் முடியும் என்று நான் அறிவேன்.

20 என்ன நேரிடினும் நான் நிலைகுலைய மாட்டேன். 'இது வரையில் என்னால் கிறிஸ்துவின் புகழ் விளங்கியதுபோல் இப்பொழுதும் நான் இருந்தாலும் இறந்தாலும் என்னால் அவரது புகழ் விளங்கும். இதுவே என் பேராவல். இதுவே என் நம்பிக்கை

21 ஏனெனில், எனக்கு வாழ்வதென்பது கிறிஸ்துவே; சாவது ஆதாயமே.

22 ஆனால், உலகில் வாழ்ந்தால், பயனுள்ள பணிசெய்யக் கூடுமாயின் எதைத் தேர்ந்து கொள்வதென்பது எனக்குத் தெரியவில்லை.

23 இரு பக்கங்களிலும் நெருக்கப்படுகிறேன். உயிர் நீத்து கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்னும் ஆவல் ஒருபுறம். 'இதுவே மிகச் சிறந்தது,

24 மற்றொருபுறம், இன்னும் உலகில் வாழ்வது உங்கள் பொருட்டுத் தேவையாயிருக்கிறது.

25 இந்த உறுதியில் நான் ஒன்று அறிவேன்: நான் இன்னும் உயிரோடிருந்து நீங்கள் விசுவாசத்தில் வளர்ச்சிபெற்று மகிழ்ச்சி காணும்படி உங்கள் அனைவரோடும் தங்கியிருப்பேன்.

26 ஆகவே, நான் உங்களிடம் திரும்பி வருவதால், கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் கொள்ளும் பெருமிதம் என் பொருட்டு மிகுதியாகும்.

27 ஆனால், கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்ற வாழ்க்கை நடத்துங்கள்: நான் உங்களை வந்து பார்த்தாலும், வரமுடியாமல் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் நீங்கள் நற்செய்தியின் மேலுள்ள விசுவாசத்திற்கே ஒரே உள்ளத்தோடு போராடி, ஒரே மனதாய் நிலைத்து நிற்கிறீர்கள் என்பதும்.

28 எதிரிகள் முன் சிறிதும் மிரளாமல் இருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரிய வேண்டும். இவ்வாறு நீங்கள் மிரளாமல் இருப்பது அவர்களுடைய அழிவுக்கும் உங்களுடைய மீட்புக்கும் அறிகுறியாகும். இது கடவுளின் செயல்.

29 நீங்கள் கிறிஸ்துவில் விசுவாசம்கொள்வதற்கு மட்டுமன்று. அவருக்காகத் துன்பங்களை ஏற்பதற்கும் இறையருள் உங்களுக்கு அளிக்கப்பட்டது.

30 எனக்குள்ள போராட்டமே உங்களுக்கும் உண்டு. எனக்கிருந்த போராட்டத்தை நீங்கள் அன்று கண்டீர்கள். இன்னும் நான் அதில் ஈடுபட்டிருப்பது உங்கள் செவிக்கு எட்டியுள்ளது.

அதிகாரம் 02

1 எனவே, கிறிஸ்துவுக்குள் வாழும் வாழ்வு ஊக்கம் ஊட்டுவதெனில், அன்பினால் ஆறுதல் விளைவிப்பதெனில், ஆவியானவரோடு நட்புறவு தருவதெனில், பரிவும் இரக்கமும் உண்டாக்குவதெனில்.

2 நீங்கள் ஒரு மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவுபெறச் செய்யுங்கள்; ஒரே அன்பும். ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டிருங்கள்.

3 போட்டி மனப்பான்மைக்கும், வீண் பெருமைக்கும் இடம் தரவேண்டாம். மனத்தாழ்ச்சியோடு மற்றவரை உங்களினும் உயர்ந்தவராகக் கருதுங்கள்.

4 உங்களுள் ஒவ்வொருவரும் தன் நலத்தையே நாடாது, பிறர் நலத்தையும் நாட வேண்டும்.

5 கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக.

6 கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை விடாமல் பிடித்துக்கொண்டிருக்க வேண்டிய தொன்றாகக் கருதவில்லை.

7 ஆனால், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,

8 தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிபவரானார்.

9 ஆதலால் தான் கடவுள் அவரை எல்லாருக்கும் மேலாய் உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

10 ஆகவே, இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிட,

11 'இயேசுகிறிஸ்து ஆண்டவர்' என்று தந்தையாகிய கடவுளுடைய மகிமைக்காக எல்லா நாவுமே அறிக்கையிடும்.

12 எனவே, என் அன்பிற்குரியவர்களே, எப்பொழுதும் கீழ்ப்படிதலோடு நடந்தது போல் இப்போதும் நடங்கள். நான் இப்போது உங்களோடு இல்லாவிடினும், உங்களோடு இருந்தபோது நீங்கள் காட்டிய பணிவை விடை மிகுந்த பணிவு காட்டி. அச்ச நடுக்கத்தோடு உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள்.

