அதிகாரம் 01
1 பரம தந்தையாகிய கடவுளுக்குள்ளும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் வாழ்கின்ற தெசலோனிக்கேய மக்களின் சபைக்கு, சின்னப்பனும் சில்வானும் தீமோத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!
2 எங்கள் செபங்களில் உங்களைக் குறிப்பிட்டு உங்கள் அனைவரையும் நினைத்துக் கடவுளுக்கு என்றும் நன்றி கூறுகிறோம்.
3 நீங்கள் விசுவாசத்தால் ஆற்றிய செயல்களையும், அன்பினால் மேற்கொண்ட உழைப்பையும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் கொண்ட மன உறுதியையும், நம் கடவுளும் தந்தையுமானவர் திருமுன் இடைவிடாமல் நினைவுகூருகிறோம்.
4 கடவுளால் அன்பு செய்யப்படும் சகோதரர்களே, அவர் உங்களைத் தேர்ந்துகொண்டுள்ளார் என்பதை நாங்கள் அறிவோம்.
5 நாங்கள் நற்செய்தியை வெறும் வார்த்தையில் மட்டும் உங்களுக்குக் கொண்டுவரவில்லை; பரிசுத்த ஆவி தரும் ஆற்றலோடும், அசையா உள்ளத்துறுதியோடும் கொண்டு, வந்தோம். உங்கள் நன்மைக்காக நாங்கள் உங்களிடையே எப்படி நடந்துகொண்டோம் என்பது தெரிந்ததே.
6 மிகுந்த வேதனை உண்டான போதிலும் பரிசுத்த ஆவி அளிக்கும் மகிழ்ச்சியோடு தேவ வார்த்தையை ஏற்று எங்களைப் போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவர்களானீர்கள்.
7 இங்ஙனம் மக்கெதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள விசுவாசிகள் அனைவருக்கும் முன்மாதிரியாய் விளங்கினீர்கள்.
8 ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நகரிலிருந்து எழுந்து ஒலித்தது. கடவுள் மேல் உங்களுக்குள்ள விசுவாசம் மக்கெதோனியாவுக்கும் அக்காயாவுக்கும் மட்டுமன்று, எங்குமே எட்டியுள்ளது. உங்கள் விசுவாசத்தைப் பற்றி நாங்கள் எடுத்துச் சொல்லத் தேவையே இல்லை.
9 நீங்கள் எங்களை எவ்வாறு வரவேற்றீர்கள் என்றும், உண்மையும் உயிருமுள்ள கடவுளுக்கு ஊழியம் செய்வதற்காக, எவ்வாறு தெய்வங்களின் சிலைகளை விட்டுவிட்டுக் கடவுளிடம் திரும்பினீர்கள் என்றும் மக்களே எடுத்துக் கூறுகின்றனர்.
10 கடவுளிடம் திரும்பிய நீங்கள் வானினின்று வரும் அவர் மகனுக்காகக் காத்திருக்கிறீர்கள். இறந்தோரினின்று இறைவன் உயிர்ப்பித்த இந்த இயேசு வரப்போகும் சினத்தினின்று நம்மை மீட்பவர்.
அதிகாரம் 02
1 சகோதரர்களே, நாங்கள் உங்களிடம் வந்தது பயனற்றுப் போகவில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
2 நீங்கள் அறிந்திருப்பதுபோல், உங்களிடம் வருவதற்கு முன்னர் பிலிப்பி நகரில் நாங்கள் துன்புற்றோம், அவமானத்துக்கு ஆளானோம். ஆயினும் பெரும் போராட்டத்தினிடையிலும் கடவுளின் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்க நம் கடவுளிடமிருந்து துணிவு பெற்றோம்.
3 எங்கள் அறிவுரைகள் ஏமாற்றத்தினாலோ, கெட்ட கருத்தினாலோ கபட எண்ணத்தினாலோ தூண்டப்பட்டவை அல்ல.
4 நாங்கள் தகுதியுள்ளவர்களெனக் கடவுளே எங்களை நம்பி, நற்செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அதற்கேற்ப நாங்கள் அதை அறிவிக்கிறோம். மனிதருக்கு அல்ல, எங்கள் உள்ளங்களை உய்த்துணரும் கடவுளுக்கே உகந்தவர்களாய் இருக்கப் பார்க்கிறோம்.
5 நாங்கள் ஒருகாலும் இச்சகமாகப் பேசியதேயில்லை; இது உங்களுக்குத் தெரியும். போதனை என்னும் போர்வையில் நாங்கள் பொருள் பறிக்கப் பார்க்கவில்லை.