13 நீங்கள் எதையும் விரும்பவும் செயலாற்றவும் தம் திருவுளம் நிறைவேற, உங்களில் செயலாற்றுபவர் கடவுளே.

14 செய்வதெல்லாம் முணுமுணுக்காமல் வாதாடாமல் செய்யுங்கள்.

15 அப்பொழுதுதான் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமின்றி மாசற்றவர்களாய்க் கடவுளின் குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; வாழ்வைப் பற்றிய வார்த்தைகளை வழங்க ஏந்தி நின்று, உலகில் சுடர்விடும் விண்மீன்கள் எனத் துலங்குவீர்கள்.

16 வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பதற்கு நீங்கள் சான்றாய் நின்று, கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையச் செய்வீர்கள்.

17 உங்கள் விசுவாசமாகிய காணிக்கையை ஒப்புக்கொடுக்கும் திருப்பலியில் நான் என் இரத்தத்தையே சிந்தவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே.

18 அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ளுகிறேன். அதுபோலவே நீங்களும் அகமகிழுங்கள். உங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

19 உங்களைப் பற்றிய செய்திகளை அறிந்து, நானும் உற்சாகமடையும்படி தீமோத்தேயுவை உங்களிடம் விரைவில் அனுப்பலாம் என்று நினைக்கிறேன். ஆண்டவர் இயேசு அருள் புரிக.

20 உங்கள் நலத்தில் மெய்யாகவே அக்கறை காட்டுவதற்கு அவரைப்போல் நன்மனமுள்ளவர் என்னோடு வேறு யாருமில்லை.

21 எல்லாரும் தம்மைச் சார்ந்தவற்றைக் தேடுகிறார்களே தவிர, கிறிஸ்து இயேசுவைச் சார்ந்தவற்றைத் தேடுவதில்லை.

22 தீமோத்தேயுவின் தகைமையோ உங்களுக்குத் தெரியும். தந்தையோடு மகன் உழைப்பதுபோல் என்னோடு அவர் நற்செய்திக்காக உழைத்திருக்கிறார்.

23 என் நிலைமை எப்படி இருக்கும் என்று அறிந்தவுடன் அவரை உங்களிடம் அனுப்ப நினைக்கிறேன்.

24 நானே விரைவில் உங்களிடம் வருவேன் என்ற நம்பிக்கையும் ஆண்டவரில் எனக்குண்டு.

25 என் தேவைகளில் எனக்குத் துணைசெய்யும்படி நீங்கள் எப்பாப்பிரொத்தீத்துவை அனுப்பி வைத்தீர்களே. அந்தச் சகோதரர் என் உழைப்பிலும் போராட்டத்திலும் தோழராக இருந்தார். இப்போது அவரை உங்களிடம் திருப்பி அனுப்ப வேண்டுமென்று நினைக்கிறேன்.

26 ஏனெனில், தாம் நோயுற்ற செய்தி உங்களுக்குத் தெரியவந்ததை அறிந்து மனங்கலங்கி உங்களெல்லோரையும் காண ஏக்கமாயிருந்தார். ஆம், அவர் நோயுற்றது உண்மையே.

27 இறக்கும் தருவாயில்கூட இருந்தார். ஆனால் கடவுள் அவர்மேல் இரக்கம் கொண்டார். அவர்மேல் மட்டுமன்று, துன்பத்துக்கு மேல் துன்பம் எனக்கு வராதபடி என் மேலம் இரக்கம் கொண்டார். அவரை விரைவில் அனுப்பிவிடுகிறேன்.

28 மீண்டும் அவரைப் பார்த்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள், நானும் கவலையின்றி இருப்பேன்.

29 எனவே முழு மகிழ்ச்சியோடு ஆண்டவர் பெயரால் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். அத்தகையோருக்கு நீங்கள் மதிப்புக் கொடுக்க வேண்டும்.

30 இப்படி அவர் சாகும் நிலைக்கு வந்தது கிறிஸ்துவுக்காகச் செய்த வேலையினாலேயே. நீங்கள் எனக்குத் துணைபுரிய இயலாமற்போன குறையை நீக்க அவர் தம் உயிரையே இழக்கவும் துணியலானார்.

அதிகாரம் 03

1 இறுதியாக, என் சகோதரர்களே, ஆண்டவருக்குள் அகமகிழுங்கள். எழுதினதையே மீண்டும் எழுதுவது எனக்குத் தொல்லையில்லை. உங்களுக்கு நல்லதுதான்.

2 அந்த நாய்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். அந்தக் கெட்ட ஊழியர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்.

3 அந்தப் போலி விருத்தசேதனக்காரர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள். நாமே கடவுளின் ஆவிக்கேற்ப உண்மை வழிபாடு செலுத்துகிறோம். கிறிஸ்து இயேசுவில் நாம் பெருமை பாராட்டுகிறோமே தவிர, உடலைச் சார்ந்ததில் நம்பிக்கை கொள்வதில்லை. நானும் இத்தகையவற்றில் நம்பிக்கை வைக்க முடியும்.

4 இத்தகையவற்றில் நம்பிக்கை கொள்ள முடியும் என ஒருவன் நினைத்தால், நான் அவனை விட மிகுதியாய் நினைக்கமுடியும். நான் எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டேன். நானும் இஸ்ராயேல் இனத்தவன்.

5 நான் பென்யமீன் குலத்தவன், எபிரேயர் குலத்தில் பிறந்த எபிரேயன். திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன்.

6 அதன்மேல் எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். திருச்சட்டத்துக்குரிய நீதியைப் பொறுத்தமட்டில் குற்றமற்றவனாயிருந்தேன்.

7 ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன்.

8 ஆம், என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவை அறிதலாகிய ஒப்பற்ற செல்வத்தின் பொருட்டு அவையெல்லாம் இழப்பு எனக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ளவும், அவரோடு ஒன்றித்திருக்கவும் எல்லாவற்றையும் குப்பையெனக் கருதுகிறேன்.

9 இறைவனுக்கு ஏற்புடையவனாகும் தகுதி எதுவும் எனக்குச் சொந்தமாயில்லை. திருச்சட்டத்தால் இறைவனுக்கு ஏற்புடையவன் ஆகாத இந்நிலையில் கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தினால் தான், இறைவனுக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். அந்த ஏற்புடைமையோ கடவுள் அளிக்கும் கொடை. விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது.

10 இனி நான் விரும்புவதெல்லாம் அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே. அதாவது, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையைத் துய்த்துணர வேண்டும். அவரது சாவின் சாயலை என்னுள் ஏற்று அவருடைய பாடுகளில் பங்குபெற வேண்டும்.

11 அப்போது தான், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுதலை நான் அடைவேன் என நம்பக் கூடும்.

12 இவையெல்லாம் அடைந்துவிட்டேன் என்றோ நிறைவு எய்தி விட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. எதற்காக கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டாரோ. அதை நான் பற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து ஓடுகிறேன்.

13 ஆம், சகோதரர்களே, முடிவை நான் பற்றிக் கொண்டு விட்டேன் என்று எண்ணவில்லை. ஆனால் ஒன்று மட்டும் செய்கிறேன்.

14 கடந்ததை மறந்துவிட்டு முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசுபெற வேண்டி இலக்கை நோக்கி முனைந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் என்னைக் கடவுள் மேலுலகுக்கு அழைப்பதே அப்பரிசாகும்.

15 எனவே நிறைவெய்திய நமக்கு இத்தகைய மனநிலையே இருத்தல் வேண்டும். எதைப்பற்றியாவது நீங்கள் வேறுபாடான கருத்துக் கொண்டிருந்தால் அதைப்பற்றிய உண்மையை கடவுளே உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

16 நாம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும், அதே வழியில் தொடர்ந்து நடப்போம்.

17 சகோதரர்களே, நீங்கள் அனைவரும் ஒரு மிக்க என்னைப்போல் நடங்கள். நாங்கள் உங்களுக்கு முன்மாதிரி, அந்த முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களைக் கவனியுங்கள்.

18 கிறிஸ்துவின் சிலுவைக்கு எதிரிகளாய் நடப்போர் பலர் உள்ளனர். இதை உங்களுக்குப் பலமுறை கூறியுள்ளேன். இப்போதும் கண்ணீரோடு சொல்லுகிறேன்.

19 அழிவே அவர்கள் முடிவு, வயிறே அவர்கள் கடவுள், மானக்கேடே அவர்கள் மகிமை. அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்ததே.

20 நமக்கோ வானகமே தாய்நாடு. அங்கிருந்து மீட்பர் வருவாரெனக் காத்திருக்கிறோம்.

21 ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே அந்த மீட்பர். அவர் அனைத்தையும் தமக்குக் கீழ்ப்படுத்த வல்ல ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை, மாட்சிமைக்குரிய தம் உடலின் சாயலாக உருமாற்றுவார்.

அதிகாரம் 04

1 ஆகவே என் அன்புச் சகோதரர்களே, என் வாஞ்சைக் குரியவர்களே, நீங்கள் என் மகிழ்ச்சி, நீங்களே என் வெற்றி வாகை. அன்புக்குரியவர்களே, நான் கூறியவாறு ஆண்டவருக்குள் நிலைத்திருங்கள்.

2 எயோதியாளைக் கேட்டுக் கொள்கிறேன், சிந்திக்கேயாளையும் கெஞ்சுகிறேன்: நீங்கள் ஆண்டவருக்குள் ஒற்றுமையாக இருங்கள்.