6 கடவுளே இதற்குச் சாட்சி, நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் என்று பெருமை கொண்டிருக்க முடியும். 'ஆனால், மனிதர் தரும் மகிமையை நாங்கள் உங்களிடமோ மற்றவர்களிடமோ தேடவில்லை.
7 மாறாக, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளப்பதுபோல் உங்களிடையே அன்பாய் நடந்து கொண்டோம்.
8 உங்கள் மீது இத்தகைய ஏக்கமுள்ளவர்களாய் உங்களுக்குக் கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்று, எங்களை முழுவதுமே கையளிக்க ஆவலாய் இருந்தோம். உங்கள் மேல் எங்களுக்கு அவ்வளவு அன்பு இருந்தது!
9 ஆம் சகோதரர்களே, நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைவு கூருங்கள். உங்களுள் யாருக்கும் சுமையாய் இராதபடி எங்கள் பிழைப்புக்காக இராப்பகலாய் வேலை செய்து கொண்டே கடவுளின் நற்செய்தியை உங்களுக்கு அறிவித்தோம்.
10 விசுவாசிகளான உங்கள் முன்பு நாங்கள் எவ்வளவு புனிதராய், நீதியோடு, குற்றமின்றி நடந்தோம் என்பதற்கு நீங்களே சாட்சி, கடவுளும் சாட்சி.
11 தந்தை தன் பிள்ளைகளை நடத்துவது போல், உங்கள் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தினோம். 'ஊக்கமூட்டினோம்.
12 தம் அரசுக்கும் மாட்சிமைக்கும் உங்களை அழைக்கும் கடவுளுக்கு ஏற்க வாழுமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொண்டோம். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததே.
13 நாங்கள் அறிவித்த கடவுளுடைய வார்த்தையை நீங்கள் பெற்றுக்கொண்டபோது அதை மனித வார்த்தையாக ஏற்றுக்கொள்ள வில்லை; கடவுள் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். இதற்காக இடைவிடாது கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். உள்ளபடியே அது கடவுளுடைய வார்த்தைதான். அதுவே விசுவசிக்கும் உங்களுக்குள் செயலாற்றுகிறது.
14 சகோதரர்களே, யூதேயாவில் கிறிஸ்து இயேசுவுக்குள் வாழும் இறைமக்களின் சபைகளுக்கு நேர்ந்ததுபோலவே உங்களுக்கும் நேர்ந்தது. யூதர்களால் அவர்கள் துன்பங்களுக்கு ஆளானதுபோல் நீங்களும் உங்கள் சொந்த இனத்தாராலே அதே துன்பங்களுக்கு ஆளானீர்கள்.
15 அந்த யூதர்களே ஆண்டவராகிய இயேசுவையும் இறைவாக்கினர்களையும் கொலை செய்தார்கள். எங்களையும் துன்புறுத்தினார்கள். அவர்கள் கடவுளுக்கு ஆகாதவர்கள், மனுக்குலத்துக்கும் எதிரிகள்.
16 ஏனெனில், புறவினத்தார் மீட்ப்பு ¢ பெறும்படி நாங்கள் அவர்களிடம் பேசுவதையும் தடுக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் எப்பொழுதும் தங்கள் பாவங்களின் அளவை நிரப்புகிறார்கள். இறுதியாய் இறைவனின் சினம் இதோ அவர்கள்மேல் வந்துவிட்டது.
17 சகோதரர்களே, சிறிதுகாலம் உங்களை விட்டுப் பிரிந்து தவித்தோம் - உடலால் மட்டுமே பிரிந்திருந்தோம். உள்ளத்தால் பிரிந்திருக்கவில்லை - உங்கள் முகத்தைப் பார்க்க மிக்க ஆவலாய் ஏங்கி இருந்தோம்.
18 உங்களிடம் வரவிரும்பினோம். அதுவும் பல தடவைகளில் சின்னப்பன் நான் உங்களிடம் வர எண்ணங்கொண்டேன். ஆனால் சாத்தான் எங்களைத் தடுத்துவிட்டான்.
19 நம் ஆண்டவராகிய இயேசுவின் வருகையின்போது, நாம் அவர் திருமுன் நிற்கையில் எங்களுக்கு நம்பிக்கையோ, மகிழ்ச்சியோ, பெருமைக்குரிய வெற்றி வகையோ உங்களைத் தவிர வேறு உண்டோ?
20 நீங்களே எங்கள் மகிமை; நீங்களே எங்கள் மகிழ்ச்சி.
அதிகாரம் 03
1 ஆகவே, இந்நிலைமையை எங்களால் தாங்கமுடியாமல், ஏத்தென்ஸ் நகரில் தனியே தங்க முடிவுசெய்து,
2 கிறிஸ்துவினுடைய நற்செய்தியை அறிவிப்பதில் கடவுளின் உடனுழைப்பாளரான எங்கள் சகோதரர் தீமோத்தேயுவை அனுப்பினோம்.
3 நீங்கள் படும் இவ்வேதனைகளில் யாரும் மனங்கலங்காதவாறு, உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தி, உங்களுக்கு ஊக்கமளிக்க அவரை அனுப்பினோம். வேதனைப்படவே நாம் குறிக்கப்பட்டிருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும்.
4 ஏனெனில், நாம் வேதனைப்படத்தான் வேண்டும் என்று, நாங்கள் உங்களோடிருந்தபோது எச்சரித்தோமன்றோ? அப்படி நடை பெற்றது. அது உங்களுக்குத் தெரியும் -
5 எனவே மேற்கூறிய நிலையைத் தாங்கமுடியாமல், உங்கள் விசுவாசம் உறுதியுள்ளதா என அறிந்துகொள்ளவே அவரை அனுப்பினேன். சோதனைக்காரன் உங்களைச் சோதித்துவிட்டானோ., அதனால் எங்கள் உழைப்பு வீணாகி விடுமோ என்று அஞ்சினேன்.
6 ஆனால் இப்பொழுது, தீமோத்தேயு உங்களிடமிருந்து திரும்பி வந்து, விசுவாசத்தையும் அன்பையும் குறித்து நல்ல செய்தி சொன்னார். நாங்கள் உங்களைக் காண விரும்புவது போலவே நீங்களும் எங்களைக் காண ஆவல் கொண்டவர்களாய், எப்பொழுதும் எங்களை அன்பாய் நினைவுகூருகிறீர்கள் என்று அறிவித்தார்.
7 ஆகையால், சகோதரர்களே, நாங்கள் படும் எல்லா நெருக்கடியிலும் வேதனையிலும் உங்கள் விசுவாசத்தைக் கண்டு உங்களால் ஆறுதல் அடைகிறோம்.
8 ஆண்டவருக்குள் நீங்கள் நிலைத்திருப்பது எங்களுக்குப் புத்துயிர் தருகிறது.
9 உங்களை முன்னிட்டு நாங்கள் நம் கடவுளின் திருமுன் அடையும் மகிழ்ச்சி அனைத்திற்கும் கைம்மாறாக அவருக்கு எவ்வாறு நன்றிக் கூற இயலும்?
10 உங்கள் முகத்தைக் காணவும் உங்கள் விசுவாசத்திற்கு இன்னும் தேவைப்படுவதை நிறைவாக்கவும் இராப்பகலாய் இறைவனை இறைஞ்சி மன்றாடுகிறோம்.
11 நம் கடவுளும் தந்தையுமானவரும், நம் ஆண்டவராகிய இயேசுவும் நாங்கள் உங்களிடம் வந்து சேர வழிகாட்டுவார்களாக.
12 உங்கள் மீது எங்களுக்குள்ள அன்பு பெருகுவது போல், ஒருவருக்கொருவர் மீதும் உங்களுக்குள்ள அன்பில் ஆண்டவர் உங்களை வளர்ந்தோங்கச் செய்வாராக.
13 நம் ஆண்டவராகிய இயேசு தம்முடைய பரிசுத்தர்கள் அனைவரோடும் வரும்போது, நம் கடவுளும் தந்தையுமானவரின் திருமுன், நீங்கள் குற்றமின்றிப் பரிசுத்தமாய் இருக்கும் படி. உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக.
அதிகாரம் 04
1 சகோதரர்களே, இறுதியாக உங்களுக்கு அறிவுறுத்த விரும்புவது: நீங்கள் எவ்வாறு நடக்கவேண்டும், கடவுளுக்கு உகந்தவர்களாக எவ்வாறு வாழ வேண்டும் என்ற படிப்பினையை எங்களிடமிருந்து பெற்றுக்கொண்டீர்கள். அதன்படியே நடந்து வருகிறீர்கள்; இதில் இன்னும் முன்னேற வேண்டுமென்று, ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் கேட்டுக்கொள்கிறோம்.
2 ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகள் எவை என அறிவீர்களன்றோ?
3 நீங்கள் பரிசுத்தராவதே கடவுளின் திருவுளம்: அதாவது, கெட்ட நடத்தையை விட்டு விடவேண்டும்.
4 கடவுளை அறியாத புறவினத்தார் காம இச்சைகளுக்கு இடங்கொடுப்பது போல் நீங்கள் செய்யாமல்,
5 உங்களுள் ஒவ்வொருவரும் தன் உடலை அடக்கி ஆண்டு மரியாதையாய் நடத்தி, பரிசுத்தமாய்க் காப்பாற்ற அறிந்திருக்கவேண்டும்.
6 எவனும் இக்காரியத்தில் மீறி நடந்து, தன் சகோதரனை வஞ்சிக்காமல் இருப்பானாக. இவை அனைத்திற்காகவும் ஆண்டவரே பழி வாங்குவார். இதை உங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறோம், வற்புறுத்திக் கூறியிருக்கிறோம்.
7 கடவுள் நம்மை அசுத்தத்திற்காக அழைக்கவில்லை, பரிசுத்தத்திற்காகவே அழைத்திருக்கிறார்.
8 எனவே, இக்கட்டளைகளைப் புறக்கணிப்பவன் மனிதரைப் புறக்கணிப்பதில்லை; தம் பரிசுத்த ஆவியை உங்களுக்கு அளித்த கடவுளையே புறக்கணிக்கிறான்.
9 சகோதர அன்பைக்குறித்து நான் உங்களுக்கு எழுதத்தேவையில்லை; ஒருவருக்கொருவர் அன்புகாட்ட கடவுளிடமிருந்து நீங்களே கற்றுக்கொண்டவர்களாய் இருக்கிறீர்கள்.
10 இதன்படி நீங்கள், மக்கெதோகியா நாடெங்கும் வாழும் சகோதரர்களே, நீங்கள் இதில் இன்னும் முன்னேற வேண்டுமேன்று வலியுறுத்துகிறோம்.
11 நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு அமைதியாக வாழ்வது பெருமையெனக் கருதி அதை நாடுங்கள்.
12 திருச்சபையைச் சேராதவர்கள் மட்டில் பாங்குடன் பழகி, பிறர் கையைப் பார்த்து வாழாதபடி, நாங்கள் கட்டளையிட்டது போல, உங்கள் கையாலேயே வேலை செய்யுங்கள்.
13 சகோதரர்களே, இறந்தோரைப் பற்றி உங்களுக்கு ஐயமிருத்தலாகாது, நம்பிக்கையற்ற ஏனையோரைப்போல் நீங்களும் வருந்தலகாது.
14 இயேசு இறந்தபின் உயிர்த்தெழுந்தார் என்று நாம் விசுவசிக்கின்றோம் அல்லவா? அப்படியானால் இயேசுவின் ஒன்றிப்பில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.
15 ஆண்டவருடைய வார்த்தையில் ஊன்றி, நாங்கள் உங்களுக்குச் சொல்லுவதாவது: உயிருடனிருக்கும் நாம், ஆண்டவரின் வருகை வரையில் உயிரோடு எஞ்சி நிற்கும் நாம், இறந்தோருக்கு முந்திக்கொள்ளமாட்டோம்.
16 அதிதூதரின் குரலொலியும் கடவுளின் எக்காளமும் அடையாளமாக முழங்க, ஆண்டவர் தாமே வானிலிருந்து இறங்கி வருவார். அப்போது கிறிஸ்துவுக்குள் இறந்தோர், முதலில் உயிர்த்தெழவர்.
17 அதன் பின்னரே உயிரோடு எஞ்சி நிற்கும் நாம் அவர்களோடு கூட ஒன்றாய் மேகங்கள் மீது தூக்கிச் செல்லப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளப் போவோம். போய், ஆண்டவரோடு எப்போதும் இருப்போம்.
18 எனவே, இக்கருத்துக்களைக்கொண்டு ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.
அதிகாரம் 05
1 சகோதரர்களே காலங்கள் நேரங்களைப் பற்றி உங்களுக்கு எழுதத் தேவையில்லை.
2 திருடன் நள்ளிரவில் வருவதுபோல் ஆண்டவருடைய நாள் வரும் என்பது உங்களுக்குத் திண்ணமாய்த் தெரியும்.
3 'எல்லாம் அமைதி, ஆபத்து ஒன்றுமில்லை ' என்று மக்கள் கூறும்போதே, கர்ப்பவதிகளுக்கு வேதனை ஏற்படுவதைப்போல் திடீரென அவர்களுக்கு அழிவு வரும், யாரும் தப்பித்துக்கொள்ள முடியாது.
4 ஆனால், சகோதரர்களே, நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல. திடீரெனத் தாக்கும் திருடனைப்போல் அந்த நாள் உங்களுக்கு இராது.
5 நீங்கள் அனைவரும் ஒளியின் மக்கள், பகலின் மக்கள். நாம் இரவுக்கோ இருளுக்கோ உரியவரல்ல.
6 எனவே, மற்றவர்களைப்போல் நாமும் தூங்காது, விழித்திருக்க வேண்டும்; மட்டு மிதத்தோடு இருத்தல் வேண்டும்.
7 தூங்குபவர்கள் இரவில்தான் தூங்குபவர்கள்; குடிகாரர் இரவில் தான் குடிப்பார்கள்.
8 பகலைச் சார்ந்த நாமோ மட்டு மிதத்தோடு இருத்தல் வேண்டும். விசுவாசத்தையும் அன்பையும் மார்புக் கவசமாகவும், மீட்பின் நம்பிக்கையைத் தலைச்சீராகவும் அணிந்து கொள்வோமாக.
9 ஏனெனில், கடவுள் நம்மைத் தம் சினத்திற்கு ஆளாகும்படி ஏற்படுத்தவில்லை; நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தினார்.
10 நாம் விழித்திருந்தாலும், சாவில் உறங்கினாலும் தம்மோடு ஒன்றித்து வாழும்படி இவரே நமக்காக இறந்தார்.
11 ஆகையால் நீங்கள் இப்போது செய்து வருவதுபோலவே, ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்; ஞான வளர்ச்சி அடைய ஒருவர்க்கொருவர் துணை செய்யுங்கள்.
12 சகோதரர்களே, உங்களிடையே உழைத்து ஆண்டவர் பெயரால் உங்களுக்குத் தலைவர்களாக இருந்து, அறிவு புகட்டுவோரை மதித்து நடக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
13 அவர்கள் ஆற்றும் பணியை முன்னிட்டு, அவர்களுக்கு அன்பும், மிக்க மேரை மரியாதையும் காட்டுங்கள். உங்களிடையே சமாதானம் நிலவட்டும்.
14 சகோதரர்களே, நாங்கள் உங்களுக்குத் தரும் அறிவுரையாவது: சோம்பேறிகளுக்கு அறிவு புகட்டுங்கள். சோர்வுற்றவர்களுக்கு ஊக்கமூட்டுங்கள். மனவலிமையற்றவர்களைத் தாங்குங்கள். எல்லாரோடும் பொறுமையாயிருங்கள்.
15 உங்களுள் யாரும் பழிக்குப் பழி வாங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மாறாக எப்போதும் நன்மையே செய்ய நாடுங்கள்; ஒருவருக்கொருவர் நன்மை செய்யுங்கள்; மற்றெல்லார்க்கும் நன்மை செய்யுங்கள்.
16 எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்.
17 இடைவிடாது செபியுங்கள்.
18 என்ன நேர்ந்தாலும் நன்றிகூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசுவில் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.
19 தேவ ஆவியை அணைத்துவிட வேண்டாம்.
20 இறைவாக்குகளைப் புறக்கணிக்க வேண்டாம்.
21 அவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து நல்லதையே ஏற்றுக்கொள்ளுங்கள்.
22 தீமையானதெல்லாம் விட்டு விலகுங்கள்.
23 சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உங்களை முற்றும் பரிசுத்தராக்குவாராக. அவ்வாறே உங்கள் ஆவி, ஆன்மா, உடல் அனைத்தும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையின் போது சீர்குலையாமல் குற்றமின்றி இருக்கும்படி காக்கப்படுவதாக.
24 உங்களை அழைக்கும் இறைவன் நம்பிக்கைக்குரியவர். சொன்னதைச் செய்து முடிப்பார்.
25 சகோதரர்களே, எங்களுக்காகவும் செபியுங்கள்.
26 பரிசுத்த முத்தம் கொடுத்து, சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.
27 சகோதரர்கள் அனைவருக்கும் இக்கடிதத்தை வாசித்துக் காட்ட வேண்டுமென்று ஆண்டவர் பெயரால் கேட்டுக்கொள்கிறேன்.
28 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்களோடு இருப்பதாக.