3 என்னோடு தோள்கொடுத்து உழைத்த உண்மையான தோழரே, உம்மையும் கேட்டுக் கொள்கிறேன்: இவர்களுக்கு உதவி செய்யும். ஏனெனில், இவர்கள் கிலேமெண்தோடும் என் உடன் உழியர் பலரோடும் நற்செய்திக்காக என்னோடு போராடினார்கள். அவர்களுடைய பெயர்கள் வாழ்வின் நூலில் எழுதப்பட்டுள்ளன.

4 ஆண்டவருக்குள் என்றும் அகமகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன்.: 'அகமகிழுங்கள்.

5 கனிந்த உங்கள் உள்ளம் அனைவர் முன்னும் விளங்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார்.

6 எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், எல்லாத் தேவைகளிலும் நன்றியோடு கூடிய செபத்திலும் மன்றாட்டிலும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களை ஒப்படையுங்கள்.

7 அப்பொழுது அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவுக்குள் உங்கள் உள்ளத்துக்கும் மனத்துக்கும் அரணாயிருக்கும்.

8 இறுதியாக, சகோதரர்களே, உண்மை எதுவோ, கண்ணியமானது எதுவோ, நீதி எதுவோ, தூயது எதுவோ, இனியது எதுவோ, எதெல்லாம் நற்பண்புடையதோ, எதெல்லாம் புகழ்ச்சிக்குரியதோ, அவற்றையே மனத்தில் கொள்ளுங்கள்.

9 நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்ட போதனைகள், பெற்றுக்கொண்ட படிப்பிணைகள், என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்க்கையில் நீங்கள் பார்த்தவை அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அப்போது சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உங்களோடிருப்பார்.

10 என்மீது உங்களுக்கு இருந்த அக்கறை இப்போதாவது மலர்ந்தது கண்டு ஆண்டவருக்குள் நான் பெரிதும் அகமகிழ்ந்தேன். அந்த அக்கறை ஏற்கனவே உங்களுக்கு இருந்தது. அதைக் காட்ட வாய்ப்புக் கிடைக்கவில்லை.

11 நான் இவ்வாறு சொல்வது எனக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு குறையினாலன்று. ஏனெனில், எந்நிலையிலும் போதுமென்ற மனத்தோடு வாழக் கற்றுக்கொண்டேன். வறுமையிலும் வாழத்தெரியும்.

12 வளமையிலும் வாழத்தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவுற்று வாழவோ, குறைவுற்றுத் தாழவோ, எதற்கும் பயிற்சி பெற்றிருக்கிறேன்.

13 எனக்கு உறுதியூட்டும் இறைவனால் எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.

14 ஆயினும் நான் பட்ட வேதனையில் நீங்கள் பங்கு கொண்டதற்கு நன்றி.

15 பிலிப்பியர்களே, உங்களுக்குத் தெரிந்திருப்பதுபோல், நற்செய்தியை நான் போதிக்கத் தொடங்கின காலத்தில் மக்கதோனியாவை விட்டு, வெளிக்கிளம்பிய பொழுது, உங்களைத் தவிர வேறு எந்தச் சபையும் என் வரவு செலவு கணக்கில் இடம் பெறவில்லை.

16 நான் தெசலோனிக்கேயில் இருந்தபோது என் தேவையைப் போக்க ஒருமுறை மட்டுமன்று, இருமுறை உதவி அனுப்பினீர்கள்.

17 நன்கொடைகளல்ல நான் நாடுவது; நான் நாடுவதெல்லாம் உங்கள் கணக்கில் பெருகிவரும் ஆக்கமே.

18 நீங்கள் அனுப்பியதெல்லாம் பெற்றுக்கொண்டேன். இப்போது என் தேவைக்கு மேல் இருக்கிறது. நீங்கள் அனுப்பிய கொடைகளை எப்பாப்பிரொத்தீத்துவிடமிருந்து பெற்றுக்கொண்டேன். இப்போது என்னிடம் நிறைய இருக்கிறது. உங்கள் கொடைகளோ நறுமணம் வீசும் காணிக்கையும், கடவுளுக்கு உகந்த பலிப்பொருளுமாகும்.

19 மாட்சிமிக்க தம் செல்வத்திற்கேற்ப என் கடவுள் உங்கள் தேவைகள் அனைத்தையும் கிறிஸ்து இயேசுவுக்குள் நிறைவாக்குவார்.

20 நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மகிமை உண்டாகக. ஆமென்.

21 கிறிஸ்து இயேசுவின் பெயரால் இறைமக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள். என்னோடிருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.

22 இறைமக்கள் எல்லாரும், சிறப்பாகச் செசாருடைய வீட்டைச் சேர்ந்தவர்களும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.

23 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக.